
மணியொலியோடு வருவது யார்
முதல் மணிக்கு வந்த மாதவக்குமாரனை
அடுத்த மணியொலி வகுப்பறையிலிருந்து அழைத்துப் போகிறது.
அவர் பிரிய மனமில்லாமற் பிரிந்து செல்கிறார்
தீர்க்கப்படாத கணக்குகள்
பாதியிலேயே நிற்கின்றன
நாங்களும் பாதியிலேயே நிற்கிறோம் தடுமாறிக் கொண்டு.
இப்போது
இந்த மணியொலி அழைத்துவந்தது
பிக்காசோவையா வான்கோவையா
மாற்குவையா வரதராஜனையா
வர்ணங்களும் தூரிகைகளும் அசைந்து
வினோதங்களான வகுப்பறையில்
கணிதவெளி உருமாறிக் கலை வெளியாயிற்று.
இடையில் இன்னொரு மணியொலி அவசரமாய்...
கூடவே, பச்சை வெளிகளில் ஒரு நெருப்புக்கொடி
பாம்பாய் ஊர்கிறது.
மஞ்சள் வயல்களில் புதையுண்டு நிற்கும் படைவண்டி
நிச்சயமாக “வான்கோ“வினுடையதல்ல
அவருடைய காகங்களைச் சுட்டுக் கொன்றது யார்?
இப்போது இந்தப்படை வண்டியை வயலுக்குள்ளே இறக்கியது யார்?
படை வண்டிக்குள்ளிருந்து குதித்தோடி
எங்களை நோக்கி வரும் துவக்குகள் எதற்காக?
என்னருகில் மணப்பது யாருடைய நிணம்?

கால்களுக்கடியில் நகர்ந்து செல்கிறது தீ.
என்ன கொடுமை? எல்லா வர்ணங்களும் கரைந்து
அபாய வர்ணமாயிற்றே!
பதிலறியமுதலே அடுத்த மணியொலி.
இப்போது எல்லோரும் பதுங்கு குழியுள்.
அலறிய மணியொலியை
தின்றெழுகிறது குண்டெறி விமானங்களின் அபாயவொலி.
அடுத்து வரும் மணியொலிக்காக காத்திருக்கும் பொழுதில் கண்டேன்
காயங்கள் ஆயிரத்தை .
அதில் என்முகமும் உன்முகமும்
மேலும் கொலைவெளியான வகுப்பறையும்
வான்கோவின் மஞ்சள் வயல் வெளி
பிக்காஷோவின் குவார்ணிக்கா ஆனதையும்.
00

1 comment:
பிக்காசோவையா வான்கோவையா
மாற்குவையா வரதராஜனையா--
பிக்காசோவொட மாற்கை ஒப்பிட்டமைக்கு நன்றி --கவிதையின் இறுதிப்பகுதி அருமை .உங்கள் கவிதைகளில் என்னை அதிகம் பாதித்த கவிதை இது.
Post a Comment