பந்தைப் போல ஒரு கெட்ட பொருள் இந்த உலகத்தில் உண்டா, சொல்லுங்கள்? அது எவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது எப்போதும். சொன்னபடி எதையும் கேட்பதில்லை. சும்மா தட்டி விட்டால் போதும், அப்படியே உருண்டுகொண்டு எங்காவது தன் போக்கில் போய்விடும். எங்கே போக வேண்டும் எங்கே போகக் கூடாது என்று அது யோசிப்பதே இல்லை. பார்ப்பதற்கு ஏதோ அப்பாவித்தனமாக இருக்கின்றதே தவிர, அது ஒன்றும் அப்படி அப்பாவியல்ல.
சில வேளைகளில் அது குழந்தைகளின் குதூகலத்தோடு துள்ளிக் குதிக்கிறது. சிலவேளை அது சோம்பேறித்தனமாக மெதுவாக உருண்டு, ஊர்ந்து போகிறது. சிலவேளை அப்படியே துள்ளிக் குதித்துக் கொண்டு எங்கோ சென்று ஒளித்துக் கொள்கிறது. சிலபோதுகளில் அது போகக் கூடாத இடத்துக்கே போய் விடுகிறது.
கால்கள் இல்லாமல் அது செய்கிற கூத்து இருக்கிறதே அதுதான் எப்போதுமே பிரச்சினை. நாங்கள் அகதி முகாமில் இருந்தபோது இந்தப் பந்தும் அங்கே இருந்தது. அகதிப் பந்துக்குச் சுதந்திரம் இருக்கக் கூடாது. ஆனால் அது கேட்குமா?
நாங்கள் அகதிகள் என்றாலும் இன்னொரு வகையில் கைதிகள்தான். வன்னி அகதிகளுக்கு அப்படியொரு சிறப்பு ஏற்பாடு. போர்க்களத்தில் இருந்து வந்தவர்களல்லவா! எனவே ஆயுத வாடை இருந்தாலும் என்று தனியாகத் தள்ளி ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
சுற்றிவர முட்கம்பி வேலி. வேலியைக் கடந்து யாரும் எங்கேயும் போகமுடியாது. முடியாதென்பது மட்டுமல்ல போகவே கூடாது. சட்டம். கட்டுப்பாடு. விதி. ஆகவே, அந்த முட்கம்பிப் பிராந்தியத்துக்குள்தான் வாழ்க்கை. அதற்குள்தான் சாப்பாடு. அதற்குள்ளேயே படுக்கை. அதற்குள்ளேதான் மலங்கழித்தல். அங்கேயே குளிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, போக்க முடியாத பொழுதுகள், கவலைகள், துக்கங்கள், எதிர்காலம் பற்றிய யோசனைகள்... சண்டை சச்சரவு, வசை, களவு, பொய், கடந்த காலத்தின் மீதான கழிவிரக்கம், நோய் பிணி, துன்பம்... எனச் சகலதும் அங்கேயே.
அகதிப் பிள்ளைகள் விளையாடினார்கள். பந்து விளையாட்டு. அடித்த பந்து சும்மா இருக்குமா? அதுவும் விளாசி அடித்தால்! அடித்த அடியில் பந்து பறந்தது. காற்று வளத்தில் அது கட்டற்றுப் பறந்தது. காற்றோடு காற்றடைக்கப்பட்ட அந்தப் பந்துப் பை கலந்தபோது எழுந்த உற்சாகத்தில் அது பறந்தது. அது எங்களைப் போல அடங்கியிருக்க விரும்பவில்லைப் போலும். ‘அகதிப் பந்து’ என்றால் அடங்கியிருக்க வேண்டும் என்று அதற்குத் தெரியவில்லை. அது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. தன்னுடைய இயல்பை விட்டு விடத் தெரியவில்லை.
அதற்குத் தெரிந்தததெல்லாம் மகிழ்ச்சியே. பிள்ளைகள் விளையாடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளுடன் அதுவும் ஒரு பிள்ளையாகிவிட்டது. அவர்களுடைய விளையாட்டில் அதுவும் சேர்ந்து விட்டது. விளையாடும்போது என்ன வரையறைகள்? கூடி மகிழ்ச்சியாக விளையாட வேண்டியதுதானே. அதனால் அது துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியே போய்விட்டது. அங்கே இருந்த முட்கம்பி அடுக்குகள் அதற்குப் பொருட்டல்ல. சுற்றியிருந்த படைவீரர்களைப் பற்றி அது அக்கறைப் படவில்லை. அவர்களுடைய துப்பாக்கிகளைப் பற்றி அது சிந்திக்கவேயில்லை. அதற்கு அவற்றைப் பற்றி என்ன கவலையுண்டு? அது அகதிகளுடன் விளையாடியது என்ற காரணத்தைத் தவிர.
வெளியே போன பந்து அங்கே இருந்து கொண்டு சிரித்து வேடிக்கை காட்டியது. வேண்டுமானால் வெளியே வந்து பாருங்கள் என்றது. முடிந்தால் என்னை வந்து அழைத்துப் போங்கள் என்று அது பிடிவாதம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்து கொண்டது. விளையாட்டில் எதற்கப்பா இந்தத் தயக்கங்களும் வரையறைகளும்? பேசாமல் வந்து என்னைக் கூட்டிப் போங்கள் மீண்டும் விளையாடலாம் என்று அழைத்தது.
ஆனால் யாராலும் அதனிடம் போகமுடியவில்லை. போகத்துடித்தவர்களும் எதுக்கு வீண் வம்பு என்பதால் தயங்கி நின்றார்கள். ஆனாலும் விளையாடும் வேகம் விடவில்லை. விளையாட்டில் வரும் வேகம் என்பது ஏறக்குறைய வேட்டையில் வரும் வேகத்துக்குச் சமம். வேட்டையின் வேகம்தான் விளையாட்டில் இன்னொரு நிறத்தில் இருக்கிறது. அடிப்படையில் வேட்டையும் விளையாட்டும் ஒன்றுதான்.
ஆகவே அந்த வேகம் விடவில்லை, விளையாடியவர்களை அது தூண்டியது. வெளியே எதற்காகப் போக வேணும்? வீழ்ந்திருக்கும் பந்தை எடுக்கத்தானே! அதை விட வேறு என்ன தகாத காரியமா பார்க்கப் போகிறோம்? வருவது வரட்டும் என்று விளையாடிய பிள்ளைகளில் ஒருவன் வெளியே பாய்ந்தான்.
அந்தக் கணத்தில் அதைக் கண்டு விட்டான் ஒரு சிப்பாய். அவ்வளவுதான். வந்தது வினை.
பதினாறு வரி முட்கம்பியைக் கடந்து போவதென்றால், அதைவிட இரவு பகலாக துப்பாக்கியோடு காத்துக்கொண்டும் சுற்றிக் கொண்டும் நிற்கும் அவர்களைஏ ஏய்த்துக் கொண்டு இப்படி வெளியே போக விடுவார்களா? வெளியே போனவiனைக் கண்ட சிப்பாய் பாய்ந்தடித்துக் கத்திக் கொண்டு ஓடிவந்தான்.
எல்லோருக்கும் கலவரம். இது எதிர்பார்த்ததுதான். ஆனால் இப்படி விழிப்பாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்த சிப்பாய் கத்தினான். எதற்கு வெளியே போனாய் என்று கத்தினான். வெளியே போனால் என்ன நடக்கும் தெரியுமா என்று கத்தினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு சிப்பாயும் அங்கே வந்து விட்டான். இது தொடர்ந்தால் முகாமின் பொறுப்பதிகாரி வருவான். அவன் வந்தால் பிரச்சினை பெரிதாகி விடும். விசாரணைகள் நடக்கும்.
மீண்டும் எல்லோரையும் வெட்டைக்கு அழைப்பார்கள். குளித்துக் கொண்டிருப்பவர்கள், சமைத்துக் கொண்டிருப்பவர்கள், மலசல கூடத்திலிருப்பவர்கள், பிள்ளையை நித்திரையாக்கிக் கொண்டிருப்பவர்கள், பாலூட்டடிக் கொண்டிருப்பவர்கள், நோயாளிகள், நடக்க முடியாதவர்கள் எல்லாம் வெட்டைக்கு வரவேணும். அங்கே கணக்கெடுப்பு நடக்கும். தலைகளை எண்ணுவார்கள். தலை எண்ணி முடியும் வரை எவரும் எங்கேயும் எதற்கும் போகமுடியாது. அதுவும் அந்த முகாமுக்குள்ளும் கூட.
ஆனால், இப்போது வந்த சிப்பாய்கள் நிலைமையை விளங்கிக் கொண்டார்கள். விளையாடும்போது கிறுக்குப் பந்து வெளியே போனதால்தான் அதை எடுப்பததற்கு வெளியேறியிருக்கிறான் ஒருவன் என்று. ஆனாலும் எச்சரித்தான். இது கடைசித்தடவையாக இருக்கட்டும் என்றார்கள். பந்து வெளியே போனால் தங்களிடம் சொல்லச் சொன்னார்கள். அப்படிச் சொன்னால் அதைத் தாங்கள் எடுத்துத் தருவதாக.
கடைசி மன்னிப்போடு திரும்பிய போது வந்தது வினை. வெளியே போனவன் பந்தோடு உள்ளே நுழையும்போது அதை எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக ஒரு படை அதிகாரி கண்டு விட்டான். அந்தப் படை அதிகாரி முகாமுக்கு உரியவனல்ல. அதற்கும் மேல் அதிகாரி. எப்போதுமே மேலதிகாரிகள் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களுடைய பணியின் தேவையோ என்னவோ.
அந்தப் படை அதிகாரி முகாம் நிலைமையைப் பார்க்க வந்திருக்கிறான். அப்போதுதான் இதைக் கண்டிருக்கிறான். படை அதிகாரி சிப்பாய்களை அழைத்தான். விசாரித்தான். அவர்கள் விவரம் சொன்னார்கள். பந்தைக் காட்டினார்கள். ஆனாலும் அன்று மாலை தொடங்கிய கணக்கெடுப்பு இரவு பதினொரு மணியாகியது முடிவடைய.
ஆனால், அந்தக் கணக்கெடுப்பில் அந்தப் பந்து சேர்த்துக் கொள்ளப்படவில்லை. விளையாடுவதற்கு மேலும் இரண்டு பந்துகளைப் படையினர் தந்தனர். நடந்த காரியத்துக்கு மன்னிப்புக் கோரினர். இந்த மாதிரி நிலைமைகளில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெற வேண்டிய அனுமதிகளைப் பற்றி விளக்கினார்கள். இதையெல்லாம் ஏன் செய்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்களுக்குக் கூடத்தான்.
அங்கே பிரச்சினை பந்தல்ல. பந்தை விளையாடுவதே. அதை அவர்கள் புரிந்து கொண்டார்களா?
02
மீளக் குடியமர்ந்த பிறகு அவர்கள் தங்களுடைய வீட்டுக்கருகில் விளையாடினார்கள். .....துள்ளிக் குதித்துக் கொண்டோடிய பந்து அப்படியே ஒரு புதருக்கருகில் போய் நின்றது. திரும்பி வருவதற்கு அதற்குத் தெரியாது. அல்லது அதற்கு மறுத்தான் கொடுப்பதற்கு அங்கே எதுவும் இருக்கவில்லை.
விளையாடும் வேகம். பிரதாபன் பாய்ந்தோடிப்போய் பந்தை எடுத்தான். எடுத்த வேகத்தில் அவன் திரும்ப.... வெடித்தது மிதி வெடி.
தீ. புகை. புழுதி மண்டலம். குருதி. ஐயோ அம்மா என்ற கதறல். ஓலம்....
எல்லோரும் பதறினர். வீழ்ந்தவனைத் தூக்குவதற்கும் பயம். இன்னொரு மிதி வெடி அங்கே இருந்தால்....
பன்னிரண்டு வயதுப்பிள்ளை. இந்தப் பெரும் போருக்குள் சிக்கி, எத்தனையோ மரண கண்டங்களைக் கடந்து, மயிரிழையில் சாவின் வாயிலிருந்து தப்பி, அகதி முகாம் அவலங்களை எல்லாம் பட்டு, இப்போது வீட்டுக்கு வந்து இப்படியா காலை இழக்க வேண்டும்?
அவனுடைய வலது கால் முழங்காலுக்குக் கீழே சிதைந்து விட்டது.
தாய் கதறினாள். அவளுடைய ஒரு கை ஏற்கனவே உடையார்கட்டில் காயத்துக்குள்ளாகி இன்னும் சரியாக இயங்கவில்லை. இரண்டு கிலோ பாரம் கூடத் தூக்க மாட்டாள். ஆனால், இப்போது தன்னுடைய பிள்ளையை அவள் எப்படியோ அந்த அபாய வெளிக்குள்ளால் தூக்கிக் கொண்டாள்.
பிரதாபன் மயங்கிவிட்டான். அந்தப் பிஞ்சினால் என்னதான் செய்ய முடியும்?
அவளுடைய ஓலம் அந்த ஊரையே கலக்கியது.
எதையும் பற்றி எந்தப் பொருட்டும் இல்லாத மாதிரி, இரத்தத்தில் தோய்ந்தவாறு தனியே கிடந்தது காலில்லாத அந்தப் பந்து. அதற்கு மிதிவெடி பற்றிய எந்த அச்சமும் இல்லை. ‘ஒரு மீள்குடியேறியின் பந்து’ என்று அது உணர்வதே இல்லை. அப்படி உணர்ந்திருந்தால் ஒரு வேளை பிரதாபனின் கால் தப்பியிருக்கலாம்.
கால்களில்லாத பந்து செய்கின்ற கூத்துகள் கொஞ்சமல்ல. உண்மையில், எந்த அச்சமுமில்லாமல், பந்து விளையாடும் காலம் ஒன்று எங்களுக்கில்லை என்பதே உண்மை.
அந்தக் காலம் எப்போது?
00

2 comments:
எந்த அச்சமுமில்லாமல், பந்து விளையாடும் காலம் ஒன்று எங்களுக்கில்லை என்பதே உண்மை.
பந்துகள் எப்போதும் சுதந்திரமானவைகளாகவே இருக்கின்றன. பநது விளையாடும் மனிதர்கள் மட்டும் தான் எப்போதும் பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
Post a Comment