Wednesday, October 3, 2012

வன்னி













சூரியனின் திசை கிழக்கன்றி வேறென்ன?

ஆனால் எங்கள் தலைக்கு மேலே
சூரியன் மேற்கிலும் சில போது உதித்தது
காலம் இடம் மாறுவதில்லையா
அது போலத்தான்
வாழ்வும் இடம் மாறித்தொலைத்தது

நாங்கள் தலையினால் நடந்தோம்
தலையை மண்ணுக்குள் கூடப் புதைத்தோம்

தலையில்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்க்கைதான்
அந்த வாழ்க்கையின் ருஷியைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை
அதைத் தெருநாய்கள் சொல்லட்டும்

நாங்கள் கண்ணீரைக் காய்ச்சிக் குடித்தவாறு
ஒரு காலத்தை வளர்த்தோம்
பிறகு கண்ணீரே பெருஞ்சுவையானது பலருக்கும்.
கசப்பெனினும் மது ருஷிக்கும் அல்லவா
அது போலத்தான்
கண்ணீரும் ருஷிக்கத் தொடங்கியது.

போதை உச்சிக்கேறிய பிறகு
எல்லாமே ருஷிதான் எல்லாமே கொண்டாட்டம்தான்
பிறகு
கண்ணீர்ப்பானத்தைத் தவிர
வேறெதுவும்  ருஷிக்கவில்லை

ஆமாம் கண்ணீரைத் தவிர
வேறெதுவும் ருஷிக்கவேயில்லை.




No comments: