
இரண்டு கவிதை நூல்கள் - நல்லதோர் முயற்சி
- முயற்சியாளர்கள் அல்லது தொகுப்பாளர்கள் ; சித்தாந்தன், சி.ரமேஸ், மருதம் கேதீஸ்
1. சிதறுண்ட காலக்கடிகாரம்
எதிர்பார்க்காத வகையிற் சில காரியங்கள் மகிழ்ச்சியாக அமைவதுண்டு. இந்த மாதிரியான மகிழ்ச்சிக்குரிய சிறப்பான காரியங்களை எதிர்பார்க்காத தரப்பிலிருந்து யாராவது செய்வார்கள். அல்லது அப்படியான காரியத்துக்கு யாராவது ஒத்தாசை புரிவார்கள். அப்படியான ஒரு காரியம், ஒரு காரியத் தொடர்ச்சி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.
இறந்தோரின் நினைவைக் கொள்ளும் வகையில் அவர்களுடைய அடையாளங்களைச் சுவடுகளாக்குவதற்குப் பதிலாக பொதுநிலைப்பட்ட உணர்வுகளைக் கொண்ட சமகாலக் கவிஞர்களின் கவிதைகளை நூலாக வெளியிட்டுள்ளார் பெரியார் சரவணை.இவர் தென்புலோலியைச் சேர்ந்தவர். வடமராட்சிப் பகுதி இலக்கியத்திற்கு அளித்துவருகின்ற பங்களிப்பில் இந்த முயற்சியும் ஒன்று. முன்னர் கட்டைவேலி - நெல்லியடி ப.நோ.கூ.சங்கத்தின் தலைவராக இருந்த திரு. சிதம்பரப்பிள்ளை சங்கத்தின் மூலம் இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்குவிப்புகளைச் செய்தார்.
இப்போது திரு.சரவணை என்பவர், தன்னுடைய மனைவி திருமதி தங்கம்மா சரவணையின் நினைவாக கல்வெட்டை அச்சிடுவதற்குப் பதிலாக 2000 ஆண்டுக்குப் பிந்திய காலப்பகுதியில் எழுதப்பட்ட ஈழக்கவிதைகள் சிலவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டு தன்னுடைய மனைவியின் நினைவைக் கௌரவப்படுத்தியிருக்கிறார் திரு. சரவணை. இதற்கு ஒத்தாசையாக இருந்தவர் திரு. தி.ஜீவரட்ணம்.
”தமிழ்பேசும் சமூகங்கள் தம் வாழ்வின் முக்கியமான காலங்களைக் கடந்து கையறு நிலையில் நி்றகின்ற இந்தக் காலகட்டத்தில், கடந்த காலங்களின் மீதான மீள் உரையாடல்களும் வாசிப்பும் தேவைப்படுகின்றன. இந்த நிலையில் இந்தத் தொகுதிக் கவிதைகள் அண்மைய சமகால உணர்வுகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்ட கவிதைகள் அமைகின்றன. இதில் பங்களித்துள்ள கவிஞர்களிற் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னான காலத்திலிருந்து எழுதி வருகிறவர்கள். இத்தொகுதியின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்திய வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனதுகளுள் படர்ந்திருக்கும் மென் உணர்ச்சிகளின் தடங்களையும், கனவுகள், ஏக்கங்களையும் பேசுகின்றன.
“யுத்தம், மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கிறது. மக்களை அலைவுறச் செய்திருக்கிறது. கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்பிற்கான எத்தனை முயற்சியாகவே இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது, அனைத்து நிலைகளிலும் தொடரவேண்டும் என்பதே எமது விருப்பாகும்“ என இந்த நூலின் தொகுப்பாளர்கள் தங்களுடைய பதிப்புரையில் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தொகுதியில் முப்பது கவிஞர்களின் முப்பது கவிதைகள் உள்ளன.
ந.சத்தியபாலன், பெண்ணியா,எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா.விஷ்ணு, சித்தாந்தன், ஃபஹீமா ஜஹான், ஓட்டமாவடி அரபாத், வினோதினி, நவாஸ் சௌபி, மைதிலி, த.அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ. ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஸ், யாத்திரிகன், கோகுல ராகவன், தபின், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, ஆழியாள், எம். ரிஷான் ஷெரிப் ஆகிய கவிஞர்களுடைய கவிதைகள்.
யுத்தத்திற்குப் பின்னர் இந்தத் தொகுதி வெளியிடப்பட்டிருப்பதால் அனைத்துத் தரப்பைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1980 களுக்குப் பின்னரான இலக்கிய முயற்சிகளில் சமூகநிலைப் பிளவுகளும் கருத்துநிலைப் பிளவுகளும் அதிகரித்திருந்தன. இதனால் முஸ்லிம் எழுத்தாளர்களை வடபுலத்தோர் உள்வாங்குவதிலும் மாற்றுக் கருத்தாளர்களுடன் ஏனையவர்கள் இணைந்து செயற்படுவதற்கும் அல்லது மாற்றுக் கருத்துடையோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொள்வதற்குமான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தன.
இந்தத் தொகுதி அந்த நெருக்கடிகளைக் கடந்துள்ளது. என்பதால் இது பல தரப்பையும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே எல்லோருடைய காயங்களும் இங்கே பேசப்படுகின்றன. இந்த வகையில் இந்தத் தொகுதிக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது.
ஆகவே, யுத்தம் ஓந்த பின்னரும் பிணவாடையும் குருதியும் அவலக்குரலும் ஒலிக்கின்றன இந்தக் கவிதைகளில். இன்னொரு வகையிற் பார்த்தால் கண்ணீரில் மிதக்கும் தெப்பமாகத் தெரிகிறது இந்தக் கவிதைத் தொகுதி.
00

02. புதுமெய்க்கவிதைகள் - தா.இராமலிங்கம்
ஈழத்தின் நவீன கவிதைச் செல்நெறியை உருவாக்கியவர்களில் தா.இராமலிங்கம் முக்கியமானவர். முதலாவது நவீன கவிதைத் தொகுதியும் தா.இராமலிங்கத்தினுடையதே. புதுமெய்க்கவிதைகள் என்ற இந்தத் தொகுதியை அவர் 1964 இல் வெளியிட்டிருந்தார்.ஏடு வெளியீடாக இந்தத் தொகுதி வந்ததாக நினைவு. (இதைச் சரிபார்க்க முடியவில்லை. கையிலிருந்த அந்தப் புத்தகம் யுத்தத்திற் தொலைந்து விட்டது). நீண்டகாலமாகவே நவீன கவிதையாக்க முறையை ஏற்றுக்கொள்வதில் தயக்கங்களைக் கொண்டிருந்த கவிஞர் இ.முருகையன் இந்தத் தொகுதிக்கான முன்னுரையை எழுதியிருக்கிறார்.
“அவரது படைப்புகள் (தா.இராமலிங்கத்தின் ) இன்று நம் மொழியில் வெளியாகும் சராசரிக் கவிதைகளினின்றும் வேறுபட்டு நிற்கின்றன.
”அவரது ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ஜன்னலாக இருக்கிறது. ஒவ்வொரு ஜன்னலூடும் ஒவ்வொரு உலகு தெரிகிறது. ஒரே உலகின் பல்வேறு கூறுகளே வெவ்வேறு கோணங்களில் தெரிகின்றன. திரு. இராமலிங்கம் காடடும் காட்சிகள், நோக்கப்படும் கோணங்கள் அசாதாரணமானவை. அவ்வாறிருப்பதுதான் இவ்வெழுத்துகளிற் பொதுளி நிற்கும் வீரியம் எனலாம்” என்கிறார் முருகையன்.
தா.இராமலிங்கம் முன்னோடி மட்டுமல்ல, முக்கியமான ஈழக்கவிஞரும்கூட. அவருடைய கவிதைகள் பின்னர் வந்த கவிஞர்களைப் பெருமளவில் பாதித்தன. புதிய பரப்புகளை நோக்கி, புதிய சாத்தியங்களை நோக்கி ஈழக்கவிதைகளை நகர்த்தியதில் இராமலிங்கத்துக்கு ஒரு முக்கிய பாத்திரமுண்டு. தமிழ்ப்பண்பாடு பற்றிய பிம்பங்களையும் சமூக விழுமியங்கள் பற்றிய ஆசாரப் பாரவைகளையும் கடுமையான கேள்விக்குள்ளாக்கியவர் தா. இராமலிங்கம்.அதேவேளை பின்னர் இன ஒடுக்குமுறையையும் அவர் எதிர்த்தெழுதினார். சாதியத்தின் வலிகளைப் பதிவாக்கியதைப்போல இனஒடுக்குமுறையின் காயங்களையும் அவர் பதிந்தார்.
காணிக்கை என்ற இரண்டாவது தொகுதிக்குப் பின்னர் எழுதிய கவிதைகளை தா.இராமலிங்கம் நூலாக்க முயற்சித்த போதும் அந்த முயற்சி சாத்தியப்படவில்லை. இராமலிங்கத்தின் இறப்பிற்குப் பின்னர் அவருடைய பிள்ளைகள் எடுத்த முயற்சியும்கூட வெற்றியளிக்கவில்லை. யுத்தம் எல்லாவற்றையும் பினனுக்குத் தள்ளி விட்டது.
இப்பொழுது அமரர் சரவணை வெளியீடாக புதுமெய்க்கவிதைகள் மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. தங்கம்மா சரவணை நினைவாக முதற்தொகுதி வெளியிடப்பட்டு ஓராண்டுக்குள் இன்னொரு வெளியீடு. இப்போது திரு. சரவணை அவர்களின் நினைவாகவே இந்தத் புத்தகத்தை வெளியிட வேண்டியேற்பட்டுள்ளது. ஒரு வகையில் இதுவொரு துக்கந்தரும் நிகழ்ச்சியே. ஆனால், அந்தத் துக்கத்திற்குள்ளும் ஒரு ஆறுதலளிக்கும் விதமாக இந்த நூலின் மீள்வருகை.
பொதுவாக நினைவு மலர்கள் என்பவை இழப்புகளின் நிமித்தமாக உருவாக்கப்படுபவை. இழப்புகளையிட்ட துக்கத்தைச் சமனிலைப்படுத்த முனைபவை. இங்கே இந்தவாறான நல்ல முயற்சியின் மூலமக இந்தச் சமனிலைப்படுத்தல் மேலும் அதிகரிக்கிறது.ஒரு பெறுமதியான - முக்கியமான செயலைச் செய்வதன்மூலம் கிடைக்கின்ற மகிழ்ச்சியும் ஆறுதலும் இந்தச் சமனிலையை சீராக்குகிறது.
இதேவேளை யுத்தத்தினால் இழந்து போன தா.இராமலிங்கத்தின் புதுமெய்க்கவிதைகளை மீள, இந்த வடிவில் புதிதாகப் பெற்றுக்கொள்வதையிட்டு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சிகூட இழப்பை ஈடு செய்யும் வகையிலான ஒருவிதச் சமனிலையே.
அமரர் சரவணை தங்கம்மா குடும்பத்தினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரியன. இறந்தும் மறவா புகழுடைய பேறான செயல்கள் செய்தமையையிட்டு இந்த மதிப்பு.
00 பிரதிகள் இலவசம். தேவைப்படுவோர், மறுபாதி, மருத்துவமனை வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்.
00
1 comment:
ஈன்றெமை வளர்த்து வையகம் விட்டு
வானுறை சென்ற எம் தெய்வங்கள்
நினைவாக பெருமழையுலகில் சிறுதுளி
ஆன இந்நூல்களிற்கு விமர்சனம் தந்த
பெருந்தகைகளுக்கு நன்றி.
Post a Comment