Thursday, June 21, 2012

எழுதக் கடினமான முன்னுரை - 01




ழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருத்தியும் முன்னிலைப் போராளியாகியுமாகிய புஸ்பராணியின் அகாலம் என்ற நூலுக்கு முன்னுரை எழுதும்போது இரண்டு விதமாக அவற்றை எழுதவேண்டியேற்பட்டது.
அந்தளவுக்கு இது என்னுடைய உணர்வுத்தளத்தையும் அறிவுத்தளத்தையும் உலுக்கியது புஸ்பராணியின் வரலாறும் அவருடைய அனுபவ எழுத்தும்.இத்தகைய கொடுமையும் நியாய மறுப்பும் நிறைந்த வெளியில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதும், அந்த வாழ்க்கையை வாழ்ந்து கடப்பதும் எளிதானதல்ல. மிகக் கடினமானது. 
இதை வாசிக்கும்போதே மனம் கலங்கித்தவிக்கும்போது இதை வாழ்தல் என்பது எப்படியாக இருக்கும்? என யோசித்தால்...!

ஆகவேதான் எழுதப்பட்ட முன்னுரையும் அப்படி அமைந்தது. இரண்டு கட்டுரைகளாக. 


அவற்றில் ஒன்று இது. 

அடுத்தது நாளை பதிவிடப்படும். 

இவை இரண்டையும் எடிற்பண்ணி ஒரே முன்னுரையாக்கினார் நண்பர் ஷோபாசக்தி. 
அவருககு மிக நன்றி.

00 00
சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியே, மறுதரப்பின் மீதே - இலங்கை அரசின் மீதே நடக்க வேண்டும், எதிர்த்தரப்பின் மீதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு. ஆகவே இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால், இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானது, எவ்வளவுக்குச் சரியானது, எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது என்பது உலக வரலாற்றை – அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். 

போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள், சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவை@ முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விட, அமைப்புகளின் உள்ளே, கட்சிகளின் உள்ளே, போராட்டத்தில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும். ஆனால், போராட்டத்தினுள்ளே நடந்த அல்லது அதனுள்ளே நிரம்பியிருக்கும் குற்றங்களைப் பற்றிய, தவறுகளைப் பற்றிய, குறைபாடுகளைப் பற்றிய விசாரணைகளைச் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. எந்த அமைப்பும் இதை ஏற்கும் நிலையில் இல்லை. எந்தத் தலைமையும் இதைக்குறித்து சிந்திக்க முற்படவில்லை. ஏன், இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்து, தவறுகளுக்கும் உடந்தையாக இருந்து ஒத்தோடிய ஊடகங்கள் கூடத் தம்மை மீள்பார்வைக்குட்படுத்தத் தயாராக இல்லை. 

ஆனால், விருப்பு வெறுப்புகள், உடனடி லாப நட்டங்களுக்கு அப்பால், அப்படித் தம்மை விசாரணைகளைச் செய்தாற்தான் குறைபாடுகளை நீக்கலாம், தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம். புதிய வாசல்களைத் திறந்து புதிய பயணங்களை மேற்கொள்ளலாம். வெற்றியைப் பெறலாம். விடுதலையைக் காணலாம். இவை மிக எளிய உண்மை. மிக எளிய வரலாற்று அனுபவம்.

குறைந்த பட்சம் தாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகள், தங்களால் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் போராட்டத்தையும் சிதைத்து, மக்களையும் இந்த அவல நிலைக்குக் கொண்டு வந்துள்ளன என்பதையாவது இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தாங்கள் புனிதர்கள் என்ற பிம்பங்களை விட்டு இவர்கள் இறங்கி வரவேண்டும். 

குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரம்பப்பட்ட  ஈழப்போராட்டத்தில், பெரும் பின்னடைவையும் சிதைவையும் சந்தித்திருக்கும் இந்தப் போராட்டத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையைக் கொண்ட – பத்துக்குட்பட்ட - வர்கள் மட்டும் தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில், செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர். 

போராட்டத்தைப் பற்றி, விடுதலையைப் பற்றி இவர்களுக்கிருக்கும் அக்கறையும் வேட்கையும் இவர்களுடைய இந்தச் சாட்சியமளிப்பிற்கான அடிப்படையாக உள்ளதை நாம் மனங்கொள்ள வேணும். இந்தச் சாட்சிகள் ஏதாவது இயக்கங்களில் அல்லது கட்சிகளில் இன்னும் அங்கத்துவத்தைக் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்தச் சாட்சியங்களை இவர்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது. அதையும்விட இவ்வாறு வெளிப்படைத்தன்மையாக வெளிப்படுத்தியிருக்க இயலாது. ஏனெனில் இன்னும் அதே குறைபாடுகளுடனும் தவறுகளுடனும் குற்றங்களை இழக்கும் மனநிலையுடனும்தான் எல்லா அமைப்புகளும் எல்லாத் தலைமைகளும் உள்ளன. அணுகுமுறைகளிலும் பார்வையிலும் மாறாத பிடிவாதம் கொண்டிருப்பதை ஈழப்போராட்டத்தை விட வேறெந்தப் போராட்டத்திலும் காண முடியுமோ தெரியவில்லை. ஈழப்போராட்ட இயக்கங்களிலிருப்பதைப் போல தீவிரமாக இல்லாது விட்டாலும் ஏறக்குறைய இந்த மாறாநிலை ஜே.வி.பியிடத்திலும் காணப்படுகிறது. ஜே.வி.பியின் அகமும் தேய்ந்து உருக்குலைந்த நிலையிற்தான் இன்றிருக்கிறது. 

ஆகவே, நாம் முன்னே சுட்டியிருக்கும் இந்தக் குறைபாட்டிலிருந்து இவையெல்லாம்  விடுபட்டு விட்டன என்று இவை சொல்லவே முடியாது. அப்படிச் சொல்லக்கூடிய தகுதியை இவை வளர்த்துக்கொண்டதாகவும் இல்லை. அதற்கான அடையாளங்களை இவை வெளிப்படுத்தியதாகவும் இல்லை. அந்த அளவுக்கு ஈழப்போராட்டம் தன்னுடைய உட்பரப்பில் இறுகிக் கெட்டி தட்டிப்போயுள்ளது. அதனுடைய உட்பரப்பு இன்னும் இருண்டேயிருக்கிறது. 

இல்லையெனில் மிக மோசமான சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டம் இன்று அந்தச் சிதைவுக்கான காரணங்களையும் பின்னடைவுக்கான அடிப்படைகளையும் காண முற்பட்டிருக்கும். மீளாய்வும் சுயவிசாரணையும் என்ற ஒளியூட்டும் நிகழ்ச்சிப் போக்கொன்றை அது தன்னுள்ளே உருவாக்கியிருக்கும். அந்த வகையில் அது விவாதங்களையும் விமர்சனங்களையும் கொண்டதொரு பாரம்பரியத்தை ஆரம்பித்திருக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட, முன்னணிப் பாத்திரங்களை வகித்த, மையப்பாத்திரமாக இயங்கிய ஒவ்வொருவரும் தங்களுடைய ஒப்புதல் வாக்குமூலங்களை – சாட்சியங்களை இந்தக் காலப்பகுதியில் வெளிப்படுத்தியிருப்பர். ஆனால், அப்படியான அதிசயங்கள் எதுவுமே நடக்கவில்லை. கட்சி அரசியலின் போதாமைகளைத் தவிர்த்து, புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கங்களாக மாறிய ஈழப்போராட்டம் மீண்டும் கட்சி அரசியலுக்கே திரும்பியுள்ளது. இப்படி மாறியிருக்கும் ஒரு கட்சி கூடப் பகிரங்கமாகத் தனது தவறுகளையும் பலவீனங்களையும் ஒத்துக்கொண்டிருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?

ஈழப்போராட்டம் குறித்து இதுவரை முன்வைக்கப்பட்ட குறைந்த அளவிலான சாட்சியங்கள் அத்தனையும் பெரும்பாலும் சொந்த அனுபவப் பரப்பைச் சாரம்சப்படுத்திய தனிப்பட்ட சாட்சியங்களாகவே உள்ளன. ஆனால், இவை முக்கியமான சாட்சியங்கள். நிராகரிக்கவே முடியாத சாட்சியங்கள். போராட்டத்தையும் சனங்களையும் விடுதலையையும் நேசிப்பதன் அடிப்படையில் இருந்து முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள். போராட்டத்தில் ஈடுபடும்போதிருந்த ஆரம்ப மனநிலையை ஒத்த நிலையிலிருந்து - விடுதலைக்கான வேட்கையை இழந்து விடா நிலையிலிருந்து முன்வைக்கப்படுகின்ற சாட்சியங்கள். எனவே இவை காய்ந்து வரண்ட பாலையில் அபூர்வமாகத் துளித்த பசுந்தளிர்கள். இதை நாம் வளர்தெடுப்பதில்தான் இந்தப் பாலையைச் சோலையாக்க முடியும். 

1965 ஜூனில்; பலஸ்தீன எழுச்சி பின்னடைவுக்குட்பட்டபோது அதைக்குறித்து அங்கே பெரும் வாதப் பிரதிவாதங்களும் மீளாய்வுகளும் நடந்தன. வங்கப் போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் போன்ற அயற்போராட்டங்கள் கூட தமது போராட்டப் பதிவுகளைச் செய்துள்ளன. – விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. – சாட்சியங்களை முன்வைத்துள்ளன. தமிழகத்தில் கூட பல போக்குகளையும் பற்றிய மறுபார்வைகள் - விசாரணைகள் - சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால், ஈழப்போராட்டத்தில்?

சாட்சியமளித்தலையும் விட சாட்சிகளை மௌனமாக்கும் போக்கே பலமாக உள்ளது. இது இந்தப் போராட்டத்தின் கூடப்பிறந்த குணவியல்பு. 

சுதந்திர இலங்கையில் - சுதந்திரம் பெற்றபின்னரான சுமார் அறுபத்தி இரண்டு ஆண்டு கால இலங்கையில் - உள்நாட்டுக் கிளர்ச்சிகளினாலும் போரினாலும் வன்முறைகளினாலும் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் பலியாகியிருக்கின்றனர். இரண்டு கோடிக்கும் குறைவான - இரண்டு மொழியை மட்டும் பேசும் - மக்களைக்கொண்ட ஒரு சிறிய நாட்டில் இத்தனை பெரிய இரத்த ஆறு ஓடியிருக்கிறது. அந்நியர் ஆட்சியிற் கொல்லப்பட்டோரின் தொகையை விட இது அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

இலங்கை அரசுக்கெதிராக –சிங்களத் தரப்பிலிருந்து ஜே.வி.பி ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. தமிழ்த்தரப்பலிருந்து ஏராளமான இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்திலீடுபட்டுள்ளன. ஜே.வி.பியின் ஆயுதப்போராட்டத்தையும் இலங்கை அரசு மிகமோசமான முறையில் ஒடுக்கியது. அதனுடைய போராளிகள் கடுமையான சிறைத்தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். (இங்கே இந்தச் சாட்சியத்தை அளித்திருக்கும் புஸ்பராணி பொலிஸினால் கைதாகிச் சிறையிலடைக்கப்பட்டபோது அங்கே கைது செய்யப்பட்டிருந்த ஜே.வி.பி தோழிகளும் சிறைச்சாலையில் இருந்த பதிவுகள் சொல்லப்படுவதை அவதானிக்கலாம்). ஜே.வி.பியின் தலைமை மிகக் குரூரமான முறையில் அழிக்கப்பட்டது. அதனுடைய போராளிகள் சிதைத்துக் கொல்லப்பட்டனர்.

ஜே.வி.பி.யின் பெண்போராளிகளில் ஒருவரான மன்னம்பெரி என்ற பெண்போராளி பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை மிகப் பிரசித்தமானது. இப்பொழுதிருக்கும் ஜே.வி.பி.யின் தலைமை அன்று தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சமடைந்தபின் நாடு திரும்பியதே. இவ்வளவு சிதைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்த ஜே.வி.பி கூட தன்னுடைய தவறுகளைக் குறித்து பகிரங்கமாக எதையும் சொல்லவில்லை. அந்த அமைப்பிலிருந்து செயற்பட்டவர்களின் சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இல்லை. 

இதைப்போல தமிழ்பேசும் தரப்பின் அரசியல் முன்னெடுப்பு, போராட்ட முன்னெடுப்பு இரண்டும் மௌனத்தினுள்ளேயே புதையுண்டிருக்கின்றன. இந்த மௌனம் கள்ளமௌனமாகும். கயமை நிறைந்த மௌனமாகும். தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் தொடர்ந்தும் மக்களின் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்க முனையும் தந்திரம், மக்களின் நம்பிக்கைகளைக் கொள்ளையடிக்கும் கபட நோக்கம் இந்த மௌனத்தில் உள்ளுறைந்துள்ளது. எனவேதான் இவர்களால் சாட்சியமளிக்க முடியாதுள்ளது. தங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாதிருக்கிறது.

சாட்சியமளிக்கா நிலை – சாட்சியமளித்தலைத் தடுப்பது என்பது அதிகாரத்தைப் பேண முற்படுவதன் தூய வெளிப்பாடாகும். அது அதிகாரத்தை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத மக்கள் விரோதப்போக்கு. சாட்சியங்களுக்குத் தயாரில்லாத மனம், விசாரணைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காத நிலை என்பதெல்லாம் குற்றங்கள் இழைப்பதைப் பற்றிக் கவலை கொள்ளாததன் வெளிப்பாடே. இந்த மனநிலையானது தவறுகளைக் குறித்தும் பின்னடைவுகளைக் குறித்தும் சிந்திக்கப்போவதுமில்லை. அவற்றைப் பொறுப்பேற்கப்போவதுமில்லை. அவற்றைக் களையப்போவதுமில்லை. இவற்றுக்குக்குறி அதிகார பீடத்தைப் பாதுகாப்பதே.

அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்;த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்? 

சுயவிசாரணை என்பதும், சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக்கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?

இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே, இன்னொரு சாட்சியாக, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) அவர்கள் தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகிறது. இது நமது கவனத்திற்குரியது.

புஸ்பராணி ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். தீவிரமாக ஒரு காலத்திற் செயற்பட்டவர். பல்வேறு தரப்பினருடனும், ஈழப்போராட்ட இயக்கங்களின் தலைமைப்பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பின்னாளில் தலைவர்களாக இருந்தவர்களுடனும் அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வர முன்னரே இணைந்து செயற்பட்டவர்@ சகபயணியாக இருந்தவர். இந்தப் போராட்டத்தினால் மிகக் கொடுமையான வதைகளையும் பாடுகளையும் உச்ச ஒடுக்குமுறையையும் சந்தித்தவர். 

தமிழரசுக் கட்சி இலங்கைத் தமிழ் மக்களிடையே தலைமைச் சக்தியாக அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில், இனஒடுக்குமுறைக்கெதிரான அரசியற் போராட்டங்களை அது முன்னெடுத்தபோது அந்தக் கட்சியின் அரசியற் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் புஸ்பராணி. தொடர்ந்து அந்தப் பாரம்பரியத்தின் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டவர். பின்னர், அகிம்சை வழியான போராட்டத்தில் நம்பிக்கை இழந்த அன்றைய இளைய தலைமுறையினருடன் ஆயுதப்போராட்டத்தைப் பற்றிச் சிந்தித்தவர். இன்று அகிம்சை வழியான பாராளுமன்ற ஜனநாயக முறைமை அரசியலும் ஆயுதப்போராட்ட அரசியலும் பெரும் சிதைவுகளையே தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்திய நிலையில் புஸ்பராணி அக்கா இந்தப் பதிவை - இந்தச் சாட்சியத்தை அளித்திருக்கிறார். 

எனவே இவருடைய பாத்திரம் என்பது இன்று அவர் முன்வைக்கின்ற சாட்சியங்களை முக்கியத்துவப்படுத்துகின்றன. அதேவேளை இந்தச் சாட்சியத்தை புஸ்பராணி வெளிப்படையாக – ஆதாரபூர்வமான தகவல்களோடு, வாழும் சாட்சியங்களோடு முன்வைக்கிறார். எனவே, இந்தக் காரணங்கள் எல்லாம் புஸ்பராணியினுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை@ அவருடைய சாட்சியத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கின்றன. 

1950 களில் யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் பிறந்த இளம்பெண்ணொருவர் 1960 களின் இறுதிப் பகுதியில் அரசியற் போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்குகின்றார். அவரே புஸ்பராணி. அப்போது யாழ்ப்பாணத்தில் சாதியமும் சாதியத்துக்கெதிரான போராட்டங்களும் ஒரு கொந்தளிப்பான சூழலை உருவாக்கியிருந்தன. (இதை விளங்கிக் கொள்வதற்கு அன்றைய ஈழத்தின் சமூக அரசியல் நிலவரங்களைப் பற்றிய அறிவு வேண்டும். அல்லது அதைப் பற்றி அறிந்து கொள்ளவேணும்). அதேவேளை சிங்கள மேலாதிக்க அரசின் ஒடுக்குமுறையும் அதற்கெதிரான சிந்தனைப்போக்கும் யாழ்ப்பாணத்தை – தமிழ்ப்பகுதிகளை – கொந்தளிக்கச் செய்திருந்தன. இந்த நிலையில் புஸ்பராணி தமிழின உணர்வுடன் சிங்கள மேலாதிக்கப்போக்குகளுக்கெதிரான அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். இதன் விளைவாக அவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியேற்படுகிறது.

ஒடுக்குமுறைத் தரப்பாகிய அரசு, அதன் அதிகார அலகுகளான பொலிஸ், சிறைச்சாலை போன்றன உச்ச நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. இதில் பெண் என்ற வகையில் மேலும் பல அடுக்குகளிலான நெருக்கடிகளை அவர் சந்திக்க வேண்டியேற்படுகிறது. இது அவருக்கு மட்டுமான நெருக்கடி மட்டுமல்ல. அவரைப்போல பொதுவெளிச் செயற்பாட்டில் ஈடுபடும் அனைவருக்குமான நெருக்கடி. தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமன்றி ஜே.வி பி என்ற இயக்கத்தின் போராட்டத்தில் பங்கேற்ற சிங்களப் பெண்களுக்கும் ஏற்படுகின்ற நெருக்கடி. பொதுவாகவே பெண்கள் சாதாரண நிலையிலேயே பல நெருக்கடிகளை எதிர்கொண்டே தங்களின் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கும் சூழலில் ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராட முனையும் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் எப்படியிருக்கும் என்பதை நாம் அதிகம் விளக்கத் தேவையில்லை. அதிலும் அன்றைய யாழ்ப்பாணத்துச் சூழலில், சாதியும் மற்றும் பெண் சார்ந்த மரபார்ந்த அணுகுமுறைகள் உச்சநிலையில் இருக்கும்போது இந்த நெருக்கடிகள் இன்னும் பல மடங்கு அழுத்தம் கூடியவை.

ஆகவே இவற்றையெல்லாம் எதிர்கொண்டே தன்னுடைய அரசியற் செயற்பாட்டை முன்னெடுத்தார் புஸ்பராணி. நாம் இங்கே முன்னரே கூறியிருப்பதைப்போல, போராடும் தரப்பினரிடையேயும் மோதல்களையும் முரண்பாடுகளையும் சந்திக்க வேண்டியவராக இருக்கிறார் புஸ்பராணி. அத்துடன், குழிபறிப்புகளையும் புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் சுரண்டல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கும் அவர் தள்ளப்படுகிறார். இது பின்னாட்களில் அவருக்குப் பெரும் பின்னடைவாகவும் உளச்சோர்வாகவும் அமைகின்றன. ஆனால், விடுதலைக் கனவோடு போராட்டத்தில் ஈடுபட்ட மனம் என்றும் அந்தக் கனவிலிருந்து என்றும் விடுபடாது. 

எனவேதான் அவர் தன்னுடைய சாட்சியத்தைக் குறித்துச் சிந்தித்திருக்கிறார். கூடவே, ஒரு பகிரங்கத்திறப்பினூடாகவே எல்லாவற்றையும் கழுவிச் சுத்தம் செய்யலாம் என்றும் அவர் நம்புகிறார். இதுதான் இந்தப் பதிவை இங்கே எழுதத் தூண்டியிருக்கிறது என்று தோன்றுகிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒரு நிகழ்ச்சி. இதற்கு அவருடன் நெருக்கமாக இருக்கின்ற தோழர்கள் ஷோபாசக்தி, அசோக் யோகன் போன்றவர்கள் ஊக்கமாக இருக்கின்றனர். 

ஆனால் நாம் கவனிக்க வேண்டிய துயரம் என்னவென்றால், ஏறக்குறைய நாற்பதாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, மிகப் பெரும் தியாகங்களைச் செய்ததற்குப் பிறகு, மிகக் கொடுமையான வதைகளையும் இழப்புகளையும் சந்தித்த பிறகு, மிக உச்சமான வீரச் செயல்களை எல்லாம் செய்த பிறகு இப்படித் துயரம் தோய்ந்த நிலையில் நின்று சாட்சியமளிக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது. வெற்றியைப் பற்றி, சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டவிதத்தைப் பற்றி, அதன் பேறுகளைப் பற்றி பெருமிதத்தோடும் மகிழ்வோடும் வரலாற்றைப் பதிந்திருக்க வேண்டிய சூழல் திசைமாறி, இப்படிப் பின்னடைவை மையப்படுத்திய பதிவுகளை – சாட்சியங்களை முன்வைக்க வேண்டிய நிலை கொடுமையானதே.

இதேவேளை போராட்டத்தை ஆரம்பிக்கும்போது இத்தகைய ஒரு நிலையைப் பற்றி யாரும் எதிர்பார்க்கவும் இல்லை@ இப்படியொரு நிலை வருமென்று சிந்திக்கவும் இல்லை. அப்போதிருந்ததெல்லாம் விடுதலை பற்றிய கனவே. வரலாறு பற்றிய அறிவையும் விட கனவுளைப் பற்றிய பெருமிதங்களே முன்னணியில் இருந்தன. மகிழ்ச்சியான எதிர்காலமொன்று, தடைகளும் சுமைகளுமற்ற இனிய காலமொன்று மலரும் என்றே பலரும் நம்பினர். அந்தக் கனவோடுதான் அணி அணியாக, அலை அiலையாக இளைய தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துப் போராட்டத்துக்காக உழைத்தனர். போராட்டத்திற்காக அவர்கள் எத்தகைய பாடுகளையும் எதிர்கொள்ளவும் அவற்றை ஏற்கவும் தயாராக இருந்தனர். அப்படியே அவற்றையெல்லாம் அவர்கள் எதிர்கொண்டனர். விடுதலைக்காக, தடையற்ற சுதந்திரத்துக்காக, மகிழ்ச்சிக்காக, உத்தரவாதமுடைய பாதுகாப்புக்காக, கௌரவமான வாழ்க்கைக்காக என அவர்கள் தங்கள் இளமைக்காலத்தையும் எதிர்காலத்தையும் மகிழ்வோடு அர்ப்பணித்தனர். இந்த அர்ப்பண உணர்வே சிறைக்கூடங்களையும் சித்திரவதை முகாம்களையும் பற்றிய அச்சத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் ஆக்கியது. 

அது அன்றைய இளைய தலைமுறையினர் எல்லோருக்கும் சிறகு முளைத்திருந்த காலம். 

ஆனால் இன்று?

இன்று, போராட்டத்தின் சிதைவு யுத்தக்குற்றங்களில் கொண்டு வந்து எல்லோரையும் நிறுத்தியுள்ளது. குற்றமிழைக்காத எந்தத் தரப்புமே ஈழப்போராட்டத்தில் இல்லை. எதிர்த்தரப்பு – மறுதரப்பு என்ற வேறுபாடுகள் எல்லாம் இந்தக் குற்றமிழைத்தலில் இருந்த தப்பிவிடவில்லை. வேண்டுமானால், குற்றங்களின் அளவில் விகித வேறுபாடுகள் இருக்குமே தவிர, குற்றங்களிலிருந்தும், குற்றமிழைப்பதிலிருந்தும் யாரும் விலகியிருக்கவில்லை. ‘இரத்தம் தோயாத கைகளைக் காட்டுங்கள், அவற்றில் முத்தமிடுகிறேன்’ என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. ‘பாவங்கள் அறியாத மனதைத் திறவுங்கள். அதிலிருக்கும் உண்மையைக் காண விரும்புகிறேன்’ என்றால் எந்தக் கதவும் திறப்பதாக இல்லை. இதுதான் இன்றைய நிலைமை.
இதுதான் வேடிக்கையும் துயரமும் நிரம்பிய யதார்த்தம். எல்லா விசாரணைகளும் தங்களுக்கானதல்ல. அது வெளியாருக்கே அல்லது மறு தரப்பினருக்கே அல்லது எதிர்த்தரப்பினருக்கே என்றே எல்லோரும் சொல்கிறார்கள். வெளியேதான் குற்றங்கள், வெளியேதான் விசாரணைகள், ஆகவே வெளியே இருந்தே நீதிகிடைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமே இன்று வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. 

யாரும் தங்களுடைய தீட்டுத்துணிகளைக் கழுவித் தூய்மையாக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. தன்னுடைய தீட்டுத்துணியைத் தூய்மையாக வைத்திருப்பது தன்னுடைய சுகாதாரத்துக்கே, தான் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே என்று யாரும் சிந்திப்பதாக இல்லை. மற்றவரின் தீட்டுத்துணியிலுள்ள அழுக்கைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

மேலும் யுத்தக்குற்றத்தைக் குறித்துச் சிந்திப்போர், யுத்தக்குற்றங்களுக்கான விசாரணைகளை வலியுறுத்துவோர், இந்த யுத்தக்குற்றமானது போராட்டத்தின் சிதைவினால் ஏற்பட்டது என்பதை விளங்கிக் கொள்ளவில்லை. போராட்டம் சிதைவுற்றதன் விளைவே யுத்தக் குற்றங்கள் ஏற்படக் காரணங்களாயின. சிதைவுற்ற போராட்டத்தில், சிதைக்கப்பட்ட போராட்டத்தில் யுத்தக்குற்றங்கள் தாராளமாகவே ஏற்;படும். இது தவிர்க்க முடியாத விதி. மட்டுமல்ல போராட்டச் சிதைவின் ஒரு பகுதியே யுத்தக்குற்றமாகும். ஆனால், இந்த முழுமையை விட்டுவிட்டுப் பலரும் இந்தப் பகுதியான குற்றங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். 

உண்மையில் யுத்தக்குற்றத்தைப் பற்றிச் சிந்திப்போரும் அவற்றைப் பற்றிப் பேசுவோரும் போராட்டம் சிதைந்ததைப் பற்றியும் அது சிதைக்கப்பட்டதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும். ஈழப்போராட்டத்தின் சிதைவு அல்லது ஈழப்போராட்டம் சிதைக்கப்பட்டது என்று பார்க்கும்போதே அதன் விளைவுகளை நாம் அடையாளங்காண முடியும். குற்றங்களையும் தவறுகளையும் குறைபாடுகளையும் இனங்காணாமல் எந்தப் பின்னடைவையும் சீர்ப்படுத்திட முடியாது. விஞ்ஞான ரீதியான ஒரு பரிசோதனையாக இருந்தாலும் சரி, சாதாரண தொழில் ரீதியான முயற்சியானாலும் சரி இது ஒரு தவிர்க்க முடியாத அடிப்படை. இந்த அடிப்படையைப் பின்பற்றும்போதே புதிய சவால்களை எதிர்கொள்ளவும் கடந்த காலத் தடைகளைக் கடக்கவும் குறைபாடுகளிலிருந்து விடுபடவும் முடியும். ஆகவே, இன்று கடந்து வந்த பாதையை மீளத் திரும்பிப் பார்த்தல் என்பது தவிர்க்க முடியாத ஒரு அவசியமாகியுள்ளது. குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு இதைத் தவிர மாற்றுவழிகள் இல்லை. அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதொன்றும் புதிதுமல்ல. வெட்கக் கேடான செயலுமல்ல.

இதை வெறுமனே குற்றமாகப் பார்க்காமல், ஒரு மருத்துவமாகப் பார்க்க வேண்டும். வரலாற்றிலிருக்கும் பெருமிதப் புள்ளிகளை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையில், விமர்சன பூர்வமாகப் பார்க்க வேண்டும். தன்னை மையப்படுத்திப் பார்க்காமல், தன்னை எதிர்நிலையில் முன் வைத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இதுவே இன்றைய முதன்மைத் தேவையாகும். இவ்வாறு செய்யப்படும்போதே அவலப்பரப்பாக விரிந்திருக்கும் ஈழத்தின் துயர நிலையைப் போக்க முடியும். புதிய திசைகளை நோக்கிப் பயணிக்கவும் முடியும். 

எனவே இது போராட்டத்தின் சாட்சியங்களைப் பேசும் காலமாக வேண்டும். யுத்த சாட்சியங்களையும் விட போராட்ட சாட்சியங்கள் முக்கியமானவை. போராட்டத்தின் சாட்சியங்களே முழுமையானவை. ஆனால் அவை நேர்மையானவையாக இருக்க வேண்டும். இங்கே ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல தன்மையவாதங்களாக அல்லாமல், மீண்டும் பிம்ப உருவாக்கம் செய்யாமல், விசுவாசத் தன்மையோடு அவை முன்வைக்கப்படவேண்டும். எத்தகைய உயரிய நோக்கத்தோடு ஒரு விடுதலைப்போராளி தன்னுடைய முதற்காலடியை விடுதலைப் பயணத்தில் வேட்கையோடும் விசுவாசத்தோடும் அர்ப்பண உணர்வோடும் முன்வைக்கிறாரோ, அத்தகைய தன்மை இந்தச் சாட்சியங்களை முன்வைத்தலில் பேணப்படுவது அவசியம். ஆனால், ஆரம்பநிலைப் போராளியிடம் முதல் அடிவைப்பின்போது  முதிரா நிலைக்கான சாத்தியங்கள் அதிகம். இங்கே அனுபவங்களும் வயதும் முதிர்ந்திருப்பதால் நெறிப்பட்ட சாட்சியமாக்கப்படுகின்றன இவை. போராட்ட அனுபவமும் வயது மற்றும் கால அனுபவமும் இணைந்த நிலையில் இந்த அடிவைப்பு நிகழ்வதால், இந்தச் சாட்சியங்கள் முக்கியமானவையாகின்றன. 

இந்த வகையில்தான் ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளின் சாட்சியங்கள் முக்கியமானவையாக உள்ளன. சி.புஸ்பராஜா தொடக்கம் செழியன், ஐயர், மணியம், நேசன் எனப்பலரும் தங்களின் போராட்ட அனுபவங்களை எழுதியுள்ளனர். சிலர் தொடர்ந்து எழுதிவருகின்றனர். வேறு சிலர் எழுதத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இன்னும் சிலர் தங்களின் சாட்சியங்களை எழுதலாம். அவ்வாறான ஒரு சாட்சியத்தை - ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) வும் இங்கே எழுதியுள்ளார். ஈழப்போராட்டத்தின் முன்னோடியாக மட்டுமல்லாமல், ஒரு பெண்போராளியாகவும் அவர் இருந்ததன் காரணத்தினால், இந்தச் சாட்சியம் பல விதங்களிலும் முக்கியமானதாக உள்ளது. அதிலும் அகிம்சை வழிப்போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டத்தை நோக்கிய காலகட்டத்தைச் சேர்ந்த போராளியாக இவர் இருப்பது இந்த முக்கியத்துவத்தை மேலும் செறிவாக்குகிறது. மட்டுமல்ல, ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஆளுமைகளாக அறியப்பட்டவர்களையும்  பின்னாட்களில் இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்த பத்மநாபா, வரதராஜப்பெருமாள், வே.பாலகுமாரன், பிரபாகரன், சிவகுமாரன், புஸ்பராஜா போன்றவர்களைத் தன் சக பயணியாக இவர் கொண்டிருந்தமையும் இந்த முக்கியத்துவத்தில் அழுத்தம் பெறுகிறது. 

1950 இல் யாழ்ப்பாணத்திலுள்ள கடலோரக் கிராமமான மயிலிட்டி என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவொன்றிற் பிறந்த பெண், அன்றைய சூழலில் அரசியற் போராட்டத்தின் பொருட்டு பொதுவெளியில் இயங்க முற்பட்ட நிகழ்ச்சி அசாதாரணமானது. இந்த அசாதாரணத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்ச்சமூகத்தினாலும் முடியவில்லை. தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்த பாரம்பரிய அரசியற் தரப்பினாலும் இயலவில்லை. முற்போக்குப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, ஆயுதப்போராட்டத்தைப் பற்றிச் சிந்தித்த தரப்பினாலும் முடியவில்லை. அரச தப்பினாலும் முடியவில்லை. எனவே இவை இந்தப் பெண்ணை தமது கையிலுள்ள - மூளையிலுள்ள அத்தனை சக்திகளையும் பயன்படுத்தி இந்தப் பெண்ணை நசுக்கி விட முயற்சிக்கின்றன. ஆனால், புஸ்பராணி இவற்றுக்கெதிராக அசாதாரணமான முறையிற் செயற்படுகிறார்.

எதையும் எதிர்கொள்ளக்கூடிய அசாதாரண நிலை இது. ஒடுக்குமுறையும் அதிகாரமும் கோலோச்சும் இடங்களில் அவற்றுக்கெதிராக இயல்பின்மை உருவாகும். இந்த இயல்பின்மை அசாதாரணங்களை உருவாக்குகிறது. இந்த அசாதாரணங்களே போராட்டச் சக்திகளாகின்றன. போராட்டத்தை முன்னகர்த்துவதற்கே இந்த அசாதாரணம் தேவைப்படுகிறது. புஸ்பராணி இந்த அசாதாரணங்களில் ஒருவராக நின்று தன்னையும் தன்னுடைய வரலாற்றையும் படைத்துள்ளார். அதன் வழியிலேயே தன்னுடைய இந்தச் சாட்சியத்தையும் அளித்துள்ளார். இந்தச் சாட்சியத்தை அளிப்பதற்கான ஓர்மத்தையும் உண்மை குறித்த உணர்வையும் அக்கறையையும் புஸ்பராணிக்குள்ளிருந்த அசாதாரணமே வழங்கியிருக்கின்றது. இந்த அசாதாரணத்தின் வேர் அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தும் சூழலிலிருந்தும் அவருக்குள் துளிர்விட்டிருக்கின்றன. இதை புஸ்பராணி அக்காவின் சகோதாரனாகிய சி.புஸ்பராஜாவின் அரசியற் செயற்பாடுகளிலும் போராட்டப்பாத்திரத்திலும் அவர் வழங்கிய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற பதிவிலும் நாம் தெளிவாகவே காணமுடியும். 

புஸ்பராணி தனியே தன்னுடைய அடையாளத்துக்குள்ளும் அனுபவத்துக்குள்ளும் மட்டுப்பட்டிருக்கவில்லை. அதைக் கடந்து அவர் பொது வெளிப் பரப்பில் தான் இயங்கிய காலத்தையும் சூழலையும் பதிவாக்குகிறார் என்பதன் மூலமாக இந்த அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். இதன்மூலம் தன்னுடைய பார்வைப்பரப்பின் விசாலத்தையும் செழுமையையும் அவர் காண்பிக்கிறார். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் தெரிகின்ற இடம் இதுதான். இந்தப் பின்னணிதான். 

எனவே, இந்த அசாதாரண அடையாளமுடைய வரலாற்றுப் பாத்திரத்தின் சாட்சியப் பதிவுகள் இன்றைய நமது ஈழப்போராட்ட அரசியற் சூழலில் மிக முக்கியத்துவமானவையாக உள்ளன. வரலாறு பற்றிய கற்றுக்குட்டித்தனங்களின் மத்தியில், அளவுக்கதிமான தேசியவாதப் புலம்பல்களுக்கு மத்தியில், தான் கொண்ட அரசியற்தெரிவுக்காக தன்னை ஒப்புக்கொடுத்ததும் அதற்காகப் பாடுகளைச் சுமக்கத் துணிந்ததும் மிகப் பெரிய விசயங்கள். இவை உணர்ந்து கொள்ளப்படவேண்டியவை. 

யுத்தக்குற்றங்களையும் விட போராட்டச் சாட்சியங்களே முழுமையானவை. அவையே வலிமை கூடியவை. அவையே வரலாற்றுப் போக்கை நிர்ணயிப்பதற்கான சக்தியை – வீரியத்தை வழங்குவன. 
00

No comments: