-
(01)
‘எல்லாப் பக்கமும் வாசலுள்ள கூடு’ என்றொரு கவிதையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். சுதந்திரத்தின் எல்லையற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் எண்ணம் அது. ஆனால், பிறகு இதற்கு எதிர்மாறாக, எந்தப் பக்கமும் வாசலே இல்லாத வாழ்க்கையொன்றை வாழ்ந்து கடக்க வேண்டியிருந்தது. அது யுத்தகால வாழ்க்கை. மூடுண்ட ஒரு உலகத்தில் மூச்சைப்பொத்திக் கொண்டு, சாவின் அருகில், அதன் நெடி உயிரை வாட்டியெடுக்க வாட்டியெடுக்க, சாகமுடியாமலும் வாழ முடியாமலும் இருப்பதே அந்த வாழ்க்கை.
யுத்தத்திற்குப் பிறகு – புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு - இப்பொழுதும் இன்னொரு வகையில், வாசல்கள் அடைக்கப்பட்டதொரு நிலையே தமிழ்ச்சூழலிலும் இலங்கை அரசியலிலும் தொடந்து கொண்டிருக்கிறது. இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல, இன்று ஈழத்தமிழ்ச் சூழலிலும் அதற்கப்பால், முழு இலங்கையிலும் அதற்குமப்பால் புலம்பெயர் சூழலிலும் பலருக்கும் இருப்பதை அவதானிக்கலாம்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலை.
ஆகவே, என். நடேசன் எழுதியிருப்பதைப் போல ‘நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்வது போன்ற ஒரு நிலை’தான் மாற்றாளர்களுடையது@ ஜனநாயகவாதிகளினுடையது@ பன்மைத்துவச் சிந்தனையாளர்களுடையது. ஒத்தோடிகளுக்கு இதில் அதிகமாகப் பிரச்சினைகளில்லை. மறுத்தோடிகளுக்கே கடினமான பாதைகளை வழங்குகிறது வரலாறு.
எனவே, மாற்றுக் கருத்தாளர்கள், பன்மைத்துவ அடிப்படையிற் சிந்திப்பவர்கள் நிச்சயமாக நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும். தமிழ்ச் சூழலின் யதார்த்தமும் இதுதான். அதன் அவலமும் இதுதான்.
இல்லையென்றால், ஒற்றைப் படையான சிந்தனையாளர்களிடம் அல்லது ஏகத்துவ மனப்பாங்காளர்களிடமிருந்து எதிர்ப்பையும் நிராகரிப்பையும் வசைபாடுதல்களையும் துரோகி, மாற்றான் என்ற மாதிரியான குறிசுடுதல்களையும் தாராளமாகவே எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேணும். இதற்கப்பால் உயிராபத்துகள் வரையில் ஏராளம் அபாயங்களும் உண்டு. அல்லது மௌனம். இதெல்லாம் யதார்த்தம். சுத்தமான நடைமுறை.
இதைத் தவிர, இன்னொரு வகையிலும் மாற்றுச் சிந்தனைப் போக்கையும் பன்மைத்துவ அடிப்படைகளையும் ஒடுக்கும் பொறிமுறையையும் தமிழ்ச் சமூகம் மிக நுட்பமாகத் தன்னுள்ளே வைத்திருக்கிறது.
நடேசனே சொல்வதைப்போல, ‘நீங்கள் ஏன் ஊரோடு ஒத்து வாழக்கூடாது? பிள்ளைகள், குடும்பம் என உங்களின் பாட்டுக்கு இருந்தால் பிரச்சினை இல்லையே!’ ‘உங்களின் மரணச் சடங்குக்குக்கூட அதிகமானவர்கள் வரமாட்டார்கள்’ என்றெல்லாம் அறிவுரையாக, எச்சரிக்கையாக, நட்புடன் எடுத்துரைப்பதாகக் கூறுவதன்மூலம் ஒருவகை உத்தியைக் கையாண்டு, மாற்றுக் கருத்தாளர்களையும் ஜனநாயகவாதிகளையும் தளர்வடையச் செய்து விடுகிறார்கள் பலரும். இத்தகைய அணுகுமுறை தமிழ்ச்சமூகத்தின் பலமானதோர் அடிப்படையாக உள்ளது.
‘ஊரோடு சேர்ந்து ஓடு, ஒருவனாக ஓடுகில் கேட்டு ஓடு’ என்று ஊர் வழக்கில் சொல்வதும்கூட ஏறக்குறைய இந்த அர்த்தத்தில்தான்.
மேலும் அபிப்பிராயங்களையே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை இன்னொரு விதமாக, மிக நுட்பமாக தமிழ்ச் சமூகம் வடிவமைத்து வைத்திருக்கிறது.
‘அவர் ஒரு சோலிக்கும் போகமாட்டார்’.
‘அவர் கதைச்சால் வெளியேசத்தமே கேட்காது’.
‘அந்த ஆள் மிதிச்ச இடத்துப் புல்லே சாகாது (அவ்வளவு மென்மையானவர்)’ என்றவகையில் ஒருவரைப் பற்றி முன்னோட்டமாகத் தானாகவே ஒரு இயல்பைப் புனைந்து அந்த இயல்பினுள் அவரைக் கட்டுப்படுத்தி விடும் உத்தி இது.
இதற்கு உறவு, அன்பு, பந்தம், பாசம் போன்ற கயிறுகளையெல்லாம் மிக லாவகமாகவே பயன்படுத்துகிறது தமிழ்ச் சமூகம். இந்தக் கயிறுகளைப் பயன்படுத்திச் சம்மந்தப்பட்டவரைக் கட்டிவைத்துவிடுகிறது அது.
பொதுவெளியில் நியாயமாகச் செயற்படுவோருக்கு உண்மையில் இது ஒரு தீவிரமான நெருக்குவாரமே. பொதுச் செயற்பாட்டுப் பரப்பிலிருந்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முடக்கி விடும் நோக்கம் கொண்ட செயலாக இது இருப்பதால், சமூகத்தின் விரிவை மேலும் விஸ்தரிப்பதற்குப் பதிலாக அதை ஒடுக்கி விடுகிறது.
இந்த மாதிரியான நுட்பத்தின் அடியில் சுயபாதுகாப்புணர்வொன்றிருப்பது உண்மைதான். ‘எதற்காக நமக்கு வீண்சோலியெல்லாம்’ என்றமாதிரி பிரச்சினைகளில் இருந்து விடுபட்டிருத்தல் அல்லது அவற்றிலிருந்து தள்ளியிருத்தல் இதனால் ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை அவ்வாறிருக்க அனுமதிப்பதில்லை’. பொதுமையத்தைக் கொண்ட எந்தப் பிரச்சினையும் யாரையும் விலகியிருப்பதற்கு அனுமதிப்பதில்லை. அதையும் கடந்து இவ்வாறு சுயபாதுகாப்புணர்வினால் தற்காத்துக்கொள்ள முனையும் இந்த மனிதர்கள், தங்களின் பொது அபிப்பிராயத்தை வேறு விதமாகவே கட்டமைத்து வைத்துள்ளனர். இதுதான் எரிச்சலூட்டுவது. சகித்துக்கொள்ள முடியாதது.
மத நம்பிக்கைகளை அடியொற்றுவதைப் போல, சில அரசியல் நம்பிக்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட கோட்பாட்டுச் சட்டகத்தினுள், விதிமுறைச் சதுரத்தினுள் தங்களை அடைத்துக்கொண்டு அல்லது அதற்குள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, அதற்குள் ஏனையவர்களையும் இழுத்து வைத்துக்கொள்ள முயலும் கட்டமைப்பு இவர்களுடையது.
குறுந்தேசியவாதச் சிந்தனைகளில் இந்த நிலையைத் தாரளமாகக் காணமுடியும். மேலும் இனவாதமாகிலும் சரி, மதவாதமாகினும் சரி, பிரதேசவாதமாகிலும் சரி இதுதான் யதார்த்தம்@ இதுதான் நிலைமை.
இத்தகைய நிலைப்பாட்டைக் கொள்வோரிற் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். மத ஒழுக்கங்களை விதிமுறைப்படி பின்பற்றுவோராக இருக்கின்றனர். படித்தவர்களாகவும் கல்விப் பீடங்களில் உயர்பதவி வகிப்பவர்களாகவும் உள்ளனர். கலைஞர்களாகவும் இலக்கியப்படிப்பாளிகளாகவும் படைப்பாளர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்களுக்குத் தெரிவதில்லை, தங்களின் சிந்தனையும் நம்பிக்கையும் நிலைப்பாடுகளும் மற்றவர்களை நிராகரிக்கின்றன என்பதை. அது பிறரைப் பலவழிகளிலும் நிந்திக்கிறது@ மற்றவர்களின் இடத்தை மறுக்கிறது. ஏகத்துவச் சிந்தனையை வளர்க்குமிடத்தில் ஜனநாயத்தின் இடம் சுருங்கிப் பலவீனமடைகிறது என்பதையெல்லாம்.
இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இத்தகைய ஒரு நிலை ஜேர்மனியில் ஹிட்லரையும் அவருடைய நாஜிகளின் நடவடிக்கைகளையும் ஆதரித்தோரிடம் இருந்துள்ளது. ஹிட்லரின் தலைமையில் நாஜிகள் மனித உலகம் அதிர்ச்சியடையும் விதமாக யூதப் படுகொலைகளை நடத்தினர். இந்தக் கொலைகளை - மனித நாகரீகத்துக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமான காரியங்களை ஆதரிக்கும் மனநிலை எப்படி அங்கிருந்த மக்களிடம் உருவாகியது என்பதை ‘பாவ மௌனம்’ என்ற கட்டுரையொன்றில் ஜெயமோகன் விளக்குகிறார்.
‘சாதாரண மக்கள் எப்படி இந்தக் கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்தப் படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?’
‘நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்லச் சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வு கூடங்களில் பரிசோதனை மிருகங்களாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்’ என அவர் மேலும் கேள்விகளை எழுப்பிச் செல்கிறார்.
இந்தக் கட்டுரை இலங்கையின் அரசியல் மற்றும் இலங்கையில் நிலவுகின்ற இனவாதச் சூழலையும் அந்த இனவாதத்துக்குப் பின்னால் தமிழ் சிங்களச் சமூகங்கள் அணிதிரண்டிருப்பதற்கான உளவியற்காரணங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றது. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் தனியே விரிவாகப் பார்க்கலாம்.
ஆகவே, இத்தகைய ஒடுங்கிய, ஒற்றைப்படையான சிந்தனையை ஆதரிக்கும் பெரும்போக்கின் காரணமாக ஜனநாயத்தின் இடம் சுருங்குகிறது. அப்படி அது சுருங்கும்பொழுது அந்த இடத்தில் அபாயவெளி விரிகிறது. அப்படி விரிந்து கொள்ளும் அபாயவெளியானது, ஒரு கட்டத்தில் எல்லோரையும் பலிகொண்டே விடும். உலகத்தின் பேரழிவுகள் அனைத்தும் இத்தகைய போக்கின் காரணமாகவே நிகழ்கின்றன. (இதைக் குறித்தும் பின்னர் சற்று விரிவாகப் பார்க்கலாம்).
எனவே முன்னர் குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளும் பொதுவெளிப்பரப்பில், மாற்றாளர்களாக இருப்போரையும் ஜனநாயகவாதிகளையும் அமுக்கிக் குரல்வளையை நசிக்கின்றன. பன்மைத்துவச் சிந்தனையாளர்களை ஒடுக்கிச் சிதைக்க முயற்சிக்கின்றன. அல்லது சமூகத்திலிருந்து இவர்களைத் தனிமைப்படுத்திவிட எத்தனிக்கின்றன.
இந்த நிலையிலேயே மாற்றாளர்கள் ‘வாசலற்றதொரு வாழ்க்கை’யை வாழவேண்டியுள்ளது. ‘வாசலற்ற வாழ்க்கை’ மிகக் கடினமானது. சினமும் வலிகளும் நிரம்பியது. மூடுண்டது. அந்த வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாது. எதையும் சொல்ல முடியாது. எதையும் சிந்திக்க முடியாது. எதைப் பற்றியும் கதைக்க – உரையாட – விவாதிக்க – சிந்திக்க முடியாது. கதைத்தால் அல்லது எதையாவது செய்தால் அல்லது எதையாவது செய்வதற்கு முயன்றால், அது தற்கொலைக்குச் சமம்.
இப்படியிருக்கும் ஒரு சமூகத்தில் எதுவுமே உருப்படாது. உருப்படாத சமூகங்களைத் தன்னுடைய உள்ளடக்கத்திற் கொண்ட நாடு எப்படியிருக்கும் என்று இங்கே அதிகம் விளக்கத்தேவையில்லை.
இந்த இடத்தில் நாம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக்குறித்த நமது கேள்விகளையும் எழுப்பவேண்டும்.
‘வாசலற்ற வாழ்க்கை’யை வாழ நிர்ப்பந்திக்கக் கோரும் ஒரு சமூகத்தின் பண்பாடு எவ்வாறு சிறப்பாக இருக்க முடியும்? மிகத் தொன்மையான பண்பாட்டுச் சிறப்பையும் பெருமைகளையும் தமிழ்ப் பண்பாடு தன்னகத்திலே கொண்டிருக்கிறது என்று சொன்னால், அல்லது அவ்வாறான கருத்தினை நாம் ஏற்றுக்கொள்வதாயின், அது எவ்வாறு ஜனநாயகத்துக்கும் சுயவிமர்சனத்துக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் பன்மைத்துவத்துக்கும் இடமளிக்கும் மரபைக்கொண்டிருக்கவில்லை?
இவை அடிப்படையான கேள்விகள்.
சிந்தனை முறைமையிலும் செயற்படு முறைமைகளிலும் வாசலைத்திறப்பது ஒரு வகை. வாசல்களை மூடுவது இன்னொரு வகை.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. புதிய விரிவுகளை நோக்கி நகர்வது. சுதந்திரத்தின் எல்லைகளை மேலும் விரிவாக்குவது. வாழ்வின் புதிய சாத்தியங்களை மேலும் கண்டடைவது போன்றவை வாசல்களைத் திறப்பதற்கான அடிப்படைகள்.
பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குவது@ அவற்றை சிக்கலாக்குவது. மேலும் பிரச்சினைகளை உருவாக்குவது. பிரச்சினைகள் ஆட்களையே விழுங்கும் அல்லது பலியிடும் நிலைக்கு அவற்றை வளர்ப்பது. பிரச்சினைகளாலேயே சிறைப்பிடிக்கப்படுவது. இந்த மாதிரியான விசயங்கள் எல்லாம் இருக்கின்ற வசால்களையும் அடைத்து விடும் இயல்பைப் பிரதான போக்காகக் கொள்வன. இவை வாசல்களை மூடுவன.
இலங்கைச் சமூகங்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலானவர்களின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் வாசல்களை மூடும் முறைமையே நடைமுறையிலுள்ளது. இதுவே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஊடகங்களிலிருந்து நாடாளுமன்றம் வரையில் இந்தக் குணாம்சப் போக்கிலேயே இயங்குகின்றன. இதில் தமிழ், சிங்களச் சமூகங்கள் என்ற வேறுபாடுகள் அதிகமில்லை. அதிலும் தமிழ்ச் சமூகத்தில் இந்த நிலை பல படிகள் உச்சம்.
அது மிக ஒடுங்கிய பரப்பில் தன்னுடைய பயணப்பாதையைத் தனிவழியாகவே வைத்துள்ளது. எனவே அதனால், பல தளங்களிலும் பயணிக்க முடியாதிருக்கிறது. ஆகவே அதற்கு ‘வாசலற்ற வாழ்க்கை’யே விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் இந்த வாசலற்ற வாழ்க்கை என்பது இரண்டு கிளைகளில் இரண்டு தன்மையில் இயங்குகிறது.
ஒன்று, மாற்றாளர்கள், பன்மைத்துவச் சிந்தனையாளர்கள், ஜனநாயகவாதிகளின் மீது நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுவதால் உருவாகின்ற வாசலற்ற வாழ்க்கை.
இவர்களே கொல்லப்படுகிறார்கள். அல்லது கடத்தப்படுகிறார்கள்@ காணாமற்போகிறார்கள்@ அல்லது நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். சொந்த இடத்தில் இவர்களுக்கான இடம் மறுக்கப்படுகிறது. பெர்து வெளியிலும் இவர்கள் இயங்குவதற்கான வெளி அச்சுறுத்தப்படுகிறது. அல்லது அந்த வெளியில் இவர்கள் இயங்க முடியாதவாறு இவர்களின் மீதான வசைகளும் குற்றச் சாட்டுகளும் பரப்பப்படுகின்றன.
இப்போது இதற்கு மிக உச்சவலுவைச் சேர்ப்பனமாக இருப்பவை இணையத்தளங்கள். இந்த இணையச் செயற்பாட்டினை - இவர்களின் இணைய வெளியை – ‘வசை வெளி’ என அடையாளப்படுத்துகிறார் நிலாந்தன்.
மற்றையது, பொதுப் பரப்பைத் தங்களின் நம்பிக்கைகளாலும் வழமைகளாலும் நிரப்பும் தரப்பினர் இறுதியில் பெறுகின்ற முடக்கத்தின் வழியான வாசலற்ற வாழ்க்கை.
இரண்டாவது வாழ்க்கைக்கு உதாரணமாக நாம் முள்ளிவாய்க்காலில் தோல்விகண்ட அரசியலைக் கொள்ள முடியும். அல்லது இன்னமும் வெற்றியடைய முடியாதிருக்கும் இனப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தும் தமிழ் மிதவாதத்தைக் குறிப்பிடலாம்.
முதல்வாழ்க்கை நிச்சயமாக வாசல்களைத் திறக்கும் வாழ்க்கை. ஆனால், அந்த வாசற்திறப்புக்குச் சமூகநிலையில் ஏற்படுகின்ற எதிர்ப்புகளும் பதற்றங்களும் இந்தத் தளத்திற் செயற்படுவோரின் வாசல்களை மூடிவிடுகின்றன. அல்லது மூடிவிட முயல்கின்றன.
ஆகவே, பொதுவாக ‘வாசலற்ற வாழ்க்கை’ என்பதே தமிழ்ச் சூழலிற்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதியை அது தனக்குத் தானே விதித்திருக்கிறது. இந்த விதியின்படி ‘வாசலற்ற வாழ்க்கை’யாக இருக்கும் நிலையானது மூடப்பட்ட உலகத்தில் வாழ்வதற்கு ஒப்பானது. இது தற்கொலைக்கொப்பானது மட்டுமல்ல அது ஒருவகைத் தண்டனையும் கூடவே.
ஏறக்குறைய இத்தகையதொரு தற்கொலைச் சூழல்தான் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் சோக்கிரட்டீஸ_க்கு ஏற்பட்டது. அன்றிருந்த சூழலில் பிரதான நம்பிக்கையாகக் கொள்ளப்பட்ட ஒன்றிற்கு அல்லது பெரும்பான்மையோரின் நம்பிக்கையாக இருந்தவற்றிற்கு மாறாகச் சிந்தித்ததே சோக்கிரட்டீஸைச் சாவு அரங்கிற்குக் கொண்டு போனது@ அவரை மயானத்தில் நிறுத்தியது.
கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்ததும் ஏறக்குறைய இத்தகைய ஒரு சூழல்தான். இன்னும் வரலாறு நெடுகவும் இத்தகைய சிலுவைப் பரிசளிப்புகளும் சாவரங்குகளின் திறப்பும் இத்தகைய ஒரு நிலையிற்தான் நிகழ்கின்றன.
இத்தகைய தற்கொலைக்கான – அல்லது கொலைக்கான நெருக்கடிகள் சிந்தனையையும் புதிய செயற்பாட்டு ஊக்கத்தையும் மட்டுப்படுத்தி ஒடுக்கி விடுகின்றன. இவை ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமே. இன்னொரு கூறே.
புதிய சிந்தனைகளையும் மாற்றுச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பாத கடினப்போக்கே இதற்குக் காரணம். இது அதிகாரத்தை விட்டுக்கொடுக்காத, மற்றவர்களுக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத, ஜனநாயகத்தை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளாத ஏகமனதின் நிலைப்பாடாகும்.
ஆனால், ஒரு சமூகத்திலும் மனித இயல்பிலும் புதிய சிந்தனைகளும் மாற்று அபிப்பிராயங்களும் இருந்தே தீரும்@ அவை ஏற்பட்டே தீரும். ஜனநாயகம் வளர்ச்சியடையுந்தோறும் மாற்றுச் சிந்தனைகளுக்கான இடமும் பெறுமதியும் அதிகரித்தே செல்லும்.
முக்கியமாக மீள்பார்வைகளும் விமர்சனங்களும் சுயவிமர்சனங்களும் அப்போது தாராளமாக – எந்தக் கூச்சமுமின்றி, எத்தகைய அச்சமுமில்லாமல் முன்வைக்கப்படும். அச்சமூட்டும் எத்தகைய கனத்த திரைகளையும் சுவர்களையும் ஜனநாயகம் உடைத்து விடும். இங்கேதான் புதிய சிந்தனைகள் வீச்சுடன் மேற்கிளம்புகின்றன.
எத்தகைய நிராகரிப்பையும் புறக்கணிப்பையும் கொலைப்படுத்தல்களையும் கடந்தே வரலாற்றுச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. அது எல்லா நிர்ப்பந்தங்களின் மத்தியிலும் உண்மையைக் கண்டடைந்து விடுகிறது. தான் கண்டடைந்த உண்மையைச் சார்ந்தும் அறத்தைச் சார்ந்துமே அது நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவேதான் எல்லா வன்முறைகளும் தோல்வியில் முடிவடைகின்றன. எல்லா அதிகாரங்களும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன.
சோக்கிரட்டிஸின் உடலையும் விட, கிறிஸ்துவின் உடலையும் விட அவர்கள் வலியுறுத்திய உண்மைக்கே வலிமை அதிகம். புதைக்கப்பட முடியாதிருப்பதும் அதுவே.
இதையெல்லாம் விளங்கிக் கொள்வதற்கு ஏராளம் உதாரணங்கள் வரலாறு நெடுகலும் உண்டு. இன்று ஈழத்தமிழர்கள் இருக்கின்ற நிலையும் இதற்கு மிகச் சிறப்பான உதாரணம். இதற்கெல்லாம் இலகுவிற் திறக்கக்கூடிய – திறக்க வேண்டிய – ‘மூன்றாவது கண்’ என்று கிட்டும்?
00
.jpg)
No comments:
Post a Comment