யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. விசுவமடுவிலுள்ள ஒரு சிறிய வீட்டையும் அதனோடிணைந்திருக்கும் பதுங்கு குழியையும் பார்ப்பதற்காக தினமும் ஏராளம் சனங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தென்பகுதியிலிருந்து வருவோரே அதிகம். இந்த வீடும் பதுங்கு குழியும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்பதே இந்தக் கவர்ச்சிக்குக் காரணம். தெற்கிலிருந்து இப்படிப் புலிகளின் கவர்ச்சி மையங்களை நோக்கி பலர் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். விடுமுறைக் காலங்கள் என்றால் வருவோரின் தொகை கூடியிருக்கும். தெற்கிலிருந்து வருகின்ற சிங்கள மக்கள் மட்டுமல்ல, புலம் பெயர் நாடுகளிலிருந்து வருகின்ற தமிழர்களும் உள்ளுரில் உள்ள தங்களின் சொந்தக்காரர்களை அழைத்துக் கொண்டு புலிகளின் கவர்ச்சி மையங்களை நோக்கிச் சுற்றுலாப்போகிறார்கள். இதற்கென்று பழக்கப்பட்ட, இடங்கள் தெரிந்த வண்டிச் சாரதிகளும் வழிகாட்டிகளும் கூட முளைத்து விட்டனர். யுத்தகால எச்சங்கள் பலவுண்டு. போரினால் பாதிக்கப்பட்ட, உடல் உறுப்புகளை இழந்த மனிதர்கள், இடிந்தும் அழிந்தும்போன வீடுகள்.... ஆனால் அவற்றை யாரும் பார்க்க வருவதில்லை. பதிலாக யுத்தத்தை நடத்துவதற்குக் காரணமாக இருந்த இப்படியான கவர்ச்சி மையங்களை நோக்கியே சனங்கள் வருகிறார்கள்.
விசுவமடுவில் உள்ள அந்தச் சிறிய வீட்டில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் விளையாடிய கார் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியில் பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகிய பிறகு, இந்தக் காரின் மதிப்பும் சற்றுக் கூடித்தான் விட்டது. இந்த வீட்டுக்கு வருவோர் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த விளையாட்டுக்காரை அதிசயத்துடன் பார்க்கிறார்கள். சிங்களவர்கள் என்றால், அவர்களுக்கு அதைப் பற்றிய விளக்கத்தையும் கதையையும் அங்கே நிற்கின்ற படைச்சிப்பாய் சொல்கிறார். தமிழர்கள் தங்களக்குள் எதையோ கதைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தக் கார் கூடிய கவர்ச்சியையோ மதிப்பையோ கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தக் காரை யாராவது புலம்பெயர் நாடுகளான மேற்குலகிலோ அல்லது தமிழ்நாட்டிலே இந்தக் காரை ஏலத்தில் விட்டால் பல கோடிகள் புரளும்.
ஆனால், அப்படி எந்த விபரீதமும் நிகழாமல் அந்தக் கார் 'கைவிடப்பட்ட வரலாற்றின் காட்சிப் பொருளாக' ஒரு கற்குவியலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் வீடு என்று சொல்லப்படும் இரண்டு அறைகளைக் கொண்ட அந்தச் சிறிய வீட்டில் வேறு எந்தப் பொருட்களும் இல்லை. அருகிலிருக்கும் பதுங்கு குழியில் பிரபாகரன் அணிந்ததாகச் சொல்லப்படும் சீருடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்தியதாக மேசை, ஒரு சிறிய அலுமாரி, கதிரை ஒன்று, அவருக்கு விருப்பமானதாக கூறப்படும் ஒரு சிறுத்தையின் மிகப் பெரிய (சிறுத்தையின் உருவத்தின் அளவு) பொம்மை என்பனவும் அந்தப் பதுங்குகுழியில் உண்டு. அதைப் பார்க்கும்போது மெய்யான சிறுத்தை ஒன்று படுத்திருப்பதைப்போலவே தோன்றும்.
அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. வழமையான கிணறுகளை விட மிகப் பெரியது. தென்னந்தோப்பொன்றின் மத்தியிலிருக்கும் அந்த வீட்டின் முன்னே புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்றின் சிதைந்த உதிரிப்பாகங்கள் சிலவும் உண்டு. புலிகள் இருந்தபோதே அந்த உலங்குவானூர்தியின் எச்சங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தனவா? அல்லது புலிகள் இல்லாத காலத்தில் படையினர் அவற்றை வேறு எங்கோ இருந்து எடுத்து வந்து அங்கே பார்வையாளரின் கவனத்துக்காக வைத்துள்ளனரா என்று தெரியவில்லை.
இந்த வீடும் பதுங்கு குழியும் இருக்கும் இடத்துக்கு அண்மையில்தான் நாங்கள் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். அதற்கு முன்பு, அநேகமாக 2008 டிசெம்பரில் இடம்பெயர்ந்திருந்த எங்கள் நண்பர் ஒருவரின் குடும்பத்தைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தோம். ஆட்கள் அதிகமில்லாத ஒரு பாதையின் வழியே வந்தபோது ஒரு சிறிய வெட்டைப்பகுதியில் குண்டு வீச்சு நடந்திருந்தது. அது ஒரு மாலை நேரம். மழை பெய்து ஈரம் காயாத நாள். செம்பாட்டு மண் இரண்டு பெருங்குவியலாக சிதறிக் கிடந்தது. இரண்டு பெரிய குழிகள். குண்டு வீச்சு விமானங்களின் இலக்கு முற்றாகவே தவறிவிட்டது. இலக்குத் தவறினால் மீண்டும் அந்த இலக்கைத் தாக்குவதற்கு மீண்டும் எந்த நேரத்திலும் விமானங்கள் வரலாம். நாங்கள் அந்த இடத்துக்கு வந்தபோது அங்கே மயான அமைதி. ஆள் நடமாட்டமே இல்லை. அந்த வாரத்திலோ அல்லது மிகக் கிட்டவான சில நாட்களின் முன்னரோதான் அந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடும். தொடர்ந்து அந்த வழியால் பயணிக்கலாம் போலத் தோன்றவில்லை. ஆனால், அந்தப் பக்கமாகச் சென்றால்தான் நாங்கள் தேடி வரும் நண்பரைப் பார்க்க முடியும் என்று வழிகேட்ட போது சொல்லியிருந்தார்கள். எனவே அங்கே நின்று அப்பால் செல்ல முடியுமா என்று ஆராய்ந்தோம்.
அதற்கிடையில் அந்தப் பகுதியிலிருந்து திடீரென ஒரு இயக்கப் போராளி வந்து, 'ஏன் நிக்கிறீங்கள்? எங்க போறீங்கள்? எங்கையிருந்து வாறீங்கள்?' என்று பல கேள்விகளைக் கேட்டார். நான் விவரத்தைச் சொன்னேன். அவர் எங்களைத் திரும்பிப் போகச் சொன்னார். அந்தப் பாதை தடுக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து நாங்கள் அங்கே நிற்பது பாதுகாப்பானதல்ல என்றும் கூறினார். எங்களுடைய உள்ளுணர்வும் அப்படியே சொன்னது. எனவே நாங்கள் மேற்கொண்டு அங்கே தாமதிக்கவில்லை. வந்த வழியே திரும்பிச் சென்றோம்.
வழியில் எங்களுக்கு அறிமுகமான அந்த ஊர்வாசி ஒருவர் எதிர்ப்பட்டார். நாங்கள் வரும் வழியைப் பார்த்த அவருக்கு ஆச்சரியம். 'எங்கே இருந்து வாறீங்கள்? எங்க போறீங்கள்?' என்று கேட்டார்.
'நண்பர் ஒருவரின் குடும்பத்தைத் தேடுகிறம். கண்ணகை நகர்ப்பக்கமாகத்தான் அவர் இருக்கிறார்' என்றேன்.
'அதுக்கு ஏன் உதுக்குள்ளால் போனீங்கள்? அது இம்ரான் பாண்டியன் படையணியின்ரை பேஸ். (இந்தப் படையணியே பிரபாகரனின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நெருக்கமாக இருந்தது). அங்கால ஒருதரும் போறேல்ல. போகவும் விடமாட்டடினம். அதை இலக்கு வைச்சுத்தான் கிட்டடியிலயும் குண்டு வீச்சு நடந்தது' என்றார் நண்பர்.
நிலைமையின் தாற்பரியம் விளங்கியது. நாங்கள் வழியில் வந்த அந்த ஊர்வாசிக்கு நன்றியைச் சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றோம்.
அடுத்த சில வாரங்களில் நாங்களும் அந்தப் பகுதிக்கு – கண்ணகை நகருக்கு இடம்பெயர்ந்து வந்தோம். அதற்கு முன்னர் தருமபுரத்தில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தோம். தருமபுரத்திலிருந்த போது 'நிஸா'ப் புயல் அடித்தது. இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டிக் கொண்டிருந்தது அடைமழை. நாங்களிருந்தது ஒரு தென்னங்தோப்பில். புயற்காலத்தில் எவன்தான் அப்படியொரு தென்னந்தோப்பில் குடியிருப்பான்? ஓயாத காற்று, விசர் பிடித்து உச்சத்தில் பேயாய் ஆடியது. தென்னைகள் படைகளை விட, எறிகணைகளை விடப் பயங்காட்டிக் கொண்டிருந்தன. பெய்த மழையினால் கல்மடுக்குளம் நிரம்பி, வாய்க்கால்களால், தெருக்களால், வீடுகளின் முற்றத்தால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சனங்கள் ஆலாய்ப்பறந்தார்கள். எங்களின் தற்காலிகக் குடிசை மாளிகையும் மழையில் தெக்கித் தெம்பி விட்டது. கட்டில் மண்ணில் புதையுண்டதால் அதன் மேல் படுத்திருந்த மகன் வெள்ளத்துக்குள் வீழ்ந்தான். வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. நான் முடிந்த மட்டும் மண்ணினால் தடுத்துப் பார்த்தேன். முடியவில்லை. வெள்ளத்துக்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிந்தபோது, வந்தன எறிகணைகள்.
அது 2009 ஜனவரி 13 ஆம் திகதி. தைப்பொங்கலுக்கு முதல் நாள். நாங்கள் இருந்த அந்தத் தென்னந்தோப்புக்கு அண்மையில் - ஒரு 20 மீற்றர் தொலைவில் (மிக அருகில்) நான்கு எறிகணைகள் வந்து வெடித்தன. நான்கு பேர் அதில் கொல்லப்பட்டார்கள். வேறு சிலருக்குக் காயம். தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் மருத்துவமனை இருந்தது. சடலங்களையும் காயப்பட்டவர்களையும் அங்கே எடுத்துப் போனார்கள். மருத்துவமனை இருந்தால் என்ன விட்டால் என்ன எறிகணை வரும் என்ற மாதிரியான ஒரு சேதியை அந்தத் தாக்குதல் மேலும் சொன்னது – உணர்த்தியது.
அது நண்பகல் கழியும் நேரம். சனங்கள் அலறியடித்துக்கொண்டு சிதறியோடினார்கள். நான் ஒரு மணித்தியாலயத்துக்குப் பிறகே என்னுடைய மனைவியைக்கண்டு பிடித்தேன். வாய்க்காலுக்கு எதிர்ப் பக்கமாக இன்னொரு வளவில் நின்று கொண்டு, 'இஞ்சயிருந்து வெளிக்கிடுவம். இனிமேல் நிக்கேலாது. அவனுக்கு விசர் பிடிச்சிட்டுது.... இனியென்னவெல்லாம் நடக்கப்போகுதோ..' என்று புலம்பினாள்.
அன்று மாலையே அங்கிருந்து வெளியேறி கண்ணகை நகருக்குச் சென்றோம். கண்ணகை நகரில் இருந்தவர்களில் அநேகரை எங்களுக்குத் தெரியும். எப்படியாவது ஒரு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒதுங்கிக் கொள்வதற்கு சிறிய ஏற்பாடு அல்லது வசதிகள் ஏதாவது கிடைக்கும் என நம்பினேன். ஆனால், நாங்கள் போனபோது, அங்கே வளவுகள், வீடுகள் எல்லாமே நிரம்பி விட்டன. அந்தளவுக்கு நாலா திசையிலிருந்தும் ஏராளம் சனங்கள் வந்து குவிந்திருந்தார்கள். என்றாலும் எங்களுக்கும் இடம் கிடைத்தது. அதில் நாங்கள் தனியாக ஒரு சிறிய வீட்டினை அமைத்தோம். மழை பெய்து கொண்டிருந்தது. அந்தச் சிறிய வீட்டில் ஒரே ஒரு அறை. சமையல், படுக்கை, பொருட்களை வைப்பது, விருந்தினரை வரவேற்பது... இப்படி எல்லாமே அதற்குள்தான்.
வேலை ஒன்றும் கிடையாது. வெளியே போவதென்றால் பொருட்களை வாங்குவதற்கும் சொந்த பந்தங்களைத் தேடிப்பார்ப்பதற்கும் மட்டும்தான். கண்ணகை நகரில் இயக்கத்தினால் ஆட்சேர்க்கவும் முடியவில்லை. அவர்கள் கடவுளுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு பயல் பிடிபடவில்லை. அதனால் ஆட்பிடி தொடர்பான பதற்றம் பெரிய அளவில் அங்கில்லை.
சனங்கள் தொடர்ந்து வந்தபடியே இருந்தனர். வந்தவர்களில் பலர் வேறு இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கிருப்பது நல்லதா அல்லது அங்கிருந்து வெளியேறிச் செல்வதா என்று குழம்பிக் கொண்டிருந்தோம். படைகள் முன்னகர்ந்து வந்தபடியே இருந்தன. தாக்குதல் உக்கிரமடைந்திருந்தது.
'விசுவமடுவிலிருந்தும் வெளிக்கிடுவதா?' என்று உள் மனம் கேட்டது. ஒரு காலத்தில் (அநேகமாக அது 1970 கள் 80 கள் என நினைக்கிறேன்) 'வெளிக்கிடடி விசுவமடுவுக்கு' என்றொரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. விசுவமடு என்ற வளமான புதிய விவசாயக் குடியேற்றத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சனங்களை அழைத்துப் போகும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருந்த நாடகம் அது. பிறகு நாடகத்தையும் விடச் செழிப்பாகவும் பிரபலமாகவும் மாறியிருந்தது விசுவமடு. விசுவமடுவுக்கென்றே அச்சுவேலி, நெல்லியடி, பருத்தித்துறை, மூளாய், காரைநகர், குறிகட்டுவான் போன்ற இடங்களிலிருந்து பஸ்சும் தட்டிவான்களும் ஓடின. வாழைக்குலையும் செத்தல் மிளகாய்ச் சாக்குகளுமாக தட்டிவான்கள் சந்தைகளை நோக்கிப் பறந்தன. விசுவமடுவிலிருந்து கொழும்புக்கே லொறிகள் ஓடியதுமுண்டு. வெங்காயம், செத்தல் மிளகாய், வாழைக்குலை என பலதையும் வாங்குவதற்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்கள் நேரிலே வந்தார்கள். ஆயிரக்கணக்கான மாடுகள் பெருகி, லொறிக்கணக்காக யாழ்ப்பாணத்துக்கு எருப்போனது. இப்பிடி எல்லாம் இருந்தால் ஊர் செழிப்பாகத்தானே இருக்கும்.
இயக்கங்களின் காலத்தில் விசுவமடுவில்தான் அதிகமான இயக்கபெடியள் சாப்பிடும் நல்ல சாப்பாட்டுக்கடை இருந்தது. 'வாணி விலாஸ்' என்று. இராணுவ முகாமுக்குத் தண்ணிகாட்டி ஆனையிறவுக்குப் பின்பக்கமாக உள்ள கடற்களப்பைக் கடந்து சுண்டிக்குளம் பகுதியால் வந்து விசுவமடுவில் ஏறினால், வாணி விலாஸ்தான் வரவேற்கும். நல்ல பசுப்பால் அல்லது பசுப்பால் ரீ தருவார்கள். பெரிய கப்பல் வாழைப்பழங்கள் மிக மலிவாகக் கிடைக்கும்.
புலிகளின் காலத்திலும் விசுவமடு செழிப்பாகத்தானிருந்தது. நல்லதொரு நூல்நிலையத்தை புலிகள் அங்கே வைத்திருந்தார்கள். சாரதி பயிற்சிக் கல்லூரி, பெரிய விவசாயப் பண்ணைகள், தமிழீழப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமைப் பணிமனை, லொறி (பாரவூர்தி) களின் தலைமையகம், வணிக மையங்கள், புலிகளின் சர்வதேச செயலகத்தின் மையம் எனப் பலவும் விசுவமடுவில்தான் இருந்தன. அந்த நாட்களில் சற்றுப் பெரிய திரையில் அமைக்கப்பட்டிருந்த தியேட்டர் ஒன்றும் கூட அங்கேதானிருந்தது. அதில் அநேகமாக எம்.ஜி. ஆரின் படங்களே ஓடும். இதெல்லாம் பழைய கதைகள் அல்ல. முன்னெப்போதோ நடந்தவையும் அல்ல. 1997, 98 தொடக்கம் 2009 வரையில் நடந்தவை. விசுவமடுவில் ஒரு துயிலுமில்லமும் இருந்தது. அதில் ஜெயசிக்குறு சமரில் பலியாகிய போராளிகளே அதிகமாக இடப்பட்டிருந்தார்கள். மட்டக்களப்பு, அம்பாறையைச் சேர்ந்தவர்களே அதிகம். மாவீரர்நாள் காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்தும் அம்பாறையிலிருந்தும் ஆயிரக்காணக்கான தாய்மாரும் தந்தையரும் வந்து கண்ணீர் மல்லக் கசிந்துருகுவார்கள்.
இன்று எல்லாமே மாறி விட்டன. இப்போதும் யாரோ சொல்லக் கூடும், “அபி யமு விசுவமடுவட“ ('வெளிக்கிடடி விசுவமடுவுக்கு') என. ஆனால் அது விசுவமடுவில் வாழ்வதற்கோ விவசாயம் செய்வதற்கோ அல்ல. பிரபாகரனின் பதுங்குகுழியையும் அவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சிறிய வீட்டையும் பார்ப்பதற்காகவே.
00
No comments:
Post a Comment