Wednesday, April 24, 2013

வெளிக்கிடடி விசுவமடுவுக்கு'


யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. விசுவமடுவிலுள்ள ஒரு சிறிய வீட்டையும் அதனோடிணைந்திருக்கும் பதுங்கு குழியையும் பார்ப்பதற்காக தினமும் ஏராளம் சனங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தென்பகுதியிலிருந்து வருவோரே அதிகம். இந்த வீடும் பதுங்கு குழியும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்பதே இந்தக் கவர்ச்சிக்குக் காரணம். தெற்கிலிருந்து இப்படிப் புலிகளின் கவர்ச்சி மையங்களை நோக்கி பலர் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். விடுமுறைக் காலங்கள் என்றால் வருவோரின் தொகை கூடியிருக்கும். தெற்கிலிருந்து வருகின்ற சிங்கள மக்கள் மட்டுமல்ல, புலம் பெயர் நாடுகளிலிருந்து வருகின்ற தமிழர்களும் உள்ளுரில் உள்ள தங்களின் சொந்தக்காரர்களை அழைத்துக் கொண்டு புலிகளின் கவர்ச்சி மையங்களை நோக்கிச் சுற்றுலாப்போகிறார்கள். இதற்கென்று பழக்கப்பட்ட, இடங்கள் தெரிந்த வண்டிச் சாரதிகளும் வழிகாட்டிகளும் கூட முளைத்து விட்டனர். யுத்தகால எச்சங்கள் பலவுண்டு. போரினால் பாதிக்கப்பட்ட, உடல் உறுப்புகளை இழந்த மனிதர்கள், இடிந்தும் அழிந்தும்போன வீடுகள்.... ஆனால் அவற்றை யாரும் பார்க்க வருவதில்லை. பதிலாக யுத்தத்தை நடத்துவதற்குக் காரணமாக இருந்த இப்படியான கவர்ச்சி மையங்களை நோக்கியே சனங்கள் வருகிறார்கள்.

விசுவமடுவில் உள்ள அந்தச் சிறிய வீட்டில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் விளையாடிய கார் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியில் பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகிய பிறகு, இந்தக் காரின் மதிப்பும் சற்றுக் கூடித்தான் விட்டது. இந்த வீட்டுக்கு வருவோர் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த விளையாட்டுக்காரை அதிசயத்துடன் பார்க்கிறார்கள். சிங்களவர்கள் என்றால், அவர்களுக்கு அதைப் பற்றிய விளக்கத்தையும் கதையையும் அங்கே நிற்கின்ற படைச்சிப்பாய் சொல்கிறார். தமிழர்கள் தங்களக்குள் எதையோ கதைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தக் கார் கூடிய கவர்ச்சியையோ மதிப்பையோ கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தக் காரை யாராவது புலம்பெயர் நாடுகளான மேற்குலகிலோ அல்லது தமிழ்நாட்டிலே இந்தக் காரை ஏலத்தில் விட்டால் பல கோடிகள் புரளும்.

ஆனால், அப்படி எந்த விபரீதமும் நிகழாமல் அந்தக் கார் 'கைவிடப்பட்ட வரலாற்றின் காட்சிப் பொருளாக' ஒரு கற்குவியலின் மேல் வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் வீடு என்று சொல்லப்படும் இரண்டு அறைகளைக் கொண்ட அந்தச் சிறிய வீட்டில் வேறு எந்தப் பொருட்களும் இல்லை. அருகிலிருக்கும் பதுங்கு குழியில் பிரபாகரன் அணிந்ததாகச் சொல்லப்படும் சீருடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்தியதாக மேசை, ஒரு சிறிய அலுமாரி, கதிரை ஒன்று, அவருக்கு விருப்பமானதாக கூறப்படும் ஒரு சிறுத்தையின் மிகப் பெரிய (சிறுத்தையின் உருவத்தின் அளவு) பொம்மை என்பனவும் அந்தப் பதுங்குகுழியில் உண்டு. அதைப் பார்க்கும்போது மெய்யான சிறுத்தை ஒன்று படுத்திருப்பதைப்போலவே தோன்றும்.

அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. வழமையான கிணறுகளை விட மிகப் பெரியது. தென்னந்தோப்பொன்றின் மத்தியிலிருக்கும் அந்த வீட்டின் முன்னே புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்றின் சிதைந்த உதிரிப்பாகங்கள் சிலவும் உண்டு. புலிகள் இருந்தபோதே அந்த உலங்குவானூர்தியின் எச்சங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தனவா? அல்லது புலிகள் இல்லாத காலத்தில் படையினர் அவற்றை வேறு எங்கோ இருந்து எடுத்து வந்து அங்கே பார்வையாளரின் கவனத்துக்காக வைத்துள்ளனரா என்று தெரியவில்லை.

இந்த வீடும் பதுங்கு குழியும் இருக்கும் இடத்துக்கு அண்மையில்தான் நாங்கள் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். அதற்கு முன்பு, அநேகமாக 2008 டிசெம்பரில் இடம்பெயர்ந்திருந்த எங்கள் நண்பர் ஒருவரின் குடும்பத்தைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தோம். ஆட்கள் அதிகமில்லாத ஒரு பாதையின் வழியே வந்தபோது ஒரு சிறிய வெட்டைப்பகுதியில் குண்டு வீச்சு நடந்திருந்தது. அது ஒரு மாலை நேரம். மழை பெய்து ஈரம் காயாத நாள். செம்பாட்டு மண் இரண்டு பெருங்குவியலாக சிதறிக் கிடந்தது. இரண்டு பெரிய குழிகள். குண்டு வீச்சு விமானங்களின் இலக்கு முற்றாகவே தவறிவிட்டது. இலக்குத் தவறினால் மீண்டும் அந்த இலக்கைத் தாக்குவதற்கு மீண்டும் எந்த நேரத்திலும் விமானங்கள் வரலாம். நாங்கள் அந்த இடத்துக்கு வந்தபோது அங்கே மயான அமைதி. ஆள் நடமாட்டமே இல்லை. அந்த வாரத்திலோ அல்லது மிகக் கிட்டவான சில நாட்களின் முன்னரோதான் அந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடும். தொடர்ந்து அந்த வழியால் பயணிக்கலாம் போலத் தோன்றவில்லை. ஆனால், அந்தப் பக்கமாகச் சென்றால்தான் நாங்கள் தேடி வரும் நண்பரைப் பார்க்க முடியும் என்று வழிகேட்ட போது சொல்லியிருந்தார்கள். எனவே அங்கே நின்று அப்பால் செல்ல முடியுமா என்று ஆராய்ந்தோம்.

அதற்கிடையில் அந்தப் பகுதியிலிருந்து திடீரென ஒரு இயக்கப் போராளி வந்து, 'ஏன் நிக்கிறீங்கள்? எங்க போறீங்கள்? எங்கையிருந்து வாறீங்கள்?' என்று பல கேள்விகளைக் கேட்டார். நான் விவரத்தைச் சொன்னேன். அவர் எங்களைத் திரும்பிப் போகச் சொன்னார். அந்தப் பாதை தடுக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து நாங்கள் அங்கே நிற்பது பாதுகாப்பானதல்ல என்றும் கூறினார். எங்களுடைய உள்ளுணர்வும் அப்படியே சொன்னது. எனவே நாங்கள் மேற்கொண்டு அங்கே தாமதிக்கவில்லை. வந்த வழியே திரும்பிச் சென்றோம்.

வழியில் எங்களுக்கு அறிமுகமான அந்த ஊர்வாசி ஒருவர் எதிர்ப்பட்டார். நாங்கள் வரும் வழியைப் பார்த்த அவருக்கு ஆச்சரியம். 'எங்கே இருந்து வாறீங்கள்? எங்க போறீங்கள்?' என்று கேட்டார்.

'நண்பர் ஒருவரின் குடும்பத்தைத் தேடுகிறம். கண்ணகை நகர்ப்பக்கமாகத்தான் அவர் இருக்கிறார்' என்றேன்.

'அதுக்கு ஏன் உதுக்குள்ளால் போனீங்கள்? அது இம்ரான் பாண்டியன் படையணியின்ரை பேஸ். (இந்தப் படையணியே பிரபாகரனின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நெருக்கமாக இருந்தது). அங்கால ஒருதரும் போறேல்ல. போகவும் விடமாட்டடினம். அதை இலக்கு வைச்சுத்தான் கிட்டடியிலயும் குண்டு வீச்சு நடந்தது' என்றார் நண்பர்.

நிலைமையின் தாற்பரியம் விளங்கியது. நாங்கள் வழியில் வந்த அந்த ஊர்வாசிக்கு நன்றியைச் சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றோம்.

அடுத்த சில வாரங்களில் நாங்களும் அந்தப் பகுதிக்கு – கண்ணகை நகருக்கு இடம்பெயர்ந்து வந்தோம். அதற்கு முன்னர் தருமபுரத்தில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தோம். தருமபுரத்திலிருந்த போது 'நிஸா'ப் புயல் அடித்தது. இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டிக் கொண்டிருந்தது அடைமழை. நாங்களிருந்தது ஒரு தென்னங்தோப்பில். புயற்காலத்தில் எவன்தான் அப்படியொரு தென்னந்தோப்பில் குடியிருப்பான்? ஓயாத காற்று, விசர் பிடித்து உச்சத்தில் பேயாய் ஆடியது. தென்னைகள் படைகளை விட, எறிகணைகளை விடப் பயங்காட்டிக் கொண்டிருந்தன. பெய்த மழையினால் கல்மடுக்குளம் நிரம்பி, வாய்க்கால்களால், தெருக்களால், வீடுகளின் முற்றத்தால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சனங்கள் ஆலாய்ப்பறந்தார்கள். எங்களின் தற்காலிகக் குடிசை மாளிகையும் மழையில் தெக்கித் தெம்பி விட்டது. கட்டில் மண்ணில் புதையுண்டதால் அதன் மேல் படுத்திருந்த மகன் வெள்ளத்துக்குள் வீழ்ந்தான். வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. நான் முடிந்த மட்டும் மண்ணினால் தடுத்துப் பார்த்தேன். முடியவில்லை. வெள்ளத்துக்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிந்தபோது, வந்தன எறிகணைகள்.

அது 2009 ஜனவரி 13 ஆம் திகதி. தைப்பொங்கலுக்கு முதல் நாள். நாங்கள் இருந்த அந்தத் தென்னந்தோப்புக்கு அண்மையில் - ஒரு 20 மீற்றர் தொலைவில் (மிக அருகில்) நான்கு எறிகணைகள் வந்து வெடித்தன. நான்கு பேர் அதில் கொல்லப்பட்டார்கள். வேறு சிலருக்குக் காயம். தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் மருத்துவமனை இருந்தது. சடலங்களையும் காயப்பட்டவர்களையும் அங்கே எடுத்துப் போனார்கள். மருத்துவமனை இருந்தால் என்ன விட்டால் என்ன எறிகணை வரும் என்ற மாதிரியான ஒரு சேதியை அந்தத் தாக்குதல் மேலும் சொன்னது – உணர்த்தியது.

அது நண்பகல் கழியும் நேரம். சனங்கள் அலறியடித்துக்கொண்டு சிதறியோடினார்கள். நான் ஒரு மணித்தியாலயத்துக்குப் பிறகே என்னுடைய மனைவியைக்கண்டு பிடித்தேன். வாய்க்காலுக்கு எதிர்ப் பக்கமாக இன்னொரு வளவில் நின்று கொண்டு, 'இஞ்சயிருந்து வெளிக்கிடுவம். இனிமேல் நிக்கேலாது. அவனுக்கு விசர் பிடிச்சிட்டுது.... இனியென்னவெல்லாம் நடக்கப்போகுதோ..' என்று புலம்பினாள்.

அன்று மாலையே அங்கிருந்து வெளியேறி கண்ணகை நகருக்குச் சென்றோம். கண்ணகை நகரில் இருந்தவர்களில் அநேகரை எங்களுக்குத் தெரியும். எப்படியாவது ஒரு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒதுங்கிக் கொள்வதற்கு சிறிய ஏற்பாடு அல்லது வசதிகள் ஏதாவது கிடைக்கும் என நம்பினேன். ஆனால், நாங்கள் போனபோது, அங்கே வளவுகள், வீடுகள் எல்லாமே நிரம்பி விட்டன. அந்தளவுக்கு நாலா திசையிலிருந்தும் ஏராளம் சனங்கள் வந்து குவிந்திருந்தார்கள். என்றாலும் எங்களுக்கும் இடம் கிடைத்தது. அதில் நாங்கள் தனியாக ஒரு சிறிய வீட்டினை அமைத்தோம். மழை பெய்து கொண்டிருந்தது. அந்தச் சிறிய வீட்டில் ஒரே ஒரு அறை. சமையல், படுக்கை, பொருட்களை வைப்பது, விருந்தினரை வரவேற்பது... இப்படி எல்லாமே அதற்குள்தான்.

வேலை ஒன்றும் கிடையாது. வெளியே போவதென்றால் பொருட்களை வாங்குவதற்கும் சொந்த பந்தங்களைத் தேடிப்பார்ப்பதற்கும் மட்டும்தான். கண்ணகை நகரில் இயக்கத்தினால் ஆட்சேர்க்கவும் முடியவில்லை. அவர்கள் கடவுளுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு பயல் பிடிபடவில்லை. அதனால் ஆட்பிடி தொடர்பான பதற்றம் பெரிய அளவில் அங்கில்லை.

சனங்கள் தொடர்ந்து வந்தபடியே இருந்தனர். வந்தவர்களில் பலர் வேறு இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கிருப்பது நல்லதா அல்லது அங்கிருந்து வெளியேறிச் செல்வதா என்று குழம்பிக் கொண்டிருந்தோம். படைகள் முன்னகர்ந்து வந்தபடியே இருந்தன. தாக்குதல் உக்கிரமடைந்திருந்தது.

'விசுவமடுவிலிருந்தும் வெளிக்கிடுவதா?' என்று உள் மனம் கேட்டது. ஒரு காலத்தில் (அநேகமாக அது 1970 கள் 80 கள் என நினைக்கிறேன்) 'வெளிக்கிடடி விசுவமடுவுக்கு' என்றொரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. விசுவமடு என்ற வளமான புதிய விவசாயக் குடியேற்றத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சனங்களை அழைத்துப் போகும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருந்த நாடகம் அது. பிறகு நாடகத்தையும் விடச் செழிப்பாகவும் பிரபலமாகவும் மாறியிருந்தது விசுவமடு. விசுவமடுவுக்கென்றே அச்சுவேலி, நெல்லியடி, பருத்தித்துறை, மூளாய், காரைநகர், குறிகட்டுவான் போன்ற இடங்களிலிருந்து பஸ்சும் தட்டிவான்களும் ஓடின. வாழைக்குலையும் செத்தல் மிளகாய்ச் சாக்குகளுமாக தட்டிவான்கள் சந்தைகளை நோக்கிப் பறந்தன. விசுவமடுவிலிருந்து கொழும்புக்கே லொறிகள் ஓடியதுமுண்டு. வெங்காயம், செத்தல் மிளகாய், வாழைக்குலை என பலதையும் வாங்குவதற்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்கள் நேரிலே வந்தார்கள். ஆயிரக்கணக்கான மாடுகள் பெருகி, லொறிக்கணக்காக யாழ்ப்பாணத்துக்கு எருப்போனது. இப்பிடி எல்லாம் இருந்தால் ஊர் செழிப்பாகத்தானே இருக்கும்.

இயக்கங்களின் காலத்தில் விசுவமடுவில்தான் அதிகமான இயக்கபெடியள் சாப்பிடும் நல்ல சாப்பாட்டுக்கடை இருந்தது. 'வாணி விலாஸ்' என்று. இராணுவ முகாமுக்குத் தண்ணிகாட்டி ஆனையிறவுக்குப் பின்பக்கமாக உள்ள கடற்களப்பைக் கடந்து சுண்டிக்குளம் பகுதியால் வந்து விசுவமடுவில் ஏறினால், வாணி விலாஸ்தான் வரவேற்கும். நல்ல பசுப்பால் அல்லது பசுப்பால் ரீ தருவார்கள். பெரிய கப்பல் வாழைப்பழங்கள் மிக மலிவாகக் கிடைக்கும்.

புலிகளின் காலத்திலும் விசுவமடு செழிப்பாகத்தானிருந்தது. நல்லதொரு நூல்நிலையத்தை புலிகள் அங்கே வைத்திருந்தார்கள். சாரதி பயிற்சிக் கல்லூரி, பெரிய விவசாயப் பண்ணைகள், தமிழீழப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமைப் பணிமனை, லொறி (பாரவூர்தி) களின் தலைமையகம், வணிக மையங்கள், புலிகளின் சர்வதேச செயலகத்தின் மையம் எனப் பலவும் விசுவமடுவில்தான் இருந்தன. அந்த நாட்களில் சற்றுப் பெரிய திரையில் அமைக்கப்பட்டிருந்த தியேட்டர் ஒன்றும் கூட அங்கேதானிருந்தது. அதில் அநேகமாக எம்.ஜி. ஆரின் படங்களே ஓடும். இதெல்லாம் பழைய கதைகள் அல்ல. முன்னெப்போதோ நடந்தவையும் அல்ல. 1997, 98 தொடக்கம் 2009 வரையில் நடந்தவை. விசுவமடுவில் ஒரு துயிலுமில்லமும் இருந்தது. அதில் ஜெயசிக்குறு சமரில் பலியாகிய போராளிகளே அதிகமாக இடப்பட்டிருந்தார்கள். மட்டக்களப்பு, அம்பாறையைச் சேர்ந்தவர்களே அதிகம். மாவீரர்நாள் காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்தும் அம்பாறையிலிருந்தும் ஆயிரக்காணக்கான தாய்மாரும் தந்தையரும் வந்து கண்ணீர் மல்லக் கசிந்துருகுவார்கள்.

இன்று எல்லாமே மாறி விட்டன. இப்போதும் யாரோ சொல்லக் கூடும், “அபி யமு விசுவமடுவட“ ('வெளிக்கிடடி விசுவமடுவுக்கு') என. ஆனால் அது விசுவமடுவில் வாழ்வதற்கோ விவசாயம் செய்வதற்கோ அல்ல. பிரபாகரனின் பதுங்குகுழியையும் அவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சிறிய வீட்டையும் பார்ப்பதற்காகவே.

00

Monday, April 1, 2013

புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி









இது எஸ். கிருஷ்ணமூர்த்தியின் பல வகை எழுத்துகளைக் கொண்ட ஒரு  தொகுப்பு. அனுபவங்களின் பதிவு. திரைப்படங்களைக் குறித்த பார்வை. நேர்காணல்இ புத்தக விமர்சனம், ஆளுமைகளைப் பற்றிய வெளிப்பாடு எனப் பல வகையில் அமைந்த எழுத்துகள் இதிலுண்டு. ஆறு பிரிவுகளாக இவை தொகுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிறுகதைகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவை பின்னொருபோது இன்னொரு புத்தகத்தில் கிடைக்கலாம். பொதுவாக நமக்குக் கிடைக்கும் புத்தகங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மையப்படுத்தியிருக்கும். சிறுகதை அல்லது நாவல் இல்லையென்றால் கவிதை அல்லது கட்டுரை என்று ஏதோ ஒரு வகைப்பாட்டுக்குள். ஆனால், இங்கே அவ்வாறில்லாமல் தான் எழுதியவற்றில் ஒரு தொகுதியை எடுத்து பல வகை  எழுத்துகளை உள்ளடக்கிய ஒரு களஞ்சியமாக உருவாக்கி, இவற்றைத் தருகிறார் கிருஷ்ணமூர்த்தி. ஏறக்குறைய ஒரு சஞ்சிகையைப்போல இதை நாம் வாசிக்கலாம். இதன்மூலம் கிருஷ்ணமூர்த்தியின் ஈடுபாடுகளை நாம் அறிய முடிகிறது. அதேவேளை அவர் கொண்டுள்ள அக்கறைகளின் வழியாக நாமும் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வாய்க்கிறது.



கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துகளில் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஷ்யமுண்டு. அந்தச் சுவாரஷ்யம் நமக்குச் சுவையைத் தருகிறது. வாசிப்பின் உந்துதலுக்கான சுவை அது. இந்த நாட்கள் வாசிப்புக்குச் சவாலாக இருக்கின்றன. பெரும்பாலான தமிழர்கள் இன்று காட்சி ஊடகத்தின் பக்கமாகத் திரும்பி விட்டனர். அநேகமான வீடுகளில் தொலைக்காட்சிகளும் அவற்றின் தொடர்நாடகங்களுமாக நிரம்பிவிட்டன. அடுத்ததாக எவ்.எம். வானொலிகள். ஏராளம் பண்பலை வானொலிகள் எல்லா இடங்களிலும் முளைத்துள்ளன.  எல்லாமே தமிழ்ச் சினிமாவை மையப்படுத்தியே இயங்குகின்றன. பகுதியாக அரசியலை. தமிழர்களின் அரசியலும் அவர்கள் தேர்ந்துள்ள சினிமாவும் எல்லாச் சீரழிவுகளையும் தமிழ்ச் சமூகத்துக்குள் இறக்கியுள்ளன. போதாக்குறைக்கு தமிழர்களால் வெளியிடப்படுகி்ன்ற வெகுஜனப்பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வாசிப்புக்கான அடிப்படைகளும் அம்சங்களும் குறைந்து விட்டன. இந்த நிலையில் தமிழர்களின் வாசிப்பு பெரும்பாலும் குறைவடைந்து விட்டது. வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழர் வாழ்வில் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகளைப் போலவே இதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



எனவே இன்றைய தமிழ் எழுத்தாளரின் முன்னாலுள்ள பெரும் சவால் என்பதுஇ எழுத்தை விருப்பத்துக்குரிய ஒன்றாக்குவதே. எழுத்தை விருப்பத்துக்குரிய ஒன்றாக, பெருந்திரளி்ன் நுகர்ச்சிக்குரிய ஒன்றாக ஆக்குவதென்பது இலகுவான காரியமல்ல. நினைத்த மாத்திரத்தில் அதைச் செய்து விடமுடியாது. அப்படி ஆக்க வேண்டுமென்றால், பரபரப்புட்டும் கட்டுக்கதைகளையும் வதந்திகளையுமே எழுதவேண்டும். அப்படியான ஒரு போக்கும் உண்டு. அதுதான் இன்று வளர்ச்சியடைந்தும் வருகிறது. அதை ஒரு நல்ல மனம் தொடர முடியாது. நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால், கூச்சமின்றி அதை எதுகிறவர்களைப்போல, வெட்கமின்றி அதைப் படிப்போரும் உள்ளனர். சீரழிந்த அரசியலை ஆதரிப்பதைப்போல, மூன்றாந்தரமான சினிமாக்களைக் கொண்டாடுவதைப்போல இதையும் தமிழ்ப்பெருந்திரள் கொண்டாடுகிறது.



ஆனால், பிறவற்றைப் போலன்றி எழுத்து பெரும்பாலும் தனி ஒரு ஆளுமையுடன் சம்மந்தப்பட்ட கலையாகவே உள்ளது. தீர்மானகரமான கருத்துலகத்துடன் தொடர்புபட்டது. என்னதான் இதை மறுத்தாலும் அடியோட்டமாக ஒரு கருத்து நிலையில் அது வேர்கொண்டிருக்கும். தவிர, எழுத்து தீவிர கவனத்திற்குரிய ஒன்றுமாகும். எல்லாக்கலைகளிலும் தீவிரமும் ஆழமும் ஊன்றிய கவனத்திற்குரிய அடிப்படைகளும் இருக்கும் என்றாலும் எழுத்து வாசிப்புக்குரிய ஒன்று என்பதால், அது சற்றுக் கூடிய கவனத்தைக் கோருகிறது. மேலோட்டமான ரசனையாளர்களுக்கு அது இலகுவில் சாத்தியங்களை அளிப்பதில்லை. மேலோட்டமான எழுத்தும் வாசிப்பும் இருந்தாலும் அங்கும் உன்னிப்பான ஒரு நிலை அடியோட்டமாக உண்டு. சினிமா, நாடகம், இசை போன்றன பெரும்பாலும் கூட்டுக்கலை சார்ந்தவை. அதிலே பல கலவைகள் உள்ளன. இது ரசனைக்கு அதிக சுவையுட்டும். அத்துடன் எந்த வயதினரையும் எந்தத் தரப்பினரையும் ஈர்க்கும் தன்மையையும் கொண்டவை. ஒரு நாடகத்தை அல்லது ஒரு சினிமாவை குடும்பமாகவே கூடியிருந்து பார்த்து ரசிக்கலாம். ஆனால், எழுத்துப் போன்ற கலைகளில் இது சாத்தியமில்லை. எனவேதான் எழுத்தைத் தவிர்ந்த பிற கலைகளுக்கு அதிக கவர்ச்சியுண்டு. இந்த நிலையில் எழுத்தை ஈர்ப்புக்குரிய ஒன்றாக்கும் சவாலை எதிர்கொண்டவாறே எழுத்தாளன் இயங்க வேண்டியுள்ளது. கிருஷ்ணமூர்த்திக்கு இந்த நிலைமை விளங்கியிருக்கிறது. என்பதால் வாசிப்புச் சுவாரஷ்யத்தைக் கவனத்திற் கொண்டு எழுத முயன்றிருக்கிறார். ஆனாலும் கிருஷ்ணமூர்த்தியின் முன்னே இன்னும் சவால்களிருக்கின்றன.



எஸ். கிருஷ்ணமூர்த்தி அடிப்படையில் ஒரு வாசிப்பாளர். சினிமா நாடகம் போன்ற கலைகளின் ரசனையாளர். அவற்றிலிருந்தே அவர் தன்னுடைய எழுத்தை ஆரம்பிக்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் விமர்சனங்கள் பெரும்பாலும் இதைத் தெளிவுறுத்துகின்றன. தான் வாழ நேரிட்ட வாழ்ந்து கடந்த கடக்க முயன்ற காலத்தையும் வாழ்க்கையையும் அவர் எழுதும்போதும் இதையே கவனத்திற் கொள்கிறார். எத்தகைய கடின நிலையைப் பற்றியும் விவரிக்கும்போது அவரிடத்தில் ஒரு எள்ளல் வந்து விடுகிறது. அந்த எள்ளலை அவர் இயல்பாக்குகிறார்.



நேரிற் பழகும்போது அதிகம் அலட்டிக் கொள்ளாத, அதிர்ந்து பேசாதவர் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், எழுத்தில் இதற்கு மாறாக இருக்கிறார். சில விசயங்களை மென்மையாக இடித்துரைக்கிறார். அல்லது மென்தீவிரத்துடன் எதிர்க்கிறார். சிலபோது அதே மென்தீவிரத்துடன் கிண்டலடிக்கிறார். ஆனால், எதிர்க்கருத்துடையோரும் வாசிக்கும் விதமாக, வாசிப்பதை யோசிக்கும் விதமாக எழுதிவிடுகிறார். இதனால் அவருடைய எழுத்தின் எல்லா இடத்திலும் கிருஷ்ணமூர்த்திக்கு என்றொரு அடையாளத்தைக் காணலாம்.



1980 களின் தொடக்ககாலத்தில், அவருடைய இருபதுகளின் ஆரம்பத்தில் ஈழப் பிரச்சினையில் நம்பிக்கைகளோடும் ஆர்வத்தோடும்  இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அந்த நாட்களில் பெருவாரியான இளைஞர்கள் மிகத் தீவிரத்தோடும் ஆழமான நம்பிக்கையோடும் உன்னதமான கனவுகளோடும் ஈழப்போராட்டத்தில் இணைந்தனர். அப்படியான சூழலில் அந்த நாட்களில் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கடந்த அனுபவங்களையும் இங்கே பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அவற்றை அவர் பிரதானமாகக் கொள்ளவில்லை. ஈழப்போராட்ட அனுபவங்களை, அந்த நாட்களின் நினைவுகளை பலரும் இப்பொழுது எழுதி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு இயக்கத்தின் அனுபவமும் வெவ்வேறானது. அதைப்போல போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறானவையே. ஒரு காலகட்டத்தின், ஒத்த சூழலின் நிகழ்ச்சிகளும் சில விசயங்களும் ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும் மெல்லிய நிறவேறுபாடுகள், குணவேறுபாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவருக்கும் இடையில் உண்டு. கிருஷ்ணமூர்த்திக்கும் அவ்வாறான பிரத்தியேக அனுபவங்கள் உண்டு. ஈழப்பிரச்சினைக்கான தீர்வின்  வழிகள் திசைமாறியதால் அவர் கொழும்புக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து ஐரோப்பாவுக்குப் பெயர்ந்து,  பின்னர் அங்கிருந்து நாடோடியாகி இப்பொழுது அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அல்லது அங்கே வசிக்கிறார். இது கிருஷ்ணமூர்த்தி எதிர்பார்த்திராத ஒன்று. அவரே ஒரு இடத்தி்ல் இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். 'பள்ளியில்  அவுஸ்ரேலியாவைப் பற்றிப் படிக்கும்போது வாழ்வில் அந்த நாட்டுக்குப் போகக் கூடியதாக அங்கே வாழும் நிலை ஒன்று ஏற்படும் என நினைத்ததேயில்லை. ஆனால்  இன்று வாய்த்திருக்கிறது நாடோடி வாழ்க்கை' என்று.


ஈழத்தமிழர்களில் ஒரு சாராரின் நிலையும் கதையும் இப்படித்தான் அமைந்தது. அவர்கள் எதிர்பாராத திசைமாற்றம் இது. ஒரு புதிய சமூகத்தை புதிய வாழ்க்கையை புதிய வழமைகளை உருவாக்கலாம் என்று நம்பியவர்கள் நாடுகடந்து, கண்டம் கடந்து, தொலைதேசங்களி்ல் அகதியாகி பிறகு அந்த நாடுகளின் குடிமக்களாகி விட்டனர். ஆனாலும் அவர்களுடைய நினைவுகளும் கடந்த காலமும் அவர்களை இலேசாக விட்டுவிடவில்லை. அவர்களை அரசியல் ஆய்வாளர்களாகவும் அரசியல் விமர்சகர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களாகவும் ஈழப்போராட்ட ஆதரவாளர்களாகவும் ஈழ அபிமானிகளாகவும் மாற்றுப் பார்வையாளர்களாகவும் மாற்றுச் செயற்பாட்டாளர்களாகவும் எனப் பல பாத்திரங்களை ஏற்க வைத்துள்ளது. அல்லது அவர்களை அப்படி உருமாற்றிவிட்டுள்ளது. இதில் கிருஷ்ணமூர்த்தியும் ஒரு பாத்திரம். அவருடைய பாத்திரத்தின் வெளிப்பாடே – ஒரு குறியீடே இந்தப் புத்தகம்.

கிருஷ்ணமூர்த்தி தன் அனுபவத்தின் செறிவான  பதிவையோ அந்தக் காலகட்டத்தின் நிகழ்ச்சிகளையோ மையப்படுத்தி இந்தப் புத்தகத்தில் பேசவில்லை. ஆனால்இ அந்த நாட்களின் அடையாளத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய சில புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு அப்பால் செல்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் பிரதான அக்கறை என்பது இன்று நிதானமாக யோசிக்க வேண்டிய விசயங்களைக் குறித்தே உள்ளது. அனுபவங்களை அரசியற் பாடமாகவும் வழிமுறையாகவும் கொள்ள வேண்டும் என்ற உட்தெரிவை அவர் செய்கிறார். இது இன்றைய பொதுப்பரப்பின் அரசியற் சிந்தனைக்கு மாற்றான ஒன்று. ஆனாலும் அவருக்கு இதில் உறுதியும் தெளிவும் உண்டு. வழிமுறைக்கும் தெரிவுக்கும் தேவையான ஒன்றென்று. அதேவேளை கிருஷ்ணமூர்த்தியின் கலை மற்றும் ரசனைத் தேர்வையும் நாம் தெளிவாக நோக்க வேண்டும். அவற்றிலும் அவருடைய பார்வைத் திறன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அண்மைக்கால இந்தியச் சினிமாக்களைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கும் விமர்சனங்கள், திராவிட இந்திய அரசியலின் குறைபாடுகளையும் போலித்தனங்களையும் பண்பாட்டுக் கீழிறக்கங்களையும் திரைவிலக்கிக் காண்பிக்கின்றன. நல்ல சினிமா தொடர்பான அக்கறைகளைக் கோருகின்றன. அதைப்போலவே அவர் எழுதியிருக்கும் சில புத்தகங்களுக்கான மதிப்புரைகளும் போலிகளுக்கெதிரான ஒரு மென்குரலின் வெளிப்பாடே.



கிருஷ்ணமூர்த்தியின் பல வகைப்பட்ட எழுத்துகளின் தொகுதியாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் கவனிப்பைப் பெறும். ஆனால், கிருஷ்ணமூர்த்தி என்ன வகைப்பட்ட எழுத்தாளர் என்பதில் பலருக்கும் குழப்பங்கள் நேரலாம். விமர்சகரா, ரசனையாளரா, பத்தி எழுத்தாளரா, இலக்கியப்படைப்பாளியா என. நீண்ட காலமாக எழுதி வந்தாலும் கிருஷ்ணமூர்த்திக்கு இதுவே முதற்புத்தகம். இந்த முதற்புத்தகம் ஏற்படுத்தும் அடையாளமே அவருடைய எதிர்கால எழுத்தையும் அவருடைய பொதுவான அடையாளத்தையும் உருவாக்குவதற்கான அடிப்படையைக் கொடுக்கும் என்றொரு பிரச்சினையுண்டு. அப்படிப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் சிலவேளை எதிர்மறையான விளைவைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால், அதைக் கடந்து கிருஷ்ணமூர்த்தியின் இந்த எழுத்துகளைச் சரியாக விளங்கிக் கொண்டால், அவரைத் தொடரும் வாசகர்களுக்கு பயனுண்டு.  இந்த மாதிரியான தொகுப்புகள் முன்னரும் வந்துள்ளன. ஒரு படைப்பாளியின் பல்வகை ஈடுபாட்டைத் தொகுத்து அளிப்பதாக. அல்லது சிலருடைய பல்வகைப்படைப்புகளைத் தொகுத்து வழங்குவதாக. எனவே, தான் ஈடுபாடு கொண்டவற்றில் தன்னுடைய பார்வைகளையும் அனுபவங்களையும் எழுதிப் பகிரும் இந்தத் தொகுதி கிருஷ்ணமூர்த்திக்கு ஒருவகையில் வாய்ப்பைத் தரக் கூடியது. பல தளங்களிலும் இயங்கும் ஒருவர் என்ற அறிமுகமும் அடையாளமும் அவரைப் பிறருக்கு அறிமுகப்படுத்தி, அடையாளப்படுத்தும்.


சிலர் இதிலுள்ள சினிமா சார்ந்த கட்டுரைகளுக்காக கிருஷ்ணமூர்த்தியை நெருங்குவர். சிலர் இங்கேயிருக்கும் அனுபவப் பதிவுளுக்காக கிருஷ்ணமூர்த்தியுடன் உறவாகலாம். சிலர் கிருஷ்ணமூர்த்தி முன்வைக்கின்ற போலி அரசியலுக்கும் போலித்தமிழுணர்வு போன்றவற்றுக்கெதிரான கிண்டல்களுக்காகவும் எதிர்வினைகளுக்காகவும் அவரை விட்டுத் தூர ஒதுங்கலாம். சிலர் இவைகளுக்காகவே அவரை நெருங்கலாம். ஆனால்இ எல்லோரும் கிருஷ்ணமூர்த்தியை வாசித்தே ஆகவேண்டும். அப்படி பல விதங்களில் நாசுக்காக எழுதிவிடுகிறார் அவர் சில விசயங்களைப் பற்றி.



நான் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தது, எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில்தான். இவ்வளவுக்கும் அவருக்கும் எனக்குமிடையில் நெருக்கத்துக்கான காரணங்கள் பல இருந்தபோதும் அது இருவருக்கும் சாத்தியப்படவேயில்லை. மிகப்பிந்தியே நாங்கள் நண்பர்களாகினோம். இலங்கையில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்காக அவுஸ்ரேலியாவில் இருந்து வந்திருந்தபோது யாழ்ப்பாணத்தில் வைத்து  லெ. முருகபுபதியும் நோயல் நடேசனும் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனாலும் நீண்டகால நெருக்கத்தைப்போல கிருஷ்ணமூர்த்தியுடனான இந்த உறவை உணர்கிறேன். கிருஷ்ணமூர்த்தியை அப்படித்தான் உணர முடியும்.


என்னுடைய நண்பர் ஒருவருக்கு கிருஷ்ணமூர்த்தியை நான் அறிமுகப்படுத்தினேன். என்னையும் விட மிக நெருக்கமாக அவர்கள் இருவரும் இன்றுள்ளனர். இவ்வளவுக்கும் அந்த நண்பரும் கிருஷ்ணமூர்த்தியும் அடிக்கடி சந்திப்பவர்களில்லை. அடிக்கடி சந்திக்கக் கூடிய வாழ்க்கையைக் கொண்டவர்களும் இல்லை. சில நாட்கள் மட்டுமே பழகியிருந்தாலும் இழையோட்டங்கள் அதிகமான உறவு இருவருக்குமிடையில் உருவாகிவிட்டது. இது கிருஷ்ணமூர்த்தியின் இயல்பிலிருந்து உருவாகியது. இதையே எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையிலான உறவிலும் நான் கண்டிருக்கிறேன். மனிதர்களைப் புரிந்து கொள்வது, அவர்களுடைய உணர்வுகளையும் நிலைமைகளையும் விளங்கிக் கொள்வது என்பதிலிருந்தே இந்த மென்னிழைகள் தளைத்து உறவைப் பின்னுகின்றன. இதை தன்னுடைய வாழ்வின் அடிப்படையாகவும் இயல்பாகவும் கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கிறார். மனிதர்களின் மீதான,சமூகத்தின் மீதான அக்கறையை, அதில் ஈடுபாடு கொள்ளும்  அடையாளத்தை, அடிப்படைப் பண்பை அவர் இத்தனை காலத்துக்குப் பிறகும், வேறு களமொன்றில், வேறொரு யதார்த்தத்தில் வாழ்கின்றபோதும் இழக்கவில்லை. அதைப் பேணுகிறார். இந்த எழுத்துகளும் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையும் அதற்குச் சாட்சி.



-     கருணாகரன்

(இந்த மாதம் (ஏப்ரல் - 2013)  வெளிவரவுள்ள எஸ். கிருஷ்ணமூர்த்தியின் “மறுவளம்“ என்ற புதிய புத்தகத்திற்கான முன்னுரை)

சாட்சியின் மீதி
















'சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது

பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது

மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன

சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன'

சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து 'ஹம்சத்வனி'யின்  இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன் என்ற காரணத்தினால்  அதையெல்லாம் மதித்து தன்னைச் சந்திக்கச் சொல்லியனுப்பி சந்தித்த வேளையில் கவிதை குறித்தும் வாசிப்பின் திசைகள் குறித்த அறிமுகங்களையும் கொடுத்து நிறையப் புத்தகங்களைத் தந்து இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தி இப்படியாக அன்றிலிருந்து என்னுடைய வாழ்வின் மிகமுக்கியமான மனிதராக கருணாகரன் இருக்கிறார்.



உண்மையில் நான் இந்தக்கணம் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை இந்தத் தொகுப்புக் குறித்துப் பேச அழைத்தமைக்காக கருணாகரனுக்கும் மெலிஞ்சி முத்தனுக்கும் என்னுடைய நன்றிகள். கவிஞர் கருணாகரனுக்கும் எனக்குமான உறவு ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு மாத்திரமல்ல. சக படைப்பாளிகளுக்கிடையிலான உறவும் கூட அல்ல. மகனுக்கும் தந்தைக்கும் போல இரண்டு மெய்யான நண்பர்களுக்கிடையிலானதைப்போல அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலானதைப் போன்ற ஒரு உறவு. இந்தத் தொகுப்பை படித்து முடித்ததும் கருணாகரனுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். 'அண்ணை நீங்கள் என்னுடைய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பாத்திரம். பல நேரங்களில் பேரன்பையும் சில நேரங்களில் எரிச்சலையும் வரவழைக்கிற பாத்திரம்' என்று. கருணாகரனிடம் மாத்திரம் தான் அன்பையும்இ எரிச்சலையும் வெளிப்படையாகவே காட்டலாம். அவர் எல்லோரையும் பேதமற்று நேசிக்கிற மனிதர்.



எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் என்னுடைய எழுத்துக்களின் பால் ஈர்ப்புக் கொண்டவராகத் தொடர்ந்து உற்சாகமளிப்பார். அவர் கொழும்பிலிருக்கும்போது புலிகளைக் கடுமையாகத் திட்டிக்கொண்டிருந்தார். ஆனால் வெளிநாட்டுக்கு வந்தவுடன் புலிகளின் வெற்றிச் சங்குதான் தமிழர்களின் விடுதலை என்று தமிழ்ப் புலியாகினார். ஒரு தொலைபேசி உரையாடலில் நான் கேட்டேன். 'இரண்டு தீர்வுதான் உங்களது நிலைப்பாட்டின் மாற்றத்திற்கு காரணமாக இருக்க முடியும். ஒன்றுஇ புலிகள் தவறுகள் செய்து நீங்கள் வெளிநாடு வந்ததும் திருந்தியிருக்கவேண்டும். அல்லது நீங்கள் கொழும்பிலிருக்கும் போது தவறு செய்து வெளிநாடு வந்ததும் உங்களைத் திருத்தியிருக்க வேண்டும். எது நடந்தது?' என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் 'நீ ஒரு எழுத்தாளனே அல்ல' என்பதாயிருந்தது. ஆனால் என்னைப் போலச் சிறியவனையும் மதித்து அவனுடைய கருத்துக்களையும் கேட்டு விமர்சனங்களை ஏற்று. பிழைகளைச் சகித்துஇ சரியைச் சொல்லித்தந்து தோழமையோடு அரவணைக்கிற கைகள் கருணாகரனுடையவை.



வன்னியில் இருந்து அவருக்கு பிறகு எழுத வந்தவர்கள் அவருக்கு முன்பாகவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் யாவரும் கருணாகரனோடு தொடர்புடையவர்களே. எப்போதும் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் திறந்தே இருக்கிற வீடு கருணாகரனுடையது. படிக்கப் புத்தகங்கள் பேச விசயங்கள் துயருக்கு ஆறுதல் பசிக்குச் சாப்பாடு எல்லாம் கிடைக்கும் அங்கே. அவருடைய வீட்டு முற்றத்தில் பிளாஸ்டிக் கதிரையைப் போட்டுக்கொண்டோ கேற்றைப்பிடித்துத் தொங்கியபடியோ கதைத்துக் கொண்டே நின்றிருக்கிறோம் மணிக்கணக்காக.

இந்தத் தொகுப்பில் வரவேற்பு என்ற கவிதையில் கருணாகரன் இப்படி எழுதியிருக்கிறார்.

பார்க்கிறேன்

இலைகளில் கம்பளம் விரித்துக் காத்திருக்கின்றன

எல்லா மரங்களும்

பறவைகளுக்காக எப்போதும்.

பறவைகள் வந்தமர

எல்லாக் கிளைகளும் நெகிழ்ந்து கொடுக்கும்.

காதலும் நட்பும் அன்பும் கருணையும் பெருக

மலர்களும் கனிகளும் கூடப் பறவைகளுக்காகவே.


இப்படிச் செல்கிற அந்தக்கவிதைஇ  இப்படி முடியும்.

எந்தப் பறவை வந்தாலென்ன

விலகிச் சென்றாலென்ன

பறவைகளுக்காகவே காத்திருக்கின்றன

இலைக்கம்பளம் விரித்து ஒவ்வொரு மரமும்

இரவும் பகலும்.

என்னுடைய அனுபவத்தில் நான் கருணாகரனை பச்சைக் கம்பளம் விரித்த  மரமாகத்தான் பார்க்கிறேன். அதுதான் உண்மையாகவும் இருக்கும்.



கவிதையும் அரசியலும்

நான் நினைப்பது சரியென்றால். நான் பிறந்த போதிலிருந்து இன்று வரைக்கும் ஈழத்  தமிழ்க் கவிதையின் அரசியற் செயற்பாடென்பதும் அதன் பாடுபொருளும் ஒன்றுதான். ஈழத்தமிழர்களின் பிரச்சினையும் ஒன்றேதான். மரணத்துள் வாழ்வோமிலிருந்து தொடங்கி கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் வரையிலும் ஈழத்தமிழ்க்கவிதை சனங்களின் பாடுகளைச் சொல்லி அந்தரிக்கிறது. போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பெருவாரியாக எழுந்த ஈழத்தமிழ்க்கவிதையின் தாக்கம் ஒட்டுமொத்தத் தமிழ்கவிதையின் பேசுபொருளையும் வடிவத்தையும் அசைத்தது. இன்றோ ஈழத் தமிழ் என்கிற பரப்பிலிருந்து தமிழ் என்கிற பெரும்பரப்பை வியாபித்து நிற்கிறது. அதே நேரம் மற்ற எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்திருப்பதைப்போல தமிழகத்து அங்கீகாரத்திற்கு ஏங்கிநிற்கும் ஓமணக்குட்டியாய் ஆகி நிற்கிறதோ என்றும் தோன்றுவதுண்டு.



ஈழக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் பதாதைகளும் ஊர்வலக் கோசங்களும் ஆக்கினார்கள். துவக்குளைக் தூக்க மனிதர்களை உந்தினார்கள் சில கவிஞர்கள் துவக்குகளையும் கூடத் தூக்கினார்கள் இன்னும் சிலர் கவிதை எழுதிய கையோடே ரவலிங் பாக்கைத் தூக்கினார்கள். இப்படியாக ஈழத்தமிழர்களோடு சேர்ந்து அவர்களது கவிதையும் காலத்தை பதிவு செய்தபடியே நகர்கிறது. அலைந்து அகதியாகி சாவரங்கில் தவித்த சனங்களை போருக்குள் அமுக்கி சாவுக்குத் தீனியாக்கி கொள்ளிவைத்து எட்டுச் செலவு செய்து கல்வெட்டும் அடித்து பின்னும் ஈழத்தமிழ்க்கவிதை எழுதப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது. எழுதப்படவும் வேண்டும்.



ஈழத் தமிழ்க் கவிஞர் மற்றும் ஈழத்தமிழ்க் கவிதை என்கிற இந்தப் பொது வரையறைக்குள் இன்னமும் இலங்கையில் இருக்கிற, வன்னியில் இருக்கிற கடந்த பதினெட்டு வருடமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற யாழ்ப்பாணத்தில் இருக்கிற, வடக்குப் பகுதிக்கு வெளியேயிருக்கிற, முஸ்லிம்களாயிருக்கிற, புலம் பெயர்ந்திருக்கிற இப்படி ஏற இறங்கப் பார்த்தால் எக்கச்சக்கமான பிரிவுகள் இருக்கின்றன. இவையெல்லாமும் ஈழத்தமிழ்க்கவிதைகள் என்ற பொதுவெளிக்குள்ளும், இனமுரண்பாடு மற்றும் போர்ப் பின்னணி என்கிற பொது வெளிக்குள்ளும் வைத்தே அணுகப்படுகின்றன என்பது என்னுடைய அவதானம்.



அது உண்மையில் அநீதியானது. போர் தொடங்குவதற்கு முன்பாகவே  ரவலிங் பாக்கை தூக்கியவரின் அனுபவங்களும் ஒரு 'சொப்பிங் பாக்'கோடு கலைக்கப்பட்டவரின் அனுபவங்களும்இ ஒரு 'சந்திரிகா பாக்'கோடு முள்ளிவாய்க்கால் நீரேரியை நீந்திக்கடந்து சாவரங்கிலிருந்து தப்பி வந்தவரின் அனுபவங்களும் ஒன்றா?



அனுபவங்களை மனக்கண்ணால் கண்டு அல்லது தாய்மை உணர்வு பொங்க என்னதான் கவிதை எழுதினாலும் அதை இந்த மனிதர்களின் சொற்களுக்கு திருட்டுத்தனமாகத் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற முயற்சியாகத்தான் கருதவேண்டியிருக்கிறது. அவரவர் அவரவர் வகிபாகத்திற்குச் சாட்சியாயிருக்கலாம். அதுவே சரியானதும் நீதியானதுமாகும்.



கருணாகரன் ஒரு 'பொழுதுக்காய்க் காத்திருத்தல்' எழுதினார். எல்லோரைப்போலவும் அந்தப் பொழுது வருமென்று அவர் நம்பிய காலத்தில் அவர் வாழ்ந்த போது அச் சமகாலத்தின் சாட்சியமாய் அந்தத் தொகுப்பை அவர் கொண்டு வந்தார். பிறகு 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புக்கள்' எழுதினார். அது காத்திருத்தலின் தொடர்ச்சியாயும் காத்திருத்தலின் விளைவுகள் மீதான கேள்வியாயும் இருந்தது. பிறகு 'பலியாடு' காத்திருத்தலும் முடிந்து விளைவுகள் பயங்கரமாகி பகலையும் இரவையும் கண்டு நான் அஞ்சுகிறேன் என்று தான் வாழ நேர்ந்த அக்காலத்தை  அவர் எழுதினார். காலப்பெருங்கடலை தனிப்படகில் கடக்க நேர்ந்த பயணியாய் அலையைச்சுழியை அலைக்கழித்த காற்றை கரைசேர்வோம் என்கிற நம்பிக்கையை பதிவு செய்கிற ஒரு பயணியாய் கருணாகரன் எப்போதுமிருக்கிறார்.



இப்போதும் இந்தத் தொகுப்பில் தான் கடந்து வந்த 'சாவரங்கு' பற்றி நாம் அனுபவித்திராத ஊழியைக் கடந்த பயணத்தை அவர் பதிவு செய்கிறார். அவர் எல்லாக் காலங்களிலும் தன்னைச் சாட்சியாகவே முன்னிறுத்துகிறார். சொல்ல முடிந்ததைச் சொல்லுகிற சாட்சியாக. ஆனால் கருணாகரனின் முதல் மூன்று  தொகுப்புக்களை ஏற்றுக்கொண்டமாதிரி. இந்தத் தொகுப்பை ஏற்றுக்கொள்ளவதில் பலருக்கும் உவப்பில்லை. கருணாகரன் மே 18 க்கு முன் அல்லது பின் என்கிற வகைமைக்குள் வைத்து வேண்டாத சாட்சியாக விலக்கிவைக்கப்படுகிறார்.



நாங்கள் சாட்சிகளை வேண்டி நிற்கிறோம் சாட்சியமளிக்கிறோம். ஆனால் எல்லாச் சாட்சியங்களையும் விரும்புகிறோமா என்றால் இல்லை. நாங்கள் உண்மையென்று நம்புகிறதைச் சொல்லவேண்டுமென்று சாட்சிகளிடம் எதிர்பார்க்கிறோம். அல்லது உண்மையின் ஒரு பகுதியை ஒழித்துவைக்கவேண்டுமென்று சாட்சிகளிடம் எதிர்பார்க்கிறோம். நிலாந்தன் முன்னுரையில் சொல்லுவதைப்போல ஒரு காலத்தில் உண்மைகளை உன்னத லட்சியம் ஒன்றிக்காக காத்திருத்தல் என்பதன் பெயரில் அடைகாத்தார்கள். இப்போது எந்த உன்னத லட்சியங்களும் கிடையாது. அடைகாத்த உண்மைகள் பாம்புகளாக மாறித் துரத்தத் தொடங்கிவிட்டன. அந்தப் பாம்புகள் யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை. அங்கேதான் கருணாகரன் தான் வரிசை குலைவதாகச் சொல்கிறார்.



'வரிசை குலைதல்' என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்.

என்னால் முடியவில்லை

வலிபெருகும் இந்த நிலத்தில்

சாட்சியாகவும் கொலையாளியாகவும் நிரபராதியாகவும்

முடிவற்றுக் கிழிபட்டுக் கொண்டிருக்க..



என்பதாக.



கருணாகரன் பொது வெளியில் முன்னர் உரத்துச் சொல்லமுடியாதவற்றைப் பேச முற்படுகிறார். ஆறாத காயங்களோடு தன் காலடியில் படுத்திருக்கும் வரலாற்றிடம் மன்னிப்பைக் கோருகிறார். ஒரு பாவமன்னிப்பாக ஒரு மனந்திறந்த சாட்சியமாக அவற்றை முன்வைக்கிறார்.



போரின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுமையானதாகக் கிடைக்கவில்லை என்பது இத்தொகுப்பின் மீது அல்லது கருணாகரன் மீது வைக்கப்படுகின்ற இன்னொரு பார்வை. கருணாகரன் இன்றைக்கும் வாழ்க்கின்ற நிலம் அப்படியானது. அது பேசவிடாதஇ எழுதவிடாத உண்மைகளைப் பாதி விழுங்கப்பட்டபடி சொல்ல அனுமதிக்கிற ஆட்சியாளர்களின் நிலமாகத்தான் இருந்ததுஇ இருக்கிறது. ஆனால் எனக்கு கருணாகரன் வாழநேர்கிற அதிகாரத்தின் நிழல் என்பது 2009 க்கு முன்னுக்கும் பின்னுக்கும் வௌ;வேறானதாகத் தெரியவில்லை. இரண்டு அதிகாரங்களும் ஒரே மாதிரியானவையே. குரல்களை அடக்குவதில் மக்களை ஆள்வதில் கட்டளைகளை நிறைவேற்றுவதில் என்று சனங்களின் மீது கருணையற்றுப் பாய்ந்து குதறும் ஒரே மாதிரியான அதிகார மையங்களாவே அவை இயங்கின இயங்குகின்றன. மொழி அங்கீகரிக்கப்பட்ட அரசு ஒடுக்குகிற இனம் என்கிற நிபந்தனைகளைக் கழித்துப் பார்த்தால் கருணாகரனின் இறந்தகாலமும் நிகழ்காலமும் ஒரே வகையான அதிகாரத்தின் கீழ் வருகிறவையே.

சரி போரின் முழுமையான குறுக்குவெட்டுத் தோற்றம் எனப்படுவது என்ன? மேற்குறித்த இரண்டு அதிகாரங்களையும் குறித்த பார்வை. இரண்டு தரப்பின் மீதான விமர்சனம். அப்படிப்பார்த்தால் இந்தத் தொகுப்பில் அது தாராளமாகவே இருக்கிறது. அவருடைய சொந்த வாழ்வின் உத்தரிப்புகள். மண்மூட்டையாக அடுக்கப்பட்டுத் தப்பித்தவர். புலிகளின் மீது விமர்சனம் கொண்டவர் என்பவை அவரது ஒட்டுமொத்த தொகுப்பையும் புலிகளின் குற்றங்கள் மீது எழுதப்பட்ட தூற்றுதலாக இருக்கக் கூடும் என்கிற அபிப்பிராம் ஏற்படுத்தலாம். திறந்த மனதோடு இந்த அபிப்பிராயங்களை விலக்கிக் கொண்டு வாசிக்கும் போது போரின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.



உதாரணமாக காலத்தைப் பின்னிழுத்துச் செல்லும் பாம்பு என்றொரு கவிதையில் அவர் இப்படி எழுதுகிறார்.

அது பாம்பென்பதால்

சிலபோது அது சீறியிருக்கிறது

சிலபோதோ அது படமெடுத்தாடியிருக்கிறது.

சிலபோது சிலரை அது தீண்டியுமிருக்கிறது

என்பதால் யாரும் அதனை விலக்கினார்கள்

பாம்புக்கு அஞ்சியே இருந்தனர் எல்லாரும்

பாம்பு தன்னகங்காரத்தின் தினவு கொண்டு

நகரத்தை தன் நிழலில் படுக்கவைத்தது

பாம்பின் விசமூறிய நகரத்தில்

தினமும் சனங்கள் செத்துக்கொண்டேயிருக்கிறார்கள்

காலம் பின்னகரப் பின்னகர

காற்றிலாடும் கொடியின் நிழலில்

அசைகிறது பாம்பின் உடலும்.

இந்தக் கவிதையில் கருணாகரன் குறிப்பிடுவது ஒரு தமிழ்ப்பாம்பா அல்லது சிங்களப் பாம்பா? அல்லது இரண்டையுமா? எனக்கு அவர் இரண்டையும்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. அவர் தமிழ்ப்பாம்பை மட்டும்தான் சொல்கிறார் என்கிற முடிவுக்கு வந்தால் தமிழர்களிடம் பாம்பு இருக்கவில்லை என்பவர்களும் அது நல்ல பாம்பு என்று முனகுபவர்களும் மட்டும்தான் அப்படிச் சொல்ல முடியும். இப்படி இரண்டு அதிகாரமையங்கள் மீதும் கேள்விகளை வைக்கிற நிறையக் கவிதைகளை நான் இந்தத் தொகுப்பில் காண்கிறேன். (முழுமையாக இங்கே வாசித்துக்கொண்டிருந்தால் நேரத்தை பாம்பு விழுங்கும் என்பதால் சிலவற்றின் தலைப்புகளை மட்டும் சொல்கிறேன். நீங்கள் வாசித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்).

பலி

புதைசேறு

எதுவரை?

ஓயாக்கடல் உறங்கா நிலம் தீராக்கனவு...

முரண்

வலை

சாவரங்கு போன்ற கவிதைகள்



சரிஇ அப்படியானாலும் கருணாகரன் ஏன் யுத்தத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை முழுமையாகத் தராதவராக எமக்குத் தோன்றுகிறார். ஏனெனில் உண்மையில் நாங்கள் அவரிடம் ஒருபகுதி உண்மைகளை விழுங்கிவிடக் கோருகிறோம்.

இன்றைக்கிருக்கிற தமிழ்த்தேசியப் பொது வெளி 'வரிசை குலைந்தவர்களை' ஏற்றுக்கொள்ளாதிருக்கிறது.  அது விரும்பாதவொரு சாட்சியமாகத்தான் கருணாகரன் கருதப்படுகிறார். மரணப் பொறியை நோக்கி மந்தைகளைப் போலச் சாய்த்துச் செல்லப்பட்ட மக்கள் தொடர்ந்தும் மந்தைகளாகவே நடந்து கொள்ளவேண்டுமென்று அது நிபந்தனைகள் விதிக்கிறது.




உண்மையில் ஒரு சாட்சி எதனைச் சொல்லவேண்டுமென்று யார் தீர்மானிப்பது. தமிழ்த் தேசியச் சூழலில் இன்றைக்கு நீதிமான்களின் தொகை மே 18க்கு பிறகு திடீரென்று அதிகரித்து விட்டது. மே 18க்கு முன்னர் பாவிகளாயிருந்தோர் புலிகளின் சிந்தனை முறையைத் தத்தெடுத்தபடி புலிகளின் ஏகப்பிரதிநித்துவ நாற்காலியின் மீதான பேராசை உந்தஇ அதில் பாவங்களைக் கழுவிக்கொண்டதாய்க் கற்பனை பண்ணியபடிஇ தம் விருப்பப்படி பேசாத சாட்சியங்களை அவதூறென்னும் கழுவிலேற்றுகிறார்கள். ஆனால் இதில் ஒரு முரண் நகை என்னவெனில் இன்றைய புனிதர்கள் நேற்றைய பாவிகளாயிருந்தபோதும் கருணாகரன் அவர்களோ நட்பாயிருந்தார் என்பதும் திடீரென்று அவர்கள் புனிதர்களாகி கருணாகரனைப் பலிபீடத்துக்கு அனுப்பத் தயாராயிருக்கிறார்கள் என்பதும் தான்.



சனல் 4 வெளியிட்ட ஒரு சிறுமியின் புகைப்படம். உழவு இயந்திரப் பெட்டியில் துவக்கேந்திய ராணுவம் காவலிருக்க அந்தரித்து யாராவது வரமாட்டார்களா எனப் பதைபதைத்தபடி அமர்ந்திருக்கும் சிறுமிகளையும் உழவு இயந்திரத்துக்கு வெளியே ஒரு ரபர் பாண்டுக்குள் கூட அடக்காமுடியாதபடி ஒட்ட வெட்டப்பட்டிருக்கும் முடியை கஸ்டப்பட்டு ரபர் பாண்டுக்குள் போட்டபடி... குங்குமப் பொட்டொன்றை அழுத்த வைத்தபடி அந்தரிக்கும் ஒரு சிறுமியின் முகமும்.. இது உறுதியாக இனவாத சிங்கள அரசிற்கெதிரான போர்க்குற்ற ஆதாரம்தான். ஆனால் அந்தச் சாவரங்கிலிருந்து வந்த ஒருவர் அந்தச் சிறுமியின் தந்தையாகத் தன்னை உணர்கிற ஒருவரைப் பொறுத்த வரையில் அவரது சாட்சியம் அந்தச் சிறுமியின் தலைமயிரை வெட்டியவர்கள் யார் என்பதிலிருந்தே தொடங்குகிறது. குங்குமப் பொட்டை வைத்தவர்கள் யார் என்பதாகத் தொடர்ந்து இறுதியாய் உழவு இயந்திரத்தில் ஏற்றி என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை வந்தடையும்.  கெலம் மக்ரே வேண்டுமானால் உழவு இயந்திரத்திலிருந்து தனது கேள்வியைத் தொடங்கலாம். அது தன்னை நீதிமானாக அறிவித்துக்கொள்கிற அல்லது அப்படி நடிக்கிற ஒரே கமராவினால் இரண்டு மணிநேர இடைவெளியில் எடுக்கப்பட்ட படங்களை இரண்டு வருட இடைவெளிகளில் வெளியிடுகிற போருக்கு ஆயுதங்களை இரண்டு தரப்புக்கும் விற்று விட்டு நீதி விசாரணையையும் நடத்துவதாகப் பாவனை பண்ணுகிற உலகத்தின் குரல். ஆனால் ஒரு மனசாட்சியுள்ள ஒரு மனிதன். தமிழன்.  இனியும் தன்னைக் கொல்லத் துரத்தும் பாம்புக்குட்டிகளை அடைக்காக்க விரும்பாத சாட்சியம் நான் முதற் சொன்ன கேள்விகளிலிருந்தே தொடங்குவார்.



அதைத்தான் கருணாகரன் எழுதுகிறார் -



மனைவியின் தாலியைப் பிள்ளைக்கு அணிவித்தான் ஒரு தந்தை

பிள்ளையைக் காப்பதற்கும் போர்க்களத்தில் இருந்து அவளை மீட்பதற்குமாக.

ஒரு தாயாகஇ தந்தைக்கே மனைவியாகத் தோன்றினாள் மகள்.

யாருடையவோ பிள்ளையை ஏந்தித் தானே தாயென்றாள் ஒரு கன்னி

வழியில் வந்த முகமறியா ஒருவனோடு சேர்ந்திருந்தாள் ஒருத்தி

சாவரங்காகிய போர்க்களத்தில்

ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன.

தனித்திருந்த இளையோரெல்லாம் போருக்கே என்று நாட்டின் விதியுரைத்தபோது

இப்படி நாடகங்கள் ஆயிரம் உருவாகின.

உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது.



இந்த உண்மை சிலருக்கு கோவத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் கோவத்தை சந்திக்க விரும்பாதவர்கள் கருணாகரனிடம் 'சாவரங்கு' குறித்த முழுமையான குறுக்குவெட்டுமுகம் கிடைக்கவில்லை என்று தீர்ப்பு எழுதி அவரை ஒரு தரப்பிற்குத் தள்ளிவிடுதல் நிம்மதியளிக்கிறது. இந்தத் துயரத்தை அடைகாத்து எதைச் சாதிக்கப்போகிறது இந்தச் சமூகம். தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லுவதற்கு இறைஞ்சும் நிலையைத்தான் சமகாலத் தமிழத்தேசியச் சூழல் கொண்டிருக்கிறது.



'தூக்கு மேடையில் வைக்கப்பட்ட வாக்குமூலம்' என்ற கவிதையில் கருணாகரன் எழுதுகிறார் -


எனக்குச் சாட்சியங்களில்லை

நிம்மதியுமில்லை

இதோ எனக்கான தூக்குமேடை

இதோ எனக்கான சவுக்கு

நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்

தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது

இன்னும் நேரமிருக்கிறது

இன்னும் நேரமிருக்கிறது

உண்மையைக்கண்டறியுங்கள்

தயவுசெய்து கண்டறியுங்கள்

அதன்பிறகு என்னைப்பலியிடுங்கள்

அதற்காக நான் மகிழ்வேன்

உண்மைக்காக என்னைப்பலியிடத் தயாராக இருக்கிறேன்.

அதுவரையில் நான் சாட்சியாக இருக்க விரும்புகிறேன்

நல்ல நம்பிக்கைகளை உங்களிடம் சொல்வேன்

எதுவும் பெரியதில்லை எதுவும் சிறியதுமில்லை

நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை

எந்த விசமும் படர்ந்ததில்லை என் நிழலில்.



உண்மையைக் கண்டவன்

அதைச் சொல்லாதிருப்பது

மாபெரும் பாவச் செயலாகுமல்லவா

தண்டனைக் குரிய தல்லவா

எனவேதான் உண்மையைச் சொன்னேன்

பாவங்களும் தண்டனையும்சேராதிருக்கும்படியாக

அதையே நான் செய்தேன்

அதையே நான் செய்தேன்

இதில் உங்களுக்குண்டா பேதங்கள்?

நான் உங்களில் ஒருவன்;

அன்பின் கூக்குரலை நான் ஒலித்தேன்

நாம் தோற்கடிக்கப்படலாமா

என்னைக் கோவிக்காதே என்னைக்கோவிக்காதே

நான் சொல்வதைக்கேளும்

நான் சொல்வதையும் கேளும்

உண்மைகளை நாம் ஒரு போதும் அழியவிடலாகாது

உண்மைக்குச் செய்யும் அவமானம்

நம்மைத் தூக்கு மரத்தில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது

நமது கால்கள் வலிக்கின்றன

நமது வயிறு கொதிக்கிறது

என்ன செய்ய முடியும்

அவற்றுக்கு மன்னிப்பா ஆறுதலா தண்டனையா?

காலத்திடம் சொல்லு

இன்னும் இன்னுமாய்...

புலிகளின் காலத்தில் துருத்திக் கொண்டு தெரிகிறவர்களில் ஒருவராயிருந்த கருணாகரன் இன்னும் துருத்திக் கொண்டு தெரிகிற ஒருவராகவே தொடர்ந்தும் இருக்க விரும்பாமையினாலேயே உண்மைகளைப் பேசுகிறார். அவர் இதுவரை காலமும் பேசாமல் விட்டதையோ அல்லது உரக்கச் சொல்லாது மனசுக்கள் அடைகாத்ததையோ அவர் வெளியில் சொல்கிறார். கைதட்டல் ஓசைகளின்றிஇ வாசகர்களின் புகழ் மொழிக்கும் அறிவுஜீவிகளின் சகவாசத்துக்காகவும் சமகாலத்தில் தன் இடத்தைத் தக்க வைத்தல் என்பதற்காகவும் உண்மைகளை விழுங்கியபடி கடந்தகாலத்தைப் போல அடைகாக்கும் தொழில்நுட்பத்துக்குள் திரும்பவும் தன்னைப் பலியிடும் குருட்டுச் சாத்திரியாக இருப்பதற்கு அவர் தயாராயில்லை என்பதன் வெளிப்பாடுதான் இத்தொகுப்பு என நான் எண்ணுகிறேன். அப்படி 2009ல் கோவப்பட்டுஇ கோவத்தை குறைத்துக்கொண்டு சமகாலத்தில் தங்கள் இடத்தைத் தக்கவைக்கும் பிரயத்தனத்திலிருக்கும் 'தீர்க்கதரிசிகள்' மேலெழுகிற காலமாயும் இது இருக்கிறது. அப்படி உண்மைகளை விழுங்கிக்கொண்டு அல்லுலேயாக் கோசங்களை எழுப்பிக்கொண்டு பாம்புக் குட்டிகளை அடைகாக்கிறவர்களுக்குச் சொல்ல ஏதுமில்லை. 'வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை' என்பதைத் தவிர.



ஆனால் வன்னியில் வாழ்ந்தவன் என்கிற அடிப்படையிலும் கருணாகரன் நிலாந்தன் போன்றவர்களை முன்மாதிரிகளாகக் கருதுவதில் பெருமையோடிருக்கிறவன் என்கிற அடிப்படையிலும் இத்தொகுப்பின் விடுபடலாக நான் கருதிகிற கோணம் ஒன்றுண்டு. கருணாகரன் இன்னொரு கோணத்திலும் இந்தக்காலத்தைப் பதிவு செய்தாகவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒரு கவிஞராகஇ அரசியல் செயற்பாட்டாளராக சமூகத்தின் அதிகார மையங்களோடு அடையாளப்பட்டிருந்த அதிகாரங்கள் அற்றவகையிலெனினும் நெருக்கமாயிருந்த  அவருடையதும் அவரைப் போன்றவர்களினதும் வகிபாகம் இந்தப் போர்க்காலத்தில் என்னவாயிருந்தது?

அதிகார மையங்களின் நெருக்கமாயிருந்தும் துருத்திக் கொண்டு தெரிகிறவர்களாயிருந்தும் உழவு இயந்திரத்துக்கு முன்னால் அந்தரித்து நிற்கும் சிறுமிகள் உருவாவதைத் தடுக்கமுடியாது போனது ஏன்? அல்லது அப்படியானவர்களின் உருவாக்கத்தில் உங்களுடைய பங்கு என்ன?  'பாவங்களால் நிரம்பிய ஒரு பாத்திரம் நான்' என்று கருணாகரன் எழுதுகிறார். ஆற்றாமையின் பால் அவரைத் தள்ளும் அந்தப்பாவங்கள் என்ன? மெய்யான சாட்சியாளனாய் அந்த வகிபாகத்தையும் கருணாகரன் பதிவு செய்தாக வேண்டும். 'நந்திக்கடலில் கழுவினாலும் போகாத இரத்தம் எங்கள் கரங்களில் இருக்கிறது' என்று நிலாந்தன் சொல்லுகிறார். அந்த இரத்தம் யாருடையது? என்பதையும் அவர்கள் சொல்லவேண்டும். எப்படி அவர்களுடைய கைகளில் அது வந்தது என்பதையும்? அது எப்படி தவிர்க்கமுடியாததானது என்பதும் கூட வரலாற்றிற்கு அவசியமானவையே.



இது கருணாகரனின் முதல் தொகுப்புமல்லஇ இறுதியானதுமல்ல. வாழ்வெனும் நெடும்பயணத்தில் அவர் தான் கடந்து வந்த காலத்தின் ஒரு துளியை இங்கே பதிவு செய்திருக்கிறார். எப்படி இந்தத் தொகுப்பில் தன் முதல் தொகுப்புகளில் தவிர்த்த முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பான கவிதையை பதிவு செய்திருக்கிறாரோ அதைப்போல இன்னும் இதிலும் பேசாத பேசமுடியாதவற்றையும் பதிலளிக்காது விட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார். பயணியாய் அதையும் பதிவு செய்வார் என்றே நான் நம்புகிறேன். அதுதான் கருணாகரன் என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன்.



————————————————————————————————————————

(கனடாவில் 09.03.2013 அன்று நடந்த கருணாகரனின் 'ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்' என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்).

(எதுவரை )