Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Thursday, December 1, 2011

காலத்துயர்- சு.வி.பற்றிய நினைவுக்குறிப்புகள்


சு.வி.யின் கவிதைகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில், சற்றும் எதிர் பாராமல் அவரைப்பற்றிய அஞ்சலிக்குறிப்பை எழுதநேர்ந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியான நிலைமையிலிருந்து விடுபடுவதற்கு சிரமமாகவே இருக்கிறது. சற்றும் எதிர்பாராத நிலை இது. பெருந்துயரம் நிரம்பியுள்ள கணங்கள் இவை.

அண்மையில் சு.வி தொடர்பாக இரண்டு இழப்புக்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. முதலில் அவருடைய முழுக் கவிதைகளின் திரட்டான "உயிர்த்தெழும் காலத்திற்காக " என்ற நூல் என் கையிலிருந்து எங்கோ தவறிவிட்டது. அவர் தன்கையால் எனக்குத் தந்த புத்தகம். விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த அந்தக் கவிதைத் தொகுப்பைப் போல இதுவரையில் ஈழக்கவிஞர் எவருடைய நூலும் முழுமையாகவும் அத்தனை நேர்த்தியோடும் வந்ததில்லை. (அடுத்ததாக புதுவை இரத்தினதுரையின் 'பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சு களையும்' தொகுதியைச் சொல்லலாம்) அந்தத் தொகுதி எப்படியோ தொலைந்துவிட்டது. அது தாளாத துயரத்தைத் தந்தது. நண்பர்களிடம் அந்தப் புத்தகம் தொலைந்ததைப் பற்றிச் சொல்லித் துக்கப் பட்டேன்.

ஆனால் அந்தப்புத்தகம் தொலைந்ததைப் பற்றி சு.வி.யிடம் நான் சொல்லவில்லை. சொல்லத் துணிந்ததுமில்லை. அந்தத் தொகுதிபற்றிய மதிப்பீட்டையும் விமர்சனங்களையும் அது பற்றிய கருத்துக்களையும் சு.வி. எதிர்பார்த்திருந்தார். பரவலாக அது பற்றிய அபிப்பிராயங்களை ஒவ்வொரு வரும் எப்படிச் சொல்வார்கள் என்று காத்திருந்தார். ஆனால், சு.வி.யின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிலைமை இருந்தது. ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புக்களைத்தவிர மிக ஆழமாகவும் விரிவாகவும் யாரும் அந்தத் தொகுதிக்கு முழுத்திரட்டுக்கு விமர்சனங்களை எழுதவும் இல்லை. முன்வைக்கவும் இல்லை. ஏன் அதற்குரிய துணிவு நிகழவில்லை என்று புரியவில்லை. அவரிடம் சொன்னவாறு உரிய காலத்தில் என்னாலும் விமர்சனத்தை எழுதமுடியவில்லை. பின்பு நான் அந்தக் கவிதைகளுக்குரிய விமர்சனத்தை எழுதிக்கொண்டிருந்த போது புத்தகம் தவறிவிட்டது. விமர்சனமும் இடையில் தடங்கலாகிவிட்டது. இது முதல் துயரம். இப்போது இரண்டாவது இழப்பு நேர்ந்திருக்கிறது. முதல் இழப்பை ஈடுசெய்யலாம். சு.வி.யை இழந்ததை எப்படி ஈடுசெய்ய முடியும்? யாரால் அதனை சமன்செய்ய இயலும்? எதனால் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடவும் முடியும்?

சு.வி.யை நல்ல மனிதர், மிக நல்லவர். நல்லவர் என்பதற்கு என்னென்ன உதாரணத்தைச் சொல்ல முடியும்? அவரையே சொல்வதைத்தவிர. எளிமையானவர். இயல்பான எளிமை வாழ்வே எளிமை என்றவாறானவர். எப்படி அவரால் அப்படி ஒரு அழகு நிறைந்த வாழ்க்கையை, ஆச்சரியம் நிறைந்த வாழ்க்கையை வாழமுடிந்திருக்கிறது? யாராலும் வாழமுடியாத அளவுக்கு அவருடைய வாழ்க்கை தனித்துவமாகவும் மிகச் சாதாரணமாகவும் இருந்தது. மிகச் சாதாரணமான வாழ்க்கை. ஒரு சைக்கிளுடன் மட்டும் கழிந்த அவருடைய வாழ்க்கை எல்லாத் தளங்களிலும் வேர்விட்டு நின்றது. அந்த வேரோட்டம் தான் சு.வி.யின் பலம்.

சு.வி. விடுதலையை நேசித்தார்.தேசவிடுதலையை விரும்பினார். இனவிடுதலையை யாசித்தார். மனித விடுதலையை அவாவினார். அவர் ஒரு யதார்த்தவாதி.1980 களின் முற்பகுதியில் சு.வி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கத் தொடங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகளை தீவகத்தில் ஆதரித்து உறவுகொண்டார். தொடர்ந்து அவருக்கு போராட்டத்தோடும் போராளிகளோடும் உறவு வளர்ந்தது. அன்பில் வளர்ந்த உறவு அது. சு.வி. அன்புமயமானவர் என்பதால் அவருடைய உறவுவட்டம் இயல்பாகவே பெருக்கத் தொடங்கியது. போராளிகள் தலைமுறை தலை முறையாக சு.வி.யுடன் ஒட்டிக்கொண்டார்கள். எண்ணற்ற போராளிகளின் அறிமுகமும் உறவும் சு.வி.க்குத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அவர் தன்மனதில் படுகின்ற உண்மைகளை எந்தத் தயக்கமுமில்லாமல் போராளிகளுடன் பகிர்ந்திருக்கிறார். அவர் பல போராளிகளை ஆற்றுப் படுத்தியிருக்கிறார். உற்சாகமூட்டினார். பிரிவுடனும் கருணையோடும் ஆதரிக்கிறார். விடுதலை என்ற எல்லையற்ற தாகத்தோடு இருந்த சு.வி. ஒவ்வொரு போராளிகளையும் பேரொளியூட்டும் சுடர்கள் என்றே கருதினார்.சு.வி. தன்னுடைய இளமைப் பிராயத்திலேயே அரசியலிலும் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடத்தொடங்கிவிட்டார். இதில் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் மூத்த படைப்பாளியும் சமூகப் போராளியாகவுமிருந்த மு.தளையசிங்கம். மு.த.வுடன் இணைந்து தீவுப்பகுதியில் நடந்த சாதீயத்துக்கு எதிரான போராட்டங்களில் சு.வி ஈடுபட்டார். அந்த நாட்களில் அவர் இளைஞர். துடிப்புமிக்க இளைஞராக இருந்ததால் மிகத் தீவிரத்தோடு மு.த.வுக்கு பலமாக இருந்து சமூகப்போராட்டங்களில் உழைத்தார். அரசியலிலும் சமூகப் பார்வையிலும் இலக்கியத்திலும் சு.வி. மு.தளையசிங்கத்தையே அதிகமும் பின்பற்றினார். மு.த.வலியுறுத்திய மெய்யுள் என்ற இலக்கியக் கோட்பாட்டை சு.வி. தொடர்ந்தார். மெய்யுளில் மு.த.முன்வைத்த கலைஞனின் மாண்பையும் அடிப்படைகளையும் சு.வி. பின்பற்றினார். அதை அவர் சாட்சிபூர்வமாக்க முயன்றார். இந்த அடிப்படையிலேயே சு.வி.இரண்டு தளங்களிலும் இயக்கினார். ஒன்று அவரது படைப்புச்செயற்பாடு. மெய்யுளை வலியுறுத்தும் அல்லது மெய்யுளின் அடிப்படையிலான படைப்பு முறைமையை சு.வி. தொடர்ந்தார். இரண்டாவது சு.வி.யின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளும் இவற்றோடிணைந்த வாழ்க்கையும்.

1971 இல் சு.வி. மு.த.வுக்குப் பலமாக சாதியத்துக்கெதிராக உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து அவரது இறுதிக் கணம் வரையான சமூக அரசியல் செயற்பாடுக்கும் ஈடுபாட்டுக்கும் ஒரு தொடர்ச்சியுண்டு. அவர் ஒரு போதும் தனித் திருந்ததில்லை. முதலில் தீவுப்பகுதியில் வேறுபாடுகளில்லாமல் சகலரும் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கான உரிமை வேண்டுமென்றும் அப்படியானதொரு சமநிலை உருவாகவேண்டுமென்றும் மு.த. வுடன் இணைந்து சு.வி. போராடியபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இதில் மு.த.வும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னாளில் மு.த.வின் இறப்புக்கும் இதுவே காரணமாகியது. அப்போது சு.வி.யும் கடுமையான அடிகாயங்களுக்குள்ளாகினார். குருதியும் சிந்தினார். அந்தளவுக்குத் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். சு.வி.யின் உறுதி என்பது அறிவினாலும் தெளிவினாலும் உருவாகியது. பின்னாளில் அவர் தமிழ் தேசியத்தை அணுகிய விதத்திலும் படைப்புச் செயற்பாட்டைத் தொடர்ந்த முறையில் கூட அவரு டைய இந்த உறுதியைக் காணலாம்.

அவர் இந்திய சிறிலங்காப்படைகளின் மக்கள் விரோதச் செயற் பாடுகளை எதிர்த்தார். சிறிலங்கா அரசின் அராஜ கத்துக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்தார். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை விமர்சித்தார். ஆனால் சு.விற்கு பௌத்தத்தின் மீது மேலான புரிதலும் ஈடுபாடும் இருந்தது. அவர் எல்லை கடந்த வரையறைகளற்ற பிரபஞ்ச வெளியில் அன்பைக் கண்டார். அன்பில் உருவாகும் விடுதலையைக் கண்டார். மானுடம் என்பதே அன்பின் விளை பொருள் என்றறிந்தார். சு.வி.யின் பரப்பு, எல்லையற்ற பிரபஞ்சமாகவே இருந்தது. அவருள் சுடர்ந்த அறிவும் அவருள்ளிருந்த உறுதியுமே இதற்குக் காரணம். இந்த விரிந்த பார்வைக்கும் அன்பிணைந்த பிரிவுக்கும் அவருக்கு புங்குடுதீவு சர்வமத ஆச்சிரமத்துடனிருந்த உறவும் ஒரு காரணம். அதிலும் அன்னை கமலா திருநாவுக்கரசு அவர்களுடன் தொடர்ந்து சு.வி.கொண்டிருந்த ஆத் மார்த்த உறவு அவருடைய ஞானத்தை மேலும் வெளிச்சமாக்கியது. சு.வி.எதற்கும் துணிந்தவர். அவருடைய பலம் அன்பிலேயே இருந்தது. அவருடைய கவிதைகளும் அன்பினையே வலியுறுத்தின. அவருடைய சகல காரியங்களும் அன்பின் நிமித்தமானவை. அவர் பேசுவதுபோல இன்றுவரை யாரும் பேச நான் கேட்டதில்லை. நான் மட்டுமல்ல யாரும் அவர் போல வேறெவரும் பேசுவதைக் கேட்டல் இயலாது. அன்பின் மொழியே அவர் பேச்சு. சு.வி.யுடன் உரையாடுவது என்பதே எவருக்கும் அதிசயத்தை ஊட்டுவது. அவர் பேசிக்கொண்டேயிருப்பார். பொழுது தெரியாமல் அவருடைய பேசும் முறையையும் அந்த உரையாடலின் ஆழத்தையும் அழகையும் ரசித்துக்கொண்டேயிருக்கலாம். அவருடைய குரலில் இசையிருந்தது. அன்பிழைந்த லயமிருந்தது. மற்றவரை மதிக்கும் குணமிருந்தது. பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் திறனிருந்தது. அதனால்தான் அவரைச் சகலரும் மதித்தார்கள். அவரில் எல்லோரும் அன்பு கொண்டிருந்தார்கள். சு.வி. க்கு ஆறு தலைமுறைகளிலும் உறவிருந்தது. அந்த உறவு இன்றும் பல தலை முறைகளுக்கும் தொடரும். அந்தளவுக்கு அந்த அன்புக்கு வாசல்களுண்டு.

சு.வி. எல்லாவற்றையும் மிக ஆழமாகவே நோக்கும் இயல்புடையவர். அவர் ஒரு தடவை சொன்னார் ‘எங்களின் விடுதலைக்கு நாங்கள் பலமானவர்களாக இருக்கவேண்டும். உறுதி கொண்ட மனமும் உடலும் இருக்கும் ஒரு சமூகம் எதற்கும் அடிபணிந்து விடாது. மனதில் தென்பையும் தைரியத்தையும் வளர்க்கவேண்டும். உண்மையொளியும் அறிவும் சுடரும் உறுதியே பெரும் பலமாகும்‘ என்று.

இதேபோல உடல் உறுதிக்கு நிகராக மன உறுதியும் முக்கியமானது. அதைப்போலச் சிந்தனைத் தெளிவும் சமூக ஆரோக்கியமும் முக்கியமானவை என்பதில் தீராத அக்கறை கொண்டிருந்தார். எந்தப் பஞ்சமும் ஈடேற்றத்தை தரமுடியாது என்று அவர் வலியுறுத்தினார்.அது அறிவுப் பஞ்சமாக இருக்கலாம், ஆற்றற் பஞ்சமாக இருக்கலாம், உணவுப் பஞ்சமாக இருக்கலாம், எதுவாயினும்.

சு.வி.யின் எதிர்ப்பியக்கம் மானுட விடுதலையை விரும்பும் அடிப்படையிலானது. அதற்காகவே அவர் உறுதியை வலியுறுத்தினார். உறுதியே எதிர்ப்பியக்கத்தின் அடிப்படை என்றுணர்ந்திருந்தார். தைரியமுள்ள ஒரு சமூகம் அநீதியைக் கண்டு அஞ்சாது என்பதும் அறிவு சுடரும் போது அதனால் தவறுகள் நிகழாது என்பதும் சு.வி.யின் தரிசனமாகியிருந்தன. சு.வி தன் சக படைப்பாளிகளை மிக ஆழமாக நேசித்தார். அவருடன் யாரும் பகைமை கொண்ட தாக நானறிந்ததில்லை. சு.வி.யின் கோபம் மிக உக்கிரமானது. ஆனால் அது யாரையும் காயப் படுத்தாது. நீதியான கோபம் அவருடையது என்று உணரவைக்கும் இயல்புடையது அது. அதனால் யாரும் அவருடன் கோபித்ததில்லை. அவருக்கு எதிர்முகங்கள் உருவாகவில்லை. குழந்தைகளிடத்தில் சு.விக்கிருந்த ஈடுபாடு மிகவும் அதிகம். வாஞ்சையோடு அவர் எவரோடும் குழந்தையாகி நின்றார். சு.வி . யின் கவிதை மொழி யிலும் இந்தக் குழந்தைமனத் தன்மையுண்டு. அவருடைய கவிதைமொழி மிக மிகத் தொன் மையானது. அதேவேளை அது மிக மிக நவீனமா னதும் கூட. அதனால் தான் அவர் தமிழ் மரபின் தொடர்ச்சியாய் விளைந்த கவிஞராகக் கருதப்படுகிறார்.

சு.வி.யின் கவிதைகளைப் பற்றி தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள், அறிஞர்கள் பலரும் கூட உயர்ந்த மதிப்பையே வைத்திருக்கின்றனர். எஸ்.வி.ஆர், வ.கீதா, கவிஞர்களான தேவ தேவன், அறிவுமதி, இன்குலாப், ராஜசுந்தரராஜன், பசுவையா, நகுலன், ஞானக்கூத்தன் முதற்கொண்டு ஜெயமோகன் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகள் வளர சு.வி.யின் கவிதைகளை தமிழ்க்கவிதையின் புதிய வளமாகக் கருதுகிறார்கள். மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் கூட சு.வி.யின் கவிதைகள் பரிச்சயமடைந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் பல கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்றரைத் தசாப்தங்களாக தொடர்ச்சியாக சு.வி. எழுத்தியக்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் என்றும் ஓய்ந்திருந்ததில்லை... அவருடைய மனமும் உடலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தன. மனதையும் உடலையும் ஒன்றாக அவர் கருதினார். அப்படியே வைத்திருந்தார். அவருடைய தியானத்திலும் இரண்டும் இணைந்திருந்தன.

1970 இல் தன்னுடைய முதற் கவி தையை எழுதத்தொடங்கிய கணத்திலிருந்து 2006 டிசெம்பர் 09 வரையான தன்னுடைய இறுதிக் கணம் வரைக்கும் அவருடைய பிரக்ஞை எழுத்தியக்கத்தில் இயங்கிக் கொண்டேயிருந்திருக்கிறது.

அவருடைய எழுத்தியக்கம் மானுட விடுதலையை விரும்புகிறது. பிரபஞ்சம் நோக்கிய தாகத்தோடிருந்தது. அவர் பிரபஞ்ச ஒலியை மொழி பெயர்த்திருக்கிறார் என்று ஒரு தடவை ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். பிரபஞ்ச மொழியைப் புரிந்துகொள்ளும் வல்ல மையைப் பெற்றிருந்தார். சு.வி.

ஜெயமோகன் சு.வி.யின் கவிதைகள் குறித்து விரிவாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளதாகவும் தகவல்.அகமெரியும் தரிசனம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியாகியிருந்ததாக ஒரு நண்பர் தெரிவித்திருந்தார். ஆனால், அதைப் படிக்கக் கிடைக்கவில்லை. சு.வியி்ன் கவிதை ஒன்றைப் பற்றி முன்னர் சி.சிவசேகரமும் எழுதியதாக நினைவு.

தமிழில் - தமிழ்ப்பண்பாட்டின் தொடர்ச்சியை உள்வாங்கி அல்லது அதை அடித்தளமாகக் கொண்டு சு.வி. அளவுக்கு விரிவும் ஆழமும் கூடிய வகையி்ல் எழுதிய படைப்பாளிகள் குறைவு என்று பலரும் சொல்லியுள்ளனர்.

அவர் தன்னுடைய ஊரை நேசித்த அளவுக்கு சகல நிலப்பரப்பிலும் பற்றுடையவராக இருந்திருக்கிறார். எல்லா ஊரும் தனதூரே என்ற உணர்வு, எதையும் ஒன்றாகக் கருதும் ஞானம் அவருக்குள் வளர்ந்திருந்தது. எல்லாவற்றையும் தனக்குள்ளாக்கும் அகந்தை அல்ல அது. ஆக்கிரமிப்பின் விஷத்துளி அல்ல அது. சமனிலை காணும் உயர் நெறியது. அவர் கைவிடப்பட்ட தீவகத்தை துயர் தோய்ந்த அந்த அனல் வெளிகளை காற்றுவழிக் கிராமம் எனப்பாடினார். துயரொழுகத் துயரொழுகப் பாடினார். ஆனால் கதறியழுவதற்காக அல்ல. கதியழுவதும் அல்ல. சிறைப்பட்டுச் சிதையும் அனாதரவான தீவுகளை அவர் காலத்தின் சாட்சியாக நின்று பாடினார். அதுவொரு காலத்துயர். தீராத்துயர். நெஞ்சில் கனலை மூட்டும் பெருந் துயரத்தீ. சு.வி நன்றாகப் பாடுவார். நிலா நாளில், இரவில், அவரின் பாடல்கள் காற்றில் மேலெழுந்து வரும்போது இந்தப் பிரபஞ்சமே கரைவது போலி ருக்கும். அதிலும் அவர் சிலப்பதிகாரத்தின் கானல் வரிப்பாடல்களை துயரொழுகப்பாடுவார். கண்ணில் கரையும் காவியகாலமும் பிரிந்து கொண்டேயிருக்கும் நமக்கு. தன்னுடைய கவிதைகளையும் அவர் பாடிக் காட்டுவார். அந்தக் குரலுக்கு எப்படி அத்தனை ஈர்ப்புச்சக்தி இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். சு.வி.யின் பாடல்களைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர் எப்போதும் பாடுவார் என்றில்லை. ஆனால் எங்களுக்கு அவருடைய பாடலுக்கான தாகமிருக்கும். அது ஒரு தேவகுரல் என்று ஜெயசங்காரோ லம்போவோ சொன்னதாக நினைவு. உண்மைதான்.

அதிலும் அவர் நீல வாணனின் " ஓ...ஓ வண்டிக்காரா..." வைப் பாடும்போது கேட்க வேணுமே! அப்பப்பா... சு.வி எப்போது வந்தாலும் அவரை எப்படியும் பாடவைக்கவேணும் என்று ஒரு தாகம் மேலெழும். சில போது தவறிப்போனாலும் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர் பாடியிருக்கிறார். தனக்காகத்தான் பாடுகிறாரா? அல்லது எங்களுக்காகத்தான் பாடுகிறாரா என்று தெரியாமல் இருக்கும். இப்போதும் அவர் யாருக்காகப் பாடினாரோ என்றே தெரியாமலிருக்கிறது.

சு.விக்கு பிரபஞ்சம் மேலிருந்த பற்றளவுக்கு சூழல் மீது கரிசனையும் இருந்தது. அடிப்படையில் அவர் ஒரு சூழலியலாளர் அவர் 'சூழியல்' என்று சுழலியவைச் சுருக்கிப் புதுச் சொல்லாக்கியிருந்தார்.அப்போது அவர் ஜெயமுருகனுடன் சேர்ந்து புவுலகு என்றொரு சூழியற்

திருகோணமலையில் அகதியாகக் குடியேறியிருந்த நாட்களில் கூடுதலான ஈடுபாட்டோடு சூழியலில் கவனங்கொண்டு செயற்பட்டார். சூழியல் குறித்து நிறைய எழுதினார். அவர் எழுதிக் கொண்டேயிருந்தார். புதிய வடிவங்களை நோக்கி சு.வி நகரத் தொடங்கினார். பின்னாளில் அவர் தீவிரமாகவும் ஓய்வின்றியும் அதிகமாக எழுதினார். சுனாமி அவருடைய பல கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டது.

சுனாமியின் போதும் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சோர்ந்து விடவோ தளர்ந்துவிடவோ இல்லை. அவருக்குள்ளிருந்த தைரியம் அவரை இயக்கிக் கொண்டேயிருந்தது. அவருடலை நோய் தாக்கிச் சிதைத்துக் கொண்டேயிருந்த போதும் அவர் தொடர்ச்சியறாமல் இயக்கிக் கொண்டேயிருந்தார் இறுதியாக அவர் வாசிப்புத் தொடர்பான மாணவர்களுக்கு வழியாகட்டியான சிறிய நூல் ஒன்றைக் கூட வெளியிட்டிருந்தார்.

1966 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை பசித்தவர்களுக்கு தானம் வழங்கிய கை அவருடையது. புங்குதீவு சர்வ மத ஆச்சிரமத்தினோடு இணைந்து தொண்டனாகவும் தொண்டாகவும் கலந்திருந்து அரிசி வழங்கினார். வாழ்வு முழுக்க அவர் தொண்டு செய்தார். எல்லாவகையிலும் தொண்டுகள் செய்தார்.

இப்படியெல்லாமிருந்த சு.வி. என்ற அன்பாளன் இன்றில்லை. அவரை இழந்துவிட்டோம். அவரை இழக்கப்போகிறேன் என்ற முன்னறிப்பாகவா அவருடைய அந்தப் புத்தகம் தவறியது?லம்போ சொன்னதைப் போல" அளவற்ற அன்பாளனாக" இருந்த சு.வி.யை இழந்து விட்டோம். அவருடைய பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் படி பத்மாநாப ஐயர் பல தடவை கேட்டிருக்கிறார். கொழும்பில் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தேன். இதற்கான முன்னாயத்தங்களை றுஷாங்கன் செய்து கொண்டிருந்தார். என்ற போதும் அவருடைய பயணத்துக்கும் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நடந்த நேரப் பொருத்தமின்மையால் அது சாத்தியமாகவில்லை. இனி அதைச் செய்வதற்கும் சாத்தியமில்லை. சு.வி எல்லாவற்றையும் கடந்து விட்டார்.

நிலாந்தன் சொல்லுவது போல அவர் ஒரு காலப்பயணியாகவே சென்றுவிட்டார்.

"வில்வன் போய்விட்டான். இனி ஆத்மார்த்தமாகப் பேசுவதற்கு எனக்கு யாரிருக்கிறார் " என்று மு.பொ துக்கம் தோய்ந்த குரலில் கேட்ட துயர்தான் நமது நெஞ்சிலும் கிளம்புகிறது.

வில்வரெத்தினம் இல்லாத பிரபஞ்சம் இதுவா?

(2007)
சு.வியின் கவிதைத்தொகுதிகள் -
1.அகங்களும் முகங்களும் (1985)
2.காற்றுவழிக்கிராமம்
3.காலத்துயர்
4.நெற்றிமண்
5.உயிர்த்தெழுகின்ற காலத்திற்காக (முழுக்கவிதைகளின் திரட்டு)
6.விடுதலை முகம் (அவர் பின்னாட்களில் எழுதி, காலமாகிய பின்னர் வெளியிடப்பட்ட தொகுதி)

Friday, May 2, 2008

சுஜாதா:அஞ்சலி


எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------

நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும் செல்வாக்கையும் பெறுவதென்பது தமிழ்ச்சூழலில் மிக அதிசயமானது.

சுஜாதாவைப்பற்றிய அறிதல் பல நிலைப்பட்டது என்றபோதும் அவர் ஒரு எழுத்தாளராகவே அதிகமாக தெரியப்படுகிறார். கல்வி, தொழில் போன்றவற்றில் சுஜாதா ஒரு பொறியியாளர். ஆனால் அந்தத்துறையில் அவர் பெற்ற அறிமுகத்தையும் செல்வாக்கையும் விடவும் எழுத்துத்துறை மூலம் அவர்பெற்ற செல்வாக்கே அதிகம். அதுவே சுஜாதா என்ற அடையாளம்.

ரங்கராஜன் என்ற பெயரையும் விட சுஜாதா என்ற பெயர் பெற்றிருக்கும் அடையாளத்தில் அதிகம் விமர்சனங்களிருந்தாலும் அதுவே இப்பொழுது மிஞ்சியுள்ளது. அதுவே இப்போது இந்தக்குறிப்பை எழுதும்படியான தகுதியையும் நிலையையும் உருவாக்கியுள்ளது.

சுஜாதா ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவது, அதிகமாக எழுதுவது என்பது தமிழில் மிகக் குறைவு. ஒரு காலத்தில் அதிகமாக ஜெயகாந்தன் எழுதினார். ஆனால் அவர் பின்னாளில் எழுதுவதையே நிறுத்திக் கொண்டார். சுந்தர ராமசாமி போன்றோர் இநுதி வரையும் எழுதியிருந்தாலும் இடையில் குறிப்பிட்டகாலம் எழுதுவதை நிறுத்தியிருந்தவர்கள். நகுலன் போன்றோர் இதில் சற்று விதிவிலக்கு. ஆனால் அவர்கள் எப்போதும் வெகுசனத்தளத்துக்கு வராதவர்கள். அதில் அக்கறையுமற்றவர்கள். இவ்வாறான நிலையில் சுஜாதா முக்கியமானவர்.

சுஜாதாவின் எழுத்துகள் முற்றிலும் சீரியஸானவை என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக அவரை எந்தச்சிற்றிதழும் தங்களுடைய எழுத்தாளராக ஏற்றுக் கொண்டதில்லை. சிற்றிதழ்ப்பண்பாட்டிலுள்ள எதிர்ப்புக்குணம் இதற்குப்பிரதான காரணம் என்கிறார் ஜெயமோகன். ஆனால் சுஜாதாவின் கணிசமான கதைகளும் அவருடைய எழுத்தின் விளைவான பல விசயங்களும் தமிழ்ப்பரப்பில் முக்கியமான இடத்துக்குரியது.

மிகச் சிறந்த தமிழ்ச்சிறுகதைகளில் சுஜாதாவின் சிறுகதைகள் சிலவற்றுக்கு நிச்சயம் முக்கியமான இடமுண்டு. அதைப்போல அறிவியற் கதைகளிலும் சுஜாதாவே தமிழில் முன்னோடியாக உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான அறிவியற் கதைகளை எழுதியிருந்தாலும் அவற்றிற் பல அறிவியல் விதிகளுக்கு பொருந்தாத மிகு கற்பனைக்கதைகள் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னதான் இருந்தாலும் சுஜாதாவே தமிழில் அறிவியற் கதைகளின் முன்னோடியாக நமக்கு உள்ளார். அதைப்போல அறிவியல் விசயங்களை இலகு படுத்தி பெருவாரியான தமிழர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர் அவர்தான். இதற்கு அவர் எப்போதும் பெரும் ஊடகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுதான் காரணம். வணிக ஊடகங்களில் அதிகம் எழுதியதால் வியாபார ரீதியான குறியே எப்போதும் அவருடையது என்று ஆதாரப்படுத்துவோரும் உண்டு. இந்தக்குற்றச்சாட்டில் நியாயமுமுண்டு.

ஆனால் வணிக இதழ்களினூடாக அவர் பல விசயங்களையும் பெருவாரியான மக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார் என்பதையும் மறுத்து விட முடியாது. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, நகுலன், பிரமிள், அம்பை போன்ற தமிழின் முக்கிய படைப்பாளிகளைப்பற்றி பெருவாரியான சனங்கள் அறியக்கூடிய அறிமுகங்களை அவர் தன்னுடைய எழுத்தின் மூலம் செய்திருக்கிறார். அதைப்போல அவர் இலங்கை நிலவரங்களையும் ஈழப்படைப்புகளையும் தெரியப்படுத்தி வந்திருக்கிகறார்.

குறிப்பாக யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதையொட்டிய பதிவாக ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையை எழுதி லட்சக்கணக்கான தமிழர்களிடம் அந்தக் கொடுமையான துன்பியல் நிகழ்வை தெரியப்படத்தினார். அவ்வாறு பின்னர் வெளிவந்து கொண்டிருந்த ஈழத்தின் முக்கிய மான புத்தகங்கள் படைப்புகளை எல்லாம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் ஈழப்போராட்டம் பற்றிய எந்த விதமமான அபிப்பிராயத்தையும் அவர் எப்போதும் நெரடியாகச் சொன்னதில்லை என்ற வொல்வோரும் உண்டு.

ஈழப்போராட்டம் பற்றி மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் எதனைப்பற்றியும் எந்தவிதமான முடிந்த முடிவுகளையும் சொல்லும் இயல்பை அவர் ஒரு போதும் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தின் தலித் விவகாரங்களைப்பற்றிய பார்வைகளையோ பெரியாரியம் பற்றிய கரத்துகளையோ தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்த பகுத்தறிவுவாதத்தைப்பற்றியோ சுஜாதா எப்போதுமே எதுவும் கூறியதில்லை.

அவர் தன்னுடைய பயணப்பாதையை வேறொரு வகையில் வைத்துக் கொண்டார். எல்லாவற்றைப்பற்றியும் பேசுவார். ஆனால் எதிலும் சிக்குப்படாமல் பேசும் ஒரு உத்தியை அவர் பின்பற்றினார். அவருடைய இந்தக்குணம் பற்றி பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தபோதும் அவர் அவற்றின் வலைகளில் வீழவில்லை.

தமிழகத்தின் அரசியலும் பண்பாட்டு நடவடிக்கைகளும் கேளிக்கை மயப்பட்டுக் கொண்டு போவதை தன்னுடைய எழுத்துகளில் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் தெரிவித்துவந்தாரே யொழிய அவற்றுக்கெதிரான விமர்சனங்களை அவர் வெளிப்படையாக வைத்ததில்லை. இதற்கான காரணம் அவர் வெகுசனத்தளத்திலான வணிக ஊடகங்களில் இயங்கியது. அடுத்தது அவர் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளின் உருவாக்கிகளான அதே ஊடகங்களில் சிறபை;பட்டிருந்தது. அல்லது அவற்றில் அவர் தங்கியிருந்தது.

குறிப்பாக சுஜாதா இயங்கிய சினிமா என்பது இதற்க நல்ல உதாரணம். 1977 காலப்பகுதியில் கமலஹாசன் ரஜனிகாந்த நடித்த கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திற்கு திரைக்கதை வசனத்தை எழுதியதிலிருந்து இதுவரையில் ஏறக்குறைய முப்பதுக்கு மேலான படங்களுக்கு திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார் சுஜாதா. இறுதியில் ரஜனிகாந்தின் சிவாஜி படத்திற்கான திரைக்கதையை எழுதியிருந்தார். இப்போது சங்கரின் ரோபோ என்ற புதிய படத்துக்கும் அவரே திiரைக்கதை வசனத்தை எழுதுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தன்னுடைய திரைக்கதை வசனம் எழுதும் அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர் திரைக்கதை என்றால் என்ன என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுமிருந்தார்.

இதைப்போல சுஜாதா கைவைக்காத துறைகளே எழுத்தில் இல்லை. மாணவர்கள், இளைஞர்களை மையமாக வைத்து அவர் பல அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் பிரசுரமாக வெளிவந்த ஏன், எதற்கு எப்படி என்ற புத்தகம் இதில் முக்கியமானது. கேள்வி பதில் மூலம் அறிவியல் ரீதியாக பல விசயங்களை இதில் அவர் பேசியிருக்கிறார். அவருடைய பகுத்தறிவுப்பார்வை என்பது எதையும் அறிவியல் விளக்கத்துக்கு உட்படுத்தும் கல்வி சார்ந்த நடவடிக்கையாக அமைந்தது. இது தவிர பல நாவல்கள் துப்பறியும் நாவல்களாகவும் அறிவியல் கதைகளாகவும் நகைச்சுவைக்கதைகளாகவும் அமைந்தவை.

இந்த எழுத்துகள் அதிகம் ஆழமான வாசிப்புக்குரியவை இல்லை என்ற போதும் இவற்றில் சசில முக்கியமானவை. குறிப்பாக சிறிரங்கத்துக் கதைகள், சுஜாதாவின் தேர்ந்த சிறுகதைகள் மற்றும் அறிவியற் கதைகள் என்பவை இதில் உண்டு.

பொதுவாக சுஜாதா எப்போதும் தன்னை தமிழின் அதிகார, வெகுஜன, பிரபல சக்திகளுடன் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டதுதான் அவரை ஆழமான படைப்பாளியாக உணர முடியாமற் போய்விட்டதாக இன்னொரு இடத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். படைப்பாளிக்குரிய கலகத்தனத்துக்கு இந்த அதிகார வெகுஜன பிரபலத்தளம் ஒரு போதும் விட்டுக் கொடாது. சுஜாதா நல்ல எழுத்துகளை, நல்ல இசையை, தரமான ஓவியங்களை, நல்ல சினிமாவை, நல்ல இலக்கியத்தை அடையாளம் கண்டவர். அவற்றை தெரிந்தவர். அவற்றை நோக்கி தமிழ்ச்சமூகம் நகரவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் நடைமுறையில் முடிவில்லாத சமரசங்களுக்கு உட்பட்டவர். எல்லாவற்றுக்கும் ஏதொ வகையில் ஒத்தோடியவர்.

அவருடைய இந்த இயல்பு அவரை வணிகத்துக்கும் சீரியஸ_க்குமிடையில் முடிவில்லாத அளவில் அலைத்துக் கொண்டிருந்தது. அவர் இதிலா அதிலா என்று அடையாளம் காண்பது வரையில் இந்தநிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சுஜாதா கணையாழியில் எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அவர் கடந்த காலங்களில் நவீன இலக்கிய நூல் வெளியீடுகளில் பங்கேற்றிருக்கிறார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடத்தில் நட்பையும் அறிமுகத்தையும் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துநடை தமிழில் ஏற்படுத்திய தாக்கமே. எளிமையான புதிய சாதாரண சொற்கiயும் தெறித்துச் செல்லும் வேகமுடைய எழுத்து நடை சுஜாதாவினுடையது. இந்த நடை அவருக்குப்பின் வந்த பெரும்பாலான படைப்பாளிகளிடததில் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது.

இது அவரை புதிய தலைமுறைப்படைப்பாளிகளுடன் இணைவு கொள்ள வைத்தது. அத்துடன் அவர் உலகின் எந்த விவகாரத்தையம் தமிழுக்கு உடனே கொண்டு வந்து விடும் விரைவைக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். சுஜாதாவுக்கு நவீன இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டளவக்கு சங்க இலக்கியத்திலும் பரிச்சயமும் ஈடுபாடும் இருந்தது. அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் சங்கப்பாடல்கள் எனப்பலவற்றை எளிமையாக விளங்கிக் கொள்வதற்கான உரைகளையும் மொழிதலையும் செய்திருக்கிறார்.

இவ்வாறு எல்லா நிலையிலும் ஒரு வினோதமான கலவையாக உருவாகியிருந்த சுஜாதா தன்னுடைய எழுபத்தோராவது வயதில் காலமாகிவிட்டார். அவருடைய மறைவுக்குப்பிறகு அவரைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ செய்தி வெளியிடாத ஊடகங்களோ தமிழில் இருக்கவில்லை.

அவருடைய இறுதி நிகழ்வில் குழு, கட்சி பேதங்களில்லாமல் எல்லாத்தரப்பினரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்ததையும் சிவாஜி பட வெற்றி விழாவின்போது அவர் மேடையில் தனக்கு அந்த விழாவில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப்போல வெறித்தபடி இருந்த காட்சியும் இப்போதும் நினைவில் நிற்கின்றன. அவை சொல்லும் சேதிகளும் ஏராளம்.

-----------------------------------------------------------------