சில ஆண்டுகளுக்கு முன்பு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் மூலமாக பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ என்ற நாவல் வெளிவருகிறது என்ற அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்போது உள்ளுரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்ற பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே. புலிகளின் ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாக தேவையில்லாத ஒரு வம்பிலே போய் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று. ஆனால், அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழவில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியற் சூழலில் ‘புலி நகக்கொன்றை’ தப்பியது அபூர்வமே.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், காலச்சுவடுவுக்கும் புலிகளின் அபிமானிகளுக்கும் இடையில் ஒரு பனிப்போர் அல்லது உளவியற்போர் நீண்டகாலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலம் வன்னியிலேயே காலச்சுவடுவைப் பற்றி சொல்லப்பட்ட கதைகளும் உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்களும் இதற்கு ஆதாரம். ஒரு கட்டத்தில் காலச்சுவடுவுக்கு வன்னியில் தடைகூட விதிக்கப்பட்டது. என்ன செய்வது, காலத்தின் கோலம் அப்படி. இன்று கூட நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. இலங்கைக்கு வரும் இந்திய இதழ்களில் இலங்கை தொடர்பான விசயங்கள் இருப்பதில்லை. காலச்சுவட்டிலும் கூட. அவற்றை இங்குள்ள விநியோகஸ்தர்கள் கிழித்தெடுத்து விடுகிறார்கள். யுத்தகாலத்தின்போது பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் திரு. ஸ்ரீதரசிங் இலங்கை அரசியல் தொடர்பாக எழுதப்பட்டிருந்த ஒரு இந்திய இதழை தருவித்ததற்காக கொழும்பில் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்கின்றனர். ‘இன்னும் அந்த நிலைதான் உள்ளதா?’ என்று கேட்டால், ‘யார் உத்தரவாதம் தரமுடியும்? எதுக்கய்யா வீண் வம்பெல்லாம்?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள். ஏற்கனவே நடந்த ‘கசப்பு’களை நினைவு கூருகிறார்கள்.
ஆனால், ஒரு காலம் காலச்சுவடுவுக்கு வன்னியில் வாசகர் வட்டங்களே இருந்தன. அதுவும் நெருக்கடிக் காலத்தில். யுத்தகாலத்தில். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றாகிவிட்டது இன்று.
யாழ்ப்பாணத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு, 1996, 97, 98, 99 காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் வன்னியைக் கைப்பற்றுவதற்காகப் போரிட்டுக் கொண்டிருந்தது. சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாரான அனுருத்த ரத்வத்த துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொண்டு முழுஅளவிலான யுத்தத்தை உக்கரமாக முன்னெடுத்தார். ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆரம்பித்து வைத்த சனங்களின் மீதான படையெடுப்புக் கலாச்சாரத்தை அனுருத் ரத்வத்த தொடர்ந்தார்.
‘ஜெயசிக்குறு’ என்ற பெரும் படைநடவடிக்கை வன்னியை ஊடறுத்து நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை அது. சனங்களில் பெரும்பாலானவர்கள் அகதிகளாகவே மாறிவிட்டிருந்தனர். அது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். பொருளாதாரத் தடை, தொடர்பாடற் தடை, போக்குவரத்துத் தடை, இராணுவ அழுத்தம் என்று உச்சநெருக்கடிகள் அமூலில் இருந்தன. கடிதங்களைத் தவிர, வேறு தொடர்பாடல் வசதிகளுக்கு இடமில்லை. ஆனால், கடிதங்களுக்கும் சோதனை. வன்னியில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அத்தனையும் கிழித்துப் பரிசோதிக்கப்பட்டே வெளியில் அனுப்பப்பட்டன. அவ்வாறே வன்னிக்கு வரும் கடிதங்களும் பொதிகளும் பிரித்து மேயப்பட்டிருக்கும். இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையால் சிலவேளைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாகும் ஒரு கடிதம் அல்லது ஒரு பொதி வந்து சேர்வதற்கு. வவுனியா, திருகோணமலை, கொழும்பு என்ற இடங்களில் இருந்த தபால் நிலையங்களில் கடிதப்பொதிகள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் உறங்கின. நிர்வாக நடவடிக்கைகள், சட்டம் எல்லாமே யுத்தத்திற்குச் சேவகம் செய்தன.
இந்த நிலையில்தான் காலச்சுவடு இதழும் வன்னிக்கு வந்தது. காலச்சுவடுவுக்கான கடிதங்களும் வன்னியில் இருந்து சென்றன. இத்தகைய ஒரு தொடர்பாடல் நிலையிற்தான் ‘காலச்சுவடுவின் வாசகர் வட்டமும்’ வன்னியில் இயங்கியது.
1996 யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னிக்கு வந்திருந்த அ.யேசுராசா (அலை இதழின் ஆசிரியர்) சில மாதங்களின் பிறகு படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் மண்டபம் முகாமில் இருந்து கொண்டு ‘காலச்சுவடு ‘இதழை வாங்கி வன்னியில் இருந்த எமக்கு அனுப்பியிருந்தார். வன்னிக்கு வந்த அந்த ஒரேயொரு இதழை வன்னியில் இருந்த பலரும் மாறிமாறி வாசித்தோம். அந்த இதழில், ஈழத்திலிருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சென்றிருந்த ஒரு சிறுவனின் கடிதமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது மு.புஸ்பராஜனின் மகன் எழுதிய கடிதம் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அந்தக் கடிதத்தில் அன்றைய ஈழநிலைமை பதியப்பட்டிருந்தது.
ஈழநிலைமையைப் பற்றி அதிகமாக வெளியே தெரியாத அல்லது அதிகம் பேசப்படாத நிலையில் ‘காலச்சுவடு’ வெளியிட்டிருந்த இந்தக் கடிதம் வன்னியிலிருந்த பலருக்கும் ஆச்சரியத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து காலச்சுவடு இதழ்களை யேசுராசா அனுப்பி வந்தார். தாமதமாகி வந்தாலும் பலராலும் அவை வாசிக்கப்பட்டன. வந்த இதழ்களில் சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், சேரன் போன்றோருடைய நேர்காணல்கள் மேலும் கவனத்தை ஏற்படுத்தின. கூடவே ஈழக்கடிதங்கள், கவிதைகள் போன்றவையும். நெருக்கடிக்குள் சிக்கியிருந்த ஈழத்தின் குரல்களைக் கவனமெடுத்திருந்தது காலச்சுவடு. அந்த உணர்கையுடன் பல விசயங்கள் பிரசுரமாகின. முக்கியமாக அப்போது பிரசுரமாகியிருந்த ‘பத்மவியூகம்’ என்ற ஜெயமோகனின் குறுநாவல் கூடுதல் கவனிப்பையும் கூடுதல் வாசிப்பையும் பெற்றிருந்தது. இந்தக் கதை மகாபாரதக் கதையின் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் அப்படியே ஈழநிலவரத்துடன், ஈழயுத்தத்துடன் பொருந்தியது. ஆகவே, அநேகமாக எல்லாவற்றிலும் ஈழநிலவரமே பேசப்பட்டது.
அந்த நாட்களில் ‘வெரித்தாஸ் தமிழ்ப்பணி’ என்ற பிலிப்பைன்ஸைத் தளமாகக் கொண்ட வானொலியும் ஈழ நிலைமைகளில் கூடிய கவனத்தைச் செலுத்தியமை குறிப்பிடக் கூடிய ஒன்று. அப்பொழுது அந்த வானொலியின் இயக்குநராக ஜெகத் கஸ்பார் பணியாற்றினார். வன்னிச் சனங்கள் வெரித்தாஸ_க்கும் காலச்சுவடுவுக்கும் கடிதங்களை எழுதினர். காலச்சுவடுவை வாசிப்போர் தங்களுடைய அபிப்பிராயங்களை விமர்சனமாகவும் விவாதங்களாகவும் கோரிக்கைகளாகவும் எழுதினர். குறிப்பாக அன்று வன்னியில் இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் இயங்கியோர்.
இதன் அடுத்த கட்டமாக, காலச்சுவடுவை தொடர்ந்து வாசிக்கவும் அதனுடைய கவனத்தை ஈழ நிலைமைகளின் மீது குவித்து வைத்திருப்பதற்காகவும் அதற்கு வாசகர் வட்டங்களை உருவாக்கலாம் என்று சிந்திக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் தமிழகத்திலும் காலச்சுவடுவுக்கான வாசகர் வட்டங்கள் உருவாகியிருந்தன. இது ஈழத்தில் வாசகர் வட்டங்கள் உருவாகுவதற்கான ஒரு எண்ணக்கருவை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி காலச்சுவடுவுக்கான வாசகர் வட்டக் கூட்டம் வன்னியில் - அக்கராயனுக்கு அண்மித்துள்ள ஸ்கந்தபுரம் என்ற இடத்தில் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் வீட்டில் நடந்தது. அப்பொழுது வீடு என்று சொல்லக்கூடியமாதிரி வசதியான அளவில் யாருக்கும் இருப்பிடங்கள் இருக்கவில்லை. தாமரைச்செல்வியும் எங்களைப் போல இடம்பெயர்ந்து ஒரு தற்காலிக கொட்டகையை அமைத்திருந்தார். அந்தக் கொட்டகையின் முன்னிருந்த மாமரநிழலில் இந்த வாசகர் வட்டக்கூட்டம் நடந்தது. பிறகு நடந்த சந்திப்புகளும் பெரும்பாலும் தாமரைச் செல்வியின் முற்றத்தில்தான்.
இந்தக் கூட்டங்களுக்கு அமரதாஸ், பெருமாள் கணேசன், ப.தயாளன், நா.யோகேந்திரநாதன், தாமரைச்செல்வி, கந்தசாமி, குமரவேள் (புவனசிங்காரன்), தி.தவபாலன், அன்ரன் அன்பழகன், அநாமிகன், கிஸ்கார்ட், சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) விஜயசேகரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். காலச்சுவடுவில் வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், கதைகள், கவிதைகள், காலச்சுவடுவின் ஆசிரிய தலையங்கள் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. சிலர் காலச்சுவடுவுக்குக் கடிதங்கள் கூட எழுதினர். இந்த வாசகர் வட்டத்தின் பதிவுகளும் அந்த நாட்களில் காலச்சுவடுவில் பிரசுரமாகியது.
இதைத் தொடர்ந்து காலச்சுவடுவின் கூடுதல் பிரதிகளைப் பெறும் முயற்சிகள் நடந்தன. கூடவே காலச்சுவடு வெளியீட்டு நூல்களையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய சூழலில் வாசிப்பதற்கான புத்தகங்களோ, இதழ்களோ இல்லை அல்லது மிகக் குறைவு என்ற நிலையே வன்னியில் இருந்தது. வானொலி தவிர்ந்த பிற ஊடகங்கள் எதுவும் கிடையாது. வானொலியை இயக்குவதற்கான மின்கலங்களுக்கும் பெரும் பிரச்சினை. அதனால் சைக்கிளில் இயங்கும் மின்னுற்பத்திச் சாதனத்தைப் பயன்படுத்தியே பலரும் வானொலியைக் கேட்டனர். கொழும்பிலிருந்து வரும் வீரகேசரி வாராந்தப் பத்திரிகைகூட ஒரு வாரம் அல்லது சில வாரங்கள் பிந்தியே வந்து சேரும். இந்த நிலையில் காலச்சுவடுவும் அதனுடைய வெளியீடுகளும் பெரிய கொடையாக இருந்தன.
காலச்சுவடு நிறுவனம் பணத்தை முக்கியப்படுத்தாமல் - பணத்தையே பெற்றுக்கொள்ளாமல் பிரதிகளை அனுப்பியது. ‘சந்தர்ப்பம் கிடைக்கும்போது பணத்தைத் தாருங்கள்’ என்ற எண்ணப்பாட்டுடன் காலச்சுவடுவின் நிர்வாக ஆசிரியர் கண்ணன் தொடர்ந்து வெளியீடுகளை அனுப்பிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கிளிநொச்சி - திருவையாறு முகவரிக்கு வந்த பொதிகள், பின்னர் அக்கராயன்குளம் முகவரிக்கு வந்தன. அந்தப் பிரதிகளை நாம் நண்பர்களுக்கும் வாசிப்பில் ஆர்வமுள்ள போராளிகளுக்கும் கொடுத்தோம். பெரும்பாலும் பெண்போராளிகளே புத்தகங்களை அதிகமாக விரும்பி வாங்குவர். தற்போது புனர்வாழ்வு முகாமிலிருக்கும் தமிழினி, காலச்சுவடுவின் வாசகரில் முக்கியமானவர். இன்னொருவர் மருதம். இவர் பெண் போராளிகளின் சார்பான வெளியீட்டு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். மற்றவர் சுதாமதி. இவரும் பெண்களின் சார்பாக வெளியிடப்படும் இதழொன்றின் ஆசிரியப்பொறுப்பில் இருந்தவர். இன்னொருவர் மலைமகள். பெண்போராளிகளில் இவர் முதன்மையான எழுத்தாளர். இப்படிப் பலர் இருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு ‘பத்தவியூகம்’ பிடித்திருந்தது. அன்றைய சூழலில் மிகக் கூடுதலான ஈழ வாசகர்களை ‘பத்மவியூகம்’ ஈர்த்தது.
காலச்சுவடுவின் இந்தப் பரவலாக்கம் ஆச்சரியமளிக்கும் வகையில் பெருகிக்கொண்டேயிருந்தது. இதழ்களைப் பெறுவதிலும் இதழ்கள் தொடர்பான அபிப்பிராயங்களை ஆசிரியபீடத்துக்குத் தெரிவிப்பதிலும் தாமதங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் கவனத்தில் எடுத்து, நிலைமையை விளங்கிக்கொண்டு கண்ணன் செயற்பட்டார். அந்த நாட்களில் மனுஷ்யபுத்திரன் ஆசிரியராகப் பணியாற்றினார் என நினைக்கிறேன். அவரும் எனக்குக் காலச்சுவடுவின் சார்பாகக் கடிதங்கள் எழுதியிருந்தார்.
காலச்சுவடுவின் இந்த விரிவாக்கம் வன்னியில் இருந்த சிலருக்கு விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கவில்லை. இலக்கியக்குழு ஒன்றின் பெயரோடு அவர்கள் வன்னியில் இயங்கினர். அவர்கள் காலச்சுவடுவைப் பற்றி சந்தேகம் கிளப்பினார்கள். ‘காலச்சுவட்டின் அரசியல், அதனுடைய நோக்கம் எல்லாம் சந்தேகிக்கப்படவேண்டியது, கவனிக்கப்பட வேண்டியது, கண்காணிக்கப்பட வேண்டியது...’ என்று அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையினருக்கும் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கும் சுட்டிக் காட்டிக் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக ‘காலச்சுவடுவை புலிகளின் முன்னணிப்போராளிகளே வாங்கிப் படிக்கிறார்கள். கூட்டங்களிலும் மேடைகளிலும் அதை முன்னுதாரணப்படுத்துகிறார்கள். காலச்சுவடுவில் வருகின்ற சில விசயங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடும்?’ என்று இவர்கள் கேள்வி எழுப்பி எச்சரித்தனர்.
இதேவேளை காலச்சுவடுவில் வெளியாகிக்கொண்டிருந்த வன்னிக் கடிதங்களும் பதிவுகளும் தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோருக்கும் கசப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் ஈழ நிலைவரத்தைப் பற்றி முழுமையான தகவல்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தனர். (இப்போதும் அவர்களுக்குப் பகுதித் தகவல்களே கிடைக்கின்றன) ஈழநிலைமையைக் குறித்து உரிய முறையில் செயற்படுவதற்கான வழிமுறைகளின்றியும் இருந்தனர். அத்துடன், தங்களையும் மீறி களத்திலிருந்து (ஈழத்திலிருந்து) சுடச்சுட பதிவுகளும் குரல்களும் காலச்சுவடுவில் வருகின்றன. இதெல்லாம் அவர்களுடைய ‘செயற்கை அடையாள’த்துக்கும் அவ்வாறான அரசியலுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆகவே, அவர்கள் காலச்சுவடுவைப் பற்றி புலிகளின் புலம்பெயர் மையங்களுக்கும் ஈழத்தில் இருந்த தலைமைக்கும் எச்சரிக்கை நோட்டிஸை விடுத்தனர். ஏற்கனவே அவர்களுக்கும் காலச்சுவடுவுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளும் அபிப்பிராய பேதங்களும் அடிப்படையாக அமைந்தது இன்னொரு காரணம். அவர்கள் புலிகளிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள், ‘காலச்சுவடு ஒரு பிராமணியப் பத்திரிகை. அது ஈழப்போராட்டத்துக்கு எதிரான சக்திகளின் இதழ். ஈழப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை எடுக்காதவர்கள் காலச்சுவடுவை ஈழத்திற்குள் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக ஈழத்தில் நுழைந்து தகவல்களை எடுத்து தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவர்கள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குபவர்கள். தமிழகத்தில் செயற்படும் ஈழஆதரவுச் சக்திகளை மதிக்காதவர்கள். இப்படியானவர்களின் இதழை எந்தக் காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது. காலச்சுவடுவுக்கு வன்னியில் - புலிகளின் கோட்டையில் இப்படியான ஒரு ஆதரவுத்தளம் இருப்பது என்பது ஈழப்போராட்டத்துக்குத் தோண்டும் புதைகுழியே’ என்பது வரையில் பேசினார்கள்.
இந்தத் தகவலை அப்பொழுது தமிழகத்தில் தங்கியிருந்த ஈழத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிக்கு அனுப்பித் தங்களுடைய ‘தேசியப் பணி’யை ஆற்றினர்.
இந்த மாதிரி பல திசைகளிலும் இருந்து எழுந்த எதிர்ப்பலைகளால் புலிகளின் தலைமை குழம்பிப்போனது. எனவே அது காலச்சுவடுவைக் குறித்து அவதானிக்கத் தொடங்கியது. இதனையடுத்து, உடனடியாகவே புலிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தவில்லை. அந்த நிலைப்பாட்டின்படி காலச்சுவடுவைப் பகிரங்கமாக எதிர்க்காமல், ரகசியமான முறையில், அமைதியாக அதை நிராகரிப்பது அல்லது வன்னியில் அதனுடைய செல்வாக்கைத் தணிப்பது என்பது. இந்த நிலைப்பாட்டின்படி அவர்கள் காலச்சுவடு எப்படி வன்னிக்கு வருகிறது? யார் அதனுடைய ஏற்பாட்டாளர்கள்? அதன் தொடர்பாடல் முறை என்ன? என்றெல்லாம் அறிய முற்பட்டனர். பொதுவாகவே எந்த விசயத்திலும் கூரிய - கூடிய கவனத்தை வைத்திருக்கும் புலிகளுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான சங்கதி. அவர்கள் வழியை சுலபமாகக் கண்டு பிடித்தனர்.
வன்னியில் காலச்சுவடு தனிப்பட்ட ரீதியாகவும் தொகையாகவும் வந்து கொண்டிருந்தது. தொகையாக வருவது எனக்கே. ஏறக்குறைய இருபத்தைந்து இதழ்களுக்கு மேல். அத்துடன் வாசகர் வட்டக் கூட்டத்தையும் நாங்களே நடத்தியிருந்தோம். இதெல்லாம் வெளிப்படையான நடவடிக்கைகள்தான். ஆனால், சந்தேகம் என்று வந்து விட்டால் எல்லாமே புதிர்த்தன்மையைப் பெற்றுவிடும். என்னையும் காலச்சுவடுவுடன் நெருக்கமாக அல்லது தொடர்ச்சியாக இருப்போரைப் பற்றியும் அவர்கள் தகவலைத் திரட்டினர். இப்படித் தகவலைத் திரட்டியபோது எவரின் மீதும் உடனடியாகவோ, வெளிப்படையாகவோ நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர்களுக்குப் புரிந்திருக்க வேணும். எனவே இதழ்களை விநியோகிக்கும் என்னைக் கட்டுப்படுத்த வேணும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள். இதற்கும் அவர்கள் ஒரு வழியை அல்லது உபாயத்தைக் கண்டு பிடித்தனர். ஆனால், இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வழமையைப்போல செயற்பட்டுக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னிடம் சொன்னார், ‘கருணா, காலச்சுவடுவுக்கும் உனக்குமுள்ள தொடர்பைப் பற்றி என்னட்டை வந்து பொட்டம்மானின் ஆட்கள் விசாரிச்சாங்கள். காலச்சுவடுவைப் பற்றியும் கேட்கிறாங்கள். அது இஞ்ச (ஈழத்துக்கு) எப்பிடி வருகிது? யார் அதை இஞ்ச எடுத்துக்குடுக்கிறது? எண்டு கேட்டாங்கள். தேவையில்லாமல் உன்ரை பேரும் அடிபடுது. உனக்கேன் தேவையில்லாத பிரச்சினை?’ என்று.
இதைக் கேட்டபோது எனக்கு உடனே சிரிப்பு வந்தது. பிறகு கோபம். இறுதியில் பயம். இதென்ன கொடுமை? என்று நினைத்தேன். காலச்சுவடுவின் மூலமாக கணிசமான அளவுக்கு ஈழநிலவரமும் சனங்களின் உணர்வும் வெளிப்படுத்தப்படுகிறது. இதை விளங்கிக்கொள்ளாமல் வேறுவிதமாகச் சிந்திக்கிறார்களே! என்ற கவலை வந்தது. ஆனால், எதுவும் செய்ய முடியாது. விளக்க முற்படலாம். விசயத்தைத் தெளிவாக்கலாம். ஆனால், அது மேலும் சந்தேகங்களைக் கிளப்பும். இறுதில் அதுவே தேவையில்லாத நெருக்கடியில் கொண்டு போய்விடும்.
உண்மையில் காலச்சுவடுவுடனான உறவும் தொடர்பும் பகிரங்கமானது. அதை விநியோகிக்கும் நடவடிக்கையும் இதழ் வருவதும் கூட வெளிப்படையானது. இதழில் நாங்கள் விவாதித்த, பதிவிட்ட விசயங்கள் கூட புலிகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாதவை. மறுவளத்தில் அவை அவர்களுக்குச் சாதமானவைகூட. மட்டுமல்ல, மூடுண்ட நிலையில் இருந்த ஈழநிலவரத்தைப் பற்றி நாங்கள் வெளிச்சூழலுக்கு சொல்லியிருக்கிறோம். வன்னியின் அவலத்தையும் மனித உரிமைகள் மீறப்படும் நிலையையும் பதிவிட்டிருக்கிறோம். காலச்சுவடுவில் முன்வைக்கப்படும் வெளிச் சூழலில் உள்ளோரின் அபிப்பிராயங்கள், அவர்களுடைய செயற்பாடுகள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகளைப் பற்றியும் எழுதியிருக்கிறோம். சில கடிதங்களை எங்களுடைய நிலைமை மற்றும் பாதுகாப்புக் கருதி காலச்சுவடு வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவற்றிற் குறிப்பிட்ட விசயங்களை அது கவனத்திற்கொண்டது. அதைப்போல பலருடைய பெயர்களை அது தவிர்த்திருந்தது. ஈழ நிரவரம் பொறுத்து ஏறக்குறைய ஒருவகையில் காலச்சுவடுவை நாம் நெறிப்படுத்தினோம் எனலாம். ஆனால், வன்னியில் இருந்த யாரும் புலிகளைப் பற்றித் தவறாக – முரண்பாடுகளோ, மாற்று அபிப்பிராயங்களோ இருந்தபோதும் - எழுதியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. (இந்த நம்பிக்கை இன்றுவரை தளர்ந்ததில்லை).
ஆனால், இதையெல்லாம் அவர்களுக்கு எப்படிச் சொல்வது? அல்லது இதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேணுமா? எனவே நான் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. நிலைமையை விளங்கிக் கொண்டு தணிந்தேன். காலச்சுவடுவுக்கோ கண்ணனுக்கோ இதைப்பற்றி எதுவும் கூறவும் இல்லை. தொடர்பாடற்பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சிக்கலுக்குரிய விசயங்களைப் பற்றிக் கதைப்பதை விட கதைக்காமல் விடுவதே சிறந்தது. எனவே நான் சிறந்த முடிவையே எடுத்தேன். இந்த முடிவு வெளியே இருந்து பார்ப்போருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்திருந்தேன். குறிப்பாகக் கண்ணனுக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும்? நிலைமையைக் கண்ணன் விளங்கிக்கொள்ளக்கூடும் என்ற ஒரு நம்பிக்கையோடு இருப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பொதுவாக – வழமையான சில கடிதங்களோடு காலச்சுவடுவுடனான தொடர்புகளைக் குறைத்து நிறுத்தினேன். அப்படியே மௌனக்காலம் உருவாகியது.
காலச்சுவடுவுடனான உறவு தணிந்து விட்டது. சில காலங்களின் பிறகு கண்ணனும் காலச்சுவடு இதழ்களை அனுப்புவதை நிறுத்திவிட்டார். அவருக்கு வேறு தெரிவுகள், வேறு வழிகள் உடனடியாக இல்லாதிருந்திருக்கலாம். அல்லது நிலைமையைப் புரிந்திருக்கலாம். என்றபோதும் வன்னிக்குக் காலச்சுவடு வந்தது. ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும். முக்கியமாக புலனாய்வுத்துறையினருக்கு. சிறி, புகழேந்தி, தூயமணி, மாதவன் மாஸ்ரர், நாவலன் என்போருக்கு. ஆனால், அவர்கள் வேறு ஆட்களின் முகவரி வழியாக அவற்றைப் பெற்றனர். அதில் ஒரு முகவரி முல்லைக்கோணேஸினுடையது. மாதாந்தம் ஒரு இதழ் முல்லைக்கோணேஸ_க்கு வரும். அவர் அந்த இதழை முதலில் படித்து விடுவார். கூடவே நானும் படித்து விடுவேன். ஆனால், அதைப் பற்றி நாம் வெளியே காட்டிக் கொள்வதில்லை. இதழைப் பக்குவமாக உரியதரப்பிடம் கோணேஸ் சேர்த்து விடுவார்.
காலச்சுவடுவில் வெளியாகும் சில கட்டுரைகளையும் அதனுடைய ஆசிரியர் தலையங்கங்களையும் போட்டோப் பிரதி எடுத்து புலிகள் உட்சுற்றில் விட்டனர். இந்த உட்சுற்று பெரும்பாலும் போராளிகளுக்கானது. அதிலும் பொறுப்பாளர்களுக்குரியது. அப்படி வந்த உட்சுற்றொன்றை எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் நானும் பார்த்தேன். அப்போதும் எனக்குச் சிரிப்பே வந்தது. ஒரு இதழைப் பகிரங்கமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால், அந்த இதழின் உள்ளடக்கங்களை உட்சுற்றில் விட்டு ரகசியமாகப் படிக்கிறார்கள். இது என்ன மாயமோ!
காலச்சுவடு பற்றிய அபிப்பிராயங்கள் பகிரங்கமாகவே பேசப்பட்டன. வன்னியில் காலச்சுவட்டை எதிர்த்த அணி, அதற்கு விதிக்கப்பட்டிருந்த அறிவிக்கப்படாத தடையின் மூலமாக அகமகிழ்ந்தது. அவர்கள் என்னையும் காலச்சுவடுவின் வாசகர் வட்டத்தில் தொடர்பானவர்களையும் காலச்சுவடுவுடன் தொடர்பு படுத்தி ‘ஒரு மாதிரி’யாகப் பேசும் பட்டியலில் இணைத்தனர். அவர்கள் ஒரு போதும் உண்மையை நோக்கி வரப்போவதில்லை. உண்மைகளுக்கும் நன்மைகளுக்கும் எதிர்த்திசையில் சிந்தித்துக்கொண்டிருப்போரால் எப்படி யதார்த்தத்துக்கு நகரமுடியும்? பதிலாக எம்மை நிர்ப்பந்தித்துத் தங்களின் காலடியிற் பணிய நிந்தித்தனர்.
காலச்சுவடு தடைசெய்யப்பட்டது பெரிய விசயம் என்றும் இதன்மூலம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து ஈழப்போராட்டத்தைத் தாம் காப்பாற்றி விட்டதாகவும் அவர்கள் பாவனை பண்ணினர். ‘காலச்சுவடுவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை இயக்கம் கவனிக்கிறது’ என்ற கதையையும் பரப்பினர். இதன்மூலம் எங்களுடன் நட்பாக இருந்த பலர் மெல்ல ஒதுங்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இப்படி இருந்த நிலையில் திடீரென ஒரு மாற்றம். 2002 ரணில் - பிரபாகரன் உடன்படிக்கை ஏற்பட்டபோது நம்புவதற்கே கடினமான பல மாற்றங்கள் ஏற்பட்டன. வெளியே நின்றவர்கள் உள்ளே வந்தனர். உள்ளே நின்றவர்கள் வெளியே போனார்கள். பாதைகள் திறந்தன. பயணங்கள் நடந்தன. தடைகள் மென்தடைகளாகின. மென்தடைகள் காணாமற்போயின. காலச்சுவடு மீண்டும் வன்னிக்கு வந்தது. வன்னியெங்கும் புலிகள் நடத்திய ‘அறிவு அமுது’ என்ற புத்தகக்கடைகளில் காலச்சுவடு பகிரங்கமாக விற்கப்பட்டது. ஏறக்குறைய நூறு இதழ்களுக்கு மேல் ‘அறிவு அமுது’ வுக்கு வருகிறது என்றும் அவ்வளவுமே விற்று முடிகின்றன என்றும் அதன் விற்பனையாளர்கள் சொன்னார்கள். முன்பதிவு செய்து பலரும் காலச்சுவடுவை வாங்கினர். இந்த முன்பதிவாளர்களில் காலச்சுவடுவை வன்னியில் அனுமதிக்கக்கூடாது என்று சொன்ன தரப்பும் அடக்கம். இதையெல்லாம் பார்த்தபோது மீண்டும் எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது. அது ஒருபோதும் நன்மையைத் தராது. தீமையை, ஆபத்தையே தரும். உண்மையையும் நன்மையையும் தீமையாக, எதிர்ப்பாகக் காட்டிக்கொள்வதற்குத் தேர்ச்சியடைந்தவர்கள் இருக்கும் சூழலில் மௌனமே சிறந்த வழி. இப்போதும் நான் இந்தச் சிறந்த வழியையே தேர்ந்தேன்.
‘அறிவு அமுது’வில் ‘காலச்சுவடு’ மட்டும் அப்படிப் பகிரங்கமாக விற்பனையாகவில்லை. ‘காலச்சுவடு பதிப்பக’த்தின் புத்தகங்கள் தொடக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே தடைசெய்யப்பட்டிருந்த ‘சரிநிகர்’, ‘தினமுரசு’, ‘எக்ஸில்’, ‘உயிர் நிழல்’ எனப்பல இதழ்களும் விற்பனைசெய்யப்பட்டன. போததாக்குறைக்கு சேரன், ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, திருக்கோவில் கவியுவன், ஓட்டமாவடி அறபாத், சிவரமணி, செல்வி, கோவிந்தன் (புதியதோர் உலகம்) எனப்பலருடைய புத்தகங்களும் விற்கப்பட்டன.
இதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால், சிரிக்க முடியாது. ஆனாலும் ஒன்று, இப்போது நாங்கள் காலச்சுவடுவையோ பிற ஏடுகளையோ புத்தகங்களையோ துணிச்சலாக வாங்கிச் செல்ல முடியும். இது ஒரு வகையில் பெரிய வாய்ப்பு. வன்னியிலே புத்தகங்களோ சஞ்சிகைகளோ வாங்க முடியாத நிலையில் இருந்த எங்களுக்கு இந்த மாதிரி எங்கள் ஊர்களிலேயே இவற்றையெல்லாம் வாங்க முடிகிறது என்றால் சும்மாவா! பலரும் தங்கள் வசதிக்குத் தக்கபடி புத்தகங்களை வாங்கி அடுக்கினார்கள். சிலர் ஓடர் கொடுத்து வாங்கினார்கள். இப்படி வாங்கிக் கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் ஒரு நண்பர் ஒரு குண்டைத் தூக்கித் தலையில் போட்டார் - இல்லை இதயத்திற் போட்டார்.
‘...இப்படி எல்லாத்தையும் புலிகள் திறந்திருக்கிறார்களே! ஏன் தெரியுமா?’ என்று கேட்டார் அந்த நண்பர். ‘புதிய சூழல் உருவாகியிருக்கு. அதனால் எல்லாத்திலயும் மாற்றம் வந்திருக்கு. புத்தகங்களும் அப்படி, அந்த மாற்றத்தோடதான் வந்திருக்கு’ என்றேன்.
அவர் சிரித்தார். ‘உனக்கு விசயம் விளங்கேல்ல. அவர்கள் (புலிகள்) எல்லாத்தையும் கண்காணிக்கிறாங்கள். முழுசாகத் திறந்து விட்டிட்டு என்ன நடக்குது? யார்யாரெல்லாம் என்னவெல்லாம் செய்யினம் எண்டு பாக்கிறாங்கள். அறிவு அமுது கடையில வந்து ஆர் ஆர் என்னென்ன புத்தகங்களை வாங்கிறது எண்டு பார்த்து விவரம் எடுக்கிறாங்கள்’ என்றார் நண்பர். எனக்கு இப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால், சிரிப்பையும் மீறிக் கடுமையான யோசினை வந்தது. இந்த நண்பர் சொல்வது உண்மையாக இருக்குமா? அல்லது இது ஒரு புனைவா? திட்டமிட்ட புனைவா? இல்லையென்றால் தேவையற்ற சந்தேகமா? எப்படி இந்தக் கதை முளைத்தது? ஏன் முளைத்தது? ஒரு நோயைப் போல எல்லாவற்றுக்கும் அதீதமான காரணங்களையே சொல்லிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறோமா என்று எண்ணினேன். ஆனால் இதை நண்பருடன் விவாதிக்கவில்லை. அவருடைய கூற்றை நிராகரிக்கவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இரண்டுக்கும் சாத்தியங்கள் இருந்தன. பகிரங்கமாக எதையும் பேச, விவாதிக்க முடியாத நிலையில் அச்சமே தலைதூக்கியிருக்கும். மௌனமே கோலோச்சும். அவையே இங்கும் தலையைத் தூக்கிக்கோலோச்சின.
இப்படி இருக்கும்போது தமிழகத்தில் இருந்து ஈழ ஆதரவாளர் என்போர் ஒவ்வொருவராக வன்னிக்கு வந்தனர். வந்தவர்கள் என்னையும் சந்தித்தனர். அறிவு அமுதுவுக்கும் சென்றனர். அறிவு அமுதுவில் அவர்களை ஆகர்ஷிக்கும் விதமாக முன்னரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் எழுத்துகளைக் கொண்ட பலநூறு வகையான புத்தகங்கள். மேலும் விடியல், கிழக்கு பதிப்பக நூல்களும். அப்படியே கடையினுள் உலாத்திக் கொண்டு வந்தால், காலச்சுவடு, உயிர்நிழல், எக்ஸில் அது இது என்று எல்லாவகையிலுமான பல வெளியீடுகள். இதையெல்லாம் பார்த்த ஈழ ஆதரவாளர்களுக்கு தலைசுற்றியது. என்ன நடக்கிறது? என்று பதறியடித்துக்கொண்டு தங்களின் தொடர்பு வழிகளால், புலிகளின் மேலிடங்களுக்கு முறையிட்டார்கள். ஆனால், மேலிடம் இதையெல்லாம் பொருட்படுத்தியமாதிரி இல்லை. ‘எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே, கண்காணித்துக்கொண்டே செய்கிறோம். உங்களுக்கிருக்கும் விழிப்பும் எச்சரிக்கையும் எங்களுக்கும் இருக்கிறது’ என்று சொல்லாமல் உணர்த்தினர் புலிகள். அதாவது, அவர்கள் இதையெல்லாம் விற்பனை செய்வதை நிறுத்தவேயில்லை. இது ஈழஆதரவாளர்களுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது.
எனக்கு இப்பொழுதும் சிரிப்பு வந்தது. ஆனால், இந்தத்தடவை நான் சிரித்தேன். சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார்கள். காலச்சுவடுவை இங்கே – வன்னியில் - அறிமுகப்படுத்தி, அதற்குக் களம் அமைத்துக்கொடுத்து எல்லாவற்றையும் பாழாக்கி விட்டேன் என்றும் தமிழகத்தில் வந்து பாருங்கள், அந்த இதழுக்கிருக்கும் எதிர்ப்பை என்றும் சொன்னார்கள். ஏறக்குறைய என்மீது உச்சக்கோபம் அவர்களுக்கு. நான் அவர்களுக்கு உண்மை நிலைமையை விளக்கினேன். ‘காலச்சுவடு ஈழ நிலைமையை வெளியே கொண்டு வந்தது. அதனிடம் விமர்சனத்துக்குரிய பகுதிகள் இருந்தாலும் இந்தப் பங்களிப்பையும் கவனம் செலுத்துகையையும் நாம் மறுக்க முடியாது. வேண்டுமானால் காலச்சுவடுவுடன் நாம் மேலும் பேசலாம். அதனுடைய குறைபாடுகளை நீக்க முயற்சிக்கலாம். பகிரங்கமாக அதனுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, அதனுடைய பதிலை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கலாம். இந்த மாதிரிச் செயற்படுவதை விடுத்து. எப்படி ஒரு இதழை நிந்திக்க முடியும்? நிராகரிக்க முடியும்’ என்று கேட்டேன்.
இதையெல்லாம் அவர்கள் கேட்டுக்கொள்ளவேயில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. வந்தவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த வன்னி அரசு, ஓவியர் புகழேந்தி போன்றவர்கள் ஓரளவு யதார்த்தமாகச் சிந்தித்தனர். நிலைமைகளை யதார்த்;தத் தளத்தில் வைத்துப் புரிய முற்பட்டனர். பா. செயப்பிரகாசத்துக்கு என்னுடைய பதிலில் திருப்தியில்லையென்றாலும் அவர் வலிமையாக மறுக்கவில்லை. ஓவியர் மருது குழப்பங்கள் இல்லாதவர். அவர் எல்லாவற்றையும் நிதானமாகவே புரிந்து கொண்டார். விவாதிப்பதற்குப் பதிலாக அறிவதிலேயே அவர் ஆர்வமாக இருந்தார். அதிலேயே அக்கறை காட்டினார். நீண்டகாலம் இருந்த உதிப்பூக்கள் மகேந்திரனும் தேவையில்லாமல் அதீதமான உரையாடல்களைச் செய்ததில்லை. மருதுவைப்போல இடங்களை அறிவதிலும் சனங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதிலும்தான் மகேந்திரனும் அதிக அக்கறையைச் செலுத்தினார். ‘நாலும் வரட்டும். மக்கள் நல்லதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது’ என்பார் மகேந்திரன். அவர் எல்லா இதழ்களையும் வாங்கி எடுப்பார்.
வந்தவர்களிலேயே உச்சத்தொனியில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கட்டளை பிறப்பித்தவர் சீமான். சீமான் பல குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார். தமிழகத்தில் ஈழப்போராட்டத்துக்கு எந்த மாதிரியான சக்திகள் எல்லாம் எதிர்ப்பாக இருக்கின்றன என்று அவர் பெரிய பாடமே நடத்தினார். அதில் காலச்சுவடுவும் கறுப்புப் புள்ளியைப் பெற்ற ஒன்று. சீமானுடன் விவாதிப்பதில் பயனேதுமில்லை என்று ஒதுங்கிக்கொண்டேன். போலிகளின் காவலன் அவர் என்பதை அவருடைய அதீதப் பேச்சிலும் கருத்துகளிலும் புரிந்து கொண்டோம்.
இந்தச் சூழலில் 1983 ஜூலை வன்முறை நினைவுகளின் 25 ஆவது ஆண்டு நினைவைக் கூரும்வகையில் காலச்சுவடு ஒரு வலிமையான பதிவைச் செய்யவுள்ளது என்று சேரனும் கண்ணனும் சொன்னார்கள். இந்தப் பதிவுக்கு என்னையும் எழுதமுடியுமா என்று சேரன் கேட்டார். நான் சம்மதித்தேன். ‘காயங்களில் இருந்து பிறந்த ஒளி’ என்ற கட்டுரையை எழுதினேன். இந்தக் கட்டுரை வந்ததைப் பார்த்தவர்கள் மீண்டும் கொதித்தெழுந்தார்கள். பிறகென்ன, வசையும் புரளியும் கிளப்பப்பட்டன. தமிழகத்தில் இருந்து வந்தவர்களும் இந்தக் கொதிப்போடு இணைந்து கொண்டனர். காலச்சுவடு தந்திரோபாயமாக ஈழப்போராட்டத்தைப் பற்றிப்பேசுவதாகக் காட்டிக் கொண்டு உள்நுழைவை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று குற்றப்பத்திரிகையைத் தயாரித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், அறிவு அமுதுவில் எல்லாப் புத்தகங்களும் இருந்து கொண்டேயிருந்தன. யுத்தம் கிளிநொச்சிக்கு வரும் வரையில், அது விசுவமடுவில் உள்ள ‘அறிவு அமுது’ வின் கிளையை மூடும் வரையில் எல்லாம் இருந்தன. என்ன மாயமோ எல்லாவற்றுக்கும் இடமிருந்தன. இதேவேளை, இன்னொரு பக்கத்தில் அந்த ஜூலைச் சிறப்பிதழ் பல பிரதிகள் வாங்கப்பட்டு உட்சுற்றில் உலாத்திக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு படியெடுத்தும் கொடுக்கப்பட்டது.
இந்தக் கூத்தெல்லாம் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கிளிநொச்சியில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் தேவிபுரம் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். அங்கே எங்களின் கூடாரத்துக்கு அண்மையில் போராளி குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. அவர்களில் ஒரு பெண், அநேகமாக அவருக்கு முப்பது வயதிருக்கலாம். அந்தச் சூழலிலும் காலச்சுவடுவை வைத்து வாசித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். சனங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். வெடிசத்தங்களும் சனங்களின் இரைச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.
எனக்கு அப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால், சிரிக்கும் நிலையில் நான் இருக்கவில்லை.
00
நன்றி - காலச்சுவடு (154)