Friday, June 29, 2012

கவிதைகள் நான்கு




தொலைந்த பின்னும் இருத்தல்















அவர்கள் எங்கோ சென்றனர்
என்னவாகவோ ஆயினர்

சென்றபின்னும்
செல்லமுடியா நிழல் உறைந்துளது
இம் மண்ணடுக்கில்
அடுக்கடுக்காக
இரத்தச் சூட்டுடன்
ஆழத்தே.

ஒரு பெரும் மயான வெளி

எரிந்தழிந்த உடல்கள்
துப்பாக்கிகளால் எரிக்கப்பட்ட துப்பாக்கிகள்
எல்லாம் அவ்வெளியின் கோரமாகி
சாட்சியாகி
அவ்வெளியின் நினைவாகின

ஓலங்களின் படிகை
காயாத குருதியின் மணம்
அவ்வெளியின் அடியில்
ஆழ் மையம் வரையில்
நீரூற்று வரையில்
சென்றிறங்கி
ஆயிற்றொரு வரலாற்றுப் படுகை.

வரலாறென்பது அகாலமாயிற்று
வாழ்வென்பது ஓலமாயிற்று

செல்ல முடியாப் பயணத்துக்காக
அவர்கள் எல்லாச் சவாரிகளையும் நடத்தினர்
எல்லாச் சவாரிகளுக்காகவும் சவுக்குகளைச் சொடுக்கினர்
சவுக்குகளின் அத்தனை சொடுக்கும்
அழியவில்லைக் காற்றில்

போகாத பயணங்கள் காலடியில்
விசைகுன்றாச் சவுக்குகளின் சொடுக்குதல்கள்

ஒவ்வொரு சொடுக்குக்கும்
ஓராயிரம் ஓலக்குரல்

பலி கொள்ளப்பட்ட இதயத்துக்கு
அளிக்கப்பட்ட பரிசு
அவமானமும் கண்ணீரும்.

00

எதுவரை?














இனி எல்லாம் ஒழுங்காயிற்று
என்றபோது
அவனருகில் விழுந்தது பிணம்
உருண்டது தலை
தெறித்தது குருதி

அச்சத்தில் உறைந்தன மறுபடியும்
நம் இதயமும்
நீ பரிசளித்த நாட்களும்
நீ கொண்டாடிய கொடிகளும்

போடா நாயே
வாழ்வெமக்கு அபாயங்களின் மீதான வெடிகுண்டென்று
எழுப்பட்டது மீண்டும்

நான் இப்போதும் காண்கிறேன்
அசையும்
துப்பாக்கிகளின் நிழலை

சதாமும் இல்லை பிரபாகரனும் இல்லை
என்றபோதும்
இருக்கின்றன துப்பாக்கிகள்
அவரவர் நிழலைத் தொடர்ந்தபடியாக
யார் யாரிடமெல்லாமோ

00

பழிகளைச் சேர்த்தவர்கள்















தப்பிச் செல்ல முடியா வரலாறு
காயங்களுடன் படுத்திருக்கிறது
காலடியில்

எல்லாப் பழிகளும் சேர்ந்து
ஓராயுதமாகியது
எல்லாவற்றையும் தின்னும் பேரவாவுடன்.


பழிகளைச் சேர்த்தவர்களின்
காலம்
பழிக்கப்பட்ட பின்னும்
உள்ளே அழுகிய மரத்தில்
ஆடுகின்றன கூடுகள் என்கிறார் சிலர்
தொலைவில்

இனியுமொரு புயலைத் தாங்கும் வலிமையைத் தா
என்று எந்தத் தேவதையை
யார் யாசிப்பது?

இன்னும் மீதமிருக்கிறதா என்ன
பச்சை உடலின் மீது
இரத்தத் தினவோடு வாளைப் பாய்ச்சும் பேராசை?

ஆயின்
வந்தருள்க
காயங்களுடன் படுத்திருக்கும் வரலாற்றைத் துயிலெழுப்பி
வழிநடத்த

இந்த இரவு நான் சற்றுக் கண்ணாற வேண்டும்
ஒரு குளிர்காலத்தை நினைக்கின்றாள்
தீப்பட்ட காயங்களின் குழந்தை.

00

மீண்டும் மஞ்சள் பூக்கள்














மீண்டும் மஞ்சள் பூக்கள் பூக்கின்றன
இந்தத் தெருவோரங்களில்
ஆவரசு கொன்றை திருநொச்சி என்றாயிரம் பூக்கள்

பூக்களைக் கண்டறிய முடியாக் காலத்தை நீங்கி
மறுபடியும்
தெருவுக்கு வந்தேன்
தெருவில்
பெருக்கெடுத்தோடும் நினைவுப் பேராறு

முன்பு
துயர்ப் பொதியோடு வீடு நீங்கி, ஊர்நீங்கி,
அச்சிறு கடலோரம் செல்கையில்
பிள்ளைத் துயர்
பெருக்கெடுத்தோடிப் பேராறாகியது.

வழிநெடுகப் பொறியோடும்
பொறிகொண்ட நெஞ்சொடும் அடுக்கடுக்காய்
‘நம்நண்பர்’ முகம் மாறி நிற்கையில்
பூக்கள் உலர்ந்து வாடின
பொறியிலும் வலையிலும் சிக்கிய தெருவில்
மிஞ்சிய
ஒரு பிள்ளையும் பிள்ளை முகத்தோடு வரவில்லை

பேரரசன் தன் வாளினை
அத்தெருவில் நிறுத்தி வைத்திருந்தான்

அச்சத்தின் நிழல்
எல்லாவற்றையும் மௌனக் கிடங்கினுள் தள்ளியது
எல்லாத் திசைகளும் அடைபட்டிருந்தன அப்போது

ஒரு வழிதேடி
ஒரு விதி தேடிச் சனங்கள் அலைய
எதிரே
எல்லா விதியிலும் எல்லா வழியிலும்
நிறுத்தப்பட்டிருந்தன பேரரசனின் வாள்கள்

ஆனாலும்
அச்சத்தின் நிழலைக் கடந்து சென்றனர் சிலர்

அந்த மௌனக் கிடங்கே
பின்னர் மாபெரும் சவக்குழியாகவும்
பெருஞ்சிறையாகவும் மாறிப்
பேரரசனின் பரிவாரங்களைக் கொள்ளையிட்டது

மீண்டும் மஞ்சள் பூக்கள் பூக்கின்றன
தெருவோரங்களில்
ஆவரசு... கொன்றை.... திருநொச்சி....

00

No comments: