Tuesday, May 29, 2012

அழிப்பின் கொடுமை
















இன்று புதுக்குடியிருப்புக்குப் போயிருந்தேன். மீண்டும் அழிவின் காட்டிடையே நின்றேன். துக்கத்தை மறுபடியும் காவி வந்துள்ளேன். போதாக்குறைக்கு தொலைந்து போன பொருளொன்றைத் துக்கம் பெருக்கியாகக் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இததைத்தான் காலக் கொடுமை, அல்லது விதியின் சதி என்பதா? அழிவுகளைப் பார்க்க விரும்பாமல் இதுவரையும் அங்கே போவதைத் தவிர்த்தேன். தொடர்ந்து இடிபாடுகளையும் சிதைவுகளையும் பார்த்து மனமும் சிதைந்து போயிருப்பதாகப் படுகிறது. இனியும் இவற்றைப் பார்க்க முடியாது. இந்த அழிவுகளைப் பார்க்க வேண்டியிருப்பதும் இவற்றினூடே வாழ வேண்டியிருப்பதும் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தமே ஆயினும் தொடர்ந்தும் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளக் கடினமாகவே உள்ளது. யுத்தம் முடிந்தாலும் இந்தக் கொடுமைகள் முடியவில்லை.

தொலைந்து போன பொருள் என்றேனே, அது என்ன என்று தெரிந்தால் சிலவேளை நீங்கள் சிரிக்கக் கூடும். காசு, நகை, வீட்டுப் பொருட்கள், இயந்திர சாதனங்கள் என எவ்வளவோ பெறுமதியான பொருட்கள் எல்லாம் நடந்த யுத்தத்தினால் தொலைந்து போயிருக்கின்றன. எத்தனையோ ஆயிரம் உயிர்கள் உட்பட. அதையெல்லாம் விட இதென்ன பெரிதா? ஆனால், இதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றி விளங்கியோருக்கு இந்தப் பொருளின் பெறுமதி என்ன என்று விளங்கும்@ இதனுடைய மதிப்பைப் பற்றிப் புரியும்.

தொலைந்தவையும் இன்று திரும்பத் துக்கம் பெருக்கியாகக் கிடைத்திருப்பவையும் கடிதங்களே. நண்பர்களின் கடிதங்கள். தோழர்களின் கடிதங்கள். அமைப்புகளின் கடிதங்கள். பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப்பலர் எழுதிய கடிதங்கள். அய்யா, அம்மா உட்பட நெருங்கிய உறவினர்கள் எழுதிய கடிதங்கள்.

வெளிப்பார்வையில் இவை வெறும் காகிதங்களாகத் தெரியலாம். கடந்து போன காலமொன்றில் பேசப்பட்ட விசயங்கள். இப்பொழுது அந்த உரையாடல்களுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்றும் யாரும் கேட்கக் கூடும்.

ஆனால், அடிப்படைகளின் விதி என்றும் மாறுவதேயில்லை. இரண்டும் இரண்டும் நான்குதான். அது எப்பொழுதும் மாறிவிடுவதில்லை. பீற்றருக்கும் அது நான்குதான். பியசேனாவுக்கும் அது நான்குதான். அரவிந்தனுக்கும் நான்குதான். வெள்ளையனுக்கும் கறுப்பனுக்கும் கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் அரேபியனுக்கும் அது நான்குதான். அடிப்படைகளை உருவாக்கும் (கவனிக்க – அடிப்படை வாதங்களை அல்ல) எந்தச் சொல்லுக்கும் கால முதிர்வு ஏற்படுவதில்லை. அவை நிலைபேறுடையவை. வாழ்வை அதன் சாரத்தில் நின்று உணர்ந்த எத்தகைய எழுத்தும் அத்தகைய பெறுமதியைப் பெறுவன.

எனவேதான் இவற்றைப் பற்றி எழுதும்போதே ஒருவிதமான வேறுபட்ட மன எழுச்சி நிகழ்கிறது. இந்தக் கடிதங்களை எழுதிய ஒவ்வொரு முகங்களும் மனதில் தோன்றுகின்றன. இவற்றை எழுதியவர்களிற் பலர் இன்றில்லை. சிலரை நான் வாழ்விலே நேரிற் பார்த்ததே இல்லை. தொலைபேசியிற் கூடப் பேசியதில்லை. அவர்களுடைய தொடர்பும் உறவும் கடிதங்களின் மூலமாக மட்டுமே இருந்தன. எழுதுகிற விசயம் மிகுந்த மன நெருக்கடிக்குரியது என்றாலும் அதை எழுதும்போது ஏற்படும் உணர்வுகள் இன்றைய நிலையில் அசாதாரணமானவை. அதுவும் கடிதங்களைப் பற்றிய விசயங்கள்....

‘கடிதங்களின் யுகம் முடிந்து வருகிறதா?’ என்று கேட்டிருந்தான் அண்மையில் சிவா. ‘தொலைபேசியும் மின்னஞ்சலும் கடித யுகத்திற்கு எதிரிகள் என்று மேலும் சொன்னான் அவன். மின்னஞ்சல்கள் வந்த பிறகு பெரும்பாலும் தபாலில் வருகின்ற கடிதங்களின் யுகம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொலைபேசியின் உச்சபாவனை – அதிலும் செல்போனின் வருகை என்பது, அநேகமாகக் கடிதங்களின் அவசியத்தைக்  குறைத்து விட்டன. தொலைபேசியில் பகிரப்படும் எல்லா வார்த்தைகளும் அந்தக் கணத்திலேயே காற்றிலே கரைந்து விடுகின்றன. அழுகை, சிரிப்பு, பரிவு, நேசம், தவிப்பு, தாகம், மோகம் என எத்தகைய உணர்ச்சிகளையும் நேரடியாகப் பரிமாறிக் கொள்வதற்கு தொலைபேசி உச்ச சாத்தியத்தை அளிக்கிறது என்பது உண்மைதான். ஒவ்வொரு குரல்களையும் அவற்றின் உயிர்ப்போடு அனுபவிக்க முடிவதும் உண்மை. ஆனால், எல்லாம் அந்தக் கணம் வரையிற்தான். அதற்கப்பால், அவற்றுக்கு எந்த முகமும் இல்லை. அடையாளமும் இல்லை. பெறுமதியும் இல்லை. காற்றிலே கரைந்து, காணாமற் போய் விடுகின்றன அவ்வோசைகள். பெரும்பாலும் திரும்பப் பெறவே முடியாத ஓசைகளாக.

தொலைபேசிக்கு அடுத்தபடியாக கடிதத்திற்கு இன்னொரு எதிரியாக மின்னஞ்சல் இருக்கிறது என்று சிவா சொல்வதும் உண்மையே. என்னதான் மின்னஞ்சலில் வேகமாகக் கடிதப் பரிவர்த்தனையைச் செய்யக் கூடியதாக இருந்தாலும் அதில் எழுதப்படும் கடிதங்களுக்கென்ற தனியான முகங்கள் இருப்பது குறைவு. தனியான அடையாளங்கள். அந்த அடையாளங்களின் வழியாக வருகின்ற உணர்வு. முக்கியமாக எழுத்துகள். மின்னஞ்சலில் எல்லா எழுத்துகளும் ஒரே மாதிரியானவையாக, இயந்திர ரீதியாகவே உள்ளன. அச்சில் வார்க்கப்படும் எழுத்துகளைப் போல. அச்சில் இருக்கின்ற எழுத்துகளுக்கு கையெழுத்துகளைப்போல தனியான அடையாளங்கள் இருப்பதில்லை. தனியான முகங்களை அவை காட்டுவதும் இல்லை. இது பெரியப்பாவின் எழுத்து, பாலுவின் எழுத்து, ரமணியின் எழுத்து, ரதியின் எழுத்து, இது அத்தையின் எழுத்து என்று எப்படி இவற்றை அறிந்து கொள்வது? எழுதப்படும் கடிதங்களில்  ஏற்றப்படும் அவரவர்களின் உணர்வுகளின் தொனி வேறுபாட்டைத்தவிர, வேறெந்த வேறுபாடுகளும் தனித்துவங்களும் மின்னஞ்சல்களுக்குக் கிடையாது.

மனிதர்கள் வேகங்கொள்ளும் வாழ்க்கைக்குத் தாவும்போது இயல்பையும் அழகையும் அடையாளங்களையும் இழந்து விடுகிறார்கள். வேகங்கொள்ளும் வாழ்க்கைக்குப் பெரும்பாலும் இயந்திரங்களின் துணை அவசியம். இயந்திரங்களும் பொறிமுறைகளும் எப்பொழுதும் மனித சுபாவங்களுக்கும் தனித்த அடையாளங்களுக்கும் எதிரானவை. அவற்றை அவை நிராகரித்து, மனிதர்களையே இயந்திரமயமாக்கி விடுகின்றன. மனிதர்கள் சுலபமாக இயந்திரமயமாகி விடுகிறார்கள். ஆனால், இயந்திரங்கள் ஒருபோதும் மனித இயல்புக்கு வருவதில்லை. இப்போது கடிதங்களிலும் தங்களை இழந்து வருகிறார்கள் மனிதர்கள்.

எப்படியோ கடிதம் எழுதுவதை மனிதர்கள் வரவரக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள். கடிதங்களற்ற ஒரு வாழ்க்கையும் வந்து விடத்தான் போகிறது. அப்படிச் சில கடிதங்கள் வந்தாலும் அவை பெரும்பாலும் அலுவலக விவகாரங்கள் சம்மந்தப்பட்டவையாகத்தான் இருக்கும். அந்தக் கடிதங்களும் இயந்திரமயப்பட்டவையே. விதிகள், கட்டளைகள், அறிவுறுத்தல்கள், கோரிக்கைகள், அறிவிப்புகள் என்ற வரையறையில்தான் அலுவலகக் கடிதங்கள் இருக்கும். அலுவலக விதியே இயந்திர மயமானதுதானே.

முன்னர்,  ஒரு தபால் அட்டை வரும்போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! ஒரு வகையான கிளர்ச்சி நம்மையறியாமலே நமது உடலில் ஓடிப்பரவும். உறையோடு வரும் கடிதங்களில் இருக்கின்ற வௌ;வேறு வகையான அழகிய முத்திரைகள், முகவரியில் இருக்கும் விதவிதமான எழுத்துகள் எல்லாமே கடிதங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சி. முகவரியை எழுதிய கையெழுத்தை வைத்தே இது யாருடைய கடிதம் என்று கண்டு பிடித்து விடும் அளவுக்கு மன இயக்கம் இருந்தது.  

சின்னமாமாவின் எழுத்துகள் எப்போதும் சரிந்திருக்கும். அவற்றைப் பார்க்கையில், ஒரு அணியாக எழுத்துக் கூட்டம் நிற்பதைப் போலிருக்கும். பெரியப்பாவின் எழுத்துகள் அதிரடியாக எதையோ சொல்ல முயற்சிப்பதைப்போல அவசரகதியில் இருக்கும். தாள் முழுவதும் ஏறக்குறைய ஒரு வகையான கிறுக்கல்கள். அவரும் அப்படியான ஆள்தான். எதற்கும் பராதிப்பட்டுக் கொண்டிருப்பார். சற்று ஆதிக்க மனோபவமும் அவரிடமுண்டு. ராணி அத்தையின் எழுத்துகள் நிதானமானவை.அவவின் எழுத்துகளும் அப்படித்தான். அவ எழுதும் விசயங்களும் அப்படித்தான். அவவும் அப்படித்தான். எப்படித்தான் அப்படியொரு நிதானமும் ஆற்றலும் அவவிடம் உள்ளன என்று யோசிக்க வைக்கும். அறிவுரை சொல்வதைப்போல அணைப்பும் இதமும் நெருக்கமும் கூடிய எழுத்துகள் அவவுடையவை. எனக்கு அந்த எழுத்துகளே அதிகமாகப் பிடிக்கும். எதையோ சொல்லத் துடிப்பதைப்போல தவித்துக்கொண்டிருப்பன சறோ அத்தையின் எழுத்துகள்.

கிறுக்கல் சித்திரக்காரனின் கை வண்ணத்தைப்போல, என்ன ஏது என்றே தெரியாமல் எழுதிச் செல்வார் சோதியப்பு. அவருடைய கையெழுத்தும் தலையெழுத்தும் கடவுளுக்குத்தான் தெரியும் என்று சொல்வார் அய்யா. அந்த அளவுக்கு எதையோ கிறுக்கிச் செல்வார் சோதியப்பு. ஆனால் அவருடைய எழுத்தைப் படித்துத்தான் அவரில் மையள் கொண்டாள் அந்த நாளில் ஒரு மலேசியப் பெண் என்று பெரிய மாமா சொல்வார். பொனிபஸ்ஸின் எழுத்துகளுக்கு என்றும் முதுமை வந்ததேயில்லை. அவன் கடையாக எழுதிய கடிதத்தில் நான் பார்த்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவன் எழுதிய அதே எழுத்தைத்தான். காலம் எவ்வளவு மாறினாலும் அவனுடைய கையெழுத்தில் அது ஊடுருவ முடியாமல் பின்தங்கி விட்டது. இவ்வளவுக்கும் அவன் தமிழைப்படிக்க வந்ததே அவனுடைய ஆறாவது வயதில்தான். வீட்டில் தமிழை அவன் பேசத் தொடங்கியது அநேகமாக அவனுடைய பத்து வயதில் இருக்கலாம். டொச் மொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசிய ஒரு குடும்பமாக பொனிபஸின் குடும்பம் எங்களுரில் இருந்தது. ஒல்லாந்து வழியான பரம்பரை. பிறகு தமிழையும் சேர்த்துக் கொண்டார்கள். இப்பொழுது தமிழையே பெரும்பாலும் புழங்குகிறார்கள். எப்படியோ இளமை மாறாத எழுத்தை இன்றும் அவன் தன்னிடம் வைத்திருக்கிறான்.

போகட்டும், இப்படி எத்தனை வகையான எழுத்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் குணமறிந்து, அவற்றின் முகமறிந்து வைத்திருந்த வாழ்க்கையைக் கடிதங்கள் தந்தன. தாத்தாவின் கையெழுத்தை நீண்டகாலமாக அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்தா. பெரும்பாலும் கடிதங்களில்தான். அதுவும் அவ்வளவு அலைக்கழிந்த வாழ்க்கைக்குப் பிறகும். ஒரு விவசாயியாக தாத்தா இருந்தபோதும் அம்மா படிக்கிற காலத்தில் வாரந்தவறாமல் அம்மாவுக்குத் தாத்தா கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதங்களை அம்மா பக்குவமாகப் பொத்திப் பொத்தி வைத்திருப்பதைப் பார்த்த அய்யா பல தடவைகள் அம்மாவைச் சீண்டுவார். ‘உம்மட அப்பா ஒரு நேரு. நீர் ஒரு இந்திரா. அவர் தன்ரை அருமை மகளான உமக்கு வரலாற்றுப் பாடங்களை கடிதத்தில போதிச்சிருக்கிறார்... அதையெல்லாம் படிச்சிட்டு இப்ப நீர் எங்களுக்கு வாழ்க்கைப் பாடம் நடத்திறீர்...’ என்றமாதிரி. அம்மாவைச் சீண்டுவதற்கு அய்யாவுக்கு வாய்த்த ஆயுதம் அது. ஆனால், அந்த நாட்களில் எல்லாம் சண்டை போட்டு அய்யாவை மடக்கியிருக்கிறா அம்மா.

நேருஜி தன்னுடைய மகளான பிரியதர்ஸினி (இந்திரா) க்கு எழுதிய கடிதங்கள் அளவுக்கு, முக்கியமான கடிதங்களாக எங்கள் தாத்தாவின் கடிதங்கள் வரலாற்றுப் பிரசித்தியைப் பெறவில்லை என்றாலும் அம்மாவுக்கு அந்தக் கடிதங்கள் வரலாற்றுப் பொக்கிஷம். வாழ்க்கைப் பொக்கிஷம். நினைவுப் பொக்கிஷமே. பின்னாளில் அய்யாவின் கடிதங்களையும் அப்படி அம்மா சேர்த்து வைத்திருந்தா. ‘இதெல்லாம் பாரதி, புதுமைப்பித்தன் கடிதங்கள் இல்லைத்தான். எண்டாலும் வைச்சிருக்கிறன்’ என்று சொல்லிக் கொண்டு. (அய்யாவுக்கு உள்ளுர ஆயிரம் அதிர்வலைகள் அப்போது ஏற்பட்டிருக்கும்).

என்னிடம்கூட எத்தனையோ கடிதங்கள் இருந்தன. 25 ஆண்டுகளாகக் கடிதங்களைச் சேமித்திருக்கிறேன். நாடோடியையும் விட ஓயாது அலைந்த, போர்க்கால வாழ்க்கையில், இடப்பெயர்வுகளும் உத்தரவாதங்களும் இல்லாதிருந்த அந்தக் கொடிய வாழ்க்கையின் போது கூட ஏராளம் கடிதங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். ஆரம்பத்தில் சேகரித்த கடிதங்கள் கொஞ்சம் தொலைந்து விட்டன. அத்தனையும் முக்கியமான கடிதங்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் என்று சொல்வார்களே, அப்படிச் சில கடிதங்கள் என்னிடமுமிருந்தன.

பிரமிள், தஞ்சைப் பிரகாஷ், எம். வி. வெங்கட்ராம், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், தங்கர் கி.ராஜநாராயணன், பச்சான், உதிரிப்பூக்கள் மகேந்திரன், அன்ரன் பாலசிங்கம், அ. இரவி, நிலாந்தன், வே.பாலகுமாரன், சோலைக்கிளி, சு.வி, நற்பிட்டிமுனை பளீல், எம். எச். எம். நவாஷ், புதுவை இரத்தினதுரை, சாந்தன், செம்பியன் செல்வன், வரதர், நந்தி, சோ.கிருஷ்ணராஜா, தணிகாசலம், அ.யேசுராசா, முருகையன், சண்முகம் சிவலிங்கம், டொமினிக் ஜீவா, சோ.பத்மநாதன், கா.சிவத்தம்பி, கந்தையா சிறிகணேசன், அழ.பகீரதன், வாழைச்சேனை அமர், மேமன் கவி, கே.எஸ். சிவகுமாரன், கைலாஷ், பவானந்தன், நிர்மலன், தாமரைச்செல்வி, சு.மகேந்திரன், பா. அகிலன், புகழேந்தி, பா.செயப்பிரகாசம், குழந்தை ம. சண்முகலிங்கம், அ.மாற்கு, சின்னபாலா, இயல்வாணன், சாந்தன்.... இப்படி ஏராளம் பேர்களுடையவை.

இதை விட பின்னாளில் அறிமுகமாகியிருந்த இளைய படைப்பாளிகளிற் பலருடைய கடிதங்களும் நண்பர்கள் பலருடைய கடிதங்களும் கூட இருந்தன.

முக்கியமான உரையாடல்கள் அடங்கிய கடிதங்களைத் தேர்ந்து அவற்றைக் கடிதங்களை உறையிட்டுச் சேமிக்கும் கோவையொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். எத்தனை விதமான கடிதங்கள்.! ‘எத்தகைய உணர்ச்சிகரமான – அறிவெழுச்சியேற்பட்ட மனநிலையில் அவை எழுதப்பட்டிருக்கும் என அந்தக் கடிதங்களை வாசிக்கும்போது நினைத்திருக்கிறேன். சில கடிதங்களைப் பல தடவை படித்திருக்கிறேன். கடிதங்களில் இருக்கின்ற வசதியே அதுதான். எத்தனை தடவையும் அவற்றை நாம் படிக்கலாம். மறுபடி மறுபடி வாசிக்கலாம். தஞ்சை பிரகாஷ், பிரமிள், எம்.வி. வி, சு.வி, பளீல், சு.ரா, சு.வி, செம்பியன் செல்வன் போன்றோர் இறந்த வேளையில் அவர்கள் எழுதிய கடிதங்களை மீளவும் எடுத்துப் படித்திருக்கிறேன். நேரிலே எழுந்து வந்து உரையாடுவதைப்போல ஒரு உணர்வு வரும் அப்போது. எஸ்போஸை இனந்தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றதைப்பற்றிய சேதியறிந்த போதும் அவர் எழுதிய ஒரு கவிதையயும் கடிதங்களையுமே படித்தது இன்னும் நினைவிலுண்டு.

காதற்கடிதங்களை அந்தப் பருவ நாடகத் தருணத்தில் எத்தனை தடவைகள் படித்திருப்போம் என்று நினைத்துப்பார்த்தால் இது இலகுவாகப் புரியும். இப்போது அதை நினைக்கும்போது உள்ளே ஒரு வகையான கூச்சமெழுகிறது. நம்மையறியாமலே சிரிப்புக் கூட வருகிறது. படிக்கப்படிக்க மன எழுச்சியையும் இதத்தையும் தரும் கடிதங்கள் காதற் கடிதங்கள் மட்டுமல்ல, அரசியல் எழுச்சிகளை வலியுறுத்தும் கொள்கை விளக்கக் கடிதங்களுந்தான். எத்தகைய உணர்ச்சிச் சுழிப்புகளை அவை அந்த நாட்களில் ஏற்படுத்தியிருந்தன. அருளர், அன்னலிங்கம் ஐயா, நா. விசுவலிங்கம், டொமினிக் ஜீவா, பவானந்தன், சின்னபாலா, வே.பாலகுமாரன், சாந்தன் (ராம்) பரா, கைலாஸ், வசந்தி என்று எத்தனைபேர் இத்தகைய எழுத்துச் சித்திரங்களை வேட்கை ததும்ப எழுதினார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் வேட்கைகளை எழுதுவதற்கென்று அந்த நாட்களில் பலர் இருந்தார்கள். காலம் எல்லாவற்றையும் அடித்துப் போயிற்று வௌவேறு திசைகளில்....

இத்தகைய மன எழுச்சிகளைத் தரும் கடிதங்களாக பிறகு இலக்கியம் பற்றிய கடிதங்களிருந்தன. மனித இயக்கத்தையும் வாழ்வைப் பற்றிய தரிசனங்களையும் காண்பிக்கும் உணர்வும் அறிவும் சார்ந்த கடிதங்கள் அவை.

பிறகு ஒரு காலம். கண்ணீர்க்கதைகளையே தங்கள் எழுத்துகளாக்கினார்கள் பல தோழர்கள். அவர்களுடைய கடிதங்களைப் பார்ப்பதே அச்சத்துக்குரியது என்ற நிலை உருவாகியது. அந்தளவு கொடிய துயரங்களை அந்தக் கடிதங்கள் தாங்கி வந்தன. வழிகள் அழிந்தொடுங்கிய பிறகு, போக்கிடமற்ற தோழர்களின் குரல்கள் ஈனத்தில் ஒலித்தன. அந்த நாட்களில் தபாற்காரனைக் காண்பதற்கே மனம் அஞ்சியது. ஆனாலும் யதார்த்தை எப்படிப் புறக்கணிப்பது? வரும் கடிங்களை வாசிக்காமல் இருக்க முடியுமா? வாசிப்பதற்கஞ்சி, மூடப்பட்ட நிலையில் இருக்கும் கடிதம் அல்லது பிரிப்பதற்காகக் காத்திருக்கும் கடிதத்தை மூடிய நிலையிலேயே வைத்திருக்கும்போது ஏற்படும் பதற்றம் சாதாரணமானதல்ல. என்னதான் அதிர்ச்சியைத் தரக்கூடிய கடிதமாக, மன நெருக்கடிகளைத் தரக்கூடிய கடிதமாக அது இருந்தாலும் அதை அறியாமல் இருப்பதற்கு மனம் இலகுவில் அனுமதிக்காது. பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் அது. பதற்றத்தை மட்டுமா, குற்றவுணர்வையும்  ஏற்படுத்தும்.

ஆகவே, என்னதான் பாதகமான நிலையில் இருக்கின்ற போதும் வருகின்ற கடிதங்கள் வாசிக்கப்படுகின்றன. பதில் சொல்லமுடியாத கேள்விகளை அதில் பதிந்திருப்பார்கள் தோழர்கள். தெரிந்த விளக்கத்தையே மீண்டும் எழுதி விளக்குவார்கள். குற்றச் சாட்டுகள், துயர்பகிர்தல், துயரேற்றல், கழிவிரக்கம், மறுப்பு, வசை, கையறு நிலை, உதவி கோருதல் என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவை இருக்கும். அந்தக் கடிதங்களை எதிர்கொள்வதிலேயே நான் அதிக சிரமப்பட்டிருக்கிறேன். ஆனால், என்ன செய்ய முடியும்? படிக்கத்தான்வேணும். பதில் சொல்லத்தான் வேணும். நட்பின் முன்னே, தோழமையின் முன்னே மௌனம் கொள்வது சாத்தியமே இல்லை. அது நியாயமும் இல்லை.

இப்படியே கடிதங்களுக்கும் எனக்குமான உறவு நீண்டது. அரசியல் விவாதங்கள், இலக்கிய விவகாரங்கள், நட்பும் தோழமையும் கலந்த பரிமாறல்கள் என ஏராளம் கடித வழி உரையாடல்கள் நடந்து கொண்டேயிருந்தன.

வன்னியில் தொலைபேசி வசதிகள், இணைய வசதிகள் மட்டுப்பாட்டுடன் இருந்ததால் கடிதங்களே பெரும்பாலும் தொடர்பு வழியாக இருந்தன. இது கடித உறவாடலுக்கு முக்கிய ஒன்றாகியது. இப்படி வந்த கடிதங்களில் தேர்வு செய்து, இரண்டு பெரிய தொகுதிக் கடிதங்களைத் தயாரித்து எடுத்தேன்.

கிளிநொச்சியை நோக்கி 2008 இறுதிக் காலப்பகுதியில் படையினர் படையெடுத்து வரும்போது எல்லாப் பொருட்களோடும் இடம்பெயர்ந்தேன். கடிதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றை புதுக்குடியிருப்பிற்கு அனுப்பினேன். அங்கே நண்பர் முல்லைக்கோணேஸ் அவற்றை பொறுப்பெடுத்துத் தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். இடப்பெயர்வு பற்றிய அச்சங்கள் கோணேசுக்கும் இருந்தபோதும் அதை விட எங்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. முடிந்தவரையில் அவற்றைப் பாதுகாப்போம் என்ற அளவில் செய்யக் கூடிய ஏற்பாடுகளைச் செய்து அவற்றைப் பாதுகாப்பாக  வைத்தோம்.

ஆனால், எல்லாமே தலைகீழாகின. எதிர்பார்த்தபடியே படையெடுப்பு புதுக்குடியிருப்பை நோக்கியும் நடந்தது. இதனால், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதங்கள் மீண்டும் சோதனையைச் சந்தித்தன. கோணேஸ் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கே பெரும்பாடுபட்டார். பிறகு, புதுமாத்தளன் பகுதியில் அகதியாகக் கோணேஸைச் சந்தித்தபோது, ‘உங்களுடைய கடிதங்களும் புத்தகங்களும் இதுவரையில் பக்குவமாக இருக்கு’ என்றார். புதுக்குடியிருப்பில் அவருடைய வீட்டை விட்டு அவர் குடும்பத்தோடு வெளியேறியிருந்தாலும், அந்தப் பகுதியில் உக்கிரமான சண்டைகள் நடந்து கொண்டிருந்தாலும் எப்படியோ மனைவிக்கும் எறிகணைகளுக்கும் ரவைகளுக்கும் தண்ணி காட்டிக் கொண்டு புதுக்குடியிருப்பிலிருந்த தன்னுடைய வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தார் கோணேஸ். ஆனால், அது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற பயணம். ஒரு வகையில் அது ஒரு வீம்புச் செயல். எப்போதும் வீம்புச் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதமான விருப்பமுள்ளவர் அவர். அப்படிப் போய் வந்த கோணேஸ் வீட்டையும் பொருட்களையும் அவதானித்தார். அப்போது கடிதங்களும் பத்திரமாக இருந்திருக்கின்றன. அவருடைய புத்தகங்களும் அவர் சேகரித்திருந்த ஓவியங்களும் அவர் வரைந்திருந்த ஓவியங்களும் கூட.

ஆனால், யுத்தம் முடியும் போது...?

என்ன மிஞ்சும், நாங்கள் எப்போது மீண்டும் இந்த இடங்களுக்கெல்லாம் திரும்புவோம் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கெல்லாமோ அலைந்து ஓயும்போது புதுக்குடியிருப்புப் பகுதியிலும் மீள்குடியேற்றத்துக்காக சனங்கள் சென்றார்கள். முல்லைக்கோணேசும் போனார். ஆனால், போனவர்களுக்கு என்ன பொக்கிஸமா அங்கே காத்திருக்கும்?

கூரையற்ற வீட்டையும் சிதைந்து அழிந்து போயிருந்த பொருட்களையும் பார்த்த கோணேஸ் அடுத்ததாக புத்தகங்களையும் ஓவியங்களையும் தேடினார். என்னுடைய புத்தகங்களும் கடிக் கோவைகளும் இருந்த இடத்தைப் பார்த்தார்.

அங்கே?

எரிந்தும் உக்கியும் போன நான்கைந்து புத்தகங்கள்.... கூடவே அந்தக் கடிதப் படிகங்கள். கோணேஸ் முந்திச் சென்று அவற்றையே எடுத்தார்.

என்ன கொடுமை, அவை பெரும்பாலும் உருவழிந்து போய்விட்டன. ஆனால், எரியவில்லை. என்றாலும் பயன்படுத்த முடியாதவை ஆகிவிட்டன. எந்தக் கடிதத்தையும் சீராகப் படிக்க முடியாது. இனி அவற்றை என்றும் எங்கும் பெறவே முடியாது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் கண்முன்னே பார்க்கும்போது தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதைத்தான் ரவிக்குமார் சொன்னாரா, ‘யாழ்ப்பாண நூலகம் எரியுண்டபோது அதைக் கண்டு குமுறியவர்கள் மீண்டும் அப்படியொரு நூலகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தமக்குள் உறுதியேற்றிருப்பார்கள். அந்த விருப்பம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈடேறியது. என்றாலும் இது எத்தனை நாளைக்கு? என்ற கேள்வி ஒவ்வொரு நெஞ்சிலும் எழாமல் இல்லை. நூல்கள் காகிதத்தால் தயாரிக்கப்படுகின்றன. காகிதம் நெருப்பின் உணவு. நெருப்போ ஆதிக்கவாதிகளின் கையிலிருக்கும் ஆயுதம்’ (தீராநதி, மார்ச் 2012) என்று?

அந்த உருவழிந்த கடிதக்கோவையைக் கோணேஸ் தந்திருந்தார். ஆனால் அவற்றிற் கடிதங்கள் இருந்தன. ஆனால், அவை கடிதங்களாக இல்லை. உருவழிதல் என்பது இப்படியுமா? இந்த ரூபத்திலுமா?

00

1 comment:

எஸ் சக்திவேல் said...

>தொலைபேசியில் பகிரப்படும் எல்லா வார்த்தைகளும் அந்தக் கணத்திலேயே காற்றிலே கரைந்து விடுகின்றன

ஆம்.ஆனாலும் கடிதமெழுதும் கலையும் காலத்தில் கரைந்துவிட்டது. நான் எப்ப கடைசியாகக் கடிதம் எழுதினேன் என்று மறந்துவிட்டது.