![]() |
| சொல்லத் துணிந்தவனின் குரல் அல்லது தலைமறைவுக்காலத்தின் நீட்சி |
யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு, மீள்குடியேற்றம், புனரமைப்பு, மீள் கட்டுமானம், புனர்வாழ்வு மற்றும் அமைதிப் பேச்சுகள் பற்றிய இழுபறிகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் எப்படியிருக்கிறது என்று மனித உரிமைகள் மற்றும் ஊடகத்துறை போன்றவற்றில் செயற்பட்டு வரும் ஒருவருடன் உரையாடினோம்.
வடக்கைச் சேர்ந்த தமிழர் இவர். ஆனால், பொதுநிலைப்பட்ட சிந்தனையுடன், யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகும் முறை இவருடையது. சமகால நிலவரங்களில் தொடர்ச்சியான அவதானிப்பும் தொடர்பும் உள்ள இவர் மேற்கூறிய விசயங்கள் தொடர்பாக எம்முடன் உரையாடினார்.
பொதுவெளியில் சரியான செய்திப் பரிமாற்றம், தகவற் பரிமாற்றம் நடக்க வேண்டும். புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் இல்லாத தகவல்கள் எம்மை மேலும் பலவீனப்படுத்தும். மற்றவர்களுக்கு நாம் சரியானவற்றை, உண்மையானவற்றை ஆதாரங்களோடு சொல்லும்போது அவர்களால் அவற்றை நிராகரிக்க முடியாது. அது மட்டுமல்ல, அவர்களுக்கு எங்களின் மீது உரிய கவனமும் ஏற்படும் என்கிறார் இவர்.
இன்னும் இலங்கையில் தலைமறைவு நிலையிலேயே சில விசயங்களைப் பேச வேண்டியுள்ளது. இந்த நிலையை இலங்கை அரசு கடக்கும்போது அது ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பலப்படுத்தியதாகக் கருதப்படும் என்று சொல்லும் இவருடன் தொடர்ந்து மனித உரிமைகள், ஊடகத்துறை சார்ந்த விடயங்கள் மற்றும் சமகால நிலைமைகள் குறித்து உரையாடினோம்.
00
01. யுத்தத்திற்குப் பிறகு இலங்கையின் நிலவரம் எப்பிடியிருக்கு?
யுத்தகாலத்தைப் போன்றே இருக்கு.
02. அப்படியென்றால்?
பொருளாதாரத்தில், மக்களின் வாழ்க்கை நிலையில், சமூகங்களிடையேயான முரண்பாடுகளில், ஜனநாயகத்தில், அணுகுமுறைகளில் எல்லாம் மாற்றங்கள் ஏற்படவேயில்லை. அதே நிலையில் இனவாதம் கொப்பளிக்கிறது. விடாப்பிடியான போக்குகளே தொடர்ந்தும் நிலவுகின்றன. இனரீதியான பிளவுகள் அப்படியேதான் உள்ளன. இது மேலும் அதிகரித்துள்ளது என்றும் சொல்லலாம். காயப்பட்ட நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். தமிழ் முஸ்லிம்மக்களிடையே கூட முறையான உறவு இன்னும் ஏற்படவில்லை.
அரசாங்கமோ பிரதான கட்சிகளோ தங்களுடைய பழைய சிந்தனைப் போக்கிலிருந்து இன்னும் மீளவேயில்லை.
மதத் தலைவர்களும் மதஅமைப்புகளும் இனரீதியாகவே தொடர்ந்தும் சிந்திக்கின்றன. அரசியற் கட்சிகளுக்கும் மத அமைப்புகளுக்குமிடையில் என்னால் பெரிய வேறுபாடுகளைக் காணமுடியவில்லை.
மட்டுமல்ல, ஊடகத்துறையில்கூட குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. அதே அணுகுமுறைகளில்தான் எல்லா ஊடகங்களும் இயங்குகின்றன. அந்தந்தத் தரப்புகளின் ஏவற் சக்திகளைப்போலவே ஊடகங்கள் தொழிற்படுகின்றன. பெரும்பாலும் எல்லாமே பிரச்சார அலகுகளாகவே தங்களைக் கட்டமைத்துள்ளன.
போருக்குப் பிந்திய நிலையில் எவ்வாறு சமூக நிலைமைகளை அணுகுவது? எப்படி மக்களை அவர்களின் கடந்த காலப் பாதிப்புகளிலிருந்தும் காயங்களிலிருந்தும் மீள வைப்பது? போரினால் பாதிப்புக்குள்ளானவர்களின் உளச் சமனிலையை எவ்வாறு பேணுவது? போன்ற அடிப்படையான விசயங்களில் பல அமைப்புகளும் ஊடகவியலாளர்களுக்கான பட்டறைகளை நடத்தியிருக்கின்றன. இன்னும் நடத்தி வருகின்றன. பட்டறைகளுக்கு வருவோர் அங்கே வழங்கப்படும் சான்றிதழையும் கொடுப்பனவையும் வாங்கிக் கொள்ளவே வருகிறார்கள். மற்றும்படி அங்கே கூறப்படும் விசயங்களை அந்த மண்டபங்களிலேயே விட்டிட்டு வெளியேறுகிறார்கள்.
ஆகவே, தாங்கள் அறிவதற்கு மாறாகவே பின்னர் இந்த ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள்.
அரசியற் கட்சிகளுக்கும் இலங்கையின் ஊடகங்களுக்குமிடையில் பெரிய வேறுபாடெல்லாம் இல்லை. சில மாற்று ஊடகங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றுக்குப் பொது வெளியில் அதிக வரவேற்பில்லை. பெருந்திரள் மக்கள் பாரம்பரியமான – முரண்தன்மையை அடிப்படைப் பொருளாகக் கொண்ட ஊடகப் போக்கையே ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு அது பழகிவிட்டது. அது தங்களுக்கு நல்லதல்ல என்று தெரிந்தாலும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்.
ஆகவே ஊடகங்களும் அந்தப் போக்கையே ஆதரித்து வளர்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எப்போதும் சந்தை முக்கியம். சந்தையைப் பற்றிச் சிந்திப்பவர்களால் ஒரு போதுமே சீரியஸான நல்ல காரியங்களைப் பற்றிச் சிந்திக்க முடியாது. இதற்கு நல்ல உதாரணம், தமிழ்ச் சினிமா. சந்தை வாய்ப்பையும் பெருந்திரளின் ஆதரவையும் தக்க வைக்க விரும்பும் தமிழ்ச்சினிமாவின் மலினமான உத்திகளை நீங்கள் நன்றாக அறிவீர்கள். பெரும்பாலான தமிழ்ப்படங்கள் ஓரே மாதிரியானவை. அங்கே மலினமான உத்திகளோடு வில்லன் - கதாநாயகன் போன்ற முரணும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே ஊடகத்துறையிலும் ஏறக்குறைய அதே நிலைதான். அரசியல் முரண்களை அந்த இடத்தில் வைத்துக் கையாள்கின்றனர் ஊடகவியலாளர்கள்.
அதற்கு இங்கே இனவாதமும் இனப்பிரச்சினையும் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழகேசரி என்ற பத்திரிகை எவ்வளவு சமூகப் பொறுப்போடு வெளிவந்தது? அரசியலிலும் மக்களின் வாழ்க்கை நோக்கிலும் இலக்கியத்திலும் அது கொண்டிருந்த அக்கறையின் பாதியளவிற்கூட இன்றைய பத்திரிகைகள் இல்லை. ஆனால், அப்போது ஊடகத் துறையைப் பற்றிய கற்கைகள் - கோட்பாட்டு விளக்கங்கள் எதைப் பற்றியும் அறியாமலே அவ்வளவு செழுமையாக பத்திரிகையை வெளியிட்டார்கள்.
ஈழகேசரியின் முதல் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டதை இங்கே கவனிக்க வேண்டும். ‘............. பத்திரிகைகளை நடத்துவோர் தேச நன்மைக்காக வேண்டியவைகளைக் காய்தல் உவத்தலகற்றி, நடுவு நிலையோடும் கால தேச வர்த்தமானங்களுக்கேற்றவாறு எடுத்துரைத்தல் வேண்டும். அப்படிக்கின்ற தாம் நினைத்த செயலை முடிப்பதற்காகவோ அல்லது ஒரு சிலர் மீது கொண்ட குரோதங்காரணமாகவோ, அன்றிச் செல்வச் செருக்காலோ, அறியாமையாலோ ஒருவரை ஒருவர் தூசித்தலும் சாதி மத சம்மந்தமான விதண்டாவாதங்கள் சொல்வதும் ஏனையோருடைய மனதைப் புண்படுத்துவதுமான வீண் செயல்களிற் காலத்தைக் கழிக்காது, அறநூல்வழி நின்று திறமையோடும் ஒத்துழைப்பதே சாலச்சிறப்புடையதாம்’ என்று அதிற் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழகேசரி முடிந்தவரையில் இந்த அடிப்படையைப் பராமரித்தது. ஆனால், இன்றைய நிலை?
சற்று வித்தியாசமாக, யதார்த்தத்தோடு இணைந்து செயற்பட விரும்பும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஒரு தடவை தங்களுடைய ஆசிரிய பீடத்தினருக்கு விளக்கமளித்த விசயத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன்.
‘உண்மை என்ன என்று எங்களுக்குத் தெரியும். எதெல்லாம் சரியென்றும் எங்களுக்கு விளங்கும். ஆனால், அதற்காக நாங்கள் மற்றவர்களை விட்டுவிலகித் தனித்து நிற்க முடியாது. அவர்கள் ஓடுகிற வழியில்தான் நாங்களும் ஓடவேணும். ஊரோடு சேர்ந்து ஓடாது விட்டால் எங்களை ஒதுக்கி விடுவார்கள். ஆகவே மற்றப் பத்திரிகைகள் என்ன செய்கின்றனவோ அதைத்தான் நாங்களும் செய்ய வேண்டியுள்ளது’ என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் தெரிவித்தார். இதைச் சொல்லும்போது அவருடைய மனச்சாட்சிக்கும் அறிவுக்கும் இது தவறென்று தெரிந்திருக்கிறது. ஆனால் அவரால் புதிய பாதையொன்றைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. ஓடுகின்ற பாதையில் சேர்ந்து ஓடுவதே அதிக சிரமமற்றது என்று கருகிறார் அவர்.
இதைப்போல இன்னொரு முதன்மைப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை அண்மையில் ஏற்றிருந்த இளைய பத்திரிகையாளர் ஒருவர் ஒரு உரையாடலின் போது சொன்னார், ‘சனங்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் நாங்கள் கொடுக்க வேணும். சனங்கள் எங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் எங்களுக்கு விளம்பரங்களைத் தருகிறார்கள். எங்களின் பத்திரிகையை வாங்குவதற்கு அவர்களிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பிருக்கு. எங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். ஆகவே அதை நாங்கள் கொடுக்கத்தான் வேணும். அவர்களுடைய எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றத்தான் வேணும்’ என்று.
இதையெல்லாம் நீங்கள் எப்படி விளங்கிக் கொள்வீர்கள்? ஈழகேசரிக் காலத்துக்கும் தற்போதைய நிலைக்குமிடையில் எவ்வளவு இறக்கம் என்று பார்த்தீர்களா? ஏறக்குறைய வணிக ரீதியாகச் சிந்திக்கும் தமிழ்ச் சினிமாத் தயாரிப்பாளர்களைப் போலவே இவர்களும் சிந்திக்கிறார்கள்.
எப்போதும் எதிர்த்தரப்பு ஒன்றினைச் சாடியும் தாக்கியும் வரும் செய்திகள் இவர்களுக்கு இதமூட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், எரிகின்ற நெருப்புக்குத் தொடர்ந்து எண்ணெயை ஊற்றிக் கொண்டேயிருக்கலாமா? இப்படி எண்ணெய் ஊற்றும்போக்கை வளர்த்தபடியாற்தானே தமிழர்கள் இரத்தம் சிந்தும் ஒரு அரசியலுக்கு வரவேண்டியிருந்தது. இந்த நிலைதான் சிங்களத் தரப்பிலும்.
இலங்கையில் தமிழ் சிங்கள ஊடகங்கள் எதுவும் இந்தக் குறைபாட்டுக்கு விலக்கல்ல.
யுத்தத்தின் படிப்பினைகளை எந்தத் தரப்பும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசியற் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், படித்தவர்கள், மதத்தலைவர்கள் யாரிடமும் மாற்றங்களைக் காணவேயில்லை. இந்த நிலையில் எப்படி அரசிடமும் அதிகார அமைப்புகளிலும் மாற்றங்களைக் காண இயலும்?
முழு நாடுமே அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. வெளிச்சக்திகள் இலங்கையைத் தங்களுக்கான போட்டிக் களமாக்குவதற்கு – ஒரு விளையாட்டுத்திடலாக்குவதற்காகப் போட்டியிடுகின்றன. அரசியல் ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம், கருத்து நிலை ஆதிக்கம், கலாச்சார ஆதிக்கம் என்று தொடர்ந்து பல ஆதிக்கங்கள் இலங்கையின் மீது ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதெல்லாம் எவ்வளவு ஆபத்தான காரியங்கள்? பலவீனப்பட்டிருக்கும் நாட்டிலும் பலவீனப்பட்டிருக்கும் சமூகங்களிடமும் பலவீனமான மனிதர்களிடத்திலும் வெளித்தாக்கங்கள் இலகுவாக ஏற்பட்டுவிடுவது இயல்பு.
ஆனால், இதையெல்லாம் யாருமே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவர்கள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. எரிகின்ற நெருப்பிலே தங்களைக் குளிர்காய வைத்துக் கொள்கிறார்கள்.
வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே எங்களின் பயணங்களும் வெற்றி தோல்விகளும் அமையும் என்று சொல்வார்கள்? நாங்கள் எதைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஏனென்றால், இன்னும் பழைய வழித்தடங்களிலேயே சுற்றுவதைத் தவிர வேறு எதையும் தெரியாமலிருக்கும் நிலையே காணப்படுகிறது.
பின்னடைவைச் சந்தித்த சமூகங்கள், போரில் ஈடுபட்ட தரப்புகள் எல்லாம் புதிய திசைகளை நோக்கியே பயணித்துள்ளன. போர் அப்படியான ஒரு புரிதலையும் பாடத்தையும் மனிதர்களுக்குக் கொடுக்கும். போரின் பின்னர் அப்படியான ஒரு தரிசனம் மனிதனுக்குக் கிடைக்கிறது.
இதற்கு உலக வரலாற்றில் நிறைய உதாரணங்களுள்ளன.
03. நீங்கள் இப்போதுள்ள நிலைமைகளை அவற்றின் தாக்கங்களைச் சொல்லுங்கள். குறிப்பாக மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட கண்ணோட்டத்தில்?
எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. ஊடகங்கள் செலுத்தும் தாக்கம் அதிகம். மக்களை விழிப்படைய வைப்பதில், அரசியலிற் செயப்படுவோரை நெறிப்படுத்தி ஒழுங்கு படுத்துவதில் ஊடகங்களுக்கே அதிக பங்குண்டு. எனவேதான் அவை நாட்டின் பிரதான சக்திகளில் ஒன்றென மதிக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்களுக்கான மதிப்பும் இதன்பாற்பட்டதே. ஆனால், சனங்களை அவையே இன்று மாய வலைகளால் கட்டிவைத்துள்ளன. இதற்குச் சமாந்தரமாக அரசியல் நிலவரம் உள்ளது. எல்லாமே கடுமையான – அதே நிலைப்பாடுகளுடன்தான் இருக்கின்றன. ஆகவே நிலைமை யுத்தகாலத்தை ஒத்ததாகவே இருக்கிறது.
கடினமான நிலை மாறாத வரையில் எதிலும் நெகிழ்ச்சியிருக்காது. யுத்தத்தின் போது மெல்ல மெல்ல மூடப்பட்டு வந்த சகல வெளிகளையும் மெல்ல மெல்லத் திறக்க வேண்டியது ஊடகங்கள், அரசியற் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றின் பணியாகும்.
ஆனால் இவை எதுவும் அந்தப் பணியைச் செய்யவும் இல்லை. அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை. மேலும் யுத்தகாலத்திலிருந்ததைப்போல, இனங்களுக்கிடையில் இருக்கும் முரண்நிலையைப் பயன்படுத்தித் தமது நலன்களைப் பேணவே முற்படுகின்றன.
அமைதியைப் பற்றிக் கதைத்துக்கொண்டே அமைதிக்கெதிராகச் செயற்படுவது என்று இதைச் சொல்லலாம். முன்னர் சமாதானத்தைப் பற்றியும் யுத்த நிறுத்தத்தைப் பற்றியும் கதைத்துக்கொண்டே யுத்தத்துக்கான சூழலை உருவாக்கிய அனுபவம் இவற்றிற்குண்டு. ஆகவே சனங்களின் அவலத்திற் பிழைப்பை நடத்தும் ஒரு கொடுமை இது எனலாம். வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் காரியம் இது.
இந்த நிலையில், அமைதி கிட்டாது. அமைதியை நோக்கிச் செல்லாத நிலைமை என்பது கடினமானதாகவே இருக்கும். இந்தக் கடின நிலையில் மனித உரிமைகள் கேள்விக்குரிய ஒன்றே. நான்கூட உங்களுடன் வெளிப்படையாக உரையாட முடியாத ஒரு நிலையே காணப்படுகிறது. என்னை இனங்காட்டத் தயங்கும் நிலை.
ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் போன்ற பலவும் இன்னும் நெருக்கடி நிலையிற்தான் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்கு போருக்குப் பிறகு யார் முறையாகச் செயற்பட்டிருக்கிறார்கள்? அங்கங்கே முனைப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பேரியக்கமாக – மக்களின் எழுச்சியோடு அரங்கிற்குக் கொண்டு வருவதற்கு யாருமே இல்லை.
இலங்கையின் இன்றைய இறுக்கமான நிலைமைகளுக்காகவோ அல்லது அதை எதிர்த்ததற்காகவோ எந்த அரசியற்தலைவர்களும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அல்லது மக்களோடு யாரும் போராடுவதற்காக வீதியிலிறங்கவில்லை.
சரத்பொன்சேகா (முன்னாள் இராணுவத்தளபதி) சிறையிலிருப்பது இன்றைய ஆட்சித் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஒரு சட்ட முலாம் பூசப்பட்டுள்ளது இராணுவ நடைமுறைக்கு மாறாக அவர் செயற்பட்டார் என்று.
04. நீங்கள் சொல்வதைப் போல, அப்படி முறையாகச் செயற்படுவதற்கு – அரசின் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா? இடமளிக்குமா?
எந்த அரசும் தனக்கு விருப்பமில்லாத எழுச்சிகளுக்காக – தனக்கு உவப்பில்லாதவற்றுக்காக மனமுவந்து ஆதரவைக் கொடுப்பதில்லை. அதிலும் இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில், இன ஒடுக்குமுறை மலிந்து ஜனநாயக நடைமுறைகள் கேலிக்கும் கேள்விக்கும் உரியனவாக இருக்கும் சூழலில், அரசுக்கு விருப்பமில்லாத காரியங்களுக்கு அது எப்படி ஆதரவைத் தரும்?
யுத்தத்;திற்குப் பிறகு யுத்தத்தின் தொடர்ச்சியாக அரசுக்கும் அதன் தலைமைக்கும் ஏராளம் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு மிகச் சிக்கலான உளநெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அது எல்லாவற்றையிட்டும் அச்சமடைந்துள்ளது. எல்லோரையிட்டும் பயப்படுகிறது. இந்த உளவியற் சிக்கலைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு நெருக்கமாக இருப்போரைச் சேர்ந்தது. ஆனால், அப்படியானவர்கள், அரசுக்குத் தங்களின் விசுவாசத்தைக் காண்பிப்பதற்காக மௌனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தலையசைக்கிறார்கள். இது அரசை இன்னும் தவறான வழியிற் செல்ல வழியேற்படுத்துகிறது.
இவர்கள் அரசைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கும் அளவுக்கு மக்களைக் குறித்துச் சிந்திப்பதில்லை. மக்களுக்காகவே அரசும் ஆட்சியும் என்ற விளக்கத்தை – அடிப்படை உண்மையை மறந்தே விட்டனர்.
இந்த மாதிரியே கட்சிகளுக்காகச் சிந்திப்போர் பெருகிவிட்டனர். மக்களுக்காகவே கட்சிகள். மக்களுக்காகவே தலைவர்கள். மக்களுக்காகவே கொள்கைகள் என்பதையெல்;லாம் பலரும் மறந்து விட்டனர்.
எனவே இவர்களுடைய விருப்பம் அதிகாரத் தரப்புகளைப் பாதுகாப்பதே. ஒவ்வொரு அணிக்கும் எனத் தனித்தனியாக இந்த மாதிரியான பாதுகாவலர்கள் உள்ளனர்.
இவர்கள் அதிகார மையங்கள் கட்டமைக்கப்படுவதற்காக இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள் யுத்தம் முடிந்த பிறகு அமைதியை ஏற்படுத்துவதற்காகவோ, ஜனநாயக மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காகவோ, ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்காகவோ யாரும் முயற்சித்தார்களா? இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கத்தான் வேணும், அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்ய வேண்டும் என்று யார் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் நான் அழுத்தமாகக் குறிப்பிடுவது சிங்களத் தரப்பை மையப்படுத்தியே.
அதைப்போல முஸ்லிம் மக்களின் நிலைமைகளைக் குறித்து, அவர்களுடைய வடபகுதிக்கான மீள் வருகையைக் குறித்து யார் முறையாகச் சிந்தித்திருக்கிறார்கள். ஆகவே நிலைமைகள் கடினமானவையாகவே உள்ளன. இந்த நிலையில் அரசுடன் மோதுவது, பிற அரசியற்கட்சிகளுடன் மோதுவது எல்லாமே மிகக் கடினமானதே.
சாதாரணமாக மாற்று அபிப்பிராயத்தையே தெரிவிக்க முடியாத ஒரு இறுக்கச் சூழல் இலங்கை முழுவதிலும் உள்ளது. படையினரின் - படைப்புலனாய்வின் கண்காணிப்புகளும் அச்சமும் வேறு.
ஆனாலும் இந்தக் கடினமான நிலைமையை உடைக்க வேண்டும். அது முடியும். ஒரு கட்டம்வரையில் முன்னகர்ந்து விட்டால் எதிர்ப்பு அடங்கி விடும். பின்னர் அது வழியைத் திறந்தும் விடும்.
அரசிடம் அல்லது ஆட்சித் தரப்பிடம் உச்ச அதிகாரம் குவியும்போது மக்களிடமும் சமூக வெளியிலும் அதிகாரம் அற்ற நிலை உருவாகிறது. மக்கள் அபாயநிலைகளில் நிறுத்தப்படுகிறார்கள். அப்போது நாடு வெற்றிடமாகிறது.
05. ம்... மேலும் சொல்லுங்கள்?
இந்த இடத்தில்தான் அரசாங்கத்தின் உளவியலைச் சீர்ப்படுத்தும் பணியை ஊடகங்களும் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் செய்ய வேண்டும் என்கிறேன். அரசிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தை மக்களிடமும் சமூகங்களிடமும் பகிரவேண்டும். மீண்டும் யுத்தத்துக்கோ பகை முரணுக்கோ போகமுடியாது. அப்படியான ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இல்லையென்றால், பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளும்தான் உள் விவகாரங்களிற் தலையிடும்.
இன்று மக்களும் களைத்துப்போயிருக்கிறார்கள். அரசாங்கமும் நெருக்கடிகளால் களைத்துப்போய்யிருக்கிறது. மக்களுக்கிருக்கும் நெருக்கடிகளைப்போலவே அரசின் தலைமைப் பொறுப்புகளிலிருப்போருக்கும் நெருக்கடிகள் உள்ளன. நெருக்கடிகளின் தன்மைகளில் வேறுபாடுகளே தவிர, அவற்றின் அழுத்த நிலையில் அரசின் தலைமைக்கே அதிக சுமையுண்டு. ஆகவே இந்த நிலையில் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் மாற்றங்களுக்கா நிறைய செய்ய வேண்டும்.
அதிகாரம் உருவாக்கும் அபாயம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதிலிருந்து யாருமே தப்பி விடமுடியாது.
‘அவர்கள் அவனைக் கைது செய்த போது அவன் ஒரு சோசலிஸ்ட் என்றார்கள்.
அவர்கள் இன்னொருவனைக் கைது செய்தபோது அவன் பகையாளி என்றார்கள்.
அவர்கள் வேறொருவனைச் சுட்டுக்கொன்றபோது அவன் யாரோ என்றார்கள்.
அவர்கள் என் அயலானைக் கடத்தியபோது என்னுடைய கதவுகளைச் சாத்தி வைத்திருந்தேன்.
அவர்கள் என்னைக் கொல்ல வந்தபோது அதைக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை’ என்ற பொருளில் ஒரு கவிதை உண்டு. அதை நினைவிற்கொண்டால் நல்லது.
06. மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கொண்டிருக்கும் அக்கறையை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
இறந்தவர்களுக்காகப் பிதுர்க்கடன் கழிப்பதும், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதும் அவர்களுக்கான மரியாதையாகும். ஆனால், உயிருடனிருப்போருக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களைச் செய்வது அதையும் விட முக்கியமானது.
இனப்பிரச்சினையைத் தீர்வை நோக்கிக் கொண்டு வருவதற்கும் நாட்டில் ஜனநாயக மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கும் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளிப்பதற்கும் முயற்சிக்க வேண்டும்.
07. இன்று போர்க்குற்றங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனித உரிமைகள் அமைப்புளின் செயற்பாடுகள், பங்களிப்புகளைக் குறித்து....?
இதற்கான பதிலையும் முன்னரே சொல்லிவிட்டேன். இறந்தவர்களுக்காகப் பிதுர்க்கடன் கழிப்பதும், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதும் அவர்களுக்கான மரியாதையாகும். ஆனால், உயிருடனிருப்போருக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களைச் செய்வது அதையும் விட முக்கியமானது என்று.
அதைச் செய்யாமல் விட்டுக் கொண்டு, அல்லது அவ்வாறு செய்வதற்கு விரும்பாமல் இருப்பதை மறைப்பதற்கான ஒரு உத்தியாக மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகள் இன்று அமைகின்றன. குறிப்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவை மேற்குலகின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அனுசரணையாகவே செயற்படுபவை என்ற குற்றச்சாட்டுகள் இன்று பகிரங்கமானவை. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளின் மீதான மேற்கின் தலையீட்டுக்கான நியாயங்களை இந்த அமைப்புகளே முன்னிறுத்தின என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால், இந்த அமைப்புகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இவைதான் இந்த மாதிரியான உள்ளுர்ச்சண்டித்தனங்களையும் காட்டேரித்தனங்களையும் கட்டுப்படுத்துவதற்கும் வேண்டியிருக்கு.
08. படைகளின் பெருக்கத்தையும் அவற்றின் ஆதிக்கத்தையும் இன்னும் இலங்கை அரசு கைவிடவில்லையே. இதைக் குறித்து உங்களுடைய
அவதானங்கள் என்ன?
நான் முன்னரே சொல்லியிருப்பதைப் போல அரசாங்கம் இன்று பெரும் உள நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கடந்த கால, நிகழ்காலத்தவறுகள் அதை உளவியல் அச்சத்துக்குள் சிக்க வைத்துள்ளன. ஆகவே அதற்குத் தன்னுடைய அணுகுமுறைகள் தவறென்று தெரிந்திருந்தாலும் அதைக் கைவிடத் தயாரில்லை. ஏனெனில் அரசின் நலன்சார்ந்த – பாதுகாப்புச் சார்ந்த ஒரு பிரச்சினையாக இன்றைய நிலைமைகள் உள்ளன. இதைச் சமாளிப்பதற்கு இறுக்கங்களை ஏற்படுத்துவதே சிறப்பான வழி என்று மகிந்த ராஜபக்ஷ கருதக் கூடும். அல்லது அவர்களுடைய வழிகாட்டிகளும் அவருக்குத் துணையிருப்போரும் இந்த வகையிலேயே உரைக்கக் கூடும்.
ஆனால், இந்த மாதிரி நிலைமையில் எந்தப் படைகளும் எந்தப் போருத்தியும் எத்தகைய போர் அனுபவங்களும் வெற்றியடையாது. இதற்கு ஈராக், லிபியா, ஆப்கான் என்ற அண்மைய உதாரணங்களே உள்ளன.
நாட்டை இலகு படுத்துங்கள். நெகிழ்ச்சியே இன்றைய உலகின் சிறந்த அணுகுமுறை. இது பிள்ளை வளர்ப்புக்கும் பொருந்தும். குடும்ப உறவுக்கும் பொருந்தும். நாட்டுக்கும் பொருந்தும். அரசியலுக்கும் பொருந்தும்.
மூடப்பட்ட அமைப்புகளின் - அணுகுமுறைகளின் - காலம் முடிவடைந்து விட்டது.
00
.jpg)
No comments:
Post a Comment