
கருணாகரனின் இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. “நெருக்கடி மிக்க நம் காலத்தில் - அலைக்கழிந்துகொண்டிருக்கும் என்வாழ்வில் எழுதப்பட்ட கவிதைகளின் ஒரு தொகுதி” என அவர் குறிப்பிட்ட ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் 1999இல் வெளிவந்தது.
“இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை போர் உக்கிரம் பெற்றிருந்த சூழலில், வெளியுலகத்திலிருந்து பலவகையிலும் துண்டிக்கப்பட்டிருந்த ஒரு பிரதேசத்திலிருந்து எழுதப்பட்டவை” என அவர்கூறும் கவிதைகளைக் கொண்ட இரண்டாவது தொகுப்பான ஒரு
பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் 2003இலும் வெளிவந்துள்ளது. இவர், நவீன இலக்கியப் படைப்புக்களினதும் சிறுசஞ்சிகைகளினதும் தீவிர வாசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது ; எண்பதுகளின் நடுக்கூற்றிலிருந்து கவிதைகள் எழுதிவருகிறார்.
அரசியலுக்கு முதன்மை கொடுத்து - கலை இலக்கியப் படைப்புக்களை உருவாக்கும் போக்கு வலுவுடையதாக, இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. கருணாகரனின் கவிதைகளிலும் போர்ச்சூழல், இராணுவ நடவடிக்கையினால் கைவிடப்பட்ட முக்கிய வீதி, அழிக்கப்பட்ட கிராமங்கள், படையினர் மட்டுமுள்ள ஊர், விமானக் குண்டுவீச்சின் கோரம், விமானங்களைச் சுட்டு வீழ்த்துதல், அகதி வாழ்க்கை, மீள்குடியேறிகளின் கதை, சமாதானம், அரசியல் பேச்சுவார்த்தை என்ற பெயரிலான கடந்தகால - நிகழ்காலச் செயற்பாடுகளின்போது காணப்பட்ட ஃ காணப்படும் கபடம், மாறாத அவலச் சூழல், தொடர் ஷெல் வீச்சின்போது ஓயும் பொழுதிற்குக் காத்திருக்கும் தவிப்புநிலை என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், கருணாகரனின் படைப்பு நோக்கு ‘குறுகியதாக’ இல்லாததால், இவரது படைப்புலகினுள் காதல், பிரிவுத்துயர், நிலக்காட்சி, கடலும் மழையும், பூக்களும் வண்ணத்துப்பூச்சியும், நட்பின் துரோகம், முதுமை போன்றவையும் உணர்திறனுடன் உள்வாங்கப்பட்டுள்ளன.
படிமம், உவமை, உருவகம் என்பன கவிதையில் கட்டாயம் கையாளப்படவேண்டுமென்றோ, ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு முறைதான் இருக்கவேண்டுமென்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த பரிமாணங்களைக் கொண்டிருக்கவேண்டுமென்றோ வலியுறுத்துவது தேவையில்லை என நினைக்கிறேன்.
கவிஞனின் அனுபவ உணர்வு தன்னியல்பாக வெளிப்பட்டு, ‘முழுமை’யானதாக வாசக மனதில் தொற்றவைக்கப்படுவதே முக்கியம். அதிக எண்ணிக்கையில் கருணாகரன் எழுதியுள்ள கவிதைகளில் இந்த அம்சங்கள் பரவிக்கிடக்கின்றன. வேறுபட்ட பொருட்புலப்பாட்டிற்கு ஏற்ப ‘முழுமைகூடிய கவிதைகளின்’ வரிகள் அமைந்துள்ளதைக் காணலாம்.
‘சாவு’ இவ்வாறு கூறப்படுகிறது :
“எனது ஊரில் எனது தெருக்களில்
கருநிழல் படர்ந்த முகத்துடன்
எங்கும் மோதி மோதி அலைகிறது.
பச்சைநிற வாகனங்களின் உறுமலில்
அது சிரிக்கிறது.
அந்த வாகனங்களில் அது வருகிறது
வெறிப் பாடலுடன்
அந்நிய மொழியின் கூச்சலுடன்.”
அழிமதி புரிந்து மக்களை அவலங்களிற்குள்ளாக்கிய ‘போர் விமானங்கள்’ சுடப்பட்டதைச் சொல்லும் வரிகள் :
“கெந்திக் கெந்தி நானோடும் போதெனது
உயிர் தேடித் தேடிவந்த பாவத்தின் கூடுகள்
இன்று அழியுண்டு போவதைப் பார்த்தேன்
அஸ்திரங்கள் ஏவிய தேவகுமாரரின்
வெற்றியின் கரம்பற்றி
உரத்துப் பாடினேன்
நன்றியின் உதிரம் கலந்து
என்குரல் திசைகளில் பரவியது.”
காதலரின் தவறான புரிதலையும், பிரிவின் அவலத்தையும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்
“என் மனம் நஞ்சூறிப் போயிற்றென்றும் தேம்பி அழுதாய் ;
நான் மறுத்தேன்.
உன் மனப்பழத்தைப் பேய் தின்று
போயிற்றென்று தவித்தேன்.
... இனி வண்ணத்துப் பூச்சிகளை
ஞாபகங் கொள்வதெங்ஙனம்?
ஒரு பூக்குஞ்சாக இருந்த உன்முகமும்
தலையின் பின்புறம்
ஒளிவட்டம் சுழலுதென்று நீசொன்ன என்முகமும்
நம் கால்களில் மிதிபட்டுச் செத்தன.”
‘காட்சி’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் கருணாகரனின் சித்திரிப்புத்திறனிற்கு வலுவான சாட்சியாக அமைந்துள்ளன :
“கடலைப் பிளந்து ஊடுருவித் தெறிக்கும்
ஒளியில்
தடுமாறி வீழ்கிறது ஒரு பறவை.
சிறகுகளின் நிழல்
நடுங்கும் அலைகளில் பிரதிபலித்துத் துடித்தழிகிறது.
... கடல் பேரின்பத்தில் திளைக்கிறது
அது காற்றின் மடியில் அசைந்தாடுகிறது
கடலில் வீழ்ந்த பறவை
ஒளியைக் கவ்வி
ஒளியிலேறிப் பறக்கிறது மீண்டும்.”
கருணாகரனின் கவிதைகளிலுள்ள பலவீனங்களை இனிப்பார்ப்போம்.
1. தெளிவில்லாத கவிதைகள் : ‘சூழலின் மறுதலிப்பு’
‘உள்முகத் தீ’
‘காற்று அறியும் உண்மை’
‘காலப்பெயர்வு’ போன்றவை.
2. ‘பூக்குங் காலம்’ என்ற கவிதை, சு.வு. டெம்ஸ்ரர் எழுதி, சோ. ப. மொழிபெயர்த்துள்ள
‘நீயும் நானும்’ என்ற கவிதையின் பிரதியாக உள்ளது. பல கவிதைகள் ஏனோ சுந்தர
ராமசாமியின் கவிதைகளை ஞாபகப்படுத்துகின்றன. ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’
என்ற தொகுப்புப்பெயர், சு. ரா. வின், ‘ஒரு நிலவுக்குக் காத்திருத்தல்’ கவிதைத்
தலைப்பை ஞாபகப்படுத்துகின்றமாதிரி!
3. முழுமைகூடாத கவிதைகள் பலவற்றில்,
“பறிக்கப்பட்ட
எனது வீடு எனக்கு வேண்டும்
அந்த வீட்டையும் தோட்டத்தையும்
நான் பெறவேண்டும்
உணவு
உடை
உறையுள் என்பவற்றுடன்
பாதுகாப்பும் மிக மிக அவசியமாகிவிட்டது.”
என்பது போன்ற கவித்துவமற்ற வெறும் கூற்றுக்களும்,
“பௌர்ணமிநாளை
அரசு
புனிதநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது
அதனால் பள்ளி அலுவலகம் அனைத்துக்கும் விடுதலை”
என்பதான வெறும் வசன வரிகளும், வெற்று விபரணங்களும் காணப்படுகின்றன.
4. ‘அழகு’ என்ற கவிதையிலுள்ள,
“மரணத்தின் முத்தம் என் கனவு
அதன் ஸ்பரிசம் என் காதல்”
என்ற இறுதி வரிகள் ‘போலி உணர்வு’ கொண்டதாக உள்ளன.
இவ்வாறே, ‘மரணத்தின் ருசி’ என்ற கவிதையிலும் உள்ளது. ஆரம்பத்தில் ஆட்டுக்குட்டி மீதான கவிஞனின் ‘அனுதாபம்’ வெளிப்படுகிறது. ஆனால் இறுதியில் வரும்,
“... மடிகிறது அது
ருசிக்கிறது நமக்கு”
என்ற வரிகள் கவிஞனின் முந்திய அனுதாபத்தைப் போலியானதாக்கி விடுகின்றன!
5. ‘பகுதிகளாக’வுள்ள குறைபாடுகளினால் பல கவிதைகள் ‘முழுமைகூடாதவையாக’ உள்ளன ; செப்பனிடுதல் நிகழாமையும் காரணமாகலாம். உதாரணமாக, ‘விழியோடிருத்தல்’ என்ற நீண்ட கவிதை சமகால விடயங்களைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது ; ஆனால், அதிலுள்ள சில பகுதிகள் அதன் ‘முழுமை’யைச் சிதைக்கின்றன. அவை செப்பனிடப்பட்டால், இக்கவிதை மிகுந்த முக்கியத்துவங்கொண்டதாக மாறும் என நம்பலாம்!
தொகையளவில் அதிகமான தனிக்கவிதைகளைக் கருணாகரன் எழுதியுள்ளார்.
நெகிழ்ச்சியானமுறையில் அவர் கையாண்டுள்ள பல்வகையான கருப்பொருள்களும், அவற்றை வெளிப்படுத்தும் முறைகளும், மொழிப் பிரயோகமும் அவருக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன. இரண்டாவது தொகுதியில் மேலும் ‘புதிதான தன்மை’யினை உணரமுடிகிறது; ஆயினும், பல கவிதைகள் ‘முழுமைப்படுத்தலுக்கான’ செப்பனிடுதலைக் கோரி நிற்கின்றன.
இவை எல்லாவற்றுடனும் கருணாகரன் முக்கிய கவனிப்புக்குரிய கவிஞர் என்பதில் ஐயமில்லை!
00
தூண்டி - இதழ் யாழ்ப்பாணத்தில் 2004 இல் நடத்திய கவிதைகளைப் பற்றிய ஆயிவரங்கில் வாசிப்பட்ட கட்டுரையிலிருந்து - நன்றி் - நூலகம்.
No comments:
Post a Comment