
யோ. கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு“ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வைப் பற்றிய தொடக்கம்...
00
யோ.கர்ணன் தன்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தலாம் என்று விரும்பினார். ஆனால், அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. அது ஒரு பெரிய போராட்டம். முள்ளிவாய்க்கால் சிரமங்கள், அகதிமுகாம் வாழ்க்கைச் சிரமங்கள், தடுப்புமுகாம் வாழ்க்கைச் சிரமங்களைப் போல அவர் இந்தப் புத்தகத்தின் அறிமுகத்தைச் செய்வதற்கும் சிரமங்களையே படவேண்டியிருந்தது.
கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, அதை நடத்துவது என்பதில், அவர் தொடர்பு கொண்டவர்கள், அவர் எதிர்பார்த்தவர்கள், அவர் விரும்பியவர்களிற் சிலர், அவரை விட்டு, அவருடைய கதைகளை விட்டு விலகிக்கொண்டதே இந்தச் சிரமங்களில் முக்கியமானது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் கலந்து கொள்வோரைத் தீர்மானிக்க முடியாதவராக இருந்தார். கலந்து கொள்ளச் சம்மதித்தவர்கள் மெல்லக் கழன்று கொண்டிருக்கிறார்கள் என்று சோர்வுடன் ஒரு கட்டத்தில் சொன்னார் கர்ணன். ஆனாலும் அவர் தளர்ந்து விடவில்லை.
இறுதியில் சிறப்பாக நடந்தது அறிமுக நிகழ்வு. பல்வேறு தரப்பினரும் நிகழ்வுக்கு வந்திருந்தனர். குப்பிளான் ஐ. சண்முகன் நிகழ்வுக்குத் தலைமை ஏற்றார். பருத்த்தித்துறை “அறிவோர் கூடல்“ அமைப்பைச் சேர்ந்த திரு. குலசிங்கமும் சட்டத்துறையைச் சேர்ந்த குமாரவடிவேல் குருபரனும் “சேகுவேரா இருந்த வீடு“ நூல் தொடர்பாக அபிப்பிராய உரைகளை நிகழ்த்தினர்.
குலசிங்கத்தின் உரை மிகச் சுவாரஷ்யம். அந்த உரையை முழுமையாக யாராவது எழுதினால் அதைப் பிறரும் அறியலாம். அல்லது குலசிங்கமே எழுதலாம்.
குமாரவடிவேல் குருபரன் மாற்றுப்பார்வைகளைக் குறித்து உரையாற்றினார். இளைய தலைமுறையைச் சேர்ந்த அவருடைய உரை கவனத்திற்குரியது. விமர்சனங்களை முன்வைப்போர் தங்களின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும். அல்லது தங்களைப் பற்றி வைக்கப்படும் விமர்சனத்துக்கம் முகம் கொடுக்க வேண்டும் என்றார் அவர். மாற்றுப்பார்வையாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளைக் குறித்துச் சிந்திப்பதும் அவசியம் என்ற அவருடைய கருத்துக் கவனத்திற்குரிய ஒன்று.
இதற்குப் பிறகு தேவாவின் பேச்சு. தேவா “குழந்தைப் போராளிகள்“ மறறும் “அனோனிமா“ என்ற இரண்டு புத்தகங்களை மொழிபெயர்த்திருந்தவர். மிகச் சுருக்கமாக - ஆனால் அழுத்தமாகப் பேசினார். கதைகளின் மையத்தைச் சுட்டியதாக அவருடைய பேச்சிருந்தது.
அடுத்து, நிலாந்தன் யோ.கர்ணனின் எழுத்துகளின் முக்கியத்துவம், அவற்றின் அடையாளம் குறித்து நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் எழுத்து வடிவம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அவர் எழுதுவதைப்போலவே பேசுவார். எழுத்துக்கும் பேச்சுக்குமி்டையில் அதிக இடைவெளியோ வேறுபாடுகளோ இருப்பது குறைவு.
அடுத்தது (கருணாகரனின்) என்னுடைய உரை. கர்ணனின் கதைகள் காயங்களின் கதைகள் என்ற சாரப்பட அமைந்த உரை. சு.குணேஸ்வரன் (துவாரகன்) எல்லோருக்கும் நன்றி சொன்னார்.
நிகழ்வில் கீரன், மித்திரன், தேவா, ரங்கன், ஜோர்ச், தேடகம் கோணேல் போன்ற புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களும், சோ.பத்மநாதன், ஓவியர் ஆ. இராசையா, ஐ.வரதராஜன், தபின் (அம்பலம் - பிரபா), கலைமுகம் ஆசிரியர் செல்மர் எமில், சி.ரமேஸ், தானா. விஷ்ணு () யாத்திரீகன், யோகி, ந.சத்தியபாலன், தயாளன், கலாவண்ணன், ராதேயன், சர்வேஸ் எனப் பல உள்ளுர்வாசிகளும் கலந்துகொண்டனர்.
ஆனால், இலக்கியக் கூட்டங்களில் அதிகமாகப் பங்கெடுக்கும், அதிகாரச் செல்வாக்கைச் செலுத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் - அதனுடைய இலக்கியப் பேச்சாளர்கள், விமர்சகர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. கர்ணன் புத்தகம் தொடர்பாகப் பேசுவதற்கு அழைத்தவர்களில் மறுத்தவர்கள் அல்லது சம்மதித்தபின் கதைகளைப் படித்தபிறகு சங்கடப்பட்டுக் கழன்றவர்கள் இந்தத்தரப்பினர் என்று கர்ணன் சொன்னார். (இந்த நிலையில் இலக்கிய ஆய்வுகளும் மாணவர்களின் இலக்கிய ஆய்வுகளுக்கு வழிகாட்டுவதும், அவற்றை மதிப்பிடுவதும் எப்படியிருக்கும்? இந்தக் கேள்வியை பலரும் நீண்டகாலமாகவே கேட்டு வருகின்றனர்).
ஏறக்குறைய அந்தப் பகுதியினர் இந்த நிகழ்வைத் தவிர்த்திருந்தனர் போலப்பட்டது என்றார் நிகழ்வுக்கு வந்திருந்த ஒரு நண்பர்.
முதல் வெளியாகிய “தேவதைகளின் தீட்டுத்துணி“ இந்தியாவில், புலம்பெயர் நாடுகளி்ல் அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகமாகியிருக்கவில்லை. தேர்ந்த வாசகர்களுடன் மட்டும் நின்று விட்டது. வாசித்த பலரும் கூட அபிப்பிராயங்களைச் சொல்லவில்லை. எந்தப் பத்திரிகையிலும் அல்லது எந்த இலக்கிய இதழ்களிலும் அதைப்பற்றிய விமர்சனங்கள் வந்ததாகவும் இல்லை. இவ்வளவுக்கும் கடந்த ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி “தேவதைகளின் தீட்டுத்துணி“ என்று தேர்ந்தெடுத்து அதைப் பற்றி அறிமுகத்தைச் செய்திருந்தது ஆனந்தவிகடன். இவ்வளவு பகிரங்கப்படுத்தப்படுத்தியும் அந்தத் தொகுதியை இரகசியமாக்கி விட்டது தமிழ்ச்சூழல்.
ஆனால், இப்பொழுது இரண்டு தொகுதிகளுடன் குறுகிய காலத்தில் கவனிப்புக்குரிய ஒருவராக வந்துள்ளார் யோகர்ணன். அடுத்ததாக விரைவில் அவருடைய இன்னொரு புதிய புத்தகத்தை - புதிய எழுத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
அவருடைய புத்தகங்களை வெளியிடும் “ வடலி“ க்கு வாழ்த்துகளும் நன்றியும்.
1 comment:
வாசித்துவிட்டேன். கர்ணனின் ஆக்குதிறமைக்கு மீண்டும் ஒரு சான்று. ஆனால் புத்தகத்தில் நிறையைத் தட்டச்சுப் பிழைகள்; அடுத்த பதிப்பில் திருத்தினாற் போச்சு.
Post a Comment