
அன்றிரவு குருதியொழுகிய பகல் வந்தது
உடைந்து நொறுங்கிய இரவும் வந்தது
கனவுகளைக் கொன்று வெளியே வீசிய பின்
நெருப்பைத் தன்னிதயத்தில் ஏந்திய பெண்ணும் வந்தாள்
புதைகுழிகள் வந்தன
கண்ணீர் நிரம்பிய ஆயிரமாயிரம் பாத்திரங்களோடு
குழந்தைகள் வந்தன.
தங்கள் விதியிலும் வழியிலும் முள்ளடர்ந்ததென்று
சொன்னவாறு சனங்களும் வந்தனர்
உயிரின் ருசி இனிப்போதும் எனச் சலித்தவாறு
வலிமை ஒடுங்கிய தோள்களோடு
தோழர்களும் தளபதிகளும் வந்தனர்.
எல்லாவற்றையும் சிதைத்த பின்
அள்ளிச் செல்லக் காத்திருந்த புயல் வந்தது.
வேர்களெங்கும் நெருப்பூறிய மரங்கள் ஒவ்வொன்றாகச் சாய
இடிந்து விழும் வானத்தோடு
கரைந்தொழுகிய மலர்களும் உதிர்ந்த பறவைகளின் சிறகுகளும் வந்தன.
அக்கணத்திற்தான்
நெருப்புத் துண்டாகக் கனன்று கொண்டிருந்த இதயத்தில்
ஒரு விதை முளைக்குமென்று
நினைத்தது வீண் என்ற எண்ணமும் வந்தது
சனங்களிடம்
மேலும் மேலும் சனங்களிடம்
சனங்களாகிக் கொண்டிருந்த எல்லோரிடமும்
00
1 comment:
உங்களுடைய கவிதை மொழி மாறியிருக்கிறது உணர்வு செறிவும் கவித்தவமும் அதிகரித்திருக்கிறது -----.
Post a Comment