
அமரதாசின் ஒளிப்படங்கள் நூலாக வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டையொட்டி அவருடைய ஒளிப்படக் காட்சியும் கிளிநொச்சியில் நடக்கின்றது. ஒளிப்படக் காட்சியையொட்டி நூல் வெளியிடப்பட்டதா அல்லது நூல் வெளியீட்டையொட்டி ஒளிப்படக் காட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை நூலிலுள்ள படங்களில் தேர்வு செய்யப்பட்டு ஒரு தொகுதிப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நூல் மதிப்பு மற்றும் வெளியீட்டையும் ஒளிப் படக்காட்சியையும் தமிழீழ நண்கலைக் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கின்றது. ஐந்து நாட்கள் முழுநாட்காட்சியும் இறுதிநாள் விமர்சன அரங்கிற்கும் ஏற்பாடு.
நுண்கலைக்கல்லூரி முன்னர் கேணல் கிட்டுவின் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அந்த அனுபவத்தை ஆதராமாகக் கொண்டு அல்லது முன்னனுபவமாக வைத்துக் கொண்டு இந்தக் காட்சியையும் ஒழுங்கமைத்து இருக்கிறது.
அமரதாஸ் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக ஒளிப்படங்களை ஆர்வத்தோடு எடுத்து வந்திருக்கிறார். தனக்கு சாத்தியமான எல்லைவரையில் இயங்கி எடுத்த படங்களை இப்போது பார்வையாளர்களுக்கு அளித்திருக்கிறார்.
அமரதாஸ் ஒளிப்படத்துறையில் ஈடுபடத் தொடங்கிய காலம் ஈழத்தில் கடுமையான யுத்த நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் வீரச்சாவுகளும் சனங்களின் தொகையான மரணங்களும் இடம்பெயர்வு அகதிவாழ்க்கை என்று முற்றிலும் வாழ்க்கை எதிர் முகத்தோடு இயங்கியது. குண்டு வீச்சுகளும் படை நடவடிக்கைகளுமே பெரும் செய்திகளாக இடம்பெற்றிருந்த வேளை அது. அவ்வறான சூழலில் ஒளிப்படங்களை எடுக்கத்தொடங்கிய அமரதாஸ் தேட்டத்தை திரட்டி இப்போது அளிக்கின்றார்.
அமலதாஸ் ஒளியை அதன் நுட்பங்களோடும் வினோதங்களோடும் ஆளவிரும்பும் தன்மையை தன்படங்ளினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளியை வைத்துக் கொண்டு சாகாஸங்களை நிகழ்த்துகிறது வித்தைத்தனம் இது ஒளியை அதன் இயல்பும் தொழிலும் சிதையமல் படமாக்குவது ஒருவகை ஒளியை மெருகூட்டி வித்தையாக வினோதமாகக் காண்பிப்பது. இன்னொருவகை இரண்டுவகையிலும் தனித்தன்மைகளும் சிறப்புகளும் உண்டு. ஆனால் இரண்டும் எதிரெதிர் அடையளமும் இயல்புமுடையவை.
இயல்போடு எளிமையோடும் யதார்த்தம் தொனிக்க ஒளியைக் கையாண்டு அதைக்கலையாக முன்வைப்பது மிகச்சிறப்பானது. இதில் புனைவைவிடவும் யதார்த்தம் நிலை பெறுகிறது. ஆனால் எல்லோரும் இந்த முறையைத்தான் பின்பற்றவேண்டும் என்றில்லை அதேவேளை எப்படியும் படம் எடுக்கலாம் என்றுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
ஒளியை மெருகூட்டி படத்தை எடுக்கும் போது யதார்த்தை மீறிய அழகு புனைவினூடாக கிடைக்கின்றது. இந்த அழகு மனம் காணவிரும்பும் அதீத நிலைகளையும் கனவின் தாகத்தையும் நிரப்பலாம். ஆனால் சூழலின் முகத்தையும் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் உள்ளீட்டையோ அதன் குருதியையோ காணமுடியாது.
அமரதாசின் படங்கள் அநேகம் இந்த வகையைச் சேர்ந்தவை ஒளியினுடாக அவர் எல்லவற்றையும் அழகாக்கும் உத்தியை பின்பற்றுகிறார். இந்த முறையில் தான் அவருக்கு அதிகம் நம்பிக்கையும் உண்டு தமிழில் இதற்கான நல்ல உதாரணம் பாலுகேந்திரா.
பாலுகேந்திரவின்கமெரா எப்போதும் எதையும் அழகாக்கும் கண்ணும் பார்வையும் கொண்டவை. அவரால் ஊட்டியை அழகான ஊட்டியாகவே கான்பிக்கமுடியும் அவருடைய மனிதர்கள் அழகான சூழலும் அழகான நிலைகளிலும் இருக்கின்றார்கள். யதார்த்தத்தில் அப்படியெல்லாம் இருக்குமென்றில்லை ஆனால் அழகு ஈர்ப்பும் கவர்ச்சியும் மிக்கவை. அவருடைய காண்பிய முறைமை திரைக்கு வெளியே ஒன்றாகவும் திரையில் இன்னொன்றாகவும் இருக்கும் இருநிலைக் கொண்ட காண்பியங்கள் அமரதாசின் ஒளிப்படங்களும் இந்த அடிப்படையைக் கொண்டவையாகவே இருக்கின்றன.
பார்க்கும் போது அழகாக இருக்கின்றன வியப்பை ஊட்டுகின்றன குறிப்பாக சிலகாட்சிகள் மற்றும் இயற்கைச் சித்திரங்கள். இந்தப்படங்களில் உள்ள காட்சிகளைப் பின்தொடந்து காட்சிகள் பதிவாகிய இடத்தை என்றேனும் ஓருவர் பார்க்கமுயன்றால் அவருக்கு அங்கே அந்த மாதிரியான இடம் தோற்றம் ரூபம் எதுவும் கிடைக்கும் என்றில்லை இந்தப்படங்களின் வழியாக தன் ஞாபகங்களை மீட்டுக் கொண்டு ஒருவரின் நினைவுப்பரப்பில் இந்தக் காட்சிகளுக்கும் அவரின் பதிவிலுள்ள காட்சிக்கும் இடையில் தொடர்பிருக்கும் என்றில்லை.
அமரதாஸ் தன் திறன்மூலம் ஒளியை தூரிகையாக்கி தனது படங்களை அழகாக்கியிருக்கிறார். அமரதாசின் படங்களில் பொதுக்குணமும் தீவிர நோக்கமும் அழகுதான் அமரதாஸ் அழகுபடுத்தலிலேயே குறியாக இயங்குகிறார். அழகுப்படுத்தல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் பொருந்திவிடாது அது உண்மையிலிருந்து சமயங்களில் விலகியும் விடுகிறது.
உதாரணமாக அமரதாசின் ஸ்கந்தபுரம் பற்றிய படங்களை இங்கே கவனிக்கலாம் படங்களிலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும் யதார்த்தத்திலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும்மிடையிலான வெளி.
ஒருவிவசாயக்கிராமத்தின் சாயலை இந்தப் படங்கள் எந்தளவுக்கு பிரதிபலித்துள்ளது என்ற கேள்வி தானகவே கிளம்புகிறது. அவற்றில் ஸ்கந்தபுரத்தின் கோடையும் மாரியும் அதன் விதைப்புக் காலமும் அறுவடை நாள்களும் தெரிகின்றனவா ஒளி மனம் கேட்கின்றது. தவிர அந்தக் கிராமத்தின் தெருக்களும் வாய்க்கால் கரையும் இந்தப் படங்களின் காட்சியின் விரிவாக உள்ளனவா என்று இந்தக் கேள்விகள் விரிக்கின்றன.
ஆனால் இந்தக் கிராம வாசி ஆச்சரியப்படும் வகையில் அதிசயமாக ஒளியைக் கலைப்படுத்தி அந்த இடங்களை பதிவாக்கியிருக்கிறார். எதையும் அழகாக்கும் பார்வையே அமரதாசின் பிரதான அக்கறையாக இருப்பதால் யாதார்த்தத்திலிருந்து புனைவுகள் நிரம்பி விடுகின்றன அமரதாசின் படங்கள்.
“வாழும் கணங்கள்” என்ற இந்தப் ஒளிப்படத் தொகுதியிலும் காட்சியிலும் உள்ள படங்கள் எல்லவற்றையும் படமாக்கும் முனைப்புடன் எடுக்கப்பட்டுள்ளன. நல்லபடங்கள் முக்கியத்துவம் உள்ளப்படங்கள் இவற்றில் உள்ளன ஆனால் இவற்றை ஒழுங்கமைக்க முடியதவாறு ஏனைய படங்கள் கவனத்தை சிதைக்கின்றன. ஒளிப்படங்களை எடுப்பது வேறு அவற்றை தொகுப்பதிலும் காட்சிப் படுத்துவதிலும் ஒழுங்குகள் அவசியம். இங்கே எடுக்கப்பட்ட எல்லாப்படங்களையும் அடுக்கிவிட வேண்டும் என்ற தவிப்பு நிகழ்ந்திருப்பதினால் காட்சியினூடே பயணிக்கும் பார்வையாளர் சலிப்ப+ட்டப்படுகின்றார்.
எடுக்கப்பட்ட எல்லாக் காட்சிகளையும் அப்படியே தந்தால் அந்தச் சினிமாவை எப்படி ஒருவர் பார்க்க முடியாதோ அதுபோலத் தான் இதுவும். உண்மையில் இந்தத் தொகுதியிலும் காட்சியிலும் தேர்வும் ஒழுங்கமைவும் இருந்திருக்க வேண்டும் அதைக் கவனிக்காததால் தொகுதியிலும் காட்சியிலும் இடம் பெறுகின்ற நல்ல படங்களும் பாதிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. எல்லாமே பதிவாக்கப்பட்டுள்ளன சகல புறங்களினதும் கவனப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. என்ற தன்மை இருக்கின்றதே தவிர அந்த விரிந்த பார்வைக்குறிய அழுத்தமும் பாதிப்பும் இல்லை.
தனித்தனியாக துலக்கமாக தெரிந்த அமரதாசின் ஒளிப்படங்கள் கூடிச் சேரும் போது இன்னும் கூடுதல் துலங்கலை தந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே நிகழ்ந்ததோ எதிர் மாறானது கலவை முறையில் சேந்திருந்தால் கூட அதற்குரிய ஒழுங்குகளையிட்டு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் வன்னியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் முதலாவது தனி நபர் ஒளிப்படக் காட்சி அமரதாஸ் சாத்தியமாக்கிருக்கின்றார் அவருடைய முனைப்புக்கு தமிழீழ நூண்கலைக் கல்லூரி ஆதரவு அளித்திருக்கிறது அதற்கு பாராட்டும் நன்றியும் உண்டு. வன்னியையும் கடந்த பத்தாண்டு கால ஈழத் தமிழரின் வாழ்வையும் தேடும் ஒருவர் இந்த ஒளிப்படக் காட்சியின் மூலம் பெறுகின்ற அனுபவம் பொறுத்து கேள்விகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
00
அமரதாஸின் ஒளிப்படங்கள் - வாழும் கணங்கள் - என்ற பெயரில் நூலாக வெளியாகியிருந்தது. அந்த நூலுக்கான குறிப்புரை. 2007 இல் எழுதப்பட்டது.
00
No comments:
Post a Comment