Thursday, October 11, 2012

நான் என்ன சொல்ல முடியும் உங்களிடம்?















நான் என்ன சொல்ல முடியும் உங்களிடம்?

ஒரு காகித மலர்
மணம் வீசமுடியாமற் திணறும் நீண்டகாலத்தை
ஒவ்வொருவரும் ரகசியமாகவே வைத்திருப்பதால்
நமக்கிடையில் சேர்ந்து கொண்ட துக்கங்களையும்
மிஞ்சிய கழிவிரக்கத்தையும்
என்ன செய்வதென்று தெரியாமற் திணறுவதைப் பற்றி
நான் என்ன சொல்ல முடியும் உங்களிடம்?

ஒவ்வொரு நாட்களுக்கடியிலும் உறைய வைக்கப்பட்ட
அந்தந்த நாட்களின் உயிர்ப்புகளைப்
பிரதியீடு செய்தவற்கு வழியற்ற
நம் கையாலாகாத் தனங்களுக்கும் முறையீடுகளுக்குமாக
ஒரு சமாதியை எப்போது வைப்பது?

கலங்கியிருக்கிறது இந்த நீர் நிலை

ஆகவே
வாழக்கிடைத்த நாட்களைச் சிலுவையிறைதல்
மாபெருங்குற்றம் என்பதை உணர்ந்த வேளையில்
நின்றேன் தண்டனையின் முள்முனையில்.

நம் வாழ்க்கை நம்மால் துரோகமிழைக்கப்பட்டது
அவ்வாறே

காலத்தின் படிக்கட்டுகளில்
கசிந்து கொண்டிருக்கும் குருதியெங்கும்
துரோகத்தின் மணம்.

யார் வரக்கூடும் என்னுடன்
இத்துரோகத்தைக் கொன்று புதைக்க?

ஒரு கயிற்றின் நினைவுகள்
ஊஞ்சலைப் பற்றியதா
சுருக்கிடப்பட்ட கழுத்தைப் பற்றியதா என்பதை
அறியக் காத்திருக்கும் வரலாற்றுக்குறிப்புகளில்
பரிசுகளுக்கும் விருதுகளுக்குமாக
ஒதுக்கப்பட்ட நேரங்களைக் கழிக்கக் கோருகிறேன்.

மிஞ்சியவற்றைக் கணக்கிடுவதற்கிடையில்
ஒரு திரை விழுகிறது எதிர்பாராமல்

மீண்டும் அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில்
இன்னொரு நாடகத்துக்கான அழைப்பு

முடியாது இனியும்.

00

No comments: