Wednesday, October 3, 2012

கறை





காடுகளின் மேலாக வந்த சூரியன்
ஒரு நாள் வெளியில் வர வேண்டியதாயிற்று
அது  வயல் வெளி
வயலில் பயிர்கள் விளைந்தன.
பயிர்களின் மேல் வந்த சூரியன்
நிழலற்றுத் திரிந்தது.

எங்கும் வெயில் எங்கும் ஒளி
ஒளியைத் தலையிற் சூடிய சனங்கள்
சூரிய நமஸ்காரம் செய்தனர்.
ஆடி மகிழ்ந்தனர், கொண்டாடிக் களித்தனர்.

வெளியின் மேலாக, வயலின் மேலாக,
பயிர்களின் மேலாக வந்த சூரியன்
ஒருநாள் பிணங்களின் மேலாக வந்தது

வெளிநிறைந்த பிணங்கள், வயல் நிறைந்த பிணங்கள்
வயலில் விளைந்த பிணங்கள்
அன்று வந்த சூரியன் காடுகளின் மேலாக வந்ததைக் கண்டேன்
அது பிணக்காடு

அந்தக் காட்டில் எங்கும் இருள் எங்கும் கறை
அப்போது சனங்களின் அகத்திலும் இருளே நிறைந்தது
இருளில் ஒருவரை ஒருவர் கொன்று புஸித்தனர்
பிறகு சூரியனையும் கொன்று தின்றனர்.














No comments: