Thursday, October 11, 2012

அளவுகோல்களுக்கப்பாலும் வானம்















ஏதாவதொன்றில் இருக்கிறது ஏதாவதொன்று
அந்த ஏதாவதொன்றை
அறியத் தேவை ஏதாவதொன்று

காட்டை அறியக் கடலை அறிய
கடவுளை அறியக் காதலை அறிய
உன்னை என்னைப் போரைச் சமாதானத்தை
கொன்றவனை மன்னித்தவளை பேயை
துரோகியைத் தியாகியை வரலாற்றை
வெற்றியைத் தோல்வியை அறியவெல்லாம் தேவை
ஏதோவொன்று

அடுக்கக்கடுக்காகத் துயரப் படலங்கள்
கரையமுடியாப் பெருமலை அவள் துக்கம்
அவள் குடலில் செமிபடாத் துக்கத்தை மேலும் சேமிக்கும்
நிகழ்கால அதிகாரத்தின்
பழைய ஞாபகங்களின் வழியாகவே
அவள் அழைத்துச் செல்லப்படுகிறாள் உயிருடன் சுடலைக்கு

ஒவ்வொருவரும் பிணமாக்கப்படும் காலத்தின் முன்னே
அவள் குந்திக் கொண்டிருப்பதைக் கண்டேன்

யுத்த இயந்திரம் எலும்புக்கூடாக்கி
காலத்தின் ஓரத்தில் தள்ளிவிட்டுள்ளது அவளை

இப்போதவள் ஒரு சருகு

அவள் துரோகியா தியாகியா கொலைகளின் ரத்தக்கறை படிந்தவளா?

பனித்திரையாக விரிந்திருக்கும் இரவில்
கொன்றவனை மன்னித்தவள் துரோகியா மேன்மைக்குரியவளா என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

எதற்கும் ஏதாவதொன்றில் இருக்கிறது ஏதாவதொன்று
அந்த ஏதாவதொன்றை அறியத் தேவை ஏதாவதொன்று என்றவர்கள்
அந்த ஏதாவதொன்றை அறியக் காத்திருக்கிறார்கள் இரவும் பகலுமாக.

அவளின் வாடை நிரம்பிய ஒரு சருகு உக்கிக் கொண்டிருந்தது.

வரலாற்றின் குருட்டுத்தனங்கள் மேலும் வளர்ந்து கொண்டிருந்தன
அந்த உக்கிய சருகின் ஈரத்தை உறிஞ்கிக் கொண்டு.

ஏதாவதை அறியத் தேவை ஏதாவதொன்று என்று
அவர்கள் தேடினர் ஏதாவதொன்றை...

அளவுகோல்களுக்கப்பாலும் விரிந்துள்ளது வானம்.

No comments: