எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------
நிழலை விலக்க முடியாதபோது
தோற்றுப் போன போர் வீரன்
பாதுகாப்பில்லாத வெளியில்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்
மூடியிருந்த கதவுகள்
அவனை அச்சமடையச் செய்தன
திறந்திருந்த கதவுகளும்
அபாயமாகவே தோன்றின
இருள் பாதுகாப்பானது என்று தெரிந்த
மறுகணமே அது
பயங்கரங்களின் ஆழ்கிடங்கெனத்திடுக்கிட்டான்
சாவிகள் தாமே இயங்கி
திறந்து கொள்ளும் வேளை கனிந்து கொண்டேயிருக்கும்
என்பதைக்கண்டபோது
பூட்டுகளில் திறப்புக்கான வழிகள்
அவனைப்பார்த்து சிரித்தன.
எந்தப்பூட்டிலும்
எந்தச்சாவியிலும்
திறப்பதற்கான வழியே
எப்போதுமுண்டு என்ற
அந்தக் கேலிப்புன்னகை அவனிடத்தில்
ஒரு குற்றவுணர்ச்சியாகப் படிந்தது
அவன் விலக்கமுடியாத நிழலோடு
சேர்ந்திருக்கவும் முடியாமல்
தன் தலையைத் தானே சீவியெறிந்தான்
பதற்றத்தோடும்
அச்சத்தோடும்
வியர்க்க வியர்க்க
-----------------------------------------
1 comment:
அன்பான கருணாகரன்,
வெளிச்சம் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த காலத்தில் உங்கள் கவிதைகளை வாசித்திருந்தேன்
அண்மைக்காலங்களில் இணையத்தில்.
தற்போது வன்னியில் இருக்கிறீகள் என நினைக்கிறேன்
பேசமுடியாதவற்றைப் பேசுகிற படிமங்களோடு
வருகிற உங்கள் கவிதைகளை அறிமுகம் கொள்வதில் மகிழ்ச்சி.
அன்புடன் தேவ அபிரா
Post a Comment