Wednesday, April 2, 2008

மிச்சம்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------

பயணப் பொதியுள் அடக்க முடியவில்லை

எல்லாவற்றையும்

மிஞ்சிக் கிடக்கும்

ஈரமுலரா நினைவுக் குவியலின் உள்ளிருந்து

ஒரு நூலாக தொடர்ந்து வரும் உயிரிழையில்

ஆலாவின் குரல் மீட்டுகிறது

குளத்தின் சங்கீதத்தை.

அதில் மிதந்து கொண்டிருக்கின்றன

ஆலாவுக்கு அஞ்சி

கோழிக்குஞ்சுகளை காப்பாற்றத்துடிக்கும்

பெரியம்மாவின் பதற்ற ரேகைகளும்

தத்தளிக்கும் மீன்களின் அச்சமும்.



பட்டிப் பூ முகம்

மணற் திட்டில் சிதறிக்கிடக்க

கள்ளு வாசனையோடு தெருநீளம்

பாட்டை விதைத்துப் போகும்

முட்டுக்காய் கணவதியை

குரைத்து விரட்ட முடியாத நாய்கள்

இந்த நினைவுப் குவியலுள்

வாசனையோடு நுழைந்து விட்டன.



கண்ணகி கோவில் முற்றத்தில்

பொங்கலுக்குக்கூடிய சனங்கள் விட்டுப்போன

காலடிகளுக்கடியில் ஒளிந்திருந்து

என்னைக்கண்ட அந்தச் சில்லறைக்காசுகளும்

இந்தப்பயணப் பொதியுள் அடங்கவில்லை

மிஞ்சிக்கிடக்கும் நினைவுக்கட்டியுள்

தகதகத்துக் கொண்டிருக்கும் வெள்ளிகள்

ஒவ்வொன்றையும் எடுத்தபோது

அந்தக்காசுகளில்

துக்கத்தின் ஈரம் படர்ந்திருந்ததைக் கண்டேன்.



முந்திரிக்காட்டு வாசனையில் கிறங்கி

கூத்தாடிய பனந்தோப்பில்

பித்தனின் இராப்பாடல் கேட்க நிலா

பனைகளுக்கிடையே இறங்கி வந்தது.

மொச்சை வீச்சம் நிறைந்த

ஆட்டுக்கார ராசையா எங்கே

திறந்திருக்கும் பட்டியில் ஆடுகளில்லை

என்றபோதும் மணம் வீசுகிறது

காட்டில் மேயப்போன ஆடுகளுடன் போனாரா

இல்லை

இன்னொரு கிறிஸ்துவை

அழைத்துப் போயினவா ஆடுகள் மேய்ச்சற் காட்டுக்கு



முந்திரி வாசம் குடித்த

இராப்பாடகனைச் சுற்றியிருந்த ஊர்ச்சனங்கள்

கூத்துப்பாடலோடு உறங்கிப் போனார்கள்

கொன்றற் பூக்களின் அலங்காரத்தில்

அவிழ்ந்து கிடந்த ஒழுங்கைகளையும்

காட்டு வழியில்

கனிந்திருந்த பழங்களில் விளைந்திருந்த

அழைப்பையும் விட்டு

ஒரு பயணி போகிறான்

ஊரின் தோலை உரித்துக் கொண்டு



தோலுரிந்த ஊரின்

துயரப் பொதிகிடக்கிறது

அவனுள்ளே மலையின் கனதியோடும்

மணலின் விரிவோடும்

அவன் அடக்க முடியாப் பயணப் பொதியின் அருகில்

கிடக்கும் நினைவுக்குவியல் வளர்கிறது

மலையாக

விரிகிறது மணற்பெருக்காக

துயரப்பழம் உடைந்தோடுகிறது நதியாக.
------------------------------------------------

No comments: