Tuesday, April 1, 2008

வடக்குப்படை வீடு

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



வடக்கில் படை வீடுகளிருந்தன



குருதி வடியும் கண்கள் தெறித்துப்புரண்ட

படை வீட்டில்

இருண்ட காலத்தின்

பயங்கரங்கர நிழல்கள் மினுங்கும்

பாழ் கிணறிருந்தது.



பாழ் கிணற்றில் மிதக்கும்

இளம் பெண்களின் விம்மலொலியில்

எப்போதும் படைவீடு

போதை கொண்டது.



கடத்தப்பட்டவரின் தனிமைக்குரல் படிந்த

அந்த வீட்டின் சுவர்களில்

கூரொளிரும் வெண்குருதி வடிந்து கொண்டிருக்கிறது

காயாமலே.

அதில் ஒவ்வொரு வதையிலும்

உயிரணுவின் கண்ணிகள் பிளவுண்டு

ஓலமிட்ட மனிதனின் நிழலும்

அதை விரும்பிப் போதை கொண்டவனின் முகமும்

தெரிகிறது ஓவியத் தொகுதிகள் பலவாக.



வதையின் முன்னே மண்டியிட்டவரின்

ஒவ்வொரு காட்சியையும்

ரசித்துக் கொண்டிருக்கும்

படை அதிகாரியிடம்

தன்னுடைய விருப்பங்களைச் சொல்லத்தயங்குகிறான்

எப்போதும் அதிகாரியின் நிழலைத்

தொழுது கொண்டிருந்த சிப்பாய்.



சிப்பாயின் காதல்

அவனுடைய இதயத்திலும்

அதிகாரியின் காலடியிலும் நசுங்கிக் கொண்டிருக்கிறது

துயரம் மிகக் கொண்ட

ஒரு விசுவாசியின் விசுவாசத்தை

எப்படி எஜமானனிடம் தெரிவிப்பது என்பதை

எத்தனையோ தடவை ஒத்திகை பார்த்தபிறகும்

சறுக்கியே செல்கிறது

அவனுடைய விருப்பங்களைச் சுமந்திருக்கும் குதிரை



தானியக்கதிர்களில்

தன் சப்பாத்துகளையும் காதலியின் கடிதங்களையும்

மறைத்து வைக்க விரும்பும்

படைச்சிப்பாய்

பூங்காட்டில் தனக்கான பெண்பறவையை தேடிக் கொண்டிருக்கிறான்

ஆற்றில் இறங்குவதற்கு முன்னர்



வடக்குப்படை வீட்டில் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும்

இளம் பெண்களின் முனகலொலியில்

நடுங்குகின்றன இலைகள் ஒவ்வொன்றும்



சிப்பாயின் காதில் விழுகிறது

அவனுடைய காதலியின் குரலும்

அவள் சிந்தும் அன்பின் துளிகளும்.


வடக்குப் படை வீட்டில்

மறுநாள் சிப்பாய்களின் கலங்கிய விழிகளினூடே

காலைச் சூரியன் தயங்கிவந்தபோது

அதிகாரியின் மரணத்தை கொலை என்று

அறிக்கையிட்டுக் கொண்டிருந்தார்கள்

விசாரணை அதிகாரிகள்.
----------------------------------------

No comments: