Tuesday, April 1, 2008

தூக்கத்தை தொலைத்த கிழவன்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------

பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்துப் போகும்
இளமைக்காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்குமிடையில் கிடந்து அவிகிறான்

இருளைக் குவித்து வைத்திருக்கும்
அந்த வீட்டில்
பிள்ளைகளின் குரல்கள்
சத்தத்தை அடக்கி
சுவர்களில் படிந்திருப்பதாக நம்பும் கிழவன்
அந்தக்குரல்கள் அதிகாலையில் ஒலிக்காதா
என்று விழித்திருக்கிறான்.

ஒரு முனையில்
கிழவன் முன்னிரவில் பேசும்போது
அதே கணம்
மறு முனையில்
பிள்ளை பதிலளிக்கிறான் அதிகாலையில்.
இந்தக் கால முரணுக்கிடையில்
தன்னைக் கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான
கருணையில்.

அதிகாலையில் நிராதரவின் தத்தளிப்பு நிரம்பிய
கிழவனின் குரலை
கருணையுள்ள தொலைபேசி
எடுத்துச் செல்ல முயன்றபோதும்
முடியவில்லை
பிள்ளையின் இரவு கதவைச் சாத்தியிருந்தது
ஆழ்ந்த உறக்கத்தில்.

அப்போது அங்கே நள்ளிரவு

வழியற்ற கிழவன்
தன்னுடைய சூரியனை பின்னிரவிலிருந்து
பெயர்த்தெடுத்து அனுப்புகிறான்
பிள்ளையின் குரலை அது எழுப்பட்டுமென்று.

வௌ;வேறு கண்டங்களுக்கிடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்து துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளையென்றும்
அங்கும் இங்குமாக

உலகம் சுருங்கியதென்று சொன்னவர் வாயில்
கொப்பளிக்கும் கண்ணீரை
எந்தப் போத்தலில் அடைப்பேன்.
---------------------------------------------------

No comments: