எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------
ஆதியிலே மாமிசம் இருந்தது
அதன்பிறகும் மாமிசம் இருந்தது
கனிகளினுள்ளே காயங்களோடு
காயத்தின் மீது கனிச் சுவைததும்ப
மலரின் மென்னிதழ் விளிம்பெலாம்
கலந்து பரவியது
மாமிச வாடையும் கனிமலர் கலந்த வாசனையும்.
இப்போதும் மாமிசத்தை
வாங்கிப்போகும் பெண்ணிடம்
எதைக் கேட்பது
இந்தப் பசிக்கு.
அவளுடலின் இரத்தவாடையை
அவளுடலின் பால் வீச்சத்தை
மறைத்துக் கொண்டு அவள் போகிறாள்
காற்றையும் அள்ளிக் கொண்டு போகும்
மாபெரும் சமுத்திர அலைகள் தானென்று.
பெண்ணுடலில் விளைந்த
மலைகளையும் ஆறுகள் நிலப்படுகைகளையும்
வெளிகள் சமுத்திரங்களையும் கடந்து
மலர்களையும்
பசுமை நிரம்பிய இலைகளையும்
சுவையூறிய கனிகளையும்
அள்ளிக் கொண்டேன்
அவளுடலில் திளைத்துக் கொண்டிருந்த
மாமிச வாடை மெல்லக் கிpளர்த்தியது
என்னையொரு மிருகமாக.
நான் தோற்றேன்
அத்தனை கால பிரார்த்தனையிலும்.
அவளுள்ளிருந்த கள்ளின் ஊற்றை
பெருக்கிவிட்ட பின் பாய்ந்தது காம அருவி
என்னுடலை இப்போது மாமிசமாக்கி உண்டாள்
அப்பெண் தன்பசி யெல்லாம் தீர.
காலமுழுதும் அடக்கிய அவள் பசிக்கு
என்னைத்தின்னக் கொடுத்தேன்
முடிவற்று
என்பசியும் அடங்கவில்லை முடிந்து
2
ஆதியிலே மாமிசம் இருந்தது
அதன் பிறகும் மாமிசம் இருந்தது
என்றான் ஒரு நண்பன் பெண்ணுடலில்
தன்னை இறக்கிக் கொண்டே
அவன் அறிய அறிய
அவளின் ஆழம் பெருகியது
மாபெரும் சமுத்திரமாகி
எண்ணத்தீரா அலைகளாகியும்.
அவளும் அறிந்ததில்லை
அவனும் ஒரு மாபெரும் சமுத்திரம் தானென்று.
ஆதியிலே மாமிசமிருந்தது
அதன் பிறகும் மாமிசம் இருந்தது
இப்போதும் மாமிசம் இருக்கிறது
00
அவர்கள் போன பிறகு
அவள் கேட்டாள்
இவர்கள்தானா அவர்கள் என்று
அவர்கள்தான் இவர்கள் என்றேன்
இவர்களைப்போல அவர்கள்
என்றும் சொன்னேன்
இவர்களுக்கும் அவர்களுக்குமிடையில்
என்னதான் இருக்கிறது
என்று மீண்டும் அவள் கேட்டாள்
அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்தவர்களும் வராதவர்களும்
இவர்களும் அவர்களும்தான்
என்று நான் தெரிவதெப்படி
அவள் விளங்குவதெப்படி
இதையெல்லாம் நகுலன் எப்படிச் சொல்வார்.
------------------------------------------------------------
No comments:
Post a Comment