
கடவுள் தன்னை விசுவாசிக்கக் கோருகிறார்.
தனது பரலோகத்திற் கழைப்பதற்கு என்னைத் தூய்மையாளனாக இருக்கும்படி கோருகிறார்.
மேலும் அன்பாக இருக்கும் படியும்
எல்லோரையும் மன்னிக்கும் படியும்
அநீதிகளை ஒழிக்கும் படியும்
அறத்துக்குச் சாட்சியாயிருக்கும் படியும் கட்டளையிடுகிறார்.
நான் கடவுளிடம் நேசமாகவும் நட்பாகவும் இருக்க விரும்புகிறேன்.
கடவுளின் ஆணையும் வாக்குகளும் என்னை ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.
ஆனாலும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்தச் சேரியில்
பொய்யும் களவும் அநீதியும் வன்முறையும் நிரம்பிய (சாத்தானின்) உலகத்தில்
என்னைக் கடவுள் வாழ நிர்ப்பந்தித்ததின் காரணத்தினால்
எல்லோருடனும் அன்பாக இருந்தாலும் சண்டையிட நேர்கிறது.
எல்லோரையும் மன்னிக்க நேர்ந்தாலும் பகைமையே முற்றுகிறது.
அநீதிக்கெதிராகப் போராட வேண்டுமெனில்
எப்படியோ அறத்தில் வீழ்ச்சியேற்படுகிறது.
00
புனிதமான அப் பரலோகத்திற் கென்னை அழைக்கு முன்
இகலோகத்தில் என்னை உம்முடைய புதல்வனாக ஏற்றுக் கொள்ளும்
அப்படியே
இந்தச் சேரியையும் உமது பரலோகத்தின் ஒளியை ஊட்டி ஆளும்
வசையும் திருட்டும் பகையும் கொடுமையும் அநீதியும் நிரம்பிய
இந்த அயலை
வல்லமையுடன் மாற்றியருளும் தேவனே!
ஆமென்.
தவிர்த்து,
உமது பரலோகத்திற் கழைப்பதற்கு என்னைத் தூய்மையாளனாக இருக்கும்படி கோருவதும்
மேலும்
அன்பாக இருக்கும் படியும்
எல்லோரையும் மன்னிக்கும் படியும்
அநீதிகளை ஒழிக்கும் படியும்
அறத்துக்குச் சாட்சியாயிருக்கும் படியும்
கட்டளையிடுவதில் நியாமில்லை.
உம்மால் படைத்தருளப் பட்ட சாத்தான் என்னையும் விடப்
பல்லாயிரம் மடங்கு வல்லமையோடு
உம் நிழலைப் போலவே காலம் நீளத்துக்குமிருக்கையில்
என்னைக் கட்டளையிடுவது என்ன நியாயமோ!
பரலோகக் கனவிற்கென்னை அழைப்பதாயின்
வலிய சாத்தானின் முன்னே
உம்முடைய கட்டளைகளுக்கு எப்படி நான் ஒப்புதலளிப்பேன்?
ஆகவே என்னிலையை அறிந்தபி்ன் உம் நிபந்தனையை விதித்தருளும் ஆண்டவரே!
0
கடவுளாக இருப்பதை விடவும்
சாத்தான் கடவுளாவதும்
கடவுள் சாத்தானாவதும் மிகச் சுலபம்
00
1 comment:
>கடவுளாக இருப்பதை விடவும்
சாத்தான் கடவுளாவதும்
கடவுள் சாத்தானாவதும் மிகச் சுலபம்
ரசித்தேன் :-)
Post a Comment