Thursday, January 5, 2012

அழகிய பறவை
















ஒரு பறவை என்னோடு நட்பாகியிருந்தது
அதன் சிறகுகள்
அழகானவை என்றனர் சிலர்

அவை கம்பீரமானவை என்றேன் நான்.

அழகிய பறவையின் கூடு
அதன் வீடு என்றனர் அவர்கள்

வெளியே வீடு என்றாகிய பறவையிடம்
கூட்டின் எண்ணங்கள் எப்படியிருக்கும்?

விரிந்த கடலும்
பரந்த வெளியும்
சுடர்ந்த ஞானமும்
கொண்ட தப் பறவை
என்னுடன் நட்பாகியிருந்தது.

அந்திபகல் என்ற பேதங்கள்
இல்லாத பறவையின்
பறத்தல் சுகத்தை
சிறகின் வீரியத்தைக் காணுதலுற்றேன்

ஆற்றலொடு பறந்து
வானில் மிதக்கும் அப்பறவையிடம்
சிறிய வட்டங்களேதுமில்லை.

விர்ரெனப்பறந்து மேலெழும்
பிறகு
சட்டென விரைந்து
கீழே குதித்து
மடிமீதமரும்.

என்ன ஆச்சரியம்!
இரவிலும் பகலிலும்
அப்பறவை பறந்து திரிந்தது
அந்தி பகல்
என்ற பேதங்களின்றி
வீரத்துடன்
கம்பீரத்துடன்.

அதுவே அழகென்றேன் நான்.

00

No comments: