
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால்
இந்த அவசரத்துக்கு
என்ன நடந்து விடப்போகிறது
என்ன நடக்காமல் விடப்போகிறது?
தயக்கமுறும் நிழல்கள்
பின்னகர
இருளின் வாசம் நம் மீது கவிகையில்
அவிழும் நினைவுகளில்
எது யாரிடம்
எது யாரிடமுமில்லை?
ஒருமித்த ஞாபகங்களை
விலக்கும் கணங்கள்
எதிரெதிர் முனைகளில்
காந்த விசையைப் பெயர்த்தனவா?
அறியேன்
எறும்புகளின் வன்முறைகளில்
உண்டா அடையாளமும்
பிரகடனமும்
அவற்றின் சினேசிகத்திற்கு
இருக்கிறதா பாடலும் இசைக்குறிப்புகளும்?
துக்கத்தின் வலியில் சிதறுண்ட
எறும்புகளின் பாதையில்
ஏதேனுமொரு ஞாபகத்துண்டைப்
பார்த்தாயா?
பறவைகளிலும் பூக்களிலும்
உன்னைப் பகிர்ந்தளித்து விட்டுப் போனாய் கரைந்து
யாசகனாய் நான்.
தவிர்க்க முடியாதவாறு
நம் தனிமைக்குள் ஊடுருவி
நெடும் பயணம் நிகழ்கின்றன
உன் கண்கள் எடுத்து வந்த காட்சிகள்.
எந்த வாசலிலும் இல்லை
யாருடைய வரவேற்பும்
பனிவிலகத் துடித்தெழும் தெருவில்
ஒரு பள்ளிச் சிறுமி
நகர மறுத்த காலப் புள்ளியில்
நின்று விளையாடுகிறாள்
நீயும் விளையாடுகிறாயா
கமெராவுடன்
திகைத்து நின்று
வழிமறிக்கும் நமதன்பு
தத்தளிப்புடன்.
2 comments:
ரசித்தேன் :-)
good
Post a Comment