
எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------------------
நவீன ஈழத்தமிழ் வாழ்க்கையை அல்லது சமகால ஈழத்தமிழர்களின் நிலையை வாசுதேவன் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியிலிருந்து அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழர் அவல வாழ்வின் உக்கிர நிலையே வாசுதேவன் கவிதைகள். அவற்றை அவர் தன்னனுபவங்களின் வழியிலும் தன்னுடைய தரிசனங்களின் வழியாகவும் கவிதையில். முன்வைக்கிறார். அதிலும் புலம்பெயர்தலின் கசப்பான பிராந்தியத்தை அவர் தன் கவிதைகளில் நிரப்புகிறார். ஆனால் அது புலம்பலாக இல்லை. பகிர்தலான முறையில்.
இதன்படி எல்லா ஈழத்தமிழ்க்கவிஞர்களைப் போலவும் வாசுதேவனும் அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். அதை விட்டு விலக அவரால் முடியவில்லை. அரசியல் ஈழத்தமிழர்களை மிக ஆழமாகப் பாதித்துள்ளது. இன்னும் அது அவர்களைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நேரடிப்பாதிப்பு. அவலமும் வலியும் வேதனையும் நிரம்பிய பாதிப்பு அது. சொந்த நிலத்திலும் அவர்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாதுகாப்புக் கருதி வேறு நிலத்துக்கு சென்றாலும் அங்கேயும் அவலமும் துயரமும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பண்பாட்டாலும் திணைகளாலும் ஒத்த இயல்புடைய தமிழகத்துக்கு பெரும் நம்பிக்கையோடு ஆறுதல் தேடிச் சென்றால் அங்கேயும் அவர்களை வரவேற்க அவலம் காத்திருக்கிறது.
புலம்பெயர்ந்து வேறு திணைக்கு விலகிச் சென்றாலும் அங்கும் நிழலாகவும் நிஜமாகவும் தொடருகின்ற அவலம் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் கொடுமையான யதார்த்தம். இது தனியாக விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய விசயம். அதற்கு இங்கே சாத்தியமில்லை. ஆனால் எந்த ஈழத்தமிழ்க்கவிஞரைப்பற்றியும் எழுதும் போது இந்த அரசியல் விளக்கத்தை முன்னோட்டமாக சிறு குறிப்பாகவேனும் எழுதவே வேண்டியிருக்கிறது. அதிலும் பலம்பெயர் கவிஞர்களாயின் கட்டாயம் இது தவிர்க்க முடியாதது.
ஈழத்தமிழர் வாழ்க்கை இன்று சந்தித்திருக்கிற நெருக்கடியே அவர்களின் எல்லாப்படைப்புகளிலும் முதன்மைப்படுகின்றன. அதனால்தான் அவர்களுடைய படைப்புகள் அரசியல் முதன்மையுடனிருக்கின்றன. படைப்புகளின் கூறுகளைச் சிதைக்காமல் இந்த மையத்தில் ஈழத்தமிழ்ப்படைப்புகள் இருப்பது ஆறுதல். இதற்கு சில பொதுவான அனுபவத்தை ஈழப்படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள். அதுவே அவர்களைச் சரிய விடாது முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஒடுக்கப்படுகின்ற இனங்களின், சமூகங்களின், நாடுகளின் படைப்புகள் தவிர்க்க முடியாமல் அவர்கள் சந்திக்கின்ற நெருக்கடிகளையே மையத்திற் கொள்கின்றன. படைப்பை தமது அரசியல் வழிமுறையின் ஒரு பகுதியாகவும் அவர்கள் கொள்கின்றனர். ஏன் சிலபோது சில இடங்களில் படைப்பே பிரதான அரசியற்பாதையாகவும் இருந்திருக்கிறது. படைப்பெனும்போது தனியே இலக்கியம் மட்டுமல்ல. சகல கலைகளும் அதில் அடங்கும். ஒளிப்படம் சினிமா எனச்சகலதும். ஆனால் தமிழில் இது விளங்கப்பட்ட முறையோ வேறு. அரசியற் படைப்பு என்று அது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் நிலை இன்னும் மோசமானது. தட்டையான, பொய்க்கூறுகளும் புனைவுகளும் நிரம்பி வெறும் பிரச்சார நெடி வீசும் விதமாகவே இது இருக்கிறது. பொதுவாக அரசியல் அமைப்புகளோடும் தரப்புகளோடும் அடையாளம் காட்டி நிற்போர் அரசியல் படைப்புகள் என்ற பெயரில் அதிகாரத்தரப்புக்கு அல்லது அதிகாரத்தை நோக்கிய தரப்புக்கு ஏற்ப தமது மொழியையும் வெளிப்பாட்டையும் உருவாக்குகின்றனர். அதனால் அவர்களின் படைப்புகளில் உண்மை இல்லாமற் போய்விடுகிறது. சார்பு நிலையில் உண்மைக்கு இடமில்லை. அங்கே உண்மை பல சந்தர்ப்பங்களிலும் திரையிடப்படுகிறது. உண்மையற்ற படைப்பு பாவனை நிரம்பிய வெற்று மொழியினால் அலங்காரமாக்கப்பட்டு உண்மைபோல முன்வைக்கப்படுகிறது. பித்தளைக்கு பொன்பூசும் தொழில் இது. அதைத் தவிர வேறு வழியில்லை. பொய்யான கனவும் மயக்கமும் நிரம்பிய குரல் அது.
ஆனால் வாசுதேவனைப் போல எழுதும் ஈழத்தமிழ்ப்படைப்பாளர்கள் பலரும் இதிலிருந்து விலகியே நிற்கின்றனர். பாவனையற்ற முறையில் வாழ்வை நெருங்கும் படைப்பு முறையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் அரசியலை மையப்படுத்தி கவிதையின் இயக்கம் நிகழ்வதால் எளிமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த எளிமை இன்று நவீன கவிதையில் வளர்ச்சி பெற்று வருகிறது
தமிழகத்தில் இதற்கு சிறந்த உதாரணம் ஆத்மாநாம். தவிர மு.சுயம்புலிங்கம் தொடக்கம் மனுஷ்ய புத்திரன், மாலதி மைத்திரி, சல்மா என்றொரு நீட்சி உண்டு. அண்மைக்காலத்தில் தமிழகத்தில் இந்தப் போக்கு இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. தங்கள் காலம் இடம் மற்றும் நிகழ்வுகள் குறித்த புறப்பிரக்ஞை படைப்புகளில் மையப்படுத்தப்படுகின்றன.
பொதுவாக ஈழத்திலக்கியம் தொடர்ச்சியாக அரசியலில் மையங்கொண்டது என்பதால் பாவனைகளிலிருந்தும் பிரச்சார உத்திகளிலிருந்தும் விலகி அது தன்னுள் செழுமையடைய வேண்டிய நிலைக்கானது. இதற்கு இனவொடுக்குமுறையைச் சந்தித்த சமூகங்களின் குரலையும் படைப்புகளையும் அது முன்னனுபவமாகக் கொண்டது. இங்கே எம்.ஏ.நுகமான் மொழிபெயர்த்து தொகுத்த பலஸ்தீனக்கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. ஈழத்துக்கும் பலஸ்தீனத்துக்கும் பொதுவான அம்சங்கள் ஒருமித்திருந்ததால் அந்தக் கவிதைகள் மிக நெருக்கமாக உணரப்பட்டன. ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் உந்துதலுக்கான ஊக்கவிசையை அப்போது பலஸ்தீனக்கவிதைகள் தந்தன. அதைப்போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் சனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம், அரச பயங்கரவாதம் போன்றவற்றை முன்வைக்கவும் கூடியமாதிரிகளை பலஸ்தீனக்கவிதைகள் உருவாக்கின. சர்வதேச ரீதியான அறிமுகத்தையும் கவனத்தையும் கொண்டிருந்த அத்தகைய படைப்புகளின் அறிமுகமும் பரிச்சயமும் தவிர்க்க முடியாமல் ஈழத்தின் அரசியற் படைப்புகளில் செல்வாக்குச் செலுத்தி செழுமையை ஏற்படுத்தின.
தொடர்ந்து ஆபிரிக்கக் கவிதைகள், தென்னமெரிக்கக் கவிதைகள் என்று அந்தச் செழுமை அரசியல் ரீதியான ஈழத்திலக்கியத்தின் அடையாளத்துக்கு உதவியிருக்கின்றன. ஆனால் ஈழத்திலக்கியத்திலும் பாவனைக்குரலும் பொய்மொழியும் இல்லாமலில்லை. அதிலும் இனஒடுக்குமுறை, ஆயதப்போராட்டம் என்ற வகையில் அது பல இடங்களில் பலவிதங்களில் உண்டு. அவை பற்றி இங்கே இப்போது விவாதிக்கப்படவில்லை. இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறிடத்தில் பார்க்கலாம்.
அரசியல் நேரடியாக வலுவான முறையில் வாழ்வை பாதிக்கும்போது அதை எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தம் தவிர்க்க முடியாதது. ஈழ வாழ்வு இன்று இத்தகைய நிலையையே எதிர்கொள்கிறது. சொந்த நிலத்தில் அரச பயங்கரவாதம் தமிழ், ஆயதக்குழுக்களின் பயங்கரவாதம், தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பிற தேசங்களுக்குப் போனால் அங்கே வேரிழந்த நிலை. அடிமை வாழ்க்கை அல்லது இரண்டாம் மூன்றாம் நிலையில் வைத்து அந்த மக்களால் பார்க்கப்படும் அவலம். ஆக சொந்த நிலத்திலும் அவலம். பெயர்ந்த நிலங்களிலும் அவலம். அவலத்தில் உழலும் கொடுவிதி இன்று ஈழத்தமிரின் வாழ்வும் கதையுமாகியுள்ளது.
இத்தகைய பின்புலத்தில்தான் வாசுதேவனின் கவிதைகள் உள்ளன. இந்த அடிப்படையில் வைத்தே அவருடைய கவிதைகளை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அல்லது அவருடைய கவிதைகளைப்படிக்கும் போது இந்த விசயங்கள் நமது மனதில் இந்த வாழ்வின் துயர்நிறைச்சித்திரமாகின்றன.
வாழ் களத்தினதும் வாழ் காலத்தினதும் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியத்தை புறக்கணிக்க முடியாத நிலையின் வெளிப்பாடு இது. இதுவே வாசுதேவனிடத்தில் கவிதைகளாகியிருக்கின்றன. பொதுவாக வுhசுதேவனின் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்வாழ்வைப்பற்றியவை. தாய் நிலத்தை இழந்த அந்தரிப்பின் வலி இவற்றில் முக்கியமடைந்துள்ளன. இதற்கு இந்தத் தொகையிலுள்ள பல கவிதைகள் ஆதாரம்.
கறுப்புப் பெட்டி பற்றி
எனக்குத் தெரியும்
யாரும் எதிர்பாராத
ஒரு கணத்தில்
எந்த ராடருக்கும்
அகப்படாத
ஒரு புனைவு வெளியில்
நான் உடைந்து நொறுங்கி
வீழ்ந்த பின்னர்
நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து
எனது கறுப்புப்
பெட்டிகளைத் தேடுவீர்கள்
அராலி வெளியில்
தாளம்பூப்பற்றைக்குள்
அவற்றை நான் கழற்றி எறிந்து
பல வருடங்களாகி விட்டன என்பதை
இப்போதே
சொல்லி விடுகின்றேன்
நேரத்தை விரயம் செய்யாது
பாதையைப் பார்த்து
பயணம் செய்யுங்கள்.
மிகச் சாதாரண வார்த்தைகளின் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தி தன்னிலையை முன்வைத்து புலம்பெயரிகளின் பொது உளவியலை காட்டுகிறார் வாசுதேவன். இதுவே அவருடைய கவிதைகளின் பொதுக்குணம். அதேவேளை இதை அவர் எளிமையாகச் சொல்லி ஆழமமாக உணர வைக்கிறார். இந்த எளிமை அசாதாரணமானது. நேரடித்தன்மை கொண்ட வார்த்தைகள், வரிகளின் மூலம் கவித்துவத்தை உருவாக்கி தன்னுடைய கவிதையை நிறுவுகிறார் வாசு. வாசுதேவனின் இந்த எளிமையை நாம் தா. இராமலிங்கத்திடமும் காணலாம். சாதாரண சொற்களின் மூலம் கவிதையை கட்டியெழுப்பும் ஆற்றல் இது. இதில் வெற்றி பெற்றவர் தா.இராமலிங்கம். இப்போது இதில் வெற்றியடைந்திருக்கிறார் வாசுதேவன்.
இந்த எளிமை என்பது வெளிப்பார்வையில் மிகச் சாதாரணம் போலத் தோன்றுவது. நம்மால் இந்தமாதிரி பல விசயங்களை மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று தென்படுவது. ஆனால் அதில் ஈடுபடும்போது அது அவ்வளவு சுலபமாக இல்லை என்பது அப்போதுதான் தெரியவரும். இதில் வேடிக்கை என்னவென்றால், எளிமை என்பது இப்போது நடைமுறையில் மிகக்கடினமானதாகிவிட்டது. அதைப்பின்பற்றுவது சிரமமாகவுளன்ளது. இது சுவாரஷ்யமான முரண். காந்தியின் எளிமை இப்போது எவ்வளவு கடினமானதாக ஒவ்வொருவராலும் உணரப்படுகிறது. சேயின் எளிமையை எளிதில் எந்தப்புரட்சிவாதியாலும் அணுகமுடியாதிருக்கிறது. இதுதான் இன்றைய அவலமும் அபத்தமும். இதுதான் மொழியிலும் மொழிதலிலும் நிகழ்கிறது.
தா. இராமலிங்கம் எளிமையின் மூலம் தன் கவிதைகளைக் கட்டமைத்தவர். மிகச் சாதாரண சொற்கள். நாம் அறிந்து புழங்கிய சொற்கள். மிக எளிய வரிகள். ஆனால் அவை கொள்ளும் உணர்வொழுங்கினால் கவி வடிவத்தை அடைந்தவை. அதைப்போல வாசுதேவன் இப்போது தன்னுடைய கவிதைகளை இன்னொரு வகையில் எளிமையாக்கித்தருக்pறார். இரு எளிமைகளும் வேறு வேறானவை.
இந்த எளிமைக்கு உதாரணமாக எவ்விடம் எவ்விடம், யாதும் ஊரே யாவரும் கேளீர், மனமெனும் மரங்கொத்தி, இசை மூலம், பூனை ஞபகங்கள், வெள்ளத்தில், கொரூரம், பிரிந்துபோன ஆடுகள், அரிசிப்போராட்;டம், மேடை, ஆதியிலே தனிமையிருந்தது, அறிவுப்புற்று நோய், அவ்வளவேதான் நான், கனவுகளைத்தேடி, மீளவரல், ஓவியம், காணவல்லாயோ, தீதோ நீ சொல் தீயே, நாளையின் நேற்றை நாள், தரகர்கள் வேண்டாத என் கடவுள்கள், இல்லாமலிருத்தல், இலக்கியம், ஒத்த கருத்து, எல்லாமே தயாராகி விட்டது, வேரெரிப்பு, உலகம் உனக்காக, இறுதிப்பதில், கறுப்புப் பெட்டிபற்றி, போய்வருகிறேன் ஆகிய கவிதைகள் உள்ளன.
வாசுதேவனின் கவிதைகள் இந்தத் தொகையில் இரண்டு வகையானவையாக இருக்கின்றன. ஒன்று எளிமை என்றால் அடுத்தவை அதனிலிருந்து சற்று மாறுதலானவையாக உள்ளன. இதற்கு முன்றாவது துளை, தொலைவில், கோடோ வரும் வரையும், தத்துவத்தின் தோல்வி அல்லது தோல்வியின் தத்துவம், கற்றதை (அ)கற்றலில், பலஸ்தீனப்பாதை, துளிக்குள் ஒரு தியான வெளி, அவ்வவாறுரைத்தான் ஸாரத்துஸ்த்ரா, அபத்தங்கள், பொய்கூறி விழும் ப+, துணையற்ற பயணங்கள், காஞ்சாவிற்குப்பின் ஆகிய கவிதைகளைக் காணலாம். இவையும் எளிமையின் தடத்தில்தான் பயணிக்கின்றன. ஆனால் இவற்றின் வெறிப்பாடு சற்று வேறானது. பொருளுணர்த்து முறையில் இவை சற்று மாறுபடுதலைக் கொண்டிருக்கின்றன.
வாசுதேவன் கவிதைகளின் பொது அம்சம் புலம்பெயர்தலின் வலியே. இது பொதுவாகவே புலம் பெயர்ந்த எல்லா ஈழத்தமிழ்க்கவிஞர்களிடமும் உள்ள பொதுவான அம்சம்தான். ஆனால் அதற்குமப்பால் மற்றவர்களை விட வாசுதேவன் இன்னும் விரிவு கொண்டு பயணித்துள்ளார். அந்தப்பயணம்தான் அவரை கவனிக்கத் தூண்டுகிறது.
இவற்றை நாம் தொகுத்துப்பார்க்க வேண்டும். புலம் பெயர் ஈழக்கவிஞர்கள் பல தேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்வதால் எல்லாப்புலம் பெயரிகளின் பிரச்சினையும் உணர்வுகளும் ஒரே விதமானவையல்ல. சில அம்சங்களில் அவர்களுடைய உணர்வுகளில் பொதுத்தன்மை இருந்தாலும் வௌ;வேறு தேசங்களில் வௌ;வேறு அரசியல், புவியியல், பண்பாடுகள் கொண்ட சமூகங்களுடன் அவர்கள் கொள்கின்ற உறவாடல் அல்லது கொள்ள வேண்டிய உறவு நிலை அவர்களுக்கிடையிலான முரண்களையும் அவற்றின் விளைவான பிரச்சினைகள் அனுபவங்களையும் வேறுவேறாகவே தருகின்றன.
தமிழ்க்கவிதையில் இதுவொரு புதிய அம்சம். புதிய திணைப்பரப்பை புலம்பெயர் இலக்கியம் தருகிறது. அதிலும் நாம் பொதுவாக இதுவரையிலும் அறிந்த புலம்பெயரிலக்கியத்தின் அடையாளப்பரப்பை விட்டு வாசுதேவன் விலகியிருக்கிறார்.
கடந்த இருபது ஆண்டுக்கும் மேலான புலம் பெயர் இலக்கிய அறிமுகத்தில் தாய்நிலத்தை இழந்த துயரமே அதிகம் தூக்கலாக இருந்திருக்கிறது. அதைத்தவிர இன்னும் பல பரப்புகளில் அது நிலைகொண்டிருந்தாலும் பொதுவாக இவ்வாறு அந்நிய நிலத்தில் போய் விழுந்த அவலநிலை, வேரிழந்த துயரமே இந்தத்திணைக்குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் விலகல்களை பத்மநாப ஐயர் தொகுத்த இன்னொரு காலடி, யுகம் மாறும் போன்ற தொகுப்புகளில் இடம்பெற்ற சில படைப்புகளும் அப்பால் தமிழ் வெளியீடுகளும் எக்ஸில், ஊடறு மற்றும் பிற படைப்பாளிகளின் பல தனித் தொகுதிகளும் படைப்புகளும் கொண்டிருக்கின்றன.
வாசுதேவனும் இந்த விலகல்களில்தானிருக்கிறார். தாய் நிலத்தை விட்டுப்பிரிந்த துயரத்தைக்கூட அவர் தன்னடையாளம் துலங்கும் விதமாகவே எழுதுகிறார்.
இதற்கு ஆதாரமாக அவ்வாறுரைத்தான் ஸாரத்துஸ்த்ரா, மூன்றாவது துளை, காஞ்சாவிற்குப்பின், மீளவரல், தொலைவில், பலஸ்த்தீனப்பாதை, இசைமூலம், புளியடி புளியடி, கறுப்புப்பெட்டி ஆகிய கவிதைகளை கவனிக்கலாம்.
இதில் அவ்வாறுள்ளான் ஸாரத்துஸ்த்ரா என்ற கவிதை முக்கியமானது. தொகையிலேயே நெடிய கவிதை இது. இது வாசுதேவனின் சுயசரிதை. அதுவே பெரும்பாலான புலம்பெயரிகளின் கதையும். எங்கெங்கு திரிந்தாலும் ஊர் மீள முடியாத்துயர் தொடருகிறது. அதுவே கொதிக்கிறது அனலாய். அதைப்போல கஞ்சாவிற்குப்பின், மூன்றாவது துளை ஆகிய கவிதைகளும் அதிக கவனத்திற்குரியவை. அதைப்போல அரசியல் விமர்சனத்தைத நேரடியாகவும் முதன்மையாகவும் கொண்ட கவிதைகளும் இந்தத் தொகையிலுண்டு. குறிப்பாக ஜனநாயகத்துக்கான குரலைக் கொண்டிருக்கிறார் வாசுதேவன், அரிசிப்போராட்டம், பிரிந்துபோன ஆடுகள் ஆகிய கவிதைகள் இதற்கானஎடுத்துக்காட்டு. தவிர ஒத்தகருத்து, உலகம் உனக்காக , எல்லலலாமே தயாராகி விட்டது ஆகிய கவிதைகளும் இந்த வகையில் கவனத்திற்குரியன.
இனி தொகையில் உள்ள சில கவிதைகளை ஒரு கவனத்திற்காக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கவிதையில் வரும் கணியன் பூங்குன்றனின் இந்த வரிகள் இதுவரை நமது மனதில் உருவாக்கியிருந்த சித்திரத்தை வாசுதேவன் கலைத்து புதிய கேள்வியை எழுப்புகிறார். ஊரில்லாதவன் யாதும் ஊரெ யாவரும் கேளிர் என்று சொல்வது நகைப்புக்குரியதாகவும் உணரப்படுகிறது. அவ்வாறே பிறரால் நோக்கவும் படுகிறது. ஊரற்றவர்கள், நாடற்றவர்கள் இப்படிச் சொல்கையில் மற்றவர்கள் சந்தேகத்துடன் அச்சமடைகிறார்கள். இப்படிச் சொல்லி தங்கள் ஊரையும் தேசத்தையும் இவர்களன் உரிமைகோர முற்படுகிறார்கள் என்ற அச்சம் இது.
இந்த நெருக்கடிநிலை, அவலநிலை அவ்வாறான வாழ்வைச் சந்திக்கும்போதுதான் புரியும். வாசுதேவனுக்கு இது புரிகிறது. எல்லாப்புலம் பெயரிகளின் அனுபவமும் இதுதான். இதுவே யதார்த்தம்.
ஆக இதுவரையிலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வரிகள் தந்த அர்த்தம் இங்கே சிதைக்கப்படுகிறது. வாழ்நிலையில் அது சிதைந்துபோகிறது. பதிலாக புதியதோர் அர்த்தம் பிறக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்மனம் கொண்டாடிய, பெருமையுற்ற இந்தச் சிந்தனை அதே தமிழ் மனதினால் நகைப்புக்குள்ளாகிறது. சொல்லிப் பெருமையுற முடியாதபடி தவிக்கிறது. காரணம் இதுதான் இன்றைய யதார்த்தம். சங்ககாலப் பெருமைகளில் திளைக்கும் தமிழ்மனங்கள் இந்த யதார்த்த நிலைபற்றிச் சிந்திப்பதற்கான புள்ளி இந்தக்கவிதையில் நுட்பமாக வைக்கப்பட்டுள்ளது.
ஈழக்கவிதைகளுக்குள்ள பெரும் பலம் இந்த யதார்த்தம்தான். தமிழ் மனதில் படிந்துள்ள பெரும் படிமங்கள், சிறு படிமங்கள் பலவற்றையும் இன்றைய வாழ்வின் யதார்த்தத்தில் நிகழும் எதிர்கொள்ளல்கள் கலைக்கின்றன.
இன்னொரு கவிதையான மூன்றாவது துளை
வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாத பயணத்தைப்பற்றியது. இன்றைய வாழ்வில் எந்தச் சமூகத்திலும் தமது கிராமத்துக்கும் வீட்டுக்கும் செ;ல முடியாத முடிவுறாத பயணத்துள் சிக்கி அழியும் வாழ்க்கையோடுதான் பெரும்பாலானோர் வாழவேண்டியிருக்கிறது.
பயணத்துக்கான ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான பாதைகளுண்டு. தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கும் பயணங்களுமுண்டு. பேருந்துகள், புகைவண்டிகள், விமானங்கள், எல்லாமுண்டு. ஆனால் வீட்டுக்கு அழைத்துப்போகாத பயணங்கள்தான் எல்லாம். வீடோ திரும்பிச் செல்லமுடியாத தாய்நிலத்தில். திரும்பிச் செல்லமுடியா நிலையில் தொடரும் தத்தளிப்பு.
பானையில் மூன்றாவது துளையிடுவது
மாத்திரம் இன்னும் பாக்கியிருக்கிறது என்று கவிதை முடியும்போது மனம் அதிர்வுடன் மிகவேகமாக பலநிலைகளில் விரிந்து செல்கிறது.
உயிர் நிழல் என்ற கவிதை இன்னொரு விதத்தில் கவனத்தைக் கொள்கிறது. புலம்பெயர் சூழலில் தன்னடையாளத்தோடு இயங்கி இறந்துபோன படைப்பாளி கலைச்செல்வனைப்பற்றிய கவிதை இது. ஒரு வகையில் இதுவும் இழப்பைப்பற்றிய கவிதைதான். அமைதி நிரம்பியதாக தோற்றமளிக்கும் இந்தக்கவிதையினுள்ளே நிகழ்கிறது பெரும் கொந்தளிப்பு. கலைச்செல்வனின் ஆளுமை, அவருடனான நட்பு, அவரோடான ஊடாட்டம் என்று விரிந்து அவரை இழந்த துயரத்தின் மீது ஆழ்ந்துபோகிறது.
மொழியும் உணர்வும் திரண்டு அழகாக ஒருங்கிணைந்த கவிதை இது. துயரத்திலும் இந்த அழகை நம் மனம் கண்டுகொள்கிறது. இது அப்பத்தமா. இல்லை இயல்பா. பழக்கமா.
இதைப்போல கோடோ வரும் வரையும் நம்பிக்கையைச் சுட்டும் இயல்பான கவிதை.
இசைமூலம் என்ற கவிதையின் இறுதிப்பகுதியில்
கேள்
ஒரு கோடைகாலப்பின்னிரவின்
முழு நிலாவொளியில்
பனை மரத்தின் காய்ந்துபோன
பழுப்போலை காற்றில் மோதி
பனையைத் தழுவி உராய்ந்தெழுப்பும்
உன்னதமான ஒரு இசையைக்கேள்
என்றமைந்திருப்பதற்குப்பதிலாக
கேள்
ஒரு கோடைகாலப்பின்னிரவின்
முழ நிலாவொளியில்
பனை மரத்தில் காவோலை
காற்றில் மோதியெழுப்பும்
உன்னதமான ஒரு இசையைக் கேள்
என்றும் அமைந்திருக்கலாம். ஆனால் இதில் இசை, ஓசைத்தன்மைக்கு வாசுதேவன் இங்கே முதன்மையளித்துள்ளதாகவே படுகிறது.
காய்ந்து போன பழுப்போலை என்பதுதானே காவோலை. தவிர, காவோலை என்ற சொல் வழக்குச் சொல்லும் கூட. அதுவும் பனை மரத்தின் காய்ந்த ஓலைக்கு மட்டுமே உள்ள சொல்லும் கூட. அதைப்போல காற்றில் மோதி, பனையைத்தழுவி, உராய்ந்து என்று கவிதை சொற்களால் நீண்டு செல்கிறது.
ஆனால் கவிதை உருவாக்கும் சித்திரம் மிகநுட்பமானது. காவோலை உரசியெழுப்பும் ஒலி சாதாரணமமானது. இதிலென்ன அதிசயமுண்டு என நீங்கள் கேட்கலாம்.
ஆனால், இந்தச் சத்தம் உன்னதமான ஒரு இசையாக, தாகமெடுக்கும் இனிய இசையாக தோன்றும் ஒரு தருணம் உருவாகிறது. ஊரை விட்டு, இந்தத்திணையை விட்டு, பனிவிழும் திணைக்கு பெயர்ந்திருக்கும்போது இது இசையாகப் பரிணமிக்கிறது. இடமாற்றம் உணர்கையில் நிகழ்த்தும் குணமாற்றம் இது. இந்த மாதிரி அம்சங்களினூடாகவே நாம் இந்த நுட்பமான உணர்கையையும் புரிதலையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் புலம் பெயர் இலக்கியத்தை நாம் புரிந்து கொள்வதற்கான திறப்பு எனக் கருதுகிறேன்.
பிரிந்து போன ஆடுகள் வாசுதேவனின் அரசியற் பார்வையை ஜனநாயக்குரலை, தனி மனித சுதந்திரத்தையும் சமூகச் சுதந்திரத்தையும் தனி மனித முக்கியத்துவத்தையும் சமூக முக்கியத்துவத்தையும் சமனிலையில் வைத்து வெளிப்படுத்துகிறது. இரண்டுக்கும் தனித்தன்மையும் சமநிலையும் உண்டு என்பதை வலியுறுத்துகிறார் வாசு.
அபத்தங்கள் கவிதை இன்னொரு விதத்தில் தனிக்கவனத்திற்குரியது. ஒரு பத்திரிகைச் செயத்போல தொடங்கும் கவிதை. வெறுமனே தகவல்கள் போல அடுக்கüச் செல்லப்படும் சொற்களும் வரிகளும். தகவல்க@டாக ஒரு கவிதையைக் கட்டியெழுப்புகிறார் இதில். கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளில் இந்த அப்பத்ம் அங்கதத்துடன் வெளிவருவதைக்காணலாம். வாசிப்பில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும் கவிதைகளில் இதுவுமொன்று.
அறிவுப் புற்றுநோய் என்ற கவிதை அறிவு இன்று மனிதரை அடிமையாக்கி விட்டதை விவரிக்கிறது. அறிவு மனிதரை முடிவற்ற ஆபத்து வளையத்துள் தள்ளி விட்டதையும் மனிதர்கள் அதற்குள் சிக்கிவிட்டதையும் உணர்த்துகிறது. பொதுவாக எல்லா நிலைகளின் மீதும் விமர்சனங்களை எழுப்பவதுதான் வாசுதேவனின் கவிதைகள். சில கவிதைகளில் இந்த விமர்சனம் மேல்ழுந்து முன்னிலைப்படுகிறது. சில கவிதைகளில் உள்ளடங்கி அமைதியாக ஒலிக்கிறது.
மன ஒழுங்கை நிரப்பி எளிமையான விவரிப்பில் தன்னுடைய கவிதைகளுக்கான இடத்தை உருவாக்குகிறார் வாசுதேவன். இது இன்றைய நவீன கவிதையில் உருவாகிவரும் இயல்புக்கும் போக்குக்கும் ஒரு அடையாளம்.
எளிமை, நேரடியான வார்த்தைகள் என்ற பெயரில் வெற்று வரிகளை இறைப்பதல்ல கவிதை என்பதற்கு இந்தக்கவிதைகள் சாட்சி. எளிமையில் எப்படி நல்ல கவிதைகள் உருவாகின்றன என்பதற்கு இவை நல்ல ஆதாரம்.
----------------------------------------------------------------