Sunday, June 8, 2008

பதுங்குகுழி நாட்கள்:பா.அகிலன் கவிதைகள்


எழுதியவர்___________________________
--------------------------கருணாகரன்

அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அதுமுற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று முடிவு தெரியாத நிலை அது. அது அவ்வளவு சாதாரணமானதல்ல. இந்த நிலையைப்பற்றிய பிறவி என்ற மலையாளப்படம் இப்போது உங்களின் ஞாபகத்துக்கு வரலாம். தினமும் காணாமற்போவோரின் செய்திகளோடுதான் யாழ்ப்பாணத்தின் காலைகள் விடிந்தன.

பயங்கரங்களின் ஆழ்கிடங்கில் தள்ளப்பட்டிருந்தது யாழ்ப்பாணம். எங்கும் பீதி. எப்போதும் பயங்கரம். எல்லோரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் எவையும் இல்லை. சுற்றியிருக்கும் கடல் மிகவும் பயங்கரமாக இருந்தது. அது எந்த வழிகளையும் காட்ட மறுத்தது. ஒரு காலம் பாய்மரக்கப்பல்களில் அமெரிக்காவரை போய்வந்த யாழ்ப்பாணம் இப்பொழுது அருகிலிருக்கும் சிறு தீவுகளுக்கே பயணஞ்செய்ய விதியற்றுச் சிறைகிடந்தது. கடல் வலயச் சட்டத்தில் அது சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த உலகத்தில் கோடானுகோடி பாதைகளிருக்கின்றன. ஆனால் வரலாற்றுச் சிறப்புடைய இந்த நகரத்துக்கு இப்போது பாதையில்லை. முற்றுகையிடப்பட்ட நகரத்துக்கு எப்படிப் பாதைகள் இருக்கும். பாதையில்லாமல், பயணமில்லாமல் சிறைப்பட்டிருந்தார்கள் சனங்கள்.

அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து மிகப்பிந்தி எப்போதாவது ஒரு கடிதம் வரும். அப்படி வரும் கடிதத்திலும் எந்தச் சேதிகளும் தெளிவாக இருக்காது. அது தணிக்கைகளின் காலம். ஒவ்வொரு கடிதமும் படையினரால் மோப்பம் பிடிக்கப்படும் என்ற அச்சத்தில் சனங்கள் எல்லாவற்றையும் சுய தணிக்கைக்குட்படுத்தினார்கள்.

அவ்வாறிருந்த சூழலில் எதிர்பாராமல் சில கவிதைகள் யாழ்ப்பாணத்திலிருந்து எப்படியோ அந்த முற்றுகையின் தீராத வலிகளைச் சுமந்து, காயங்களோடு வந்தன. அவற்றில் பா.அகிலன், இயல்வாணன் ஆகியோருடைய கவிதைகள் முக்கியமானவை. இவ்வாறு வந்த சில நல்ல கவிதைகள் அந்த நாட்களில் கையெழுத்துப்பிரதியில் வாசிக்கப்பட்டன. அவற்றை உடனடியாகப் பிரசுரிக்கும் ஆர்வம் இருந்தபோதும் அவற்றை எழுதியோரின் பாதுகாப்புக் கருதி அது தவிர்க்கப்பட்டது. ஆனால் கையெழுத்துப்பிரதியாக இருந்த நிலையிலேயே அவை உள்ளக வாசிப்பில் மிகவும் அதிகமான அளவுக்கு வாசிக்கப்பட்டன.

நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்த அந்தக்கவிதைகளே அன்றைய யாழ்ப்பாணத்தின் ஆன்மா. ஏறக்குறைய பத்தாண்டுகள் கழிந்த பின்னர், இப்போதும் இதுதான் அங்கே நிலைமை. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருக்கிறது. அந்த மக்கள் முன்னரை விடவும் மிக மோசமான அவலத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். இது பொதுவாகவே ஈழத்தமிழர்களுக்கான தண்டனைக்காலமா என்று ஒருவர் கேட்டதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அகிலனின் கவிதைகளும் கடிதங்களும் நிலாந்தனுக்கு வந்தன. தமிழர்கள் ஒவ்வொரு பிரதேசமாக இராணுவ வலயங்களால் பிரித்துத் தடுக்கப்பட்டிருந்தார்கள். அதற்குள் பெரும் படையெடுப்புகள். தொடர் இராணுவ நடவடிக்கைகள். அப்போதுதான் நிலாந்தன் யாழ்ப்பாண முற்றுகையை மையமாக வைத்து, அந்த இருண்ட நாட்களை யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே என்ற நீண்ட கவிதையாக எழுதினார். அகிலனுடைய கடிதங்களும் கவிதைகளும் எழுப்பிய தூண்டல்தான் நிலாந்தனை அப்படி அந்த நெடுங்கவிதையை எழுதவைத்ததோ என்று தோன்றுகிறது.

நிலாந்தன் எழுதுகிறார்,

யாழ்ப்பாணம் அல்லது அமைதி நகரம்
1996 ஏப்ரில் மாதம் சனங்கள் வீடு திரும்பிய பிறகு யாழ்பாணத்திலிருந்து வந்த கடிதங்கள் சில-

1.24.06.996
யாழ்ப்பாணம்

இம்முறை மிக நீண்ட கோடை
ஒரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று
இரவு
ஊழையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட்ரக்குகளுக்குமுரியது
பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களுக்கு
இடையில் வரும் பொழுது
தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது
இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றி வளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு
...........
..........

2. 21.08.1996
யாழ்ப்பாணம்

மின்சாரம் வந்து விட்டது
பஸ் ஓடுகிறது
மினி சினிமா கொகோ கோலா
புளு பிலிம் எல்லாம் கிடைக்கிறது
...........
..........
காணாமற் போனவர்களைப் புதைத்த
வெளிகளில்
உப்பு விளைகிறது
ஊரி சேர்கிறது
3. 23.10.1996
யாழ்ப்பாணம்

உன்னுடைய பெரிய ஓவியங்கள் பத்திரமாயுள்ளன. ஆனால் திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சைஸ் ஓவியங்களைக்காணவில்லை. மாற்குவின் ஓவியங்களும் அதிகம் தொநை;து போய் விட்டன. மிஞ்சியிருப்பவற்றைப் போய் எடுக்கலாமா என்று யோகன் கேட்டான். ஆனால் பயமாயிருக்கிறது. கைலாசநாதனுடைய ஓவியங்கள் முழுதும் தொலைந்து விட்டன. அ. இராசையாவின் ஓவியங்களும் அநேகமாக மிஞ்சவில்லை.

எல்லாவற்றையும் திரும்பவும் முதலிலிருந்தே வரைய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே...
யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே) என்று.

இதுதான் அங்கிருந்த நிலைமை. இப்போது அகிலனின் கவிதைகள் பற்றிய இந்தக்குறிப்பை எழுதும் இந்த இரவிலும் இதுதான் தொடரும் கதை. எனவே இந்தப்பின்னணியோடு நாம் இப்போது பா. அகிலனின் கவிதைகளைப் பார்க்கலாம்.

அகிலனின் கவிதைகள் தனியே யாழ்ப்பாண முற்றுகையோடு மட்டுப்பட்டவையல்ல. அல்லது அரசியலை மட்டும் பேசுவனவுமல்ல. சமகாலம் என்ற நிகழ்காலப் பரப்பிற்குள் அடைபடுவனவுமல்ல. காலம் இடம் என்ற எல்லைகளைக்கடந்து பிரபஞ்சத்தில் ஊடுருவி முன்னும் பின்னுமான வெளியில் சஞ்சரிப்பவை. எல்லைகளற்ற வெளிநோக்கியவை. தம் படைப்பின் அடிப்படைகளாலும் அவற்றின் தகுதிகளாலும் நிரந்தரத் தன்மையைக் கொண்டிருக்க எத்தனிப்பவை. அந்த எத்தனத்தில் வெற்றியடைந்தவையும் கூட.

2
போர்க்காலத்தின் மீது படிந்திருக்கும் பயங்கரம், துயரம், அவலம், அழிவின் ஓலம், குருதி, அதன் தீராத நெடி, தீ, புகை, இருள் பெருகிய நாட்களின் வாசனை எல்லாவற்றையும் அகிலன் கவிதைகள் தம்முள் நிரப்பி வைத்திருக்க்pன்றன. துயர் உருகிப் பரவும் வெளியாக இந்தக்கவிதைகள் உள்ளன.

போரை எந்த நிலையிலும் விரும்பாத போதும் போர் தொடர் வியூகங்களில் சிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. அதனிடமிருந்து தப்பவே வழியில்லை. அது முடிவில்லாமல் துரத்துகிறது. துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு பகல் என்ற கால பேதங்கள், ஓய்வொழிச்சல் இல்லாமல் போதை நிரம்பிய வன்மத்தோடு அது துரத்துகிறது. எதற்காக அவ்வாறு துரத்துகிறது என்று தெரியாது. யாருக்கும் அது தெரியாது. கேள்விகள் இல்லை. விளக்கங்கள் இல்லை. நியாயங்கள் இல்லை. எல்லாவற்றின் மீதும் அது முழு ஆதிக்கத்தோடு முழு வலிமையோடு தன் வன்முறையைக் பிரயோகிக்கிறது. அதற்கு எந்தத்தடையுமில்லை. எல்லாவற்றையும் அது தன் காலடியில் போட்டு நசிக்கிறது. போரை விரும்பாதபோதும் அதை நாம் விட்டு வில முனைகிறபோதும் அதற்கு அது இடமளிக்கவில்லை. இந்த வலியும் நீதியின்மையும் அதன் வன்முறையும் தாங்கமுடியாத அளவுக்கு உயிரை வதைக்கிறது. அகிலன் இவற்றை, இந்த நிலையை மிக நுட்பமான மொழியில், உக்கிரமான தொனியில் வலிமையாக மொழிகிறார். அவருடைய இந்த மொழிவுக்கு தமிழ் மரபும் பிற இலக்கியப் பரிச்சயங்களும் உதவுகின்றன. இவற்றின் வேர்களிலிருந்தே அகிலனின் கவிதைகள் பிறக்கின்றன.

வேகமும் அதிர்வும் தரும் மொழியில் இந்தக்கவிதைகளிருக்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு வரியிலும் புதிய கணங்களையும் வௌ;வேறு நிலை அனுபவங்களையும் எழுப்பும் ஆற்றல் இங்கே குவிக்கப்பட்டுள்ளது. சில கவிதைகள் ஓவியத்தைப்போல காட்சியை விரிக்கிறது. சில நாடக அசைவை காட்டுகின்றன. பதுங்குகுழி நாட்கள்-3 என்ற கவிதையில் வரும் இறுதி அடிகள் இதற்கு நல்ல சான்று.

கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பிப் போயிற்று
சூரியன் கடலுள் வீழ்ந்த போது
மண்டியிட்டழுதோம்
ஒரு கரீய ஊழை எழுந்து
இரவென ஆயிற்று
தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப்பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்க@ர்

பெரிய அரங்கொன்றில் நிகழும் காட்சி அவற்றுக்கான ஒளிமாற்றங்களோடு புலனேறுகிறது. ஆனால் இவ்வாறு வரும் கவிதையின் முடிவு வரி இந்தநிலையை மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது. இதனால் நமது மனதில் பல நேர்நிலை எதிர்நிலைச் சித்திரங்கள் உருவாகின்றன.

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்

முதல் வரியிலேயே கவிதையை சடுதியாக வேகமெடுக்க வைக்கும் பண்பை அகிலன் கொண்டிருக்கிறார். அந்த வேகம் ஒரு போதும் தணிவதில்லை. கவிதை முடிந்த பிறகும் அதன் விசை குறைவதில்லை. எவ்விதம் கவிதை தொடங்கியதோ அதேபோல அதே வேகத்தோடு அது முடிகிறது. முடிவற்றுத் தொடந்து கொண்டேயிருக்கிறது அதிர்வு. பின்னரும் நான் வந்தேன்,எனக்குத் தெரியாது, வாவிகள் நிரம்பிவிட்டன, இங்கேதான் இவ்வாறு தொடங்கும் வரிகள் உடனடியாகவே ஏவு ஏவுகணையைப்போல வேகம் கொள்கின்றன.

3
தொண்ணூறுகளுக்குப்பின்னான ஈழக்கவிதைகள் பெரும்பாலும் போர் மயப்பட்டவையே. போரை அவை எந்த நிலையில் எந்தக்கோணத்தில் அணுகியிருந்தாலும் அவை போர் பற்றியவையாகவே இருந்தன. எண்பதுகளில் உருத்திரண்ட அரச பயங்கரவாதம் தொண்ணூறுகளில் பெரும் போராக விரிந்தது. உள்நாட்டுப் போராக இருந்த போதும் அது இரண்டு இராணுவங்கள் மோதிய பெரும் போர்.

அதனால் எண்பதுகளில் அரசபயங்கரவாதத்தை எதிர்த்தும் விமர்சித்தும் வந்த கவிதைப்போக்கு இப்போது போரை எதிர்ப்பதாகவும் விமர்சிப்பதாகவும் அல்லது அதை வெற்றியை நோக்கி திருப்புவதாகவும் அமைந்தது.

அகிலனுடைய கவிதைகள் போரை விமர்சிக்கின்றன. அதை உள்@ர எதிர்க்கின்றன. அதனால் ஏற்படும் வலிப்பெருக்கை நெகிழ்ந்து ததும்பும் மொழியில் சொல்பவை. போரின் வலி எப்படி பிற சமூகங்களின் ஆன்மாவையும் வாழ்வையும் பாதித்திருக்கின்றன என்று அவர் அறிந்திருக்கிறார். குறிப்பாக அவரே சொல்வதைப்போல ரஷ்யாவின் இருண்ட கால அனுபவங்களை அவர் அன்னா அக்மதோவாவினூடாக பெற்றிருக்கிறார். அதைப்போல இன்னும் எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாக்காலங்களிலிருந்தும் போர் ஏற்படுத்திய அழிவுகளையும் அதன் வலியையும் காயங்களையும் தெரிந்திருக்கிறார். அவருடைய அறிதல் முறை இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

போர்க்காலத்தின் புலம்பல்களை மகா பாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் வேதாகமத்திலிருந்தும் அகிலன் கேட்கிறார். இப்போது தன்னிலத்திலிருந்து அவை குருதியொழுக ஒழுக அவருடைய புலன்களில் ஏறுகின்றன. அகிலன் பதற்றமடைகிறார். என்ன செய்ய முடியும். அவர் விரும்பாத போர். அவர் சம்மந்தப்படாத போர். ஆனால் அது அவரை உள்ளே இழுக்கிறது. இழுத்துப்புரட்டுகிறது. புரட்டிப்புரட்டி அது பழிவாங்குகிறது. என்ன செய்ய முடியும். கடவுளே... கடவுளே...

சனங்கள் எதுவுஞ்செய்ய முடியாமல், எங்கேயும் போக முடியாமல் அந்தரிக்கிறார்கள். உயிர் எல்லாவற்றையும் விடப்பாரமாகிவிட்டது. எதுவும் இப்போது பெரிதில்லை, உயிரைத்தவிர. உயிர்தான் இப்போது சுமையானது. அதுவும் பெருஞ்சுமையாக இருக்கிறது. சிலபோது உயிரும் பெரிதாக தோன்றாமற் போகிறது. நிலைமை அப்படி.

வீடு பாதுகாப்பற்ற வெளியாகிவிட்டது. வீட்டைவிடவும் பதுங்குழிதான் பாதுகாப்பானது என்ற நிலை. இதுவே யதார்த்தம். ஆனால் பதுங்குகுழியோ இருண்டது. உண்மையில் இருண்ட காலம் இது. நிலாந்தன் சொல்வதைப்போல இப்போது ஈழத்தமிழர்கள் ஈருடக வாசிகளாகி விட்டனர். பதுங்கு குழிக்கும் வீட்டுக்கும் இடையிலான வாழ்க்கையில் அவர்கள் கிடந்து அல்லாடுகின்றார்கள். தவளையைப்போல மனிதப்பிராணி ஆகிவிட்டது.

4
அகிலனின் குரல் சனங்களின் குரல். அது பொதுக்குரல்;. அதுவும் யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளான காலத்தின் குரல். அந்த முற்றுகைக்குள்தான் கிறிஸ்து பாலன் பிறக்கிறார். அந்த முற்றுகைக்குள்தான் தேவலயத்தின் மணிகள் ஒலிக்காமல் அடங்கிப்போயிருக்கின்றன. கூரையில்லாத தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனை முற்றுகைக்குள்ளான யாழ்ப்பாண நிலவரத்துக்கு அசலான படிமம்.

ஸ்தோத்திரம் சுவாமி
கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து
எனது இராக்காலப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்
இவ்வருடம் நீர் பிறந்தபோது
அடைக்கப்பட்டிருந்தன தேவாலயங்கள்
கைது செய்யப்பட்டிருந்தது
நள்ளிவு மணியோசை
.........
.........
ஊரடங்கிய இரவில்
பிதாவே, நீர் பிறந்தபோது
அன்னியராய் இருந்தோம்
எங்கள் நகரில்,
மந்தைகளாக நடத்தப்பட்டோம்
எங்கள் முற்றங்களில்
........
........

பிதாவே,
சிதறிப் போனார்கள்
குரல்கள் கைப்பற்றப்பட்;ட சனங்களெல்லாம்
வெறிச்சோடியுள்ளன வீடுகள்
தேவாலயத்தின் வழிகளெல்லாம்
உதாசீனம் செய்யப்பட்ட அவர்களின் துயரங்கள்
.........
.........
யாழ்ப்பாணம் 1996-நத்தார்)

இந்தக்கவிதை வந்தபோது நான் வன்னியிலிருந்தேன். அப்போது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை அரசாங்கம் தன்னுடைய ஒடுக்கு முறைக்கேற்றமாதிரி துண்டு துண்டாகப் பிரித்து வைத்திருந்தது. அப்படிப் பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டு முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் அகிலன் இருந்தார். நாங்கள் வன்னியில் போர் வியூகத்துள் சிக்கியிருந்தோம். வலியுமம் துயரமும் நம்மீது கவிந்திருந்த காலம் அது.

அகிலன் துயருற்ற யாழ்ப்பாணத்து மனிதனின் குரலாய்ப் பேசினார். இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தை ஆத்மாநாம் கவிதைகள் விமர்சிப்பதைப்N;பால. ஸ்டாலின் காலத்தின் இருண்ட நாட்களை அன்னா அக்மதோவாவின் கவிதைகளை இன்றைக்கும் நமக்குக் காட்டுவதைப்போல முற்றுகைக்கும் போருக்கும் உள்ளான யாழ்ப்பாணத்தை அகிலன் கவிதைகள் காட்டின.

வாழும் காலத்தின் நெருக்கடிகள் தவிர்க்க முடியாமல் ஏதோவகையில் எந்தக்கவிஞரையும் பேசவைக்கின்றன. ஒரு கவி அந்தக்காலத்தினது சாட்சி. கவிதையும் அந்தக்காலத்தின் சாட்சியே.

ஆனால், இதிலும் சில முரண்களிருக்கின்றன. வாழும் காலத்தில் நான்கு முக்கிய வகை இயல்புடைய கவிகளை வரலாறு எப்போதும் கொண்டிருக்கிறது. ஒன்று ஒடுக்குமுறை அல்லது அதிகாரத்துக்கு ஒத்துப் போகும் கவிகள். அல்லது அதனைச் சார்ந்திருக்கும் கவிகள். இரண்டாவது, ஒடுக்குமுறையையும் அதிகாரத்தையும் எதிர்ப்போர். இவர்களில் புரட்சிகரமான போராட்டத்துக்கு ஆதரவான கவிகளும் உண்டு. ஆனால் இந்தக்கவிகளும் சார்பு நிலைப்பட்டவர்களே. இவர்கள் விமர்சன ரீதியாகவும் அறச் சார்போடும் ஒரு எல்லைக்கப்பால் நகர்வதில்லை. மூன்றாவது வகையினர், என்ன நடந்தாலும் அவற்றில் எந்த நிலையிலும் எந்த வகையிலும் சம்மந்தப்படாது விலகியிருப்பவர்கள். தட்டாமல் முட்டாமல் நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்ற சொல்லலாம். அடுத்தது நான்காவது வகையினர். இவர்கள் அறத்தைப் பிரதானமாகக் கொண்டவர்கள். எந்த நிலையிலும் சனங்களின் துயரத்தையும் பாதிப்பையும் முதன்மையாகக் கொண்டவர்கள். இவர்கள் சாட்சிகள். அன்னா அக்மத்தோவா ஒரு சாட்சி. ஆத்மாநாம் ஒரு சாட்சி. அடோனிஷ் இன்னொரு சாட்சி. நமது சூழலிலும் இத்தகைய சாட்சிகள் உண்டு. அதில் ஒருவர் அகிலன்.

ஒரு கவியில் இரண்டு நிலை அம்சங்களைப்பிரதானமாக அவதானிக்கலாம். ஒன்று அவர் கொள்ளும் பொருட்பரப்பு. அதாவது அவருடைய புலன் கொள்ளும் கவனத்தின் பரப்பு. அடுத்தது அவர் தன் கவிதைகளை வெளிப்படுத்தும் இயல்பு. அவருடைய மொழிதல். அதற்குப்பயன்படுத்தும் மொழி. அதற்கான சொற்கள். அந்தச் சொற்களை இணைக்கும் அல்லது அமைக்கும் தன்மை.

இவை இரண்டிலுமே ஒரு கவியின் ஆளுமையும் தனித்துவமும் இருக்கின்றன. இவைதான் ஒரு கவியின் முக்கியமான அடையாளத்தைத்; தீர்மானிக்கும் பிரதான காரணிகள். இவையே அந்தக்கவியை காலத்தின் மீது ஊன்றுவதும் காலத்திலிருந்து விலக்குவதும்.

பொதுவாக நெருக்கடி காலக்கவிகள் எப்போதும் அந்த நெருக்கடியை சனங்களின் நிலையில் நின்று காலத்தின் முன்னும் பின்னுமாகச் சஞ்சரித்து நிகழ்காலத்தை மதிப்பிடுவர். ஆனால் அவர்கள் ஒரு போதும் நிகழ்காலத்தின் சலனங்களுக்குள் நிற்பதில்லை. உள்ளடங்கி விpடுவதுமில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அத்தகைய மதிப்பீடு என்பது கவியின் முக்காலத்தையும் ஊடுருவும் பார்வைத்திறனாகும். வரலாற்றின் அனுபவத்தொகுதியும் எதிர்காலம் குறித்த அறத்தோடிணைந்த கனவும் நிகழ்கால உண்மையும் கவியின் இந்தப் பார்வையை உருவாக்குகிறது.

இந்த அடிப்படையைக் கொண்டே யாழ்பாண முற்றுகை எப்படி இருந்தது என்பதை அகிலன் கவிதைகள் காட்டுகின்றன. இது சனங்களின் நிலை நின்று நோக்கப்படும் உணரப்படும் அடையாளம். இந்த முற்றுகையை ஒரு படைத்துறை ஆய்வாளர் வேறு விதமாகவே சித்திரிப்பார். முற்றுகையிடும் தரப்பின் ஊடகக்காரர் இன்னொரு விதமாக இதை நோக்குவார். முற்றுகையை எதிர்க்கும் அல்லது எதிர்த்துப் போரிடும் தரப்பைச் சேர்ந்த கவிஞர் இதை வேறொருவிதமாக வெளிப்படுத்துவார். ஒரு என். ஜீ. ஓ ஆள் இதை வேறுவிதமாக உணருவார். ஆக வௌ;வேறு நோக்குநிலைகள் கொண்ட ஒரு விவகாரம் அவையெல்லாவற்றையும் கடந்து பொதுத்தளத்தில் கவிப் பெறுமமானத்தை அடைகிறது என்றால் அது எவ்வாறு என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

இந்தக்கேள்விக்கான பதிலை நாம் அகிலனின் கவிதைகளில் காணலாம். முற்றுகையின் நிலை மாறாலாம். அது நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாறிவிடும். அது தவிர்க்க முடியாத விதி. அப்போது அந்த முற்றுகையின் பெறமானமும் மாறிவிடும். வரலாற்றில் இதுமாதிரியான விசயங்களுக்கு எப்போதும் பெறுமதி இல்லை. நிகழ்காலத்தின் பெறுமதி மட்டுமே இவற்றுக்கு உண்டு. ஆக அப்போது சனங்களின் நிலைநின்று சாட்சி பூர்வமாக எழுதப்படும் கவிதைகளுக்கு மட்டுமே பெறுமதியிருக்கும். மற்றதெல்லாம் அந்தக்காலத்தோடு பெறுமதியற்றுப் போய்விடுகின்றன. தேவைகளுக்காக செய்யப்படும் காரியங்கள் எப்போதும் அந்தத் தேவைகள் முடிந்த கையோடு அவற்றின் பெறுமதியை இழக்கின்றன. ஆனால் அந்தத் தேவைகள் இருக்கும் போது அவற்றுக்கான பெறுமதி மிக அதிகமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தேவையும்தானே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாகின்றன என்று வாதிடுவோரையும் இங்கே நாம் கவனத்திற் கொள்ளுதல் அவசியம். ஆனால் அவற்றின் நிரந்தரத்தன்மை அவை கொண்டிருக்கும் உண்மையிலும் அதற்கான அறிவிலுமே தங்கியிருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மனித அடிப்படை விதிகளையும் தேவைகளையும் நலன்களையும் வைத்தே பொது விதிகள் உருவாகின்றன. அந்த விதிமுறைகளை பேணாத எந்த நோக்கமும் மனவெளிப்பாடும் நிரந்தரமானதல்ல. பொதுவானதுமல்ல. எனவே அவற்றுக்கான ஆயுட்காலமும் பெரிதாக இருக்க முடியாது.

5
ஒரு கவிதை எதன் அடிப்படையில் முக்கியத்துவமடைகிறது. எப்படி காலங்களைக் கடந்து செல்கிறது. எப்படி அது பிரதேசங்களைக்கடந்து, மொழியைக்கடந்து, பண்பாட்டைக்கடந்து, பிற சமூகங்களிலும் பிற காலங்களிலும் ஊடுருவுகிறது. எவ்வாறு அது மற்றச் சமூகங்களில் அறிமுகத்தையும் செல்வாக்கையும் செலுத்துகிறது. இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

இங்கே கவிதையின் பொருட்புலமும் வெளிப்பாட்டம்சமுமே இந்தப்பயணத்தை நிகழ்த்துகின்றன. இவை இரண்டும் இணைந்த நிலையில்தான் இந்தச் சாத்தியம் நிகழ்கிறது. தொன்மையான மொழியை அது நவீனப்படுத்துகிறது. நவீன வாழ்வை அது தொன்மை அம்சங்களோடு கலந்து நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாக உருவாக்க எத்தனிக்கிறது. மனதின் எல்லா அறைகளிலும் கலாச்சாரத்தின் அத்தனை அடுக்குகளிலும் இருந்து அது தன் திரவியங்களைத் தேடிக்கொள்கிறது.

கவிதை கலாச்சார வெளியில் கொண்டிருக்கும் இடம் மிகப்பெரியது. பொறியாகக் கனலும் அதன் இயல்பு இன்னொரு நிலையில் ஒரு துளி நீராகவும் இருக்கிறது. பொறி பெருந்தீயை உருவாக்கக்கூடியது. நீரோ கடலை, சமுத்திரத்தைத் தன்னுள் கொண்டிருப்பது. இவ்வாறு அது பல நிலைகளில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இந்தத்தன்மைகள் எல்லாம் கவிதைக்கு நிரந்தரத்தன்மையை அளிக்கின்றன.

எப்போதும் மொழியில் உருகிக் கொண்டிருக்கும் வடிவம் அது. உள்ளீடும் அதுதான். மொழியில் நிகழும் அசாத்தியங்கள் கவிதையைப் போல வேறு எந்த மொழிவழி அடைவுகளிலும் உருவாகுவதில்லை. எனவேதான் அது எப்போதும் எல்லாச் சமூகத்திலும் மிகச் சுலபமாகவே ஊடுருவுகிறது. தொன்மையும் அதி நவீனமும் இணைந்த இந்தக்கலவை இயற்கை அம்சத்தை உருவாக்குகிறது. இயற்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானது. வியப்பூட்டுவது. நிரந்தரமானது. கவிதையும் அப்படித்தான். இந்த அம்சங்களோடு, இந்த வகையில் தமிழ்;க்கவிதையிலும் பிற மொழிவழிக்கவிதைகள் பழக்கமாகியுள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் பலஸ்தீனக் கவிதைகள், குர்திஸ் கவிதைகள், ஆபிரிக்கக்கவிதைகள், லத்தீன் அமெரிக்கக்கவிதைகள், வியட்நாமியக்கவிதைகள், கறுப்பினக்கவிதைகள், ரஷ்யக்கவிதைகள், மூன்றாமுலகக் கவிதைகள், சீனக்கவிதைகள் ஈழக்கவிதைப்பரப்பில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. இந்தளவுக்கு தமிழகக் கவிதைகள் கூட ஈழத்தில் அறிமுகத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய அவதானிப்பும் அறிமுகமும் இருந்தது. ஆனாலும் அந்த அறிமுகம் மேலே சொல்லப்பட்ட கவிதைகள் செலுத்திய செல்வாக்கை இவை பெறவில்லை. குறிப்பாக லாங்ஸ்டன் கியூஸ், மர்முட் தர்விஷ், அடோனிஷ், அன்னா அக்மதோவா, பெரோல்ட் பிரெக்ட், பெய்ஸ் அகமத் பெய்ஸ் போன்றோர் ஈழக்கவிதைப்பரப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினர். ஈழக்கவிஞர்களைப்போலவே இவர்கள் உணரப்பட்டனர். இதற்கு பிரதான அடிப்படைக்காரணம் இந்தப் பரப்புகளின் கொந்தளிக்கும் வாழ்நிலையே. ஒத்த வாழ்க்கை நிலைமையும் அனுபவங்களும் இந்தப்பரஸ்பரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேவேளை தனியே இந்த நிலைமைகள் மட்டும் இந்த நெருக்கத்தைக் கொடுக்கவில்லை. அதற்கப்பால் அவை எட்டிய கவித்துவ எல்லைகள் ஏற்படுத்திய ஈர்ப்பும் முக்கிய காரணம்.

இதிலும் அவரவர் தத்தம் வழி நின்றும் அனுபவத்தின் வழியாகவும் அவரவர் பண்பாட்டு நிலைப்பட்டும் தங்கள் கவிதையை நிகழ்த்தியிருக்கின்றனர். இங்கே கவிதை இவர்களிடையே ஒரு நிகழ்வெளிப்பாடாகவே, உரையாடலாகவே அமைந்திருக்கின்றது. எதிர்ப்புக் குரலாகவும் விடுதலை வெளியாகவும் அமைந்த இந்தக்கவிதைகள் சமூக கலாச்சார இயக்கத்தில் பிரதான அசைவைக் கொண்டன.

அகிலனிடத்தில் அன்னா அக்மதோவாவின் பாதிப்பு அதிகமுண்டு. இதை அவரே சொல்கிறார். கூடவே சுகுமாரனின் பாதிப்பையும்.

என்னுள் வெடிகுண்டு போல வந்து மோதி வெடித்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரின் காயவார்த்தைகளும் அன்னா அக்மத்தோவாவின் மென்னுணர்வும், துயரமும் கவிந்த வார்த்தைகளும் பெரும் பாதிப்பை என்னிடம் உண்டாக்கின. என் கவிதைகளை உற்று நோக்கும் எவரும் அன்னாவின் நோவா நதியை, சுகுமாரனின் சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனையை அவற்றில் காணவே செய்வர்.

அநாதிப்புகையிரதம், கடதாசிப்படகின் மரணம்-2, யாத்திரை-1, யாத்திரை-2, தலைப்பிடாத காதல்கவிதை போன்றவை நேரடியாகவே சுகுமாரனின் பாதிப்பையுடையவை. ஆனால் இவர்;களைக் கடந்து அகிலன் தனக்கான திசையில் பயணிக்கிறார். அதுவே இந்தக்கவிதைகளை முதனிலைப்படுத்துகின்றன. ஐதீகங்கள், தொன்மங்களை அகிலன் புதிய நிலைகளில் இணைக்கிறார். அதிகம் எழுதாமல் மிகக் குறைவாகவே எழுதியுள்ள அகிலனின் இந்தக்கவிதைகளில் எதுவும் ஒன்றிலிருந்து ஒன்று இறங்கிக் கொள்ளவில்லை. ஒரு சீரான நிலையை குலையாமல் அகிலன் பேணுகிறார்.

தொண்ணூறுகளில் ஈழக்கவிதைப்பரப்புக்கு வந்த முக்கியமான கவிஞர்களில் அஸ்வகோஸையும் எஸ்போஸையும் பா.அகிலனையுமே நான் அதிக தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்னும் அந்தத்தவனம் தீரவில்லை.

இந்தத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை 1994,95 காலப்பகுதியில் நான் வெளிச்சம் இதழ்களில் பிரசுரித்திருக்கின்றேன். அவற்றை பிரசுரத்துக்கு முன்னர் பார்த்தபோது மலைகளின் ஆழ்மன ஓட்டத்தையும் கடலின் தீராத அசைவையும் உணர்ந்தேன். ஒரு தீவிர வஸீகரம் அவற்றில் இருந்தது. அந்த வஸீகரம் இப்போது இந்தக்கவிதைகளை வாசிக்கும்போதும் இருக்கிறது. எப்போதும் எந்த வாசகனுக்கும் அது இருக்கும். என்றும் அது தீர்ந்து விடாது.
---------------------------------------------------------------------------------

Friday, May 2, 2008

சுஜாதா:அஞ்சலி


எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------

நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும் செல்வாக்கையும் பெறுவதென்பது தமிழ்ச்சூழலில் மிக அதிசயமானது.

சுஜாதாவைப்பற்றிய அறிதல் பல நிலைப்பட்டது என்றபோதும் அவர் ஒரு எழுத்தாளராகவே அதிகமாக தெரியப்படுகிறார். கல்வி, தொழில் போன்றவற்றில் சுஜாதா ஒரு பொறியியாளர். ஆனால் அந்தத்துறையில் அவர் பெற்ற அறிமுகத்தையும் செல்வாக்கையும் விடவும் எழுத்துத்துறை மூலம் அவர்பெற்ற செல்வாக்கே அதிகம். அதுவே சுஜாதா என்ற அடையாளம்.

ரங்கராஜன் என்ற பெயரையும் விட சுஜாதா என்ற பெயர் பெற்றிருக்கும் அடையாளத்தில் அதிகம் விமர்சனங்களிருந்தாலும் அதுவே இப்பொழுது மிஞ்சியுள்ளது. அதுவே இப்போது இந்தக்குறிப்பை எழுதும்படியான தகுதியையும் நிலையையும் உருவாக்கியுள்ளது.

சுஜாதா ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவது, அதிகமாக எழுதுவது என்பது தமிழில் மிகக் குறைவு. ஒரு காலத்தில் அதிகமாக ஜெயகாந்தன் எழுதினார். ஆனால் அவர் பின்னாளில் எழுதுவதையே நிறுத்திக் கொண்டார். சுந்தர ராமசாமி போன்றோர் இநுதி வரையும் எழுதியிருந்தாலும் இடையில் குறிப்பிட்டகாலம் எழுதுவதை நிறுத்தியிருந்தவர்கள். நகுலன் போன்றோர் இதில் சற்று விதிவிலக்கு. ஆனால் அவர்கள் எப்போதும் வெகுசனத்தளத்துக்கு வராதவர்கள். அதில் அக்கறையுமற்றவர்கள். இவ்வாறான நிலையில் சுஜாதா முக்கியமானவர்.

சுஜாதாவின் எழுத்துகள் முற்றிலும் சீரியஸானவை என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக அவரை எந்தச்சிற்றிதழும் தங்களுடைய எழுத்தாளராக ஏற்றுக் கொண்டதில்லை. சிற்றிதழ்ப்பண்பாட்டிலுள்ள எதிர்ப்புக்குணம் இதற்குப்பிரதான காரணம் என்கிறார் ஜெயமோகன். ஆனால் சுஜாதாவின் கணிசமான கதைகளும் அவருடைய எழுத்தின் விளைவான பல விசயங்களும் தமிழ்ப்பரப்பில் முக்கியமான இடத்துக்குரியது.

மிகச் சிறந்த தமிழ்ச்சிறுகதைகளில் சுஜாதாவின் சிறுகதைகள் சிலவற்றுக்கு நிச்சயம் முக்கியமான இடமுண்டு. அதைப்போல அறிவியற் கதைகளிலும் சுஜாதாவே தமிழில் முன்னோடியாக உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான அறிவியற் கதைகளை எழுதியிருந்தாலும் அவற்றிற் பல அறிவியல் விதிகளுக்கு பொருந்தாத மிகு கற்பனைக்கதைகள் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னதான் இருந்தாலும் சுஜாதாவே தமிழில் அறிவியற் கதைகளின் முன்னோடியாக நமக்கு உள்ளார். அதைப்போல அறிவியல் விசயங்களை இலகு படுத்தி பெருவாரியான தமிழர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர் அவர்தான். இதற்கு அவர் எப்போதும் பெரும் ஊடகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுதான் காரணம். வணிக ஊடகங்களில் அதிகம் எழுதியதால் வியாபார ரீதியான குறியே எப்போதும் அவருடையது என்று ஆதாரப்படுத்துவோரும் உண்டு. இந்தக்குற்றச்சாட்டில் நியாயமுமுண்டு.

ஆனால் வணிக இதழ்களினூடாக அவர் பல விசயங்களையும் பெருவாரியான மக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார் என்பதையும் மறுத்து விட முடியாது. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, நகுலன், பிரமிள், அம்பை போன்ற தமிழின் முக்கிய படைப்பாளிகளைப்பற்றி பெருவாரியான சனங்கள் அறியக்கூடிய அறிமுகங்களை அவர் தன்னுடைய எழுத்தின் மூலம் செய்திருக்கிறார். அதைப்போல அவர் இலங்கை நிலவரங்களையும் ஈழப்படைப்புகளையும் தெரியப்படுத்தி வந்திருக்கிகறார்.

குறிப்பாக யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதையொட்டிய பதிவாக ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையை எழுதி லட்சக்கணக்கான தமிழர்களிடம் அந்தக் கொடுமையான துன்பியல் நிகழ்வை தெரியப்படத்தினார். அவ்வாறு பின்னர் வெளிவந்து கொண்டிருந்த ஈழத்தின் முக்கிய மான புத்தகங்கள் படைப்புகளை எல்லாம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் ஈழப்போராட்டம் பற்றிய எந்த விதமமான அபிப்பிராயத்தையும் அவர் எப்போதும் நெரடியாகச் சொன்னதில்லை என்ற வொல்வோரும் உண்டு.

ஈழப்போராட்டம் பற்றி மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் எதனைப்பற்றியும் எந்தவிதமான முடிந்த முடிவுகளையும் சொல்லும் இயல்பை அவர் ஒரு போதும் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தின் தலித் விவகாரங்களைப்பற்றிய பார்வைகளையோ பெரியாரியம் பற்றிய கரத்துகளையோ தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்த பகுத்தறிவுவாதத்தைப்பற்றியோ சுஜாதா எப்போதுமே எதுவும் கூறியதில்லை.

அவர் தன்னுடைய பயணப்பாதையை வேறொரு வகையில் வைத்துக் கொண்டார். எல்லாவற்றைப்பற்றியும் பேசுவார். ஆனால் எதிலும் சிக்குப்படாமல் பேசும் ஒரு உத்தியை அவர் பின்பற்றினார். அவருடைய இந்தக்குணம் பற்றி பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தபோதும் அவர் அவற்றின் வலைகளில் வீழவில்லை.

தமிழகத்தின் அரசியலும் பண்பாட்டு நடவடிக்கைகளும் கேளிக்கை மயப்பட்டுக் கொண்டு போவதை தன்னுடைய எழுத்துகளில் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் தெரிவித்துவந்தாரே யொழிய அவற்றுக்கெதிரான விமர்சனங்களை அவர் வெளிப்படையாக வைத்ததில்லை. இதற்கான காரணம் அவர் வெகுசனத்தளத்திலான வணிக ஊடகங்களில் இயங்கியது. அடுத்தது அவர் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளின் உருவாக்கிகளான அதே ஊடகங்களில் சிறபை;பட்டிருந்தது. அல்லது அவற்றில் அவர் தங்கியிருந்தது.

குறிப்பாக சுஜாதா இயங்கிய சினிமா என்பது இதற்க நல்ல உதாரணம். 1977 காலப்பகுதியில் கமலஹாசன் ரஜனிகாந்த நடித்த கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திற்கு திரைக்கதை வசனத்தை எழுதியதிலிருந்து இதுவரையில் ஏறக்குறைய முப்பதுக்கு மேலான படங்களுக்கு திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார் சுஜாதா. இறுதியில் ரஜனிகாந்தின் சிவாஜி படத்திற்கான திரைக்கதையை எழுதியிருந்தார். இப்போது சங்கரின் ரோபோ என்ற புதிய படத்துக்கும் அவரே திiரைக்கதை வசனத்தை எழுதுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தன்னுடைய திரைக்கதை வசனம் எழுதும் அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர் திரைக்கதை என்றால் என்ன என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுமிருந்தார்.

இதைப்போல சுஜாதா கைவைக்காத துறைகளே எழுத்தில் இல்லை. மாணவர்கள், இளைஞர்களை மையமாக வைத்து அவர் பல அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் பிரசுரமாக வெளிவந்த ஏன், எதற்கு எப்படி என்ற புத்தகம் இதில் முக்கியமானது. கேள்வி பதில் மூலம் அறிவியல் ரீதியாக பல விசயங்களை இதில் அவர் பேசியிருக்கிறார். அவருடைய பகுத்தறிவுப்பார்வை என்பது எதையும் அறிவியல் விளக்கத்துக்கு உட்படுத்தும் கல்வி சார்ந்த நடவடிக்கையாக அமைந்தது. இது தவிர பல நாவல்கள் துப்பறியும் நாவல்களாகவும் அறிவியல் கதைகளாகவும் நகைச்சுவைக்கதைகளாகவும் அமைந்தவை.

இந்த எழுத்துகள் அதிகம் ஆழமான வாசிப்புக்குரியவை இல்லை என்ற போதும் இவற்றில் சசில முக்கியமானவை. குறிப்பாக சிறிரங்கத்துக் கதைகள், சுஜாதாவின் தேர்ந்த சிறுகதைகள் மற்றும் அறிவியற் கதைகள் என்பவை இதில் உண்டு.

பொதுவாக சுஜாதா எப்போதும் தன்னை தமிழின் அதிகார, வெகுஜன, பிரபல சக்திகளுடன் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டதுதான் அவரை ஆழமான படைப்பாளியாக உணர முடியாமற் போய்விட்டதாக இன்னொரு இடத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். படைப்பாளிக்குரிய கலகத்தனத்துக்கு இந்த அதிகார வெகுஜன பிரபலத்தளம் ஒரு போதும் விட்டுக் கொடாது. சுஜாதா நல்ல எழுத்துகளை, நல்ல இசையை, தரமான ஓவியங்களை, நல்ல சினிமாவை, நல்ல இலக்கியத்தை அடையாளம் கண்டவர். அவற்றை தெரிந்தவர். அவற்றை நோக்கி தமிழ்ச்சமூகம் நகரவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் நடைமுறையில் முடிவில்லாத சமரசங்களுக்கு உட்பட்டவர். எல்லாவற்றுக்கும் ஏதொ வகையில் ஒத்தோடியவர்.

அவருடைய இந்த இயல்பு அவரை வணிகத்துக்கும் சீரியஸ_க்குமிடையில் முடிவில்லாத அளவில் அலைத்துக் கொண்டிருந்தது. அவர் இதிலா அதிலா என்று அடையாளம் காண்பது வரையில் இந்தநிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சுஜாதா கணையாழியில் எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அவர் கடந்த காலங்களில் நவீன இலக்கிய நூல் வெளியீடுகளில் பங்கேற்றிருக்கிறார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடத்தில் நட்பையும் அறிமுகத்தையும் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துநடை தமிழில் ஏற்படுத்திய தாக்கமே. எளிமையான புதிய சாதாரண சொற்கiயும் தெறித்துச் செல்லும் வேகமுடைய எழுத்து நடை சுஜாதாவினுடையது. இந்த நடை அவருக்குப்பின் வந்த பெரும்பாலான படைப்பாளிகளிடததில் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது.

இது அவரை புதிய தலைமுறைப்படைப்பாளிகளுடன் இணைவு கொள்ள வைத்தது. அத்துடன் அவர் உலகின் எந்த விவகாரத்தையம் தமிழுக்கு உடனே கொண்டு வந்து விடும் விரைவைக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். சுஜாதாவுக்கு நவீன இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டளவக்கு சங்க இலக்கியத்திலும் பரிச்சயமும் ஈடுபாடும் இருந்தது. அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் சங்கப்பாடல்கள் எனப்பலவற்றை எளிமையாக விளங்கிக் கொள்வதற்கான உரைகளையும் மொழிதலையும் செய்திருக்கிறார்.

இவ்வாறு எல்லா நிலையிலும் ஒரு வினோதமான கலவையாக உருவாகியிருந்த சுஜாதா தன்னுடைய எழுபத்தோராவது வயதில் காலமாகிவிட்டார். அவருடைய மறைவுக்குப்பிறகு அவரைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ செய்தி வெளியிடாத ஊடகங்களோ தமிழில் இருக்கவில்லை.

அவருடைய இறுதி நிகழ்வில் குழு, கட்சி பேதங்களில்லாமல் எல்லாத்தரப்பினரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்ததையும் சிவாஜி பட வெற்றி விழாவின்போது அவர் மேடையில் தனக்கு அந்த விழாவில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப்போல வெறித்தபடி இருந்த காட்சியும் இப்போதும் நினைவில் நிற்கின்றன. அவை சொல்லும் சேதிகளும் ஏராளம்.

-----------------------------------------------------------------

Wednesday, April 16, 2008

வாசுதேவன் கவிதைகள் "தொலைவில்"


எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------


வீன ஈழத்தமிழ் வாழ்க்கையை அல்லது சமகால ஈழத்தமிழர்களின் நிலையை வாசுதேவன் கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியிலிருந்து அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழர் அவல வாழ்வின் உக்கிர நிலையே வாசுதேவன் கவிதைகள். அவற்றை அவர் தன்னனுபவங்களின் வழியிலும் தன்னுடைய தரிசனங்களின் வழியாகவும் கவிதையில். முன்வைக்கிறார். அதிலும் புலம்பெயர்தலின் கசப்பான பிராந்தியத்தை அவர் தன் கவிதைகளில் நிரப்புகிறார். ஆனால் அது புலம்பலாக இல்லை. பகிர்தலான முறையில்.



இதன்படி எல்லா ஈழத்தமிழ்க்கவிஞர்களைப் போலவும் வாசுதேவனும் அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். அதை விட்டு விலக அவரால் முடியவில்லை. அரசியல் ஈழத்தமிழர்களை மிக ஆழமாகப் பாதித்துள்ளது. இன்னும் அது அவர்களைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நேரடிப்பாதிப்பு. அவலமும் வலியும் வேதனையும் நிரம்பிய பாதிப்பு அது. சொந்த நிலத்திலும் அவர்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாதுகாப்புக் கருதி வேறு நிலத்துக்கு சென்றாலும் அங்கேயும் அவலமும் துயரமும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பண்பாட்டாலும் திணைகளாலும் ஒத்த இயல்புடைய தமிழகத்துக்கு பெரும் நம்பிக்கையோடு ஆறுதல் தேடிச் சென்றால் அங்கேயும் அவர்களை வரவேற்க அவலம் காத்திருக்கிறது.



புலம்பெயர்ந்து வேறு திணைக்கு விலகிச் சென்றாலும் அங்கும் நிழலாகவும் நிஜமாகவும் தொடருகின்ற அவலம் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் கொடுமையான யதார்த்தம். இது தனியாக விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய விசயம். அதற்கு இங்கே சாத்தியமில்லை. ஆனால் எந்த ஈழத்தமிழ்க்கவிஞரைப்பற்றியும் எழுதும் போது இந்த அரசியல் விளக்கத்தை முன்னோட்டமாக சிறு குறிப்பாகவேனும் எழுதவே வேண்டியிருக்கிறது. அதிலும் பலம்பெயர் கவிஞர்களாயின் கட்டாயம் இது தவிர்க்க முடியாதது.



ஈழத்தமிழர் வாழ்க்கை இன்று சந்தித்திருக்கிற நெருக்கடியே அவர்களின் எல்லாப்படைப்புகளிலும் முதன்மைப்படுகின்றன. அதனால்தான் அவர்களுடைய படைப்புகள் அரசியல் முதன்மையுடனிருக்கின்றன. படைப்புகளின் கூறுகளைச் சிதைக்காமல் இந்த மையத்தில் ஈழத்தமிழ்ப்படைப்புகள் இருப்பது ஆறுதல். இதற்கு சில பொதுவான அனுபவத்தை ஈழப்படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள். அதுவே அவர்களைச் சரிய விடாது முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.



ஒடுக்கப்படுகின்ற இனங்களின், சமூகங்களின், நாடுகளின் படைப்புகள் தவிர்க்க முடியாமல் அவர்கள் சந்திக்கின்ற நெருக்கடிகளையே மையத்திற் கொள்கின்றன. படைப்பை தமது அரசியல் வழிமுறையின் ஒரு பகுதியாகவும் அவர்கள் கொள்கின்றனர். ஏன் சிலபோது சில இடங்களில் படைப்பே பிரதான அரசியற்பாதையாகவும் இருந்திருக்கிறது. படைப்பெனும்போது தனியே இலக்கியம் மட்டுமல்ல. சகல கலைகளும் அதில் அடங்கும். ஒளிப்படம் சினிமா எனச்சகலதும். ஆனால் தமிழில் இது விளங்கப்பட்ட முறையோ வேறு. அரசியற் படைப்பு என்று அது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் நிலை இன்னும் மோசமானது. தட்டையான, பொய்க்கூறுகளும் புனைவுகளும் நிரம்பி வெறும் பிரச்சார நெடி வீசும் விதமாகவே இது இருக்கிறது. பொதுவாக அரசியல் அமைப்புகளோடும் தரப்புகளோடும் அடையாளம் காட்டி நிற்போர் அரசியல் படைப்புகள் என்ற பெயரில் அதிகாரத்தரப்புக்கு அல்லது அதிகாரத்தை நோக்கிய தரப்புக்கு ஏற்ப தமது மொழியையும் வெளிப்பாட்டையும் உருவாக்குகின்றனர். அதனால் அவர்களின் படைப்புகளில் உண்மை இல்லாமற் போய்விடுகிறது. சார்பு நிலையில் உண்மைக்கு இடமில்லை. அங்கே உண்மை பல சந்தர்ப்பங்களிலும் திரையிடப்படுகிறது. உண்மையற்ற படைப்பு பாவனை நிரம்பிய வெற்று மொழியினால் அலங்காரமாக்கப்பட்டு உண்மைபோல முன்வைக்கப்படுகிறது. பித்தளைக்கு பொன்பூசும் தொழில் இது. அதைத் தவிர வேறு வழியில்லை. பொய்யான கனவும் மயக்கமும் நிரம்பிய குரல் அது.



ஆனால் வாசுதேவனைப் போல எழுதும் ஈழத்தமிழ்ப்படைப்பாளர்கள் பலரும் இதிலிருந்து விலகியே நிற்கின்றனர். பாவனையற்ற முறையில் வாழ்வை நெருங்கும் படைப்பு முறையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் அரசியலை மையப்படுத்தி கவிதையின் இயக்கம் நிகழ்வதால் எளிமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த எளிமை இன்று நவீன கவிதையில் வளர்ச்சி பெற்று வருகிறது



தமிழகத்தில் இதற்கு சிறந்த உதாரணம் ஆத்மாநாம். தவிர மு.சுயம்புலிங்கம் தொடக்கம் மனுஷ்ய புத்திரன், மாலதி மைத்திரி, சல்மா என்றொரு நீட்சி உண்டு. அண்மைக்காலத்தில் தமிழகத்தில் இந்தப் போக்கு இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. தங்கள் காலம் இடம் மற்றும் நிகழ்வுகள் குறித்த புறப்பிரக்ஞை படைப்புகளில் மையப்படுத்தப்படுகின்றன.



பொதுவாக ஈழத்திலக்கியம் தொடர்ச்சியாக அரசியலில் மையங்கொண்டது என்பதால் பாவனைகளிலிருந்தும் பிரச்சார உத்திகளிலிருந்தும் விலகி அது தன்னுள் செழுமையடைய வேண்டிய நிலைக்கானது. இதற்கு இனவொடுக்குமுறையைச் சந்தித்த சமூகங்களின் குரலையும் படைப்புகளையும் அது முன்னனுபவமாகக் கொண்டது. இங்கே எம்.ஏ.நுகமான் மொழிபெயர்த்து தொகுத்த பலஸ்தீனக்கவிதைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. ஈழத்துக்கும் பலஸ்தீனத்துக்கும் பொதுவான அம்சங்கள் ஒருமித்திருந்ததால் அந்தக் கவிதைகள் மிக நெருக்கமாக உணரப்பட்டன. ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் உந்துதலுக்கான ஊக்கவிசையை அப்போது பலஸ்தீனக்கவிதைகள் தந்தன. அதைப்போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் சனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம், அரச பயங்கரவாதம் போன்றவற்றை முன்வைக்கவும் கூடியமாதிரிகளை பலஸ்தீனக்கவிதைகள் உருவாக்கின. சர்வதேச ரீதியான அறிமுகத்தையும் கவனத்தையும் கொண்டிருந்த அத்தகைய படைப்புகளின் அறிமுகமும் பரிச்சயமும் தவிர்க்க முடியாமல் ஈழத்தின் அரசியற் படைப்புகளில் செல்வாக்குச் செலுத்தி செழுமையை ஏற்படுத்தின.



தொடர்ந்து ஆபிரிக்கக் கவிதைகள், தென்னமெரிக்கக் கவிதைகள் என்று அந்தச் செழுமை அரசியல் ரீதியான ஈழத்திலக்கியத்தின் அடையாளத்துக்கு உதவியிருக்கின்றன. ஆனால் ஈழத்திலக்கியத்திலும் பாவனைக்குரலும் பொய்மொழியும் இல்லாமலில்லை. அதிலும் இனஒடுக்குமுறை, ஆயதப்போராட்டம் என்ற வகையில் அது பல இடங்களில் பலவிதங்களில் உண்டு. அவை பற்றி இங்கே இப்போது விவாதிக்கப்படவில்லை. இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறிடத்தில் பார்க்கலாம்.



அரசியல் நேரடியாக வலுவான முறையில் வாழ்வை பாதிக்கும்போது அதை எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தம் தவிர்க்க முடியாதது. ஈழ வாழ்வு இன்று இத்தகைய நிலையையே எதிர்கொள்கிறது. சொந்த நிலத்தில் அரச பயங்கரவாதம் தமிழ், ஆயதக்குழுக்களின் பயங்கரவாதம், தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பிற தேசங்களுக்குப் போனால் அங்கே வேரிழந்த நிலை. அடிமை வாழ்க்கை அல்லது இரண்டாம் மூன்றாம் நிலையில் வைத்து அந்த மக்களால் பார்க்கப்படும் அவலம். ஆக சொந்த நிலத்திலும் அவலம். பெயர்ந்த நிலங்களிலும் அவலம். அவலத்தில் உழலும் கொடுவிதி இன்று ஈழத்தமிரின் வாழ்வும் கதையுமாகியுள்ளது.



இத்தகைய பின்புலத்தில்தான் வாசுதேவனின் கவிதைகள் உள்ளன. இந்த அடிப்படையில் வைத்தே அவருடைய கவிதைகளை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அல்லது அவருடைய கவிதைகளைப்படிக்கும் போது இந்த விசயங்கள் நமது மனதில் இந்த வாழ்வின் துயர்நிறைச்சித்திரமாகின்றன.



வாழ் களத்தினதும் வாழ் காலத்தினதும் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியத்தை புறக்கணிக்க முடியாத நிலையின் வெளிப்பாடு இது. இதுவே வாசுதேவனிடத்தில் கவிதைகளாகியிருக்கின்றன. பொதுவாக வுhசுதேவனின் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்வாழ்வைப்பற்றியவை. தாய் நிலத்தை இழந்த அந்தரிப்பின் வலி இவற்றில் முக்கியமடைந்துள்ளன. இதற்கு இந்தத் தொகையிலுள்ள பல கவிதைகள் ஆதாரம்.



கறுப்புப் பெட்டி பற்றி



எனக்குத் தெரியும்

யாரும் எதிர்பாராத

ஒரு கணத்தில்

எந்த ராடருக்கும்

அகப்படாத

ஒரு புனைவு வெளியில்

நான் உடைந்து நொறுங்கி

வீழ்ந்த பின்னர்

நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து

எனது கறுப்புப்

பெட்டிகளைத் தேடுவீர்கள்



அராலி வெளியில்

தாளம்பூப்பற்றைக்குள்

அவற்றை நான் கழற்றி எறிந்து

பல வருடங்களாகி விட்டன என்பதை

இப்போதே

சொல்லி விடுகின்றேன்



நேரத்தை விரயம் செய்யாது

பாதையைப் பார்த்து

பயணம் செய்யுங்கள்.



மிகச் சாதாரண வார்த்தைகளின் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தி தன்னிலையை முன்வைத்து புலம்பெயரிகளின் பொது உளவியலை காட்டுகிறார் வாசுதேவன். இதுவே அவருடைய கவிதைகளின் பொதுக்குணம். அதேவேளை இதை அவர் எளிமையாகச் சொல்லி ஆழமமாக உணர வைக்கிறார். இந்த எளிமை அசாதாரணமானது. நேரடித்தன்மை கொண்ட வார்த்தைகள், வரிகளின் மூலம் கவித்துவத்தை உருவாக்கி தன்னுடைய கவிதையை நிறுவுகிறார் வாசு. வாசுதேவனின் இந்த எளிமையை நாம் தா. இராமலிங்கத்திடமும் காணலாம். சாதாரண சொற்களின் மூலம் கவிதையை கட்டியெழுப்பும் ஆற்றல் இது. இதில் வெற்றி பெற்றவர் தா.இராமலிங்கம். இப்போது இதில் வெற்றியடைந்திருக்கிறார் வாசுதேவன்.



இந்த எளிமை என்பது வெளிப்பார்வையில் மிகச் சாதாரணம் போலத் தோன்றுவது. நம்மால் இந்தமாதிரி பல விசயங்களை மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று தென்படுவது. ஆனால் அதில் ஈடுபடும்போது அது அவ்வளவு சுலபமாக இல்லை என்பது அப்போதுதான் தெரியவரும். இதில் வேடிக்கை என்னவென்றால், எளிமை என்பது இப்போது நடைமுறையில் மிகக்கடினமானதாகிவிட்டது. அதைப்பின்பற்றுவது சிரமமாகவுளன்ளது. இது சுவாரஷ்யமான முரண். காந்தியின் எளிமை இப்போது எவ்வளவு கடினமானதாக ஒவ்வொருவராலும் உணரப்படுகிறது. சேயின் எளிமையை எளிதில் எந்தப்புரட்சிவாதியாலும் அணுகமுடியாதிருக்கிறது. இதுதான் இன்றைய அவலமும் அபத்தமும். இதுதான் மொழியிலும் மொழிதலிலும் நிகழ்கிறது.



தா. இராமலிங்கம் எளிமையின் மூலம் தன் கவிதைகளைக் கட்டமைத்தவர். மிகச் சாதாரண சொற்கள். நாம் அறிந்து புழங்கிய சொற்கள். மிக எளிய வரிகள். ஆனால் அவை கொள்ளும் உணர்வொழுங்கினால் கவி வடிவத்தை அடைந்தவை. அதைப்போல வாசுதேவன் இப்போது தன்னுடைய கவிதைகளை இன்னொரு வகையில் எளிமையாக்கித்தருக்pறார். இரு எளிமைகளும் வேறு வேறானவை.



இந்த எளிமைக்கு உதாரணமாக எவ்விடம் எவ்விடம், யாதும் ஊரே யாவரும் கேளீர், மனமெனும் மரங்கொத்தி, இசை மூலம், பூனை ஞபகங்கள், வெள்ளத்தில், கொரூரம், பிரிந்துபோன ஆடுகள், அரிசிப்போராட்;டம், மேடை, ஆதியிலே தனிமையிருந்தது, அறிவுப்புற்று நோய், அவ்வளவேதான் நான், கனவுகளைத்தேடி, மீளவரல், ஓவியம், காணவல்லாயோ, தீதோ நீ சொல் தீயே, நாளையின் நேற்றை நாள், தரகர்கள் வேண்டாத என் கடவுள்கள், இல்லாமலிருத்தல், இலக்கியம், ஒத்த கருத்து, எல்லாமே தயாராகி விட்டது, வேரெரிப்பு, உலகம் உனக்காக, இறுதிப்பதில், கறுப்புப் பெட்டிபற்றி, போய்வருகிறேன் ஆகிய கவிதைகள் உள்ளன.



வாசுதேவனின் கவிதைகள் இந்தத் தொகையில் இரண்டு வகையானவையாக இருக்கின்றன. ஒன்று எளிமை என்றால் அடுத்தவை அதனிலிருந்து சற்று மாறுதலானவையாக உள்ளன. இதற்கு முன்றாவது துளை, தொலைவில், கோடோ வரும் வரையும், தத்துவத்தின் தோல்வி அல்லது தோல்வியின் தத்துவம், கற்றதை (அ)கற்றலில், பலஸ்தீனப்பாதை, துளிக்குள் ஒரு தியான வெளி, அவ்வவாறுரைத்தான் ஸாரத்துஸ்த்ரா, அபத்தங்கள், பொய்கூறி விழும் ப+, துணையற்ற பயணங்கள், காஞ்சாவிற்குப்பின் ஆகிய கவிதைகளைக் காணலாம். இவையும் எளிமையின் தடத்தில்தான் பயணிக்கின்றன. ஆனால் இவற்றின் வெறிப்பாடு சற்று வேறானது. பொருளுணர்த்து முறையில் இவை சற்று மாறுபடுதலைக் கொண்டிருக்கின்றன.



வாசுதேவன் கவிதைகளின் பொது அம்சம் புலம்பெயர்தலின் வலியே. இது பொதுவாகவே புலம் பெயர்ந்த எல்லா ஈழத்தமிழ்க்கவிஞர்களிடமும் உள்ள பொதுவான அம்சம்தான். ஆனால் அதற்குமப்பால் மற்றவர்களை விட வாசுதேவன் இன்னும் விரிவு கொண்டு பயணித்துள்ளார். அந்தப்பயணம்தான் அவரை கவனிக்கத் தூண்டுகிறது.



இவற்றை நாம் தொகுத்துப்பார்க்க வேண்டும். புலம் பெயர் ஈழக்கவிஞர்கள் பல தேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்வதால் எல்லாப்புலம் பெயரிகளின் பிரச்சினையும் உணர்வுகளும் ஒரே விதமானவையல்ல. சில அம்சங்களில் அவர்களுடைய உணர்வுகளில் பொதுத்தன்மை இருந்தாலும் வௌ;வேறு தேசங்களில் வௌ;வேறு அரசியல், புவியியல், பண்பாடுகள் கொண்ட சமூகங்களுடன் அவர்கள் கொள்கின்ற உறவாடல் அல்லது கொள்ள வேண்டிய உறவு நிலை அவர்களுக்கிடையிலான முரண்களையும் அவற்றின் விளைவான பிரச்சினைகள் அனுபவங்களையும் வேறுவேறாகவே தருகின்றன.



தமிழ்க்கவிதையில் இதுவொரு புதிய அம்சம். புதிய திணைப்பரப்பை புலம்பெயர் இலக்கியம் தருகிறது. அதிலும் நாம் பொதுவாக இதுவரையிலும் அறிந்த புலம்பெயரிலக்கியத்தின் அடையாளப்பரப்பை விட்டு வாசுதேவன் விலகியிருக்கிறார்.



கடந்த இருபது ஆண்டுக்கும் மேலான புலம் பெயர் இலக்கிய அறிமுகத்தில் தாய்நிலத்தை இழந்த துயரமே அதிகம் தூக்கலாக இருந்திருக்கிறது. அதைத்தவிர இன்னும் பல பரப்புகளில் அது நிலைகொண்டிருந்தாலும் பொதுவாக இவ்வாறு அந்நிய நிலத்தில் போய் விழுந்த அவலநிலை, வேரிழந்த துயரமே இந்தத்திணைக்குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் விலகல்களை பத்மநாப ஐயர் தொகுத்த இன்னொரு காலடி, யுகம் மாறும் போன்ற தொகுப்புகளில் இடம்பெற்ற சில படைப்புகளும் அப்பால் தமிழ் வெளியீடுகளும் எக்ஸில், ஊடறு மற்றும் பிற படைப்பாளிகளின் பல தனித் தொகுதிகளும் படைப்புகளும் கொண்டிருக்கின்றன.





வாசுதேவனும் இந்த விலகல்களில்தானிருக்கிறார். தாய் நிலத்தை விட்டுப்பிரிந்த துயரத்தைக்கூட அவர் தன்னடையாளம் துலங்கும் விதமாகவே எழுதுகிறார்.



இதற்கு ஆதாரமாக அவ்வாறுரைத்தான் ஸாரத்துஸ்த்ரா, மூன்றாவது துளை, காஞ்சாவிற்குப்பின், மீளவரல், தொலைவில், பலஸ்த்தீனப்பாதை, இசைமூலம், புளியடி புளியடி, கறுப்புப்பெட்டி ஆகிய கவிதைகளை கவனிக்கலாம்.



இதில் அவ்வாறுள்ளான் ஸாரத்துஸ்த்ரா என்ற கவிதை முக்கியமானது. தொகையிலேயே நெடிய கவிதை இது. இது வாசுதேவனின் சுயசரிதை. அதுவே பெரும்பாலான புலம்பெயரிகளின் கதையும். எங்கெங்கு திரிந்தாலும் ஊர் மீள முடியாத்துயர் தொடருகிறது. அதுவே கொதிக்கிறது அனலாய். அதைப்போல கஞ்சாவிற்குப்பின், மூன்றாவது துளை ஆகிய கவிதைகளும் அதிக கவனத்திற்குரியவை. அதைப்போல அரசியல் விமர்சனத்தைத நேரடியாகவும் முதன்மையாகவும் கொண்ட கவிதைகளும் இந்தத் தொகையிலுண்டு. குறிப்பாக ஜனநாயகத்துக்கான குரலைக் கொண்டிருக்கிறார் வாசுதேவன், அரிசிப்போராட்டம், பிரிந்துபோன ஆடுகள் ஆகிய கவிதைகள் இதற்கானஎடுத்துக்காட்டு. தவிர ஒத்தகருத்து, உலகம் உனக்காக , எல்லலலாமே தயாராகி விட்டது ஆகிய கவிதைகளும் இந்த வகையில் கவனத்திற்குரியன.



இனி தொகையில் உள்ள சில கவிதைகளை ஒரு கவனத்திற்காக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.



யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கவிதையில் வரும் கணியன் பூங்குன்றனின் இந்த வரிகள் இதுவரை நமது மனதில் உருவாக்கியிருந்த சித்திரத்தை வாசுதேவன் கலைத்து புதிய கேள்வியை எழுப்புகிறார். ஊரில்லாதவன் யாதும் ஊரெ யாவரும் கேளிர் என்று சொல்வது நகைப்புக்குரியதாகவும் உணரப்படுகிறது. அவ்வாறே பிறரால் நோக்கவும் படுகிறது. ஊரற்றவர்கள், நாடற்றவர்கள் இப்படிச் சொல்கையில் மற்றவர்கள் சந்தேகத்துடன் அச்சமடைகிறார்கள். இப்படிச் சொல்லி தங்கள் ஊரையும் தேசத்தையும் இவர்களன் உரிமைகோர முற்படுகிறார்கள் என்ற அச்சம் இது.



இந்த நெருக்கடிநிலை, அவலநிலை அவ்வாறான வாழ்வைச் சந்திக்கும்போதுதான் புரியும். வாசுதேவனுக்கு இது புரிகிறது. எல்லாப்புலம் பெயரிகளின் அனுபவமும் இதுதான். இதுவே யதார்த்தம்.



ஆக இதுவரையிலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வரிகள் தந்த அர்த்தம் இங்கே சிதைக்கப்படுகிறது. வாழ்நிலையில் அது சிதைந்துபோகிறது. பதிலாக புதியதோர் அர்த்தம் பிறக்கிறது.



இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்மனம் கொண்டாடிய, பெருமையுற்ற இந்தச் சிந்தனை அதே தமிழ் மனதினால் நகைப்புக்குள்ளாகிறது. சொல்லிப் பெருமையுற முடியாதபடி தவிக்கிறது. காரணம் இதுதான் இன்றைய யதார்த்தம். சங்ககாலப் பெருமைகளில் திளைக்கும் தமிழ்மனங்கள் இந்த யதார்த்த நிலைபற்றிச் சிந்திப்பதற்கான புள்ளி இந்தக்கவிதையில் நுட்பமாக வைக்கப்பட்டுள்ளது.



ஈழக்கவிதைகளுக்குள்ள பெரும் பலம் இந்த யதார்த்தம்தான். தமிழ் மனதில் படிந்துள்ள பெரும் படிமங்கள், சிறு படிமங்கள் பலவற்றையும் இன்றைய வாழ்வின் யதார்த்தத்தில் நிகழும் எதிர்கொள்ளல்கள் கலைக்கின்றன.



இன்னொரு கவிதையான மூன்றாவது துளை



வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாத பயணத்தைப்பற்றியது. இன்றைய வாழ்வில் எந்தச் சமூகத்திலும் தமது கிராமத்துக்கும் வீட்டுக்கும் செ;ல முடியாத முடிவுறாத பயணத்துள் சிக்கி அழியும் வாழ்க்கையோடுதான் பெரும்பாலானோர் வாழவேண்டியிருக்கிறது.



பயணத்துக்கான ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான பாதைகளுண்டு. தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கும் பயணங்களுமுண்டு. பேருந்துகள், புகைவண்டிகள், விமானங்கள், எல்லாமுண்டு. ஆனால் வீட்டுக்கு அழைத்துப்போகாத பயணங்கள்தான் எல்லாம். வீடோ திரும்பிச் செல்லமுடியாத தாய்நிலத்தில். திரும்பிச் செல்லமுடியா நிலையில் தொடரும் தத்தளிப்பு.



பானையில் மூன்றாவது துளையிடுவது

மாத்திரம் இன்னும் பாக்கியிருக்கிறது என்று கவிதை முடியும்போது மனம் அதிர்வுடன் மிகவேகமாக பலநிலைகளில் விரிந்து செல்கிறது.



உயிர் நிழல் என்ற கவிதை இன்னொரு விதத்தில் கவனத்தைக் கொள்கிறது. புலம்பெயர் சூழலில் தன்னடையாளத்தோடு இயங்கி இறந்துபோன படைப்பாளி கலைச்செல்வனைப்பற்றிய கவிதை இது. ஒரு வகையில் இதுவும் இழப்பைப்பற்றிய கவிதைதான். அமைதி நிரம்பியதாக தோற்றமளிக்கும் இந்தக்கவிதையினுள்ளே நிகழ்கிறது பெரும் கொந்தளிப்பு. கலைச்செல்வனின் ஆளுமை, அவருடனான நட்பு, அவரோடான ஊடாட்டம் என்று விரிந்து அவரை இழந்த துயரத்தின் மீது ஆழ்ந்துபோகிறது.



மொழியும் உணர்வும் திரண்டு அழகாக ஒருங்கிணைந்த கவிதை இது. துயரத்திலும் இந்த அழகை நம் மனம் கண்டுகொள்கிறது. இது அப்பத்தமா. இல்லை இயல்பா. பழக்கமா.



இதைப்போல கோடோ வரும் வரையும் நம்பிக்கையைச் சுட்டும் இயல்பான கவிதை.





இசைமூலம் என்ற கவிதையின் இறுதிப்பகுதியில்



கேள்

ஒரு கோடைகாலப்பின்னிரவின்

முழு நிலாவொளியில்

பனை மரத்தின் காய்ந்துபோன

பழுப்போலை காற்றில் மோதி

பனையைத் தழுவி உராய்ந்தெழுப்பும்

உன்னதமான ஒரு இசையைக்கேள்



என்றமைந்திருப்பதற்குப்பதிலாக



கேள்

ஒரு கோடைகாலப்பின்னிரவின்

முழ நிலாவொளியில்

பனை மரத்தில் காவோலை

காற்றில் மோதியெழுப்பும்

உன்னதமான ஒரு இசையைக் கேள்



என்றும் அமைந்திருக்கலாம். ஆனால் இதில் இசை, ஓசைத்தன்மைக்கு வாசுதேவன் இங்கே முதன்மையளித்துள்ளதாகவே படுகிறது.





காய்ந்து போன பழுப்போலை என்பதுதானே காவோலை. தவிர, காவோலை என்ற சொல் வழக்குச் சொல்லும் கூட. அதுவும் பனை மரத்தின் காய்ந்த ஓலைக்கு மட்டுமே உள்ள சொல்லும் கூட. அதைப்போல காற்றில் மோதி, பனையைத்தழுவி, உராய்ந்து என்று கவிதை சொற்களால் நீண்டு செல்கிறது.



ஆனால் கவிதை உருவாக்கும் சித்திரம் மிகநுட்பமானது. காவோலை உரசியெழுப்பும் ஒலி சாதாரணமமானது. இதிலென்ன அதிசயமுண்டு என நீங்கள் கேட்கலாம்.



ஆனால், இந்தச் சத்தம் உன்னதமான ஒரு இசையாக, தாகமெடுக்கும் இனிய இசையாக தோன்றும் ஒரு தருணம் உருவாகிறது. ஊரை விட்டு, இந்தத்திணையை விட்டு, பனிவிழும் திணைக்கு பெயர்ந்திருக்கும்போது இது இசையாகப் பரிணமிக்கிறது. இடமாற்றம் உணர்கையில் நிகழ்த்தும் குணமாற்றம் இது. இந்த மாதிரி அம்சங்களினூடாகவே நாம் இந்த நுட்பமான உணர்கையையும் புரிதலையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் புலம் பெயர் இலக்கியத்தை நாம் புரிந்து கொள்வதற்கான திறப்பு எனக் கருதுகிறேன்.



பிரிந்து போன ஆடுகள் வாசுதேவனின் அரசியற் பார்வையை ஜனநாயக்குரலை, தனி மனித சுதந்திரத்தையும் சமூகச் சுதந்திரத்தையும் தனி மனித முக்கியத்துவத்தையும் சமூக முக்கியத்துவத்தையும் சமனிலையில் வைத்து வெளிப்படுத்துகிறது. இரண்டுக்கும் தனித்தன்மையும் சமநிலையும் உண்டு என்பதை வலியுறுத்துகிறார் வாசு.



அபத்தங்கள் கவிதை இன்னொரு விதத்தில் தனிக்கவனத்திற்குரியது. ஒரு பத்திரிகைச் செயத்போல தொடங்கும் கவிதை. வெறுமனே தகவல்கள் போல அடுக்கüச் செல்லப்படும் சொற்களும் வரிகளும். தகவல்க@டாக ஒரு கவிதையைக் கட்டியெழுப்புகிறார் இதில். கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளில் இந்த அப்பத்ம் அங்கதத்துடன் வெளிவருவதைக்காணலாம். வாசிப்பில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும் கவிதைகளில் இதுவுமொன்று.



அறிவுப் புற்றுநோய் என்ற கவிதை அறிவு இன்று மனிதரை அடிமையாக்கி விட்டதை விவரிக்கிறது. அறிவு மனிதரை முடிவற்ற ஆபத்து வளையத்துள் தள்ளி விட்டதையும் மனிதர்கள் அதற்குள் சிக்கிவிட்டதையும் உணர்த்துகிறது. பொதுவாக எல்லா நிலைகளின் மீதும் விமர்சனங்களை எழுப்பவதுதான் வாசுதேவனின் கவிதைகள். சில கவிதைகளில் இந்த விமர்சனம் மேல்ழுந்து முன்னிலைப்படுகிறது. சில கவிதைகளில் உள்ளடங்கி அமைதியாக ஒலிக்கிறது.



மன ஒழுங்கை நிரப்பி எளிமையான விவரிப்பில் தன்னுடைய கவிதைகளுக்கான இடத்தை உருவாக்குகிறார் வாசுதேவன். இது இன்றைய நவீன கவிதையில் உருவாகிவரும் இயல்புக்கும் போக்குக்கும் ஒரு அடையாளம்.



எளிமை, நேரடியான வார்த்தைகள் என்ற பெயரில் வெற்று வரிகளை இறைப்பதல்ல கவிதை என்பதற்கு இந்தக்கவிதைகள் சாட்சி. எளிமையில் எப்படி நல்ல கவிதைகள் உருவாகின்றன என்பதற்கு இவை நல்ல ஆதாரம்.
----------------------------------------------------------------

Wednesday, April 2, 2008

பெண்நிழல்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கிய பெண்

அதை மீண்டும் பயிராக்கினாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்



ஆதியிலிருந்து தொடர்ந்து வரும் வேரை

அதன் வாசனையோடு

தன்னுள் கொண்டிருக்கும் அவளிடம்

தலைமுறைகளிடம் தன்னைப் பரிமாற்றிக் கொள்ளும்

வித்தை நிறைய இருந்தது.



அவளே வேராகவும் விதையாவும்

தன்னுடலில் இருந்து விளைந்து கொண்டிருந்தாள்

ஓயாது



அவளில் கிளர்ந்த தானிய வாசனை

தாயின் முகத்தை வரைந்தது

மலர்களின் நிறத்தை அள்ளி

அந்த முகத்தில் பயிரிட்டது

கடலின் மீது அதை ஒரு படகாக்கி

மிதக்கவிட்டது



எல்லா ஒளிக்கதிர்களிலும்

தன்னைப் பரப்பும் வல்லமையுடைய

வாசனை நிரம்பிய அந்தவேர்

இளமை குன்றா நதியில் கரைந்து

இடையறாது பாய்ந்து கொண்டிருக்கிறது

மணம் பரப்பி



தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கும் பெண்

அதை மீண்டும் பயிராக்குகிறாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்

காதல் மிகக் கொண்டு

தாயாகி



இடையறாது விளைகின்றன

வேர்களும் விதைகளும்

அவள் உடலில
-------------------------------

மலை

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



இந்த மலையில் எங்கோ ஒளிந்திருக்கிறது

ஒரு சிற்பம்

ஒரு ஊற்று

ஒரு தெய்வக்கல்

உள்ளுறைந்த மௌனமும் இசையும்



என்றபோதும்

மலையை யாரும் வணங்குவதில்லை

அது காலடியில் நசிகிறது

பணிந்து



சிறு கல்

மலையாகிறது வணக்கத்தில்



அச்சிறுகல்லில்

ஊற்றில்லாதபோதும்

இசையும் மௌனமும் இல்லாதிருக்கையிலும்

அதுவே மலையின் கருவறையாகிறது
-------------------------------------------------

பறக்கும் மலைகள்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



மலைகள் பறக்கத் தொடங்கும்போது

அவற்றின் நிழல் எப்படியிருக்கும்

பறவைகளின் பாதையில்தானா

மலைகளின் பறத்தலும்

மலைகளும் பறவைகளும்

இணைந்து பறத்தல் கூடுமோ

மலைகள் பறந்து எங்கே இறங்கும்

எவ்விதமாய்.



ஒருபோது மலைகள் பறந்து

பூமியை நீங்கினால்

பூமியின் சாயல் எவ்விதமாகும்



சிகரமும் பள்ளத்தாக்கும் உடைய மலை எப்போதும்

பூமியின் முகம் என்றார்

ஓரிரவு வழிதவறி வந்து தங்கிச் சென்ற

விருந்தாளி



முகமற்ற பூமியில்

மூலிகைச் செடியேந்திய

மலைத்தேவதை கண்ணீர் மல்க நின்றாள்

மலை விட்டுச் சென்ற நதியோடு
------------------------------------------

செருப்பு

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


வழியில் தனித்துக்கிடக்கும் ஒற்றைச் செருப்பு

நினைவூட்டுகிறது

ஒரு முகத்தை

யாரோ ஒருவரின் நிழலை

அவர் விட்டுச் சென்ற

பொருட்படுத்தப்படாத பிரிவை



ஆனாலும் அது வைத்திருக்கிறது இன்னும்

மனித முகத்தை நினைவூட்டும்

ஒரு ரகசியத்தை
------------------------------------------------

நிழலை விலக்க முடியாத போர் வீரன்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------

நிழலை விலக்க முடியாதபோது

தோற்றுப் போன போர் வீரன்

பாதுகாப்பில்லாத வெளியில்

தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்



மூடியிருந்த கதவுகள்

அவனை அச்சமடையச் செய்தன

திறந்திருந்த கதவுகளும்

அபாயமாகவே தோன்றின



இருள் பாதுகாப்பானது என்று தெரிந்த

மறுகணமே அது

பயங்கரங்களின் ஆழ்கிடங்கெனத்திடுக்கிட்டான்



சாவிகள் தாமே இயங்கி

திறந்து கொள்ளும் வேளை கனிந்து கொண்டேயிருக்கும்

என்பதைக்கண்டபோது

பூட்டுகளில் திறப்புக்கான வழிகள்

அவனைப்பார்த்து சிரித்தன.



எந்தப்பூட்டிலும்

எந்தச்சாவியிலும்

திறப்பதற்கான வழியே

எப்போதுமுண்டு என்ற

அந்தக் கேலிப்புன்னகை அவனிடத்தில்

ஒரு குற்றவுணர்ச்சியாகப் படிந்தது



அவன் விலக்கமுடியாத நிழலோடு

சேர்ந்திருக்கவும் முடியாமல்

தன் தலையைத் தானே சீவியெறிந்தான்

பதற்றத்தோடும்

அச்சத்தோடும்

வியர்க்க வியர்க்க
-----------------------------------------

மிச்சம்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------

பயணப் பொதியுள் அடக்க முடியவில்லை

எல்லாவற்றையும்

மிஞ்சிக் கிடக்கும்

ஈரமுலரா நினைவுக் குவியலின் உள்ளிருந்து

ஒரு நூலாக தொடர்ந்து வரும் உயிரிழையில்

ஆலாவின் குரல் மீட்டுகிறது

குளத்தின் சங்கீதத்தை.

அதில் மிதந்து கொண்டிருக்கின்றன

ஆலாவுக்கு அஞ்சி

கோழிக்குஞ்சுகளை காப்பாற்றத்துடிக்கும்

பெரியம்மாவின் பதற்ற ரேகைகளும்

தத்தளிக்கும் மீன்களின் அச்சமும்.



பட்டிப் பூ முகம்

மணற் திட்டில் சிதறிக்கிடக்க

கள்ளு வாசனையோடு தெருநீளம்

பாட்டை விதைத்துப் போகும்

முட்டுக்காய் கணவதியை

குரைத்து விரட்ட முடியாத நாய்கள்

இந்த நினைவுப் குவியலுள்

வாசனையோடு நுழைந்து விட்டன.



கண்ணகி கோவில் முற்றத்தில்

பொங்கலுக்குக்கூடிய சனங்கள் விட்டுப்போன

காலடிகளுக்கடியில் ஒளிந்திருந்து

என்னைக்கண்ட அந்தச் சில்லறைக்காசுகளும்

இந்தப்பயணப் பொதியுள் அடங்கவில்லை

மிஞ்சிக்கிடக்கும் நினைவுக்கட்டியுள்

தகதகத்துக் கொண்டிருக்கும் வெள்ளிகள்

ஒவ்வொன்றையும் எடுத்தபோது

அந்தக்காசுகளில்

துக்கத்தின் ஈரம் படர்ந்திருந்ததைக் கண்டேன்.



முந்திரிக்காட்டு வாசனையில் கிறங்கி

கூத்தாடிய பனந்தோப்பில்

பித்தனின் இராப்பாடல் கேட்க நிலா

பனைகளுக்கிடையே இறங்கி வந்தது.

மொச்சை வீச்சம் நிறைந்த

ஆட்டுக்கார ராசையா எங்கே

திறந்திருக்கும் பட்டியில் ஆடுகளில்லை

என்றபோதும் மணம் வீசுகிறது

காட்டில் மேயப்போன ஆடுகளுடன் போனாரா

இல்லை

இன்னொரு கிறிஸ்துவை

அழைத்துப் போயினவா ஆடுகள் மேய்ச்சற் காட்டுக்கு



முந்திரி வாசம் குடித்த

இராப்பாடகனைச் சுற்றியிருந்த ஊர்ச்சனங்கள்

கூத்துப்பாடலோடு உறங்கிப் போனார்கள்

கொன்றற் பூக்களின் அலங்காரத்தில்

அவிழ்ந்து கிடந்த ஒழுங்கைகளையும்

காட்டு வழியில்

கனிந்திருந்த பழங்களில் விளைந்திருந்த

அழைப்பையும் விட்டு

ஒரு பயணி போகிறான்

ஊரின் தோலை உரித்துக் கொண்டு



தோலுரிந்த ஊரின்

துயரப் பொதிகிடக்கிறது

அவனுள்ளே மலையின் கனதியோடும்

மணலின் விரிவோடும்

அவன் அடக்க முடியாப் பயணப் பொதியின் அருகில்

கிடக்கும் நினைவுக்குவியல் வளர்கிறது

மலையாக

விரிகிறது மணற்பெருக்காக

துயரப்பழம் உடைந்தோடுகிறது நதியாக.
------------------------------------------------

உதிரம்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


தொலைக்காட்சியிலிருந்து வழிந்த

இரத்தம்

அறையில் நிரம்பியது கலவரத்தோடு



வெளியேறவும் முடியாமல் உள்ளடங்கவும் முடியாமல்

சுவர்களில் மோதித்திரும்பும்

அவலக்குரல்களை பின் தொடர்ந்த

இரத்தம் எங்கும் உறையவேயில்லை

தளும்பிக் கொண்டேயிருந்தது

அந்த அறைமுழுதும்



வெளியே வேலை முடித்து வந்த

அவர்கள்
வீட்டைத்திறப்பதற்கு சாவியை துவாரத்தினுள்

செலுத்தியபோது கண்டார்கள்

கதவின் இடைவெளியினூடே

இரத்தம் கசிந்த கொண்டிருப்பதை



துவாரத்தினுள் திறப்பை செலுத்தியபோது

பிறிட்டது இரத்தப் பெருக்கு

சாறு நிரம்பிய பழம் உடைந்ததாய்.



அந்த அறை வன்முறையில்

கனிந்திருந்தது

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாக

மூலமாக





இரத்தப் பழமாகிய அறையில்

படுத்திருக்கத்தான் வேணும்

அந்த உதிர மணத்தின் மத்தியில்.

இன்று

வேறு எந்த இடத்தையும் தேர்வு செய்வதை விடவும்

இது மேல் என்பேன்

இன்னொரு அறையில்

கத்தியோடும் துப்பாக்கிகளோடும்

கதறியழும் பேதமை நிரம்பிய விழிகளோடும்

இன்னும் யாராவது எதிரில் நிற்பதை விடவும்

உதிரம் நிரம்பிய அறையினுள் இருப்பது மேலானது



இதையே நாம் இப்போது விரும்புவதாக

கடவுளுக்கும் சொல்லி விடுங்கள்

தேநீர்க்கடையிலோ

பேருந்து நிறுத்தத்திலோ

சந்தையிலோ

நீங்கள் அவரைப்பார்க்கும் போது

இதை மறந்து விடாதீர்கள்



சிலவேளை அவர்

அவசரமாகவோ பதற்றமாகவோ நிற்கக்கூடும்

அல்லது

நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கலாம்

ஆனாலும் இதை மறந்து விடாதீர்கள் தயவு செய்து





ஒரேயொரு ஆறுதல்

இப்போதைக்கு இந்தத் தொலைக்காட்சிக்குருதி

அறையில் மணக்கப்போவதில்லை

ஆனாலும் இந்த ஒத்திகையில்

முளைவிடும் இரத்த நாட்கள்

பிறகு

அறையில் நிரம்பி தெருவிலோடி

ஊர்க்க்குளங்களில் நிரம்பி

கிணறுகளில் ஊறி

உங்கள் வயிற்றிலும் வாயிலும் இரத்தமேயாகி

அதுவே மிஞ்சிய ஒரேயொரு சுவையாக மாறி

Tuesday, April 1, 2008

தூக்கத்தை தொலைத்த கிழவன்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------

பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்துப் போகும்
இளமைக்காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்குமிடையில் கிடந்து அவிகிறான்

இருளைக் குவித்து வைத்திருக்கும்
அந்த வீட்டில்
பிள்ளைகளின் குரல்கள்
சத்தத்தை அடக்கி
சுவர்களில் படிந்திருப்பதாக நம்பும் கிழவன்
அந்தக்குரல்கள் அதிகாலையில் ஒலிக்காதா
என்று விழித்திருக்கிறான்.

ஒரு முனையில்
கிழவன் முன்னிரவில் பேசும்போது
அதே கணம்
மறு முனையில்
பிள்ளை பதிலளிக்கிறான் அதிகாலையில்.
இந்தக் கால முரணுக்கிடையில்
தன்னைக் கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான
கருணையில்.

அதிகாலையில் நிராதரவின் தத்தளிப்பு நிரம்பிய
கிழவனின் குரலை
கருணையுள்ள தொலைபேசி
எடுத்துச் செல்ல முயன்றபோதும்
முடியவில்லை
பிள்ளையின் இரவு கதவைச் சாத்தியிருந்தது
ஆழ்ந்த உறக்கத்தில்.

அப்போது அங்கே நள்ளிரவு

வழியற்ற கிழவன்
தன்னுடைய சூரியனை பின்னிரவிலிருந்து
பெயர்த்தெடுத்து அனுப்புகிறான்
பிள்ளையின் குரலை அது எழுப்பட்டுமென்று.

வௌ;வேறு கண்டங்களுக்கிடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்து துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளையென்றும்
அங்கும் இங்குமாக

உலகம் சுருங்கியதென்று சொன்னவர் வாயில்
கொப்பளிக்கும் கண்ணீரை
எந்தப் போத்தலில் அடைப்பேன்.
---------------------------------------------------

மாமிசம்

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------

ஆதியிலே மாமிசம் இருந்தது

அதன்பிறகும் மாமிசம் இருந்தது

கனிகளினுள்ளே காயங்களோடு

காயத்தின் மீது கனிச் சுவைததும்ப

மலரின் மென்னிதழ் விளிம்பெலாம்

கலந்து பரவியது

மாமிச வாடையும் கனிமலர் கலந்த வாசனையும்.



இப்போதும் மாமிசத்தை

வாங்கிப்போகும் பெண்ணிடம்

எதைக் கேட்பது

இந்தப் பசிக்கு.



அவளுடலின் இரத்தவாடையை

அவளுடலின் பால் வீச்சத்தை

மறைத்துக் கொண்டு அவள் போகிறாள்

காற்றையும் அள்ளிக் கொண்டு போகும்

மாபெரும் சமுத்திர அலைகள் தானென்று.



பெண்ணுடலில் விளைந்த

மலைகளையும் ஆறுகள் நிலப்படுகைகளையும்

வெளிகள் சமுத்திரங்களையும் கடந்து

மலர்களையும்

பசுமை நிரம்பிய இலைகளையும்

சுவையூறிய கனிகளையும்

அள்ளிக் கொண்டேன்



அவளுடலில் திளைத்துக் கொண்டிருந்த

மாமிச வாடை மெல்லக் கிpளர்த்தியது

என்னையொரு மிருகமாக.

நான் தோற்றேன்

அத்தனை கால பிரார்த்தனையிலும்.



அவளுள்ளிருந்த கள்ளின் ஊற்றை

பெருக்கிவிட்ட பின் பாய்ந்தது காம அருவி

என்னுடலை இப்போது மாமிசமாக்கி உண்டாள்

அப்பெண் தன்பசி யெல்லாம் தீர.



காலமுழுதும் அடக்கிய அவள் பசிக்கு

என்னைத்தின்னக் கொடுத்தேன்

முடிவற்று

என்பசியும் அடங்கவில்லை முடிந்து



2



ஆதியிலே மாமிசம் இருந்தது

அதன் பிறகும் மாமிசம் இருந்தது

என்றான் ஒரு நண்பன் பெண்ணுடலில்

தன்னை இறக்கிக் கொண்டே



அவன் அறிய அறிய

அவளின் ஆழம் பெருகியது

மாபெரும் சமுத்திரமாகி

எண்ணத்தீரா அலைகளாகியும்.



அவளும் அறிந்ததில்லை

அவனும் ஒரு மாபெரும் சமுத்திரம் தானென்று.



ஆதியிலே மாமிசமிருந்தது

அதன் பிறகும் மாமிசம் இருந்தது

இப்போதும் மாமிசம் இருக்கிறது





00



அவர்கள் போன பிறகு

அவள் கேட்டாள்

இவர்கள்தானா அவர்கள் என்று



அவர்கள்தான் இவர்கள் என்றேன்

இவர்களைப்போல அவர்கள்

என்றும் சொன்னேன்



இவர்களுக்கும் அவர்களுக்குமிடையில்

என்னதான் இருக்கிறது

என்று மீண்டும் அவள் கேட்டாள்

அதுதான் எனக்கும் புரியவில்லை



வந்தவர்களும் வராதவர்களும்

இவர்களும் அவர்களும்தான்

என்று நான் தெரிவதெப்படி

அவள் விளங்குவதெப்படி

இதையெல்லாம் நகுலன் எப்படிச் சொல்வார்.
------------------------------------------------------------

வடக்குப்படை வீடு

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



வடக்கில் படை வீடுகளிருந்தன



குருதி வடியும் கண்கள் தெறித்துப்புரண்ட

படை வீட்டில்

இருண்ட காலத்தின்

பயங்கரங்கர நிழல்கள் மினுங்கும்

பாழ் கிணறிருந்தது.



பாழ் கிணற்றில் மிதக்கும்

இளம் பெண்களின் விம்மலொலியில்

எப்போதும் படைவீடு

போதை கொண்டது.



கடத்தப்பட்டவரின் தனிமைக்குரல் படிந்த

அந்த வீட்டின் சுவர்களில்

கூரொளிரும் வெண்குருதி வடிந்து கொண்டிருக்கிறது

காயாமலே.

அதில் ஒவ்வொரு வதையிலும்

உயிரணுவின் கண்ணிகள் பிளவுண்டு

ஓலமிட்ட மனிதனின் நிழலும்

அதை விரும்பிப் போதை கொண்டவனின் முகமும்

தெரிகிறது ஓவியத் தொகுதிகள் பலவாக.



வதையின் முன்னே மண்டியிட்டவரின்

ஒவ்வொரு காட்சியையும்

ரசித்துக் கொண்டிருக்கும்

படை அதிகாரியிடம்

தன்னுடைய விருப்பங்களைச் சொல்லத்தயங்குகிறான்

எப்போதும் அதிகாரியின் நிழலைத்

தொழுது கொண்டிருந்த சிப்பாய்.



சிப்பாயின் காதல்

அவனுடைய இதயத்திலும்

அதிகாரியின் காலடியிலும் நசுங்கிக் கொண்டிருக்கிறது

துயரம் மிகக் கொண்ட

ஒரு விசுவாசியின் விசுவாசத்தை

எப்படி எஜமானனிடம் தெரிவிப்பது என்பதை

எத்தனையோ தடவை ஒத்திகை பார்த்தபிறகும்

சறுக்கியே செல்கிறது

அவனுடைய விருப்பங்களைச் சுமந்திருக்கும் குதிரை



தானியக்கதிர்களில்

தன் சப்பாத்துகளையும் காதலியின் கடிதங்களையும்

மறைத்து வைக்க விரும்பும்

படைச்சிப்பாய்

பூங்காட்டில் தனக்கான பெண்பறவையை தேடிக் கொண்டிருக்கிறான்

ஆற்றில் இறங்குவதற்கு முன்னர்



வடக்குப்படை வீட்டில் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும்

இளம் பெண்களின் முனகலொலியில்

நடுங்குகின்றன இலைகள் ஒவ்வொன்றும்



சிப்பாயின் காதில் விழுகிறது

அவனுடைய காதலியின் குரலும்

அவள் சிந்தும் அன்பின் துளிகளும்.


வடக்குப் படை வீட்டில்

மறுநாள் சிப்பாய்களின் கலங்கிய விழிகளினூடே

காலைச் சூரியன் தயங்கிவந்தபோது

அதிகாரியின் மரணத்தை கொலை என்று

அறிக்கையிட்டுக் கொண்டிருந்தார்கள்

விசாரணை அதிகாரிகள்.
----------------------------------------

தெற்குத் தெரு

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


நாங்களிருந்த தெற்குத் தெருவை

ஆடுகளின் தெரு என்றார்கள்.

ஆட்டின் குரல்களும்

மொச்சையும் மீந்திருக்கும் தெருவில்

எப்போதும் ஆடு வாங்கிப்போகும்

கரீம் காக்கா ஆட்டு வாசத்தோடு திரிந்தார்.



ஆட்டிடையனுக்கும் கரீம் காக்காவுக்கும்

தீராப்பிணக்குகள் ஏராளம் ஏராளம்.

என்றபோதும்

இருவருடைய பொழுதுகள்

ஆடுகளில்தான் விடிந்தன

ஒருவனிடம் கத்தியிருந்தது

ஒருவனிடம் தீனிருந்தது.



ஆட்டிடையனின் மடியிலும் மனசிலும்

துள்ளிவிளையாடும் ஆட்டுக் குட்டிகள்.

தோளில் தூக்கிப் போட்ட குட்டியோடு

வீதியில் வரும் புத்தனை

அழைத்துப் போகும் ஆடுகள்

காலையிலும் மாலையிலும்.



ஆட்;டிடையனின் மீதிருந்த ஆட்டு மொச்சை

கரீம் காக்காவிடமும் படிந்திருந்தது

ஆட்டின் நிறங்களோடும்

சாயல்கள் மற்றும் குரல்களோடும்.

அவருடைய கத்தியிலும் இருந்தது

காயாத குருதிக்கறையும்

ஆடுகளின் இறுதிக்கண தீனக்குரலும்.



ஆடுகளின் தெருவில்

எப்போதுமிருந்தன மாமிசத்த்pன் கசாப்பு நெடி

கூடவே நிழல் விரித்திருந்தது

ஆடுகள் உண்ணும் குழையின் வீச்சமும்

பால் மணமும் குட்டிகளின் துள்ளும் குரலிசையும்.



நாங்கள் ஆடுகளின் தெருவில் இருந்ததாகவே

எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்

இத்தனை கொலை நடந்த தெருவில்

ஒரு நாளேனும்

யாரையும் தேடி காவலர் வந்ததில்லை

விலங்கோடு

ஆடுகளின் தெருவில்

எதுதான் நடக்கும் எதுதான் மிஞ்சும் என்று தெரியவில்லை.

------------------------------------------------------------

வளாகத்தின் சுவர்களில் படிந்திருக்கும் பயங்கரம்

எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------------------



மழை இரவில் வளாகத்தின் சுவர்கள்

பயங்கரமாயின.

வழுவழுப்பான அந்தச் சுவர்களைத்துளைத்துக்கொண்டு

நேற்று வந்த மிருகங்கள் இன்றும் வரக்கூடும்

நேற்றிரவின் பலியை

இன்றும் அவை தொடரக்கூடும்.

எல்லாவற்றுக்கும் துவக்கை நம்பும்

காலத்தில்

இரவும் பகலும் மரணத்தின் நிழலில்

உறங்கிக் கொண்டிருந்தன.

நேற்றிரவும் நான்கு நண்பர்கள்



பகலில் மருத்துவமனையிலிருந்து திரும்பியவனை

இரவு விழுங்குகிறது

இரவில் படுத்துறங்கியவனை

பகல் பலிகொண்டது

கொலை நகரத்தில் வாழ்வொரு

சல்லடையாக்கப்பட்ட பழையகந்தற்துணி.



பயங்கரங்களின் இரவைக்கடந்து

காலையில்

தெருவில் இறங்கினேன்.

சிதறிக்கிடந்த பிணங்களைக்கடந்து

கடைக்கு வந்தபோது

இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் பத்திரிகையை

வாங்கிச் செல்லும் சனங்கள்

சிரித்து விலகினார்கள்



நடைபாதையில் தேங்கிக்கிடந்த சேற்றில்

இன்னும் சூடாறாமல் புகைந்து கொண்டிருந்த

துப்பாக்கியின் வெற்றுக்கோது சிரித்தது.



காய்கறிக்கடையில்

தேங்கிக்கிடந்த அழுகுரல்களை விலக்கி

தன்முகத்தைக் காட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம்

நாயிழுத்துச் சென்ற

கொலையுண்ட மனிதரின் வாடிய முகங்களிருந்தன.

பிள்ளைகளைத்தின்னக் கொடுத்த தன்துயரத்தை

வரும் ஒவ்வொருவரிடமும்

பகிர்ந்து கொண்டிருந்தாள் அவள்.



கொலைவாளை வைத்திருந்தான் என்று

குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்

தலையைக் கொய்துகொண்டுபோன

புதிய கடவுள்களைச் சனங்கள் திட்டினார்கள்.

சாத்தானும் கடவுளும்

ஒரே ராஜ்ஜியத்தில் பங்குவைத்துக் கொண்ட

உலகத்தில்

சனங்களின் நிழலைக்கண்டு

நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்

ஒருவனைக் கண்டேன் அன்றிரவின் இறுதிக் கனவில்.

-------------------------------------------------------------------

Wednesday, February 13, 2008

பூனையின் சித்திரங்கள்


எழுதியவர்------------
------------------------------------
----------கருணாகரன்

பூனை என்றவுடன்
உங்கள் நினைவுக்கு வருவது
'மியாவ்' என்ற அதன் குரலா
ஓசையற்ற அதன் மிருதுவான நடையா
உடல் சுருக்கி கண்மூடி
பஞ்சுக்குவியலாயிருக்கும் அதன் தோற்றமா
மரத்தில் தாவித்திரியும்
அணிலைக்குறிவைத்து நோக்கும் அதன் ஒற்றைப்புலனா
ஏதோ ரகசியத்தை கண்டறிந்ததைச் சொல்லும்
அதனுடைய வாலாட்டலா
உங்கள் காலுரசி தோழமைகொள்ளும்
அதன் பிரியமா
எப்போதும் தன் சுத்தம் பற்றி
அக்கறையோடிருக்கும் அதன் குணமா

அல்லது
பூனை பாஸ்கரனா
பாஸ்கரனின் பூனையா

(ஓவியர் பாஸ்கரன் பூனைகளையே அதிகமாக வரைந்திருக்கிறார். அவருடைய பூனைகள் நினைவாகவும்)

2

கண்மூடிக்குவிந்திருக்கும் பூனையின்
தியானத்துள்
விரியும் காட்சிகளென்ன
அலையும் கனவுகளென்ன

3

நீங்கள் புணரும்போது
ரகசியமாகிறீர்கள்
பூனைகள் புணரும்போது ரகசியம் கரைகிறது

எலிகள் புணருகின்றன பூனைகளுக்காக
பூனைகள் புணருகின்றன எலிகளுக்காக

எலிகளும் பூனைகளுமில்லாத உலகம் எப்படியிருக்கும்
அதைப்போல
எலிகளில்லாத பூனைகளின் உலகமும்
பூனைகளில்லாத எலிகளின் உலகமும்

4

ஒருபோதும் பூனைகளை எதிர்க்காத
எலிகளை
எப்போதும் பகையாகக் கொள்வதேன் பூனைகள்
என்ற கேள்வி யெழுந்தது
திடீரென ஒரு நாள் ஒரு எலியிடம்

அந்தக் கேள்வி இன்னும்
கேள்வியாகவே இருக்கிறது
பூனைகளுக்கும் எலிகளுக்குமிடையில்

5

எங்கள் வீட்டில் பூனைகளுமுண்டு
எலிகளுமுண்டு

எலிகளைப் பூனைகளுக்குப்பிடிக்காதிருக்கலாம்
பூனைகள் எலிகளுக்குப் பகைமையாக இருக்கலாம்
ஆனால்
எலிகளும் பூனைகளும்
அது அது அதனதன் பாட்டில்

பூனைக்கு சோறு வைக்கிறேன்
எலிகளுக்கோ எதுவும் கொடுப்பதில்லை
அதனாலவை
தாமே எடுத்துக் கொள்கின்றனவா வேண்டியதை எல்லாம்

தாமே எடுத்துக் கொள்வதால்
எதையும் எடுக்கலாம்
எப்படியும் கொள்ளலாம் என்பதால்
சகிக்க முடியவில்லை
எலிகளின் வன்முறையை

எலிகளும் பூனைகளைப்போல்
நட்பாயிருந்தால்
எதையாவது கொடுத்துத் தீர்க்கலாம்

ஆனாலவை எப்போதும்
மிரண்டோடுகின்றன

அவற்றின் கண்களில் படபடக்கிறது
குற்றவுணர்வும்
அது பெருக்கும் அச்சமும்

எலிகளுக்குப் பூனைகள் மட்டுமா பகை

எங்கள் வீட்டில்
எலிகளுமுண்டு
பூனைகளுமுண்டு
நாங்களுமுண்டு


சினேகம்

பள்ளி நாட்களில்
எப்படியோ அறிமுகமாகிவிட்டது
குரங்குளோடான நட்பு
குரங்குகளுக்கும் பள்ளிப்பிள்ளைகளோடுதான்
சினேகம்

ஆனால் ஒன்று
எல்லாக் குரங்குகளும் ஒரேமாதிரியானவையில்லை
என்றபோதும்
எந்தக்குரங்குடன் நம் சினேகம் என்று தெரிவதேயில்லை
பலவேளை

வீட்டுக்கூரையில்
மாமரத்தில்
தெருக்கரைப்புளியில்
மதிலில்
காரின் மேல்
தோட்;டத்தில்
என்று எங்கும் புழங்கினாலும்
எந்த மனிதரும் குரங்கை அழைத்ததில்லை
ஒரு விருந்தாளியாக

எங்கேதான் குரங்கைக் கண்டாலும்
கல்லெறியாத எந்தச் சிறுவனும் இல்லை
சிறுவர்களோடு விளையாடாத குரங்குகளும்
எந்தத் தெருவிலும் இல்லை

சிறுநுனிக் கொப்புகளில்
தாவித் தொங்கும் குரங்குகளிடம்
மலைதிரண்ட பலமா
இல்லைக் குரங்கேறும்போது அக்கொப்;புகளில்
துளிர்க்கும் வீரியமா
எதிலுண்டு அப்பெரும் சாகஸம்
மரத்திலா குரங்கிலா

எவ்வளவுதான் ஊரிலும்
நகரத்திலும் இருந்தாலும்
குரங்குகளை காட்டுப்பிராணியென்றே சொல்கிறார்கள்.
நகரத்துப்பழக்கங்களில்
குரங்குகளுக்கு ஈடுபாடிருந்தாலும்
அவை காட்டின் வாசனையோடேயிருக்கின்றன

என்னால் ஒருபோதும் குரங்குகளை மறக்க முடியவில்லை
காட்டில் பயின்ற வித்தைகளை
அவை ஒருபோதும்
விட்டதில்லை யாருக்காகவும் எதற்காகவும்
எப்போதும் எங்கும்
இந்த நகரத்திலும்

அதனால் அவற்றை பிடித்திருக்குமா
இல்லை
எங்கோவோர் புள்ளியில் இன்னும்
அறுபடாமல் தொடரும்
தொப்புள் கொடியுறவின் நிமித்தமா


திருக்கோணேச்சரம்


பாடல்பெற்ற திருத்தலத்தின் திசைமுகங்களில்

போரிசை முழக்கம்
உடுக்கொலி மறைத்து
சங்கொலி மறைத்து
எழும் நாதப் பேரிசை மறைத்து.

மலைகளை அதிரவைக்கும் விதமாய்
'தென்னாடுடைய சிவனே போற்றி…'
என்றவரெல்லாம்
அடிவீட்டில் முடங்கினார்
வழிதோறும் மலைமுழுதும்
படைவீட்டின் பெருக்கம் கண்டு.

இராவணன் வெட்டில்
கடல் குமுறித்துடித்தது
நூற்றாண்டாய், அதற்கும் அப்பால்
ஆயிரமாண்டுகளின்
தேவாரப்பண்ணிசையை
அலைகள் பாடின ரகசியமாய்
'நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்பு…'

பீரங்கிகளோடு அலைகளை மேவி அலைந்தன
போர்ப்படகுகள்
துறைமுகத்தில்.
எண்ணெய்க்குதங்கள் இந்தியாவுக்கு
சில பங்குகள் சீனாவுக்கு
பிறிமா ஆலை சிங்கப்பூருக்கு
சிமெந்து ஆலை யப்பானுக்கு
துறைமுகமோ அமெரிக்காவுக்கு.

சிவனுக்கோ
அடியாருமில்லை
அடிவைக்க இடமுமில்லை.

மலை முகட்டில் புத்தரின் சொருபம்
நிஷ்டையில்.

தியானம் வசதியாகிப் போய் விட்டது
அவருக்கு
அடையாள அட்டை இல்லாதபோது
கண்மூடி அமர்ந்து விடலாம்
சற்றுப்பாதுகாப்பு.

மலையில் சிவன்
சுற்றிவரப்படையாட்கள்
எங்கே போவது
துவாரபாலகர்களையும் காணவில்லை
அவர்களைப் பிடித்துச் சென்றது யார்
யாரிடம் முறையிடுவது

பதற்றத்துடன் உமையொருபாகன்


மிஞ்சும் உயிர்


நெகிழ்ந்து கரையட்டு;ம்
இந்த உடல்
கனமும் வலியும் நிரம்பி
எல்லோரையும் உறுத்தும் படியாய்
இன்னுமிருக்க வேண்டாம்

மாத்திரைகளை தின்னத் தொடங்கும்போதே
மரணத்தின் சாயல் முகத்தில் விழுகிறது
தொங்கும் கயிற்றின் நிழலாய் என்றேன்

இல்லையில்லை
மரணத்தை விரட்டும்
சவுக்கோடு காத்திருக்கின்றன அவை,
அச்சமில்லை' என்றார் அன்றிரவும் மருத்துவர்
சிரித்தவாறு.

எப்போதும் நினைவில் எழுந்தாடும்
கத்திகள்
உயிரைக் கொண்டேகவா
அல்லது ஒரு சிமிழில்
மீண்டும் பக்குவமாக்கவா என்று புரியவில்லை
சத்திர சிகிச்சைக் கூடத்தின் சுவர்களிலும்
சுழலும் மின் விசிறியிலும்
கனவிலுந்தான்

ஒரு மிடறு தண்ணீர்
சாவதற்கு முன்னும்
பின்னும்

இடையில் என்ன நடந்தது
யாருக்கும் நினைவில்லை.

மிஞ்சிக்கிடக்கின்றன மாத்திரைகள்
எதுவும் செய்ய முடியாமல்
பிரிந்த உயிரின் உடலோடு



முகம் -1

எத்தனை முகங்களை
நிதமும் பார்த்தேன் என்று யாருக்கும் கணக்கிருக்குமா
என்று தெரியவில்லை
பார்த்த முகங்களெல்லாம்
நினைவிலிருக்கும் என்றும் சொல்வதற்கில்லை
இத்தனை முகங்களையும் பார்த்திருப்போம் என்றும்
நினைத்ததில்லை.
ஒரு முகத்தை எத்தனை தரம்தான் பார்த்தோம் என்றும்
நினைவில்லை
பார்க்காத முகங்கள் எத்தனை என்றும் தெரியவில்லை
பார்த்த முகங்களில் எத்தனை விதமென்றும்
பார்க்காத முகங்களில் எத்தனை வகையென்றும் கூட

பார்த்த முகங்களிலும்
பார்க்காத முகங்களிலும் என்ன இருக்கிறது
என்ன இல்லை என்றும் புரியவில்லை முழுதாய்
தெரிந்த கணக்குகள்
எப்போதும் சறுக்க முனைகின்றன
முகங்களின் வளவளப்பிலும்
அவற்றின் பள்ளத்தாக்குகளிலும்

பார்க்காத முகங்களையெல்லாம் பார்ப்போம் என்பதற்குமில்லை
எந்த நிச்சயமும்
பார்த்த முகங்களையும் எத்தனை தடவைதான்
பார்ப்போம் என்றும் சொல்வதற்கில்லை

தெரிந்த முகங்களிலும் தெரிவதில்லை
எந்த முகத்தில் என்ன
இருந்ததென்று சிலபோது

இன்னுமொன்று
எந்த முகத்தை இறுதியாகப்
பார்ப்போமென்று யாருக்காவது தெரியுமா
அதுவும் எப்போதென்று


முகம் -2

அம்மாவின் முகம்
தங்கையின் முகம்
காதலனின் முகம்
நண்பரின் முகம்
தோழியின் முகம்
தாத்தாவின் முகம்
கள்வனின் முகம்
கொலையாளியின் முகம்
கொல்லப்பட்டவனின் முகம்
குழந்தையின் முகம்
மந்திரவாதியின் முகம்
படை அதிகாரியின் முகம்
பிச்சைக்காரனின் முகம்
துக்கம் நிரம்பிய கவிஞனின் முகம்
நடிகனின் முகம்
இறந்தவரின் முகம்
கடனாளியின் முகம்
நோயாளியின் முகம்
காற்றின் முகம்
பூவின் முகம்
வானத்தின் முகம்
கடலின் முகம்
கடவுளின் முகம்...

எங்கேனும் கண்டாயா என்னுடைய
காணாமற்போன முகத்தையும்
ஒப்பனை முகத்தையும்
நான் மறைத்து வைத்த முகத்தையும்
நீ கண்டெடுத்த முகத்தையும.
---------------------------------------------------

Thursday, January 31, 2008

சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி கவிதைகள்

---------------------------------------------------------------------------
எழுதியவர்___________________________
--------------------------கருணாகரன்
---------------------------------------------------------------------------
பனிக்குடம் பதிப்பகம்

பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில் இந்தத்தாமதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அவருடைய கவிதைகளே சாட்சி.




உலகம் சுருங்கி கிராமமாகிவிட்டது. தொடர்பாடலால் அது விரைவு கொண்டு விட்டது என்றே சொல்கிறோம். சுருங்கியிருக்கும் இந்தக்கிராமத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் கிராமத்திலிருக்கின்ற எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும் நிலையுண்டு. ஆனால் இந்தக்கிராமத்தில் நாங்களிருக்கிறோமா என்று பார்க்க வேணும். அதாவது தொடர்பாடலால் சுருக்கி கிராமமாக வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் போரில் அகப்பட்டுச் சிக்கித்தவிக்கும் சமூகங்கள் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.




இது இன்று பொதுவாக போர்ச்சூழலில் வாழும் சமூககங்களுக்கு எழுந்துள்ளதொரு முக்கிய சவால். உலகத்தை பொதுமைப்படுத்த விளையும் பண்பார்ந்த செயலில் பலவிதமான தன்மைகளுண்டு. சிலர் மதத்தை வழிமுறையாகக் கொள்கின்றனர். சிலர் பொருளாதார மாற்றத்தை வலியுறுத்திச் செயற்படுகின்றனர். வேறு சிலர் அறிவியல் வளர்ச்சி மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று சிந்திக்கின்றனர். இன்னுஞ்சிலர் ஜனநாயக ரீதியான வளர்ச்சியும் பண்பும் பெருகும்போது மாற்றம் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.




ஆனால் இந்த எல்லா வழிகளுக்குள்ளும் இருக்கும் அதிகாரத்துவமும் குருட்டுத்தனங்களும் இடைவெளியின்மைகளும் எப்போதும் எதிர் நிலைகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த எதிர்நிலைகள் நம்பிக்கைக்கு எதிரான கோட்டை அழுத்;தமாக வரைகின்றன. உண்மையில் இந்த வழிகளை இவற்றுக்கான செயல்முறைகள் அடைத்து விடுகின்றன பெரும்பாலும். இதுவொரு மாபெரும் அவலம். இதுதான் தீராத கொடுமை. இதுவே நல்ல நகைமுரணும்கூட.




எந்தவொரு கோட்பாட்டுவாதமும் அதன் செயலால்தான் ஒளி பெற முடியும். அந்தச் செயலில் நிராகரிப்புக்கும் ஏற்றுக்கொள்ளலுக்குமான சமாந்தர விசையும் பயணப்பாதையும் உண்டு. அதாவது நெகிழ்ச்சியும் வெளியும் அவற்றில் இருக்கும். இருக்க வேணும். இல்லாதபோது அது எப்படியோ அடைபட்டுப்போகிறது. அல்லது எதிர் நிலைக்குப் போய்விடுகிறது.




என்னதானிருந்தாலும் மனிதன் ஒரு இயற்கை அம்சம் என்பதை வைத்தே எதையும் அணுகுதல் வேணும். மற்ற எல்லா அம்சங்களோடும் மனிதனை வைத்து நோக்க முடியாது. குறிப்பாக பொருளியல் அம்சங்களுடனும் இயந்திரங்களோடுமான கணிதத்தில் மனிதன் எப்போதும் சிக்காத ஒரு புள்ளியே.




ஆகவே மனித விவகாரத்தில் எப்போதும் பல்வகைத்தான அம்சங்களுக்;கும் இயல்புக்கும் இடம் அவசியம். ஆனால், இந்த இடத்தை பகிர்வதிலும் அளிப்பதிலும் பெறுவதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளும் முரண்களும் எப்போதும் தீராப்பிணியாவே உள்ளது. இது மனிதனைச் சுற்றியுள்ள சாப இருள். இந்தச் சாப இருளின் காரணமாக தமிழ்நதியின் கவதைகளை இவ்வளவுகாலமும் காணாதிருந்து விட்;டேன். அதேபோல இந்தச் சாப இருள்தான் அவருடைய கவிதைகளை மறைத்தும் வைத்திருந்திருந்தது. அதுமட்டுமல்ல தமிழ்நதியின் கவிதைகளும் இந்த இருளின் துயரமும் இதனால் ஏற்படும் அவலமும் அநீதியும் அவற்றுக்கெதிரான நிலைப்பட்டவையும்தான். ஆக இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் முடிச்சுகள், கோர்வைகளாக இருக்கின்றன. எனவே இந்தக்கவிதைகளைப் படிக்கும்போதும் இவற்றை அணுகும்போதும் இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக கிளம்பி வருகின்றன.




சுருங்கியிருப்பதாகச் சொல்லப்படும் இந்த ' உலகக்கிராமத்தை' பொய்யென்கிறார் தமிழ்நதி. அப்படி தகவலாலும் தொடர்பாடலாலும் சுருங்கியிருக்குமாக இருந்தால் எப்படி எங்கள் அவலங்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமற்போயிருக்கும் என்பது இந்தக்கவிதைகளின் அடியொலியாகும். தமிழ்நதி இதை எந்தத்தூக்கலான குரலோடும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. முறையிடவும் இல்லை. ஆனால் தன்னுடைய கேள்வியையும் நிராகரிப்பையும் சத்தமில்லாமல் அறிவார்ந்த முறையில் மெல்ல வைக்கிறார், நம் அருகில். அது எல்லோருடைய கண்ணிலும் மனதிலும் ஊசியைப்போல ஊடுருவிச் செல்லும் விதமாய்.




அதேவேளை, சக மனிதர்களால், அரசினால், இனரீதியாக இழைக்கப்படும் அநீயை எப்படி இந்தத்தகவல் யுகமும் அறிவு உலகமும் ஜனநாயக அமைப்பும் கண்டு கொள்ளமுடியாதிருக்கிறது என்றும் எப்படி இதையெல்லாம் இவற்றால் அனுமதிக்க முடிகிறது என்றும் தன்னுடைய கவிதைகளின் வழியாக பல கேள்விகளைப் பரப்புகிறார் இந்த வெளியில்.




இதன் மூலம் தமிழ்நதி பெண் கவிதைப்பரப்பிலும் ஈழத்துக்கவிதை வெளியிலும் தமிழ்க்கவிதையின் தளத்திலும் தனித்துத் தெரியும் அடையாளங்கொண்டிருக்கிறார். குறிப்பாக சொல் முறையால்- மொழிதலால் அவர் வேறுபட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை அமைப்பு அல்லது அதன் அனுபவங்கள் அவரிடம் மிஞ்சியிருக்கும் அல்லது திரளும் எண்ணங்கள் எல்லாம் இங்கே உரையாடலாகியிருக்கின்றன.




குறிப்பாக ஈழத்துக் கவிஞர்கள் பலரதும் அண்மைய (அண்மைய என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளான) கவிதைகளில் இன வன்முறையின் கொடுவலியை யாரும் உணரமுடியும். சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம், சிவசேகரம், முருகையன், வ.ஐ.ச. ஜெயபாலன், அ.யே சுராசா, சேரன் போன்ற தலைமுறைகளின் கவிகள் தொடக்கம் இன்னும் இந்த வலியுடைய குரலையே ஒலிக்கிறார்கள். இதில் இடையில் வந்த தலைமுறையைச் சேர்ந்த ஊர்வசி, மைத்திரேயி, ஒளவை, சிவரமணி என்ற பெண் கவிஞர்களும் இத்தகைய தொனியிலும் வலியிலுமான கவிதைகளையே தந்தார்கள். அதிலும் போரும் வாழ்வு மறுப்பும் அகதி நிலையும் இதில் முக்கியமானவை.




இந்த அகதி நிலை இரண்டு வகைப்பட்டது. ஒன்று உள்@ரில் இடம்பெயர்ந்து அலைதல். அருகில் வீடோ ஊரோ இருக்கும். ஆனால் அங்கே போக முடியாது. அதுவும் ஆண்டுக்கணக்கில் அங்கே போக முடியாது. அதெல்லாம் சனங்களைத் துரத்திவிட்டு படையினருக்காக அத்துமீறி அரசாங்கம் கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசங்களாகும். அப்படிக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சரைவை மூலம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலான சுவீகார சட்டம் வேறு. ஆனால் அப்படி கைப்பற்றிய பிரதேசத்துக்கான நட்ட ஈட்டைக்கூட அது கொடுக்கத்தயாரில்லை.




தவிர, போரில், படையெடுப்புகளின் போது நிகழும் அகதி நிலை. இடம் பெயர்வு. இதைவிடவும் புலம் பெயர் அகதி நிலை வேறு. இது வேரிழந்த நிலை. அந்நியச் சுழலில் அந்தரிக்கும் கொடுமையான அவலம். தமிழ்நதி இவை எல்லாவற்றையும் தன் மொழியில் பிரதியிடுகிறார். தமிழ்நதியின் பிரதியில் இனவன்முறைக் கெதிரான பிரக்ஞையும் அகதித்துயரும் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அவருடைய பிரக்ஞை இவற்றில்தான் திரண்டுள்ளது.




இது குறித்து அவருடைய சில அடையாளங்கள், அதாவது இத்தகைய வாழ்நிலையின் பின்னணியில் தமிழ்நதியின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்நதி அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதியின் முதற்கவிதையும் இறுதிக்கவிதையும்கூட அரசியற் கவிதைகள்தான். அதிலும் இந்த அரசியலைத் தீவிரமாகப் பேசும் கவிதைகள்.




முதற்கவிதையில் அவர் எழுதுகிறார்,




நேற்றிரவையும் குண்டு தின்றது


மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது


சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்


குழந்தைகளுக்குப் பாலுணவு தீர்ந்தது


???..


???..








பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி


பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றன


வளர்ப்புப்பிராணிகள்


சோறு வைத்து அழைத்தாலும்


விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்


நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது


திரும்ப மாட்டாத எசமானர்கள் மற்றும்;


நெடியதும் கொடியதுமான போர் குறித்து


???..


???..


ஒவ்வொரு வீடாய் இருள்கிறது




இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது


இந்தக்கதவின் வழி


ஒவ்வொரு காலையும் துளிர்த்தது


???..


???.




மல்லிகையே உன்னை நான்


வாங்கிவரும்போது நீ சிறு தளிர்




இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்


சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்


எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது


எஞ்சிய மனிதரை


சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை


வேம்பை


அது அள்ளிறெறியும் காற்றை


காலுரசும் என்


பட்டுப் பூனைக்குட்டிகளை




என்று. அதைப்போல இறுதிக்கவிதையில்,




வேம்பின் பச்சை விழிநிரப்பும்


இந்த யன்னலருகும்


கடல் விரிப்பும்


வாய்க்காது போகும் நாளை


இருப்பின் உன்னதங்கள் ஏதுமற்றவளிடம்


விட்டுச் செல்வதற்கு


என்னதான் இருக்கிறது






எனச்சொல்கிறார். இந்தக்கவிதை தாயகத்தின் இடம் பெயர்தலைச் சொல்கிறது. சொல்கிறது என்பதை விடவும் அதை அது பகிர்கிறது. அந்த நிலையை அது அப்படியே, அதுவாக, நிகழ்த்துகிறது எனலாம். அந்த அந்தரநிலையின் கொடுமுனைத் துயரிது.




முதற்கவிதையில் வரும்




இந்தக்கதவின் வழி


ஒவ்வொரு காலையும் துளிர்த்தது




மல்லிகையே உன்னை நான்


வாங்கிவரும்போது நீ சிறு தளிர்




இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்


சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்


எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது


எஞ்சிய மனிதரை


சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை


வேம்பை


அது அள்ளிறெறியும் காற்றை


காலுரசும் என்


பட்டுப் பூனைக்குட்டிகளை




என்ற இந்தவரிகள் இதுவரையான இடம் பெயர்வுக்கவிதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதேவேளை, சாதாரணமான வார்த்தைகளால் அசாதாரணமான பகிர்தலை ஏற்படுத்துவன. அகதியாதலின் புள்ளியில் திரளும் துயரத்துளி எப்படி என்பதற்கு, அந்தக்கணம், அந்த மையப்பொழுது, எப்படி வேர்கொண்டெழுகிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமுண்டா.




நாடோடியின் பாடல ; என்ற இன்னொரு கவிதையில் அவர் எழுதுகிறார்.




உயிராசையின் முன்


தோற்றுத்தான் போயிற்று ஊராசை


போர் துப்பிய எச்சிலாய்ப்


போய்விழும் இடங்களெல்லாம்


இனிப் போர்க்களமே




நாடோடிகளின் துயர் செறிந்த பாடல்


ஏழுகடல்களிலும் அலைகிறது




எந்தத் தேவதைகளைக் கொன்றழித்தோம்


எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்


'அம்மா ' என விம்மும் குரல் கேட்க.




இங்கே ஈழத்தமிழரின் அகதித்துயர் மட்டும் சொல்லப்படுவதாகக் கொள்ள முடியாது. அதற்குமப்பால் உலகமுழுவதுமிருக்கும் அரச பயங்கரவாதம், மதவாதம், இனவாதம், நிறவாதம் என்ற பெரும் பிடிவாதங்களால் அகதிகளாக்கப்பட்ட சனங்களின் துயரமும் அவலமுமே கூட்டிணைவாகியுள்ளது. தமிழ்நதி அகதிநிலையில் வௌ;வேறு கண்டங்களில் அலைந்தவர். அப்படி அலையும்போது அவர் கண்ட பல சமூகங்களின் நாடோடி வாழ்க்கை அவல முகம் இங்கே இப்படி வைக்கப்பட்டுள்ளது.




உயிருக்கு அஞ்சும்போது, அதற்கு ஆசைப்படும்போது ஊருடனான உறவு, சொந்த நிலத்துடனான உறவு துண்டிக்கப்படுகிறது. ஊரிலிருத்தல், சொந்த நிலத்தில் இருத்தல் மிகமிக ஆபத்தானதாக ஆகியிருக்கிறது, அது எந்தவகையிலும் உத்திரவாதமுமில்லாதது என்பதையிட்டே பெரும்பாலான நாடோடிகள் அப்படி அலைகிறார்கள் என்ற தொனியை இந்தக்கவிதையின் வழி தமிழ்நதி உணர்த்துகிறார்.




அரச பயங்கரவாதத்தையும் அகதி நிலையையும் பேசுவனவாகவே உள்ளன இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள். அதிலும் புலம்பெயரியின் அலைதலை இவை அழுத்தமான தொனியில் பதிவு செய்கின்றன. அதிகாரமும் தேவதைக்கதைகளும், விசாரணை, பிள்ளைகள் தூங்கும் பொழுது, எழுத்து: விடைபெற முடியாத தருணம், ஊருக்குத்திரும்புதல், திரும்பிச் செல்ல விரும்புகிறேன், இறந்த நகரத்தில் இருந்த நாள், அற்றைத்திங்கள் இப்படிப்பல. இதில் அதிகாரமும் தேவதைக்கதைகளும் என்ற கவிதை இந்தத் தொகுதியிலேயே நீண்ட கவிதையாக உள்ளது. ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, அரச பயங்கரவாதம், அதற்கெதிரான அவர்களின் போராட்டம், அவர்களுடைய இன்றைய நிலை, தொடரும் துயரம், இவை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை நோக்கி விடப்படும் கோரிக்கை, போராளிகளின் வாழ்க்கை, இவற்றிலெல்லாம் தமிழர்களின் உணர்வுகள் ? என எல்லாவற்றையும் இந்தக் கவிதை பேசுகிறது. ஈழத்தமிழர் அரசியலினதும் சமகால வாழ்வினதும் சரியான தரிசனம் இது.




துயரங்களிலேயே மிகவும் பெரியதும் கொடுமையானதும் அகதிநிலைதான். கொடுவதை அது. அவமானங்களும் புறக்கணிப்பும் அந்நியத்தன்மையும் திரண்டு பெருக்கும் வலி.




ஒரு சுதேசியை விடவும்


பொறுமையோடிருக்கப் பணித்துள்ளன


அந்நிய நிலங்கள்


???..


???..




ரொறொன்ரோவின் நிலக்கீழ்


அறையொன்றின் குளிரில்


காத்திருக்கின்றன இன்மும்


வாசிக்கப்படாத புத்தகங்கள்


நாடோடியொருத்தியால் வாங்கப்படும்


அவை


கைவிடப்படலை அன்றேல்


அலைவுறுதலை அஞ்சுகின்றன




இதுதான் நிலைமை. இதுதான் கொடுமையும். இது இன்னொரு வகையில் மறைமுகமான அடிமை நிலைதான். எந்த உரிமையுமில்லாத இடத்தில் எப்படி நிமிர முடியும். ஆக அங்கே அப்போது எல்லோரிடமும் பணியத்தான் வேணும். அது அடிமை நிலையன்றி வேறென்ன.




தமிழ்நதியின் கவிதைகள் மூன்று விதமான விசயங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று போரும் அதன் விளைவான அலைதலும். இதில் புலம் பெயர்தலும் அடங்கும். மற்றது, அவருடைய கவனம், ஈடுபாடு, இயல்பு என்பனவற்றைக் கொண்ட அவருடைய உலகம். அடுத்தது, பெண்ணாயிருத்தலின் போதான எண்ணங்களும் அநுபவங்களும். ஆக, இந்தத் தொகுதி, தமிழ்நதியின் அக்கறைகளும் அடையாளமும் என்ன என்பதைக் காட்டுகிறது.




கடவுளும் நானும், முடிவற்ற வானைச் சலிக்கும் பறவை, நீ நான் இவ்வுலகம், ஒரு கவிதையை எழுது, யசோதரா, எழுது இதற்கொரு பிரதி, துரோகத்தின் கொலைவாள், ஏழாம் அறிவு, மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, சாயல ; போன்றவை தமிழ்நதியின் இயல்பைக் காட்டும் கவிதைகள். அவருடைய மனவுலகத்தின் இயங்கு தளத்தையும் அதன் வர்ணங்களையும் திசைகளையும் இவற்றில் காணமுடியும். எதனிடத்திலும் அன்பாயிருத்தலும்; அன்பாயிருக்க முடியாததும்தான் தமிழ்நதியின் இயல்பு. ஆனால் அதையெல்லாம் மூடிப் பெரும் கருந்திரையாக துயரம் படிகிறது அவருக்கு முன்னே.




தொலைபேசி வழியாக எறியப்பட்ட


வன்மத்தின் கற்களால்


கட்டப்படுகிறது எனது கல்லறை




எல்லாப்பரண்களிலும் இருக்கக்கூடும்


மன்னிக்கப்படாதவர்களின்


கண்ணீர் தெறித்துக்கலங்கிய


நாட்குறிப்புகளும் கவிதைகளும ;




(மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு)




சாளரத்தின் ஊடே அனுப்பிய


யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை


பௌர்ணமி நாளொன்றில்


அவன் புத்தனாகினான்


இவள் பிச்சியாகினாள்




அன்பே என்னோடிரு அன்பே என்னொடிரு '




.........................


.........................


சுழலும் ஒளிவட்டங்களின்


பின்னாலிருக்கிறது


கவனிக்கப்படாத இருட்டும்.




(யசோதரா)




இந்தக்கவிதைகள் மிக முக்கியமானவை.




அதிலும் யசோதரா கவிதை சித்தார்த்தரை விமர்சிக்கிறது. புத்தர் என்ற ஒளிவட்டத்தின் பின்னால் மறைக்கப்பட்ட அவலத்தையும் உண்மையின் இன்னொரு பாதியையும் கொடுமையையும் அது கடுந்தொனியில் விமர்சிக்கிறது.




யசோதரையையும் புத்தரையும் ஒன்றாகப்பார்க்க முடியுமா என்று யாரும் கேட்கலாம். சித்தார்த்தனின் ஞானத்துடன் எப்படி யசோதரையை கொள்ள முடியும் என்ற கேள்வியை விடவும் இருவருக்குமான உரிமை பற்றியதே இங்கே எழுப்பப்படும் பிரச்சினையாகும். யசோதரையை தனித்தலைய விட்டுவிட்டு புத்தன் ஞானம் பெறுதில் எந்தப் பெறுமானமும் இல்லை என்பது மட்டுமல்ல அதுவொரு வன்முறையுமாகும் என இந்தக் கவிதை முன்வைக்கிறது தன் வாதத்தை.




வரலாற்றில் எப்போதும் பெண்ணினுடைய முகத்தையும் மனதையும் ஆணின் பிம்பம் மறைத்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கு இன்னொரு ஆதாரமாக இந்தக்கவிதையை தமிழ்நதி முன்வைக்கிறார். எதிர் முகம் அல்லது மறுபக்கம் பற்றிய அ;கறையைக் கோரும் குரலிது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் பொதுவானது.




இதைப்போல பெண்ணிலை சார்ந்து எழுதப்பட்ட கவிதைகளிலும் தமிழ்நதியின் அரசியல் பார்வையையும் மனவொழுங்கையும் காணலாம். ஆண்மை, சாத்தானின் கேள்வி, புதிர், நீரின் அழைப்பு, தண்டோராக்காரன், கடந்து போன மேகம், நினைவில் உதிக்கும் நிலவு போன்றவை பெண்ணரசியலின் கொதிப்பையுடையவை. பொதுவாக தமிழ்நதியின் கவிதைகள் துயர்மொழிதான் என்றாலும் அதை ஊடுருவியும் மேவியும் குழந்தைமை நிரம்பிய இயல்பும் நெகிழ்வும் இவற்றில் குவிந்திருக்கிறது. அவருள் எல்லையின்மையாக விரியும் உலகு இது. அன்பின் நிமித்தமாதல் என்று இதைச் சொல்லலாம். அல்லது எதனிலும் கரைதல்.




இந்தக்கவிதைகளைப்படிக்கும்போது தமிழ்நதியைப்பற்றிய சித்திரம் நமது மனதில் படிகிறது. விரிகிறது. எழுகிறது தெளிவான வரைபடமாக.




இவை தவிர்ந்த பொதுவான கவிதைகளும் உண்டு. யன்னல், கலகக்காரன் போன்றவை இவ்வாறான கவிதைகளுக்கான அடையாளம். இதில் யன்னல ; பசுவய்யாவின் ( சுந்தர ராமசாமியின்) கதவைத்திற என்ற கவிதையின் இன்னொரு நிலை என்றே நினைக்கிறேன். பசுவய்யா கதவைத்திற, காற்று வரட்டும் என்று சொல்கிறார். தமிழ்நதியோ யன்னலை அடைப்பதன் மூலம் உலகத்தைத் துண்டிக்கிறாய ; என்கிறார். பூட்டி வைக்கும் எதனுள்ளும் எவருள்ளும் புக முடியாது வெளிச்சம் என்று இந்தக்கவிதையின் இறுதிவரி, கவிதை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க நிறைவடைகிறது. இங்கே பசுவய்யாவினுடைய உலகமும் தமிழ்நதியின் உலகமும் சில புள்ளிகளில் ஒன்றிணைவதைக்காணலாம். தலைமுறை கடந்த பிறகும் அந்த உணர்வு, அந்த எண்ணம் ஒன்றான தன்மையில் பயணிக்கிறது சமாந்தரமாய்.




தமிழ்நதிக்கு நகுலனிடத்திலும் பிரமிளிடத்திலும் கூடுதல் பிரியமிருக்கிறது. அவருடைய சிறுகதைகளிலும் பத்திகளிலும் கூட இதைக்கவனிக்கலாம். ஆனால், இந்த இருவருடைய பாதிப்புகளை இவருடைய கவிதைகளில் காணவில்லை. பதிலாக பசுவய்யாவின் தன்மைகளே அதிகமாகவுண்டு. ஆனால், மாதிரியோ சாயலோ அல்ல. அவருடைய அணுகுமுறை தெரிகிறது. காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி, யன்னல், நினைவில் உதிக்கும் நிலவு, கூட்டத்தில ; தனிமை போன்ற கவிதைகள் இதற்கு ஆதாரம். சொற்களை ஒழுங்கமைப்பதன் மூலம் தன்னிலையை ஸ்திரப்படுத்துவதில் ஒரு வகையான நுட்பத்தையும் வாசகருடனான உறவையும் உருவாக்கும் திறன் பசுவய்யாவிடம் உண்டு. அதன் இளநிலையில் தமிழ்நதி இருக்கிறார்.




தமிழ்நதியின் பொதுமைப்பட்ட பண்பு அவருடைய பன்மைத்தன்மையினூடானது. சமூக, அரசியல், பெண் அடையாளம் கொண்ட விரிதளம் இது. தன்னுடைய காலத்திலும் சூழலிலும் அவர் கொண்டுள்ள ஆழமான உறவும் கூர்மையான கவனமுமே இதற்குக் காரணம்;. இவற்றை வெளிப்படுத்துவதற்கான கவி மொழியை நுட்பமாக்கியிருக்கிறார் அவர். அதேவேளை இந்த மொழியை நுட்பமாகக் கையாள்வதிலும் கவனம் கொண்டுள்ளார். பெரும்பாலான கவிதைகள் காட்சிப்படிமமாயும் ஒலிப்படிமமாயுமுள்ளன. நுட்பமான சித்திரிப்பின் ஆற்றலினாலே இது சாத்தியமாகியுள்ளது. அவர் சொல்வதைப்போல மொழியின் அதியற்புதம் என்று கொள்ளத்தக்க வெளிப்பாட்டு வடிவமாகிய கவிதையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்த கணத்தை தமிழ்நதி அதிகம் விரும்புகிறார். அதனால் அவர் தன்னுடைய சித்திரிப்பில் இந்த நுட்பங்களை நோக்கிப்பயணிக்கும் சவாலை விரும்பிக் கொண்டிருக்கிறார்.




தமிழ்நதியின் முதற் கவிதைத்தொகுதி இது. இதில் உள்ள நாற்பத்தியேழு கவிதைகளில் பெரும்பாலானவற்றில் அவர் தன்னடையாளத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். இது அவருக்கும் வெற்றி. நமக்கும் வெற்றியே. இனிவரும் புதிய கவிதைகள் அவரையும் நம்மையும் புதிய பரப்புக்கு கொண்டு போகலாம்
நன்றி:தின்னை------------------------------------------------------------------------

Tuesday, January 1, 2008

அனார் கவிதைகள்


எழுதியவர்--------------------------------
--------------------------கருணாகரன்
__________________________________________________

துக்கமும் அலைச்சலும் நிரம்பிய நாட்களில் எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியைப் பகிர்வதற்கென்ற மாதிரியாக வந்திருந்தது அனார் கவிதைகள் - எனக்குக் கவிதை முகம்.

தபாலில் இந்தக்கவிதைத் தொகுப்பு வந்தபோது நாங்கள் மீண்டும் இடம் பெயர்ந்திருந்தோம். கடிதத்தை தருவதற்காக தபாற்காரர் எங்களைத் தேடியலைந்திருக்கிறார். இடம்பெயரிகளுக்கென்று எப்போதும் நிரந்தர முகவரி இருக்க முடியாது. பலஸ்தீனிலும் ஈராக்கிலும் ஆப்கானிலும் கொசோவாவிலும் எப்படி சனங்கள் கடிதங்களை பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதும் ஓடவேண்டியிருக்கும் வாழ்க்கையில் நிற்பதற்கேது தருணம். தரிப்பதற்கேது இடம். அதனால் சில நாட்கள் பிந்தியே புத்தகத்தைப்பார்க்கக் கிடைத்தது.

போர் மீண்டும் மீண்டும் எங்;களை விரட்டுகிறது. அது தொடர்ந்து விரட்டுகிறது. எந்தக்குற்றமும் செய்யாத எங்களை விட்டுத் துரத்துகிறது. முடிவில்லாத ஓட்டம். ஓடி, ஓடியே எனது காலம் போய்க்கழிந்து விட்டது. அனாரும் போரை எரிச்சலுறுகிறார். அவருக்குள் இருக்கும் காதல் பொங்கும் மனதை இந்தப்போர்ச் சூழல் கெடுத்துக் கரைத்து விடுகிறது. அவர் பெண்ணாக நின்று இதை உணர்கிறார். பெண் உணர்கையின் வழியாக அதை மொழிகிறார். இதில்தான் அவர் அதிக கவனத்தை பெறுகிறார். அனாரின் கவிதைகள் பெறுகின்ற இடமும் இதில்தான் சிறப்பாகிறது.

அனாரின் ' மேலும் சில இரத்தக் குறிப்புகள் ' கவிதை மிகவும் அலைக்கழிப்பதாயிருக்கிறது. அந்தக் கவிதைக்குள் கசிந்து கொண்டிருக்கிற குருதி, வாசிப்பின் பின்னான தருணங்களில் ' சாவின் தடயமாய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது ' . அக்கவிதையில் நிசப்தமாய் விசும்பிக்கொண்டிருக்கிற பெண்மையின் சுவடுகள் வன்முறைக்கெதிரான வலிமையான பிரதியியல் நடவடிக்கைகளாகும். ஈழத்திலிருந்து வன்முறை-வலி தொடர்பில் பெண்களால் எழுதப் பட்டவற்றுள் மிகவும் சிறந்த கவிதைப் பிரதி அதுவெனலாம்.

வித்தியாசங்களை உணர்தல் - அறிதல் (சநஉழபnவைழைn ழக னகைகநசநnஉநள ) - பெரும்பாலும் ஆண்மை, பெண்மை என்கிற னiஉhழவழஅலயை - என்பதிலிருந்தே பெண்மைய அரசியலும் அதற்கான கவிதையியலும் ( கநஅinளைவ pழடவைiஉள யனெ வை 'ள pழநவiஉள ) கட்டமைய முடியும். வித்தியாசங்களை உணர்தல், வெளிப்படுத்துதல் என்று வருகையில் அனார் முக்கியமானவர். தனது வித்தியாசத்தின் இருப்பை சாராம்சப்படுத்துதலினூடாகவே அவர் கட்டமைக்கிறார் (நளளநவெயைடளைiபெ ). ஆனாலும் கூட, ஆண் புனைவுக்கு எதிரான எதிர்ப்புனைவாய் குறித்த சாராம்சப் படுத்துதல் அமைந்துபோவதால், ஒரே சமயத்தில் அது சுமை நீக்குவதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது (காண்க: ' மை' தொகுப்பிலுள்ள ' பருவகாலங்களைச் சூடித்திரியும் ' கவிதை) அனாரின் கவிதைப் பெண் ' விலகி நிற்பவள்' . அவள் சொல்கிறாள்:



"இன்னும்

இந்த ஒரே உலகத்திலேயேதான்

இருக்கின்றன

எனக்கும்

அவனுக்குமான

வௌ;வேறு உலகங்கள் "



(பக்.24)



வன்முறையைப் பதிவு செய்கிற போதிலும் கூட அனார் ' பெண்ணிலைப் பட்ட' படிமங்களையே கையாள்வதை இங்கு குறிப்பிட வேண்டும். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள் ' கவிதையில் வருகிற மாத உதிரம் பற்றிய சங்கேதமே அக்கவிதையின் ' பெண்மை ' யை மீள்வலியுறுத்திக் கொண்டியங்குகிற ஒன்றாய் அமைகிறது.



தனது வித்தியாசங்களைக் கொண்டாட அவர் முயல்வது மகிழ்ச்சி தருகிற விடயம். பெண்ணிய அரசியலிலும் கவிதையியலும் 'கொண்டாட்டம் ' என்பது மிக அவசியமான ஆயுதம். ' நான் பாடல், எனக்குக் கவிதை முகம் ' என்றெழுதுகிறார் அனார்.

இவ்வாறு அனாரின் மேலும் சில இரத்தக்குறிப்புகள் கவிதையைப்பற்றியும் அவருடைய படைப்பியலைப்பற்றியும் சொல்கிறார்; ஹரிகரசர்மா. அந்த அளவுக்கு அனாரின் உணர்வுலகமும் அனுபவப்பரப்பும் நிகழ்காலத்தின் கொந்தளிப்பான நிலைமைகளால் காயமடைந்து கன்றியுள்ளது. பதற்றம் நிறைந்த நாட்களில் வாழும் கவி அனார். அவருடைய கவிதைகளிலும் இந்தப்பதற்றமுண்டு. நெருக்கடியுண்டு. வாழ்வு நசியும் துயருண்டு. அத்துடன் பெண்ணாயிருத்தலின் விளைவாகப் பெறும் அனுபவத்தையும் அவர் அவர் பகிர்கிறார.;; அதுவும் பெண் மொழியில்.

ஹரி சொல்வதைப்போல பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் நிலைப்பட்ட படிமங்களைக் கொள்ளுதல் என்பதிலிருந்தே இந்த படைப்பியக்கத்தின் வலிமை திரள்கிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் உணர்வைக் கொண்டாடுதல், பெண்மொழியைக் கொண்டாடுதல் என்று இந்த வலிமையின் விரிதளம் பெருகுகிறது. இங்கே பெண் தன்னைத்தானே அங்கீகரிக்கிறாள். தன்னைத்தானே நிறுவுகிறாள். தான் மேலெழுந்து வருகிறாள். அனாரின் பல கவிதைகளிலும் இந்த அம்சம் உள்ளது. அவருடைய பிரக்ஞையின் இயங்குதளம் அத்தகைய நிலையிலேயே உருவாகியுள்ளது.

அனார் பெண்கவி. அதிலும் முஸ்லிம் பெண்கவி. சிலவேளை இப்படி பெண்கவி என்று தனி அடையாளத்தை வைப்பது தவறாகவும் அனாவசியமாகவும் படுகிறது. சிலபோது அது தவிர்க்க முடியாது. கட்டாயம் என்றும் தோன்றுகிறது.

அப்படி வைத்து பார்;ப்பதனூடகப் பலபுதிய பிரதேசங்களையும் ஆழ்நிலைகளையும் அறியலாம் என்றும் படுகிறது. அதேவேளை பெண்கவி என்று பிரிப்பதனூடாக சார்பு நிலை அணுகுமுறை ஏற்பட்டுவிடுமோ என்றும் படுகிறது.

இதுவே ஒரு தத்தளிப்புத்தான். தீராத தத்தளிப்பு. சமூக விலகல்களும் ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கிய தவறுகளால் இப்போது இப்படி நாம் கிடந்து எல்லாவற்றுக்குமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் அதிகாரமும் அதன் குருட்டுத்தனமுமே காரணமாக இருந்திருக்கின்றன.

பொதுவான வாழ்க்கை அமைப்பில் இன்னும் பெண் கடக்க வேண்டிய எல்லைகள் நிறையவுள்ள சூழலில் ஒரு பெண்கவியாக தொடர்ந்து இருப்பதில் பல பிரச்சினைகளுண்டு. அதிலும் முஸ்லிம் பெண்கவிக்கு அதைவிடவும் அதிக சவால்;களுண்டு. இன்னும் சொன்னால்;, அறத்தின் வழியாகவும் சமூக அரசியல் ரீதியாகவும் இயங்க முனைந்தால் இந்த நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதிலும் போர்க்காலத்தில் படைப்பாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சினையே அறம் எழுப்பும் சவால்தான். இதையே அனாரின் கவிதைத் தொகுப்பான எனக்குக் கவிதை முகம் நூலின் முன்னுரையிலும் சேரன் சொல்கிறார்.

அனார் இந்தமாதிரியான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்N;ட தன்னுடைய கவிதைகளை எழுதுகிறார். அனாரின் பிரதிகளிலும்அவருடைய உரையாடலிலும் இந்த நெருக்கடிகளின் தாக்கத்தையும் அதற்கெதிரான, மாற்றான அவருடைய நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இப்போது எனக்குக் கவிதை முகம் என்ற அவருடைய இரண்டாவது கவிதை நூல் வந்திருக்கிறது. முதல் தொகுதி ஓவியம் வரையாத தூரிகை 2004 இல் வெளியானது. இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிகளுக்குமிடையில் அனாரின் கவிதைமொழியில் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சொல்முறை, உணர்முறை, அவருடைய பார்வை, கருத்து, மொழி எல்லாவற்றிலும் மாற்றங்களும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தை நிகழ்த்தும் படைப்பாளிகளிடத்தில் எப்போதும் இத்தகைய படிமலர்;ச்சியையும் முதிர்ச்சியையும் காணலாம்.

முதல் தொகுதியில் அவர் செய்கிற பிரகடனங்களை இரண்டாவது தொகுதியில் செய்யவில்லை. பதிலாக அவர் அருகிருந்தும் உள்ளிருந்தும் பேசுவதைப்போல தோன்றும் கவியாக்க முறைமையைக்கையாள்கிறார்.

ஆனால் அவருடைய அனுபவத்தில் திரண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த பதிவுகளை அவர் விட்டுவிடவில்லை. அவற்றை இப்போது வெகு சாமர்த்தியமாகவும் இயல்பாகவும் பக்குவமாகவும் சொல்ல முனைகிறார். அமைதியொலிக்கும் கவிதைகளாக தமிழ்ப்பரப்பில் இந்தக்கவிதைகளைத் தரும் அனார் அவற்றினுள்ளே தனது தீவிரத்தை குறையாமல் பரிமாற்றுகிறார். அவருடைய அரசியல் மனித மேன்மை குறித்தது. அதற்கான அறத்தை வலியுறுத்துவது. அதைக் கோருவது. சிறு வட்டங்கள், வளையங்களுக்குள் சிக்கிவிடாதது. இது இன்றைய ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் மிக அபூர்வமானது.

ஈழக்கவிதைப்பரப்பில் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித்திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது. பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித்தத்தளிக்கின்றன.

உள்ளடங்கியிருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியற் சித்திரம் மிகவும் முக்கியமானது.

என்று சேரன் முன்னுரையில் குறிப்பிடுவது கவத்திற்குரியது.

அனார் ஈழத்துக்கவிதைப்பரப்பில் தனித்துத் துலங்கும் ஒரு பிரகாசமான அடையாளமே. அவருடைய கவிதை மொழியும் மொழிபும் அசாதாரணமானது. கனிவு நிரம்பிய உணர்;வும் மொழியும் மொழிபுமானது. மீள மீள வாசிக்கக் கோரும் ஈர்ப்பை அனார் ஏற்படுத்துகிறார். அவருடைய பிரதி வேறுபட்ட தளத்தில் உணச்சிப்பரிமாற்றங்களை நிகழ்த்த முனைகிறது.

ஈழத்தின் பெண் கவிதை வெளிப்பாடு; பிரக்ஞை பூர்வமாக இயங்கத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. சொல்லாத சேதிகளுக்குப்பின்னரான அல்லது அதன் தொடர்ச்சியான பெண் கவிக்குரலில் அனார் பெறுகிற இடம், அடையாளம் இந்தத் தொடர்ச்சியில் ஒரு முக்கிய புள்ளியாகவும் விலகித் தெரியும் தனித்த கோடாகவும் உள்ளது. மென் சொல் முறையில் தீவிர மன நிலையை ஏற்படுத்தும் இயல்பு கொண்ட கவியாக்கத்திறன் கொண்டவராக அனார் இருக்கிறார்.

ஒரு காட்டாறு

ஒரு பேரருவி

ஒரு ஆழக்கடல்

ஒரு அடை மழை

நீர் நான்

கரும் பாறை மலை

பசும் வயல் வெளி

ஒரு விதை

ஒரு காடு

நிலம் நான்

……

நானே ஆகாயம்

நானே அண்டம்

எனக்கென்ன எல்லைகள்

நான் இயற்கை

நான் பெண்



(நான் பெண்)

பெண்ணை அவர்; பேரியற்கையின் அம்சங்களாகவே காணுகிறார். பெண்ணுடலும் பெண் மனமும் இந்த இயற்கையின் அம்சமே. அது எல்லையற்றது. விரிவும் ஆழமும் கூடியது. எல்லாக்காயங்களின் பின்னாலும் எல்லா அழிவுகளின் பின்னாலும் உயிர்ப்புடன் திரண்டெழுவது. பேராறாகவும் ஆழ் கடலாகவும் வெளியாகவும் காடாகவும் மலைப்பாறையாகவும் விதையாகவும் காயமாகவும் காற்றாகவும் நெருப்பாகவும் அவர் தன்னை உணர முடிகிறது.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கவிகள் எதிர்கொள்கிற சவால்கள் அனாருக்குமுண்டு. அதிலும் பெண்கவிகள் சந்திக்கின்ற அத்தனை வலிகளும் இடர்களும். அரசியல் ரீதியாக அவருடைய பார்வை பொது வரையறைக்குள்ளிருந்தாலும் உலகு தழுவிய, மானுட விடுதலை தழுவிய நேசமும் அக்கறையையும் இருக்கிறது. புதிய உலகத்தின் நுட்பமான வலையமைப்புகளையும் பொறிகளையும் அது பெண்களை இன்னொரு தளத்தில் சிறையிடுவது பற்றியும் அனார் அதிகம் பேசவில்லைத்தான். ஆனால், அவருக்குள்ள பிரச்சினைகளை அவர் சொல்லத்தயங்கவில்லை என்பது இங்கே முக்கியமானது.

வானவில் படிந்து உருகிக் கிடக்கும்

மலைகளின் தொன்மப் புதையல்களில்

மௌனம் குருதி சொட்ட ஒளிந்திருக்கிறேன்

……

பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்

வண்ணத்துப் பூச்சியின் பிரமாண்டமான

கனாக்கால கவிதை நானென்பதில்

உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்

(வண்ணத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை)

நாளாந்தம் எண்ணங்கள் வைத்து

நினைவும் மறதியும் ஆடுகிற சூதாட்டம்

கைதவறிச் சிதறிப்போகிற தேநீர்க் குவளை

தலைக்கு மேல் மிதந்து வருகிற பூச்சிறகு

அல்லது வெறும் அசைவற்ற ஒரு வெளி

எவ்விதமாகவும்

நான் தோன்றியிருக்கவும் கூடும்

உனக் கெதிரில்

எவ்வேளையும் பிசகாமல்

(இல்லாத ஒன்று)



பெண்ணின் இயல்பெழுச்சி ஆணினால் வரையறை செய்யப்படுவது அனாருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது. அவர் அதனை மறுதலிக்கிறார். இத்தகைய மறுதலிப்பும் நிமிர்வும் நமது கவிதைப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இதற்கு முன்பே நிகழத் தொடங்கிவிட்டதுதான். ஆனால் அது இன்னும் சமூகத்தின் பொதுப்போக்காக பிரக்ஞை பூர்வமாகத் திரளவில்லை. பெண் சந்திக்கிற நெருக்கடிகளினதும் சவால்கள், பிரச்சினைகளினதும் தன்மைகள் அப்படியேதான் அநேகமாக இருக்கின்றன. ஆனால் அந்த வடிவம் மாறிவிட்டது. அதாவது இப்போதுள்ள பொது நிலைமைகளில் அறிவியலுக்கேற்ப நுட்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அவ்வளவுதான்.

மூன்றாமுலகின் பெண்படைப்பாளிகளுக்கு எப்போதும் பல பிரச்சினைகளுண்டு. அவர்கள் தங்களைச் சுற்றிய சூழலை எதிர் கொள்வதுடன் சர்வ தேச ரீதியான அழுத்தங்கள் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மூன்றாமுலகின் பண்பாட்டுச் சுமை அதாவது அது வளர்ச்சிக்கான தத்தளிப்பிலிருப்பதால,; அதனால் எதையும் கடக்கவும் முடியாது எதனையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற நிலையில், பெண்களே அந்தச் சுமையைக் காவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்கள் இதில் மிகவேகமாக மாற்றங்களின் பின்னோடும்போது பெண்ணுக்கு அந்தச்சந்தர்ப்பத்தை அந்தச் சமூகங்கள் கொடுப்பதில்லை. இந்த ஓர வஞ்சனை எந்தவகையான வெட்கமுமின்றி, கருணையுமின்றி ஆணாதிக்க உலகினால் தொடரப்படுகிறது. இதில் ஏற்படும் கொதிப்பு நிலையை அனார் துணிச்சலோடு முன்னீடாக்குகிறார். அவருடைய வாழ் களமான முஸ்லிம் சமுகத்தின் பிடிமானங்களைக்கடந்தும் அவருடைய உரையாடல் நிகழ்கிறது. இப்படி நிகழும்போது அவருடைய மொழி புது மொழியாக புதிய பிரதேசங்களைத் திறக்கிறது. இதில் அனாரின் சாவி நுட்பமானது. இதில் அனாரையும் விட சல்மா அதிக எல்லைகளில் விரிகிறார். அதுவும் பாலுறவு மற்றும் பாலுணர்வுத்தளத்திலும். அதிலும் அதிர்ச்சியும் வியப்பும் கவனமும் ஏற்படுகிற விதமாய். ஆனால் அனாரோ இன்னொரு புதிய தொடுகைப் பிரதேசத்தில் பயணிக்கிறார். ஒருவரின் பாதையில் இன்னொருவரும் பயணிக்க வேண்டும் என்பது இங்கே அர்த்தமில்லை. அவரவர்க்கான பயண வழிகளிலும் திசைகளிலும் அவரவர் செல்லும் சுதந்திரமுண்டு.

போரால் கட்டப்பட்ட அல்லது சுற்றிவளைக்கப்பட்ட வாழ்க்கையில் மனித அடையாளம் பெறுமதியற்றது. இந்த வருத்தம் எந்தப்படைப்பாளியையும் கொதிப்படைய வைக்கும். உலகின் சகல திசைகளிலும் நெருக்கடியான நிலைகளில் படைப்பாளிகள் மனித அடையாளத்துக்காகவும் இருப்புக்காகவும் தங்களின் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உண்மையான போராட்டமாக இருந்திருக்கிறது. அறத்தின் வழி நிற்பதற்காக அவர்கள் பெருத்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளியின் இயங்கு தளம் அப்படித்தான் இருக்கும். அறத்தை நிராகரித்து விட்டு அதிகாரத்துக்காக இயங்குவதென்பது அல்லது அதைச்சார்ந்து நிற்பது என்பது படைப்பாளி தன்னைத்தானே நிராகரிப்பதாகும். ஆகவே, இங்கே அனார் அறத்தை விலயுறுத்தியே தன்னை நிறுவுகிறார்.

அனாருடைய கவிமனம் அன்பும் பரிவும் நேசமும் கருணயும் நிரம்பியது. அவரிடம் வன்மனது இல்லை. அவருடைய மொழியிலும் மொழிபிலும் வன்னியல்பில்லை. ஆனால் தீர்மானங்களுண்டு. வலிமையுண்டு.

காற்றைத் தின்ன விடுகிறேன்

என்னை

என் கண்களை

குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன்

…..

(காற்றின் பிரகாசம்)



பேரியற்கையாக விரிந்திருக்கும் பூமியில் எல்லாவற்றையும் அவர் சிநேகம் கொள்ள முனைகிறார். அந்தச் சிநேகம் ஒரு பெருங்காதலாகப்பிரவாகிக்கிறது. அது மனிதரிடத்திலும்தான். இயற்கையினிடத்திலும்தான்.

அதனாலென்ன

அவன் வாள் உறைக்குள்

கனவை நிரப்புவது எப்படியென்று

எனக்குத் தெரியும்

மகத்துவம் மிகுந்த இசை

தீர்வதேயில்லை.

நான் பாடல்

எனக்குக் கவிதை முகம்

பெண்ணின் சேதி, பெண் அடையாளம் இயல்பான ஒன்றென்று உணர்த்தும் எளிய, நுட்பமான வரிகள் இவை. இதுவே அனார்.

எனக்குக் கவிதை முகம் அன்பூறும் சொற்களாலான நெகிழும் சித்திரங்களைக் கொண்டதொரு கவிதைத்தொகுதி. போரின் பேரோலங்களுக்கிடையில் அனார் எப்படி இத்தனை நெகிழ்ச்சியான மொழியைக் கொண்டிருக்கிறார் என்பது தீரா ஆச்சரியமே.
--------------------------------------------------------------------------------------------------------------------------------