“என்னுடைய வாழ்வின் பெரும்பகுதி யுத்தத்திலேயே கழிந்தது” என்று நிகலாய் கரமசோவ் தன் மனைவியிடம் சொன்னார். அவருடைய குரல் கம்மியிருந்தது. தன்னை நியாயப்படுத்திஇ அப்படிச் சொன்னேனா அல்லது அவளிடம் மன்னிப்புக் கேட்கும் விதமாக அப்படிச் சொன்னேனா என்று அவருக்கே குழப்பமாக இருந்தது. அவர் மனைவியைத் தேடிக்கண்டு பிடிக்கவே இரண்டு வாரங்களாகி விட்டன. அவர்கள் வாழ்ந்த கிராமத்திலிருந்து அவருடைய குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. தகவல் கிடைத்தபோதும் அப்போது உடனடியாக அவரால் வீட்டுக்கு வர முடியவில்லை. அவரைப்போலிருந்த ஏராளம் பேரின் குடும்பங்களை பாதுகாப்பாக வேறிடத்துக்கு இடம் மாற்றி வைத்திருப்பதாக அவருக்குச் சேதி சொல்லப்பட்டிருந்தது.
அப்போதைய தீவிர யுத்த நிலைமையில் தனியே தன்னுடைய குடும்பத்துக்குப் பாதுகாப்புத் தேவை என்று சொல்லிக் கவனமெடுத்து அதைக் காப்பாற்றுவதற்கு வர முடியாது. களத்தில் அதை வேறு விதமாகவே சொல்வார்கள். அவரை எல்லோரும் வித்தியாசப்படுத்திப் பார்க்க வைத்துவிடுவார்கள்.
அதனால் மனம் எவ்வளவோ அந்தரித்துக் கொண்டிருந்தாலும் அதை ஒருவாறு கஸ்ரப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டார். இரவுகளில் குழந்தைகளின் முகமும் அவருடைய மனைவி தனியே குழந்தைகளோடு படும் சிரமங்களும் மனதில் தோன்றும். பெருகிவரும் துக்கத்தை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டார். அதற்காக அழவும் முடியாது. ‘போர்க்களத்தில் இந்த மாதிரி உணர்ச்சிகளுக்கு இடமளித்தால் அது எதிர் விளைவுகளைக் கொண்டு வரும்’ என்ற விதி எழுதப்படாமலே வலுவாக இருந்தது. அதனால் எல்லாத் துக்கங்களையும் ஆழப்புதைத்து விட்டு ஏதாவது காரியங்களில் இறங்கி விடுவார்.
அவரைப்போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. இல்லாமல் யாரால்தான் கல்லைப் போலவும் இரும்பைப் போலவும் இருக்க முடியம்? சிலவேளை எல்லாமே பொய் போலஇ ஏதோ ஒரு மாய உலகத்தில் நடமாடுவதுபோலத் தென்படும். ஆனால் அதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்கக்கூடிய இடமல்ல போர்க்களம். ஏன்இ அதையும் போர்க்களத்தில் பார்த்துத்தான் விடுவோமே என்று சிலவேளை வேடிக்கை பார்க்க விரும்பும் மனம். நிலைமைகள் அதற்கேற்றாற்போல வாய்ப்பதில்லை. தவிரஇ எச்சரிக்கையுணர்;வு எல்லாவற்றையும் தடுத்து விடும். அது எச்சரிக்கைகளால் வனையப்பட்ட களமல்லவா.
இப்படியே தனக்குள் மோதிக் கொண்டு இரவெல்லாம் தூக்கமில்லாமல் அவதிப்பட்டார் கரமசோவ்;. என்ன ஆச்சரியமென்றால் அவரைப்போலவே அவருடன் கூட இருந்த வேறு ஆட்களும் இப்படித் தங்களுடைய குடும்பத்தை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தனியே யாரையாவது சந்தித்தால் அவர்கள் தங்களுடைய கண்ணீர்; நிரம்பிய துயரக்கதைகளைச் சொல்வார்கள். அவை மாபெரும் துக்கச்சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் வைத்திருப்பதுபோலத் தோன்றும். ஆனால் எல்லோரும் அதை தங்களுடைய இதயத்தின் ஆழத்தில் மறைத்துக் கொண்டு தனியே விம்மிக் கொண்டிருந்தார்கள். அதிலும் தங்களையும் மீறிக் கண்ணீர் பெருகி உடைத்துக் கொண்டு ஓடிவிடும் என்றே அவர்கள் அச்சமடைந்திருந்தார்கள். குருதி பாயலாம் போர்க்களத்தில். ஆனால் கண்ணீர் பாயலாமா? அதற்கு தலைமையாளர்கள் அனுமதிப்பார்களா? கடவுளே இதென்ன விதி? கரமசோவ்வுக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது. குழப்பங்கள் நிறைந்ததே போர்க்களம் என்றும் பட்டது. அவர்கள் எல்லோரையும் எது அப்படி தங்களுடைய துயரத்தையே வெளியே காட்டிக் கொள்ள மறுக்கிறது அல்லது தடுக்கிறது என்று அவர் யோசித்தார். கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாய வலையில் எல்லோரும் சிக்கியிருப்பதாகப் பட்டது.
ஏன் அவர் கூட தன்னுடைய நிலைமையை மேலிடத்தில் சொல்லி வீட்டுக்குப் போக முயற்சிக்கவில்லையே. உள் மனம் போஇ போ என்று சொன்னாலும் அவரால் வீட்டுக்குப் போய் நிலைமைகளைப் பார்த்து வரவேண்டும் என்ற முடிவை எடுக்க முடியவில்லை. போர்க்களத்தில் நிற்கும் போதுதான் ஒருவரின் முழு மனமும் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அவருக்குத் தோன்றியது. மனம் மட்டுமல்லஇ வாழ்க்கையும் உண்மையும் எல்லாமே எல்லாமே கட்டுப்படுத்தப்படுகின்றன.
கரமசோவ்இ நிலைகொள்ளாமற் தவித்தார். உடல் அவரையறியாமலே நடுங்கியது. எந்தக் குளிரிலும்கூட ஆடாத உடல். இப்போது தளர்ந்து நடுங்குகிறது. எல்லாவற்றையும் விட சாவது மேல் என்ற எண்ணம் வந்தது. ஆனால் சாவுதான் அவரைத் தீண்ட மறுக்கிறதே. அவரை விடவும் வேறு ஆட்களை அது சாதாரணமாகவே விழுங்கிக் கொண்டிருக்கும் போது அவரை மட்டும் அது விலக்கிக் கொண்டிருந்தது.
இப்போதுஇ நீண்ட காலத்துக்குப் பின்னர் தன்னுடைய வீ;ட்டுக்குத்திரும்பியிருந்த கரமசோவ் மனைவியின் கண்களில் படிந்திருந்த துயரக்கதைகளைத் தொடர்ந்து படிக்க முடியாமற் தவித்தார். அவளுடைய கண்களில் அகதிக்காலத்தின் நிழல் ஒரு கனத்த இருண்ட மலைபோல உறைந்திருந்தது. கரமசோவ் ஆச்சரியப்பட்டார். அவர் இதுவரையிலும் பார்த்தது யுத்தகளத்தின் போர்க்காட்சிகளையும் அந்தக்காட்சிகள் படிந்த கணங்களையுமே. கண் முன்னே நிகழ்ந்த மரணத்தின் பல நடனங்களை அவர் கண்டிருக்கிறார். குருதி மணம் அவருடைய புலன்களில் நிறைந்து கிடக்கிறது. அதெல்லாம் அவருக்குச் சாதாரணம். ஒவ்வொரு கணத்திலும் எதிர்பாராத வகையில் ஒவ்வொரு சாவும் நிகழும் போது அவருக்கு பல திசைகள் தெரிந்திருக்கின்றன. சிலபோது திசையோ திக்கோ தெரியாமலே அவர் இருண்டு மூடுண்ட அகழிக்குள் வீழ்ந்துமிருக்கிறார். அதைப்போல மிகப் பிரமாண்டமான ஒளியையும் அவருடைய கண்கள் கூசக் கண்டிருக்கின்றன. வெற்றிக் கொடிகளை வானத்தில் ஏற்றி விட்டு அவர் மேகங்களுக்கு ஊடாக மிதந்து சென்றதும் உண்டு. அங்கிருந்து தொப்பென கீழே வீழ்ந்ததும் உண்டு. ஆனால் இப்போது இதைஇ இந்த மாதிரியான ஒரு நிலையை அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை. இது எல்லாவற்றையும் விடக் கடினமான ஒரு வலிநிரம்பிய பிரதேசம்.
கரமசோவ் திடுக்கிட்டார். அவர் போர்களத்தில் சந்தித்தவை வேறு. இங்கே வீட்டிலுள்ள யதார்த்தம் வேறு. அவரால் போர்க்களத்தில் வெற்றிகரமாக நிலைமையைச் சமாளிக்கமுடியும். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றிருந்தார். போர் ஒரு வகையில் கணிதம் போன்றதுதான். அதில் சமன்பாடுகளையும் பின்னங்களையும் போடவும் தீர்க்கவும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவர் அதில் கெட்டிக்காரராகவுமிருந்தார்.
ஆனால் வீட்டின் நிலைமையைச்சீராக்க அந்தளவுக்கு முடியுமா? என்று அவருக்கே தெரியவில்லை. வீடு யுத்த களத்தையும்விட பிரம்மாண்டமான போர்க்களமாகியிருந்தது. இங்கே எதிரிகள் என்று யாரும் இல்லை. பீரங்கிகளில்லை. பெரும்படையில்லை. யுத்த விமானங்களில்லை. போரிடும் தளபதிகளில்லை. போராயுதங்களுமில்லை. இன்னும் சொன்னால் அவரிடம் துப்பாக்கிகூட இருக்கிறது. ஆனால் வீட்டில் யாரிடமும் அதுகூட இல்லை. அப்படியென்றால் தான் எதற்காக அஞ்சுகிறேன்? என்று அவருக்குக்குழப்பமாக இருந்தது.
ஆனால் அவர் அஞ்சினார். தான் ஏதோ ஒரு நிலையில் தோற்றுக்கொண்டிருப்;பதாகத் தோன்றியது. அது முடிவில்லாத தோல்வி. எதற்காகத் தோற்கிறேன் என்று கூட அவருக்குத்தெரியவில்லை. ஆனால் அவரால் அந்த உணர்விலிருந்து தன்னைக்கட்டுப்படுத்த முடியவில்லை. அது மெல்லிய குளிர் படர்;ந்த காலைப் பொழுது என்றபோதும் அவரால் அதைஇ அந்த ஒளியும் மென் கதகதப்பும் நிறைந்த பொழுதை அப்படி உணர முடியவில்லை. வெக்கையும் இருளும் உள்ளுர அதற்குள் நிறைந்திருப்பதாகவே தோன்றியது.
பறவைகளின் காலை ஆரவாரக்குரல் கூட தன்னைப்பார்த்து கேலிப்படுத்துவதாகப் பட்டது. என்னஇ எல்லாமே மாறித் தெரிகின்றன என்று அவருக்குக் குழப்பம். எதுதான் மாறியிருக்கவில்லை? தான் மட்டும் என்ன இயல்பாகவா இருக்கிறேன் என்று நினைத்தபோது அவருக்கு இதயம் நின்றுவிடும் போல கனத்துஇ இயங்க மறுத்தது.
அவர் கடவுளை நினைத்தார். முன்னர் அவருக்குக் கடவுள் பற்றிய அக்கறையெல்லாம் கிடையாது. அதற்கெல்லாம் அவருக்கு நேரமிருந்ததும் இல்லை. மரணத்தின் இழைகள் அவருடைய கழுத்தை இறுக்கிய கணங்களில் கூட அவர் கடவுளைக் குறித்துச் சிந்தித்ததில்லை. அத்துடன் கடவுளைப் பற்றிச்சிந்திக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. அவர் மரணத்தையே விலக்குவதற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது சிந்திக்காத கடவுளையா இப்போது சிந்திக்க முடியும்?
மரணத்தின் விளிம்புகளுக்கு அவர் பலதடவை சென்று திரும்பியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம்கூட அவர் எதற்கும் அஞ்சிவிடவில்லை. அந்த நெருக்கடியான சந்தர்ப்பங்களெல்லாம் அவருக்கு சுவாரஷ்யமானவையாகவே இருந்திருக்கின்றன. அந்தச்சந்தர்ப்பங்களைப் பிறகு அவர் மகிழ்வோடு பல தடவைகளில் நினைவு கூர்ந்திருக்;கிறார். அவற்றையிட்டு அவருக்கு உள்ளுரப் பெருமையும் மகிழ்ச்சியும் வியப்பும்தான் ஏற்பட்டிருக்கின்றன.
பதிலாக எப்போதும் அவர் அந்த அபாயமான நிலைமைகளையிட்டு வருந்தியதில்லை. மரணம் அவருக்கு மகிழ்சியான வேடிக்கை விளையாட்;டு. அவரைச்சுற்றி அது விஷவளையங்களாகச் சூழ்ந்திருந்த போதும் அவர் அதையிட்டு என்றைக்கும் கவலைப்பட்டதோ அக்;கறைப்பட்டதோ இல்லை. அவருக்குத் தேவை எதிலும் வெல்வதே. வெற்றிதான் ஒரே குறி. அதையே அவர்; தன்னுடைய மேலிடத்துக்குப் பரிசளிக்க விரும்பினார். அதைத்தான் பரிசளிக்கவும் முடியும்.
மேலிடம் வெற்றியைத்தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. வேறெதையும் அதற்குக் கொடுக்கவும் முடியாது. அது வெற்றிக்காகஇ தொடர் வெற்றிகளுக்காகவே காத்துக் கொண்டிருந்தது. வெற்றிக்காக அவர் என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருந்தது. ஒரு வெற்றி இரண்டு வெற்றி போதாது. தொடர்ந்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டே இருக்க வேணும். ஆனால் அது எப்போதும் சாத்தியமாகுமா? எதிர்த்தரப்பு என்ன சாதாரணமானதா? அவர்கள் என்ன எப்போதும் பொய்ப்பூவைப் பறித்துக் கொண்டா இருப்பார்கள்?
வெற்றியை எதிர்பார்க்கும் மேலிடத்தின் தாகம் எளிதிற் தீர்ந்து விடுவதில்லை. இது முடிவில்லாத பெரு விடாய். அதற்காக அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டேயிருந்தார். அவர் மட்டுமா அப்படி உழைக்கிறார். அவரைப்போல எத்தனையோ பேர்; அப்படி. ஆனால் எதுவும் முடிகிறமாதிரித் தெரியவில்லை. இதென்ன பைத்தியக்காரத்தனம்? தான் செய்வது உண்மையில் பைத்தியக்காரத்ததனம்தானோ. எல்லோரும் ஏதோ பைத்திய நிலைக்கு ஆளாகிவிட்டார்களா?
ஒருதடவை அவர் நள்ளிரவுச்சண்டையில் தன்னுடைய சகாக்களை முற்றாக இழந்து தனித்திருந்தார். அன்று உக்கிரமான மோதல் நடந்தது. இரண்டு தரப்புக்குமிடையில் நடந்த அந்தப்பெரும் மோதலில் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்று தெரியாத அளவுக்கான கள நிலைமை. அந்தமாதிரி நிலைமைகள் போர்க்களத்தில் ஏற்படும்போது எதையும் தீர்மானிப்பது கடினம். கணிதத்தின் எல்லாச் சமன்பாடுகளும் அப்போது இறுகிவிடும். அல்லது செயலிழந்து போகும். வியூகங்கள் தகரும் வெளி அது. வியூகங்கள் தகரத்தகர மரணம் விளைந்து கொண்டேயிருக்கும். காலடியில்இ கண்ணுக்கு முன்னே அது விளையும். அப்படியொரு விளைச்சல் வேறு எதிலும் நிகழ்வதில்லை. ஆனால் அப்படி விளையும் மரணத்தைக் கட்டுப்படுத்துவதும் வியூகங்கள்தான் என்று கரமசோவ் பல தடவை உணர்ந்திருந்தார்.
அன்று பனி மிகக்கூடுதல். அதைவிட மலைப்பிரதேசம் வேறு. பீரங்கிகள் வெறிகொண்டு முழங்கிக்கொண்டிருந்தன. எங்கும் தீயும் புகையும் அவலக்குரல்களும் குருதியும் நிணமும். மனிதன் பிறந்தது இப்படி அழியத்தானா என்று ஒரு கணம் அவருக்குள் ஒரு பொறிதட்டியது. அது சட்டெனப் பற்றிப் பெருந்தீயாய் மூண்டது.
இப்படியெல்லாம் இழிந்துதானா வாழவேண்டியிருக்கிறது? இதென்ன பேய்த்தனம் என்று அவர் யோசித்திருக்கிறார். ஆனால் இதையிட்டெல்லாம் அவர் யுத்த களத்தில் குழம்பியதோ பின்வாங்கியதோ கிடையாது. அவரை நோக்கி வந்த மரணத்தை அவர் விரட்டி வென்றிருக்கிறார். போர்க்களத்தில் மரணத்தை விரட்டுவதுதான் வெற்றி. அதுதான் போரின் வெற்றியைத்தருகிறது. அங்கே தோல்வியின் நிழலைப்படர அனுமதிக்க முடியாது. அனுமதித்தால் அந்த நிழலின் மறைவில் மரணம் பெரீய திறந்த வாயுடன் வெறிகொண்டு வந்து விழுங்கி விடும். ஆகவேஇ அவர் அருகிலிருந்த புதருக்கருகில் - மறைவிடமொன்றில் இறந்த சடலத்தைப் போலப் படுத்திருந்தார். அந்தத் தந்திரமே அவரை இறுதியிற் காப்பாற்றியது.
ஒருவருக்கு வெற்றியைத்தரும் போர்க்களம் இன்னொருவருக்கு தோல்வியைப் பரிசளிக்கிறது. அந்தத்தோல்வி வெறுமனே தலை கவிழ்ந்து கொண்டு போவதுடன் மட்டும் முடிவதில்லை. அது மரணத்தையும்; மீளமுடியா அபாயகரமான நிலைமைகளையும் கொண்டு வருகிறது.
அவர் போர்க்களத்தில் சந்தித்த பல தருணங்களைப்பற்றியும் ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். சிலவேளை அங்கேயுள்ள நிலைமைகள் பற்றி அவருக்குச்சிரிப்பு வந்திருக்கிறது. அவை சிரிக்கக்கூடியவை இல்லை என்ற போதும் அவரால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. உண்மையில் சிரிப்பூட்டக்கூடிய சங்கதிகள் நிரம்பிய மண்டலம்தான் அது. அதை யாரும் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்களே தவிர அதுதான் உண்மை.
எத்தனையோ விதமான சாகசங்களை நிகழ்;த்திய கரமசோவ்இ இப்போது வீட்டில் எதுவும் செய்ய முடியாமல் தடுமாறினார். உண்மையில் போர்க்களத்தை விடவும் வீடுதான் பயங்கரங்களின் விளைநிலமாக இருக்கிறது போலும் என்று பட்டது. இதைத் தான் இவ்வளவு நாளும் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்தார்.
அவரிடம் களத்தில் பெரும் படையிருந்தது. பீரங்கிகளிருந்தன. எதிரிகளைத்திணறடிக்கும் திறனும் வல்லமையுமிருந்தது. பெரும் தந்திரங்களிருந்தன. வியூகங்களை வகுக்கும் கெட்டித்தனமிருந்தது. எதிர் வியூகங்களை உடைக்கும் ஆற்றலிருந்தது. இப்போது இதெல்லாம் பயனற்றதாகி விட்டன. அவருடைய இதுவரையான ஆற்றல்கள் எல்லாம் பொய்யானவை என்று தோன்றியது. இந்தக்கணத்தின் நிலை அதை நிரூபிக்கிறது. இதை விட இதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்? தன்னுடைய ஆற்றல் குறித்த சந்தேகம் முதல்தடவையாக அவருக்கு ஏற்பட்டது. தான் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அவர் முழுமையாக நம்பினார். அப்படித் தோற்கடிக்கப்பட்டிருப்பது கூட ஒரு வகையில் ஆறுதல்தான். அதுதான் இப்போது தேவைபோலவும் பட்டது.
அவருடைய பிள்ளைகள் அவரைக் கண்டு மகிழ்ந்தாலும்இ அவர்களால் தந்தையோடு இயல்பாக இருக்க முடியவில்லை. குழந்தை முகங்களில் தெரியும் மகிழ்ச்சிக்குப் பதிலாக ஏதோ துயர நிழல் அந்த வயதிலேயே படிந்திருந்தது. அந்த வயதில் அப்படியொரு சாபமா அவர்களுக்கு? என்று அவர் மனம் உணர்ந்த கணத்தில் அவருடைய உடல் பதறியது? உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தினார். தாகமெடுத்தது. ஏதாவது குடிக்க வேண்டும். எதையும் விட தண்ணீரைக் குடித்தால் பரவாயில்லை. தண்ணீருக்கு நிகராக எந்தப் பானமும் உலகில் இல்லை. அந்த நிலைமையிலும் இப்படிச் சிந்க்க முடிகிறதே என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
என்ன ஆச்சரியம்? தன்னுடைய நிலையைப்போலவே இந்தக் கதையும் இருக்கிறதே என்று தீராத திகைப்படைந்தான் சுந்தரி. யுத்தம் எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான நிலைமைகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறதா? இல்லையென்றால்இ கரமசோவின் அதே உணர்வலைகளும் தன்னுடைய உணர்வலைகளும் எப்படி ஒன்றாகஇ ஒரே மாதிரியாக இருக்க முடியும்? எந்த வேறு பாடுகளும் இல்லாது கரமசோவும் தானும் ஒரே பிரச்சினைகளை எதிர் கொள்ளும் யதார்த்தம் எப்படி அமைந்தது? அவர் படையினராஇ அல்லது போராளியா என்று கூடத் தெரியாது. அதற்கு அவசியமுமில்லை. அந்தக் காலமும் தன்னுடைய காலமும் கூட ஒன்றல்ல. களமும் வாழ்க்கையும் கூட வேறு வேறு. ஆனால் இருவரின் நிலைமையும் ஒரு புள்ளியைக் கொண்டிருப்பது ஆச்சரியமில்லாமல் வேறு எப்படியிருக்கும்?
சுந்தரி போர்க்களத்திலிருந்து ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு வந்திருக்கிறான். வீட்டுக்கு வந்திருக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிரஇ உண்மையில் அவன் வீட்டுக்கு வரவில்லை. அகதிகளின் குடியிருப்பிற்கு வந்திருக்கிறான். அங்கேதான் அவனுடைய குடும்பம் இடம் மாறியிருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளாக அவனுக்கு வீட்டோடு தொடர்பில்லை. அவர்கள் வேறிடத்திலிருந்தார்கள். அவன் வேறு பகுதியில் நின்றான். சந்திக்கவே முடியாத நிலை. போர் அவர்களை வேறாகவும் அவனை வேறாகவும் வைத்திருந்தது.
சண்டை தீவிரமானபோது குடும்பம் இடம்பெயர்ந்து எங்கெல்லாமோ அலைந்து திரிந்து அவன் தங்கியிருந்த பிரதேசத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த போதும் அவனால் உடனடியாக வந்து அவர்களைச் சந்திக்க முடியவில்லை. அவர்கள் வந்தபோது அவன் வேறிடத்துக்கு மாற்றப்பட்டிருந்தான். அவர்கள் வந்து தங்கியிருந்த இடம் புதியது. சண்டை வேறு உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் மீண்டும் அங்கிருந்து இடம் பெயர்ந்து அகதிக்குடியிருப்புக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றிருந்தாள் அவனுடைய மனைவி.
அங்கே இருப்பதுதான் பாதுகாப்பானது என்று நினைத்து அவனுடைய மனைவி அங்கு வந்திருந்தாள். குண்டு வீச்சு விமானங்கள் கதி கலங்கத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. அவள் சனங்களோடு கூடியிருப்பதே பாதுகாப்பானது என்று எண்ணிக் கொண்டாள். அது ஓரளவு உண்மைதான். அகதி முகாமுக்குக் குண்டு வீசமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. என்றாலும் வேறிடத்தையும் விட அது பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். தவிரஇ சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அகதி முகாமைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் கொஞ்சம் மனத் தெம்புண்டு. ஆனால் யுத்தத்தில் எதையும் உறுதிபடச் சொல்ல முடியாது. எதிர் மனோபாவம் எதையும் செய்யத் தூண்டும்.
அகதிக்குடியிருப்பில் அவன் தன்னுடைய குடும்பத்தைச் சந்திக்கும் கணத்தை நெருங்கும்போது தனது நிழலே தன்னை விழுங்குவதாகப் பட்டது. எப்படி அவளைப் பார்ப்பது? அவள் என்ன சொல்லப் போகிறாள்? எப்படி இருப்பாள்? குழந்தைகள் எப்படியிருப்பார்கள்? எதையும் எண்ணாமலே இருந்தால் பரவாயில்லை என்று பட்டது. போர் தன்னையே விழுங்கிக் கொண்டிருக்கிறதா? கரமசோவ் எங்கே தன்னுடைய வெற்றியைக் கண்டார்? அவர் முடிவற்றுத் தோற்றுக் கொண்டிருப்பதை அறியாமலா வெற்றிக்காக உழைத்தார்? எது வெற்றி? எது தோல்வி? முடிவற்ற பைத்திய நிலையில் தானும் சிக்கிக் கொண்டதாக அவனுக்குப்பட்டது. அவன் எதையும் முடிவு செய்யும் எந்தப்புள்ளியிலும் இல்லை. வெறுமனே இயக்கப்படும் ஒரு கருவியாகவே இருப்பதை அப்பொழுது முதற்தடவையாக உணர்ந்தான். வெட்கம் அவனுடைய உடலில் குளிராகவும் வெக்கையாகவும் தீராத விசத்தைப் போலவும் ஒரே நேரத்தில் படர்ந்தது. உடல் நடுங்கியது. ஆயிரம் கத்திகள் உடலில் பாய்ந்ததாக உணர்ந்தான். இவ்வளவுக்கும் இன்னும் அவன் தன்னுடைய குடும்பத்தைச் சந்திக்கவில்லை. இப்போதுதான் அவர்கள் இருக்கும் அந்தக் குடியிருப்புக்கே வந்திருக்கிறான்.
இந்த நிலையில் அவர்களை எப்படி எதிர்கொள்வது? என்பதே பெரும் தயக்கமாகவும் அச்சமாகவும் இருந்தது. பேசாமற் திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. ஆனால் எப்படிப் போகமுடியும்? எந்தவகையில் அது நியாயமாகும்? இப்படி ஒரு கோழையாகி விட்டேனே? யுத்தம் எப்படியும் ஒவ்வொருவரையும் பலியெடுத்துக் கொண்டும் பழிதீர்த்துக் கொண்டுமே இருக்கிறது. இப்போது தானும் ஒரு அகதியே. அகதி என்பதன் பொருள் என்ன? தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்றுதானே அர்த்தப்படுகிறது? அப்படியென்றால் தானும் தோற்கடிக்கப்பட்டுத்தான் விட்டேனா?
“யாரைத் தேடுகிறீர்கள்” அவனை யாரோ விசாரித்தார்கள். தன்னுடைய குடும்பத்தைத் தேடுகிறேன் என்று சொல்வதா? அல்லது அகதிகளைத் தேடுகிறேன் என்று சொல்வதா?
“என்ரை குடும்பம் இங்கதானிருக்கு. இப்பதான் வாறன்” என்றான் அவன். தன்னுடைய வார்த்தையில் எந்தச் சாரமும் உயிர்ப்பும் இல்லாமலிருந்ததை உணரமுடிந்தது. ‘எங்கேயிருந்து வருகிறாய்?’ என்று அவர்கள் மறு கேள்வி கேட்கவில்லை. அது பேராறுதல். தானும் அதைச்சொல்லாமல் விட்டது பரவாயில்லை என்று நினைத்தான். இவ்வளவுக்கும் போரில் எவ்வளவோ வெற்றிகளை அவன் பெற்றிருக்கிறான். அதற்காகத் தன்னுடைய ஒரு கையைக்கூட அவன் இழந்திருக்கிறான். அதற்காக முதலில் வருந்தியபோதும் பின்னாளில் அது சாதாரண விசயமாகி விட்டது. போர் வாழ்வு பெரும்பாலும் அவனுக்குச் சாகஸங்கள் நிரம்பியதாகவே இருந்தது. ஆனால் போரின் அச்சத்தை வெல்ல முடியவில்லை. அது எங்கே எப்படியோ மறைந்து கொண்டுதானிருக்கிறது. அதுவே எல்லோரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
சனங்கள் அங்குமிங்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சந்தையின் ஆரவாரத்தோடு இரைச்சலால் நிரம்பியிருந்தது குடியிருப்பு. சேறும் சகதியும் நிரம்பிய வாடை. அழுகுரல்கள். வசவுகள். காய்ந்து கந்தலான ஒரு பழைய துணிவிரிப்பைப் போல அந்தக் குடியிருப்பும் மனிதர்களும் தோன்றியது அவனுக்கு. இதில் தான் எங்கே?
வைகாசி மாதத்தின் வேனிற்காலத்தை சற்றும் உணர முடியவில்லை. மரங்கள் இளந்தளிர்களோடிருந்தன. பறவைகளின் கீச்சுக் குரல் இன்னும் ஆரவாரத்தைக் கூட்டியது. கால்கள் தொடர்ந்து முன்னேறத் தயங்கின. மனம் தயங்கும் போது உடலின் அனைத்துப் பாகங்களும் செயலிழந்து போகின்றன. இதை அவன் போர்க்களத்திலேயே நன்றாக உணர்ந்திருக்கிறான். அங்கே பாய்ந்து முன்னகரும் கால்களும் மனமும் இங்கே தடுமாறுவதன் காரணம் என்ன? குடும்பம் என்பது எல்லாவற்றையும் விட மென்மையான அதேவேளை மிகக்கடினமான ஒரு அதிசய பாத்திரமா? அல்லது வேறு ஏதோ ஒரு புரியாத பொருளா? அதைத் தீண்டுவதும் நெருங்குவதும் அத்தனை கடினமானதா?
கரமசோவ் தன்னுடைய குடும்பத்துடன் எப்படி இணைந்திருப்பார்? அதற்காக என்ன செய்திருப்பார்? அவர்; பிறகு போர்க்களத்துக்குத் திரும்பினாரா?
“பெயரைச் சொல்லுங்கள்இ எங்கே இருக்கிறார்கள் என்று பாக்கலாம்” என்று அவர்களில் ஒருவர் உதவும் தோரணையோடு கேட்டார்.
அடஇ இவர்கள் இன்னும் தன்னையே கவனித்துக் கொண்டா இருக்கிறார்கள் என்று சுந்தரிக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுணர்வில்லாத நிலைக்கு ஆட்பட்டிருக்கும் தருணத்தில் தான் சிக்கியிருக்கிறேன் என்று தெரிந்தது.
இன்னும் தன்னுடைய குடும்பத்தைச் சந்திக்கவில்லை. சந்திக்கும்போது அந்தத்தருணத்தை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. அந்தத் தருணத்தை நினைக்கவே பயமாக இருந்தது.
கரமசோவ் மிகமிகத்துக்கப்பட்டிருப்பார். வாழ்வில் எப்போதும் யாரும் சந்தித்திராத மாபெரும் நெருக்கடியான தருணத்தைச் சந்தித்திருப்பார். அவர் விரும்பாத தருணமும் நிலையும் அதுவாகத்தானிருக்கும். அவருக்கு முழுப்பொறுப்பில்லாத நிலை அது. ஆனாலும் அதை அவர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
இப்போது தானும் அந்தப் பொறியில்தான் சிக்கியிருக்கிறேன். யுத்தம் எப்போதும் எங்கும் பொறிகளையே உருவாக்குகிறது. பொறியிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் யுத்தத்தைச் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டாலும் நடைமுறையில் அது ஒரு பொறிக்குப் பதிலாக எண்ணற்ற பொறிகளையே உற்பத்தியாக்குகிறது. கடக்க முடியாத பொறிகள். காலம்இ இடம் என்ற பேதங்களில்லாமல் இதுவே எப்போதும் உண்மையாக இருக்கிறது. இப்போது அப்படியான பொறியில்தான் தானும் இந்தச் சனங்களும் சிக்கவைக்கப்பட்டுள்ளோம் என்று நினைத்தான் சுந்தரி. ‘மகிழ்ச்சியின் கண்ணிகளை வேட்டு வைத்தபடி போர் வெறிக்காற்றாகச் சுழன்றடிக்கிறது. இந்த வெறி எப்படி இன்னும் தீராமலே தொடருகிறது?’ அவனால் எதையும் நிதானிக்க முடியவில்லை. இப்போது அவன் அந்தக் குடியிருப்பிலிருந்து விலகி வந்திருந்தான்.
குடும்பத்தைச் சந்திக்க முடியவில்லை. சற்றுப் பொறுத்து தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு போகலாம் என்று மனம் சொல்லியது. இதென்ன ஒத்திகையா? அப்படியொரு நிலை உருவாகிவிட்டதா? இதெவ்வளவு கொடுமை? எவ்வளவு ஆவலோடு களமுனையிலிருந்து ஓடிவந்தான் பிள்ளைகளையும் மனைவியையும் பார்ப்பதற்கென்று? ஆனால் இப்போது தயக்கமும் அச்சமும் அல்லவா பெருஞ்சுவராக முன்னிற்கின்றன? எப்படி அவன் இதைக் கடப்பது?
அவன் களமுனைக்குச் செல்வதற்கு முதல்நாள்கூட அவர்கள் அவனோடு எத்தனை அன்பாகவும் நெருக்கமாகவும் இருந்தார்கள்? அந்த மகிழ்ச்சிக்கும் இப்போதுள்ள நிலைமைக்கும்தான் எத்தனை இடைவெளியாகிவிட்டது. இப்போது தான் இப்படித் தடுமாறித் தயங்கிக் கொண்டிருக்கும் இந்தக்கணத்தில் தன்;னுடைய மனைவி தன்னைப் பார்த்தால் என்ன செய்வாள்? என்னதான் தன்னைப்பற்றி எண்ணுவாள்? தான் எப்போது வீரனாக இருந்திருக்கிறேன்? அப்படி வீரனென்றால் இப்போது இதையெல்லாம் எதிர் கொள்ள முடியாமல் தவிப்பதேன்? அவனுக்கு பைத்தியம்பிடித்துவிடும் போலிருந்தது.
‘கரமசோவ்இ என் தோழனே நாங்கள் தோற்று விட்டோம். முடிவில்லாத தோல்வி. மீள முடியாத சுழலில் அடித்துச் செல்லப்படும் துரும்புகளாக்கப்பட்டு விட்டோம்இ நண்பனே. கடவுளேஇ எனக்கு வேறு வழியில்லையா?’ அவன் விம்மி விம்மி அழுதான்.
அந்த அகதி முகாம் வாசலில் “யாரோ ஒருவன் எதற்காகவோ அழுது கொண்டிருக்கிறான்” என்று யாரோ சொல்லிக் கொண்டு போனார்கள்.
2006
00