Thursday, July 26, 2012

ஐந்து கவிதைகள்


பலியாட்டின் கண்கள்












எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்
ஒரு பரிசு
உயிரும் குருதியுமாகியது
அதில் கவலைக்கோ வெட்கத்திற்கோ
இடமில்லை என்றார்கள்
என்றபோதும்
நம் நிழலைக் காணுகையில்
அச்சமாயிருக்கிறது

நான் கண்டேன்
உனது நிழலிலிருந்து குருதி பீறிடுவதை
எனது நிழலிலிருந்து
நெருப்பு சுவாலை விடுவதை

ஒரு வாழையிலையில்
நமது முகங்கள் படைக்கப்பட்டிருந்தன
நமது விருந்திற்காகவே

எனது புன்னகையை நீ தின்றாய்
உனது சிரிப்பொலியை நான் குடித்தேன்

பலியாட்டின் மணியொலி
விருந்தை முடித்து வைத்தது

நீ விடைபெற்றபோது
விடுவித்த கையில் பார்த்தாயா
காய்ந்த குருதியின்
அச்சமூட்டும்  அழகிய கண்களை

பலியாடு அந்தக் கண்களிலிருந்து
நழுவிப் போய்க் கொண்டிருந்ததை
நாம் கவனிக்கவில்லை
என்பது இப்போது
ஞாபகமிருக்கிறது

00

 பூனையின் நிழல்














நான் நினைக்கவில்லை
ஒருபோதும்
ஒரு பூனை இத்தனை கவர்ச்சியொன தென்றும்
இவ்வளவு பயங்கரமானதென்றும்

என் படுக்கையில்
அதன் உறக்கம்
பன்னெடுங்கால அமைதியின்
ஊற்றைப் பிரவாகித்தபடி இருக்கிறது

திகிலூட்டும்படி
பூனையின் உறக்கத்தைக்
காவல் காத்தவாறு
ஒரு போர்ப்படையாக
அதன் நகங்கள்
வேட்டையின் ருஷியையும்
வெற்றியின் நம்பிக்கையையும்
உறுதிப்படுத்தியபடி

பூனையின் குரலுக்கும்
அதன் கண்களுக்கும்
அதன் நடைக்கும்
அதன் உறக்கத்துக்கும்
ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா

கவர்ச்சியாயும்
மிகப்பயங்கரமாயும்
பூனை சுழன்று கொண்டிருக்கும்
நிழலில்
பூனையின் குரல்
வன்மத்துக்கும் சினேகத்துமாக
ஒலிக்கிறது

அதன்
ஊடுருவும் கண்களில்
இன்னும் தீராதிருக்கிறது
பசி.

00


இனி














சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்
சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் தூக்கத்தினூடும்
விழிப்பினூடும்

ஞாபகங் கொள்ள முடியாத
பூச்செடிகளில்
யாரோ விட்டுச் சென்ற
புன் சிரிப்பின் மீது
இரத்தத்துளிகளின் நடனம் பாம்பின் நளினத்தோடு.

காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச் சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ன விருந்தில்
எதிர்பாராதவிதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை.

தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர்
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது

பன்னூறு ஆண்டுகால
தோல்வியின் நிழலைப்பிரதிபலிக்கும்
அந்த விழிகளில்
சகிப்பின் கடைசிக் கணம்
முடிவடைவதைக் கண்டேன்.

00

காணாமற்போனவனின் புன்னகை













ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்
காணாமற் போனவனின் புன்னகையை

கடந்து போக முடியாதபடி
கொதித்துக் கொண்டிருந்தது
அந்தப் புன்னகை

அதில் காயாமலே இருந்தன
இரண்டு கண்ணீர்த்துளிகளும்
அவனுடைய குருதியும்

திரும்பிச் செல்லவும் முடியவில்லை
காணாமற் போனவனின் புன்னகையை விட்டு
அங்கிருக்கவும் முடியாது
இன்னும்
காயமறுக்கும்
கண்ணீர்த்துளிகளின் முன்னாலும்
குருதியின் அருகாமையிலும்.

00

சாட்சிகளின் தண்டனை













ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்

நாங்கள் எதற்குச் சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்?

சனங்கள் புலன்களை இழந்து
நூற்றாண்டுகளாயிற்று
பரிசளிக்கப்பட்ட மரணத்தோடு
அவர்கள் தெரு நீளம் அலைகிறார்கள்

எந்தப் பெருமையுமில்லை
பொங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களைப் பெறுவதில்

எந்தச் சிறுமையுமில்லை
‘மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது’
என்றெவ்விதம் உரைப்பேன்?

பெரும் பொறியில்
ஒவ்வொருவராய் வீழ்த்தப்படுகிறார்கள்
வெல்ல முடியாத காலம் நீண்டு செல்கிறது
குழந்தைகளின் காலடியில் கூட.

புகை ஏந்திக் கறுத்த வானத்;தில்
ஒரு துளி ஈரமில்லை
துளிர மறுத்த மரங்களில்
பறவைகளின் குரல் தங்கவில்லை

போ
கோடை தீயும் தெரு வழியே போ
காய்ந்து கருகிய கனவுகளின் மீது
நடந்து போ
‘எந்தத்தாகமும் உன்னிடமில்லை
என்பது வருத்தமில்லை உனக்கு’
என்று யாரோ சொல்லிக் கேட்கிறது

போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக்கிடக்கிறது நடுத் தெருவில்
நாய் முகர

யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது
அதில் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும்
என்ன செய்வது?

00

பலியாடு - தொகுதியிலிருந்து...



No comments: