இந்தக் கதை உங்களுக்கு முக்கியமானதோ இல்லையோ ஆனால், இதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அப்பொழுது நான் இயக்கத்திலிருந்தேன். இயக்கத்திலிருந்தேன் என்றால், விவரம் அறிந்தவர்கள் எந்த இயக்கத்திலிருந்தாய்? என்று கேட்பார்கள். உண்மைதான். தமிழீழம் என்றும் ஈழம் என்றும் சொல்லிக் கொண்டு அப்போது முப்பத்தி இரண்டு இயக்கங்கள் இருந்தன. விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்திலிருக்கும் பொம்மைகளைப்போல முப்பத்திரண்டு. எல்லா இயக்கங்களின் பெயரிலும் எப்படியோ ஈழம் அல்லது தமிழீழம் என்ற பெயர் இருக்கும்.
அப்படி அவ்வளவு இயக்கங்கள் இருக்கும் போது எந்த இயக்கத்தில் இருந்தாய்? என்று கேட்பதில் நியாயமுண்டல்லவா. அதுவும் ஒரே இலட்சியம். ஒரே நோக்கத்துக்காக அவ்வளவு இயக்கங்கள்?
அவ்வளவு இயக்கங்கள் தேவைதானா? என்று நீங்கள் கேட்கலாம். ‘நூறு பூக்கள்’ மலரட்டுமே என்று மாவோ சொல்லியிருக்கிறார் அல்லவா. அதை நினைத்தார்களே என்னவோ. ஆனால் நூறு சிந்தனைக்கு இந்த இயக்கங்களில் அதிகம் இடமில்லாமற் போய்விட்டது. அது தனிக் கதை.
என்ன செய்ய முடியும்? இயக்கம் ஆரம்பிப்பது அத்தனை சுகமாக இருந்தது அப்போது. இல்லாவிட்டால் அவ்வளவு இயக்கங்கங்கள் உருவாகியிருக்க முடியுமா? இந்த உண்மை அப்பொழுது எனக்குப் பிடிபடவில்லை. பின்னாளில் “எதுக்கப்பா, நீங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை? ஏன் வேற யாரோ ஆரம்பிச்ச இயக்கத்தில இருந்தியள்?” என்று எங்களுடைய மகன் கேட்டபோதுதான் இந்த விசயமே பிடிபட்டது. நல்ல வேளை அப்போது ஒருவர் நான்கைந்து இயக்கங்களை ஆரம்பிக்காமல் விட்டார்கள். அந்த அளவில் தப்பினோம்.
நான் எந்த இயக்கத்தில் இருந்தேன் என்பதற்கு முன்னர், அப்பொழுது எப்படி நிலைமை இருந்தது என்று சொல்ல வேண்டுமல்லவா! தெரிந்தவர்கள் போக தெரியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களிலும் பலருக்கு அதிக ஞாபக மறதி ஏற்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு யுத்தம் அவர்களுடைய நினைவுகளை அழித்து விட்டது. சிலருக்கு கடுமையான யுத்தம் பெரும் நினைவுக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வேறு சிலரோ பழைய, அந்த நாட்களை நினைவு கொள்ளவே விரும்பவில்லை. அது, மிகக் கொடிய ஒரு பிசாசைப்போல அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அந்த நாட்கள் துருப்பிடித்த நாட்கள். அதனால் அவர்கள் அதைத் தீண்ட விரும்புவதேயில்லை.
இந்த மாதிரி நிலைமை தனியே மாஜி இடதுசாரிகளுக்கு மட்டுமான அனுபவம் என்றில்லை. முன்னாள் இயக்கக்காரர்களுக்கும்தான். அதாவது என்னைப் போன்ற ஆட்களுக்கு. அவர்களுடைய இளமைக்காலம் எந்த உபயோகமும் இல்லாமல் பாழடைந்து போயிருக்கிறது. இளமைக்காலம் பாழடைந்தால் பின்னர் அதிலிருந்து மீள்வது மிகக் கடினம். நாற்பது வயதுக்கு முன்னால் ஒருவன் உழைக்கவும் வாழவும் வேணும். இல்லையென்றால் அவர் உக்கிப் போனவராகவே இருப்பார் என்று எங்களுக்கு ஆதரவாக அச்சுக்கூடம் வைத்திருந்த மரியதாஸ் சொல்வார்;. மரியதாஸ் எங்கள் பிரசுரங்களை எல்லாம் அச்சிட்டுத் தருவார். ஆனால். நாற்பது வயதுக்குள் உழைக்க முடியாததை ஐம்பது வயதிலும் உழைத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு இருந்த அந்த விளக்கம் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கும் எனக்கே வரவில்லை அப்போது. உக்கிப் போன காலத்திலிருந்து சிதைவைத்தவிர வேறெதுவும் மிஞ்சுவதில்லை. அதனால் பலர் திசைகெட்டே போனார்கள். இதில் ஒரு விசேசம் என்னவென்றால், சிலர் இயக்கத்தை விட்டு நீங்கிய பிறகு புலம்பெயர்ந்துவிட்டார்கள். தங்களுடைய காலத்தையும் கனவுகளையும் கடந்து போவதற்கான வழியாக அது இருந்திருக்கிறது. அதில் சிலர் ஒருவாறு மீண்டார்கள். சிலரோ அங்கும் தங்களுடைய துயரக் கடலை மறந்து விடாமல் காவிக் கொண்டு போனார்கள். போன இடத்தில் கடந்தகாலத்துயரங்களும் எரிந்த கனவுகளும் தீயாய் வாட்ட, நொருங்குண்டு சிதறியிருக்கிறார்கள்.
மனம் இங்குமல்லாது அங்குமல்லாது அந்தர வெளியில் ஆடிக் கொண்டிருந்தால் எதில்தான் நிலை கொள்ள முடியும்? சிலர் என்ன ஏது என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்;. சிலர் இன்னும் புரட்சிக்காரர்களாக வாதிட்டுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் ஆய்வுகள், அலசல்களை நடத்திக் கொண்டும் வாழ்கிறார்கள். சிலர் எதுவும் வேண்டாம், மிஞசிக்கிடக்கும் நாட்களையாவது வாழ்ந்து விடுவோம் என்று இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவும் பின்னர்தான். ஆனால் முன்பு இருந்த நிலை வேறு. அவ்வளவு தொகையான இயக்கங்களில் ஒன்றிலாவது இருக்கவேண்டும் என்று சிலர் நினைத்திருந்தார்கள். சிலர் இன ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கான போராட்டம் என்ற வகையில் தங்கள் விரும்பும் அல்லது தாங்கள் நம்புகின்ற இயக்கங்களோடு இணைந்திருந்தார்கள். ஆனால் இயக்கத்திலிருப்பது என்பது மிகவும் வசதியானதாக இருந்தது பலருக்கு. அது பெரும் ஆபத்துகள் நிறைந்தது என்றாலும் அந்த ஆபத்துகளை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சாகசமாகவும் எடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய வயதும் அப்படித்தானிருந்தது. சிலருக்கு அது ஆத்மார்த்தமான காரியம். அது அவர்களின் உயிரோடு கலந்த கனா. அந்தக் கனவு அவர்களுக்குள் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. சுடராகவும் பெருந்தீயாகவும் அது எரிந்து கொண்டேயிருந்தது. அந்தக் கனனவின் ஒளியில் அவர்கள் ஒரு புதிய உலகத்தைக் கண்டார்கள்.
நானும் அப்படியொரு சுடரை ஏந்தியபடியே இயக்கத்தில் இணைந்தேன். கனவும் நம்பிக்கையும் இணைந்து உருவான சுடர் அது. அந்தச் சுடர் மாபெரும் ஒளியைப் பரப்பும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. எங்கள் குடும்பத்தில் நான் மூத்த ஆண். எனக்குக் கீழே ஐந்து பேர். மூன்று ஆண்கள். இரண்டு பெண்கள். ஏழைக் குடும்பம். மூன்று வேளையும் சாப்பிடும்படியான காலமும் வாழ்க்கையும் வராதா எங்களுக்கு என்று ஏங்கிக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மூத்தபிள்ளை ஆண் என்ற படியால் பஞ்சமும் பட்டினியும் எப்படியும் போய்த்தொலைந்து போய்விடும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் அம்மாவும் அய்யாவும். இருக்காதா பின்னே, பாலன் பஞ்சம் பத்தாண்டுகள் என்று சும்மாவா சொன்னார்கள்?
குடும்பத்தைப் பீடித்திருந்த பஞ்சத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்ற பெருந்தாகத்தோடு மாடாக உழைத்துக் கொண்டிருந்தேன். பன்னிரண்டு வயதில் படிக்கிறபோதே தோட்டத்தில் இறைத்தேன். வெள்ளாப்போடு எழுந்து பனம்பழம் பொறுக்கினேன். சந்தையில் காய்கறிகளை விற்றுவிட்டுப் பள்ளிக்குப் போனேன். பள்ளியில் இருந்து திரும்பி வீடு வந்தவுடன் மாடு கட்டினேன். நிலவின் வெளிச்சத்தில் துரவிலிருந்து நீரள்ளி இறைத்தேன். இதோ பஞ்சம் பறந்து போகிறது என்று முழதாக நம்பியிருந்தார்கள் எல்லோரும். நானும் அப்படித்தான் நம்பினேன்.
ஒரு கோடைகால ஞாயிற்றுக்கிழமை. அன்று வெயில் உக்கிரமாக அடித்தது. பனங்கள்ளு வற்றிவரும் வேளை. காய்பிரட்டிக் கள்ளுக்காக தம்பாப்பிள்ளை வல்லியைப் பின்தொடர்ந்து பொய்க் கொண்டிருந்த மத்தியானப் பொழுது. நான் அப்போதுதான் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்து கஞ்சி குடித்துக் கொண்டிருந்தேன். அய்யா கிணற்றடியில் நின்றார். அம்மா அடுப்படிக்குள் புகையைத் தீயாக்கப் பட்டுக் கொண்டிருந்தா. அந்த நேரத்திற்தான் ஈசனோடு இரண்டுபேர் வந்தார்கள். முன்னறிமுகமில்லாதவர்கள். என்னுடைய வயதை ஒத்த இளைஞர்கள்.
ஒருவன் மெலிந்து சற்று உயரமாக இருந்தான். தலைமுடியை பக்கவாட்டாக வாரியிருந்தான். இருபத்தைந்து வயதிருக்கலாம். நீண்டு ஒடுங்கிய முகம். கண்களில் ஒளியும் ஒரு வேகமும் பரபரப்பும் இருந்தது. மற்றவன் கட்டையானவன். வட்டமுகம். நல்ல நிறம். அதிகம் பேசாதவனைப் போலவும் எதையும் உன்னிப்பாகக் கவனிப்பவனாகவும் இருந்தான். ஈசன் அவர்களை நேரே வீட்டுக்குள் அழைத்து வந்தான். அவர்களில் ஒருவன் சற்றுத் தயங்கி அறிமுகமாவதற்கான மெல்லிய புன்னகையைச் சிந்தினான். மற்றவன் மிக அந்நியோன்யமாகப் பழகியவனைப்போல வீட்டுக்குள் நுழைந்து திண்ணைக் குந்தில் இருந்து கொண்டான். இவ்வளவுக்கும் ஈசன் கூட இன்னும் உட்காரவில்லை.
யாரது என்று கேட்டார் அய்யா. அந்தச் சத்தம் கேட்டு அடுப்படிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தா அம்மா. அப்போதுதான் நானும் அவர்களைப் பார்த்தேன். என்னை வரும்படி ஈசன் கூப்பிட்டான். அவன் ஒரு இயக்கத்தோடு கொஞ்சம் தொடர்பாக இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது இராணுவத்தினர் எல்லா இடமும் நினைத்த மாத்திரத்தில் நடமாடித்திரிந்த காலம். அதனால் எல்லாமே மிக ரகசியமாக இருந்தன. சிறு ரகசியத்தை அறிந்திருந்தாலே பெரிய ஆபத்து என்ற நிலை. உள்ளுர இந்தச் சங்கதிகள் நிறைய சுவாரஷ்யத்தைத் தரும் என்றாலும் யாரும் அதை முழுதாக அறிய விரும்புவதில்லை. எதற்காக வீண் வம்பு? யாரிடமிருந்தாவது ஏதாவது தகவல் கசிந்து, அதைப் படையினர் அறிந்தால்... கதி அவ்வளவுதான்.
ஈசனோடு வந்திருப்பவர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் எந்த இயக்கமாக இருக்கும்? என்று தெரியவில்லை. இப்போது என்ன செய்வது? அம்மாவுக்கு விசயம் தெரிந்தால் அவ்வளவுதான், வீட்டை மரணக்களம் ஆக்கிவிடுவா. அய்யாவுக்குத் தெரிந்தால் என்னுடைய நிலை எப்படி ஆகும் என்று சொல்லமுடியாது. இந்தக் கதை ஊருக்குத் தெரிந்தால், ஊருக்கென்ன யாரோ ஒருவருக்குத் தெரிந்தாலே எல்லாம் தலைகீழாகிவிடும். எங்களை எல்லாம் சுட்டுக் கொன்று வீட்டையும் எரித்து விடுவார்கள் படையினர். அந்த அளவுக்கு வெறி கொண்டு திரிந்தது இராணுவம். இயக்கக்காரர்கள் படு மோசமாக வேட்டையாடப்பட்டுத் திரிந்த நாட்கள். அவர்கள் என்னுடைய கூட்டாளிகள் என்று சொன்னேன். ஆனால் புதியவர்களாக இருக்கே என்று சொன்னா அம்மா. நான் எதுவும் பேசவில்லை.
அவர்களை உள்ளே இருக்க வைத்து விட்டு ஈசனைத் தனியாக அழைத்து விவரம் கேட்டேன். அம்மன் கோவிலடிக்குப் போய்ப் பேசலாம் என்றான் அவன். பெருந்தாகத்தோடு தண்ணீர் குடித்தார்கள்.
இந்த மாதிரியே முன்பு தோழர்களும் வருவார்கள். தோழர்கள் என்று நான் சொல்வது கொம்யுனிஸ்ற் கட்சிக்காரர்களை. அவர்கள் கடுமையான பசியோடு வருவார்கள். பெருந்தாகம் உடலெல்லாம் நிரம்பியிருக்கும். ஒரு தோழருக்கு ஒரு செம்பு தண்ணீர் தேவை. தண்ணீரைக் குடித்தே பெரும்பாலும் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். சனங்களின் ஊழியம் பார்க்கப்போனால் வயிற்றையெல்லாம் பார்க்க முடியுமா என்று தோழர் விசு சொல்வார். அப்படியே நானும் பின்னாளில் அவர்களோடு சேர்ந்து ஆனேன். இப்போது இவர்களும் அந்தமாதிரியே தண்ணீரால் வயிற்றை நிரப்பினார்கள். சனங்களுக்கு ஊழியம் செய்யவேண்டுமானால் இதுவொரு எழுதா விதி போலும்.
அம்மன் கோவிலடிக்கு ஈசனும் வட்டமுகத்தானும் முதலில் சைக்கிளில் போனார்கள். நானும் நீளமுகக்காரனும் சற்றுப் பிந்தி வேறு வழியால் தோட்டங்களுக்குப் பின்புறமாகச் சுற்றிச் சென்றோம். ஓட்டுக்கூரை வேய்ந்திருந்தாலும் சிறிய கோவில். கண்ணகி. கோபக்காரி. சுவரில் செங்காவியால் வரையப்பட்ட சித்திரங்கள். மிக மங்கலானவை. ஊரின் எல்லையில் இருந்தபடியால் அப்போது கோவிலடியில் யாருமே இல்லை. அது இன்னும் வசதியாகி விட்டது. வெள்ளிக்கிழமை தவிர்ந்த வேறு நாட்களில் பெரும்பாலும் அந்த நேரத்தில் அங்கே யாரும் நிற்பது குறைவு.
ஈசன் அவர்களை அறிமுகப்படுத்தினான். சுருக்கமான அறிமுகம். ஏனோ, நான்தான் அப்போது பாதுகாப்பில்லாதவன் போல உணர்ந்தேன். இப்போது என்னையும் என் வீட்டையும் மூன்று பேருக்குத் தெரியும். இவர்களில் யாராவது படையினரிடம் சிக்கிக் கொண்டால், எனக்கே ஆபத்து அதிகம். ஈசன் மீது எனக்கு உள்ளுரக் கடுமையான கோபம் வந்தது. ஆனால் மௌனமாக நின்றேன். ஈசன் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவசரமாக அவன் விவரங்களைப் பேச முனைந்தான்.
“வண்டி இந்தியாவுக்குப் போக ஆயத்தமாக இருக்கு. எப்பிடியும் ரண்டு பேரை அதில் ஏற்ற வேணும். ஆரை எடுக்கலாம்’’என்று கேட்டான். எனக்குச் சிரிப்பு வந்தது. ஒரு ஆளாக என்னை எதிர்பார்க்கிறான் என்பது அவனுடைய பேச்சில் தெரிந்தது.
“படகு தமிழகத்துக்கு பயிற்சிக்கு ஆட்களைக் கொண்டு போகிறது என்பதற்காக இப்படியா ஆட்சேர்ப்பது? போராட்டம் என்பது என்ன? போராடுவதற்கு இப்படியா ஆட்களைச் சேர்ப்பது? இப்பிடி எதிர்பாராமல் வந்து கேட்டால் ஆர் வருவார்கள்’’ என்றேன்.
“எவ்வளவு பேர் வாறதுக்குக் காத்திருக்கிறாங்கள். உனக்கொரு சான்ஸ். வேணுமெண்டால் வா. பிறகு கவலைப்பட வேண்டாம்’’ அவன் கொஞ்சம் எடுப்பாகச் சொன்னான்.
நான் கொம்யூனிஸ்ற் கட்சிக்காரரோடு திரிகிறேன் என்றபடியால் எப்படியும் போராட்டத்துக்காக வருவேன் என்று நினைத்திருக்கிறான் அவன். “உந்தக் கொம்யூனிஸ்ருகளோடை திரிஞ்சு என்னத்தைச் செய்யப்போறாய்? ஒரு ஆமியை அவங்களாலை சுட ஏலுமே. நடக்கக் கூடிய காரியங்களைப் பாக்கோணும். செய்யக்கூடிய ஆக்களோட சேரோணும்’’ அவன் கொஞ்சம் இறுக்கமான தொனியில் இதைச்சொன்னான். அவனுடைய குரலில் ஏமாற்றத்தைத் தாங்க முடியாத ஆற்றாமை வெளிப்பட்டது.
அதை மறைக்கவே இந்தக் கிண்டல். நான் தொடர்ந்து பேசி விவாதத்தை உருவாக்க விரும்பவில்லை. “பாக்கலாம்’’ என்றேன். ஈசனுடன் கூட வந்தவர்களில் மெலிந்தவன் சிநேகமாக சிரித்தான். அது சூழ்நிலையைக்; கொஞ்சம் தணிப்பதாக இருந்தது. ஈசன் எதற்காக இப்படி அவசரப்படுகிறான் என்று தோன்றவில்லை. தவிர, இப்படி அவன் கேட்பான் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. “நான் பிறகு கதைக்கிறன்’’ என்று ஈசனுக்குச் சொன்னேன். அது அவனுக்கு சற்று உவப்பான பதிலாக இருந்தது.
பிறகு கொஞ்சநேரம் பொதுவாக சில விசயங்களைப் பேசினோம். ஆனால் எதிலும் முரண்பட நான் விரும்பவில்லை. அவர்கள் தீவிரமாகவே கதைத்தார்கள். அதிலும் உருண்டை முகக்காரன் ஒரு சோதிடனைப்போலவும் ஒரு சமயப்பிரசங்கியைப் போலவும் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தான். எல்லாவற்றுக்கும் அவனிடம் தீர்வுகளிருந்தன. அந்தத் தீர்வுகளைப் பற்றிய நம்பிக்கையும் அவனிடமிருந்தது. அதை அவன் மற்றவர்களிலும் ஊன்றி விட முயன்றான்.
அவனுடைய பேச்சு உத்தி முழதாக உளவியல் சார்ந்தது. பெரும் மூடைகளில் வார்த்தைகளைக் கட்டிக் கொண்டு வந்தவன்போல எல்லாவற்றையும் அவிழ்த்துக் கொட்டிக் கொண்டேயிருந்தான். நான் பிடிவாதமாக மௌனம் காத்தேன். அந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு வாய்ப்பானதாகக் கருதிக் கொண்டு, தான் சொல்வதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் என்று நினைத்து, அவன் தொடர்ந்து மிக உற்சாகத்தோடு பேசிக் கொண்டேயிருந்தான். கோடைகால வெயில் எனக்கு நாக்கை வரட்டியது. கோயில் கிணற்றில் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் மனம் அதற்குத் தயங்கியது. பேசாமல் அங்கிருந்து விலகுவதைப்பற்றியே அது முழதாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.
ஈசன் உருண்டையனின் பேச்சில் முழுமையாக மயங்கிக் கிடந்தான். அவனுடைய கண்களில் மயக்கமும் பெருமிதமும் மிதந்தன. குளக்கரையில் ஒரு கூட்டம் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் சவாரி போகும் குழந்தைகளைப்போல கொக்குகளும் காகங்களும். நான் தூரத்தே பார்வையை அலைய விட்டேன். அதைத்தவிர அப்பொழுது வேறு வழியில்லை. அதைக் கவனித்த நீள முகக்காரன் “சரி நிற்பாட்டுவம். பிறகு சந்திப்பம்தானே. அப்ப கதைப்பம்’’ என்று அந்தச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்தான். நான் மிகவும் களைப்போடு வீடு திரும்பினேன். ஈசன் எதற்காக இப்படி அவசரப்பட்டான் என்று புரியாமல் இருந்தது. என்ன மாதிரி மட்டமாகப் பேசிறான்?
அதற்குப் பிறகு நான் ஈசனைச் சந்திப்பதைத் தவிர்த்தேன். அவனும் அதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்கிடையில் சந்தைக் கடை செல்லையாவின் மகனும் சின்னத் தோட்டம் தம்பாபிள்ளையின் மகனும் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள் என்று ஊர் ரகசியமாகக் கதைத்தது.
மழை மெல்லிதாகத் தூறிக் கொண்டிருந்த ஒரு கோடை நாளின் பின்னேரம், என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த விஜயகுமார் என்ற சிறி வந்தான். இரண்டு வருசத்துக்கு மேலாக வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தவன், திடீரென்று வந்து நின்றது ஆச்சரியமாக இருந்தது.
“என்னடா, கோடைமழையைப்போல வந்திருக்கிறாய்? அதுதான் இந்த மழையா’’ என்று கேட்டேன்.
“உன்னைப்பார்க்கவேணும் போல இருந்துது. அதான் வந்திருக்கிறன்’’ என்றான் அவன். அவன் மனதிலிருந்து தடுமாற்றம் அவனுடைய கண்களில் பிரதிபலித்தது. கதைவிடுகிறான் என்று புரிந்தது. நான் மெதுவாகச் சிரித்தேன். இதுநாள் வரையும் பார்க்க வராதவன் எப்படி இப்போது மட்டும் இப்படி வந்து உருகுவது சாதாரணமா? என்னுடைய சிரிப்பின் அர்த்தத்தை அவன் புரிந்திருக்க வேண்டும்.
“இல்லையடா, ஒரு முக்கியமான விசயம். நீதான் அதுக்குப் பொருத்தமான ஆள். அதான் உன்னட்டை நேர வந்திருக்கிறன்’’
“சொல்லு’’ ஆர்வம் பொங்கியது எனக்கு. ஆனால் எச்சரிக்கையாக இருந்தேன்.
“தனியத்தான் கதைக்கோணும். கோயிலடிக்குப் போவமா’’ என்று கேட்டான். சம்மதித்தேன். இருவரும் ஒரே சைக்கிளில் போனோம். நான்தான் அவனைச் சைக்கிளில் முன்னே வைத்து மிதித்தேன். போகும் வழியிலேயே அவன் கதையைத் தொடங்கி விட்டான். “தமிழனுக்கெண்டொரு நாடு வேணும். அதில்லையெண்டால் நாங்கள் எல்லாம் ஒரு நாளைக்குப் போறதுக்கு இடமில்லாமல் தத்தளிக்க வேணும். வரவர நிலைமை மோசமாகிக் கொண்டு வருது. கொழும்பில தமிழாக்கள அடிச்சுக் கலைச்ச சிங்களவருக்கு எங்கட ஊர்களில இருந்து கலைக்கிறதுக்கு கனநாட் பிடிக்காது. அதுக்கு முதல்ல நாங்கள் இதெயெல்லாம் தடுக்கோணும். எங்கட பெரியவர் இதை முந்தியே சொல்லிப்போட்டார். ஆனா எங்கட காரியங்கள் ரகசியமாக இருக்கோணும். அத விட முக்கியம், எங்கட தொடர்புகள் ஆக ரகசியமாக இருக்கோணும்.
இதுதான் இன்னும் முக்கியம். ரகசியங்களைக் காப்பாற்றக் கூடிய ஆக்கள்தான் இப்ப எங்களுக்குத் தேவை. அதான் உன்னட்டை வந்தனான்’’ அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான். துணைக்கு பெடல் பண்ணினான். தோட்டவெளியைக் கடந்தபோது மழை சற்று வலுத்தது. லேசான காற்று எதிரில் வீசியது. ஏற்றத்தில் சற்று உன்னி மிதித்தேன். அவன் அழுத்தமாக பெடல் பண்ணி உதவினான்.
கண்ணியோடுதான் வந்திருக்கிறான் இவனும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சுற்றி வளைக்கிறார்கள். ஈசனின் கதையைச் சொல்லலாமா என்று தோன்றினாலும் அது வேண்டாம் என்று உள்மனம் எச்சரித்தது. அது நியாயமுமில்லை. தவிர, ஆபத்தும் கூட. என்னிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்ப்பான் என்று எனக்கு விளங்கியது. என்ன சொல்லலாம்? என்று மனதில் கணக்குகள் விரியத் தொடங்கின.
ஆனாலும் உன்னிப்பாக அவன் சொல்வதையெல்லாம் கேட்டவாறு சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தேன். மழையில் அப்படி நனைந்து கொண்டு செல்வது ஒரு விதமான கிளர்ச்சியாகவே இருந்தது. படிக்கிற காலத்தில் எத்தனை மழைப்பொழுதுகளில் இப்படி தெப்பமாகத் தோய்ந்திருக்கிறோம். பிறகு வயலுக்குப் போகும்போது, வேட்டைக்குப் போகும்போதெல்லாம் மழையில் நனைந்திருக்கிறோம். அதையெல்லாம் விட இப்போது நனைவது வேறு விதமாக இருந்தது. அதுவும் இருவரும் இப்படி நனைந்து கொண்டு செல்வது இன்னும் அழுத்தமான கிளர்ச்சியைத்தந்தது.
சைக்கிளை கோவிலடி ஆலமரத்தின் கீழே நிறுத்தினேன். யாருமேயில்லை. குளத்தடி சாம்பல் பூத்துத் தெரிந்தது. மழை வலுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் பனைகள் காற்றிலாடி மழையில் குளித்துக் கொண்டாடின. ஒரு கணம் பார்க்கையில் அவை மழையில் குதூகலித்து நடினமாடுவதைப்போன்றிருந்தது. சைக்கிளை ஆலமரத்தில் சாத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம். யாருமே இல்லாத அந்தப் பொழுதில், அதுவும் மழைநேரத்தில் அங்கே அப்படி இருப்பது நன்றாகவே இருந்தது. மனம் குதூகலித்து நர்த்தனமாடியது.
நான் தலையைக் கையால் தட்டி உலர்த்தினேன். மழைநீர் கன்னங்களின் வழியாகவும் நெற்றியாலும் வடிந்தது. அவன் நெற்றியை வழித்து எறிந்தான். நீர் வளைந்து கோலம் போட்டுக் காய்ந்தது.
“நம்பிக்கையான ஆட்கள்தான் முதல்ல தேவை. எங்களிட்டை வேண்டிய ஆட்கள் வாறாங்கள். ஆனா, எல்லாரையும் எடுக்கேலாது. அதை மேலிடமும் விரும்பேல்ல’’
“ம்..ம்’’
“என்னை உ னக்குத் தெரியும். ஆனா ஒரு பிரச்சினை, உனக்கு விசு, மணியமாக்களோட தொடர்பிருக்கு. அத நாங்கள் கவனமா வெட்டோணும். அவங்களுக்கு சந்தேகம் வரப்பிடாது’’
எனக்குச் சிரிப்பு வந்தது. கூடவே ஒரு சந்தேகமும். எதற்காக கொம்யூனிஸ்ருகளைப் பார்த்து மிரளுகிறார்கள்? என்னை எப்படிப் பார்க்கிறார்கள்? கொள்கையின்படியா அல்லது நட்பின் அடிப்படையிலா என்னை நெருங்குகிறார்கள்?
“சொல்லு’’ என்றேன். அதற்குமேல் அதிகமாகப் பேச உற்சாகமில்லை. “யோசிச்சுப் பார், தமிழீழம் எண்டொரு நாட்டை. தமிழருக் கெண்டொரு நாடு வந்திட்டால் எவ்வளவு நல்லது. பிறகு ஆரும் எங்களுக்கு வாலாட்டேலாது. நாங்கள் ஆருக்கும் அடிமையில்லை’’
நான் சீரியஸாகவே அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். கண்களில் நம்பிக்கையின் சுடர்கள் மின்ன மிக உற்சாகமாக எனக்கு இன்னும் பல விசயங்கள் சொல்லவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். ஆனால், எனக்கு உள்ளுக்குள்ளே குமுறிக் கொண்டிருந்த சிரிப்பை அடக்க முடியவேயில்லை. ஆனாலும் அதை வெளியே காட்டாமல் அடக்கி விட்டேன்.
எவ்வளவு சுலபமாக ஒரு நாட்டை உருவாக்கலாம். மிகச் சாதாரணம். அவன் பேசுவதைப் பார்த்தால், எல்லாப்பிரச்சினைகளுக்கும் அநேகமான தீர்வு அவனிடம் இருப்பதைப்போலிருந்தது. இந்த மாதிரிக் காரியங்களைப் பார்க்கிற ஆட்கள் எல்லோரும் எப்போதும் மதப் போதகர்களைகளைப் போலவோ குறிசொல்லும் சோதிடர்களை ஒத்திருப்பதாகவோதான் இருக்கிறார்கள். பேசுவதற்கான உற்சாகம் என்னிடம் பிறக்கவில்லை.
அவனே தொடர்ந்தான். “எங்களுக்கான தொடர்பாளாக நீ இருந்தால் நல்லது. பிறகு மெல்ல மெல்ல கனவேலையளச் செய்யலாம்’’ ஓமென்றும் இல்லாமல் இல்லையென்றும் இல்லாமல் பக்கவாட்டில் தலையை ஆட்டினேன். தொடர்ந்து இந்தமாதிரியே இன்னும் ஒரு பத்து நிமிசம் பேசியிருப்பான். நான் எதுவும் சொல்லாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தேன். “சரி, நீ எல்லாத்தையும் யோசிச்சுப் பார். பாத்து ஒரு முடிவுக்கு வா. ஆனா ஒண்டு, எதெண்டாலும் உண்மையில நடக்கக்கூடியமாதிரி ஒரு திட்டம் வேணும். அப்பிடியான இடம் எதெண்டு பார்’’ அவன் ஒருவாறு பேச்சை முடிவுக்குக் கொண்டுவந்தான். அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. என்னுடனிருந்த நட்பை நம்பியே, அதை முதலீடாக்கிக் காரியம் பார்க்கலாம் என்று வந்திருக்கிறான். ஆனால் அந்த நம்பிக்கை இப்போது மெல்ல ஆட்டம் கண்டிருக்கக்கூடும்.
நான் அவனை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அந்த உறவில் ஏதாவது இடைவெளி ஏற்பட்டுவிக்கூடாது என்பதற்காக சாப்பிடும்படி கேட்டேன். முதலில் மறுத்தவன், என்ன நினைத்தானோ தெரியாது பிறகு சாப்பிட்டான். அம்மா அவனை விசாரித்தா. அவன் எவ்வளவோ பதில்கள் சொன்னான். அதில் ஏராளம் பொய்கள் இருந்தன. ஆனால் அவற்றை அவன் வேண்டுமென்றே சொல்லவில்லை. நன்மைகளை நோக்கியதாக, அவன் நம்பும் நம்பிக்கைகளின்படி அப்படிச் சொன்னான். அவனைப் பொறுத்தவரையில் அவை உண்மையானவை, அல்லது உண்மைக்கு நெருக்கமானவை. அவன் விடைபெற்றுப் போய்விட்டான். போய் ஒரு கடிதம் போட்டிருந்தான். என்னுடைய பதிலை எதிர்பார்ப்பதாக அதில் கேட்கப்பட்டிருந்தது.
இது நடந்து சரியாக இரண்டு வாரம். அதுவும் ஞாயிற்றுக்கிழமை. தோழர் விசு புதிதாக ஒருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அன்று வீட்டில் அய்யா இல்லை. வெளியூர் போயிருந்தார். அம்மாவும் தங்கையும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். விசு வீட்டில் எல்லோருக்கும் அறிமுகமானவர். அவருக்கு எல்லோரிடமும் மதிப்பும் அன்பும் உண்டு. அவர்கள் சாப்பிட்டு முடிந்த பிறகு நாங்கள் அம்மன் கோவிலடிக்குப் போனோம். அன்றும் மாடுகள் குளக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. காகங்களைக் காணவில்லை. பதிலாக மைனாக்களும் கொக்குகளும் அவற்றின்மேல் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன.
விசு புதியவரைப் பற்றிச் சொன்னார். அவர் புதிய விசயங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். மீண்டும் போதனையா, அல்லது நம்பிக்கைகளின் விதையை இன்னும் ஒரு மனதில் முளைப்பதற்காக ஊன்றும் எத்தனமா? ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு, ஒவ்வொரு கருத்துக்கும் மறு கருத்து உண்டு என்ற தோரணையில், அவர் பேசினார். ஒரு ஐந்து நிமிடம் பேசியிருப்பார். நிறுத்தி, என்னைப் பார்த்தார்.
“சொல்லுங்கள், இதில நீங்கள் என்ன நினைக்கிறியள் என்று தெரியவேணும். அப்படியெண்டால்தான் அதில ஒரு கூட்டுப் பெறுமானமிருக்கும். போராட்டம் எண்டால் அது ஒரு வகையில ஒரு நோக்கத்தில திட்டமிட்ட கூட்டுச் செயற்பாடுதான். விடுதலை என்ற இலக்கில இந்தக் கூட்டுழைப்பைச் செலுத்தப்போறம்’’
அவர் நிறுத்தினார்.
விசு என்னைப் பார்த்தார். நான் மெல்லிதாகச் சிரித்தேன். இன்னொரு கண்ணியா? வலைகள் பலவிதமாக எங்கும் விரிக்கப்பட்டு வருவதாக உணர்ந்தேன். ஒவ்வொரு வலையும் ஒவ்வொரு விதம். இது இன்னொரு வடிவத்தில் வந்திருக்கிறதா? ஆனால் விசு எதையும் ஆழமாக நோக்குவார்;. அவருக்கு தேர்வுகள் முக்கியமானவை. எதையும் விசாரணைக் குள்ளாக்கியே அவருக்குப் பழக்கம். இவரை அழைத்து வந்திருப்பது என்பது அவருடைய நம்பிக்கையைக் காட்டுவதற்காக. ஆனால், எதையும் அவரவரே தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையுள்ளவர். நீயே முடிவெடுத்துக் கொள். உரையாடு, எதையாவது பேசு’ என்றமாதிரியிருந்தது அவருடைய பார்வை.
ஒரு மணித்தியாலம் வரையில் கதைத்தோம். பேச்சு விவாதமாக வளர்ந்தது. ஆனால் நான் அதிகம் அதை வெப்பமான நிலைக்குக் கொண்டு போக விரும்பவில்லை. அவர்களும் அதைத் தவிர்த்தார்கள் என்று புரிந்தது. அடுத்த தடவை சந்திப்பதாகச் சொல்லிச் சென்றனர். போகும்போது ஐந்து புத்தகங்களைத் தந்து விட்டுச் சென்றார்கள். என்னிடமிருந்து இரண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
புரட்சியின் அலைகள் ஒவ்வொருவருக்குள்ளும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. புரட்சி பற்றிய சிந்தனை ஒவ்வொருவரின் இதயத்திலும் நிறைந்துபோயிருந்தது. காணும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இயக்கத்தோடு தொடர்பாகியிருந்தார்கள், அதற்காக அவர்கள் ஆட்சேர்த்துக் கொண்டும் பரப்புரை செய்து கொண்டும் இருந்தார்கள். அப்போது நான் யாரைப் பார்த்தாலும் அஞ்சத் தொடங்கினேன்.
பிறகு நான் எட்டுவருசம் இயக்கத்திலிருந்தேன்;. அய்யாவை அவருடைய எதிர்பார்ப்புகள் கொன்று விட்டதாக தம்பி ஒருநாள் என்னோடு சண்டையிட்டபோது சொல்லிப் பேசினான். அவரை நம்பிக்கைகள் கை விட்டதைப்போல என்னை எந்தப் பதிலும் காப்பாற்றவில்லை. இரண்டுக்கும் நானே பொறுப்பு என்று உள்மனம் சொல்லியது. எதுவும் சொல்லாமல் அமைதியானேன். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குப் போன தம்பி இப்போது பலமாகியிருந்தான். படிக்க முடியாமற் போனதுக்கும் நானே காரணம் என்று இன்னொரு விரல் எங்கிருந்தோ நீண்டது. எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகிக் கொண்டேயிருப்பது போலத் தோன்றியது. கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கியது என்னுடல். வீடில்லை. அது எப்போதோ படை வலயத்துக்குள் போய்விட்டது. எல்லாமே குழம்பியிருந்தன. அம்மா நடப்பதெல்லாம் நடக்கட்டும் என்று இருந்தா. அதற்கும், நான்தானா பொறுப்பு? தங்கச்சிமாரின் படிப்புகளும் நின்று விட்டன. மூத்த தங்கை தானாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டாள். அது இன்னும் குடும்பத்தின் நிலைமையை மோசமாக்கியது.
விசு நாற்பத்தைந்தாவது வயதில் திருமணம் செய்தார். நரைத்த தலைக்கு மை பூசும்படி அவருடைய அக்கா எவ்வளவோ சொல்லிப்பார்த்தா. ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். மிக எளிய திருமணம். மாலையை மாற்றிக் கொண்டு அவரும் அவருடைய துணையும் இணைந்து கொண்டார்கள்;. அன்றிரவு அவருடைய வீட்டில் சாப்பாடு. சாப்பிடும்போது பார்தேன், யாரோ ஒரு தெரிந்த முகம். யாராயிருக்கும்? கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், மூளை அதையே தேடிக் கொண்டிருந்தது. நாற்பது வயதிருக்கலாம். மெலிந்த தோற்றம். இந்தத் தோற்றத்தில் பாரத்ததாகவும் பழகியதாகவும் தெரியவில்லை. ஆனால் அந்த முகம் அழியாமல் மனதில் பதிந்துள்ளது. எது அதை மறைக்கிறது? யாரைக் கேட்கலாம்? அவரையே கேட்டுவிடலாம். என்னதான் நினைப்பார்? அவர் என்னைப் பார்ப்பதாக இல்லை. சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம் என்று இருந்திருந்தேன். அதிக கூட்டமில்லை என்பதால் விசுவிடம் கேட்டுவிடலாம். அநேகமாக விசுவுக்கு தெரிந்தவராகவே இருப்பார். அவருடைய எளிமை அதைக் காட்டியது. அதற்கிடையில் அவர் எழுந்து என்னருகில் வந்தார். ஆனால், அவர் என்னை அடையாளம் காணவேயில்லை. அதைவிட என்னை அவர் கவனிக்கவேயில்லை. அவர் அருகில் வந்தபோது எழுந்து “மன்னிக்கவேணும். உங்கடை பெயர்?’’ என்று கேட்டேன். அவர் என்னை உன்னிப்பாகப் பார்த்தார். கண்கள் கூர்மையாக நெற்றி சுருங்கியது. “நிர்மலன். ஏன், என்னைத் தெரியுமா? என்று பதிலுக்குக் கேட்டார். நான் அவரைத் தழுவியபடி “அட, இதென்ன கோலம்? இவ்வளவு காலமும் எங்கேயிருந்தாய்? என்னைத் தெரியுமா, நான்தான் கருணா’’ என்றேன். ஆச்சரியமும் சந்தோசமும் கலந்த மகிழ்ச்சி. அவர் என் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார். கண்களில் நீர் திரண்டது. ஒரு ஓரமாக அவரை அழைத்துக் கொண்டு ஒதுங்கினேன்.
அன்றிரவு தூக்கம் வரவேயில்லை. அவரைச் சந்தித்தது, அவர் சொன்ன கதைகள், அவருடைய அந்தக் கோலம் எல்லாம் புலன்களில் நிரம்பியிருந்தன. உடல் துக்கத்தால் கொதித்தது. அது கரைந்து கண்ணீராகிக் கொண்டு வருவதாக உணர்ந்தேன். என்னையறியாமலே ஒருவித அச்சம் உடலெல்லாம் பரவியது. அவரை முதலில் விசுவோடு எங்கள் வீட்டில் சந்தித்த அந்த நாள் நிழலாடியது. பிறகு அவரும் நானும் இயக்கத்தில் இணைந்து செய்த வேலைகள். அவருக்கு இயக்கத்தோடு வந்த முரண்கள். மோதல்கள். எல்லாவற்றையும் அவர் சனங்களுக்காகவே செய்தார். அதில் அவருக்கு ஒரு போதும் தயக்கமில்லை. சனங்களுக்காகவே போராட வந்ததாக அவர் கடைசியாக அவர்களிடம் சொன்னபோது “நாங்கள் மட்டும் என்ன, எங்களுக்காகவா போராட வந்தம்?’’ என்று பொறுப்பாளர் கேட்டது. “சனங்களுக்காக போராட வந்திருந்தா அதுகளின்ர கண்ணீரைப் பாத்துக் கொண்டிருக்க முடியாது’’ என்று அவர் பதில் சொன்னபோது “என்ன மசிர்க்கதை கதைக்கிறாய், நாங்கள் என்ன, சனங்களை வேணுமெண்டா வருத்திறம். போராட்டம் எண்டா கண்ணீரும் ரதத்தமும் சிந்தத்தான் வேணும். அது பூப்பறிக்கிற காரியமில்ல. சும்மா கதைக்கலாம். ஆனா, அதைச் செய்து பாத்தாத்தான் எல்லாம் தெரியும்’’ என்று பொறுப்பாளர் கோபமாகக் கத்தினான். அதற்கு அவர், “எல்லாம் தெரியும். இப்ப இயக்கத்தின்ர நலன் பெரிசாத்தான் பாக்கப்படுது. சனங்களை ஆர் பெரிசாப்பாக்கிறியள்?’’ அவர் அமைதியாகச் சொன்னார். அந்த அமைதியிலிருந்த நிதானமும் உறுதியும் யாரையும் உடைத்துவிடக்கூடியது. எல்லோரும் என்ன நடக்கப்போகிறது என்ற திகலோடு பார்த்துக் கொண்டிருந்தோம். „“மடக்கதை கதைக்காதை. இயக்கம் இருந்தால்தான் போராட்டம் நடக்கும். அது பலமாக இருந்தாத்தான் அதால சனங்களைக் காப்பாத்த முடியும். இதுகூடத் தெரியாமக் கதைக்கிறாய்’’ அவரைச் சீண்டும் தொனி அது. யாரும் சீண்டிப் பேசும்போதுதான் மனிதனுள் மிகவும் ஆக்ரோசம் பிறக்கிறது. „“பொத்தடா வாயை. ஆருக்காகப் போராட்டம்? சனங்களுக்காக இயக்கமா, இயக்கத்துக்காகச் சனங்களா?’’
வாக்குவாதம் முற்றிவிட்டது. அவர் கதைத்ததே பிழை என்று இயக்கம் சொன்னது. அவரை வேறு எங்கோ மாற்றினார்கள். கொஞ்சநாள் அவரைப் பற்றியும் அவர் கதைத்ததைப் பற்றியும் பலரும் இரகசியமாகக் கதைத்தார்கள். பிறகு எல்லாம் மறந்து போயிற்று. நான் அவரை அடிக்கடி நினைத்தாலும் தகவலைப் பெற முடியவில்லை.
முஸ்லிம் பெடியளோடு நான் கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறேன் என்று என்னை எல்லோரும் எச்சரித்தார்கள். “அவங்களை நம்பேலாது. பொறுத்த இடத்தில அவங்கள் மாட்டுவாங்கள். அல்லது கைவிடுவாங்கள். போயும்போயும் சோனியை நம்புகிறாயா? பட்டாத்;தான் புத்தி வரும். ஆனால் போராட்டம் பரிசோதனைக் கூடமில்லை’’ என்று ஒரு நாள் பொறுப்பாளர் எச்சரித்தார். என்னால் அதை ஏற்க முடியவில்லை. நான் அதை மறுத்தேன். “முதல்ல சோனி எண்டு சொல்லிறதை விடுங்கோ. மற்றவர்களை மதிக்க வேணும். கண்டபடி ஆரையும் குற்றம் சொல்லக்கூடாது. முஸ்லிம்களில பிரச்சினை எண்டால் அதுக்கான பின்னணிக்காரணம் என்ன எண்டு பாக்கோணும். ஏன், தமிழாக்கள் அவர்களை விடவும் பிழை செய்யேல்லையா? அப்ப ஏன் அதைப் பெரிசாப் பாக்க மறுக்கிறியள்?’’
“ஓகோ, அந்தளவுக்கு அவங்கள் இனிக்கிறாங்களா? நல்லாத்தான் முத்திப்போச்சு, இந்த வருத்தம். உது சரிப்பட்டு வராது. அவங்களோட உனக்கிருக்கிற தொடர்பை விட்டிடு. பிறகு கவலைப்படாதை’’ அவன் இரைந்தான். இனி வாதிட்டுப் பயனில்லை. எட்டு வருச இயக்க வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்தது.
நிர்மலனும் நானும் விசுவிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தோம். வானம், நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. ஆனால் பாதையில் கும்மிருட்டு. பேசிக் கொண்டே சென்றோம். நான் முன்னே சென்றேன். “பாத்து நட’’ என்று அவர் சொன்னார்.
முன்னர் நாம் எதையும் ஆழமாகப் பார்க்காமல் நடந்ததை அவர் சொல்வதுபோலப் பட்டது.
00
.jpg)
.jpg)
No comments:
Post a Comment