Friday, July 13, 2012

கருணாகரனின் கவிதைகள் ஒரு பார்வை







- கந்தையா ஸ்ரீகணேசன்








ஒரு சமூகத்தின் இருப்புக்கமைய அதன் இலக்கிய ஊடகம் அமையும் என்பது இலக்கிய அறிஞர்கள் கண்ட உண்மையாகும். நவீன மனிதன் தன் இருப்பை உள்ளும் புறமும் தேடிக்கொண்டிருப்பான். அவனது வாழ்வு உலகில் இயங்கும் பல சக்திகளால் கேள்விக்குறியாக்கப்படும்போது அவனால் இலக்கண வரம்புகளை, இலக்கிய விதிகளை (மரபு ரீதியான) கற்றுணர்ந்து கொள்ளும் வரை பொறுத்திருக்கமுடியாது. தன் அவலத்தை தன் உணர்வை அவன் தனக்குள் கைவரும் எக்கலை ஊடகத்தாலும் வெளிக்கொணரும் சக்தியை சூழல் அவனுக்கு வழங்குகின்றது. அத்தோடு அவனது அசைவியக்கத்தில் அவனுள் காணப்படும் கவி ஊற்றும் அதற்கு வழி சமைக்கின்றது. இப்பின்னணியிலேயே கருணாகரனது கவிதைகளை நாம் இனங்காண வேண்டும்.

ஈழத்தமிழிலக்கியப் பரப்பில் கவிதையினது வளர்ச்சி, பொதுவாக தமிழிலக்கியத்துக்கே ஒரு முன்னோடியாக உள்ளது. மரபுக்கவிதைகளில் மஹாகவி, நீலவண்ணன், முருகையன், நுஃமான், சோ.பத்மநாதன் ஆகியோரும் புதுக்கவிதையில் வ.ஜ.ச.ஜெயபாலன், சேரன், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், வாசுதேவன் ஆகியோரும் சமகால மக்களின் வாழ்வியலைத் தாக்கமான முறையில் சமூக அரசியல் வழிப்புணர்வோடு கவித்துவ, சொற்சிக்கன குறியீட்டு படிமச்சிறப்புக்களோடு எழுதிவருகின்றனர். இந்த வரிசையில் கருணாகரனது கவிதைகளும் இன்னொரு பரிநாமத்தை எமக்கு உணர்த்தி நிற்கின்றன.


அமைதியான, அடக்கமான ஆனால் தன் மக்கள் துயர் கண்டு துடிக்கும் மனிதனாய் விளங்கும் இளைஞன் கருணாகரனை, உண்மை வாழ்வை நேசிப்பவனாகவும், நல்லவை செய்து அல்லவை போக்க முயல்பவனாகவும், புதிய உலகைப்படைக்க விளையும் அவாவுடன் இயங்குபவனாகவும், அவனது சமகால கவிதைகள் (திசை, மல்லிகை, உள்ளம், தாயகம் ஆகியவற்றில் வெளிவந்த தனிக்கவிதைகள்) இனங்காட்டி நிற்கின்றன.

‘சிதைக்கப்பட்ட நகரம்’ நாம் வாழுங்கால யாழ்ப்பாண நகர் பற்றியும் அதன் அவலத்தையும் கூறுகின்றது.


“துயில் கலைந்த இரவுகளில் 
இருள் சுமக்கும் யாழ்ப்பாணம்” 
எனத் தொடங்கி 


“துயில் மறுக்கும் குருவிகள் அச்சம் 
மனதில் எச்சமிடும்” 

என்று மக்கள் மனோநிலையைப் படம் பிடிக்கின்றது.


“முற்றத்துப்பூமரம் கூட 
தென்றலுடன் சிநேகிதிக்க மறந்து 
 பயத்தில் நிறைந்திருக்கும்”

ஆனால் கவிஞர் நம்பிக்கை ஒளியை வாசகரிடத்துத் தொற்ற வைக்கின்றார்.

‘மரணத்தை நிச்சயப்படுத்தும் செய்திகளுடன் 
பத்திரிகை அலுவலகங்கள் சுறுசுறுக்கும் 
 புதிய வாழ்வில்’

சமகால மனிதனது உரிமை மறுப்பும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும், குறியீடு, படிமச் சிறப்புக்களுடன் வெளிப்படுத்துகின்றது.

“காற்று” எனுங் கவிதையில்


‘காற்று ஒரு காலம் 
திண்மமாக அல்லது திரவமாக 
மாறி விட்டல் மூச்சு எப்படியிருக்கும்’ 
எனக் கேள்வி எழுப்பி, 
‘சுவாசப்பையும் அதற்கேற்றபடியே இருக்கும்’ 

என இயற்கைச் சமநிலை கூறுகின்றார்.

ஆனால் அத் திரவமோ திண்மமோ பிறர் கையில் கிடைத்துவிட்டால் இம்மனிதன் இரவல் கேட்கவேண்டிவரும் என நவீன மனிதன் அகப்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலை உணர்த்துகிறார்.

‘கோடைவெளியில்’ இறுக்கமான குறியீடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

‘பனிமூடும் புகையிருளில் 
முகம் நனைந்த பசிய மரங்கள்  
கடுமுனைப்பின் பண்பொழுக்கில் சிறு புள்ளினக் குடியிருப்பு 
செந்நாக்கு அனற்பிளம்பாய் 
அலகிரண்டுகள், சுதந்திர கீதமும் 
வைகறையின் காலமதில் நிதமாய்'

கவிதையின் முடிவில் கவிஞரது ஓலம் ஓங்கி ஒலிக்கின்றது.

‘கொளுத்தட்டும் ஆக்கினைகள் 
கொடூரமாய் நிகழட்டும் 
குஞ்சினைக்கொத்தி கலைக்கட்டும் குருவியும் 
தேடலில் நாமெல்லாம் கூடிப்புணர்ந்து  
செந்தணற் சூட்டினுள்ளும் செம்மையாய் வாழ்விசைக்க  
யுகம் மூடுவோம் மானிட ஓலமாய்’

தனிமனிதனது உரிமைப் பிரச்சினைகளை (பசி, வறுமை) வாழ்வுப்பிரச்சினைகளை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் காட்டக்கூடிய பரிமானத்துடன் விளங்கும் கருணாகரனது கவிதைகள் நம்பிக்கை ஒன்றை எக்கணத்தும் கைவிடாது வாழ்வின் பிடிப்பை மொழிகின்றன.

‘வாழ்வின் பனிமலர்ச்சாகரங்கள் ஒரு சுமையாய்’ என ஆரம்பிக்கும் ‘முனைப்பு’ எனும் கவிதையில்


‘காடும் புதரும் மண்டிய  
நம் கிராமத்துப் பசுமைகளில்  
உழைப்பினைச் சுமக்கிறார் மக்கள்’

என தன் சமூகத்தை எழுத்தில் வடிக்கும் கவிஞர் அவர்கள், உறுப்பிணியை தொடர்ந்து கூறுகையில்,


‘பசியின் கொடுமை  
வறுமையின் தோள்களில்  
தோழமையுடன்  குடிசையும் குப்பிவிளக்கும் 
உரிமை சொல்லும் விழிகளில் ஈரம் ஊற்றெடுத்து 
மனதின் துயராய் அழும்’
இவ்வாறு “துயரம்” 

என்பதை படிமமாக்குகிறார்.

‘இலைகளை உதிர்த்து  
முள்பரப்பி நிற்கிறது வாழ்வின் பொருள் மறைக்கும்  கொடுந்துயரம்’ 

‘இருப்பின் தேவை’ எனும் கவிதையும் மானுட அவலத்தைக் கூறி நிற்பினும் அதில் மானுட வெற்றியை பூடகமாக்கிக்காட்டுகிறார்.


‘வாழ்வு அர்த்தமற்றதாய் என நினைவுகளில் தெறிக்கிறது  
எனினும் உயிர்ப்பின் ரகசியம்  
உள்மனம் அறியும்.’

சாதி மற்றும் அடக்குமுறை வடிவங்களை இயல்புடன் எடுத்துக்காட்டி அவற்றைச் சாடி நிற்பதையும் அவரது “சுவடி” எனும் கவிதை இயம்புகிறது.

‘துயரம் முட்டிய பூத வயிற்றுடன்
மறுபடியும் அங்கு அலைந்தது காற்று’

என மனிதன் அகப்பட்டுள்ள சூழலை சுட்டிக் காட்டி, ‘சாதியின் சுவர்களை மோதிச்சரித்தது’ எனப் பாடுகிறார் கவிஞர். ‘எனினும் தளிர்ப்பின் ரகசியம் அடிவேர்கள் அறியும்’ என அவர் நம்பிக்கை ஓங்கி ஒலிக்கிறது.

செவிப்புல கலை வடிவமாகிய கவிதை, இன்று கட்புலவடிவமாக பரிமாணம் பெற்று வளர்கின்றபோது அவர் வாசகர்களிடத்துக்  கிளர்த்தும் அனுபவங்கள், அவனைச் சிந்திக்கவைப்பதாக அமைவதோடு கலைத்துவ பிரக்ஞை உடையதாகவும் இருக்க வேண்டும். குறியீடு, படிமம், மற்றும் உவமான உவமேயத் தொடர்களில் எளிமையான சொற்களுடன் தன் அனுபவச் செழுமையை கற்பனை உணர்வோடு கலந்து, கவித்துவத்துடன் வெளிப்படுத்தும் சொற்சிக்கனமான கவிதைகளே, கவிதை ரசிகர்களை பிணித்து நிற்பன. இத்தன்மைதான் கவிதைகள் சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்படும்போது அவை வரலாற்றின் சுவடுகளாகும் என்பது வெள்ளிடைமலை.

கருணாகரனது கவிதைகளும் அந்த வகையில் இடம் பெறக்கூடியன என்று சொல்வது மிகையல்ல. அவை மானுடத்தின் உயிர்ப்பை உணர்த்தி நிற்கின்றன.  

திசை (யாழ்ப்பாணம்)
29.12.1989

No comments: