
குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக் கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி.
அவன் உங்கள் தெருக்களில்
இசையோடும்
குளிரோடும்
இனிக்கும் நதியோடும் வருகிறான்.
அவன் வரும்போது
தாகத்தின் நிழல் மெல்ல விலகுகிறது
அலைந்தலைந்து வெம்மையேறிய
அவனுடைய இதயத்தில் நிறைந்திருக்கின்றன
அவன் தினமும் திரிகின்ற
தெருக்களின் சித்திரம்
கூடவே குழந்தைகளின் சிரிப்பொலியும்
அவர்களின் சினேகமும்.
அலைந்தே வினையாற்றும்
அவனை நாள்தோறும் காணும்போதும்
நீங்கள் ஏனறியவில்லை
அவனிடம் ஏராளம் குழந்தைகளின்
மகிழ்சியிருப்பதையும்
அவன் அவற்றைக் கொண்டு திரிவதையும்.
அவன் திரிந்து கொண்டேயிருக்கிறான்
ஒவ்வொரு நாளும் தெருக்களில்
தகித்துக் கொண்டிருக்கும் கோடையில்.
எதையும் பொருட்டாகக் கருதாத
உங்களுக்கிடையில்
குழந்தைகளின் சிரிப்பொலியோடும்
அழைப்போடும்.
உங்கள் குழந்தைகள் அறிந்த அளவுக்கு
நீங்கள் அறியவில்லை அவனை
இன்னும்
அவனுடைய இதயத்தையும்
அதில் நிறைந்திருக்கும் சித்திரங்களையும்
எப்போதும் கரைந்து கொண்டிருக்கும்
அவனையும்.
குழந்தைகளின் சிநேகிதன்
கரைந்தோடிச் சேர்கிறான்
குழந்தைகளின் நினைவுகளில்
இனிய குளிராகவே
கனிந்த பழமாகவே.
என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர்விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த
குழந்தைகளின் மகிழ்ச்சியும்.
கனிந்த பழமாகவே
இனிய குளிராகவே
00
No comments:
Post a Comment