Thursday, February 9, 2012

புன்னகையின் சாதுர்யை
















திறக்கப்படாத கதவின் உட்புறத்தில்
தொங்கும் ஓவியத்தில்
வயலெட் புக்களின் நடுவே
பச்சைச் செடிகளில்
மறைந்திருக்கும்போது கண்டேன்
உன்னுடைய முதல்நாள் புன்னகையை

எவ்வளவு நேரம் அங்கிருக்க முடியுமெனத் தெரியவில்லை
உனதந்தப் புன்னகை
ஓவியங்களாகிக் கொண்டேயிருந்தது
நமக்கருகிலிருக்கும்
எக்சோறாச் செடிகளுக்கருகில்
நீ தேரோடுகிறாய்.

பிரார்த்தனை மண்டபமாய்
விரிந்த வானத்தின் கீழே
இரண்டு பட்சிகளின் சலனத்தில்
நகர்கிறது அந்தக்கணம்

என்ன தருகிறாய் பருக?

சொற்களினூடே மெதுவாக நகர்ந்து எங்கோ செல்லும்
சாதுர்யை
ஒரு யாத்திரீகனை உபசரிக்கும் மாயப் பொழுதில்
கிளைகளிலிருந்து கடலுக்குத் தாவும்
உனதந்தத் சிறகுகளை வருடுகிறேன்

காலம் பொய்யாகிப் போவதில்லை
எனச் சொல்லிச் சிரிக்கிறது

உனது புன்னகையும் அந்த எக்சோறாச் செடியும்
எப்போது விடை பெறுவது
எப்போது விடை தருவாய்?

00

No comments: