
ரஜனிகாந் முப்பது பேரை
வெழுத்து வாங்குகிறார்
சிவாஜி வெற்றிப்படமா தோல்விப்படமா
யாருக்குத் தெரியும்
பிம்பத்துக்கு வெளியே
ரஜனி
சந்நியாசியா அரசியல்வாதியா
யாருக்குத் தெரியும்
அவரே அறிவாரா?
அடையாளங்காணப்படாத பிணத்தின் அருகில்
பாணுக்கு கியூவில் நிற்கிறேன்
இலையான்கள் பிணத்திலும் மொய்க்கின்றன
என்னிலும் மொய்க்கின்றன
பாணிலும் மொய்க்கின்றன
தேவனே
அந்தோனியார் கோவிலில்
பின்னேரங்களில்
செபம் சொல்ல வரும்
திரேசம்மாக்கிழவி இரண்டு நாளாக வரவில்லையே
அவளுடைய பேரனை
யார் கடத்திச் சென்றது?
அவள் ஏன் தேவனிடம் முறையிடவரவில்லை?
கடலில்
காணாமற்போன புதல்வனை
கைவிட்டதைப்போல
இப்போதும் தேவன்
பேசாதிருந்துவிடக்கூடுமென்று நினைத்தாளா?
2007.08.16
ஒரே நாளில் முன்னூறு ரூபாய் விலையேறியது
ஒரு லீற்றர் பெற்றோல்
அப்படியென்றால்
இப்போது என்னவிலை என்று கேட்டான்
விருந்தாளி
அவனுக்கு விலை சொல்லிக்கொண்டிருக்கும்போதே
ஏறியிருந்தது
இன்னும் நூற்றம்பது ரூபாய்
இதை எழுதிமுடிப்பதற்கிடையில்
எண்ணூற்றம்பது ரூபாயாகிவிட்டது அது.
ஒரு அரேபியன் அறிவானா
தன்னுடைய நிலவூற்று
இப்படி
எல்லைக் கோடுகளைத்தாண்டி
பகிரங்கமாக விலைபோவதை
எவருடைய குருதிக்கும்
இந்த விலையில்லை
எவருடைய கண்ணீருக்கும்
இந்த மதிப்பில்லை
அகதிக்கூடாரங்களே நிரந்தரமாகிவிட்ட
பலஸ்தீனத்தில்
குண்டுகள் வெடிக்கின்றன
ஈராக்கிலும்
பாகிஸ்தானிலும்
பொலிகண்டியிலும் குஞ்சுக்குளத்திலும்
குண்டுகள் வெடிக்கின்றன
சனங்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஓலம்
குருதி கொப்புளிக்கும்
சாவோலம்
தலைப்புச் செய்திகள்
செய்தி விவரணங்கள்
ஆய்வுகள்
புள்ளி விவரங்கள்
குண்டு வெடிப்புகள் பற்றி
கொலைகள் பற்றி
பி.பி.ஸி, சி.என்.என், அல்ஜஸீரா மற்றும்
எல்லா அலைவரிசையிலும்
நெருப்பு
புகை
குருதி
கொலை
ஆனால் எதையும் பச்சையாகக் காட்டாதே
பச்சையாகக் கொல்
உயிரோடு எரி
மரணத்துக்கு உயிரூட்டு
ஆனால் எதையும் அப்படியே காட்டாதே
பசியால் வாடுகிற குழந்தைகளைப்பற்றி
வீடில்லாமல்
தெருநீளம் அலைகின்ற மனிதர்களைப்பற்றி
எதையும் சொல்ல முடியாமல்
தொண்டைக்குழி பெருத்த
அறிஞரைப்பற்றி
யாருக்கும் தெரியவில்லை
அதைப்பற்றியெல்லாம் யாருக்கும் தேவையில்லை
சிவாஜி படத்தை பத்தாவது தடவையாக
இழுபட இழுபட
பார்த்துவிட்டு
துக்கக்கலக்கத்தோடு
பியரடிக்கப்போகிறார்கள் பள்ளிப்பிள்ளைகள்
சென்றிக்குத் துவக்கைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள்
போராளிகள்
சிவாஜியை
முறைபோட்டு பார்க்கிறார்கள்
படைச்சிப்பாய்கள்
நாங்கள் மட்டும் தலையிலடித்து
கதறியழுது
நதி பெருகுமா
கானல் தீருமா?
00
யுத்தநாள் ஒன்றின்போது எழுதப்பட்டது.
1 comment:
>ஆனால் எதையும் பச்சையாகக் காட்டாதே
பச்சையாகக் கொல்
உயிரோடு எரி
மரணத்துக்கு உயிரூட்டு
ஆனால் எதையும் அப்படியே காட்டாதே
---
கடைசி வரிதான் ஐயா இங்கு மிக முக்கியம். நாகரிகமில்லையாம் அப்படியே காட்டினால். அப்ப 'செய்வது' எந்த நாகரிகம். மூச். செய்வதைப் பற்றிப் பேசுவதும் 'நாகரீகமில்லை'. நாங்கள் நாகரீகமடைந்தவர்கள் இல்லையா?
Post a Comment