Thursday, February 16, 2012

பாவங்களாலானது இந்தப் பாத்திரம்











பாவங்களாலானது இந்தப் பாத்திரம்

எனது இரத்தத்தைச் சுத்தப்படுத்த முடியவில்லை
எனது வலிகளை ஆற்றுப்படுத்தவும் இயலவில்லை
என்னுடைய கண்ணீரைப் போக்கிட விதியில்லை.

எனது நினைவிடம் கேட்கிறேன்,
எல்லாக் கத்திகளையும் எங்கிருந்து
எப்படிப் பெற்றுக்கொண்டேன் என்று...
எல்லா நிராகரிப்புகளையும் அவமதிப்புகளையும்
எங்கிருந்து கற்றுக்கொண்டேன் என்று...

பண்பாட்டுத் தொட்டிலில்
அழுக்குடைகள் நிறைந்திருந்தனவா
வழமைகளின் செல்வழியே
கயமை விருட்சங்கள் நிழல்பரப்பினவா
எங்கிருந்து எங்கிருந்து...?

தாய்மடியில் அன்பின் ஊற்றிருந்தது
தந்தையினிடத்தில் கருணையின் பிரவாக மிருந்தது
நெருப்பிலும் கருணையைக் கண்ட இதயத்தால்
எங்ஙனம் பூவிலே முள்ளை வளர்க்க முடிந்தது?
பேரலைகள் தனிப்படகை அடித்துச் செல்லும் விதி இதுவா?

கடவுளே...!
பாவங்களாலானது இந்தப் பாத்திரம்

எனக்கு நானே அந்நியமாகவும்
எனக்கு நானே விரோதியாகவும்
எனக்கு நானே சந்தேகியாகவும்
என்னை நானே நிந்திப்பதாகவும்
என்னை நானே கழுவேற்றவும்
என்னை நானே நிராகரிக்கவும் கூடிய
பாவங்களாலானது இந்தப் பாத்திரம்

முகத்திற் கருந்திரையும் முதுகிற் பெரும்பாரச் சுமையும்
நாவில் குற்றமும் இதயத்தில் கண்ணீரும்
விழியிற் சிலுவையும் வழியெங்கும் முள்ளும் கொண்ட
விதியைப் பெற்ற பாக்கியவான்
நெருப்பிலே அமுதம் தின்னக் காத்திருக்கிறேன்.

விழிமூட முள்ளேறும் வாழ்வொன்றில்
இன்னும் நிலைத்திருக்க முடியாது
எங்கே எனக்கான சிலுவை?
எங்கே எனக்கான சவுக்கு?

அழுக்குடைய இந்தப் பாத்திரத்தைச் சுத்தப்படுத்த விரும்புகிறேன்
எங்கே எனக்கான கங்கை?
எங்கே எனக்கான நீரூற்று?




00

No comments: