
[பலி ஆடு (கவிதைத் தொகுப்பு), கருணாகரன், வடலி வெளியீடு, 6/13, சுந்தர்தெரு, சென்னை, 600018, 2009 ஏப்ரல், ப 113, இந்திய ரூபா 100.00]
கருணாகரன் ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் தன்னை முப்பது ஆண்டுகட்கு முன்னமே அடையாளங்காட்டிக் கொண்டவர். அவரது உலக நோக்கும் கவிதை பற்றிய பார்வையும் அவரது சமூக, அரசியல், இலக்கிய ஈடுபாடுகளின் விருத்திக்கமைய மாற்றங்கட்கு உட்பட்டு வந்துள்ளன. எனினும் அவருடைய எழுத்தின் முக்கியமான ஒரு பக்கம் ஏதெனின், தமிழ்க் கவிதைக்குரிய மொழி நடையையும் கவிதை கூறும் விதத்தையும் மேலும் உயிரூட்டமானதாக்குதலில் அவர் காட்டி வந்த அக்கறை எனலாம். ஈழத்தமிழ்க் கவிதையில் சோர்வு காணப்படுகிறது என்பது பொதுவான, நியாயமான ஒரு கணிப்பேயாயினும் அந்தச் சோர்வை முறித்துக் கவிதையை முன்கொண்டு செல்ல முயலும் கவிதைகளாக அவரத “பலி ஆடு” தொகுதியிலுள்ள பல கவிதைகளைக் கூறலாம். எனினும் கவிதைகளின் பாடுபொருள் பெருமளவும் போரின் இறுதி ஆண்டுகளினது அவலமாகவே உள்ளது. நூல் வெளியிடப்பட்ட காலம், போரின் குரூரமான ஒரு அழிவுக்குரிய காலப்பகுதி, எனவே கருணாகரன் சித்தரிக்கும் அவலம் இன்று வடபிரதேசத்தை, குறிப்பாக வன்னி மண்ணை, மேவிநிற்கும் அவலத்திற்குக் கட்டியங் கூறி நின்ற ஒன்று.
புலம்பெயர்ந்த மேட்டுக்குடிகள் மட்டுமல்லாமல் உள்ளுர் மேட்டுக்குடிகளின் பிரதான பிரதிநிதிகளான த.தே.கூ. தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் காணவோ கூறவோ தயங்கிய நிலைமைகள் கருணாகரனால் கவிதையாகப் பதியப்படுகின்றன. அவரது கவிதைகள் பொய்யாள நம்பிக்கை எதையும் விதைக்கவில்லை. அதே நேரம் எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து போவதாகவும் கூற இயலாதவாறு அவலத்தையும் நிச்சயமின்மையையும் மனித இருப்பும் உணர்வும் பற்றிய அவதானங்களாகச் சில சமயம் நேரடியாகவும் நிகழ்வுகளுடாகவும் கூறுகின்றன. சில சமயம் உள்மனத்தேடல்களாகப் படிமங்களுடாக அவை உணர்த்தப்படுகின்றன.
1970களின் பிற்பகுதி முதல் 80 களின் முற்பகுதிவரை பலஸ்தீனத்துடன் தன்னை அடையாளப்படுத்த ஆயத்தமாக இருந்த தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரவணைப்பின் கீழ் தன்னை இழந்து போயிற்று. தம்போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுடன் அடையாளப்படுத்தும் போக்கின் மீறல் கருணாகரனின் ஓரிரு கவிதைகளிற் புலனாவது இன்றைய சூழலில் முக்கியமானது. “அகதி படி” என்ற தலைப்பினை கவிதையில்
ஆப்கான் மலைச்சரிவுகள்
பெரும்பள்ளமாகின
அகதிப் போக்கரின்
துயர் நிறை சுமை கூட்டி
பார்த்தேன்
பிதறியோடும் குர்திஸியையும்
பற்றியெரியும் தீயில்
கடுகும் ஈராக்கியையும்
தலையில் காஸாவைத் தூக்கியபடி
போகும் வழியும் நிற்குமிடமும்
தெரியாமற் தடுமாறும்
பாலஸ்தீனியையும்
தெருவான என் முற்றத்தில்
தூக்க மொழுக.
என வருகின்ற வரிகள் இன்னமும் இஸ்ரேலியக் கனவுகளிலிருந்து எழ மறுக்கும் தமிழ்த் தேசியவாதப் பெரும்போக்கினின்று குறிப்பிடத்தக்க விலகலும் எதிர்மறையான நிலைப்பாடுமாகும்.
நம்பிக்கையூட்டும் சொற்களைக் கொண்ட “இசைமொழி” என்ற கவிதையில் சேகுவேராவுடன் கருணாகரன் காணும் தோழமையும் அவ்வாறே ஒரு புதிய திசைக்குக் கட்டியங் கூறுகிறதாயிருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.
கருணாகரனின் உலகநோக்கு குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினின்றும் ஆயுதப் போர் மூலமும் அனைத்தையும் வெல்லலாம் என்ற எண்ணத்தினின்றும் வெகுதூரம் விலகிவிட்டது. எனினும் இன்று நம்முடன் இயலாத பலர் உட்படப் பல நல்ல போராளிகள் இயக்க வேறுபாடின்றிப் போராளிகளாக இயக்கங்களில் இணைந்ததற்கான காரணங்கள் இன்னமும் நீங்கவில்லை என்பதைப் பற்றியும் போராட்டத்துக்கான தேவை பற்றியும் அவர் தெளிவாகவே இருக்கிறார். “அம்மா” என்ற கவிதை சிறப்பான ஒரு உருவகம் அதில்
“எதிலும் வெல்ல முடியாது
தோற்ற போதிலும்
கலக்கமின்றியிருந்த அம்மா
தோற்றதில்லை நீ ஒரு போதும்
தோல்வியின் சினமோ கலக்கத்தின் நிழலோ
படித்ததில்லை உன் அருகிலும்
திசையிலும்.
மகா காலம் நீயம்மா.”
என்ற வரிகள் மட்டுமன்றி முழுக் கவிதையுமே உலகில் சோதனைக்குட்படும் எந்தத் தேசத்திற்கும் சமூகத்திற்கும் வர்க்கத்திற்கும் பொருந்தக் கூடியவை.
இக் கவிதைகள் எழுதப்பட்ட காலத்தில் கருணாகரனின் சிந்தனைகள் விடுதலை பற்றிய கண்ணோட்டம் என்பது அங்கு காண அரிதாகவே உள்ளது. எனினும் மனித விடுதல பற்றிய வேட்கையும் புறநிலை யதார்த்தமான நோக்கும் அவரிடம் உள்ளன. குறுகிய தேசிய வாதத்தின் சுவடுகள் அற்றுப்போன இக்கவிதைகளின் படிமங்கள் மிக வலியன.
கவிதைகளில் உள்ள சில பலவீனங்களைக் குறிப்பிடுவது தகும். சில இலக்கணப் பிசிறுகள் (ஒருமை – பன்மை போன்றவை) போகத் தேவையின்றி வாக்கியங்களின் வினைச்சொல் பல இடங்களில் வரிகளின் நடுவே வந்தமைகிறது. மொழி பெயர்ப்புக் கவிதைகளில் பயனிலை விசேடமை வாக்கிய இறுதியில் வரக் காரணம் ஆங்கிலத்தில் அவ்வாறு வாக்கியங்கள் அமைவது காரணமாக மொழிபெயர்ப்பாளர்கள் பலர் அதைக் கவிஞரின் தெரிவு என நினைக்கின்றனர். தமிழிற் சொற்கள் எந்த வரிசையில் வந்தாலும் எளிய வசனங்களின் பொருள் அதிகம் மாறாது. ஒரு கருத்தின் மீது அழுத்தம் வைக்கும் நோக்கத்துடன் வழமையான வரிசைக் கிரமம் மாறுவது கவிதைக்கு வலிவூட்டலாம். அடிக்கடி அவ்வாறு நிற்குமாயின் அது கவிதையைப் பலவீனப்படுத்தக் கூடும்.
இவ்வாறான குறைபாடுகட்கும் அப்பால் தமிழ்க் கவிதையை அதன் வடிவத்தைவிட முக்கியமாக உள்ளடக்கத்தின் தன்மையில் உயர்த்துவதற்குக் கருணாகரன் முக்கிய பங்களித்துள்ளார்.
கிறிஸ்து என்ற படிமம் பல கவிதைகளில் சிறப்பான முறையில் பயன்பட்டுள்ளத ஆணாதிக்கத்திற்கு எதிரான குரலாயும் அது வெளிப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கது எனவே அத்தகைய ஒரு கவிதையான இனியின் சில வரிகளுடன் இக் குறிப்பை முடித்துக் கொள்கின்றேன்.
காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச் சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ற விருத்தில்
எதிர் பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை
தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர்
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது
பன்னூறு ஆண்டுகாலத்
தோல்வியின் கிழமை பிரதிபலிக்கும்
அந்தவழிகளில்
சகிப்பின் கடைசி கணம்
முடிவடைவதைக் கண்டேன்.
00
[புதிய பூமி - ஓகஸ்ட் 2010]
00
No comments:
Post a Comment