Tuesday, February 28, 2012

கருணாகரனின் ‘பலிஆடு’ - முல்லைஅமுதன்










கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவது கவிதை நூல் ‘பலிஆடு’ ஆகும்.

‘..உன்னை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?…’


கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே ‘வெளிச்சம்’ சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.உலக இலக்கியங்களில் அதி தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள் வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கியபடி எழுதப்பட்டிருக்கிறது. காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல் விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்…குண்டுகள் வீழ்கின்ற வழவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்…எது வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும் மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில் நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும் தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான் வேண்டும்.


அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ‘உண்மையைக் கண்டறியும் போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது பேராறுதலைத் தருகின்றது….’என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

‘என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும்
எடுத்துச் செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை.
ஒளிக்குச் சுவடுகளிலை.
எனது புன்னகை
நிலவினொளியாகட்டும்.’


இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி ‘பலிஆடு’ எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

‘நிலவெறிக்குது வெறுங் காலத்தில்
வீடுகள்
முற்றங்கள்
தோட்டவெளி
தெரு
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல
அமுங்கிக் கிடக்கின்றன..’
கவிஞனின் கவலை
நமக்கும் வலிக்கவே செய்கிறது..
‘நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கேதும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..’


போரினுள் அன்பையும் கருணையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற ஏக்கம்…

‘பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா…’
‘நாடு கடக்க முடியவில்லை
சுற்றி வரக் கடல்
சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்
அலைகளின் நடுவே
துறைமுகத்தில்
நீண்டிருக்கும் பீரங்கிக்கு
படகுகள் இலக்கு.
மிஞ்சிய பாதைகளில்
காவலர் வேடத்தில் கொலையாளிகள்..
குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட
கைதியானேன்…’


ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப் படுவர்.கைதியாக்கப்படுவர்.

‘எனது மொழி என்னைக் கொல்கிறது
மொழியொரு தூக்கு மரம்
என்றறிந்த போது
எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று
எனது குரல்
என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது
விரோதியாக்கி…’


நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்…உலக வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில் நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத அவலம்….கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும் வேகத்தில் மனிதம்…

‘யாருடயதோ சாவுச் செய்தியை
அல்லது கடத்தப்பட்டதான
தகவலைக் கொன்டுபோகக்
காத்திருந்த தெரு…’
….’சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்
விலகிச் சென்றன அப்பால்
கண்ணொழுக..
பாம்புகள் சொற்களினூடே
மிக லாவகமாய் நெளிந்து சென்றன
நடனமொன்றின் லாவகத்தோடு…’


சொற்கள் சுதந்திரமாய் விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

...’வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்கு குழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்….
….. நிலம் அதிர்கிறது.
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தகநெடில்
கபாளத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்…’


உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன் மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் ‘பலிஆடு’ போன்று தொடர்ச்சியாக நூல்களைத் தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை. இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருணாகரனுடன் வளர்கிறது.

113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

00
mullaiamuthan_03@hotmail.co.uk
00

Monday, February 27, 2012

கருணாகரனின் கவிதைகள் பொய்யான நம்பிக்கைகளை விதைக்கவில்லை -சிவா






[பலி ஆடு (கவிதைத் தொகுப்பு), கருணாகரன், வடலி வெளியீடு, 6/13, சுந்தர்தெரு, சென்னை, 600018, 2009 ஏப்ரல், ப 113, இந்திய ரூபா 100.00]





கருணாகரன் ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் தன்னை முப்பது ஆண்டுகட்கு முன்னமே அடையாளங்காட்டிக் கொண்டவர். அவரது உலக நோக்கும் கவிதை பற்றிய பார்வையும் அவரது சமூக, அரசியல், இலக்கிய ஈடுபாடுகளின் விருத்திக்கமைய மாற்றங்கட்கு உட்பட்டு வந்துள்ளன. எனினும் அவருடைய எழுத்தின் முக்கியமான ஒரு பக்கம் ஏதெனின், தமிழ்க் கவிதைக்குரிய மொழி நடையையும் கவிதை கூறும் விதத்தையும் மேலும் உயிரூட்டமானதாக்குதலில் அவர் காட்டி வந்த அக்கறை எனலாம். ஈழத்தமிழ்க் கவிதையில் சோர்வு காணப்படுகிறது என்பது பொதுவான, நியாயமான ஒரு கணிப்பேயாயினும் அந்தச் சோர்வை முறித்துக் கவிதையை முன்கொண்டு செல்ல முயலும் கவிதைகளாக அவரத “பலி ஆடு” தொகுதியிலுள்ள பல கவிதைகளைக் கூறலாம். எனினும் கவிதைகளின் பாடுபொருள் பெருமளவும் போரின் இறுதி ஆண்டுகளினது அவலமாகவே உள்ளது. நூல் வெளியிடப்பட்ட காலம், போரின் குரூரமான ஒரு அழிவுக்குரிய காலப்பகுதி, எனவே கருணாகரன் சித்தரிக்கும் அவலம் இன்று வடபிரதேசத்தை, குறிப்பாக வன்னி மண்ணை, மேவிநிற்கும் அவலத்திற்குக் கட்டியங் கூறி நின்ற ஒன்று.


புலம்பெயர்ந்த மேட்டுக்குடிகள் மட்டுமல்லாமல் உள்ளுர் மேட்டுக்குடிகளின் பிரதான பிரதிநிதிகளான த.தே.கூ. தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் காணவோ கூறவோ தயங்கிய நிலைமைகள் கருணாகரனால் கவிதையாகப் பதியப்படுகின்றன. அவரது கவிதைகள் பொய்யாள நம்பிக்கை எதையும் விதைக்கவில்லை. அதே நேரம் எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து போவதாகவும் கூற இயலாதவாறு அவலத்தையும் நிச்சயமின்மையையும் மனித இருப்பும் உணர்வும் பற்றிய அவதானங்களாகச் சில சமயம் நேரடியாகவும் நிகழ்வுகளுடாகவும் கூறுகின்றன. சில சமயம் உள்மனத்தேடல்களாகப் படிமங்களுடாக அவை உணர்த்தப்படுகின்றன.

1970களின் பிற்பகுதி முதல் 80 களின் முற்பகுதிவரை பலஸ்தீனத்துடன் தன்னை அடையாளப்படுத்த ஆயத்தமாக இருந்த தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரவணைப்பின் கீழ் தன்னை இழந்து போயிற்று. தம்போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுடன் அடையாளப்படுத்தும் போக்கின் மீறல் கருணாகரனின் ஓரிரு கவிதைகளிற் புலனாவது இன்றைய சூழலில் முக்கியமானது. “அகதி படி” என்ற தலைப்பினை கவிதையில்

ஆப்கான் மலைச்சரிவுகள்
பெரும்பள்ளமாகின
அகதிப் போக்கரின்
துயர் நிறை சுமை கூட்டி

பார்த்தேன்
பிதறியோடும் குர்திஸியையும்
பற்றியெரியும் தீயில்
கடுகும் ஈராக்கியையும்
தலையில் காஸாவைத் தூக்கியபடி
போகும் வழியும் நிற்குமிடமும்
தெரியாமற் தடுமாறும்
பாலஸ்தீனியையும்
தெருவான என் முற்றத்தில்
தூக்க மொழுக.

என வருகின்ற வரிகள் இன்னமும் இஸ்ரேலியக் கனவுகளிலிருந்து எழ மறுக்கும் தமிழ்த் தேசியவாதப் பெரும்போக்கினின்று குறிப்பிடத்தக்க விலகலும் எதிர்மறையான நிலைப்பாடுமாகும்.


நம்பிக்கையூட்டும் சொற்களைக் கொண்ட “இசைமொழி” என்ற கவிதையில் சேகுவேராவுடன் கருணாகரன் காணும் தோழமையும் அவ்வாறே ஒரு புதிய திசைக்குக் கட்டியங் கூறுகிறதாயிருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

கருணாகரனின் உலகநோக்கு குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினின்றும் ஆயுதப் போர் மூலமும் அனைத்தையும் வெல்லலாம் என்ற எண்ணத்தினின்றும் வெகுதூரம் விலகிவிட்டது. எனினும் இன்று நம்முடன் இயலாத பலர் உட்படப் பல நல்ல போராளிகள் இயக்க வேறுபாடின்றிப் போராளிகளாக இயக்கங்களில் இணைந்ததற்கான காரணங்கள் இன்னமும் நீங்கவில்லை என்பதைப் பற்றியும் போராட்டத்துக்கான தேவை பற்றியும் அவர் தெளிவாகவே இருக்கிறார். “அம்மா” என்ற கவிதை சிறப்பான ஒரு உருவகம் அதில்

“எதிலும் வெல்ல முடியாது
தோற்ற போதிலும்
கலக்கமின்றியிருந்த அம்மா
தோற்றதில்லை நீ ஒரு போதும்

தோல்வியின் சினமோ கலக்கத்தின் நிழலோ
படித்ததில்லை உன் அருகிலும்
திசையிலும்.

மகா காலம் நீயம்மா.”

என்ற வரிகள் மட்டுமன்றி முழுக் கவிதையுமே உலகில் சோதனைக்குட்படும் எந்தத் தேசத்திற்கும் சமூகத்திற்கும் வர்க்கத்திற்கும் பொருந்தக் கூடியவை.

இக் கவிதைகள் எழுதப்பட்ட காலத்தில் கருணாகரனின் சிந்தனைகள் விடுதலை பற்றிய கண்ணோட்டம் என்பது அங்கு காண அரிதாகவே உள்ளது. எனினும் மனித விடுதல பற்றிய வேட்கையும் புறநிலை யதார்த்தமான நோக்கும் அவரிடம் உள்ளன. குறுகிய தேசிய வாதத்தின் சுவடுகள் அற்றுப்போன இக்கவிதைகளின் படிமங்கள் மிக வலியன.

கவிதைகளில் உள்ள சில பலவீனங்களைக் குறிப்பிடுவது தகும். சில இலக்கணப் பிசிறுகள் (ஒருமை – பன்மை போன்றவை) போகத் தேவையின்றி வாக்கியங்களின் வினைச்சொல் பல இடங்களில் வரிகளின் நடுவே வந்தமைகிறது. மொழி பெயர்ப்புக் கவிதைகளில் பயனிலை விசேடமை வாக்கிய இறுதியில் வரக் காரணம் ஆங்கிலத்தில் அவ்வாறு வாக்கியங்கள் அமைவது காரணமாக மொழிபெயர்ப்பாளர்கள் பலர் அதைக் கவிஞரின் தெரிவு என நினைக்கின்றனர். தமிழிற் சொற்கள் எந்த வரிசையில் வந்தாலும் எளிய வசனங்களின் பொருள் அதிகம் மாறாது. ஒரு கருத்தின் மீது அழுத்தம் வைக்கும் நோக்கத்துடன் வழமையான வரிசைக் கிரமம் மாறுவது கவிதைக்கு வலிவூட்டலாம். அடிக்கடி அவ்வாறு நிற்குமாயின் அது கவிதையைப் பலவீனப்படுத்தக் கூடும்.

இவ்வாறான குறைபாடுகட்கும் அப்பால் தமிழ்க் கவிதையை அதன் வடிவத்தைவிட முக்கியமாக உள்ளடக்கத்தின் தன்மையில் உயர்த்துவதற்குக் கருணாகரன் முக்கிய பங்களித்துள்ளார்.

கிறிஸ்து என்ற படிமம் பல கவிதைகளில் சிறப்பான முறையில் பயன்பட்டுள்ளத ஆணாதிக்கத்திற்கு எதிரான குரலாயும் அது வெளிப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கது எனவே அத்தகைய ஒரு கவிதையான இனியின் சில வரிகளுடன் இக் குறிப்பை முடித்துக் கொள்கின்றேன்.

காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச் சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ற விருத்தில்
எதிர் பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை

தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர்
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது

பன்னூறு ஆண்டுகாலத்
தோல்வியின் கிழமை பிரதிபலிக்கும்
அந்தவழிகளில்
சகிப்பின் கடைசி கணம்
முடிவடைவதைக் கண்டேன்.

00

[புதிய பூமி - ஓகஸ்ட் 2010]

00

Friday, February 24, 2012

யாரும் திரும்பவில்லை – ஜெயமோகன்












ஒரு பெரும் கனவு எழுந்து அது நரம்புகளில் புதிய ரத்தமாக ஓடிய நாட்களில், இடைவிடாது இலட்சியபுருஷர்களை உருவாக்கிக்கொண்டிருந்த பிராயத்தில் நான் கருணாகரனின் கவிதைகளை படிக்கவில்லை. அப்போதைய கவிஞர்கள் என்றால் சு.வில்வரத்தினமும் சேரனும் வ.ஐ.ச ஜெயபாலனும்தான்.

அது சகோதரப்போராட்டமாகச் சிதைந்து, வெறும்போராக உருமாறி, ரத்தம் மட்டுமேயானதாக மாறிவிட்ட பின்னர் வரலாறு குறித்த மாற்று நோக்குகள் உருவான வயதில் அவரது கவிதைகள் வாசிக்கக் கிடைத்தன. ஆரம்பத்தில் உதிரிக்கவிதைகளாக. பின்னர் அவரது தொடர்பு ஏற்பட்டது. தொடர்ச்சியான கடிதங்கள் வழியாக உரையாடிக்கொண்டே இருந்தோம். நாங்கள் நேரில் கண்டதேயில்லை என்றாலும் நெருக்கமான ஒரு நட்பு உருவாகி விட்டிருந்தது. என் குடும்ப ஆல்பத்தில் இன்னும் அவரது குடும்பப்படம் இருக்கிறது.

என்னுடைய அவநம்பிக்கைகளை, கசப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. என் வரலாற்றுணர்வை அவர் அங்கீகரிக்கவுமில்லை. அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். போராட்டத்தின் நடுவே இருந்தார். இழப்புகளுக்கும் மேலும் இழப்புகளுக்கும் தயாராக இருந்தார். ஒரு கவிஞனாக ஒவ்வொரு கணமும் வன்முறையை வெறுத்தபடி ஓர் அறிவுஜீவியாக அதை நியாயப்படுத்தியபடி அங்கே இருந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பின்பு திருவையாறிலிருந்து இயக்கச்சியிலிருந்து வன்னியிலிருந்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்

ஆழிபேரலை அடித்து அடங்குவதுபோல அந்தக் காலகட்டம் பின்வாங்குவதை இப்போது கண்டுகொண்டிருக்கிறேன். இனி மண்ணுடன் கலந்த பிணங்கள், இடிபாடுகள், அழுகுரல்கள் மட்டுமே மிச்சம். நினைவுகளும் கொடுங்கனவுகளும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு.நேற்றும் முன்தினமும் செயவதறியாமல் பழைய கடிதங்களையே படித்துக்கொண்டிருந்தேன். மங்கிய நீலவண்ண உறைகளில் நுணுக்கி எழுதப்பட்ட வரிகள். எத்தனை கனவுகள், ஆவேசங்கள், இலட்சியங்கள், நியாயப்படுத்தல்கள், தர்க்கங்கள், மீண்டும் நியாயப்படுத்தல்கள், விவாதங்கள், மீண்டும் நியாயப்படுத்தல்கள்…. தங்கள் மனசாட்சியைத்தான் ஓயாமல் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்களா? தொலைதூர நாடொன்றில் வாழும் ஓர் எழுத்தாளனை அம்மனசாட்சியின் ஆடிப்பிம்பமாக எண்ணிக்கொண்டார்களா?

அவற்றை எழுதியவர்களில் அனேகமாக எவருமே உயிருடனில்லை. நேற்றிரவு புத்தகங்களில், இணையத்தில், சேகரிப்புகளில் பழைய புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன். கணிசமானவை நணபர் தமிழினி வசந்தகுமார் எடுத்தவை. பல முகங்களை நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்க்கிறேன். இணைந்து எழுந்தவர்கள். களத்தில் பட்டவர்கள். துப்பாக்கிகளை தங்களுக்குள்ளேயே திருப்பிக்கொண்டு காலத்தில் மறைந்தவர்கள். அந்த ஆழிப்பேரலை பல்லாயிரம் மனிதமுகங்களினால் ஆனதாக இருந்தது.

அனைவருமே இப்போது ஒரே இடத்தில் சென்று படிந்திருக்கிறார்கள். வரலாறு உருவாக்கும் மாபெரும் புகைப்பட ஆல்பம் ஒன்றில். இனி மெல்லமெல்ல செங்காவி நிறத்தில் நரைத்து பின்னுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். கண்களும் புன்னகைகளும் வெறும் கறைகளாக மாறும். மானுடம் கற்றுக்கொண்ட மாபெரும் கலை மறதிதான். அந்த திறனை வைத்துத்தான் அது அனைத்தையும் தாங்கிக்கொண்டு அடுத்த காலகட்டத்துக்கு நகர்கிறது.

குளச்சலில் நான்கு குழந்தைகளை கொன்ற ஆழிபேரலையின் பெயரையே தன் புதிய மகளுக்கு வைத்திருக்கும் ஓர் அன்னையின் கதையை வாசித்தேன். தன் கையில் அவள் மரணப்பேருருவமாக வந்த ‘சுனாமி’யை ஏந்திக் கொஞ்ச முடியும். குட்டிச்சுனாமியை தன் முற்றத்தில் விளையாட விடமுடியும். அதன்மூலம் அவள் அதை முழுமையாக வெல்லவும் முடியும். மானுட மனத்தின் சாத்தியங்கள் எல்லையற்றவை.

என் நண்பர்களில் கருணாகரன் மட்டுமே இப்போதும் இருக்கிறார், யாழ்ப்பாணமுகாம் ஒன்றில். அதை ஒரு வரமாகவா இல்லை சாபமாக எடுத்துக்கொள்கிறார்? மனிதனுக்கு எந்நிலையிலும் வாழ்தலே இனிது. வாழ்தல் ஒன்றே மெல்ல மெல்ல வாழ்தலை நியாயப்படுத்திவிடக்கூடும். அவரது கவிதைகளின் தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசித்தபடி ‘ஆம் அவர் இருக்கிறார். அவர் மட்டுமாவது இருக்கிறார்’ என்று சொல்லிக்கொள்கிறேன்.

இன்றுகாலை கருணாகரனிடம் தொலைபேசியில் பேசினேன். சென்ற ஐந்துநாட்களாக அழுத்தியிருந்த கடும் மனமூட்டம் கலைந்தது. முகாமில் நலமாகவே இருக்கிறார்.நமக்கு முற்றிலும் அன்னியமான ஒரு கொடுங்கனவிலிருந்து மீண்டிருக்கிறார்.

கருணாகரனின் முதல் தொகுப்பு யாழ்ப்பாணத்தில் எட்டுவருடங்களுக்கு முன் வெளிவந்தது. இப்போது இரண்டாவது தொகுப்பை வடலி வெளியிட்டிருக்கிறது. அவர் வன்னியில் இருந்த நாட்களில் இணையம் மூலம் பெறப்பட்ட அவை அவரது அறிதல் இல்லாமலேயே அவர் நண்பர் த.அகிலன் முயற்சியால் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.

‘யாரும் திரும்பவில்லை
நினைவுகளை புதைக்கமுடியாத சகதியில்
கிழிபட்டுக் கிடந்ததென் பறவை’

என்று தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் கவிஞன்

‘நானோ
உள்ளுமில்லை வெளியுமில்லை
கதவிடுக்கில்’

என்று சொல்லி மௌனமாகிறான்.

மீண்டும் மீண்டும் இக்கவிதைகள் அழிவின்முன் திகைத்து நிற்கும் கவிமனதின் சித்திரத்தை அளிக்கின்றன. இலக்கற்ற அழிவு. அழிவில் வினோத இன்பமொன்றைக் கண்டுகொண்ட மனங்கள் கொண்டாடும் அழிவு. அன்றாடக் கொலைகள், அழுத்தமிழந்துபோன குருதி, எவரும் கேட்காத கதறல்கள், மீட்பற்ற கைவிடப்படுதல்கள்…நுட்பங்களை நோக்கிச் செல்லாத நேரடியான அப்பட்டமான வரிகள் இவை. பலசமயம் புலம்பல்கள். சிலசமயம் மூர்க்கமான ஆவேசங்கள்.

…….
எண்ணித்தீராத நட்சத்திரங்களில்
எப்போதுமிருக்கிறது
நம்பிக்கையும் துரோகத்தனமும்
வானத்தைத் தின்கிற
வன்மமும்
எல்லோராலும் கைவிடப்பட்ட
விருந்தாளிகள்
புறப்பட்டு போனார்கள்
எதுவும் சொல்வதற்கின்றி
ஓரிரவில்
போர் தன் விதியை தானே எழுதிச்செல்ல
நீர் தளும்பிய கண்களில்
யார் விடுவது தூண்டிலை?

[முள்]

கருணாகரனின் இக்கவிதைகளை போரழிவு குறித்து எழுதப்பட்ட பலநூறு ரத்தம் தோய்ந்த வரிகளில் இருந்து விலக்கி நிறுத்துவது அவரில் அவ்வப்போது மட்டும் கூடும் ஆழமான கவித்துவத்தின் மௌனம். வரலாற்று அலைகளினூடாக ரத்தம் பெருகிச்செல்லும் காட்சியைக் கண்டபிரமிப்பிலிருந்து எப்போதாவது மீளும்போது அவரது குரல் தனக்குள் அடங்கி அழுத்தமான சுயதரிசனமாக ஆகிறது

தகிக்கும் கூடு
காயங்களிலிருந்து
வெளியேறிய பறவை
தன்னுடன் எடுத்துச்செல்கிறது
தன் அழகிய மலரை.
தன்னுடைய பெருந்தீயை
தன் கடலை
தன் வெளியை.
அதனிடமில்லை
மீண்டும் கூடு திரும்பும்
நினைவின் நிழல்.
அது செல்லும் வழியில்
தன் சிறகுகளையும்
கொடுத்துச்சென்றது காற்றிடம்.
வலிகளைக் கடந்து போகும் பயணம்
வெறுமையை
நிரப்பிவிடுகிறது கூட்டினுள்.
பறவையின் ஆறாச்சூட்டில்
தவிக்கிறது கூடு தனியே.


00

Sunday, February 19, 2012

யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்று












ஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

இடம், பொருள், நிலை எதுவும் நிரந்தரமற்றது என்பதை யுத்தத்தின்போது தெளிவாகவே பார்க்கலாம். எல்லா அர்த்தங்களும் அர்த்தமின்மை என்றாகிக் கொண்டிருப்பது யுத்தத்தின்போதே. எல்லா விழுமியங்களும் சிதிலமாகிவிடும் அப்போது.

நிறங்கள் உதிரும் விதியைத் தன்னுடைய ஆயுள்ரேகையாகக் கொண்டது யுத்தம்.

அது வன்னியில் இறுதி யுத்தம் ஆரம்பமாகிய நாட்கள். 2007க்குப் பிந்திய காலம்.

யுத்த அரங்கு விரிய விரிய இழப்புகளும் சேதங்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தன. போராளிகள் தொடர்ச்சியாகச் சாவினைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார்கள். களத்தில் விழுகின்ற போராளிகளின் மாவீரர் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

எந்த நாளும் எந்தத் தெருவிலும் சோக கீதம் கேட்டுக்கொண்டேயிருக்கும். யுத்தம் தீவிரமடையத் தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலம் கீழே சோக கீதமும் மேலே ‘வண்டு’ என்று சனங்கள் ‘கிலி’யுடன் சொல்கிற உளவு விமானத்தின் இரைச்சலுமே எங்களின் காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தன. பிறகு சோக கீதத்தைப்போடுவதற்கான நிலைமை இல்லாமற் போய்விட்டது.

ஆனால், வேவு விமானத்தின் இரைச்சல் நிற்கவேயில்லை. வேவு விமானங்களின் உபயத்தை அமெரிக்கா அல்லவா செய்திருந்தது! அதனால், அந்த ஆளில்லா உளவு விமானங்கள் ஒன்று மாறி ஒன்றாக எந்த நேரமும் வானிலே நின்று நிலத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. வேவு விமானம் நிற்குந்தோறும் கள நிலைமை மோசமாகிக் கொண்டேயிருந்தது. (களநிலைமையை மோசமாக்கவதே அவற்றின் நோக்கம்).

கள நிலைமை மோசமாக மோசமாக மாவீரர் பட்டியலும் நீண்டு கொண்டேயிருந்தது. மாவீரர் பட்டியல் நீள நீள துயிலுமில்லங்களும் பெருத்துக் கொண்டே போயின. ‘வன்னியே துயிலுமில்லங்களால் நிறையப்போகிறதோ?’ என்று அந்த நாட்களில் ஒரு நண்பர் கேட்டதே இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

அப்படித் துயிலுமில்லங்கள் பெருத்துக் கொண்டு போகிறதை நினைத்தோ என்னவோ ஒரு வித்தியாசமான முடிவைப் புலிகள் எடுத்திருந்தனர். மாவீரர் பட்டியலின் முடிவற்ற நீட்சியை மதிப்பிட்டார்களோ அல்லது சண்டையின் தீவிரம் என்னமாதிரியான நிலைமைகளையெல்லாம் உருவாக்கப்போகிறது என்று கருதினார்களோ தெரியாது, ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து யாரோ ஒரு தீர்க்கதரிசியின் ஆலோசனையின்படி ஒரு வித்தியாசமான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.

இதனால் விசுவமடு, முள்ளியவளை, கிளிநொச்சி, மல்லாவி – தேறாங்கண்டல் போன்ற இடங்களில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அருகில் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றித் திடீரென அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டன. அந்த அறிவிப்புப் பலகைகளில் ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற வாசகம் மிகத்துலக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பல ஏக்கர் விஸ்தரணமான நிலப்பரப்பில் இந்தத் துயிலும் இல்லங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கல்லறைகளால் நிரம்பியிருந்தன. மேலும் அங்கே புதிய கல்லறைகள் உருவாகிக்கொண்டும் இருந்தன. இதைவிட எப்போதும் ஒரு பத்துப் பதினைந்து குழிகள் (விதைகுழிகள் என்று இந்தக் குழிகளை வன்னியில் அழைப்பது வழக்கம்.

ஏனெனில் ஒரு போராளி புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறார் என்ற உணர்வின் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுவதுண்டு) வெட்டப்பட்டிருக்கும்.என்னதானிருந்தாலும் இந்தக் குழிகளைப் பார்க்கவே மனம் பதைக்கும்@ உறுத்தும். யாருடையதோ மரணத்தை எதிர்பார்த்து, நிச்சயமாக எதிர்பார்த்து இந்தக் குழிகள் வெட்டப்பட்டிருக்கின்றன.

இப்படி ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் குழிகள் வெட்டப்பட்டேயிருக்கும். இதற்காக என ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் பணியாட்களும் தயார் நிலையில் இருந்தார்கள். ஈரமண் காயாத சவக்குழிகளால் நிரம்பிக்கொண்டேயிருந்தன ஒவ்வொரு துயிலுமில்லங்களும். (இன்னொரு பக்கத்தில் பதுங்கு குழிகள்). இந்தக் குழிகளைப் பார்க்கின்ற போராளிகளுடைய பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும்? என நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. சில நண்பர்களும் இதைப்பற்றிப் பல சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய கவலைகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், போரின் போக்கின்படி அங்கே, அப்படிப் புதைகுழிகளை (விதைகுழிகளை) வெட்டி வைத்திருப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலையே. ஆகவே, இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாலோ என்னவோ, துயிலும் இல்லங்களின் இடவசதி குறித்த முன்னெச்சரிக்கையின்படி அவர்கள் இந்தப் புதிய எல்லைகளை விரிவாக்கம் செய்வதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.

எனவேதான், ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்புப் பலகைகள் நாட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த அறிவிப்புப் பலகையானது, அங்கேயுள்ள போராளிகளுடைய மனதிலும் பெற்றோருடைய உளநிலையிலும் மிகப் பாதகமான தாக்கங்களையெல்லாம் ஏற்படுத்தும் என யாரும் சிந்தித்ததாக இல்லை. இந்தக் குழிகளைப் பார்க்கும்போது, முடிவற்றதாக நீண்டு செல்லப்போகின்றன கல்லறைகள்.

கல்லறைகளின் தொகை பெருகப் பெருக துயிலும் இல்லங்களின் விரிவும் கூடப்போகிறது. இதெல்லாம் கூடக்கூட மரணமும் பெருகும். மரணம் பெரும் ஒரு சமூகத்தின் நிலை அல்லது ஒரு சூழலிலின் நிலைமை மோசமாகும் என்பதெல்லாம் தெளிவாகவே எவருக்கும் தெரியும். இவையெல்லாம் நிச்சயமாக மக்களின் உளநிலையில் எதிர்மறையான அம்சங்களையே ஏற்படுத்தும். ஏன் போராளிகளின் உளநிலையிலும்கூட இது பெருந்தாக்கங்களை ஏற்படுத்தும்.

என்னதான் சாவுக்கஞ்சாத – சாவை விரும்பி ஏற்கின்ற மனநிலையை பெரும்பாலான போராளிகள் கொண்டிருந்தாலும் இந்தத் துயிலும் இல்லங்களின் விரிவும் கல்லறைகளின் பெருக்கமும் நிச்சயமாக சிந்திக்கும் போராளிகளிடத்தில் கவலைகளையும் வெறுமையையுமே உருவாக்கும். இதைச் சில போராளிகளே கூறியுமிருக்கிறார்கள்.

ஆனால், இயக்கத்தின் பொதுத்தீர்மானங்களுக்கு அப்பால் அவர்களால் எதையும் செய்ய முடியாது. ‘இயக்க உறுப்பினர்’ என்ற அடையாளம் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அமைப்புகளில் அல்லது அமைப்பைச் சார்ந்து இயங்கும்போது இத்தகைய கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் ஏற்படுவது இயல்பு. அமைப்பின் விதிக்கு அத்தனை வலிமையுண்டு. அது தனி மனிதர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளி விடும். சிலவேளை அவற்றுக்கு இடமேயில்லை என்று ஆக்கி விடுவதும் உண்டு.

ஆகவே மாவீர் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றிய இந்த அறிவிப்பலகைகள் பகிரங்கமாகவே – அங்குள்ள முக்கியமான வீதியோரங்களில் பளிச்செனக் கண்களுக்குத் தெரியக்கூடிய மாதிரி நாட்டப்பட்டிருந்தும் இதைக்குறித்து யாரும் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவித்த மாதிரித் தெரியவில்லை.

இதைப் பார்த்த நானும் இன்னொரு நண்பருமாக இதைப் பற்றி, புலிகளின் மேலிடத்திலுள்ள உரையாடக்கூடிய நிலையில் இருந்தவர்களுடன்; பேசினோம். ‘இப்படித் துயிலும் இல்லங்களுக்கான காணிகளை மேலதிகமாக ஒதுக்கும்போது அது போராளிகளின் சாவு வீதத்தைக் கூட்டுவதாகவே காட்டுகிறது. உண்மையில் ஒரு போராட்டத்தின் வளர்ச்சியில் சாவு வீதம் குறைந்து கொண்டே செல்லும் இழப்புகள் அப்படிக் குறைந்தே செல்ல வேணும். அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் செயலின் முறைகளும் இழப்புகளையும் சேதங்களையும் நிச்சயமாகக் குறைக்கும். அப்படியல்லாமல் அவை அதிகரித்திருக்குமானால், நிச்சயமாக போராட்டம் நெருக்கடியை நோக்கி, வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றே அர்த்தப்படும்’ என்றோம்.

மேலும், ‘புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் புதிய நுட்பங்களையும் உச்சமான தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்துகிறவர்கள். புதிய வகையான – வலுக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் என்ற அபிப்பிராயம் பொதுவாகவே உண்டு. ஆகவே, நிச்சயமாக இந்த நிலையில் போராளிகளின் இழப்பு வீதம் குறைவடையவே வாய்ப்புண்டு. இதையெல்லாம் கடந்தும் மிகச் சாதாரணமாக தினமும் பல போராளிகள் சாவடைவதென்பது நிலைமையைக் குறித்துக் கவலைப்படும்படியாகவே இருக்குமல்லவா?’ என்றும் கேட்டோம்.

இதைக் கேட்ட அவர்கள், இதைப் பற்றி மேலிடத்துக்கு எழுதும்படி சொன்னார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் சொன்னாலும் நாம் நினைத்த மாத்திரத்தில், நினைத்த மாதிரி எழுதிவிடமுடியாது. அப்படி எழுதுவதை நாங்கள் விரும்பவும் இல்லை.

ஏனென்றால், புலிகளைப் பொறுத்தவரையில் எந்தமாதிரியான விசயத்தைப் பற்றி அவர்களுடன் பேசுவதானாலும் அதை அவர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள், எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்ற பிரச்சினை ஒன்றுள்ளது. எதையும் மாறி விளங்கினால் அது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும்.

அதிலும் சில விசயங்களில் அவர்கள் கடுமையான ‘சென்ரி மென்ற்’ உள்ளவர்கள். குறிப்பாக இந்த மாதிரி போராளிகள், மாவீரர்கள் போன்ற விசயங்களில் இந்தச் ‘சென்ரிமென்ற்’ தனம் இன்னும் அதிகம். அதை விட யுத்த நிலைமையானது பதற்றத்தை வேறு அதிகரித்திருக்கும் சூழலில் இதைக் குறித்துப் பேசுவது என்பது சற்று யோசிக்க வேண்டியது.

ஆகவே, நாங்கள் இதைக்குறித்து மேலே தெரிவிக்கலாமா இல்லையா என்ற குழப்பத்துக்குள்ளானோம். எனினும் போய்வரும்போது இந்த அறிவிப்புகள் மனதுக்குள் பெரும் நெருக்கடியையே தந்தன. ஆனால், நாங்கள் உரையாடிய விசயம் எப்படியோ பரவலாகி அது உரிய இடங்களுக்குச் சென்று விட்டது. என்றாலும் இன்னும் அது தீர்மானிக்கும் சக்திமிக்க பகுதியை சென்றடையவில்லை. ‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’ என்பதே பலருக்குமான பிரச்சினை. அதனால்தான் இதைக்குறித்து எங்களை எழுதித்தருமாறு கேட்டனர். தாங்களே பிரச்சினையை நேரடியாகக் கதைக்கும்போது அது வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டால்...? என்ற அச்சம் அவர்களுக்கும் இருந்தது.

எனவே குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிக் கதைப்பவர்களே எழுதித்தந்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லோரும் இருந்தனர். ஆனாலும் இதையெல்லாம் கடந்து மேலிடத்துக்கு இந்த விசயம் போய்ச் சேர்ந்து விட்டது.

விளைவு, போடப்பட்டிருந்த அந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டன. என்றபோதும் கல்லறைகள் கூடிக்கொண்டேயிருந்தன. இதேவேளை சில துயிலுமில்லங்கள் கைவிடப்பட்டன. அல்லது படையினரிடம் அவை வீழ்ச்சியடைந்தன. அவற்றைப் படையினர் கைப்பற்றி வந்தனர். பதிலாகப் புதிய துயிலும் இல்லங்கள் முளைக்கத் தொடங்கின. புதுக்குடியிருப்பில் இரணப்பாலை, தேவிபுரம், மாத்தளன் - பச்சைப் புல்வெளி, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என இறுதிவரையில் துயிலுமில்லங்கள் வெவ்வேறு இடங்களில் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேயிருந்தன. தென்னந்தோப்பில், வெளிகளில், ஒதுக்குப் புறக்காட்டில், பனங்கூடல்களின் நடுவே, கடற்கரையில் என எல்லா இடங்களிலும் போராளிகள் புதைக்கவோ விதைக்கவோ பட்டனர். ஆனால், இறுதி நாட்களில் சாவடைந்த போராளிகளுக்கான அஞ்சலிகளோ வீர வணக்க நிகழ்வுகளோ நடக்கவில்லை. அப்படியெல்லாம் நடக்கக்கூடிய சூழல் அங்கேயில்லை. இறுதிக்கணத்திலே ஒலிக்கப்படும் மாவீரர் வணக்கப்பாடல் நிறுத்தப்பட்டுப் பல நாட்களாகி விட்டன. மரியாதை வேட்டுகள் கூடத் தீர்க்கப்படவில்லை. கூடவே நாலு போராளிகள் கூட இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருந்தது. யாரெல்லாம் களத்திலே வீழ்கின்றார்கள் என்றே தெரியாத – அதை அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இப்படியே இருந்த நிலைமை இறுதிவரையில் மாறவேயில்லை. மேலும் மேலும் அது ஒழுங்கமைக்க முடியாதளவுக்கு நிலைகுலைந்தே சென்றது. அந்த நண்பர் முன்னர் சொன்னதைப்போல இறுதியில் வன்னியிலே சனங்கள் இருந்த வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் பெரிய துயிலுமில்லங்களாக – புதைகுழிகளாகவே மாறின.

ஒரு மாபெரும் புதைமேடாக அந்தப் பகுதியில் ஏராளம் மனிதர்கள் பிணங்களாகினர். அதில் புலிகள், படையினர், சனங்கள் என்ற எல்லா வகையும் இருந்தது. பலி. பலி. பலி. பலியைத் தவிர வேறெதுவும் அங்கே அப்போதிருக்கவில்லை.

இறுதி நிகழ்ச்சிகள் இப்படியானதொரு பலியரங்கில்தான் முடியும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அப்படியாகவே அது நடந்து முடிந்தது.

எல்லாம் முடிந்து விட்டன.

இப்போது நினைத்துப் பார்த்தால், புலிகளின் முதற்போராளியாக லெப்ரினன்ற் சங்கர் என்ற சத்தியநாதன் 1982 இல் வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், வன்னியின் கடைசிப்போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்?

அவர் எப்போது வீழ்ந்தார்?

எங்கே வீழ்ந்தார்?

எப்படி வீழ்ந்தார்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமுள்ளது பதில்?

உண்மையில் வரலாறு விசித்திரமான ஒரு பயணிதான்



00

நன்றி - உதயம்

00

Thursday, February 16, 2012

பாவங்களாலானது இந்தப் பாத்திரம்











பாவங்களாலானது இந்தப் பாத்திரம்

எனது இரத்தத்தைச் சுத்தப்படுத்த முடியவில்லை
எனது வலிகளை ஆற்றுப்படுத்தவும் இயலவில்லை
என்னுடைய கண்ணீரைப் போக்கிட விதியில்லை.

எனது நினைவிடம் கேட்கிறேன்,
எல்லாக் கத்திகளையும் எங்கிருந்து
எப்படிப் பெற்றுக்கொண்டேன் என்று...
எல்லா நிராகரிப்புகளையும் அவமதிப்புகளையும்
எங்கிருந்து கற்றுக்கொண்டேன் என்று...

பண்பாட்டுத் தொட்டிலில்
அழுக்குடைகள் நிறைந்திருந்தனவா
வழமைகளின் செல்வழியே
கயமை விருட்சங்கள் நிழல்பரப்பினவா
எங்கிருந்து எங்கிருந்து...?

தாய்மடியில் அன்பின் ஊற்றிருந்தது
தந்தையினிடத்தில் கருணையின் பிரவாக மிருந்தது
நெருப்பிலும் கருணையைக் கண்ட இதயத்தால்
எங்ஙனம் பூவிலே முள்ளை வளர்க்க முடிந்தது?
பேரலைகள் தனிப்படகை அடித்துச் செல்லும் விதி இதுவா?

கடவுளே...!
பாவங்களாலானது இந்தப் பாத்திரம்

எனக்கு நானே அந்நியமாகவும்
எனக்கு நானே விரோதியாகவும்
எனக்கு நானே சந்தேகியாகவும்
என்னை நானே நிந்திப்பதாகவும்
என்னை நானே கழுவேற்றவும்
என்னை நானே நிராகரிக்கவும் கூடிய
பாவங்களாலானது இந்தப் பாத்திரம்

முகத்திற் கருந்திரையும் முதுகிற் பெரும்பாரச் சுமையும்
நாவில் குற்றமும் இதயத்தில் கண்ணீரும்
விழியிற் சிலுவையும் வழியெங்கும் முள்ளும் கொண்ட
விதியைப் பெற்ற பாக்கியவான்
நெருப்பிலே அமுதம் தின்னக் காத்திருக்கிறேன்.

விழிமூட முள்ளேறும் வாழ்வொன்றில்
இன்னும் நிலைத்திருக்க முடியாது
எங்கே எனக்கான சிலுவை?
எங்கே எனக்கான சவுக்கு?

அழுக்குடைய இந்தப் பாத்திரத்தைச் சுத்தப்படுத்த விரும்புகிறேன்
எங்கே எனக்கான கங்கை?
எங்கே எனக்கான நீரூற்று?




00

Friday, February 10, 2012

பல்லக்கு













ரஜனிகாந் முப்பது பேரை
வெழுத்து வாங்குகிறார்
சிவாஜி வெற்றிப்படமா தோல்விப்படமா
யாருக்குத் தெரியும்
பிம்பத்துக்கு வெளியே
ரஜனி
சந்நியாசியா அரசியல்வாதியா
யாருக்குத் தெரியும்
அவரே அறிவாரா?


அடையாளங்காணப்படாத பிணத்தின் அருகில்
பாணுக்கு கியூவில் நிற்கிறேன்
இலையான்கள் பிணத்திலும் மொய்க்கின்றன
என்னிலும் மொய்க்கின்றன
பாணிலும் மொய்க்கின்றன

தேவனே
அந்தோனியார் கோவிலில்
பின்னேரங்களில்
செபம் சொல்ல வரும்
திரேசம்மாக்கிழவி இரண்டு நாளாக வரவில்லையே
அவளுடைய பேரனை
யார் கடத்திச் சென்றது?
அவள் ஏன் தேவனிடம் முறையிடவரவில்லை?
கடலில்
காணாமற்போன புதல்வனை
கைவிட்டதைப்போல
இப்போதும் தேவன்
பேசாதிருந்துவிடக்கூடுமென்று நினைத்தாளா?

2007.08.16
ஒரே நாளில் முன்னூறு ரூபாய் விலையேறியது
ஒரு லீற்றர் பெற்றோல்
அப்படியென்றால்
இப்போது என்னவிலை என்று கேட்டான்
விருந்தாளி
அவனுக்கு விலை சொல்லிக்கொண்டிருக்கும்போதே
ஏறியிருந்தது
இன்னும் நூற்றம்பது ரூபாய்

இதை எழுதிமுடிப்பதற்கிடையில்
எண்ணூற்றம்பது ரூபாயாகிவிட்டது அது.

ஒரு அரேபியன் அறிவானா
தன்னுடைய நிலவூற்று
இப்படி
எல்லைக் கோடுகளைத்தாண்டி
பகிரங்கமாக விலைபோவதை

எவருடைய குருதிக்கும்
இந்த விலையில்லை
எவருடைய கண்ணீருக்கும்
இந்த மதிப்பில்லை

அகதிக்கூடாரங்களே நிரந்தரமாகிவிட்ட
பலஸ்தீனத்தில்
குண்டுகள் வெடிக்கின்றன
ஈராக்கிலும்
பாகிஸ்தானிலும்
பொலிகண்டியிலும் குஞ்சுக்குளத்திலும்
குண்டுகள் வெடிக்கின்றன
சனங்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஓலம்
குருதி கொப்புளிக்கும்
சாவோலம்

தலைப்புச் செய்திகள்
செய்தி விவரணங்கள்
ஆய்வுகள்
புள்ளி விவரங்கள்
குண்டு வெடிப்புகள் பற்றி
கொலைகள் பற்றி
பி.பி.ஸி, சி.என்.என், அல்ஜஸீரா மற்றும்
எல்லா அலைவரிசையிலும்

நெருப்பு
புகை
குருதி
கொலை

ஆனால் எதையும் பச்சையாகக் காட்டாதே
பச்சையாகக் கொல்
உயிரோடு எரி
மரணத்துக்கு உயிரூட்டு

ஆனால் எதையும் அப்படியே காட்டாதே


பசியால் வாடுகிற குழந்தைகளைப்பற்றி
வீடில்லாமல்
தெருநீளம் அலைகின்ற மனிதர்களைப்பற்றி
எதையும் சொல்ல முடியாமல்
தொண்டைக்குழி பெருத்த
அறிஞரைப்பற்றி
யாருக்கும் தெரியவில்லை

அதைப்பற்றியெல்லாம் யாருக்கும் தேவையில்லை

சிவாஜி படத்தை பத்தாவது தடவையாக
இழுபட இழுபட
பார்த்துவிட்டு
துக்கக்கலக்கத்தோடு
பியரடிக்கப்போகிறார்கள் பள்ளிப்பிள்ளைகள்

சென்றிக்குத் துவக்கைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள்
போராளிகள்

சிவாஜியை
முறைபோட்டு பார்க்கிறார்கள்
படைச்சிப்பாய்கள்

நாங்கள் மட்டும் தலையிலடித்து
கதறியழுது
நதி பெருகுமா
கானல் தீருமா?

00
யுத்தநாள் ஒன்றின்போது எழுதப்பட்டது.

Thursday, February 9, 2012

குழந்தைகளின் சிநேகிதன்














குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக் கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி.

அவன் உங்கள் தெருக்களில்
இசையோடும்
குளிரோடும்
இனிக்கும் நதியோடும் வருகிறான்.
அவன் வரும்போது
தாகத்தின் நிழல் மெல்ல விலகுகிறது

அலைந்தலைந்து வெம்மையேறிய
அவனுடைய இதயத்தில் நிறைந்திருக்கின்றன
அவன் தினமும் திரிகின்ற
தெருக்களின் சித்திரம்

கூடவே குழந்தைகளின் சிரிப்பொலியும்
அவர்களின் சினேகமும்.

அலைந்தே வினையாற்றும்
அவனை நாள்தோறும் காணும்போதும்
நீங்கள் ஏனறியவில்லை
அவனிடம் ஏராளம் குழந்தைகளின்
மகிழ்சியிருப்பதையும்
அவன் அவற்றைக் கொண்டு திரிவதையும்.

அவன் திரிந்து கொண்டேயிருக்கிறான்
ஒவ்வொரு நாளும் தெருக்களில்
தகித்துக் கொண்டிருக்கும் கோடையில்.
எதையும் பொருட்டாகக் கருதாத
உங்களுக்கிடையில்
குழந்தைகளின் சிரிப்பொலியோடும்
அழைப்போடும்.

உங்கள் குழந்தைகள் அறிந்த அளவுக்கு
நீங்கள் அறியவில்லை அவனை
இன்னும்
அவனுடைய இதயத்தையும்
அதில் நிறைந்திருக்கும் சித்திரங்களையும்
எப்போதும் கரைந்து கொண்டிருக்கும்
அவனையும்.

குழந்தைகளின் சிநேகிதன்
கரைந்தோடிச் சேர்கிறான்
குழந்தைகளின் நினைவுகளில்
இனிய குளிராகவே
கனிந்த பழமாகவே.

என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர்விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த
குழந்தைகளின் மகிழ்ச்சியும்.

கனிந்த பழமாகவே
இனிய குளிராகவே

00