Thursday, February 2, 2012

யுத்தத்தில் காணாமற் போன ஒன்று












நேற்று எங்களின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள் என்றால், வன்னியின் யுத்த காலத்திற் சந்தித்ததற்குப் பிறகு இப்போதே அவரைச் சந்திக்கிறேன். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள். யுத்தத்தின் இடைக்காலப்பகுதியில் - உடையார்கட்டுப் பகுதிக்கு இராணுவம் வந்த பிறகு - அவருடைய தொடர்புகளில்லாமல் போய் விட்டது. ஆனாலும் வலைஞர்மடத்திலிருந்து நாங்கள் வெளியேறும் வரையில் அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்தோம்.

பின்னர், அதுவும் இல்லாமற் போய்விட்டது.

நேரடியாகப் பேசுவதற்கும் தகவல்களைச் சரியாக உரியவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கும் அங்கே தொலைபேசி போன்ற தொடர்பு வசதிகள் இல்லை. எல்லாமே வாய்வழித் தகவற் பரிமாற்றந்தான்.

வாய்வழித்தகவல்களில் கூடக்குறைய எல்லாம் வரும். விண்ணாணம், பூராயம், விடுப்பு என்றெல்லாம் ஊர்க்கதைகளைக் கதைத்துப் பழகிய ஆட்களல்லவா! ஆகவே, அவரவருடைய கற்பனைகள், விருப்பங்களின் அளவுக்குச் செய்திகளில் ஏற்ற இறக்கம் இருக்கும். அதிலும் யுத்தகாலத்தில், யுத்த களத்தில் இந்தக் கூடக்குறைய என்பதற்கெல்லாம் குறைவே இல்லை. யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை என்று சொல்வார்கள். அது முற்றிலும் சரியே. அந்த உண்மையை ஆளாளுக்குக் கொன்று கொண்டிருந்தனர்.

‘முன்னேறி வரும் இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக இயக்கத்துக்குப் புதிசாக ஆயுதங்கள் வந்திருக்கு. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இரவோடிரவாக இந்த ஆயுதங்கள் இறக்கப்பட்டுள்ளன.

ஒரு தொகுதி ஆயுதங்களை இறக்கிய கப்பல் மீதி ஆயுதங்களோடு நடுக்கடலுக்கு – சர்வதேசக் கடற்பரப்புக்குப் போயிட்டுது. எல்லா ஆயுதங்களையும் ஒரே இரவில் இறக்க முடியாதல்லவா! என்றபடியால், அது தூரப் போயிட்டுது. பகலில் கரைக்குக் கிட்ட நின்றால் சிறிலங்காப் படைகளுக்குச் சந்தேகம் வந்து விடும். அதுதான் அது ஆழத்துக்குப் போனது’ என்று சொல்வார்கள்.

‘இதையெல்லாம் யார் கண்டது? இந்த ஆயுதங்களை யார் இறக்கியது?’ என்று கேட்டால், ஆயுதங்களை இறக்கியவரே தமக்குச் சொன்னார் என்பார்கள். இப்படிச் சொல்வது பெரும்பாலும் பொதுமகன்தான். நானறிந்தவரையில் புலிகள் ஒரு பொதுமகனை இப்படியான மிக அந்தரங்கமான விசயங்களில் ஈடுபடுத்துவது இல்லை எனலாம். அப்படியொருவர் ஈடுபடுத்தப்பட்டால், அது அவருக்கு மிக நம்பிக்கையான ஆளாகவே இருக்கிறார் என்றே அர்த்தம். அந்த நம்பிக்கையான ஆளிடமிருந்து இப்பிடி ஊதாரித்தனமான கதைகள் எல்லாம் வராது.

ஆனால், இந்தத் தகவலை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவர் சத்தியம் செய்திருந்தார் என்றும் தமக்குமட்டும் அவர் இதைச் சொன்னதாகவும் சொல்லுவார்கள். அதிலும் இந்தக் கதையைப் பலரும் பலவிதமாகச் சொல்லுவார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு கப்பலில் ஆயுதங்கள் வந்தன. தனித்தனிக் கப்பலில் கொண்டு வருவதற்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கும் என்பதால், ஒரேயடியாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள்.

என்ன கொடுமையென்றால், இதையெல்லாம் நம்பவேண்டும். நம்பவில்லையென்றால்...? ஆனால், அப்படி நம்புவதற்கும் ஆட்கள் இருந்தார்கள்.

புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒரு போதுமே பகிரங்கமாக வந்ததில்லை. அப்படிப் பகிரங்கமாக அவர்கள் கப்பல்களைக் கொண்டு வருவதுமில்லை. அதிலும் பின்னாட்களில் இரகசியமாக வந்த கப்பல்களையே மோப்பம் பிடித்து இலங்கை அரசின் விமானங்கள் தாக்கிவந்தன.

உண்மை என்னவென்றால், புலிகளின் ஆயுத விநியோக வழி, விநியோக முறைகளைப் பற்றிய செய்திகள் ஏற்கனவே பலவிதமாக வந்துள்ளன. அதை வைத்துக்கொண்டு அவரவர் இந்த மாதிரிக் கதைகளைச் சொல்வார்கள்.
இந்தக் கதைகள் இப்படி உருவாகுவதற்கும் உருவாக்கப்படுவதற்கும் கூடக் காரணங்கள் இருந்தன.

இயக்கம் எப்படியும் இறுதி வெற்றியைப் பெற்றே தீரும். இப்போது அது பின்வாங்குவதற்குக் காரணம், அதற்குப் புதிய ஆயுதங்கள் தேவை என்ற ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆகையால், என்ன பாடுபட்டாவது, அது ஆயுதங்களைக் கொண்டு வந்து விடும். இந்த மாதிரி ஒரு வகையான நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை மனதளவில் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒருவித உளவியல் சமப்படுத்தலும் இந்தக் கதைகளின் பின்னணியில் இருந்தது.

இன்னொரு காரணம், அது இயக்கத்தினால் திட்டமிட்டுக் கதைகளை உருவாக்கியது. இராணுவத்தின் விரைவான முன்னேற்றமும் இயக்கத்தின் தொடர் தோல்விகளும் போராளிகளுக்கும் மக்களுக்கும் உளச்சோர்வையும் நம்பிக்கையின்மைகளையும் உருவாக்கி வந்தன.

இதனால், சனங்கள் போராட்டத்தில் வரவர நம்பிக்கையை இழந்து வந்தனர். போராளிகளுக்கும்கூட இதுவரையான அனுபவங்களை விட இந்த இறுதிப்போரின் களநிலையும் அனுபவமும் வேறாகவே இருந்தன.

படைத்தரப்பு புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. நாசகார ஆயுதங்கள். அதுதான் இயக்கத்தின்ர பின்னடைவுக்குக் காரணம் என்று சிலர் சொன்னார்கள். அதோட போரில முன்னுக்கு வாற படையினர் ஏதோ போதை மருந்தை ஏற்றிக் கொண்டு வருகிறாரகள். நல்ல குடிபோதையில் வருகிறார்கள். சுடச்சுட அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறென்னவாக இருக்கும்?

முந்தியென்றால், நல்லதொரு எதிர்த்தாக்குதலைத் தொடுத்தால் பின்வாங்கி ஓடுகின்ற படையினர் இந்தத் தடவை அதைப் பொருட்படுத்தாமல், முன்னோக்கி விரைவாக வாறதெண்டால், அதுக்கு என்ன காரணம்? போதைதான். போதையின் உச்சத்தில் மரணத்தைப் பற்றிய அச்சமோ தங்களுடைய பாதுகாப்பைப்பற்றிய எண்ணமோ வராதல்லவா! என்றபடியால்தான் அவர்கள் இப்படி முன்னேறுகிறார்கள். இப்படியொரு கதை.

இதையெல்லாம் தடுத்து, எல்லோருக்கும் நம்பிக்கைகளை ஏற்படுத்த வேணும். களத்தில் அனுபவமும் தேர்ச்சியும் திறமையும் உள்ள தளபதிகள் எல்லோரும் நிற்கின்றபோதும் இந்த முறை வெற்றிச் செய்திகள் வருவதாக இல்லை.

படையினரின் முன்னேற்றம் சில இடங்களில், சில சமயங்களில் தாமதமாகினாலும் எப்படியோ நடந்து கொண்டேயிருந்தது. ஆகவே இந்த நிலையில், எப்படியாவது சனங்களும் போராளிகளும் குழம்பாமல் நம்பிக்கையோடிருக்க வேணும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றால், ஏதாவது புதிய செய்திகளைச் சொல்ல வேணும்.

எனவே, ‘படையினரைச் சிதைக்கக்கூடிய – அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய மாதிரியான புதிய ஆயுதங்கள் வந்துள்ளன. அவை கரைக்கும் வந்துள்ளன. அதாவது, அவற்றை இறக்கியாச்சு. இனி அவற்றைச் சரிபார்த்து, முன்னோட்டமாக இயக்கிப் பார்க்க வேண்டியதுதான் பாக்கி’ என்ற மாதிரி கதைகள் உருவாக்கப்பட்டன.

‘இறக்கப்பட்ட ஆயுதங்கள் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன’ என்றுகூடச் சிலர் சொன்னார்கள்.

இப்படி வருகிற கதைகள், செய்திகளுக்குள் உண்மைகளைக் கண்டு பிடித்து, நிதானமாக ஒரு செய்தியை அறிவது, நிலைமையை விளங்கிக் கொள்வதென்பது மகா கெட்டித்தனந்தான்.

முன்னரே சொன்னதைப்போல தப்பிப் பிழைத்த உண்மைகளைக் கூட எப்படியும் கொன்று விடுவது என்ற மாதிரியே சிலர் இயங்கிக் கொண்டிருந்தனர்.

இப்படியெல்லாம் இருந்த நிலையில் நம்ம நண்பரைப் பற்றிய தகவல்களுக்குக் கைகளும் கால்களும் சிறகும் முளைப்பதில் என்னதான் புதினம்?

அதற்குப் பிறகு ‘அவர் இறந்திட்டார்’ என்று சிலர் சொன்னார்கள்.

இல்லை, ‘அவர் காயப்பட்டு புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டு விட்டார்’ என்று இன்னொரு தகவல் கிடைத்தது.

‘அவர் மாத்தளன் பகுதியால் சனங்களோடு சேர்ந்து தப்பிச் சென்று விட்டார்’ என்று ஒரு நண்பர் சொன்னார்.

அதுவுமல்ல, ‘அவர் ஒரு முன்னாள் போராளி என்பதால், வட்டுவாகலில் சரணடைந்து காணாமற் போய்விட்டார்’ என்று வேறொருவர் சொன்னார்.

இல்லை ‘அவர் தடுப்பில் இருக்கிறார். தங்களுடைய சொந்தக்காரரைப் பார்க்கப்போனவர்கள் ஆளை நேரில கண்டிருக்கினம்’ என்றனர் சிலர்.

இதில் எதையும் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதையும் ஏற்றுக்கொள்ளாமல் விடுவதற்கும் நியாயமில்லை. ஏனென்றால், இதிலுள்ள ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு நூறு வீதம் சந்தர்ப்பமுண்டு.

இறந்து விட்டார் என்று சொல்லப்பட்டவரை அகதி முகாமில் சந்தித்திருக்கிறேன். தப்பிச் சென்று இராணுவத்திடம் பாதுகாப்பாகச் சேர்ந்து விட்டார் என்று சொல்லப்பட்டவர் இறந்திருக்கின்றார்.

பிடிபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எப்படியோ வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். வெளியே தப்பிச் சென்று விட்டார்கள் என்று சொல்லபட்டவர்கள் சிறையில் இருக்கின்றனர். இப்படி ஏராளம் தடுமாற்றங்கள்.

ஆனால், இப்ப நம்ம ஆள் வந்து முன்னே நிற்கிறார். அதே சிரிப்பு. அதே பம்பற்கதைகள். யுத்தத்தின் அலைகள் அவரைக் கண்காணாமற் கொண்டு செல்லவில்லை. எல்லா அலைகளுக்குள்ளும் தாக்குப் பிடித்து இப்பொழுது அவர் கரையொதுங்கியுள்ளார்.

‘என்னண்ணை ஒரு மாதிரியாகப் பாக்கிறியள்? எப்பிடித் தப்பி வந்திருக்கிறன் எண்டா? இவ்வளவு ஷெல்லுக்குள்ளயும் ரவுண்ஸ் அடிக்குள்ளயும் இவ்வளவு சனமும் தப்பினதை நினைக்க உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? அப்பிடித்தான். நானும் தப்பினதை நினைக்கவே எனக்கே ஆச்சரிந்தான். அதிலயும் உடம்பில ஒரு காயமும் இல்லாமற் தப்பியிருக்கிறனெண்டால்....!’

ஒரு புன்னகையுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

‘உங்கட ரெலிபோன் நம்பர் கிடைச்சது. ஆனால், நேரில உங்களைச் சந்திக்க வேணும் எண்டுதான்... தொடர்பெடுக்காமல் நேரில வந்தன்’ என்றார்.

அவர், தான் தப்பிச் சென்றதையும் பிறகு நடந்த கதைகளையும் சொன்னார்.

மாத்தளனுக்கும் கடற்புலிகளின் தளமிருந்த சாலைக்கும் இடையிலிருந்த பகுதியிலிருந்து படகொன்றில் உறவினர்களுடன் தப்பிப் புல்மோட்டைக்குச் சென்றிருக்கிறார். புல்மோட்டையில் ஒன்றரை மாதங்கள் அகதி முகாமில் இருந்தார். ஆனால், அங்கே இருந்தவர்களில் யாரோ செய்த புண்ணியத்தின் பேரில் அல்லது யாரோ வழங்கிய தகவல் உபயத்தின் பேரில், ஒரு நாள் காலையில் இவருடைய பெயரை ஒலிபெருக்கியில் அழைத்து விசாரித்தனர் படைப்புலனாய்வுப் பிரிவினர்.

பிறகென்ன? ஒன்றரை ஆண்டுகாலத் தடுப்பு.

இவ்வளவுக்கும் இவர் இயக்கத்தை விட்டு விலகி, பத்து வருசங்கள். இந்த பத்து வருசங்களிலும் இவர் கடற்றொழிலே செய்தார். இயக்கத்தை விட்டு விலகிய பிறகு திருமணம் செய்திருந்தார். 2004 இல் சுனாமியின் போது மனைவியையும் பிள்ளையையும் கடல் கொண்டு போனது. பிறகு அங்கும் இங்குமாகச் சிலகாலம் அலைந்தார். தொடர்ந்து அப்படியிருக்க முடியுமா, என்ன?

மீண்டும் கடற்றொழிலுக்குப் போனார். கடைசிவரையிலும் கடலிலேயே தொழில் செய்திருக்கிறார். எந்த அலைகளுக்குள்ளும் நின்று பிடிக்கும் வல்லமையோ என்னவோ ஷெல்லடி அமோகமாக நடந்து கொண்டிருக்கும்போதும் ரவுண்ஸ் எல்லாம் தாறுமாறாகச் சீறிக்கொண்டு வரும்போதும் ‘சிங்கன்’ கிறுங்காமற் கடலில் இறங்குவார்@ கரையில் ஏறுவார். அந்த நாட்களில், கறிக்கு வழியே அற்றிருந்த அந்தக் காலத்தில் கடலுக்குப் போய் மீனைக் கொண்டு வருவதென்பது, ஒரு ஆயுதக்கப்பலைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதைவிடக் கடினமான காரியம்.

நாங்கள் கிளிநொச்சியிலிருந்து தரைவழியே ஒதுங்கி ஒதுங்கிக் கடலுக்குச் சென்று வலைஞர் மடம் கடற்கரையில் இருந்த காலத்தில் (எல்லோரும் கடலில் ஒதுங்கியே கரைக்கு வருவது – நாங்களோ தரையில் ஒதுங்கிக் கடலுக்குப் போனோம்) நண்பர் பொக்கணையில் இருந்திருக்கிறார். ஆனால், சில நாட்கள்தான். அதற்கு முதல் கல்லாறு – பேய்ப்பாறைப்பிட்டியில் இருந்து தொழில் செய்தார். எல்லாம் அவர் சொல்லியே தெரிந்தன.

‘இயக்கத்தில் இருந்ததற்காக ஒண்டரை வருசம் தடுப்பு. அப்பிடியெண்டால் இயக்கத்தை விட்டு விலகினதுக்காக என்ன சலுகையைத் தருவியள்?’ எண்டு கேட்டன்.

‘இன்னும் ரண்டு வருசம் உள்ளுக்குள்ள இருக்கப் போறியா? எண்டு கேட்டார்கள். பதிலைச் சொல்லாமல் கேள்வியைத்தான் கேட்கிறாங்கள் அண்ணை. எல்லாத்துக்கும் பதில் சொல்லிறதைக் காட்டிலும் கேள்வி கேட்கிறதுதான் லேசுபோல இருக்கு’ என்று சொல்லிச் சிரித்தார்.

‘....................’

‘கேள்வியே கேட்காமல் இருக்கப் பழகினதால பிரச்சினை குறைவாக இருக்கு’ என்றார். ‘ஆனால், மனசுக்குள்ள கேள்விகள் எழாமலா இருக்கும்?’ என்றார் பிறகு.

நான் மௌனமாகத் தலையசைத்தேன்.

‘இல்லையண்ணை, நானும் இயக்கத்தில கடைசி வரையும் விலகாமல் இருந்திருந்தால் இன்னும் சண்டை முடியாமலும் இருந்திருக்கும். சிலவேளை தமிழீழம் கிடைச்சாலும் கிடைச்சிருக்கும். உங்களுக்கு வெற்றியே கிடைக்காமலும் போயிருக்கலாம் அல்லவா! எண்டு கேட்கப்பார்த்தன். ஆனால், எதுக்கு இந்த வம்பெல்லாம் எண்டு விட்டிட்டன்.’

நானும் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

நண்பரின் குறும்புத்தனமும் உட்கோபங்களும் இன்னும் அப்படியேதானிருக்கின்றன. இவற்றில் எப்படியோ அவர் தன்னுடைய சமநிலையைப் பேணிக்கொள்கிறார் போலும்.

பேய்ப்பாறைப்பிட்டியில் இருந்து வெளியேறிய அதே நாளில் மீண்டும் தொழிலுக்கு இறங்கப் போகிறேன் என்று சொன்னார்.

நண்பர் இரண்டாவது சுனாமியையும் சந்தித்து மீண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நாங்களுந்தான். இன்னும் எத்தனை சுனாமிகள் இலங்கையில் அடிக்குமோ!



00

நன்றி - உதயம்

Monday, January 23, 2012

திரும்ப முடியாத திசை













ஒரு நூலில் ஆடுகிறது
நாடகம்
கலக்கத்தின் முனை
இன்னும் கூர்மையடைகிறது

இரத்தத்தை ஊற்றிவிட்டு
பாத்திரத்தைக்கழுவுகிறான் கடைக்காரன்
இலையான்கள் தூங்கப்போய்விட்டன
நான் முழித்திருக்கிறேன்
நினைவில் வருகிறாள் லோத்தின் மனைவி

அழமுடியாமலிருக்கும் அக்மதோவா
யாரிடமும் பேசவில்லை

ரஞ்சகுமாரின் கோசலை
இன்னும் விம்மலை நிறுத்தவில்லை.

திரும்ப முடியாத திசையில்
சென்றுவிட்டது படகு
மலையுச்சிக்கு வா

கல்லிலும் மரம் நிற்கும் அதிசயத்தை
சொல்லும் உன் கண்கள்.

கடலின் ஆழத்தில்
தேங்கி நிற்கிறது இரத்தத்துளிகளும் கண்ணீரும்
கரைய முடியாததுயரமும்

அவர்கள் திட்டிய
வசையும்.

சாம்பல் மேட்டில்
காத்திருக்கிறான்
புலவன்
இரவு
அவனிடம் விடை பெற மறுக்கிறது
காலையைச்சந்திக்க அதனிடம்
எந்த வலிமையும் இல்லை
இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது
பிணத்தின் வாடை.

எங்கே அந்தக்காகங்கள்
கடற்கரையில்
பாடமறுத்த தேவனை
அவர்கள் சிலுவையிலறைந்தபோது
எழுந்த குரல்
அந்த மண்ணில் சுவறிவிட்டதாக
அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள்.

திடுமுட்டாக வந்த விருந்தாளியை
அழைத்துப்போய்
மாப்பிளையாக்கினாள் சிறுமியொருத்தி
பள்ளிக்குப் போக மறுத்த பிள்ளைகளை
கூட்டிச் செல்கிறான்
ஊராடி.

கண்ணீர்
பாம்பாக ஊர்கிறது
ஊரெங்கும்

00

Friday, January 20, 2012

புதிய காதற் பாடல்


















'உன்னுடைய இதயத்தில்
எதை நிரப்பி வைத்திருக்கிறாய்?'
என்று கேட்டாள் அவள்.

'பூக்களும் வாசனையுமெ'ன்றான் அவன்

'கனியும் சுவையும் வேண்டுமெ'ன்றாள் அவள்

'உன்னுடைய கண்களில்
எதை நீ வைத்திருக்கிறாய்?' என்றாள் அவள்

'உன் கண்களையும்
உன்னுடைய ஞாபகங்களையும்' என்றான் அவன்

'எதிர்காலத்தையும் வசந்தத்தையுமே
விரும்புகிறேன்' என்றாள் அவள்

'உன்னுடைய கைகளில்
எதைச் சேமித்திருக்கிறாய்?' என்று கேட்டாள் அவள்

'உன்னையும் உன் அழகையும்' என்றான் அவன்

'காலத்தையும் பாதைகளையுமே
விரும்புகிறேன்' என்றாள் அவள்

'உன்னுடைய பயணம் எங்கே?' என்றாள் அவள்

'உன்னிடம், உன் இதயத்திடம்' என்றான் அவன்

'வெளிகளிலும் பறவைகளிலும்
நானிருக்கிறேன்' என்றாள் அவள்.

'உன்னுடைய பாடல்கள் யாதாயுள்ளன?' என்று கேட்டாள் அவள்

'உன்பெயராகவும் அதன் இசையாகவும் இருக்கின்றன'
என்றான் அவன்

'காற்றின் குரலையும்
காலத்தின் மொழியையும் விரும்புகின்றேன்'
என்றாள் அவள்

மேலும்
'அழும் குழந்தையையும்
கண்ணீரோடுள்ள தாயையும் ஆதரிக்கிறேன்' என்றாள்

'உன்னுடைய நிலப்பரப்பெது?' வென்றாள் அவள்

'புல்வெளியும் மலர்த்தோட்டமும்' என்றான் அவன்

'நீரூறும் சுனையும்
அடர் மரங்களுமே தனது நிலப்பரப்பெ'ன்றாள் அவள்.

'உனது கனவுகள் எங்கே? யென்றாள் அவள்

'புல்வெளியில்
பனித்துளி மீதிலே' என்றான் அவன்.

'ஆற்றினோரமும் விளையும் வயலும்
எனது இதயமென்றாள்' அவள்

பூக்களை எடுத்துச் சென்ற அவனிடம்
அவள் கொடுத்தாள்

கை நிறையத்தானியங்கள்.


00

Wednesday, January 18, 2012

வளராத மரம் மற்றும் பிறவைக் குறித்து...











‘புண்ணைத் தோண்டுவதைக் குறித்து என்ன சொல்கிறீர்?’’என்ற ஆசிரியர் கேட்டார்
கூடவே மருந்து போடுதைப் பற்றியும்.

மேலும் அவர் கேட்டார்,
‘‘வளராத மரத்துக்கு நீரூற்றுவதைப் பற்றி விளக்குக.

அமைதியை நோக்கிச் செல்லும் போதுமுரண்பாட்டை வளர்க்கலாமா?
முரண்பாட்டை வளர்த்துக் கொண்டேஅமைதிக்குச் செல்லலாமா’’ எனவும்.

பகைமையைக் கூர்மைப்படுத்தும்
உபாயங்களுக்குக் கீழும் மேலும்
இரத்தவெடிலே எப்போதுமிருக்கும் என்றவரலாற்றுப்
பாடங்களைப் படிக்கத்தவறிய மாணவரிடம்
மேலும் அவர் வினவினார்,
‘‘அமைதிக்கு எதிரானதல்லவா பகைமையின் கூர்வாள்?’’ என.

‘‘சனங்களைக் கருவிகளாக்கித் ‘தம்மை’ வளப்படுத்தும்
தந்திரங்களைக் குறித்தும்,
கட்சிகளையும் தலைவர்களையும்
சனங்கள் கருவிகளாக்கிக் கையாள்வதைக் குறித்தும் விளக்குக’’ என்றும்.

மேலும்,
‘‘நூற்றாண்டுப் பெருமிதக் குடைகளுக்குக் கீழே,
கையேந்தும் மக்களின் அவலக்குரல்களுக்கும்
‘தகைசார் மேன்மைகொண்டோரின்’ தன்மானப் பேச்சொலிகளுக்கும்
இடையில்மறைந்திருக்கும் உண்மையையும் பொய்யையும் கண்டறிக’’ எனவும் கேட்டார் அவர்.

‘‘அவமானத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற மனம்
குற்றவுணர்வுடன் ரகசியமாக இருப்பதை விரும்புதற்கும்,
அந்த ரகசியத்தில்
மோசமான குற்றங்கள் பேசப்படாமல் மறைக்கப்படுவதற்கும் உள்ள
நோக்கங்களைப் பற்றிச்சொல்க’’ என்ற ஆசிரியர்,

‘‘அபிமானங்களையும் விசுவாசங்களையும்
அனுதாபங்களையும் விலக்க முடியாப் பேராளர்கள்
தங்களிடத்தில் வைத்திருக்கும்
புனைவுகளைப் பெருக்கும் கருவிகளையெல்லாம்
எங்ஙனம் கைவிடப்பண்ணுவது’’ என்றும்.

அந்தக் கருவிகளால் மனத்தையும் மூளையையும்
சிதைக்கப்பட்டவர்களைக் குறித்தும் கேட்டார் ஆசிரியர்.


‘‘வளராத மரம்’ என்றும் காய்த்ததும் இல்லைப் பூத்ததுமில்லை,
காற்று வீசி யது அசைந்ததுமில்லை - என்றும்
யாருக்கும் நிழல் தந்ததுமில்லை யொரு
குருவிக்குக்கூட அது இடமளித்ததில்லையே’ என்றவர்

‘‘பெருமைக்கது பூச்சாடியில் நிற்கலாம், மரமென்று அறிவீரோ’’ என்றார்.

இன்னும்

‘‘மரமென்றால் என்ன?’’ என்றும்.

00

Monday, January 16, 2012

நிழலிலிருந்து வடியும் குருதி












நெருப்பைத் தின்னுவது
அப்படியொன்றும் கடினமானதல்ல
முள்ளின் மேற் தூங்குவது சிரமமானதுமல்ல

குழியில் வீழ்த்தப்படுவது
இருளிற் தள்ளப்படுவது
வரிசையிலிருந்து நீக்கிவிடுவது
எல்லாமே மிகச் சாதாரண விசயங்கள்.

பாம்புகள், நரிகள், ஓநாய்கள்,
முதலைகள், விலாங்குகள், கழுகுகளோடு
வாழ்வது அதிசயமானதுமல்ல.

கண்ணீருடனும் பசியுடனும் இருப்பது
துக்கத்துக்குரியதோ அவமானத்துக்குரியதோ அல்ல
அது மகத்தானதுமல்ல.

அன்போடிருத்தல்
கருணை மிகக் கொண்ட காதல்
ஒளிரும் உண்மையோடு வசமாகுதல்
அறத்தின் முன்னே தன்னை நிறுத்துதல்
என்ற ஆயிரங்காலத்துப் பயிர்களை
ஓரிரவில்
அல்லது பட்டப்பகலில் மேய்வதொன்றும் புதிதுமல்ல

மனிதர்கள் யார்?
அவர்கள் எவ்வாறிருப்பர்? என்றறிய முடியாதிருப்பதும்
எப்போதெல்லாம் ஏதோவொன்றாகி
அல்லது வேறு வேறாகி
வர்ணங்கள் பலவாகி தன்னைச் சூழ்ந்தொரு விம்பப்படை அமைப்பதும்
பிறகொரு கால்,
தன்னை மறைத்து பிறரைக் காட்டிக் கொடுப்பதுவும்
இன்னொரு வேளை
பிறரை மறைத்துத் தன்னைச் சிகரமாக்குவதும்
எப்படியெல்லாம் நிகழ்கின்றன
என்ற குழப்பங்களை விடவும்.

மனிதர்களே உருவாக்கிய விதிகளையும் முறைகளையும்
மனிதர்களே மீறுவதும்
மனிதர்களே ஆக்கிய ஒழுங்கை
மனிதர்களே மீறிச் செல்வதையும்

அறியவே முடியாமல் தவிப்பதை விடவும்.

நெருப்பைத் தின்னுவது
அப்படியொன்றும் கடினமானதல்ல
முள்ளின் மேற் தூங்குவது சிரமமானதுமல்ல

குழியில் வீழ்த்தப்படுவது
இருளிற் தள்ளப்படுவது
வரிசையிலிருந்து நீக்கிவிடுவது
எல்லாமே மிகச் சாதாரண விசயங்கள்.

பாம்புகள், நரிகள், ஓநாய்கள்,
முதலைகள், விலாங்குகள், கழுகுகளோடு
வாழ்வதெல்லாம் அதிசயமானதுமல்ல.

மேலும்

ஒரு கொலையை நிகழ்த்துவதும்
ஒரு கொலையை மன்னிப்பதும் பெரிதுமல்ல.

00

Sunday, January 15, 2012

காதலும் கனவும் நிரம்பிய நகரம்.











எப்போதும் நகரத்துக்கு வருகிறார்கள் இளம் பெண்கள்
அவர்களில் அழகிகளும் உண்டு
பேரழகிகளும் உண்டு


மேலும்
எல்லாப் பேருந்துகளிலும்
இளம் பெண்கள் இருக்கிறார்கள்

தெருக்களில்
கடைகளில்
தனியார் கல்லூரிகளின் வகுப்பறைகளில்
பேருந்து நிலையங்களில் எல்லாம்

முப்பதாண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எப்படியோ தலைமுறை மாறி மாறி
இந்த இளம் பெண்கள் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

இளம்பெண்கள் வருவதைப் போலவே
இளைஞர்களும் வருகிறார்கள்.

ஆனால்
எல்லோரும்
முதுமையடைந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கே தெரியாமல்
நகரம்
அவர்களுடைய இளைமையைக்
கரைத்துக்கொண்டோ குடித்துக்கொண்டோ இருக்கிறது.

என்னுடை தந்தையின் இளமையை
என்னுடைய இளமையை
என்னுடைய அத்தையின் இளமையை
இரகசியமாகக் குடித்ததும் இதே நகரந்தான்

பிறகும் பிறகும்
இளைஞ பெண்களும் ஆண்களும் வருகிறார்கள்.
வந்து கொண்டேயிருக்கிறார்கள்
கடலின் அலைகளைப் போல ஓய்வின்றி....

இளமை ததும்பும் பெண்களாலும் ஆண்களாலும் நிரம்பியிருக்கிறது
நகரம்...

காதலும் கனவும் நிரம்பிய நகரம்...

00

Sunday, January 8, 2012

இகம் பரம்














கடவுள் தன்னை விசுவாசிக்கக் கோருகிறார்.

தனது பரலோகத்திற் கழைப்பதற்கு என்னைத் தூய்மையாளனாக இருக்கும்படி கோருகிறார்.

மேலும் அன்பாக இருக்கும் படியும்
எல்லோரையும் மன்னிக்கும் படியும்
அநீதிகளை ஒழிக்கும் படியும்
அறத்துக்குச் சாட்சியாயிருக்கும் படியும் கட்டளையிடுகிறார்.

நான் கடவுளிடம் நேசமாகவும் நட்பாகவும் இருக்க விரும்புகிறேன்.

கடவுளின் ஆணையும் வாக்குகளும் என்னை ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.

ஆனாலும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்தச் சேரியில்
பொய்யும் களவும் அநீதியும் வன்முறையும் நிரம்பிய (சாத்தானின்) உலகத்தில்
என்னைக் கடவுள் வாழ நிர்ப்பந்தித்ததின் காரணத்தினால்
எல்லோருடனும் அன்பாக இருந்தாலும் சண்டையிட நேர்கிறது.
எல்லோரையும் மன்னிக்க நேர்ந்தாலும் பகைமையே முற்றுகிறது.
அநீதிக்கெதிராகப் போராட வேண்டுமெனில்
எப்படியோ அறத்தில் வீழ்ச்சியேற்படுகிறது.

00

புனிதமான அப் பரலோகத்திற் கென்னை அழைக்கு முன்
இகலோகத்தில் என்னை உம்முடைய புதல்வனாக ஏற்றுக் கொள்ளும்
அப்படியே
இந்தச் சேரியையும் உமது பரலோகத்தின் ஒளியை ஊட்டி ஆளும்
வசையும் திருட்டும் பகையும் கொடுமையும் அநீதியும் நிரம்பிய
இந்த அயலை
வல்லமையுடன் மாற்றியருளும் தேவனே!
ஆமென்.

தவிர்த்து,
உமது பரலோகத்திற் கழைப்பதற்கு என்னைத் தூய்மையாளனாக இருக்கும்படி கோருவதும்
மேலும்
அன்பாக இருக்கும் படியும்
எல்லோரையும் மன்னிக்கும் படியும்
அநீதிகளை ஒழிக்கும் படியும்
அறத்துக்குச் சாட்சியாயிருக்கும் படியும்
கட்டளையிடுவதில் நியாமில்லை.

உம்மால் படைத்தருளப் பட்ட சாத்தான் என்னையும் விடப்
பல்லாயிரம் மடங்கு வல்லமையோடு
உம் நிழலைப் போலவே காலம் நீளத்துக்குமிருக்கையில்
என்னைக் கட்டளையிடுவது என்ன நியாயமோ!

பரலோகக் கனவிற்கென்னை அழைப்பதாயின்
வலிய சாத்தானின் முன்னே
உம்முடைய கட்டளைகளுக்கு எப்படி நான் ஒப்புதலளிப்பேன்?

ஆகவே என்னிலையை அறிந்தபி்ன் உம் நிபந்தனையை விதித்தருளும் ஆண்டவரே!

0

கடவுளாக இருப்பதை விடவும்
சாத்தான் கடவுளாவதும்
கடவுள் சாத்தானாவதும் மிகச் சுலபம்

00