Tuesday, May 29, 2012

அழிப்பின் கொடுமை
















இன்று புதுக்குடியிருப்புக்குப் போயிருந்தேன். மீண்டும் அழிவின் காட்டிடையே நின்றேன். துக்கத்தை மறுபடியும் காவி வந்துள்ளேன். போதாக்குறைக்கு தொலைந்து போன பொருளொன்றைத் துக்கம் பெருக்கியாகக் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இததைத்தான் காலக் கொடுமை, அல்லது விதியின் சதி என்பதா? அழிவுகளைப் பார்க்க விரும்பாமல் இதுவரையும் அங்கே போவதைத் தவிர்த்தேன். தொடர்ந்து இடிபாடுகளையும் சிதைவுகளையும் பார்த்து மனமும் சிதைந்து போயிருப்பதாகப் படுகிறது. இனியும் இவற்றைப் பார்க்க முடியாது. இந்த அழிவுகளைப் பார்க்க வேண்டியிருப்பதும் இவற்றினூடே வாழ வேண்டியிருப்பதும் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தமே ஆயினும் தொடர்ந்தும் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளக் கடினமாகவே உள்ளது. யுத்தம் முடிந்தாலும் இந்தக் கொடுமைகள் முடியவில்லை.

தொலைந்து போன பொருள் என்றேனே, அது என்ன என்று தெரிந்தால் சிலவேளை நீங்கள் சிரிக்கக் கூடும். காசு, நகை, வீட்டுப் பொருட்கள், இயந்திர சாதனங்கள் என எவ்வளவோ பெறுமதியான பொருட்கள் எல்லாம் நடந்த யுத்தத்தினால் தொலைந்து போயிருக்கின்றன. எத்தனையோ ஆயிரம் உயிர்கள் உட்பட. அதையெல்லாம் விட இதென்ன பெரிதா? ஆனால், இதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றி விளங்கியோருக்கு இந்தப் பொருளின் பெறுமதி என்ன என்று விளங்கும்@ இதனுடைய மதிப்பைப் பற்றிப் புரியும்.

தொலைந்தவையும் இன்று திரும்பத் துக்கம் பெருக்கியாகக் கிடைத்திருப்பவையும் கடிதங்களே. நண்பர்களின் கடிதங்கள். தோழர்களின் கடிதங்கள். அமைப்புகளின் கடிதங்கள். பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப்பலர் எழுதிய கடிதங்கள். அய்யா, அம்மா உட்பட நெருங்கிய உறவினர்கள் எழுதிய கடிதங்கள்.

வெளிப்பார்வையில் இவை வெறும் காகிதங்களாகத் தெரியலாம். கடந்து போன காலமொன்றில் பேசப்பட்ட விசயங்கள். இப்பொழுது அந்த உரையாடல்களுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்றும் யாரும் கேட்கக் கூடும்.

ஆனால், அடிப்படைகளின் விதி என்றும் மாறுவதேயில்லை. இரண்டும் இரண்டும் நான்குதான். அது எப்பொழுதும் மாறிவிடுவதில்லை. பீற்றருக்கும் அது நான்குதான். பியசேனாவுக்கும் அது நான்குதான். அரவிந்தனுக்கும் நான்குதான். வெள்ளையனுக்கும் கறுப்பனுக்கும் கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் அரேபியனுக்கும் அது நான்குதான். அடிப்படைகளை உருவாக்கும் (கவனிக்க – அடிப்படை வாதங்களை அல்ல) எந்தச் சொல்லுக்கும் கால முதிர்வு ஏற்படுவதில்லை. அவை நிலைபேறுடையவை. வாழ்வை அதன் சாரத்தில் நின்று உணர்ந்த எத்தகைய எழுத்தும் அத்தகைய பெறுமதியைப் பெறுவன.

எனவேதான் இவற்றைப் பற்றி எழுதும்போதே ஒருவிதமான வேறுபட்ட மன எழுச்சி நிகழ்கிறது. இந்தக் கடிதங்களை எழுதிய ஒவ்வொரு முகங்களும் மனதில் தோன்றுகின்றன. இவற்றை எழுதியவர்களிற் பலர் இன்றில்லை. சிலரை நான் வாழ்விலே நேரிற் பார்த்ததே இல்லை. தொலைபேசியிற் கூடப் பேசியதில்லை. அவர்களுடைய தொடர்பும் உறவும் கடிதங்களின் மூலமாக மட்டுமே இருந்தன. எழுதுகிற விசயம் மிகுந்த மன நெருக்கடிக்குரியது என்றாலும் அதை எழுதும்போது ஏற்படும் உணர்வுகள் இன்றைய நிலையில் அசாதாரணமானவை. அதுவும் கடிதங்களைப் பற்றிய விசயங்கள்....

‘கடிதங்களின் யுகம் முடிந்து வருகிறதா?’ என்று கேட்டிருந்தான் அண்மையில் சிவா. ‘தொலைபேசியும் மின்னஞ்சலும் கடித யுகத்திற்கு எதிரிகள் என்று மேலும் சொன்னான் அவன். மின்னஞ்சல்கள் வந்த பிறகு பெரும்பாலும் தபாலில் வருகின்ற கடிதங்களின் யுகம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொலைபேசியின் உச்சபாவனை – அதிலும் செல்போனின் வருகை என்பது, அநேகமாகக் கடிதங்களின் அவசியத்தைக்  குறைத்து விட்டன. தொலைபேசியில் பகிரப்படும் எல்லா வார்த்தைகளும் அந்தக் கணத்திலேயே காற்றிலே கரைந்து விடுகின்றன. அழுகை, சிரிப்பு, பரிவு, நேசம், தவிப்பு, தாகம், மோகம் என எத்தகைய உணர்ச்சிகளையும் நேரடியாகப் பரிமாறிக் கொள்வதற்கு தொலைபேசி உச்ச சாத்தியத்தை அளிக்கிறது என்பது உண்மைதான். ஒவ்வொரு குரல்களையும் அவற்றின் உயிர்ப்போடு அனுபவிக்க முடிவதும் உண்மை. ஆனால், எல்லாம் அந்தக் கணம் வரையிற்தான். அதற்கப்பால், அவற்றுக்கு எந்த முகமும் இல்லை. அடையாளமும் இல்லை. பெறுமதியும் இல்லை. காற்றிலே கரைந்து, காணாமற் போய் விடுகின்றன அவ்வோசைகள். பெரும்பாலும் திரும்பப் பெறவே முடியாத ஓசைகளாக.

தொலைபேசிக்கு அடுத்தபடியாக கடிதத்திற்கு இன்னொரு எதிரியாக மின்னஞ்சல் இருக்கிறது என்று சிவா சொல்வதும் உண்மையே. என்னதான் மின்னஞ்சலில் வேகமாகக் கடிதப் பரிவர்த்தனையைச் செய்யக் கூடியதாக இருந்தாலும் அதில் எழுதப்படும் கடிதங்களுக்கென்ற தனியான முகங்கள் இருப்பது குறைவு. தனியான அடையாளங்கள். அந்த அடையாளங்களின் வழியாக வருகின்ற உணர்வு. முக்கியமாக எழுத்துகள். மின்னஞ்சலில் எல்லா எழுத்துகளும் ஒரே மாதிரியானவையாக, இயந்திர ரீதியாகவே உள்ளன. அச்சில் வார்க்கப்படும் எழுத்துகளைப் போல. அச்சில் இருக்கின்ற எழுத்துகளுக்கு கையெழுத்துகளைப்போல தனியான அடையாளங்கள் இருப்பதில்லை. தனியான முகங்களை அவை காட்டுவதும் இல்லை. இது பெரியப்பாவின் எழுத்து, பாலுவின் எழுத்து, ரமணியின் எழுத்து, ரதியின் எழுத்து, இது அத்தையின் எழுத்து என்று எப்படி இவற்றை அறிந்து கொள்வது? எழுதப்படும் கடிதங்களில்  ஏற்றப்படும் அவரவர்களின் உணர்வுகளின் தொனி வேறுபாட்டைத்தவிர, வேறெந்த வேறுபாடுகளும் தனித்துவங்களும் மின்னஞ்சல்களுக்குக் கிடையாது.

மனிதர்கள் வேகங்கொள்ளும் வாழ்க்கைக்குத் தாவும்போது இயல்பையும் அழகையும் அடையாளங்களையும் இழந்து விடுகிறார்கள். வேகங்கொள்ளும் வாழ்க்கைக்குப் பெரும்பாலும் இயந்திரங்களின் துணை அவசியம். இயந்திரங்களும் பொறிமுறைகளும் எப்பொழுதும் மனித சுபாவங்களுக்கும் தனித்த அடையாளங்களுக்கும் எதிரானவை. அவற்றை அவை நிராகரித்து, மனிதர்களையே இயந்திரமயமாக்கி விடுகின்றன. மனிதர்கள் சுலபமாக இயந்திரமயமாகி விடுகிறார்கள். ஆனால், இயந்திரங்கள் ஒருபோதும் மனித இயல்புக்கு வருவதில்லை. இப்போது கடிதங்களிலும் தங்களை இழந்து வருகிறார்கள் மனிதர்கள்.

எப்படியோ கடிதம் எழுதுவதை மனிதர்கள் வரவரக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள். கடிதங்களற்ற ஒரு வாழ்க்கையும் வந்து விடத்தான் போகிறது. அப்படிச் சில கடிதங்கள் வந்தாலும் அவை பெரும்பாலும் அலுவலக விவகாரங்கள் சம்மந்தப்பட்டவையாகத்தான் இருக்கும். அந்தக் கடிதங்களும் இயந்திரமயப்பட்டவையே. விதிகள், கட்டளைகள், அறிவுறுத்தல்கள், கோரிக்கைகள், அறிவிப்புகள் என்ற வரையறையில்தான் அலுவலகக் கடிதங்கள் இருக்கும். அலுவலக விதியே இயந்திர மயமானதுதானே.

முன்னர்,  ஒரு தபால் அட்டை வரும்போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! ஒரு வகையான கிளர்ச்சி நம்மையறியாமலே நமது உடலில் ஓடிப்பரவும். உறையோடு வரும் கடிதங்களில் இருக்கின்ற வௌ;வேறு வகையான அழகிய முத்திரைகள், முகவரியில் இருக்கும் விதவிதமான எழுத்துகள் எல்லாமே கடிதங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சி. முகவரியை எழுதிய கையெழுத்தை வைத்தே இது யாருடைய கடிதம் என்று கண்டு பிடித்து விடும் அளவுக்கு மன இயக்கம் இருந்தது.  

சின்னமாமாவின் எழுத்துகள் எப்போதும் சரிந்திருக்கும். அவற்றைப் பார்க்கையில், ஒரு அணியாக எழுத்துக் கூட்டம் நிற்பதைப் போலிருக்கும். பெரியப்பாவின் எழுத்துகள் அதிரடியாக எதையோ சொல்ல முயற்சிப்பதைப்போல அவசரகதியில் இருக்கும். தாள் முழுவதும் ஏறக்குறைய ஒரு வகையான கிறுக்கல்கள். அவரும் அப்படியான ஆள்தான். எதற்கும் பராதிப்பட்டுக் கொண்டிருப்பார். சற்று ஆதிக்க மனோபவமும் அவரிடமுண்டு. ராணி அத்தையின் எழுத்துகள் நிதானமானவை.அவவின் எழுத்துகளும் அப்படித்தான். அவ எழுதும் விசயங்களும் அப்படித்தான். அவவும் அப்படித்தான். எப்படித்தான் அப்படியொரு நிதானமும் ஆற்றலும் அவவிடம் உள்ளன என்று யோசிக்க வைக்கும். அறிவுரை சொல்வதைப்போல அணைப்பும் இதமும் நெருக்கமும் கூடிய எழுத்துகள் அவவுடையவை. எனக்கு அந்த எழுத்துகளே அதிகமாகப் பிடிக்கும். எதையோ சொல்லத் துடிப்பதைப்போல தவித்துக்கொண்டிருப்பன சறோ அத்தையின் எழுத்துகள்.

கிறுக்கல் சித்திரக்காரனின் கை வண்ணத்தைப்போல, என்ன ஏது என்றே தெரியாமல் எழுதிச் செல்வார் சோதியப்பு. அவருடைய கையெழுத்தும் தலையெழுத்தும் கடவுளுக்குத்தான் தெரியும் என்று சொல்வார் அய்யா. அந்த அளவுக்கு எதையோ கிறுக்கிச் செல்வார் சோதியப்பு. ஆனால் அவருடைய எழுத்தைப் படித்துத்தான் அவரில் மையள் கொண்டாள் அந்த நாளில் ஒரு மலேசியப் பெண் என்று பெரிய மாமா சொல்வார். பொனிபஸ்ஸின் எழுத்துகளுக்கு என்றும் முதுமை வந்ததேயில்லை. அவன் கடையாக எழுதிய கடிதத்தில் நான் பார்த்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவன் எழுதிய அதே எழுத்தைத்தான். காலம் எவ்வளவு மாறினாலும் அவனுடைய கையெழுத்தில் அது ஊடுருவ முடியாமல் பின்தங்கி விட்டது. இவ்வளவுக்கும் அவன் தமிழைப்படிக்க வந்ததே அவனுடைய ஆறாவது வயதில்தான். வீட்டில் தமிழை அவன் பேசத் தொடங்கியது அநேகமாக அவனுடைய பத்து வயதில் இருக்கலாம். டொச் மொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசிய ஒரு குடும்பமாக பொனிபஸின் குடும்பம் எங்களுரில் இருந்தது. ஒல்லாந்து வழியான பரம்பரை. பிறகு தமிழையும் சேர்த்துக் கொண்டார்கள். இப்பொழுது தமிழையே பெரும்பாலும் புழங்குகிறார்கள். எப்படியோ இளமை மாறாத எழுத்தை இன்றும் அவன் தன்னிடம் வைத்திருக்கிறான்.

போகட்டும், இப்படி எத்தனை வகையான எழுத்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் குணமறிந்து, அவற்றின் முகமறிந்து வைத்திருந்த வாழ்க்கையைக் கடிதங்கள் தந்தன. தாத்தாவின் கையெழுத்தை நீண்டகாலமாக அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்தா. பெரும்பாலும் கடிதங்களில்தான். அதுவும் அவ்வளவு அலைக்கழிந்த வாழ்க்கைக்குப் பிறகும். ஒரு விவசாயியாக தாத்தா இருந்தபோதும் அம்மா படிக்கிற காலத்தில் வாரந்தவறாமல் அம்மாவுக்குத் தாத்தா கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதங்களை அம்மா பக்குவமாகப் பொத்திப் பொத்தி வைத்திருப்பதைப் பார்த்த அய்யா பல தடவைகள் அம்மாவைச் சீண்டுவார். ‘உம்மட அப்பா ஒரு நேரு. நீர் ஒரு இந்திரா. அவர் தன்ரை அருமை மகளான உமக்கு வரலாற்றுப் பாடங்களை கடிதத்தில போதிச்சிருக்கிறார்... அதையெல்லாம் படிச்சிட்டு இப்ப நீர் எங்களுக்கு வாழ்க்கைப் பாடம் நடத்திறீர்...’ என்றமாதிரி. அம்மாவைச் சீண்டுவதற்கு அய்யாவுக்கு வாய்த்த ஆயுதம் அது. ஆனால், அந்த நாட்களில் எல்லாம் சண்டை போட்டு அய்யாவை மடக்கியிருக்கிறா அம்மா.

நேருஜி தன்னுடைய மகளான பிரியதர்ஸினி (இந்திரா) க்கு எழுதிய கடிதங்கள் அளவுக்கு, முக்கியமான கடிதங்களாக எங்கள் தாத்தாவின் கடிதங்கள் வரலாற்றுப் பிரசித்தியைப் பெறவில்லை என்றாலும் அம்மாவுக்கு அந்தக் கடிதங்கள் வரலாற்றுப் பொக்கிஷம். வாழ்க்கைப் பொக்கிஷம். நினைவுப் பொக்கிஷமே. பின்னாளில் அய்யாவின் கடிதங்களையும் அப்படி அம்மா சேர்த்து வைத்திருந்தா. ‘இதெல்லாம் பாரதி, புதுமைப்பித்தன் கடிதங்கள் இல்லைத்தான். எண்டாலும் வைச்சிருக்கிறன்’ என்று சொல்லிக் கொண்டு. (அய்யாவுக்கு உள்ளுர ஆயிரம் அதிர்வலைகள் அப்போது ஏற்பட்டிருக்கும்).

என்னிடம்கூட எத்தனையோ கடிதங்கள் இருந்தன. 25 ஆண்டுகளாகக் கடிதங்களைச் சேமித்திருக்கிறேன். நாடோடியையும் விட ஓயாது அலைந்த, போர்க்கால வாழ்க்கையில், இடப்பெயர்வுகளும் உத்தரவாதங்களும் இல்லாதிருந்த அந்தக் கொடிய வாழ்க்கையின் போது கூட ஏராளம் கடிதங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். ஆரம்பத்தில் சேகரித்த கடிதங்கள் கொஞ்சம் தொலைந்து விட்டன. அத்தனையும் முக்கியமான கடிதங்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் என்று சொல்வார்களே, அப்படிச் சில கடிதங்கள் என்னிடமுமிருந்தன.

பிரமிள், தஞ்சைப் பிரகாஷ், எம். வி. வெங்கட்ராம், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், தங்கர் கி.ராஜநாராயணன், பச்சான், உதிரிப்பூக்கள் மகேந்திரன், அன்ரன் பாலசிங்கம், அ. இரவி, நிலாந்தன், வே.பாலகுமாரன், சோலைக்கிளி, சு.வி, நற்பிட்டிமுனை பளீல், எம். எச். எம். நவாஷ், புதுவை இரத்தினதுரை, சாந்தன், செம்பியன் செல்வன், வரதர், நந்தி, சோ.கிருஷ்ணராஜா, தணிகாசலம், அ.யேசுராசா, முருகையன், சண்முகம் சிவலிங்கம், டொமினிக் ஜீவா, சோ.பத்மநாதன், கா.சிவத்தம்பி, கந்தையா சிறிகணேசன், அழ.பகீரதன், வாழைச்சேனை அமர், மேமன் கவி, கே.எஸ். சிவகுமாரன், கைலாஷ், பவானந்தன், நிர்மலன், தாமரைச்செல்வி, சு.மகேந்திரன், பா. அகிலன், புகழேந்தி, பா.செயப்பிரகாசம், குழந்தை ம. சண்முகலிங்கம், அ.மாற்கு, சின்னபாலா, இயல்வாணன், சாந்தன்.... இப்படி ஏராளம் பேர்களுடையவை.

இதை விட பின்னாளில் அறிமுகமாகியிருந்த இளைய படைப்பாளிகளிற் பலருடைய கடிதங்களும் நண்பர்கள் பலருடைய கடிதங்களும் கூட இருந்தன.

முக்கியமான உரையாடல்கள் அடங்கிய கடிதங்களைத் தேர்ந்து அவற்றைக் கடிதங்களை உறையிட்டுச் சேமிக்கும் கோவையொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். எத்தனை விதமான கடிதங்கள்.! ‘எத்தகைய உணர்ச்சிகரமான – அறிவெழுச்சியேற்பட்ட மனநிலையில் அவை எழுதப்பட்டிருக்கும் என அந்தக் கடிதங்களை வாசிக்கும்போது நினைத்திருக்கிறேன். சில கடிதங்களைப் பல தடவை படித்திருக்கிறேன். கடிதங்களில் இருக்கின்ற வசதியே அதுதான். எத்தனை தடவையும் அவற்றை நாம் படிக்கலாம். மறுபடி மறுபடி வாசிக்கலாம். தஞ்சை பிரகாஷ், பிரமிள், எம்.வி. வி, சு.வி, பளீல், சு.ரா, சு.வி, செம்பியன் செல்வன் போன்றோர் இறந்த வேளையில் அவர்கள் எழுதிய கடிதங்களை மீளவும் எடுத்துப் படித்திருக்கிறேன். நேரிலே எழுந்து வந்து உரையாடுவதைப்போல ஒரு உணர்வு வரும் அப்போது. எஸ்போஸை இனந்தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றதைப்பற்றிய சேதியறிந்த போதும் அவர் எழுதிய ஒரு கவிதையயும் கடிதங்களையுமே படித்தது இன்னும் நினைவிலுண்டு.

காதற்கடிதங்களை அந்தப் பருவ நாடகத் தருணத்தில் எத்தனை தடவைகள் படித்திருப்போம் என்று நினைத்துப்பார்த்தால் இது இலகுவாகப் புரியும். இப்போது அதை நினைக்கும்போது உள்ளே ஒரு வகையான கூச்சமெழுகிறது. நம்மையறியாமலே சிரிப்புக் கூட வருகிறது. படிக்கப்படிக்க மன எழுச்சியையும் இதத்தையும் தரும் கடிதங்கள் காதற் கடிதங்கள் மட்டுமல்ல, அரசியல் எழுச்சிகளை வலியுறுத்தும் கொள்கை விளக்கக் கடிதங்களுந்தான். எத்தகைய உணர்ச்சிச் சுழிப்புகளை அவை அந்த நாட்களில் ஏற்படுத்தியிருந்தன. அருளர், அன்னலிங்கம் ஐயா, நா. விசுவலிங்கம், டொமினிக் ஜீவா, பவானந்தன், சின்னபாலா, வே.பாலகுமாரன், சாந்தன் (ராம்) பரா, கைலாஸ், வசந்தி என்று எத்தனைபேர் இத்தகைய எழுத்துச் சித்திரங்களை வேட்கை ததும்ப எழுதினார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் வேட்கைகளை எழுதுவதற்கென்று அந்த நாட்களில் பலர் இருந்தார்கள். காலம் எல்லாவற்றையும் அடித்துப் போயிற்று வௌவேறு திசைகளில்....

இத்தகைய மன எழுச்சிகளைத் தரும் கடிதங்களாக பிறகு இலக்கியம் பற்றிய கடிதங்களிருந்தன. மனித இயக்கத்தையும் வாழ்வைப் பற்றிய தரிசனங்களையும் காண்பிக்கும் உணர்வும் அறிவும் சார்ந்த கடிதங்கள் அவை.

பிறகு ஒரு காலம். கண்ணீர்க்கதைகளையே தங்கள் எழுத்துகளாக்கினார்கள் பல தோழர்கள். அவர்களுடைய கடிதங்களைப் பார்ப்பதே அச்சத்துக்குரியது என்ற நிலை உருவாகியது. அந்தளவு கொடிய துயரங்களை அந்தக் கடிதங்கள் தாங்கி வந்தன. வழிகள் அழிந்தொடுங்கிய பிறகு, போக்கிடமற்ற தோழர்களின் குரல்கள் ஈனத்தில் ஒலித்தன. அந்த நாட்களில் தபாற்காரனைக் காண்பதற்கே மனம் அஞ்சியது. ஆனாலும் யதார்த்தை எப்படிப் புறக்கணிப்பது? வரும் கடிங்களை வாசிக்காமல் இருக்க முடியுமா? வாசிப்பதற்கஞ்சி, மூடப்பட்ட நிலையில் இருக்கும் கடிதம் அல்லது பிரிப்பதற்காகக் காத்திருக்கும் கடிதத்தை மூடிய நிலையிலேயே வைத்திருக்கும்போது ஏற்படும் பதற்றம் சாதாரணமானதல்ல. என்னதான் அதிர்ச்சியைத் தரக்கூடிய கடிதமாக, மன நெருக்கடிகளைத் தரக்கூடிய கடிதமாக அது இருந்தாலும் அதை அறியாமல் இருப்பதற்கு மனம் இலகுவில் அனுமதிக்காது. பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் அது. பதற்றத்தை மட்டுமா, குற்றவுணர்வையும்  ஏற்படுத்தும்.

ஆகவே, என்னதான் பாதகமான நிலையில் இருக்கின்ற போதும் வருகின்ற கடிதங்கள் வாசிக்கப்படுகின்றன. பதில் சொல்லமுடியாத கேள்விகளை அதில் பதிந்திருப்பார்கள் தோழர்கள். தெரிந்த விளக்கத்தையே மீண்டும் எழுதி விளக்குவார்கள். குற்றச் சாட்டுகள், துயர்பகிர்தல், துயரேற்றல், கழிவிரக்கம், மறுப்பு, வசை, கையறு நிலை, உதவி கோருதல் என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவை இருக்கும். அந்தக் கடிதங்களை எதிர்கொள்வதிலேயே நான் அதிக சிரமப்பட்டிருக்கிறேன். ஆனால், என்ன செய்ய முடியும்? படிக்கத்தான்வேணும். பதில் சொல்லத்தான் வேணும். நட்பின் முன்னே, தோழமையின் முன்னே மௌனம் கொள்வது சாத்தியமே இல்லை. அது நியாயமும் இல்லை.

இப்படியே கடிதங்களுக்கும் எனக்குமான உறவு நீண்டது. அரசியல் விவாதங்கள், இலக்கிய விவகாரங்கள், நட்பும் தோழமையும் கலந்த பரிமாறல்கள் என ஏராளம் கடித வழி உரையாடல்கள் நடந்து கொண்டேயிருந்தன.

வன்னியில் தொலைபேசி வசதிகள், இணைய வசதிகள் மட்டுப்பாட்டுடன் இருந்ததால் கடிதங்களே பெரும்பாலும் தொடர்பு வழியாக இருந்தன. இது கடித உறவாடலுக்கு முக்கிய ஒன்றாகியது. இப்படி வந்த கடிதங்களில் தேர்வு செய்து, இரண்டு பெரிய தொகுதிக் கடிதங்களைத் தயாரித்து எடுத்தேன்.

கிளிநொச்சியை நோக்கி 2008 இறுதிக் காலப்பகுதியில் படையினர் படையெடுத்து வரும்போது எல்லாப் பொருட்களோடும் இடம்பெயர்ந்தேன். கடிதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றை புதுக்குடியிருப்பிற்கு அனுப்பினேன். அங்கே நண்பர் முல்லைக்கோணேஸ் அவற்றை பொறுப்பெடுத்துத் தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். இடப்பெயர்வு பற்றிய அச்சங்கள் கோணேசுக்கும் இருந்தபோதும் அதை விட எங்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. முடிந்தவரையில் அவற்றைப் பாதுகாப்போம் என்ற அளவில் செய்யக் கூடிய ஏற்பாடுகளைச் செய்து அவற்றைப் பாதுகாப்பாக  வைத்தோம்.

ஆனால், எல்லாமே தலைகீழாகின. எதிர்பார்த்தபடியே படையெடுப்பு புதுக்குடியிருப்பை நோக்கியும் நடந்தது. இதனால், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதங்கள் மீண்டும் சோதனையைச் சந்தித்தன. கோணேஸ் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கே பெரும்பாடுபட்டார். பிறகு, புதுமாத்தளன் பகுதியில் அகதியாகக் கோணேஸைச் சந்தித்தபோது, ‘உங்களுடைய கடிதங்களும் புத்தகங்களும் இதுவரையில் பக்குவமாக இருக்கு’ என்றார். புதுக்குடியிருப்பில் அவருடைய வீட்டை விட்டு அவர் குடும்பத்தோடு வெளியேறியிருந்தாலும், அந்தப் பகுதியில் உக்கிரமான சண்டைகள் நடந்து கொண்டிருந்தாலும் எப்படியோ மனைவிக்கும் எறிகணைகளுக்கும் ரவைகளுக்கும் தண்ணி காட்டிக் கொண்டு புதுக்குடியிருப்பிலிருந்த தன்னுடைய வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தார் கோணேஸ். ஆனால், அது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற பயணம். ஒரு வகையில் அது ஒரு வீம்புச் செயல். எப்போதும் வீம்புச் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதமான விருப்பமுள்ளவர் அவர். அப்படிப் போய் வந்த கோணேஸ் வீட்டையும் பொருட்களையும் அவதானித்தார். அப்போது கடிதங்களும் பத்திரமாக இருந்திருக்கின்றன. அவருடைய புத்தகங்களும் அவர் சேகரித்திருந்த ஓவியங்களும் அவர் வரைந்திருந்த ஓவியங்களும் கூட.

ஆனால், யுத்தம் முடியும் போது...?

என்ன மிஞ்சும், நாங்கள் எப்போது மீண்டும் இந்த இடங்களுக்கெல்லாம் திரும்புவோம் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கெல்லாமோ அலைந்து ஓயும்போது புதுக்குடியிருப்புப் பகுதியிலும் மீள்குடியேற்றத்துக்காக சனங்கள் சென்றார்கள். முல்லைக்கோணேசும் போனார். ஆனால், போனவர்களுக்கு என்ன பொக்கிஸமா அங்கே காத்திருக்கும்?

கூரையற்ற வீட்டையும் சிதைந்து அழிந்து போயிருந்த பொருட்களையும் பார்த்த கோணேஸ் அடுத்ததாக புத்தகங்களையும் ஓவியங்களையும் தேடினார். என்னுடைய புத்தகங்களும் கடிக் கோவைகளும் இருந்த இடத்தைப் பார்த்தார்.

அங்கே?

எரிந்தும் உக்கியும் போன நான்கைந்து புத்தகங்கள்.... கூடவே அந்தக் கடிதப் படிகங்கள். கோணேஸ் முந்திச் சென்று அவற்றையே எடுத்தார்.

என்ன கொடுமை, அவை பெரும்பாலும் உருவழிந்து போய்விட்டன. ஆனால், எரியவில்லை. என்றாலும் பயன்படுத்த முடியாதவை ஆகிவிட்டன. எந்தக் கடிதத்தையும் சீராகப் படிக்க முடியாது. இனி அவற்றை என்றும் எங்கும் பெறவே முடியாது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் கண்முன்னே பார்க்கும்போது தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதைத்தான் ரவிக்குமார் சொன்னாரா, ‘யாழ்ப்பாண நூலகம் எரியுண்டபோது அதைக் கண்டு குமுறியவர்கள் மீண்டும் அப்படியொரு நூலகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தமக்குள் உறுதியேற்றிருப்பார்கள். அந்த விருப்பம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈடேறியது. என்றாலும் இது எத்தனை நாளைக்கு? என்ற கேள்வி ஒவ்வொரு நெஞ்சிலும் எழாமல் இல்லை. நூல்கள் காகிதத்தால் தயாரிக்கப்படுகின்றன. காகிதம் நெருப்பின் உணவு. நெருப்போ ஆதிக்கவாதிகளின் கையிலிருக்கும் ஆயுதம்’ (தீராநதி, மார்ச் 2012) என்று?

அந்த உருவழிந்த கடிதக்கோவையைக் கோணேஸ் தந்திருந்தார். ஆனால் அவற்றிற் கடிதங்கள் இருந்தன. ஆனால், அவை கடிதங்களாக இல்லை. உருவழிதல் என்பது இப்படியுமா? இந்த ரூபத்திலுமா?

00

Monday, May 28, 2012

ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை

நேர்காணல் - சங்கர கம்பர் கதிர்வேலு




யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photograpy) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு.


எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே ‘கமெரா’வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்கு மிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு.  


இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. . ஆனால், கதிர்வேலு மாறவேயில்லை. அவருடைய கையில் இன்னும் கமெரா இருக்கிறது. இந்த வயதிலும் களைத்து விடாமல், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் பதிவு செய்து கொண்டும் இருக்கிறார் கதிர்வேலு.  


கொந்தளிக்கும் அரசியற் சூழலில் கழிந்த அறுபது ஆண்டுகால யாழ்ப்பாண நிகழ்ச்சிகளின் பதிவுகளை கதிர்வேலு செம்மையாகப் பதிவாக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ஏராளம் அனுபவங்கள் உண்டு. முக்கியமாக 1961 இல் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் நடத்தப்பட்ட  சத்தியாக்கிரகத்தின் போது ஏற்பட்ட கலவரத்தினால் கதிர்வேலுவின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது. பின்னர், மிஞ்சிய ஒற்றைக் கண்ணோடுதான் அவருடைய ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பணியும் படப்பிடிப்புப் பணியும் கழிந்திருக்கிறது.


இப்போது கதிர்வேலுவுக்கு எழுபத்தி ஏழு (1933.08.16) வயது. ஆனால், சைக்கிளில் திரிந்தே எல்லா இடங்களுக்கும் போகிறார். சைக்கிளில் திரிந்தே படப்பிடிப்புகளைச் செய்கிறார். நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருக்கும் கதிர்வேலு இப்போதும் படு பிஸியான ஆள்தான். ஆனால், முதுமை அவருடைய ஞாபகப்பரப்பைச் சிதைக்கத் தொடங்கி விட்டது. பல விசயங்களை நீண் நேரம் நினைவு கூர்ந்த பிறகே சொல்கிறார்.


இன்னும் ‘பறந்து திரியும்’ கதிர்வேலுவைச் சந்தித்து உரையாடியபோது....

1. அன்றைய சூழலில் எப்படி நீங்கள் பத்திரிகைத் துறையிலும் படப்பிடிப்பிலும் ஈடுபட்டீர்கள்?

(சிரிக்கிறார்) நாங்கள் தமிழ் நாட்டில் திருச்செங்கோட்டுக்காரர். பாளையங்கோட்டைக்கு அருகே இருக்கிறது இந்த ஊர். சிறிய வயதில் நான் கட்டபொம்மன் இருந்த இடத்துக்குப் போய் பார்த்திருக்கிறேன். அப்பா இளைஞராக இருந்தபோது சுபாஸ் சந்திரபேரின் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். இதற்குத் தண்டனையாக அவருக்கு அப்போதைய ஆங்கில நிர்வாகம் அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாமல் அப்பா இன்னொரு கூட்டாளியோடு கொழும்புக்குத் தப்பி வந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து கொழும்பு முகத்துவாரத்துக்கு சிறிய ‘டிங்கி’ படகுகள் போய்வரும். அப்படி ஒரு படகில் எங்கள் குடும்பமும் முகத்துவாரத்துக்கு வந்தது.

பிறகு கொஞ்சக் காலம் நாங்கள் கொழும்பில் இருந்தோம். பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டோம். நான் யாழ்ப்பாணத்தில்தான் படித்தேன்.  பெருமாள் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த கன்னாதிட்ட சைவ ததுதிவிசாகப் பாடசாலையில் ஆரம்ப வகுப்பைப் படித்தேன். பிறகு வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் படித்தேன்.

ஆனால்,  முழுமையாகப் படிப்பை முடித்துக் கொள்ளவில்லை. நாங்கள் தவில் வாசிக்கும் குடும்பத்தில் இருந்தாலும் நகை செய்யும் தொழிலையே செய்தோம். அப்பா அந்தத் தொழிலில்தான் ஈடுபட்டார். நான் அதற்காக கொழும்புக்குப் போனேன். அங்கே செட்டியார் தெருவில் இருந்தபோது ஐந்து லாம்படிச் சந்தியில் ‘டொனால்ட் ஸ்ரூடியோ’ என்ற புகைப்பட நிலையத்தோடு தொடர்பேற்பட்டது. அந்த ஸ்ரூடியோவில் படங்களைக் கழுவிக் காயவைத்து உதவிசெய்தேன். அப்படிச் செய்யும்போது புகைப்படங்களைப் பிடிப்பதில் விருப்பம் வந்தது. அங்கேயே தொழிலைப் பழகினேன்.

அந்த நாட்களில் சில புகைப்படக்காரர்கள் பத்திரிகைகளிலும் வேலைபார்த்தார்கள். அதில் ஒருவர் கிங்ஸ்லி செல்லையா. அவர் வீரகேசரியில் இருந்தார். அவரோடு தொடர்பேற்பட்டது. அவருக்கு முன்னர் ராஜப்பா என்றொருவர் இருந்தார். அவர் பெரிய கெட்டிக்காரர். இந்த ரண்டு பேரும் இந்திய வம்சாவழி வந்தவர்கள். இவர்களுக்குப் பல பத்திரிகைக்காரருடன் தொடர்பெல்லாம் இருந்தது. ராஜப்பா லேக்கவுஸில் என்னை இணைத்தார். பிறகு அப்படியே வேறு ஆட்களின் தொடர்பு கிடைத்தது. நான் மெல்ல மெல்ல புகைப்படக்காரனாகி, பத்திரிகைகளுக்கான புகைப்படமெடுக்கத் தொடங்கினேன்.

பின்னர் இந்தத் தொடர்பு அதிகமாக லேக்கவுஸ் பத்திரிகை நிலையத்தின் யாழ்ப்பாணத்துக்கான படப்பிடிப்பாளராகினேன். யாழ்ப்பாணத்தை நாடு முழுவதும் என்னுடைய படங்களுக்கு ஊடாக வெளிப்படுத்தி வந்தேன்.

2. யாழ்ப்பாணத்தில் நீங்கள் வேலை செய்யத்தொடங்கிய காலத்தில் எப்ப நிலைமைகள் இருந்தன?

அப்போது யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளுக்குப் பெரிய அறிமுகங்கள் கிடையாது. மிகக் குறைவான ஆட்கள் மட்டுமே பத்திரிகையைப் படிப்பார்கள். யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தோடுதான் பத்திரிகை படிக்கும் வழக்கம் ஊரெல்லாம் ஏற்பட்டது. நான் யாழ்ப்பாணத்துக் காட்சிகளை எடுத்து புகையிரதத்தின் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் காட்சிகள் சுடச் சுட வந்தன. இது மக்களுக்கு ஒரு ஆர்வத்தைக் கொடுத்தது. அவர்கள் தங்கள் ஊர்களைப் பார்க்கவும் தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் விரும்பினார்கள்.

3.   சத்தியாக்கிரகக் போராட்டத்தின் பொழுது நீங்கள் படமெடுத்தீர்களா? அப்போதைய அனுபவங்கள் என்ன?

சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தின் அடக்குமுறையோடு முடிவுக்கு வந்தது. தொடக்கத்திலிருந்தே நான் படமெடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் உடுகம ( இவர்தான் அப்போது யாழ்ப்பாணத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார்) வெளியே வந்தார். அப்போது கலவரம் முற்றியது. இராணுவத்தினர் எதிர்பாராத விதமாகத் தாக்குதல்களைத் தொடுத்தார்கள். தடியடிதான். சனங்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். நான் ஓடியோடிப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இளைஞனல்லவா!

இதைப்பார்த்த உடுகம கமெராவைத் தரும்படி கேட்டார். நான் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உடுகம என்னுடைய கமெராவைப் பறிக்கும்படி படையினருக்கு உத்தரவிட்டார். அவர்கள் கமெராவைப் பறிக்க முயற்சித்தார்கள். நான் விடவில்லை. அந்த இழுபறியின்போது ஒரு கட்டத்தில் நான் கீழே விழுந்து விட்டேன். அவர்கள் கமெராவைப் பறித்துவிட்டார்கள். கீழே விழுந்த என்னைச் சப்பாத்துக்காலால் உழக்கினார்கள். என்னுடைய முகத்தில் சப்பாத்துக்காலை வைத்து நசுக்கினார்கள்.

இதனால் என்னுடைய ஒரு கண் வெளியே வந்து விட்டது. பின்னர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு என்னைக் கொண்டு போய்ப் போட்டார்கள். அங்கே வைத்தியம் செய்து கண்ணை உள்ளே தள்ளினார்கள். ஆனால் பார்வை போய்விட்டது.

அதற்குப் பிறது இந்த ஐம்பது வருசமாக ஒற்றைக் கண்ணோடுதான் படம் பிடிக்கிறேன். தொழில் செய்கிறேன். என்னுடைய கல்யாணம்கூட ஒற்றைக் கண்ணோடுதான் நடந்தது.

 ஆனால், சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியது. அப்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் இருந்தார்கள். அவர்களும் தமிழர்களைப் போலவே எல்லாவிசயத்திலும் ஆர்வமாக இருந்தார்கள். பத்திரிகைகளை வாசிக்கிற பழக்கம் வந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்தே ஈழநாடு பத்திரிகையும் வரத் தொடங்கியது.

4. அப்படியென்றால், நீங்கள் அரச சார்பு பத்திரிகை நிறுவனமான லேக்கவுஸில் வேலை பார்த்தீர்கள். அவர்கள் இந்தப் பாதிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?


நான் என்னுடைய முறைப்பாட்டைக் கொடுத்தேன். அவர்கள் விசாரித்தார்கள். பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய கமெராவை உடைந்த நிலையில் காட்டினார்கள். கமெராவுக்கான நட்ட ஈட்டைத்தந்தார்கள். வழக்கு நடந்தது. பிறகு சைக்கிளை சேதமடைந்த நிலையில் நீதிமன்றத்திலிருந்து மீட்டெடுத்தேன்.

5. அப்போது என்ன கமெராவைப் பயன் படுத்தினீர்கள்?

ஆரம்பத்தில் ஜேர்மன் தயாரிப்புக் கமெராக்கள்தான் அதிகமாகப்புழக்கத்தில் இருந்தன. நான் றொலி கோட் என்ற கமெராவைப் பயன்படுத்தினேன். அந்த வகைக் கமெராவை இப்போதும் நான் வைத்திருக்கிறேன். பிறகு றொலி பிளாக்ஸ் என்றொரு கமெராவை வைத்திருந்தேன். அதுவும் ஜேர்மன் கமெராவே. ஆனால் பாவனையில் இப்பொழுது அதெல்லாம் கிடையாது. அதற்கு இப்போது அதிக செலவுமாகும்.

இந்தக் கமெராக்களினால் எத்தனையோ ஆயிரக்கணக்கான படங்களைப் பிடித்திருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள், எத்தனையோ கூட்டங்கள், எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ இடங்கள், எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள்... (எல்லாவற்றையும் நினைவு கூர்வதாக எங்கோ வெறித்துப் பார்க்கிறார்).

6. சரி, உங்கள் இளமைக்கால யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

எல்லோமே நினைவில் இல்லை. எனக்கு இப்பொழுது கொஞ்சம் மறதி அதிகம்.

அப்பா கொழும்புக்கு வந்தபோதும் அம்மா தமிழ் நாட்டில்தான் இருந்தா. நான் பிறந்த சேதியை கடிதம் மூலமாகவே அப்பாவுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது இந்த மாதிரி தொலைபேசி வசதிகள் எல்லாம் கிடையாது. பிறகுதான் அம்மா கொழும்புக்கு ‘டிங்கி’யில் வந்திருக்கிறா.

கொழும்பில் இருந்த எங்கள் குடும்பம் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. அதுக்குக் காரணம் யுத்தம்தான். அப்பொழுது இரண்டாம் உலகப் போர் நடந்தது. யப்பான்காரன் கொழும்புக்குக் குண்டு போடுவான் என்ற பயத்தில் அப்பா குடும்பத்தை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் அப்போது சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன. நாங்கள் நகரத்தில் இருந்ததால் இந்தப் பிரச்சினைகளில் அதிகமாக மாட்டிக் கொள்ளவில்லை. அத்துடன், நாங்கள் நகை செய்யும் தொழிலோடு இருந்ததால் அதிகமாகப் பிரச்சினைகள் வரவில்லை. என்னுடைய திருமணம் கூட சாதிப்பிரச்சினையால் நின்றது. அதாவது நான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யவில்லை. அதற்குச் சாதி தடையாக இருந்து விட்டது.

ஆனால், அந்த நாளில் யாழ்ப்பாணத்தில் பல சண்டியர்கள் இருந்தார்கள். அதிலும் நகரத்தில் அவர்களின் சண்டித்தனங்கள் அதிகமாக இருந்தது. இனப்பிரச்சினை போர் என்று வந்த பிறகு சண்டியர்கள் இல்லாமற் போய் விட்டது.

யாழ்ப்பாணத்து மக்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் படிப்பாளிகளாவும் இருந்தார்கள். நான் பானை சட்டி செய்வோர், நகை செய்வோர், புடவை நெசவு செய்வோர் போன்றோருடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அப்பொழுது மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உள்ளுரிலேயே செய்தார்கள். வெளியூரிலிருந்து பொருட்கள் வருவது குறைவு. ஆனால் சாதிப்பிரச்சினை அதிகமாக இருந்தது. இதனால் பல கெட்டிக்காரர்கள் படிக்க முடியாமல் தவறிப் போனார்கள்.

இதைவிட திருவிழாக்களைப் பற்றிச் சொல்ல வேணும். அப்போது சின்னமேளம் என்ற சதுர்க்கச்சேரி இருக்கும். மேளச்சமா இருக்கும். வில்லுப்பாட்டு, கதைப்பிரசங்கம் எல்லாம் இருக்கும். இந்தியாவிலிருந்து கூட ஆட்கள் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் அப்போது கொடிகட்டிப்பறந்த நடிகர் தியாகராஜ பாகவதர்தான். அவர் யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். யாழ்ப்பாணத்துக்கு எம். ஜீ. ஆரும் சரோஜாதேவியும் வந்தபோது நான் படமெடுத்தேன.

7. தமிழராய்ச்சி மாநாட்டினை நீங்கள் எப்படிப் பதிவு செய்தீர்கள்?

நான் முறையாகப் பதிவு செய்து செய்தியையும் படங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். இறுதிநாள் நிகழ்வின்போதுதான், பிரச்சினை நடந்தது. அப்போது நானும் இன்னொரு நண்பருமாக தேநீர் குடிப்பதற்காக கடைக்குப் போயிருந்தோன். அந்த நண்பருக்குப் புகைபிடிக்கும் வழக்கம் இருந்தது. அதனால் சற்று நேரம் கடையில் நின்றோம். அந்த நேரத்தில்தான் கலவரம் நடந்தது. சம்பவ இடத்தில் நாங்கள் நிற்கவில்லை என்றாலும் அதற்கு அருகில் நின்றதால் பல படங்களைப் பதிவு செய்தோம்.

ஆனால், சிக்கலுக்குள் நான் மாட்டிக்கொள்ளவிலலை. அதனால் பெரும்பாதிப்புகள் எனக்கு ஏற்படவில்லை.

8. வேறு என்னமாதிரியான நிகழ்வுகளில் நீங்கள் முக்கியமான பங்கை ஏற்றிருக்கிறீங்கள்?

பிறகு வந்த காலங்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் பிரச்சினைதான். படத்தைப் பிடித்தாலும் பிரச்சினை. பிடிக்காவிட்டாலும் பிரச்சினை. தேர்தற்காலங்களில் பல அரசியல் தலைவர்களையும் படம் பிடித்திருக்கிறேன். நான் சந்திக்காத தலைவர்களே இல்லை. தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயத்தை, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் கார்த்திகேசன் மாஸ்டரை, வி. பொன்னம்பலத்தை, எழுத்தாளர்களான டானியலை, டொமினிக் ஜீவாவை என்று நான் படம் பிடிக்காத பிரபலங்களே யாழ்ப்பாணத்தில் இல்லை. இதைவிட யாழ்ப்பாணத்தில் 1958 இல் தாக்கிய சூறாவளியின் அழிவுகளை, பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளை... இப்படி எல்லாவற்றையும் படமாக்கியுள்ளேன். கடந்த 2008 இல் வீசிய சூறாவளி அழிவைக்கூட படம் பிடித்திருக்கிறேன்.

பிறகு போர்க்காலம். யாழ்ப்பாணத்துக் கடைகள் எரிந்தன. ஈழநாடு காரியாலயம் எரிந்தது. யாழ்ப்பாண நூலகம் எரிந்தது.  எல்லாவற்றையும் படமாக்கினேன். பிரச்சினைகளைப் படம் பிடிப்பது என்றாலே பிரச்சினைதான். விடுதலைப் புலிகளை, வேறு இயக்கங்களின் நிகழ்ச்சிகளை என்று நான் எப்போதும் மக்களுக்குரியதை வெளிப்படுத்த படமாக்கியிருக்கிறேன். ஆனால் நான் தொழிலைச் செய்து கொண்டேயிருந்தேன்.

சில சம்பவங்கள் முக்கியமாக இருக்கின்றன. அவை பல. ஆனால் எனக்கு எல்லாம் இப்போது உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. ஒருமுறை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர் இரும்பு மனிதன் என்ற நாகநாதனுக்கும் எனக்கும் பிரச்சினை வந்தது. அவர் கட்சியில் உள்ள யாருடனோ வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கை கலக்கும் நிலைக்கு வந்தது. அப்போது அந்தக் காட்சியை நான் படமாக்கிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த நாகநாதன் என்னுடைய கமெராவைப் பிடுங்கினார். நான் கொடுக்க மறுத்தபோது பிரச்சினை வந்தது. கடைசியில் அவர் அதைப் பறித்து விட்டார்.

உடனே நான் என்னுடன் வைத்திருந்த அடுத்த கமெராவினால் படம் பிடித்தேன். இது நடந்தது உடுவிலில்.

9.   நீண்டகாலமாகவே பத்திரிகைப் படப்பிடிப்பாளராக இயங்கி வந்திருக்கிறீங்கள். ஆனால், பத்திரிகை அலுவலகத்தில் எதற்காகப் பணியாற்ற முயற்சிக்கவில்லை?

எனக்குப் படிப்புக்குறைவு. ஆனால், படம் பிடிக்கும் திறமை இருந்தது. படிப்புக் குறைவு என்றபடியால் அலுவலகத்துக்குப் போக நான் விரும்பவில்லை. என்னுடைய திறமையை இனங்கண்டு படப்பிடிப்புக்குச் சந்தர்ப்பம் தந்தார்கள். நாற்பது ஆண்டுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் முதற்தரப் படப்பிடிப்பாளராக என்னை லேக்கவுஸ் வைத்திருக்கிறது. இடையில் சிலகாலம் உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளுக்கும் படங்களைப் பிடித்திருக்கிறேன். அதற்கு முன்னர் ஈழநாடு பத்திரிகைகூட என்னிடம் முக்கியமான சில படங்களைக் கேட்டுப் பிரசுரித்திருக்கிறது.

அலுவலகத்தில் வேலை செய்வதற்கு அந்த நாளில் 180 ரூபாய்தான் மாதச் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஆனால், நான் வெளியே படப்பிடிப்பிலும் செய்தி சேகரிப்பிலுமாக 500 ரூபாய்க்கு மேல் உழைப்பேன். அப்போது நான் சொந்தமாக ஒரு கார்கூட வைத்திருந்தேன்.

பலர் தங்கள் படங்களைத் தேடி என்னிடம் வந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து கூட கேட்டு எழுதியிருக்கிறார்கள். நான் பிடித்த படங்கள் இன்று வரலாற்று ஆவணங்களாகியிருக்கின்றன. இதுவரையில் லட்சத்துக்கும் அதிகமான படங்களைப் பிடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். பெரும்பாலன படங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பல ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைக்குப் போயிருக்கிறது. ஆனால் எண்ணிக்கையை நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.

அப்பொழுது திறமைக்கு இடமளித்தார்கள். திறமையானவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.


10. யாழ்ப்பாண இடப்பெயர்வின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்தப் பதிவு உங்களிடம் இல்லையா?

நானும் இடம்பெயர்ந்தேன். அப்போதுகூடப் படங்களைப் பிடித்தேன். ஆனால், பின்னர் உருவாகிய தொடர்பில்லாத நிலைமைகளால், படங்களை கொழும்புக்கு அனுப்ப முடியவிலலை. யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளுக்கு மட்டும கொடுக்க முடிந்தது. பிறகு அப்படியே வன்னிக்குப் போய் விட்டேன். வன்னியிலிருந்தும் கொழும்புக்கு படங்களை அனுப்ப முடியவில்லை. ஆனால் வன்னி நிலைமைகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது அங்கே இருந்த முக்கியமான பலர் என்னைத் தங்கள் நிகழ்வுகளுக்கு அழைத்துப் படம் பிடித்துக் கொள்வார்கள். முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் பிடித்திருக்கிறேன்.

பிறகு புரிந்துணர்வு உடன்படிக்கை வந்தவுடன் நான் மறுபடியும் யாழ்ப்பாணத்துக்கு வந்து  விட்டேன். அப்படியெ மீண்டும் லேக்கவுஸ_டன் தொடர்பும் கிடைத்து விட்டது. நானும் இன்னொருவரும் தான் பழைய மூத்த ஆட்களாக லேக்கவுஸில் வேலை பார்க்கிறோம். ஆனால் நான் ஒரு சுதந்திரப் படப்பிடிப்பாளர். கமெராதான் எனக்கு வாழ்க்கை.


11. இப்பொழுது என்னமாதிரியான கமெராவைப் பயன்படுத்துகிறீங்கள்?

இப்போது நான் வைத்திருக்கிற கமெரா யப்பான் சொனி ரகம். இதை என்னுடைய மகள் கொடுத்து அனுப்பியிருக்கிறாள். அவள் வெளிநாட்டில் இருக்கிறாள். ஆனால் அந்தப் பழைய ஜேர்மன் கமெராக்களையும் வைத்திருக்கிறேன்.

டீஜிற்றல் கமெரா என்றால் பத்திரிகைத் தொழிலுக்குச் சுலபம். ஆனால், முன்னைய கமெராவைப் போல படங்களைத் தரமாக எடுக்க முடியாது. இந்த டிஜிற்றலில் லாபமும் வசதிகளும் கூடுதலாக இருப்பதால் அதையே பயன்படுத்துகிறேன்.

12. உங்களின் கடந்த காலப் பதிவுகளை ஒரு அல்பமாகச் செய்து வெளியிடலாம் அல்லவா? இதைத் தவிர, இவ்வளவு நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் உங்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைத்திருக்கின்றனவா?

நான் பதிவு செய்யாத சம்பவங்களே இல்லை. ஆனால், அதெல்லவற்றையும் தேடி எடுக்க வேணும். அதுக்கு இப்போது என்னால் முடியாது. முன்னர் நாட்டு நிலைமைகள் இடந்தரவில்லை. இப்போது நான் இப்படி இயங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதை யாராவது பொறுப்பானவர்கள் செய்யலாம். அவர்கள் யாராவது முயற்சித்தால் நான் தகவல்களைத் தரமுடியும். அதாவது அவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் முடியும்.

நீங்கள் சொன்னமாதிரி இந்தப் படங்களை எல்லாம் தொகுத்தால் நிச்சயமாக வடபகுதியின் 60 ஆண்டுக்கால வரலாற்றையும மக்களின் வாழ்க்கையையும் முக்கியமான தலைவர்களையும் பார்க்கலாம். புகைப்படங்கள் காலத்தின் சாட்சி என்று சொல்லுவார் ராஜப்பா. நான் காலத்தின் சாட்சியான ஒரு பணியைச் செய்திருக்கிறேன். இதில் பொய்யுக்கு இடமேயில்லை. உண்மைக்காக நான் நிறைய விலைகளையும் கொடுக்க வேண்டியிருந்தது

யாழ்ப்பாணத்தில் இருந்தபடியால் எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை. இதுக்குக் காரணம், யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் ஒரு தொடர்ச்சியையோ தொடர்புகளையோ கொடுக்கவில்லை. ஆனால், வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் பாராட்டியிருக்கிறது. அவர்களுக்குத்தான் என்னுடைய பங்களிப்பைப் பற்றியும் தெரியம். இங்குள்ள நிலைமைகளையும் தெரியும்.

எனக்கு எப்போதுமே சந்தோசம் தருகிற விசயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய படங்களை மக்கள் பார்த்து வருகிறார்கள். அறுபது ஆண்டுகளாக நான் பத்திரிகைத் துறையில் தொடர்ந்தும் இருக்கிறென். எல்லா நெருக்கடிக் காலங்களிலும் நான் புகைப்படக்காரனாக நின்று எல்லாவற்றையும் பதிவாக்கி ஒரு சாட்சியத்தைத் தந்திருக்கிறேன். இது போதாதா சந்தோசமாக இருப்பதற்கு? எல்லாத்தையும் விட போட்டோ ஜேர்ணலிஸ்ற்றாக நானே இருந்திருக்கிறேன். என்னுடைய படங்கள் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி ஊடகங்களிலும் வந்திருக்கின்றன.

13. லேக்கவுஸில் வேலை செய்திருக்கிறீர்கள். அது இலங்கை அரசின் சார்பு ஊடக மையம். ஆனால், கடந்த கால நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக - இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக நடந்தவை. மஇதை எப்படி லேக்கவுஸ் பத்திரிகைகளில் வெளிப்படுத்தினீர்கள்?

நான் புகைப்படக்காரன். எரிந்தால் எரிந்தது என்று படம் பிடித்து அனுப்புவேன். விழுந்தால் விழுந்தது என்று படத்தைப் பிடித்துக் கொடுப்பேன். புகைப்படம் என்பது பதிவு. அது ஒரு சாட்சி. ஆகவே நான் படத்தைப் பிடித்து அனுப்பி விடுவேன். அவர்களும் அதை எப்படியோ பிரசுரித்துத்தான் ஆகவேணும். ஆனால், அந்தப் புகைப்படத்துக்குச் செய்தியை எழுதுகிறவர் சிக்கல் பட்டிருக்கிறார். இதை அவர்களே எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நீ படத்தைப் பிடிச்சு அனுப்பிப் போடுவாய். நாங்கள் அதுக்குச் செய்தி எழுதேலாமல் கஸ்ரப்படுகிறம் என்று. ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து, இது என்னுடைய அனுபவம்.


00








Wednesday, May 23, 2012

வானவிற் பழம்















காலையில் குதித்தோடும் மஞ்சள் நதி
மாலையில் வட்டமிடும் வெள்ளைப்புறா
நேற்று வாசனை மிகுந்த செம்மலர்
சிலபோது காடெல்லாம் ஒரு கொடியாகிய
பச்சைத்தேவதை
அடி சின்னப்பெண்ணே
இதுவென்ன வானவிற் காலமா

இந்தக் கோடையில்
குளிரும் கலர்ப்பழமாகி
தினமும் வருகிறாய் என் அறைக்கு

ஒருவன் சொல்கிறான்
நீ வானவில் என்று
இன்னொருவன் சொல்கிறான்
நீ வண்ணத்துப் பூச்சியென்று
நான் சொல்கிறேன்
நீ கோடையில் விளைந்த குளிர்ப்பழம் என்று

அடி எங்கள் சின்னப் பெண்ணே
எதில் நீ இருக்கிறாய்
அதில் நீ எப்படி இருக்கிறாய்?


00

Friday, May 11, 2012

ஞாபகங்களும் கனவும்































கந்தன் டேவிற் கலா வுடனான உரையாடல்  


உரையாடியவர் -
அரியகுட்டி முபாரக்  
நாற்பத்தியாறு கவிதைகளை மட்டும் எழுதி மூன்று கவிதைத் தொகுதிகளில் அவற்றை வெளியிட்டிருக்கிறார் கந்தன் டேவிற் கலா.    
உதிரும் கடல் 
காயப்பட்ட வெயில்    
புல்வெளியில் அசையும் கத்தியின் நிழல்   
என மூன்று கவிதைத் தொகுதிகளையும் ஒரே நாளில் வெளியிட்டிருக்கிறார் அவர்.

இதைவிடவும்  

நோக்காடு
பூனை என்ற பூனை  
என்று இரண்டு சிறுகதைத்தொகுப்புகளையும்

தோற்றுப்போன நக்கீரன் 
காடுகளின் மீது தீ   
சொல்ல முடியாத வார்த்தைகளின் குவியல்    
எதுவுமில்லை, ஆனால் சில  
ஆகிய விமர்சன நூல்களும்

நண்பர்கள் பகைவர்கள்
என்ற கட்டுரைத்தொகுப்பையும் கடேக வெளியிட்டிருக்கிறார். ஆனால் இவற்றில் அவரை அதிகமான சர்ச்சைக்குள்ளாகியவை அவருடைய கவிதைகளும் நண்பர்கள் பகைவர்கள் கட்டுரைத் தொகுப்பும் தோற்றுப்போன நக்கீரன் விமர்சன நூலுமே.அதிலும் தோற்றுப்போன நக்கீரன் தமிழ்ச் சூழலை கடுங்கேள்விக்குள்ளாக்கியதால் அந்த நூல் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. அதேயளவுக்கு அது கடுமையான எதிர்ப்பையும் சந்தித்தது. இவ்வளவுக்கும் அது ஒன்றும் அதிக விமரினத்தையோ தீவிர கருத்தாடலையோ கொண்டிருக்கவில்லை என்றும் அப்படியான விமரிசனங்களை எதிர் கொள்ளும் திராணியை தமிழ்ச்சூழல் பெற்றிரக்கவில்லை என்றும் கந்தன் டேவிற் கலா சொல்கிறார்.

தமிழில் செழிப்பான விமர்சன மரபொன்று இருந்ததாகவும் அந்த விமர்சன மரபில் கடவுளையே கேள்வி கேட்கக்கூடிய இடமிருந்ததாகவும் சொல்கிற தமிழ்ச்சூழலில் இப்போது யாரும் விமர்சனங்களை முன்வைக்கமுடியாத   நிலைதானுண்டு.

இது தமிழ் வாழ்வை முடக்கும் நிலை. தமிழர்கள் மிகமிகப்பின்தங்கியே இரக்கப்போகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. வளர்ச்சியை விமரிசனமே ஏற்படுத்துகிறது. பன்முகச்சிந்தனையையும் சுதந்திர வெளியையும் ஆளுமையையும் விமரிசனமே உருவாக்குகிறது. விமரிசனம் ஜனநாயகத்தின் பேறு. அதுவே மக்களின் விடுதலைக்கான தளம். அதுவே ஒடுக்கப்பட்ட மக்களையும் அதிகார வர்க்கத்தையும் சமநிலைப்படுத்துகிறது. பரஸ்பரத்தையும் பகிர்வையும் அதுவே ஏற்படுத்துகிறது. நம்பிக்கையையும் எதிர்காலம்பற்றிய எண்ண விரிவையும் அதுதான் தருகிறது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாகவே பொதுவான தமிழ்ச்சூழல் இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே இதுதான் முழுத்தமிழ்ச்சூழலின் நிலையும் என்று அந்தப்புத்தகம் விவாதத்தைக்கிளப்புகிறது.

ஒருவர் அல்லது பலர் முப்பது நாற்பது வருசமாக எழுதிய கவிதைகளை ஒரு புத்தகத்தில் ஒரே நாளில் வாசிக்கலாம் என்றால் ஏன் ஒன்பது வருசங்களாக எழுதிய கவிதைகளை ஒரே நாளில் வெளியிடக்கூடாது என்று கேட்டார் கந்தன் டேவிற் கலா. 
அதுவும் மூன்று நூல்களாக.

நாற்பத்தியாறு கவிதைகளையம் ஏன் ஒரு தொகுதியில் வெளியிடவில்லை என்று கேட்டேன்.

' ஏன் ஒரே தொகுதியில் வெளியிட வேண்டும்' என்று திருப்பிக் கேட்டார் க.டே.க.

அவற்றின் தன்மைகள் அவசியம் பொறுத்தே அவை அப்படி வெளியிடப்பட்டிருக்கின்றன. தவிர, ஏன் மூன்று தொகுதிகளில் வெளியிட்டால் என்ன ' என்றுமவர் தொடர்ந்து கேட்கிறார்.

இருபத்தெட்டு காதற் கவிதைகள், நாற்பத்தியொரு அரசியற் கவிதைகள், பத்தொன்பது தலித் கவிதைகள், பதினேழு பெண்ணியக் கவிதைகள், முப்பத்தியாறு அகதிக்கவிதைகள், சூழலியல் பற்றிய பதின்னான்கு கவிதைகள், பன்னிரண்டு சர்ரியலிசக் கவிதைகள், இருபத்தொன்பது இருத்தலியற் கவிதைகள், எட்டு அந்நியமாதற் கவிதைகள் என இதுவரையில் கந்தன் டேவிற் கலா இருநாற்று நான்கு கவிதைகளை எழுதியுள்ளதாக விமர்சகர்களின கணக்குகள் சொல்கின்றன.

இந்தத்தொகை அவருடைய கவிதைகளைப்பற்றி விமர்சகர்கள் கூறியவை. இதைவிட இன்னும் கூடுதலான தொகையை வேறுவிமர்சகர்கள் கண்டு பிடித்திடவும் கூடும். ஆனால் தான் இதுவரையில் நாற்பத்தியொன்பது கவிதைகளை மட்டுமே எழுதியுள்ளதாகச் சொல்லி அவற்றைக் காட்டி சாட்சிப்படுத்தினார் அவர்.

அதெப்படிக்கணக்கு வேறுபடுகிறதேயென்று க.டே.க விடம் கேட்டேன்.
அவரவர் விருப்பம், தேர்வு, ரசனை, அரசியல், நோக்கு, அடையாளங்காணல் என்பவற்றைப்பொறுத்து அவர்கள் கவிதைகளை அடையாளம் காணுகிறார்கள். அப்படியே அவர்கள் கவிதைகளை வகைப்படுத்துகிறார்கள். அதன்படியே பிரிக்கிறார்கள் என்கிறார் கந்தன் டேவிற் கலா.
இதற்கிடையில் அவர் எழுதியுள்ள நாற்பத்தொன்பது கவிதைகளில் மூன்று கவிதைகளை எந்தத் தொகுதியிலும் சேர்க்கவில்லை. அவற்றை அவர் தவிர்த்து விட்டார்.

ஏன் அந்தக்கவிதைகள் மூன்றும் தவிர்க்கப்பட்டன என்ற அவரிடம் கேட்டேன். அவை இப்போது பொருந்தா ஒளியுடையவை என்றார்.  

பொருந்தா ஒளியென்று அவர் சொன்னது அதிக பவருடைய ஒளியைப்பார்ப்பதற்கு சாதாரணமான கண்ணால் முடியாது. ஹை பவரைப்பார்ப்பதற்கென்று ஒரு சாதனம் வேண்டும். அதுவரையில் அந்தக்கவிதையை தள்ளிவைத்துள்ளதாகச் சொல்கிறார்.

சரி, மேற்கோண்டு சொல்லுங்கள் என்றேன்.

' அவரவர் விருப்பம், தேர்வு, ரசனை, அரசியல், நோக்கம், தேவை என்பவற்றைப் பொறுத்து அவர்கள் கவிதைகளை அடையாளம் காணுகிறார்கள்.  அதன்படியே அவர்கள் கவிதைகளை வகைப்படுத்துகிறார்கள். அப்படியே கவிதைகளைப்பிரித்தும் விடுகிறார்கள்.

ஆனால் கவிதையை புரிந்து கொள்ளுதலிலுள்ள பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அது தீரப்போவதுமில்லை. கவிதையை அணுகுவதிலேயே   பிரச்சினைகளிருக்கின்றன. கவிதை பன்நிலைப்பட்டது. இது வடிவத்திலுமுண்டு. பொருளிலுமுண்டு. வெளிப்பாட்டிலுமிருக்கிறது. '
ஒரு கவிதையின் அனுபவத்தையும் அதன் நுட்பத்தையும் அறிவதிலும் நெருங்குவதிலும் ஒவ்வொருவருக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. ஆளுக்காள் அவரவர் தன்மைகளிலும் அனுபவங்களிலும் கோணங்களிலும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். மாறுபடலாம்.

எந்தக்கவிதையையும் அவரவர் தங்கள் அனுபுவங்களின் வழியாகவும் தளங்களின் ஊடாகவுமே அணுகுகிறாhர்கள். அப்படியே அடையாளம் காணுகிறாhர்கள்.   அப்படிக்காண்கிற அடையாளம் பல  சந்தர்ப்பங்களிலும் கவிஞரைப் பாதிக்கிறது. கவிதையையும்  பாதிக்கிறது. இதில் கவிஞருக்கு எந்தச் சம்மந்தமுமில்லை. ஆனால் இந்த அடையாளப்படுத்தல்களின் விளைவுகளுக்குக் கவிஞர் பொறுப்பாக வேண்டியிருக்க்pறது. கவிதையும் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

பல சந்தர்ப்பங்களிலும் ஒரு கவிதையை வௌவேறாகப் புரிந்து கொள்ள முடியும். சில புரிதல்கள் கவிஞனை அபத்தமாகக் காட்டியும் விடுகின்றன. அப்படியொரு அபத்த நிலையுருவாகும்போதுதான் கவிஞன் பெருந்துன்பத்தில் வீழ்த்தப்படுகிறான். அவனுடைய கவிதைகளே அவனைத்தண்டனைக்குட்படுத்தும் படியாகின்றன. ஆனால, கவிதைகள் அவனைத்தாக்கும் கருவியாக வில்லை.

கவிதையைப்பரிந்து கொள்வோரின் பிழை மனம் கவிதைகளில் மள்ளை ஏற்றி விசத்தை ஊற்றி அவனுக்கே அந்தப்பண்டத்தை ஊட்டி விடுகிறது. கிவிஞன் எந்தச்சம்மந்தமுமில்லாமல் பழி வாங்கப்படுகின்ற கொடுமையின் அபத்தம் உருவாகும் விதத்தைப்பார்த்தீர்களா என்று சொல்லிக் கொண்டே போகிறார் கலா.

கந்தன் டேவிற் கலா முற்றிலும் வேறான அடையாளத்தைக் கோருகிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அவர் சாதாரண மனிதனாக வாழ்வதற்குரிய வெளியை இயல்பாக விரும்புகிறார்;. அதற்காக அவர் தன்னை வெளிப்படையாக வைத்திருக்கிறார். வெளிப்படை என்பது சுதந்திரமானது என்பதால் தான் அப்படி இருக்கிறென். அதிலிருக்கும் சுகத்தை இழக்க முடியாது. எந்த வளையங்களும் அதிலில்லை. அதில் எழுச்சியுமில்லை, வீழ்ச்சியுமில்லை. தேய்மானங்களுமில்லை என்கிறார் அவர்.

புலன்கள் மங்கிய சமூகமாக தமிழ்ச்சமூகமிருப்பதால் எதையும் புரிந்து கொள்வதற்கு அது நிறையவும் சிரமப்படுகிறது. நுண்ணுணர்வை அது இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மந்தைத்தனத்தை அது விட்டுவிடத்தயாரில்லை. இதுதான் அதன் பெருங்குறைபாடு.  பாரம்பரியம், மரபு, வழமை என்ற சொல்லாடல்களுக்குள் அது தன்னைக் கட்டிவைத்திருக்கிறது. நவீனத்தைக் கண்டு அது பேதலிக்கிறது. இத்தகைய அபத்தம் உலகமயமாகிய சூழலில் பெரும் பிரச்சினைகளை தமிழ்ச்சமூகத்துக்கு கொண்டு வருகிறது.
பொதுவாக தன்னை அறியும் நிலையை தமிழ் வாழ்;க்கை கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது. அதன் பிறகு அது இன்னும் தன்னுடைய நிலைமையையே மதிப்பிடவில்லை. இந்த கணக்கிடாமை என்பது சுயபரிசோதனை இல்லாத நிலையின் தொடர்ச்சிதான். சுயபரிசோதனை மட்டுமல்ல பரிசோதனை முயற்சிகளே அதற்கு ஒவ்வாத குணங்களாகிவிட்டன.

இல்லையென்றால் அது நல்ல சினமாவையோ, புத்தி பூர்வமான அரசியலையோ, தேர்;ந்த இலக்கியத்தையோ, அறிவு ப+ர்வமான பண்பாட்டையோ, முன்னேற்றகரமான வாழ்க்கையையோ கண்டறியாமல் விட்டிருக்குமா. இந்தமாதிரியான முயற்சிகளுக்கு இதுவரையான தமிழ்ச்சமூகத்தின் அங்கீகாரமென்ன. பொதுவான தமிழர்களின் ரசனை மட்டம் ஏனிப்படித்தாழ்ந்து பொயிருக்கிறது. நீண்ட வாழ்வுத் தொடர்ச்சியுடைய ஒரு இனம் ஏன் இப்படி சகலவற்றிலும்   மிகப்பின்தங்கியிரக்கிறது.
இப்படிக் குமுறிக்கொண்டே போனார் க.டே.க.

புரிந்து கொள்ளல்தான் உலகின் முதற் பிரச்சினையும் பெரும் பிரச்சினையும். அறிவு என்பது புரிந்து கொள்ளலுக்கான, வழிகளைக்கண்டறிவதற்கான கருவியாக மாறியிருக்க வேணும். ஆனால் நடந்திருப்பது எதிர்மறையானது. அறிவு தவறான விளக்கங்களைக் கொள்ளும் வழிகளையே திறந்து விட்டிருக்கிறது.

அடிப்படையில் சந்தேகமும் தன் நோக்கமும் வளர்ந்திரக்கிற வாழ்க்கையில் எதனையும் கற்பிதங்க@டாகவே புரிந்த கொள்ளும் அறிவை வளர்ப்பதெ தவிர வேறென்ன செய்ய மடியும். உலகில் இந்தப்பிரச்சினைகள் தீர வாய்ப்பில்லை. பதிலாக இன்னுமின்னும் பிரச்சினைகள் உரவாகவே போகின்றன.

ஒவ்வொரு மனிதனும் தனது மிகப் பெரிய சேமிப்பாக காயங்களையே நிரப்பிக் கொள்கிறான். எல்லா விதமான வளங்களையும் விட காயங்களை வழங்குவதையே மனித குலம் இலக்காகக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன. பல சமயங்களிலும் நம்பிக்கையை நம்பிக்கைக்குரியவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அல்லது பலியிடப்படுகிறார்கள்.

நம்பிக்கையூட்டக்கூடியமாதிரி கவிதைகளை எழுதுங்கள், படைப்புகளை முன்வையுங்கள் என்ற வெண்டுதல், அல்லது கோஷங்கள் எந்த அளவுக்கு அறிவுத்தனமாகவும் உண்மையாகவும் மன்னிறுத்தப்படுகின்றன. சக மனிதனையே நம்ப முடியாத அளவுக்கு யதார்த்த மிருக்கும்போது எந்த நம்பிக்கை எப்படி ஏற்றுவது. பொய்யும் புனைவுமான கவிதை உருவாக்க முடியுமே தவிர மெய்யாக எழுத முடியாது. படைப்பிலும் வாழ்க்கையிலம் இரண்டகமிருக்க முடியாது. புனைனவின் டிப்படைகளுக்கு எதிரான வாழ்pன் அடிப்படைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கவிதையை வன்முறைக்கான ஆயுதமாக்குவதும் விடுவதும் கூட இப்படியானதொரு பின்புலத்திலும் இவ்வாறான நிலைமைகளிலும்தான் நிகழ்கின்றன. சொற்கள், அவற்றின் பொருளை விடவும் வௌ;வேறு   விளக்கங்களை அளிக்கும் போக்கு அதிகரித்துச் செல்கிறது. மொழி இன்னும் அப்படியே வரையறுக்கப்பட்ட விளக்க எல்லைகளுக்குள் நிற்க முடியாது. நமது மொழி  விரிய முடியாமல் தத்தளிப்பதாகவே நினைக்கிறென்.

ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பொருள் பின்னர் வரம் தலைமுறைகளின் அறிவ அனுபவம் ஆற்றல் போன்றவற்றால் சீராக்கப்படுகிறது. மேலும் முன்னேற்றகரமாக திருத்தியமைக்கப்படுகிறது. அதுதான் வளர்ச்சி. அதுதான் கூர்ப்பு. அதுதான் தலைமுறைகளின் பங்களிப்பு. அதில்தான் தலைமுறைகளின் கூட்டிணைவுண்டு.

தலைமுறைகள் என்றால் என்ன, அல்லது அவற்றில் யார் பங்கேற்கிறார்கள். தலைமுறை என்பது கூர்ப்பே. அதில் பங்கேற்போர் நமது வாரிசுகள்தான். பிள்ளைகளுக்காக பொருள் சேர்க்கும் தமிழ் வாழ்க்கை முறையில் பிள்ளைகள் பங்கேற்பதற்கான இடைவெளி இருப்பது குறைவு.

ஒரு வெளிநாட்டு நண்பர் தமிழர்களின் வாழ்க்கையைக்கவனித்த பின்னர் சொன்னார், தங்களுடைய பிள்ளைகளின் ஆற்றலில் தமிழ்ப் பெற்றோர்களுக்கு நம்பிக்கையில்லாதிருக்கிறது. அதனால் அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்காகவே வாழ்க்கை முழவதும் மாய்கிறார்கள்.

அவர்களை ஊட்டமாக வளரப்பதற்குப்பதில் அவர்கள் தங்கள் காலி நிற்பதற்குப்பதில் பெற்றொரின் உழைப்பிலே தங்கியிரக்க வைக்கப்படுகிறார்கள். இதில் தமிழ் மக்களுடைய தேச வழமைச்சட்டத்தை அவதானித்தால் அவர்களுடைய குறைபாடுகளைத் தெளிவாக விளங்கலாம்.
இதில் முக்கியமானது சொத்துக்களை கைமாற்றுதல், சொத்துரிமை பற்றியது.

இதில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் இருக்கிறபோதும் பொதுவாக சொத்துரிமையில் பெண்ணொடுக்குமுறைக்கான களம் திறந்திருக்கிறது. சீதனம் என்பது இதில் திரண்டு கட்டிபத்திப்போயிருக்கிறது.

சொத்துச் சேகரிப்பு மனோபாவத்தில் சாதிய அம்சங்களும் தாராளமாக உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் எதிர்மறை அம்சங்களுடையதாகவே தமிழர்களின் பிள்ளைப்பராமரிப்பு உள்ளது. பிள்ளைகளை சோக்கேஸ்க்குள் வைக்கும் இயல்பையே தமிழர்கள் பராமரிக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்குமாக காலம் விரிந்து கொண்டெயிருக்கிறது. அவரவர் அவரவர்களுடைய தளத்தில் இயங்கவேண்டியதுதானெ. இதில் ஒரவருடைய இயங்கு தளத்தை எப்படி இன்னொருவர் குறைதது விடமுடியும். தமிழர்களின் சொத்து சேகரிக்கும் மனோபாவந்தான் அவர்களை குறுகிய எல்லைக்கள் வரையறத்து மட்டுப்படுத்தியிருக்கிறது. அவர்கள் புதியன தேட வாய்ப்பில்லாமற்போனதற்கான காரணமாக இதையே கொள்ள வேண்டியிருக்கிறது.  
                                        
(தொடரும்)

00

Monday, May 7, 2012

மூடப்பட்ட அமைப்புகளின் - அணுகுமுறைகளின் - காலம் முடிவடைந்து விட்டது.


சொல்லத் துணிந்தவனின் குரல் அல்லது தலைமறைவுக்காலத்தின் நீட்சி




யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு, மீள்குடியேற்றம், புனரமைப்பு, மீள் கட்டுமானம், புனர்வாழ்வு மற்றும் அமைதிப் பேச்சுகள் பற்றிய இழுபறிகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் எப்படியிருக்கிறது என்று மனித உரிமைகள் மற்றும் ஊடகத்துறை போன்றவற்றில் செயற்பட்டு வரும் ஒருவருடன் உரையாடினோம். 


வடக்கைச் சேர்ந்த தமிழர் இவர். ஆனால், பொதுநிலைப்பட்ட சிந்தனையுடன், யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகும் முறை இவருடையது. சமகால நிலவரங்களில் தொடர்ச்சியான அவதானிப்பும் தொடர்பும் உள்ள இவர் மேற்கூறிய விசயங்கள் தொடர்பாக எம்முடன் உரையாடினார். 


பொதுவெளியில் சரியான செய்திப் பரிமாற்றம், தகவற் பரிமாற்றம் நடக்க வேண்டும். புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் இல்லாத தகவல்கள் எம்மை மேலும் பலவீனப்படுத்தும். மற்றவர்களுக்கு நாம் சரியானவற்றை, உண்மையானவற்றை  ஆதாரங்களோடு சொல்லும்போது அவர்களால் அவற்றை நிராகரிக்க முடியாது. அது மட்டுமல்ல, அவர்களுக்கு எங்களின் மீது உரிய கவனமும் ஏற்படும் என்கிறார் இவர். 


இன்னும் இலங்கையில் தலைமறைவு நிலையிலேயே சில விசயங்களைப் பேச வேண்டியுள்ளது. இந்த நிலையை இலங்கை அரசு கடக்கும்போது அது ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பலப்படுத்தியதாகக் கருதப்படும் என்று சொல்லும் இவருடன் தொடர்ந்து மனித உரிமைகள், ஊடகத்துறை சார்ந்த விடயங்கள் மற்றும் சமகால நிலைமைகள் குறித்து உரையாடினோம்.  




00


01. யுத்தத்திற்குப் பிறகு இலங்கையின் நிலவரம் எப்பிடியிருக்கு?

யுத்தகாலத்தைப் போன்றே இருக்கு.

02. அப்படியென்றால்?

பொருளாதாரத்தில், மக்களின் வாழ்க்கை நிலையில், சமூகங்களிடையேயான முரண்பாடுகளில், ஜனநாயகத்தில், அணுகுமுறைகளில் எல்லாம் மாற்றங்கள் ஏற்படவேயில்லை. அதே நிலையில் இனவாதம் கொப்பளிக்கிறது. விடாப்பிடியான போக்குகளே தொடர்ந்தும் நிலவுகின்றன. இனரீதியான பிளவுகள் அப்படியேதான் உள்ளன. இது மேலும் அதிகரித்துள்ளது என்றும் சொல்லலாம். காயப்பட்ட நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். தமிழ் முஸ்லிம்மக்களிடையே கூட முறையான உறவு இன்னும் ஏற்படவில்லை.

அரசாங்கமோ பிரதான கட்சிகளோ தங்களுடைய பழைய சிந்தனைப் போக்கிலிருந்து இன்னும் மீளவேயில்லை.

மதத் தலைவர்களும் மதஅமைப்புகளும் இனரீதியாகவே தொடர்ந்தும் சிந்திக்கின்றன. அரசியற் கட்சிகளுக்கும் மத அமைப்புகளுக்குமிடையில் என்னால் பெரிய வேறுபாடுகளைக் காணமுடியவில்லை.

மட்டுமல்ல, ஊடகத்துறையில்கூட குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. அதே அணுகுமுறைகளில்தான் எல்லா ஊடகங்களும் இயங்குகின்றன. அந்தந்தத் தரப்புகளின் ஏவற் சக்திகளைப்போலவே ஊடகங்கள் தொழிற்படுகின்றன. பெரும்பாலும் எல்லாமே பிரச்சார அலகுகளாகவே தங்களைக் கட்டமைத்துள்ளன.

போருக்குப் பிந்திய நிலையில் எவ்வாறு சமூக நிலைமைகளை அணுகுவது? எப்படி மக்களை அவர்களின் கடந்த காலப் பாதிப்புகளிலிருந்தும் காயங்களிலிருந்தும் மீள வைப்பது? போரினால் பாதிப்புக்குள்ளானவர்களின் உளச் சமனிலையை எவ்வாறு பேணுவது? போன்ற அடிப்படையான விசயங்களில் பல அமைப்புகளும் ஊடகவியலாளர்களுக்கான பட்டறைகளை நடத்தியிருக்கின்றன. இன்னும் நடத்தி வருகின்றன. பட்டறைகளுக்கு வருவோர் அங்கே வழங்கப்படும் சான்றிதழையும் கொடுப்பனவையும் வாங்கிக் கொள்ளவே வருகிறார்கள். மற்றும்படி அங்கே கூறப்படும் விசயங்களை அந்த மண்டபங்களிலேயே விட்டிட்டு வெளியேறுகிறார்கள்.

ஆகவே, தாங்கள் அறிவதற்கு மாறாகவே பின்னர் இந்த ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள்.

அரசியற் கட்சிகளுக்கும் இலங்கையின் ஊடகங்களுக்குமிடையில் பெரிய வேறுபாடெல்லாம் இல்லை. சில மாற்று ஊடகங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றுக்குப் பொது வெளியில் அதிக வரவேற்பில்லை. பெருந்திரள் மக்கள் பாரம்பரியமான – முரண்தன்மையை அடிப்படைப் பொருளாகக் கொண்ட ஊடகப் போக்கையே ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு அது பழகிவிட்டது. அது தங்களுக்கு நல்லதல்ல என்று தெரிந்தாலும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்.

ஆகவே ஊடகங்களும் அந்தப் போக்கையே ஆதரித்து வளர்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எப்போதும் சந்தை முக்கியம். சந்தையைப் பற்றிச் சிந்திப்பவர்களால் ஒரு போதுமே சீரியஸான நல்ல காரியங்களைப் பற்றிச் சிந்திக்க முடியாது. இதற்கு நல்ல உதாரணம், தமிழ்ச் சினிமா. சந்தை வாய்ப்பையும் பெருந்திரளின் ஆதரவையும் தக்க வைக்க விரும்பும் தமிழ்ச்சினிமாவின் மலினமான உத்திகளை நீங்கள் நன்றாக அறிவீர்கள். பெரும்பாலான தமிழ்ப்படங்கள் ஓரே மாதிரியானவை. அங்கே மலினமான உத்திகளோடு வில்லன் - கதாநாயகன் போன்ற முரணும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே ஊடகத்துறையிலும் ஏறக்குறைய அதே நிலைதான். அரசியல் முரண்களை அந்த இடத்தில் வைத்துக் கையாள்கின்றனர் ஊடகவியலாளர்கள்.

அதற்கு இங்கே இனவாதமும் இனப்பிரச்சினையும் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழகேசரி என்ற பத்திரிகை எவ்வளவு சமூகப் பொறுப்போடு வெளிவந்தது? அரசியலிலும் மக்களின் வாழ்க்கை நோக்கிலும் இலக்கியத்திலும் அது கொண்டிருந்த அக்கறையின் பாதியளவிற்கூட இன்றைய பத்திரிகைகள் இல்லை. ஆனால், அப்போது ஊடகத் துறையைப் பற்றிய கற்கைகள் - கோட்பாட்டு விளக்கங்கள் எதைப் பற்றியும் அறியாமலே அவ்வளவு செழுமையாக பத்திரிகையை வெளியிட்டார்கள்.

ஈழகேசரியின் முதல் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டதை இங்கே கவனிக்க வேண்டும். ‘............. பத்திரிகைகளை நடத்துவோர் தேச நன்மைக்காக வேண்டியவைகளைக் காய்தல் உவத்தலகற்றி, நடுவு நிலையோடும் கால தேச வர்த்தமானங்களுக்கேற்றவாறு எடுத்துரைத்தல் வேண்டும். அப்படிக்கின்ற தாம் நினைத்த செயலை முடிப்பதற்காகவோ அல்லது ஒரு சிலர் மீது கொண்ட குரோதங்காரணமாகவோ, அன்றிச் செல்வச் செருக்காலோ, அறியாமையாலோ ஒருவரை ஒருவர் தூசித்தலும் சாதி மத சம்மந்தமான விதண்டாவாதங்கள் சொல்வதும் ஏனையோருடைய மனதைப் புண்படுத்துவதுமான வீண் செயல்களிற் காலத்தைக் கழிக்காது, அறநூல்வழி நின்று திறமையோடும் ஒத்துழைப்பதே சாலச்சிறப்புடையதாம்’ என்று அதிற் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழகேசரி முடிந்தவரையில் இந்த அடிப்படையைப் பராமரித்தது. ஆனால், இன்றைய நிலை?

சற்று வித்தியாசமாக, யதார்த்தத்தோடு இணைந்து செயற்பட விரும்பும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஒரு தடவை தங்களுடைய ஆசிரிய பீடத்தினருக்கு விளக்கமளித்த விசயத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

‘உண்மை என்ன என்று எங்களுக்குத் தெரியும். எதெல்லாம் சரியென்றும் எங்களுக்கு விளங்கும். ஆனால், அதற்காக நாங்கள் மற்றவர்களை விட்டுவிலகித் தனித்து நிற்க முடியாது. அவர்கள் ஓடுகிற வழியில்தான் நாங்களும் ஓடவேணும். ஊரோடு சேர்ந்து ஓடாது விட்டால் எங்களை ஒதுக்கி விடுவார்கள். ஆகவே மற்றப் பத்திரிகைகள் என்ன செய்கின்றனவோ அதைத்தான் நாங்களும் செய்ய வேண்டியுள்ளது’ என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் தெரிவித்தார். இதைச் சொல்லும்போது அவருடைய மனச்சாட்சிக்கும் அறிவுக்கும் இது தவறென்று தெரிந்திருக்கிறது. ஆனால் அவரால் புதிய பாதையொன்றைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. ஓடுகின்ற பாதையில் சேர்ந்து ஓடுவதே அதிக சிரமமற்றது என்று கருகிறார் அவர்.

இதைப்போல இன்னொரு முதன்மைப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை அண்மையில் ஏற்றிருந்த இளைய பத்திரிகையாளர் ஒருவர் ஒரு உரையாடலின் போது சொன்னார், ‘சனங்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் நாங்கள் கொடுக்க வேணும். சனங்கள் எங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் எங்களுக்கு விளம்பரங்களைத் தருகிறார்கள். எங்களின் பத்திரிகையை வாங்குவதற்கு அவர்களிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பிருக்கு. எங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். ஆகவே அதை நாங்கள் கொடுக்கத்தான் வேணும். அவர்களுடைய எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றத்தான் வேணும்’  என்று.

இதையெல்லாம் நீங்கள் எப்படி  விளங்கிக் கொள்வீர்கள்? ஈழகேசரிக் காலத்துக்கும் தற்போதைய நிலைக்குமிடையில் எவ்வளவு இறக்கம் என்று பார்த்தீர்களா? ஏறக்குறைய வணிக ரீதியாகச் சிந்திக்கும் தமிழ்ச் சினிமாத் தயாரிப்பாளர்களைப் போலவே இவர்களும் சிந்திக்கிறார்கள்.

எப்போதும் எதிர்த்தரப்பு ஒன்றினைச் சாடியும் தாக்கியும் வரும் செய்திகள் இவர்களுக்கு இதமூட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், எரிகின்ற நெருப்புக்குத் தொடர்ந்து எண்ணெயை ஊற்றிக் கொண்டேயிருக்கலாமா? இப்படி எண்ணெய் ஊற்றும்போக்கை வளர்த்தபடியாற்தானே தமிழர்கள் இரத்தம் சிந்தும் ஒரு அரசியலுக்கு வரவேண்டியிருந்தது. இந்த நிலைதான் சிங்களத் தரப்பிலும்.

இலங்கையில் தமிழ் சிங்கள ஊடகங்கள் எதுவும் இந்தக் குறைபாட்டுக்கு விலக்கல்ல.

யுத்தத்தின் படிப்பினைகளை எந்தத் தரப்பும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசியற் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், படித்தவர்கள், மதத்தலைவர்கள் யாரிடமும் மாற்றங்களைக் காணவேயில்லை. இந்த நிலையில் எப்படி அரசிடமும் அதிகார அமைப்புகளிலும் மாற்றங்களைக் காண இயலும்?

முழு நாடுமே அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. வெளிச்சக்திகள் இலங்கையைத் தங்களுக்கான போட்டிக் களமாக்குவதற்கு – ஒரு விளையாட்டுத்திடலாக்குவதற்காகப் போட்டியிடுகின்றன. அரசியல் ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம், கருத்து நிலை ஆதிக்கம், கலாச்சார ஆதிக்கம் என்று தொடர்ந்து பல ஆதிக்கங்கள் இலங்கையின் மீது ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதெல்லாம் எவ்வளவு ஆபத்தான காரியங்கள்? பலவீனப்பட்டிருக்கும் நாட்டிலும் பலவீனப்பட்டிருக்கும் சமூகங்களிடமும் பலவீனமான மனிதர்களிடத்திலும் வெளித்தாக்கங்கள் இலகுவாக ஏற்பட்டுவிடுவது இயல்பு.

ஆனால், இதையெல்லாம் யாருமே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவர்கள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. எரிகின்ற நெருப்பிலே தங்களைக் குளிர்காய வைத்துக் கொள்கிறார்கள்.

வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே எங்களின் பயணங்களும் வெற்றி தோல்விகளும் அமையும் என்று சொல்வார்கள்? நாங்கள் எதைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஏனென்றால், இன்னும் பழைய வழித்தடங்களிலேயே சுற்றுவதைத் தவிர வேறு எதையும் தெரியாமலிருக்கும் நிலையே காணப்படுகிறது.

பின்னடைவைச் சந்தித்த சமூகங்கள், போரில் ஈடுபட்ட தரப்புகள் எல்லாம் புதிய திசைகளை நோக்கியே பயணித்துள்ளன. போர் அப்படியான ஒரு புரிதலையும் பாடத்தையும் மனிதர்களுக்குக் கொடுக்கும். போரின் பின்னர் அப்படியான ஒரு தரிசனம் மனிதனுக்குக் கிடைக்கிறது.

இதற்கு உலக வரலாற்றில் நிறைய உதாரணங்களுள்ளன.


03. நீங்கள் இப்போதுள்ள நிலைமைகளை அவற்றின் தாக்கங்களைச் சொல்லுங்கள். குறிப்பாக மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட கண்ணோட்டத்தில்?

எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. ஊடகங்கள் செலுத்தும் தாக்கம் அதிகம். மக்களை விழிப்படைய வைப்பதில், அரசியலிற் செயப்படுவோரை நெறிப்படுத்தி ஒழுங்கு படுத்துவதில் ஊடகங்களுக்கே அதிக பங்குண்டு. எனவேதான் அவை நாட்டின் பிரதான சக்திகளில் ஒன்றென மதிக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்களுக்கான மதிப்பும் இதன்பாற்பட்டதே. ஆனால், சனங்களை அவையே இன்று மாய வலைகளால் கட்டிவைத்துள்ளன. இதற்குச் சமாந்தரமாக அரசியல் நிலவரம் உள்ளது. எல்லாமே கடுமையான – அதே நிலைப்பாடுகளுடன்தான் இருக்கின்றன. ஆகவே நிலைமை யுத்தகாலத்தை ஒத்ததாகவே இருக்கிறது.

கடினமான நிலை மாறாத வரையில் எதிலும் நெகிழ்ச்சியிருக்காது. யுத்தத்தின் போது மெல்ல மெல்ல மூடப்பட்டு வந்த சகல வெளிகளையும் மெல்ல மெல்லத் திறக்க வேண்டியது ஊடகங்கள், அரசியற் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றின் பணியாகும்.

ஆனால் இவை எதுவும் அந்தப் பணியைச் செய்யவும் இல்லை. அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை. மேலும் யுத்தகாலத்திலிருந்ததைப்போல, இனங்களுக்கிடையில் இருக்கும் முரண்நிலையைப் பயன்படுத்தித் தமது நலன்களைப் பேணவே முற்படுகின்றன.

அமைதியைப் பற்றிக் கதைத்துக்கொண்டே அமைதிக்கெதிராகச் செயற்படுவது என்று இதைச் சொல்லலாம். முன்னர் சமாதானத்தைப் பற்றியும் யுத்த நிறுத்தத்தைப் பற்றியும் கதைத்துக்கொண்டே யுத்தத்துக்கான சூழலை உருவாக்கிய அனுபவம் இவற்றிற்குண்டு. ஆகவே சனங்களின் அவலத்திற் பிழைப்பை நடத்தும் ஒரு கொடுமை இது எனலாம். வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் காரியம் இது.

இந்த  நிலையில், அமைதி கிட்டாது. அமைதியை நோக்கிச் செல்லாத நிலைமை என்பது கடினமானதாகவே இருக்கும். இந்தக் கடின நிலையில் மனித உரிமைகள் கேள்விக்குரிய ஒன்றே. நான்கூட உங்களுடன் வெளிப்படையாக உரையாட முடியாத ஒரு நிலையே காணப்படுகிறது. என்னை இனங்காட்டத் தயங்கும் நிலை.

ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் போன்ற பலவும் இன்னும் நெருக்கடி நிலையிற்தான் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்கு போருக்குப் பிறகு யார் முறையாகச் செயற்பட்டிருக்கிறார்கள்?  அங்கங்கே முனைப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பேரியக்கமாக – மக்களின் எழுச்சியோடு அரங்கிற்குக் கொண்டு வருவதற்கு யாருமே இல்லை.

இலங்கையின் இன்றைய இறுக்கமான நிலைமைகளுக்காகவோ அல்லது அதை எதிர்த்ததற்காகவோ எந்த அரசியற்தலைவர்களும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அல்லது மக்களோடு யாரும் போராடுவதற்காக வீதியிலிறங்கவில்லை.

சரத்பொன்சேகா (முன்னாள் இராணுவத்தளபதி) சிறையிலிருப்பது இன்றைய ஆட்சித் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஒரு சட்ட முலாம் பூசப்பட்டுள்ளது இராணுவ நடைமுறைக்கு மாறாக அவர் செயற்பட்டார் என்று.


04. நீங்கள் சொல்வதைப் போல, அப்படி முறையாகச் செயற்படுவதற்கு – அரசின் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா? இடமளிக்குமா?

எந்த அரசும் தனக்கு விருப்பமில்லாத எழுச்சிகளுக்காக – தனக்கு உவப்பில்லாதவற்றுக்காக மனமுவந்து ஆதரவைக் கொடுப்பதில்லை. அதிலும் இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில், இன ஒடுக்குமுறை மலிந்து  ஜனநாயக நடைமுறைகள் கேலிக்கும் கேள்விக்கும் உரியனவாக இருக்கும் சூழலில், அரசுக்கு விருப்பமில்லாத காரியங்களுக்கு அது எப்படி ஆதரவைத் தரும்?

யுத்தத்;திற்குப் பிறகு யுத்தத்தின் தொடர்ச்சியாக அரசுக்கும் அதன் தலைமைக்கும் ஏராளம் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு மிகச் சிக்கலான உளநெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அது எல்லாவற்றையிட்டும் அச்சமடைந்துள்ளது. எல்லோரையிட்டும் பயப்படுகிறது. இந்த உளவியற் சிக்கலைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு நெருக்கமாக இருப்போரைச் சேர்ந்தது. ஆனால், அப்படியானவர்கள், அரசுக்குத் தங்களின் விசுவாசத்தைக் காண்பிப்பதற்காக மௌனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தலையசைக்கிறார்கள். இது அரசை இன்னும் தவறான வழியிற் செல்ல வழியேற்படுத்துகிறது.

இவர்கள் அரசைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கும் அளவுக்கு மக்களைக் குறித்துச் சிந்திப்பதில்லை. மக்களுக்காகவே அரசும் ஆட்சியும் என்ற விளக்கத்தை – அடிப்படை உண்மையை மறந்தே விட்டனர்.

இந்த மாதிரியே கட்சிகளுக்காகச் சிந்திப்போர் பெருகிவிட்டனர். மக்களுக்காகவே கட்சிகள். மக்களுக்காகவே தலைவர்கள். மக்களுக்காகவே கொள்கைகள் என்பதையெல்;லாம் பலரும் மறந்து விட்டனர்.

எனவே இவர்களுடைய விருப்பம் அதிகாரத் தரப்புகளைப் பாதுகாப்பதே. ஒவ்வொரு அணிக்கும் எனத் தனித்தனியாக இந்த மாதிரியான பாதுகாவலர்கள் உள்ளனர்.

இவர்கள் அதிகார மையங்கள் கட்டமைக்கப்படுவதற்காக இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள் யுத்தம் முடிந்த பிறகு அமைதியை ஏற்படுத்துவதற்காகவோ, ஜனநாயக மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காகவோ, ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்காகவோ யாரும் முயற்சித்தார்களா? இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கத்தான் வேணும், அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்ய வேண்டும் என்று யார் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் நான் அழுத்தமாகக் குறிப்பிடுவது சிங்களத் தரப்பை மையப்படுத்தியே.

அதைப்போல முஸ்லிம் மக்களின் நிலைமைகளைக் குறித்து, அவர்களுடைய வடபகுதிக்கான மீள் வருகையைக் குறித்து யார் முறையாகச் சிந்தித்திருக்கிறார்கள். ஆகவே நிலைமைகள் கடினமானவையாகவே உள்ளன. இந்த நிலையில் அரசுடன் மோதுவது, பிற அரசியற்கட்சிகளுடன் மோதுவது எல்லாமே மிகக் கடினமானதே.

சாதாரணமாக மாற்று அபிப்பிராயத்தையே தெரிவிக்க முடியாத ஒரு இறுக்கச் சூழல் இலங்கை முழுவதிலும் உள்ளது. படையினரின் - படைப்புலனாய்வின் கண்காணிப்புகளும் அச்சமும் வேறு.

ஆனாலும் இந்தக் கடினமான நிலைமையை உடைக்க வேண்டும். அது முடியும். ஒரு கட்டம்வரையில் முன்னகர்ந்து விட்டால் எதிர்ப்பு அடங்கி விடும். பின்னர் அது வழியைத் திறந்தும் விடும்.

அரசிடம் அல்லது ஆட்சித் தரப்பிடம் உச்ச அதிகாரம் குவியும்போது மக்களிடமும் சமூக வெளியிலும் அதிகாரம் அற்ற நிலை உருவாகிறது. மக்கள் அபாயநிலைகளில் நிறுத்தப்படுகிறார்கள். அப்போது நாடு வெற்றிடமாகிறது.


05. ம்... மேலும் சொல்லுங்கள்?

இந்த இடத்தில்தான் அரசாங்கத்தின் உளவியலைச் சீர்ப்படுத்தும் பணியை ஊடகங்களும் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் செய்ய வேண்டும் என்கிறேன். அரசிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தை மக்களிடமும் சமூகங்களிடமும் பகிரவேண்டும். மீண்டும் யுத்தத்துக்கோ பகை முரணுக்கோ போகமுடியாது. அப்படியான ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இல்லையென்றால், பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளும்தான் உள் விவகாரங்களிற் தலையிடும்.

இன்று மக்களும் களைத்துப்போயிருக்கிறார்கள். அரசாங்கமும் நெருக்கடிகளால்  களைத்துப்போய்யிருக்கிறது. மக்களுக்கிருக்கும் நெருக்கடிகளைப்போலவே அரசின் தலைமைப் பொறுப்புகளிலிருப்போருக்கும் நெருக்கடிகள் உள்ளன. நெருக்கடிகளின் தன்மைகளில் வேறுபாடுகளே தவிர, அவற்றின் அழுத்த நிலையில் அரசின் தலைமைக்கே அதிக சுமையுண்டு. ஆகவே இந்த நிலையில் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் மாற்றங்களுக்கா நிறைய செய்ய வேண்டும்.

அதிகாரம் உருவாக்கும் அபாயம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதிலிருந்து யாருமே தப்பி விடமுடியாது.

‘அவர்கள் அவனைக் கைது செய்த போது அவன் ஒரு சோசலிஸ்ட் என்றார்கள்.
அவர்கள் இன்னொருவனைக் கைது செய்தபோது அவன் பகையாளி என்றார்கள்.
அவர்கள் வேறொருவனைச் சுட்டுக்கொன்றபோது அவன் யாரோ என்றார்கள்.
அவர்கள் என் அயலானைக் கடத்தியபோது என்னுடைய கதவுகளைச் சாத்தி வைத்திருந்தேன்.
அவர்கள் என்னைக் கொல்ல வந்தபோது அதைக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை’ என்ற பொருளில் ஒரு கவிதை உண்டு. அதை நினைவிற்கொண்டால் நல்லது.



06. மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கொண்டிருக்கும் அக்கறையை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

இறந்தவர்களுக்காகப் பிதுர்க்கடன் கழிப்பதும், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதும் அவர்களுக்கான மரியாதையாகும். ஆனால், உயிருடனிருப்போருக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களைச் செய்வது அதையும் விட முக்கியமானது.

இனப்பிரச்சினையைத் தீர்வை நோக்கிக் கொண்டு வருவதற்கும் நாட்டில் ஜனநாயக மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கும் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளிப்பதற்கும் முயற்சிக்க வேண்டும்.


07. இன்று போர்க்குற்றங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனித உரிமைகள் அமைப்புளின் செயற்பாடுகள், பங்களிப்புகளைக் குறித்து....?

இதற்கான பதிலையும் முன்னரே சொல்லிவிட்டேன். இறந்தவர்களுக்காகப் பிதுர்க்கடன் கழிப்பதும், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதும் அவர்களுக்கான மரியாதையாகும். ஆனால், உயிருடனிருப்போருக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களைச் செய்வது அதையும் விட முக்கியமானது என்று.

அதைச் செய்யாமல் விட்டுக் கொண்டு, அல்லது அவ்வாறு செய்வதற்கு விரும்பாமல் இருப்பதை மறைப்பதற்கான ஒரு உத்தியாக மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகள் இன்று அமைகின்றன. குறிப்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவை மேற்குலகின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அனுசரணையாகவே செயற்படுபவை என்ற குற்றச்சாட்டுகள் இன்று பகிரங்கமானவை. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளின் மீதான மேற்கின் தலையீட்டுக்கான நியாயங்களை இந்த அமைப்புகளே முன்னிறுத்தின என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால், இந்த அமைப்புகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இவைதான் இந்த மாதிரியான உள்ளுர்ச்சண்டித்தனங்களையும் காட்டேரித்தனங்களையும் கட்டுப்படுத்துவதற்கும் வேண்டியிருக்கு.


08. படைகளின் பெருக்கத்தையும் அவற்றின் ஆதிக்கத்தையும் இன்னும் இலங்கை அரசு கைவிடவில்லையே. இதைக் குறித்து உங்களுடைய 
அவதானங்கள் என்ன?

நான் முன்னரே சொல்லியிருப்பதைப் போல அரசாங்கம் இன்று பெரும் உள நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கடந்த கால, நிகழ்காலத்தவறுகள் அதை உளவியல் அச்சத்துக்குள் சிக்க வைத்துள்ளன. ஆகவே அதற்குத் தன்னுடைய அணுகுமுறைகள் தவறென்று தெரிந்திருந்தாலும் அதைக் கைவிடத் தயாரில்லை. ஏனெனில் அரசின் நலன்சார்ந்த – பாதுகாப்புச் சார்ந்த ஒரு பிரச்சினையாக இன்றைய நிலைமைகள் உள்ளன. இதைச் சமாளிப்பதற்கு இறுக்கங்களை ஏற்படுத்துவதே சிறப்பான வழி என்று மகிந்த ராஜபக்ஷ கருதக் கூடும். அல்லது அவர்களுடைய வழிகாட்டிகளும் அவருக்குத் துணையிருப்போரும் இந்த வகையிலேயே உரைக்கக் கூடும்.

ஆனால், இந்த மாதிரி நிலைமையில் எந்தப் படைகளும் எந்தப் போருத்தியும் எத்தகைய போர் அனுபவங்களும் வெற்றியடையாது. இதற்கு ஈராக், லிபியா, ஆப்கான் என்ற அண்மைய உதாரணங்களே உள்ளன.

நாட்டை இலகு படுத்துங்கள். நெகிழ்ச்சியே இன்றைய உலகின் சிறந்த அணுகுமுறை. இது பிள்ளை வளர்ப்புக்கும் பொருந்தும். குடும்ப உறவுக்கும் பொருந்தும். நாட்டுக்கும் பொருந்தும். அரசியலுக்கும் பொருந்தும்.

மூடப்பட்ட அமைப்புகளின் - அணுகுமுறைகளின் - காலம் முடிவடைந்து விட்டது.

00


Saturday, May 5, 2012

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை









யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்இ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற இரு பெண் போராளிகளில் ஒருவர். புஷ்பராணி எழுதிஇ இம்மாதம் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும் அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் நூலுக்கு கவிஞர் கருணாகரன் அளித்திருக்கும் முன்னுரை: 


சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன.

ஆனால் இந்த விசாரணையானது வெளியே எதிர்த்தரப்பின் மீதே இலங்கை அரசின் மீதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு. இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால், இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக - அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது.

இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானது, எவ்வளவுக்குச் சரியானது, எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது ? போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள், சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம்.

அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவை, முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விட, அமைப்புகளின் உள்ளே, கட்சிகளின் உள்ளே, போராட்டத்தில் ஈடுபட்ட - ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும். விருப்பு வெறுப்புகள், உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால், அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்.

குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், தங்களால் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் போராட்டத்தையும் சிதைத்து, மக்களையும் இந்த அவல நிலைக்குக் கொண்டு வந்துள்ளன என்பதயும் உணர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் புனிதர்கள் என்ற பிம்பங்களை விட்டு இறங்கி வரவேண்டும். குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில், பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில், செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தைப் பற்றி, விடுதலையைப் பற்றி இவர்களுக்கிருக்கும் அக்கறையும் வேட்கையும் இவர்களுடைய இந்தச் சாட்சியமளிப்பிற்கான அடிப்படையாக உள்ளதை நாம் மனங்கொள்ள வேண்டும். இந்தச் சாட்சிகள் ஏதாவது இயக்கங்களில் அல்லது கட்சிகளில் இன்னும் அங்கத்துவத்தைக் கொண்டிருந்தால் நிச்சயமாக இவர்களால் இந்தச் சாட்சியங்களை இவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்க இயலாது.

ஏனெனில் இன்னும் அதே குறைபாடுகளுடனும் தவறுகளுடனும் குற்றங்களை இழைக்கும் மனநிலையுடனும்தான் எல்லா அமைப்புகளும் எல்லாத் தலைமைகளும் உள்ளன. அணுகுமுறைகளிலும் பார்வையிலும் மாறாத பிடிவாதம் கொண்டிருப்பதை ஈழப்போராட்டத்தை விட வேறெந்தப் போராட்டத்திலும் காண முடியுமோ தெரியவில்லை. அந்த அளவுக்கு ஈழப்போராட்டம் தன்னுடைய உட்பரப்பில் இறுகிக் கெட்டி தட்டிப்போயுள்ளது. அதனுடைய உட்பரப்பு இன்னும் இருண்டேயிருக்கிறது.

1965 ஜூனில் பலஸ்தீன எழுச்சி பின்னடைவுக்குட்பட்டபோது அதைக் குறித்து அங்கே பெரும் வாதப் பிரதிவாதங்களும் மீளாய்வுகளும் நடந்தன. வங்கப் போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் போன்ற அயற்போராட்டங்கள் கூட தமது போராட்டப் பதிவுகளைச் செய்துள்ளனஇ சுய விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. சாட்சியங்களை முன்வைத்துள்ளன. ஆனால், ஈழப் போராட்டத்தில் சாட்சியமளித்தலையும் விட, சாட்சிகளை மௌனமாக்கும் போக்கே பலமாக உள்ளது. இது இந்தப் போராட்டத்தின் கூடப் பிறந்த குணவியல்பு.

சாட்சியமளிக்கா நிலை – சாட்சியமளித்தலைத் தடுப்பது என்பவை அதிகாரத்தைப் பேண முற்படுவதன் தூய வெளிப்பாடுகளாகும். இந்த மனநிலையானது தவறுகளைக் குறித்தும் பின்னடைவுகளைக் குறித்தும் சிந்திக்கப்போவதுமில்லை, அவற்றைப் பொறுப்பேற்கப்போவதுமில்லை, அவற்றைக் களையப்போவதுமில்லை.

இவற்றுக்குக் குறி அதிகார பீடத்தைப் பாதுகாப்பதே. அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்?

சுயவிசாரணை என்பதும், சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?

இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாக, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஷ்பராணி தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது.

புஷ்பராணி ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல்வேறு தரப்பினருடனும், ஈழப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பின்னாளில் தலைவர்களாக இருந்தவர்களுடனும் அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வர முன்னரே இணைந்து செயற்பட்டவர். சகபயணியாக இருந்தவர். இந்தப் போராட்டத்தினால் மிகக் கொடுமையான வதைகளையும் பாடுகளையும் உச்ச ஒடுக்குமுறையையும் சந்தித்தவர். 
அகிம்சை வழியான போராட்டத்தில் நம்பிக்கை இழந்த அன்றைய இளைய தலைமுறையினருடன் ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சிந்தித்தவர். இன்று அகிம்சை வழியான பாராளுமன்ற ஜனநாயக முறைமை அரசியல் மட்டுமல்லாமல் ஆயுதப்போராட்ட அரசியலும் பெரும் சிதைவுகளையே தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்திய நிலையில் புஷ்பராணி இந்தச் சாட்சியத்தை வெளிப்படையாக , ஆதாரபூர்வமான தகவல்களோடு, வாழும் சாட்சியங்களோடு முன்வைக்கிறார். “உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது” என்ற புஷ்பராணியின் வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று.

இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும், எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின் முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்! இந்த நிலை, போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால், இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது.

என்னை விட மூத்தவர்கள், என் சமகாலத்தவர்கள், எனக்குப் பிந்தியவர்கள் என ஈழப்போராட்டத்தில் பங்கேற்று, சனங்களுக்காகவே தங்களைக் கரைத்த அத்தனை பேரின் இதயங்களிலும் கடந்து செல்ல முடியாத துக்கங்களும் அவற்றின் நிழலான நினைவுகளும் அலைமோதிக்கொண்டேயிருக்கின்றன.

இந்தத் துக்கமென்பது சீர்ப்படுத்தவே முடியாத அளவுக்குச் சிதைந்து கொண்டிருந்த ஈழப்போராட்டத்தைப் பற்றியது. கூடவேஇ இன்று முழுச் சிதைவுக்குள்ளான போராட்டத்தையும் சனங்களைப் பற்றியதும். இங்கே எங்களின் முதல் தலைமுறையினரில் ஒருத்திஇ எங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒருத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் காயங்களையும் வலியையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருத்தி, ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற தன்னுடைய அந்தக் கடந்த காலத்தின் துக்கப் பரப்பைக் கடக்க முடியாமற் திணறிக்கொண்டிருக்கிறாள்.

தன்னுடைய இனம் அனுபவித்து வரும் அதனுடைய துயரங்களையும் பாடுகளையும் கடந்து விடவேண்டும் என்பதற்காக அவள் தாங்கவே முடியாத அத்தனை சிரமங்களையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டு விடுதலைக்காக உழைத்தாள். ஆனால் அவளால் வெற்றியைப் பெற முடியவில்லை. ஆறுதலையும் நிம்மதியையும் அடையமுடியவில்லை.

பதிலாக எல்லா நிலைமைகளும் மேலும் மோசமாகியே விட்டன. எதிர்நிலைகள் பெருகி எல்லா வாசல்களையும் அடைத்துள்ளன. புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”

இது உண்மையின் உரைப்பு. ஈழப் போராட்டப் பாதையைக் குறித்த விமர்சனம். போராட்ட வரலாற்றின் இறுதி விளைவைப் பற்றிய சித்திரம். மேலும் இது இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் துக்கம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் மதிப்பீடு, மேலும் தாங்கிக் கொள்ளவே முடியாத உள்ளக் குமுறல்.

அதேவேளையில், இது பொதுத் துக்கமாகவும் பொது மதிப்பீடாகவும் பொதுநிலைப்பட்ட குமுறலாகவும் உள்ளது. புஷ்பராணியின் இந்தப் பதிவு ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் கூட பதிவாக்கியுள்ளார் புஷ்பராணி. இவ்வாறு பதியப்பெறும் பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப் பொறுப்புகளிலிருந்தோரைப் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமைஇ தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார்.

அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்துவம், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் வெளிப்படுத்துகிறார்.

 ” மிதவாதப் போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களாகத் திரண்டபோது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள் அவர்களுடன் நின்றார்கள். விடுதலை இயக்கங்கள் வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.” என மிக எளிய வார்த்தைகளில் மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் உண்மை நிலையை விளக்குகிறார் புஷ்பராணி.

வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது. “இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்க மாட்டார்கள்” என்று சொல்வது மிகச் சரியான கூற்று. இதை நான் என் வாழ்விலேயே நேரிற் கண்டிருக்கிறேன்.

எந்தப் போராளியும் அடுத்த இயக்கத்தை அழிப்பதற்காகவோ, பொதுமக்களின் மீது துப்பாக்கியை நீட்டுவதற்காகவோ போராட்டத்தில் இணையவில்லை. ஆனால், விடுதலை இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியமையே பின்வந்த விளைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் துக்கத்துக்கும் காரணமாகின.

இதற்கான காரணங்களை இயக்கத் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும். இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலம். ஈழப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் தங்களுடைய அனுபவங்களை,  மீளாய்வு நோக்கில் எழுதுகின்றனர். பல்வேறு இயக்கங்களினதும் வெளியீடுகள் என்பதற்கப்பால்இ கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ என்ற புதினத்தைத் தொடர்ந்து புனைவிலக்கியப் பதிவுகள் ஏராளமாக வந்துள்ளன.

ஆனால், இந்த ‘அகாலம்’ போன்று மெய்வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவானவையே. ஆனால்இ இப்போது இந்தப் பதிவுகள் அதிகமாக எழுதப்படத் தொடங்கியுள்ளமை கவனத்திற்குரியது. தோற்றுப்போன போராட்டம் ஏற்படுத்தும் துக்கநிலையில் நின்று பெரும்பாலான அனுபவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், இவை கழிவிரக்கத்தின் பாற்பட்டவையல்ல.

மேலும் இந்தத் துயரநிலை தொடரக்கூடாது என்ற விருப்பத்தினடிப்படையில் இந்த வரலாற்றைப் பலரும் எழுதுகின்றனர். செழியன், சி.புஸ்பராஜா, கணேசன் ஐயர், நேசன், மணியம், குருபரன், ரயாகரன் போன்றவர்களுடைய அனுபவங்கள் இந்தவகையில் வாசிப்புக்குரியனவாகியுள்ளன.

2.

வரலாற்றைப் பதிவு செய்வதொன்றும் எளிமையான காரியமல்ல. அதிலும் தான் வாழ்ந்த காலத்தைஇ தான் பங்காற்றிய அரசியல் இயக்கங்களின் வரலாற்றைஇ தான் பங்களித்த முறைமையின் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது மிகக் கடினமான காரியம். தன்னை அல்லது தம்மையே முதன்மைப்படுத்தி அல்லது தாம் சார்ந்தியங்கிய போக்கினை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு தடித்த மரபுடைய நமது சூழலில் அதிலிருந்து விலகி நேர்மைத்தன்மையுடன் - தன்னைப் பொது நிலையில் வைத்து, தன்னையும் வரலாற்றுச் சூழலையும் மதிப்பிடுவதும் பதிவு செய்வதும் முக்கியமானது.

புஷ்பராணி இங்கே தன்னைஇ தன்னுடைய செயற்பாடுகளை, தான் சார்ந்தியங்கிய அமைப்புகளின் தன்மைகளைஇ தன்னுடைய தவறுகளை, தன்னுடைய பலங்களை, பலவீனங்களை, சேர்ந்தியங்கியவர்களின் மாண்பை, அவர்களிற் சிலரின் குழிபறிப்புகளை, விட்டோடல்களை எல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார். ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்தலில் இவை பேசப்படுகின்றன.

முக்கியமாக இயல்பாகவே அவரிடம் கூடியுள்ள ஓர்மத்தை அவர் வெளிக்காட்டிப் பேசுகிறார். இத்தகைய ஓர்மம் அவருடைய குடும்பத்திலிருந்து உருவாகியது என்றே கருதுகிறேன். தன்னுடைய சாதி, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் முற்றிலும் வெளிப்படையாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்க வேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார். இவ்வாறு அவர் பகிரங்கமாக அந்தக் காலத்தை விரித்து வைக்கும்போது பல பிம்பங்கள் சிதைகின்றன. சில இருட்பரப்புகள் ஒளி பெறுகின்றன. பிம்பங்களையும் புனிதங்களையும் இருட்டடிப்புகளையும் உற்பத்தி செய்கின்ற சமூகத்தில், தவறுகளையும் தோல்விகளையும் திரைகளுக்குப் பின்னே இழுத்து மறைக்கின்றவர்களிடையே புஷ்பராணி விலகித் தனித்துத் தெரிகின்றார்.

இதேவேளை வரலாற்றைப் படிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. எழுதப்படும் வரலாறானது வாசிப்பவரின் வாழ்வையும் அவர்களுடைய காலத்தையும் மையப்படுத்தியிருக்குமானால் அதன் கவர்ச்சியும் முக்கியத்துவமும் வேறு. இரத்தமும் தசையும் நிரம்பிய உயிருள்ள ஜீவனாக இந்த வரலாறு அமையும். அதை வாசிக்கும் உணர்வும் வேறானது. அதற்கப்பால் வாசிக்கப்படும் வரலாறு வெறும் தகவல்களாகவும் நிகழ்ச்சிகளின் பதிவாகவும் விவரிப்பாகவும் சுருங்கிவிடுகிறது.

புஷ்பராணியின் வரலாற்றுக் காலத்திற் பயணித்தவர்களுக்கு இந்தப் பதிவு இரத்தமும் தசையுமான பொக்கிஷமே. யாரும் தங்களுடைய நிகழ்காலத்தை எளிதாகக் கடந்து விடலாம். அல்லது அதைச் சற்றுக் கடினமான நிலையில் எதிர்கொண்டு கடந்து விடலாம். ஆனால், இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றில் இருந்து அவர்கள் தங்களை, தங்களுடைய கடந்த காலத்தை அவ்வாறு கடந்து விட முடியாது. அது மிகக் கடினமானது.

இந்த நிலைமையானது இரண்டு நிலைகளில் இரண்டு தரப்பினரைச் சுற்றிய ஒரு பாம்பாக உள்ளது. ஒன்று, கடினமான கடந்த கால நினைவுகளைக் கடந்து செல்ல முடியாமற் தத்தளிக்கும் புஷ்பராணியைப் போன்றவர்களின் நிலை.

மற்றது, அதிகாரங்களாலும் குற்றங்களாலும் நிரப்பப்பட்ட நிகழ்காலத்தை உருவாக்கியவர்களும் அதிகார அமைப்புகளும் இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றிலிருந்து தம்மை மறைத்து விட முடியாது. அதை எளிதிற் கடந்து விடவும் முடியாது. ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவில் நாம் இந்த இரண்டையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இந்தப் பதிவில் கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தரப்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம் (TLO)இ தமிழ் மகளிர் பேரவை போன்றவற்றின் செயற்பாடுகளும் அவற்றோடு புஷ்பராணிக்கிருந்த உறவும் முரணும் இங்கே கூறப்படுகின்றன.

தவிர, இந்த ஈழ விடுதலை வரலாற்றுப் போக்கில் யார் எல்லாம் மனித விழுமியங்களிற்கு மாறான குற்றச் செயல்களுக்குக் காரணமானார்கள், எவரெவர் மனச்சாட்சிக்கும் பொது ஒழுங்குக்கும் மாறாக எவ்வாறெல்லாம் செயற்பட்டனர் என்பதையும் புஷ்பராணி பதிவு செய்கிறார். இப்படி எல்லாம் பதியும்போது அவர்களால் இந்தக் கடந்த காலத்தைக் கடந்து விட முடிவதில்லை.

அதேவேளை மனித நேசிப்பைத் தமது ஆதார சக்தியாகவும் வழிமுறையாகவும் கொண்டியங்கிய வரலாற்றின் நாயகர்கள் மேலும் இங்கே ஒளியூட்டப்படுகின்றனர். இதுதான் வரலாற்றை நோக்கும் நோக்குநிலையில் நம் கவனத்தைக் கோருவது. எத்தகைய நோக்குநிலையிலும் இந்த அடிப்படையைத் தவிர்க்க முடியாது.

இந்த வரலாற்றுப் பதிவு நூலில் விவரிக்கப்படும் கால நிகழ்ச்சிகளை இங்கே படிக்கும்பொழுது மீளவும் அந்தக் காலம் மனதில் விரிகிறது. சில நிகழ்ச்சிகளை அந்தக் காலகட்டத்திலேயே அறிந்தவனாகவும், சிலவற்றில் பங்கேற்றவனாகவும் நான் இருந்திருப்பதால், இந்த அனுவங்களிற் பலவும் என்னுடைய அனுபவங்களையும் ஒத்திருக்கின்றன.

எனக்கும் புஷ்பராணி அக்காவிற்கும் இடையில் ஏறக்குறைய பன்னிரண்டு வயது வித்தியாசங்கள். என்றாலும் 1975க்குப் பிந்திய நிகழ்ச்சிகள் மெல்லமெல்ல ஒளிகூடியவையாக என் மனதில் இன்னும் இருக்கின்றன. உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்…

அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால். இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது.

கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன் போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது.

முக்கியமாக வே. பாலகுமாரனைக் குறித்து புஷ்பராணி சொல்வது ஒரு குறியீடு என்றே சொல்லலாம். அவர் எழுதுகிறார்:

 “பாலகுமாரன் அதீத சுகாதார உணர்வுள்ளவர். அவர் எப்போதும் துடைப்பமும் தண்ணீருமாகக் கழிவறையைச் சுத்தம் செய்தவாறேயிருந்தார். எனினும் அது அவரது சக்திக்கு மீறிய காரியமாகவேயிருந்தது”

இறுதி வரை அவர் இப்படித் தான் இருந்தார், எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்.

3.

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் அரசு, சிங்கள இனவாத அரசாக வெளிப்படையாகவே செயற்படத் தொடங்கியதை அடுத்துச் சிறுபான்மை இனங்கள் மிக நெருக்கடிக்குள்ளாகின. பின்னாட்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இதில் மேலும் உச்ச நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தனர்.

இந்த நிலையில், 1950 இல் இலங்கையில் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவொன்றிற் பிறந்த பெண் ஒருவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான ஒருவர் சாதாரணமாகவே, இனரீதியாகவும்இ சாதி ரீதியாகவும் பெண்ணென்ற நிலையிலும் பலமுனைகளில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டும்.

அதிலும் அரசியல் ஈடுபாட்டைக்கொண்ட பெண் என்றால் இந்த நெருக்கடிகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவை எல்லை மீறியவை. இத்தகைய நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தவரே புஷ்பராணி.

புஷ்பராணியின் போர்க்குணம் அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தே கிளம்புகிறது. அவருடைய தந்தை சிதம்பரி ஒரு முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். தாய் சின்னம்மா இதற்கு உறுதுணையாக நின்றவர். இந்தப் புத்தகத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களுக்குத் தனியாக அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லையாயினும் புஷ்பராணி மற்றும் அவருடைய சகோதரர் சி.புஸ்பராஜா ஆகியோரின் ஆளுமை உருவாக்கத்திலும் அரசியல் ஈடுபாட்டிலும் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது.

அதனால், அந்தக் குடும்பம் அக்காலத்தில் பெரும் இன்னலுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இறுதிவரையில் பின்னகர்ந்து விடவில்லை. இதோ, இப்போதும் வரலாற்றில் முன்னிலைச் செயற்பாட்டுக்குரிய அடித்தளத்துடனேயே இருக்கின்றனர். ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவு, மற்றும் .சி.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற பதிவு இரண்டும் இந்த ஓர்மமான அடித்தளத்திற்கு நல்ல ஆதாரம்.

அதிக வசதி இல்லாத, அடிநிலைப் பெண்ணாக அரசியற் பொதுவெளியிற் பிரவேசித்த புஷ்பராணி, மற்றும் புஸ்பராஜா ஆகியோர் அந்தக் காலத்திலேயே பொதுத் தளத்தில் தவிர்க்கப்பட முடியாத பாத்திரங்களைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், இவர்கள் பின்பற்றிய அரசியல் மட்டுமல்ல, அந்த அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் ஆற்றிய முன்னிலைச் செயற்பாடும் அதற்கான உழைப்பையும் துணிச்சலையும் ஓர்மத்தையும் கொண்டிருந்தமையே இந்த முன்னணிப் பாத்திரங்களுக்குக் காரணங்களாகின்றன. இந்த ஓர்மந்தான் இவர்களுடைய அடையாளம்.

இதுதான் இவர்களை இன்னும் நின்றியக்கி வருகிறது. களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை. பொதுவாகவே, போராட்டத்திலும் யுத்தத்திலும் முதலிற் பாதிக்கப்படுவது பெண்களே. மிக உச்சப் பாதிப்பைச் சந்திப்பதும் பெண்களே. இந்த உலகம் பெண்களுக்கே துக்கத்தையும் காயங்களையும் வலிகளையும் அதிகமாகக் கொடுத்துள்ளது. உலகம் முழுதுமுள்ள பொது நிலை இது.

இந்த நிலைக்கு எந்தச் சமூகமும் எந்தக் காலமும் விலக்கில்லை. எப்போதும் வன்முறையில் இலக்கு வைக்கப்படும்இ வன்முறைக்குப் பலியாகும் முதல் மனித உயிரி பெண்ணே. அதிலும் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடையும் பெண் - இயங்கும் பெண், ஆதிக்கத் தரப்பினால் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுவாள். தெலுங்கானாப் போராட்டத்தில், எரித்திரியாவில், எல்சல்வடோரில், சிலியில், காஷ்மீரில்,மணிப்பூரில் என எல்லாத் திசைகளிலும் பெண் அவலத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ளாள்.

இரண்டாம் உலகப் போரின்போது மிகமோசமான முறையில் ஜேர்மனியில் சிதைக்கப்பட்டது பெண்களே. ஹிட்லர் இருந்தபோது யூதப்பெண்களும் , ஹிட்லர் இறந்த பின்னர் நாஜிப் பெண்களும் சிதைக்கப்பட்டனர். மலேசியாவில், கேரளாவில்,தென்னாபிரிக்காவில் என்று இந்தப் பட்டியல் நீளும். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அத்தகைய நிலையைச் சந்திக்கிறார் புஷ்பராணி. (இன்று ஏராளம் பெண்போராளிகள் இத்தகைய நிலைக்குள்ளாகியுள்ளனர்).

ஒரு கட்டத்தில் பொலிஸ் தரப்பினரால் கைது செய்யப்படும் புஷ்பராணியும் சகதோழியான கல்யாணியும் படுகின்ற வதைகள் மிகப் பயங்கரமானவை, மிகக் கொடுமையானவை. மாதவிலக்கின்போது பயன்படுத்தப்படுவதற்குச் சாதாரண துணியொன்றைக்கூடப் பெறமுடியாத நிலை. இந்த நிலையைப் புஷ்பராணி இங்கே விவரிக்கும்போது எம்மால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதிருக்கிறது. துக்கத்தின் பெரும்பரப்பொன்றில் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பதிவாக இது இருந்தாலும் இந்த மாதிரியான -மனிதனின் முழு நாகரீகத்திற்கும் இழுக்கான மனித நிலையைக் குறித்து சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால், இந்தக் கொடுமை இன்னும் நீங்கிவிடவில்லை . “இப்போது இராணுவத்தின் சிறைகளிலிருக்கும் புலிப் போராளிப் பெண்களின் நிலை இதை விடக் கேவலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எதிர்காலத்தில், அவர்களில் ஒருவருக்குத் தனது சிறைக் குறிப்புகளை எழுதி வெளியிடும் நாள் வாய்க்கும்போது இந்த நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியத்தான் போகின்றது” என்கிறார் புஷ்பராணி.

இன்று தமிழ் இணைய வெளியை ஆக்கிரமித்து அதை எச்சிற் பரப்பாக நிரப்பிக் கொண்டிருப்போர் இந்த வரலாற்றுப் பதிவை வாசிக்க வேண்டும். புஷ்பராணியின் அரசியற் தெரிகை, அவர் தேர்ந்தெடுத்த பாதை, அவருடைய செயற்பாடுகள், அவருடைய நம்பிக்கைகளில் மாற்றுப்பார்வைகள் இருக்கலாம். ஆனால், தான் தேர்ந்தெடுத்த, தான் நம்பிக்கை கொண்ட அரசியற் கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்த நேர்மை, அதற்காக பட்டுக்கொண்ட வாதைகள், அதற்காகத் தன்னுடைய இளைமைக்காலத்தை இழந்த ஓர்மத்தை அவர்கள் புரிந்து கொள்ளலாம்.

நியாயவெளியில் உரையாடலை நடத்துவதற்கான அடிப்படைத் தகுதியை ஒருவர் எப்படிப் பெறுவது என்பதையும் அவர்கள் அப்போது உணர்ந்து கொள்ளலாம். புஸ்பராஜா, புஷ்பராணி ஆகியோர் மற்றவர்களை விடவும் முதற் காலத்துக்குரியவர்கள் என்றவகையிலும் அரசியல் தொடர்ச்சியையுடையவர்கள் என்ற வகையிலும் பிறருடைய பதிவுகளை விடவும் இவர்கள் வேறுபட்ட பதிவுகளைத் தருகின்றனர்.

ஆனால், புஷ்பராணியின் வெளிப்பாடு வேறானது. புஷ்பராணியின் எழுத்தில் மனிதநேயத்தின் ஊற்றுக்கண்கள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. செழிப்பான வாசிப்பும் வாழ்க்கை நோக்கும் அனுபவத்தைக் கலையாக்கும் திறனும் வரலாற்றுப் பிரக்ஞையும் இந்த எழுத்துகளை ஈர்ப்புக்குரியனவாக்குகின்றன. இந்த வரலாற்றுப் பதிவை வெறுமனே தகவற் திரட்டாக அல்லாமல், வாழ்வின் ருசி மிக்க நிகழ்ச்சிகளின் உணர்வுக் கலவையாக - கலைத்துவம் மிக்க படைப்பாக புஷ்பராணி தருகிறார். அதற்காகப் புஸ்பராஜாவின் எழுத்துகள் குறைவானவை என்று அர்த்தமல்ல.

4.

இடதுசாரியப் பார்வையைக் கொண்டவர்கள் புஷ்பராணியின் இந்த வரலாற்று ஆவணத்தை நிராகரிக்கலாம். தமிழ்த்தேசிய அரசியற்பார்வையின் குறைபாடுகளே இத்தகைய அவலத்திற்கும் இன்றைய அவலத்திற்கும் பிரதான காரணம் என அவர்கள் வாதிடலாம்.

ஆகவே, இதிலே புதிதாக என்ன இருக்கப்போகிறது? என்ற தொனியில் அவர்கள் கேள்விகளை எழுப்பலாம். அத்தகைய பார்வைக்கும் கேள்விக்கும் இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதையும் விட முக்கியமானது, நான் முன்னரே குறிப்பிட்டவாறு, புஷ்பராணி தன்னை, தன்னுடைய பாதைகளை இங்கே வெளிப்படையாகவே பேசுகிறார்.

அதற்காகத் தன்னுடைய வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கிறார். அந்தப் போராட்டப் பாதையில் அவர் கற்றுக்கொண்ட பாடங்களை இந்த நூல் முழுவதும் அவர் பதிவு செய்கின்றார். இந்தப் பாடங்கள் அவரை மட்டுமல்ல எம்மையும் வரலாற்றின் புதிய திசைகளை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறு என்பது பெயர்கள், இடங்கள் காலம் மற்றும் சம்பவங்களின் பதிவாக அமைவதில்லை. அது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.

வாழ்க்கையைத் தீர்மானிப்பது. சமகால வாழ்க்கையையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்மாணிப்பது அது. எனவேதான் ஒவ்வொரு வரலாற்றுத் துளியிலும் மனிதர்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் அதில் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் மகிழ்ச்சிக்கான விதைகளும் உள்ளன.

துக்கத்துக்கான விதைகளும் உள்ளன. வரலாற்றில் சக்தி மிக்க பாத்திரத்தை வகிப்போர் ஆற்றுகின்ற பங்கும் அவர்கள் கொண்டிருக்கின்ற பொறுப்புணர்வும் அவர்களுடைய சிந்தனையும் ஆளுமையும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

புஷ்பராணி தனியே தன்னுடைய அடையாளத்துக்குள்ளும் அனுபவத்துக்குள்ளும் மட்டுப்பட்டிருக்கவில்லை. அதைக் கடந்து அவர் பொதுவெளிப் பரப்பில் தான் இயங்கிய காலத்தையும் சூழலையும் பதிவாக்குகிறார் என்பதன் மூலமாக இந்த அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்.

இதன்மூலம் தன்னுடைய பார்வைப் பரப்பின் விசாலத்தையும் செழுமையையும் அவர் காண்பிக்கிறார். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் தெரிகின்ற இடம் இதுதான். இந்தப் பின்னணிதான். எனவேஇ இந்த அசாதாரண அடையாளமுடைய வரலாற்றுப் பாத்திரத்தின் சாட்சியப் பதிவுகள் இன்றைய நமது ஈழப் போராட்ட அரசியற் சூழலில் மிக முக்கியத்துவமானவையாக உள்ளன.

வரலாறு பற்றிய கற்றுக்குட்டித்தனங்களின் மத்தியில், அளவுக்கதிமான தேசியவாதப் புலம்பல்களுக்கு மத்தியில்இ தான் கொண்ட அரசியற் தெரிவுக்காக த் தன்னை ஒப்புக்கொடுத்ததும் அதற்காகப் பாடுகளைச் சுமக்கத் துணிந்ததும் மிகப் பெரிய விசயங்கள். இவை உணர்ந்து கொள்ளப்படவேண்டியவை. உண்மையில் யுத்தக்குற்றத்தைப் பற்றிச் சிந்திப்போரும் அவற்றைப் பற்றிப் பேசுவோரும் போராட்டம் சிதைந்ததைப் பற்றியும் அது சிதைக்கப்பட்டதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும்.

ஈழப்போராட்டத்தின் சிதைவு அல்லது ஈழப்போராட்டம் சிதைக்கப்பட்டது என்று பார்க்கும்போதே அதன் விளைவுகளை நாம் அடையாளங்காண முடியும். குற்றங்களையும் தவறுகளையும் குறைபாடுகளையும் இனங்காணாமல் எந்தப் பின்னடைவையும் சீர்ப்படுத்திட முடியாது. விஞ்ஞான ரீதியான ஒரு பரிசோதனையாக இருந்தாலும் சரிஇ சாதாரண தொழில் ரீதியான முயற்சியானாலும் சரி, இது ஒரு தவிர்க்க முடியாத அடிப்படை. இந்த அடிப்படையைப் பின்பற்றும்போதே புதிய சவால்களை எதிர்கொள்ளவும் கடந்த காலத் தடைகளைக் கடக்கவும் குறைபாடுகளிலிருந்து விடுபடவும் முடியும்.

ஆகவே, இன்று கடந்து வந்த பாதையை மீளத் திரும்பிப் பார்த்தல் என்பது தவிர்க்க முடியாத ஒரு அவசியமாகியுள்ளது. குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு இதைத் தவிர மாற்றுவழிகள் இல்லை.

அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதொன்றும் புதிதுமல்ல, வெட்கக் கேடான செயலுமல்ல! இதை வெறுமனே குற்றமாகப் பார்க்காமல், ஒரு மருத்துவமாகப் பார்க்க வேண்டும்.

வரலாற்றிலிருக்கும் பெருமிதப் புள்ளிகளை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையில், விமர்சனபூர்வமாகப் பார்க்க வேண்டும். தன்னை மையப்படுத்திப் பார்க்காமல், தன்னை எதிர்நிலையில் முன் வைத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இதுவே இன்றைய முதன்மைத் தேவையாகும். இவ்வாறு செய்யப்படும்போதே அவலப்பரப்பாக விரிந்திருக்கும் ஈழத்தின் துயர நிலையைப் போக்க முடியும். புதிய திசைகளை நோக்கிப் பயணிக்கவும் முடியும்.

எனவே, இது போராட்டத்தின் சாட்சியங்களைப் பேசும் காலமாக வேண்டும். ஆனால் அவை நேர்மையானவையாக இருக்க வேண்டும். இங்கே ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல தன்மையவாதங்களாக அல்லாமல், மீண்டும் பிம்ப உருவாக்கம் செய்யாமல், விசுவாசத்தன்மையோடு அவை முன்வைக்கப்படவேண்டும். எத்தகைய உயரிய நோக்கத்தோடு ஒரு விடுதலைப்போராளி தன்னுடைய முதற்காலடியை விடுதலைப் பயணத்தில் வேட்கையோடும் விசுவாசத்தோடும் அர்ப்பண உணர்வோடும் முன்வைக்கிறாரோ, அத்தகைய தன்மை இந்தச் சாட்சியங்களை முன்வைத்தலில் பேணப்படுவது அவசியம்.

ஆனால், ஆரம்பநிலைப் போராளியிடம் முதல் அடிவைப்பின் போது முதிரா நிலைக்கான சாத்தியங்கள் அதிகம். இங்கே அனுபவங்களும் வயதும் முதிர்ந்திருப்பதால் நெறிப்பட்ட சாட்சியமாக்கப்படுகின்றன இவை. போராட்ட அனுபவமும் வயது மற்றும் கால அனுபவமும் இணைந்த நிலையில் இந்த அடிவைப்பு நிகழ்வதால், இந்தச் சாட்சியங்கள் முக்கியமானவையாகின்றன.

 5 .

‘அகாலம்’ என்ற இந்தப் போராட்ட நினைவுக் குறிப்புகள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவலங்களைச் சந்தித்த ஒரு பெண்ணின் வரலாறு. ஒரு குடும்பத்தின் வரலாறு. ஒரு சமூகத்தின் வரலாறு. ஒரு இனத்தின் வரலாறு எனப் பலவிதமாக உணரப்படவேண்டியது. ஆனால்இ இந்த வரலாற்றில் சிதம்பரியின் குடும்பம் பெற்ற நன்மைகள் என்ன? இந்த அரசியலால் அது பெற்ற அனுகூலங்கள் என்ன? இந்த மாதிரிக் குடும்பங்களின் அர்ப்பணிப்புகளைத் தமது அரசியல் அடித்தளங்களுக்குப் பயன்படுத்திய இயக்கங்களின், அவற்றின் தலைமைகளின், பாராளுமன்ற அரசியல்வாதிகளின் இலாபங்கள் எப்படியிருந்தன? என்பதெல்லாம் இன்று கேட்கப்பட்டே ஆகவேண்டிய கேள்விகள்.

புஷ்பராணியின் நினைவுகளில் அழியாதிருக்கும் மயிலிட்டிக் கிராமத்தில் என்னுடைய இளமைப் பிராயமும் 1980 களில் இருந்திருக்கிறது. அந்த அழகிய கடற்கரையும் அந்தச் சூழலும் அங்கே வாழ்ந்த சனங்களும் இன்று சிதைந்த நிலையிலேயே இருப்பதைக் காணலாம். இன்னும் அந்தக் கிராமத்துக்குப் போகமுடியாத துக்கத்தோடு ஆயிரக்கணக்கான சனங்கள் முதுமையடைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வயதினால் ஏற்படும் முதுமையையும் விட அவர்களுடைய துக்கத்தினால் ஏற்படுகின்ற முதுமையே கொடியது. இவ்வளவு போராடிய புஷ்பராணி அக்காவும் மயிலிட்டுக்குப்போக முடியாமலேயே இருக்கிறார்.

புஸ்பராஜாவின் நூலுக்கு ஏற்பட்ட வரவேற்பையும் விமர்சனத்தையும்போல இந்தப் புத்தகத்துக்கும் வரவேற்பும் விமர்சனமும் கிடைக்கும். “வரலாறு எழுதப்படும்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் சாத்தியம்.

கோணங்களுக்கு ஏற்ப வரலாறும் வேறுபடும். அவைகளில் இதுவும் ஒன்று” என புஸ்பராஜாவின் நூலைக் குறித்து அ.மார்க்ஸ் எழுதியதையே இங்கே நாமும் சுட்டலாம். இது கலைக்க முடியாத் துயரம். துரத்திட முடியா அவலம். ஆனால் என்ன செய்வது! இதற்குள்தானே நாம் வாழவேண்டியுள்ளது. இதற்கெதிராக நாங்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது!

வணங்குகிறேன், உங்களின் முன்னும் உங்களின் குடும்பத்தின் முன்னும். உங்களைப் போல இந்த மண்ணிலே வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களின் முன்னும். இந்த வரலாற்றின் முன்னும்.

00
கிளிநொச்சி
 -23.03.2012 

00

நன்றி -http://www.shobasakthi.com

00