Thursday, July 26, 2012

ஐந்து கவிதைகள்


பலியாட்டின் கண்கள்












எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்
ஒரு பரிசு
உயிரும் குருதியுமாகியது
அதில் கவலைக்கோ வெட்கத்திற்கோ
இடமில்லை என்றார்கள்
என்றபோதும்
நம் நிழலைக் காணுகையில்
அச்சமாயிருக்கிறது

நான் கண்டேன்
உனது நிழலிலிருந்து குருதி பீறிடுவதை
எனது நிழலிலிருந்து
நெருப்பு சுவாலை விடுவதை

ஒரு வாழையிலையில்
நமது முகங்கள் படைக்கப்பட்டிருந்தன
நமது விருந்திற்காகவே

எனது புன்னகையை நீ தின்றாய்
உனது சிரிப்பொலியை நான் குடித்தேன்

பலியாட்டின் மணியொலி
விருந்தை முடித்து வைத்தது

நீ விடைபெற்றபோது
விடுவித்த கையில் பார்த்தாயா
காய்ந்த குருதியின்
அச்சமூட்டும்  அழகிய கண்களை

பலியாடு அந்தக் கண்களிலிருந்து
நழுவிப் போய்க் கொண்டிருந்ததை
நாம் கவனிக்கவில்லை
என்பது இப்போது
ஞாபகமிருக்கிறது

00

 பூனையின் நிழல்














நான் நினைக்கவில்லை
ஒருபோதும்
ஒரு பூனை இத்தனை கவர்ச்சியொன தென்றும்
இவ்வளவு பயங்கரமானதென்றும்

என் படுக்கையில்
அதன் உறக்கம்
பன்னெடுங்கால அமைதியின்
ஊற்றைப் பிரவாகித்தபடி இருக்கிறது

திகிலூட்டும்படி
பூனையின் உறக்கத்தைக்
காவல் காத்தவாறு
ஒரு போர்ப்படையாக
அதன் நகங்கள்
வேட்டையின் ருஷியையும்
வெற்றியின் நம்பிக்கையையும்
உறுதிப்படுத்தியபடி

பூனையின் குரலுக்கும்
அதன் கண்களுக்கும்
அதன் நடைக்கும்
அதன் உறக்கத்துக்கும்
ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா

கவர்ச்சியாயும்
மிகப்பயங்கரமாயும்
பூனை சுழன்று கொண்டிருக்கும்
நிழலில்
பூனையின் குரல்
வன்மத்துக்கும் சினேகத்துமாக
ஒலிக்கிறது

அதன்
ஊடுருவும் கண்களில்
இன்னும் தீராதிருக்கிறது
பசி.

00


இனி














சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்
சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் தூக்கத்தினூடும்
விழிப்பினூடும்

ஞாபகங் கொள்ள முடியாத
பூச்செடிகளில்
யாரோ விட்டுச் சென்ற
புன் சிரிப்பின் மீது
இரத்தத்துளிகளின் நடனம் பாம்பின் நளினத்தோடு.

காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச் சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ன விருந்தில்
எதிர்பாராதவிதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை.

தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர்
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது

பன்னூறு ஆண்டுகால
தோல்வியின் நிழலைப்பிரதிபலிக்கும்
அந்த விழிகளில்
சகிப்பின் கடைசிக் கணம்
முடிவடைவதைக் கண்டேன்.

00

காணாமற்போனவனின் புன்னகை













ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்
காணாமற் போனவனின் புன்னகையை

கடந்து போக முடியாதபடி
கொதித்துக் கொண்டிருந்தது
அந்தப் புன்னகை

அதில் காயாமலே இருந்தன
இரண்டு கண்ணீர்த்துளிகளும்
அவனுடைய குருதியும்

திரும்பிச் செல்லவும் முடியவில்லை
காணாமற் போனவனின் புன்னகையை விட்டு
அங்கிருக்கவும் முடியாது
இன்னும்
காயமறுக்கும்
கண்ணீர்த்துளிகளின் முன்னாலும்
குருதியின் அருகாமையிலும்.

00

சாட்சிகளின் தண்டனை













ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்

நாங்கள் எதற்குச் சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்?

சனங்கள் புலன்களை இழந்து
நூற்றாண்டுகளாயிற்று
பரிசளிக்கப்பட்ட மரணத்தோடு
அவர்கள் தெரு நீளம் அலைகிறார்கள்

எந்தப் பெருமையுமில்லை
பொங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களைப் பெறுவதில்

எந்தச் சிறுமையுமில்லை
‘மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது’
என்றெவ்விதம் உரைப்பேன்?

பெரும் பொறியில்
ஒவ்வொருவராய் வீழ்த்தப்படுகிறார்கள்
வெல்ல முடியாத காலம் நீண்டு செல்கிறது
குழந்தைகளின் காலடியில் கூட.

புகை ஏந்திக் கறுத்த வானத்;தில்
ஒரு துளி ஈரமில்லை
துளிர மறுத்த மரங்களில்
பறவைகளின் குரல் தங்கவில்லை

போ
கோடை தீயும் தெரு வழியே போ
காய்ந்து கருகிய கனவுகளின் மீது
நடந்து போ
‘எந்தத்தாகமும் உன்னிடமில்லை
என்பது வருத்தமில்லை உனக்கு’
என்று யாரோ சொல்லிக் கேட்கிறது

போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக்கிடக்கிறது நடுத் தெருவில்
நாய் முகர

யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது
அதில் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும்
என்ன செய்வது?

00

பலியாடு - தொகுதியிலிருந்து...



Sunday, July 22, 2012

அறப்பிழை - பாட்டி சுட்ட வடை





























01
பாட்டி வடை சுட்டகதையை யார் முதலில் உருவாக்கினார்களோ தெரியாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தக் கதை சொல்லப்படுகிறது.
அந்தக்கதையைக் கேட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுதும் அதை மறப்பதில்லை. அது வேடிக்கையும் சுவாரஷ்யமும் நிரம்பிய இளவயதுக் கதை. அறவிழிப்புக் கதைகளில் அது முக்கியமான ஒன்று. ஆனால், அறவிழிப்பைப் பிரதானப்படுத்தி யாரும் அந்தக் கதையைச் சொல்வதும் இல்லை. அப்படி அதைக் கேட்பதும் இல்லை.

இதற்கு மாறாக, நரியின் தந்திரத்தைப் பிரதானப்படுத்தி, அதனுடைய புத்திசாலித்தனத்தைக் குவியப்படுத்தியே இந்தக் கதை சொல்லப்படுகிறது.

பாட்டிக்கு ஏற்பட்ட பாதிப்பை விட காகத்திடமிருந்து வடையைப் பறித்துக் கொண்ட நரியின் தந்திரத்தையும் அதனுடைய கெட்டித்தனத்தையும் குறிப்பிட்டுக்காட்டுவதே கதை சொல்லிகளின் நோக்கம். ஆகவே, அவர்கள் அதைக் குறித்தே சிந்திக்கிறார்கள். என்பதால், இந்தக் கதையில் - கதையினுள்ளே நிகழ்ந்திருக்கும் - நிகழ்ந்து கொண்டிருக்கும் அற வீழ்ச்சியைப் பற்றி அவர்கள் சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள்.

எனவே இங்கே பாட்டி வடை சுட்ட கதை, அல்லது பாட்டியிடமிருந்து வடையைக் காகம் பறித்துச் சென்ற கதை, அல்லது காகத்திடமிருந்து தந்திரமாக நரி வடையைப் பறித்த கதை என்பது வெளிப்பார்வையில் நரியின் புத்திசாலித்தனத்தைச் சொல்லும் கதைதான்.

காட்டு விலங்குகளில் அதிபுத்திசாலித்தனமும் தந்திரமும் உடையது நரி என்பது பொதுவான அபிப்பிராயம். அதை மேலும் நிரூபிக்கும் நோக்கில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. புத்திசாலித்தனத்தின் வீரியத்தை இயம்புதலே இங்கே குவியம். புத்திசாலித்தனத்தின் மூலம் காரியங்களை வெற்றியாக்கலாம் என்ற சிந்தனையை – அந்த நோக்கை உருவாக்குதே இதன் அடிப்படை. வணிகமயமாகிய உலகில் வெற்றியே முதன்மையானதாகும். அதுவே அவசியமானது. ஆகையால் வெற்றிகளின் மூலமே வாழ்வை ஸ்தாபிக்கலாம்  என்பது பொதுநம்பிக்கையாகிறது. ஆனால், இந்த வெற்றிகள் எத்தகைய அடிப்படைகளைக் கொண்டவை என்பதைப் பலரும் அறிவதில்லை. தவறான அடித்தளங்களைக் கொண்ட எத்தகைய வெற்றியும் நீடித்திருப்பதில்லை. அவை அதிக பிரகாசத்தைக் காட்டும் மின்னல் போலத் தோற்றம் தரும் தற்காலிக வெற்றிகளே.

பாட்டியிடமிருந்து வடையை அபகரித்த காகம் முதலில் வெற்றியைப் பெறுகிறது. இப்போது காகத்திடம் வடையுண்டு. ஆனால், அது மின்னலைப்போலக் கணநேரத்திற்கு மட்டுமேயான வெற்றி. அடுத்த சில கணங்களில் அந்த வடை நரியிடம் போய்ச் சேருகிறது. பாட்டியிடமிருந்து வடையை எடுத்திருந்தாலும் அதைத் தனக்குரியதாக ஆக்கிக் கொள்ள காகத்தினால் முடியவில்லை. (ஆகவே இந்த வெற்றியென்பது நிரந்தரமானதல்ல என்பது புரிகிறதல்லவா!)

பாட்டியிடமிருந்து வடையைப் பறித்த காகத்தை தந்திரத்தின் மூலம் ஏமாற்றிவிடுகிறது நரி. இங்கே நரி தன்னுடைய மூளையின் உழைப்பைப் பயன்படுத்துகிறது. அதாவது தந்திரம் செய்கிறது@ புத்திசாலித்தனமாகச் செயற்படுகிறது. அதனால் அதனுடைய புத்திசாதுரியமே அதற்கு வடையைப் பெற்றுக் கொடுக்;கிறது.

ஆகவே, நரியின் புத்திசாலித்தனம் இங்கே மதிப்பைப் பெறுகிறது.

ஆனால், அது எத்தகைய அடிப்படையைக் கொண்டது, எத்தகைய அறத்தைச் சாரம்சமாகக் கொண்டது என்று கதையில் சொல்லப்படவில்லை. கதையைச் சேர்ந்தியங்குவோரின் மனதிலும் இது குறித்த கேள்விகள் உருவாக இல்லை. இது துயரமான ஒரு நிலையே.

தந்திரங்கள் நிறைந்த புத்திசாலித்தனம் லௌகீக வாழ்க்கையின் பிரதான அடிப்படைகளில் ஒன்று.  தந்திரங்கள் நிறைந்த புத்திசாலித்தனமே இந்த உலகத்தில் லௌகீக வாழ்க்கைக்கு உதவும் என்பது பொதுவெளியின் பெரு நம்பிக்கை. ஆகவே புத்திசாலித்தனத்தை மையப்படுத்தியவாறு இந்தக் கதையை அணுகுவதில் என்னதான் குற்றங்கள் உண்டு என்று பலரும் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தத் தந்திரமே வளர்ந்து பிறகு அரசியலிலும் இராஜதந்திரமாகியிருக்கிறது போலும். இந்தத் தந்திரத்துக்கு ஒரு அற நியாயத்தை வழங்கும் முலாமே இராதந்திரம் என்ற வரைவிலக்கணமாகும். எனினும் அறத்தை விலகிய இராசதந்திரம் ஒரு போதுமே மனித குலத்தை ஈடேற்றுவதில்லை.

ஆனால், வாழ்க்கையின் ஓட்டம் எப்போதும் அறத்தின் அடிப்படையில், அந்த ஈரலிப்பிற்தான் வேர்கொண்டியங்குகிறது. இதை நாம் பல வேளைகளிலும் மறந்து விடுகிறோம். அல்லது அதை அப்படி உணரத்தவறி விடுகிறோம்.

ஆனால், இந்தக் கதையில் காகத்தின் தவறான செயலுக்குக் கிடைத்த ஏமாற்றம் அல்லது படிப்பினையே கதையின் சாரம் என்றுபடுகிறது. அறப்பிழை ஒன்று எவ்வாறாயினும் நீடித்த வெற்றியைத் தராது, முழுமையான வெற்றியாக அமையாது என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது.

02


உயிரினங்கள் ஒவ்வொன்றும் தத்தம் இருப்புக்காக புத்திசாலித்தனங்களையும் தந்திரங்களையும் கொண்டேயுள்ளன போலும். அதனால் அவற்றுக்கு தந்திரம் செய்வதென்பது ஒரு அடிப்படை விதியாக உள்ளது.. இந்த விதியை இழக்குந்தோறும் அந்த உயிரினங்கள் தங்களின் இருப்பை இழந்து போகின்றன.

எனவே தந்திரங்களின் மூலம் ஒன்றை ஒன்று வெல்கின்றன. அதற்காக ஒன்றை ஒன்று தந்திரம் செய்கின்றன.

(இந்தத் தந்திரமே வளர்ந்து பிறகு அரசியலிலும் இராஜதந்திரமாகியிருக்கிறது போலும்).

மனித வாழ்க்கை இந்த விதியிலிருந்து வேறுபட்டு விலகியுள்ளது. அது விழுமியங்களாலும் ஒழுங்கமைப்புகளாலும் நெறிப்படுத்தப்பட்டது. மனிதனுடைய வாழ்க்கை ஏனைய உயிரினங்களின் வாழ்க்கையை விட வேறுபட்டதாக இருப்பதே இதற்குக் காரணம். அது பிரத்தியேக அம்சங்களை அதிகமாகக் கொண்டதாக மாறியிருக்கிறது. பிரத்தியேகமானதாக மாறுந்தோறும் அதற்கான அடிப்படைகளும் தேவைகளும் வேறுபட்டே இருக்கும். ஆகவே அவற்றை அடைவதற்கும் அவற்றைப் பேணுவதற்கும் விழுமியங்களும் ஒழுங்கமைப்புகளும் தவிர்க்க முடியாதவை. விழுமியங்களையும் ஒழுங்கமைப்பையும் பேணுவதாயின் அங்கே அறம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும். அறமற்ற நிலை என்பது பெரும் சிதைவுகளிலேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று சேர்க்கும். அறவீழ்ச்சி அல்லது அறப்பிழை நிகழும்போதே முரண்பாடுகளும் பிரச்சினைகளும் உருவாகின்றன. அறத்தின் அடிப்படையில் நின்றவாறே தன்முன்னே இருக்கின்ற தடைகளையும் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டும். அறத்தை விலகிய எத்தகைய எதிர்கொள்ளல்களும் தற்காலிக வெற்றிகளுக்கு அப்பால் நகர்வதில்லை.

விடுதலைப் போராட்;டங்கள் ஆரம்பத்தில் அறநியமங்களின் அடிப்படையிலேயே அவை ஆரம்பமாகின்றன. காலப்போக்கில் அதிகாரப் போட்டிகளும் ஏதேச்சாதிகாரமும் அறப்பிழைகளை உருவாக்கி, அவற்றை வேறு திசைகளை நோக்கித் திருப்பி விடுகின்றன.

பாட்டி வடை சுட்ட கதையில் பாட்டியின் வடையை அபகரித்த காகம் பாட்டிக்கு அறப்பிழையை இழைக்கிறது. அது பாட்டியிடமிருந்து எந்த நியாயமுமில்லாமல் வடையைக் களவாடிச் செல்கிறது@ அடாத்தாக எடுத்துச் செல்கிறது. பாட்டி எந்த விதமான நியாயமும் இல்லாமல் காகத்திடம் வடையைப் பறிகொடுக்கிறாள். பாட்டியின் உழைப்பைப் பொருட்படுத்தாமற் காகம் வடையை எடுத்துச் செல்கிறது.

ஆனால், அந்தத் தவறுக்காகவே அது அடுத்த கணத்தில் வடையை இழக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, மற்றவர்களுடையதை எடுப்பது தவறு. அது ஒரு போதும் நிலைக்காது என்பதை வலியுறுத்துகிறது கதை. அறப்பிழையொன்றை அது உணர்த்துகிறது. அதிகம் பேர் உணரத் தவறுகின்ற விசயம் இது.

எனவே, பிறருடைய உழைப்பை, உரிமையை அபகரிக்காதே என்பதே கதையின் சாரம். அப்படி அடாத்தாக எதையும் அபகரித்தால், அதைத் தட்டிச் செல்வதற்கு வெளியே யாராவது இருப்பர். அதுவே இங்கே நரியின் வடிவில் உணர்த்தப்படுகிறது.

இந்த உணர்கை ஏன் தவறவிடப்பட்டது என்பதே இங்கே கேள்வியாகும். ஆகவே இங்கே அறப்பிழையே பிரதான மையப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறப்பிழை கதையை எடுத்துரைப்போரிடம் கூர்மைப்படுத்தப்பட்டுக் காண்பிக்கப்படவில்லை. என்றாலும் நுண்ணிய முறையில் கதை கேட்கும் மனதுக்கு பாட்டியின் இழப்பும் துயரமும் அவளுக்கு நேர்கின்ற பாதிப்பும் புரியும். அந்த மனம் நரியின் தந்திரத்தையிட்டு வியப்படையாது. காகத்தின் கெட்டித்தனத்தையிட்டு அது ஆச்சரியப்படாது. பதிலாக அது அங்கே நிகழ்கின்ற அறப்பிழைகளையே கணக்கிடும்.


00


Friday, July 20, 2012

மரணம் விளையாடிய முற்றம்




மரணம், இதோ இந்தக்கணத்திலும் என் மூக்கருகில் வந்து சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்போது இரவு ஒன்பது மணி. ‘மிக் 27’ விமானங்கள் பேரிரைச்சலோடு குண்டு வீச அலைகின்றன. காதைப்பிளக்கும் இரைச்சல். உயிரைக்கரைக்கும் இரைச்சல். எந்த வீட்டிலும் வெளிச்சம் இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. எந்த வீட்டிலும் யாருமில்லை. எல்லோரும் பங்கருக்குள்.

குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன. எல்லோருக்கும் அழுகை வருகிறது. ஆனால்  அழமுடியுமா. அழுதால் இந்தப் பயம் நீங்கி விடுமா? இந்த அபாயம் தொலையுமா?

பயம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமா? எல்லோருடைய கால்களும்தான் நடுங்குகின்றன. இதயத்தின் நரம்புகளில்  மரண நடனம். பிரமாண்டமான பாம்பாக அலைகிறது மரணம். அது எங்கே கொத்தப்போகிறது? யாரைக்கொத்தப்போகிறது? யாருடைய தலையில்? யாருடைய கண்களில்… ? கடவுளே, கடவுளே …!

எல்லா வீடுகளிலும் விளக்குகளை அணைத்துவிட்டார்கள். வீட்டிலும் இருள். பங்கருக்குள்ளும் இருள். வெளியிலும் இருள். சனங்களின் வாழ்விலும் இருள். மனங்களிலும் இருள்….

இருளென்பது சூனியத்தின் வெளி.

இருளைக்கிழித்து இதோ பல்லாயிரம் ‘வோல்ட்டேஜ்’ ஒளிவீசும் படியாக வானத்தில் முப்பது வெளிச்சக்குண்டுகள். எங்கேயும் மறைய முடியாது. யாரும் ஒழிக்க முடியாது. அந்தளவுக்குப் பிரகாசமான வெளிச்சம். பகலைப்போல வெளிச்சம். குண்டுவீச்சு விமானங்கள் இலக்கைத்தேடுகின்றன.

எது இலக்கு? எதற்கு இலக்கு? கொல்வதற்கன்றி வேறெதற்கு? உண்மையில் அது இலக்கா, அப்படியென்றால் என்ன? தலைகள்தானே. சனங்களின் தலைகள். அல்லது போராளிகளின் தலைகள். அப்படியென்றால் அது கொலை. எப்படியோ அது அப்பட்டமான கொலை. அதில் எவெரென்றில்லை. யாராயினும் கொலை. ஒரு சிங்களக் கிராமத்தில் இப்படிக் குண்டை வீசுவார்களா? இதைப்போல, ஒரு தமிழ்க்கிராமத்தில் மாறியும் ஒரு தாக்குதலை இப்படி நடத்துவார்களா போராளிகள்?

சாவுதான் நிச்சயமானது என்று எல்லோருக்கும் புரிகிறது.  ஒரு கணத்தில், ஒரே கணத்தில் அது எல்லோருக்கும் புரிகிறது.

விமானங்கள் இன்னும் குண்டுகளை வீசவில்லை. இதுதான் கொடுமையானது. குண்டுகள் வீசப்பட்டால் அதில் சிக்கிச் செத்துவிடலாம். சிக்கவில்லையென்றால் உயிர்தப்பலாம். அல்லது குண்டுகள் வீசப்படும் இடத்தை அறிந்தால் சற்றுப்பயம் குறைந்து விடும். இனி அந்த இடத்திலேயே மிகுதிக் குண்டுகளையும் வீசுவார்கள் என்று நம்பலாம். ஒரு இலக்கை முழுதாக அழிப்பதே இதன் நோக்கம். விதிவிலக்காக ஒரே சுற்றில் இரண்டு இடங்களில் குண்டு வீச்சு நிகழ்வதும் உண்டு. ஆனால், அதற்குச் சாத்தியங்கள் அரிது.

எனவே எங்காவது குண்டுகள் வீழத் தொடங்கி விட்டால், சற்று ஆறலாம். அதற்காக அந்த இடத்தில் உள்ளவர்கள் மாட்டுப்படட்டும். நாம் தப்பிவிடலாம் என்று அர்த்தமில்லை. உயிரச்சம் அந்தக்கணத்தில்  எந்தத்தீர்மானங்களையும் அலசிக்கொண்டிருப்பதில்லை. எத்தகைய விவாதங்களுக்கும் அப்போது இடமில்லை.

விமானங்கள் சுற்றச்சுற்றப் பயம் கூடுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் விமானங்கள் சுற்றும்போது ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் தங்களின் தலைக்குமேலேயே அந்த விமானங்கள் குண்டுகளைப் வீசப்போகின்றன என்று. அதனால் ஒவ்வொருவரும் பீதியுடனேயே அந்தக்கணத்தில் பங்கருக்குள்ளிருக்கிறார்கள்.

பங்கர் வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையே. அதிலும் குழந்தைகளுடன் பங்கருக்குள்ளிருப்பது என்றால், அதை விடக் கடினமாதும் கொடுமையானதும் வேறில்லை. புழுக்கத்திலும் இறுக்கத்திலும் குழந்தைகள் இருப்புக் கொள்ள முடியாமல் கத்துவார்கள். இதை எப்படியும் கட்டுப்படுத்த முடியாது. அவற்றுக்கு தலைக்கு மேலே உள்ள அபாயத்தைப் பற்றிப் புரியாது. அதற்காக வெளியே வரவும் முடியாது. பதுங்கு குழிக்குள்ளிருக்கும்போது வெளியே என்ன நிலவரம் என்று யாருக்கும் தெரிவதில்லை. எனவே எப்படி வெளியே வர முடியும்? உள்ளே கொந்தளிக்கும் குழந்தை எதையும் நிதானிக்க இடமளிக்காது.

கடவுளே, இந்த விதியை என்னவென்பது? நரகத்திலே உயிர்த்தஞ்சம் அடைந்திருக்கிற கொடுமை இது. இதைவிட வேறுவழியில்லை. உயிர் வேண்டுமா நரகத்துக்குப்போ. நரகமே இப்போது பாதுகாப்பிடம். அதுவே உன்னைப் பாதுகாக்க வல்லது. அதைவிட வேறு வழியில்லை.

வீட்டில் சாமி அறை இல்லாவிட்டாலும் கட்டாயம் பங்கர் இருக்கவேணும். சாமியறையை கூட்டித்துப்புரவாக்கலாம், விடலாம். அதனால் எந்தப்பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது. ஒரு மனத்திருப்திக்கு மேல் அதிகம் ஆகப்போவதில்லை எதுவும். ஆனால் கட்டாயம் பங்கரைத் தினமும் கூட்டிச் சுத்தகமாக வைத்திருக்கவேண்டும். அதற்கு விளக்கேற்ற வேணும். அதைக் கண்காணிக்க வேணும். இல்லையென்றால் அதற்குள் மரணம் வந்து புகுந்து விடும். சாவுக்கஞ்சிச் சரணடையுமிடத்திலேயே சாவு வந்து அழைத்துச் சென்று விடும்.

கவனக்குறைவான பங்கர்களில் பாம்போ, பூச்சியோ குடியேறிவிடுவதுண்டு. மரணத்துக்குத்தான் எத்தனை முகங்கள்? எத்தனை வேஷங்கள்? எத்தனை குணங்கள்? அது எத்தனை வடிவங்களில் சூழ்ந்திருக்கிறது? அதிலும் எம்மை ஏன் இப்படிச் சூழ்ந்திருக்கின்றது?

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது மரணந்தானா? மற்றதெல்லாம் அந்த நிரந்தரத்திற்கிடைப்பட்ட தற்காலிக நிகழ்ச்சிகளா?

விமானங்கள் குண்டுகளுடன் அலையும்போது அவற்றுக்கு அஞ்சிப் பங்கருக்குள் பாதுகாப்பு தேடி நுழைந்தவர்களை பாம்புகள் தீண்டியிருக்கின்றன. தீண்டிக் கொன்றிருக்கின்றன. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை என்பார்களே! அதேமாதிரித்தான் இது.

வெளிச்சக்குண்டுகள் இன்னும் எரிகின்றன. இரவைப்பகலாக்கும் என்பார்களே. அப்படி எரிகின்றன. திருவிழாவில் இப்படி ஒரு வெளிச்சப்பந்து என்றால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்! இங்கே இப்போது முப்பது குண்டுகள் வானத்தில் எரிகின்றன. இதோ வானம் எரிகிறது. இனிக் கீழே பூமியும் எரியப்போகிறது. இதைத்தான் "முகில்களின்மீது நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று "என்று எழுதினாரா சேரன்?

முப்பது எரிகுண்டுகள் இந்த இரவில் - இருளில் - வானத்தில் எரியும்போது எப்படி இருக்கும்? அதை வேடிக்கை பார்கக்கக்கூடியமாதிரியா இப்போது நிலைமை இருக்கிறது?

வீடுகளில் வெளிச்சமில்லை. ஊர்களில் வெளிச்சமில்லை. ஆட்கள் பதுங்கியிருக்கிற பங்கருக்குள் வெளிச்சமில்லை. அடுத்து வரும் கணம் எப்படி இருக்குமென்பதற்கு வெளிச்சமில்லை. ஆனால் வானம் பற்றி எரிகிறது. வானம் மட்டுமா பற்றி எரியுது. எங்கள் வயிறும் தான் பற்றி எரியுது. கடவுளே, கடவுளே …

இது உயிரைத்தின்கிற வெளிச்சம். உயிரைத்தேடியலைகிற வெளிச்சம். வெளிச்சப் பாம்புகள். மரணத்திற்கு இப்படியுமொரு நிறமா? இப்படியொரு வடிவமா? 'தலையை உள்ளுக்குள்ளே அமத்துங்கள்’ என்று ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளை அதட்டுகிறாள். அது உண்மையில் அதட்டல் அல்ல. மன்றாட்டம். எச்சரிக்கை. கட்டளை. வேண்டுதல். அறிவுறுத்தல்.

அப்படி ஒருதாய் மட்டும்தானா பிள்ளைகளை அதட்டினாள்? அறிவுறுத்தினாள்? மன்றாடினாள்? எச்சரித்தாள்? கட்டளையிட்டாள்?

பங்கருக்குள்ளிருந்த அத்தனை தாய்மாரும் தங்களின் பிள்ளைகளின் உயிருக்காக அப்படித்தான் வருந்தினார்கள், மன்றாடினார்கள், வேண்டினார்கள்.

வெளிச்சத்தைக்கண்டே பயப்படுகிற வாழ்க்கை இது. வெளிச்சமில்லாமலே பங்;கருக்குள் அடைபட்டிருக்கிற வாழ்க்கையும் இதுதான். முன்பும் இப்படி வெளிச்சத்தைப்போட்டு யாரையோவெல்லாம் தேடினார்கள். எதையோவெல்லாம் தேடித்திரிந்தார்கள்.

வயிற்றில் ‘லைற்‘றைப் பொருத்திய ‘ஹெலிகொப்ரர்‘கள் அப்போது இரவிரவாக இப்படித்தான் தேடின. போதாக்குறைக்கு அவை தாக்குதலையும் நடத்தின. அது யுத்தம் தொடங்கிய காலத்தில்.

அது பங்கர் பெரிதும் அறிமுகமாகியிராத காலம்.  மரங்களுக்குக் கீழேயும் பாலங்களுக்கு அடியிலும் மலசல கூடத்திலும் அவரவர் பாதுகாப்புத் தேடினர்.

நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் இது உண்மை. பலர் மேசைக்குக் கீழே கூட பாதுகாப்புத் தேடினார்கள். விமானத்தாக்குதலையோ ‘ஹெலிகொப்ர‘ரின் தாக்குதலையோ தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு எந்த மேசைக்கும் திராணியில்லை. ஆனால் அவர்கள் வேறு வழியில்லாமல் பயத்தில் ஒரு மன ஆத்திக்காக மேசைகளின் கீழே பதுங்கினார்கள். ‘ஹெலிகொப்ரர்‘ அடித்துக் கொண்டு வரம்போது ஒரு மூதாட்டி கையில் வைத்திருந்த கடகத்தைத்  தூக்கித் தலைக்குக் கவசமாகப் பிடித்ததை நான் கண்டேன். ‘பங்கரே‘ சில வேளைகளில் பாதுகாப்பில்லாமிலிருக்கும்போது இந்தக் கடகம் மட்டும் பாதுகாப்பைக் கொடுக்குமா?

அதைப்பார்த்த எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச்சிரிப்பை விடவும் அந்த மனுசி அப்போது அந்தரப்பட்டதும் உயிர்ப்பயத்தில் அவ அப்படி கடகத்தைத் தலையில் கவிழ்த்ததும் பெரிய பரிதாபம்.

எப்படியெல்லாம் இந்தச்சனங்களைப்போட்டு அலைக்கிறார்கள்? எத்தனை வருசமாக இந்தச் சனங்கள் இப்படித் துன்பப்பட்டுக் கொண்டேயிருப்பது?

இதெல்லாம் பாதுகாப்பில்லை என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. ஆனாலும் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த அளவில் அப்படிச் செய்தார்கள. தாங்கள் உணர்ந்த விதத்தில் அதுதான் அவர்களுடைய பாதுகாப்பு ஏற்பாடு.

அப்போது ஆட்சியில் ஜே.ஆர் இருந்தார். பகலில் தேடிக்காணமுடியாததையெல்லாம் அவர் தன்னுடைய படை ஆட்களைக்கொண்டு இரவிரவாகத்தேடினார். வெளிச்சம் போட்டுத் தேடினார். கவசவானங்களிலும் ‘ஆமட் ட்றக்’ குகளிலும் ‘லைற்’றைப் பொருத்திக் கொண்டு ஒழுங்கை தெருவெல்லாம் ஆமிக்காரர் தேடினார்கள். யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வன்னியிலும் தமிழ்ப்பெடியளை இப்படித் தேடினார்கள். ஹெலிகளும் தேடின. இரவிரவாகத் தேடியும் எதனையும் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவர் பகலிலேயே கடைசி வரையில் பார்வை தெரியாதவராகவே இருந்தவர். பிறகெப்படி இரவில் எதையும் அவரால் காணமுடியும்? அதனால்தான் கடைசிவரையும் இனப்பிரச்சனையை அவரால் காணமுடியவில்லை. அதனால் அதை அவரால் தீர்க்கவும் முடியவில்லை.

‘தமிழருக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை இருக்கு?’ என்று கேட்டவரல்லவா அவர்.

அவரைப்போலவே இப்போது ஆட்சியிலிருக்கிறவர்களும் வெளிச்;சம் போட்டுத்தேடுகிறார்கள். பலியெடுக்கக்கூடிய தலைகள் தெரிகிறதா என்று பார்க்கிறார்கள்.

இது யுத்தம் உக்கிரமடைந்த காலத்துச் சங்கதி.

சிறிலங்காவில் யார்தான் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்ப்பெருங்குடிகள் இப்படித்தான் வதங்க வேண்டியிருக்கிறது. பண்டாரநாயக்கா காலம் தொட்டு இப்ப மகிந்த ராஜபக்ஸ வரையில் இதுதான் நிலைமை. வரவர இன்னும் இந்தத் துன்பக்கதை கூடுதே தவிர கொஞ்சமும் குறைவதாகவில்லை.

இதோ குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கே, எங்கே … எந்தத்திக்கில் குண்டுகள் போடப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. பூமி பிளக்கின்றதைப்போல பேரதிர்வு.

என்ன செய்கிறார்கள்? இப்படியெல்லாம் இந்த இரவில்வந்து வெறித்தனமாக கொலைத்தாண்டவம் புரிய யார் அனுமதித்தது இந்த மடையர்களை?

ஆறு குண்டுகளா? இதோடு முடிந்ததா? இல்லை இன்னும் இருக்கிறதா, உயிரைத்தேடும் வெறிப்படலம்? இரவிரவாக தூக்கமில்லாமல் இப்படியே பங்கருக்குள்தானிருப்பதா?  இதென்ன கொடுமை?

குழந்தைகள் அழுகின்றன. வீரிட்டுக்கத்துகின்றன. எங்கே அந்தக்குண்டுகள் வீழ்ந்திருக்கும்? அங்கே என்ன நிலைமையோ? யார் காயப்பட்டார்களோ? யார் செத்தார்களோ? குழந்தைகளா? பெண்களா? அல்லது முதியோரா? … கடவுளே கடவுளே …!

அம்மாவும் பங்கருக்குள் இருக்க முடியாமல் அவதிப்பட்டா. அதற்காக வெளியில் வந்து ஆபத்தில் மாட்ட முடியுமா? அவ முட்;டுக்காரி. தூசியோ வெக்கையோ ஆகாது. அதற்காக இப்பொழுது என்ன செய்ய முடியும்? கண்முன்னே பெத்த தாய் படும் பாட்டைச் சகிக்க முடியவில்லை. ஆனால் எதுவும் செய்வதற்கில்லை.

அழும் குழந்தைகளை எப்படி ஆறுதற் படுத்துவது.

எனக்கெதுவும் தெரியவில்லை. இத்தோடு முடிந்ததா துயர்ப்படலம்?

ஒரு ‘மிக்’ விமானம் இரையும்போது உங்களின் அடிவயிறு தானாகக் கலங்கும். இதயமும் ஈரலும் கரைந்து இடந்தெரியாமலே போய்விடும். அடி வயிற்றில் ஆயிரங் கத்திகள் குத்துவதாக உணர்வீர்கள். அப்படியிருக்கும், அந்த இரைச்சலும் அதின்ர வேகமும். குண்டு வீசாமலே அதின்ர சத்தத்தால் பலரைக் கொன்று விடலாம். நான் செத்துப் பிழைக்கிறேன். பிழைத்துப் பிழைத்துச் சாகிறேன். எத்தனை தடவைதான் இப்படிச் சாவது, ஒவ்வொருவரும்? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும்?

00


2007 இல் எழுதிய பதிவு.

000

Sunday, July 15, 2012

வரவேற்பு


















பார்க்கிறேன்
இலைகளால் கம்பளம் விரித்து
காத்திருக்கின்றன எல்லா மரங்களும்
பறவைகளுக்காக
எப்போதும்

பறவைகள் வந்தமர
எல்லாக் கிளைகளும்
நெகிழ்ந்து கொடுக்கும்
காதலும் நட்பும் அன்பும் கருணையும் பெருக.
மலர்களும்
கனிகளும் கூட
பறவைகளுக்காகவே.

நிலத்துக்கும் ஆகாயத்துக்குமிடையில்
அந்தர வெளியில் நீந்திவரும்
பறவைகளை வரவேற்றுக் கொண்டிருக்கும்
மரங்களுக்குத் தெரியுமா
எந்தப் பறவை
எப்போது வந்து
எங்கே அமருமென்று?

ஆனாலுமவை காத்திருக்கின்றன பறவைகளுக்காக

பறவைகளும் அறியுமா
எந்த மரத்தில்
எங்கே
எப்போது அமருவதென்று?

ஆனாலுமொன்று
மூப்பென்றும் இளமையென்றும்
பார்த்து அமர்வதில்லை
எந்த மரத்திலும் எந்தப் பறவையும்.

எந்தப் பறவை வந்தாலென்ன
விலகிச் சென்றாலென்ன
பறவைகளுக்காகவே காத்திருக்கின்றன
இலைக்கம்பளம் விரித்து
ஒவ்வொரு மரமும்
இரவும் பகலும்...

00

Friday, July 13, 2012

கருணாகரனின் கவிதைகள் ஒரு பார்வை







- கந்தையா ஸ்ரீகணேசன்








ஒரு சமூகத்தின் இருப்புக்கமைய அதன் இலக்கிய ஊடகம் அமையும் என்பது இலக்கிய அறிஞர்கள் கண்ட உண்மையாகும். நவீன மனிதன் தன் இருப்பை உள்ளும் புறமும் தேடிக்கொண்டிருப்பான். அவனது வாழ்வு உலகில் இயங்கும் பல சக்திகளால் கேள்விக்குறியாக்கப்படும்போது அவனால் இலக்கண வரம்புகளை, இலக்கிய விதிகளை (மரபு ரீதியான) கற்றுணர்ந்து கொள்ளும் வரை பொறுத்திருக்கமுடியாது. தன் அவலத்தை தன் உணர்வை அவன் தனக்குள் கைவரும் எக்கலை ஊடகத்தாலும் வெளிக்கொணரும் சக்தியை சூழல் அவனுக்கு வழங்குகின்றது. அத்தோடு அவனது அசைவியக்கத்தில் அவனுள் காணப்படும் கவி ஊற்றும் அதற்கு வழி சமைக்கின்றது. இப்பின்னணியிலேயே கருணாகரனது கவிதைகளை நாம் இனங்காண வேண்டும்.

ஈழத்தமிழிலக்கியப் பரப்பில் கவிதையினது வளர்ச்சி, பொதுவாக தமிழிலக்கியத்துக்கே ஒரு முன்னோடியாக உள்ளது. மரபுக்கவிதைகளில் மஹாகவி, நீலவண்ணன், முருகையன், நுஃமான், சோ.பத்மநாதன் ஆகியோரும் புதுக்கவிதையில் வ.ஜ.ச.ஜெயபாலன், சேரன், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், வாசுதேவன் ஆகியோரும் சமகால மக்களின் வாழ்வியலைத் தாக்கமான முறையில் சமூக அரசியல் வழிப்புணர்வோடு கவித்துவ, சொற்சிக்கன குறியீட்டு படிமச்சிறப்புக்களோடு எழுதிவருகின்றனர். இந்த வரிசையில் கருணாகரனது கவிதைகளும் இன்னொரு பரிநாமத்தை எமக்கு உணர்த்தி நிற்கின்றன.


அமைதியான, அடக்கமான ஆனால் தன் மக்கள் துயர் கண்டு துடிக்கும் மனிதனாய் விளங்கும் இளைஞன் கருணாகரனை, உண்மை வாழ்வை நேசிப்பவனாகவும், நல்லவை செய்து அல்லவை போக்க முயல்பவனாகவும், புதிய உலகைப்படைக்க விளையும் அவாவுடன் இயங்குபவனாகவும், அவனது சமகால கவிதைகள் (திசை, மல்லிகை, உள்ளம், தாயகம் ஆகியவற்றில் வெளிவந்த தனிக்கவிதைகள்) இனங்காட்டி நிற்கின்றன.

‘சிதைக்கப்பட்ட நகரம்’ நாம் வாழுங்கால யாழ்ப்பாண நகர் பற்றியும் அதன் அவலத்தையும் கூறுகின்றது.


“துயில் கலைந்த இரவுகளில் 
இருள் சுமக்கும் யாழ்ப்பாணம்” 
எனத் தொடங்கி 


“துயில் மறுக்கும் குருவிகள் அச்சம் 
மனதில் எச்சமிடும்” 

என்று மக்கள் மனோநிலையைப் படம் பிடிக்கின்றது.


“முற்றத்துப்பூமரம் கூட 
தென்றலுடன் சிநேகிதிக்க மறந்து 
 பயத்தில் நிறைந்திருக்கும்”

ஆனால் கவிஞர் நம்பிக்கை ஒளியை வாசகரிடத்துத் தொற்ற வைக்கின்றார்.

‘மரணத்தை நிச்சயப்படுத்தும் செய்திகளுடன் 
பத்திரிகை அலுவலகங்கள் சுறுசுறுக்கும் 
 புதிய வாழ்வில்’

சமகால மனிதனது உரிமை மறுப்பும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும், குறியீடு, படிமச் சிறப்புக்களுடன் வெளிப்படுத்துகின்றது.

“காற்று” எனுங் கவிதையில்


‘காற்று ஒரு காலம் 
திண்மமாக அல்லது திரவமாக 
மாறி விட்டல் மூச்சு எப்படியிருக்கும்’ 
எனக் கேள்வி எழுப்பி, 
‘சுவாசப்பையும் அதற்கேற்றபடியே இருக்கும்’ 

என இயற்கைச் சமநிலை கூறுகின்றார்.

ஆனால் அத் திரவமோ திண்மமோ பிறர் கையில் கிடைத்துவிட்டால் இம்மனிதன் இரவல் கேட்கவேண்டிவரும் என நவீன மனிதன் அகப்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலை உணர்த்துகிறார்.

‘கோடைவெளியில்’ இறுக்கமான குறியீடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

‘பனிமூடும் புகையிருளில் 
முகம் நனைந்த பசிய மரங்கள்  
கடுமுனைப்பின் பண்பொழுக்கில் சிறு புள்ளினக் குடியிருப்பு 
செந்நாக்கு அனற்பிளம்பாய் 
அலகிரண்டுகள், சுதந்திர கீதமும் 
வைகறையின் காலமதில் நிதமாய்'

கவிதையின் முடிவில் கவிஞரது ஓலம் ஓங்கி ஒலிக்கின்றது.

‘கொளுத்தட்டும் ஆக்கினைகள் 
கொடூரமாய் நிகழட்டும் 
குஞ்சினைக்கொத்தி கலைக்கட்டும் குருவியும் 
தேடலில் நாமெல்லாம் கூடிப்புணர்ந்து  
செந்தணற் சூட்டினுள்ளும் செம்மையாய் வாழ்விசைக்க  
யுகம் மூடுவோம் மானிட ஓலமாய்’

தனிமனிதனது உரிமைப் பிரச்சினைகளை (பசி, வறுமை) வாழ்வுப்பிரச்சினைகளை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் காட்டக்கூடிய பரிமானத்துடன் விளங்கும் கருணாகரனது கவிதைகள் நம்பிக்கை ஒன்றை எக்கணத்தும் கைவிடாது வாழ்வின் பிடிப்பை மொழிகின்றன.

‘வாழ்வின் பனிமலர்ச்சாகரங்கள் ஒரு சுமையாய்’ என ஆரம்பிக்கும் ‘முனைப்பு’ எனும் கவிதையில்


‘காடும் புதரும் மண்டிய  
நம் கிராமத்துப் பசுமைகளில்  
உழைப்பினைச் சுமக்கிறார் மக்கள்’

என தன் சமூகத்தை எழுத்தில் வடிக்கும் கவிஞர் அவர்கள், உறுப்பிணியை தொடர்ந்து கூறுகையில்,


‘பசியின் கொடுமை  
வறுமையின் தோள்களில்  
தோழமையுடன்  குடிசையும் குப்பிவிளக்கும் 
உரிமை சொல்லும் விழிகளில் ஈரம் ஊற்றெடுத்து 
மனதின் துயராய் அழும்’
இவ்வாறு “துயரம்” 

என்பதை படிமமாக்குகிறார்.

‘இலைகளை உதிர்த்து  
முள்பரப்பி நிற்கிறது வாழ்வின் பொருள் மறைக்கும்  கொடுந்துயரம்’ 

‘இருப்பின் தேவை’ எனும் கவிதையும் மானுட அவலத்தைக் கூறி நிற்பினும் அதில் மானுட வெற்றியை பூடகமாக்கிக்காட்டுகிறார்.


‘வாழ்வு அர்த்தமற்றதாய் என நினைவுகளில் தெறிக்கிறது  
எனினும் உயிர்ப்பின் ரகசியம்  
உள்மனம் அறியும்.’

சாதி மற்றும் அடக்குமுறை வடிவங்களை இயல்புடன் எடுத்துக்காட்டி அவற்றைச் சாடி நிற்பதையும் அவரது “சுவடி” எனும் கவிதை இயம்புகிறது.

‘துயரம் முட்டிய பூத வயிற்றுடன்
மறுபடியும் அங்கு அலைந்தது காற்று’

என மனிதன் அகப்பட்டுள்ள சூழலை சுட்டிக் காட்டி, ‘சாதியின் சுவர்களை மோதிச்சரித்தது’ எனப் பாடுகிறார் கவிஞர். ‘எனினும் தளிர்ப்பின் ரகசியம் அடிவேர்கள் அறியும்’ என அவர் நம்பிக்கை ஓங்கி ஒலிக்கிறது.

செவிப்புல கலை வடிவமாகிய கவிதை, இன்று கட்புலவடிவமாக பரிமாணம் பெற்று வளர்கின்றபோது அவர் வாசகர்களிடத்துக்  கிளர்த்தும் அனுபவங்கள், அவனைச் சிந்திக்கவைப்பதாக அமைவதோடு கலைத்துவ பிரக்ஞை உடையதாகவும் இருக்க வேண்டும். குறியீடு, படிமம், மற்றும் உவமான உவமேயத் தொடர்களில் எளிமையான சொற்களுடன் தன் அனுபவச் செழுமையை கற்பனை உணர்வோடு கலந்து, கவித்துவத்துடன் வெளிப்படுத்தும் சொற்சிக்கனமான கவிதைகளே, கவிதை ரசிகர்களை பிணித்து நிற்பன. இத்தன்மைதான் கவிதைகள் சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்படும்போது அவை வரலாற்றின் சுவடுகளாகும் என்பது வெள்ளிடைமலை.

கருணாகரனது கவிதைகளும் அந்த வகையில் இடம் பெறக்கூடியன என்று சொல்வது மிகையல்ல. அவை மானுடத்தின் உயிர்ப்பை உணர்த்தி நிற்கின்றன.  

திசை (யாழ்ப்பாணம்)
29.12.1989

Thursday, July 12, 2012

வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?





லெ. முருகபூபதியின் மூலம் அறிமுகமாகிய நண்பர்களில் முக்கியமானவர் நோயல் நடேசன். 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது முருகபூபதி நடேசனை அறிமுகப்படுத்தினார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே நடேசன் நெருக்கமானார். அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு உதவி வருகிறார். 

அண்மையில் வன்னிக்கு வந்திருந்தார் நடேசன். வன்னியில் இது நடேசனுக்கு  இரண்டாவது பயணம். இரண்டு பயணங்களும் அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தன. இருக்காதா பின்னே! தன்னுடைய வாழ்நாளில் வன்னிக்கு செல்வேன் என்றோ, வன்னியில் சில இடங்களுக்குப் போவேன் என்றோ, யாருமே பார்க்க முடியாதிருந்த முக்கியமான சிலவற்றைப் பார்ப்பேன் என்றோ அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

நடேசனின் அரசியல் நிலைப்பாடு வன்னிக்கான தடையை விதித்திருந்தது. அவர் புலிகளின் அரசியலையும் அதனால், புலிகளையும் கடுமையாக எதிர்க்கும் தரப்பைச் சேர்ந்தவர். இதற்காகவே அவர் அவுஸ்ரேலியாவில் ‘உதயம்’ என்ற பத்திரிகையைக் கடந்த பதின்மூன்று  ஆண்டுகளுக்கு மேலாக நடத்தினார். அதனால் ஏராளம் அச்சுறுத்தல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தவர் நடேசன். அதெல்லாம் வேறு கதை. அவை பலருக்கும் தெரிந்த கதைகள்.

ஆனாலும் நடேசன் ஒரு பிடிவாதக்காரர். தான் எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டைக் கைவிடாமல், கடைசிவரையில் அதைப் பின்பற்றிச் செயலாற்றி வந்தார். அவர் நடத்திய பத்திரிகையையும் அவர் கைவிடவில்லை. போருக்குப் பின்னரும் உதயம் வெளிவந்ததாகத் தகவல். இப்போது உதயம் இணையத்தளத்திலும் வந்து கொண்டிருக்கிறது. மோதல்களும் எதிர்ப்புகளுமே நடேசனைப் பிரபலமாக்கின. கூடவே அவர் செய்து வரும் செயல்களும்.

புலிகளின் தோல்வி நடேசனின் அரசியல் நிலைப்பாட்டில் பாதி வெற்றியைத் தந்தது. அவர் இலங்கைக்கு வந்து போகக்கூடிய வழிகளையும் திறந்தது. அதனால்தான் வன்னியில் இந்தப் பயணங்களும் சாத்தியமாகியிருந்தன. வன்னியில் அவர் பல இடங்களுக்கும் சென்றார். எதிர்பார்த்தேயிராத பலரையும் சந்தித்தார். என்னையும் சந்தித்தார். நாங்கள் பலதையும் பேசினோம். அவருக்கு ஏராளம் ஆச்சரியங்கள். முக்கியமாக நவம்பர் 27 மாவீரர் நாளன்று தான் கிளிநொச்சியில் நிற்கிறேன் என்பது. இது நடந்தது 2011 இல். அதுதான் அவர் வன்னிக்கு வந்த முதற்பயணம்.

அன்று கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருக்கும் அக்கராயன்குளம் - கிளிநொச்சி வீதியால் நடேசன் பயணித்தார். ஆனால், அங்கே மாவீரர் துயிலும் இல்லம் இருக்கவில்லை. பதிலாக எருக்கலஞ்செடிகளும் முட்புதர்களுமே மூடிவளர்ந்திருந்தன. அங்கே நின்று நடேசன் சில படங்களை எடுத்தார். அந்தக் கணத்தில் அவருடைய மனதில் என்ன தோன்றினவோ! இவ்வளவு மரணங்களும் எங்களுக்கு எதைத்தான் தந்தன? நாங்கள் எதற்காக இப்படி விலையைக் கொடுத்தோம்? என்றவாறு பேசிக்கொண்டு வந்தார். இட்டு நிரப்ப முடியாத அளவுக்குத் துக்கம் இடையில் நின்றது.

உண்மையில் அப்படியொரு நாளில் தான் கிளிநொச்சியில் நின்றிருக்கச் சாத்தியமே இல்லை என்றார் நடேசன். வரலாறு மாறிவிட்டது. அதனால், நிகழ்ச்சிகளும் நிலைமைகளும் மாறிவிட்டன. முன்னர் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த வேளை புலம்பெயர் நாடுகளில் இருந்து வன்னிக்கு வரும் புலிகளின் ஆதரவாளர்கள், அபிமானிகள் வன்னியில் பல இடங்களுக்கும் செல்வார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கும் செல்வார்கள். அங்கே இருக்கும் கல்லறைத் தோட்டங்களையும் பார்ப்பார்கள். விதவிதமாகப் படங்களையும் பிடித்துக்கொள்வர். அதைப் பார்ப்பதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்ற பலரைப் பார்த்திருக்கிறேன். வன்னிக்கு வந்தால் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் செல்லும் ஒரு வழமையும் பிறகு ஏற்பட்டிருந்தது. அநேகமாக வன்னிக்கு வந்து திரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரின் அல்பங்களிலும் கல்லளைத் தோட்டத்தின் படங்கள் இருக்கும். விதிவிலக்குகளுக்கு இடம் குறைவு.

அந்த அளவுக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் (அந்தக் கல்லறைத் தோட்டங்கள்) ஒரு காட்சிப் பொருளாக, கவர்ச்சிப் பொருளாக மாறியிருந்தன. அப்படித்தான் இதைப் பெரும்பாலான தமிழ்ச்சமூகம் கருதிக் கொண்டிருந்தது.

ஆனால், அங்கே இருக்கும் கல்லறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம். அவையெல்லாம் அணிவகுத்திருக்கும் ஒவ்வொரு மனிதரின் முகங்கள். இரத்தமும் சதையும் நிரம்பிய இளைய உடல்களின் புதைமேடு. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இடையில் முறிந்து போனது. ஆனால், அவர்களிற் பெரும்பாலானோர் எப்படியோ ‘இந்தச் சனங்களுக்காக’ எனத் தங்கள் உயிர்களை ஈந்தவர்கள். அதிலும் மிக இளவயதில், வாழவேண்டிய பருவத்தில்.

வரிசையாக, அணிவகுத்து ஒரு பெரும் படையணியைப் போல இருக்கின்ற இந்தக் கல்லறைகளை எத்தனை தாய்மாரின் கண்ணீர் நனைத்திருக்கும்? அவர்கள் இங்கே தங்களின் பிள்ளைகளுக்காக எவ்வளவு கண்ணீரைச் சிந்தியிருப்பர்! பிள்ளைகளாயின் தங்களின் தந்தையருக்காகவும் தாயருக்காகவும் எப்படியெல்லாம் உருகியிருப்பர்? ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் ஆழமாக உணர்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தங்களின் விருப்பங்களுக்காகவும் எதிர்பார்ப்புகளுக்காகவும் தங்களால் செய்ய முடியாதவற்றைச் செய்து மடிந்ததற்காக உள்ளுர ஒருவித மதிப்பை இந்தக் கல்லறையில் வீழ்ந்தவர்களுக்காகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அதற்கப்பால், இரத்தமும் சதையுமான வாழ்க்கையை இடையில் முறித்துத் தங்களை இழந்தவர்களைப் பற்றிய துயரம் இவர்களிடம் இல்லை. அப்படித் தங்கள் இன்னுயிரை இழப்போரைக் குறித்த ஆழமான – உண்மையான துயரம் இருந்திருக்குமாயின் இன்னும் போரிலும் போர்ச்சுமையிலும் ஏனைய போராளிகள் சிக்கியிருக்கும்போது இவர்கள் எல்லாம் எப்படித் தூர நின்றனர்? அழுத்தும் பாரச் சுமையை இறக்குவதை விடுத்து, ‘விடாதே பிடி. நீங்களே அதிசயப்பிறவிகள்’ எனவும்’ ‘இன்னும் சுமவுங்கள், எத்தகைய பாரங்களையும் சுமக்கக் கூடிய ஆற்றல் வாய்க்கப்பட்டவர்களே மலையும் உமக்குத் தூசியே’ என்று சொல்ல எப்படி மனம் வந்தது இவர்க்கெல்லாம்? தங்களொத்த வயதையுடையோர் வாழ்வைக் காட்டிலும் மேட்டிலும் போர்க்களத்திலும் கழித்து மாள்கையில் படிப்பு,  பட்டம், தொழில், பணம் என்றெல்லாம் வழிகண்டு, வசதிபெருக்கி வாழமுனையும் இன்னொரு சாராரின் மனவேட்கையை என்னவென்பது? இதைவிடக் கொடுமை வேறென்ன? தங்கள் பிள்ளைகளின், தங்கள் சோதரரின் வயதொத்தவர்கள் போரில் வெந்து மடிகையில் ‘விடுதலை வேட்கையில் அவர் ஆகுதியாகிறார்’ என்று சொல்லித் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் தந்திரத்தை எப்படிச் சொல்வது?

இன்று எல்லாமே மாறிவிட்டன@ எல்லாமே மாற்றப்பட்டு விட்டன. எல்லாக் கல்லறைகளையும் படையினர் இடித்தழித்து விட்டார்கள். இது முறையா, என்பதைக் கூடிய அவர்கள் ஒரு கணமும் சிந்திக்கவில்லை. சுவடுகளை அழிப்பது வரலாற்றிற்குப் புதியதல்ல. இனிக் கண்ணீரைப் பெருக்குவதற்கும் அதைக் காட்சிப் பொருளாக்குவதற்கும் விதியில்லை. தலைகீழாகி விட்டது எல்லாமே. மனிதர்களை மதிக்காத விதி வந்து பாம்பைப் போல காலைச் சுற்றுகிறது. தோற்று இறந்தவர்களை யார்தான் மதித்தார்? வீழ்ந்தவர்களை யார் கணக்கிற் கொள்கிறார்கள்? வரலாற்றின் கொடுமையும் விசித்திரமும் இதுதானா!

நடேசனின் படங்கள் இன்னொரு முகமுடையன. ஒரே துயிலுமில்லம் எப்படிக் காட்சி மாறியுள்ளது? வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?

அன்றைய மாலைநேரம் பற்றி நான் நடேசனுக்குச்சொன்னேன். ‘நவம்பர் 27 என்றால் வன்னியில் வேறு மாதிரியே இருக்கும். நாள் முழுவதும் சனங்கள் நெரியும் தெருக்களில் அலங்காரங்களும் புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்லுகின்ற பாடல்களுமாக ஒரு மாறுபட்ட தோற்றத்தோடிருக்கும்.  பெரும்பாலான ஆட்கள் இந்த நாளில் துயிலுமில்லங்களை நோக்கியே சென்று கொண்டிருப்பார்கள். அங்கேதான் அவர்களுடைய நினைவுகளின் விதி பின்னலிட்டுள்ளது.  நீங்கள் சந்தித்த இந்த மனிதர்களே, அன்று அங்கேதான் போயிருப்பர்.

ஆனால் இன்று?

அதிகார மாற்றங்கள் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. வழமைகள் மாறுகின்றன. அல்லது மாற்றப்படுகின்றன. இதுதான் வரலாறா? அவ்வாறாயின் எது நிஜம்? அதுவும் நிஜம், இதுவும் நிஜம் என்றால், எது உண்மையான நிஜம்?

வாழ்க்கை என்பது அதிகாரம் வரையறுக்கின்ற ஒன்றா? அல்லது அதிகாரம் வழங்குகின்ற சலுகையா? அல்லது அது வகுக்கின்ற விதியா?

இதையெல்லாம்  என்னவென்பது?

அன்று நடேசன் இன்னும் சிலரைச் சந்தித்தார். அவர்களில் சிலர் போராளிகுடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்கள். போரிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து  வரும் நோக்கின் அடிப்படையில் அவர் அவர்களைச் சந்தித்தார். ஆனால் யாரிடமும் நடேசன் அரசியல் பேசவில்லை. அவர்களுடைய கடந்தகாலத்தைப் பற்றி அவர் விசாரிக்கவில்லை. இன்றைய வாழ்க்கையைப் பற்றி, அவர்களுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றியே அவர் கதைத்தார்.

அந்தப் பயணத்தில் நடேசன் கிளிநொச்சியில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றார்.

அடுத்த பயணமாக இவர் கடந்த மாதம் (2012 ஜூனில்) மீண்டும் வன்னிக்கு வந்திருந்தார். இந்தத் இந்தத் தடவை அவருடைய பயணத்திட்டமாக முல்லைத்தீவுக்குச் செல்வதாக இருந்திருக்க வேணும். அதற்கு முன்னர், அவர் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் குடும்பங்களைச் சந்திக்க விரும்பினார். அதன்படி முதல்நாள் சந்திக்கக் கூடியவர்களைச் சந்தித்து பேச வேண்டியதையெல்லாம் பேசி, கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்தார். தொடர்ந்து ‘ஏதாவது தொழில்முயற்சிகளைப் பற்றிச் சிந்தியுங்கள். பொருத்தமான தொழிலைக் கண்டறிந்தால் சொல்லுங்கள், அதற்கான உதவிகளைச் செய்யலாம்’ என்று சொல்லி அனுப்பி விட்டு முல்லைத்தீவுக்குப் பயணமானார். என்னையும் தன்னோடு வருமாறு அழைத்தார்.

பேருந்துப் பயணம். குண்டும் குழியுமான வீதியில் புழுதி நிறைந்த பயணம். புதுக்குடியிருப்பில் இறங்கினோம். அங்கே பிரதேச சபை வளாகத்தில் சனங்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் எச்சங்கள் குவிக்கப்பட்டிருந்தன. எதற்கும் உதவாதவை. வேணுமானால் மிகக் கழிவு விலையில் பழைய இரும்பாக விற்கலாம். ஆனால், அதற்கும் அனுமதி எடுக்க வேண்டும். அதற்கு அலைந்து திரியும் நேரத்தை விட இப்படியே அதையெல்லாம் உக்க விடலாம். நடேசன் விவரம் கேட்டார். சொன்னேன். ‘சனங்கள் இறுதிப்போரின்போது கைவிட்டவை. கழற்றக் கூடியதை எல்லாம் கழற்றி விட்டார்கள். இப்பொழுது சக்கை மட்டும் காட்சிக்குக் குவிக்கப்பட்டிருக்கு, நாங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை. எல்லாமே இங்கேதான் உள்ளன காட்டுகிறார்கள்’ என்று.

பிறகு நாங்கள் ஒரு நண்பரின் உதவியோடு, புதுக்குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்குச் சென்றோம். அது கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் வீடு என்றார்கள். அந்த வீட்டைப்பார்க்கவென்று சிங்களவர்களும் தமிழர்களும் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அங்கே உணவுப்பொருட்களையும் சிற்றுண்டிகளையும் விற்கின்ற கடைகளும் இருந்தன. தினமும் பெருகி வருகின்ற பார்வையாளரை இலக்கு வைத்து வியாபாரம் செய்யும் கடைகள்.

சூசையின் வீட்டில் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. மிக விசாலமான பதுங்குகுழிகள். ஒரு பதுங்குகுழி வீட்டினுள்ளே இருக்கும் அலுமாரியின் கீழிருந்து செல்கிறது. ஏனையவை வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டவை. பலருக்கும் அது வியப்பான விசயமே.

அதைப் பார்த்து விட்டு, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் பதுங்குகுழியைப் பார்க்கச் சென்றோம். அங்கும் குறிப்பிட்ட நண்பரே எங்களை அழைத்துச் சென்றார். காட்டுப் பாதையால் வாகனம் வளைந்து வளைந்து சென்றது. இருளடர்ந்த காடு. போகும் வழியில் இடையிடையே கைவிடப்பட்ட காப்பரண்கள். ஆனால், எல்லோமே உருமறைப்பில் இருந்தன.

இருபது நிமிடப் பயணத்தின் முடிவில், ஒரு வட்டப் பாதை தெரிந்தது. அது தார்பூசப்பட்ட பாதை. அருகில் ஒரு படை முகாம். அதை அண்மித்துச் சில பொதுமக்களின் வாகனங்கள் நின்றன. எல்லோரும் பதுங்குகுழியைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள். அங்கேதான் அந்தப் பெரிய பதுங்குகுழி இருந்தது. அதைப் பற்றி அங்கே பெரிய விளக்கப்படத்தை வரைந்து குறிப்புகளையும் எழுதியிருந்தார்கள். போதாக்குறைக்குச் சிங்களத்தில் விளக்கமளித்தனர் படைச்சிப்பாய்கள்.

அது பிரபாகரனின் பதுங்குகுழி என எழுதப்பட்டுள்ளது. அவ்வாறே அங்கே சொல்கிறார்கள். முன்தோற்றத்தில் தெரியும் பெரிய முகப்புடைய வீடு. ஆனால், வெளியே தெரியாதவாறு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. வீட்டினுள் நுழைந்து படியிறங்கினால், ஒவ்வொரு தளமாக இறங்கிக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு தளத்திலும் விசாலமான அறைகளும் மண்டபங்களும் காப்பிடங்களும். இறுதியில் நான்காவது தளமுண்டு. அந்தத்தளத்திலிருந்து வெளியே செல்வதற்கு மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வியப்பூட்டும் அளவுக்கு இருந்தது அதன் அமைப்பு.

தரைக்கு மேலே பல அடுக்குகளைக்கொண்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களைப் பார்த்திருக்கிறோம். நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள சில கட்டிடங்களையும் பார்த்திருந்தாலும் இந்த அளவுக்குக் கீழ் நோக்கி, நான்கு அடுக்குகளைக் கொண்ட கீழ்வீட்டை என்வாழ்நாளில் பார்த்ததில்லை. நடேசனுக்கும் இது ஆச்சரியமே. அவருக்கு இன்னொரு ஆச்சரியம், பிரபாகரனின் பங்கரைப் பார்ப்பது. வரலாற்று மாற்றங்கள் நிகழவில்லை என்றால் இந்த இடத்துக்கு அவரால் வந்திருக்க முடியுமா?

தொடர்ந்து நாங்கள், முல்லைத்தீவுக்குப் பயணித்தோம். வழியில் மந்துவில் என்ற இடத்தில் அரசாங்கம் அமைத்திருக்கிற போர் நினைவுச் சின்னத்துக்கு அண்மையில் உள்ள போர்ப்பொருட்களின் மியூசியத்தைப் பார்த்தோம். அங்கே காட்சிப்படுத்தப் பட்டுள்ள, சேகரித்து வைக்கப்பட்டுள்ள அத்தனை ஆயுத – யுத்த தளபாடங்களும் விடுதலைப்புலிகளுடையவை. அவர்களால் தயாரிக்கப்பட்ட படகுகள், பீரங்கிகள், நீர்மூழ்கிகள், இயந்திரங்கள், பிற சாதானங்கள், ஆயுதங்கள்.... எனப் பெரிய வளவொன்றில் அவை நிரற்படுத்தப்பட்டிருந்தன. அங்கும் ஏராளம் சனங்கள். தமிழர்களும் சிங்களவர்களும் தங்களுடைய கடந்த காலத்தை நினைவு கூரும் மறக்க முடியாப் பொருட்களைப் பார்க்கிறார்கள்.

நடேசனும் அவற்றைப் பார்த்தார். பீரங்கிகளுக்கு அருகாக நின்று படம் எடுத்துக்கொண்டார்கள் பலரும். போர்ப்படகுகள் காட்சிப் பொருளாகியுள்ளன. ஆயுதங்களும்தான். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிச் சனங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் தாங்களறியாதிருந்த வியப்புகளின் முடிச்சை அவிழ்க்கும் முனைப்பிலிருந்தனர். நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.

முன்னர் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை இதே மாதிரிக் காட்சிப்படுத்தினார்கள், புலிகள். இன்றோ, புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் காட்சிப்படுத்துகிறார்கள் படையினர். அப்படியென்றால், எதுதான் மாறியது?

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வந்த நடேசன், ஒரு இடத்தில் வந்ததும் அங்கே நின்று கொண்டு என்னை அழைத்தார். அருகே சென்று கவனித்தேன். சிறைக்கூண்டுகள். இரண்டு இரும்புக்கூண்டுகள். ஒன்று சற்றுப் பெரியது. நாற்சதுர வடிவத்தையுடையது. மற்றது, ஒரு ஆள் மட்டும் நிற்கக் கூடிய அளவில் மிகச் சிறியது. ஒடுங்கியது. ஒவ்வொன்றையும் சுற்றி முட்கம்பிகள் பின்னப்பட்டிருந்தன.

இந்தக் கூண்டுகளைப்பற்றி முன்னரே அறிந்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்ததில்லை. இப்போதே முதற்தடவையாக இவற்றைப் பார்க்கிறேன். முன்னர் வன்னியில் யாராவது தப்போ, தவறோ செய்தால் ‘வட்டுவாகலில் போய் நிற்கப்போகிறாயா?’ என்று பகிடியாகக் கேட்பார்கள்.

வட்டுவாகற் பகுதியில் இத்தகைய சிறைக்கூண்டுகளும் தண்டனைக் களமும் இருந்ததாக வன்னியிற் சொல்லிக் கொள்வதுண்டு. குற்றமிழைத்தவர்களை இந்தக் கூண்டுகளுள் அடைப்பதாகச் செய்தி. கூண்டில் நிற்பது என்பதுதான்  பிரசித்தமானது. அதற்குள் இருக்கவோ, படுக்கவோ முடியாது. ஆகவேதான் தவறு செய்ய முனைவோரைப் பார்த்து ஏனையவர்கள் கேட்பது, ‘வட்டுவாகலில் போய் நிற்கப்போகிறாயா?’ என்பதாக இருந்தது.

நடேசன் அந்தக் கூண்டுகளுக்கு அருகாக நின்று படங்கள் எடுத்துக் கொண்டார். அப்பொழுது அவர் என்ன நினைத்தாரோ! ஆனால், நான் நினைத்தேன், ‘முன்னர் வன்னிக்கு நடேசன் வந்திருந்தால் இந்தக் கூண்டுகளுக்குள்தான் நிச்சயமாக இருந்திருப்பார். இப்பொழுது வெளியே நிற்கிறார்’ என்று.

படங்களை எடுத்துக்கொண்டிருந்த என் முகத்தைப் பார்த்து எதைப் புரிந்து கொண்டாரோ தெரியாது, ஆனால், நான் நினைத்ததை அப்படியே அவரே சொன்னார், ‘உள்ளே நின்றிருக்க வேண்டியவன் வெளியே நிற்கிறேன். பாருங்கள், இதுதான் வரலாறா அல்லது கால விதியா’ என்று.

வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?

ஒரு அதிகார மாற்றம் எப்படி எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

வாழ்க்கை என்பது அதிகாரம் வரையறுக்கின்ற ஒன்றா? அல்லது அதிகாரம் வழங்குகின்ற சலுகையா? அல்லது அது வகுக்கின்ற விதியா?

இதையெல்லாம்  என்னவென்பது?

000



Saturday, July 7, 2012

ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்







- கே.விஸ்வநாதன் 

இலங்கையின் ஓயாத போர்ச்சூழலில் நடுவே இருந்து எழுதப்பட்ட கவிதைகள் இவை. கருணாகரன் “வெளிச்சம்” என்ற கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். போராட்ட இயக்கங்களுடன் ஆழமான தொடர்பு உடையவர்.

ஆனால் இக்கவிதைகள் போராட்ட நியாயங்களை பறையறிவிக்கும் பிரச்சார கவிதைகள் அல்ல. போராட்ட அவலங்களையும் அழிவுகளையும் பிரலாபிக்கும் மனமுறிவுக் கவிதைகளும் அல்ல. சொல்லப்போனால் அமைதியான புலம்பெயர்வுச் சூழலை அடைந்த பிறகுதான் கவிதைகளின் குரல் உரக்க எழுகிறது; அதற்குக் காரணம் அச்சூழலிலேயே தாங்கள் இழந்தவற்றின் பிரமாண்டம் அவர்களுக்குத் தெரியவருகிறது.

கருணாகரனின் கவிதைகள் நுட்பமான இறுக்கமான, பூடகமான மொழியில் எழுதப்பட்டவையாக உள்ளன. கவிமொழியில் ஒரு அக இசையின் ஒழுங்கு தொடர்ந்து ஊடுருவியபடி உள்ளது .

பெருநடை மனிதரின் அகதிமுகம்
நிழலின் கீழே சரணடையும்

என்பது போன்ற வரிகளில் யாப்பில் புழங்கிய தமிழின் இறந்த காலத்தின் அழகின் சாயல் உள்ளது. நேரடியான கூக்குரலாக கவிதையை முன்வைக்க எப்போதுமே கருணாகரன் முயலவில்லை.

புதை குழிகள் மீது 
குந்தியிருக்கிறது காகம்


துயரத்தோடு அல்லது வன்மத்தோடு 
புதைக்கப்படும் பிணங்கள் 
தனிமையில்
கிடந்தழிகின்றன.

என்று ஆழமான படிமத் தன்மையுடனும் செறிவான இறுக்கமான மொழியுடனும்தான் தன் மனத் தீவிரத்தை அவர் வெளிக்காட்டுகிறார். ஆயினும்

வனத்தின் ஆழத்தில் 
புலியின் கண்கள் மின்னுகின்றன
கெமுனுவே எச்சரிக்கை!

என்று அறை கூவும் வேகமும் அபூர்பமாக காணக்கிடைக்கிறது. கருணாகரன் கவிதைகளில் காணப்படும் முக்கியமான அம்சம் அவற்றில்; உள்ள நம்பிக்கையின் கீற்றுதான். நிகழ்காலத்தின் உதிரம் மணக்கும் சித்திரங்களால் நிரம்புள்ள தொகுதி இது.

சாம்பலைக் கழுவி 
இரத்தமாய் ஓடும் வெள்ளத்தில் 
மூழ்கிப் போயிற்று என் முற்றம்

அத்துடன் இறந்தகாலம் குறித்த மனம் கசியும் ஏக்கம் கனக்கும் வரிகள்

எல்லா ஞாபகங்களிலும் 
பசுமையால் நிறைந்தபடிக்கு 
மலர்கின்ற மரங்கள் 

ஆயினும் அவற்றின் ஒட்டுமொத்தமாக மனிதம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஒளிகொண்ட கனவுகளும் எழுகின்றன. சுய ஏமாற்றமாகவோ பாசாங்காகவோ இல்லாமல் முழு ஆத்மாவையும் தழுவி எழும் நம்பிக்கையாக.

எனக்கான திசைவெளியில்
இலைகள் துளிர்கின்றன மரத்தில் 

கவிதை அதன் மிக எதிர்மறையான சூழலில் கூட தன்னை புதுப்பித்து மீண்டபடி உயிர் கொள்வதை இங்கு காண்கிறோம். எதிர்மறைச் சூழலில் பிற கலைகள் அனைத்தும் அழியும் போது கவிதை மட்டும் பெருகி மண்டும் விந்தையையும் காண்கிறோம்.

(நன்றி - சொல்புதிது)

Wednesday, July 4, 2012

என்கடன் - அனுபவங்களின் அசைபோடல்





















‘கோப்புகளோடும் மேசைகளோடும் அலுத்துச் சுழலும் மின்விசிறிகளோடும் சோம்பி ஒழுகும் மின்னொளியோடும் நிகழ்ந்தேறுகின்ற காரியாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதனை ‘என்கடன்’ எம் முன் கொண்டு வருகிறது’ என ந.சத்தியபாலன், வே. ஐ. வரதராஜனின் கவிதைத் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘...கோவைகள் 
ஒவ்வொன்றாய்ச் சரிதம் சொல்லும்.
கோரிக்கைகளாய் வேண்டுதலாய்
விடய ஏடுகள் புரளும்.
கோவைகளின் உயிர் மூச்சில்
உழன்று சோம்பிய முகங்கள்...’ 

(என் கடன்)

காரியாலயமொன்றினைக் கண் முன் கொண்டு வரும் சித்திரமாய் விளக்குகிறது ‘என்கடன்’.

‘அனுபவங்களின் அசைபோடல்களில் 
ஆனந்தமும் சோகங்களும்
கற்ற கணிதமும் விஞ்ஞானமும்
அந்நியமாய்த் தோன்றும்
பேரேடுகளும் காசோலைகளும்
பிறிதொரு பாடமாய் மாறும்
அதிகாரியின் பணிப்புகளில்
இறுக்கங்கள் சூழ்ந்திருக்கும்
பெற்ற பட்டங்கள்
நூலிழையிற் தொங்கும்
தன்வயமிழந்து வெற்ற மனிதனாய்...

என அவரது (வ. ஐ. வரதராஜனது) ‘ஓய்வின் அசைபோடல்களில்...’ யதார்த்தமான பணியிட அனுபவங்களையும் ஈரமற்ற சூழலையும் எமக்கு உணர்த்துகிறார்’ எனச் சத்தியபாலன், வரதராஜனின் கவிதைகளையே மேற்கோளிட்டு உணர்த்துகிறார்.

‘முப்பத்தேழு வருடங்களாக அரச பணியில் ஈடுபட்டிருந்த வரதராஜன், தனது பணி ஓய்வு பெற்ற பிறகு, தன் முதலாவது தொகுப்பைத் தந்துள்ளார்’ என மேலும் இதை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார் சத்தியபாலன்.

வே. ஐ. வரதராஜனின் கவிதைகள் பெரும்பாலும் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், அவர் வாழ்ந்த சூழல், அவருடைய கால நிகழ்ச்சிகள், அவருடைய பணி, பணியிடம், அவருடைய இயல்பு என்ற அமைவுளைக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக வரதராஜனின் பணிக்கால  வாழ்க்கையையும் அதன்போதும் அதன் நிமித்தமாகவும் சந்தித்த அனுபவங்களையும் மனிதர்களையும் அவர்களுடைய நடத்தைகளையுமே பேசுகின்றன. பிரச்சினைகளிலிருந்த ஒதுங்கி் கொள்ளல் அல்லது அவற்றிற் சிக்காதிருத்தல் அல்லது அவற்றை அனுசரித்துப் போதல் என்ற வகையில் அலலாமல் தன்னுள் குமுறிக்  கொள்ளும் ஒருவராகத் தன்னுணர்வை எழுதியிருக்கிறார் கவிதைகளாக. முக்கியமாக வரதராஜன் வாழ்ந்த காலச் சூழலும் இடச் சூழலும் கொந்தளிப்பான அரசியலைக் கொண்டது. ஆனால், வரதராஜன் அவை பற்றி எத்தகைய நிலையையும் காட்டவில்லை. பதிலாகத் தான் பணியாற்றிய இடத்து நெருக்கடிகளையே எழுத்தாக்கியுள்ளார். அவற்றையே பேசவும் முனைந்துள்ளார்.

இந்த மாதிரியான அரச பணி அல்லது அலுவலகப் பணி வாழ்க்கையைப் பற்றி ஏராளம் சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் ஏராளம் தொடர்கதைகளின் மையக் களம் அலுவலகங்களையும் அங்குள்ள மனிதர்களைப் பற்றியவையுமே. இப்படி எழுதப்படுகின்றவற்றில் சில தேறியிருக்கின்றன. பலதும் வெறுமனே களிப்பூட்டும் வாசிப்புக்கே தீனியாகின்றன. இப்போது தமிழில் உள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நாடகங்களில் அலுவலகங்களும் அங்குள்ள மனித நடத்தைகளும் பிரச்சினைகளும்தான் மையப்படுத்திக் காண்பிக்கப்படுகின்றன. இவையும் சுவாரஷ்யப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டவையே.

ஆனால், வரதராஜன் இந்த அலுவலக வாழ்க்கையையும் அங்குள்ள யதார்த்தத்தையும் அதிகம் பேசாமல் தன்னுணர்வின் வழியாக வெளிப்படுத்துவதற்கு எத்தனிக்கிறார். சுவாரஷ்யமூட்டல் என்பதை விட இதை அவர் பகிர வேண்டும் என்றே உணர்கிறார்.

அலுவலக வாழ்க்கை என்பது பெரும்பாலும் கசப்பூட்டும் அனுபவத்தையுடையது. அது இயந்திரமயமாக அவர்களை விரைவில் மாற்றிவிடுகிறது. ஓடியோடித் தேயும் இயந்திரத்தைப் போன்றே அங்கே வேலைசெய்கிற மனிதர்களையும் மாற்றி விடுகிறது. எல்லா ஊழியர்களும் களைத்துச் சோர்ந்தே தினமும் வீடு திரும்புகிறார்கள். காலையில் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் பணிமனையின் படிகளில் ஏறும் ஊழியர்கள் மாலையில் வாடித் தளர்ந்து படியிறங்குகிறார்கள்.

இறுதியில் களைத்துச் சோர்ந்த நிலையிலேயே ஓய்வுபெறுகிறார்கள்.

இந்த ஓய்வு பெறுதல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு விடுதலையே. ஆனால் அதற்குள் அலுவலம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய அவலப்பரப்பே. அது அவர்களைச் சாறாகப் பிழித்து சக்கையாக்கி விடுகிறது. அதிலும் அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரமும் மனச் சாட்சியுள்ள – சமூக அக்கறையுடைய ஒரு பணியாளரைச் சிதைத்துக் கிழடுதட்ட வைத்துவிடுகின்றன.

சேவைக்குப் பதிலாக, சேவையளித்தலை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, சேவையாளனின் உரிமைகள், பொறுப்புகள் என்பவற்றைப் பேணுவதற்கு அப்பால் அதிகாரிகள் கையில் எடுத்து நிலைநாட்டும் அதிகாரம் அலுவலகத்தின் – பணியின் அடிப்படைகளுக்கே எதிரானது.

ஆனாலும் ஒரு சராசரியான பணியாளனால் இந்த அதிகார நடத்தைக்கு முன்னே எளிதாக இசைந்து கொள்ளவும் முடியாது@ எதிர்க்கவும் முடியாது. ஆகவே அவருக்கு இது ஒரு சித்திரவதையே. ‘நாற்காலி அதிகாரம்’ என்ற குறியீட்டை நாம் இந்த வகையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். எந்த அதிகாரமும் சித்திரவதைக்குள்ளாகும் உளநிலையையே உற்பத்தி செய்கிறது. இந்த அதிகார நிலையை இங்கே வே. ஐ. வரதராஜனும் தன்னுடைய வாழ்விலும் கவிதைகளிலும் உணர்ந்துள்ளார்.

ஆகவே அவர் தான் தினமும் சந்தித்த அல்லது தன் வாழ்நாளில் பெரும்பகுதியும் சந்தித்த நெருக்கடிப் பிராந்தியத்தை எழுத, வெளிப்படுத்த முனைந்துள்ளார். என்பதால், வரதராஜனின் பெரும்பாலான கவிதைகள் அவருடைய பணி மற்றும் பணியிடம் பற்றியவையாகி விட்டன. நிறைவேறாத விருப்பங்கள், தேவைகள் போன்றவற்றை அவர் சொல்கிறார்,


‘இந்தச் சேவல் ஆங்காரத்துடன்
எப்போதும் கூவும்
செம்பழுப்பு இறகுகளை அடித்து
சிவப்பான கொண்டயை அசைத்து
அதிகாரத் தொனியுடன்,
குரலெடுப்பும்...’

(சேவல்)

‘எப்போதும் தேவைப்படுவது
இல்லாத ஒன்றுதான்...


...... வேண்டுதல்கள் யாவும்,
மனக் கதவினுள்ளே 
இறுகப் பூட்டியிருக்கும்..’

(பூட்டிய கதவுகள்)

‘நான் நானாக இல்லை
என் சுயமிழக்க 
துரத்தப்படுகிறேன்
கதிரையில் உறங்கும் 
அதிகாரங்கள் 
கண் மூடியபடியே 
ஏவிக் கொண்டிருக்கும்...’

(வேலியும் பயிரும்)

‘.... மேலாதிக்க முனைப்புகளும்
அதிகாரத் தளைகளும்
திறமைகளை நசுக்கி ஆளும்
நிறைவேற்ற முடியாத 
தேவைகள் முடிவிலியாய்
பூஜ்ஜியத்துள் உறையும். 

(பூஜ்ஜியம்)

இத தவிர, வாழ்வின் பிற அனுபவங்கள், பிற அக்கறைகளைக் குறித்து வரதராஜனின் உணர்கையும் கவனத்திற்குரியது. மனிதாபிமான நிலைப்பட்டு நின்று மனித நடத்தைகளின் பொய்த்தன்மைகளை வரதராஜன் வெளிப்படுத்துகிறார் (குரூரத்தின் சாட்சிகள், புதிய முகமூடிகள்....). சமகால வாழ்வில் தொலைந்து போன கிராமங்களையும் அவற்றின் அடையாளங்களையும் சிதைந்த வாழ்வையுமிட்டுத் துக்கங்கொள்கிறார் (தொலைந்த கிராமங்கள்). முதிர்கன்னியரின் நிலை கண்டு துயருறுகிறார் (படுநிலம்). இப்படிப் பல.

ஆனால், இந்தத் தொகுதியில் முக்கியமான கவிதைகளாக – செம்மையும் அழகும் கூடிய கவிதைகளாக இருப்பது ‘அப்பாவின் கார்’ ‘பல்லி’, ‘யதார்த்தமும் மாய யதார்த்தமும்’ ‘படுநிலம்’என்ற கவிதைகள். இதேவேளை பொதுவாகவே வரதராஜனின் கவிதைகள் எல்லாவற்றிலும் அவருடைய இயல்பினைப்போல ஒரு மென்தன்மையுடைய உரைப்பொலியே உண்டு.

இதேவேளை இங்கே கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், இந்தக் கவிதைகள் பொதுவான அல்லது வழமையான ஈழத்துக் கவிதைகள் பேசும் உக்கிர அரசியற் பரப்பிற்கு வெளியே நிற்கின்றன என்பது.தன் வாழ்வனுபவத்தின் ஒரு பகுதியைப் பேசிய வரதராஜன் மறு பகுதியை எவ்வாறு உணர்ந்தார்? என்பது.

ஆனால், அப்படி உக்கிரமாக அரசியலைப் பேசத்தான் வேணுமா என்ற கேள்வியை அவரோ அல்லது பிறரோ எழுப்பலாம். அதிலும் நியாயமுண்டு. ஆனால், உக்கிரமான சுவாலையின் வெக்கையின் மத்தியில் இருக்கும் ஒருவர் அந்தச் சுவாலையின் தீண்டலைக் குறித்து எதுவும் பேசாதிருப்பது குறித்த கேள்விகளும் எழுமல்லவா! இதேவேளை  இந்தப் பழி அரசியலைப் பேசித்தான் ஆகப்போவதென்ன என்ற பதிலும் ஒரு பக்கத்திலுண்டு. ஆகவே, தன்னியல்பின்படி சிக்கல்களுக்குள் சிக்கிக்கொள்ளாத நிலையில் தன் வாழ்வின் இன்னொரு பகுதியாகிய - சொந்தவாழ்வனுபவத்தைப் பெரிதும் சாரம்சப்படுத்திய எண்ணங்களையும் அனுபவங்களையும் கவியாக்கியுள்ளார் வரதராஜன்.

 ‘என் கடன்’ என்ற தலைப்பில் ‘ஜீவநதி’யின் 17 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் வே. ஐ. வரதராஜனின் இந்த நூல் இவருடைய முப்பதாண்டுகால எழுத்தின் முதற்தொகுதி.

00