
யாழ்ப்பாணம், பாக்கியநாதன் புத்திரன் அகிலனால் (பா.அகிலன்) யாக்கப்பட்ட, காயம், வலி, இழப்பு, தேகவியோகம் என்பன குறித்த கவிதைகள் ‘சரமகவிகள்’ என்ற தலைப்பில் 20.11.2011 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது அவருடைய இரண்டாவது கவிதை நூல். முன்னர் வெளிவந்திருந்தது, ‘பதுங்கு குழிநாட்கள்’
மிதுனம், தலைப்பிடப்படாத காதற்கவிதைகள், சுவிஷேசம், செம்மணி, வைத்தியசாலைக் குறிப்புகள், தாயுரைத்தாள், பிற என ஏழு வகைப்படுத்தல்களில் நாற்பது கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பிலிருந்து ஐந்து கவிதைகள்.
1. செம்மணி 03
பகலிரவாய்ப் பெருக்கெடுத்தது இரத்தம்
கன்னியானாள் மகள்
மணவாட்டிக்கும் விதைவைக்குமிடையில்
ஒரு பாத்திரமாயிருந்தாள் தாய்
குரல் கொடுத்தால்
மறுகுரல் தர யாருமற்ற ஒற்றைப் பெண்கள்
முற்றுற்றன பதினேழு முழு வருடங்கள்
காத்திருந்த கண்கள் தூர்ந்தன
உப்பாய்ப்போன தந்தைக்காய்
ஓர் விளக்கை ஏற்றிவையெனக் கூறமுடியவில்லை என்னால்.
00
2. பிண இலக்கம் 178
இரத்த விளாறாய்க் கிடந்தான்:
பாதித்தலை
பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க
திரவமாய்க் கசிந்தது இருள்
தடுமாறிக் கடந்தால்
காத்துப் பசித்தவொரு முதிய தாய்
ஒரு நோயாளித் தந்தை
மாலையிட்ட சில புகைப்படங்கள்
தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல்
முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம்
முள்ளாய் கிடந்து கனத்தது கண்ணீர்
அவசரமாய் வெளியேறிய பின்
மூடி
துணிப் பந்தொன்றை அடைத்து
தைக்கத் தொடங்கினேன்.
00
3. மந்தோவின் பெண்கள்
ஒட்டிக் கிடந்தது உயிரின் கடைசிச் சவ்வு
அருகு வர
யாந்திரீகமாய் நீக்கினாள் கீழாடை
இரத்தக் கிடங்கில்
மொய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்
நீரள்ளிப் பெய்த பின்
அவள் மூளையிலிருந்து
ஒவ்வொரு ஆண்குறியாய்ப் பிடுங்கத் தொடங்கினேன்
காலம் கலங்கியபடி மடிந்தது.
(சதாத் ஹசன் மந்தோவின் சிறுகதை ஒன்றில் வரும் தொடர்ச்சியாக வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட பெண் பாத்திரம்)
00
4. தாயுரை
எங்கேயென்று சொல்
இல்லையென்பதையாவது சொல்
வீங்கி வெடிக்கத் தயாராகிவிட்டவோர்
முதிய இதயத்தைக் காவ முடியாதென்னால் இனியும்
பிடி சாம்பராவது கொடு
என் பிதிரர்களின் மடியில்
கொட்டி விடுகிறேன் அவனை
நாளை என்னைத் தீயிடவும்
பிண்டமிட்டுப் பாதையிடவும்
இல்லையாரும் ஆயினும்
அவன் போய் உறங்கட்டும் நிம்மதியின் பேராற்றில்
00
5. பெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்
பூண்டும் புராணிகமும்
நீரும் இல்லும் சேர்த்துப் பொத்தப்பட்ட
பெரு நகரத்திற்குக் கீழே
பகலிரா ஓயா
தெருக்களும் கிளைகளும் மொய்த்துப் பரவி
சனங்கள் நெரிந்து
வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு இன்னும் கீழே
கீழிறங்கிப் போனால்
சாம்பரால் ஆன வெம்மையடங்காவொரு புயற்பரப்பு
நீங்கி
மேலும் நடந்து கீழிறங்கினால்
அழுகையும், கதறலும் பரவிய ஒலியடுக்கு
அதற்கும் கீழே
முடிவடையாத குருதியால் ஒரு திரவப்படுக்கை
அதற்கும் கீழே
கெட்டிபட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு
அதற்குக் கீழே
மரங்களின் வேர்களும் முட்டாதவொரு மௌனப்பரப்பு
நீங்கி இன்னும் மேல் நடந்து
கீழிறங்கினால்
ஒரு முதிய பெண்
காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு
துறவிப் பெண்
(பங்குனி 2010)
00
No comments:
Post a Comment