Wednesday, October 31, 2012

லெ. முருகபூபதி - மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்















நேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும்  வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன.

கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார்.

தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் - செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.

‘எவ்வளவு முரண்பாடு உள்ளவர்களும் பூபதியை முறித்துக் கொண்டு எதிர்நிலைக்குப் போக இயலாது. அவர் எப்பவும் எதையாவது செய்து கொண்டேயிருப்பார். மற்றவர்களையும் ஊக்குவிப்பார். அவருக்காகவே, அவருடைய முயற்சிகளுக்காகவே நாங்களும் எதையாவது செய்யத்தான் வேணும். தன்னுடைய சக்தியை எல்லாம் குவித்து அவர் செய்து வருகின்ற பணிகளை நினைத்தால் ஆச்சரியமே வரும்’ என்று பூபதியைப் பற்றி அவருடைய நண்பர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். கிருஷ்ணமூர்த்தியும் ஒரு எழுத்தாளரே. பூபதிக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவிற்தான் இருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி சொல்வதைப்போல பூபதி ஒரு அசாத்தியமான மனிதர்தான். தனியொருவராக நின்று நிறுவனம்போலச் செயற்படும் சில ஆளுமைகளில் அவரும் ஒருவர். அதுதான் அவருடைய பலமும் அடையாளமும் சிறப்பும்.

பூபதிக்கும் எல்லோரையும் போல இரண்டு கண்களே உள்ளன. ஒன்று இலக்கியமும் எழுத்தும். மற்றது உதவிப் பணியும் பின்தங்கிய நிலையிலிருப்போருக்கான தொண்டும்.

இந்த இரண்டாவது கண் விசயத்தில் பூபதி படைப்பாளிகளிடத்தில் ஒரு முன்னோடியே. வேறு சில படைப்பாளிகள் பூபதியைப் போலப் பொதுப்பணிகளைச் செய்து வந்தாலும் அவை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட  விதத்தில் தொடர்ச்சியைக் கொண்டவையல்ல. நடேசன் பூபதியின் வழியில் “வானவில்“ என்றொரு உதவித்திட்டத்தை இப்போது ஆரம்பித்து நடத்தி வருகிறார். சாந்தி ரமேஸ் “நேசக்கரம்“ அமைப்பின் மூலமாக உதவி வருகிறார். சஞ்சயன் செல்வமாணிக்கம் பலரையும் உதவிக்கு தூண்டி அவர்களை நன்செய் பரப்பில் ஈடுபடுத்துகிறார். இதைவிட தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா என இன்னும் சிலர் உதவிப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி இன்னும் சிலர் உண்டு. ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் பூபதியே. அவருடைய பணிகளே!!

கடந்த இருபது ஆண்டுக்கும் மேலாக தன்னோடு வேறு பல நண்பர்களையும் இணைத்துக்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வறிய மாணவர்களுடைய கல்விக்காக அவர் உதவி வருகிறார். இதில் ஏறக்குறைய 600 க்கும் மேலான மாணவர்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பயன்பெறுகிறார்கள்.

இலங்கையில் பிறந்து, அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முருகபூபதிக்கு உலகமெங்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் நண்பர்களைக் கொண்டாடும் விதம் அப்படி. அது அவருடைய நண்பர் வட்டத்தை பெருப்பித்துக் கொண்டேயிருக்கிறது. நண்பர்களை அவர் தேடிச் செல்கிறார். அவர்களுக்கிடையில் இருக்கும் பேதங்களைத் தவிர்த்து விட்டு நட்பைக் கொண்டாடுகிறார். அந்த நட்பைப் பராமரிக்கிறார். அந்த நட்பின் ஊடாக அந்த நண்பர்களையும் தன்னுடைய பொது வெளியை நோக்கி, அந்தப் பொது வெளியின் செயற்களத்தை நோக்கி, பணிப் பிராரந்தியத்தை நோக்கி அழைத்து வருகிறார். இது ஒரு வித்தியாசமான நடத்தை. நாம் கவனங்கொள்ள வேண்டிய நடத்தை. கவனத்திலெடுக்க வேண்டிய முன்மாதிரிகளில் ஒன்று.

முருகபூபதியினால் அப்படிப் பொது வெளிக்கும் பொதுச் செயற்களத்துக்கும் அழைத்து வரப்பட்ட பல நண்பர்களின் பங்களிப்பு இன்று இலங்கையில் பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதி மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பூபதியின் அக்கறைகளும் செயற்பாடுகளும் பெரும் பயன். நன்கு ஒழுங்கமைப்பட்ட திட்டமிடலில் இந்த உதவிகளும் உதவிகளின் மூலமான விருத்தியும் நடைபெறுகின்றன. கிளிநொச்சியில் என்னுடைய மகன் படிக்கின்ற பாடசாலைக்கும் பூபதியின் நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணம் கொக்குவிலிலும் திருகோணமலையிலும் இப்படி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி மையங்கள் இயங்குகின்றன. கொக்குவிலில் இயங்குகின்ற மையத்துக்கு நான் போயிருக்கிறேன். சிறுவர் அபிவிருத்திக்கான நிலையம் என்ற பெயரில் அது இயங்குகிறது. (இப்பொழுது அது யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் அதை இடம் மாற்றியிருக்கிறார்கள்). அங்கே எந்தப் பிரமாண்டமான நிர்வாக நடவடிக்கைகளும் கிடையாது. அதிக வளங்களைக் குவித்து நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் தன்மை இல்லை. மிக மட்டான, அடிப்படை வசதிகளே குறைந்த நிலையில் அந்த உதவி மையம் இயங்குகின்றது. இரண்டு பணியாளர்களும் ஒரு கணினியும் ஒரு நிர்வாகியும் மட்டுமே அங்கே உண்டு. வழமையான, தொண்டு நிறுவனங்களின் நிர்வாக அமைப்பின்  செழிப்பை அங்கே காண முடியவில்லை. அங்கே இருக்கின்ற பாலதயானந்தன் என்பவர், தன்னைப் போல அந்த அலுவலகத்தையும் அமைதியாகவும் எளிமையாகவும் நல்ல முறையிலும் நிர்வகிக்கிறார்.

வெளியாரின் அல்லது புலம்பெயர்ந்த மக்களின் நிதிப் பங்களிப்பில் அல்லது அவர்களுடைய உதவியில் இயங்குகின்ற எந்த அமைப்பும் அல்லது நிறுவனமும் இப்படி மட்டுமட்டான வளங்களுடன் இருப்பதில்லை. அவற்றில் ஒரு மினுக்கமும் ஆடம்பரத்தன்மையும் இருக்கும். டொலர் ரூபாயாக ஆகும்போது ஏற்படுகின்ற மினுக்கம் அது. அல்லது பிராங்கோ மார்க்கோ நொஸ்க்கோ ரூபாயாகும்போது உருவாகின்ற வீக்கம். ஆனால், முருகபூபதியாலும் மற்றும் நண்பர்களாலும் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பு இதற்கு மாறாகவே இருக்கிறது. காசை வீணாக்காத கரிசனை. கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை பெறுமதியாகச் செலவழிக்க வேணும் என்ற அக்கறை. அந்தச் செலவு உண்மையில் செலவே அல்ல. அது எதிர்கால மனிதர்களுக்கான பயன் என்ற புரிதலுடன் செய்யப்படும் எளிமையான முதலீடு.  இதுவும் இந்த விலகல்களில் - வேறுபடல்களில் ஒன்று.

பூபதியின் இந்த அமைப்பு பலருடைய கூட்டு முயற்சியின், பலருடைய சிந்தனையின் வடிவம் என்றாலும் அதை “பூபதியின் அமைப்பு“ என்றே அவருடைய நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு பூபதியின் நல்நோக்கத்தை அவர்கள் புரிந்திருக்கின்றனர். அவர்கள்,  பூபதியின் மீது மிகப் பெரிய மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். ஒரு நல்ல மனிதரில் நம்பிக்கை கொண்ட பலருடைய கூட்டுச் செயற்பாட்டின் வெற்றியாகவும் அடையாளமாகவுமே அதைப் பார்க்கிறேன்.

இப்பொழுது இந்த அமைப்பு தன்னுடைய சேவைப் பரப்பையும் ஆழத்தையும் மேலும் விரிவாக்கவே சிந்திக்கிறது. அதற்கே முனைகிறது. புலம்பெயர்ந்து வௌவேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற நண்பர்பகளை எப்படியோ ஒருங்கிணைத்து (அந்த ஒருங்கிணைப்பின் கதையை முருகபூபதிதான் சொல்ல வேண்டும்) போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுடைய கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்தவர்களை இணைத்து தங்களுடைய சேவையை ஆற்றிவருகின்றனர் இந்த அமைப்பினர். இந்த அமைப்பின் ஆண்டு நிறைவொன்றையொட்டி முருகபூபதி 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் திரும்பும் புலம்பெயர்வாசிகள் இங்கே கோவில்கள், நண்பர் மற்றும் உறவினர் வீடுகள், அங்கே நடக்கும் கொண்டாட்டங்கள் என்றமாதிரியான ஒரு சுற்று வட்டத்தில்தான் தங்களுடைய நிகழ்ச்சி நிரலையும் நிகழ்ச்சிப் பரப்பையும் வைத்துக் கொள்வார்கள். சிலர் மட்டும் விலகலாக எங்காவது வயோதிபர் இல்லம், சிறுவர் இல்லங்கள் என்று இயங்குகின்ற நிறுவனங்களுக்குச் சென்று உதவுவார்கள். மற்றும்படி பொதுவாக தனிப்பட்ட பயணங்கள், கேளிக்கைகள், செலவுகள்தான். இன்னும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் காரைநகரில் இருக்கும் கசூரினா பீச்சுக்குப் போவார்கள். அல்லது “கள்“ அடிப்பார்கள்.

முருகபூபதி இதிலிருந்து வேறுபடுகிறார். அவருடைய “2010 ஜனவரி - யாழ்ப்பாணப் பயணம்“ பல விசயங்களை வேறுபடுத்திக் காட்டியது. நான் நினைக்கிறேன், நான்கு நாட்கள்தான் முருகபூபதி யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றிருப்பார் என்று. அந்த நான்கு நாட்களிலும் அவர் இந்த உதவும் அமைப்பின் செயற்பாடுகளை நேரில் கவனித்தார். இந்த அமைப்பின் மூலம் பயன்பெறும் பிள்ளைகளையும் பெற்றோரையும் சம்மந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தைப் பொங்கல் நாளன்று, ஒரு சந்திப்பை நடத்தினார். அந்தச் சந்திப்பில் இந்த அமைப்பின் மையவாளர்களான புலம்பெயர் நாடுகளின் பிரதிநிதிகளையும் இணைத்திருந்தார்.

அதற்கு முதல் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் நடந்த போர்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கிலும் கலந்து கொண்டார். அந்த அரங்கில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விவாதத்துக்குரிய விசயங்களைப் பற்றி ஒரு படைப்பாளியும் சமூகச் செயற்பாட்டாளரும் என்ற வகையில் பூபதியும் தன்னுடைய கவனங்களைச் செலுத்தியிருக்கக்கூடும்.

இதேவேளை பம்பரமாகச் சுழன்ற அந்த நான்கு நாட்களுக்குள்ளும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் யாழ்ப்பாணத்தில் நடத்தினார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தன், நோயல் நடேசன், சித்தாந்தன், இராஜேஸ்கண்ணா உட்பட வேறு சிலருடன் நானும் கலந்து கொண்டேன்.

இவற்றினூடே அவர் தன்னுடைய இலக்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதற்காக அவர் அதிக சிரமமெடுத்துக் கொண்டு தேடிச் சென்றமை  முக்கியமானது. குறிப்பாக சுதந்திராஜா, அ.யேசுராசா, சாந்தன்  போன்றவர்களிடம். தாயகம் குழுவினரையும் சந்திப்பதற்கு ஆர்வமாக இருந்தார். சட்டநாதனிடம் போக முயன்றபோதும் இறுதியில் ஏனோ பொருத்தமின்னை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று கவலைப்பட்டார். அதிலும் மல்லிகையில் மிக நீண்டகாலம் பணியாற்றிய சந்திரசேகரத்தைத் தேடிக் கொண்டு அவருடைய வீடு இருக்கும் நீர்வேலிக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசியது முக்கியமான ஒன்று. பழகிய ஒருவரைத் தேடிப்போவதென்தில் என்ன புதினம் இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

இங்கே பூபதி தேடிச் சென்ற சந்திரசேகரம் ஒரு சாதாரண அச்சுக் கோர்ப்பாளர். இன்று அச்சுக்கோர்க்கும் தொழிலும் இல்லை. கலையும் இல்லை என்ற நிலை வந்து விட்டது. இன்றைய விளக்கத்தின் படி அன்றைய கணினி வடிவமைப்பாளர் என்று சந்திரசேகரத்தைச் சொல்லலாம். அவர் மல்லிகையின் அச்சுக் கோர்ப்பாளராக ஏறக்குறைய இருபது வருசத்துக்கு மேலாக வேலை செய்தவர்.

ஆனால் சந்திரசேகரம் மல்லிகையில் முக்கியமானவர். மல்லிகையின் வளர்ச்சியில் முக்கியமானவர். அவர் மல்லிகையின் அச்சுக் கோப்பாளராக மட்டும் இருக்கவில்லை. அதற்கப்பால், எங்கே எந்தப் படைப்பாளியைக் கண்டாலும் மல்லிகைக்காக எழுதும்படி கேட்கும் அளவுக்கு மல்லிகையுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.  மல்லிகை அலுவலகத்துக்கு வருவோரை வரவேற்றுப் பேசுவதும் பதில் சொல்வதும் சந்திரசேகரமே. அவரே அனைத்தையும் பார்ப்பார். அனைத்தைப் பற்றியும் முடிவெடுப்பார். டொமினிக் ஜீவா இல்லாத வேளைகளில் சந்திரகேசரமே மல்லிகையின் “சீவ் எடிற்றர்“. ஏ.ஜே. கனகரட்ணா கூட சந்திரசேகரத்தையே “சீவ்எடிற்றர்  ஒவ் மல்லிகை“ என்று சொல்வார். எனவே அவரை ஒரு சாதாரண அச்சுக்கோப்பாளர் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அழகும் அல்ல. மல்லிகைக்காக சந்திரசேகரம் ஊழியம் செய்தார் என்றே சொல்லலாம்.

ஜீவா மல்லிகை அலுவலகத்தில் இருந்தாலென்ன இல்லாது விட்டாலென்ன மல்லிகை அலுவலகத்தில் சந்திரசேகரம் இருப்பார். வேலைகள் நடக்கும். ஆட்கள் வந்து போவார்கள். ஜீவாவுடன் பேசாதவர்கள், முரண்பாடு கொண்டவர்கள் கூட சந்திரசேகரத்துடன் நட்பைப் பாராட்டினார்கள். சந்திரசேகரத்துக்காகவே மல்லிகைக்கு வந்து போவோரும் உண்டு. அதனால், சந்திரசேகரத்துக்காகவே மல்லிகையில் எழுதிய பலர் இருக்கிறார்கள்.

இதனால் மல்லிகைக்குப் போகிற அத்தனை பேருடனும் சந்திரசேகரத்திற்கு நட்பு. சந்திரசேகரத்தை மல்லிகையின் எந்தப் படைப்பாளியும் மறக்க முடியாது. மல்லிகையுடன் நெருக்கமான வாசகர்களும் மறக்கேலாது.

ஆனால், இப்பொழுது யாரும்  சந்திரசேகரத்தைத் தேடிப் போய்ப்பார்ப்பது குறைவு. யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை அலுவலகத்தை ஜீவா, கொழும்புக்கு இடம் மாற்றிய பிறகு, சந்திரசேகரம் சில காலங்கள் ஒரு தொடர்புக்காக யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை அலுவலகத்திற்குப் போய் வந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாண அலுவலகத்துக்கு வரும் படைப்பாளிகளுடன் பேசுவதும் மல்லைகைக்கு படைப்புகளைச் சேகரிப்பதும் சந்திரசேகரத்தின் பணி. பின்னர் அதுவும் நின்று விட்டது. சந்திரசேகரமும் வீட்டோடு நின்று விட்டார். அப்படி இருந்த சந்திரசேகரம் இப்போது முதுமையில் தன்னுடைய ஊரோடு - நீர்வேலி, மாதுவனில் இருக்கிறார்.

ஒரு காலத்தில் சந்திரசேகரத்துடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது அவரைச் சந்திப்பதோ விசாரிப்பதோ குறைவென்றாலும்  அவர், எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார். எவருடைய அன்பையும் அவர் மறக்கவில்லை.

பூபதி சந்திரகேசரத்தைப் பார்க்க விரும்பினார். ஆகையால் நீர்வேலிக்குப்   போனோம். முருகபூபதியைக் கண்டதும் சந்திரசேகரத்துக்கு பெருமகிழ்ச்சி. பெருங்கொண்டாட்டம். குழந்தைக் குதூகலத்தோடு வரவேற்றார். முருகுபூபதிக்கும் அந்தச் சந்திப்பு நிறைவான மகிழ்ச்சியே.



கடந்த காலத்தில் நடந்த பல விசயங்களை இருவரும் நினைவுகூர்ந்தார்கள். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. சீராகத் தொடர்பு கொண்டதுமி்ல்லை. ஆனால் இருவரும் ஆளையாள் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்  இப்போது சந்தித்துக் கொண்டதில் இருவருக்குமே பெரும் மகிழ்ச்சி.

கொழும்பிலிருந்து கொண்டு வந்த  மல்லிகை 45 ஆவது மலர் உட்பட சந்திரசேகரத்துக்கென்று எடுத்து வந்த பொருட்களைக் கொடுத்தார் பூபதி. எல்லோருமாகச் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டோம். சந்திரகேசரம் வீட்டிற் கிடைத்த மாலைத் தேனீரும் உபசரிப்பும் நன்றாகவே இருந்தன.

அப்படியே இரவு சுதுமலையில் உள்ள சாந்தனின் வீட்டுசக்குச் சென்றோம்.  “சுதந்திரராஜா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அதைவிட அவர் தனிமையில் இருக்கிறார். உதவிகள் கிடையாது. திருமணம் செய்யவில்லை. இப்பொழுது முதுமையில், மனங்குழம்பிய நிலையில் இருக்கிறார்“ என்றார் சாந்தன். அவரை அடிக்கடி சென்று சாந்தன் பார்ப்பதால் அந்தத் தகவலை சாந்தனின் மூலமாக அறிந்த பூபதி என்னையும் அழைத்துக் கொண்டு மறுநாள் சுதந்திரராஜாவிடம் போனார். கூடவே அவுஸ்ரேலியாவில் இருந்து பூபதியுடன் வந்திருந்த நோயல் நடேசனும் வந்திருந்தார். நடேசனுடன் இந்த நாட்களில்தான் அறிமுகமாகினேன். அவர் சனங்களின் நிலைமையைப் பற்றி அறிவதிலேயே அக்கறையாக இருந்தார். சனங்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற சிந்தனையையே முதன்மைப்படுத்தினார்.

சுதந்திரராஜாவின் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பாலதயாளனின் உறவினரான ஒரு இளைஞர். இருண்டு,  பூஞ்சணவன் படர்ந்த வீட்டில் தனியாளாக இருந்தார் சுதந்திரராஜா. மிகச் சிரமப்பட்டு, இறுதியில் முருகபூபதியை அடையாளங் கண்டு கொண்டார். ஆனாலும் நினைவுகள் தெளிவாக இல்லை. சிந்தனையும் குழம்பி விட்டது. முடிந்த அளவுக்குத் தன்னுடைய நிலைமையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னார். தான் வெளியிட்டிருந்த சிறுகதைத் தொகுதியொன்றைக் கொடுத்தார்.

முருகபூபதி சுதந்திரராஜாவுக்கு காசும் சில பொருட்களும் கொடுத்தபோது அதை வாங்குவதற்கு சுதந்திரராஜா மறுத்து விட்டார். என்றபோதும் தன்னுடைய அன்பை முன்னிலைப்படுத்தி முருகபூபதி அவற்றை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்திக் கேட்டபோது மறுப்புச் சொல்லாமல் சுதந்திரராஜா அவற்றை வாங்கிக் கொண்டார்.

இந்தப் பயணங்கள், சந்திப்புகளின் போது எங்கள் வீட்டுக்கு, சித்தாந்தன் வீட்டுக்கு என்று செல்லக்கூடிய இடங்களுக்கு அந்த அவவசரத்தினூடேயும் முருகபூபதி வந்து போனார். வன்னி நிலவரங்களைக் கேட்டார். அகதி வாழ்க்கை, அகதி நிலையின் துயரங்களைப் பற்றி எல்லாம் பேசினோம். “எல்லாவற்றுக்காகவும் கவலைப்படவேண்டிய ஒரு காலம் இது“ என்று  சொல்லித் துக்கப்பட்டார் பூபதி.

மேலும், இந்தப் பயணத்தின் போது இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய இலக்கிய முயற்சிகள் பற்றியும் கதைத்தோம். எனினும் நேர அவகாசம் இல்லாத காரணத்தால் அதுபற்றி எதையும் திட்டமிட முடியவில்லை. என்றாலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகத்தமிழ் மாநாட்டையொட்டி குறிப்பிடத்தக்க வெளியீடுகளைக் கொண்டுவந்தால் நல்லது என்று பேசினோம்.

இந்தப் பயணத்தின் நிறைவாக நல்லூர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. செங்கை ஆழியான் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நோயல் நடேசன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முருகபூபதி உள்ளிட்ட புலம் பெயர் எழுத்தாளர்களும் யாழ்ப்பாணத்தின் கவிஞர்கள், படைப்பாளிகளும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதரசிங்கும் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழ் இலக்கியத்தின் போக்குகள், அதன் தாக்கங்களைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் அது. கோட்பாட்டு ரீதியான விவாதங்களாக மேற்கிளம்பாமல்  தணிந்த நிலையில், கடந்த கால நிகழ்ச்சிப் போக்குகளைத் தொட்டதாக நடந்தது. அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் இடம் பெற்றன. ஆனால், எதுவும் தெளிவான முன்வைப்புகளாக அமையவில்லை. என்றாலும் போருக்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியச் சந்திப்புகளில் இந்தக் கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் முருகபூபதி நின்ற நாட்களில் அவர் ஒரு கணமேனும் சும்மா இருந்ததில்லை. நான் நினைக்கிறேன், அவர் முன்னர் ஒரு பத்திரிகையாளனாக இருந்த படியால் ( வீரகேசரியில் ) அதே சுறுசுறுப்போடும் துணிச்சலோடும் இப்படி எங்கேயும் பஞ்சி அலுப்பென்று இல்லாமல், ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கக் கூடியதாக இருந்ததென்று.

தன்னுடைய உடல் நிலைமையைப் பாராமல், மருந்துக் குளிசைகளைப் போட்டுக் கொண்டும் ஓய்வின்றித் திரிந்த  பூபதி  அசாத்தியமானவர்தான். இருக்கும் சிறிய அவகாசங்களுக்குள் தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளால் தானும் இயங்கிக் கொண்டேயிருப்பதென்பது ஒரு கெட்டித்தனந்தான்.

எப்படியோ பூபதியினுடைய யாழ்ப்பாண வருகை சலனங்களையும் அலைகளையும் எழுப்பியிருக்கிறது. அந்த அலையின் இயக்கம் பல்வேறு அசைவுகளைக் கொண்டிருக்கிறது.

எனவே முருகபூபதி ஒரு விலகல்தான். என்றபடியால்தான் இன்று அவருடைய உதவிகளால், நூற்றுக் கணக்கான பிள்ளைகள் தொடர்ந்து படிக்கிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு என செயற்பரப்பு விரிந்து கொண்டே போகிறது. அதுபோல இன்னும்பலவும். இவ்வளவுக்கும் பூபதி வடக்குக் கிழக்கில் பிறந்தவரல்ல. அதாவது தமிழீழப் பரப்பில் பிறந்து வளர்ந்தவரல்ல. அவர் பிறந்து வளர்ந்தது நீர்கொழும்பில். ஆனால், அவருடைய தாத்தா கார்த்திகேசு யாழ்ப்பாணத்தின் மாதகலைச் சேர்ந்தவர். பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்து பொலிஸ் சார்ஜன்ட். தொழில் நிமித்தமாக நீர்கொழும்புக்குச் சென்றிருந்த கார்த்திகேசு தையலம்மாவின் அழகில் மயங்கி அவரை மணந்தார். வடக்குக் கிழக்குப் பகுதிக்கு வெளியே பிறந்து வாழ்ந்திருந்தாலும் பூபதி யினுடைய எண்ணங்கள் வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறித்தனவாகவே உள்ளன.

நாங்கள் அகதியாக இருந்த போது அந்த நாட்களில் அவர் அன்போடு வாங்கித்தந்த சைக்கிள்தான் இப்பொழுது முற்றத்தில் நிற்கிறது என்று சொல்கிறான் எங்களுடைய இளைய மகன்.

பூபதி இதைப்போல இன்னும் யார் யாருக்காகவோ எல்லாவற்றையுமே  செய்வதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பார்? அதுதான் பூபதி. அதுதான் அவருடைய சிறப்பும் இயல்பும் அடையாளமும் மனமும்.

00


Thursday, October 25, 2012

பந்து

















ந்தைப் போல ஒரு கெட்ட பொருள் இந்த உலகத்தில் உண்டா, சொல்லுங்கள்? அது எவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது எப்போதும். சொன்னபடி எதையும் கேட்பதில்லை.  சும்மா தட்டி விட்டால் போதும், அப்படியே உருண்டுகொண்டு எங்காவது தன் போக்கில் போய்விடும். எங்கே போக வேண்டும் எங்கே போகக் கூடாது என்று அது யோசிப்பதே இல்லை. பார்ப்பதற்கு ஏதோ அப்பாவித்தனமாக இருக்கின்றதே தவிர, அது ஒன்றும் அப்படி அப்பாவியல்ல.

சில வேளைகளில் அது குழந்தைகளின் குதூகலத்தோடு துள்ளிக் குதிக்கிறது. சிலவேளை அது சோம்பேறித்தனமாக மெதுவாக உருண்டு, ஊர்ந்து போகிறது. சிலவேளை அப்படியே துள்ளிக் குதித்துக் கொண்டு  எங்கோ சென்று ஒளித்துக் கொள்கிறது. சிலபோதுகளில் அது போகக் கூடாத இடத்துக்கே போய் விடுகிறது.

கால்கள் இல்லாமல் அது செய்கிற கூத்து இருக்கிறதே அதுதான் எப்போதுமே பிரச்சினை. நாங்கள் அகதி முகாமில் இருந்தபோது இந்தப் பந்தும் அங்கே இருந்தது. அகதிப் பந்துக்குச் சுதந்திரம் இருக்கக் கூடாது. ஆனால் அது கேட்குமா?

நாங்கள் அகதிகள் என்றாலும் இன்னொரு வகையில் கைதிகள்தான். வன்னி அகதிகளுக்கு அப்படியொரு சிறப்பு ஏற்பாடு. போர்க்களத்தில் இருந்து வந்தவர்களல்லவா! எனவே ஆயுத வாடை இருந்தாலும் என்று தனியாகத் தள்ளி ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

சுற்றிவர முட்கம்பி வேலி. வேலியைக் கடந்து யாரும் எங்கேயும் போகமுடியாது. முடியாதென்பது மட்டுமல்ல போகவே கூடாது. சட்டம். கட்டுப்பாடு. விதி. ஆகவே, அந்த முட்கம்பிப் பிராந்தியத்துக்குள்தான் வாழ்க்கை. அதற்குள்தான் சாப்பாடு. அதற்குள்ளேயே படுக்கை. அதற்குள்ளேதான் மலங்கழித்தல். அங்கேயே குளிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, போக்க முடியாத பொழுதுகள், கவலைகள், துக்கங்கள், எதிர்காலம் பற்றிய யோசனைகள்... சண்டை சச்சரவு, வசை, களவு, பொய், கடந்த காலத்தின் மீதான கழிவிரக்கம், நோய் பிணி, துன்பம்... எனச் சகலதும் அங்கேயே.

அகதிப் பிள்ளைகள் விளையாடினார்கள். பந்து விளையாட்டு. அடித்த பந்து சும்மா இருக்குமா? அதுவும் விளாசி அடித்தால்! அடித்த அடியில் பந்து பறந்தது. காற்று வளத்தில் அது கட்டற்றுப் பறந்தது. காற்றோடு காற்றடைக்கப்பட்ட அந்தப் பந்துப் பை கலந்தபோது எழுந்த உற்சாகத்தில் அது பறந்தது. அது எங்களைப் போல அடங்கியிருக்க விரும்பவில்லைப் போலும். ‘அகதிப் பந்து’ என்றால் அடங்கியிருக்க வேண்டும் என்று அதற்குத் தெரியவில்லை. அது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. தன்னுடைய இயல்பை விட்டு விடத் தெரியவில்லை.

அதற்குத் தெரிந்தததெல்லாம் மகிழ்ச்சியே. பிள்ளைகள் விளையாடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளுடன் அதுவும் ஒரு பிள்ளையாகிவிட்டது. அவர்களுடைய விளையாட்டில் அதுவும் சேர்ந்து விட்டது. விளையாடும்போது என்ன வரையறைகள்? கூடி மகிழ்ச்சியாக விளையாட வேண்டியதுதானே. அதனால் அது துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியே போய்விட்டது. அங்கே இருந்த முட்கம்பி அடுக்குகள் அதற்குப் பொருட்டல்ல. சுற்றியிருந்த படைவீரர்களைப் பற்றி அது அக்கறைப் படவில்லை. அவர்களுடைய துப்பாக்கிகளைப் பற்றி அது சிந்திக்கவேயில்லை. அதற்கு அவற்றைப் பற்றி என்ன கவலையுண்டு? அது அகதிகளுடன் விளையாடியது என்ற காரணத்தைத் தவிர.

வெளியே போன பந்து அங்கே இருந்து கொண்டு சிரித்து வேடிக்கை காட்டியது. வேண்டுமானால் வெளியே வந்து பாருங்கள் என்றது. முடிந்தால் என்னை வந்து அழைத்துப் போங்கள் என்று அது பிடிவாதம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்து கொண்டது. விளையாட்டில் எதற்கப்பா இந்தத் தயக்கங்களும் வரையறைகளும்? பேசாமல் வந்து என்னைக் கூட்டிப் போங்கள் மீண்டும் விளையாடலாம் என்று அழைத்தது.

ஆனால் யாராலும் அதனிடம் போகமுடியவில்லை. போகத்துடித்தவர்களும் எதுக்கு வீண் வம்பு என்பதால் தயங்கி நின்றார்கள். ஆனாலும் விளையாடும் வேகம் விடவில்லை. விளையாட்டில் வரும் வேகம் என்பது ஏறக்குறைய வேட்டையில் வரும் வேகத்துக்குச் சமம். வேட்டையின் வேகம்தான் விளையாட்டில் இன்னொரு நிறத்தில் இருக்கிறது. அடிப்படையில் வேட்டையும் விளையாட்டும் ஒன்றுதான்.

ஆகவே அந்த வேகம் விடவில்லை, விளையாடியவர்களை அது தூண்டியது. வெளியே எதற்காகப் போக வேணும்? வீழ்ந்திருக்கும் பந்தை எடுக்கத்தானே! அதை விட வேறு என்ன தகாத காரியமா பார்க்கப் போகிறோம்? வருவது வரட்டும் என்று விளையாடிய பிள்ளைகளில் ஒருவன் வெளியே பாய்ந்தான்.

அந்தக் கணத்தில் அதைக் கண்டு விட்டான் ஒரு சிப்பாய். அவ்வளவுதான். வந்தது வினை.

பதினாறு வரி முட்கம்பியைக் கடந்து போவதென்றால், அதைவிட இரவு பகலாக துப்பாக்கியோடு காத்துக்கொண்டும் சுற்றிக் கொண்டும் நிற்கும் அவர்களைஏ ஏய்த்துக் கொண்டு இப்படி வெளியே போக விடுவார்களா? வெளியே போனவiனைக் கண்ட சிப்பாய் பாய்ந்தடித்துக் கத்திக் கொண்டு ஓடிவந்தான்.

எல்லோருக்கும் கலவரம். இது எதிர்பார்த்ததுதான். ஆனால் இப்படி விழிப்பாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்த சிப்பாய் கத்தினான். எதற்கு வெளியே போனாய் என்று கத்தினான். வெளியே போனால் என்ன நடக்கும் தெரியுமா என்று கத்தினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு சிப்பாயும் அங்கே வந்து விட்டான். இது தொடர்ந்தால் முகாமின் பொறுப்பதிகாரி வருவான். அவன் வந்தால் பிரச்சினை பெரிதாகி விடும். விசாரணைகள் நடக்கும்.

மீண்டும் எல்லோரையும் வெட்டைக்கு அழைப்பார்கள். குளித்துக் கொண்டிருப்பவர்கள், சமைத்துக் கொண்டிருப்பவர்கள், மலசல கூடத்திலிருப்பவர்கள், பிள்ளையை நித்திரையாக்கிக் கொண்டிருப்பவர்கள், பாலூட்டடிக் கொண்டிருப்பவர்கள், நோயாளிகள், நடக்க முடியாதவர்கள் எல்லாம் வெட்டைக்கு வரவேணும். அங்கே கணக்கெடுப்பு நடக்கும். தலைகளை எண்ணுவார்கள். தலை எண்ணி முடியும் வரை எவரும் எங்கேயும் எதற்கும் போகமுடியாது. அதுவும் அந்த முகாமுக்குள்ளும் கூட.

ஆனால், இப்போது வந்த சிப்பாய்கள் நிலைமையை விளங்கிக் கொண்டார்கள். விளையாடும்போது கிறுக்குப் பந்து வெளியே போனதால்தான் அதை எடுப்பததற்கு வெளியேறியிருக்கிறான் ஒருவன் என்று. ஆனாலும் எச்சரித்தான். இது கடைசித்தடவையாக இருக்கட்டும் என்றார்கள். பந்து வெளியே போனால் தங்களிடம் சொல்லச் சொன்னார்கள். அப்படிச் சொன்னால் அதைத் தாங்கள் எடுத்துத் தருவதாக.

கடைசி மன்னிப்போடு திரும்பிய போது வந்தது வினை. வெளியே போனவன் பந்தோடு உள்ளே நுழையும்போது அதை எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக ஒரு  படை அதிகாரி கண்டு விட்டான். அந்தப் படை அதிகாரி முகாமுக்கு உரியவனல்ல. அதற்கும் மேல் அதிகாரி. எப்போதுமே மேலதிகாரிகள் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களுடைய பணியின் தேவையோ என்னவோ.

அந்தப் படை அதிகாரி  முகாம் நிலைமையைப் பார்க்க வந்திருக்கிறான். அப்போதுதான் இதைக் கண்டிருக்கிறான். படை அதிகாரி சிப்பாய்களை அழைத்தான். விசாரித்தான். அவர்கள் விவரம் சொன்னார்கள். பந்தைக் காட்டினார்கள். ஆனாலும் அன்று மாலை தொடங்கிய கணக்கெடுப்பு இரவு பதினொரு மணியாகியது முடிவடைய.

ஆனால், அந்தக் கணக்கெடுப்பில் அந்தப் பந்து சேர்த்துக் கொள்ளப்படவில்லை. விளையாடுவதற்கு மேலும் இரண்டு பந்துகளைப் படையினர் தந்தனர். நடந்த காரியத்துக்கு மன்னிப்புக் கோரினர். இந்த மாதிரி நிலைமைகளில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெற வேண்டிய அனுமதிகளைப் பற்றி விளக்கினார்கள். இதையெல்லாம் ஏன் செய்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்களுக்குக் கூடத்தான்.

அங்கே பிரச்சினை பந்தல்ல. பந்தை விளையாடுவதே. அதை அவர்கள் புரிந்து கொண்டார்களா?

02

மீளக் குடியமர்ந்த பிறகு அவர்கள் தங்களுடைய வீட்டுக்கருகில் விளையாடினார்கள்.  .....துள்ளிக் குதித்துக் கொண்டோடிய பந்து அப்படியே ஒரு புதருக்கருகில் போய் நின்றது. திரும்பி வருவதற்கு அதற்குத் தெரியாது. அல்லது அதற்கு மறுத்தான் கொடுப்பதற்கு அங்கே எதுவும் இருக்கவில்லை.

விளையாடும் வேகம். பிரதாபன் பாய்ந்தோடிப்போய் பந்தை எடுத்தான். எடுத்த வேகத்தில் அவன் திரும்ப.... வெடித்தது மிதி வெடி.

தீ. புகை. புழுதி மண்டலம். குருதி. ஐயோ அம்மா என்ற கதறல். ஓலம்....

எல்லோரும் பதறினர். வீழ்ந்தவனைத் தூக்குவதற்கும் பயம். இன்னொரு மிதி வெடி அங்கே இருந்தால்....

பன்னிரண்டு வயதுப்பிள்ளை. இந்தப் பெரும் போருக்குள் சிக்கி, எத்தனையோ மரண கண்டங்களைக் கடந்து, மயிரிழையில் சாவின் வாயிலிருந்து தப்பி, அகதி முகாம் அவலங்களை எல்லாம் பட்டு, இப்போது வீட்டுக்கு வந்து இப்படியா காலை இழக்க வேண்டும்?

அவனுடைய வலது கால் முழங்காலுக்குக் கீழே சிதைந்து விட்டது.

தாய் கதறினாள். அவளுடைய ஒரு கை ஏற்கனவே உடையார்கட்டில் காயத்துக்குள்ளாகி இன்னும் சரியாக இயங்கவில்லை. இரண்டு கிலோ பாரம் கூடத் தூக்க மாட்டாள். ஆனால், இப்போது தன்னுடைய பிள்ளையை அவள் எப்படியோ அந்த அபாய வெளிக்குள்ளால் தூக்கிக் கொண்டாள்.

பிரதாபன் மயங்கிவிட்டான். அந்தப் பிஞ்சினால் என்னதான் செய்ய முடியும்?

அவளுடைய ஓலம் அந்த ஊரையே கலக்கியது.

எதையும் பற்றி எந்தப் பொருட்டும் இல்லாத மாதிரி, இரத்தத்தில் தோய்ந்தவாறு தனியே கிடந்தது காலில்லாத அந்தப் பந்து. அதற்கு மிதிவெடி பற்றிய எந்த அச்சமும் இல்லை. ‘ஒரு மீள்குடியேறியின் பந்து’ என்று அது உணர்வதே இல்லை. அப்படி உணர்ந்திருந்தால் ஒரு வேளை பிரதாபனின் கால் தப்பியிருக்கலாம்.

கால்களில்லாத பந்து செய்கின்ற கூத்துகள் கொஞ்சமல்ல. உண்மையில், எந்த அச்சமுமில்லாமல்,  பந்து விளையாடும் காலம் ஒன்று எங்களுக்கில்லை என்பதே உண்மை.

அந்தக் காலம் எப்போது?

00

“வாழும் கணங்கள்”அமரதாஸ் ஒளிப்படங்கள்




                     














அமரதாசின் ஒளிப்படங்கள் நூலாக வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டையொட்டி அவருடைய ஒளிப்படக் காட்சியும் கிளிநொச்சியில் நடக்கின்றது. ஒளிப்படக் காட்சியையொட்டி நூல் வெளியிடப்பட்டதா அல்லது நூல் வெளியீட்டையொட்டி ஒளிப்படக் காட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை நூலிலுள்ள படங்களில் தேர்வு செய்யப்பட்டு ஒரு தொகுதிப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நூல் மதிப்பு மற்றும் வெளியீட்டையும் ஒளிப் படக்காட்சியையும் தமிழீழ நண்கலைக் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கின்றது. ஐந்து நாட்கள் முழுநாட்காட்சியும் இறுதிநாள் விமர்சன அரங்கிற்கும் ஏற்பாடு.

நுண்கலைக்கல்லூரி முன்னர் கேணல் கிட்டுவின் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அந்த அனுபவத்தை ஆதராமாகக் கொண்டு அல்லது முன்னனுபவமாக வைத்துக் கொண்டு இந்தக் காட்சியையும் ஒழுங்கமைத்து இருக்கிறது.

அமரதாஸ் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக ஒளிப்படங்களை ஆர்வத்தோடு எடுத்து வந்திருக்கிறார். தனக்கு சாத்தியமான எல்லைவரையில் இயங்கி எடுத்த படங்களை இப்போது பார்வையாளர்களுக்கு அளித்திருக்கிறார்.
அமரதாஸ் ஒளிப்படத்துறையில் ஈடுபடத் தொடங்கிய காலம் ஈழத்தில் கடுமையான யுத்த நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் வீரச்சாவுகளும் சனங்களின் தொகையான மரணங்களும் இடம்பெயர்வு அகதிவாழ்க்கை என்று முற்றிலும் வாழ்க்கை எதிர் முகத்தோடு இயங்கியது. குண்டு வீச்சுகளும் படை நடவடிக்கைகளுமே பெரும் செய்திகளாக இடம்பெற்றிருந்த வேளை அது. அவ்வறான சூழலில் ஒளிப்படங்களை எடுக்கத்தொடங்கிய அமரதாஸ் தேட்டத்தை திரட்டி இப்போது அளிக்கின்றார்.

அமலதாஸ் ஒளியை அதன் நுட்பங்களோடும் வினோதங்களோடும் ஆளவிரும்பும் தன்மையை தன்படங்ளினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளியை வைத்துக் கொண்டு சாகாஸங்களை நிகழ்த்துகிறது வித்தைத்தனம் இது ஒளியை அதன் இயல்பும் தொழிலும் சிதையமல் படமாக்குவது ஒருவகை ஒளியை மெருகூட்டி வித்தையாக வினோதமாகக் காண்பிப்பது. இன்னொருவகை இரண்டுவகையிலும் தனித்தன்மைகளும் சிறப்புகளும் உண்டு. ஆனால் இரண்டும் எதிரெதிர் அடையளமும் இயல்புமுடையவை.

இயல்போடு எளிமையோடும் யதார்த்தம் தொனிக்க ஒளியைக் கையாண்டு அதைக்கலையாக முன்வைப்பது மிகச்சிறப்பானது. இதில் புனைவைவிடவும் யதார்த்தம் நிலை பெறுகிறது. ஆனால் எல்லோரும் இந்த முறையைத்தான் பின்பற்றவேண்டும் என்றில்லை அதேவேளை எப்படியும் படம் எடுக்கலாம் என்றுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஒளியை மெருகூட்டி படத்தை எடுக்கும் போது யதார்த்தை மீறிய அழகு புனைவினூடாக கிடைக்கின்றது. இந்த அழகு மனம் காணவிரும்பும் அதீத நிலைகளையும் கனவின் தாகத்தையும் நிரப்பலாம். ஆனால் சூழலின் முகத்தையும் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் உள்ளீட்டையோ அதன் குருதியையோ காணமுடியாது.

அமரதாசின் படங்கள் அநேகம் இந்த வகையைச் சேர்ந்தவை ஒளியினுடாக அவர் எல்லவற்றையும் அழகாக்கும் உத்தியை பின்பற்றுகிறார். இந்த முறையில் தான் அவருக்கு அதிகம் நம்பிக்கையும் உண்டு தமிழில் இதற்கான நல்ல உதாரணம் பாலுகேந்திரா.

பாலுகேந்திரவின்கமெரா எப்போதும் எதையும் அழகாக்கும் கண்ணும் பார்வையும் கொண்டவை. அவரால் ஊட்டியை அழகான ஊட்டியாகவே கான்பிக்கமுடியும் அவருடைய மனிதர்கள் அழகான சூழலும் அழகான நிலைகளிலும் இருக்கின்றார்கள். யதார்த்தத்தில் அப்படியெல்லாம் இருக்குமென்றில்லை ஆனால் அழகு ஈர்ப்பும் கவர்ச்சியும் மிக்கவை. அவருடைய காண்பிய முறைமை திரைக்கு வெளியே ஒன்றாகவும் திரையில் இன்னொன்றாகவும் இருக்கும் இருநிலைக் கொண்ட காண்பியங்கள் அமரதாசின் ஒளிப்படங்களும் இந்த அடிப்படையைக் கொண்டவையாகவே இருக்கின்றன.

பார்க்கும் போது அழகாக இருக்கின்றன வியப்பை ஊட்டுகின்றன குறிப்பாக சிலகாட்சிகள் மற்றும் இயற்கைச் சித்திரங்கள். இந்தப்படங்களில் உள்ள காட்சிகளைப் பின்தொடந்து காட்சிகள் பதிவாகிய இடத்தை என்றேனும் ஓருவர் பார்க்கமுயன்றால் அவருக்கு அங்கே அந்த மாதிரியான இடம் தோற்றம் ரூபம் எதுவும் கிடைக்கும் என்றில்லை இந்தப்படங்களின் வழியாக தன் ஞாபகங்களை மீட்டுக் கொண்டு ஒருவரின் நினைவுப்பரப்பில் இந்தக் காட்சிகளுக்கும் அவரின் பதிவிலுள்ள காட்சிக்கும் இடையில் தொடர்பிருக்கும் என்றில்லை.

அமரதாஸ் தன் திறன்மூலம் ஒளியை தூரிகையாக்கி தனது படங்களை அழகாக்கியிருக்கிறார். அமரதாசின் படங்களில் பொதுக்குணமும் தீவிர நோக்கமும் அழகுதான் அமரதாஸ் அழகுபடுத்தலிலேயே குறியாக இயங்குகிறார். அழகுப்படுத்தல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் பொருந்திவிடாது அது உண்மையிலிருந்து சமயங்களில் விலகியும் விடுகிறது.

உதாரணமாக அமரதாசின் ஸ்கந்தபுரம் பற்றிய படங்களை இங்கே கவனிக்கலாம் படங்களிலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும் யதார்த்தத்திலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும்மிடையிலான வெளி.

ஒருவிவசாயக்கிராமத்தின் சாயலை இந்தப் படங்கள் எந்தளவுக்கு பிரதிபலித்துள்ளது என்ற கேள்வி தானகவே கிளம்புகிறது. அவற்றில் ஸ்கந்தபுரத்தின் கோடையும் மாரியும்  அதன் விதைப்புக் காலமும் அறுவடை நாள்களும் தெரிகின்றனவா ஒளி மனம் கேட்கின்றது. தவிர அந்தக் கிராமத்தின் தெருக்களும் வாய்க்கால் கரையும் இந்தப் படங்களின் காட்சியின் விரிவாக உள்ளனவா என்று இந்தக் கேள்விகள் விரிக்கின்றன.
ஆனால் இந்தக் கிராம வாசி ஆச்சரியப்படும் வகையில் அதிசயமாக ஒளியைக் கலைப்படுத்தி அந்த இடங்களை பதிவாக்கியிருக்கிறார். எதையும் அழகாக்கும் பார்வையே அமரதாசின் பிரதான அக்கறையாக இருப்பதால் யாதார்த்தத்திலிருந்து புனைவுகள் நிரம்பி விடுகின்றன அமரதாசின் படங்கள்.

“வாழும் கணங்கள்” என்ற இந்தப் ஒளிப்படத் தொகுதியிலும் காட்சியிலும் உள்ள படங்கள் எல்லவற்றையும் படமாக்கும் முனைப்புடன் எடுக்கப்பட்டுள்ளன. நல்லபடங்கள் முக்கியத்துவம் உள்ளப்படங்கள் இவற்றில் உள்ளன ஆனால் இவற்றை ஒழுங்கமைக்க முடியதவாறு ஏனைய படங்கள் கவனத்தை சிதைக்கின்றன. ஒளிப்படங்களை எடுப்பது வேறு அவற்றை தொகுப்பதிலும் காட்சிப் படுத்துவதிலும் ஒழுங்குகள் அவசியம். இங்கே எடுக்கப்பட்ட எல்லாப்படங்களையும் அடுக்கிவிட வேண்டும் என்ற தவிப்பு நிகழ்ந்திருப்பதினால் காட்சியினூடே பயணிக்கும் பார்வையாளர் சலிப்ப+ட்டப்படுகின்றார்.

எடுக்கப்பட்ட எல்லாக் காட்சிகளையும் அப்படியே தந்தால் அந்தச் சினிமாவை எப்படி ஒருவர் பார்க்க முடியாதோ அதுபோலத் தான் இதுவும். உண்மையில் இந்தத் தொகுதியிலும் காட்சியிலும் தேர்வும் ஒழுங்கமைவும் இருந்திருக்க வேண்டும் அதைக் கவனிக்காததால் தொகுதியிலும் காட்சியிலும் இடம் பெறுகின்ற நல்ல படங்களும்  பாதிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. எல்லாமே பதிவாக்கப்பட்டுள்ளன சகல புறங்களினதும் கவனப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. என்ற தன்மை இருக்கின்றதே தவிர அந்த விரிந்த பார்வைக்குறிய அழுத்தமும் பாதிப்பும் இல்லை.

தனித்தனியாக துலக்கமாக தெரிந்த அமரதாசின் ஒளிப்படங்கள் கூடிச் சேரும் போது இன்னும் கூடுதல் துலங்கலை தந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே நிகழ்ந்ததோ எதிர் மாறானது கலவை முறையில் சேந்திருந்தால் கூட அதற்குரிய ஒழுங்குகளையிட்டு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் வன்னியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் முதலாவது தனி நபர் ஒளிப்படக் காட்சி அமரதாஸ் சாத்தியமாக்கிருக்கின்றார் அவருடைய முனைப்புக்கு தமிழீழ நூண்கலைக் கல்லூரி ஆதரவு அளித்திருக்கிறது அதற்கு பாராட்டும் நன்றியும் உண்டு. வன்னியையும் கடந்த பத்தாண்டு கால ஈழத் தமிழரின் வாழ்வையும் தேடும் ஒருவர் இந்த ஒளிப்படக் காட்சியின் மூலம் பெறுகின்ற அனுபவம் பொறுத்து கேள்விகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

00
அமரதாஸின் ஒளிப்படங்கள் - வாழும் கணங்கள் - என்ற பெயரில் நூலாக வெளியாகியிருந்தது. அந்த நூலுக்கான குறிப்புரை. 2007 இல் எழுதப்பட்டது.

00

Wednesday, October 24, 2012

சனங்களிடம் வந்தது
















ன்றிரவு குருதியொழுகிய பகல் வந்தது
உடைந்து நொறுங்கிய இரவும் வந்தது
கனவுகளைக் கொன்று வெளியே வீசிய பின்
நெருப்பைத் தன்னிதயத்தில் ஏந்திய பெண்ணும் வந்தாள்
புதைகுழிகள் வந்தன
கண்ணீர் நிரம்பிய ஆயிரமாயிரம் பாத்திரங்களோடு
குழந்தைகள் வந்தன.
தங்கள் விதியிலும் வழியிலும் முள்ளடர்ந்ததென்று
சொன்னவாறு சனங்களும் வந்தனர்
உயிரின் ருசி இனிப்போதும் எனச் சலித்தவாறு
வலிமை ஒடுங்கிய தோள்களோடு
தோழர்களும் தளபதிகளும் வந்தனர்.
எல்லாவற்றையும் சிதைத்த பின்
அள்ளிச் செல்லக் காத்திருந்த புயல் வந்தது.
வேர்களெங்கும் நெருப்பூறிய மரங்கள் ஒவ்வொன்றாகச் சாய
இடிந்து விழும் வானத்தோடு
கரைந்தொழுகிய மலர்களும் உதிர்ந்த பறவைகளின் சிறகுகளும் வந்தன.

அக்கணத்திற்தான்
நெருப்புத் துண்டாகக் கனன்று கொண்டிருந்த இதயத்தில்
ஒரு விதை முளைக்குமென்று
நினைத்தது வீண் என்ற எண்ணமும் வந்தது

சனங்களிடம்
மேலும் மேலும் சனங்களிடம்
சனங்களாகிக் கொண்டிருந்த எல்லோரிடமும்

00

Sunday, October 21, 2012

கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?







நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது காடாக இருந்த கிளிநொச்சி மெல்ல மெல்ல ஊர்களாக, சிறு பட்டினமாக வளரத் தொடங்கியிருந்தது. பாம்புகளோடும் பன்றிகளோடும் போராடிக் கொண்டிருந்த குடியேறிகள் மெல்ல மெல்ல ஊர்களிலிருந்து தங்களுடைய பட்டினத்தை, தங்களுக்கான பட்டினத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிப் பகுதிகளுக்குக் குடியேறப் போனவர்களின் நிலையைப் பற்றி அறிவதற்காக முதல்தலைமுறைக் கேள்விகள் எழுந்தன. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? 

பிறகு, வன்செயல்களின் காரணமாக கிளிநொச்சிக்கு தெற்கிலிருந்து குறிப்பாக மலையகப் பகுதிகளிலிருந்து அகதிகள் வந்தனர். வந்தவர்கள் அத்தனைபேரும் விவசாயக் கூலிகளானார்கள். அவர்களுக்கு விவசாய நிலங்கள் கிடைக்கவில்லை. அதை யாரும் வழங்கவும் இல்லை. அப்படி அகதிகளாக வந்த சனங்கள் என்ன செய்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்று அறிவதற்காக கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? என்ற இரண்டாம் தலைமுறைக் கேள்விகள் எழுந்தன. என்றபோதும் அந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கவில்லை.

ஆனால், எல்லாச் சனங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டு கிளிநொச்சி மெல்ல மெல்ல ஒரு பட்டினமாகியது. அப்படியே அது வடக்கின் முக்கிய தொடர்பாடல் களமாக, ஒரு வணிக மையமாக வளர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது தெற்கிலே ‘தம்புள்ள மாக்கெற்’ என்ற பெரும் விவசாயச் சந்தை இருக்கிறதைப் போல அப்பொழுது கிளிநொச்சி மாறியது. 


வடக்கின் உற்பத்திப் பொருட்களையெல்லாம் தெற்கிலுள்ளவர்கள் கிளிநொச்சிக்கு வந்தே வாங்கினார்கள். தெற்கின் பொருட்களை அவர்கள் கிளிநொச்சியில் வைத்தே வடக்கிற்கு விற்றார்கள். யாழ்ப்பாணக்குடாநாடும் வன்னியும் கிளிநொச்சியில் கூடியது. இப்படியொரு சந்தை கூடினால் அது சும்மா இருக்குமா? கொண்டாட்டமும் கலகப்பும் களைகட்டியது. அந்த நாட்களில் (1970 களில்) கிளிநொச்சிக்கு புகழ்பெற்ற சினிமாக்காரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தார்கள். கொழும்பிலிருந்து நாடகக்காரர் வந்தனர். அன்று நட்சத்திர அந்தஸ்தில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களாக இருந்த கே.எஸ். ராஜாவும் யோக்கின் பெர்ணாண்டோவும் வந்தார்கள். ரி.எம். சவுந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் எல்லோரும் றொட்ரிக்கோ மைதானத்தில் பாடினர். ட்ரம்ஸ் மணி (சிவமணி) தன்னுடைய கைவண்ணத்தால் சனங்களைப் பித்துப் பிடித்து ஆட வைத்தார். இப்பொழுது சர்வதேச விளையாட்டு மைதானமாக மாறிக் கொண்டிருக்கும் மைதானமே அன்று றொட்ரிக்கோ மைதானமாக இருந்தது. காலம் மாறும்போது இப்படிப் பெயர்களும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த றொட்ரிக்கோ மைதானத்தில்தான்  மரைக்கார் ராமதாசும் அப்புக்குட்டி ராஜகோபாலும் உபாலி செல்வசேகரனும் ‘கோமாளிகளா’கிக் கலக்கினார்கள். 

மைதானம் நிறையக் கூட்டம். நாலு திக்கிலும் இருந்து அள்ளு கொள்ளையாகச் சனம் திரண்டு வந்தது. வெளியூர் ஆட்களுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆக முப்பது ஆண்டுகால வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு இடத்தில் எப்படி இந்தளவுக்கு முன்னேற்றமும் கலகலப்பும் என்று. இருக்காதா பின்னே. கிளிநொச்சி 1910 க்குப்; பிறகே உருவானது. 50 க்குப் பிறகே எழுச்சியடைந்தது. 50 இலிருந்து 70 களுக்குள்ளான இருபது ஆண்டுகளுக்குள் அது புகழடைந்தது. எல்லாம் 1902 இல் இரணைமடுக்குளம் கட்டப்பட்டதிலிருந்தே ஆரம்பம். எனவே அவர்கள் தங்களுடைய மூன்றாம் தலைமுறைக் கேள்விகளைக் கேட்டார்கள், கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

விளையாட்டு நிகழ்சிகள், பொங்கல் விழாக்கள், நாடக அரங்குகள், இசை நிகழ்ச்சிகள், காணிவெல், கவியரங்கு என்று ஏதாவது அங்கே நடந்து கொண்டேயிருந்தது. போதாக்குறைக்கு நகர்ப்பகுதியில் இருந்தது கந்தசாமி கோவில். அதற்குப் பக்கத்தில் (முன்பு ஆஸ்பத்திரி இருந்த இடத்திற்கு அருகில்) மாதா தேவாலயம். சற்றுத் தொலைவில் இரணைமடுக்குளத்திற்குப் பக்கத்தில் கனகாம்பிகை அம்மன் கோவில். இங்கெல்லாம் திருவிழாக்கள் நடந்தன. கொண்டாட்டங்களுக்குக் குறைவேயில்லை. 

குளங்கள் நிரம்பின. வாய்க்கால் நீளம் தண்ணீர் பாய்ந்தது. வெளியிலும் வீடுகளைச் சுற்றியும் பயிரும் பச்சையும். பொன்னாய் அள்ளிக் கொட்டியது புதிய மண். கடையும் தெருவும் பொலிந்தன. நகரும் கிசுகிசுவென்று வளர்ந்தது. கூலிகள் உழைத்துத் தள்ளினர். முதலாளிகள் வளர்ந்தனர். முதலாளிகள் வளர்ந்தால் என்னதான் நடக்காது? அவர்களுக்கு ஏக்கர்கணக்காக நிலம் இருந்தது. நூற்றுக்கணக்காகக் கூலிகளும் இருந்தனர். கூலிகள் எல்லாவற்றுக்காகவும் உழைத்துத் தள்ளினார்கள். 

இன்னொரு பக்கத்தில் அருவி என்றும் களனி என்றும் இதழ்கள் வெளிவந்தன. கவியரங்குகள் முழங்கின. ‘வடக்கின் நெற்களஞ்சியம் கிளிநொச்சி’ என்று யாரோ புகழைச் சூடினார்கள். அப்படிச் சொன்னதற்கு ஏற்றமாதிரி விசுவாசமாக கிளிநொச்சியின் வயல்களும்  விளைந்து தள்ளின. நெல்லைக் குற்றி அரிசியாக்கும் ஆலைகள் எங்கும் முளைத்தன. எங்கும் எங்குமே நெல்வாசனை பூத்துப் பொலிந்தது. 

நகரில் இருந்தன மூன்று தியேட்டர்கள். அங்கே யாருடைய படங்கள் வந்தாலும் கூடுதலாக எம்.ஜி.ஆர் படங்களே வெற்றிவாகை சூடின. நான்கூட எம்.ஜி.ஆர் படங்களைத்தான் கூடுதலாகப் பார்த்துக் களித்தேன். இரண்டு போக வேளாண்மையிலும் உழைத்த காசை சனங்கள் என்னதான் செய்வது? வயலில் இருந்து வெளிக்கிட்டு ட்ரக்ரரில் ஏறினால், தியேட்டருக்கு வருவார்கள். அல்லது சந்தைப் பக்கம் போவார்கள். தங்களுடைய இளைய பட்டினத்தில் அவர்கள் இப்படித்தான் ஆடியும் பாடியும் களித்தார்கள். நகரத்துக்கு அப்பால் சிறு வீடுகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்து தொலைத்தார்கள். 

இப்படிக் களித்துக் கொண்டிருந்தபோதே வந்தது யுத்தம். 

யுத்தத்தை அங்கே யார் அழைத்து வந்தது, யார் அனுமதித்தது என்று தெரியவில்லை. ஆனால், அன்று படையினரும் திரிந்தனர். இயக்கப்பெடியளும் திரிந்தார்கள். இரண்டு பகையாளிகள் ஒரு மையத்தில் சந்தித்தால் என்ன நடக்குமோ அது நடந்தது. விரும்பத்தகாத எல்லாம் நடந்தன. எதிர்பார்க்காத எல்லாம் நடந்தன. தமிழ்ப்பகுதிகள் எங்கும் நடந்ததைப் போல, இலங்கை முழுவதிலும் நடந்ததைப்போல, வரலாற்றில் நடந்ததைப் போல, ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்றனர். ஒருவரை ஒருவர் வெல்ல முயற்சித்தனர். இந்த அமளிக்குள் சிக்கிச் சிதறியது நகரம். நகரம் மட்டுமல்ல ஊர்களுந்தான். ‘யானைகள் மோதும்போது செடிகளுக்கே நாசம்’ என்பார்கள். நகரம் சிக்கி, நகரத்துக்கு அண்மித்திருந்த கிராமங்களும் சிக்கியபோது எல்லாமே நாசமாகியது. சனங்களும் நாசமாகினர். அவர்களுடைய வாழ்க்கையும் நாசமாகியது.

புதுப்பொலிவோடு எழுந்து வந்த சின்னஞ்சிறிய பச்சை நகரம், மிக இளைய பட்டினம் அப்படியே பாழடைந்து போனது. பாழடைந்த நகரத்தில் புற்களும் காய்ந்துதான் இருந்தன. அல்லது கருகிக்கிடந்தன. காடு மண்டிப் புதர் வளர்ந்து, வயலெல்லாம் பிணங்கள் மலியத் தொடங்கியபோது சனங்கள் கிளிநொச்சியை விட்டு நீங்கி அயற்கிராமங்களில் பதுங்கினர். 

யுத்தம் எல்லாவற்றையும் தீண்டியது. ஒரு பென்னாம் பெரிய விசப்பாம்பு தீண்டியதைப் போல புதிசாக முளைத்த நகரம் செத்து மடிந்தது. நாலு நாட்கள் இறைக்காமல் விட்ட கீரையைப் போல அது வாடிச் சோர்ந்தது. அப்போதும் கேட்டார்கள் கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்குது? என்று. இது நான்காம் தலைமுறைக் கேள்விகள்.

பிறகு இதுதான் தொடர்கதை. இடையில் மழைக்குத் துளிர்க்கும் காட்டுச் செடிகளைப் போல யுத்த ஓய்வு காலங்களில் அல்லது அரசியல் மாற்றம், அரசியல் விளைவுகளுக்கு ஏற்ற மாதிரி கிளிநொச்சி காய்வதும் துளிர்ப்பதுமாக இருந்தது. 

அப்பொழுதும் இப்படித்தான் யாராவது கேட்பார்கள் கிளிநொச்சி எப்பிடி இருக்கு? அங்க என்ன நடக்குது? என்று. தலைமுறைக் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. 

தொடர்ந்து ஒவ்வொரு போதிலும் ஒவ்வொரு தரப்பின் கைகள் மேலோங்கும். முன்பு சொன்னதைப்போல ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயற்சிக்கும்போது யாரோ ஒருவரின் கைகள் மேலோங்கின. அழிவதும் துளிர்ப்பதுமாக இருந்த நகரம் பொலிவை இழந்து இறுதியில் அப்படியே தன்னுடைய முழுப்பொலிவையும் இழந்து விட்டது. 

என்றாலும் அதனுடைய உயிர்ப்பு மறையவில்லை. அறுகம்புல்லைப்போல அது வெளியே அழிந்ததாகத் தோற்றம் காட்டினாலும் ஒரு துளி ஈரத்தைக் கண்டதும் சட்டெனத் துளிர்க்கத் தொடங்கி விடும். ஒரு கட்ட யுத்தத்தின் பின்பு அது சடுதியாக எழும். பிறகு அடுத்த கட்ட யுத்தத்தில் அவ்வளவும் பாழாகிவிடும். மாரியும் கோடையும்போலத்தான் கிளிநொச்சியின் வரலாறும் ஆயிற்று.

இதைப் பார்ப்போருக்கு வேடிக்கையாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த ஆச்சரியத்திலிருந்தே அவர்களிடம் கேள்விகள் பிறக்கின்றன. கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்கிறது?

பாரம்பரியமெதையும் வலுவாகக் கொண்டிராத கிளிநொச்சியில் எப்படித்தான் வேர்கள் பாதிப்படையாமல் இருக்கின்றன என சிலர் கேட்டதுமுண்டு. நான் நினைக்கிறேன், கிளிநொச்சிக்கு வாய்த்த நீர், நிலம் போன்ற வளங்களும் உழைக்கக் கூடிய சனங்களின் திரட்சியும்தான் அதை உயிர்ப்போடு வைத்திருந்தன என்று. அதுதான் அதனுடைய பாராம்பரியமாகியது. அதைத்தவிர அதற்கு வேறு வழியுமில்லை. 

யுத்த அரங்கு மூடப்படாத, யுத்தத்தின் கொதிநிலை மாறாத ஒரு மையமாக கிளிநொச்சி தொடர்ந்தும் இருந்தது. ஒரு பக்கம் ஆனையிறவு என்ற இராணுவக் கேந்திரம். இன்னொரு பக்கத்தில் கொக்காவில் என்ற இணைக் கேந்திரம். இடையில் நகரத்துக்கென உருவான பரந்தன், கிளிநொச்சி மத்தி என்ற துணைக்கேந்திரங்கள். இதெல்லாம் கிளிநொச்சியை யுத்தவலயமாக்கின.

எனவே, அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் எல்லாவற்றுக்குள்ளும் அது சிக்கிச் சிதறியது. தொடர்ந்து காயங்களும் வடுக்களும் வலிகளும் நிரம்பிய நகரமாக அது மாறியது. 

இன்றும் கூடக் கிளிநொச்சி யுத்த வடுக்களின், யுத்த வலிகளின், யுத்தக் காயங்களின் காட்சிக்கூடமாகவே உள்ளது. கிளிநொச்சிக்கு வருவோரிற் பலரும் கிளிநொச்சியின் காயங்களையும் வடுக்களையும் காணவே வருகிறார்கள். சிலர் துக்கத்தோடு பார்க்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். 
இதைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ வந்து பார்த்துச் செல்கிறார்கள். சடங்கைப் போலச் சம்பிரதாயமாக எல்லாவற்றையும் படமெடுத்துச் செல்கிறார்கள். அந்தப் படங்களை வைத்துக் கொண்டாடுகிறார்களா, குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் படங்கள் மட்டும் தாரளமாக எடுக்கப்படுகின்றன. 

சிலருக்கு யுத்த அழிவும் காட்சிப் பொருள்தான். யுத்த வெற்றியும் காட்சிப் பொருள்தான். யுத்தத்தின் பின்னரான நிலைமைகளும், முன்னேற்றங்களும் முன்னேற்றமின்மைகளும் காட்சிப் பொருட்களேதான். சனங்களின் கண்ணீரும் துயரமும் காட்சிப் பண்டங்களே. 

என்ன செய்வது உலகம் அப்படி மாறிவிட்டது. கண்ணீரையும் இரத்தத்தையும் மலிவாகவே விற்பதற்குத் துணிந்த பிறகு எதைப் பற்றித்தான் என்ன கூச்சம் வேண்டியிருக்கு? கெட்டிக்காரன் எதையும் விற்றுச் சரக்காக்கி விடுகிறான். வியாபார உலகத்தில் நீதியும் நியாயமும் மனச்சாட்சியும் மதிப்பிழந்து போகின்றன. அல்லது மௌனத்திற் குடிகொள்கின்றன. 

போகட்டும் இது. நாம் மீதியைச் சொல்லிச் செல்வோம். 

போரில் சிக்கியிருந்த போதும் கிளிநொச்சியில் பலவும் நடந்தன. தியேட்டர்களும் படங்களும் படுத்தாலும் வயல்களில் ஆட்கள் நின்றார்கள். றொட்ரிக்கோ மைதானத்தில் ஆட்களுக்குப்பதிலாக துப்பாக்கிகள் முளைத்திருந்தபோதும் தெருக்களில் சனங்கள் போய் வந்தார்கள். அப்படிப் போய் வரமுடியாத போது அவர்கள் சற்றுத் தள்ளியிருந்து கொண்டு அங்கே சிறிய சிறிய பட்டினங்களைக் கட்டினார்கள். மைதானத்தில் மாடுகள் படுத்துறங்கின. சந்தைக்கு வடக்கிலிருந்தும் ஆட்கள் வருவதில்லை. தெற்கிலிருந்தும் ஆட்கள் வருவதில்லை. வெளியாட்கள் வருவதற்கான வாசல்கள் மூடப்பட்டது. சிலபோது அங்கே உள்ளுர்ச்சனங்கள் கூடினர். பட்டினம் இடம்பெயர்ந்த போதெல்லாம் சனங்கள் தங்களோடு கடைகளையும் சந்தையையும் கூடக் காவிச் சென்றார்கள். 

அப்போதும் கேட்டார்கள், கிளிநொச்சியில் என்ன நடக்கிறது? அது எப்படியிருக்கிறது? என்று. இது ஆறாம் தலைமுறைக் கேள்விகள்.

இதற்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேணும்.

கிளிநொச்சிக்கு என்று சில காலங்களைச் சொல்வார்கள். இரணைமடுக் குளம் கட்டிய காலம், கிளிநொச்சியின் குடியேற்ற காலம், அதனுடைய எழுச்சிக் காலம், கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, அதைத் தனி மாவட்டமாக்குவதற்காகப் பாடுபட்ட ஆனந்தசங்கரியின் காலம், கிளிநொச்சியை வளப்படுத்த முயற்சித்த குமாரசூரியர் காலம், பிறகு இலங்கை இராணுவத்தின் காலம், இந்திய இராணுவக் காலம், புலிகளின் காலம், இப்ப போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றக் காலம் என இந்தக் காலப்பட்டியல் நீளும்.

இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுச்சியும் வீழ்ச்சியும் தன்னியல்பாகவும் அந்தந்தத் தரப்பின் செயற்பாடுகளுக்கு அமையவும் ஏற்பட்டுள்ளன. 

இதில் முக்கியமான காலகட்டங்கள் 80 களுக்கு முந்திய காலமும் புலிகளின் காலமும் தற்போதைய யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டமுமே. 

கிளிநொச்சியின் பொற்காலம் என்பது 70 களுக்கும் எண்பதுகளுக்கும் இடைப்பட்ட காலம்தான். இந்தக் காலத்தில்தான் கிளிநொச்சி என்ற ஒரு மையத்தின் அடையாளம் துலங்கத் தொடங்கியது. கலையும் கல்வியும் பொருளாதார அடிப்படைகளும் இதையெல்லாம் இணைத்த வாழ்க்கையும் இந்தக் காலத்திலிருந்துதான் கிளிநொச்சிக்கென உருவாகின. ‘மண்ணின் மைந்தர்களும்’ இந்தக் காலத்தில்தான் முளைத்தார்கள். 

இதெல்லாம் இணைந்தும் கலந்தும் விளைந்த கிளிநொச்சியின் இரண்டாவது சிறப்பான காலகட்டம் 2000 க்குப் பின்னரானது. 

2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது கிளிநொச்சிக்கான நல்லதொரு முகூர்த்தமாகவே, வாய்ப்பாகவே அமைந்தது. இதையடுத்து கிளிநொச்சி மிகப் பெரிய அளவுக்கு எழுச்சியடைந்தது. உலகத்தின் நான்கு திசைகளும் நான்கென்ன எட்டுத்திசைகளும் கிளிநொச்சியில் கூடின. இலங்கையில் இரண்டு தீர்மான மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு கிளிநொச்சி மாறியது. ஒன்று கொழும்பு. மற்றது கிளிநொச்சி என்று இதை ஆய்வாளர்களே குறிப்பிட்டார்கள். வெள்ளையர்களும் வெளியாட்களும் உதவிப் பணிகளுக்கும் அரசியல் விவகாரங்களுக்குமாக வந்திறங்கியிருந்தனர். வெளியேற்றப்பட்டிருந்த முஸ்லிம்களின் தரபபிலிருந்து ஹக்கீமும்அவருடைய தோழர்களும் கூட வந்தனர்.

அந்த நாட்களில் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாகப் பறந்தன வானூர்திகளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் வாகனங்களும். பல திசைகளில் இருந்தும் தலைவர்களும் ராஜதந்திரிகளும் கிளிநொச்சிக்கு வந்து சென்றார்கள். புலம்பெயர்ந்து போயிருந்த தூரதேசத்துப் பறவைகள் எல்லாம் கிளிநொச்சிக்கு வந்தன. இரணைமடுக்குளம் தண்ணீரால் நிரம்பியதோ இல்லையோ கிளிநொச்சி சனங்களாலும் விருந்தாளிகளாலும் நிரம்பியது. கண்ணாடி மாளிகைகள் எங்கும் முளைத்தன. எல்லோருக்கும் ஆச்சரித்திலும் ஆச்சரியம். இந்த ஆச்சரியம் எழுப்பியது மீண்டும் கேள்விகளை. ஏழாந்தலைமுறைக் கேள்விகளை. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்குது? 


கிளிநொச்சியைப் புலிகளின் தலைநகரம் என்றும் சமாதான முயற்சிகளுக்கான நகரம் என்றும் குறிப்பிட்டனர் விமர்சகர்கள். யார் யாரெல்லாமோ வந்தார்கள். தினமும் கை குலுக்கல்கள் நடந்தன. றொட்ரிக்கோ மைதானம் கிளிநொச்சி மத்திய மைதானம் என்று அழைக்கப்பட்டது. அந்த மைதானத்தில் விளையாட்டுக்குப் பதிலாக, ஹெலிகொப்ரர்களே வந்திறங்கின. முன்னர் மலேசியா வாசுதேவனையும் ரி.எம். சவுந்தரராஜனையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் கண்டு களித்த சனங்கள் பெயர்களை உச்சரிக்கக் கடினமான விருந்தாளிகளைப் பார்த்துக் கையசைத்தனர். இறுதியில் மரைக்கார் ராமதாஸின் கோமாளிகளையும் விட தாங்களே கோமாளிகள் என அவர்கள் உணர்ந்தபோது யுத்தம் அவர்களுடைய தலைக்கு மேலும் காலடியிலும் வந்திறங்கியிருந்தது. 

பிறகென்ன? 

மறுபடியும் யானைகளின் மோதல். செடிகள் துவம்சம். நகரத்தின் வேர்களைக் கிழப்பிக்கொண்டே அல்லது பிடுங்கிக் கொண்டே சனங்கள் பெயர்ந்தனர். பெயர்ந்தவர்கள் அயல் ஊர்களை நோக்கி, காடுகளை நோக்கிச் சென்றனர். காடுகளில் வாழ்க்கை என்பது எப்படியிருக்கும்? அது காட்டுத்தன்மையை ஒத்ததாகவே இருக்கும். அப்படித்தான் இருந்தது. 

எல்லா யுத்தத்திற்கும் முடிவாக அந்த யுத்தம் இருந்தது. அது பெரும் யுத்தம். என்பதால், அது எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போனது. மிஞ்சியவற்றை அடித்துச் சிதைத்தது. சிதைத்து நொறுக்கியது. 

அதற்குள் நாங்கள் கூரைகளையும் கழற்றிக் கொண்டு வேறிடங்களை நோக்கிச் சென்றோம். இறுதியில் காடுகளை, கடலை நோக்கிச் சென்றோம். போகும்போது கூரையை மட்டுமா கழற்றினோம். நட்ட பயிர்களைத் தவிர்த்து, வளர்த்த பிராணிகளை, சேர்த்த பொருட்களை, வாங்கிய பண்டங்களை என எல்லாவற்றையும் எடுத்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் எங்களோடு சேர்ந்தும் சிந்தச் சிந்த ஒரு அரசைப் புலிகளும் காவிக் கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் உருவாக்கிய அரசே அவர்களுக்குப் பாரமாகியது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? எல்லாவற்றையும் அவர்களும் சுமந்து கொண்டே சென்றனர். நாங்களே எங்களின் வீட்டுக் கூரையைக் கழற்றிச் சென்றோம் என்றால், அதன் நிலையை எப்படிச் சொல்வது? சரியோ பிழையோ அதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவுகளிருக்கவில்லை.  

விதி வேறு முகத்தோடு வந்து பல்லை இளித்துக் கொண்டு முன்னே நிற்கிறதே. 

முழுக் கிளிநொச்சி நகரமுமே பெயர்க்கப்பட்டு இப்படிக் கொண்டு செல்லப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட நகரம் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டது. அப்படி வைத்து, வைத்துக் காவிச் செல்லப்பட்ட நகரம் இறுதியில் கரைந்து காணாமலே போய்விட்டது. அந்த நாட்களில் ஒரு விமானமும் கிளிநொச்சியில் தரையிறங்கவில்லை. தரையிறங்காத விமானங்கள் தலைகளின் மேலே சுற்றின. குண்டுகளையே இறக்கின. 

அப்போதும் கேட்டார்கள் கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்கிறது? எட்டாந்தலைமுறைக்கேள்விகள் இவை. 

‘அங்கே ஒரு நாய் மட்டும் நின்றது’ என்று யாரோ ஒரு பத்திரிகையாளன் ஒரு தடவை எழுதியிருந்தான். ஆட்களற்றிருந்த 1996 இன் கிளிநொச்சியைப் பற்றிய சித்திரம் அது. அதையே நானும் திருப்பிச்சொன்னேன்.

பிறகு மீள்குடியேற்றக்காலம். அகதிகளாகச் சென்ற சனங்கள் மீள்குடியேறிகளாகி வந்தனர். வந்தவர்கள் கூரையில்லாத தங்களுடைய நகரத்தைக் கண்டனர். தெருக்களில்லாத ஊர்கள். ஆட்களில்லாத வளவுகள். பாழடைந்;த நகரத்தை மீண்டும் அவர்கள் கட்டியெழுப்பத் தொடங்கினர். வாழ்வென்பதை எங்கிருந்து, எதிலிருந்து, எப்படித் தொடங்குவது என்று தெரியாமலிருந்தது எல்லோருக்கும். 

அப்போதும் கேள்விகள் கேட்கப்பட்டன. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது? ஒன்பதாம் தலைமுறைக் கேள்விகள் இவை. 

நான் சொன்னேன். 

ஒரு இடிந்த சுவருக்கு நான்காவது தடவையாகவும் கூரைகளைப் போடும் மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த நகரத்தில். கால்கள் இல்லாவர்களின்  நகரமாக. பிள்ளைகளைத் தொலைத்தோரின் நகரமாக. பிள்ளைகளைத் தேடுவோரின் நகரமாக. என்றைக்கோ ஒரு நாள் உங்கள் அப்பா வருவார். அது வரை காத்திருங்கள் என்று தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பெண்களின் நகரமாக... கால்களே இல்லாமல் ஊர்ந்து செல்வோரின் நகரமாக, கண்களை இழந்த பின்னும் வாழவேண்டுமே என்ற தவிப்போடு அலைவோரின் நகரமாக, பெற்றோரைப் போரில் இழந்த பிள்ளைகளின் நகரமாக, வீடுமில்லை வாழ்வுமில்லை என்று அந்தரிப்போரின் நகரமாக, பள்ளிக்கூடங்களும் கோவில்களும் கூடச் சிதைந்து போன நகரமாக, காணுமிடமெல்லாம் பாதுகாப்புத் தரப்பினரின் அடையாளங்களே தெரியும் நகரமாக, கடனாளிகளின் நகரமாக கிளிநொச்சி இருக்கிறது என்று. இதுதான் கிளிநொச்சி. இப்படித்தான் கிளிநொச்சி இருக்கிறது என்று. 

பிறகு மெல்ல மெல்லக் கிளிநொச்சி துளிர்க்கத் தொடங்கியது. யுத்தம் ஓய்ந்த இடங்களில் வழமையாக வந்து சேரும் அனைத்தும் கிளிநொச்சிக்கும் வந்தன. தொண்டு நிறுவனங்களோடு தொண்டுப் பணியாளர்கள் வந்திறங்கினர். வங்கிகள் வந்தன. லீஸிங் கம்பனிகள் வந்திறங்கின. கடன் வழங்கப்பட்டது. அதுவும் தாரளமாக. கேட்கக் கேட்கக் கொடுத்தன எல்லா நிதி நிறுவனங்களும். கடன் வழங்கப்பட்டது என்பதை விட கடன்பட்டனர் சனங்கள் என்று சொல்வதே சரி. கையிலே காசில்லாதவர்கள், வேறு என்னதான் செய்ய முடியும்? காசில்லாதவரின் நிலையைப் பயன்படுத்தின ஏராளம் வட்டி வசூலிக்கும் நிறுவனங்கள். நகரில் ஏனைய கடைகளை விட நிதி நிறுவனங்களே அதிகமாக முளைத்தன. நகரம் கிசு கிசு என்று வளரத் தொடங்கியது. அரச பிரதிநிதிகள் வந்தனர். அமைச்சர்கள் வந்தனர். ஜனாதிபதி வந்தார். அமைச்சரவை கூடியது. திட்டங்கள் வந்தன. கொடிகள் பறந்தன. புழுதியும் பறந்தது.  

சனங்கள் மீள்குடியேறிகளாக இருந்தபோதும் அகதி நிலையில் இருந்து மாறுவதற்கு காலம் தாமதித்தது. இன்னும் அந்தத் தாமதம் உண்டு. படைகள் குறைந்தாலும் அமைதி வளர்ந்தாலும் யுத்தக் காயங்கள் இன்னும் ஆறவில்லை. நெருப்புத் தணிந்தாலும் சூடு ஆறவில்லை என்பார்களே அதுமாதிரித்தான் இன்னும் நிலைமை. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கள் காணிகளுக்குப் பாதுகாப்பாக இதுவரை வைத்திருந்த சனங்களை வெளியே தூக்கிப் போடுகிறார்கள். அல்லது  வெளியே போக மறப்போரை பொலிசில் கதைத்து உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். அநேகமாக இப்படிப் பாதிக்கப்படுவோர் இந்திய வம்சவழியினராகவே (மலையகத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தவர்களாகவே) உள்ளனர். அவர்கள் போரின்போதும் சமாதானத்தின் போதும் இந்தக் காணிகளுக்குக் காவல் இருந்தார்கள். காடுகளை அழித்துப் பயிர்களை வளர்த்திருந்தார்கள். மூன்று நான்கு தலைமுறைக் காலத்தை இந்தக் காணிகளைக் கழித்திருந்தார்கள். என்றாலும் என்ன? சட்டமும் பணமும் ஆவணமும் இவர்களுக்குச் சார்பாக இல்லையே! 

வயல்கள் விளைகின்றன. வாய்க்காலில் நீரும் ஓடுகிறது. குளங்களைத் திருத்திக் கட்டுகிறார்கள். வீதிகள் செம்மையாகின்றன. நகரத்தை ஊடறுத்துப் போகும் ஏ 9 என்ற கண்டி – யாழ்ப்பாணம் பழைய ராசதானிகளுக்கான வீதி பிரமாண்டமாக அகலிக்கப்பட்டுள்ளது. வீடுகளிற் பலவும் புதிதாய் முளைத்துள்ளன. தெருவிலும் விளக்குகள் ஒளிரத் தொடங்கியுள்ளது. போதாக்குறைக்கு நகரத்தில் ‘சுப்பர் மாக்கற்’ மற்றும் தேசியக் கொம்பனிகள், பல்தேசியக் கொம்பனிகள் எல்லாம் நிறைந்து கொண்டிருக்கிறது. நியான் விளக்குகளின் ஒளி கண்ணையும் கருத்தையும் பறிக்கிறது. வண்டிகள் குறுக்கும் மறுக்குமாக விரைந்து பறக்கின்றன. எல்லாமே மாயமாக இருக்கிறது. இரண்டு வருசத்துக்கு முன்பு இங்கேதான் யுத்தம் நடந்தது என்று நகரத்தைப் பார்த்தால் யாருமே நம்பமாட்டார்கள். சத்தியம் செய்தாலும் நம்பக்கடினம்தான். 

மீண்டும் கிளிநொச்சியில் ஹெலிகொப்ரர்கள் வந்திறங்குகின்றன. வெள்ளை, கறுப்பு, செம்மஞ்சள் என்று பல வர்ணங்களில் மனிதர்கள் வந்து போகிறார்கள். ஆனால், சனங்கள் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. றொட்ரிக்கோ மைதானம், சர்வதேச மைதானமாக மாறிக்கொண்டிருக்கிறது. சனங்கள் உள்ளுரில் வயலோடும் வாய்க்காலோடும் கிடந்த மாய்கிறார்கள். பலருக்கு வீடும் இல்லை. வயலும் இல்லை. வாய்க்காலும் இல்லை. இதையெல்லாம் வழங்கி மக்களை ஈடேற்றுவதற்காக யாரோ சிலர் இரவும் ஓடிக்கொண்டும் உழைத்துக் கொண்டும்தானிருக்கிறார்கள். வரலாறு என்பது எல்லாவற்றினதும் கலவை என்பது சரியாகத்தான் உள்ளது. 
என்றபோதும் எல்லாவற்றையும் கூர்மையாக அவதானிக்கின்ற, வங்கியொன்றின் தலைமை அதிகாரியாக இருக்கும் ஒரு நண்பர் கேட்கிறார், கிளிநொச்சி எப்படி இருக்கிறது? அங்கே என்ன நடக்கிறது? என்று. இவை பத்தாம் தலைமுறைக் கேள்விகள். ஆனால், புத்தம் புதிய கேள்விகள். 

இலங்கையின் மிக இளைய பட்டினங்களில் ஒன்று கிளிநொச்சி. ஆனால், மற்றைய இளைய பட்டினங்களையும் விட, புகழ்வாய்ந்த மூத்த பட்டினங்களையும் விடக் கிளிநொச்சிக்கு மதிப்புண்டு@ புகழுண்டு. போரிலும் அதற்குப் புகழுண்டு. சமாதான முயற்சிகளிலும் அதற்குப் புகழிருக்கு. போருக்குப் பிறகும் அது எழுச்சியாகவே உள்ளது.  

எல்லாத் துயரங்களின் பின்னும் எப்படியோ ஒளியை வற்ற விடாமல் அது இருக்கிறது. அல்லது எப்படியோ சடுதியாக எழுந்து விடுகிறது. கிளிநொச்சியின்   தாயூற்றாக இருக்கிற இரணைமடுக்குளம் கோடையில் வற்றி மாரியில் பொங்கிப் பிரவாகித்துப் பாய்வதைப் போல கிளிநொச்சியும் ஒரு போது அழிந்து இன்னொரு போதில் எழுந்து விடும் இயல்பைக் கொண்டது என்று சொன்னேன். 

ஆனால், உண்மையில் எனக்கும் தெரியவில்லை, அவருக்கும் தெரியவில்லை, கிளிநொச்சியில் என்னதான் நடக்கிறது என்று. 

நன்றி - எதுவரை

00

Sunday, October 14, 2012

வான்கோவின் வயல்











ணியொலியோடு வருவது யார்

முதல் மணிக்கு வந்த மாதவக்குமாரனை
அடுத்த மணியொலி வகுப்பறையிலிருந்து அழைத்துப் போகிறது.
அவர் பிரிய மனமில்லாமற் பிரிந்து செல்கிறார்
தீர்க்கப்படாத  கணக்குகள்
பாதியிலேயே நிற்கின்றன
நாங்களும் பாதியிலேயே நிற்கிறோம் தடுமாறிக் கொண்டு.

இப்போது
இந்த மணியொலி அழைத்துவந்தது
பிக்காசோவையா வான்கோவையா
மாற்குவையா வரதராஜனையா

வர்ணங்களும் தூரிகைகளும் அசைந்து
வினோதங்களான வகுப்பறையில்
கணிதவெளி உருமாறிக் கலை வெளியாயிற்று.

இடையில் இன்னொரு மணியொலி அவசரமாய்...
கூடவே, பச்சை வெளிகளில் ஒரு நெருப்புக்கொடி
பாம்பாய் ஊர்கிறது.

மஞ்சள் வயல்களில் புதையுண்டு நிற்கும் படைவண்டி
நிச்சயமாக “வான்கோ“வினுடையதல்ல
அவருடைய காகங்களைச் சுட்டுக் கொன்றது யார்?
இப்போது இந்தப்படை வண்டியை வயலுக்குள்ளே இறக்கியது யார்?
படை வண்டிக்குள்ளிருந்து குதித்தோடி
எங்களை நோக்கி வரும் துவக்குகள் எதற்காக?
என்னருகில் மணப்பது யாருடைய நிணம்?

















கால்களுக்கடியில் நகர்ந்து செல்கிறது தீ.

என்ன கொடுமை? எல்லா வர்ணங்களும் கரைந்து
அபாய வர்ணமாயிற்றே!

பதிலறியமுதலே அடுத்த மணியொலி.

இப்போது எல்லோரும் பதுங்கு குழியுள்.
அலறிய மணியொலியை
தின்றெழுகிறது குண்டெறி விமானங்களின்  அபாயவொலி.

அடுத்து வரும் மணியொலிக்காக காத்திருக்கும் பொழுதில் கண்டேன்
காயங்கள் ஆயிரத்தை .

அதில் என்முகமும் உன்முகமும்
மேலும் கொலைவெளியான வகுப்பறையும்

வான்கோவின் மஞ்சள் வயல் வெளி
பிக்காஷோவின் குவார்ணிக்கா ஆனதையும்.











00

Thursday, October 11, 2012

சொல்லின் பொருள்

















எதுவெனச் சொல்ல முடியவில்லை
ஒரு சொல்
ஒரு போது மகிழ்ச்சியாக இருந்ததையும்
பின்னொரு போதில் துக்கமாக மாறியதையும்

மடியூறும் அன்பின் சுரப்பாக இருந்த
அச்சொல்
ஓர் நாள் பாலையில் கைவிட்டுச் சென்றதையும்.

02

காதல்-
மலராகவும் முள்ளாகவும் மாறும்
வித்தையும் விநோதமும் கொண்டதொரு வஸ்துவா, சொல்லா,
சொல்லடி மக்தலோனா?

03

என்னவென்று சொல்ல
ஒரு சொல்லுக்கும் அப்பால்,
செயல்களும் விளைவுகளும் நிகழ்த்தும் உணர்தலின் கோரத்தை?

அச்; செயல்களும் விளைவுகளும் நிகழ்த்தும்
உணர்தலின் கோரமே
அச்சொல்லின் பொருளாகப் புலரும் வித்தையையும்
என்னவென்று சொல்ல?

காதல், அமைதி, அன்பு, சமாதானம், கருணை, நீதி, நியாயம், தோழமை, ஜனநாயகம் எதுவாயினும்.

ஆமாம், எதுவாயினும்.

00