Monday, April 16, 2012

யுத்த நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள்













யுத்தம் நடந்த நாட்களில் 2007 - 2008 இன் இறுதிப் பகுதிக்குள் எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள். இதுபோல அந்த நாட்களில் ஏறக்குறைய 100 க்கும் மேலான கவிதைகளை எழுதியிருந்தேன். சிலவேளை ஒரு நாளில் மூன்று நான்கு கவிதைகளைக் கூட எழுதியிருக்கிறேன். அந்த அளவுக்கு நிகழ்ச்சிகளும் நிலைமையின் போக்கும் உணர்வும் விளங்குதல்களும் இருந்தன. அது உச்சமான உத்வேகத்தைக் கொண்டிருந்த காலம். கவிதைகளை மட்டுமன்றிப் பல குறிப்புகளையும் எழுதியிருந்தேன். சிலவற்றைச் சில நண்பர்களுக்கு அனுப்பியுமிருந்தேன். அவை அவர்களிடம் இன்னும் உள்ளன. கவிதைகளையும் அவ்வாறே சில நண்பர்களிடம் அனுப்பினேன். அவற்றி்ல் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதிக் கவிதைகளே “பலியாடு“ பெயரில் “வடலி“ வெளியீடாக வெளிவந்திருந்தது. ஏனையவை இன்னும் அதே நண்பர்களிடம் உள்ளன. அவற்றை மீண்டும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டே நான்காவது கவிதைத் தொகுதியான “எதுவுமல்ல எதுவும்“ வந்தது. இன்னும் ஒரு தொகுதிக் கவிதைகள் - குறிப்பாக அந்த யுத்த நாட்களை மையப்படுத்திய கவிதைகள் இன்னும் நூலாக்கப்படாமலேயே உள்ளன. அந்தக் கவிதைகளிலிருந்து இங்கே சிலவற்றை இப்போது “திண்ணை“ பிரசுரித்துள்ளது. ஆனால், திண்ணையி்ல் தலைப்பிட்டமையும் கவிதையை ஒழுங்கமைத்தமையும் வாசிப்புக்கும் புரிந்து கொள்ளலுக்கும் சற்றுச் சிரமத்தை அளிக்கின்றன என சில வாசகர்கள் தெரிவித்திருந்தமையை அடுத்து அந்தக் கவிதைகளை உரிய வகையில் இங்கே மீள் பதிவிடுகிறேன். எனினும் இவற்றை முதலிற் பகிர்ந்த “திண்ணை“ க்கு நன்றி.

















ஆய்க்கினை

இனியும் யாரும் வரவேண்டாம்
போதும் இந்த ஆய்க்கினைகள்

அம்மா, ஈரத்தின் வாசனையை
கடல் தர மறுத்தபோது
ஆறும் குளமும் தங்களுடலில்
இரத்தத்தின் வெம்மையையும்
கண்ணீரின் சூட்டையும் ஏற்றபோது
எங்கள் பாதைகளில்
இருள் உறைந்தது அழுகுரல்களின் வேர்களில்.

போர் விரும்பிகள்
குதிரைகளையும் ஆயுதங்களையும்
போர் வீரர்களையுமே
தங்களின் கனவில் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர் மனமுட்கள் குவிந்து
எல்லாப்பாதைகளும் அடைபட்டாயிற்று

அமைதியற்ற குருவி
தன் இரையை எங்கே தேடுவது?
குருதியோடும் மண்ணில்
விளைந்து கொண்டிருக்கும் புழுக்களுக்கிடையில்
வரலாற்றின் முகம் குரூரமடைகிறது
தோற்றுவிழும் குதிரையின் முகத்தோடு.

வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட
தெருக்களில் ஒலிக்கும்
சாவுப்பாடலுக்கு யார் இறுதி அஞ்சலியைச் செலுத்துவது?
தினமும்
ஒப்பாரி சொல்லியழுத பெண்கள் மூர்ச்சையற்றுப் போய்க்கிடக்கிறார்கள்
ஒவ்வொரு வீட்டிலும்.

தியாகிகளின் பட்டியலை
யாரோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
“அந்த வானொலி“யில் வரும் செய்திக்கு
யாராலும் ஏற்கப்படாத மரியதைக்கு
எந்த நிறமுமில்லை.
அது எல்லாருடைய காலடியிலும் கிடந்து நசிபடுகிறது
வன்மத்தின் ஊனம் கசிய.

வீரம் விளைந்ததாக நம்பப்படும் நிலத்தில்
அழுகுரல்கள் விளைகின்றன
நீங்கள் விலக்க முடியாத முகங்களில்.

எதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்கமுடியாத வீரத்தின் முன்னே
நான் எறிவேன்
நாயின் மலத்தை இந்த வரலாற்றின் விதி முன்னே.

00















புலன் மறுப்பு


புண் நாறிப் பழுத்த காலத்தில்
புலன்களுக்கு விதிமுறைகள் வந்தன
அவர்களிடம் வாய்மட்டுமே இருந்தது
பலருக்கும் காதுகளே அனுமதிக்கப்பட்டன.

அவர்கள் பேசுவதற்காகவே படைக்கப்பட்டிருந்தார்கள்
நாங்கள் கேட்பதற்கே அனுமதிக்கப்பட்டோம்.

ஐம்புலன்களும் யாருக்கும் தேவையில்லை
என்றொரு விதி வந்தபோது
எல்லோரும் மௌத்தைக் கொடுத்து
அதை வரவேற்கும்படியாயிற்று
அதன்பிறகு
அந்த விதிக்கு எல்லோரும்
விருந்தாகிப் போனார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகள்
இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன
பிணங்களின் நடுவில்..

எப்போதும் பிணங்களை ஆராதிப்பதே
ஒவ்வொருவரினதும் பொறுப்பான செயல்
என்ற விதி எழுதப்பட்டுள்ளது
சேற்றில் விழுந்து நாறும் நாட்களின் மீது.

தோல்வியும் அவமானமும்
சுற்றிவளைத்தபோதும்
எல்லோருடைய குரல்வளையிலும்
நெருப்பு மூண்டபோதும்
யாரும் அதைக்காட்டிக் கொள்ளவேயில்லை.

ஆறாவது விதியும் நூறாவது விதியும்
உறைந்தது ஒருசிறு வினையற்றும்
சவக்குழியில்.

எதற்கும் பெறுமதியில்லை
யாருக்கும் மதிப்பில்லை
உனக்குத் துப்பாக்கியைக் கையாளத்தெரியுமா
அந்த வித்தையை அறிந்தவர்கள்
எதுவும் செய்யலாம்.

இதோ மகுடம்
சூடிக்கொள்ள முதல்
உன்னுடைய விசுவாசம் குறித்து
நிரூபித்துக்கொள்

விவசாயிகளுக்கு பயிரிடுவதைத் தவிர வேறெதைத்தான் தெரியும்
மருத்துவர்களுக்கு நோயைவிட்டால் வேறு கதிதானென்ன
கடலோடியிடம் கடலின் ஞாபகங்களைத்தவிர
வேறெதுதானுண்டு
உத்தியோகத்தர்கள் சனங்களையும் விதிகளையும் வைத்துக் கொண்டு
என்னதான் செய்ய முடியும்

துப்பாக்கியோ எல்லாவற்றுக்கும் மேலானது
யாரையும் நிறுத்தவும் இயக்கவும் முடிந்த
அதன் விசையில்
எல்லாவற்றுக்கும் மேலான அதன்
பேருருவில்
உனது வரலாறும் நிகழ்காலமும்
அடக்கம்.

இதோ
புலன்களுக்கு விடுதலையளிக்கும் ஒரு கருவியைக்
கொண்டு உங்களின் சுதந்திரத்தை அறியுங்கள்.

00
















அபாயவெளி


பொய்யின் எல்லா அழகும்
ஒரு நொடியில் மறைந்தபோது
முதல்முறையாக அவர்கள் கண்டார்கள்
யதார்த்தத்தின் அபாய வெளியையும்
ஒரு நாளின் இதயத்தையும்

இருளும்
மாய வர்ணங்களும் படர்ந்திருந்த
ஒரு நிலப்பரப்பில்
முதற்குமிழி உடைந்த கணத்தில்
பேச்சோசையெழுந்தது
பாட்டோசை கேட்டது
பாங்கொலியோடு சூரியோதயம் நிகழ்ந்தது.

உடைந்த மாளிகையின்
அடியில்
இருளடர்ந்த பதுங்குகுழியின்
உள்ளே
முதற்தடவையாக ஒளி சுவறியதைக் கண்டேன்

ஊற்றுவாய்கள் அடைபட்டிருந்த
ஆழ்பதிவில்
சிலுவை முளைத்திருந்தது.
சிலுவைக்கருகில்
கைவிடப்பட்டிருந்த வாளில்
ஒட்டியிருந்த நெருப்புத்துளிகளில்
பறிக்கப்பட்ட உயிர்களின்
கடைசி வாக்கு மூலங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன

கல்லாக்கப்பட்ட முகங்களை
முத்தமிடத்துடிக்கும் தாயொருத்தியின் நிழல்
கண்ணீரில் மிதக்கக்கண்டேன்
அப்போது
கல்லாக்கப்பட்ட முகங்களிலிருந்து
பீறிட்டெழுந்தது
ரத்தம்

சிதிலமாகியிருந்த நாட்களில்
விதிக்கப்பட்டிருந்த
கோடுகளை அஞ்சிய குழந்தைகளை
வாரியணைத்துக் கொண்டு போகும்
வயோதிபனிடம்
இருக்குமா இன்னும்
வாசலற்றிருந்த சமாதியின் தடயங்கள்.

00














சிலுவை, இறுதி முத்தம், தண்டனை, உண்மை
என்பவற்றுக்கான முகாந்திரம்


மாம்பூக்கள் நிரம்பிய முற்றத்தில்
இன்று கோலமில்லை
கண்ணீர்த்துளிகளைப் பெருக்கிய காலையில்
ஒரு
மூடப்பட்ட சவப்பெட்டி
கடக்க முடியாத நிழலாய்
சாட்சியாய் வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கும் உங்களுக்குமிடையில்

ஓலங்கள்
அழுகை
கோபம்
வசைகள்
மன்னிப்பில்லை
மகிமையில்லை
பெருந்துக்கத்தின் முன்னே
எல்லா வேஷங்களும் களையப்படுகின்றன
அவர்களை
அழவிடுங்கள்
அவர்கள் வசைபாடட்டும்
அவர்கள் அப்படித்தான்
உண்மையைப்பேச விரும்புகிறார்கள்.
உண்மையைப் பேசுவதற்காக
ஒரு உயிரைக் கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது
அதுவும் இந்தக்கணத்தில் மட்டுமே
அவர்களால் அப்படிப் பேசமுடியும்

திறக்கப்படாத சவப்பெட்டியில்
ஒரு சாவியுண்டு
அதுதான் இப்போது
உண்மையைத்திறக்கிறது

00

















தூக்கு மேடையில் வைக்கப்பட்ட
வாக்கு மூலம்

எனக்கு
சாட்சியங்களில்லை
நிம்மியுமில்லை
இதோ
எனக்கான தூக்கு மேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.

அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்

நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை

நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்

உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனை;குரிய தல்லவா

எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்

நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை
நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே
என்னைக்கோவிக்காதே

நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்

உண்மைகளை நாம் ஒரு போதும்
அழியவிடலாமா
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது

என்ன செய்ய முடியம்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா

காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்

00
















அகாலம்

இந்தத்தலையைக் கிள்ளியெறியுங்கள்
அவமானங்களைச் சகிக்க முடியாது
இனியும்
முட்டாள்தனங்களுக்காகவும்
கோழைத்தனத்துக்காகவும்
உயிரும் குருதியும்
நான் தரவேண்டுமெனில்
இதோ என்னுடைய தலை.

போகட்டும்
மிச்சமிருக்கும் துயரமெல்லாம்
;
நெருப்பையும் ரத்தத்தையும்
இன்னும் நினைவிற் சேமித்து வைத்திருக்க முடியுமா
அவமானங்களால் நிரம்பியிருக்கும் துயருக்குள்
சிதைந்த சொற்களின் ஓலத்தோடு
துடித்துக் கொண்டிருக்கிறது
நிராகரிக்கப்பட்ட இதயம்.
.

கண்ணீருக்குள் மிதக்கின்றன
சொல்ல முடியாது தத்தளிக்கும்
உண்மையும்
வெல்ல வழியற்ற
காலமும்.

இந்த வெயிலில்
மழைக்காக காத்திருக்கும்
செடிகளிடமும் புற்களிடமும்
இலையுதிர்ந்த மரங்களிடமும்
என்னுடைய ரகசியங்களைப் பகிர்ந்துள்ளேன்.

அந்த ரகசியங்களில்
வெளிப்படையாகப் பேசுவதற்கிருந்த
நாலு வார்த்தைகள்
சூரிய ரேகைகளாய் ஒளிரும்
அன்பின் துளிகள்
அழுக முடியாத
நாறமுடியாத
உண்மையின் குருதி
அபாயங்கள் சூழும் எதிர்காலத்தைக்கடந்து போவதற்காக
துலங்கிய சிறு வழி
என்று மிகச் சிலவேயிருந்தன

என்றபோதும்
அதைப்பகிர்வதற்கு யாருமேயில்லை

என்னிடம் முகமூடிகள் செய்யும்
நுட்பமில்லை
அதனால்
நண்பர்கள் அந்நியர்களாகிவிடுகிறார்கள்
அல்லது
பகைவர்களாகி விடுகிறார்கள்.

ஆடுகள் கோழிகள் பன்றிகள் மாடுகள்
மனிதர்கள்
எல்லாமும் ஒன்றென்றே மதிப்Pடு செய்யப்படுகிறது.

உன்னிடம் எது இருக்கிறது என்பது முக்கியமல்ல
நீ
யாதாயிருக்கிறாய்
என்பதுமல்ல
உன்னிடம் முகமூடிகளுண்டா
கவசங்களுண்டா
நீளமான நாக்கும்
வளையக் கூடிய முதுகும் உண்டா
தோத்திரங்களும்
வழிபாட்டுச்சூத்திரங்களுமுண்டா என்பதே
எதிர்பார்க்கப்படுகிறது.

அவமானப்படுத்தல்களால் நிரம்பிய தலையை
எடுத்துவிடுங்கள்

கூனல் முதுகு இல்லையென்பதற்காகவும்
தொங்கும் நாக்கில்லாமற்போனதற்காகவும்
மாற்றாகத் தருகிறேன் அதை.

00












பலி

பீரங்கிகளை அதிகம் நம்பும் நாட்களில்
உலர்ந்து போகின்றன
எல்லா வார்த்;தைகளும்
எல்லாக்கனவுகளும்

இப்போது
ஒரு சொல்லுக்கும் மதிப்பில்லை
கண்ணீர் மிக்க ஒளியுடையதாகக் கண்டேன்
மண்டியிட்டழுகின்றேன்
பீரங்கியின் முன்னே
வெட்கம்தான் என்றபோதும்.

யாரையும் காப்பாற்ற முடியவில்லை
யாருடைய கண்ணீரையும் துடைக்கவும் முடியவில்லை
கண்முன்னே
பலிடப்படுகின்றன கனவுகளும் நம்பிக்கைகளும்

பொறிகளின் மேல்
நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்
உடைந்து விழுகிறது பாலம்

பீரங்கிக்கில்லை
இதயமும் கருணையும் என்றறிந்தபோதும்;
மண்டியிட்;டழுகிறார்கள்
முதியபெண்கள்

என் செய்வேன்
என் செய்வேன்

முள்முருக்க மரங்கள் பூத்துச் சொரியும்
ஒழுங்கையில் போகிறாள்
வசைகளோடு
ஒரு பெண்
அவளைத் துயிலுரிந்த நிகழ்காலம்
பைத்தியக்காரியாக்கவும் துடிக்கிறது.

பீரங்கி அவளைத் தோற்கடித்து விட்டது

பைத்தியக்காரர்களின் கூடாரத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
பீரங்கி
தோற்கடித்து வருகிறது
எல்லோரையும்
சிதைந்த நாட்களைக் கூட்டியள்ளி
சிதையிலேறு
எல்லாம் முடிந்ததென்று

பீரங்கிகளை அதிகம் நம்பும் காலத்தில்
புலன்கள்
கல்லறைக்குள் வைக்கப்படுகின்றன
உயிரைச் சிலுவையிலறையுங்கள்
இல்லையென்றால்
கண்ணீரில் கரைத்து
பதுங்கு குழிக்கடியில் புதைத்து விடுங்கள்.

பலியிடுங்கள்
உங்களைப் பலியிடுங்கள்
பலியிட முடியாதபோது
பீரங்கிவருகிறது பலிகொள்ள
எல்லாவற்றையும் விட
எல்லாவற்றையுமே விட
துப்பாக்கிகள்
பச்சையுடைகள்
சப்பாத்துகள்
வலிமையாகிவிட்டன
இந்தப்பூமியையும் விட
இந்த வானத்தையும் விட

இது பீரங்கிகளை அதிகம் நம்பும் காலம்

எனது வார்த்தைகள்
வெளியே வீசப்பட்டிருக்கின்றன
உலர்ந்த சருகாய்
குப்பையாய்

பீரங்கியின் வடிவில்
முட்டாள்தனமா
முட்டாள்தனத்தின் வடிவில்
பீரங்கியா

விகாரையின் முன்னே
போர்க்கலங்களின் படையல்
தேமாப்பூக்களைச் சூடிய
பீரங்கிகளை
வழிநீளம் இழுத்துச் செல்கிறார்கள்.

பிக்குகளின் நிழலை நசித்துச் செல்கின்றன
பீரங்கிகள்.

00

Thursday, April 12, 2012

சோலைக்கிளியின் புதிய புத்தகங்கள் - 02










கவிஞர் சோலைக்கிளியின் இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வு


- 14 .04 .2012 சனி ,காலை 9 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடக்கிறது.

00


அவணம்
[ கவிதைத் தொகுதி] - இதை “அடையாளம்“ வெளியிட்டுள்ளது.

பொன்னாலே புழுதி எறிந்த பூமி
[ பத்தி எழுத்து] இந்தப் புத்தகத்தை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

00


எச்.எம்.பாறூக்
அபார்
கமலாம்பிகை லோகிதராஜா
எம்.எச். முகம்மது ஆதம்
முபீன்
ஆரிகா
மர்சூம் மௌலானா
இத்ரீஸ்
றமீஸ் அப்துல்லாஹ்
எஸ்.எல்.எம்.ஹனிபா
அன்புடீன்
ரகுவரன்
செ.யோகராசா
றோஷன் அக்தர்
நபீல்
உமா வரதராஜன்
ரஊப் ஹக்கீம்
சோலைக்கிளி

ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

Wednesday, April 11, 2012

றஷ்மி - தன்னைச் செதுக்கிக் கொண்ட கவிஞன்







(காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள் - 2002, ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு – 2005, ஈதேனின் பாம்புகள் - 2010, ஈ தனது பெயரை மறந்து போனது – 2012 ஆகியவற்றை முன்வைத்து)








ஒரு கவியின் கவிதைகளை எவ்வாறு அணுகுவது? இது ஒரு சிக்கலான விசயம். அந்தக் கவியுடைய அரசியல் மற்றும் கோட்பாட்டுத்தளங்களினூடாக அணுகுவதா? அல்லது அவருடைய மொழிதல் முறைமை, அழகியல் உணர்வுகளினூடாக அணுகுவதா? அல்லது அவருடைய ஈடுபாடுகளின் வழி, அனுபவங்களின் வழி, அறிதலின் வழி, அக்கறைகளின் வழியே அணுகுவதா? அல்லது அவருடைய பிரச்சினைகள், சூழல், காலம், வாழ்நிலை இவற்றிற்கூடாக அணுகுவதா? அல்லது இவை எதுவுற்ற முறையில் பொதுநிலையில் நின்று கவிதைகளைப் படிப்பதா?

அப்படிப் படிக்கும்போதுகூட அந்தக் கவிதைகள் நம்மை அறியாமலும் உரிய கவியை அறியாமலும் அவை எம்மை ஏதோ ஒரு மையத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இதை நாம் எம்முடைய வாசிப்பில் உணரலாம்.

'சிலருடைய கவிதைகள் வெளிப்படையாகவே ‘பிராண்ட்’ (Brand) தன்மையுடையவை. நாம் மேலே பார்த்தவாறு ஒரு பொருட்பரப்பை – ஒரு கோட்பாட்டுத்தளத்தை மையப்படுத்தி, அல்லது அந்தக் கோட்பாட்டை இழையாகக் கொண்டு எழுதப்படும் கவிதைகள், பெரும்பாலும் இத்தகைய பிராண்ட் (Brand) தன்மையைப் பெறுகின்றன. இவற்றை அதிக சிக்கலின்றி அணுகலாம். இதற்கு பழமலய், புதுவை இரத்தினதுரை, சுபத்திரன் தற்போது தீபச்செல்வன் போன்றோரின் கவிதைகள் உதாரணம். தாங்கள் வரித்துக் கொண்ட அரசியல் ஈடுபாட்டின், நிலைப்பாட்டின் வழியாகத் தங்களுடைய கவிதைகளை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். பிராண்ட் தன்மைக்கு அப்பாலான கவிஞர்கள், அப்பாஸ், பிரமிள், தேவதேவன் போன்றோர்.

அதைப்போல மொழிதல் முறையிலும் மொழியைக் கையாளும் விதத்திலும் சிலர் தமக்கெனப் பிரத்தியேகமான முறைகளை அல்லது அடையாளங்களைக் கொண்டிருப்பர். இதற்குத் தமிழில் விக்கிரமாதித்யன், வ.ஐ.ச. ஜெயபாலன், சோலைக்கிளி, சு.வி போன்றவர்கள் உதாரணம். ஒரு கவிதையிலுள்ள இரண்டு மூன்று வரிகளிலேயே இவர்களை அடையாளம் காண முடியும். அல்லது கவிதையில் நகர்ந்து கொண்டிருக்கும்போதே இவர்களின் வாசனை தெரிந்து விடும். மொழியமைப்பிலும் மொழிதலின் முறையிலும் தனித்துத் துலங்கும் இயல்பு இவர்களுடையது.'(திவ்வியகுமாரன்)

ஆனால், இவற்றுக்கு அப்பால், பொது நிலையில் இயங்கும் பல கவிஞர்களின் கவிதைகளை எளிதில் அடையாளங்காண முடியாது. அவை, வௌவேறு பிராந்தியங்களைத் தளமாகக் கொண்டனவாகவும் வௌவேறு நிறங்களைக் கலவையாகக் கொண்டவையாகவும் அமைந்திருக்கும்.

சில கவிஞர்கள் நகர்ந்து கொண்டேயிருப்பர். மொழியை எடுத்தாள்வதில், வெளிப்படுத்தலில், பொருட்தேர்வில், வடிவத்தில் எல்லாம் இவர்கள் நகர்ந்து கொண்டேயிருப்பர். தன்னுடைய முதற்கவிதைக்கும் அடுத்த கவிதைக்கும் இடையிலான வெளிகளையும் நிறங்களையும் குணங்களையும் மணத்தையும் வேறுபடுத்தும் கவிகளிடத்தில் புதுமை துளிர்க்கிறது. தன்வாழ்வின் கணந்தோறும் உணர்கின்ற எண்ணற்ற விதங்களையும் எல்லையற்ற சாத்தியங்களையும் இவர்கள் வேறுபடுத்தி, வெளிப்படுத்தியவாறே செல்வர். இப்படிச் சொல்லும்போது மனுஷ்யபுத்திரன், ஸ்ரீநேசன், அனார், யவனிகா ஸ்ரீறாம் போன்றோர் உடனடியாக நினைவுக்கு வருகின்றனர்.

மிக எளிய வார்த்தைகளின் மூலம் நாம் பழகிய – அறிந்த இடங்களின் அறிந்த விசயங்களின் உள்ளேயிருக்கும் ஆழத்தையும் மணங்களையும் நிறத்தையும் சட்டென ஒளியூட்டிக் கவனப்படுத்தும் ஒரு முறையை இவர்கள் கையாள்கின்றனர். ஆனால், தங்களின் வழியே இவர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்; புதிய பிராந்தியங்களை நோக்கி. புதிய சாத்தியங்களை நோக்கி. புதிய வகைப்பாடுகளை நோக்கி. ஒரு பரப்பில் நீண்ட நேரம் நின்று இவர்கள் உரையாற்றுவதில்லை. (சில வேளை இவற்றையும் கடந்து இவர்களிடத்தில் ஒரு வகையான அடையாளத்தன்மை வலுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. தொடர்ந்து எழுதும்போது அல்லது தொடர்ந்து அவதானிக்கும்போது இத்தகைய ஒரு அடையாளத்தன்மையைக் காண முடிகிறது போலும்).

நகரும் கவிகள் தங்களின் கவிதைகளை விதவிதமாகவே எழுதுவர். புதிய உணர்தல்கள், புதிய உணர்த்தல்கள் எல்லாம் அவர்களுடைய கவிதைகளில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இதில் வாசகரின் முன்னனுமானங்கள் தகர்ந்து கொண்டேயிருக்கும். பதிலாகப் புதிய அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் சித்தித்திக்கும். நகர மறுப்போர் திரும்பத்திரும்ப ஒரே கவிதைகளையே எழுதிக்குவிக்கின்றனர். அவர்கள் ஒரு பரப்பிலே தொடர்ந்து நின்று கொண்டு பிரசங்கிக்கின்றனர்.

றஷ்மி ஒரு நகரும் கவி. அவருடைய முதற் தொகுதியின் கவிதைகளுக்கும் மூன்றாவது தொகுதியின் கவிதைகளுக்குமிடையில் அவர் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறார்? எப்படியெல்லாம் பயணித்திருக்கிறார்? எங்கெங்கேயெல்லாம் சென்றும் திரும்பியும் உள்ளார்? இவையே இப்போது நான்காவது தொகுதியை வெளியிட்டிருக்கும் றஷ்மியைப் பற்றி நாங்கள் அறிய வேண்டியவையாக இருக்கின்றன.

00

1990 களின் நடுப்பகுதியில் கவிதைகளை எழுதத் தொடங்கியவர் றஷ்மி. சமகாலத்திலேயே ஓவியத்துறையிலும் இயங்கினார் அவர். கலையின் இரண்டு வகைச் சாத்தியங்களிலும் தொடர்ந்து இயங்கும் அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் இரண்டிலும் தன்னைத் தனித்து அடையாளப்படுத்தியிருக்கிறார்.

கூடவே இரண்டு சாத்தியங்களிலும் தன்னை நகர்த்திக்கொண்டேயிருக்கிறார். நகர்ந்து கொண்டிருக்கும் கலைஞனால் ஒரே விதமாக இருக்கமுடியாது. ஒரே புள்ளியிலும் நிற்க முடியாது. றஷ்மியின் முன்னைய ஓவியங்களுக்கும் பிந்திய ஓவியங்களுக்கும் இடையில் உள்ள வேறுபடும் தன்மைகளை வைத்து இதைப் புரிந்து கொள்ள முடியும். கவிதையின் வேறுபாடுகளையும் மாற்றங்களையும் அடையாளம் காண்பதையும் விட ஓவியத்தில் இதை எளிதிற் காணலாம். ஓவியத்தில் பட்டெனத் தெரியும் வேறுபடுதல்கள். முதிர்ச்சியடைந்திருக்கும் வெளிப்பாடுகளை அவருடைய அண்மைய ஓவியங்கள் கொண்டுள்ளன.

அவ்வாறே அவருடைய கவிதைகளுமிருக்கின்றன. றஷ்மி எழுதத் தொடங்கியது அவருடைய முதிரா இளம்பிராயக்காலத்தில். அதுவே ஈழ அரசியலில் உச்ச வன்முறைகளும் பாதிப்புகளும் நிகழ்ந்த காலம். 1990 களின் பின்னான சூழல் என்பது, இலங்கைத் தீவின் அரசியற் கொந்தளிப்புகள் உச்சகட்டத்தை எட்டிய காலமாகும். அது ஈழப்போராட்டம் பெரும் யுத்தமாக விரிந்த காலம். இரண்டு அதிகாரத்தரப்புகளுக்கிடையில் யுத்தம் நடந்த காலம். இந்த யுத்தம் அனர்த்தங்களின் பெருவிரிவை நோக்கி வளர்ந்தது.

வன்முறையின் உச்ச வெளிப்பாடுகளின் காரணமாகவும் அதிகாரத் தரப்புகளின் ஈவிரக்கமற்ற தீர்மானங்களினாலும் அகதிப் பெருக்கமும் உயிர்ப்பலிகளும் உச்ச அடக்குமுறையும் தலைவிரித்தாடின. தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பிளவுண்டன - அழிவுகளைச் சந்தித்தன. அவ்வாறு அவை பிளவுண்டு கொள்வதற்கான அரசியற் சூழலையும் சூழ்ச்சியையும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்த தரப்புகள் உருவாக்கியிருந்தன. அதிலும் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் அந்நியத்தன்மையும் இடைவெளியும் அதிகரிக்கும் நிகழ்ச்சிகள் இந்தக் காலப்பகுதியிலேயே நடந்தன. இதற்குச் சிங்களத் தரப்பிலும் பொறுப்புகள் உண்டு. தமிழ்த் தரப்பிலும் பொறுப்புகள் உண்டு. அதிகார வலுவை இந்தச் சமூகங்களின் சக்திகளே அக்காலத்தில் கொண்டிருந்ததால், இவற்றுக்கே பெரும்பொறுப்புண்டு.

இந்த நிலையில் பொதுவாகச் சனங்கள் பாதுகாப்பற்ற வெளியில், அபாய வலைகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த சூழலில், வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்தச் சனங்களில் ஒருவர் றஷ்மி. அவர் சனங்களின் பிரதிநிதி. ஆகவே, சனங்களின் நிலைநின்று தன்னுடைய கவிதைகளை எழுதவேண்டிய நிலை றஷ்மிக்கு ஏற்பட்டுள்ளது. என்பதால் றஷ்மியின் கவிதைகள் நீதியைக் கோரும் சாதாரணன் ஒருவனின் அற நோக்கையும் இலங்கையின் சீரழிந்த அரசியற் சூழலாற் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரணனின் துயரத்தையும் அடியொலிப்பாகக் கொண்டுள்ளன.

ஆனால் இந்தச் சாதாரணன் எந்த அதிகாரத்தரப்பின் விசைப் புலத்தினுள்ளும் இழுபடவில்லை என்பது முக்கிய அவதானத்திற்குரியது. இது இலங்கையின் இலக்கியச் சூழலில் மிகச் சவாலான ஒரு விசயம். அத்துடன் 2004 இல் சுனாமியினால் ஏற்பட்ட மிகப் பயங்கரமான மானுடப் பலியும் றஷ்மியைப் பாதித்துள்ளது. சுனாமியினால் சனங்களும் அவர்களுடைய வாழ்க்கையும் சிதைந்தமை சனங்களில் ஒருவனாகிய றஷ்மிக்கும் துக்கத்தைத் தருகிறது. எனவே இந்த இயற்கையின் வஞ்சனையையும் மனிதச் சிதைவையும் கூட றஷ்மியின் கவதைகள் தமதகத்திற் கொண்டிருக்கின்றன. தான் வாழும் காலத்தினதும் சூழலினதும் தாக்கங்களை மையப்படுத்துவதில் றஷ்மி கொண்டிருக்கும் கவனத்தின் வெளிப்பாடுகளே இவ்வாறு அமையக் காரணம்.

ஆகவே, கொந்தளிப்புகளினூடே எழுத வந்தவர் றஷ்மி. இந்தக் கொந்தளிப்புகளே றஷ்மியை எழுத வைத்தன. அவையே அவரை இயங்க வைத்தன. இன்னும் அவையே றஷ்மியை இயக்குகின்றன என்றும் சொல்லலாம். என்றபடியாற்தான் அவருடைய பெரும்பாலான கவிதைகளும் அரசியற் கவிதைகளாக உள்ளன. றஷ்மியின் கவிதைகளைப் பற்றி எழுதும்போதும் பேசும்போதும் அவற்றை அவை பேசுகின்ற அரசியலுடன் தொடர்புறுத்த வேண்டிய அவசியம் இதனால் ஏற்படுகிறது. 80 களுக்குப் பின்னான ஈழக்கவிதைகளின் பொதுவிதியென்பது ஏறக்குறைய இத்தகைய அரசியல் மயப்படுத்தலையே கொண்டுள்ளதையும் இந்த அரசியலற்ற கவிதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படா வருந்தத்தக்க நிலையையும் இந்த இடத்தில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில், றஷ்மியினுடைய ‘காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்’ என்ற முதற் தொகுதியிலுள்ள மூன்றாவது கவிதையே (சார்ஜன் தனசிங்ஹவுக்கு) அரசியற் கவிதையாகத் தொடங்குகிறது. அதற்கடுத்த கவிதையில் (ஆண்டவ)

‘இனிக் கனவுகள் மெய்ப்பட
நானுன்னிடம் இறைஞ்சப்போவதில்லை’ என்றும்

அடுத்த கவிதையில் -
‘உங்கள் கனவெல்லாங் கைகூட
நானாக நலமடித்து என் உள்ளை
உங்கள் முன்
உங்களில் ஒருத்தனாய்ச் சமைத்துள்ளேன் காண்க’ (இந்தக் கவிதைக்குத் தலைப்பில்லை) என்றும் எழுதுகிறார்.

மிக மோசமான அளவுக்குச் சுதந்திரவெளி சுருங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிலைவரத்தை – ஜனநாயக நெருக்கடிச் சூழலைப் பகிரங்கமாக்குகிறார் றஷ்மி. அதேவேளை இந்த நிலையை வரலாற்றில் பதிந்தும் விடுகிறார். ஒரு கவியின் அல்லது படைப்பாளியின் ஆற்றலும் முக்கியத்துவமும் எதையும் பகிரங்கப்படுத்துவதிலும் வரலாற்றிற் பதிவாக்குவதிலும் பெரும்பங்களிப்பை வழங்குகின்றன. இதனாற்தான் படைப்பாளிகள் அரசியல் ரீதியாகப் பல இடங்களிலும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியேற்படுகிறது.

அரசியல் வன்முறை, அதன்விளைவாகத் ‘தன்னைத்தானே காயடித்தல்’ (சுயதணிக்கை) போன்றவை எல்லாம் ஈழப்போராட்டமும் இனவாத அரசியலும் உருவாக்கிய ஒரு பகிரங்க நிலையாகும். இந்தக் ‘காயடித்தல்’ என்பது சுயதணிக்கைப் பாரம்பரியமொன்றை அரசியலிலும் வாழ்க்கையிலும் உருவாக்கியது. தமிழ்பேசும் மக்களின் பொதுவெளி என்பது அநேகமாக காயடித்தலுக்குட்பட்டது – சுயதணிக்கைக்கு உட்பட்டது. இது மிகப்பெரும் அரசியல் - அறவியல் வீழ்ச்சியாகும். இந்த வீழ்ச்சியான நிலைமையே இன்றைய இலங்கையின் பொதுநிலை. இதை றஷ்மி மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். சுயதணிக்கை நிலை அபாயகரமான ஆயுதமாக இருக்கிறது என்று வெளிப்படுத்துவதினூடாக அந்த நெருக்கடி நிலையை உணரவைத்து விடுகிறார். செய்தித் தணிக்கை அமுலிலிருக்கும் ஒரு சூழலில் தணிக்கை செய்யப்பட்ட வெற்றிடத்தை அவ்வாறே விடுவதன்மூலம் அல்லது அந்த இடம் தணிக்கை செய்யப்பட்ட பகுதி என்று குறிப்பிடுவதன் மூலம் தணிக்கையின் தீவிர அழுத்தத்தைப் பகிரங்கமாக்கும் உபாயத்தை ஒத்தது றஷ்மியின் உத்தியும்.

அவருடைய பின்னைய கவிதைகள் ஒவ்வொன்றிலும் இந்த விசயங்கள் மிக ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன. இப்படி எழுத நேர்ந்தமையே இந்தக் கவியின் விதி. இதற்கு நல்ல உதாரணங்களாக அவருடைய பெரும்பாலான கவிதைகள் உள்ளன. குறிப்பாக இலங்கை நிலவரத்துக்கான ஒரு நல்ல குறிகாட்டியாகவும் பிற கவிதைகளுக்கான தாய்க்கவிதையாகவும் ‘சிங்களத்தீவு’ என்ற கவிதை உள்ளது.

‘பஞ்சுப் பொதி இறுகிப்
பாறையென்றாகுக – மனமும்
பாறை என்று ஆகுக.

தசையின் நார்கள் எல்லாம் விறைத்தே
கல்லென்றாகி வன்மம் கொள்க.

..........................
..........................

அச்சத்தில் உறைகின்ற ஆத்மாவும்
பயத்தில்
வெலவெலத்தே – நடுங்கி
உதறுங்
காலுங் கையும் யார்க்கும் வேண்டாமினி

.............................
............................

முறுக்கான முட்கம்பி உள்ளிறங்கிப் புண்ணாக்கும்,
நோவெடுக்கா குதவழியே
எல்லோர்க்கும் வாய்க்கட்டும்

.............................
..............................

வெட்ட வெட்டத் தளைக்கின்ற குறியோடு
ஆண்களும்
பெண்மகவெல்லாம் - ஒரே போதில்
நாலைந்து பேர் புணர
வன் புணர்ச்சிக்கிக் கிசைபான யோனியோடே
இனியெழுக.........

இந்தக் கவிதையை முழுதாக நாம் வாசித்தால் இலங்கையில் சிறுபான்மையின மக்கள் வாழ வேண்டிய யதார்த்தம் எப்படியாக உள்ளதென்பது புரியும். இலங்கை என்பது சிங்களத் தீவாகவே நடைமுறையில் உள்ளதையும் அதையும் மீறிச் சிறுபான்மைச் சமூகங்கள் வாழவேண்டுமாயின் அவர்களுடைய மனித உடற்கூறே வேறுவிதமாக உருமாற்றம் பெறவேண்டும் எனச் சொல்கிறார் றஷ்மி.

மனிதர்கள் தங்களின் இயல்பை இழந்து கல்லாகிச் சமைந்து விட்டால், அவர்களுடைய உணர்வுகளும் புலன்களும் தமது இயல்பான விதியை மாற்றிச் சடநிலையை அடைந்தாற்தான் அல்லது வன்முறையைத் தாங்கக்கூடிய இசைவைப் பெற்றாற்தான் வாழ்வை ஓட்டமுடியும் என்று கூறுவதன்மூலம் வன்முறையின் மீதான, அதனை மேற்கொள்ளும் தரப்பின் மீதான உச்ச விமர்சனத்தை எழுப்புகிறார் றஷ்மி. இந்த உணர்கையின் தீவிரம் சாதாரணமானதல்ல. மன அழுத்தங்களின் உச்சமே இத்தகையதோர் உணர்கையை ஏற்படுத்தும் என்பது உளவியலாளரின் கருத்து. அதுவே என்னுடைய இலக்கிய வாசிப்பின் அனுபவமும்.

ஆகவே, அந்த அளவுக்கு இலங்கைத் தீவு சிங்களத்தீவு என்று குறுக்கப்பட்டுள்ளதையும் அதனுடைய பல்லினத்தன்மையும் பன்முகத்தன்மையும் சிதைக்கப்பட்டுள்ளதையும் அதன் விளைவாக ஒற்றைத் தரப்பின் அதிகாரம் என்பது ஏனைய தரப்பினருக்கு அபாயமாக மாறியிருப்பதையும் வெளிப்படுத்துகிறார் றஷ்மி.

இவ்வாறு மக்களின் துயரநிலைகளைக் குறித்த தன்னுடைய அக்கறைகளை தனது படைப்பின் தளமாகக் கொள்கிறார் அவர். இதற்குப்பிறகு வரும் றஷ்மியின் ஏனைய கவிதைகள் எல்லாம் இதை, இந்த நிலையை மேலும் ஆழப்படுத்துவதை உணரலாம்.

இந்தக் கவிதைகளை எழுதியபோது றஷ்மிக்கு வயது அநேகமாக இருபதுகளுக்கும் முப்பதுகளுக்கும் இடையில் இருக்கலாம். பெரும்பாலும் காதற்கவிதைகளை எழுதும் வயதிது. அல்லது வாழ்வின் பிற ரசனைகள் குறித்தும் அக்கறைகள் குறித்தும் எழுதும் வயதிது. ஆனால், றஷ்மி அதையுங்கடந்து தன்னைத் தானே ‘நலமடிக்கும்’ ஒரு நிலைக்குள்ளாக வேண்டிய துயர்மிகு நிலையைச் சொல்லுகிறார். அதற்கப்பால், சமூகமே காயடிக்கப்பட்ட நிலையிற்தான் மாற்றப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறார். ஆகவே, றஷ்மியின் வயதையொத்தவர்களும் ஏனைய கவிஞர்களும் இப்படித்தான் 80 களுக்குப் பின்னர் எழுதிவருகிறார்கள்.

ஆனால், ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்துள்ள நிலைமையை உணரும் விதத்தையும் அதை இலக்கிய வெளிப்பாடாக்கும் விதத்தையும் பொறுத்தே அவரவர்க்கான இடம் உருவாகிறது. ஆற்றல் வெளிப்படுகிறது.

90 களில் எழுதத்தொடங்கிய அஸ்வகோஸ், நட்சத்திரன் செவ்விந்தியன், த. மலர்ச்செல்வன், திருமாவளவன், அரமதாஸ், கலா, தேவ அபிரா, ஆழியாள், பானுபாரதி, எஸ்போஸ், பா.அகிலன், சித்தாந்தன், அலறி, தானா விஷ்ணு, பிரதீபா, மஜீத், என். ஆத்மா, அனார், மைதிலி, நாமகள் போன்றோரிடமிருந்து றஷ்மி வேறுபடும் இடமும் விதமும்தான் அவரைக் குறித்து நாம் சிந்திப்பதாகும். அதேவேளை, 80 களிலிருந்து கவிதைப் புலத்தில் இயங்கி வரும் பிற ஈழக்கவிஞர்களிடத்தில் றஷ்மியின் இடம் மற்றும் விதம் என்ன என்பதையும் நாம் பார்க்க வேணும். இதைக் குறித்து நாம் சிந்திப்பதற்கு முன்னர் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த இன்னொரு முக்கியமான தாக்கவிசையுள்ள நிகழ்ச்சித் தொடரைப் பற்றிப் பார்ப்பது அவசியம்.

இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையேயான அரசியலில் தேசியவாதத்தின் எழுச்சிக் கூறுகள் வலுவடையத்தொடங்கின. புலிகளின் தலைமையில் தமிழ்த் தேசியவாதம் (இது குறுந்தேசியவாதம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையையும் இங்கே கவனிக்க வேண்டும்) எழுச்சிகரமான ஒரு தோற்றத்தை எட்ட முற்பட்டபோது, அதனால் பாதிக்கப்பட்ட அல்லது அச்சமடைந்த முஸ்லிம்களிடத்தில் முஸ்லிம்தேசியவாதத்தின் எழுச்சி தவிர்க்க முடியாமல் மேற்கிளம்பியது. சிங்களத் தேசியவாதத்தின் அச்சுறுத்தலுக்கெதிராகத் தமிழ்த் தேசியவாதம் மேற்கிளம்பியதைப்போலவே தமிழ்த் தேசியவாதத்தின் அச்சுறுத்தலுக்கெதிராக முஸ்லிம் தேசியவாதம் தோற்றம்பெற்றது.

இந்த நிலையின்போது அந்தந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் தத்தம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக தங்களின் நிலைப்பாட்டை எடுத்தனர். அதன்படி அவர்கள் இயங்கினர். அதன்படியே அவர்களுடைய அறமும் அமைந்தது. அல்லது நியாயங்கள் இருந்தன. சார்புகள் அல்லது கறுப்பு – வெள்ளை அணுகுமுறைகள் வலுவுற்ற காலம் இது. இது படைப்பின் இயல்பையும் அதனுடைய வெளியையும் ஒடுக்கியது.

ஆனால், இதைக் கடந்து அல்லது இதிலிருந்து விலகிப் பொதுமைப்பட்டவொரு நிலைப்பாட்டில் ‘மாற்றாக’ இயங்கிய படைப்பாளிகள், ஜனநாயகத்தைத் தமது அடிப்படையாகக் கொண்டனர். இவர்கள் அனைத்துவகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தம்மை நிலைப்படுத்தினர். சார்புகளை விட்டு விலகினர். இதன்காரணமாக இவர்கள் சந்தித்த நெருக்கடிகள் அதிகமாகியது. ‘கூடாரங்களும் கவசமும் இல்லாதவனுக்குப் பாதுகாப்பில்லை’ என்ற நிலை இவர்களுடையது.

எல்லாத்திசைகளில் இருந்தும் அபாயக் கண்ணிகள் இவர்களை மையப்படுத்தப்பட்டன. இதனால் இவர்களிற் பலர் எப்பொழுதும் தூங்கா இதயத்துடன் வாழநிர்ப்பந்திக்கப்பட்டனர். ‘தூக்குக் கயிறு மேலே தொங்கிக் கொண்டிருக்கும்போது, துப்பாக்கிகள் முன்னுக்கும் பின்னுக்கும் குறிபார்த்துக் கொண்டிருக்கையில் எப்படி ஒரு மனிதன் ஆறுதலாக, அமைதியாக இருக்க முடியும்?’ என்று வ.ஐ.ச. ஜெயபாலன் அந்த நாட்களில் ஒருதடவை என்னிடம் ஆற்றாமையோடு கூறியதே இப்பொழுது நினைவுக்கு வருகிறது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திற்தான் சேரனின் “எலும்புக்கூடுகளின் ஊர்வலம்“ என்ற கவிதைத் தொகுதியும் கடுமையான கண்டனத் தொனியுடன் வெளிவந்தது. அந்த அளவுக்கு ஜனநாயக மறுப்பும் நெருக்கடியும் தீவிரமடைந்திருந்தன. இத்தகைய அபாய நிலைமைகளின் காரணமாகப் பலர் நாட்டை விட்டுப் பெயர்ந்தனர். மரணத்துள் வாழ்வோம் கவிஞர்களிற் பலரும் வெளியேறிய சூழலை இங்கே புரிந்து கொள்ளவேண்டும். (அப்படிப் பெயரவேண்டிய நிலை பின்னர் றஷ்மிக்கும் வந்திருக்கிறது. தற்பொழுது றஷ்மி இலங்கையை விட்டு வெளியேறி லண்டனில் வசித்துக் கொண்டிருக்கிறார்).

இதேவேளை தொண்ணூறுகளில் பெரும்போக்காக இருந்த தேசியவாத அலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், அந்த இளம்பிராயத்திலேயே, தன்னுடைய எழுத்து முயற்சியின் தொடக்க காலத்திலேயே றஷ்மி, தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் என்பதன் விளைவே அவருடைய இன்றைய நிலைக்கான – சமனிலைக்கான அடித்தளமாகும். தொண்ணூறுகளில் அவர் எழுதுகிறார்,

‘யாருடைய வெற்றியின் ஆர்ப்பரிப்பிலிருந்தும்
தோல்விகளுக்கான சாக்குகளிலிருந்தும்
நான் ஒதுங்கியிருக்க விரும்புகிறேன்
எதிரியென்று – எவருடைய சாவைத் தொட்டும்
உள்ளுரக் களிகூரும் ஒருத்தன் நானில்லை.

‘கொலைகளுக்காய்ச் சொல்லப்படுகின்ற
யார்தரப்பு நியாயங்களும் வேண்டாம்
குடித்து வெறிதீர்த்த உங்கள் சத்ருக்களின் குருதியை
என்மீது கொப்பளிக்காதீர்கள்’ (கைசேதம்) என்று.

இவ்வாறு எழுதுவதன் மூலம் தன்னுடைய தளம் எதுவென்று றஷ்மி தெளிவாகவே காட்டிவிட்டார். அது சந்தேகமேயில்லை. அணிகள், கட்சிகள், கோஷங்கள் என்ற சிறுவட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாது விரிந்த மனிதாபிமானத் தளம், ஜனநாயகத் தளம். அவருடைய அடையாளம் மானுடப்பொதுமையே. அது சார்ந்த அறமே அவருடைய அடிப்படை. ஏறக்குறைய ஒரு சாட்சியின் நிலை.

றஷ்மி மேலும் தொடர்ந்து எழுதுகிறார்,

‘உங்களில் யாருடைய செய்திகளிலும்
இழந்த வாழ்வு பற்றிய
நம்பிக்கையூட்டும் தகவல்கள் இல்லை’

என்றும்

‘உங்கள் எவருடைய செய்திகள் குறித்தும் எனக்கு ஈடுபாடில்லை.
நான் எதையும் கேட்க விரும்பவில்லை.
இல்லை, இல்லை
விரும்பவில்லை@ விரும்பவேயில்லை’

என்றும்.

பெருந்திரள் ஊடகங்களும் அதிகார மையங்களும் உண்மைக்கு மாறான ஒற்றைப்படையான உலகத்தைச் சிருஷ்டித்து ஆட்சிநடத்தும்போது, அதிகாரம் செலுத்தும்போது மக்களுக்கான – மக்களில் ஒருவனாகிய தனக்கான – செய்திகள் ஒருபோதுமே வரப்போவதில்லை என்று சொல்லித் தனக்கான இன்னொரு தளத்தை – உண்மைத் தளத்தை – எதிர்த்தளத்தை உருவாக்க முனைகிறார். இதுவே அந்த மாற்று. இத்தகைய மாற்றுத் தளத்தைப் பலவகையிலும் நிர்மாணிப்பதே றஷ்மியின் நோக்கும் வேலையும்.

ஆகவே, இதுதான் றஷ்மி இயங்கிய தளமும் அவர் இப்பொழுது இயங்குகின்ற தளமும். அச்சத்தை எதிர்த்து எழுவது. வெளிப்படையாக எதிர்ப்பது. தொடர்ச்சியாக எதிர்ப்பது. மக்களின் நிலை நின்று, ஜனநாயக வழிநின்று எதிர்ப்பது. இதுவே அவருடைய இடமும் விதமும். ஆனால், இத்தகைய நிலைப்பாட்டுடன் சில பிற கவிஞர்களும் இயங்கியிருக்கிறார்கள். அப்படியானால், அவர்களிடமிருந்து றஷ்மி எப்படி வேறுபடுகிறார்? எவ்விதம் தனித்துத் தெரிகிறார்?

1. துயரமும் துயரத்துக்குக் காரணமான நிலைமைகளுமே கூடுதலாக றஷ்மியைக் கவனத்திற்குட்படுத்துகின்றன. தன்னுடைய காலச்சூழலில் வாழும் மனிதர்கள் அரசியல் ரீதியாகவோ இயற்கையின் சீற்றத்தாலோ துயருற நேர்கையில் அந்தத் துக்கத்தைத் தன்னுடைய துக்கமாக எடுத்துக் கொள்கிறார். எந்த நிலையிலும் இயல்பைச் சிதைப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எத்தகைய வன்முறையினாலும் விளையும் மனிதத் துயரில் தன்னைப் பொருத்திக் கொள்வது.

2. சார்பற்ற நிலையைப் பேணுவதே அவருடைய அக்கறை. இங்கே சார்பெனப்படுவது, துருவங்களைச் சார்ந்திருப்பது – தரப்புகளைச் சார்ந்திருப்பது என்ற பொருளில் விளக்கப்படுகிறது.

3. பொது அபிப்பிராயமாக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகார மையங்களின் சார்பு நிலைகளை உடைப்பது.

4. தான் சார்ந்த சமூகங்களின் பொதுப்போக்கை அனுசரிக்க வேண்டும் என்ற கடப்பாட்டைக் கடந்து, தனித்து நின்றேனும் தன்னுடைய அறநிலைப்பாட்டைப்பேண முற்படுவது.

5. வன்முறை வடிவங்கள் மாற மாற சலியாது அவற்றைப் பின்தொடர்ந்து அடையாளப்படுத்துவது. இந்த இடத்தில் வன்முறைக்கு எதிரான போராளியாகவே றஷ்மி தொழிற்படுகிறார்.

6. தன்னுடைய கவிதைகளின் மூலம் எதிர்ப்பியக்கமொன்றை நிர்மாணிப்பது. இது உணர்நிலையிலானது.

7. தன்னுடைய அனுபவங்களையும் சனங்களின் அனுபவங்களையும் ஒருங்கிணைத்துப் பொதுமைப்படுத்துவது. அல்லது அதற்குள் ஒரு பொது நிலையைக் காண்பது. அதைப் புதிய புதிய சொல்முறைகளினூடாகச் சொல்ல முயற்சிப்பது. மொழியை வௌ;வேறு சாத்தியப்பாடுகளை நோக்கி நகர்த்துவது. அதன் இலக்கண விதிமுறைகளையே சிலவேளை மீறியோ தகர்த்தோ தான் சென்று சேரவேண்டிய இடத்தைச் சேர்வது.

8. மேலும் சேரன் சொல்வதைப் போல, ‘மொழியை உடைத்தும் நொருக்கியும் புதுப்பித்துத் தருவது றஷ்மியின் கவிதையியலின் ஒரு கூறாக இருக்கிறது. புணர்ச்சியில் ஈடுபாடும் பிரிவின் - பிரிப்பின் தேவையும் வாழ்க்கையைப்போலவே கவிதை மொழிக்கும் அவருக்கு முக்கியமாக இருக்கிறது. எழுவாயைத் தலைகீழாக்குவதன் மூலமும் புதிய ஒத்திசைவொன்றைக் கவிதையில் ஏற்படுத்த முயல்கிறார் றஷ்மி’ என்பதும்.

இப்படிப்பல. இவ்வாறு நோக்கும்போது றஷ்மி இன்று ஈழக்கவிஞர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக மாறியுள்ளார். பொதுவாகத் தமிழ்க்கவிதைகளிற்கூட றஷ்மிக்கான இடம் ஒன்று உருவாகியுள்ளது. இது அவர் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக உணர்ந்துள்ள முறைமையினாலும் அவற்றைச் செம்மையடர்த்தியாக வெளிப்படுத்துவதனூடாகவும் ஏற்பட்டது. முக்கியமாக ஆயிரங்கிராமங்களைத் தின்ற ஆடு, ஈ தனது பெயரை மறந்து போனது ஆகிய காவியப் பண்புடைய நெடுங்கவிதைகளின் மூலம் அவர் கவனிப்புக்குரிய ஒருவராகியுள்ளார்.

00

ஈழம் என்றால் வன்முறையைத் தன்னுடைய அகத்திலே கொண்டது. துயரத்தைத் தன்னுடைய மடியிலே வைத்திருப்பது என்ற பதிவு இன்று வலுவாகிவிட்டது. ‘கூகிளி’ல் ஈழத்தமிழரைப் பற்றிய தேடல்களை அல்லது இலங்கையின் தமிழ் பேசும் மக்களைப் பற்றிய தேடல்களைச் செய்தால், துயரத்தின் பெரும்பரப்பொன்றையே அதிற் காணமுடியும்.

அந்த அளவுக்கு, இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை அனர்த்தமயமாகியுள்ளது. அவ்வாறே ஈழக்கவிதைகளும் துக்கத்தின் நிழலையும் எரியும் நெருப்பையும் காயாத கண்ணீரையும் குருதியையும் கலவையாகக் கொண்டவை என்பது பகிரங்கமானது. ஆனால், அவற்றை றஷ்மியிடமிருந்து அறியும் விதம் வேறானது. அவர் தன்னுடைய இடையறாத இயக்கத்தின் மூலமும் ஒழுங்கு படுத்தப்பட்ட பிரக்ஞையின் வழியாகவும் சமகால ஈழநிலைவரத்தைப் பற்றிய ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளார். இதன்மூலம் ரஷ்மியின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும்போது அதில் ஒரு நெடிய கவிதைக்கான அடிப்படைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதில் ‘ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு’ விதிவிலக்கு. அது தனியே ஒரு நெடுங்கவிதையாக அமைந்துள்ளது.

சுனாமியைப் பற்றிய, சுனாமியினால் ஏற்பட்ட மனிதச் சிதைவுகளைப் பற்றிய மாறுபட்ட நீள் விவரிப்பு இது. என்னுடைய அறிதலின்படி சுனாமியின் தாக்கத்தை இந்த அளவுக்குக் கூர்மைப்படுத்தி, மையப்படுத்தி எழுதிய முக்கியமான கவி றஷ்மியே. அதை றஷ்மி ஒரு அவல நாடக நிகழ்வாக்கியிருக்கும் விதம் ஆச்சரியம் தருவது. முதற்காதை, இடைக்காதை, கடைக்காதை என்று மூன்று பிரிவுகளில் சுனாமிக்கு முந்திய நிலை, சுனாமியின் போதான நிலை, சுனாமிக்குப் பிந்திய நிலை என்ற மூன்று நிலைகளில் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான போராட்டத்தையும் அதன் விளைவுகளையும் மனித வாழ்வின் அபத்தத்தையும் சொல்லி விடுகிறார் றஷ்மி. இதை அவர், 230 வரிகளுக்குள் 13 தலைப்புகளிலான கவிதைகளில் சொல்கிறார். உண்மையிலேயே இது ஆச்சரியமான ஒன்றே. இதை ஒரு காவியம் என்றே கூறுவேன். இதை றஷ்மி தொடங்கும் விதமே ஈர்ப்புக்குரியது. கூடவே றஷ்மி என்ற கவிஞனின் அடையாளத்தைக் குறிப்பதுமாகும்.

சுனாமி அனர்த்தம் நிகழப்போகும் அன்றைய நாளை அவர் அறிமுகப்படுத்துகிறார் - ‘முதற்காதை’யில் வருகிறது இந்தப் பகுதி – ‘இயேசு பாலனுக்கு ஒரு நாள் வயதாயிருந்த காலை’. ஒரேயொரு வரியில் வியப்பூட்டும் விதமாக அப்படியே அந்த நாள் சித்திரமாக்கப்படுகிறது.

இந்த நாளில் - ‘இயேசு பாலனுக்கு ஒரு நாள் வயதாயிருந்த காலை’ யில், றஷ்மி தன்னுடைய கவிதைகளில் குறிப்பிடும் அதே பிரதேசத்தில் அதே நேரத்தில் நானும் நின்றேன். சுனாமியின் அலைகள்,

‘எக்கி மூச்சிழுத்து உள்வாங்கி நீரை – தன்
மேனி திறந்து காட்டி மயக்கி வானளவு
மேலெழுந்து கரும் நிறத்தில் காறி
உமிழ்ந்து சூழ்கின்றது கடல்

.............................

தென்னை மலைத்துக்
குலைகளைத் தவறுகிறது

நீராலான ராட்சதப் பாம்புகள்
நுழைந்து துரத்துகின்ற ஊருக்குள்
போட்டது போட்டதாய்க் கிடக்க
உயிரை மட்டும் காவிக்கொண்டு ஓடுகிறோம்.....

என அலறியடித்துக்கொண்டோடும் ஒருவனாக நானும் நின்றேன். அன்று காலை (இலங்கையின் கிழக்கேயுள்ள) கல்முனை நகரில் (முதல் நாளிரவு அக்கரைப்பற்றுக்குச் செல்லும்போது படையினர் தடுத்திருக்காது விட்டிருப்பின் றஷ்மி குறிப்பிடும் அதே இடத்தில் நானும் சுனாமியிற் சிக்கியிருக்கக்கூடும்) நண்பர் உமா வரதராஜனோடு கதைத்தபடி, இன்னொரு நண்பரான நற்பிட்டிமுனை பளீலுடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த போதே கடற்கரையிலிருந்து அலறியடித்துக்கொண்டு சனங்கள் ஓடினர். அந்தக் கணத்தில் நானும் வரதனும் சொல்லிக் கொள்ளாமலே பிரிந்தோம். சொல்லிக் கொள்வதற்கான அவகாசம் இருக்கவில்லை.

‘ஓடுகிறோம் ஓடுகிறோம்....
நிர்ணயிக்கப்படாத இலக்கு
ஓடுகிறோம்....’

விதி யாரைத்தான் விட்டது.

சற்று நேரத்துக்குப் பிறகு பார்த்தால், றஷ்மி சொல்வதைப்போலவே,

‘ஒரு நொடிதான்
எல்லாம் இருந்தது – பிறகு
எதுவும் இருக்கவில்லை’

இப்போது ‘ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு’ என்ற றஷ்மியின் கவிதைகளைப் படிக்கும்போது அன்று கிழக்கின் கடலோரக் கிராமங்களிருந்த அந்தக் காட்சியும் அந்த நிலையுமே மனதில் கொடுந்தீயாக எழுகின்றன.

றஷ்மி சொல்வதைப்போல,

‘நான் மனிதர்களைக் கண்டேன்

உயிரை ஒரு கையிலும்
மாதக் கணக்கேயான சிசுவை மற்றதிலுமாய்
இளம் தாயொருத்தியைக் கண்டேன்
கடலை வெறித்திருந்த முதியவரைக் கண்டேன்
கவனிக்க ஆளின்றிஅ ழும் குழந்தையைக் கண்டேன்
பெயர்களை அழைத்துக் கொண்டே
அரற்றி ஓடுகிறவர்களைக் கண்டேன்
அழ யாரும் எஞ்சியராத குடும்பங்களைக் கண்டேன்
இனி
அழவே முடியாதவர்களைக் கண்டேன்....’

சுனாமியினாலும் போரினாலும் சிதைந்த மனிதர்களை நானும் கண்டேன். இரண்டும் ஒரே நிலையிலான அழிவுகளையே தந்தன. ஒரு விதமான துயரத்தை, ஒரே மாதிரியான அவலத்தை....

ஆகவே அரசியற் கவிதைகளுக்கு நிகரான அல்லது பிற கவிதைகளுக்கு நிகரான இடத்தை றஷ்மியின் சுனாமியைப் பற்றிய கவிதைகளும் தாக்க விசையுடனேயே உள்ளன.

அதேவேளை றஷ்மியின் ஏனைய பெரும்பாலான கவிதைகளும் ஒரு நெடுங்கவிதையின் பகுதிகளே. அல்லது நெடுங்கவிதை ஒன்றை உருவாக்கும் எத்தனங்களே. ‘ஈ’ தனது பெயரை மறந்து போனது என்ற நான்காவது தொகுதிக் கவிதைகள் இதை இன்னும் வலுவாக்குகின்றன.


00

பெரும் அதிகார மையங்களை எதிர்கொள்கிற சாதாரண கவி, தன்னுடைய ஆன்மத் தளத்தைத் பலமாக்கிக் கொண்டு, அதையே ஆயுதமாக்கி முன்னகர்ந்து பகிரங்க வெளியில் விரிவது இயல்பு. ஆனால், இது இலகுவானதல்ல. அபாயங்கள் நிறைந்தது. எனவேதான் இது முக்கியமாகிறது. இத்தகைய காரியவழியைத் தமதெனக் கொண்டவர்கள் மட்டுமே காலவெளியில் நீக்கமற நிற்கக்கூடிய வேரினைக் கொள்கின்றனர். றஷ்மியின் வேர் அப்படித்தான் காலவெளியில் நீக்கமறும் விதமாக நிலைகொள்கிறது.

இதேவேளை றஷ்மி தான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரையில் ஏதோ காரணங்களின் நிமித்தமாக மௌனமாகவோ, உறங்குநிலையிலோ, மறைவு நிலையிலோ இருக்கவில்லை. இதுவும் முக்கியமானது. முன்னர் எழுதிய பலர், பிரகடனங்களைச் செய்த பலர் பின்னர் உறங்கு நிலைக்குச் சென்று விட்டனர். அல்லது உடைந்து சிதறி விட்டனர். அல்லது மறைந்து நிற்கின்றனர். அல்லது மௌனமாகிவிட்டனர். அல்லது திசைமாறிவிட்டனர். ஆனால், றஷ்மி இன்னும் கலகக்காரனாகவே இருக்கிறார். தொடர்ந்து எழுதுகிறார். என்றபடியாற்தான் அவருடைய ‘ஈ’ தனது பெயரை மறந்து போனது என்ற புதிய தொகுதியை ஈழப்போராட்டம் அதனுடைய யுத்தமுன்னெடுப்பில் வீழ்ச்சியடைந்திருக்கும் இந்தத் தருணத்தில், அரசியல் மீள் பார்வைக்குரிய ஒரு ஆவணமாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களின் இருப்புக்கான செயற்பாடுகளைப் பற்றிய விவாதங்களுக்குரிய அடிப்படைகளைச் சுட்டும் வரலாற்றுப் பார்வையொன்றை றஷ்மி இப்போது முன்வைத்துள்ளார்.

ஆகவே, அவருடைய இதுவரையான கவிதைகளை வைத்துப் பார்த்தாலும் சரி, அவருடைய தொகுதிகளின் பெயர்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தாலும் சரி, அவருடைய முதற் தொகுதிக் கவிதைகளில் இருந்து இறுதித் தொகுதிக் கவிதைகள் வரை (காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள் - 2002, ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு – 2005, ஈதேனின் பாம்புகள் - 2010, ஈ தனது பெயரை மறந்து போனது – 2012 ) இதனைத் தெளிவாக எவரும் பார்க்க முடியும்.

முக்கியமாக றஷ்மி தன்னுடைய தொகுதிகளுக்கான தலைப்பையிடுவது விசேச கவனத்திற்குரிய ஒன்று. முதற்தொகுதியின் தலைப்பு - காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள். மரணம் சுவீகரித்துக் கொண்ட வாழ்வை உள்ளடக்கி இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் றஷ்மி. கூர்மை, செறிவு, நுண்மை ஆகிய மூன்று அம்சங்கள் ஒன்றிணைந்து இத்தகைய ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுள்ளன.

அடுத்த தொகுதியின் தலைப்பு - ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு. 2004 இல் இலங்கையில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தம் பல்லாயிரக்கணக்கான மனிதர்களையும் பல நூறு கிராமங்களையும் தின்றதை வெளிப்படுத்தும் விதமாகச் செறிவூட்டப்பட்டுள்ளது. சுனாமி பற்றிய செறிவான படிமத்தை இதைவிட வேறெவரும் இதுவரை வெளிப்படுத்ததாகத் தெரியவில்லை. குறிப்பால் உணர்ந்துவதில் தன்னுடைய திறனை வெளிப்படுத்துவதில் அக்கறையுள்ளவர் தானென்பதை இதன்மூலம் நிரூபிக்கிறார் றஷ்மி. இதன்மூலம் அவர் தன்னைத் தனித்துக் காண்பிக்கிறார்.

மூன்றாவது தொகுதி- ஈதேனின் பாம்புகள். ஈதேன் தோட்டத்தின் பாம்பு வகித்த பாத்திரமே இன்றைய உலகின் துயரம் என்பது ஐதீகம். அந்த ஐதீகக் கருவைத் தன்காலத்திய நிலைமைகளிற் கையாண்டு மனித வரலாற்று விதியின் துயரமுகத்தைப் புலப்படுத்துகிறார். சாத்தானின் வலையில் வீழ்ந்த உலகத்தின் துயரம். பாவத்தைத் தின்ற உலகத்தின் நிலைபற்றிய – விதிபற்றிய விவரிப்பு.

இப்போது வந்திருப்பது, ஈ தனது பெயரை மறந்து போனது . இந்த ‘ஈ’ நாம் படித்த கதையொன்றில் வரும் ஈ அல்ல. ஈழம் என்ற ஈ. ஆனால், ‘ஒரு ஈ தனது பெயரை மறந்து போனது’ என்ற கதையொன்றின் உட்சாரத்தைத் தனக்கிசைவாக எடுத்துக் கொண்டு, தன்முன்னேயிருக்கும் நெருக்கடியைப் பேசுகிறார் றஷ்மி. இதைப்பற்றி இந்தத் தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கும் எஸ்.கே. விக்கினேஸ்வரன் தெரிவிப்பதைப் பின்னர் பார்க்கலாம். ஆனால், இவ்வாறு றஷ்மி தன்னுடைய தொகுதிகளுக்குத் தலைப்பிடுவதைப்போலவே, கவிதைகளை ஒழுங்கமைத்திருப்பதும் பிரக்ஞைபூர்வமானது.

முக்கியமாக நான்காவது தொகுதியின் கவிதைகள் தமக்கிடையில் ஒருங்கிணைந்து ஒரு காவியத்தன்மையைக் கொண்டுள்ளன. இந்தக் காவியத்தின் மையத்தில் ஈழப்போராட்டத்தின் போக்கைப்பற்றிய அறிக்கையிடலும் விமர்சனமும் இந்தக் காலத்தில் சனங்கள் பட்ட துயரங்களின் சாட்சியங்களும் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் நான்கு பிரிவுகள் உண்டு. இந்த நான்கு பிரிவுகளிலும் உள்ள கவிதைகளின் தலைப்புகளே மேற்சொன்ன விசயங்களை இலகுவிற் புலப்படுத்துகின்றன.

00

கொந்தளிப்புகள் றஷ்மியை அலைக்கழிக்கின்றன என்று கண்டோம். இலங்கையின் கிழக்கே உள்ள (முஸ்லிம்) கிராமமொன்றில் பிறந்து வளர்ந்த றஷ்மி, தன்னுடைய கிராமமும் அங்கிருந்த மனிதர்களும் சூழலும் வாழ்க்கையும் சிதைக்கப்பட்டதை நேரிடையாகப் பார்த்தவர். இவையெல்லாம் றஷ்மியின் நினைவுப் பரப்பையும் அனுபவப் பரப்பையும் நிரப்பி விடுகின்றன. சிலசமயம் அந்த நினைவுப்பரப்பைச் சிதைத்தும் விடுகின்றன. புற நெருக்கடிப் பிராந்தியத்தை விட்டு அவர் விலகியிருந்தாலும் அகநெருக்கடிகளின் தீவிரத்திலிருந்து அவரால் விலக முடியவில்லை. ஆகவே யுத்தத்திற்குப் பிறகும் நிலைமைகளின் குலைவை – அவை இன்னும் சீரடையா நிலையை அவர் உணர்கிறார். எனவே, இதற்குக் காரணமான இனவாத அரசியலை, அந்த இனவாதப் பொறிக்குள் சிக்கிக்கொண்ட ஈழப்போராட்டத்தை அவர் இப்போது எடுத்தாள்கிறார்.

‘ஈ தனது பெயரை மறந்து போனது’ என்று இறுதிய வந்திருக்கும் தொகுதிக்குப் பெயரிட்டதிலேயே றஷ்மியின் இந்தப் பிரக்ஞை வெளிப்படுகிறது. இதைப் பற்றி மிக அழகாக இந்தத் தொகுதிக்கு முன்னுரை எழுதிருக்கும் எஸ்.கே.விக்னேஸ்வரன் சொல்வதைப் பார்க்கலாம்.

‘ஈழப்போராட்டத்தின் இன்றைய நிலைபற்றிய அவரது உணர்வு அல்லது கருத்து மிகவும் எளிமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் அவரது (றஷ்மியின்) சொந்த வார்த்தைகளில் அல்ல. ஆரம்பப் பள்ளியில் படித்த ஒரு கதையின் தலைப்பின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது அது.

‘ஈ தனது பெயரை மறந்து போனது’.

ஒரு ஈ தனது பெயரை மறந்து போனது என்ற அந்தக் கதையில் உள்ள ‘ஒரு’ வை எடுத்துவிட்டு, ‘ஈ’ யை மேற்கோள் குறிக்குள் இட்டது மாத்திரமே அவர் செய்தது மாத்திரமே அவர் செய்திருக்கும் மாற்றம். மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு, இந்தத் தலைப்பு அத்தனை முக்கியமான ஒன்றாகப் படாமற் போகலாம். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கையில் பெயரை மறந்து போதல் என்பது, மிகவும் ஆபத்தான ஒரு விடயம் என்பது தெரியவரும்.

ஆம், அந்த ‘ஈ’ வெறும் ஈ அல்ல. அது ஈழப்போராட்டம் - உண்மையில் அது தனது பெயரை மறந்து விட்;டது. தான் யார் என்பதை மறந்து விட்டது. தான் என்ன செய்யவென உருவானேன் என்பதை மறந்தது. தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை மறந்தது. தான் தன் பெயரை மறந்ததால் தன்னை மறந்தது. இதனால், தான் யார் யாராலோவெல்லாம், எவையெவையாலோ எல்லாம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அறியாதிருந்தது. தனது போக்கு, திசை, தரிப்பிடம் எதையும் அறியாதிருந்தது. தனது பெயரை தான் மறந்து விட்டேன் என்தையும் கூட அது அறியாதிருந்தது. இதனால், அது தன் பெயர் என்ன என்ற கேட்டு யாரிடமும் போகவில்லை. அதனால்தான் அதன் பெயரை ஞாபகப்படுத்த நினைத்தவர்களை எல்லாம் கூட அது ஒதுக்கித் தள்ளியது. இற்றைவரை அது தான் யார் என்பதை நினைவுக்குக் கொண்டு வந்ததாகவும் தெரியவில்லை.

எவ்வளவு அற்புதமான மதிப்பீடு இது.

மக்களின் வாழ்வை நேசிக்கின்ற கவிஞனின் பெருமூச்சமாக வெளிப்படுகிற மதிப்பீடு இது.’

‘விக்கி’யின் இந்த அறியப்படுத்துகை, றஷ்மியை, அவருடைய இந்தக் கவிதைகளை மேலும் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன. மிக எளிமையான முறையில் விவரிக்கப்பட்டிருக்கும் மையப் பொருள் இது. பொதுவாக படைப்பொன்றை அணுகுவதற்கு முன்னான அனுமானங்களும் அறிமுகங்களும் அந்தப் படைப்பைச் சில எல்லைக்குள் சுருக்கி விடுவன என்ற அபிப்பிராயம் இன்று வலுவானது. அதிலுள்ள உண்மையும் ஆழமாக உணரப்படுவது. ஆனால், இங்கே அந்த நிலை மாறியிருக்கிறது. இங்கே விக்கியின் காணுகையானது றஷ்மியை அறிவதற்கும் அணுகுவதற்கும் உதவுகின்றன. பறக்கும் சிறகுக்கு இசையும் காற்றைப்போல.

ஆகவே, ‘ஈ’ தனது பெயரை மறந்து போனது என்ற குறிப்புணர்த்தலின் மூலமாக, ஈழப்போராட்டத்தின் திசைமாற்றத்தை, திசைதவறுதலைத் தன்னுடைய கவிதையாக்கத்தின் மையப் பொருளாக்கி, முற்றிலும் விமர்சனமாகவும் சுயவிமர்சனமாகவும் படைத்திருக்கிறார் றஷ்மி. ஆனால், இந்தக் கவிதைகளை அவர் போர் முடிந்த பின்னரான இந்தக் குறுகிய காலப்பகுதியில் அவசர அவசரமாக எழுதி, போருக்குப் பிந்திய சூழலில் வலுவான குரலாக மேற்கிளம்பும் சுயவிமர்சனம், விமர்சனம், மீளாய்வு என்ற அடிப்படைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கவில்லை. ஏற்கனவே நடந்து கொண்டிருந்த வரலாற்று நிகழ்ச்சிகளின் போது அந்த நிகழ்ச்சிகளில் சிக்கியும் சிதம்பியும் வாழமுடியாமல் வாழ்ந்து கொண்டிருந்த சனங்களை மையப்படுத்தி, அவர்களோடு ஒருவராக இருந்து, உணர்ந்து கொண்ட விசயங்களை அவ்வக் காலப்பகுதியில் எழுதியிருக்கிறார். இப்பொழுது அவற்றை ஒழுங்கு முறைப்படுத்தித் தொகுத்திருக்கிறார். அப்படித் தொகுக்கும்போது அது ஒரு வரலாற்று ஆவணமாகவும் ஈழப்போராட்டத்தின் தொடர்நிகழ்ச்சிகளின் ஒழுங்கைக் காட்டுவதாகவும் அதன் மீதான விமர்சனமாகவும் இது அமைகிறது. இதை அவர் சாத்தியப்படுத்திய முறைமை முக்கியமானது. குறிப்பாக மரணத்தை முன்மொழிந்த அரசியல் மரணக்குழியிலேயே வீழ்ந்திருக்கிறது என்ற உலகறிந்த உண்மையை மேலும் சாட்சிபூர்வமாக வலுவாக்கியுள்ளார் றஷ்மி.

‘...இறுதிக் கிரிஜைகளுக்காக எதையும் எஞ்ச விடாத யுத்தம்
வெற்றுச் சவப்பெட்டிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தது....’

இந்த நிலை தமிழ்த்தரப்புக்கும் சிங்களத்தரப்புக்கும் ஒன்றுதான். ஏன் முஸ்லிம்களும் இத்தகையை ஒரு நிலையைத்தான் யுத்தத்தின் போது சந்தித்தனர்.

‘காரைதீவு என்றால் வாளையன் தைலம்
கழுதாவளையில் நீர் வெற்றிலை
மருதமுனையில் கைத்தறிச் சாறம்
களுவாஞ்சிக்குடியில் முறிவுக்குப் பத்து
நாற்பதாம் கட்டையில் முறிவுக்குப் பத்து

........

எல்லா இடங்களிலும் வதை முகாம்கள்
ஒரு ஊர் தவறாமல் சவக்கிடங்கு
ஒரு தெரு விடாமல் சாவோலம்....

எல்லா இடங்களிலும்
எல்லோரும் கொன்றனர்
எல்லாவற்றையும்....’

விடுதலை தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் சமூகங்களின் சிதைவுடன் மரணக்குழியில் வந்து வீழ்ந்திருப்பதை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கூடாக வெளிப்படுத்தப்படுகின்றன - இந்தக் கவிதைகளில்.

போருக்கஞ்சிப் புலம் பெயர்ந்தோரின் உளவியற் தொழிற்பாடுகள் ஈழப்போராட்டத்தில் ஏற்படுத்திய – ஏற்படுத்தி வரும் தவறான விளைவுகளை றஷ்மி காணும் விதம் கவனத்திற்குரியது.

‘குற்றவுணர்வும் குருட்டு விசுவாசமும்
இரத்தத்தை விற்றுப் (பணத்தை)
போருக்கு அனுப்பிவைத்தது...’

புலம்பெயர் தேசத்தில் இந்த நிலை என்றால், இங்கே களத்தில் -

‘இறுதியில்
பிடியைத் தளர்த்தாத ஒரு தாய் வயிற்றில்
எட்டி உதைத்துக் குழந்தைகளைப் பிடுங்கிச் செல்கின்றனர்

முறத்தால் அடித்து விரட்ட முடியாக் கையறு நிலை.

சாவின் கையில் பிடித்துக் கொடுக்கவா என
முலை நோக அடித்துக் கதறும் தாயிடம் ஒரு கேள்வியிருந்தது
அழுகையின்போது வறண்ட தொண்டையில் தொக்கி
கண்ணீருடன் விழுங்கப்பட்ட ஒரு கேள்வி

குருதி ஆற்றின் இடை தன் குழந்தையின் பிரேதத்தில்
அரற்றியவாறு ஒருநாள் அவள் அதைக் கேட்டாள்’

-இந்த நிலை. இந்த யதார்த்தம். இதில் றஷ்மி ஒரு முக்கியமான படிமத்தை – ஒரு விசயத்தை நமக்குக் காண்பிக்கிறார். புறநானூற்றுக்காலத்தில் முறத்தால் புலியை விரட்டினாள் பெண்ணொருத்தி. அன்று போருக்குப் போவதற்காக வீரத்திலகமிட்டுத் தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர் தாய்மார்.

ஆனால், இன்றோ எல்லாம் வேறாகி விட்டன. இன்று இன்னொரு புலி அவளுக்கு முன்னே வந்து நிற்கிறது. முறத்தினால் இந்தப் புலியை விரட்டி விட முடியாது. அவளால் இதை எளிதில் விரட்டி விடவும் முடியவில்லை.

மட்டுமல்ல, இப்போதோ அவள் தன்னுடைய பிள்ளையைப் போருக்கு அனுப்பத் தயாராக இல்லை. ஆனால், அவள் மறுத்தாலும் அவளுடைய பிள்ளை அவளிடமிருந்து பிடுங்கிப்பட்டுச் செல்லப்படும்.

வரலாற்றின் தடங்களில் இருந்தே வரலாற்று முரண்களை மிக நுட்பமாகக் கண்டு வெளிப்படுத்தும் இந்த அசாத்தியம் றஷ்மியின் திறன். தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தும் தீவிர நிலையாளர்கள் தங்களின் கீர்த்தி மிகு பொற்காலங்களை – வீர யுகங்களை - ப் பற்றிக் கொண்டிருக்கும் கற்பிதற்களைச் சிதறடிக்கிறார் றஷ்மி.

இதைப்போல இன்னொரு இடத்தில்

‘நான் பிறன் ஆன காலம்’ என்று முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தையும் அந்நியப்படுத்தலையும் அவர் உணர்ந்துள்ள விதம் நம்மைத் துணுக்குற வைப்பது. தலைகளைக் குனியவைப்பது.

‘ஒரு சிறு பொதி அளவு பாரம்பரியம்
ஒரு சில பணத்தாள் முதுசொம்
ஒரு பகல் ஒரு இரா அவகாசம்...
அவ்வளவுதான் -
வருடா வருடம் அந்த நாளைக்
கண்ணீரினால் நினைவு கொள்ளும்படி செய்தனர்
விடுதலை வீரர்கள்...’

மேலும் இன்னொரிடத்தில் றஷ்மி குறிப்பிடுகிறார் -

‘எப்படி உங்களின் போர்
எங்களுக்குமுரியதாகவில்லையோ
அப்படியே
உங்களின் சமாதானமும்...’ என்று.

இவ்வாறு நாம் தாக்கமுள்ள இடங்கள் நிறைய உண்டு, ஈ தனது பெயரை மறந்து போனது என்ற தொகுதியில். வழிமாறிய பயணத்தில் துயரங்களும் அலைக்கழிவுகளும் ஏராளம் என்பது உண்மையே.

போராட்டத்தின் வெற்றியை, அதில் ஏற்பட்டிருக்க வேண்டிய சமூகங்களின் மலர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சிப் பட்டிருக்க வேண்டிய கவி, இவ்வாறு புலம்பும்விதியும் வதையும்நிலையும் கொடுமையானதே. அவலத்தைப் பாடும் கொடுமை ஒரு கவிக்கு ஏற்புடையதேயல்ல. ஆனால், அதுதான் உலகவிதியாக இருக்கிறது பெரும்பாலும். ஈழப்போராட்டத்தின் விதியும் எங்களுடைய கதியும் இதுவாகத்தான் உள்ளது.

00

ஈழப்போராட்டத்தின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் வீழ்ச்சிக்குப் பின்னரும் பலவிதமான கவிதைகள் உள்ளன. அவற்றைப் பலர் பல தசாப்பங்களாக எழுதி வருகின்றனர். அரச பயங்கரவாதத்தின் கோரத்தை, அவற்றை எதிர்க்கும் மனவுணர்வை, விடுதலைக்கான வேட்கையை, அந்த வேட்கையின் வழியான எழுச்சியை, எழுச்சியின் விளைவான செயல்களை, தேசியவாதத்தினை, அந்தத் தேசியவாதங்கள் சுருங்கிக் குறுந்தேசியவாதங்களாக உருச்சிதைந்தமையை, அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களை, சமூகங்களின் சிதைவை, ஜனநாயக மறுப்புகளை, ஜனநாயக மறுப்புகளுக்கெதிரான குரல்களை எனப் பலவகையில் இந்தக் கவிதைகள் அமைந்துள்ளன.

1980 களுக்கும் 1990 களுக்கும் இடையில் ஈழக்கவிதைகள் நிறையப் பண்பு மாற்றத்தைப் பெற்றன. 80 களில் அரச பயங்கரவாதமும் அதற்கெதிரான உணர்வுகளும் விடுதலை வேட்கையும் முக்கியம் பெற்றிருந்தன என்றால், 90 களில் அவை விடுதலை இயக்கங்களின் ஜனநாயக மறுப்புகளையும் எதேச்சாதிகாரப் போக்குகளையும் கண்டிக்கும் நிலைக்கு வந்திருந்தன. 2010 இல் அவை யுத்தத்தினால் ஏற்பட்ட பேரிழிவையும் போராட்டத்தின் சீரழிவையும் தேசியவாதமானது அபாயகரமான நிலையை நோக்கித்தன்னை உருவாக்கியிருப்பதையும் பேசத் தொடங்கியிருக்கின்றன. இவை எல்லாமே அந்தந்தச் சமகால நிகழ்ச்சிகளின், நிலைமைகளின், அனுபவங்களின் வழியான வெளிப்பாடுகளே. ஆகவேதான் ஈழக்கவிதைகள் பெரும்பாலும் நேரடியான அரசியற் தன்மையைக் கொண்டனவாக அமைகின்றன. அப்படி அமைய வேண்டிய நிலைக்குள்ளாகின்றன. கவிதைகள் மட்டுமல்ல எழுத்தின் பிற வடிவங்களுக்கும் இதுதான் நிலைமை. அண்மையில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளும் நாவல்களும் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

நாம் இதுவரை பேசியமாதிரி, றஷ்மியின் அரசியல் ஈடுபாட்டெல்லைக்கு அப்பால், அவருடைய கவனம் பொதுவாகவே மானுட அழிவுகளுக்கு எதிராக இருக்கிறது. அரசியற் தவறுகளையும் அவற்றின் விளைவுகளையும் கடுமையாக எதிர்க்கும், விமர்சிக்கும் றஷ்மி இயற்கையின் வஞ்சனையைக் குறித்தும், அதனால் ஏற்பட்ட சீரழிவைக்குறித்தும் அக்கறைப் படுகிறார். அதே சீற்றமும் துக்கமும் அவருக்கு எல்லா இடத்திலும் ஏற்படுகிறது. நம்பிய அரசியல் எவ்வாறு அந்த மக்களைப் பலியெடுக்கிறதோ அவ்வாறே நம்பிய கடல், தாய்மடியாக இருந்த கடல் அந்த மக்களைப் பலியெடுக்கிறது. இந்த நிலையை றஷ்மியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் றஷ்மி, ஒரு சுருங்கிய பரப்பிற்குள் நிற்காமல் காதல் தொடக்கம், இயற்கை மீதான ஈடுபாடு, அவர் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த களம் வரையான லயிப்பு வரையில் பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால், எல்லாவற்றிலும் ஒரு துயரம் இழையோடுகிறது. ஒரு மெல்லிய அமுக்கம், ஒரு மெல்லிய இருள் றஷ்மியின் கவிதைகளில் படிந்திருப்பதைப் பெரும்பாலும் காணமுடியும். வாழ்வு சிதைந்து, சூழல் பாழடைந்து, இயல்புநிலை அழிந்த துயரத்தைப் பகிர்ந்து செல்கிறார் றஷ்மி.

இங்கே றஷ்மியின் இதயம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். ஒரு மகத்தான கலைஞனின் ஆன்மா தொழிற்படும் விதம் நிச்சயமாக மனிதாபிமானத்தில் அடிப்படையிற்தான். அந்த மனிதாபிமானத்துக்கு இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற பேதங்கள் கிடையாது. ஆகவே, நாம் றஷ்மியை முக்கியமான ஒரு கவியாக அடையாளம் காணுமிடம் இங்கேதான் முதன்மையடைகிறது. இந்த முதன்மையைப் பெறாமல் ஒரு கவிஞரால் ஏனைய அம்சங்களில் கவனத்தைப் பெற முடியாது. அறம் பிழைத்தவர்க்கு எல்லாமே கூற்று என்பது அறிதலுண்மையாகும். அடிப்படையில் சிதைவுண்டானால், அலங்காரம் பாழ் என்பது இதை மேலுமுணர்த்தும். றஷ்மி தன்னுடைய அடிப்படையை வலுவாகவே நிர்மாணித்துள்ளார்.

00

றஷ்மியின் இடம் இந்த அடிப்படையின் மூலமாக வலுவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடிப்படையுடன் மட்டும் ஒரு கவிஞர் தன்னை மட்டுப்படுத்தி விடவும் கூடாது. அதிலேயே தன்னைத் தேக்கிவிடவும் கூடாது. அதற்கப்பால் நகரவேண்டும். அதையே றஷ்மி செய்கிறார்.

தொடக்ககாலக் கவிதைகளிலேயே (சரிநிகர்க்காலம்) தன்னுடைய அடையாளத்தைத் தனித்துக் காட்டத் தொடங்கிய றஷ்மியிடத்து பிற கவியாளுமைகளின் தாக்கங்களையும் அங்கங்கே காணமுடிகிறது. குறிப்பாக சோலைக்கிளியின் தாக்கத்தையும் சேரனின் தாக்கத்தையும் இடையிடை காணமுடியும். (இதைக்குறித்து றஷ்மியின் இன்றைய பதில்கள் எப்படி அமையுமோ!) ஆனால், றஷ்மி விரைவில் அவற்றிலிருந்து நீங்கித் தன்வழியொன்றைக் காணத்தொடங்கினார். அந்த வழியைத் தனியே ஒற்றை வழியாக வைத்துக் கொள்ளாமல் வௌ;வேறு விதமான முறையில் சற்றேயான பரிசோதனை அம்சத்தையும் உள்ளடக்கித் தன்னுடைய புதுமைகளை நிகழ்த்திக் காட்டுகின்றார். அதாவது, ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாகப் பார்க்கும் ஒரு தன்மை றஷ்மியிடத்திலே உண்டு. என்றபடியாற்தான் அவர் தன்னுடைய கவிதைகளை எழுதும்போதும் அவற்றைத் தொகுக்கும்போதும் ஒழுங்கொன்றைக் கொண்டு அவற்றின் பரிமாணங்களை மேலும் உருவாக்குகிறார்.

றஷ்மியின் இத்தகைய உருவாக்கத்துக்கு முக்கிய காரணமாக நான் காண்பது, அவருக்கு ஏற்பட்ட ‘சரிநிகரு’டனான உறவு. சரிநிகர், றஷ்மி என்ற கவிஞனை, றஷ்மி என்ற ஓவியனை, றஷ்மி என்ற இளைஞனை நெறிப்படுத்தியிருக்கிறது. அதிலும் சரிநிகர் ஆசிரியபீடத்துடனான உறவும் சரிநிகர் நண்பர்களுடனான நட்பும் தொடர்ச்சியாக ‘மூன்றாவது மனிதன்’ ஏட்டுடன் ஏற்பட்ட எம். பௌசருடனான இணைவும் றஷ்மியை வளப்படுத்தியுள்ளன. அவரைச் செதுக்கியுள்ளன. அல்லது இவற்றைப் பயன்படுத்தி றஷ்மி தன்னைச் செதுக்கிச் செம்மையாக்கிக் கொண்டாரா தெரியவில்லை. ஆளுமையுள்ள கலைஞர்கள், எப்பொழுதும் சூழலிலேயே தம்மைச் செதுக்கிக் கொள்கிறார்கள்.

றஷ்மிக்காக நாம் இன்னும் காத்திருக்கலாம். றஷ்மியுடன் நாம் தொடர்ந்தும் பயணிக்கலாம்.

00

(காலச்சுவடு 148 ஆவது இதழில் வெளியாகிய கட்டுரையின் முழுமையான வடிவம். பிரசுர வசதிக்கேற்ப அந்தக் கடடுரை சுருக்கப்பட்டு வழங்கப்பட்டது).

Monday, April 9, 2012

படிகள்










இலங்கையில் இருந்து வெளிவரும் படிகள் என்ற இருமாத இலக்கிய ஏட்டின் 29 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் இரண்டு நேர்காணல்கள் உள்ளன. ஒன்று கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமாகிய சோ.பத்மநாதனினுடையது.

‘ஈழத்தில் இலக்கிய விமர்சனம் - மொழிபெயர்ப்பு விமர்சனம் உட்பட ஆரோக்கியமானதாக இல்லை. நாங்கள் ஒரு சிறுவட்டம். தமிழ நாட்டோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய குழுவினர். மனிசில் படுவதை விமர்சகர்கள் எழுதத் தயங்குகின்றனர். எங்கே எழுத்தாளர்களை நோகச் செய்து விடுவோமோ என்று. பரந்த வட்டமாயின் இந்தச் சங்கடங்களில்லை. திருச்சியை அல்லது நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளனைப் பற்றி சென்னை விமர்சகன் துணிந்து எழுதலாம்.

மொழிபெயர்ப்பு என்ற வரும்போது அதை மதிப்பிடுபவனுக்கு இரு மொழிகளும் தெரிந்திருக்க வேணும். ஆனால், இரு மொழி – பன்மொழிப் புலமை வாய்ந்தவர்கள் கவலைப்படும் அளவுக்குக் குறைந்து விட்டது. இளம் எழுத்தாளர்கள் தாய்மொழியை விட மேலும் ஓரிர மொழிகளையாவது கற்றிருக்க வேண்டும்...’ என்று சொல்லும் சோ.பவின் இந்த நேர்காணல் முக்கியமானது.

சோ.பவின் இளமைக்காலம், இலக்கிய ஈடுபாடு மற்றும் அவருடைய கவிதை நோக்கு, மொழிபெயர்ப்பு முயற்சிகள், ஈழத்து விமர்சனச் சூழல் எனப் பல விசயங்களிலும் சுருக்கமான அளவில் உரையாடலை மேற்கொள்கிறது இந்த நேர்காணல்.

அடுத்த நேர்காணல், ஈழத்தின் குறிப்பிடத்தக்க புனைகதையாளர் அல். அஸ_மத்தினுடையது.

அல் அஸ_மத் சொல்கிறார் -

‘நல்ல படைப்புகள் பெருகுமானால் வாசிப்பும் கூடும். முதலில் நல்ல படைப்பகள் வெளிவர ஆவன செய்து விட்டுப் பாருங்கள்@ வாசிப்பு அதிகமாக இருப்பதை உணருவீர்கள்.

தனிமனித முயற்சிகளாற்தான் நம் நாட்டில் சஞ்சிகை வெளியிட வேண்டியுள்ளது. இத்கெனக் காத்திரமான அமைப்புகள் ஏற்பட வேண்டும்’ என்று.

அல் அஸ_மத் பல விசயங்களைக் குறித்தும் விரிவாக உரையாடுகிறார். குறிப்பாக, இன்றைய தமிழ் இலக்கியச் சூழல், இன்றைய ஈழத்து இலக்கிய இதழ்களைப் பற்றி, வாசிப்பின் இன்றைய நிலை, புதிய இலக்கிய முயற்சிகள், காவியங்களின் இன்றைய அவசியம், இலக்கிய மாநாடுளுக்காகத் தயாரிக்கப்படும் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், போட்டிகள் - பரிசுகள், விருதுகள் பற்றிய சர்ச்சைகள் தொடர்பாக, இலங்கையின் தற்காலத் தமிழ் நாவல்கள் எனப் பல விசயங்களைக் குறித்தும் விரிவாக உரையாடியுள்ளார்.


இலங்கையின் தொன்மையான பட்டினங்களில் ஒன்றான அனுராதபுரத்திலிருந்து வெளிவரும் இந்த இதழின் ஆசிரியர் எல். வஸீம் அக்ரம். ஆசிரிய குழுவில் எம். சீ. நஜழமுதீன், நாச்சியாதீவு பர்வீன், ஜன்சி கபூர், ஞானச்சந்திரன் குருக்கள், றஹமத்துல்லாஹ், ஜமீல், ஏ.எச்.எம்.ஸப்ராஸ், பஸான் ஆகியோர் செயற்படுகிறார்கள். இணைப்பாளராக றிஷ்வி மஃறூப் உள்ளார்.

இந்த இதழில் வாசிப்புக்கேற்றவிதமாகப் பல விசயங்கள் இருந்தாலும் முக்கியமானதாக இருப்பது, பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு கிராமிய மட்டத்திலான கலந்துரையாடல்கள் என்ற பதிவுக் கட்டுரையே.

திருமணத்தில் பெண்களின் விருப்பத்தை அறிதல், பெண்கல்வி, பெண்கள் மீதான வன்முறைகள், இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம், சீதனம், பெண்களின் சமூக ஈடுபாடு, பெண் புத்திஜீவிகள் என்ற உப தலைப்புகளை மையப்படுத்திச் செறிவாக – ஆனால் சுருக்கமாக ஆராயப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையின் நோக்கு முக்கியமானது.

முஸ்லிம் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு முழுதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ‘இந்தப் பெண்களுக்கு தம்முடைய பிரச்சினைகளை வெளியே எடுத்துக் கூறுவதற்கு எந்தவொரு தளமும் வழங்கப்படவில்லை. இந்தக் கலந்துரையாடலானது அவர்களுக்குத் தங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கான தளமாக இருந்தது’ என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது உண்மையாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களின் பிரச்சினைகளும் உணர்வுகளும் வெளியரங்கில் அறியப்படும்போது அவை புதியவையாகவும் கவனத்திற்குரியவையாகவும் உள்ளன. அதேவேளை பெரும்பாலான அனுபவங்கள் ஏனைய (இலங்கைப்) பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளாகவுமே உள்ளன. முஸ்லிம்களின் பண்பாடு, மதம், சமூக அமைப்பு போன்ற காரணிகள் இந்தப் பெண்களுக்கு சில வேறுபட்ட பிரச்சினைகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்துகின்றனவே தவிர மற்றும்படி ஏனைய பிரச்சினைகளும் அனுபவங்களும் பொதுவானவையே.

கவனத்திற்குரிய பகுதிகளில் ஒன்று –

‘இலங்கை முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் சீதனம் மலிந்து காணப்படுகின்ற ஒரு பகுதியாக கிழக்கு மாகாணத்தைக் குறிப்பிடலாம். இங்கே ஆண்கள் அவர்களுடைய தொழிலுக்கும் அந்தஸ்த்துக்கும் ஏற்றவாறு பல்வேறு விதமான சீதனப் பக்கேஜூகளை விற்பனை செய்கிறார்கள். அங்கே சீதனத்தைப் பேரம்பேசுவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது’ என்ற வாய்மொழி வெளிப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை கவனத்தைக் கோருகிறது.

வடக்கே, யாழ்ப்பாணத்தில் சீதனக்கொடுமையின் தாக்கத்தை நாம் நன்றாக அறிவோம். கிழக்கில் - அதுவும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியான ஒரு நிலை இருக்கென்பது இவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்யப்படும்போதே நம்மால் அறியக் கூடியதாக உள்ளது.

பொதுவாக இந்தப் பதிவு மிகக் கவனத்திற்குரியது. இதைக் குறித்துப் பின்னர் தனியாக – விரிவாக எழுதவேணும்.

இந்தப் பதிவோடு இணைந்ததாக மேலும் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை தனியான கட்டுரைக்குரியவை. இங்கே சிறிய அறிமுக நிலையில் உள்ளன. 1. பெண்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் சவால்கள். 2. கல்வி – பெண்ணை வலுவூட்டுகிறதா?

இவை இரண்டும் முக்கியமான சங்கதிகளே.

இதைவிட, கவிதைகள், புத்தக மதிப்புரைகள், சிறுகதைகள் என மேலும் பல விசயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சித்தாந்தன், கன்னி முத்து வெல்லபதியான், ஆனந்தி, தம்பு சிவா, அன்பு ஜவஹர்ஷா, மன்சூர், வேல் நந்தன், சப்ராஸ், ரிஸ்னா ரஸீன், அஷ்ரப் எம். மாபீர், அக்ரம் என்று பலரும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள்.


படிகள் என்ற பெயரில் முன்னர் தமிழவன் ஒரு இதழை வெளிக் கொண்டு வந்திருந்தார். அன்று அந்த இதழ் முக்கிய கவனத்தைப் பெற்றிருந்தது. இப்பொழுது இலங்கையில் அனுராதபுரத்திலிருந்து இன்னொரு படிகள்’ வந்து கொண்டிருக்கிறது. இலக்கிய வரலாற்றாசியர்களுக்கும் வாசர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இந்த மாதிரி ஒரே பெயரில் இதழ்கள் வெளிவருவது குழப்பத்தையும் குறிப்பிடுவதிலும் விளக்குவதிலும் சிரமங்களை ஏற்படுத:தும்.

ஆனால், 2003 ஆம் ஆண்டிலிருந்து 29 இதழ் வரையில் இதை வெளியிட்டுள்ளனர் இந்த ஆசிரியர் குழுவினர். இது அசாத்தியமான ஒரு முயற்சி. அதுவும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலிருந்து இதைச் செய்வது என்பது. பெங்களுரில் அல்லது டில்லியில் இலக்கிய முயற்சிகளைச் செய்வதற்கு ஒப்பான காரியம் இது.

பாராட்டவும் ஆதரவளிக்கவும் வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.

யாராவது தொடர்பு கொள்ள விரும்பினால் -



Padihal Publication,
519/g/16, Jeyenthi Mw, Anuradhapura
Tp – 0783244255, 0713485060, 0718423459, 0771877876

padihal@yahoo.com
www.padikal.blogspot.com


000

Saturday, April 7, 2012

கவிதை - மற்றொரு பரிமாணத்தை நோக்கி






இன்று நாம் கேட்கின்ற சினிமாப் பாடல்களில் பெரும்பாலானவை நாட்டுப்புறப் பாடல்களின் மாற்று வடிவமே. பாடல் அடிகள் மட்டுமல்ல, பாடலின் இசை, இசைக்கான கருவிகள், அவற்றின் தொனி, பாடல் சுட்டும் பொருள் உட்பட.

இவற்றைச் சற்று வேறு படுத்தி ஒரு மாற்று வடிவம் தொனிக்கும்படியாக, புதுப்பிரதிபோல, புதுமை போன்ற பிரமையை ஏற்படுத்துகின்ற மாதிரியாக இன்றைய புதிய பாடல்கள் நமக்குத் தரப்படுகின்றன. உண்மையில் இந்தப் பாடலடிகளுக்குச் சிறந்த இசையும் பாடகர்களின் குரலும் ஒலிப்பதிவு முறையும் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன.

நமது மனம் இன்னும் நாட்டுப்புற இசையிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் மையங்கொண்டிருக்கிறது. என்னதான் நகர்சார்ந்த வாழ்க்கைக்குப் போனாலும் கிராமிய வாழ்க்கையின் நினைவுகளை இந்தத் தலைமுறை வரையிலும் தமிழர்கள் கடந்து விடவில்லை. வேண்டுமானால் புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளின் மனதில் இந்தச் சேகரங்கள் இல்லாமலிருக்கலாம். மற்றும்படி எல்லோருடைய நினைவுகளிலும் கிராமியப் பதியங்கள் தாராளமாக உண்டு.

நாட்டுப்புற இசை எனும்போது நம்முடைய அத்தனை நரம்புகளும் சிலிர்த்து எழுந்து துள்ளத் தொடங்குகின்றன. இது தமிழில் மட்டும் நிகழும் விசயமல்ல. அரபு லகில், ஆபிரிக்க உலகில், சீன, யப்பானிய இசையுலகில் என எங்கும் இந்த அடிப்படையைக் காணலாம். எனவே உலகம் முழுவதிலுமிருக்கின்ற மனிதர்களின் மனவுலகம் நாட்டுப்புறப் பாடல்கள், கவிதைகள், இசை என்பவற்றினால்தான் நிறைந்து போயிருக்கின்றன. இது ஒரு அதிசயமான சங்கதிதான். நவீன உடை, தலைவாரல், பாவனைகள் என முழுமையான நவீ னத்துவத்தில் வாழ்ந்தாலும் மனம் கிராமிய ஒலிகளாலும் தொன்மையான சங்கதிகளாலும் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

தமிழ்ச் சூழலில் 1960களுக்குப் பின்னர் கவிதை பற்றித் தீவிர விவாதங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் இந்த விவாதங்களின் தொடர்ச்சியை அங்கங்கே காணலாம். இந்த விவாதங்களின் விளைவாக தமிழ்க் கவிதையில் பல புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், 1960 களுக்குப் பிந்திய கவிஞர்களில் சினிமாக் கவிஞர்களை அறிந்த அளவுக்கு ஏனைய கவிஞர்களை தமிழ்ப் பொதுப்பரப்பு அறிந்ததில்லை. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, வைரமுத்து, பா.விஜய், முத்துக்குமார் என்ற பரிச்சயங்களின் அள வுக்கு பிரமிள், பசுவய்யா, எஸ்.வைத்தீஸ்வரன், கல்யாண்ஜி, சுகுமாரன், பிரம்மராஜன், விக்ர மாதித்தன், மனுஷ்யபுத்திரன், சல்மா போன்றோரைத் தமிழ்ப் பெருங்குடிகள் அறிந்ததில்லை.

மொழியைத் தங்களின் பேரடையாளங்களில் ஒன்றாகக் கொண்டாடும் தமிழர்கள், அந்த மொழிக்கு அதிக செம்மையையும் புதுமையையும் வளத்தையும் கொடுக்கும் கவிஞர்களைக் காணாமல்விட்டது தற்செயலானதா? அல்லது தமிழ் வாழ்வின் சீரழிவா? அல்லது பொய் நடத்தைகளா காரணம்?

இது தகவல் யுகம். தொடர்வூடகங்களில் யார் அதிகம் உலவுகின்றார்களோ அவர்களே அதிகம் மக்களால் அறியப்படுகிறார்கள். எந்த விசயங்கள் தொடர்வூடகங்களில் கூடுதலாக இடம்பிடிக்கின்றனவோ அவையே மக்களுக்குப் பழக்கமாகின்றன. அவையே மக்களுக்கு அதிகமும் தெரிகின்றன. இது காலப்போக்கில் அவர்களுடைய தெரிவுகளாகவும் விருப்பங்களாகவும் மாறுகின்றன. சினிமாக் கவிஞர்களும் அவர்களுடைய பாடல்கள், கவிதைகள் அறிமுகமாகி, அவை பெருங்கொண்டாட்டமாகியமைக்கும் இதுவே காரணம்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயமும் உண்டு. சினிமா என்பது மிகப் பிரமாண்டமான ஒரு சாதனம். தமிழில் இது இன்னும் அதிக சக்தி வாய்ந்தது. சனங்களிடையே அது பெருஞ்செல்வாக்கைச் செலுத்துகின்றது. அதனால் அது தமிழின் எல்லா ஊடகங்களிலும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதுவும் இந்தக் கவிஞர்களை அதிகம் சனங்களுக்குப் பரிச்சயமாக்கியது. தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இதில் கூடுதல் பொறுப்பு வகித்தன. அத்துடன், இந்தப் பாடல்கள் திரைகளில் காட்சியுடன் வரும்போது இன்னும் அதிக கவர்ச்சியையும் செல்வாக்கையும் பெற்றன. சினிமா என்பது மிகப் பெரிய வணிகப் பொருள் என்பதால், அதன் தயாரிப்புகள் மிகவும் உச்சநிலையில் கவனத்துடன் செய்யப்படுகின்றன. பாடல்களைப் பொறுத்துத் தரமான இசை கவனிக்கப்படுகிறது. தமிழின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாவில்தான் இணைந்திருந்தனர். சிறந்த உருவாக்கத்தில் இணைந்திருக்கின்றனர். ஆகவே ஒரு கவிதை அல்லது ஒரு பாடல் என்பது பல ஆளுமைகளின் கூட்டுழைப்பில், பல இசைக்கருவிகளின் சேர்மானங்களுடன் கலந்தே உருவாகிறது. அப்படி உருவாகும் பாடல் பின்னர் மக்களிடம் பெருஞ்செல்வாக்கைச் செலுத்தும் சினிமா, வானொலி, தொலைக்காட்சி என்ற தொடர்பூடகங்களின் வழியே பரவுகிறது. எனவே சினிமாக் கவிதைகளும் சினிமாக்கவிஞர்களும் பரந்த அறிமுகத்தைப் பெறக் கூடியதாக இருக்கிறது.

இதில் இன்னொரு விசயத்தையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பதைப் போல, இந்தப் பாடல்களில் முக்கால்வாசிக்கும் மேலானவை நாட்டுப்புற மெட்டுக்களையும் அவற்றின் இசைக் கோலங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. ஒரு காலத்தில் கூத்துகளாக, நாட்டுப்புறப் பாடல்களாக தொழிற்பாடல்களாக, சடங்குப் பாடல்களாக இருந்தவை சற்று மாறுபாடுகளுடனும் சமகால விசயங்களுடனும் பழைய தொனிப்புடனும் அரங்குக்கு வருகின்றன. அப்படிப் பார்க்கும்போது இவற்றிலும் நிகழ்கவிதைக்கான கூறுகள் இருக்கின்றன.

ஆனால், அந்த வடிவமும் வகை மாதிரியும் விகிதமும் வேறுபடலாம். அல்லது கூடிக் குறையலாம். நிகழ்கவிதையில் அதன் துணை அம்சங்களான இசை, அசைவுகள், நாடகம், குரல் போன்றவையும் பிறிதொரு பரிமாணத்தை அளிக்கின்றன. அப்போது வெவ்வேறு ஒளி முகங்கள் கவிதைக்குக் கிடைக்கின்றன. இது ஒரு கதை எப்படி சினிமா நாடகமாக மாறுகின்றதோ அதைப் போன்றதே. ஆனால், சினிமாவிலும் நாடகத்திலும் ஏனைய அம்சங்களுக்கான மூலமாக இருப்பது கதையே. இங்கும் இசை, குரல், பாடும் தொனி, அளிக்கை முறைமை, அசைவு போன்றவற் றுக்கு ஆதாரமாக இருப்பது கவிதையே.

இன்று சினிமாவும் இசை அல்பங்களும் பெற்றிருக்கும் செல்வாக்கு மண்டலம் பெரியது. இதனால், இவற்றின் தரமும் கூடியே வருகின்றது. (சீரழிவுகள் பற்றிய விமர்சனம் வேறு. அதன் நோக்கு நிலையும் வேறே) இரசனை வட்டம் பெருகும்போது நுகர்வுப் பரப்பும் பெருகுகிறது. நுகர்ச்சி அதிகமாகும்போது அதன் மதிப்பும் கூடுகிறது. அப்போது குவிகின்ற வருமானமும் அதிகமாகிறது. இது உற்பத்தியில் தரத்தைப் பேண வைக்கிறது மட்டுமல்ல, வருமானம் குவியும்போது போட்டியும் உருவாகிறது. அது தொழிலாகிறது. தொழில் போட்டியாகிறது. இந்தப் போட்டி எப்போதும் தரம், புதுமை, அதிக நுட்பம் போன்றவற்றைக் கோருகின்றன. ஆக, கவிதையோ அதன் அளிக்கையோ இன்னுமின்னும் மேல் நோக்கியே செல்ல வேண்டும்.

சந்தை என்பது போட்டியின் களமே. எனவே இந்தப் போட்டிக்காக அதன் படைப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாகச் சிந்திக்க வேண்டும். புதுப்புது நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். இந்தப் போட்டியே நமக்குத் தரமான பாடல்களைத் தந்தது. பொதுவாகச் சந்தைப் போட்டியே எப்போதும் தரமான பண்டங்களுக்கான உற்பத்தியின் நிபந்தனையாக்கிகள். எனவே போட்டியே நல்ல இசையைத் தந்தது. நல்ல இசையமைப்பாளர்களைத் தந்தது. நல்ல பாடல்களைத் தந்தது. நல்ல பாடலாசிரியர்களையும் தந்தது. எல்லா வகையான விமர்சனங்களுக்கு அப்பாலும் சினிமா தந்துள்ள பல நூற்றுக்கணக்கான பாடல்கள் மிகத் தரமா னவை - சிறந்தவை என்பதை மறுக்க முடியுமா?

வெறுமனே எழுதப்படுகிற கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இருக்கும் மதிப்பைவிடவும், அவை சென்றடைகின்ற பரப்பைவிடவும் நாடகத்திலும் சினிமாவிலும் பிற வெகுஜன ஊடகங்களிலும் மையப்படுத்தப்படுகின்றவை கூடிய அறிமுகத்தைப் பெறுகின்றன. இன்று இலத்திரனியல் சாதனங்கள் அதிக செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. இது தொடர்பூடகங்களின் ஆதிக்கச் சூழல் என்ற வகையிலும் அதிலும் இலத்திரனியல் ஊடகங்களின் காலம் என்ற வகையிலும் அவற்றுடன் தொடர்புறுகின்ற கலை வெளிப்பாடுகளே அதிக செல்வாக்கைப் பெறுகின்றன. எனவே கவிதை, குறிப்பாக நிகழ்கவிதை இதைக் கருத்திற் கொண்டு தன்னைப் புதிய முறையில் ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது.

வரையறைகளுக்குட்பட்ட பழைமை என்பது மியூசியங்களுக்கேயுரியவை. பழைமையானது காலத் தேவை, காலச் சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, தன்னை நெகிழ்த்தி, புதுமையாகும்போதே அதன் பெறுமதி அதிக மாகும். அதுவே மக்கள் மயப்படும். இதுதான் நாட்டார் இசை, நாட்டார் பாடல்கள் என்பவற்றில் ஏற்பட்டிருப்பது. மட்டுமல்ல கிராமிய இசைக் கருவிகள் புதிய வகையில், அதே ஆதாரத் தொனியுடன் இன்று நவீன இசையில் கையாளப் படுகின்றன. தமிழில் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் இதற்குச் சிறந்த உதாரணங்களாக உள்ளனர்.

நமது சினிமா மீதான கேள்விகளும் விமர்சனங்களும் வேறு. ஆனால், அது தந்துள்ள, அறிமுகப்படுத்தியுள்ள ஆளுமைகளும் இந்த மாதிரியான அம்சங்களும் சிறந்தவையே. ஆனால், இது தான் கவிதை, இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள்தான் கவிஞர்கள் என்ற மாயை உருவாக்கம்தான் தவறானது. தவிர, சினிமாவின் ஆட்சி, மற்றொரு கலைவடிவான நாடகத்தை விழுங்கிவிட்டது. கவிதையைக் குறிப்பாக நிகழ்கவிதையையும் தின்றுவிட்டது. ஆனால், நாடகமும் நிகழ்கவிதையும் இனிப் புது வகைப்புடன் உருவாக வேண்டும். எனவே நிகழ் கவிதை என்பதை வெறுமனே கவிதைப் பிரதியை மட்டும் ஆதாரமாகக் கொண்டிருக்காமல் அது இன்னும் பல பரிமாணங்களையுடைய மாற்று வடிவமாகப் பரிணமிக்க வேண்டும்.


குறிப்பாக அது நமது வேர்களை அறுத்துக் கொள்ளாத, சமூக உறவாடலின் வடிவமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பது அவசியம். முற்றிலும் விஞ்ஞானச் சாதனங்களைக் கொண்டியங்கும் ஆகப்பிந்திய வெளிப்பாட்டுச் சாதனமான சினிமாவே நாட்டுப்புற இசையையும் தொனியையும் கருவிகளையும் ஆதாரமாகக் கொண்டிருக்கும்போது நிகழ்கவிதை மட்டும் அதிலிருந்து எப்படி விலகியிருக்க முடியும்? ஆனால், நமது நிகழ்கவிதை என்பது பெரும் பாலும் வரையறுக்கப்பட்ட சட்டகங்களுக்குள்ளிருந்து இன்னும் விலகவில்லை. அத்துடன் அது அடுத்த கட்டத்துக்குப் பயணிக்கவும் இல்லை. மேலும் நமது கவிதைகள் வேறு பரிமாணங்களைத் தொட முடியாதவைகளாக அரை நூற்றாண்டுக்கும் மேலான காலம் அப்படியே இருக்கின்றன. இவற்றுக்கு எப்போது வண்ணங்கள் சேரும்? சிறகுகள் முளைக்கும்? எப்போது இவை தமது உறக்கத்தைக் கலைக்கும்? இவை என்றுதான் ஏராளம் ஏராளம் சனங்களின் மனங்களில் நிகழும்?

00

Friday, April 6, 2012

இலங்கையிலிருந்து ஒரு புதிய இலக்கிய இதழ் - மகுடம்






இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பிலிருந்து ஒரு புதிய இலக்கிய இதழ் “மகுடம்“ என்ற பெயரில் வந்துள்ளது. 2012 ஜனவரி - காலாண்டிதழ். ஆசிரியர் மைக்கில் கொலின். கொலின், முன்னர் திருகோணமலையிலிருந்து “தாகம்“ இதழை வெளியிட்டிருந்தார். பிறகு அந்த இதழை அவராற் தொடர முடியவில்லை. ஆனாலும் கொலினின் தாகம் தீரவில்லை. அந்தத் தாகமே இப்பொழுது “மகுடம்“ என்று வந்திருக்கு.

இந்த முதலாவது இதழில் க.அருள் சுப்பிரமணியம், வி.மைக்கல்கொலின், திசேரா, சிவனு மனோகரன் ஆகியோர் எழுதிய நான்கு சிறுகதைகளும் ஆனந்தா ஏ.ஜி. இராஜேந்திரம் எழுதிய ஒரு குறுநாவலும் உள்ளன. மௌனகுரு, செ.யோகராசா, பெரிய ஐங்கரன், க.கோணேஸ்வரன், சி.ரமேஸ், ச.சீவரெத்தினம் ஆகியோர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். எஸ். பொ. எனும் வல்லபம் என்ற தலைப்பில் எஸ்பொவைப் பற்றி அ.ச.பாய்வா எழுதிய கட்டுரை ஒன்றும் உள்ளது.

இதைத் தவிர, தாமரைத்தீவான், அ.ச.பாய்வா, அனார், கோ.நாதன், ஷெல்லிதாசன், பவித்திரன் ஆகியோர் எழுதிய கவிதைகளும் உள்ளன. அ.ச.பாய்வாவின் “ஆத்ம விசாரமும் அன்றாட வாழ்வும் என்ற சிறுகதைத் தொகுதிக்கான மதிப்புரையை சித்திரலேகா மௌனகுருவும் கலாநிதி சரவணபவனின் “காலனித்துவ திருகோணமலை“ என்ற வரலாற்றுப் பதிவு நூலுக்கான மதிப்புரையை யதீந்திராவும் நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்“ சிறுகதைத் தொகுதிக்கான மதிப்புரையை முகைதீன் சாலியும் எழுதியிருக்கிறார்கள்.

எண்பது பக்கங்களுடைய இந்த இதழின் விலை 100.00. (நூறு மட்டுமே).

தொடர்புக்கான முகவரி-

ஆசிரியர், மகுடம், இலக்கம் 90, பார் வீதி, மட்டக்களப்பு (Editor, Magudam,90, Bar Road, Batticaloa, Sri lanka)
தொலைபேசி எண் - 0774338878

Email - w.michaelcollin@yahoo.com
w.michaelcollin@gmail.com

Sunday, April 1, 2012

காணாமல் போன புலிகள்














விக்ரமாதித்யனின் கவிதையும் தமிழ்ச் சூழலும்

00


‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச் இதழில் விக்ரமாதித்யன் நம்பியின் மூன்று கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றிலொன்று, ‘காணாமல் போன புலிகள்’ என்ற தலைப்பிலானது. நம்பி, இந்தக் கவிதையில் எதை உணர்த்துகிறார், உணர்த்த விரும்புகிறார் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், இந்தக் கவிதை இன்றைய தமிழ்ச் சூழலில் கவனத்திற்கும் விவாதத்திற்கும் உரிய ஒன்று. என்றபோதும் ஏனோ இன்னும் இது பொதுப்பரப்பில் அதிக கவனத்தைப் பெறவில்லை.

சிலர் இந்தக் கவிதையைக் கண்டால் கொண்டாடுவார்கள். அவர்கள் நம்பியை (விடுதலைப்) புலிகளின் ஆதரவாளர், பிரபாகரனின் அபிமானி என்றெல்லாம் சொல்லி தங்களின் தரப்பிற் சேர்த்து விடக்கூடும். புலிகளின் இருப்பைப் பற்றிய சித்திரமொன்றை இவ்வளவு பூடகமாக, அழகாக விக்கிரமாதித்யன் சொல்லியிருக்கிறார் என்று அவர்கள் நம்பியைக்கொண்டாடவும் முயற்சிக்கலாம். தமிழகத்தில் இயங்குகின்ற ஈழ ஆதரவுச் சக்திகளிற் சில நம்பியைத் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும் முயற்சிக்கக் கூடும். சில ஈழ ஆதரவாளர்கள் புதிதாக இப்படி ஒரு முளை தங்களுக்குப் போட்டியாகக் கண்திறப்பதைக் கண்டு அச்சமடையவும் கூடும்.

இதேவேளை இந்தக் கவிதையைப் படிக்கும் இன்னொரு சாரார் நம்பிக்கு நிலவரம் விளங்கவில்லை என்று சொல்வார்கள். அவர்கள் தங்களின் தளத்திலிருந்து நம்பியை வாங்கு வாங்கென்று வாங்கக் கூடிய சூழலும் உண்டு.

இப்படியெல்லாம் நடக்கும் என்று நம்பி நினைத்தே இருக்கமாட்டார். நீங்கள்தான் அப்படியான ஒரு வம்பை உருவாக்கப்போகிறீர்கள் என்று என்னைக் குற்றம் சாட்டுகிறார் நண்பர் ஒருவர். ஏற்கனவே பலவகையான சிக்கல்களில், அதிரடியான அபிப்பிராயங்களால் நம்பி கடுமையான சர்ச்சைக்குள்ளாகியவர் ‘அண்ணாச்சி’. அவருக்கு இதில் என்ன புதிசாகப் பிரச்சினை வரப்போகிறது? தவிர, அச்சப்பிராந்தியத்துக்கு அப்பால், தமிழகத்தில் இருக்கிறார் நம்பி. சிலவேளை இந்தக் கவிதை ஒரு அழைப்பிதழாக மாறி, அவரைப் புலம்பெயர் தேசங்களுக்கு விருந்தாளியாக அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றேன் நான். குறைந்த பட்சம் இந்தக் கவிதை நம்பிக்கு ஒரு ரசிகர் மன்றத்தை உருவாக்கத்தான் போகிறது. அவர் இதை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இது நடக்கத்தான் போகிறது.

இதோ விக்ரமாதித்யன் நம்பியின் அந்தக் கவிதை.

காணாமல் போன புலிகள்
காணாமல் போனதாகவே
முடிவு கட்டிவிட்டார்கள்
காணவில்லையென்று
விளம்பரமும் கொடுத்து விட்டார்கள்
(காணாமல் போக
அவனென்ன ஆடா மாடா பாலுசார்)
சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம்
சும்மா இருந்தான்
நிலவரம் மோசமென
நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான்
சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று
சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான்
அதற்காக ஓய்ந்து விட்டானென்று
அர்த்தமில்லை
சரிந்து விட்டானென்று
கருதி விட முடியாது
அருகிப் போனாலும்
காணமற்போவதில்லை புலிகள்.


00

இந்தக் கவிதையை ஒரு ஈழக்கவி எழுதியிருந்தால் இப்போது பூமியின் திசைகள் தோறும் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டேயிருக்கும்.

நம்பியின் கிரக யோகத்தின்படி அவர் அபாயவலயத்துக்கு அப்பால்...

00