Friday, November 25, 2011

உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை - கருணாகரன்


-

உணர்தலில் நிகழ்கிற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள். ஆனால் அது அதிசயமல்ல. யதார்த்தம். யதார்த்த வெளியில்தான் உமா மகேஸ்வரி மையம் கொள்கிறார். அவருக்கு யதார்த்த வெளியிலேயே ஏராளம் அனுகூலங்களும் பிரதி கூலங்களுமிருக்கின்றன. அதிலேயே அவர் தனக்கான பெரிய உலகத்தை நிர்மாணிக்கிறார். அவருடைய இந்தப் பெரிய உலகம் சாதாரணமானது. ஆனால் அது அசாதாரணமானது. இப்படி ஒரு வேற்றுத்தன்மையும் நிலையும்கொண்ட படைப்பியக்கத்தின் வழி தன்னை உமா மகேஸ்வரி விரித்துச் செல்கிறார்.

உமா மகேஸ்வரியின் பலமே அவருடைய உணருகைதான். ஒவ்வொன்றையும் அவர் ஆழமாகவும் பல பரிமாணங்களிலும் உணருகிறார். தென்படும் ஒவ்வொன்றும் அவருக்குப் பல விதமான புலப்பாடுகளைக் கொடுக்கின்றன. எல்லாவற்றிலும் அவர் வௌ;வேறு அர்த்தங்களை உணருகிறார். அதிலும் ஆழமாக. அதிலும் பெண் அனுபவத்தினுமாகவும் பெண் நிலைப்பட்டும்.

பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறார்கள். அவரவரின் அறிவுத்தளம், அனுபவத்தளம், நோக்குநிலை என்பவற்றைப் பொறுத்து அவரவரின் உணர்கை நிகழ்கிறது. அவரவரின் உணருகைக்கேற்றமாதிரி அவரவரின் படைப்பு அமைகிறது.

படிக்கும்போது வியப்பும் அதிர்ச்சியும் கலந்த நிலையைக் கொண்டு வரும் உண்மை உலகத்தை உமா மகேஸ்வரி இத்தனை ஆச்சரியமாக எப்படி விரித்துக்காட்டுகிறார் என்று புரியவில்லை. இந்த ஆற்றல் மிக அபூர்வமானது. எல்லாவற்றையும் மிக ஆழமாகவும் நுண்மையாகவும் அவதானித்தல், உணர்தல் என்பதனடியாக இது சாத்தியமாகிறது என்றே நினைக்கிறேன். அதாவது தன்னையும் தன் சூழலையும் தன் காலத்தையும் வரலாற்றையும் அவர் அப்படி அவதானிக்கிறார், உணர்கிறார், அறிகிறார்;.

ஜெயமோகன் ஒரு தடவை சொன்னதைப்போல நுண்மையான உணர்திறன், அவதானிப்புத்திறன்தான் படைப்பின் நுண் அம்சங்களையும் உயிரையும் சிறப்பாக்குகிறது. உணர்வதும் பிறகு அதை மொழிவதும் இந்த நுண் அம்சங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது.

நவீன கவிதையில் தேவதேவன், மனுஷ்யபுத்திரன், சல்மா, சித்தாந்தன், எஸ்போஸ், எம்.யுவன் போன்றோரிடம் இந்த உணருகை முறைமை மிக நுட்பமாக வெளிப்பாடு கொள்கிறதை அவதானிக்கலாம். ஈழத்துப் பெண் கவிஞர்களில் எப்போதும் சிவரமணிக்கு இந்த அடையாளம் சிறப்பாக உண்டு.

மனுஷ்யபுத்திரனின் நீராலானது தொகுதியும் ( பின்னர் வந்த அவருடைய கவிதைகளைப் பார்க்கக் கிடைக்கவில்லை) எம்.யுவனின் கை மறதியாய் வைத்த நாள் தொகுதியும் இந்தவகையில் முக்கியமானவை.

நெடுங்காலமாய்
பூட்டியிருக்கும் வீட்டில்
இரவெல்லாம்
அறையறையாய்
அலைந்து கொண்டிருக்கிறது
ஆளில்லாத
ஒரு சக்கர நாற்காலி
என்று மனுஷ்யபுத்திரன் எழுதும் போது நமது புலன்களில் அதிர்ச்சி தாக்குகிறது. அது வெறும் அதிர்ச்சியில்லை. அந்த அதிர்வு ஒரு விதை முளை கொள்ளும் போது நிகழும் அதிர்;வு. ஒரு மலர் உதிரும் போது நிகழும் அதிர்வு. நமக்குள் ரச மாற்றங்களை உருவாக்கும் விளைவுக்கான அதிர்வு.

இந்த அதிர்வு முறையை உமா மகேஸ்வரி தன்னுடைய முறையில் தன்னுடைய தளத்தில் நிகழ்த்துகிறார். அவர் அதை நிகழ்த்துகிறார் என்று சொல்வதை விடவும் அது அவருடைய இயல்பெனும் விதத்தில் நிகழ்கிறது.

எற்றி உடைத்துப் போன
பீங்கான் சிதறல்களைப்
பெருக்கிச் சுத்தப்படுத்துகையில்
கேவலத்தின் நுனியில் நிற்கிறேன்
தலைப்பில்லாத இந்தக்கவிதையில் சற்று முன்னோ எப்போதோ நடந்த ஒரு வன்னிகழ்வை அவர் உணர்ந்த விதம் தெரிகிறது. இதில் காட்சியும் மனதில் நிகழும் உள்வலியும் கலந்த வெளிப்பாட்டை காணலாம், உணரலாம்.

பொதுவாகவே பெண் தன் வாழ்வில் எப்போதும் அல்லது அநேகமாக சந்திக்கின்ற நிகழ்வொன்றை எளிய முறையில் சொல்வதன் மூலம் இந்த வன்முறையை அழுத்தமாக எதிர்ப்பு நிலைக்கு கொண்டு போகிறார் உமா.

இந்தக்கவிதையின் மீதிப்பகுதியில்
புறக்கணிப்புகளைத்
தொடுத்துக் கொள்கிறேன்
பூக்களைப்போல மென்மையாக.
முகச்சுழிப்புகளின் கசப்பில்
உப்பும் புளிப்பும் விரவி
உண்ணத்தகுந்ததாகப்
பதப்படுத்துகிறேன்.

என்று சொல்வதன் மூலம் பெண்ணின் கசப்பான பிராந்தியத்தை நமக்கு முன்னால் வைக்கிறார் பெருங்கேள்வியாகவும் சாட்சியாகவும்.

அதுவும் பெண் வாழ்வோடிணைந்த மொழியையும் சொற்களையும் பொருட்களையும் சூழலையும் வைத்து இதனை அவர் செய்கிறார். இங்கே பெண்ணின் அனுபவப்பிராந்தியம் ஒளிபெறுகிறது.

தன்னுடைய கோபம், விருப்பின்மை, மறுதலிப்பு எல்லாவற்றையும் பிரயோகிக்க முடியாத அவலத்தில், யதார்த்தத்தில் அவை எல்லாவற்றையும் புதைத்து விட்டு மீண்டும் வழமைக்கு திரும்பும் விதி மகா கொடுமையானது. எல்லாவற்றையும் விருப்பின்றியே உண்ணத்தகுந்ததாகப் பதப்படுத்துகின்றேன் என்று சொல்வதிலும் பெண் சமையலுடன் கொண்டுள்ள உறவுலகத்தைக் கொண்டு அதனூடகவே அவர் பேசுகிறார். அதையும் அடையாளப்படுத்துகிறார்.

இந்தக்கவிதையின் மீதியான இறுதிப்பகுதியில்

என் செத்த கோபத்தை மட்டும்
செய்வதறியாது
எறிகிறேன்
கழிவறைக் கோப்பைக்குள்

இங்கே சலிப்பும் இயலாமையும் பீறிட்டுக் கொதிப்புடன் பொங்குகிறது. பெண்ணின் கோவம் பெறுமதியற்றுப்போகும் அவலம் அப்படியே உள்ளது. உயிர்ப்போடு தகிக்கும் பெருந்தீயாய் இருந்த கோவம் இப்போது செத்துவிட்டது. செத்த கோவம் பெறுமதியற்றது. அது கழிவறைக் கோப்பைக்குள் போகிறது.

கழிவறை வரையிலும் பெண்ணின் பணி விரிகிறது. சமையல் கட்டில் தொடங்கி கழிப்பறை வரையிலும் அவளுடைய உலகம் அவளுக்காகவே விதிக்கப்பட்டிருக்கும் கொடுமை இங்கே பதிவாகிறது. உண்மையில் பேரதிர்ச்சியூட்டும் இந்தக்கவிதை பெண்ணரசியலைப் பேசும் அழுத்தமான குரலுடையது.

உமா மகேஸ்வரி இதுபோல பல கவிதைகளிலும் பெண் அடையாளத்தைக் கொண்டே முழு வெளிப்பாட்டையும் செய்கிறார்.

தாய், பிள்ளை, குழந்தை, என்ற வகையிலான கவிதைகள் பெண் அனுபவத்தின் பரவசத்தையும் பெண் பெறுகிற வலி நிரம்பிய கொடும் அனுபவத்தையும் கொண்டவை.

பரவசத்துக்கு எடுத்துக் காட்டாக

நான் சமைக்கும் போது
உனக்கு நீயே
பேசியதென்ன …
கிலுகிலுப்பையின் சிரிப்பு
கலைந்த பொம்மைக் கூந்தல்
தேவதை நடனம்
மழையின் பாடல்
கடலின் கதவுகள்
நிலவின் உலா
சூடான உணவை
ஊதி உனக்கு ஊட்டும்போது
தேடுகிறேன் சிறுவாயில் …

யசோதை மனதளவு உலகம்.

இதுபோல வலி நிரம்பிய அவருடைய கவிதை ஒன்று


உதாசீனமாய் உதறியாடுகின்றன
விதியின் பெரும் பாதங்கள்
பொய்களும் நிஜங்களும்
கலந்து குழம்பும்
உறவுகளின் திரவக்குடுவை
நிரம்பி வழிய
அருந்தத் தூக்கிய கை நழுவி
விழுந்து சிதறிய
கண்ணாடிச்சில்லுகள்
பொடிந்தோடுகின்றன
துடைத்துத் தூய்மையாக்கவியலாத
சிக்கலின் வெளி நோக்கி

இவ்வாறு இருக்கும் மகேஸ்வரியின் உலகத்தில் மற்றொரு பரிமாணத்தில் நிகழும் கவிதைகளும் உண்டு.

தனித்த பேச்சாக -

தன் வாசனையைப்பரப்பும் மலர்
உதிர்வதை மறந்து
உருக்கொள்ளும் ஒரு மனமாக

இந்த வரிகள் நவீன கவிதையின், நவீன மனதின் தனி அடையாளத்துக்குரியவை. மலரை அவர் பார்க்கும் விதம், அதனோடு அவர் கொள்ளும் உறவு, அதை அவர் புரிந்து கொள்ளும் நுட்பம் எல்லாம் மலர் குறித்த சித்திரத்தை, அதன் அடையாளத்தை மாற்றிவிடுகிறது. இங்கே மலர் இயக்கமுறுகிறது. ஒரு செயலாக. பெரும் வினையாக. எதுவோன்றும் அப்படித்தான். அதனதன் இருப்பில் அவற்றுக்கு என்று தனி இயங்கு தளமுண்டு. உமா மகேஸ்வரி இந்த இயங்குதளத்தை கண்டிருக்கிறார். அதை அவர் நமக்கு காண்பிக்கிறார்.

படைப்பென்பதே ஒரு வகையில் காண்பித்தல், உணர்வித்தல்தான்.

இன்னொரு கவிதையில் அவர் சொல்கிறார்,

புத்தகங்கள் ஜன்னல்கள் அலமாரிகள்
சமையல் பாத்திரங்களிலிருந்து
திடுமெனப்பீறிடும் கதறல்கள்.

வீடுதான் இதுவரையான பெண்ணின் அந்தரங்கத்திலும் வெளியிலும் ஆழமாகப்பதிந்துள்ளது என்பதற்கு இந்தவரிகள் இன்னொரு சாட்சி.

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பொருளும் பெண்ணுடன் கொண்டிருக்கும் உறவு பெரியது. அது ஆழமானது. மனிதருடனான உறவைப்போல பெண் இவற்றில் அந்தரங்கமாக நேசங்கொள்கிறாள். இந்த நேசம் வெறுமனே பொருளாதார நோக்கம் சார்ந்ததல்ல. அதாவது சொத்து என்ற அடிப்படையிலான விருப்பமாக அல்ல.


இவற்றினோடு புழங்கிய உயிரி ஒரு போது இல்லாதபோது இவற்றிலிருந்து கிளம்பும் குரல், அதன் தனிமை, துயரம் அந்தப் பெண்ணின் உறவுலகத்தைக்காட்டுகிறது. இதிலும் உமா மகேஸ்வரி பெண் அனுபவப்பிராந்தியத்தைக் கொண்டே பேசகிறார். அதே வகையான மொழியிலும் மொழிதலிலும்.

என்னை உள்ளிருத்தியிருக்கிறது
அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி
வீட்டின் வலிய சுவர்கள்
கடின முறகையில்
அதன் வழுவழுப்பான நீர்மைக்குள்
புகுந்து கொள்கிறேன்.

இத்தனை எளிய சொற்களின் மூலம் மிக வலிமையான உணர்தல்களையும் தன்னுடைய அக, புறவுலகத்தையும் வலிகளையும் அன்பையும் அவர் பகிர முடிகிறதென்றால், அவர் தன்னுள் விளைந்திருக்கிற விதமே அதற்குக் காரணமாகும். உமா மகேஸ்வரியின் அடையாளம் அல்லது திசை என்பது பெண்ணின் பெரு மனவிரிவு கொண்ட வாழ்வே. அவளது காதலும் பெருகும் கருணையும் அன்பும் பரிவும் அவள் கொள்ளும் ஈடுபாடும் எண்ணங்களும் வலியும் துயரும் கோவமும் சலிப்பும் எதிலும் சரி நிகரானதே. அதிலும் இன்னும் ஆழமானதும் கூட. இதுவரை பொதுவில் அறிந்திராத பரப்பென்ற வகையில் பெண்ணனுபவங்களும் எண்ணங்களும் புதியவையும் வித்தியாசமானவையும் அதிக கவர்ச்சியுடையனவும் அதிர்ச்சி கூடியவையுமாகும்.

இந்த அனுபவமும் எண்ணமும் பெண் வாழ்விலும் அறிதலிலும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது பெண்ணைக் கடந்து இவ்வாறு பொதுப்பரப்புக்கு வருவது புதிதாகவே இருக்கிறது. இத்தகைய பண்பில் ஏற்கனவே கவிதைகளோ கதைகளோ சினிமாவோ வந்திருக்கிறது என்று யாரும் சொல்லக்கூடும். ஆனால் அதுவல்லப் பிரச்சினை. இங்கே சொல்லப்படுவது, பெண் பிராந்தியத்தின் வலிமை பற்றிய பொதுப்பேச்சையே நான் வலியுறுத்துகிறேன்.

பெண்ணனுபவத்தை பதியவும் பகிரவும் கூடியவாறான சூழலின் விரிவு எங்கும் இன்று அதிகமாகி வரும்நிலையில் உமா மகேஸ்வரியின் இந்தக்கவிதைகள் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பெண்ணின் மேலான ஆணின் அதிகாரம் பால் ரீதியாவும் பாலியல் ரீதியாகவும் வன்முறையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகெங்கும் வன்முறை வாழ்வும் வன்முறை அரசியலும் வன்முறைச் சமூகமும் பெருகியிருக்கும் இன்றைய சூழலில் பெண் ஒரு பலி பீடமாகவே இன்னும் இருக்கிறாள். அப்படித்தான் இருக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறாள்.

அறிவும் தகவல் உலகின் விரிவாக்கமும் அவற்றின் விளைவான சமூக அசைவும் பெண்ணை எவ்வளவோ தூரம் முன்னுக்கும் வெளியிலும் கொண்டு வந்துள்ள போதும் இன்னும் அவவளுடைய பலிபீடம் ஈரமாகவேயுள்ளது. குருதியும் வலியும் கண்ணீரும் வேதனையும் இருளும் கொண்டதாகவேயுள்ளது.

ஈழத்தில் பெண்கள் அதிலும் தமிழ்ப்பெண்கள் அரச அதிகாரத்தினால் சந்திக்கின்ற வன்முறையும் நெருக்கடியும் இதற்கு இன்னொரு வகையான வலிமையான சாட்சி. கலாவின் கோணேஸ்வரி கவிதை இந்த வன்முறைக்கான சாட்சியத்தில் முக்கியமானது. அதில் அவர் பெண் சீற்றத்தின் மொழியை அப்படியே வெளிப்படுத்தியிருந்தார். அந்தக்கவிதை வந்தபோது பொதுவான வாசகப்பரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது இன்னொரு சுவாரசியமான பக்கம். அது மிக வேடிக்கையானதும் கூட. ஆனால் அந்தக்கவிதையின் எதிர்ப்புணர்வு வலியது. மிக மிக வலியது.

இங்கே இந்தத் தொகுதியிலுள்ள உமா மகேஸ்வரியின் கவிதையொன்று.

நீயாக எனை
விழைந்த நேரம்
முற்றத்தில் அந்தி வெயிற் சலனம்
தினவின் இறுகிய பிடிக்குள்
தோளோடு தோள் இணைந்தும்
நானிருந்தேன் தொலை தூரத்தில்
காறியுமிழும்
கலமாகக்குழிந்தேன்
உள்ளுணர்வைக்
குதறிப்போகின்றன
வெளியே இழையும் உடலிலிருந்து
நானறியாத மிருக நகங்கள்
உனது படுக்கையில் நீ
என்னைத்திறக்கையில்
மலைத் தொடரில் நிலைத்த
எனை நோக்கி நான்
விலகி நகர்ந்த கணம்
பிரிந்தாய் என்
சருமத்தின் குழைவை நீங்கி

இந்தக்கவிதை சொல்வதும் ஏறக்குறைய கலா சொல்வதன் சாரத்தையுடையதே. ஆனால் அது அரச பயங்கரவாதத்தின் அடியாகவும் இனவாதத்தின் அடியாகவும் வரும் ஆண் ஆதிக்கமும் வன்முறையும்.

இங்கே உமா மகேஸ்வரியோ அதை வேறு விதமாக தன்னுடைய வாழ்களச் சூழலோடிணைத்துக் கொண்டுவந்துள்ளார். இந்தக்கவிதை பெரும் மாற்றத்துக்கான சாவியை தன்னிடத்தில் கொண்டுள்ளது. அதேயளவுக்கு பெண்ணின் வலிமையான விலகலும் புறக்கணிப்பும் திரட்சி பெற்றிருப்பதையும் காணலாம்.

பௌதிக நெருக்கத்தை விடவும் உள்ளீடான நெருக்கமும் உறவுமே வாழ்வின் ஊற்றென்பதை அவர் உணர்த்துகிறார். இந்தக்கவிதையின் உளவியல் பரிமாணம் வன்முறைக்கு எதிரான அரசியற் பலமாகிறது.

உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெண் வாழ்வினதும் பெண் அனுபவத்தினதும் தொகுப்பு. அதை அவர்; தன்னுடைய பலமாகக் கொண்டிருக்கிறார். அதிலும் நடுத்தரவர்க்கத்து பெண் வாழ்வு பதியமாகியுள்ளது. தலித் பெண் வாழ்க்கை, அடிநிலைப் பெண்வாழ்க்கை என்பவை வேறானவை. அவற்றின் அடையாளமும் வேறு.

இந்தத் தொகுதியில் மிகுந்த அழுத்தத்தைத் தரும் கவிதைகள் பலவுண்டு. நெருக்கடியையும் வன்முறையையும் கடக்க வேண்டும் என்ற ஆவலின் விளைவு எல்லாவற்றிலும் தெரிகிறது. யாரையும் குற்றஞ்சுமத்தும் பாவனைகளை விடவும் பிரச்சினைகளை ஒரு வகையான உரையாடலினூடாக பகிரந்து உணர்த்துவதையே தன்னுடைய ஆதார முறையாக இவர் கொண்டிருக்கிறார். இந்த அணுகுமுறை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு போதாது என்றிருக்கும். பெண்ணரசியல் ஒரு கலகக் குரல் என்ற வகையில் இது பற்றிய பல வாதப்பிரதி வாதங்கள் எழலாம். ஆனால் இவை எதிர்ப்புக்கவிதைகள் என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா.

தொகுப்பில் சில கவிதைகள் சாதாரணமானவையாகவும் இருக்கின்றன. அவற்றை விலக்கிப்பார்த்தாலும் சரி சேர்த்துப்பார்தத்தாலும் சரி உமா மகேஸ்வரி நெருக்கமான ஒருவராகவே கவிதைகளின் வழி இருக்கிறார்.

00

Wednesday, November 23, 2011

அகவிழி திறந்து - கண்ணன் - முள்ளி வாய்க்கால்

2008ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரம் கவிஞர் தீபச்செல்வனைத் தொடர்புகொண்டேன். அந்த வாரம் தி இந்துவில் என். ராம் இலங்கை வவுனியாவில் இருக்கும் முகாம்களுக்குச் சென்றுவிட்டு அதை uplifting experience (மேன்மையான அனுபவம்) என்று எழுதியிருந்தார். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது இந்தக் கட்டுரை. தி இந்துவின் இலங்கைத் தமிழர் தொடர்பான 20 ஆண்டுக்கால மன்னிக்க முடியாத அநீதிகளின் முத்தாய்ப்பு இந்தப் பதிவு. இலங்கை முகாம்களின் நிலை பற்றிய அசலான பதிவைக் காலச்சுவடில் வெளியிட நினைத்தேன். தீபனிடம் ‘முகாமிலிருக்கும் ஒருவரிடமிருந்து முகாம் நிலை பற்றிய பதிவைப் பெற முடியுமா?’ என்றும் ‘கருணாகரன் இப்போது எங்கே இருக்கிறார்?’ என்றும் கேட்டேன். ‘கருணாகரனிடம் கேட்கலாம், அவர் ஒரு முகாமில்தான் இருக்கிறார்’ என்றார் தீபன். அவரது எண்ணையும் தந்தார். கருணாகரன் புலிகள் நடத்திய வெளிச்சம் இதழின் ஆசிரியர். காலச்சுவடை நாங்கள் மீண்டும் 1994இல் தொடங்கிய பின்னர் கருணாகரனுடன் கடிதப் போக்குவரத்து ஏற்பட்டது. புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் காலச்சுவடைச் சிறிய அளவில் விநியோகித்துவந்தார். ஒரு வாசகர் கூட்டம் நடத்திப் பதிவையும் அனுப்பிவைத்தார். அதைக் காலச்சுவடில் வெளியிட்டதும் பலருக்கு வியப்பு. இந்தத் தேனிலவு 1998 வரை நீடித்தது. 1998இல் கவிஞர் சேரனின் நேர்காணல் - புலிகள் பற்றியும் இலங்கை அரசு பற்றியும் இன்று ஐ. நா. அறிக்கை, சேனல் 4, கருணாகரனின் ‘வன்னியில் நடந்தது என்ன?’ கட்டுரை, இலங்கையில் ஐ.நாவின் கடைசி அதிகாரியாக இருந்த கார்டன் வைஸ் ஆகியோர் முன்வைக்கும் பல விமர்சனங்களுடன் - வெளிவந்ததும் தேனிலவு முறிந்தது. பின்னர் தொடர்பு விட்டுவிட்டும் பலவீனமாகவுமே இருந்தது.

கருணாகரனை நான் தொடர்புகொண்டபோது அவர் புலிகள் சார்பாகப் பேசக்கூடும் என்ற எண்ணமே இருந்தது. அப்போது அவர் கொடிக்காமத்தில் அல்லாரை அகதி முகாமில் இருந்தார். அங்கு செல் தொடர்பு பலவீனமானதாகவும் முகாமின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடியதாகவும் இருந்தது. பலமுறை முயன்றால் ஓரிருமுறை கிடைக்கும். அப்போதும் அவர் அழைப்பை ஏற்பது வசதியையும் சூழலையும் பொறுத்தது. ஓரிருமுறை தான் பேசினேன். மனமுடைந்து போயிருந்தது தெரிந்தது. எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எழுதி அனுப்புவதாகக் கூறினார். முதலில் போர்க்கால அனுபவங்களை எழுதுவதாகவும் பின்னர் முகாம் பற்றி எழுதுவதாகவும் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டேன். அவர் எழுதியவற்றைப் பெற்று வந்து கையெழுத்துப் பிரதியை ஸ்கேன்செய்து மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பைத் தீபச்செல்வன் ஏற்றுக்கொண்டார். இந்தப் பணியைச் செய்வதில் அவருக்கு இருந்த சிக்கல்கள் பற்றிய அவர் கடிதத்தையும் கருணாகரனின் ‘வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?’ கட்டுரையுடன் பெயரில்லாமல் வெளியிட்டோம்.

இலங்கைப் பிரச்சினையில் இதற்கு முன்னரும் சிலமுறை நேரடி அனுபவப் பதிவுகளைக் காலச்சுவடில் வெளியிட்டிருக்கிறோம். ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ (1988) தமிழ் தேசியப் பார்வையில் எழுதப்பட்டது. ‘சூரியக்கதிரின் நிழலும் நிழலும்’ (1997) பிரபாகரன் பற்றி வழிபாட்டுணர்வுடன் இருந்த ஓர் இளைஞரால் எழுதப்பட்டது. நேரடிப் பதிவுகளை வெளியிடுவதே காலச்சுவடின் நோக்கம். எழுதுபவரின் அரசியலை நாங்கள் நிர்ணயிக்க முற்படுவதில்லை. 1988இல் வெளிவந்த ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’ கட்டுரையை எழுதியவரின் அசல் பெயரை இன்றுவரை வெளியிடவில்லை. இதுவரை யாரும் அதைப் பிரச்சினைப்படுத்தவுமில்லை. ஏனெனில் பெயரில்லாமல் கருத்தைப் பதிவுசெய்வது இலங்கை அரசியல் சூழலில் அன்றும் இன்றும் மிக சகஜமானது. உதாரணமாகச் சமீபத்தில் மேற்கிலுள்ள தமிழ் வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இவ்வாறு இருந்தது:

ஓய்வுபெற்ற ஆசிரியர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

ஊடகவியலாளர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

பல்கலைக்கழக விரிவுரையாளர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

மீனவர் சங்கப் பிரதிநிதி (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

கிளிநொச்சி இளைஞன் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

வன்னிவாழ் பொதுமகன் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை).

‘வன்னியில் என்ன நடந்தது?’, ‘வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?’ ஆகிய கட்டுரைகளில் எழுதிய செய்திகள் இன்று பெருமளவுக்கு உறுதிப்பட்டுவிட்டன. அதில் வெளிப்படும் கருணாகரனின் அரசியல் பற்றி விமர்சனங்களை வைத்த நண்பர்களும் அதிலுள்ள செய்திகளை மறுக்கவில்லை. இன்று இதே விமர்சனங்களுடன் வெளிவந்துள்ள ஐ. நா. அறிக்கை, சேனல் 4 ஆவணப்படம் ஆகியவற்றை ஏற்பவர்கள் இக்கட்டுரையை வெளியிட்டமைக்காகக் காலச்சுவடுமீது விரோதம் பாராட்டுகின்றனர். கருணாகரனின் வேண்டுகோள்படி அன்று அவர் பெயரை அப்போது வெளியிடவில்லை. (இதே காலகட்டத்தில் காலச்சுவடில் ‘அநாமதேயன்’ என்னும் பெயரில் வெளிவந்த கட்டுரைகள் கருணாகரன் எழுதியவை அல்ல.) ஒரு கட்டுரையைப் பெயரில்லாமல் வெளியிடுவது உசிதமல்ல. ஆனால் கருத்தை வெளியிட்டதற்காக இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இந்தச் சூழல்களால் காலச்சுவடு உசிதமற்ற முடிவை எடுக்க வேண்டி வந்தது. இதனால் இக்கட்டுரையை நாங்களே எழுதிவிட்டோம் என்பது முதல் யாழ்ப்பாணத்தில் அது எழுதப்பட்டது என்பதுவரை பல ஊகங்கள். அதாவது நாங்கள் கூறியபடி முகாமிலிருந்து எழுதப்பட்டது என்பதைத் தவிர அனைத்துச் சாத்தியங்களும் விவாதிக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் சந்தேகிப்பதற்குக் காலச்சுவடு எப்போதுமே இதழியல் அறம் மீறிச் செயல்பட்டதுமில்லை. பிரதியிலிருக்கும் செய்திகளையும் அரசியலையும் மறுதலிப்பதற்கும் பிரதியின் தோற்றம் பற்றிய அவதூறுகளுக்கும் இருக்கும் தொடர்பு எனக்கு எட்டவில்லை. இப்பதிவு வெளிவந்த காலத்திலும் இப்போதும் இதை மறுப்பவர்கள் இதே குற்றச் சாட்டுகளை முன்வைக்கும் ஐ.நா. அறிக்கையையும் சேனல் 4 ஆவணப் படத்தையும் வரவேற்கும் மர்மமும் பிடிபடவில்லை. ஒருவேளை மேற்கத்திய அமைப்புகளுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரத்தைக் கைக்கொள்ள தமிழ் ஊடகத்திற்குத் தகுதியில்லையோ? கருணாகரனின் இக்கட்டுரையை வெளியிட்டதால் அவரது கடந்தகால, வருங்கால நடவடிக்கைகளுக்குக் காலச்சுவடைப் பொறுப்பாக்கும் பார்வையும் எனக்குப் பிடிபடவில்லை. கனிமொழியின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டதற்காக அவரது 2ஜி ஊழலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டுமா?

இதோ கட்டுரை வெளிவந்த விவரங்களை முழுமையாக எழுதிவிட்டேன். இனி இந்த அவதூறுகள் மறைந்துவிடும். இதுபோல முன்னரும் காலச்சுவடுக்குப் பலமுறை நடந்துவிட்டது. ஆனால் அடுத்தமுறை இதே ஆவேசத்துடன் புதிய அவதூறுகளுடன் தொடர இவையெல்லாம் தடையாக இருக்கமாட்டா.

இதைப் படிக்கும்போது சந்தேகப் பேர்வழிகளுக்கு உண்மையை அறிந்துவிட்ட ஆசுவாசம் ஏற்படவே செய்யாது. அவதூறுகளை மேலும் தொடர முடியாத கோபமே மேலோங்கும். என்ன செய்ய?

00

காலச்சுவடுவில் இந்தக் கட்டுரைகள் வந்ததை அடுத்து அப்போது தொடக்கம் தொடர்ந்து ஏராளமான அவதூறுகளும் புனைவுகளும் பொய்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பத்தியில் கண்ணன் தெரிவித்திருக்கும் விசயங்கள் ஓரளவுக்கு உண்மை நிலையினைச் சொல்கின்றன. இவற்றில் என்சார்பாக மேலும் கூறப்பட வேண்டிய விசயங்கள் எதிர்வரும் ஜனவரி மாதக் காலச்சுவட்டில் வெளியாகும்.

Sunday, November 20, 2011

‘சரமகவிகள்’




யாழ்ப்பாணம், பாக்கியநாதன் புத்திரன் அகிலனால் (பா.அகிலன்) யாக்கப்பட்ட, காயம், வலி, இழப்பு, தேகவியோகம் என்பன குறித்த கவிதைகள் ‘சரமகவிகள்’ என்ற தலைப்பில் 20.11.2011 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இது அவருடைய இரண்டாவது கவிதை நூல். முன்னர் வெளிவந்திருந்தது, ‘பதுங்கு குழிநாட்கள்’

மிதுனம், தலைப்பிடப்படாத காதற்கவிதைகள், சுவிஷேசம், செம்மணி, வைத்தியசாலைக் குறிப்புகள், தாயுரைத்தாள், பிற என ஏழு வகைப்படுத்தல்களில் நாற்பது கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பிலிருந்து ஐந்து கவிதைகள்.

1. செம்மணி 03

பகலிரவாய்ப் பெருக்கெடுத்தது இரத்தம்
கன்னியானாள் மகள்
மணவாட்டிக்கும் விதைவைக்குமிடையில்
ஒரு பாத்திரமாயிருந்தாள் தாய்
குரல் கொடுத்தால்
மறுகுரல் தர யாருமற்ற ஒற்றைப் பெண்கள்
முற்றுற்றன பதினேழு முழு வருடங்கள்
காத்திருந்த கண்கள் தூர்ந்தன
உப்பாய்ப்போன தந்தைக்காய்
ஓர் விளக்கை ஏற்றிவையெனக் கூறமுடியவில்லை என்னால்.

00

2. பிண இலக்கம் 178

இரத்த விளாறாய்க் கிடந்தான்:
பாதித்தலை
பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க
திரவமாய்க் கசிந்தது இருள்
தடுமாறிக் கடந்தால்
காத்துப் பசித்தவொரு முதிய தாய்
ஒரு நோயாளித் தந்தை
மாலையிட்ட சில புகைப்படங்கள்

தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல்
முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம்
முள்ளாய் கிடந்து கனத்தது கண்ணீர்

அவசரமாய் வெளியேறிய பின்
மூடி
துணிப் பந்தொன்றை அடைத்து
தைக்கத் தொடங்கினேன்.

00

3. மந்தோவின் பெண்கள்


ஒட்டிக் கிடந்தது உயிரின் கடைசிச் சவ்வு

அருகு வர
யாந்திரீகமாய் நீக்கினாள் கீழாடை
இரத்தக் கிடங்கில்
மொய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்

நீரள்ளிப் பெய்த பின்
அவள் மூளையிலிருந்து
ஒவ்வொரு ஆண்குறியாய்ப் பிடுங்கத் தொடங்கினேன்

காலம் கலங்கியபடி மடிந்தது.

(சதாத் ஹசன் மந்தோவின் சிறுகதை ஒன்றில் வரும் தொடர்ச்சியாக வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட பெண் பாத்திரம்)

00

4. தாயுரை

எங்கேயென்று சொல்
இல்லையென்பதையாவது சொல்

வீங்கி வெடிக்கத் தயாராகிவிட்டவோர்
முதிய இதயத்தைக் காவ முடியாதென்னால் இனியும்

பிடி சாம்பராவது கொடு
என் பிதிரர்களின் மடியில்
கொட்டி விடுகிறேன் அவனை

நாளை என்னைத் தீயிடவும்
பிண்டமிட்டுப் பாதையிடவும்
இல்லையாரும் ஆயினும்
அவன் போய் உறங்கட்டும் நிம்மதியின் பேராற்றில்

00

5. பெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்


பூண்டும் புராணிகமும்
நீரும் இல்லும் சேர்த்துப் பொத்தப்பட்ட
பெரு நகரத்திற்குக் கீழே
பகலிரா ஓயா
தெருக்களும் கிளைகளும் மொய்த்துப் பரவி
சனங்கள் நெரிந்து
வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு இன்னும் கீழே
கீழிறங்கிப் போனால்

சாம்பரால் ஆன வெம்மையடங்காவொரு புயற்பரப்பு
நீங்கி
மேலும் நடந்து கீழிறங்கினால்
அழுகையும், கதறலும் பரவிய ஒலியடுக்கு
அதற்கும் கீழே
முடிவடையாத குருதியால் ஒரு திரவப்படுக்கை
அதற்கும் கீழே
கெட்டிபட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு
அதற்குக் கீழே
மரங்களின் வேர்களும் முட்டாதவொரு மௌனப்பரப்பு
நீங்கி இன்னும் மேல் நடந்து
கீழிறங்கினால்

ஒரு முதிய பெண்
காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு
துறவிப் பெண்

(பங்குனி 2010)

00

Wednesday, November 16, 2011

தனிவழியில் ஒரு வெளி



தா.இராமலிங்கம் – கருணாகரன்

00

அ.செ.முவையும் தா. இராமலிங்கத்தையும் நினைக்கும் போது ஏனோ தெரியாது, எனக்கு நகுலனும் பிரமிளும் ஞாபகத்துக்கு வருவார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்பாளுமை, படைப்புலகம் என்பன வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால் இந்த நான்குபேரும் ஏதோ ஒருவகையில் உள்ளார்ந்த விதமாக ஒன்றுபட்டிருப்பதைப் போலவே உணர்கிறேன். அந்த ஒன்று படுதல் என்ன என்று இதுவரையில் துலக்கமாகத் தெரியவில்லை.

ஆனாலும் ஏதோ ஒன்று மெல்லிய இழையாக இவர்களுக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏதோ ஒரு விசயம் அல்லது ஏதோவொரு அம்சம் என்னவென்று என்றேனும் நிச்சயம் கண்டுணரலாம். உணர்தளத்திலிருந்து அது துலக்கமாக மேற்கிளம்பி வரக்கூடும்.
இதுவரையில் எனக்குப்பட்டது இவர்களிடம் குவிந்திருக்கும் தனிமைதான் இந்த நான்குபேரையும் அப்படி ஒன்றாக நினைக்கத் தோன்றுகிறது எனலாம். ஆனாலும் இதை நான் மங்கலாகவே கண்டுள்ளேன். இந்தத் தனிமையை இவர்களின் படைப்புகளின் வழியே துலக்கமாகக் காணமுடியவில்லை. பதிலாக இவர்களின் வாழ்க்கையில்தான் அதைப் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் இருந்த இந்தத் தனிமை இவர்களிடம் அந்தப் பிரக்ஞையுடன் உணரப் பட்டிருந்தால் அது எப்படியும் இவர்களின் படைப்புகளில் வெளிப்பட்டிருக்குமே என்று ஒரு நண்பர் கேட்டார். இதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களின் எழுத்துகளில் உள்ளோட்டமாகப் படிந்திருக்கும் பிரபஞ்சப் பிரக்ஞையும் ஆன்மீக தரிசனங்களும் சொல்வதென்ன? தனிமையின் புள்ளியிலிருந்து வேர்விடும் தரிசனம்தானே இது.

பிரமிள் வேகமும் தீவிரமும் உடையவர். அந்த வேகத்தையும் தீவிரத்தையும் இன்னொரு நிலையில் கொண்டவர் நகுலன். ஆனால் அந்த அளவுக்கு அ.செ.முவும் தா.இராமலிங்கமும் வேகமும் தீவிரமும் கொண்டவர்களல்ல. அ.செ.மு முழுக்க முழுக்க வெளிப்டையாகவே சமூகத்தை விமர்சிக்கும் எழுத்தின் நாயகர். சமூக நடத்தைகளின் வழியாக எழும் உணர்வுகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர். பிரகடனங்களில்லாத எழுத்துலகம் அவருடைய பலம். கிண்டலும் அங்கதமும் அவருடைய சிறப்பு.

பிரமிளும் நகுலனும் பரிசோதனைகள், படைப்புலகத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளை, வடிவங்களை எல்லாம் தங்கள் படைப்பு வாழ்க்கையில் கொண்டவர்கள். தமிழ்ப் படைப்புலகில் இந்த இரண்டு பேரும் சாதனைகள் என்ற அளவில் தங்களை நிலை நிறுத்தியவர்கள். அ.செ.மு அந்த அளவுக்குச் செல்லவில்லை. ஆனாலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு தன்னை நிறுவியவர்.

தா. இராமலிங்கம் கவிஞர். இராமலிங்கத்தின் சிறப்பு பேச்சோசையை, நடைமுறை வாழ்க்கையை, புழங்கு மொழியை தன்னுடைய கவிதை இயக்கத்தில் கொண்டு வந்தவர். ஈழத்துக் கவிதைகளில் இந்தப் பண்புகளை மஹாகவியும் தா. இராமலிங்கமும் மிகச் செழிப்பாக, பிரக்ஞை நிலைப்பட்டுக் கொண்டு வந்தவர்கள். இதை 1950 களில் இவர்கள் இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள்.

மஹாகவி மரபான வெளிப்பாட்டு வடிவத்தில் புதுமைகளை நிகழ்த்த முனைந்தவர். அதில் குறிப்பிடக் கூடிய எல்லைவரை சென்றவர். ஆனால், தா.இராமலிங்கம் புதிய வெளிப்பாட்டு முறைமையில் மிகச் சாதரணமாகவே தன் கவிதைகளை, தன்னுடைய படைப்புலகத்தை உருவாக்க முனைந்தவர். அதுவரையுமிருந்த வெளிப்பாட்டு முறைமைகளையும் எல்லைகளையும் தாண்டியவர். தா. இராமலிங்கம் அதிகம் எழுதவில்லை. படைப்புலகத்தில் தொடர்ந்து இயங்கவும் இல்லை. தீவிரமாகப் படைப்புலகத்தை அவர் அணுகவும் இல்லை. ஆனால் அவர் ஈழத்துக் கவிதையுலகத்தில் நிராகரிக்க முடியாத படைப்பாளி. புதிய கவிதைகளின் முன்னோடி. ஈழத்தில் முதன்முதலில் புதுக்கவிதை நூலினை 1960 களில் வெளியிட்டு ஊக்கநிலையை ஏற்படுத்தினார் அவர். அப்போது ஈழத்தில் நிலவிய இலக்கியப் போக்கையும் விமர்சன இயக்கங்களையும் மேவி எழுந்தார் தா. இராமலிங்கம்.

தா. இராமலிங்கத்தை முதன்முதலில் சரியாக இனங்கண்டவர் மு. தளையசிங்கம். இராமலிங்கத் தின் முதலாவது கவிதை நூலான ‘புதுமெய்க் கவிதைகளு’க்கு கவிஞர் இ. முருகையன் முன்னுரை எழுதியிருந்தபோதும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளை ஏற்பதற்கோ, புதிய கவிதை இயக்கத்தை அங்கீகரிப்பதற்கோ முருகையனிடம் தயக்கங்களிருந்தன. ஆனால், மு. தளையசிங்கம் தா. இராமலிங்கத்தையும் அவருடைய புதிய கவிதை இயக்கத்தையும் சரியாக இனங்கண்டு கொண்டார். அதை அவர் பேருவகையுடன் முன்னிலைப் படுத்தினார். இதை நாம் தா. இராமலிங்கத்தின் இரண்டாவது கவிதை நூலான காணிக்கையில் (1965) காணலாம். இந்த நுலீலில் எஸ். பொவும் முன்னீடும் உண்டு.

ஆனால், காணிக்கை கவிதைத் தொகுதிக்கு மு. தளையசிங்கம் எழுதியிருக்கும் முன்னுரை முக்கியமானது. அது புதிய கவிதை இயக்கத்தைக் குறித்த விரிவான ஒரு ஆய்வுரையே.
அப்போது பேராசியர் க. கைலாசபதியும் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஈழத்து விமர்சன உலகில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், தா. இராமலிங்கம் இவர்கள் இருவரிடமும் தன்னுடைய நூல்களுக்கான முன்னுரையினை வாங்கவில்லை. பதிலாக இவர்களிடமிருந்து விலகியிருந்த மு. தளைய சிங்கத்திடமும் எஸ்.பொ. விடமும்தான் முன்னுரை களை வாங்கியிருக்கிறார். அவர் தன்னுடைய இலக்கிய வழியை, அதன் செல்நெறியை மு. தளைய சிங்கத்திடம்தான் கண்டிருக்கிறார். பின்னாளில் மு. தளையசிங்கத்தின் மெய்யுள் வழியில்தான் அதிக நம்பிக்கையோடு தா. இராமலிங்கம் நெருக்கமாக நின்றார். இதற்கு அவரிடம் உள்ளோட்டமாக இருந்த ஆன்மீக ஈடுபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தா. இராமலிங்கத்தின் கவிதைகள் சமூக அக்கறையுடையவை. போலி ஆசாரங்களின் மீதும் பொய்யான நம்பிக்கைகளின் மீதும் ஆழமான விமர்சனங்களை முன்வைப்பவை.
யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மீதும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் பேரினவாதச் சிந்தனையில் மையங் கொண்டிருக்கும் இலங்கை அரச இயந்திரத்தின் மீதும் தா. இராமலிங்கம் கடுமையான எதிர் வினைகளை ஆற்றியிருக்கிறார். அவர் இயங்கிய கால எல்லையில் நிலவிய அனைத்துவகையான சமூக நீதியின்மைகளுக் கெதிராகவும் அவர் குரல் எழுப்பியிருக்கிறார். இதை மு.தளையசிங்கமே மிகவும் தெளிவாகத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் – ‘தா. இராமலிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தி யின்மையும் அந்தத் திருப்தியின்மெ கோரும் மாற்றமும்தான் முத்திரை பதித்து நிற்கின்றன’ என்று.

யாழ்ப்பாணத்தில் நிலவும் போலியான ஆசாரங்கள் பலவும்தான் யாழ்ப்பாணத்தின் முகமாக இருக்கிறது. அதேவேளை எந்தச் சமூகங்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பும் யாழ்ப்பாணத்துக்கும் உண்டு. உதாரணமாக வரண்ட பூமியான யாழ்ப் பாணத்தை தங்களுடைய உழைப்பால் வளப்படுத்தி, அந்த வளத்தை வைத்து வாழ்கின்ற இயல்பையும் சிறப்பையும் மஹாகவி எழுதியிருக்கிறார். நிலாந்தன் எழுதியிருக்கிறார். இதைப் போல பலரும் யாழ்ப்பாணத்தின் சிறப்புகளை தங்கள் படைப்புகளில் பதிவுகளாக்கியிருக்கிறார்கள்.

அதைப்போல எல்லோரும் இந்தச் சமூகத்தின் குறைபாடுகளை விமர்சனத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றனர். இது ஒரு சுவாரஷ்யமான விசயம். கடந்த அறுபது எழுபது ஆண்டுகால எழுத்துகளைத் தொகுத்துப் பார்த்தால் யாழ்ப்பாணச் சமூகத்தின் அத்தனை போக்குகளையும் இனங்காண முடியும். இந்தக் காலப்பகுதியில் நிலவிய சாதியப் பிரச்சினைகள், அதற்கெதிரான போராட்டங்கள், தமிழ் மக்களின் இனவுணர்வு, அதன் விளைவான அரசியல், அதன் தொடர்ச்சியான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தின் அத்தனை குறைபாடுகளுடனும் சிறப்புகளுடனும் முன்னெடுக் கப்பட்ட ஆயுதப் போராட்டம், அந்த ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் சிறப்பும் ஜனநாயக மறுப்பும் எனச் சகலதையும் நாம் இந்தக் கால எழுத்துகளில் பார்க்க முடியும்.

ஆனால், இராமலிங்கம் இந்தக் காலப்பகுதியில் தான் இயங்கிய காலப்பகுதியின் நிழ்வுகளையும் போக்களையும் அதற்காதரவான/எதிரான நிலைப் பாடுகளையும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதியத்துக்கெதிரான அவருடைய பதிவுகள் முக்கியமானவை.

‘…வேளாளர் குடிப்பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும் …..’
‘இன்பம் நுகர்ந்தேன்
என்
ஆசார முட்டையிலும்… ஆசார முட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்…’
(ஆசைக்குச் சாதியில்லை)


‘ஐயோ வாடி வீடே
நீ வதை கூடமானாயே…’
என்றும்
சாவிளைச்சல் சாவிளைச்சல்
சரித்திரம் காணாத சாவிளைச்சல்…’
எனவும்
‘கோழி குழறகுதே
மரநாய்தான் மரநாய்தான் …’

(நெஞ்சு பதறுகுது)

என்றும் அரச பயங்கரவாதத்தின் விளைவான எண்பதுகளின் நிலைமைகளை இராமலிங்கம் எழுதினார். இராமலிங்கம் இப்படி எழுதியவை பின்னாளில் தமிழ் அரசியலில் நிகழ்ந்தேறிய துரதிர்ஸ்டம் வேறு. அப்போதும் அவருடைய கவிதைகள் நினைவில் வந்தன.

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதியில் கல்வயல் என்ற இடத்தில் பிறந்தவர் தா. இராமலிங்கம். இந்தக்கிராமத்தில்தான் ஈழத்தின் இன்னொரு முக்கிய கவிஞரான இ. முருகையன், அவருடைய தம்பியாரான இ. சிவானந்தன், கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி ஆகியோரும் பிறந்தனர். இவர்கள் எல்லோரும் பேச்சோசையைத் தங்கள் கவிதைகளில் மையமாகக் கொண்டிருந்தவர்கள். பின்னர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும் ஒரு மையமாக இந்தப் பண்பைக் கொண்டியங்கியவர்கள். அதேவேளை இவர்கள் அனைவரும் அமைதி, தீவிரம் என்ற நிலைகளில் அதிக ஒற்றுமையையும் கொண்டிருந்தனர். கல்வயல் வே. குமாரசாமி கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் ஆள் என்றாலும் மற்றவர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பேணும் இயல்பைக் கொண்டிருந்தனர் எல்லோரும்.

பிரமிள் எழுதத் தொடங்கிய காலப்பகதியில்தான் தா. இராமலிங்கமும் எழுதத் தொடங்கினார். அதுவும் புதுக்கவிதை இயக்கத்தில். ஆனால் இவர் தமிழகத்தில் அதிக கவனத்தை பெறவில்லை. தமிழகத்தில் படிப்பை முடித்துக் கொண்டு தா. இராமலிங்கம் ஈழத்துக்குப் பதுக்கவிதை இயக்கத்தைப் பற்றிய கனவுகளோடு திரும்புகிறார். அந்தக் கனவுகளோடு பிரமிள் ஈழத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்கிறார். இந்த இருவருக்கும் உள்ள சில நெருக்கமான ஒற்றுமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. பிரமிள் தமிழகத்தில் கவிதை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவரால் அதில் உச்சங்களைத் தொடமுடிந்தது. ஆனால் தா. இராமலிங்கம் இடையில் நின்று கொண்டார்.

தா. இராமலிங்கம் 1950களில் எழுதத் தொடங்கினாலும் தொடர்ந்து படைப்பியக்கத்தில் அவர் ஈடுபட்டதில்லை. இடையிடையே அவருக்கு உறங்கு காலங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக அவருடைய மகன்களில் ஒருவர் அகாலமரணமானதை அடுத்து அவர் குறிப்பிட்ட காலம் எழுதவேயில்லை. அப்போது மிகுந்த அழுத்தத்துக்கும் உள்ளாகியிருந்தார்.

தா.இராமலிங்கத்தை நான் சந்தித்ததும் இந்தக் காலப்பகுதியில்தான். அது எண்பதுகளின் இறுதிப்பகுதி. அலையிலும் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதியிலும் தா.இராமலிங்கத்தை அடையாளம் கண்டிருந்தேன். அதன் பின்னரே அவருடைய புதுமெய்க் கவிதைகளையும் காணிக்கை யையும் நண்பர் யேசுராசா தந்திருந்தார். யேசுராசாதான் தா.இராமலிங்கத்தையும் அறிமுகப்படுத்தினார். ஆனால், இந்த விவரங்களும் தா. இராமலிங்கத்தின் கவிதைகளும் அவரை எப்படியும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டின. அந்தக் காலப்பகுதியில் நான் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருந்தது.

எண்பதுகளின் தொடக்ககால அரசியல் போக்கில் ஈடுபட்டதன் விளைவாக எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் அப்படியரு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். தா. இராம லிங்கத்தை நான் சந்தித்தபோது அவர் பெரும்பாலும் மௌனநிலையிலேயே இருந்தார்.

மௌனத்தையே தன் பொழுதில் பெரும்பாலும் அவர் கடைப் பிடித்தார். தியானமும் மௌனமும் தான் அவருடைய பொழுதுகள் என்றிருந்தன அப்போது. அபூர்வமாக எப்போதாவது பேசுவார். ஆனாலும் நான் அவரிடம் இடையிடையே போய்வந்து கொண்டிருந்தேன். அவர் சிலபோத ஆர்வத்தோடு கதைப்பார். பல சமயங்களிலும் எதுவும் பேசாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார். சாந்தமான அந்த முகத்தில் ஒரு போதும் நான் எந்த வன்மத்தையும் சினத்தையும் கண்டதில்லை. மெல்லிய புன்னகை மலர்ந்திருக்கும். கேலி, கிண்டல், அதிர்ந்த பேச்சு, பிறரைப்பற்றிய விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் என்று எதையும் அவருடைய எந்த உரையாடலிலும் நான் கண்டதில்லை.

ஏன், தன்னுடைய எழுத்துகளைப் பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை. ஆனால் தியானத்தை, மௌனத்தில் இருக்கும் ஆனந்தத்தை, தன் மனதில் இருக்கின்ற விடுதலைத் தாகத்தை, பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய வியப்பை, அதை நோக்கிய தனது பயணத்தை, அந்தப் பயணத்தின் தரிசனங்களை எல்லாம் அவர் ஆர்வத்தோடு சொல்வார்.

அப்போது அவருடைய கண்களில் மகிழ்ச்சி பொங்கும். முகம் பரவசமாகி மலரும். எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு மலர்ந்திருந்த காலப்பகுதியில் அவர் பெரும்பாலும் இலக்கியத்தை விட்டு, எழுத்துகளை விட்டு தியானத்திலேயே அதிக கவனத்தைக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பேச்சுகள் தியானத்தைப் பற்றியும் மௌனத்தைப் பற்றியுமே அதிகமும் இருந்தன. எப்போதாவது இருந்தாற்போல இலக்கியத்தைப் பற்றிப் பேசுவார். ஆனால் தான் எழுதிவைத்திருந்த கவிதைகளைக் காட்டுவார். இது அபூர்வ நிகழ்ச்சி. என்றாலும் அந்தக் கவிதைகளை அவர் முறைப்படி சேகரித்து வைத்திருந்தமை சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஒருவர் எதில் அதிக கவத்தைக் குவித்திருக் கிறாரோ அதைப்பற்றியே அவருடைய கவனமும் ஈடுபாடும் இருக்கும். தா. இராமலிங்கத்துக்கு இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் விட தியானத்தில் இருந்த ஈடுபாடும் சுகமும் அலாதியானது. அவருடைய அந்த ஈடுபாட்டைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது அவருடைய குடும்பத்தினரும் அவருக்கேற்றமாதிரி நடந்து கொண்டனர்.

ஒரு பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் சாதாரணமாக இப்படியான வாழ்வில் ஈடுபடுவதென்பது சாத்தியக் குறைவானது. அதுவும் யாழ்ப்பாணவாழ்க்கையில் இந்த மாதிரி ஆட்கள் இருப்பது மிகக் கடினமும் குறைவும். இந்த நிலையில் தா. இராமலிங்கம் எனக்கு மிகப் பிடித்தவரானார். இன்னும் தன்மீது ஆர்வத்தைக் குவித்தார். அவரை நான் அடிக்கடி சந்தித்தேன். நட்பு மலர்ந்தது. நெருக்கம் கூடியது. இப்போது நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரும் மெல்ல மெல்ல பல விசயங்களைப் பற்றியும் கதைக்கத் தொடங்கினார். இலக்கியத்தை, தன்னுடைய இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டவிதத்தை, பின்னர்தான் புதிய கவிதைகள் எழுதத் தலைப்பட்டதை, முதல் தொகுதிகள் வெளியிடும் போது எதிர் கொண்ட சூழலை என்று பலதையும் சொன்னார்.

மௌனம் பேச்சாக மாறியது. ஆனால் இது முழு இயல்போடு வளர்ச்சியடைந்தது என்று சொல்ல மாட்டேன். முன்னர் இருந்ததையும் விட சற்று மாறுதலான ஒரு நிலையில் அவர் இயங்கினார். இந்தக் காலப்பகுதியில் அவர் தன்னுடைய தியானத்தின் வழியான தரிசகங்களை எழுதினார். வெளிப்பார்வைக்கு மேலொட்டம் போலத் தெரியும் ஆழமான பல விசயங்களை எல்லாம் அவர் எழுதினார். அப்படி எழுதிய கவிதைகளை, உரை நடைக்குறிப்புகளை அவர் சிலவேளை எனக்குக் காட்டுவார். ஆனால் அவை பற்றி எந்த விளக்கத்தையும் அவர் சொல்வதில்லை. என்னுடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்ததும் இல்லை. ‘ஏதோ எழுதியிருக்கிறேன். வேண்டு மானால் பார்த்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் உங்களைப் பொறுத்தது. என்னுடைய மனநிலையும் அதன் பயணமும் செல்லும் திசையைப் பாருங்கள்’ என்ற மாதிரி அவருடைய எழுத்துகள் இருந்தன. அவர் அப்படித்தான் நினைக்க வைத்தார்.

மு. தளையசிங்கத்தின் மீது அதிக ஆர்வமும் மதிப்பும் கொண்டிருந்தார் தா. இராமலிங்கம். கவலைக்குரிய சங்கதி என்னவென்றால், தளைய சிங்கம் ஏற்கனவே, இளவயதில் இறந்தமையே. ஒரு வகையில் தா. இராமலிங்கத்தை இந்த மரணமும் பாதித்திருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. அவருடைய மகனுடைய இழப்புக்காக மட்டும் அவருடைய மனம் இப்படிப் பாதிப்படையவில்லை. அது ஏற்கனவே மு. தளையசிங்கத்தின் இழப்பினால் அதிர்வுக்குள்ளாக்கியிருக்கிறது. பின்னர் மகனின் இழப்பு அதை மேலும் தாக்கிய போது அவர் இறப்புக்குறித்து, வாழ்க்கை குறித்து விசாரணைகள் செய்யத் தொடங்கினார். அந்த விசாரணைகளின் வழியே அவர் சில கவிதைகளை எழுதியும் வைத்திருந்தார். அந்தக் கவிதைகளை வெளியிடவேண்டுமென அவர் மெல்லிய விருப்பத்தையும் கொண்டிருந்தார்.

இராமலிங்கத்தின் இந்தத் தியானம் சாதாரண வாழ்க்கை குறித்த மீள் மதிப்பீட்டுக்குள்ளாக்கியது. அவர் பின்னர் ஏற்பட்ட சரிவுகளை / சமூக நிகழ்வுகளை அதிக அக்கறையோடு பார்க்கவில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. எதுவும் அவற்றின் சுற்றுப் பயணத்தில்தான் பயணிக்கும். அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பார் அவர். பிரபஞ்ச இயக்கத்தைப் பாருங்கள். அது சுற்றொழுங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பது அவருடைய நிலைப்பாடு. ‘கை மீறிச் செல்லும் விசயங்களுக்காக நம்மால் துக்கப்படத்தான் முடியும். அதற்குமேல் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்’ என்றார் எங்களுடைய போராட்டத்தின் போக்குகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள்.

அவர் அந்த உரையாடலில் ஆர்வமே காட்டவில்லை. அது ஒரு பயனற்ற விசயம் என்பது அவருடைய எண்ணம். இந்த நிகழ்ச்சிப் போக்குகள் எங்கே செல்லும், அதன் விளைவுகள் எப்படி அமையும் என அவருக்கு ஏற்கனவே தெரியும். அவர் ஒரு மெல்லிய புன்னகையும் எந்தப் பதற்றமும் இல்லாமல் அதை எதிர் கொண்டார்.

வாழ்க்கை பற்றிய புரிதல்கள் வேறுவிதமாக ஏற்படத்தொடங்கியதை அடுத்து அவருடைய மன இயக்கத்தின் திசையும் நிலையும் மாறிவிட்டன. அதனால் அவர் பொதுவான இலக்கியப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார். அல்லது அவரைப் பொதுவான இலக்கிய உலகம் விட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பகுதில் அவர் இருந்தபோதும் அவரை அதிகமான எழுத்தாளர்கள் சந்திப்பதில்லை. அவருடன் யாரும் தொடர்பு கொள்வதுமில்லை. அவரும் கலந்துரை யாடல்கள், வெளியீட்டு விழாக்கள், இலக்கிய அரங்குகள், இலக்கியச் சந்திப்புகள் என்று எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த, இருக்கின்ற பலருக்கு தா. இராமலிங்கத்தை நேரில் தெரியாது. ஆனால் அவரைப் பற்றி எல்லோரும் நிறைய அறிந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கூட தா. இராமலிங்கத்துடன் மு. தளையசிங்கம், எஸ்.பொ, அ. யேசுராசா, மு.பொ, சு. வில்வரெத்தினம் போன்ற மிகச் சிலருக்குத்தான் அறிமுகமும் பரிச்சயமும் இருந்தது. ஏறக்குறைய தா. இராமலிங்கம் மெய்யுள் பண்ணையைச் சேர்ந்தவராக இருந்ததால் அவருக்கு இயல்பாக இந்தத் தரப்பைத் தவிர பிறருடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதில் ஆதவையே ஆர்வமோ இல்லாமல் இருந்திருக்கக் கூடும். மு. தளையசிங்கத்தின் மறைவு இந்த ஆர்வத்தை மேலும் குறைத்திருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.

தா. இராமலிங்கத்துடன் என்னுடைய உறவு நீடித்ததன் பயனாக சில காரியங்களை என்னால் செய்ய முடிந்தது. வெளிச்சம் சஞ்சிகையில் நான் பணி யாற்றிய போது தா.இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றை அதில் பிரசுரிக்கக் கூடியதாக இருந்தது. அவர் ஏற்கனவே எழுதி பிரசுரமாகாதிருந்த கவிதைகளை இதில் பயன்படுத்தினேன். அந்தக் கவிதைகளில் இருந்த விசயங்கள் காலப் பொருத்தம், சூழல் பொருத்தம் என்பவற்றுக்கு ஏற்ற மாதிரி யிருந்தது இந்த வாய்ப்பைத்தந்தன. அதே வேளை இராமலிங்கத்தை ஓரு நேர்காணலும் செய்திருந்தேன். அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அது சிறிய நேர்காணல்தான் என்றாலும் பலருடைய கவனத்தையும் பெற்றது.

இதற்குப் பின்னர் தா. இராமலிங்கத்தைப் பற்றிய ஆர்வம் மீண்டும் ஈழத்து இலக்கிய உலகத்தில் இளைய தலைமுறையிடத்தில் அதிகமாகியது. அவருடைய கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டன. அவருடைய கவிதைகள் மீள் பிரசுரத்துக்குள்ளாகின. ஆனால் எப்போதும் அவருடைய கவிதைகளை முன்னிலைப்படுத்தி வந்தவர் அ. யேசுராசா. அவருடைய ‘கவிதை’ இதழில் ‘காணிக்கை’ நூலுக்கு மு. தளையசிங்கம் எழுதியிருந்த முன்னுரை மீளப் பிரசுரித்தார் யேசுராசா. தா. இராமலிங்கத்தின் கவிதைகளின் சிறப்பையும் அவை முன்மொழிந்த வெளிப்பாட்டு முறைமை களையும் பேச்சோசையையும் புழங்கு மொழியையும் இராமலிங்கம் பயன்படுத்திய விதத்தையும் அவர் பலருக்கும் விளக்கினார். இது இராமலிங்கத்தின் மீதான ஆர்வத்தைப் பலரிடமும் குவித்தன. ஆனாலும் எவரும் நேரில் தா. இராமலிங்கத்தைச் சந்திக்கவில்லை. இது ஒரு பெருங்குறைபாடே. ஒரு விதிவிலக்காக அவரை நண்பர் தா. விஷ்ணு தன்னுடைய நினைவுள் மீள்தல் என்ற கவிதை நூலின் வெளியீட்டுக்கு தா. இராமலிங்கத்தை அழைத் திருந்தார். அவர் அதில் உரையாற்றினார். அதுதான் அவர் இறுதியாக நிகழ்த்திய இலக்கிய உரை என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கவிதைகளை ‘புதுமெய்க் கவிதைகள்’, ‘காணிக்கை’ ஆகிய தொகுதிகளுக்குப் பின்னர் எழுதி நூலுருப் பெறாத கவிதைகளை ஒரு நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அதற்காக அவரிடமிருந்த அந்தச் சேகரிப்பிலிருந்து ஒரு பிரதியை எடுத்தும் கொண்டேன். அதில் மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலிருந்த கவிதைகள் உட்படப் பல நல்ல கவிதைகள் இருந்தன. அவற்றை இரண்டு தொகுதிகளாக்கலாம் என்று திட்டமிட்டோம். ஒரு தொகுதி அரசியல் சமூகம் சார்ந்த கவிதைகள். அடுத்த தொகுதி தா. இராமலிங்கத்தின் மெஞ்ஞானக் கவிதைகள். முதல் தொகுதிக் கவிதைகளை தொகுப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாண இடப் பெயர்வு வந்தது. அந்த இடப்பெயர்வோடு நிலைமைகள் மாறின. ஆனால் அவருடைய கவிதைப் பிரதியை வன்னிக்குக் கவனமாகக் கொண்டு போய்ச் சேர்த்தேன் என்ற போதும் தா.இராமலிங்கத்தைப் பற்றிய தொடர்புகள் இல்லாமற் போய்விட்டது. எனினும் அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அவருடைய இரண்டு புதல்வர்கள் வன்னியில் இருந்தார்கள். இரண்டு பேரும் மருத்துவர்கள். அதில் ஒருவர் பின்னாளில் வன்னியை விட்டுப் போய்விட்டார். அடுத்தவர் வன்னியின் இறுதிப் போர் வரையில் வன்னியிலேயே இருந்தார்.

2002இல் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது மீண்டும் நான் தா. இராமலிங்கத்தைச் சந்தித்தேன். முன்னரை விடவும் மெலிந்து போயிருந்தார. முதுமை தெரிந்தது. அதே அமைதி. அதே தியானம். இன்னும் கொஞ்சக் கவிதைகளை- தன்னுடைய தியான தரிசனங்களை எழுதியிருந்தார். படிக்கத் தந்தார். அப்போதுதான் அவருடைய கவிதைகளை நூலாக்கும் முயற்சியில் கல்வயல் வே. குமாரசாமி ஈடுபட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வேண்டுமானால் என்னிட மிருக்கும் கவிதைகளையும் நூலாக்கலாம் என்று அவருக்குச் சொன்னேன். தேவையில்லை. அதே கவிதைகள்தான் இப்பொது நூலாக்கப்படுகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையே அதைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்றார் கல்வயல் வே. குமாரசாமி.

நாட்கள் கடந்தன. தொகுதியை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தொகுதி வரவில்லை. பின்னர் சண்டை தொடங்கிவிட்டது. தகவல் எதுவும் இல்லை. அவருடைய மகன் கதிர் ஒருநாள் சொன்னார் சொன்னார் ‘அப்பா மல்லாவியில் இருக்கிறார்’ என்று. போர் மீளவும் ஆரம்பிப்பதற்கு முன்னர் கதிருடன் வந்து அவர் தங்கியிருக்கிறார். கதிர் மல்லாவி மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்தார். அதனால் அங்கே தா. இராமலிங்கமும் இருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபின்னர் நானும் நிலாந்தனும் தா. இராமலிங்கத்திடம் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். நாட்கள் கழிந்தன. ஆனால் அது கைகூடவில்லை. அதற்கிடையில் சண்டை வலுத்து இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

போர்க்கள நிலைமை எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கேள்விப்பட்டேன் தா. இராமலிங்கம் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்று. அவர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்திருந்தார். ஆனால் நினைவு மறதி அவரைப் பீடித்திருந்தது. நன்றாகத் தளர்ந்து போயிருந்தார். அங்கே வந்து சில நாட்களிலேயே எதிர்பாராத விதமாக அவர் அங்கே மரணமடைந்தார். போர்க்களப் பதற்றம், இடப்பெயர்வு நிலைமைகளில் அவருடைய இறுதி நிகழ்வு நடந்தது.

தா. இராமலிங்கத்தின் மறைவை அடுத்து அவருடைய 31 ஆவது நாள் நினைவையட்டி அவருடைய கவிதைகளை ஒரு நூலாக்கலாம் என்று அந்த நெருக்கடி நிலையிலும் மகன் கதிரும் அவருடைய நண்பர்கள் சிலரும் திட்டமிட்டு அந்த வேலைகளை என்னிடம் ஒப்படைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் பணிகளை இன்னொரு நண்பர் செய்திருந்தார்.

இறுதிவடிவத்தை நான் பார்வை யிடுவதாக இருந்தது. அந்தத் தொகுதிக்கான முன்னுரையை என்னை எழுதும்படி கேட்டிருந் தார்கள். மிகவும் நெருக்கடியான நிலையில் இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஆயினும் நான் அதற்கான முன்னுரையை எழுதிமுடித்தேன். புத்தக வேலைகளை முடிக்க வேண்டியது இனி அச்சகத்தின் பொறுப்பு. ஆனால் நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது.

அந்த நிலையில் புத்;தகத்தை அச்சிட்டு முடிக்கலாம் என்று தோன்றவில்லை. அதனால் அதை அந்த நிலையில் ஒத்தி வைத்துக் கொள்வதாகவும் பின்னர் நிலைமையின் போக்கைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீரமானித்தோம். நிலைமை மாறவேயில்லை. அது தீவிரமாகிக் கொண்டேயிருந்தது இறுதிவரை. தருமபுரம், விசுவமடு, வள்ளிபுனம், தேவிபுரம் வரையில் அவருடைய அந்தக் கவிதைத் தொகுதிக் கான முன்னுரையைக் காவிக் கொண்டேயிருந்தேன். ஆனால் இறுதியில் தொலைந்து போன என்னுடைய ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், நான் எழுதிய குறிப்புகள் எல்லாவற்றோடும் அந்த முன்னுரையும் தொலைந்து போயிற்று. மிஞ்சி யிருப்பது இந்த இழப்புகளைப் பற்றிய கவலைகள் தான்.


எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010


00
தா.இராமலிங்கத்தின் இரண்டு கவிதைத்தொகுதிகள்

1. புதுமெய்க்கவிதைகள் (1964)
2. காணிக்கை (1965)

Tuesday, November 15, 2011

சுழலும் வாள்களிடையே ஒரு அன்பின் கிண்ணம்





தீவிர அரசியல் வேட்கையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் வன்முறை மயமாகி, அளவுக்கதிகமாகக் கண்ணீரும் குருதியும் சிந்திய ஈழத்தின் பெரும் வெளிப்பாட்டுக் குரலாக இருப்பவர் வ.ஐ.ச.ஜெபாலன். 1970களின் பின்னரான ஈழ அரசியல், கலை, இலக்கிய சமூக வெளியில் ஜெயபாலனின் பங்கேற்புகள் அதிகம்; அவருடைய பாத்திரம் முக்கியமானது. அதேவேளை இது இடையறாத தொடர்ச்சியுமுடையது. ஈழுத்துக்கு அப்பால், தமிழகம் மற்றும் நோர்வே என வௌ;வேறு களச்சூழல்களில் அவருடைய வாழ்க்கை நகர்ந்திருந்தாலும் ஈழம் என்ற மையத்தை நோக்கியே ஜெயபாலனின் எண்ணங்களும் செயற்பாடுகளும் இருந்தன. மட்டுமல்ல, இப்போதும் அவை அவ்வாறே இருக்கின்றன. ஜெயபாலனின் இந்த நூலிலுள்ள நேர்காணல்களும் கட்டுரைகளும் இதற்கு சிறந்த ஆதாரம். தவிர, அவருடைய கவிதைகளும் கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ நிலவரத்தின் முழு மொத்த அடையாளமாக இருக்கின்றன.
ஜெயபாலனின் இந்த நாற்பது ஆண்டுகாலமும் முடிவற்ற விமர்சனத்துக்குரியவை.

குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் புகழுரைகளும் துதிகாடல்களும் எதிர்ப்பும் மறுப்பும் தண்டனைகளும் விலக்கல்களும் என்றமைந்தவை. ஈழ அரசியல் அப்படி, தீவிரம், அதி தீவிரம் என்ற கொந்தளிப்புகளுடனிருந்தது. இதன் காரணமாக சனங்களின் வாழ்க்கை மரணவெளியில், பலிபீடத்தில் குற்றுயிராக வைக்கப்பட்டது. இலங்கையின் இனப்பாகுபாடு உருவாக்கிய அரசியல் முரண்கள் சமூக முரண்களாகி வன்முறைகள் பெருக்கெடுத்தன. ஆனால், இவையெல்லாம் நடந்தபோதும் பலரையும்போல ஜெயபாலன் இவற்றை ஒற்றைப் பரிமாணத்துடன் அணுகவில்லை. பதிலாக, ஜனநாயகம், பன்மைத்துவம் என்ற அடிப்படையிலேயே தன் பார்வைகளையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்தார். இதற்காக அவர், அதிக விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளானார். இதேவேளை ஜெயபாலனின் நிலைப்பாடுகள், கருத்துகள், செயற்பாடுகளை எல்லாம் ஆதரித்தவர்களும் உண்டு. பாராட்டியவர்களும் உண்டு.

குறிப்பாக சிங்கள இனவாதத்தை எதிர்த்த ஜெயபாலன், சிங்கள மக்களை ஆழமாக நேசித்தார். அவர்களின் மீது பெரும்பாலான தமிழர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கவில்லை. அவர்களை எதிரிகளாக அவர் கருதியதுமில்லை. அவர்கள் மீது பகைமை பாராட்டியதுமில்லை. அதைப்போலவே முஸ்லிம்களின் மீதும் ஜெயபாலன் மிக அதிகமான அன்பையும் அதிகமான மதிப்பையும் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதைக் கண்டித்திருந்தார் ஜெயபாலன். அத்துடன் முஸ்லிம் மக்களிடம் அவர் தமிழ் மக்கள் சார்பாக மன்னிப்பையும் கேட்டிருந்தார். (இதற்கெல்லாம் அவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஏராளமான ஆதாரங்களுண்டு)

ஆனால், முஸ்லிம்களின் மீதான ஜெயபாலனின் ஈடுபாட்டை சில முஸ்லிம் படைப்பாளிகள் விமர்சித்ததுண்டு. சந்தேகத்துடன் அணுகியதுண்டு. பிற்காலத்தில் ஜெயபாலன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாகவும் செயற்படத் தொடங்கியதால் இந்த விமர்சனங்கள் எழுந்திருக்கலாம்.

என்றபோதும் அவற்றையெல்லாம் கடந்து அவர் தன்னுடைய நம்பிக்கை சார்ந்து தனது மனதை முஸ்லிம்களுக்கான நீதிக்காக ஒப்புவித்திருந்தார். ஜெயபாலனின் முஸ்லிம் மக்கள் மீதான கவனமும் மலைகத் தமிழர்கள் மீதான கரிசனையும் அவருடைய இளமைக்காலத்திலிருந்தே தொடர்ந்து வருவன. இவை தொடர்பாக அவர் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியுமிருக்கிறார். குறிப்பாக ‘முஸ்லிம் மக்களும் தேசிய இனப்பிரச்சினையும்’ என்ற அவருடைய நூல் 1985 இல் வெளியிடப்பட்டது. இவ்வாறெல்லாம் ஜெயபாலன் கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்காகவும் அவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்காகவும் தமிழ்த் தேசியவாதிகள் ஒரு சாராரிடம் அதிக கண்டனங்களையும் புறக்கணிப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஜெயபாலன் வலியுறுத்திய தமிழ்த்தேசியம் வேறானது. அது சாதி, மத, பிரதேச, இன வேறுபாடுகளைத் தவிர்த்தது. பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. விடுதலைப்புலிகளை அவர் விமர்சனத்தோடே ஆதரித்தார். இதனால், அவர்களும் ஜெயபாலனை அதிகம் நெருக்கமாகக் கொள்ளவில்லை. ஜெயபாலனின் இந்த நடைமுறைகள் பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவப்பாக இருப்பதில்லை. இப்போதும் இதுவே பிரச்சினை.

ஈழ அரசியலில் கருத்துரைத்தல் என்பது 1980 களின் பின்னர் மிகவும் அபாயகரமானதாக இருந்தது. ஏன் ஏறக்குறைய இப்போதும் இதுதான் நிலைமை. வெளிப்பாட்டுச் சுதந்திரமற்ற மூடுண்ட ஒரு சூழலே பொதுவாக ஈழ அரசியலில் நிலவியது. இதை மீறிக்கருத்துரைப்பவர்கள் ஒன்றில் கொலைக்குத் தலையைக் கொடுக்க வேண்டும். அல்லது நாட்டைவிட்டுத் தப்பியோடவேண்டும். அப்படித் தப்பியோடும்போது துரோகிப்பட்டத்தையும் சுமக்கவேண்டும். இத்தகைய நெருக்கடி ஜெயபாலனுக்கும் ஏற்பட்டது. ஆனால், இதில் மற்றவர்களை விட ஜெயபாலன் ஒரு வித்தியாசமான தன்மையுடன் இருந்தார். மற்றவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது நாட்டை விட்டு தப்பிச் சென்றார்கள். அப்படி இலங்கைக்கு வந்தாலும் அவர்கள் கொழும்புடன் நின்று விட வேண்டும். அதுவும் ரகசிய நடமாட்டத்துடனேயே.

ஆனால், ஜெயபாலன் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் எல்லா நெருக்கடிக்காலத்திலும் அவ்வப்போது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் வந்து போவார். அப்படி வந்து போகும் நாட்களில் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். சில மிகவும் அபாயகரமானவை. ஆனால் ஜெயபாலன் இந்த அபாயங்களைக் கடந்து நின்றார். குறிப்பாக இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த போது அவர் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் சந்தேகத்தின் பேரில் ஒரு தடவை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதற்காக பின்னர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஜெயபாலனிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. பின்னாட்களில், அவரை மதித்து அவர்களிற் பலர், நடந்ததுமுண்டு. என்றபோதும் புலிகளின் மீதான விமர்சனங்களையும் கண்டனங்களையும் சில வேளை அவர்களுடைய செயற்பாடுகளிலுள்ள நல்ல அம்சங்களுக்கான பாராட்டுகளையும் அவர் முன்வைக்கத்தவறியதில்லை.

புலிகளின் அரசியல், இராணுவச் செயற்பாடுகளின் முரண்பாடுகளும் குறைபாடுகளும் தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தையே பலவீனப்படுத்திவிடும் என்று ஜெயபாலன் முன்னரேயே தெளிவாகக் குறிப்பிட்டு அவற்றைச் சீர்செய்யும்படி வலியுறுத்தியிருந்தார். சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கான உபாயங்கள், புலம்பெயர் மக்களை அரசியல் மயப்படுத்துவது, பிராந்திய அரசியலின் தன்மைக்கேற்ற நெகிழ்ச்சியையும் வியூகங்களையும் கொள்வது என்பவை அவர் வலியுறுத்தியவற்றில் அடங்கும். சரி பிழைகளுக்கப்பால் ஏனைய இயக்கங்கள், அரசியற் கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ் மக்களின் அரசியற் சக்தியாக புலிகள் முன்னகர்ந்ததால் புலிகளின் பின்னடைவோ, வீழ்ச்சியோ தமிழ் மக்களை உடனடியாக மிக மோசமாகப் பாதிக்கும் என்று முன்கூட்டியே கூறிவந்தார் ஜெயபாலன். ஈழ அரசியலில் பிராந்திய சர்வ தேசிய அரசியலின் செல்வாக்கு எப்படியானது எனத் தனது கட்டுரைகளிலும் கடிதங்களிலும் விமர்சனங்களிலும் அவர் அவ்வப்போது வழங்கிய நேர்காணல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நேர்காணல்கள் அதற்கான சாட்சியம். மேலும், நான்காம் கட்ட ஈழப்போரின்போது அவர் எழுதிய கடிதங்களும் அறிக்கைகளும் ஒரு காலத்தில் வெளியிடப்படும்போது இது தெரியவரும்.

ஒரு குறிப்பிட்ட காலம் ஜெயபாலனின் கவனம் கவிதைகளில் இருந்ததை விடவும் அரசியலிலேயே மையங்கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் அரசியலாளரல்ல. ஆனால், அரசியற் பிரச்சினைகளிலிருந்தும் அரசியற்பிரக்ஞைகளிலிருந்தும் அவரால் ஒதுங்க முடியவில்லை. ஈழப்படைப்பாளிகள் பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை அல்லது பொதுக்குணமாக இது இருந்தாலும் ஜெயபாலனிடம் இது சற்றுத் தூக்கலாகவே இருந்தது. இதனால் அவரை நேர்காணும்போது தனியே படைப்பாளி என்று மட்டும் அணுகாமல் ஈழ நிலவரத்தைப் பற்றிய கேள்விகளையும் கேட்பார்கள்.

எனவே இந்த வகையில் நான்காவது ஈழப்போரின்போது ஜெயபாலன் வன்னியிலிருந்த தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் ஏராளம். அவை மிக முக்கியமானவை. அந்தக் கடிதங்கள் உரிய தரப்பினரால் கவனங் கொள்ளப்பட்டிருந்தால் இலங்கைத்தீவின் அரசியல் இன்றுள்ளதைப் போல இருந்திருக்காது.

அரசிலைச் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் நடைமுறை சார்ந்து அணுக வேண்டும். அறிவு பூர்வமாக அணுகப்படாத வெறும் உணர்ச்சி வசப்பட்ட அரசியலின் விளைவுகள் மிகப்பார தூரமான விளைவுகளையே தரும் என்ற வரலாற்றுப்பாடத்தை அவர் ஜெயபாலன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதும் எந்தப் பயனும் அற்றுப் போனது மிகக் கவலையளி;ப்பதாக அமைந்து விட்டது.

தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கான ஆயுதப் போராட்டத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அனுபவமும் பங்களித்த பாத்திரமும் ஜெயபாலனுக்குண்டு. அவர் இயங்கிய அமைப்புக்குள்ளேயே ஏராளம் மோதல்கள். (இதுதான் ஈழப் போராட்டத்தின் அவலமே!) அதையெல்லாம் கடந்து வந்தபின்னும் அதற்கு வெளியிலிலும் அவர் சார்ந்த இயக்கத்தின் பேராலான பார்வைகளும் அணுகுமுறைகளும் ஜெயபாலனைச் சுற்றி நீண்டகாலமிருந்தன. இவ்வளவிற்கும் ஜெயபாலனோ அவமைப்புக்குள்ளேயும் சரி வெளியேயும் சரி ஒரு முரணியாகவும் ஒரு தனியனாகவும் ஒரு வெளியாளானாகவும் ஒரு சுயேச்சையாளனாகவுமே இயங்கினார். இதுதான் ஜெயபாலன். இதுதான் அவருடைய பலமும் பலவீனமும். இதுதான் அவரை இன்று வரையிலும் பாதுகாத்திருக்கிறது. இதுவே பல அபாயங்கள், நெருக்கடிகளிலிருந்தெல்லாம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது.

ஜெயபாலன் எல்லாத்தரப்பினருடனும் பழக்கமுடையவர். அவருக்குப் புதுவை இரத்தினதுரையும் நண்பர். ஷோபாசக்தியும் நண்பர். திருமாவளவனும் நட்பு. பௌசரும் நண்பர். ஆனால் அதற்காக அவர் அங்கெல்லாம் தன்னுடைய கருத்துகளை விட்டுக்கொடுத்ததில்லை. எதையும் விவாதிக்காமல் விட்டதுமில்லை. மூத்த இளைய வயதுடைய எல்லோருடனும் ஒரேமாதிரி பழகும் சுபாவமும் இயல்பும் அவரை இன்னும் பலருடன் நெருக்கமாக்கியது. உரிமையோடு பழகும் இயல்பு இதில் முக்கியமாது. இதனால், அவருக்கு இளைய நண்பர்கள் ஏராளமுண்டு. அதேவேளை ஜெயபாலனின் இந்த அதீத உரிமை எடுப்பு அவரையிட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியதுமுண்டு.

ஜெயபாலனை இவர் யார், எப்படியானவர், என்ன நோக்கங்களுடன் இயங்குகிறார் என்று சந்தேகித்தவர்கள் இருக்கிறார்கள். ஜெயபாலனைக் குற்றஞ்சாட்டியவர்கள், அவதூறு செய்தவர்கள், குறைசொன்னவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், அதே அளவுக்கு அவரை ஆதரித்தவர்களும் விரும்புகின்றவர்களும் உள்ளனர். அவரை நேசித்தவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் அவர் எந்த வளையங்களுக்கும் எந்த நிறங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதவர் என்பதே. அவர் பல வண்ணமுடைய வானவில். அவரிடமுள்ள சிறப்பு இந்தக் குறிப்பில் சுட்டப்பட்டுள்ளதைப் போன்ற வெளிப்படையே.

1970 க்குப்பின்னரான ஈழ வரலாற்றில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல், ஊடகம் என்ற இயங்கு தளங்களில் சேரனுக்கும் ஜெயபாலனுக்கும் சமனிலையான வகிப்புண்டு. இது வெறும் வாய்ப்பாட்டு ரீதியாக பலரும் சொல்வதையும்போல மேலோட்டமாக இங்கே சொல்லப்படவில்லை. அதிகாரத்துக்கெதிரான குரல்களாகவும் ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தையும் நிலைப்படுத்துவதற்கான போராளிகளாகவும் இவர்கள் இருவரும் கடந்த முப்பதாண்டுகளாகச் செயற்பட்டிருக்கிறார்கள். ( இதற்கு அடுத்த தலைமுறையிற் பலர் இருக்கின்றனர்). இதேவேளை தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இவர்கள் ஆதரித்தவர்கள். ஆனால், போராட்டத்தின் பேராலான எத்தகைய வன்முறைகளையும் நீதி மறுப்புகளையும் மறுத்தும் வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அந்த நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறார்கள். சேரனின் இயங்கு முறையும் இயங்கு தளமும் சற்று வேறு பட்டது. அது பெரும்பாலும் அறிவுபூர்வமானது. ஜெயபாலனுடையதோ அறிவுபூர்வமானதுடன் சனங்களுடன் நேரடித் தொடர்புடையது. எங்கும் அலைந்து திரியும் ஜெயபாலனின் தனி இயல்பு இதற்குக் காரணமாக இருக்கலாம். எப்படியோ இந்த இருவரும் அனைத்துவகை அராஜகங்களுக் கெதிராகவும் இயங்கியவர்கள். இதில் சேரனின் நேர்காணல்களும் கட்டுரைகளும் ஏற்கனவே நூலுருப் பெற்றுவிட்டன. ஜெயபாலனுடைய நேர்காணல்களும் கட்டுரைகளும் இப்போதுதான் தொகுக்கப்பட்டு நூலாகின்றன. இது மிக மகிழ்;ச்சியான தருணம். அதுவும் ஈழ அரசியற் சூழல் முற்றாகவே மாறும் தவிப்புடனிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தத் தொகுப்பு பல விசயங்கள் குறித்தும் திரும்பிப்பார்ப்பதற்கும் சிந்திப்பதற்கும் வாய்ப்பாகும்.

இந்தக் கட்டுரைகளும் நேர்காணல்களும் வெளிவந்த காலத்தில் இவை கூடுதலான கவனத்தைப் பெற்றவை. கூடுதலான கண்டனங்களையும் பாராட்டுதல்களையும் பெற்றவையும்கூட. இவை இப்போது நூலாக்கப்படுகையில் ஏறக்குறைய அத்தகைய ஒரு மீள்நிலை ஏற்படும். ஆனால் இதுவும் ஜெயபாலனுக்கு வெற்றியாகவே அமையும். அதேவேளை அவர் மீண்டும் தன்னையும் தனது பாதையையும் பயணங்களையும் திரும்பிப் பார்த்துக்கொள்வதற்கும் உதவும்.

குறிப்பாக நான்காம் கட்ட ஈழப்போர்க்காலத்தில் வெளிவந்திருந்த நேர்காணல்கள் இங்கே முதன்மையடையும் என நம்புகிறேன். இந்த நூல் ஜெயபாலனை இன்னும் துலக்கமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால், அதற்குரிய ஞானக்கண் நமக்கு வாய்க்க வேண்டும்.

பல்லாயிரம் எதிரெதிர் முகங்கொண்டு சுழலும் வாள்களிடையே அன்பின் கிண்ணங்களையும் மலர்ச் செண்டுகளையும் அமைதிப்புறாக்களையும் கொண்டொரு மெய்யாளன் செல்வதென்பது சாதாரணமானதல்ல.

ஆனால், அத்தகைய சவால்கள் நிறைந்த பயணத்தைத்தான் ஜெயபாலன் எப்போதுமே செய்கிறார். இது அவர் ஏற்றுக் கொண்ட அல்லது அவர் விரும்பிய வாழ்க்கைமுறையின் பயணமாக இருக்கலாம்.

இந்தப் பூமியின் எல்லாச் சவால்களும் எப்படியோ பிறரை வளமாக்கவே அதிகமதிகம் பயன்பட்டிருக்கிறது. அந்தவகையில் ஜெயபாலன் எதிர்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் சவால்களும் பிறருக்கானவையே.


- அண்மையில் வெளிவரவுள்ள வ.ஐ.ச.ஜெயபாலனின் நேர்காணல்கள் தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை.
0

Monday, November 14, 2011

ஒரு கவனக்குறிப்பு

புல்வெளி - என்ற என்னுடைய இந்தத் தளம் 2009 மே 23 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதுவரையிலும் வேறொரு நண்பரே பதிவுகளைச் செய்திருந்தார். தொடர்ந்த பதிவுகளைச் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் பதிவேற்றங்களை நிறுத்தியிருந்தார்.


முன்னர் கூட நான் எழுதிய விசயங்கள் அத்தனையும் பதிவேற்றப்படவில்லை. இந்தத் தளத்தை ஒரு மாதிரித் தளமாகவே ஆரம்பித்திருந்தேன். முறைப்படுத்தவோ, முழுமைப்படுத்தவோ முடியவில்லை. தொடர்ந்து இதை நெறிப்படுத்தவும் பதிவேற்றவும் வாய்க்கவும் இல்லை. தவிர, இதைப் பார்க்கக்கூட வசதிப்படவில்லை. மேலும் பல முக்கியமான விசயங்களை எழுதவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், அவற்றை அப்போது பதிவேற்றம் செய்வது உகந்ததல்ல என நண்பர்கள் சொன்னார்கள்.

இந்த நிலையில் தொடர்ந்தும் இதை இயக்குவதில் சிரமங்களே உருவாகும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே பதிவேற்றும் நண்பரிடம் இதை நிறுத்தி வைக்கும்படி கேட்டேன். அவர் நிறுத்தினார்.

ஆகவே, அதுவரை பதிவேற்றங்களைச் செய்த அந்த நண்பருக்கு என்னுடைய நன்றிகள். அவருடைய சம்மதத்தைப் பெறமுடிந்தால் அவருடைய பெயரை நன்றியுடன் இங்கே வெளிப்படுத்த முடியும்.

எனினும் அதுவரையிலும் பதிவேற்றம் செய்த அவருக்கு நன்றிகள்.

தொடர்ந்து இந்த்த்தளத்தை செயற்படுத்தலாமா என்று பார்த்தபோது இதற்கான கடவு எண் மறந்து விட்டது. குறிப்பாக எனக்கும் அந்த நண்பருக்கும்.

பிறகு, நீண்ட பல முயற்சிகளுக்குப் பிறகு கடந்த வாரம் தற்செயலாக நினைவுப் பொறியில் அது தட்டுப்பட்டது.

விளைவு - மீண்டும், புல்வெளி.

ஆனால், பரீட்சார்த்தமாக.

வாசிப்பாளர்கள் ஊக்கப்படுத்தினால் தொடரலாம்...

நன்றி.

பின்னர்,

Saturday, November 12, 2011

தேவன் வருவார்


காய்ந்து, கறள் கட்டின மாதிரி இருந்த இரத்தைக் கழுவினான் அலோஸியஸ். அது கையை விட்டுப் போக மறுத்தது. வாய்க்கால் மண்ணை அள்ளிக் கைகளைத் தேய்த்தான். இரத்தக்கறள் அல்லவா. லேசில் போகமமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தது. மணந்து பார்த்தான். இரத்த வெடில். ‘நாய்ச்சீவியம்’ என்று பட்டது. சவுக்காரமோ ‘சேவ்எக்ஸோ’ போட்டுக் கழுவினால்தான் வெடில் போகும். மிஞ்சியிருக்கிற கறளும் தொலையும். ‘சேவ்எக்ஸ்க்கு’ எங்கே போவது?

பொலித்தீன் பையில் சுற்றியிருந்த அந்த அழுக்குப்படிந்த சவுக்காரத்தை எடுத்துக் கைகளைத் தேய்த்தான். கைகளைக் கழுவிய பிறகு மறுபடியும் மணந்து பார்த்தான். இப்போது சோப்பின் மணமே மூக்கிலேறியது. எத்தனை வருசமென்றாலும் ‘சன்லைற்’ சோப்பின் மணம் மாறவில்லை. அதே மணம். அதே தரம். முப்பது வருசமாக அவனுடைய மூக்கு அதைப்பழகியிருக்கிறது.

கால்களில் தெறித்திருந்த கறைகளையும் கழுவினான். தினமும் கொலை. தினமும் குருதி. அலோஸியஸ்க்கு இதெல்லாம் சாதாரணம். ஆனால் கொல்லும் போது வெறுப்பாகவும் இரக்கமாகவும் இருக்கிறது. அதேவேளை அதில் ஒரு ருஸியும் உண்டு.

ஆனால், எல்லாம் முடிந்து வெளியே போகும்போது கிளீனாகப் போக வேணும். தனக்கிசைவாக இரண்டு உலகங்களை அதற்கேற்றமாதிரி வைத்திருந்தான். வீட்டுக்குப் போய் உடுப்பை மாற்றிக் கொள்ளலாமா என்று யோசித்தான். ஆனால், உடல் சூட்டில் கொதித்தது. கடந்த இரவு குளிப்பதற்கு நேரம் இல்லை.

வாய்க்காலில் தாராளமாகத் தண்ணீர் ஓடுகிறது. தெளிந்த நீர். அதற்குள் ஒரு கூட்டம் மீன்கள். அவனிடம் நெருங்குவதும் பிறகு மிரண்டோடுவதுமாக. ஒரு மான் கூட்டத்தைப் போல அவை மிரட்சியோடு இருந்தன. ஒரு கணம் சிறுவர்கள் கூட்டத்தைப் போலவும் இருந்தது. ஏதோ வம்பு செய்வது போல வருவதும் பிறகு மிரண்டோடுவதுமாக. எல்லாம் தூண்டிலில் சிக்கும்வரைதான்.

அவனுக்கு மீன்களைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது.

வாய்க்காலில் விழுந்து குளித்தால் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது நேரம் போதாது. சந்தையில் வழமையை விட நேரம் பிந்திவிட்டது. பேசாமல் முகத்தையும் மேல் உடலையும் கழுவிக் கொண்டு புறப்பட்டான்.

தொண்டை வரண்டு தாகமெடுத்தது. இனி இந்திரனிடம் போக முடியாது. நேரமாகி விட்டது. சூரியன் பனைக்கு மேலே. உச்சியில். இந்திரன் ‘கோப்பிறேஷனு’க்குப் போயிருப்பான். ‘கோப்பிறேஸ’னில் பழைய கள்ளைக் கலந்து வைத்திருப்பார்கள். புலிகளின் வடிசாலை குண்டு வீச்சில் அடிபட்ட பிறகு, வடிசாலைக்குப் போகும் பழைய கள்ளை மறுபடியும் கலக்கிறார்கள். பச்சைப் புளி. கள்ளின் சுவையையே தெரியாமலாக்கி விட்டார்கள். வாயையும் வயிற்றையும் பழுதாக்குவதுதான் மிச்சம். ஆனால் சுளையாகக் காசைப் பிடுங்கி விடுகிறார்கள்.

‘ரண்டு போத்தலைத் தனியா எடுத்து வை’ என்று எத்தனை தடவைதான் சொன்னாலும் இந்திரன் நேரம் பிந்தினால் எடுத்து வைக்க மாட்டான். சரியான தொடை நடுங்கி. கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இவனைப்போல நடுங்கிச் சாகும் ஆளை அலோஸியஸ் தன் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. பரதேசி நாய். ஆனால் தகப்பன் இவனை விட நேர் மாறு. என்ன மாதிரி அவன் இருந்தான்!

“மடத்தல் ரத்தினம்“ என்றால், அந்த நாளையில் யார்தான் பயப்பட மாட்டார்கள். எந்தப் பெரிய ஆளுக்கும் அவனைப் பற்றி ஒரு பயம் உள்ளுர ஓடிக்கொண்டிருக்கும். ரத்தினத்தின் அண்ணன் தம்பிகள் ஆறு பேரும் வெட்டுக் கொத்துக்காரர்கள். ஆனால், அந்தக் குடும்பத்தில் படு சுவாகியாக, ஒரு பசு மாட்டைப் போல வந்து பிறந்திருக்கிறான் இந்திரன்.

சீவுகிற நேரம் போனால், ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு ஐந்தைக்கூட தருவான். வயிறு முட்டக் குடிக்கலாம். ஆனால், யாருக்கும் ஆள் காட்டக் கூடாது. காட்டினால் தொலைந்தான். பாதிக் கள்ளை வாங்கிக் கொண்டு ‘போய் வாருங்கள்’ என்று அனுப்பி விடுவான். பிறகு கொஞ்ச நாளைக்கு அவனிடம் அவர்கள் நெருங்க முடியாது. அவனைக் கோவிக்கவும் முடியாது. சாதுவல்லவா!

‘ரண்டை எடுத்து வையடா’ என்றால், அதற்குச் சம்மதியான். அந்த மெல்லிய உருவத்தில் இத்தனை நிதானமா என்று அலோஸியஸ் போதையில் கூட வியந்திருக்கிறான். இருக்காதா பின்னே. சட்டத்துக்கு மாறாக எப்படியோ தந்திரமாக எல்லோருக்கும் கள்ளைக் கொடுத்து விடும் ஆளை எப்படி மறுத்துப் பேசமுடியும்?

ஆனால், சட்டத்தைத் தூக்கிக் கொண்டு வரும் அவனுடைய அதிகாரிகளிடம் அவன் சிக்குவதில்லை. எல்லாம் அவனுடைய சாதுரியம். யாரோடும் அவன் வாதிட்டதில்லை. தான் நினைத்ததை எப்படியோ செய்து விடுவான். அதுவும் மற்றவர்கள் கோபப்படாதமாதிரி.

பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு தவறணைக்கே போனான் அலோஸியஸ்.

தூரத்தில் வரும்போதே தெரிந்தது சனக்கூட்டம். இண்டைக்கும் வரிசைதானோ என்று யோசித்தான். இப்போதே தாகம் வாட்டுகிறது. இதற்குள் கியூவிலும் நிற்பதென்றால்? பூழல் வேலை. இந்தப் பழங்கள்ளுக்கு ஒரு கியூ. நல்லகாலம் பெண்டுகள் இல்லை. அவையளும் கள்ளுக்குடிக்கத் தொடங்கியிருந்தால் இப்ப கதையே வேறமாதிரியிருக்கும். இப்போதே அடிபிடி வேறற. அதை விட கட்டைப் பூபாலனின் அட்டகாசம், தாங்கேலாது. தான் ரண்டு மாவீரரின் தகப்பன் என்று சொல்லிக் கொண்டு, தனக்குத் தான் முன்னுரிமை என்று நிற்பான். ‘ஒரு நாளைக்கு இந்தச் சேட்டைக்கு மூஞ்சையைப் பொத்திக் குடுக்காமல் விடமாட்டன்’ என்று அலோஸியஸ் மட்டும் ஆறேழு தடவை தன்னுடைய தொடையில் ஓங்கிக் குத்தியிருக்கிறான்.

தாகத்தில் இப்போதே நாக்குப் புரள மறுத்தது. மனதில் எரிச்சல் கெம்பியது. ஆனாலும் வேறு வழியில்லை. கியூவில் நிற்கத்தான் வேணும்.

கிட்ட வந்தபோது, ஒரே அமளியாக இருந்தது. இரைச்சல். வசையும், திட்டும், கெஞ்சுதல்களும் கோபமும் கொந்தளிப்பும் நிறைந்த இரைச்சல். உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒவ்வொரு முகங்களும் தவித்தன. கள்ளின் மணத்தோடு அவர்களின் அந்த உணர்ச்சிச் சுழிப்புகளைக் கண்டு அலோஸியஸ் ஆச்சரியப்பட்டான்.

பள்ளிக் கூடத்திலும் சந்தையிலும் கோப்பிரேஷனிலும் ஏன் இந்த இரைச்சல் எப்போதுமேயிருக்கிறது. அப்படி என்னத்தைத்தான் பறைந்து தள்ளுகிறார்களோ!

அலோஸியஸ் தவறணைக்குள் நுழைந்த போது கட்டைப் பூபாலன் கள்ளோடு நின்று இழித்தான். அலோஸியஸ் சிரிக்காமல் முகத்தைக் கடுப்பாக்கினான். தவறணைக்கு அருகில் நின்ற நாவல் மரத்தின் கீழே நின்று ‘றிச்’மணியம் அலோசியஸைக் கூப்பிட்டான்.

‘இஞ்ச வா, அலோஸியஸ். ரண்டு வைச்சிருக்கிறன். வறுவலைக் கொண்யுடு வா”

சைக்கிளை வேலியோரமாகச் சாத்தி விட்டு, தூக்குப் பையைக் கழற்றி எடுத்தபடி மணியத்திடம் போனான் அலோஸியஸ். அந்தப் பையுக்குள் மாட்டு ஈரலில் வறுத்த வறுவல் இருந்தது.

‘றால் போட்டு சுறாப்பிடிக்கிறாய், என்ன? பாப்பம், எத்தினை நாளைக்கு உந்தக் கொண்டாட்டம் எல்லாம்” என்று மணியத்தைப் பார்த்து எரிந்தான் நாகம்.

அடேய், அலோஸியஸிட்ட உந்தப் புலுடாவெல்லாம் வாய்க்காது. எந்தப் பயறும் அவனிட்ட அவியாது” என்றான் மணியம் பதிலுக்கு. அலோஸியஸ் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையாகச் சிரித்தான். ஆனால், அவன் வாய் திறக்கவோ, பல்லுக் காட்டவோ இல்லை. இரண்டு பேரும் எப்படியோ தன்னை எதற்காகவோ மதிக்கிறார்கள் என்று பட்டது அவனுக்கு. அவன் சேர்ட் கொலரை பின்னுக்கு இழுத்து விட்டான். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, கண்களை மூடியவாறு நின்ற நிலையிலேயே ஒரு போத்தலை உள்ளே இறக்கினான்.

வாயைத் துடைத்தபடி தூக்குப் பையுக்குள்ளிருந்து, ஈரல் வறுவலையும் இறைச்சிக் கறியையும் எடுத்து வெளியே பூவரசமிலையில் பரப்பி வைத்தான் மணியம். நாகம் எழுந்து வந்து அருகில் குந்தி, வறுவலில் ஒரு துண்டை எடுத்துக் கடித்தான். அவனுடைய முககம் பன்றியின் முகத்தைப்போல சுருங்கி விரிந்தது.

‘தாயோளி உனக்கு வழியிற நாக்கு. ஆனால், கதை மட்டும் பெரிசு” என்ற சினந்தான் மணியம். வெளியே வெயில் அனலடித்துக் கண்ணைக் கூசியது.

நாகத்தை மணியத்துக்குப் பிடிக்காது. அவனுடைய சரித்திரத்தில் அரைப் போத்தல் கள்ளு யாருக்கும் வாங்கிக் கொடுக்காதவன். ஐம்பது சதம் செலவழிக்காதவன். பத்து ரூபாயைப் பொக்கற்றுக்குள் வைக்காதவன். ஆனால், தினமும் கோப்பிறேஷனுக்கு வந்து நான்கு ஐந்து போத்தல் கள்ளை வயிற்றுக்குள் இறக்குவான். இறக்கி விட்டு தள்ளம் பாடியபடி அங்கு மிங்குமாக அலைவான். இல்லையென்றால் ‘விகரை’ உள்ளே தள்ளுவான். இதற்குத் தோதாக பொரியலோ றாலோ கரம் சுண்டலோ தின்பான். யாரிடமும் கூசாமல் எதையும் கேட்பான். எவருடைய சேர்ட் பொக்கற்றிலும் சொல்லாமற் கொள்ளாமல் கை வைப்பான்.

ஆனால் ஒன்று, களவு கிடையாது. ஆக அது ஒன்றுதான் நாகத்தின் பிளஸ் பொயின்ற். பொய் தாராளம். பொய்யில்லாமல் அவனால் ஒரு நிமிசம் கூட வாழ முடியாது. நாகத்தின் வார்த்தையில் உண்மையை ஒருவன் கண்டு பிடித்தால் அவனுக்கு “நோபல் பரிசு“ குடுத்துப் பாராட்டலாம்.

நாகம் எதைப்பற்றியும் பொருட்படுத்தவில்லை. கூசாமல் வறுவலை எடுத்துத் தின்று கொண்டிருந்தான். அலோஸியஸ் நூறு ரூபாய்த் தாளை எடுத்து இரண்டு போத்தல் கள்ளு வாங்கி வரும்படி நாகத்திடம் கொடுத்தான். நாகம் குண்டி மண்ணைத் தட்டிவிட்டு, எழுந்து போனான். கள் வாடை எங்கும் வீசியது. மரம், செடி, கொடி, வெயில், நிழல் எல்லாத்திலும் அது மணத்தது.

கிப்பி இறைச்சியைப் பொரித்துக் கொண்டிருந்தான். கள்ளு வாய்க்கு இதமாகப் பொரிப்பதில் அவன் பக்கா ஆள். கள்ளின் மணத்தோடு பொரியல் மணமும் கலந்து மூக்கைப்பிடுங்கியது. நாக்கில் ஊறியது எச்சில். சுவை அறிந்த மனம் அலைக்கழிக்கும் மணம்.

‘மாடுகளின்ர விலை நல்லாக் குறைஞ்சிருக்காம். மல்லாவி, பாண்டியன் குளத்தில ஒரு மாடு ஆயிரத்தைநூறு, ரண்டாயிரத்துக்க அவிழ்க்கலாம் எண்டு நவரத்தினம் சொன்னான்” என்றான் மணியம்.

“மாட்டின்ர விலை குறைஞ்சும் இறைச்சி விலை ஏன் குறையேல்ல எண்டா கேக்கிறாய்” என்றான் அலோஸியஸ்.

“பின்ன, சரி அரைவாசிக்கும் குறைவாக மாடுகள் விலைப்படுகுது. பிறகேன் இறைச்சி விலை குறையேல்ல?” கொஞ்சம் ஆவேசமாய்க் கேட்டுக் கொண்டே கண்களை மூடிக் கள்ளை உறிஞ்சினான் மணியம்.

“உனக்கு நாட்டு நடப்புத் தெரியாதா? நாங்களா விலையைத் தீர்மானிக்க முடியும்? ஆமிக்காரர் வாறாங்களெண்ட பயத்தில சனங்கள் எல்லாத்தையும் அறாவிலைக்கு விக்குதுகள். இயக்கம் வாங்குது. எங்களுக்கு பதினைந்தாயிரம், பதினாறாயிரம் எண்டு பழைய விலைக்கே தாறாங்கள். நாங்கள் என்ன செய்ய ஏலும்?”

மணியம் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான். அவன் ஆழமாக யோசிப்பதைக் கண்கள் காட்டின. அதில் வன்மத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. பற்களைக் கறுவினான். ஒரு காலமும் இந்தச் சிக்கல் தீராது. எந்த மன்னனாலும் இதைத் தீர்க்க முடியாது. எந்த விண்ணனாலும் இதை மாத்த முடியாது’ என்று பட்டது அவனுக்கு. நாகம் கள்ளோடு வந்தான். அவனைத் தொடர்ந்து திட்டிக் கொண்டு பின்னால் அருந்தவலிங்கமும் வந்தான். அருந்தவலிங்கம் நன்றாகக் கறுத்து வாடியிருந்தான்.

“என்ன கோலமடா, உது?” அருந்தவலிங்கத்தைப் பார்த்துக் கேட்டான் நாகம்.

“மச்சான், உன்னை மாதிரி ஆளில்லை நான். பார், இண்டைக்கும் எதுக்கும் தயாராகத்தானிருக்கிறன்” என்று நெஞ்சை நிமிர்த்திக் காட்டினான் அருந்தவலிங்கம். ஒடுங்கிய நெஞ்சு விரிய முடியாமல் திணறியது.

“போடா வக்கறுந்தவனே! இப்பவும் ஆற்றை தலையைக் குத்தினாயோ! ஆற்றை காலை நக்கினோயோ!” என்றான் நாகம்.

அலோஸியஸ் புருவங்களைச் சுருக்கி அருந்தவலிங்கத்தைப் பார்த்தான். அருந்தவலிங்கம் நெளிந்தான். ஆனால் அவனுடைய முகத்தில் வெறுப்பு ஏறியது நெருப்பாய். அலோஸியஸ் அதைப் பார்த்தான்.

“கதைக்கிறதை அளந்து கதை. ஆரோட கதைக்கிறன் எண்டதை யோசிச்சுக் கொள்” அருந்தவலிங்கம் எச்சரித்தான். ஆனால் உடைந்து இழுபட்ட குரலை அவனால் மறைக்க முடியவில்லை. அது தளர்ந்து இழுபட்டது.

“ஓகோ அப்பிடியோ சங்கதி? ரண்டு கிழமை புலிவேசம் போட்டவுடன குணம் மாறீட்டுது மச்சானுக்கு” என்றான் நாகம். நாகத்தின் கிண்டல் எப்போதும் சர்வதேசத்தரம் வாய்ந்தது. அவனிடம் வாயைக் கொடுத்தால் அவ்வளவுதான். எதிராளியைக் கந்தலாக்கி விடுவான். கதைக்குக் கதை. சொல்லுக்குச் சொல். கொழுவிக் கொழுவிக் கதைத்துக் கொண்டேயிருக்கும் பேர் வழி. அதனால் அவனோடு யாரும் இந்த மாதிரிக் கதைப்பதில்லை. என்ன கஸ்ர காலமோ தெரியாது, இப்ப அருந்தவலிங்கம் மாட்டியிருக்கிறான். அதுவும் நாகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு. விதி யாரைத்தான் பாவம், பரிதாபம் பார்த்து விட்டது?

“மச்சான் மரியாதையாக் கதை. அளவுக்கு மீறினால் பிறகு?.... நான், ஆரெண்டும் பாக்க மாட்டன்”

“என்ன புடுங்குவாய்? மசிர். இல்லக் கேக்கிறன், உன்னால என்னத்தையடா புடுங்க முடியும்?.....யாண்டி. நீ முந்தி இயக்கத்தில இருக்கேக்க எத்தின பேருக்கு தகடு குடுத்தனி எண்டு தெரியாதே? உன்னால எத்தின பேர் துண்டு குடுத்துப் போட்டு வெளியில வந்தாங்கள் தெரியுமே! போதாக் குறைக்கு எல்லாரையும் கலைச்சுப் போட்டு நீயும் விலகினாய். இப்ப பேந்தும் சேந்து கொண்டு எங்களுக்கென்ன வாலாட்டுகிறாயா?” நாகம் கெம்பினான்.

அலோஸியஸ்க்கும் மணியத்துக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மணியம் எதுவோ சொல்ல வாயெடுத்தபோது அலோஸியஸ் அதைத்தடுத்தான். மணியம் குடிப்பானில் பாதிக்கு கள்ளை நிரப்பிக் கொடுத்தான் அலோஸியஸிடம். பொரித்த இறைச்சியை விரித்து நாகத்திடம் நீட்டினான். நாகம், நாகம் என்று பெயர் வைத்திருக்கிறானே தவிர, அவனிடம் பாம்புக் குணமெல்லாம் கிடையாது. ஆனால், அருந்தவலிங்கம் பாம்பு. விசப்பாம்பு. தருணம் பார்த்துக் கொத்துவான்.

அருந்தவலிங்கத்தின் முகம் கறுத்து வெளிறியது.

“அண்ணை, உதென்ன பேய்க்கதை. ஊரில உலகத்தில இல்லாத காரியத்தையா நான் செய்தன். இயக்கத்தில தகடு வைக்கிது எண்டதென்ன புதுசா? நான் எனக்குச் சரியெண்டதைச் செய்தன். அதைக் கேக்கிறதுக்கு இயக்கம் இருக்கு. தலைமை இருக்குது. இவர் ஆர் அதையெல்லாம் கேக்கிறதுக்கு. மண்ணாங்கட்டி” கெஞ்சுவதைப்போலவும் கோபிப்பது போலவுமான தொனியில் மணியத்தைப் பார்த்துச் சொன்னான் அருந்தவலிங்கம். மணியமோ அலோஸியஸோ எதுவும் பேசவில்லை. அலோஸியஸ் மேலும் கீழுமாகத் தலையை ஆட்டினான்.

“அருந்தவலிங்கம் கதை விடாதை. உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியும். நீ என்னவெல்லாம் செய்தனி எண்டும் எங்களுக்குத் தெரியும். இப்ப எல்லாருந்தான் இயக்கம். எங்களுக்கு நீ வாலாட்டேலாது. நாங்களும் பயிற்சி எடுத்திருக்கிறம். நானும் லைனில நிண்டவன்தான். அதைவிட நீ என்ன கூடுதலாக் கிழிச்சனி?” நாகம் மீண்டும் அருநந்தவலிங்கத்தை வம்புக்கிழுத்தான். அப்போது ஏதோ என்னவோ என்று எல்லோரும் அமளிப்பட்டார்கள். இரைச்சல். உயர மேலே குண்டு வீச்சு விமானங்கள். ஆனால் தலையைக் கடந்து போய்விட்டன. என்றாலும் வட்டமிட்டன.

அடுத்த ரவுண்ட் வருவதற்குள் எல்லோரும் எங்கேயோ பாய்ந்தோடினார்கள். உயிர் அல்லவா. அதைக் காப்பாற்றியாகவேண்டும். அந்தப் போதையிலும் உயிராசை பெரிதாகவே இருந்தது. அலோஸியஸ் மணியத்தை இழுத்துக் கொண்டு பக்கத்திலிருக்கிற பங்கருக்குள் பாய்ந்தான். அருந்தவலிங்கம் கள்ளுப் போத்தலோடு வயல் வெளிக்குள்ளால் ஓடிக் கொண்டிருந்தான். நாகம் எங்கே? கதிரவேலு சைக்கிளுக்கடியில் தடக்குப்பட்டு விழுந்து கிடந்தார். எழும்பாமல் அப்படியே குப்புறப் படுத்திருந்தார். அதுதான் அவருடைய பாதுகாப்பு ஏற்பாடு.

விமானங்கள் உறுமி, ஊழையிட்டு, குத்துக் கரணமடித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. அடிவயிறு கலங்கியது மணியத்துக்கு. வயிற்றில் கத்தி பாய்ந்ததைப் போலிருந்தது அலோஸியஸ்க்கு. இன்னும் குண்டுகள் போடப்படவில்லை. அதுவரையில் குலை நடுக்கம்தான். போட்டு விட்டால் போய்விடுவார்கள்.

எங்கோ குண்டுகளை வீசிவிட்டு அவை போனபிறகு, மீண்டும் கோப்பிரேஷன் களை கட்டியது. தட்டுப்பட்டு ஊத்துப்பட்ட கள்ளுக் கோப்பையைத் தூக்கிக் கொண்டு நாகம் வெளியே போனான். அருந்தவலிங்கத்தைக் காணவில்லை. யாருடையதோ பொரியலை நாய்கள் தின்று கொண்டிருந்தன. அதை யாரோ கலைத்தார்கள். வசை வேறு.

“பெரிய மசிர். வந்திட்டார் கதைக்க“ என்று கறுவிக் கொண்டு வந்த நாகத்திடம் “உனக்கேன் வீண் வம்பு? எக்கணம் அவன் உன்னைப் பழி வாங்க நினைச்சால் என்ன செய்வாய்?” என்று கேட்டான் அலோஸியஸ்.

“மசிரைத்தான் புடுங்குவான் அவன். எனக்குத் தெரியாத அருந்தவலிங்கமா? இல்ல எனக்குத் தெரியாத இயக்கமா?”

“அதில்ல நாகம். அவன் ஒரு நச்சுப் பாம்பு’’

“ஆனால் அது இப்ப பல்லில்லாத பாம்பு” இப்படிச் சொன்னாலும் நாகத்துக்கு அலோஸியஸ் சொன்னதையிட்டு உள்ளுர ஒரு பயம் ஓடிப்பரவியது.

அருந்தவலிங்கம் பழைய ஆள். இயக்கத்தை விட்டு விலகினாலும் இயக்கக் குணம் போகாதவன். அவனுக்கு நிறையப் பேரை இயக்கத்தில் தெரியும். செல்வாக்குண்டு. அதைவிட, இப்ப மறுபடியும் இயக்கத்தில் ஆட்பற்றாக்குறை என்று சேர்ந்திருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். ஆனால் கள்ளுக்கும் பகிரங்கமாக வாறான். லைனுக்கும் போறான்.

‘இதென்ன கோதாரியில போற வேலையாக்கிடக்கு. சனியன் வந்து தோளில ஏறிக் கூத்தாடுது’ என்று நினைத்தான் நாகம்.‘பயந்தால் சாகத்தான் முடியும். வாழமுடியுமா’ என்று உள்மனம் தூண்டியது. வருவது வரட்டும். தனக்கும் துவக்கைத் தூக்க முடியும். யாரிக்கு நிற்க முடியும் என்று எண்ணிக் கொண்டான். என்ன தலையா போகப் போகிறது?

2

நாகம் ஆறு மாதமாக பங்கர் வெட்டப் போகிறான். லைனுக்கு என்று கொண்டு போய், ஆமிக்கு முன்னால் நிற்பாட்டப் படுகிறான். ‘விருப்பமில்லை. தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாலும் அவர்கள் அவனை விடுவதாயில்லை. பிடித்து ஏற்றிக் கொண்டு போனார்கள். குடும்பகாரன். தன்னை நம்பி நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். கூலிக்காரன். வேறு வருமானமில்லை. தனக்கு ஒன்று நடந்து விட்டால் அதுகள் தனிச்சுப் போய்விடுங்கள்’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர்கள் அதையெல்லாம் கேட்கவேயில்லை. தனக்கிருக்கும் முட்டு வருத்தத்தைக் கூடச் சொன்னான்.

“களத்தில் மருந்து தருவதற்கு ஆட்கள் இருக்கு“ என்றார்கள்.

‘அது காயப்பட்ட ஆட்களுக்கு’ என்றான் நாகம். அவர்கள் மசியவில்லை.மசிவதாகவுமில்லை.

கிளினிக் கொப்பியையும் குளிசைகளையும் காட்டினான். மனிசிக்காரி அழுதுகுழறினாள்.

ஆனால் அவன் லைனுக்குப் போகவேண்டியே வந்தது. அவர்கள் அவனைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.

இப்போது அவன் போராளியா அல்லது இயக்க ஆளா என்று அவனுக்கே புரியவில்லை.

இயக்கக்காரர்கள் பார்க்கிற அலுவல்களைத்தான் அவனும் பார்க்கிறான். ஆனால், போர் உதவிப் படை வீரர், எல்லைலப்படை வீரர் என்று என்னவோ எல்லாம் சொல்கிறார்கள். அவன் போருக்கு ஒருபோதுமே உதவவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி அவனைப் போர் உதவிப்படை வீரர் என்று சொல்லமுடியும்? அதைப்போலவே எல்லைப்படை வீரர் என்றும் சொல்ல முடியாது. இப்போது படைகள் அவனுடைய ஊருக்கு அருகில் நிற்கின்றன. ஏறக்குறைய தமிழ்ச் சனங்களின் இடங்களில் பாதிக்கும் மேல் படைகளிடம் வீழ்ந்து விட்டன.இதில் எல்லை எங்கே?

சரி, என்னவே தங்கள் வசதிக்குத் தக்கமாதிரி எதையோ சொல்லித் தொலைக்கிறார்கள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்? அல்லது இதெல்லாம் யாருக்குத்தான் வேணும்? போகட்டும் என்று விட்டான்.

இதில் என்ன வேடிக்கை என்றால், தள்ளிக் கொண்டு போய் விடப்படுகிறவவர்கள் போர்க்களத்தில் செத்துப்போன பின்னர்தான் எல்லைப்படையா போர் உதவிப்படையா அல்லது வேறு ஏதாவது படையா என்று தெரியவரும். அதுவரையில் எந்தப் படையில் இருக்கிறோம் என்று தெரியவராது. தெரிய வந்துதான் என்ன, வராது விட்டாற்தான் என்ன? அவனுக்கு ஒரு லாபமும் கிடையாது. அவன் விரும்பியா இதற்கெல்லாம் வந்தான்.

கடவுளே! ஆமிக்கு முன்னால் கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கிறார்களே.

இப்படியொரு நிலைமை தனக்கு வரும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. யமனுக்கு முன்னால் உயிர்ப்பிச்சை கேட்பது போலிருந்தது. தொடை நடுங்கியது. உடல் பதறியது. கைகள் உதறின. கைகளில் வைத்திருந்த துப்பாக்கி உதறியது. “வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை என்று யாரோ சொல்லிக் கேட்டது. அது யாருமல்ல. அவனுடைய உள்மனம்தான். தான் வீராகி விட்டேனா! அப்படியென்றால் எப்போதிருந்து? தமிழ்க்குடியில் பிறந்தவன் வீரனாகாமல் வேறெப்படி இருக்க முடியும்? இல்லையென்றால் அவனுக்குக் கோவணம் எதற்கு?

ஆனால் அவன் இந்த ஆறு மாதங்களில் ஒரு ஆமியைக் கூடச் சுட்டதில்லை. கொலைப் பழியோ பாவமோ அவனை அண்டியதில்லை. ஆனால் இரண்டு தடவைகள் காயப்பட்டான். ஒரு தடவை மேற் தொடையில், விதைக்கு அருகில் சன்னம் சிராயத்துக் கொண்டு போனது. உண்மையில் மயிரிழையில் உயிர் தப்பினான். அல்லது விதை தப்பியது. விதை தப்பியதால் அவனுடைய வம்சம் தப்பியது. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் உயிராபத்துகளுக்கு நடுவே தேசப்பணியைச் செய்து கொண்டு வரும் நாகத்தோடு அருந்தவலிங்கம் கதைத்த கதை அவ்வளவு நல்லதில்லை என்று பட்டது அலோஸியஸ்க்கு. நாகத்தை நினைக்கும்போது அவனுக்கு அழுகை வந்தது. பாவம். சரியான பயந்தாங்கொள்ளி.

வாழ்க்கையில் அவன் ஒரு ஆமியைக் கூடக் கொல்ல மாட்டான் என்று அலோஸியஸ்க்குத் தெரியும். இந்தப் பிறவியிலேயே அது நடக்காது. அதற்காக அவன் பிறந்ததுமில்லை. ஆனால், அவன் ஆமியைபச் சுடத்தான் வேண்டும் அடாத்துப் பண்ணுகிறார்கள். என்ன நடக்குமேமா தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை.

நாகத்தை ஒரு நாள் ஆமிக்காரர்கள் போட்டுத்தள்ளுவார்கள். நான்கு நாட்கள் கழித்து, சந்தையில் அலோஸியஸிடம் அருந்தவலிங்கம் வந்தான். அப்போது கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அலோஸியஸ் வியர்த்துக் களைத்தபடி மேசையில் இறைச்சியும் தராசும் கையில் பையும் காசுமாக பரபரத்துக் கொண்டிருந்தான். அதற்குள் அருந்தவலிங்கம் தன்னை ஒருவாறு, நுழைத்துக் கொண்டு எட்டிக் கையையும் காசையும் நீட்டினான்.

“கொஞ்சம் பொறு” என்று கையைக் காட்டிக் கண்ணைச் சிமிட்டிச் சொன்னான் அலோஸியஸ். அருந்தவலிங்கம் நெரிசலில் இருந்து வெளியேறினான். தேருக்கு நிற்பதைப்போல அலைமோதியது கூட்டம். அதற்குள் இரண்டுபேர் வந்து. ஒரு பைலை (கோவையை) விரித்தார்கள்.

“அண்ணை நீங்கள் இண்டைக்குப் பணிக்குப் போகோணும்” என்றான் ஒருத்தன்.

“தம்பி, கடையில ஆளில்லை. நான் மட்டும்தான் நிற்கிறன். பாருங்கோ எவ்வளவு சனம் நிற்குதுகள் எண்டு. இறைச்சியும் கிடக்கு. இந்த நிலைமையில இதுகளை எல்லாம் விட்டுப் போட்டு எப்பிடி நான் வாறது? சொல்லுங்கோ” என்று சற்று அழுத்தமாகவும் பவ்வியமாகவும் கேட்டான் அலோஸியஸ்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இப்ப நீங்கள் வரோணும். துருப்புக்காவி வெளிக்கிடப்போகுது” என்றான் மற்றவன். குரலில் இறுக்கமும் கடுமையும் தொனித்தது.

சனங்கள் அமைதியாக நின்றார்கள். ஆனால் உள்ளுரப் பரபரத்தார்கள். கடையைப் பாதியில் மூடிவிட்டால் இறைச்சியை வாங்க முடியாது. மீன் விலையோ உச்சத்தில். மேற்குக் கடல் படைகளிடம் வீழ்ந்த பிறகு அந்தக் கடலில் மீன் பிடி இல்லை. கிழக்குக் கடலில் இப்போது சீசன் இல்லை. கொந்தளிப்பு வேறு. அதற்குள் பிடிக்கும் மீன்கள் மட்டும்தான் சந்தைக்கு வருகின்றன. அது இப்படி லட்சமாகத் திரண்டிருக்கும் சனங்களுக்குப் போதுமா?

“தம்பி, வெட்டின இறைச்சியை என்ன செய்யிறது?”

“ஏன் உங்களுக்குத் தெரியாதா, இண்டைக்குப் பணிக்குப் போறதெண்டு? அதுக்கு நாங்கள் பொறுப்பில்லை” அவனுடைய குரல் மேலும் இறுகியது.

“தம்பி கொஞ்சமாவது நீதியா நடக்கோணும். மனச்சாட்சிக்குக் கணக்குக் குடுக்கோணும். நான் ஆரையெண்டாலும் ஒராளை ஒழுங்கு செய்யிறன். ஆனா, இண்டைக்கு ஏலாது” அலோஸியஸின் குரலிலும் இறுக்கம்.

“அண்ணை, உங்கட கதைகளக் கேக்கிறதுக்காக இங்க வரயில்லை, நாங்கள். இப்ப அரை மணித்தியாலத்தில வரோணும். இல்லையெண்டால் ஆறாயிரம் ரூபாய் கட்டவேணும்” என்று உத்தரவிட்டான் அவர்களில் ஒருவன்.

‘அந்தோனியாரே, ஆறாயிரம் ரூபாய்க்கு இப்ப நான் எங்கே போவேன். கடை வாடகை, தினவரி எல்லாம் குடுத்து வருகிற மிச்சத்தில் வீட்டைச் சமாளிக்கவே பெரும்பாடாக இருக்கும் போது, ஆறாயிரம் ரூபாவுக்கு நான் என்ன செய்வேன்?’

“காசில்லை எண்டால் நீங்கள் வாங்கோ”

“நான் வாறதுக்கு வசதியில்லை எண்டுதானே சொல்லுறன்.”

“அப்ப காசைத் தாங்கோ”

“அதுக்கு நீங்கள் விட்டாத்தானே. வருவாய்த்துறை எண்டு தினவரி வாங்கிறியள். நில வாடகை கேக்கிறியள். வர்த்தக சங்கமெண்டு தனியாக் காசு கட்டச் சொல்லுறியள். பிறகு, இறைச்சிக் கடைச் சங்கம் எண்டு அதுக்குத் தனியாக சந்தப்பணம், சந்தாப் பணம், பங்களிப்பு எண்டெல்லாம் கநற்து கொண்டிருக்கிறியள். பிறகு இப்ப ஆறாயிரம் கட்டோணம் எண்டால் நான் எங்க போறது?”

“அண்ணை, உங்களோட கதைச்சுக் கொண்டிருக்கிறதுக்கு நாங்கள் வரேல்ல. இப்ப காசைக் கட்டுங்கோ. இல்லையெண்டால் கடையைப் பூட்டுங்கோ”

“அப்ப வெட்டின இறைச்சியெல்லாத்தையும் என்ன, நாற விடுறதே?”

“அது உங்களைப் பொறுத்தது”

“இதென்ன ஞாயமடா, அந்தோனியாரே! கலி முத்தித்தான் போச்சு. அக்கிரமம் கூடிட்டுது.

“அண்ணை, கதை வேண்டாம். கடையைப் பூட்டச் சொன்னால் பிறகென்ன, தேவையில்லாக் கதையெல்லாம். அவர்கள் மிரட்டிக் கதவைச் சாத்தினார்கள். சனங்கள் இடிபட்டு வழி வழிவிட்டார்கள். யாரோ என்னவோ சொன்னார்கள். சனங்களின் அமுங்கலான கசமுசாச் சத்தங்களையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எல்லோரும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இறைச்சியில் மொய்க்கும் இலையான்களுக்கு எந்தக் கவலையுமில்லை.நான்கைந்து நாய்கள் தங்கள் சோலியோடு நின்றன.

அலோஸியஸ்க்கு இரத்தம் கொதித்தது. நாடி துடித்தது. அப்படியே அவர்களுடைய மூஞ்சையைப் பொத்தி நாலு குத்தினால் என்ன என்று யோசித்தான். கைகள் துருதுருத்தன.

குத்தினால், கொண்டுபோய், இருட்டறையில் அடைப்பார்கள். பச்சை மிளகாய் தின்னக் கொடுப்பார்கள். கட்டாயப்படுத்தி முன்னரங்கில் கொண்டு போய் விடுவார்கள்.முந்தியெண்டால் வட்டுவாகல், சீர்திருத்தப்பள்ளி என்று கொண்டு போவார்கள். இப்ப சண்டைக்கு ஆள் வேணும் என்ற படியால் அங்கேதான் கொண்டு போவார்கள்.

இதெல்லாவற்றைப் பற்றியும் கவலைப்படாமல், குத்தலாம். இறைச்சி வெட்டும் கத்தியால் ஒரு போடு போடலாம்.

ஆனால்,வீட்டில் மனுஷி, பிள்ளைகளின் நிலை? ஏற்கனவே அவள் தன்னுடைய தம்பியைக் கொடுத்து நொந்து போயிருக்கிறாள். அவனை அவர்கள் கொண்டு போய் சரியாக அறுபத்தி மூன்றாம் நாள் அவனுடைய மூடிய சவப்பெட்டியைக் கொண்டு வந்தார்கள். அதைவிட மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மடத்தனமாக பணயம் வைக்க முடியாது. ஆனால், அதற்காக இப்படி அடிமைச்சீவியம் நடத்தவும் முடியாது.

ஒரு கணம் கனத்த மௌனம். அதற்குள் நூறாயிரம் கோடுகளை எல்லாத் திசைகளிலும் வரைந்தது மனம். சனங்கள் இறைச்சிக்காக அந்தரப்பட்டார்கள். வெட்டித் தொங்கும் இறைச்சியை ஏதாவது ஒரு வழி பண்ணத்தானே வேணும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். அதற்குள் தங்கள் காரியத்தைப் பார்த்துவிடத் துடித்தார்கள் அவர்கள்.

அலோஸியஸ் ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்தான். வியாபாரத்தைச் செய்தான். கத்தி கையிலிருந்தது. நெஞ்சை நிமிர்தியபடி, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, இறைச்சியை மளமளவென்று வெட்டிப் போட்டான். அவர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சனங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அலோஸியஸ்க்கு சனங்களைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

“நாளைக்கு கடையைத் திறக்கலாமெண்டு நினைச்சுப் போடாதேங்கோ” அவர்கள் இருவரும் சொல்லிவிட்டுப் போனார்கள். இரு உன்னை ஒரு கை பார்க்கிறோம் என்பதைப் போல அவர்களுடைய பார்வை இருந்தது. கண்களில் குரோதம் வழிந்தது.

“மசிருகள், ஆரைக் கொண்டுபொய்க் கொல்லலாம் எண்டு ஆலாய்ப்பறக்கிறாங்கள்” என்றார் இறைச்சி வாங்குவதற்காக நின்ற ஒரு முதியவர் சற்றுச் சத்தமாக.

“கடவுளே, இந்தக் கொடுமை எப்பதான் தீரப்போகுதோ” என்று பெருமூச்சு விட்டாள் ஒரு கிழவி. “நாசமமாய்ப்போவார், அழிவார், கொள்ளையில போவர்” அவள் திட்டிக் கொண்டேயிருந்தாள்.

யார் பக்கத்தில் நிற்கிறார்களோ என்ற பயம் சிலருக்கு. அவர்கள் இதையெல்லாம் கேட்டால் கதை கந்தல்தான்.

“நாங்கள் பயந்து பயந்துதான் இந்த நிலைமை வந்திருக்கு” என்றார் வெள்ளைளச் சேர்ட் போட்டிருந்தவர்.

“பச்சை மிளகாய் தின்ன விருப்பமோ” என்றொரு குரல் பின்னாலிருந்து ஒலித்தது. தலைகள் குரல் வந்தி திசையில் திரும்பின. பிறகு கனத்த அமைதி.

அலோஸியஸிற்குள் நூறு புகையிரதங்கள் தாறுமாறாக ஓடின. ‘எல்லாற்றை முதகெலும்பையும் உருவி எடுத்துப் போட்டாங்கள்’ என்று எண்ணினான்.

‘மனிசரைக் கொன்று வெறும் சடலங்களாக்கி விட்டார்கள். இப்ப தாங்கள் நினைக்கிறதையும் சொல்கிறதையும் செய்கிற வெறும் மிசின்களாக்கி விட்டாங்கள். மசிர்ப் போராட்டம். இதைவிடச் சாகலாம்’என்று தோன்றியது அவனுக்கு.

இறைச்சியை வெட்டிப் போட்டு நிறுத்துக் கொண்டேயிருந்தான். சனங்கள் முண்டியடித்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாம் முடிந்து கடையைப் பூட்டி வெளிக்கிட்டபோது சூரியன் உச்சியில் நின்று சிரித்தது. நாக்கு வரண்டது. காலையில் அவர்கள் வந்து கதைத்த கதைகள் அவனுக்கு கேந்தியைக் கிளப்பியிருந்தன. அது வேறு தாகம். கோபம் வரும்போது தாகம் வருகிறது. சைக்கிளை கோப்பிரேசனுக்கு விட்டான். இரண்டு போத்தல்களை உள்ளே விட்டால்தான் நெஞ்சுக் கொதி ஆறும்.

பிள்ளையார் கோயிலடி முடக்கால் திரும்பியபோது யாரோ கத்திக் கேட்டது. அவலக்குரல். ஐந்தாறு பெண் குரல்கள். கிட்ட நெருங்கியபோது, வசையும் திட்டும் கேட்டன.

அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு ஒருவன் ஓடினான். நான்கைந்து பேர் விட்டுக் கலைத்தார்கள். ஓடியவவன் ஆறு பட்டு முட்கம்பி வேலியை உன்னிப் பாய்ந்து கடந்தான். கலைத்தவர்கள் திகைத்துத் தடுமாறி நின்றார்கள். யாருக்கும் அந்தக் கம்பிகளைப் பாயத் துணிவிருக்கவில்லை. எல்லாம் ஒரு கணம். பிறகு திரும்பி, அந்தக் காணிக்கு எங்கே வாசல் என்று தேடினார்கள். அதற்குள் அவன் எங்கோ ஓடி மறைந்தான்.

“எல்லாரையும் துலைச்சுப் போட்டு என்னடா செய்யப் போறியள்?” என்று ஒரு பெண் மண்ணை அள்ளி எறிந்து திட்டினாள். அலோஸியஸ் ஒரு கணம் அங்கே தாமதித்தான். துரத்திக் கொண்டு போன ஆட்பிடிகாரர், ஆவேசமாய் அங்கு மிங்கும் வேட்டை நாயைப் போல அலைந்து கொண்டிருந்தார்கள். வளவுக்குள் போவதும் வருவதுமாய் ஒரே அமளி.

ஒரு ஐந்து நிமிசமிருக்கும். மறுபடியும் கூக்குரல். வசைகள். “அடேய், அவரை விடுங்கோடா, விடுங்கோடா. ஏனிப்படி அநியாயம் செய்யிறியள்? நாங்கள் ஆரெண்டு எங்களை இப்பிடிப் போட்டு வதைக்கிறியள்? ஐயோ, கடவுளே! இதையெல்லாம் கேக்கிறதுக்கு ஆட்களில்லையா? அந்தாள் வருத்தக்காரன். வீட்டு வேலையைக் கூட செய்ய மாட்டாமல் இருக்கிற பிறவி. அதுவும் உங்களாலதானே இந்தியன் ஆமியிட்ட அடிவாங்கினவர். ஏலாத சீவன். அவரைக் கொண்டு பொய் என்னடா பலியா குடுக்கப் போறியள்..?

அதே பெண் புலம்பிக் கத்தினாள். சின்னப் பிள்ளைகள் ஐயோ என்று கதறினார்கள்.

ஆனால் பிடிகாரர் எதையும் பொருட்படுத்தவில்லை. அந்த வீட்டிலிருந்து ஒரு மெல்லிய உருவத்தை வெளியே இழுத்துக் கொண்டு போனார்கள். அந்த உருவம் மாட்டேன் மாட்டேன் என்பதாக தயங்கித் தயங்கிப் போனது. அதை அவர்கள் தள்ளிக் கொண்டும் இழுத்துக் கொண்டும் போனார்கள். அது அந்தப் பெண்ணின் கணவனாகத்தானிருக்க வேண்டும். ஓடியவன் அவர்களுடைய மகனாகவோ அல்லது உறவினனாகவோ இருக்கலாம்.

அந்தப் பெண் விடவில்லை. அவள் கடுமையான ஆக்ரோஷத்தோடு எதிர்த்தாள். அவர்களுக்கு மண்ணள்ளி எறிந்தாள். கணவனைப் பிடித்து இழுத்தாள்.பிடிகாரரில் இருந்த பெண்கள் அவளைப் பிடித்துத் தள்ளிக் கீழே தள்ளினார்கள். அவள் நிலை தடுமாறினாள். ஆனால் அவள் விடவில்லை. சட்டெனச் சுதாகரித்துக் கொண்டு, எழுந்து பாய்ந்தாள். பாய்ந்து ஆட்பிடிக்கும் பெண்களில் ஒருத்தியின் கூந்தலைப் பிடித்து இழுத்தாள். அப்போது அதைப் பார்த்த மற்றப் பிடிகாரப் பெண், அவளைக் கீழே தள்ளி விழுத்திக் கன்னத்தில் ஓங்கியறைந்தாள். அவள் அந்தப் பெண்ணின் முகத்தில் காறித்துப்பினாள். அவர்கள் அவளை மீண்டும் அறைந்தார்கள். இதற்குள் ஏகப்பட்ட வசைகள். அவள் மறுபடியும் துப்பினாள். துப்பிக் கொண்டும் ஏசிக் கொண்டுமிருந்தவளைப் பார்க்க அலோஸியஸ்க்கு பரிதாபமாக இருந்தது.

அந்த வீட்டிலிருந்து ஓடியதற்குப் பதிலாக வீட்டுக்காரரைக் கொண்டு போகிறார்கள் என்று அலோஸியஸ்க்கு விளங்கியது. தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. கால்கள் ஆத்திரத்தில் நடுங்கின. “தாயோளியள்” என்று பல்லை நறுமினான்.

“வாங்கோடா, எடேய், என்ரை பிள்ளையைக் கொண்டு போனியள். என்ர தம்பியையும் கொண்டு போனியள். இப்ப என்ர புருசனையும் கொண்டு போறியளா? தினக் கூலிக்குப் போய்ப் பிழைக்கிற நாங்கள் இனி என்ன செய்வம்? ஐயோ, கடவுளே!” என்று அவள் புலம்பி, ஓலமிட்டாள்.

அவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதைப்போல அப்பனான பேச்சுகள், திட்டுகள், வசைகளை எல்லாம் கேட்டவர்கள் தாங்கள் என்பதைப்போல அவளுடைய கதறலைப் புறக்கணித்து விட்டு, சிரித்துப் பம்பலடித்துக் கொண்டு போனார்கள். கூடவே, அந்த வீட்டுக்காரரைத் தள்ளிக் கொண்டு போனார்கள். அந்த மனிதன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி நடந்தான். கால்கள் இடறின. மத்தியான வெயில் கொழுத்திக் கொண்டிருந்தது. இரண்டு “பிக்கப்“ வாகனங்கள் புழுதி கிளப்பிக் கொண்டு பறந்தன.

“அடேய், வாங்கோடா, உழைக்கிற புருசனைக் கொண்டு போறியள்... நானினி என்ன செய்வன்? மனச்சாட்சியிருக்கோடா உங்களுக்கு...” என்று அவள் காறித்துப்பினாள். காற்றில் ஏறி அப்பால் விழுந்தது அந்த எச்சில். காற்றிலேயே பற்ந்து அலைந்தது அவளுடைய கதறல்.

3

இதெல்லாம் நடந்து ஆறாவது நாள். அலோஸியஸ் வன்னேரிக்குளத்தில் பண்டிவெட்டிக்கு அருகில், முன்னரங்கில் நிறுத்தப்பட்டிருந்தான். அவனுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. அவனைப் போர் உதவிப்படை வீரர் என்றார்கள். இதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு ஒரு கணம் சிரிப்பு வந்தது. அவன் போரையே விரும்பாதபோதும் போர்க்களத்தில் நிற்கிறான். போர் வீரன் என்று பேர் வேறு சூட்டப் பட்டிருக்கிறது. இதெல்லாம் அருவருப்பைத் தந்தன.

அவன் தலையைப் பிய்த்துக் கொண்டான். இதையெல்லாம் நினைத்தால் ஹா..ஹா என்று சிரிக்க வேண்டும். அல்லது “ஹோ“வென்று வானம் கிழிய அழ வேணும். அவன் துவக்கைத் தூக்கி மரங்களுக்கு மேலே வானத்தை நோக்கி வைத்தான் வெடி. படபடவெனப் பொழிந்தன ரவைகள். இலைகள் சிதறின. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் கலவரப்பட்டார்கள்.

“ஆமி வந்திட்டுதா? ஆழ ஊடுருவும் படையணி வந்திட்டுதா? என்ற கலக்கம். படபடவென்று ஆறெழு துவக்குகள் வெடித்தன. ஒரு பத்து நிமிசம் அமோக வெடி.

என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. அலோஸியஸையும் கடவுளையும் தவிர. அதிலும் அலோஸியஸ்க்கே பிறகு இப்படியெல்லாம் கூத்து நடக்கும் என்று தெரியாது.

ஆனால், சனியன் தொலையுமா? அது கடவுளைப் பிடித்ததோ இல்லையோ அலோஸியஸை வளமாகப் பிடித்துக் கொண்டது.

அவர்கள் ஒருவாறு அலோசியஸின் துவக்குத்தான் முதலில் வெடியை வைத்தது என்று கண்டு பிடித்து விட்டார்கள். “என்ன நடந்தது.? ஏன் சுட்டாய்? அதவும் இந்தப் பட்டப்பகலில்? சுடுவதற்கு யார் அனுமதித்தது? பகிடியா விடுகிறாய்? என்று ஏராளம் கேள்விகள்.

இப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சுட்டதைப் பற்றி அவன் தனியாக அறிக்கை கொடுக்க வேணும் என்றார்கள். இப்படிக் கண்டபடி சுட்டு எல்லோரையும் கலவரப்படுத்தியதற்குத் தண்டனை என்றார்கள். இதையெல்லாம் அவன் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், ஒன்று, அவன் ஏற்கனவே தண்டனையாகத்தானே இந்தப் படுகளத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறான்.

வீட்டில் பிள்ளைகள் எப்படியோ! சமைத்தார்களா? சாப்பிட்டார்களா? மாடுகளுக்கு வைக்கோல் போட்டார்களா? கடையில் நடேசன் என்ன செய்கிறானோ. இதுகளைப் பற்றியெல்லாம் ஒரு அறிக்கையைப் புலிகளிடமிருந்து தான் கேட்டால் என்ன?

‘முறைப்படி பயிற்சி எடுத்தேனா? விரும்பி இங்கே வந்தேனா? துவக்கைத் தூக்கி கூத்தாட ஆசைப்பட்டேனா? ஒன்றுமில்லையே!

எந்தச் சம்மதமுமில்லாமல் வேண்டு மென்றே எல்லாவற்றையும் அவர்களாகவே செய்து விட்டு எப்படித் தண்டனையைத் தருகிறார்கள்? இதில் அவர்கள் குற்றவாளிகளே இல்லை. ஒருபோதும் அவர்கள் குற்றவாளிகள் இல்லை. எப்போதும் தண்டனையையே மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு தரப்பு தான் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்ளப்போவதேயில்லை. எப்படியெல்லாம் மிரட்டுகிறார்கள்? எப்டியெல்லாம் பழிவாங்குகிறார்கள். என்ன கொடுமை? என்னவதை? அந்தோனியாரே..!’

அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. எதற்காக தனக்கு இந்தமாதிரித் தண்டனையெல்லாம்? கையை ஓங்கி மண்ணில் குத்தினான். என்ன நோயோ,வியாதியோ தெரியேல்லை. இப்பிடிப் பித்துப் பிடித்தலைகிறார்களே! வெறி. தீராத வெறி. முடிவுப்புள்ளிகள் இல்லாத வெறி.

முந்தி இந்த மாதிரி இருக்கவில்லையே!

இப்ப தேவை எவருடையவதாவது ஒரு தலை. அது மட்டும்தான். அதை விட்டால் வேறு என்னதான் வேண்டும். வெற்றி தோல்வியைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. விளைவுகளைப்பற்றிய அக்கறைகளில்லை. நின்றால் பால். செத்தால் இறைச்சி. வழித்தேங்காய். தெருப்பிள்ளையார். அடியடா, அடி.

ஒவ்வொரு தலையாக உருட்டுகிறார்கள். இந்தத் தினவு அடங்காது. கடவுளே..! அவனுக்குத் தெரியும். அவனுடைய பீற்றர்ச் சித்தப்பா சூதாடினார். கடைசி வரை ஆடினார். எப்போதாவது ஒருபோது வரும் வெற்றிக்காக ஆடினார். அதற்காக அவர் எத்தனை தோல்விகளையும் பொருட்படுத்தவில்லை. என்றாவது வரும் வெற்றி என்று நம்பினார். அதற்காக அவர் தோற்றுக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. சித்தியின் காசு போனது. நகைகள் போனது. காணியிலிருந்த பொருட்கள் போனசு. அயலில் கடன் வாங்கினார். ஒரு நாள் வெல்வேன். எல்லாக் கணக்கையும் தீர்ப்பேன் என்று நம்பினார். அவருடைய மனதுக்குள் அந்த வெற்றிக் கிளுகிளுப்பு உயிருள்ள குழந்தையாகத் துடித்தது. அப்போது அவருடைய முகத்தைப் போர்க்கவேணும். ஆயிரம் கிலோ வாற்ஸில் ஒளிரும். போனவர், வந்தவர் எல்லாரிடமும் கடன் கேட்டார்;. பிறகு சொந்தக்காரரிடம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரிடமும் வாங்கி வாங்கி அந்தப் பெருங்கிணற்றில் இறைத்தார்.

சித்தி திட்டினாள். பெரியப்பா கோவித்தார். வீட்டில் கண்ணீரும் வசையும் நிரம்பியது. சித்தப்பா சிரித்துக்கொண்டேயிருந்தார். பைத்தியக்காரர்கள். வெற்றியின் ருஸியைத் தெரியாதவர்கள். நம்பிக்கையின் முனையை அறியாதவர்கள். அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டேயிருந்தார். வீட்டில் கண்ணீர் நிரம்பியது. கவலைகள் நிரம்பின. எல்லோரும் துக்கப்பட்டார்கள். அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டேயிருந்தார்.

ஒருநாள் அவரைக் காணவில்லை. தேடினாள் சித்தி. அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எல்லோரும் அவரைத் தேடினார்கள். அவர் இல்லை. அவருடைய நம்பிக்கை, அந்தச் சிரிப்பு அவரை எங்கோ கொண்டு போனது. அவருடைய நம்பிக்கைகள் அவரைக் காப்பாற்றவில்லை. அவர் பிறகு திரும்பவேயில்லை. எல்லோருக்கும் ஒரு வதை நீங்கியதைப் போலிருந்தது. சித்தியின் முகத்தில் அவன் பிறகுதான் ஒளிக்கீற்றைக் கண்டான். இத்தனை அழகியா அவள் என்று அலோஸியஸ் ஆச்சரியப்பட்டான்.

கடவுளே! இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ! அலோஸியஸ் தன் வாழ்நாளில் இப்படியொரு பொறியில் சிக்கவேயில்லை. அவனுக்கென்ன பைத்தியமா? பொறியில் சிக்குவதற்கு? பொறியைவைத்துப் பிடிக்கிறார்கள். இதற்கொரு முடிவேயில்லையா? இதைக் கேட்பதற்கு ஆட்களேயில்லையா? இந்தத் தெரு முழுவதும் வெள்ளை, கறுவல் என்றெல்லாம் எத்தனைபேர் திரிகிறார்கள். அவனுடைய கடைக்கு இறைச்சி வாங்கவரும் ஐ.ஸி. ஆர். ஸிக் காரரிடம் இதைப்பற்றியெல்லாம் ஒருதடவை கேட்க யோசித்தான். ஆனால், அவனுக்கு இங்லிஸ் தெரியாது. வந்த வெள்ளைக்குத் தமிழ் தெரியாது.

உலகம் ஒரு பொய் முட்டை. அலோஸியஸ்க்கு உடல் பதறியது. மனதில் பெருங் கொந்தளிப்பு. அலைகள் பெருக்கெடுத்தன. மிஞ்சியிருக்கும் ரவைகளையும் சுட்டுத் தீர்த்து விட்டு, துவக்கை வீசி எறியவேண்டும் போலிருந்தது. எதற்காகத் தான் இங்கே வந்தேன்? ஒரு சம்மந்தமும் இல்லாமல், ஏன் இப்படி, இந்தக் காட்டில் துவக்கோடு இருக்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டான். தன்னைத் தானே சுட்டுக் கொன்றால் என்ன? அல்லது வந்து அறிக்கை கேட்பவனை, கட்டளையிடுபவனை சுட்டுக் கொன்றால் என்ன?

தன்னைத்தானே சுட்டுக் கொன்றால் சிரிப்பார்கள். கோழை என்பார்கள். அதற்கு மேல் என்ன? சடலத்தைத் தூக்கிக் கொண்டுபொய் வீட்டில் போட்டு விட்டுப் போய்விடுவார்கள். அப்படிச் சாக வேண்டுமா? எதற்காக அப்படிச் சாகவேணும்? கட்டளைக் குதிரைகளோட வரும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டு பேரையாவது போட்டுத்தள்ளி விடலாம். போட்டு விட்டு ஓடி விடலாம். ஓடி, எங்கே போவது? எல்லா வாசல்களையும் அடைத்து விட்டார்கள்.

அவன் அறிய இருவத்தெட்டு வருசமா, “அல்லேலோயா, அல்லேலோயா, தேவன் வருவார், தேவன் வருவார்“ என்று அவனுடைய வீட்டுக்கருகில் கத்துகிறார்கள். உருகி உருகிப் பாடுகிறார்கள். மற்றாடுகிறார்கள். ஆண்டவரே தங்களை ரட்சியும் என்று மன்றாடுகிறார்கள். “ஆண்டவரே, தேவனே“ என்றெல்லாம் மனம் நெகிழந்து அழைக்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போதும் பார்க்கும் போதும் அவனுக்கே இதயம் கரைந்து போகும். அவன் இந்த அழைப்பைக் கேட்டுச் சிலபோது அழுதுமிருக்கிறான்.

அவர்களுடைய மன்றாட்டத்தில், பிரார்த்தனையில், அவர்களுடைய விசுவாசத்தில் எல்லாம் அவனுடைய நரம்புகள் சிலிர்த்திருக்கின்றன. இப்படியொரு உலகமா? இப்படியொரு வாழ்வா? என்ன அதிசயம். என்ன அழகான ஒப்புக் கொடுப்பு? எவ்வளவு விசுவாசம்? ஆன்மாவை ஒன்றித்துத் தங்களை அர்ப்பணிக்கும் இந்த மனங்கள்… அவன் நெகிழ்ந்தான்.

ஆனால் அவர்களிடம் தேவன் வந்ததாக இல்லை. அவர்கள் தங்கள் பிணிகளோடும், துயரங்களோடும் சந்தைக்கு வந்தார்கள். வயலுக்குப் போனார்கள். கடலில் வலையை இறக்கினார்கள். தெருவிலே நடந்தார்கள். தேவன் வரவில்லை. அவர்களில் யாரையும் அவர் எங்கும் அழைத்துப் போகவில்லை. எந்த ஒளிமிக்க பொருளையும் அவர் கொடுத்ததாகவும் இல்லை. அவர்கள் மன்றாடிக் கொண்டேயிருந்தார்கள். தேவன் வருவாரோ இல்லையோ தங்கள் கடனெல்லாம் தேவனுடைய வருகைக்காகப் பிரார்த்திப்பதே என்று அவர்கள் நம்பினார்கள். இந்த வாழ்க்கைகூட தேவனின் பிச்சை என்றே அவர்கள் எண்ணினார்கள்.

தேவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடிய மாதிரி இல்லையோ என்னவோ தெரியாது அவர் கடைசிவரையில் வரவேயில்லை. அவர் வந்ததாக அவன் அறிந்ததாகவும் இல்லை. அவர்கள் அறிந்ததாகவும் இல்லை. தேவன் அவ்வளவு கல் நெஞ்சக்காரனா என்று அவன் அஞ்சினான்.

தன்னை விசுவாசிப்பவர்களையே பொருட்படுத்தாமல் விடும் குணம் ஏற்கக் கூடியதில்லை. மன்னிக்கக் கூடியதுமில்லை.

“அல்லேலோயா தேவன் வருவார். அல்லேலோயா தமிழீழம்“.

அவனுடைய பதின் மூன்று வயதிலிருந்து ‘நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்’ என்ற செல்லப்பாவின் பாட்டைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறான். முதலில் அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அவனுடைய உடலில் நரம்புகள் போதவில்லையே, சிலிர்த்துக் கொள்வதற்கு. என்றெல்லாம் கவலைப்பட்டான்.

ஆனால் பிறகு அதைக் கேட்கும்போதெல்லாம் அது புனைவாக, வெறும் கற்பனையாக, பொய்யின் திரண்ட முகமாக அவனுக்குள் ஒரு உருவம் தோன்றியது. இப்படியே அந்தப் பாடல் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒலித்துக் கொண்டிருக்கப்போகிறதோ!

செல்லப்பா பாடிக்கொண்டேயிருக்கப் போகிறார். பாவம் பாடலை எழுதிய காசி. ஆனந்தன். அவர் மட்டுமல்ல, அவருடைய பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எத்தனை தலைமுறை வந்தாலும் ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’தான்.

இதைப்பற்றி ஒருக்கால் குணபாலனுடன் கதைக்கும் போது “யுதர்கள் ரெண்டாயிரம் வருசமா தங்கட நாட்டைப் பற்றிய எண்ணத்தோடயும் நினைவுகளோடயும்தான் இருந்தார்கள். அதனால்தான் அவர்களால இஸ்ரேல் எண்டொரு நாட்டை உருவாக்க முடிஞ்சுது “ என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான்.

“யுதர்களின் வரலலாறும் வாழ்க்கையும் வேற. அதைப்பற்றிய சர்வதேச நிலைப்பாடும் அந்த அமைவிடமும் வேற. அதையும் எங்கட கதையையும் ஒண்டாப் பாக்கேலாது. அவர்களின் மூளைக்கும் அவர்களின் விடுதலைக்கும் பெரும் பங்குண்டு. எங்கட மூளை எங்களைப் பாதாளத்துக்ள் விழுத்தியிருக்கு” என்றான் அலோஸியஸ்.

“விசர்ப்பன்னாடைக் கதை கதைக்காதை. இண்டைக்கு எங்கட சனம் புலம்பெயர்ந்து உலகம் முழுதிலயும் வாழுதுகள். அதுகள் எல்லாம் ஒண்டாச் சேந்தா எங்களுக்குத் தமிழீழம் கிடைக்கிறதில என்ன பிரச்சினை”

அலோஸியஸ்க்குப் பத்திக் கொண்டு வந்தது. குணபாலன்ரை குதிரைகள் வெகு தொலைவிலேயே ஓடுகின்றன என்று சிரித்தான் அலோஸியஸ்.

“அதுக்கான அகப்புறச் சூழல்களைப் பற்றிக் கவனிக்காமல் கதைக்கிறாய்” என்று அலோஸியஸ் நிதானமாகச் சொன்னான். அவனுடைய குரலில் உறுதியிருந்தது.

அதைப்பற்றிக் கவலையில்லை. லண்டனில இனிஇனி தேர்தல்களில தமிழாக்களும் நிப்பாங்கள். கனடாவில சில மாநிலங்களில தமிழாக்கள்தான் முக்கிய பிரதிநிதிகளாக இருக்கிறாங்கள். இப்பிடி உலகம் முழுதிலயும் தமிழாக்கள்தான் வருவாங்கள். அப்ப நான் சொன்னது நடக்கும். வேணுமெண்டால் இருந்து பாருங்கோ”

“அப்பிடியெண்டால் ரண்டாயிரம் வருசம் செல்லும் நாங்கள் தமிழீழத்தைக் காண”

குணபாலன் எதுவும் பேசவில்லை. இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று அவனுக்கு விளங்கியிருக்க வேணும். நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தான். மூளை கடுமையாக வேலை செய்திருக்க வேணும். அவனுடைய மெல்லிய குச்சிக் கைகள் நடுங்கியதை அலோஸியஸ் கவனித்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அவன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

இதற்குப் பிறகு அவன் அலோஸியசுடன் அதிகமாகக் கதைப்பதில்லை. ஆனால் றேடியோவில் அவன் செய்யும் நிகழ்ச்சிகளில் இஸ்ரேலை எழுப்பு எழுப்பெண்டு எழுப்புவான். எல்லாம் அலோஸியஸ்க்கான பதிலடிகள்.

இதைப்பற்றிப் புரியாமல் ‘இவன் என்னடா, இருந்தாப்போல இஸ்ரேலைப் பற்றிப் புகழ்பாட வெளிக்கிட்டிட்டான். இயக்கம் இஸ்ரேலைப் பற்றி என்ன புதுசாக் கதைக்கிது’ என்று குழம்பினார் கேந்திரநாதன்.

அவருடைய கொம்யுனிஸ மூளையில் குணபாலனின் இஸ்ரேல் கதை பளீரெனப் பொத்தியடித்தது.

இயக்கத்தை ஆதரிச்ச இரண்டு மூன்று கொம்யூனிற்றுகளில் ஒருத்தர் கேந்திரநாதன். தமிழீழம் என்ற சொல்லோடு, புலிகளை ஆதரித்ததற்காக அந்த நாட்களில் அவரைக் கட்சிக்கார்கள் வாங்கு வாங்கென்று வாங்கியிருந்தார்கள். எத்தனை சூறாவழிகள், புயல்கள், தடைகள், தாக்குதல்கள், வசை பாடுதல்கள், புறக்கணித்தல்கள், கேலிப்படுத்தல்கள் என எல்லாவற்றையும் சந்தித்துச் சமாளித்து, அவர் தமிழீழத்துக்காகத் தலையைக் குடுத்தார்.

ஆனால், அவர் கனவிலும் இப்படியொரு கோடு தனக்கோ, இயக்கத்துக்கோ வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ இயக்கத்தை இஸ்ரேலோடு சேர்த்து ஒன்றாகப் பிணைக்கப்போகிற மாதிரி இஸ்ரேலைப் பற்றிய கதைகளைக் குணபாலன் அவிழ்த்து விடுகிறான். இதைப்பற்றி இயக்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று அறிய வேண்டும் போல இருந்தது அவருக்கு. ஏற்கனவே இயக்க நடைமுறைகளால் நொந்து அலுத்து மெல்ல ஒதுங்கித் தூர இருந்தாலும் இந்த மாதிரிக் காரியங்கள் பகிரங்கமாக நடக்கும்போது அதைப்பார்த்துக் காண்டு சும்மா இருக்க முடியவில்லை.

சுருட்டுக் கட்டுகள் தீர்ந்தன. மூன்று நாட்கள் ஒழுங்கான தூக்கமில்லை. ஏற்கனவே இருந்த ஆஸ்மா இப்போது கூடிவிட்டது போலிருந்தது. இதைப்பற்றி, குணபாலனின் இந்தக் கொடுமையைப் பற்றி யாரோடு கதைக்கலாம்? என்று யோசித்தார்.

அவருக்குத் தெரிந்த பழையவர்களில் பாதிப்பேருக்கு மேலானவர்கள் “காற்றுப் போய்“ இருக்கிறார்கள். அவர்கள் இப்போது “ஓடிய குதிரைகள்“ என்றும் சொல்லப்படுகிறது. அவர்களின் கதையை அவரே கேட்கவெண்டிய நிலைமை. இதற்குள் அவருடைய கதையையா கேட்கப் போகிறார்கள்.

மிஞ்சியிருக்கும் அரைக்காற்று, முக்காற் காற்றுகள் இந்தமாதரி விசயங்களைக் கதைக்கப்போய் தங்களின் இருக்கின்ற காற்றையும் இழக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் ஆளைக் கண்டவுடனேயே தலைமறைவாகிவிடுவார்கள். திடுமுட்டாகச் சந்தித்தால், அல்லது மாட்டுப்பட்டால், எப்பபடியோ சுழித்து வெட்டி விடுவார்கள். அல்லது சாட்டுப் போக்குகள் சொல்லிக் கடத்தி ஆளைக் களைக்கப்பண்ணி விடுவார்கள். இதெல்லாம் கேந்திரநாதனுக்குத் தெரியாமலில்லை. அவர் பழந்தின்று கொட்டை போட்ட ஆள். என்றாலும் அவரை மிஞ்சி விட்டார்கள் இயக்கக்காரர்கள்.

அவருடைய மூளையில் யாரும் பொருத்தமாகத் தட்டுப்படவில்லை. ஏற்கனவே முஸ்லிம் மக்களோடு விரோதம் பாராட்டிய பேர்வழிகள் இஸ்ரேலை ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம்? உண்மையில் முஸ்லிம் எதிர்ப்புவாதத்தின் இன்னொரு வடிவம்தான் இதுவா என்றும் அவர் யோசித்தார். அதுதான் சரி. இல்லையென்றால் இத்தனை துணிச்சலோடு குணபாலன் எப்படிக் கத்த முடியும்? முஸ்லிம்களை எப்போதும் “சோனி, சோனி“ என்றே அவன் கதைப்பான். இதைப்பற்றி அவனோடு பல தடவை அவர் அவனோடு சண்டைகூடப் போட்டிருக்கிறார். இனத்துவேசி என்று குணபாலனை வாய்க்குள் திட்டினார். இந்த மாதிரி ஆட்களால் எல்லாந் தொலையப்கோகிறது என்று கவலைப்பட்டார்.

ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. மேலிடத்துக்கு எழுதினார். எல்லாவற்றையும் திரட்டி, அதை ஒரு பிடியாக்கி, நன்றாக வற்றக்காய்ச்சி, மிகச் சுருக்கி (இரத்தினச் சுருக்கம் என்பார்களே! –ஏனென்றால் மிகச்சுருக்கமாக எழுதினால்தான் பெரியவர் வாசிப்பார் என்று ஐதீகம். அதனால் அதற்கேற்றமாதிரி) ஒரு துளியாக்கி, இந்த விசயத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார்.

அடிக்குறிப்பாக இது இனத்துவேசம், பிற்போக்குத்தனமான காரியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதும் ஒரு சந்தேகம். கொடுத்த கடிதம் உரிய இடத்துக்குப் போய்ச் சேருமா என்று.

எத்தனையோ கடிதங்களை நம்பிக்கையோடு அனுப்பி விட்டு, மேலிடத்திலிருந்து பதில் வரும் வரும் என்று காத்திருந்து ஏமாந்தவர்களின் கதைகளை அறிந்தவர் அவர். எனவே அந்தக் கடிதத்தில் வேறு பிரதிகளை எடுத்து தனக்குத் தெரிந்த வேறு “றூட்“களாலும் அனுப்பினார்.

கடிதத்தின் கதை எல்லாம் கடலில் போட்ட கல்லாகிப் போனது. இஸ்ரேலின் கதையோ தினமும் காலையில் சனங்களுக்குச் சொல்லப்பட்டது.

கேந்திரநாதன், யாஸிர் அரபாத்திடம் மன்னிப்புக் கேட்டார். பலஸ்தீனியர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.. அவருக்கு விருப்பமான கவிஞரகள்; முகமட் தர்விஸிடம் மன்னிப்புக் கேட்டார். அடோனிஸிடம் மன்னிப்புக் கேட்டார். போகிற போக்கில் அவர், நெல்சன் மண்டேலாவிடமும் கறுப்பர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியும் வரலாம். கண்கள் நிரம்பின. துக்கம்; தொண்டையில் நிரம்பியது.

இந்தச் சோகமான கதைகளை எல்லாம் அவர் அலோஸியஸிடம் பின்னேரங்களில் வந்து சொல்வார். பின்னேரம் தொடங்கும் கதை இரவு சாமம் வரையில் கூடத் தொடர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லி ஆறுகிறாரா? அல்லது துக்கப்படுகிறாரா, அல்லது இந்தமாதிரியெல்லாம் காரியங்கள் நடக்கின்றன என்று சொல்ல விரும்புகிறாரா என்று அலோஸியஸால் உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை.

இறைச்சிக் கடைக்கு வந்தாலும் அவர் இதே கதைதான். துக்கம் தோய்ந்த வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பார். கவலை படிந்த கண்கள் கெஞ்சுவதைப் போலிருக்கும். தவறணையில் சந்தித்தாலும் இதே கதைதான். ஆனால் ஒன்று, தவறணையில் உசாராக இருப்பார். சொற்கள் சும்மா தெறித்து விழும். சிவாஜி கணேசன் தோற்றுப்போவார். “குணபாலனின் மண்டையை உடைக்கோணும்“ என்று சபதமெடுப்பார்.

00

“என்ன அறிக்கை எழுதியாச்சா” என்று கேட்டான் அலோஸயசுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவன். அநேகமாக அவன் துணைப்பொறுப்பாக இருக்கவேணும். அவனுடைய குரல் இறுக்கமாய் ஒலித்தது. ஆனால் இயல்பான இறுக்கமில்லை. போர்க்களங்களில் சிலர் செயற்கையாக உருவாக்கும் இறுக்கம்.

“அறிக்கையோ, இதென்ன வில்லங்கமாக்கிடக்கு? நான் என்னத்தை எழுதிறது? ஏதோ காட்டுக்குள்ள அசுமாத்தம் தெரிஞ்சுது. அதுதான் சுட்டனான்” அலோஸியஸ் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அதனால் தன்னுடைய பதிலுக்கு அவன் என்ன விளைவைக் காட்டுகிறான் என்று பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் என்ன பதில் வரப்போகிறது என்று எதிர்பார்த்தான்.

“என்ன, பகிடியா விடுகிறியள்? காட்டுக்குள்ள அசைவு தெரிஞ்சால் ஏன் மேல வானத்துக்குச் சுடோணும்?“ அவன் ஒற்றைக் கண்ணைக் கொஞ்சம் சுருக்கிக் கேட்டான். அந்தக் கேள்வி நிச்சயம் ஒரு விசாரணைச் சாயலைத்தான் காட்டியது. அவனுடைய கண்ணில் ஒன்று சிறியது. முன்னர் எப்போதோ ஏற்பட்ட காயத்தினால் அப்படி மாறியிருக்கலாம். அநேகமாக அது போர்க்களமொன்றில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“முதல் வெடியை மேல வைச்சாத்தான் காட்டுக்குள்ள நிக்கிறது ஆமியோ இல்லையோ எண்டது தெரியும்” இந்த அடிப்படை அறிவு கூட இவர்களுக்கில்லை என்று அலோசியஸ் நினைத்தான். ‘இதையெல்லாம் தெரியாமல்தான் கண்டபடி சுட்டுப் பெடியளும் பெட்டையளும் செத்துத் துலையுதுகள்’ என்று எண்ணினான்.

“எங்களுக்கு நீங்கள் படிப்பிக்க வேண்டாம். பேசாமல் என்ன நடந்தது? ஏன் சுட்டனிங்கள்? எண்டதை எழுதுங்கோ’’ என்று அவன் எச்சரித்தான்.

அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. சொல்லிப்பயனில்லை. எல்லாவற்றையும் நினைக்கும் போது சிரிப்பு வந்தது. சிரித்தான். கோபம் வந்தது. ஓங்கிக் குத்தினான், தன்னுடைய தொடையில். வலி எழுந்து உடலில் பரவியது.

4

அந்த இரத்த வெடிலை அலோஸியஸால் தாங்க முடியவில்லை. அந்த அதிகாலை இருளை ஊடுருவித் தாக்கியது. மூக்கு என்று ஒன்றிருப்பதே பெரும் தண்டனை என்றிருந்தது. குமட்டும் நாற்றம். தினமும் இரத்தத்தோடும் இறைச்சியோடும் வாழ்ந்தவனுக்கு இந்த நெடியைச் சகிக்க முடியவில்லை. மனுச இரத்தத்தைப் போல ஒரு கெட்ட நாற்றம் உலகில் வேறில்லை. மனுச ரத்தமும் நாற்றம் தான். மனுச மலமும் நாற்றம்தான். அதிலும் தேங்கி உறைந்த இரத்தத்தில் மழை நீர் சேர்ந்து தேங்கினால் அதைப் போன்ற அருவருப்பு வேறில்லை. இனி அதில் புழுக்களும் நெளியலாம்.

“சவேரியாரே! இதென்ன கொடுமை? இப்படியொரு கொலைப்பாவம் என்னைச் சேர ஏன் அனுமதிக்கிறீர்?’’அவன் மன்றாடினான். மேலே விரிந்த வானம். நட்சத்திரங்களில்லை. எப்போது கிழக்கு வெளிக்கும் என்றும் தெரியவில்லை. எல்லா இடமும் கறுத்து இருண்டிருந்தது. ஆனால், நள்ளிரவு கடந்து நெடுநேரம். தலை சுற்றியது.

கொட்டும் மழை. மாறி, மாறி ஆளை ஆள் சுடும் கொலைக் களம். ஒரு பக்கத்தில் அவன். மறுபக்கத்தில் அவனைப்போலவோ இல்லை இன்னும் பரிதாபமாகவோ அல்லது படு மோசமாகவோ யாரோ. இடையில் கடவுள் அல்லது யமன்.

அவனுக்கு எப்போதும் குண்டு பாயலாம். அங்கே நிற்கும் வரையில் அது சர்வ நிச்சயம். அது அவனுடைய இதயத்தைப் படிக்காது. அதற்கு அந்த மொழி தெரியாது. இதயத்தின் மொழி தெரியாத குண்டு. அதற்கு யார், எவர், ஏன் என்ற பேதங்களோ விளக்கமோ கிடையாது.

அவனின் முன்னே அவனோடு இருந்த, அவனைப் போல எந்தப் பக்கமும் இல்லாத இரண்டு பேர் சிதறிக்கிடக்கிறார்கள். அலோஸியஸ்க்குக் குடல் கருகியது. இந்த மாதிரிக் காட்சியை, அதுவும் இந்தளவு நெருக்கத்திலும் தனிமையிலும் அவன் ஒரு போதுமே பார்த்ததில்லை.

இரத்தம் மழையோட கரைந்து அவனுடைய கால்களினூடாகப் பாய்கிறது. மனுச இரத்தம். இதைப் போன்றதொரு நிலை தனக்கு என்றாவது வரும் என்று அவன் எண்ணியிருக்கவும் இல்லை.

அது நடந்து நான்கு மணித்தியாலங்களுக்கு மேலிருக்கும். காலை ஒளி மெல்ல வானத்தில் படிந்து பூமியில் இறங்கியது. மரங்கள் நிறம் மாறின. இரவிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தது சூழல். ஆனால், இன்னும் அந்தப் பீதியும் அபாயமும் நெருக்கடியுமான சூழல் மாறவில்லை. அது இன்னும் இன்னும் நெருக்கடியும் அபாயமுமாக மாறிக் கொண்டிருந்தது. யுகங்கள் முழுவதற்கும் இந்தநிலை மாறப் போவதில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. இந்தக் கணத்திலோ அடுத்த கணத்திலோ அவனும் இதைப்போலச் சிதறிப் போகலாம். இரத்தத்தை மழை கரைக்கும். அல்லது நிலம் உறிஞ்சும். அவ்வளவுதான். அவனுடைய வாழ்க்கை அதோடு முடியும்.

எப்படிச் சாவின் முன்னே நிறுத்தப் பட்டிருக்கிறேன் என்று எண்ணியபோது, உடல் ஒரு கணம் செயலற்றுத் தளர்ந்தது. எத்தனை ஆடுகளையும் மாடுகளையும் போட்டுத் தள்ளியிருக்கிறான். அந்தப் பழியும் பாவமும்தான் இப்போது தன்னைச் சூழ்ந்திருக்கிறதா என்று ஒரு கணம் நினைத்தான். மனுசனையும் மிருகத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்? ஏன், உயிர் என்றால் எல்லாம் ஒன்றுதானே! இதென்ன பேதமையான எண்ணங்கள்? மனம் குலையும்போது இப்படி எங்கிருந்தோவெல்லாம் எண்ணங்கள் வந்து அலை பாய்கின்றன.

மண்ணாங்கட்டி. எல்லாவற்றுக்கும் உயிர் ஒன்றென்றால், இப்படி மனிச உயிர்களைக் குடிக்கிற இந்தப் பைத்தியக்காரர்களுக்கு என்ன தண்டனை?

தமிழீழம்’ என்ற இந்த ஒரு சொல்லின் பயங்கரத்தை அவன் அப்போதுதான் முழுமையாக உணர்ந்தான்.

முடிவற்ற கண்ணீர், எல்லையற்ற துயரம், பேரவலம், கொடூரம், வதைகள், கொடுமைகள், பரிவு, வலி, அவமானம், இயலாமை... லட்சக்கணக்கான மனித உயிர்களின் இழப்பு. பைத்தியக்காரத்தனம், கனவு, தாகம்.... எல்லாவற்றினதும் திரண்ட வடிவம்தான் இந்தச் சொல்.

இந்தக் கனவு. அந்தர வெளியில் மிதக்கும் கனவு.

அவனுக்கு வெறுப்பு வந்தது. பற்களைக் கடித்துக் கொண்டான். பசித்தது. தொண்டையில் நிரம்பிக் கூடாகியது துக்கம். கொப்பளிக்கும் கோபம் கண்களில். அவனால் எதற்கும் முடியவில்லை. கள்ளுக்குடித்தாலாவது இதுகளைக் கொஞ்சம் மறக்கலாம். அல்லது விகர் (வடிசாராயம்) அடிக்கலாம். தலை அவமானத்தால் தாழ்ந்தது. கையை ஓங்கித் தன்னுடைய தொடையில் குத்தினான். இடது கையால் நெற்றியைத் தடவி அதை அமுக்கினான். தலை வலித்தது. உடல் இந்தமாதிரி நிலையில் ஒரு சுமையே. அதை விடச் சுமை இந்த உயிர். இரண்டும் இப்போது அவனுக்குப் பெரும் தண்டனையாகிவிட்டன.

„ஐயொ என்னைக் காப்பாத்துங்கோ, நான் சாகப்போறன். அய்யோ, அய்யோ..“ அவன் திடுக்கிட்டான். ஒரு பெண்ணின் அவலக்குரல். அவனுக்கருகில். மிக அருகில். அது மரணக் குரல். சாவோலம். கடவுளே..! மனம் துடித்து விழித்தது. கைகள் அவனை அறியாமலே பரபரத்தன. கால்களில் ஏதோ வேகம். ஆனால், சிறிதும் நகர முடியாத சூழல். கொலை வலயம்.

சரமாரியான சண்டை. சன்னங்களும் எறிகணைகளும் தலைகளைத் தேடிக் கொண்டிருந்தன. மரணம் தன்னுடைய பெரிய நாக்கை நீட்டி அலைந்தது.

காடு அதிர்ந்தது. மழையில் நனைந்திருந்த மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. பறவைகள் இல்லாத காடு. மிருகங்கள் இல்லாத காடு. எல்லாம் எங்கே இடம் பெயர்ந்து போயிருக்கும்? அலோஸியஸ் அங்கே நின்ற நாட்களில் பறவைக் குரலைக் கேட்டது அரிது. பறவைகளின் குரல் கேட்காத வெறுமையான காட்டை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இலைகள் கருகும் மணம். பச்சை மரங்கள் எரியும் வாடை. கிளைகள் முறிந்து விழும் ஓசை. இந்தப் பெண்ணின் அவலக்குரல். இந்த இன்னும் யாரோ முனகுகிறார்கள். சன்னங்கள் தாறுமாறாகப் பறக்கின்றன. தலையை உயர்த்த முடியாது. நிமிர முடியாது.

அலோஸியஸ்க்கு வீட்டு நினைவு வந்தது. பிள்ளைகளின் முகம். மனைவியின் முகம். கடை. கடைக்கு வரம் ஆட்கள். கட்டவேண்டிய கடன்.... அவனுக்கு கட்டளையிடும் அந்த முகத்தை நினைவிலிருந்து அகற்றினான்.

“விடாதே அடி, அடி. டேய் வாறான்ரா. வாறான்ரா. வரவிடாதை அடி. பு...ஆண்டி, அடியடா. என்ன மசிராடா பாக்கிறாய். உதிலதான்ரா நிக்கிறான். அடி, அடி..“

“சட சட சட் சட சட டும் டுமீர் டப்,டப், சடசட”

அலோசியஸ் சுட்டான்.சரமாரியான சூடு... தலையை நிமிர்த்தாமல் ரவைக்கூடுகளை மாற்றினான். மாற்றி மாற்றிச் சுட்டான்.

எல்லாமே பைத்த்தியக்காரத்தனத்தின் உச்சமாக அவனுக்குத் தோன்றியது. கொலை வெறி எப்பிடியெல்லாம் போட்டலைக்கிறது. இரண்டு யானைகள் மோதும் போது நசிபடுவது செடிகள்தான். செடியாகச் சிக்கிவிட்டேனா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. தான் மட்டும் அல்ல பலரும் சிக்கித்தான் விட்டார்கள்.

தருமு சொல்வார்“கொடாக்கண்டனுக்கும் விடாக்கண்டனுக்குமிடையில் சிக்கி விட்டோம்“ என்று.

இதெல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைமை இல்லை. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேணும். தாமதிக்க முடியாது. தாமதித்தால் இன்னும் ஆபத்து அதிகமாகலாம். அவன் ஒரு நொடியில் அந்தப் பயங்கரங்களின் வழியே பாய்ந்து சென்றான். சாவினூடே சென்று அந்தப் பெண்ணைத் தூக்கினான். அவள் விழிகள் சொருகி விட்டன. இரத்த நெடி. அவலமான முகம். முகதத்தில் வலது பக்கத்தில் பாதிக்கும் குறைவாகச் சிதைந்திருந்தது. உலர்ந்த வாய். மயங்கிக் கொண்டிருந்தாள். இரத்தம் பெருகிக் கொண்டேயிருந்தது.

தூக்கிய பெண்ணைக் கொண்டு, பின் பக்கமாக ஓடினான். ஆனால், ஓட முடியாதபடி சாவு அவனைச் சுற்றி வளைத்தது. எறிகணைகள் அங்குமிங்குமாக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. துப்பாக்கிச் சன்னங்கள் பறந்து வந்தன. தலையைத் தூக்க முடியாது. நிமிர முடியாது. இந்த நிலையில் அவளை எப்படிக் காப்பாற்ற முடியும்? தன்னை எவ்வாறு காத்துக் கொள்ள இயலும்? கடவுளே என்ன கூத்தெல்லாம் நடக்குது, இது எங்கே போய் முடியப் போகுது. எப்படியெல்லாம் ஆகப் போகுது?

ஆனால் தாமதிக்க முடியாது. நிலைமை அநேகமாக மோசமாகி விட்டது போலவே தெரிந்தது. அவ்வளவுக்குச் சண்டை உக்கிரம். சத்தம் காதைப்பிளந்தது. அப்படியே இதயத்தைப் பிளந்தது. உடல் பதறியது. இனி இதிலிருந்து மீள்வது அபுர்வம். அதிசயந்தான். அவனை மீறி அழுகை வந்தது. மனம் முழுவதும் பிள்ளைகளின் முகங்கள்.

என்ன செய்ய முடியும்? அவன் மட்டுமே அந்தப் பகுதியில் தனித்து நிற்கிறான். திருப்பிச் சுடலாமா? சுட்டால் அதே இலக்கில் சுடுவார்கள். உயிர் பிழைக்க வேணும் என்றால் சுட்டுத்தான் ஆகவேணும். அப்படியென்றால் கொலை. செபஸ்ரியாரே! நான் கொலையாளியா? வேறு வழியில்லை. சுட்டால் மட்டும் தப்பி விடமுடியுமா? தான் எங்கே நிறுத்தப்பட்டிருக்கிறேன். எங்கே நிற்கிறேன் ஒன்றுமே அலோசியஸ்க்குப் புரியவில்லை.

“டேய்...பு.. ஆண்டி தமிழீழத்தை நினைச்சுக் கொண்டு அடியுங்கோடா. வாறான்ரா, வாறான்ரா விடாதை அடி, அடி அந்தா மரத்துக்குப் பின்னாலை பதுங்குகிறான். குடு. பின்னால பெரிசை அனுப்பு. ஐம்பது மீற்றர் தூரத்தில நிற்கிறான். விடாத“

கட்டளைக் குரல் அவனின் பின்னாலிருந்து ஒலித்தது. அந்தக் குரலுக்கு இசைய அலோசியசைச் சுற்றி சிலர் இயங்கினார்கள். சூடு உக்கிரமாகியது. அதற்கு மறுத்தானை எதிர்த்தரப்புக் கொடுத்தது. அடை மழை. அந்த மழையை விடவும் இந்த மழை உக்கிரம்.

அலோஸியஸ் தவழ்ந்தான். நிலத்தின் குளிர்ச்சியையும் அதன் கருணையையும் அவனுடைய அடிவயிறு உணர்ந்தது. அந்த மண்ணில் அப்படியே படுத்து விடலாம். அதன் கருணையில் தன்னை முழதாகக் கொடுத்து விடலாம். தாய் மடியின் சுகம். அப்படியே தானும் முடிவற்று மண்ணில் சாய்ந்துவிடத்தான் வேணுமோ என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அக்கணமே அவனுள் ஒரு பேரியக்கம்.

அந்தப் பெண்ணை அவன் இழுத்தான். தவழ்ந்த படி இன்னொரு உடலை இழுத்துச் செல்வது எவ்வளவு கடினமானது. அதைவிடக் கடினமானது, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல் இப்படித் தவிப்பது. எவ்வளவு கொடுமை? தான் ஒரு பிராணியைப் போல மாறி விட்டதாக உணர்ந்தான். இதுதான் கிடைத்த பரிசா?

“ டேய் தமிழீழத்தை நினையுங்கோடா“ திடீரென உக்கிரமான குரல்.

“ஐயோ இந்த நரகம் வேண்டாம்“ என்று வாய்விட்டுக் கத்தினான்.

எதுவோ ஒரு வலி, காலில். மேல் தொடையில். சம நேரத்தில் தோள்பட்டையில். வரவர வலி கூடியது. படாரென விழுந்து படுத்த படியே வலித்த இடங்களில் தடவிப் பார்த்தான். கை பிசு பிசுத்தது. ஈரம். பச்சை இரத்தம். அந்த இரத்தத்தின் நெடிலை அவனுடைய மூக்கு ஏற்க முடியாமல் தவித்தது.

5

அலோஸியஸ் கண் விழித்தபோது அவனுடைய வலது கால் தொடைக்குக் கீழே காணாமற் போயிருந்தது. காலைத் தடவிப் பார்த்தான். கண்கள் மங்கின. எல்லாமே இருண்டு வந்தது. அழுவதற்கு நாக்கு எழவில்லை. அவனால் அதைத்தாங்க முடியவில்லை. இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் அவனால் அதைத் திரும்பப் பெற முடியாது. அதற்கு விலையில்லை. தான் சம்மதிக்காத, விரும்பாத காரியத்தில் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவுக்கு எப்படி இந்தத் தண்டனை? அவன் குற்றமே இழைக்காமல் கிடைத்திருக்கும் தண்டனை. அவன் விம்மி விம்மி அழுதான். ஆஸ்பத்திரி மணத்தை மீறி அந்த அழுகைக் குரல் கேட்டது.

மூக்கில் மருந்து நெடி. சுற்றிவர காலையோ, கையையோ, கண்ணையோ, மூக்கையோ, முதுகையோ கொடுத்தவர்கள். ஊழைக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

உடலில் ஏதாவது ஒரு பகுதியில் கட்டுப்போடாதவர்கள் இல்லை. காய்ந்து வரண்ட முகங்கள். எதற்காக இந்தத் துன்பமெல்லாம் என்று கேட்கும் கண்கள். ஏன் தாங்கள் இப்படிப் பழிவாங்கப் படுகிறோம் எனப் பார்க்கும் பார்வைகள். தங்களை மீட்பதற்கு யாராவது மீட்பதற்கு யாராவது இல்லையா என்று ஏங்கும் அந்தக் கண்களில் படர்ந்திருக்கும் நீண்ட துயரை அலோஸியஸ் பார்த்தான்.

அவன் இதயம் ஒரு கணம் இயங்க மறுத்தது. தன்னுடைய கண்களிலும் இப்படித்தானே துயரம் கரை கட்டியிருக்கும் என்று எண்ணினான். எல்லாமே வாடிய முகங்கள். வயதை மீறிய முதுமை. இளமையின் வாளிப்பை அவற்றில் காணவில்லை. அதை எதுவோ தின்று கொண்டிருக்கிறது.

“அலோஸியஸ் அண்ணை, என்னைத் தெரியுதா?“ என்று கேட்டான் அவனுக்கு வலது பக்கமாக இணர்டாவது கட்டிலில் படுத்திருந்தவன்.

அலோஸியஸ் ஒரு கணம் தடுமாறி விழித்தான். கன்னங்கள் ஒட்டி, மெலிந்தவன். அலோஸியஸைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனுடைய சிரிப்பையும் விட அந்த முகத்தில் வெளிப்பட்ட சோகம் பெரியது. அலோஸியஸ் கூர்ந்து பார்த்தான். யாராயிருக்கும். அந்த மதிய நேரத்தில் வெளியே எறித்துக் கொண்டிருந்த கோடை வெயிலின் ஒளி ஆஸ்பத்திரிச் சுவரில் வெளிப்பட்டு அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. அலோஸியஸ் அவனை அடையாளம் கண்டான்.

மாவடிச் செல்லத்தம்பியின் மகன். தங்கேஸ். தகப்பன் செல்லத்தம்பி, மாட்டு வியாபாரி. கரீம் காக்கா ஊரிலிருந்த போது காக்காவோடு சேர்ந்து மாடு வாங்கி விற்றான். இயக்கம் முஸ்லிம்களை வெளியேற்றிக் கலைத்தபோது(1990 இல்) காக்கா குடும்பமும் புத்தளத்துக்கு ஒரே இரவில் போய்விட்டது. பிறகு செல்லத்தம்பி, தனியாக மாட்டு வியாபாரத்தைப் பார்த்தான். ஒரு மூன்று வருசம் போயிருக்கும். ஒரு நாள் இரவு செல்லத்தம்பி அருளப்புவின் கடையில் பீடிக்கட்டை வாங்கிக் கொண்டு திரும்பியபோது கடை மறைவில் மறைந்து நின்ற இரண்டு இயக்கப் பெடியள், அவனுடைய சேர்ட் கொலரில் பிடித்து இருளுக்குள்ளே இழுத்தார்கள். ஒருவன் வாயைத் துணியினால் அடைத்தான். செல்லத்தம்பி திடுக்கிட்டுத் திமிறியபோது அவனை அமத்திப் பிடித்தார்கள் இருவரும். அவன் சத்தம் போடுவதற்காக முயன்றவேளை ஒருவன் பிஸ்ரலை வாய்க்குள்ளே திணித்தான். மற்றவன் காதில் வைத்தான்.

என்ன, ஏது, எதற்கு என்று தெரியாமலே அவனைக் கொண்டு போன இயக்கப் பெடியள், கரீம் காக்கவுக்கும் அவனுக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்று அடித்துச் சொன்னார்கள். ஆறு மாதமாக அவர்கள் இதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் செல்லத்தம்பிக்கோ இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அப்படித் தொடர்பிருந்தால் தான் என்ன? காக்கா தேசத்துரோகக் குற்றம் எதையும் செய்ய ஆளில்லை. ஊரிலிருக்கும் வரையில் காக்காவின் மகனுடைய கொத்து ரொட்டிக் கடையில் எப்பவும் இயக்கக்காரரின் மோட்டார்சைக்கிள்கள்தான் சாமம் வரையில் நிற்கும். கோக்கோகோலா குடிப்பதை இயக்கம் தடுத்திருந்தாலும் அந்தக் கடையில் போராளிகள் அதைக் குடித்தார்கள். அவனுடன் சிரித்துப் பம்பலடித்தார்கள். அப்படியெல்லாம் இருந்தார்கள். இப்பொழுது தலை கீழாகி நிற்கிறார்கள்.

ஆக செல்லத்தம்பி செய்ததெல்லாம் ஒன்றேயொன்றுதான். கரீம் காக்கா ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட போது தனக்கு இயக்கத்திடமிருந்தும் வேறு ஆட்களிடமிருந்தும் வர வேண்டிய மாட்டுக் காசு ஒரு லட்சத்து ஐம்பத்தி மூவாயிரத்து இரு நூற்றம்பது ரூபாவை வாங்கும்படி செல்லத்தம்பிக்கு ஒரு கடிதம் கொடுத்ததுதான். இதில் இயக்கத்திடமிருந்து வரவேண்டிய காசு, தொண்ணூறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபா.

இங்கே ஆகலும் சிக்கல் என்னவென்றால், காக்கா வெளியேற்றப்பட்டு இரண்டு மாதங்களின் பிறகே அந்தக் கடிதத்தை அவர் செல்லத்தம்பிக்கு அனுப்பியிருந்தார். வெளியேறும்போது இருந்த அந்தரத்திலும் எதிர்பாராத திகைப்பிலும் காக்காவினால் எதையுமே செய்ய முடியவில்லை. ஒரே நாளில் ஊரை விட்டு ஓடிப்போ என்று சொன்னால் யாரால்தான், எதைத்தான் செய்ய முடியும்?

ஆறு தலைமுறையாக வாழ்ந்த ஊர். படித்த பள்ளி. பழகிய நண்பர்கள். ஊர் ஆட்கள். திரிந்த தெருக்கள். குளித்த குளம். அவர் தேடித்தேடி ஆசையோடு வாங்கிச் சேர்த்த பொருட்கள். அவர் தன் நண்பர்களோடு திருவிழாவென்றும் பொங்கலென்றும் போய்க் கொண்டாடிய கோவில்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு பகலில் வெளியேற வேண்டும் என்று கட்டளை வந்தபோது அவருக்கு எதுவும் புரியவில்லை. முதலில் தலை சுற்றியது. பிறகு பூமி சுற்றியது. வருமதி கொடுக்குமதி ஒன்றைப்பற்றியும் அவரால் சிந்திக்க முடிடியவில்லை. தெரிந்த இயக்கக்காரர்களிடம் ஓடிப்போனார். அவரை விட முந்திக் கொண்டு அவருடைய மகன் அவர்களைத் தேடிப் போனான். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தார்கள். பாவத்தில் அவர்களுக்குப் பங்கிருந்ததோ இல்லையோ கையைக் கழுவினார்கள். ஒரு கைப்பையில் எடுக்கக் கூடியவைகளை எடுத்துக் கொண்டு எல்லோரோடும் தன்னுடைய குடும்பத்தையும் தள்ளியவாறு போனார் காக்கா. போகும்போது அவர் சிந்திய கண்ணீர் காயாமல் நீண்ட நேரம் இருந்ததாக எப்போதும் செல்லத்தம்பி சொல்லிக் கொண்டிருந்தான்.

அவர் போய், அங்கேயிருந்து கொண்டு பிறகு, தான் சீர் செய்ய வேண்டியவற்றை, அப்படிச் செய்யக் கூடியவற்றை, சரியாக்கலாம் என்பவற்றை எல்லாம் சிந்தித்தார். இத நடந்தது அவர் வெளியேற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு. அப்போதுதான் அவர் செல்லத்தம்பிக்கு கடிதமெழுதினார். தான் செல்லத்தம்பிக்குக் கொடுக்க வேண்டிய கணக்கையும் எழுதி, கடைக்காரச் சண்முகத்துக்குத் தீர்க்க வேண்டிய பாக்கி, சீட்டுப் பிடிக்கும் தங்கத்துக்கு தரவேண்டி தொகை என்றெல்லாம் எழுதி, மேலதிகமாக செல்லத்தம்பி தன்னோடு ஒன்றாகத் தொழில் செய்ததற்காக வரவேண்டிய வருமதிகளின் காசில் ஒர தொகையை எடுக்கும்படி எழுதியிருந்தார். அவற்றையே செல்லத்தம்பி கடன்காரரிடம் கேட்டான்.

என்னடா காக்காவுக்கு வால் பிடிச்சு ஏஜென்ஸி வேலை பாக்கிறியோ? இல்லாட்டி, அங்கால காக்கா மூலமா ஆமிக்கு தகவல் சொல்லுறியோ என்று இயக்கப் பெடியள் கேட்டபோது றூட், வேறு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்று புரிந்தது. மீளமுடியாத ஒரு உலகத்துக்கு தன்னை அவர்கள் கொண்டு பொகிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. உடலில் இரத்தம் உறைந்தது. அவனுடைய இதயம் இயங்குகிறதா என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால், அவர்கள் வயரால் நாலு போடு போட்டு அதை இயங்கவைத்தார்கள். தோல் பட்டையாய், வரி வரியாய்க் களம்பி இரத்தம் வடிந்தது. செல்லத்தம்பி கெஞ்சினான். குழறி மண்டாடினான். அவர்கள் சிரித்தார்கள். வலி அவனைச் சப்பித் தின்றது.காலில் விழுந்து கெஞ்சினான். நடந்த தெல்லாவற்றையும் சொன்னான்.

ஆனால் அவர்கள் எதையும் ஏற்கத் தயாராகவில்லை. தனக்கு ஆறு பிள்ளைகள். ஒரு கண் தெரியாத மனைவி. அதுவும் வருத்தக்காரி. ஆறு பிள்ளைகளில் ஒன்று வாய் பேசமாட்டாதவன். எல்லாவற்றையும் சொல்லி, தனக்குக் கருணை காட்டும்படி கெஞ்சிக் கேட்டான்.

அவனுடைய அந்தக் கதறலையும் கெஞ்சுதலையும் கேட்டு அவன் அடைக்கப்பட்டிருந்த அந்தக் கற்சுவர்கள் கரைந்தாலும் அவர்களுடைய இதயம் கரையும் போலத் தெரியவில்லை. வரவர நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருந்தன. அதை அவன் உணர்ந்தான். வீட்டு நினைவுகள் அவனைச் சிப்பிலியாட்டின. உழைப்பில்லை. வருமானமில்லை. என்ன பாடுபடுகிறார்களோ என்ற கவலை அவனைத் தின்றது. எதையும் அறிய முடியவில்லை. அவன் இருக்கிறானா இல்லையா, அவனை விடுவார்களா இல்லையா, எதற்காகப் பிடித்தார்கள்? வீட்டுக்காரருக்கு எதுவும் தெரியவில்லை.

அவர்கள் தினமும் இயக்கத்தின் ஒவ்வொரு முகாமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். செல்லத்தம்பியிடம் வந்து காரியம் பார்த்தவர்களே கையை விரித்தார்கள். இல்லையென்றால் ஆட்களைக் கண்டவுன் வெட்டி மறைந்தார்கள். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சிறு ஆறுதலும் கிட்டவில்லை.

இருந்தாற்போல ஒரு நாள் சாமம் ஒரு மணியிருக்கும். இரண்டு இயக்கப் பெடியள் அதிரடியாக வந்து அவனுடைய கூண்டுக்குள்ளிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

டேய், காக்கான்ர மனிசி அவ்வளவுக்கு இனிப்பாளோடா? நீதான் சோனகத்தியை வைச்சிருந்தியாம். காக்காவுக்க மாட்டு யாவாரம் நல்லாத்தான் நடத்தியிருக்கிறாய். இப்ப எங்களுக்கும் விளையாட்டுக் காட்டப்பாக்கிறாய்..சோனிப் பொம்பிளையோட படுக்க உனக்கு வெட்கமில்லையோடா நாயே..! என்று அவர்கள் கத்தினார்கள்.

செல்லத்தம்பி இதை, இப்படியொரு கோணத்தில் கேவலங்கெட்ட கதையை இயக்கப் பெடியள் கதைப்பார்கள் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவன் எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. இன்னும் உயிர் வாழ்வதை விடச் செத்துப் போய்விடலாம் என்று உறுதியாக நம்பினான். ஆனால் அதற்கும் வழியில்லையே. அவர்கள் அதற்கு அனுமதிக்கிறார்களில்லை.

“என்னைச் சுட்டுக் கொல்லுங்கோ. இதெல்லாத்தையும் என்னால தாங்கேலாது“ என்று இரண்டு கைகளையும் எடுத்து அவர்களைக் கும்பிட்டான். குரல் கம்மியது. அந்த இருளில் வெறெதுவும் புலப்படவில்லை.

“ரோசம் வருதாக்கும் தம்பிக்கு“ என்று கேலிப்படுத்திச் சிரித்தார்கள். ஒருவன் நெஞ்சில் உதைத்தான். அந்த ஒடுங்கிய விறாந்தையில் மல்லாக்காக விழுந்தான் செல்லத்தம்பி. கையில் போடப்பட்டிருந்த விலங்கு எதிலோ அடிபட்டு கையை நெரித்தது. வலி உயிரை ஒரு தடவை உறிஞ்சியது. அவனுடய வழுக்கைத் தலையில் மிதித்தான் மற்றவன்.

சரியாக ஆறு மாதமும் மூன்று நாளும். செல்லத்தம்பி ஒரு தேசத்துரோகி என்றும் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவனுடைய படத்தை பத்திரிகை ஒன்று வெளியிட்டு அறிவித்தது. செல்லத்தம்பியின் படம் பத்திரிகையில் வந்த முதல் நாளும் கடைசி நாளும் அது.

கீழே அவன் செய்ததாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு ஒரு குற்றப் பட்டியல்.

சடலத்தைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. அவனை அவர்கள் சுட்டார்களா அடித்துக் கொன்றார்களா? சயனைட் கொடுத்தார்களா? நெஞ்சில் ரயர்தான் போட்டு எரித்தார்களா? சரி, கொலையைத்தான் செய்தார்கள் என்றால் அதை எப்போதவது செய்தார்கள் என்று ஒன்றுந்தெரியாது.

இதற்குப் பிறகு செல்லத்தம்பியின் குடும்பத்தை ஊரில் ஒரு மாதிரிப் பார்த்தார்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் வாத்திமார் தொடக்கம் அங்கே படிக்கிற பிள்ளைகள் வரையில் தேசத்துரோகியின்ர பிள்ளை என்று சொல்லி ஒரு மாதிரி நடத்தினார்கள்.

இதனால் படிப்பை பாதியில் நிறுத்தினான் செல்லத்தம்பியின் மூத்தவன். மாங்காய் வியாபாரத்துக்கு யாரோடோ கூடப் போனான்.

அந்த மூத்த மகன்தான் இப்போது காயப்பட்டு அலோஸியஸ்க்கு அருகில் படுத்திருக்கிறான். கண்கள் குழிவிழுந்து விட்டன. நிறமும் குறைந்திருந்தான். இவனை எப்போது இயக்கம் போராளியாக்கியது? அவனாக இயக்கப் போராளியாகுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

அலோஸியஸ்க்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் தங்கேஸைப் பார்த்தான்.

“நீங்கள் என்னத்தை நினைக்கிறியள் எண்டு எனக்குத் தெரியுமண்ணை. எங்கள விட்டிடுவாங்கள் எண்டுதான் நினைச்சுக் கொண்டிருந்தம். ஆனால், என்னைப் பிடிச்சிட்டாங்கள்“ என்றான் தங்கேஸ். குரல் விம்மிக் கமறியது.

அலோஸியஸ் தலையை மேலும் கீழுமாக அசைத்தான். விரிக்கப்பட்டிருக்கும் வலையில் ஒருவரும் தப்ப முடியாது என்று தெளிவாகத் தெரிந்தது. அதைவிட, தெரியாத சங்கதி ஒன்று அலோஸியஸ்க்கு இருந்தது.

செல்லத்தம்பியின் குடும்பம் இப்போது தேசத்துரோகி குடும்பமா அல்லது போராளி குடும்பமா என்று.
00