Tuesday, December 27, 2011

கண்ணில் முளைத்த முள் வனம்



அம்மா, அவனுடைய தலையைத் தடவிக் கொண்டிருந்தாள். அந்த விரல்களிலிருந்து குளிர்மையும் மென் கதகதப்பும் சரந்து கொண்டிருந்தது. அவள் மிக மெதுவாக அவனின் மனதுக்குள் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய வார்த்தைகளைக் கேட்கக் கேட்க அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது. கண்கள் இருளில் திணறின. மூச்சு முட்டியது. இதயம் உள்ளே கரைந்து ஒழுகியது. எலும்புகள் தளர்ந்து உருகின.

அவன் தன்னை நிலைப்படுத்த எத்தனித்தான். அம்மாவின் கைகளை மெதுவாக விலக்கி, எழுந்திருக்க முயன்றான். ஆனால், அதற்கு மனம் மறுத்தது. அந்தக் கைகளின் குளிர்மையும் கதகதப்பும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தவதாக உணர்ந்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அம்மாவின் வார்த்தைகள் அவனை உருக்கிக் கொண்டிருந்தன.

அவன் திண்ணைக்குந்தில் அமர்ந்து, கால்களைத் தொங்கவிட்டபடி சவரில் சாய்ந்திருந்தான். அம்மா அவனருகே ஒருக்களித்திருந்தாள். அவளிடமிருந்து இதமான வாசனை வெளிப்படுவதாக அவனுக்குத தோன்றியது. அவள் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ கண்களை வெளியே அலைய விட்டபடி தவித்தான்.

“ஏன் மகனே பேசாதிருக்கிறாய்?”

அவன் பதில் சொல்வதற்கு வாரத்தைகளைத் தேடினான்.

அவளுக்குப் பதில் சொல்வதற்கு தன்னிடம் ஒரு சொல்கூட இல்லாத நிலையை உணர்ந்தபோது அவன் அதிர்ந்தான். பதிலாக ஒரு சொல்லைக்கூட அவனே புதிதாக சிருஸ்டிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தில் தானிருப்பதாகப் பட்டது. பேசுவதற்கு ஒரு வார்த்தையற்ற விதி பெருகிச் சூழ்ந்ததைக் கண்டு மனம் ஓலமிட்டது.

அவனுடைய சருமம் வியர்த்தது. மனம் நடுங்கியது. அம்மா எதையும் உணர்நது விடக்கூடாதே என்று பயந்து, எழுந்திருக்க முயன்றான். ஆனால், அவள் தன் நிலையைக் கண்டு விடுவாளோ என்ற எண்ணம் மறுபடி அவனை மின்னலாகத் தாக்கியது. நூறாயிரம் புலிகளால் சூழப்பட்டவன் போலத் திகைத்ததிர்ந்தான்.

“என்னுடைய குரல் உனக்குப் பிடிக்கவில்லையா? அல்லது என்னை நீ வெறுக்கிறாயா? ஏன் மௌனத்துள் ஒளித்துக் கொள்கிறாய்? சொல் மகனே. உன்னுடைய தயக்கங்கள் எதற்காக?”

அம்மாவின் குரல் காற்றில் வழிந்து அவன் மனதில் படிய மீண்டும் மீண்டும் எத்தனித்தது. அவன் அவற்றை உதறிவிடத் துடித்தான்.

அவள் அவனுடைய தலையைத் திருப்பி, தன் முகத்துக்கு நேரே நிறுத்தினாள். அவனுடைய கண்கள், அவளுடைய விழிகளைப் பார்க்கத் தயங்கித் தவித்தன.

தன்னுடைய மானம் நாறி மணப்பதாக அவன் உணர்நதான். ‘ஐயோ, அம்மாவுக்கு இந்த நாற்றம் மணக்கப் போகிறதே! அம்மா இந்த நாற்றத்தால் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவாளோ? அதைவிடத் தன்னைN நொந்து நொந்த உக்கிப் போவாளோ! பிறகு அவள் என்னைத் தீண்ட மாட்டாள். துக்கம் பெருகி அவள் ஒடுங்கிப் போவாள்.

அவனுடைய கால்கள் தளர்ந்தன. தாகத்தால் நாக்கு வரண்டது. அவடைய குரலை அவனுடைய மனமே உறுஞ்சிக் கொண்டது.

“ஏன் மகனே எல்லாவற்றையும் வெறுக்கிறாய்? அன்பும் க ருணையும் உன்னிலிருந்து எப்படி வற்றிப்போயின? உன்னுடைய விழிகளில் அமைதியில்லையே! வஸீகரங்களை இழந்த புதல்வனாக எப்படி நீ மாறினாய்? நீ என் குழந்தையல்லவா? என்னைத் தவிக்க விடாதே. நீ என்னுடைய மகன் என்ற அடையாளத்தை மறுக்கின்றாயா? சொல். உன் வாயில் ஆயிரம் பூட்டுகள் ஏன் தொங்குகின்றன?

அவளின் வார்த்தைகள், அவன் மனதைச் சாடின. அம்மா எப்படிச் சவுக்கைக் கையில் எடுத்தாள்? அவள், சவுக்கை ஒரு போதும் எடுப்பதில்லையே! நான்தான் அப்படி நினைக்கிறேனா என்று தன்னையே சந்தேகித்தான். ஏன் இப்படி என் மனம் வலிக்கிறது? கடவுளே இதென்ன கொடுமை? ஆயிரமாயிரம் சுழிகளில் அகப்பட்ட சருகானான் அவன்.

அம்மாவின் கண்கள் லட்சம் சூரியன்களின் பிரகாசமாக தகித்து ஒளிர்ந்தன. அவளின் சொற்கள், வெள்ளை வெள்ளையாக காற்றில் மிதந்தன. அவன் அவற்றைக் கண்டு அஞ்சினான். அவளுடைய சொல்லால் பசி தீர்ந்த தன் காலத்தை எண்ணியபோது துக்கம் உடலை நிரப்பியது. ஆறுதலாக, மகிழ்ச்சியாக, பரவசமாக, நம்பிக்கையாக, வழிகாட்டும் ஒளியாக அவளுடைய சொற்களை அவன் அறிந்திருக்கிறான். மனசு நிரம்ப அவற்றைக் களஞ்சியப்படுத்திக் கொண்ட அந்த நாட்கள். இன்றோ, எல்லாம் எதிர்நிலையில் திரும்பியுள்ளன. கட்டுப்படுத்த முடியாமலே அவனுடய உடல் குலுங்கத் துடித்தது. சிரமப்பட்டு அதை மறைக்க முயன்றான். அதை, அந்த நிலையை அம்மா அறிந்தால் வருத்தம் அவளைச் சிதைத்து விடும்.

அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்வற்கு ஒரு சொல் இல்லாத விதி தன்னைச் சூழ்வது எப்படி நேர்ந்தது என்று தெரியாது தடுமாறினான். ஒரு சொல்லைத் தேடியெடுத்தாலும் அது பொய்யால் கனத்தது. இயல்பும் அழகுமின்றி அவனே வெறுக்கும் படியாய் இருந்தது. தான் இருள் பெருகிய குகையுள் நாறி மணக்கும ஒரு வஸ்துவாகிவிட்டேன் என்று நம்பினான்.

அம்மாவின் கேள்விகளோ பெருகிக் கொண்டேயிருந்தன. அவனுடைய கனத்த மௌனத்தின் திரையை உடைக்க அவள் முயன்று கொண்டேயிருந்தாள்.

“என்னுடைய அன்பு மகனே” அவளுடைய குரல் உடைந்து துயரம் பரப்பியது. அவள் தொடர்ந்தாள்

“உன்னுடைய கண்கள் ஏன் கறுத்துப் போயிருக்கின்றன? உன்ட முகம் எதற்காகப் பிணத்தின் முகத்தைப் போலச் செத்துக் கிடக்கிறது?”

அவனுள் கூரிய வாள் இறங்கியது போலிருந்தது. அந்த வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் அவளிலிருந்து விலகியோவதாகத் தீர்மானித்தான். ஆனால், மனம் மறுத்தது. அது அவளின் வருடலுக்காகவும் அவளின் கண்பார்வைக்காகவும் தவித்தது.

அவன் பார்வையை வெளியே அலைய விட்டான். தூர வானத்தில் புள்ளிகளாய்த் தெரிந்த பட்சிகள் விரைந்து நெருங்கி வந்தன. அவற்றின் நிழல் பூமியில் கோடு விழுத்தி நெருங்கியது. மிக ஆழமான வடுக்களாக அந்தக் கோடுகள். அவையோ பெரும் பள்ளமாக நீண்டு கொண்டிருந்தன. புல், ப+ண்டு, மரம் செடி, பயிர், பச்சை, வீடு வளவு என்று எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்துச் செல்லம் நிழலாக அது நீண்டு சென்றது.

அவன் பயந்து அலறினான். குரலை யாரோ களவு கொண்டு போனதாக அது ஒலிக்கவேயில்லை.

பட்சிகள் வேகமாகப் பறந்து சென்றன. அவை, முகில்களின் கீழாக விஹாரையின் பக்கமாகப் பறந்தன. சட்டென்று அந்தப் பட்சிகள் தொலைவிற் கரைந்தன.

பட்சிகளின் சிறகசைப்பில் எழும் காற்றில் அரசமிலைகள் உதிர்ந்து பறந்தன. பேரிரைச்சல். நட்சததிரங்கள் உதிர்ந்து மிதப்பதைப்போல இருந்தது. கிளைகள் சுழன்று அலைந்தன. விஹாரையின் சமீபமாக ப்சிகளின் நிழல் ஆழமாகக் கோடிழுத்துச் சென்றது. அவற்றின் சிறகிரைச்சலில் அவன் அதிர்ந்தான். உயிரை உறுஞ்சும் ஒலியாக அது இரைந்தது.

2

அதிகாலை, சாம்பல் படர்ந்த பனியில் விறைத்திருந்தன ஊர்கள். கள்வரைப்போல அவர்கள் பதுங்கிப் பதுங்கி நடந்தார்கள். கால்கள் பீதியில் நடுங்கின. பகை மனமோ பாரமாகிக் கனத்தது.

கட்டளைக் குரல் கலையும் இருளை ஊடறுத்து வந்து உயிரில் படிந்தது. அது படியப் படிய சேனை முன்னேறியது. கூரொளிரும் வாள்களாக மின்னின விழிகள் ஒவ்வொன்றும். அதனுள் மிக ஆழமான இருட் பள்ளம்.

காலையின் விரிவு. ப+க்களின் வாசனைன, பட்சிகளின் அமன் சப்தங்கள். பனியேந்திய மரங்கள், குளிரில் சில்லிட்டிருந்த தோட்டங்கள் எல்லாவற்றையும் சூழ்ந்தன சப்பாத்தடிகள். ஒரு பெரும் வியூகத்துள் சிக்கின கிராமங்கள்.

3

அந்த ஊரின் மீது படர்ந்திருந்த அமைதியின் மீது வேட்டு வைத்தான் அவன். எதிரே நின்ற மரத்தின் கிளையிலிருந்து இலைகள் உதிர்ந்தன. இரண்டு புறாக்கள் இறகுதிரக் குருதி சிந்திக் கீழே வீழ்ந்து துடித்தன.

அவன் முன்னேறினான். தூர, காற்றில் மிதந்து எழுந்தன ஓலக்குரல்கள். ஓலக்குரலை மேவி எழுந்தது வேட்டொலி. தொடர்ந்து சேனை முழங்கியது.

4

“நில் மகனே! இந்த முற்றத்தில் உன் காலடிகள் என்றைக்கும் அழியாதிருக்கும். உன்னை நான் இந்தப் பாதச் சுவடுகளில் பார்க்கிறேன். இரவுகளில் என் கனவுகளில் இந்தப் பாதத் சித்திரங்கள் உன் முகமாக மலரும். அதுதான் மகனே எனக்கு ஆறுதலைத் தரும் பரிசு.

அம்மாவின் குரலில் அவன் நெக்குருகி நின்றான். அவள் தேமா மரத்தின் கீழ் வீழ்ந்திருந்த மலர்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். காலை வெயில் மணலின் மீது ஒளிக் கோலம் இழைத்துக் கொண்டிருந்தது. அவன் அவளின் மடிச் சூட்டை உணர்ந்தான்.

“புறப்படப் போகின்றாயா மகனே? நீ, காலங்களைப் பவுத்திரப் படுத்து. நீ பவுத்திரப் படுத்தும் காலமே. உன்னை மகிமைப் படுத்தும். எல்லாவற்றையும் நேசி. நானே எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதாய் நினைத்துக் கொள். நான் உன் தாயல்லவா”

அவன் புன்னகைத்தான். அவள், அவனை அணைத்து தலையை வருடினாள்.

அவன் வெளிக்கிடும்போது அவள் வழியைச் சுத்தப்படுததினாள். துர்க்குறிகள் ஏதும் மகனின் பயணத்தில் தோன்றிவிடக் கூடாது என எச்சரிக்கையோடு துடித்தாள்.

5

முற்றங்களில் சப்பாத்தடிகள் நிறைந்திருந்தன. அவன், தன்னுடைய காலடியைக் கண்டு தானே திடுகிட்டான். முள்ளாகப் பரவியிருந்தன அவை. மனம் ஓலமிட்டது. இரத்தம் உறைந்தது.

உறைந்த இரத்தத்தின் மீது விழுந்தது, சவுக்கின் சொடுக்கலாய்க கட்டளைக் குரல். அவன் தடுமாறினான். கால்கள் முன்னேறின. மனமோ தயங்கியது.

பூக்கள் உதிர்ந்திருந்தன. பூமரங்கள் சிதறி, ஒரு பெரும் அகாலமாய் விரிந்திருந்தது முற்றம்.

பூட்டிய கதவுகள் அடைபடும் ஒலி. அவன் மனதை யாரோ உடைத்தார்கள்.

பொருட்களைச் சூறையாடினார்கள். அந்தப் பொருட்களில் இருந்து ஒர வித மணம் கிளம்பியது. என்ன மணம்? வியர்வை நாற்றம் பொலிருக்கிறதே. இன்னும் ஏதோ வாசைன..? என்னவாயிருக்கும். கண்ணீர் மணம். கண்ணீ; மணக்குமா? இதென்ன கேள்வி. இதோ மணக்கிறதே.

அவனின் இதயத்தை இரத்தம் ஒழுக ஒழுக யாரோ பிடுங்கி எறிந்தார்கள்.
“காலமே, என்னை நிந்திக்காதே” அவன் கூவினான். மனம் பதை பதைத்தது. கட்டளைக் குரல், சவுக்காய் வலியை எழுப்பியது. சேனை முன்னேறியது.

திடீரென முற்றத்தில் உதிர்ந்திருந்த பச்சை இலைச் சிதறல்களுக்குள்ளிருந்து சிரிப்பொலி கேட்டது. அவன் திடுக்குற்று, வியப்புடன் திரும்பிப்பார்த்தான்.

சிதைந்து தூளாகிக் கிடந்த இலைகளின் சிதைவுகளிடை ஒரு முகம் தெரிந்தது. அது ஒரு பொம்மையின் முகம். ஒரு குழந்தையின் கனவுகளைப் பிரதிபலிக்கும் முகம். அவன் மெல்ல நடந்து அதை நெருங்கினான். கண்கள் அந்த முகத்தை ஊடுருவின. மனம் எச்சரிக்கையடைந்தது.

“வா,படையினனே! ஆ…கவனம், கவனம்…ஆ… அந்தக் காலடிகளை மிதித்து விடாதே. அது என்தோழனுடையவை. இந்தப் பாதச்சுவடுகளில் நான் என் மனித்களின் முகங்களைப் பார்க்கிறேன். என் கனவுகளில் இந்தப் பாதச்சித்திரங்கள் அவர்களின் வாழ்வை விரிக்கும். அவையே எனக்குப் பொக்கிசங்கள். எனவே, அப்படியே நில். நான் சொல்வதைக் கேள்” என்றது அந்த முகம் குழந்தைக் குரலில்.

“யார் நீ? கட்டளைகளால் என்னைத் தடுக்கவும் அசைக்கவும் உனக்கென்ன உரிமையிருக்கு?என்னைத் தடுக்க எங்கிருந்து உனக்கு உரிமை பிறந்தது?”

குரல் நடுங்கியபோதும் ஆக்ரோசமாக ஒலித்தது. அது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய குரல்தானா அது? அவனுக்கு மூச்சிரைத்தது. சக்கையாக உதிர்ந்திருந்த இலைகள், அவன் மூச்சுக் காற்றில் சுழன்று பறந்தன. கரும்பச்சைச் சிறு புள் கூட்டம் பொல அப்படியே அவை வட்டமிட்டு நிலத்தில் தணிந்தன.

பொம்மை சிரித்தது.

“நல்லாய்த் தானிருக்கிறது. வேடிக்கை, உன்னை நான் இலகுவாக அடையாளம் கண்டு கொண்டேன். பார்த்தாயா? உன்னுடைய வருகையே உன் முகத்தைக் காட்டிற்று. எனது மனிதரின் பதைப்பே உன் ரூபத்தை உண்த்தியது. அந்த மனிதர்களின் கனவுகளும் நிஜமும் கணத்தில் சிதையும் போதே நான் உன் முகத்தைக் கண்டேன். நான் இந்த முற்றத்தின் குழந்தை. என் மனிதர்கள் விட்டுச் சென்ற உறவின் துளிர். அந்த மனிதர்களின் வாழ்வின் அடையாளம் நான். இக்கணமோ அவர்கள், துயரின் முகமாயிருக்கிறேன். நீ கேட்கிறாய், யாரென்றென்னை?”

“பேசாதே, நிறுத்து. யார் நீ? நேரடியாகச் சொல்” அதட்டினான் அவன்.

“மிரளாதே! உன்னுடைய பதைப்பே உன்னை இப்படிக் கொதிக்க வைக்கிறது. நீ யார் என்று உனக்குத் தெரியுமா? உன் முகம் என்ன? உனது வருகையின் பொருளென்ன? நீயோ வெளியான் போல நடந்து கொள்கிறாய். சிதைந்திருக்கும் இந்த முற்றத்தைப் பார். அச் சிதைவில் உன் முகம் தெரியும். தவிக்கும் என் ஆன்மாவின் குரலைக் கேள். அதில் நான் யாரென்பதைப் புரிந்து கொள்வாய்”

“எனக்கு அது பற்றியெல்லாம் அக்கறையில்லை. நான் என் கடமையைச் செய்கிறேன். அவ்வளவுதான். நீ குறுக்கிடாதே. உன்னைக் கொன்று விடும் அதிகாரம் எனக்குண்டு”

பொம்மை சிரித்தது. அதன் குழந்தை முகம் பிரகாசித்தது. சோகம் ததும்பிய புன்கையின் ஒலி அதனை உலுக்கியது. அவனோ, தன்னை இறுக்கிக் கொள்ள முயன்றான். இன்னும் அங்கே தாமதிக்க விரும்பவில்லை. நடக்க முயன்றான்.

“நில்” என்று பொம்மை தடுத்தது. :கடமையா? எது உன் கடமையெனக் கருதுகிறாய்? ஒரு செயலின் விளைவு பயக்கும் நன்மை தீமை பற்றி நீ எண்ணிப் பார்க்கவில்லையா?”

“அது பற்றி யோசிக்க இப்போது தருணமல்ல. எனக்hன கட்டளைக் குரல் சொல்கிறது, இது என் கடமை என்று. விஹாரையில் என் குருவும் சொன்னார் இது என் கடமையே என்று”

இனியும் தாமதிக்கக் கூடாதென்று அங்கிருந்து அகல்வதற்கு அவன் முயன்றான். எங்கும் சப்பாத்து அடிகள் முள்ளாய்ச் சிலிர்த்தன.

“ஓடாதே, ஒரு கோழையாக உன்னை நிரூபித்துச் செல்கிறாய்” பொம்மையின் குழந்தைக் குரல் சிரிப்புடன் கீச்சிட்டு ஒலித்தது.

அவன் கொந்தளித்தான். கண்கள் தகித்தன. இந்தச் சிறு பொம்மைக்கு அஞ்சுவதா? என் மனதுக்கு என்னவாயிற்று? வானத்தின் மையத்தில் சூரியன் எரிந்தது. முறிந்த மரங்கள் வாடின. சேனை புழுதியைக் கிளப்பியபடி முன்னேறிக் கொண்டிருந்தது. குருதி மணத்தது. அவலக் குரல்கள் காற்றில் பரவின. எல்லாவற்றையும் மீறி கட்டளைக் குரல் ஒலித்தது.

அவனுக்கு எங்காவது சற்று ஓய்வாக குந்தியிருக்க வேண்டும் போலிருந்தது. உடல் தளர்ந்தது. அவன் தள்ளாடியவாறு நின்றான். ஒரு பாறையைப் போ இறுகினான்.

“என்ன மௌனமாக இருக்கிறாய்?” பொம்மை அவனைக் குடைந்தது.

“ஒரு வாழ்வைக் கொன்று உன் வாழ்வைப் பெருக்கலாம் என்று நினைக்கின்றாயா? உண்மையில் நீ உன் வாழ்வையே இழக்கிறாய்? கூடவே, இன்னொரு வாழ்வையும் அழிக்கிறாய்”

“அப்படியென்றால்”

“அழிவின் புதல்வனாகவே நீ உன்னை ஆக்கி வைத்திருக்கிறாய். உனக்குத் தெரியுமா? இந்த முற்றத்தில் எத்தனை பூக்கள் மலர்ந்தன என்று. இந்தப் பூக்களில் எத்தனை கனவுகள் விளைந்தன என்று. என்னைப் பார். நான் ஒரு பொம்மை அல்ல. உயிர்ப்புடனிருந்த ஒரு ஆன்மாவின் வடிவம்தான் நான். இந்த முற்றத்தில் உலவித் திரிந்த மனிதர்களுடன் நானும் உலவித்திரிந்தேன். அந்தக் குழந்தைகளின் மகிழ்வில் நானும் மகிழ்ந்தேன். அவர்களின் கனவுகளுக்கு நான் வர்ணங்கள் சேர்த்தேன். அந்தக் குரல்களில் என்னைக் கரைத்தேன். இன்று அவை எல்லாவற்றையும் சிதைத்து விட்டாய். ஒரு கணத்தில் உன் வருகை சம்பவித்த அந்தப் போதில் இந்த முற்றம், அகாலமாயிற்று. தங்கள் வர்வின் கோலம் சிதைந்ததென்று விம்மினார்கள், என் மனிதர்கள். தம் கனவுகளை எல்லாம் இழந்து தெருவழியே ஓலமிட்டவாறு, அநாதைகளைப் போல அவர்கள் ஓடினார்கள். நான் தனித்தேன். வெறும் பொம்மையாகித் தனித்தேன்”

அதன் குரல் விம்மியது. அவன் மனதில் அது சன்னமாய் இறங்கியது.

“நீ என்னை ஏமாற்ற முனைகிறாய். இனியும் வாய் திறவாதே! நான் என் கடமையைச் செய்தேன். என் மீது ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடமைகளுக்கு நானே பொறுப்பாளி. பலனைத் தீர்மானிப்பது நானல்ல. என் கடமைக்கு நான் நம்பிக்கையும் பொறுப்பாளியுமாவேன்” அவன் கர்ஜித்தான்.

குதித்தெழுந்து தோள்களைக் குலுக்கிக் கொண்டான். ஒரு வீரனுக்குரிய மிடுக்கை ஏற்றி விட எத்தனித்தான்.

பொம்மை மறுபடியும் சிரித்தது. அந்தச் சிரிப்பில் கேலியும் இரக்கமும் தொனித்தன.

“படையினனே, கொஞ்சம் நிதானி. உன் நம்பிக்கையோ குருடானது. அது இருளடர்ந்த கண். உன் மீது எனக்கு அளவற்ற இரக்கம் மேலிடுகிறது. ஆனால், நீயோ மன்னிக்க முடியாதவனாக இருக்கிறாய்”

“வாயைப் பொத்து. இனி உன் குரல் கேட்குமென்றால் சல்லடையாக்கி விடுவேன் உன்னை. நீ என் எதிரி” அவன் கத்தினான். ஆனால், உள் மனமோ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொந்தளித்தது. பேதையானவன் நீ என்று அது அவனைப் பார்த்து ஓலமிட்டது.

“பதறாதே, படையினா. உன்னால், என்னை வெல்லவே முடியாது”

“நான் வலியவன். உன்னை என்னவும் செய்வேன்”

“உன் மனம் நாறுகிறது!”

அவன் திடுக்கிட்டான். அம்மாவின் முன்னால், அவளுக்கு தன் நாறிய மனதின் நாற்றத்தை மறைக்கத் தவித்தது நினைவில் முட்டியது. எரிச்சலும் பீதியும் அவனை அரித்தன.

“என்னை நீ பயமுறுத்துகிறாய்”

“இல்லை. நான் கோழைகளை இம்சிப்பதில்லை”

“நானா கோழை என்கிறாய்” அவன் தடுமாறினான்.

“உன்னுடைய அம்மாவிடம் நீ பேசுவதற்கு வார்த்தைகளற்றுத் தவித்தாயே. அவள் விழிகளைப் பார்ப்பதற்கு அஞ்சினாயே” மிக அமைதியாகப் பதில் சொன்னது பொம்மை.

அவன் திகைத்துடைந்தான். பொம்மை தொடர்ந்தது. “உன் அம்மாவிடம் நீ இழந்த துணிவை நான் பெற்றேன் உன்னிடமிருந்து. ஆகவே, உன்னிடமிருந்தே நான் வலிமையும் திராணியும் அடைந்தேன்.”

பொம்மையின் குரல் காற்றில் சுழன்று சுழன்று எதிரொலித்தது. அவன் கால்கள் நடுங்கின. கைகள் தளர்ந்தன. விழிகள் திரைந்தன. மனமோ அந்தரித்தது. சேனைகள் அப்போது சிதைந்து பின்வாங்கின.

6

“ஐயோ! கட்டளைகள் என்னைச் சிறைப்படுத்தினவே. கட்டளைகளே என்னை அநாதையாக்கின. நான் என் மனதைச் சாகடித்தேன். அது நாறி மணக்க மணக்க கட்டளைகளுக்கு என் காதுகளைத் தாரை வார்த்தேன்!”

அவன் புலம்பினான். சொற்கள் காற்றில் அமிழந்தமிழ்ந்து வெளிவந்தன.

7

அம்மா அவனைப் பார்த்துக் கூவினாள்.

“மகனே! நீ பாவங்களால் ஆசீர்வதிக்கப் பட்டவனா? உன் முகம் இன்னும் பிணத்தின் முகமாக விறைத்துக் கிடக்கிறதே! கடவுளே, உன் மனம் நாறுகிறதே! இது என்ன கொடுமை கடவுளே…!”

அவன் அழுதான். தேம்பித் தேம்பி அழுதான். அவளின் முகததைப் பார்க்கத் திராணியற்று விம்மினான். மனம் ஓலமிட்டது.

“நீ என்னுடைய புதல்வனாக - ஈரமில்லாத உன் குரல், இரக்கமில்லாத உன் பார்வை, அன்பு மலராத உன் புன்னகை, பேசச் சொல்லற்ற உன் விதி, வன்மம் கொண்ட உன்னிதயம், நாற்றமெடுக்கும் மனம்…. ஐயோ! இப்டியெல்லாம் நேர்ந்து விட நீ ஏன் மகனே பலியானாய்?

8

அந்தப் பாதையில் ஒரு பூனையை விரட்டிக் கொண்டு இரண்டு நாய்கள் குறுக்கே பாய்ந்தன. வீதியில் ஒரு பிச்சைக்காரன் கால்களை இழுத்திழுத்துச் சென்று கொண்டிருந்தான். முற்றத்தில் தேமா மலர்கள் உதிர்ந்திருந்தன. சூரியன் சரிந்து இருள் படர்ந்து கொண்டிருந்தது. அம்மா எல்லாவற்றையும் பார்த்தபடி செயலற்றுக் கிடந்தாள்.

9

அவனுடைய கண்களிலிருந்து முள் முளைத்துச் சடைத்தது. பிறகு அது காற்றில் உதிர்ந்து பரவி, முள் வனமாகியது.

குழந்தைகள் முள் வனத்தின் முன் அழுதபடி நின்றார்கள்.

1995

00

Monday, December 26, 2011

பாடிப்பறை - அவதானிப்பும் அனுபவமும்







00

கடந்த வாரத்தில் மகிழ்ச்சியான விசயம், கொழும்பில் ‘பாடிப்பறை’ நிகழ்ச்சியில் இளைய நண்பர்களைச் சந்தித்தது. ஆச்சரியமும் நம்பிக்கையும் தருகிற விதத்தில் துடிப்பாக இயங்கும் இளைஞர்கள். ‘சமூக விஞ்ஞானக் கற்கை வட்ட’த்தைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரங்களிலும் முக்கிய கருப்பொருளில் பலரையும் அழைத்துக் கலந்துரையாடல்களையும் நடத்துகிறார்கள். ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் ‘பாடிப்பறை’ என்ற கவிதைத்துறை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

பாடிப்பறையில் ‘கவிதைகளை வாசிப்பது, கவிதைகளை விமர்சனம் செய்வது, கவிதைப் போக்குகளைப் பற்றி ஆராய்வது, கவிஞர்களை நினைவு கொள்வது அல்லது அவர்களுடைய கவிதைகளையும் அவர்களையும் மதிப்பீடு செய்வது என கவிதை சார்ந்ததாகவே நடக்கிறது ‘பாடிப்பறை’.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி இணைத்தளத்தில் பார்த்த நண்பர் பௌசர், ‘அது என்ன பாடிப்பறை?’ என்று கேட்டார்.

‘பாடிப் பறைதல். கவிதைகளைப் பாடி, கவிதைகளைப் பற்றிப் பறைதல்’ என்று சொன்னேன்.

ஆனால், ஆண்டாள் கவிதையில் பாடிப்பறை என்று இதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார், பாடிப்பறை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மு. மயூரன். இந்தப் பெயரைத் தெரிந்தது விமலாதித்தன். விமலாதித்தனால், ஆழிமழை, பாடிப்பறை என இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டு, சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத் தோழர்களின் வாக்கெடுப்பில் ‘பாடிப்பறை’ என்ற தலைப்புத் தெரிவு செய்யப்பட்டது. பாட்டின் (கவியின்) மூலம் சமூகத்துக்குச் செய்தியைப் பறைதல் என்ற அர்த்தம் தோழர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

‘பாடிப்பறை’ நிகழ்ச்சிக்கான கருத்தாக்கத்தை உருவாக்கியவரும் அந்த நிகழ்ச்சியையும் அதற்கான அழைப்பிதழ்களையும் வடிவமைப்பவரும் விமலாதித்தன்தான். சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு இது. எப்பொழுதும் மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடிருப்பது விமலாதித்தனின் அடையாளம்.
நிகழ்ச்சிக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்து அழைத்துக் கலந்து கொள்ள வைக்கிறார்கள்.

10.12.2011 அன்று, கவிஞர் சு.வில்வரத்தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவையொட்டி, அவரை நினைவு கூர்வதாகவும் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்த நிகழ்வைப் ‘பாடிப்பறை’யில் ஒழுங்கு படுத்தியிருந்தனர்.

இதன்படி, ‘சு.வியைக் கண்டடைதல்’ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக என்னை அழைத்திருந்தனர். மேடைப் பேச்சில் முதல் வரிசைக்குப் போக முடியாத ஆள் நான். (இடைவரிசையிற்கூட உன்னுடைய இடம் சந்தேகமே என்பார்கள் நண்பர்கள்) இதை வலியுறுத்திச் சொன்னபோதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. நானே சு.வியைப் பற்றிப் பேசவேண்டியதாயிற்று. சு.வியுடன் நட்பாக இருந்தவர்களில் ஒருவன் என்பதால், அவரைப் பற்றிப் பேசுவது, அவருடைய நினைவுகளைப் பொது அரங்கொன்றில் மீட்பது அவருக்கான மதிப்பைப் பேணுவதாகும் என்று நினைத்துச் சம்மதித்தேன்.

நிகழ்ச்சிக்காகப் போனபோது, அதிகாலையில், நண்பர் மு. மயூரன் வரவேற்றுத் தன்னுடைய அறைக்குக் கூட்டிச் சென்றார். புத்தகங்களும் இசைக்கருவிகளும் கணினியும் நிரம்பியிருந்த அறையில் இன்னொரு விசயமும் இருந்தது, ஒழுங்கு.

மு. மயூரன் கணிப்பொறித்துறையில் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். கணிப்பொறி தொடக்கம், இணைய அரசியல், சமூக அரசியல், மாற்றுச் சிந்தனை, பண்பாடு எனப் பலவற்றைப் பற்றியும் அறிவுபூர்மாக உரையாடக் கூடியவர். ஆனால், மிக எளிமையான விளக்கங்கள். நல்ல வாசிப்பாளர். இளைய தலைமுறையில் ஆச்சரியங்கொள்ள வைக்கும் அணியில் முக்கியமானவர். நான் பார்த்த, பழகிய இளைஞர்களில் ஆழமாகவும் சமூக அக்கறையுடனும் விசயங்களைப் பார்க்கும் ஒருவர். மட்டுமல்ல, செயற்பாட்டாளர். பாடிப்பறை, சமூக விஞ்ஞான வட்டம் போன்றவற்றை மயூனைப்போன்ற – அவருடைய நண்பர்களே இயக்கி வருகிறார்கள்.

பேசிக்கொண்டே நிகழ்ச்சிக்குத் தயாரானோம். நிகழ்ச்சிக்கான ஒலி அமைப்புக்கான ஏற்பாட்டைத் தானே கவனிக்க வேண்டும் என்பதால், வேளையோடு செல்ல வேண்டும் என்றார் மு. மயூரன.; ஒலிபெருக்கி வசதிகளைச் செய்வதற்கான கருவி மயூரனின் பொறுப்பிலிருந்தாலும் ஒலி ஒழுங்குகளுக்கும் இணைய வழியான வலைபரப்புக்கும் பொறுப்பானவர் தி. அனோஜன். அவரே வழமையாக அந்த வேலைகளைக் கவனிப்பவர். ஏறக்குறைய 20 வயதுக்கு மேலாகவோ கீழாகவோ ஒன்றிரண்டு வயதுடைய பருவம். ஆனால், இந்தத் துறையில் கெட்டிக்காரர். அன்று காலையில் அனோஜனுக்கு தவிர்க்க முடியாத வேறு பணிகள் இருந்தால், மயூரனே அந்தப் பணிகளை வேளையோடு சென்று சரிபார்க்க வேண்டியிருந்தது.
ஆகவே புறப்பட்டோம்.

‘பாடிப்பறை’ யைப் பற்றி இணையத்தின் வழியாக அறிந்த நளாயினி தாமரைச்செல்வன் என்பவர் இந்தச் சாதனத்தை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். அது பாடிப்பறை வட்டத்தினருக்கு மிகப் பெரிய உற்சாகத்தையும் பயனையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு நாட்களும் ஒலி அமைப்புக்காக பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்கள். ஆகவே, அந்தச் சாதனத்தை எடுத்துச் சென்றோம்.

நாங்கள் ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’க்குச் சென்றபோது, அங்கே ரெஷாங்கன் தயாபரன் வரவேற்றார்.

பாடிப்பறையின் தொடர்பாளரும், ஒழுங்கு படுத்துனரும் ரொஷாங்கன்தான். மிக உற்சாகமானவர். என்னை இந்த நிகழ்ச்சிக்கு தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வரவைத்தவர் இவரே. இப்போதுதான் ரொஷாங்கனை நேரிற் பார்க்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து, ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகிய நண்பர்கள் சிலரும் அங்கே இருந்தனர். முக்கியமாக, தனுஜன் நிகழ்வுக்கான அடிப்படை ஒழுங்குகளைச்செய்து கொண்டிருந்தார். மிகப் பொறுப்பான பேர்வழி. இவருடன் நான் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகியிருந்தேன். இவரே, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவோரை உபசரிப்பதில் முக்கிய பொறுப்பேற்கும் ஆள்.

துடிப்பான இளைஞர்கள் எப்பொழுதும் ஈர்ப்பைத் தருவர். அதிலும் பொது விசயங்களில் அவர்கள் முனைப்பாக இருந்தால், இந்த ஈர்ப்பு இன்னும் அதிகம். அதிலும் அவர்கள், அறிவார்ந்த விசயங்களில் ஆர்வத்தோடிருந்தால் இந்த ஈர்ப்பில் எல்லை பெரும்பரப்புக்கு விரிந்து விடும். அவர்கள் அறிவாளிகளாகவே இருந்து விட்டால், அதைச் சொல்லவே தேவையில்லை@ எதிர்காலம் குறித்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்கும் இடம் இதுதான்.

இந்த விசயத்தில் நான் கொடுத்து வைத்த பேர்வழி என்றே சொல்லவேணும். என்னுடைய வாழ்க்கை முழுதும் நான் இளைஞர்களுடன் இடையறாது பழகக் கிடைத்திருக்கிறது. அப்படிப் பழகும் வாய்ப்பு அதிகமுள்ள துறையும் தொழிலும் எனக்கு வாய்த்தது மகிழ்ச்சி. இலக்கியமும் ஊடகத்துறையும் இளைய தலைமுறையுடன் பழகுவதற்கான – அவர்களுடன் சேர்ந்தியங்குவதற்கான களவெளியை அதிகமாகக் கொண்டவை. அதிக சாத்தியங்களையும் உடையவை.

இளைய தலைமுறையினரோடு பழகும்போது அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? என்ன செய்ய விரும்புகிறார்கள்? அவற்றை எப்படிச் செய்கிறார்கள்? எங்களுடைய இளைமைப்பிராயத்திலிருந்து அவர்கள் என்ன விதமாகவெல்லாம் வேறுபடுகிறார்கள்? எதைச் சேகரமாக்குகிறார்கள்? என்ற விசயமெல்லாம் தெரியவரும்.

எண்ண ஓட்டங்கள் தலைமுறைக்குத் தலைமுறை வேறுபடுகிறது. அனுபவங்களும் அறிவும் வேறுபடுகிறது. கூர்ப்பின் விதி புதிய தலைமுறையை மேலும் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அதைத் தொடர்ந்து அவர்கள் பயணிக்கிறார்கள். ஒரு புதிய செய்மதியின் ஆய்வியக்கத்தைப் ஆர்வத்தோடு பார்ப்பது போன்ற ஒரு ஈர்ப்பு இது.

இந்த இளைஞர்கள், சமூக விடுதலையைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கிறார்கள். இலங்கையின் இனச்சிக்கல், பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் இயக்கங்களின் போக்குகள், மக்களின் நிலை, சர்வதேச அரசியல் மற்றும் அறிவியல் செல்வழிகள், தொழிநுட்பத்தின் விரிவாக்கம், கலை, இலக்கியம் பண்பாடு போன்ற தளங்களின் செயற்பாடுகள், அவற்றை எவ்வாறு மக்களுக்கான பண்பாடாக இயக்கமுற வைக்க வேண்டும் என்ற சிந்தனை என்றவாறாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றுக்கான அடித்தளமாகவே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் மூலமாக கருத்தமர்வுகளையும் கலந்துரையாடல்களையும் நடத்துகின்றனர். இந்த அமர்வில் கலந்து கொள்வது நல்லது, நிச்சமாக வாருங்கள் என்று தெரிவித்திருக்கும் அழைப்பைப் பார்க்கிற போதும் அதில் கலந்து கொள்ள முடியாதிருப்பது இழப்பே. நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கும் நாங்கள் இருக்கும் இடத்துக்கும் இடையிலான தூரமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்குக் காரணம்.

பாடிப்பறை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மயூரன் சில விளக்கங்களைச் சொன்னார்.

‘பாடிப்பறை’ என்பது, சமூக விஞ்ஞான வட்டத்தின் கவித்துறை சார்ந்த நிகழ்வாகும். கவிதை இலக்கியம் என்பதை வெறுமனே நயப்புக்கும் விருதுகளுக்கும் உரியதாக மட்டும் பார்க்காமல், அதன் கலைப் பெறுமதியோடு சேர்த்து, அதன் சமூக அரசில் பெறுமதிகளை உணர்ந்து கொண்டு மக்களது விடுதலைக்கான கருவியாகவும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதையாகவும் நாம் பார்க்க விரும்புகிறோம். அந்த வகையில், சமூக விஞ்ஞான வட்டமானது கற்றல், கற்பித்தல் என்பதைத் தாண்டி, சமூகத்தில் இறங்கி சமூக அசைவியக்கங்களில் பங்கு பற்ற விரும்பும் ஓர் அமைப்பாக இருக்கிறது.

மு.தளையசிங்கத்தின் மருமகளும் சு.வியின் துணைவியாரின் தங்கையும் இங்கே வந்திருக்க, தளையசிங்கத்தின் முகாமில் உருவாகி வளர்ந்த சு.வியின் உறவினர்கள் கலந்து கொள்ள, தேசிய கலை, இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில், ஒரு புதிய இளந்தலைமுறையினரான சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தினரால், அந்தக் கவிஞனின் நினைவாக, ஒரு நிகழ்வு நடக்கும் இத்தருணம், பல வழிகளில் முக்கித்துவம் உடையதாகும்.
இருக்கவே செய்கின்ற அரசியல், கருத்து நிலை வேறுபாடுகளுக்கும் அப்பால், போற்ற வேண்டிய – உற்சாகப் படுத்தப்பட வேண்டிய கூறுகளைப் போற்றுவதும் உற்சாகப்படுத்துவதும் எமது கடமையென்றே நாம் கருதுகிறோம்’ என்றார் மு.மயூரன்.

மாறியிருக்கின்ற இலங்கையின் அரசியல் நிலவரங்களின் பின்னணியில், எல்லோருக்கும் கிடைத்திருக்கின்ற புதிய வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய ஒரு சிந்தனையும் அதை முன்மாதிரியாக்கும் செயற்பாடும் வரவேற்கத்தக்கதே. புதிய சிந்தனைகளுக்கும் அனுபவங்களின் வழியாகக் கண்ட உண்மைகளுக்கும் மதிப்பளிக்கும் எந்தச் செயலும் பெறுமதியானது.

தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவிதைகளை நல்ல முறையில் வாசித்தளித்தனர். அதிகமாகச் சு.வியின் கவிதைகள்.

திரு. சோ.முரளி சு.வியின் "யாருடைய கால்கள்" எனும் கவிதை மீதான நயவுரையைச் செய்தபின்னர், சு.வியின் "விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்" எனும் கவிதையை, கவிஞர் சடாகோபன் வாசித்தார்.

கவிஞர் ஒட்டோ ரெனெ கஸ்ட்டிலோ அவர்கள் எழுதிய ஸ்பானிய மொழிக்கவிதையின் தமிழ்மொழிபெயர்ப்பான, "அரசியல் சாராப் புத்திஜீவிகள்" திரு.மிதுன் ராகுல் அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து ந.காண்டிபன் தலைமையில், சு. வில்வரத்தினத்தின் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்புகளிலான கவிதைகளைக் கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. "மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்" எனும் தலைப்பில் செல்வி.ரா.வைஷ்ணவியும் நீண்டெரிந்த கோடையில் எனும் தலைப்பில் திரு.பவித்திரனும், "உயிர்த்தெழும் காலத்திற்காக" எனும் தலைப்பில் திரு. மார்க்ஸ் பிரபாகர் அவர்களும் தத்தம் கவிதைகளை வெளிப்படுத்தினர்.

சு.வியைப் பற்றிய நினைவுரையை அடுத்து, கவிஞர் சி. சிவசேகரம், டொமினிக் ஜீவா, சோ.தேவராஜா உட்பட வேறும் சிலர் கருத்துரைத்தனர். (மன்னிக்கவும் அதில் இருவர் முக்கியமானவர்கள் - அவர்களின் பெயர்களை மறந்து விட்டேன்).

சு.வியின் சமனிலையை மையப்படுத்தியே எல்லோருடைய பேச்சுகளும் இருந்தன. குறிப்பாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சு.வியின் எதிர்வினைகளும் நிலைப்பாடுகளும் அவரை ஒரு சமனிலையாளராக அடையாளம் காட்டுகின்றன என்று சொன்னார்கள். அவர் தமிழ்த்தேசியவாதியாக இருந்தபோதும் ஒடுங்கிய ஒற்றைப் பரிமாணத்துடன் தன்னை வைத்துக்கொள்ளாமையே சு.வியின் சிறப்பு என்பதை பொதுவாக எல்லோருமே வலியுறுத்தினர். சு.வியின் கவிதைகளில் காணப்பட்ட குறுந்தேசியப் பண்பைச் சுட்டிக்காட்டி 80 களில் தான் எழுதிய விமர்சனத்தைச் சுட்டிக்காட்டினார் கவிஞர் சி. சிவசேகரம்.

நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு அம்சம், சு.வியின் உறவினர்கள் வந்திருந்தமை. அதிலும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான திரு. சு. கருணாகரன் சு.வியைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். சு.வியின் உருவாக்கத்தில் அவருடைய தாயார் அடிப்படையாக இருந்ததைப்பற்றி அவர் சொன்னார். மேலும், சு.வி சார்ந்திருந்த சர்வமத ஆசிரமம், மு.த ஆகிய தரப்பின் பங்களிப்புகளைப் பற்றியும் அவர் கூறினார். சு.வியின் சகி, மேகலா கண்ணில் சிகிக்சை செய்திருந்த காரணத்தினால், நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் உறவினர்களை அனுப்பிவைத்திருந்தார். அந்த நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டிய ஒருவர், மு.பொ. ஆனால், அவர் வரவில்லை.

தவிர, நீண்ட காலத்துக்குப் பிறகு, நண்பர்கள் கேதாரநாதன், மாவை நித்தியானந்தன், சி.கா. செந்தில்வேல், அந்தனி ஜீவா போன்றோரைச் சந்திக்கக் கிடைத்தது.

மேலும் சிலரைக் குறிப்பிட வேண்டும். மாளவிகா. நுpகழ்ச்சியை ஒழுங்காக – அமைதியோடு சிறப்புறத் தொகுத்து வழங்கினார். சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் உற்சாகமான உறுப்பினர் இவர் என அறிமுகப்படுத்தினார்கள்.

இன்னொருவர் மௌ. மதுவர்மன். இந்தக் கற்கை வட்டத்தின் பின்னணியில் நினறு தொடர்ச்சியாக நீண்டகாலமாக இயங்கி வருகிறார். மேலிரிந்த கீழான அமைப்பொழுங்க இல்லாத இவ்வட்டத்தின் கட்டுக்கோப்பினைத் தொடர்ச்சியாக காத்துவருபவர்களில் இவர் ஒருவர் என்றார்கள்.

இந்த நிகழ்வு எனக்கு இரண்டு விசயங்களில் மகிழ்ச்சியைத் தந்தது. ஒன்று சு.வியைப்பற்றிக் கதைத்தது. மற்றது, இளைய நண்பர்கள் பலரின் புதிய தொடர்பும் உறவும். மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையும் பொங்கிய இளைய முகங்கள்.

இப்படி ஆற்றல் மிக்க ஆயிரக்கணக்கான இளையோரைத்தானே சுதந்திர இலங்கை தின்று பசியாறியிருக்கு? எண்பதுகளில் இப்படித்தானே நாங்கள் நெஞ்சு நிரம்பிய கனவுகளுடன் ஊர்கள்தோறும் திரிந்து... சனங்களிடையே இறங்கினோம்.

ஆனால், இந்த இளைய தலைமுறை எல்லாவற்றையும் தன்னுள் நிதானப்படுத்துகிறது. ஏனென்றால், இது நெருப்புக்குள்ளே முளைத்து, இரத்தத்தில் வளர்ந்த பயிர்களல்லவா!

மறுநாள், விடைபெற்று வரும்போது மு.மயூரன் ஒரு பரிசைத் தந்திருந்தார் - ‘காலம் மாறுது’ என்ற பாடல் இறுவெட்டு அது. மலையக நிலைவரத்தைப் பற்றிய அருமையான வெளிப்பாட்டைக் கொண்ட பாடல்கள். உண்மையிலேயே அது பெரும் பரிசுதான்.

மறக்கவே முடியாத எதுவும் ஏதோவகையில் பரிசாகத்தான் இருக்கிறது.
00

Thursday, December 22, 2011

சு.வியைக் கண்டடைதல்




சு.வியின் வாழ்க்கை, அவருடைய தோழமை, அவருடைய கவிதைகள், அவை எழுந்த சூழல், அவற்றின் கருப்பொருள்


00

சு.வியைப் பற்றிய யாருடைய புகழ்ச்சியும் அவரை மேலுயர்த்தி விடாது. யாருடைய இகழ்ச்சியும் அவரைச் சிறுமைப்படுத்தாது.

அவர் இயற்கையின் ஓரம்சம். இயற்கையை நேசித்து, இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து, இயற்கையோடிசைந்து வாழ முற்பட்ட ஒருவர்.

ஆகவே, சுவியைப் பற்றிய எந்தப் புகழுரைகளும் அவரை விட்டுத் தனித்தே நிற்கும்.
அவரைப் பற்றிய எந்த அவதூறுகளும் அவற்றின் பொய்முகத்தைக் காட்டியே விடும்.

ஆகவே, சு.வியை அவராக விளங்க வேண்டும். அவருடைய இயல்பினூடாகவே விளங்க வேண்டும்.

அத்தகைய ஒரு விளங்குதலுக்கே இங்கே நான் முயற்சிக்கிறேன். அவரைச் சொல்லுதல் என்பதன் ஊடாக, அவனுடைய நினைவுகளை மீட்டிக் கொள்வதன் ஊடாக நாம் நம்மைப் பார்த்துக்கொள்வது.

அவரினூடாக நாம் செல்லவேண்டிய திசைகளையும் இடங்களையும் செல்ல வேண்டிய முறைகளையும் கண்டு கொள்ளலாம்.

ஆகவேதான் சு.வியைக் கண்டடைதல் என்று யோசித்தேன். அவரைக் கண்டடைதலின் மூலமாக நம்மைக் கண்டடைவது. அவரின் கண்டடைதலுக்கூடாக, நாம் கண்டடைந்தவற்றையும் கண்டடைய வேண்டியவற்றையும் பார்க்கலாம் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவது.

இந்த அடிப்படையில் இங்கே, எங்களிடையே ஊடாடிப் பொலிந்த சு.வியைப் பற்றி, அவருடைய நினைவுகளினூடாக அவரை விளங்க முற்படுகிறேன்.

00

சு.வி அன்பாளர். அன்புமயமானவர். யாழ்ப்பாணம் என்ற பாலையில், அவர் ஒரு அன்பு விருட்சம். தன்காரியச் சித்தர்களும் சுழியன்தனமும் நிறைந்த அந்தப் பாலை நிலத்திலே அவர் ஒரு அன்பு ஊற்று.

அன்பையே தன்னுடைய அடி ஆதாரத் தளமாகக் கொண்டியங்கிய ஒரு கவி.

அன்பிலே மையங்கொண்டு, அன்பையே ஆதாரமாக்கி, அன்பே தானாகி, அன்பையே பிறருக்கும் ஆக்கி, எங்கும், எப்போதும், எல்லாவற்றிலும் அன்பாகி – அன்பு மயமாகி நின்றியங்கியவர் சு.வி.

என்றபடியால், சு.வியைப் பற்றி யார் பேசினாலும் அது அவரைப்பற்றிய முழுமையைத் தந்து விடாது.

அவர் இயற்கையின் ஓரம்சம் என்றபடியால், அவரை உணர்தலே அவரைக் கண்டடைவதற்கான வழியாகும்.

அதுவே சாத்தியமானது.

சு.வியைப் பற்றிய ஒவ்வொருவடைய உணர்தல்களும் அனுபவிப்புகளும் வேறுவேறானவை.

ஆனால், அவரைப் பற்றிய எல்லோருடைய இறுதி அனுபவமும் உணர்வும் நிச்சயமாக ஒத்த ஒரு புள்ளியிற் சென்றே சேரும்.

இங்கே, இந்த அமர்விலே கூடியிருப்போரில் சு.வியை அறிந்தவர்களும் அவருடன் பழகியவர்களும் இதை நன்றாகவே உணர்வர்.

சு.வி ஒரு இனியர். அவருடன் பழகுதல் இனியது. அவருடன் பேசுதல் இனிது. அவரின் குரல் இனிது. அவருடைய பேச்சினிது. அவருடைய மொழி இனிது. அவருடைய மொழிதல் முறையும் இனிதே. அவரின் பாடல்கள் இனியன. அவரின் சிந்தனை இனியது. அவருடைய வாழ்வினிது.

ஆனால், அவர் இனிதாக வாழ்ந்ததாகச் சொல்ல முடியாது.

மிகச் சாதாரணமாக, தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காத நிலையில் தன்னுடைய இறுதிக் காலம்வரையிலும் வாழ்ந்தவர்.

அவருடைய சேகரங்கள் என்பது அன்புமட்டுந்தான். அன்பையே அவர் சேகரித்தார். அந்த அன்பின் நிமித்தமான மனிதர்களை அவர் சேகரித்தார்.

இந்த அன்பின் காரணமாக அவர் எல்லாத் தரப்பினரோடும் இணங்கி நடந்தார். அவருடைய இந்த அன்பே எல்லோரையும் அவரின் பால் இணங்க வைத்தன@ இணைய வைத்தன.

அதற்கப்பால், ஒரு சைக்கிளுடன் தன் வாழ்வை இறுதிவரை வாழ்ந்து முடித்த ஒருவர் அவர்.
சொந்த வீடின்றி, இரவல் வீட்டிலே வாழ்ந்த ஒருவர்.

சொந்தமாக இருந்த வீட்டையும் போருக்குப் பரிசளித்து விட்டுப் பெயர்ந்து, அகதியாகவும் அலைச்சலாகவும் வாழ்ந்து முடித்த ஒருவர்.

எழுதிய எழுத்துக்களை நெருப்புக்கும் நீருக்கும் பரிசளித்த ஒருவர்.

எண்பதுகளிலே அவருடைய வீட்டை இந்திய அமைதிப்படை எரித்தழித்தது.

இரண்டாயிரத்திலே அவருடைய வீட்டைச் சுனாமி தாக்கியது.

கழுத்துக்கு மேலே வெள்ளம் வந்ததால், சுவருக்கு மேலே நின்று, நீர்த்தாங்கியின் மேலே ஏறிநின்று, தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டதைத் தவிர, வேறு எதையும் அவரால் அப்போது செய்ய முடியாமல் போயிற்று.

ஆகவே, நீருக்குப் பரிசளித்தார், பின்னாளில் எழுதியதையெல்லாம்.

அவருடைய பிள்ளைகள் வளர்ந்த காலத்தில், ஆசையாய், அருமையாய், வாங்கிச் சேர்த்த கணினியைக் கூட அந்த நாட்களில் அவர் இழந்தார்.

அந்தக் கணினியை மையமாக வைத்து அவர் ஏராளம் கற்பனைகள் வரைந்திருந்தார்.

தன்னுடைய கவிதைகளைச் சேர்க்கவும் தொகுக்கவும் தன்னுடைய எண்ணங்களைப் புதிதாய்ப் பதிந்து உலகுக்குப் பரப்பவும் அவர் எண்ணியிருந்தார்.

ஆனால், அந்த எண்ணத்தை ஆழிப்பேரலை அடித்துப்போயிற்று.

என்றபோதும் அவர் கலங்கியவரல்ல. எதற்கும் சோர்ந்தவரல்ல. தன்பணியைக் கைவிட்டுப் பின்னகர்ந்தவரல்லச் சு.வி.

தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்திருந்தபோது, தன்னுடைய பிறந்த ஊரை விட்டுப் பிரிந்து, பெயர்ந்த போது, தன்னுடைய வீட்டை இழந்தபோது... தான் எழுதியும் சேகரித்தும் வைத்ததெல்லாம் எரிந்தழிந்தபோது, தன்னுடைய சூழலே சிதைந்த போது...
அந்தச் சோகங்களைத் தாங்கியவாறே எழுந்தவர் சு.வி.

துயரங்கiயும் காயங்களையும் சுமந்து மீண்டவர்கள் நாம் என்ற மாதிரிச் சு.வியும் அவற்றிலிருந்து மீண்டெழுந்தார்.

ஆனால், அவர் புலம்பவில்லை.

காலத்துயர் என்றும் காற்றுவெளிக் கிராமம் என்றும் தன்துயரை எழுதியபோதும் அவர் ஓலமிட்டதில்லை.

அவற்றிற்குள், அந்தர வாழ்வின் நிலையை, அந்தரிக்கும் கிராமங்களின் தவிப்பைப் பதிந்தாரே அன்றித் தன்னுடைய புலம்பலையோ ஓலத்தையோ அவர் பறைசாற்றவில்லை.

அந்திரிக்கும் நிலைக்கு ஆக்கப்பட்ட கொடுமையைச் சொன்னாரேயன்றி, தன்துயரைப் புலம்பியவரல்ல.

இதுதான் சு.வி யின் இயல்பு. இதுதான் சு.வியின் அடையாளம்.

வெள்ளம், புயல், வரட்சி என்று எந்த நிலைமாற்றம் வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கி, எதிர்த்துப் பூமி தன்னை நிலைப்படுத்திக் கொள்வதைப்போல, சு.வி எல்லாவற்றினுள்ளும் இருந்து மீண்டெழுவார்.

அதுவே அவருடைய தனிச்சிறப்பு.

இதற்குக் காரணம், சு.வி ஒரு போராளியாக இருந்தமையே. (ஆயுதந்தாங்கிய விடுதலை அமைப்புகளின் போராளியல்ல). அவர் ஒரு விடுதலைப்போராளி. இதயத்தில் உண்மைப்பேரொளி விளங்கிய போராளி. எல்லா மனிதரிடத்திலும் அன்பைப் பெய்து, அகத்தை ஒளியூட்டி, தன்னையும் சமூகத்தையும் அந்த அன்பொளியின்பால் ஒருங்கிணைத்து, உறுதியாக்கிப் போராட முனைந்த போராளி.

என்றபடியாற்தான் ‘விடுதலைக்கான வழிகளும் விடுதலை பயப்பனவாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

வன்னிக்கு ஒரு தடவை சு.வி வந்திருந்தார்.

அப்போது வெளியே இருந்து வன்னிக்குள் வருவோரைப் பற்றிய தகவல்களை அறிவதற்காக ஒவ்வொருவரையும் விசாரிப்பார்கள் புலிகள். எனவே, வன்னிக்கு வந்த சு.வியையும் அவர்கள் அப்படி அறிவதற்காக – அவர் யார் என்று தெரியாமலே வந்து கதைத்தார்கள்.

ஆனால், அவர் அவர்களுடன் மனந்திறந்து எல்லாவற்றையும் பேசினார். எதையும் அவர் மறைக்கவில்லை. எதற்கும் அவர் அஞ்சவும் இல்லை. தன்னுடைய மனதிலே என்ன தோன்றியதோ, அவர்களுக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று அவர் எண்ணினாரோ அதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொன்னார்.

போராடுவதற்கு பலம் வேணும். அந்தப் பலம் உறுதியாக வேணும்.

ஆரோக்கியமான ஒரு சமூகத்தினாலேயே போராட முடியும். ஆரோக்கியமாக இருந்தாலே எதிர்ப்புகளை முறியடிக்க முடியும். ஆரோக்கியமாக இருந்தாலே பின்னடைவுகளில் இருந்து மீண்டெழ முடியும்.

ஆகவே, ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது.

இந்த ஆரோக்கியம், தனியே உடல் ஆரோக்கியத்தை மட்டும் கொண்டதல்ல.

ஆதற்கும் அப்பால், இது மன ஆரோக்கியத்தை, சிந்தனை ஆரோக்கியத்தை, சமூக ஆரோக்கியத்தை எனப் பல தளங்களில் விரிவு கொண்ட ஆரோக்கியமாகும்.

தன்னுடைய நெஞ்சுக்கு நேரே விரியக்கூடிய சிந்தனையையும் மனப்பாங்கையும் செயல் வெளியையும் கொண்டிருக்கும் ஒரு சமூகமே போராட முடியும். ஆகவே, மன எல்லைகளை நாம் விரிவு படுத்த வேண்டும் என்றார்.

எல்லையற்ற விரிவைக் கொண்டிருக்கும்போதே ஒளியும் வெளியும் காற்றும் மூச்சும் இயல்பாக வரும்.

அந்த வெளியிலேயே சுதந்திரப் பறவைகள் பறக்க முடியும். அந்த வெளியிலேயே பல வர்ணப் பூக்களும் மலர முடியும் என்றார்.

அப்போது வன்னியில் பஞ்சமூம் பட்டினியும் போரின் நெருக்கடிகளும் தலைதூக்கியிருந்தன.
போர்க்கால நெருக்குவாரங்களினால் சனங்கள் பெரும் சிரமங்களைப் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் சு.வி அவதானித்திருந்தார்.

எனவே, அவர் எல்லாவற்றுக்கும் பொதுவாகத் தன்னுடைய அபிப்பிராயங்களை அப்படி வெளிப்படுத்தினார்.

அவர்கள் எல்லாவற்றையும் விளங்கட்டும். எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கட்டும் என்று அவர் விரும்பினார்.

யாருடைய முகச் சுழிப்புக்காகவும் ஆளாக வேண்டி வரும் என்று தன்னுடைய அபிப்பிராயங்களுக்குப் புதைகுழி தோண்டும் இயல்புள்ளவர் அல்ல சு.வி.

அதேவேளை தன்னுடைய அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் மற்றவர்களின் மீது அதிகாரமாக ஏற்றிவிடுபவரும் அல்ல அவர்.

ஆனால், அவருடைய மொழியும் மொழியும் முறையும் அவருடைய கருத்துகளை மற்றவர்களிடையே மெல்லப் புகுத்தி விடும்.

ஆகவே, அன்று அந்த விசாரணையும் அறிதலும் ஒரு பெரிய உரையாடலாகவே மாறியது.

அவருடன் பேச வந்தவர்கள், சு.வியின் கதையாடலைக் கேட்டதிர்ந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

அவர் சொன்னார், பண்பட்ட தேசியத்தை நாம் உருவாக்கும்போதே அந்தத் தேசியத்துக்கு மதிப்பும் பெறுமதியும் உருவாகும். ஆகவே, அதை நோக்கி நாம் சிந்திக்க வேண்டும் என்று.

பிறகு, அவரிடம் அவர்கள் விடைபெறும்பொழுது, அவருக்கு அளித்த மரியாதையைக் கவனித்தேன்.

பின்னர் அவரைத் தேடி மேற்பொறுப்பில் இருந்தவர்கள் வந்து கதைத்து விட்டுச் சென்றனர்.
இதுதான் சு.வி.

சு.வியுடனான உரையாடல்கள் முக்கியமானவை. அவர் உரையாடும் முறையும் முக்கியமானது. ஆற்றொழுக்காக அவருடைய பேச்சிருக்கும். அதற்கேற்றவாறு அவருடைய மொழியும் இருக்கும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு இடமளித்து உரையாடுவார். மற்றவர்களின் கருத்துகளை எதிர்கொள்வதிலும்கூட மிகப் பவ்வியமான முறைமையைக் கடைப்பிடிப்பார்.

இதனால், அவருக்குப் பலரும் நண்பர்களாக இருந்தனர். பல வயதினரும் நட்போடிருந்தனர்.

இந்த நினைவுகளை இன்னும் பலரும் கூர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நட்பு எல்லையற்றது. ஆழமானது. நெருக்கங்கூடியது.

சு.வியைக் கண்டாலே குழந்தைக் குதூகலம் எங்களுக்கு வந்து விடும்.

இந்த அனுபவம் இங்கே இருக்கின்ற பலருக்கிருக்கும்.

இதற்குக் காரணம், நான் முன்னரே சொன்னதைப்போல அவரின் கனிவான மொழியும் பேச்சும்.
அன்பிற் தோய்ந்த மொழி... அன்பிற்தோய்ந்த பேச்சு....

சுடுசொற்கள், கூரான சொற்களை நான் சு.வியிடம் கேட்டதுமில்லைக் கண்டதுமில்லை.

அதனால், அவருடன் கதைப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதுமிருக்கும். அந்த நினைவுகளைப் பலரும் இப்போதும் நினைவு கொள்கிறார்கள்.

சு.வியைப் பற்றிய இன்னுமொரு முக்கியமான விசயம் அவர் பாடுவது.
அவருடைய பாடல்களைக் கேட்க, அவரின் குரலைக் கேட்க....

அந்த நினைவுகள் மிகவும் அலைக்கழிக்கின்றன.

அந்தத் தனிக்குரல் இசையைப் பொழிந்து தரும். பாலைப்பொழிந்து தரும் மடியைப்போல, இசையைப் பொழிந்து தரும் அந்தக்குரல்....

நாங்கள் சந்திக்கும் நாட்களில் அவர் பாடாத நாட்களே இல்லை.

இரவில், நிலவின் பால்வண்ண ஒளியில் சு.வியின் பாட்டுக்குரல் மிதக்கும்.....

அந்தப் பரவசம் எல்லையற்ற இன்பத்தைத் தரும், மகிழ்ச்சியைத் தரும்.

அந்த நேரத்தில் அவரைப் பார்க்கும்போது என்னுடைய மனதில் பாரதியே தோன்றுவார்.

கவிதைகளைப் பாடக்கூடிய மாதிரி எல்லாக் கவிஞர்களுக்கும் வாய்ப்பதில்லை.

நானறிந்தவரையில் சு.வியைப் போல வேறு எந்தக் கவிஞரும் அத்தனை இனிமையாகப் பாடுவார்கள் என்று.

தன்னுடைய கவிதைகளை மட்டுமல்ல.

பிறருடைய கவிதைகளையும் அவர் பாடுவார். திருவாசகம், திருப்புகழ், திருவெம்பாவை, பைபிளின் சில பகுதிகள், தேவாரங்கள், பாரதி பாடல்கள்... மஹாகவியின் பாடல்கள், கவிதைகள்.... நீலாவணனின் கவிதைகள் என்று ஏராளம் பாடல்கள்...

அதிலும் சிலப்பதிகாரத்தின் சில பாடல்களையும் ஓ... வண்டிக்காரா என்ற பாடலையும் என்று அவர் பாடும்போது.... இன்னும் மேலே போய்விடுவார்.

ஒரு தடவை அவர் வன்னிக்கு வந்தபோது, இரவு எங்கள் வீட்டில் பாடினார். இரவு பத்து மணிக்கு மேலிருக்கும். இருண்ட வன்னியில் வேளையோடு அயலவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.

ஆனால், சு.வியின் பாட்டுக்குரலைக் கேட்டதுதான் தாமதம், வளவைச் சுற்றி பல முகங்கள்...

இருளைக் கிழித்துக் கொண்டு லாம்பு வெளிச்சங்கள் ஒரு வளையமாகச் சுற்றியபோதே கவனித்தோம். சு.வியின் குரல்கள் அந்த ஒளிப்புள்ளிகளை அப்படி வரவழைத்து ஒரு வடிவமாக்கியிருந்தன.

ஆதைப் பார்க்க எனக்கு உண்மையிலேயே ஒரு ஆச்சிரியமாக இருந்தது. பாடல், அவருடைய குரலின் இனிமை அப்படி ஒரு ஒளித்தொகுப்பை உருவாக்கியுள்ளதா என்று....

அன்று அவருடன் அங்கே கவிஞர் சித்தாந்தன், வளநாடன், யாத்திரீகன், முல்லைக்கோணேஸ் போன்றோர் இருந்தோம். இப்போதும் அவர்கள் இந்தச் சம்பவத்தை அடிக்கடி நினைவுகொள்வார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அயற்சனங்களும் அதைச் சொல்வார்கள்.

அதற்குப் பிறகே அவர் ஒரு கவிஞர் என்றும் அவரிடம் தாங்கள் அறிந்து கொள்வதற்குப் பல சேதிகள் உள்ளதென்றும் அவர்களுக்குத் தெரிந்தது.

முக்கியமாக அவர்களிற் சிலர் அடுத்த நாட்பகல் வந்து அவருடன் விரிவாகக் கதைத்தார்கள்.
இதுதான் சு.வி. இப்படித்தான் சு.வி.

சென்ற இடமெல்லாம் அவருடைய வேரோட்டம் இருக்கும்.

ஆனால், அவர் தன்னுடைய ஆதாயங்களைக்குறிவைத்து அந்த வேரோட்டங்களை ஓடுவதில்லை. அப்படியான நோக்கோடு அவர் நீரோட்டங்களை நாடிச் செல்பவரும் இல்லை. சென்றவரும் இல்லை.

இதனாந்தான் அவருக்கு இந்த உலகத்தின் எல்லாத் திசைகளிலும் ஏராளமான நண்பர்கள் இருந்தனர். அவரை நினைந்துருகும் நெஞ்சத்தோடு, அவர்கள் எல்லோரையும் ஆக்கிவிட்டார் சு.வி.

இதற்குக் காரணம் -

அடிப்படையில் அவர் ஒரு விடுதலை விரும்பி. சமூக விடுதலையை யாசித்த விடுதலை விரும்பி. அதனால், அவர் எல்லாவற்றுக்காகவும் தன்னை ஒப்புக் கொடுக்கச் சிந்தித்தாரே அன்றி, அவற்றிலிருந்து தனக்கானதை எடுத்துக்கொள்ளச் சிந்திக்கவில்லை.

ஆகவே அவர் விரும்பிய விடுதலைக்காக அவர் போராடினார். தன்னுடைய சாத்தியங்களுக்கமைய அவர் போராடினார்.

மு. தளையசிங்கத்துடன் இணைந்து அவர் தீவுப்பகுதியிலே சாதிக்கொடுமைக்கு எதிராகவும் சாதியின் அநீதிக்கு எதிராகவும் போராடினார். இந்தப் போராட்டம் முக்கியமானது.

அதற்காக அவர் தன்னுடலிலே வலிகளைத் தாங்கினார். இதைப்பற்றிய பதிவுகள் அவருடைய புத்தகங்களிலேயே உண்டு. திரு. கிருஷ்ணகுமார் இதை எழுதியிருக்கிறார்.

இதைத் தவிர, அவரைப்பற்றி எழுதிய பிற பதிவுகளிலும் குறிப்புகளிலும் உண்டு. ஆகவே, அவற்றைப் பற்றி நான் இங்கே மீளவும் சொல்லவில்லை.

சு.வி இன ஒடுக்கு முறையை எதிர்த்தார். இன ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட இழப்புகளையும் பாதிப்புகளையும் அந்தக் கொடுமையையும் எதிர்த்தெழுதினார்.

இதற்கு அவருடைய கவிதைகள் சாட்சி.

அகங்களும் முகங்களும் தொடக்கம், அவருடைய இறுதித்தொகுப்பாகிய உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற முழுத்தொகுப்பு வரை இதை நாம் காண முடியும். அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆகவே, அவர் இன ஒடுக்குமுறையையும் அதன்பேராலான கொடுமைகளையும் தொடர்ச்சியாகவே எதிர்த்து வந்தார்.

அவ்வாறே அவர் இன விடுதலையையும் நேசித்தார். ஆனால், அவர் ஒரு இனவெறியர் அல்ல. அதற்கும் அப்பால், அவர் பிற இனத்தவரையும் நேசித்தார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் குரல்கொடுத்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி, அவர்கள் வெளியேற்றப்பட்டமையைப் பற்றி அவர் எழுதினார்.

இந்த வகையில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்துக்கொண்டு, அதேவேளை இந்த இனமறுப்புச் செயலைக் கண்டித்து எழுதியவர்கள் சு.வியும் ஜெயபாலனும் நிலாந்தனுமே.

முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திக் கொண்டே இந்த இனமறுப்பையும் எழுதியவர்கள் இவர்கள்.
இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விசயம்.

சு.வி ஒரு தேசியவாதி. அவர் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தார். ஆனால், அந்தத் தமிழ்த்தேசியம் பண்பட்ட தேசியமாக, பரந்த தேசியமாக, விடுதலைக்கான உள்ளடக்கத்தைக் கொண்ட தேசியமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒடுங்கிய தேசியப் பார்வை ஒருபோதும் முன்னகராது என்பது அவருடைய நிலைப்பாடு.
அவ்வாறே அவர் ஒரு பண்பாட்டியலாளனும்கூட. தமிழ்ப்பண்பாட்டின் தளத்தில் நின்றே தன்னுடைய கவிதைகளைத் தான் எழுதுகிறேன். அந்தப் பண்பாட்டிலேயே தன்னுடைய கவிதைகளின் வேர் பற்றிப் படர்ந்துள்ளது என்று தன்னுடைய கவிதைகளைக் குறித்த முன்னுரைகளிலேயே அவர் இதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவர் பண்பாட்டு வெறியரோ, அல்லது தமிழ்ப் பண்பாட்டையே அதி உச்சமான பண்பாடு என்றும் பிற பண்பாடுகள் எல்லாமே அதற்குக் கீழானவை என்ற பெருமிதங்களோடும் தப்பபிப்பிராயங்களோடும் இருந்தவரல்ல.

தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளில் இருந்தும் நற்கூறுகளில் இருந்தும் தனக்கான ஊட்டங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிச் செயற்பட்டவர் சு.வி.

அத்தகைய செயற்பாட்டின் மூலம் ஒரு தொடர்ச்சியை – தமிழ்ப்பண்பாட்டின் தொடர்ச்சியை - இழையறாமற் தொடரவேண்டும் என்று பிரக்ஞை பூர்வமாகவே விரும்பிச் செயற்பட்டவர் அவர்.

இதையும் அவர் தன்னுடைய பதிவுகளில் தெளிவாக்கியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் அடிப்படையில் ஒரு ஆன்மீகவாதி. அந்த ஆன்மீகத் தளத்திலிருந்தே அவருடைய இயக்கம் நிகழ்ந்தது. இதிலிருந்தே அவருடைய எல்லாத்தளச் செயற்பாடுகளும் நிர்மாணங் கொள்கின்றன.

இதை அவருடைய கவிதைகளிலும் நாங்கள் காணமுடியும். அவருடைய வாழ்க்கையிலும் அவதானிக்க முடியும்.

அவருடைய விடுதலைப் பிரக்ஞையில், அவருடைய பண்பாட்டுணர்வில், அவருடைய இசைப் பயில்வில், அவருடைய கவிதை ஆக்கத்தில், அவருடைய நட்பார்ந்த மனித உறவுகளில் எனச் சகல இடங்களிலும் நாம் இதை உணர முடியும்.

இதை அவரே வெளிப்படுத்துகிறார்.


குறிப்பாக,

உண்டென்ற வாசலுக்கு ஒளி விளக்கே, உள்ளகத்து ஒளிர்கின்ற உயிர் விளக்கே, எங்கெங்குமியல்கின்ற பேரிருப்பே, இன்பமே தேடிடும் வாழ்விலக்கே, என்னிருப்பே, உன்னிருப்பே, இனிதிருப்பே வாழ்கவே, வாழ்கவே, வாழ்கவே!

என்று அகங்களும் முகங்களும் என்ற முதற்தொகுதிப்பில் இருந்து இறுதித் தொகுதியான உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற இறுதித்தொகுதி வரையில் இதை நாம் காணலாம்.

உன்னைச் சரணடைந்தேன் - ஓம் குருதேவா, உயிர்த்தெழுகின்ற காலத்திற்காக, என்னைத்தருவதெனினும் இசைவேன், இது உனக்காக...

இப்படி அவர் உயிர்த்தெழுகின்ற காலத்திற்காக என்ற தொகுதிக்கான சமர்ப்பணத்தில் தன்னை ஒப்புக்கொடுப்பதைப் பார்க்கலாம்.

சு.வியின் ஆன்ம உள்ளோட்டத்துக்கு வழியமைத்தவை, அவரை அதில் ஆற்றுப்படுத்தியவை - மு.தவுடனான அவருடைய உறவும் சர்வமத ஆசிரமத்துடன் அவருக்கேற்பட்ட தொடர்புகளுமே.

முதலாவது, மு.தளையசிங்கத்தின் உறவு.

தளையசிங்கத்தின் நட்பின், ஆதர்சத்தின், வழிப்படுத்தலின் விளைவாக வந்த இந்த உறவு அவரை இந்த ஆன்ம ஓட்டத்தில் மேலும் ஆழப்படுத்துகிறது.

சு.வியின் படைப்பும் நோக்கும் தளையசிங்கம் வலியுறுத்திய மெய்யுளை ஆதாரத் தளமாகக் கொண்டது. அவருடைய வாழ்க்கையையும் அதுவே மறைபொருளில் நிர்ணயித்தது.
தளையசிங்கம் கலைஞனின் தாகத்தில் வலியுறுத்தும் மையத்தை சு.வியிடம் நாம் பார்க்கலாம்.

அடுத்தது, சர்வமத ஆசிரமத்துடன் சு.வி கொண்டிருந்த உறவு. இந்த ஆசிரமத்துடன் சு.வி கொண்ட உறவு, அவருடைய வாழ்வையும் நோக்கையும் ஒழுங்கமைத்தது.

சாமி அம்மா என்று சு.வி அழைக்கும் அன்னை கமலா அவர்களும் முன்னர் அந்த ஆசிரமத்தின் குருவாக இருந்த சிறி நந்தகோபாலகிரி அவர்களும் சு.வியிடத்திலே ஆழமான ஈடுபாட்டையும் பாதிப்பையும் ஏற்படுத்தியவர்கள்.

மு. தளையசிங்கமும் அவருடைய மெய்யுளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் விட அதிக தாக்கத்தை – அதிக வழிப்படுத்தலை இந்த ஆசிரமமும் அதனுடைய மையங்களும் ஏற்படுத்தின.

என்னைப் பொறுத்தவரை சு.வி இந்த ஆசிரமத்தின் ஒரு கூறே. இந்த மையங்களின் குழந்தையே.

ஆகவே அவர் ஒரு ஆன்மீகவாதி என்றே நான் சொல்வேன். அடிப்படையில் அவர் ஆன்மீகவாதி.

அதிலிருந்தே, அவரை நாம் அடையாளம் காணமுடியும்.

அதிலிருந்தே வருடைய நிறங்களும் குணங்களும் மணங்களும் கிளம்புகின்றன.

இந்த ஆன்மீகத் தளம் என்பது, சமய சம்பிரதாயங்களுக்குள் வரையறுக்கப்பட்டதல்ல.

அல்லது, அது சமய சம்பிரதாயங்களைச் சார்ந்ததும் இல்லை.
அது அதற்கப்பால், பிரபஞ்சம் தழுவியது.

ஆகவே, பிரபஞ்சம் தழுவிய அன்பு, பிரபஞ்சம் தழுவிய மனித நேயம், பிரபஞ்சம் தழுவிய விடுதலை, பிரபஞ்சம் தழுவிய மாண்பு என்ற வகையிலேயே சு.வியின் நோக்குகளும் செயல்களும் அமைந்தன.

இந்த இடத்திலே நாங்கள் சு.வியை எப்படிக் காண்பது?

அவர் யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்பதாகவா! அல்லது தமிழ்த் தேசியவாதியாகவா? சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒருவராகவா? அல்லது அவர் ஒரு ஆன்மீக வாதி என்ற நிலையிலா? அல்லது அவர் ஒரு மனித நேயர் என்றவகையிலா? அல்லது, அவர் ஒரு பிரபஞ்சவாதியாகவா?

உண்மையில் சு.வி ஆன்மீகத்தின் வழியாகப் பிரபஞ்சப் பரப்பை தன்னுடைய அகக்கண்களால் கண்ட ஒருவரே.

எனவே சு.வியைக் காண்பது, அவரைக் கண்டடைவது என்பது, அவருடைய ஈடுபாட்டின் முதன்மைப் பொருளான ஆன்மீகத்தின் வழியாகவே அமையும்.

இதிலிருந்தே அவரையும் அவருடைய கவிதைகளையும் அந்தக் கவிதைகள் மொழியப்பட்ட முறைமையையும் அவற்றின் மொழியையும் அவை உணர்த்தும் பொருளையும் நாம் நோக்க முடியும்.

இதுவே சு.வியின் முதற்படி.

இனி நாம் இதற்கு அப்பால், அவருடைய கவிதைகளை நோக்கி, அவற்றின் தளங்களை நோக்கி, அந்தக் கவிதைகள் இயங்கும் நிலையை நோக்கிப் பயணிக்கலாம்.

சு.வி எப்போதும் சொல்வதைப்போல அவருடைய காலப்பயணத்தை நாம் இந்தத் தளத்தில் நின்று நோக்குவோம்.

தமிழ்க் கவிதைகளில் - அதாவது, சமகாலத் தமிழ்க் கவிதைச் செயற்பாட்டில் சு.வியின் இடம் என்ன? அல்லது எத்தகையது? என்று பார்த்தால் -

சு.வி நீண்ட தமிழ்க்கவிதை இலக்கியப் பாரம்பரியத்தின் புதிய வித்து என்றே தோன்றுகிறார்.

அவர் பயன்படுத்தும் மொழியும் சொற்களும் மொழிதல் முறையும் இந்தச் சாராம்சத்தையே கொண்டிருக்கின்றன.

இதை அவர் தன்னுடைய முழுத்திரட்டான உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற முழுத்திரட்டுக் கவிதை நூலிலேயே தெளிவாகச் சொல்கிறார்.

தமிழிலக்கியத்தின் வழியாக வந்த அடையாளங்களின் வழியே – அந்தத் தொடரோட்டத்தின் வழியே பாரதியைக் காணலாம். அதன் தொடர்ச்சியைத் தொடரும் ஒருவனாகத் தன்னையும் அவர் அடையாளங்காணுகிறார்.

எனது கவிதையின் இயங்குதளமும் இவ்வாறேதான, ஆதிக்குரல்களின் ஊட்டம் பெற்ற ஒன்று என அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

ஆகவே நாம் வில்வரெத்தினத்தைப் புரிந்து கொள்வதற்கு எந்தக் குழப்பங்களும் கொள்ளத் தேவையில்லை.

அவருடைய தொகுதிகளுக்கு அவர் எழுதிய தன்னுரைகளின்போதெல்லாம் தன்னையும் தன்னுடைய செல்வழியையும் தன்னுடைய நோக்கையும் தன் கவிதைகளின் தளங்களையும் அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஏறக்குறைய அவை அவருடைய ஒருவகையான வேண்டுதல் என்றே சொல்லவேணும்.

எனவே, இந்த உண்மைப் புலத்திலே நின்று கொண்டு சு.வியின் கவிதைகள் சொல்லும் பொருட்புலத்தைப் பற்றிப் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால், சு. வியைப் பற்றி, நாம் முன்னர் பார்த்த அந்த அடையாளங்களின் வழியாகவே அவருடைய கவிதைகளையும் நாங்கள் நோக்குவது தவிர்க்க முடியாது என்பதை இங்கே மீளவும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

00
சு.வியின் படைப்புகள் சில வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றன.

1. அவை ஒடுக்குமுறைகள் எதுவாக இருப்பினும் அவற்றை எதிர்ப்பன.

சாதி ஒடுக்குமுறை என்றாலென்ன? இன ஒடுக்குமுறை என்றால் என்ன, இன ஆதிக்கம் என்றால் என்ன? எதுவாக இருந்தாலும் அவற்றை எதிர்ப்பன இந்த வகைக்கவிதைகள்.

இதற்கு அகங்களும் முகங்களிலுமே வலுவான உதாரணங்கள் உண்டு.

குறிப்பாக – ‘வெறுங்காற்றில் கலந்திடுமோ’ என்ற கவிதை...

இது சாதியக் கொடுமை இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கீழ்வெண்மணியிலும் மிகக் கேவலமான முறையில் மனிதர்களைச் சிதைத்தது.

ஆகவே, தமிழ்ச் சமூகத்தின் பிணியாக இந்தக் கொடுமை நீட்சியுற்றுக்கிடக்கிறது..

இந்தக் கொடுமையில் மனித வாழ்க்கையே நசுக்கப்படுகிறது, மிகக் கேவலமாய்... என்று நொந்தும் சபித்தும் பாடும் சு.வி, நொந்த மனிதர்கள், எரியூட்டப்பட்ட தீயிலிருந்தே தங்களுடைய கோபங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அக்கினியே! இடம்மாறு
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை எளியவரிடம் வந்து குடியேறு
அவர்கள் கண்களில் ஜ்வாலி
நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி
சொற்களில் சுடு சரமாகு
செயல்களில் ஆலைக்கனல் பெருக்கு.
மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக...


ஆனால், இந்தக்குரல், பாரதியின் கோபத்தையும் அவரின் மொழியையும் மொழிதல் முறையையும் நினைவூட்டுகிறது.

இது சு.வியின் மீதான குறைபாடு என்பதல்ல.

அவரே சொல்லியிருக்கிறார் தனக்கான ஊட்டங்களை தன்னுடைய மூதாதைகளிடம் இருந்தே எடுத்திருக்கிறேன் என்று.

ஆகவே, அவர் இந்தக் கவிதைக்கான இயம்பு முறைமையை - அதற்கான மொழியை பாரதியிடம் இருந்து எடுத்தாள்கிறார்.

சு.வியின் பெரும்பாலான கவிதைகளில் பாரதியின் நேரடித்தன்மைகளை எவரும் இலகுவிற் காணமுடியும்.

பாரதியின் செல்வாக்கை மிக உச்சமாக அவருடைய கவிதை எங்கிலும் காணலாம்.

பாரதியிடமும் சு.வியைப்போல ஒரு விரிந்து பரந்த ஞான ஈடுபாட்டுத் தளத்தை நோக்கிய அவாவுதல் இருந்ததை நாம் இந்த இடத்திலே நினைத்துப் பார்க்கலாம்.

ஆனால், சு.வி பின்னர் தனக்கான ஒரு மொழிதல் முறைமையைக் கொள்கிறார்.

அதிலும் ஊடுபாவாக முன்னோரின் சுவடுகள் தெரிகின்றனவாயினும் அவை சு.வியின் விளைச்சல்களே என்று உணரக்கூடியவாறு, அவருடைய கவிதைகள் உருப்பெற்றன.

முக்கியமாக காலத்துயர், காற்றுவழிக் கிராமம், நெற்றி மண் போன்ற தொகுதிகள் முற்றிலும் சு.விக்கான தனித்த அடையாளங்களைக் கொண்ட கவிதைகளை உள்ளடக்கியவையாக உள்ளன.

பிற தொகுதிக் கவிதைகளில் இருந்து இந்தத் தொகுதிகளின் கவிதைகள் வேறுபட்டியங்குவது, இவற்றில் பொதுத் துயரங்கள், பொது நிலைகளைக் குறித்து எழுதிய கவிதைகளை விடவும் தன்னிலை அனுபவச் சாரங்களை மையப்படுத்தி எழுதிய கவிதைகள் அதிகமாக இருப்பதே.

அதிலும் காலத்துயரும் காற்றுவழிக்கிராமம் ஆகிய இரண்டு தொகுதிகளின் கவிதைகளும் மிக முக்கியமானவை.

00

பாடிப்பறை - நிகழ்ச்சியில் சு.வியைக் கண்டடைதல் - என்ற பொருளில் 20.12.2011 அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

Monday, December 19, 2011

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித் துளி"







கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய்...

- துர்க்கா தீபன்

00

1.

“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், கருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் போரை சந்தித்திருக்கிறோம். எங்கள் அன்றாடம் போர் எழுதிய துயரம் மிகுந்த வாழ்வாய் இருந்தது.கட்டங்கள் கடந்தததும் காலங்கள் கடந்ததுமான போரின் சகல விளைவுகளையும் சுமந்து ஒரு சனக்கூட்டம் எஞ்சியிருக்கிறது. வாய் விட்டழவும் வலிகள் எதுவும் நினைவில்லாத மனித கூட்டம் அது. துயரத்தின் பேசாத சாட்சிகளாக போரின் தடயங்கள் ஒரு ரேகையைப்போல படர்ந்திருக்கிறது எல்லாவிடமும் எல்லோரிடமும். சாவையும் பிறப்பையும் சாதாரணமாக்கியதில் பெரிய பங்கு போருக்கு போகிறது. ஏணிகளை எடுத்தெறிந்து விட்டு பாம்புகளை மட்டும் வைத்து சாவு ஆடிய பரமபதம் நிகழ்ந்தது நேற்று. எங்களை துரத்தி துரத்தி தீண்டியது மரணம். அதற்கொரு எல்லையும் இருக்கவில்லை எவரும் தடுக்கவுமில்லை .அழுவதை மறந்து நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். எங்கள் இனத்தில் வடிந்த துயரத்தை நீங்கள் கைகள் கொண்டு கழுவ முடியாது காலம் கொண்டு நழுவ முடியாது எங்கள் உயிரை, சதையை, குருதியை, கண்ணீரை பெருங்கதறலை உங்கள் காலடிக்கு கொண்டுவந்தபோது நீங்கள் வேட்டைப்பற்கள் தெரிந்துவிடும் என்ற சங்கடத்தில் மௌனித்தீர்கள். எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம் நீங்கள் நீதி பேசும் சபையில் சிரிக்க."

இறப்பு குறித்தான நிஜங்களும் வாழ்வு குறித்தான கற்பனைகளும் ஒரு கதையாகவே நிகழ்கின்ற ஒரு நிலத்தின், இனத்தின் தொடச்சியாக நாமிருக்கிறோம். இந்த தொடர்ச்சி அதன் சகல பரிமாணத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியாதாகிறது. இங்கே எமக்காக நாமே அழவும் சிரிக்கவும் தேவைகள் இருக்கிறது.

2..

போர்ச் சர்ப்பம் வால் விழுங்கிச் சுழலும் ஒரு வேளையில் எழுதப்பட்ட கவிதைகளை வடலி வெளியீடாக தொகுத்திருக்கிறார்கள். பலியாடு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்ற கருணாகரனின் கவிதைகள் குறித்து பேச நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. விடுபடுதல்கள் விளங்கிக்கொள்தல்களின் இயல்பான அச்சம் இது குறித்து தடுத்தாலும் என்னால் பேசாமலும் இருக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

“நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்.

என்கின்ற முகப்பு கவிதை பேசுகின்ற மொழிதான் இந்த தொகுப்புக்கான கட்டியம். உண்மையிலேயே அச்சந்தருவதாயிருக்கிறது இந்த தொகுப்பு முழுவதும். ஏன் என்றும் புரியவில்லை எது குறித்து என்றும் தெரியவில்லை எந்தன் வாசிப்பனுபவம் முழுதும் விந்தி விந்தி வழிந்தது அச்சத்தின் எல்லாச் சாயலும். நான் அதை மறைத்து மறைத்து வாசித்து ஒவ்வொருதடவையும் தோற்றேன்.

"வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தில் வெளிவருகிறது." - என்பது தான் இந்த கவிதை தொகுப்பின் அட்டையில் உள்ள மிக இறுதி வாசகம். இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்? அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்?

ஒரு முதியவனை கண்டேன், அவன் பிறந்த போதும் வளர்ந்த போதும் இருந்தது ஒன்றே அது போர்; அது சார்ந்த மரணங்கள் வலிகள் இன்னபிறவும் சேர்ந்து எப்போதும் சூழ்ந்து கொள்ளும் அவமானங்களாயும்.. அவன் அதற்குள்ளே பிறந்தான் அங்கேயே வளர்ந்தான் அவன் இருப்பு முழுதும் மரணம் சூழ்ந்திருந்தது. எதற்கும் அவன் பெயர்ந்தவன் இல்லை. அவனை எடுக்க அச்சப்பட்டேன் அவன் பேசியது கேட்க பயப்பட்டேன். எந்தன் கையில் கிடந்தான் ஒரு தொகுதித் துயரமாய். எனக்கு தாகமாக இருந்தது நீரருந்தவும் தயங்கினேன் அவன் சாலை முழுதும் பாலையாய் இருந்தது குருதி காய்ந்து. அவனிடம் ஒரு சோடிக் கண்கள் இருந்தது அது பேச வல்லதாயும் புலன் நிறைந்ததாயும் இருந்தது. அவன் இரப்பவனாய் இருக்கவில்லை. அவன் இரந்தபோது அதை கொடுப்பவனாயும் எவனும் இங்கு இருக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்? - ஒரு முதியவனை கொண்டிருந்த முகப்போவியம் என்னுள் எழுப்பிய வாசிப்பு இது. முகப்போவியமாய் இங்கே முதுமையோடு தீட்டப்பட்டிருப்பதை எங்கள் வாழ்க்கை என்றே வாசிக்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் மறைந்த பெண் கவிஞர் சிவரமணியின் பின்வரும் கவிதைகளின் மீதான வாசிப்பும் பொருத்தம் மிக்கது என நினைக்கிறேன் .

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்

“பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்."

-சிவரமணி

யுத்தகாலம் சகலதையும் முதுமைக்குள்ளாக்கும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது நீண்ட காலமாய். எல்லோரிடமும் பாதுகாப்பு வேண்டி நாங்கள் முதுமையடைகிறோம் , இதில் இயற்கையாகவும் யுத்தத்தின் இயல்பாகவும் மரணம் நம்மை நிரந்தரமாக ஆட்கொள்கிறது. யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலம் குறித்த வருத்தம் வேதனை தருவதாக இருக்கிறது.

சாவை வளர்த்து வாழ்வுக்கு கொடுத்ததன் மூலம் சாவே வளர்ந்த சூழலில் வந்த கவிதைகள் இவை, கரு முட்டையை நோக்கி சிரமத்துடன் நீந்திச் செல்லும் விந்தணுவைப்போல இந்தக் கவிதைகளினது ஜீவிதம் குறித்தான முனைப்புகளும் பெரியவை. வாழ்ந்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பு ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஒவ்வொருவருடைய குருதியாலும் உடைந்துபோன சுவரில் எழுதப்பட்டிருக்கிறது மானுடத்தின் பாடல்.

"போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக் கிடக்கிறது நடுத்தெருவில்
நாய் முகர…

யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது?
அதில் மிதக்கும் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும் என்ன செய்வது?"
எங்கள் எல்லோரிடமும் அடை காக்கப்பட்ட
மௌனங்களை தவிர
பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

என்றென்றும் நான் ஆராதிக்கின்ற கவிதை இது. வாழ்தலின் உச்சபட்ச வேண்டுதலையும் இருத்தலின் எல்லாவித சாத்தியப்பாட்டையும் வெளிப்படுத்திய மானுடத்தின் மண்டியிட்டழும் குரல் இது. விழியோடும் உவர்ப்போடும் விரல் கொண்ட நடுக்கத்தோடும் நான் இதனை வாசித்து முடித்தேன் ..

“எந்தப் பெருமையும் இல்லை
பொங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களை பெறுவதில்
எந்தச் சிறுமையும் இல்லை
மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது
என்று எவ்விதம் உரைப்பேன்? .....".

(சாட்சிகளின் தண்டனை)

ஊசலாடுகின்ற பெண்டுலம் கடிகாரத்தை உயிர்ப்பிப்பது போல இந்தக் கவிதை என்னுள்ளே அலைந்து கொண்டே இருக்கிறது படித்த நாள் முதல். மிக அண்மையில் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களை மறுவாழ்வின் முடிவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் புகைப்படங்களை காண நேர்ந்த போது கண் நெடுக வழிந்தது மேற்சொன்ன கவிதை வரி. மகாகனம் பொருந்தியவர்களே போரை முடித்து விட்டீர்கள், போர்க்கணக்கை நீங்கள் விரும்பியவாறு எழுதிக்கொள்ளுங்கள், புகழை எப்படியும் எழுப்பிக்கொளுங்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; கூண்டுகளில் இருக்கும் எங்கள் மனிதர்களை திருப்பிதாருங்கள். மண்ணுலகில் உங்களின் மாட்சிமைக்கெதிரே மண்டியிடுகிறோம் வேண்டுவதெல்லாம் அவர்கள் வாழ்க்கை ஒன்றே! விட்டுவிடுங்கள் எல்லோரையும்.

“ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்…".

சனங்களின் கண்கள் இரண்டு வரிசையிலும் பிடுங்கப்பட்டது எந்த வரிசையில் இருந்தவர்களும் தப்பவில்லை. அவர்களிடம் கண்களை தவிர வேறெதுவும் இருக்கவில்லை அதனால் அவர்கள் கொடுக்கவும் இல்லை. போர் தனக்கு ஒரு முகமே இருப்பதாகச் சொல்லி எல்லோர் கண்களையும் பிடுங்கியது. போரிடம் நல்ல முகம் என்பதே இல்லை என்றறிந்த மக்களிடம் கண்கள் பிடுங்கப்படிருந்தன.

3.

கருணாகரனின் கவிதைகள் பேசும் அரசியல் குறித்து அவதானத்தோடே பேச இருக்கிறது. அவரது படைப்புலக அரசியல் குறித்த ஆய்வை ஒரு பாதுகாப்பு கருதி சற்று வெளியே நிறுத்தி விட்டு இந்த தொகுப்பை வாசிக்க வேண்டிய பொறுப்பு உயிர் குறித்தான அச்சங்கள் அற்று இலக்கியம் பேசுகின்ற எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறேன். அதுவே இங்கு அரசியல் சார்பு விமர்சனங்களை மீறி இந்த தொகுப்பு மீதான ஒரு மட்டுப்படுத்திய வாசிப்பை கொடுக்கிறது ஆனால் அது கவிதை அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்தாக தெரியவில்லை . ஆனாலும் அவரும் தீவிர நிலையில் கவிதைகளை எழுதிய படைப்பாளியே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இங்கே கருணாகரனின் படைப்புகளில் உள்ள சிறப்பம்சமாக ஒன்றை சொல்ல வேண்டும், அவருடைய கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையில் எப்போதும் இன்னொன்றை அனுமதிப்பதில்லை. அவரது கவிதைகளே அதன் வாசகனோடு இயல்பாய் பேசிவிடுவதால் அவரது கவிதை குறித்து பேச வருபவர்களுக்கு இன்னொரு தளம் இலகுவாக கிடைக்கிறது அதன் விளைவுகள் குறித்து உரையாட .இது ஏற்படுத்தி தரும் வெளி வசதியானது இது போன்ற வாசிப்புநிலை குரல்களை செவிமடுக்க.

கருணாகரனின் கவிதைகளில் நாங்கள் சரளமாக சந்திக்க கூடிய இன்னொரு நபர் கடவுள் மற்றும் தேவதூதன், தேவாலயம், கோவில் சார்ந்த அவரது துணைப்படிநிலைகள் – குறியீடுகளாகவும் படிமங்களாகவும் நிறைந்திருக்கிறது கவிதைகள் நெடுக. நிராசைகள் நிறைந்திருக்கும் உலகில் முதல் விமர்சனப் பொருள் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும்தான். அவர்களால் நம்ப வைக்கப்படுகின்ற - அல்லது அவர்கள் நம்புகின்ற ஒன்றிடம் அலைகழிக்கப்பட்ட கேள்விகள் சென்றடைகின்றன. சார்போ எதிர்ப்போ பதிலளிக்க வேண்டியது அங்கே அவர்கள் தான். கையறு நிலையில் துயரம் மிகுந்தவர்களின் பிரார்த்தனைதான் பிதாக்கள் மீதான ஏளனப்பாடலாகிறது - அவர்களுமறியாமல். எல்லாமறிந்த கடவுள்களின் அபயமளிக்கின்ற புன்னகையையும் குண்டு துளைத்திருக்கிறது. கோபுரத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற புறாக்களின் குருதி பீடத்தில் வழிந்திருக்கும் போது கேள்விகள் இடம்பெயர்ந்தலைகின்றன உயிரை காப்பாற்றிக்கொள்ள.

"முடிவற்ற சவ ஊர்வலத்தில்
சிக்கியழிகிறது பொழுது
புனித நினைவாலயலங்கள்
ஒவ்வொன்றாக வீழ்கின்றன
எங்களை கைவிட்ட கடவுளர்கள்
எங்களால் கைவிடப்பட்ட கடவுளர்கள்
எல்லாம் இங்கேதான்
இனிவரும் முடிவற்ற இரவு
நமது பிணங்களின் பரிசாக “

(இருள்)

முடிவற்ற இரவு குறித்தான பதட்டங்களில் எழுதப்படுகிறது பிரார்த்தனையின் பாடல் - நம்பிக்கை அழிந்திருப்பவர்களிடம் இருந்து - எழுத்துப் பிழைகளுடன் தாறுமாறாக..

"சந்தையிலுருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக
பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்
யாரும் பேசாமல் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டு போங்கள் என்றார்
சலிப்பு நிரம்பிய கோபத்தோடு "

( கண்ணழிந்த நிலத்தில் )

மேற்குறித்த வரிகளை கடந்து செல்ல எமக்கு தேவையாயிருப்பது ஒரு புன்னகை மட்டும் அன்று - கைவிடப்பட்ட மனிதர்களின் சார்பாக கடவுளை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது வருத்தத்துடன்.
மேலும் கடவுளர்கள் குறித்து நிரம்புகிறது கவிதைக்கான பாடு பொருள்

கொலை வாளை வைத்திருந்தான் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்
தலையை கொய்துகொண்டு போன
புதிய கடவுளை சனங்கள் திட்டினார்கள்

பாடுகள் சுமக்கின்ற மனிதர்களால் வரையப்படும் கடவுள் குறித்தான சித்திரங்கள் முடிவுறுவதாக தெரியவில்லை, கொடும் பாலையில் அனல் காற்று வீசியிறைக்கும் மணல் துகளாய் நிறைகிறது விழியோடும் வழியோடும்.

சாத்தானும் கடவுளும்
ஒரே ராஜ்ஜியத்தில் பங்கு வைத்துக்கொண்ட
உலகத்தில்
சனங்களின் நிழலைக் கண்டு
நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்
ஒருவனை கண்டேன்
அன்றிரவின் இறுதிக் கணத்தில்

( வளாகத்தின் நிழல்களில் படிந்திருக்கும் பயங்கரம்)

சாத்தான்களாலும் கடவுளர்களாலும் பங்கு போடப்பட்டிருக்கும் உலகில் சனங்களின் நிழலைத் தன்னும் கண்டவனை காணமுடியாமை உச்சநிலைத் திகிலை வாசிப்பு மனதில் நிகழ்த்துகிறது. மேற்குறித்த கவிதைகளில் எல்லா நிலைகளிலும் கடவுளர்கள் ஒருவராக இருப்பதில்லை அனால் சோதிக்கப்படும் பாடு நிறைந்த மக்கள் ஒருவராகவே இருக்கிறார்கள் என்பது எத்தனை முரண் நகை.

4.

இந்த தொகுப்பு ஏறத்தாள நூற்றுப்பதினைந்து பக்கங்களில் கருணாகரனின் ஐம்பது கவிதைகளை உள்ளடக்குகிறது. வடலி வெளியீட்டின் தொகுப்பு. அவரது கவிதைகளை நன்கு புரிந்த அவரது நண்பர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் நேர்த்தியோடு பதிப்பிடப்பட்டிருகிறது. இதில் உள்ளடக்கப்படிருக்கும் எல்லாக்கவிதைகளையும் யுத்தத்தின் அவலச்சுவை என வகைப்படுத்த முடியாது. குற்றமும் தண்டனையும் மன்னிப்பும், தேவ தேவனின் பறவை, மூடிய ஜன்னல், சிரிக்கும் பறவை, பெண்நிழல், மாமிசம், பறக்கும் மலைகள், உறக்கத்தில் வந்த மழை, குழந்தைகளின் சிநேகிதன் முதலிய கவிதைகள் வாழ்வியலின் தொடர்ச்சியை அதன் தருணங்களில் பதிவு செய்பவை. அந்த வகையில் குழந்தைகளின் சிநேகிதன் எனக்குபிடித்த கவிதை – இன்பம் தொற்றிக்கொள்ளக் கூடியது எப்போதும் நீங்கள் அதை காவிச் செல்பவராய் இருங்கள் என்கிறது ஒரு பொன்மொழி – இங்கே குளிர் விற்பவர்கள் குழந்தைகளிடம் அப்படித்தான் இருக்கிறார்கள் இன்பத்தை அதன் கரைந்து விடும் (நிலையற்ற) நிலையில் எடுத்துச் செல்பவர்களாக..

“குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி"

என்ற எளிய கவிதை மொழி சிறுவர்களை நோக்கி பேசுகிறது. இதன் எளிமைக்காகவே இதனை நேசிக்கிறேன்.

"என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர் விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும்"

யாரிடம் இல்லையென்று சொல்லுங்கள்? மணியொலி, மகிழ்ச்சி மற்றும் குளிர்ந்தினிக்கும் துளிகளைத் தந்தவர் புன்னகை.

போர் தன் சமன்பாட்டை எங்களில் எழுதிவிடுகிறது, அதற்கு விடையளிக்க முடியாதவர்களை தன் வாயால் விழுங்கி விடுகிறது. உண்மையில் அதற்கொரு விடையும் இல்லை எனக் கண்டிருக்கின்ற நாங்கள் இறந்திருக்கிறோம் எல்லா விதமாகவும். யுத்தத்தின் விளைவுகள் எவருக்கும் எப்போதும் மகிழ்ச்சிகுரியவை அன்று. யுத்தம் தன் சாட்டையை எல்லோரிடமும் வீசிவிட்டு செல்கிறது அதன் வலிகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் போரின் வால் எங்களை சூழ்ந்திருக்கிறது. அது தருகிற அப்பாலான விளைவுகள் வெளிவருகிறது வேறுபட்ட வடிவங்களில்.

“வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்"

குழந்தைகளும் வாசலைத் திறந்து வெளியேறிவிட்ட வீடுகளில் ஞாபகங்களுடன் பொம்மைகளாக இருக்கிறார்கள் அவர்களை பெற்றவர்கள். உண்மையில் போர் வரின் பிரிதலோ இல்லை பொருள் வரின் பிரிதலோ, பிரிதல் வேதனையானது அது வாழ்வின் பிடிமானம் குறித்தான கடைசி நூற்புரியையும் பரிசோதித்து விடும் வல்லமை உள்ளது. எங்கள் பிடி நழுவிக்கொண்டிருக்கிறது எல்லா வகையிலும். மேற்குறித்த அருமையான கருணாகரனின் இந்தக் கவிதை இத் தொகுப்பில் இடம் பெறவில்லை. அனால் மேற்குறித்த கவிதை எம்மக்குள் நிகழ்த்தும் கிளர்வை இன்னொரு கவிதை சாத்தியப்படுத்துகிறது தொகுப்பில்.

பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்து போகும்
இளமைக் காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்கும் இடையில் கிடந்தது அவிகிறான்

என்று ஆரம்பிக்கிறது தூக்கத்தை தொலைத்த கிழவன் கவிதை

கால முரணுக்கிடையில்
தன்னை கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான கருணையில்..
காலம் எல்லாவிதத்திலும் முரண்தான் - யார் அறிந்தோம்?

சர்வதேச தேதிக்கோடு என்று சொல்லப்படுகின்ற பூமிக்கோட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு நீர்த்துளிகளின் இடைவெளியை தூரக்கணக்கில் சொன்னால் பூச்சியம் நேரக்கணக்கில் சொன்னால் நாள்; அது போலதான் உறவுகளை கருணையின் கணக்கில் ஒன்றாகவும் காலத்தின் கணக்கில் வேறாகவுமாக பிரித்து வைக்கிறது கண்டங்கள்.

“வெவ்வேறு கண்டங்களுக்கு இடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்த துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளை என்றும்
அங்கும் இங்குமாக “

அன்பின் உடலின் துடிப்பு குழந்தையின் ஞாபகங்களோடு தனித்திருக்கின்ற பொம்மையை அழைத்து வருகிறது மீண்டும் மீண்டும்.

காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை. சிலர் காணமல் போனபோது அழுதோம் சிலர் காணாமல் போனபோது மகிழ்ந்தோம். சிலர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்கள். சிலர் எழுத வைத்து விட்டு காணாமல் போனார்கள். சில காணாமல் போதலுக்காய் இன்னும் சில காணாமல் போதலை நியாயம் செய்தார்கள். நாங்களே எங்களுக்குள் காணாமல் போதலை நிகழ்த்தினோம் இன்னும் என்னவாய் எல்லாம் சாத்தியமோ அவ்வாறாய் எல்லாம் நாங்கள் காணாமல் போயிருக்கிறோம். சரியோ-தவறோ, நியாயமோ- அநியாயமோ, காலத்தின் தேவையோ-களத்தின் தேவையோ ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரொரு துயர் மிகுந்த இரவை உருவாக்கியது எங்கள் வரலாற்றில் . அந்த இரவில் விழித்திருந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி.

காணாமல் போனவனின் புன்னகை என்கின்ற கவிதை எங்கள் ஞாபகங்களில் சில கேள்விகளை எழுப்புகிறது. திரும்பிச் செல்லவும் முடியாது அங்கிருக்கவும் முடியாது என்கின்ற நிலையில் காணாமல் போனவன் புன்னகை எங்களை தொடர்கிறது அல்லது எங்களை தடுக்கிறது. காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின் முன்னிலையிலும் குருதியின் அருகாமையிலும் சில கேள்விகள் சிந்திக்கிடக்கிறது - காலம் பதில் சொல்லக் கடவது.

" திரும்பிச் செல்ல முடியவில்லை
காணாமல் போனவனின் புன்னகையை விட்டு.."

பெருந்துயரமாக இருக்கிறது காணாமல் போனவனின் புன்னகையில் இன்றும் உறைய மறுத்திருக்கும் குருதித் துளி குறித்து.

00

துர்க்கா தீபன் - (sptheban@yahoo.com)- வார்ப்பு

காத்திருப்பின் நிழல்













உருகிச்சிதறும் நிமிடத்தின்
ஒவ்வொருதுளியும் சேமிக்கின்றன
நம்முகத்தின் பிரதிபலிப்புகளை.

பகிர்ந்து கொள்ள முடியா
முத்தத்தின் ஈரம்
வானவில்லாகி மிதக்கிறது
இந்த மாலையில்.

நீ பருக மறுத்த பானத்தை
முழுவதுமாக
நான் பருகுகிறேன்
கசப்போடும் இனிமையோடும்.

திரைகளின் பின்னுள்ள
பள்ளத்தாக்குகளில்
மாயப்பறவையின் வினோதம் நிகழ்கிறது.

இன்னும் காலியாகாத பானம்
மீதமிருக்கிறது
உன்னை நினைவூட்டியபடி;

எப்போதும் பேசாமல் சேமித்திருக்கும்
எனக்கான உன் சொற்களின் ரகசியத்தில்
திரண்ட மகரந்தத்தில்
அமர்ந்திருக்கிறதென் வண்ணத்துப்பூச்சி.

மலையின் உச்சிச் சிகரத்தில்
மீதிப்பானத்தோடு
ஒற்றைச் சிறகில் நடனமிடுகிறது
ஞாபகங்களும் கனவும்; நிரம்பிய
என் மனம்;


காத்திருப்பின் நிழல்
வீதியாய் நீண்டு கடலாகி
வானத்தில் சேர்ந்து விரிகிறது.

நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசைக்கப்பால்
சுழன்று கொண்டிருக்கும்
முடிவிலிப்புள்ளியின் காய்ந்த மலர்
இன்னும் வற்றாத ஞாபகங்களின் ரேகைகளோடு
படபடக்கிறது ரகசியங்களுக்காக.

இப்போது
காலியாகிவிட்டது பானம்.

வானவில்லில் தெரியும்
அன்பறிந்த சொல்லை
மொழிபெயர்க்க முடியுமா உன்னால்?

ஆயின்
என் காய்ந்த மலரிலும்
நடனமிட்டுக்கொள்ளும்
வாசனையையும் தேன்துளியையும்
அறி
00

Wednesday, December 14, 2011

நிழலிலிருந்து வழியும் குருதி





நெருப்பைத் தின்னுவது
அப்படியொன்றும் கடினமானதல்ல
முள்ளின் மேற் தூங்குவதும்
சாகஸத்துக்குரிய ஒன்றல்ல

குழியில் வீழ்த்தப்படுவது
இருளிற் தள்ளப்படுவது
வரிசையிலிருந்து நீக்கிவிடுவது
எல்லாமே மிகச் சாதாரண காரியங்கள்.

பாம்புகள், நரிகள், ஓநாய்கள்,
முதலைகள், விலாங்குகள், பன்றிகள், கழுகுகளோடு
வாழ்வதொன்றும் அதிசயமானது மல்ல.

கண்ணீருடனும் பசியுடனும் இருப்பது
துக்கத்துக்குரியதோ அவமானத்துக்குரியதோ அல்ல


அன்போடிருத்தல்
கருணை மிகக் கொண்ட காதல்
ஒளிரும் உண்மையோடு வசமாகுதல்
அறத்தின் முன்னே தன்னை நிறுத்தல்
புரிந்துணர்வைப் பொழிதல்
என்ற ஆயிரங்காலத்துப் பயிர்களை
ஓரிரவில் அல்லது பட்டப்பகலில் மேய்வதொன்றும் புதிதுமல்ல.

மனிதர்கள் யார்?
அவர்கள் எவ்வாறிருப்பர்?
என்பதையெல்லாம் அறியவே முடியாமல் தவிப்பதை விடவும்.

Tuesday, December 13, 2011

அ.செ.மு





அ.செ.மு என்ற அ.செ.முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர். 1950 களி்ல் ஒரு முக்கிய ஊடகவியலாளராக இருந்த அ.செ.மு, ஈழகேசரி, எரிமலை, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு ஆகிய ஊடகங்களின் ஆசிரிய பீடத்திற் செயற்பட்டவர்.


1.

தன்னுள் அடங்கி வாழ்தல். இப்படி எழுதும் போதும் வாசிக்கும் போதும் அ.செ.மு வே எப்போதும் நினைவுக்கு வருகிறார். நான் அறிந்த அளவில் அ. செ.மு பின்னாளில் யாருடனும் அதிகம் பேசியதாக இல்லை. கலகலப்பாக இருந்ததில்லை. எதற்கும் துக்கப்பட்டதாகவும் இல்லை. சந்தோசப்பட்டதாகவும் இல்லை. எதுவும் அவரைத் தீண்டியதாகவும் இல்லை. எதனாலும் அவர் வருத்தப்பட்டதையும் நானறியவில்லை. அல்லது அவருடைய வருத்தங்களையும் வலிகளையும் அவர் எப்போதும் வெளிப்படுத்தியதாகவும் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு காலம் மிகவும் தீவிரமாக இலக்கியத்தில் இயங்கியவர். ஈழத்துச் சிறுகதையுலகில் தன்னடையாளத்தை துலக்கமாக உருவாக்கியவர். அவருடைய அந்த அடையாளம் இப்போதும் ஒளியோடுதானுள்ளது.

அவருடைய புகழ்பெற்ற சிறுகதைகளான காளிமுத்துவின் பிரஜா உரிமை, மாடு சிரித்தது, பழையதும் புதியதும் இரண்டும் மூன்றும் - இந்தப் போர்க்காலத்திலும் அப்படியே பொருந்தியிருக்கின்றன. காளிமுத்துவின் பிரஜா உரிமை பலதடவைகள், பல இடங்களிலும் மீள்பிரசுரமாகியுள்ளது. இது அந்தக் கதைக்கான முக்கியத்துவத்தைக் காட்டும். மாடு சிரித்தது, பழையதும் புதியதும் ஆகிய இரண்டும் மாறிச்செல்லும் சமூக இயக்கத்தின் போக்கைச் சுட்டும் குறிகாட்டிகள். அதேவேளை உலகமயமாதலின் போக்கை அ.செ.மு அன்றே தன் கதையில் விமர்சித்திருக்கிறார். இது வெளிப்படையான விமர்சனமல்ல. அவர் எதையும் வெளிப்படையாக விமர்சனமோ கண்டனமோ செய்யும் வகையைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

பழையதும் புதியதும் அவருடைய கதைகளிலேயே முக்கியமானது. கேலியும் நகைச்சுவையும் கூடிய மொழியில் அவர் கதையை விவரித்துச் செல்வது மிகச் சுவை.

“அவசரமில்லை அண்ணே, ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ்ளப் போகட்டும். ஏது, சோடி வாய்த்து விட்டது போலிருக்கு, உனக்கு’’ என்று சும்மா சொன்னேன்.

கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதிகள் எனக்குத்தெரியாதா. ஆனால், மனுசன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலேயே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்து போய்விடுகிறது.

இந்த மாதிரி கதை நெடுகிலும் ஒரு தொனி தொடர்ந்து கொண்டிருக்கும். இந்தக் கிண்டலும் கேலியும் தராசு முனையைப்போல சமனிலையில் ஆடிக்கொண்டிருப்பது. நமது மனதிலும் பட்டென்று ஒரு உதைப்பை ஏற்படுத்தும் பொறி இதிலுண்டு. தராசில் இருக்கும் முக்கோணத்தன்மை அ.செ.மு வின் கதைகளிலும் உண்டு. ஒரு தராசு பொருளுக்கும் அதை நிறுப்போருக்கும் அதை - அந்த நிறுவையை சாட்சியாக வைத்து பொருளை வாங்குவோருக்கும் இடையில் சமநிலையில் நின்றாடுகிறது. இங்கே அ.செ.மு வும் தன் படைப்புலகத்தை அவ்வாறே வைத்திருக்கிறார்.

அவர் சிலவேளை பொருளாகிறார். சிலபோது அவர் விற்போனாகிறார். இன்னொரு போது பொருளை தராசின் சாட்சியத்தோடு வாங்குவோராகிறார். அதற்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்ள வைக்கிறார். இது தமிழ்ப் பெரும்பான்மையில் அதிகம் கிடைக்காத ஒரு பண்பு.

பழையதற்கும் புதியதற்கும் இடையில் நிகழும் மோதலையும் நாகரீக வலையில் ஈர்க்கப்படும் மனித இயல்பையும் அதை மனித வாழ்க்கையே மறுபடி பழைய நிலைக்கு கொண்டு போகும் வேடிக்கையையும் இந்தக்கதை விவரிக்கிறது. போர் எல்லா வளர்ச்சியையும் சமனிலைப்படுத்தி மனிதனை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு போய்ச் சேர்க்கிறது. புதியனவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மனம் தன்னையறியாமலே போரின் மூலம் பழைய இடத்தை சென்றடைகிறது என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறது இந்தக்கதை. உளவியற் பரிமாணத்தில் விரியும் இந்தக் கதையை வாசிக்கும் போது எழும் வியப்பு பெரிது.

பொதுவாக போரை பிற்போனது எனவும் போர் விரும்பிகள் எப்போதும் அடிப்படைவாதிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. அ.செ.மு வின் இந்தக்கதை இதற்கு நல்ல ஆதாரம்.

மாட்டு வண்டி சவாரி வைத்திருக்கும் கார்த்திகேசுவுக்குப் போட்டியாக மலையாளத்தானின் கார் வந்து விடுகிறது. அந்தக் காரோடு கார்த்திகேசுவின் மாட்டு வண்டியால் போட்டி போடவே முடியவில்லை. இந்த இயலாமை - அவனுடைய கோபம் ஒரு கட்டத்தில் மாடுகளின் மேல் பாய்கிறது. காரோடு போட்டிபோடும் படி அவன் மாடுகளுக்கு செம அடி அடிக்கிறான். ஆனால் மாடுகளால் காரோடு போட்டியிட முடியுமா. இதையெல்லாம் கார்த்திகேசு பிறகொரு சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டு வெட்கப்படுகிறான்.

கார் வெளித்தரப்பின் உற்பத்தி. ஆக அதற்குச் செலவு செய்யும் முதலீடு வெளியேயே போகிறது. அதற்கு செலவும் அதிகம். ஆனால் மாட்டு வண்டிக்கு அதெல்லாம் கிடையாது. அது உள்@ர் தயாரிப்பு. அதனால் அதன் வரவும் செலவும் ஊருக்குள்ளேயே சுற்றும். என்றெல்லாம் தன்னுடைய வண்டிக்கு நியாயம் சொல்லும் கார்த்திகேசுவின் வண்டியை யாரும் ஏற்பதாகவேயில்லை. அவனுடைய அந்தக் கருத்தையும் எவரும் பொருட்படுத்துவதாகவும் இல்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த நிலைமை மாறுகிறது. காலம் வேறாக மாறி வரும்போது – யுத்த காலம் வரும்போது - கார்கள் பெற்றோல் இல்லாமல், தெருவில் இறங்க முடியாமல் வீடுகளில் முடங்கி விடுகின்றன. பதிலாக பத்தாண்டுகளாக யாராலும் கவனிக்கப்படாதிருந்த மாட்டு வண்டி இப்பொழுது மறுபடியும் தெருவுக்கு வந்திருக்கிறது. போர் அதைக் கொண்டு வந்திருக்கிறதுது. அது எரிபொருட்தடையைக் கொண்டு வந்ததால் எல்லாமே மாறிவிட்டன. கார்திகேசு மீண்டும் சவாரிக்காரனாகி விட்டான்.

இந்தக்கதைகள் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் 1943 காலப்பகுதியில் அ.செ.மு வினால் எழுதப்பட்டவை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இப்பொழுதும் இதே நிலைமைதான ஈழத்தில். அப்படியே கதை அதே இளமையோடு காலத்தை ஊடுருவிப் பொருந்துகிறது.

தமிழில் போர்க்கதைகள் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு அன்றைய படைப்பாளிகளை போர்க்கதைகளை எழுத வைத்துள்ளது. இந்தவகையில் தமிழக எழுத்தாளர்கள் பர்மாவை மையமாக வைத்தும் அதைத் தொட்டும் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஏன், ப.சிங்காரத்தின் நாவல்களில் கூட போர்ச்சூழலின் பிரதிபலிப்பைக்காணலாம்.

அவ்வாறாயின் அ.செ.மு ஈழத்துப் போர்க்காலக் கதைகளின் முன்னோடி எனலாமா. எப்படியோ அ.செ.மு வின் கதைகளில் காலத்தின் துருவேறா நிலை உள்ளது.

2

அ.செ.மு வின் இளமைக்காலத்தைப்பற்றி பலரும் பலவிதமாக சொல்கிறார்கள். அவர் சிறுவதிலேயே அமைதியான சுபாவங்கொண்டவராக இருந்தார் என்று அளவெட்டியைச் சேர்ந்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அ.செ.மு அளவெட்டியில் பிறந்தவர். அளவெட்டி எழுத்துத்துறையிலும் இசை மற்றும் பிற கலை ஈடுபாடுகளிலும் அதிகமானவர்களைக் கொண்ட பேரூர். யாழ்ப்பாணத்திலேயே அளவெட்டிதான் பெரிய ஊர். புகழ்மிக்க இசைக்கலைஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் கவிஞர்களும் அளவெட்டியைச் சேர்ந்தவர்களே. ஆகக்குறைந்தது ஐம்பது பேராவது இந்தப்பட்டியலில் சேருவார்கள்.

தவில் மேதை தட்சணாமூர்த்தி, நாதஸ்வர வித்வான் என்.கே. பத்மநாதன், பாவலர் துரையப்பா பிள்ளை, பண்டிதர் நாகலிங்கம், நவீன ஈழக்கவிதையின் பிதாவாகக் கொள்ளப்படும் மஹாகவி, அ.ந.கந்தசாமி, சிறந்த சிறுகதை எழுத்தாளர் அ.செ.மு, கவிஞர் சேரன், புதுசு ரவி என்றழைக்கப்படும் இரவி அருணாசலம், விஜயேந்திரன், பாலசூரியன், ஓவியர் ரமணி, ஈழத்துச் சினிமாவின் புதிய அலையை தொடக்கிவைத்த ஞானரதன் என்ற சச்சிதானந்தன், ஒளவை என்று ஒரு நீட்சி அளவெட்டிக்குண்டு. இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

இரண்டு மூன்று தலைமுறைப்படைப்பாளிகள், கலைஞர்கள் அளவெட்டியின் புகழைப் பரப்பியிருக்கிறார்கள். அதில் அ.ந.கந்தசாமியும் அ.செ.முவும் முக்கியமானவர்கள்.அ.ந.கந்தசாமி இடதுசாரி இயக்கத்தில் இயங்கிய முக்கியமான படைப்பாளுமை. அ.செ.மு பிரகடனங்கள் அற்ற, அரசியல் அமைப்புகளையோ நிலைப்பாடுகளையோ பகிரங்கப்படுத்தாத ஒருவர். அ.செ.மு புகழுக்கும் பெருமைக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதாகவே எப்போதும் நடந்திருக்கிறார்.

அ.செ.மு ஈழத்துச் சிறுகதைகளின் இரண்டாம் தலைமுறைப்படைப்பாளிகளில் முதல் ஆள். முதல் தலைமுறையில் இயங்கிய சி.வைத்திலிங்கம், சம்மந்தன், இலங்கையர்கோன் ஆகியோரில் அ.செ.மு வுக்கு இலங்கையர்கோனிலேயே அதிக ஆர்வம் இருந்தது. இதை அவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு தடவை என்னிடமே சொன்னார்.

ஆனால் அவர் தமிழகப்படைப்பாளிகளிடமும் ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். மௌனியை அவருக்கு நிறையப்பிடித்தது. புதுமைப்பித்தனை அவர் கொண்டாடினார். அ.செ.மு வின் சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் தொடர்ச்சியையே நாம் அவதானிக்கலாம். அவர் புதுமைப்பித்தனின் தொடரியே. அதிகம் அறியப்பட்ட அவருடைய சிறுகதையான மாடு சிரித்தது புதுமைப்பித்தனின் தொடரியாக அ.செ.மு இயங்கினார் என்பதற்கு நல்ல ஆதாரம். புதுமைப்பித்தனில் தொனிக்கும் கிண்டலும் கேலியும் கலந்த அங்கதம் அ.செ.முவிடமும் தொனிக்கிறது.

அ.செ.மு முதல் தலைமுறைப்படைப்பாளர்களைப் போலல்லாமல் தன்னுடைய எழுத்துக்கு வசதியாக பத்திரிகைத் துறையில் வேலை செய்தார். இது அவர் எழுத்துத்துறையில் இயங்குவதற்கு இன்னும் வாய்ப்பாகவும் வசதியாகவும் இருந்தது. ஒரு காலகட்டத்தில் அவர் நிறைய எழுதுவதற்கு நன்றாக உதவியிருக்கிறது இந்தத் தேர்வு.

தான் வேலைசெய்த ஈழநாடு பத்திரிகையில் அ.செ.மு தொடர்கதைகளாகவும் சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதித்தள்ளினார்.


ஈழநாட்டில் புகையில் தெரிந்த முகம், யாத்ரீகன், ஜீவபூமி, ஜெயந்தி ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். இதில் ஜெயந்தி முழமையடையவில்லை. (ஆனால் அதை அவர் ஒரு குறுநாவல் என்ற அளவில் மாற்றியமைத்ததாகச் சொல்கிறார்). இதைவிட குறுநாவல்கள் வேறு. ஒரு நேர்காணலில் அவர் சொல்வதைப்போல ஈழநாடுவிலிருந்து விலகியபிறகும் பதினைந்து ஆண்டுகளாக ஈழநாடு பத்திரிகைக்கு தொடர்ந்து விசயதானங்களைக் கொடுத்திருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவை எழுதித்தள்ளியிருப்பார் என்று நம்மால் ஊகிக்க முடியும். ஆனால் அவை எதுவும் முழுமையாக யாராலும் தொகுக்கப்படவில்லை.

ஏன் மனிதமாடு என்ற ஒரு சிறுகதைத் தொகுதிக்கு மேல் அவருடைய கதைகளே தொகுக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் அ.செ.மு ஈழத்துச் சிறுகதைகளில் முக்கியமான படைப்பாளி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈழத்து இலக்கியத்திலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக படைப்பாளிகளிடத்திலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமை. இப்போதும் கூட அவருடைய பாதிப்பு பலரிடமுண்டு. அவருடைய சிறுகதைகள் இப்போதும் அதே கவர்ச்சியையும் பெறுமதியையும் கொண்டிருக்கின்றன.


3

அ.செ.மு வை நாம் இரண்டு நிலைகளில் நோக்கலாம். அப்படி நோக்குவது ஒரு வகையில் அவசியமும் கூட. ஒன்று அவர் ஒரு படைப்பாளி. அதிலும் உரை நடையில் அவர் செலுத்திய ஆளுமை. இந்த வகையில் அவருடைய இடம், அவருடைய அடையாளம், அவருடைய பயணத்திசை, அதன் தடங்கள் என்று இதைப் பார்க்க வேணும். மற்றது, அ.செ.மு ஒரு ஊடகக்காரர் என்ற வகையிலானது. ஆனால் அ.செ.மு ஊடகவியலாளராக தொழில் செய்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு படைப்பாளியாகவே இருந்திருக்கிறார். அவருடைய விருப்பமும் கவனமும் எழுத்துத்தான். அதற்காகவே அவர் ஊடகங்களைச் சார்ந்திருந்தார். அவை போதாதபோது வேறு இதழ்களையும் பத்திரிகையையும் வெளியிட்டார்.

இங்கே முதலில் அவருடைய எழுத்து ஈடுபாட்டைப் பார்க்கலாம். படிக்கிற காலத்திலேயே அ.செ.மு எழுத ஆரம்பித்து விட்டார். அவர் படித்தது, யாழ்ப்பாணத்தில் பேரோடு விளங்கிய தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியில். அப்போதே அவருக்கு இலக்கிய நண்பர்களாக அ.ந.கந்தசாமி, மஹாகவி, கதிரேசன் பிள்ளை ஆகியோர் இருந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் அ.செ.மு ஈழகேசரியின் இளைஞர் பக்கத்தில் எழுதினார். இது 1930 களின் இறுதிப்பகுதியில். பிறகு 1941 இல் அவர் ஈழகேசரியில் இணைந்தே விட்டார். ஆக அப்போதே எழுதுவதற்காக என்று அவர் அதற்குத் தோதான தொழிலைத் தேர்ந்திருக்கிறார். அதுதான் பின்னாளிலும் தொடர்ந்திருக்கிறது.

ஈழகேசரியிலும் அ.செ.மு நிறையக்கதைகளை எழுதியிருக்கிறார். ஈழகேசரி அவரையும் அவரைப்போல பல இளைஞர்களையும் அவர்கள் தங்களுக்கேற்றமாதிரி உருவாகிக் கொள்வதற்கு ஒரு தளமாக இருந்திருக்கிறது. அதற்கான முழுச்சுதந்திரத்தையும் அது கொடுத்திருக்கிறது. அரசியல் சாய்வுகள், அதிகாரங்கள் எதுவுமில்லாத இந்தத்தளத்தில் அப்போது அ.செ.மு வைப்போன்ற பலரும் தங்களை உருவாக்கிக் கொண்டார்கள். இதற்காக அது இளைஞர் இலக்கிய மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அவற்றில் அ.செ.மு வும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

ஈழசேகரியில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களிலேயே அ.செ.மு வரதர், அ.ந.கந்தசாமி ஆகியோருடன் இணைந்து மறுமலர்ச்சி என்ற சங்கத்தை உருவாக்கினார். இந்தச் சங்கம் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சி என்ற இதழை வெளியிட்டது. இது தமிழகத்தில் வந்து கொண்டிருந்த மணிக்கொடி, கிராம ஊழியன், கலைமகள் போன்ற இதழ்களின் தாக்கத்தினால் உருவானதாக ஊகிக்க முடிகிறது. அதுவே பின்னாளில் ஈழத்திலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டம் என்ற சிறப்பான ஒரு காலத்தைக் கொண்ட இலக்கியவளர்ச்சிக்கு உதவியது. தமிழகத்தில் மணிக்கொடி காலகட்டத்தைப்போல ஈழத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தை நோக்கலாம்.

அ.செ.மு மறுமலர்ச்சியின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தார். அந்த நாட்களில் மிகச்சுறுசுறுப்பாக அ.செ.மு இயங்கியிருக்கிறார். பெரும் வசதிகளைக் கொண்; குடும்பப்பின்னணி எதுவும் அ.செ.மு வுக்கில்லை. என்றபோதும் அவர் தன்னுயை இயங்கும் முறையினால் எப்போதும் இதழ்களையோ பத்திரிகைகளையோ வெளியிட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார். அவருடைய அணுகுமுறையும் இயங்கும் விதமும் அவரின் அமைதியான சுபாவமும் விரிவான நோக்கங்களும் சாய்வற்ற நிலைப்பாடும் பிறரை அவரின் மேல் ஈடுபாடு கொள்ள வைத்திருக்கின்றன. அதுவே அவருக்கு வெற்றியைத் தந்தது.

மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த நாட்களில் அவர் முழுதாக இலக்கிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவருடைய மற்றத் தோழர்களைப்போல குடும்பம் பிற விவகாரங்கள் என்று எதுவும் இல்லாதது அ.செ.முவுக்கு ஒரு வசதி. அவருக்கும் பிற சகோதரர்களோ சகோதரிகளோ இல்லை. அவர் தனிப்பிள்ளை. தாய் மட்டும்தான். ஆக பார்க்க வேண்டிய ஒரே பொறுப்பு அவருக்கு தாய் மட்டும்தான். எனவே தன்னுடைய புலன் முழுவதையும் அவர் எழுத்துக்கும் இதழ் வெளியீட்டுக்குமாகவே செலவிட்டார். அதனால் பின்னாளில் வந்த யாழ்ப்பாணத்தின் எழுத்தாளர்களுக்கெல்லாம் மறுமலர்ச்சி வாய்ப்பான பெருங்களத்தைத் திறந்து கொடுத்தது. மறுமலர்ச்சியில் அ.பஞ்சாட்சர சர்மா, சு.வே என்று பின்னாளில் வேறு ஆட்களும் இணைந்து கொண்டாலும் அ.செ.முவே இதில் மையசக்தியாக இருந்தார். அந்த நாட்களில் அ.செ.மு இலக்கியக்காரர்களிடம் பெரும் செல்வாக்கொடு இருந்திருக்கிறார்.

மறுமலர்ச்சியில் மூன்று தலைமுறைப்படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகால மறுமலர்ச்சி இதழின் வரலாற்றில் அதன் சாதனையாக ஏறக்குறைய நூறு வரையான சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

அ.செ.மு வுக்கு மறுமலர்ச்சியில் தொடர்ந்து இயங்க விருப்பம் இருந்தாலும் அவரால் அதில் தொடர்ந்து செயற்பட முடியவில்லை. அ.செ.முவை விரட்டிக்கொண்டேயிருந்த நோய் அவரை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு விரட்டியது. ஆனாலும் அங்கே போன அ.செ.மு சும்மா ஆஸ்பத்திரியில் படுத்திருக்வில்லை. அவர் திருகோணமலையில் எரிமலை என்ற பத்திரிகையைத் ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக தாழையடி சபாரத்தினம் உதவினார். ஈழநாடுவிலும் ஈழகேசரியிலும் மறுமலர்ச்சியிலும் அவருக்கு அறிமுகமாகியிருந்த படைப்பாளிகளை எரிமலையில் எழுதவைத்தார். ஆனால் எரிமலை ஆறு இதழ்களுடன் திருகோணமலையின் முதலாவது பத்திரிகை என்ற பெயருடன் நின்று விட்டது. அது நின்று போனதுக்கு பொருளாதாரப்பிரச்சினையே காரணம் என்று பின்னாளில் அ.செ.மு வருத்தத்தோடு சொன்னார்.


4

அ.செ.மு எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் இரண்டு பெரும் இலக்கியப்போக்குகள் செல்வாக்கிலிருந்தன. தமிழ்த் தேசிய அரசியல் அப்போது வெகுஜன மட்டத்தில் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாக இடதுசாரிகளின் அரசியல் இலக்கியத்திலும் செல்வாக்கைச் செலுத்தத் தொடடங்கியிருந்தது. ஆனால் இந்த இரண்டு அரசியல் குழாத்திலும் அ.செ.மு சேரவேயில்லை. அவர் இந்த ஈர்ப்பு விசைக்கு அப்பால் தன்னை வைத்துக் கொண்டார். அவருக்கு எந்த அரசியலிலும் ஈடுபாடிருக்கவில்லை. அவர், சுதந்திரனில் எழுதியபோதும் அந்த அரசியலை அவர் விலக்கி தன் அடையாளத்தையே அதில் வைத்திருந்தார். ஆனால் தான் ஒரு மிதவாதி என்றே சொல்கிறார். ஆனாலும் அந்த மிதவாதத்திலும் அவர் தீவிரம் கொண்டவரல்ல. அவர் அமைதியான விலகிய தனித்த புள்ளி.

அ.செ.மு வின் எந்தச் சிறுகதையும் நேரடியாக அரசியலைப் பேசியதில்லை. வாழ்வை, அதன் ஆதார சுருதியை, அதனுள்ளோடும் புரியாமலும் நீங்காமலும் தொடரும் புதிர்களை நோக்கியே அவருடைய கரிசனை இருந்தது. கதைகளின் உட்தொனியிலேயே அவர் கவனமெடுத்தார். பரப்புரை எழுத்துக்கு எதிரான இயக்கம் அவருடையது. அதில் அவருக்கு நம்பிக்கையுமில்லை.

இதற்கு நல்ல சான்று சுதந்திரனில் வேலை செய்தபோதும் அவர் அந்த அரசியலில் ஆர்வப்படவில்லை என்பது. சுதந்திரன் தமிழரசுக்கட்சிப்பத்திரிகை. அப்போது தமிழ்த் தேசிய எழுச்சி பிரமாண்டமாக இருந்தது. ஆனால் அந்த அரசியலுக்குள் அவர் இறங்கவுமில்லை. ஏறவுமில்லை. அதைப்போல அவர் முற்போக்கு அணிக்குள்ளும் போகவுமில்லை. வரவுமில்லை. மட்டுமல்ல, எந்த அணியை ஆதரிக்கவுமில்லை, நிராகரிக்கவும் இல்லை. அவர் தன்பாட்டில் தன் வழியில் பயணித்தார். அவருடைய சுபாவமே இதுதான். தன் பாட்டில் இருப்பது. இதன்படி ஒரு துலக்கமான தனிக் கோடு அ.செ.மு.

அ.செ.மு வுக்கு தல்ஸ்தோயைப்பிடிக்கும். காஃகாவையும் பிடிக்கும். அவருடைய ஈடுபாடுகள் இப்படியே இருந்தன. சார்;புகளை விட்டு விலகிய பாதையில் அவருடைய பயணம் நிகழ்ந்ததால் அவர் எல்லாவற்றையும் படித்தார். எல்லாவற்றையும் விரும்பினார். அவருடைய தேர்வுகள் பரந்ததாகவும் வரையறைகளற்றதாகவும் இருந்தது.


5

அடுத்தது அ.செ மு வின் ஊடகப் பங்களிப்பு. புதுமைப்பித்தன் சினிமாவில் இயங்கியிருந்த போதும் அவருடைய அடையாளம் சிறுகதையில் இருப்பதைப்போல அ.செ.மு வும் பத்திரிகைகளில் வேலை செய்திருந்தாலும் அவர் ஒரு சிறுகதைப்படைப்பாளியாகவே தெரிகிறார். ஆனால் அவர் ஊடகங்களில் இயங்கிய காலகட்டம் உலக அரசியலிலும் இலங்கை அரசியலிலும் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரும் அதன் முடிவில் கொலனி ஆதிக்கமும் மறைந்த காலகட்டம் அது. இந்த நாட்களில் இலங்கை நிலவரம் மிகப் பெரிய மாறுதல்களை நோக்கியிருந்தது. அத்துடன் தமிழ் - சிஙகள முரண்பாடுகள் வரலாற்று மீட்புடன் மீண்டும் முளைவிடத் தொடங்கியது. இதற்குள் அவர் அமைதிவழித் தீர்வை வலியுறுத்திச் செயற்பட்டார். வன்முறைக்கெதிரான நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். ஆனால் அவருடைய அந்த எண்ணத்துக்கு எந்த மதிப்பும் இலங்கை நிலவரத்தில் கிடைக்கவில்லை. என்றபோதும் அ.செ.மு இன்று உலகம் வலியுறுத்துகின்ற அமைதியை அன்றே முன்னிறுத்தியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் வெளியான பிராந்தியப்பத்திரிகையான ஈழநாடுவை வெற்றிகரமமாக வளர்த்தெடுக்க அ.செ.மு உழைத்ததை பலரும் நினைவு கூர்கிறார்கள். அதைப்போல திருகோணமலையில் தணிகரமாக ஒரு தமிழ்ப்பத்திரிகையை வெளியிட்டுமிருக்கிறார். மறுமலர்ச்சியின் ஆசிரியராக அதன் பதினெட்டு இதழ்கள் வரையிலும் இருந்திருக்கிறார். இதைத்தவிர முன்னர் குறிப்பிட்டுள்ளதைப்போல ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் வேலை செய்திருக்கிறார். இதில் எல்லாம் அ.செ.மு வின் பங்களிப்பு இலக்கிய வகையானதானதே. அரசியலுக்கு அவர் அளித்த நம்பிக்கையை விடவும் இலக்கியத்துக்கு வழங்கிய முன்னுரிமையும் அந்தப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலுமே அதிக அக்கறையை அவர் கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் மறுமலர்ச்சி தவிர ஏனைய பத்திரிகைகள் வெகுஜன ஏடுகள். அதனால்தான் அவர் ஊடகங்களிலும் படைப்பாளியாகவே பார்க்கப்படுகிறார். படைப்பாளிகளை ஊடகங்களுடன் இணைக்கும் ஒரு நுட்பவியலாளராகவும் அவர் கருதப்படுகிறார். அ.செ.மு வுக்குப்பிறகு இதுவரையிலும் ஈழத்தில் அவரைப் போன்றதொரு ஆளுமை எந்தப்பத்திரிகைகளிலும் வரவில்லை.


1981 இல் இலங்கை அரசாங்கத்தின் வன்முறையில் யாழ்ப்பணம் எரிக்கப்பட்டது. அப்போதுதான் யாழ்ப்பாண நூலகம், ஈழநாடு பத்திரிகை, நகரிலிருந்த பூபாலசிங்கம் புத்தகக்கடை எல்லாம் எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் எல்லோரையும் போல அ.செ.முவையும் ஆழமாகப்பாதித்தது. இதற்குப்பிறகு அவர் எழுதவேயில்லை. அ.செ.முவையும் அவருடைய எழுத்தையும் அந்த வன்முறைத்தீ எரித்து விட்டது.

6

நான் அ.செ.மு வைச் சந்தித்தது அவர் எழுதுவதைக்கைவிட்டிருந்த நாட்களில்தான். ஆனால் அவரோடு எழுத்தைப்பற்றி, அவருடைய காலத்தைப்பற்றி பேசினால் முதலில் எந்த ஆர்வமுமில்லாதவராக இருப்பார். தொடர்ந்து மெல்லப்பேசிக் கொண்டிருந்தால் அவர் பூனை மெதுவாக நடந்து வருதைப்போல மெல்ல உரையாடலில் நுளையத் தொடங்குவார். ஆனால் அதிக சத்தமோ, விவாதமோ கிடையாது. ஆர்வமும் பெரிதாக இருக்காது. மெதுவாக, தன்பாட்டில் எதிலும் பற்றற்ற ஒரு விவரிப்பாளனைப்போல தணிந்த குரலில் பேசுவார். இதுவும் எப்போதுமென்று சொல்ல முடியாது. பின்னர் இதுவும் நின்று போயிற்று.

அந்த நாட்களில் அவர் நோயாலும் ஆதரவற்ற நிலையாலும் பொருளாதாரக் குறையாலும் பெரிதும் சிரமப்பட்டார். வீடு இல்லை. யாரோ ஒரு தெரிந்தவரின் வளவில் ஒரு சிறு குடிசையைப் போட்டுக் கொண்டு அதில் குடியிருந்தார். ஆஸ்மாவும் நீரிழிவும் அவரைப் படுத்திக் கொண்டிருந்தன. எங்கேயும் போவதில்லை. யாரோடும் தொடர்பில்லை. எல்லாவற்றையும் அவர் துண்டித்து விட்டார். எதுவும் அவருக்குத் தேவைப்படவில்லை. அநேகமாக அவர் பின்னாளில் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமலிருந்தார். அவருக்கு அவற்றில் ஆர்வமேயில்லை. அவையெல்லாம் அவரைத் தொந்தரவு படுத்துவதாகவே அவர் உணர்ந்திருக்கக்கூடும். இலக்கிய ஆர்வத்துக்கு அவருடைய வாழ்க்கை நிலவரம் இடமளிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இதெல்லாம் பின்னாளில் அவருக்குத் தேவையில்லாத சங்கதிகள் ஆகிவிட்டன. அவர் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை வைத்துக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.

அ.செ.முவை அவருடைய முதுமைக்காலத்தில் கோகிலா மகேந்திரன், நா.சுப்பிரமணியன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை போன்றோர் இயங்கிய தெல்லிப்பழை கலை, இலக்கியக் களம் ஆதரித்தது. அவருக்கு நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். ஆனால் எதுவும் அவரை பழைய நிலைக்கு கொண்டு வரவில்லை. எவ்வளவு காசைக் கையில் கொடுத்தாலும் அவர் இனிப்புப் பண்டங்களிலேயே அதையெல்லாம் கரைத்துவிடுவார். அவர் ஒரு குழந்தையைப்போல தன்னிலை இழந்து இயங்கினார்.

இதை துக்கத்தோடு சொல்வார் ஏ.ரி.பி.

அ.செ.மு பின்னாளில் குழந்தையாகி விட்டார். நீரிழி வியாதி அவரைப் பாடாய்ப் படுத்தியது என்று சொன்னேனே. அது இனிப்பைக் கொடுத்து அவரை அப்படியே உறிஞ்சி விட்டது. அவர் மெலிந்து துரும்பாகியிருந்தார். இருமி இருமி களைத்த அந்த மெல்லிய உடலை தொடவேண்டும். அதற்கு ஆதரவாயிருக்க வேண்டும் என்று என் மனம் எத்தனையோ தடவை உள்ளே கூவியிருக்கிறது. ஆனால் அவர் அதற்கெல்லாம் நெகிழ்ந்து கொடுக்க வில்லை. தனியாகவே இருந்தார். அவருடைய மனதுக்கு அது தேவையாக இருந்திருக்கலாம். அவரை நண்பர்களும் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளும் போய்ப்பார்த்து பேசி வந்தார்கள். ஆனால் அந்தச் சந்திப்புகள் எல்லாமே மரியாதையின் நிமித்தமான – அனுதாபத்தின் பாற்பட்;ட சந்திப்புகளாகவே இருந்தன. அவருக்குள் அடங்கிப் போயிருந்த ஒரு பேராற்றை, உறைந்துபோன ஒரு படைப்பாளியை பின்னாளில் எவரும் பார்க்கவேயில்லை.

1991 இல் அவருக்கு உதவி நிதியளிப்பதற்காக வெளிச்சம் இதழின் சார்பில் நான் அவரிடம் போயிருந்தேன். அ.செ.மு வைப்போல அல்லை ஆறுமுகமும் தனிமையிலும் முதுமையிலும் வறுமையிலும் வதங்கிக் கொண்டிருந்தார்;. இருவருக்கும் விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் உதவ முன்வந்தது. அந்த நிகழ்வுக்காக அழைக்கப் போயிருந்தேன். அ.செ.மு வரத்தயங்கினார். அவர் இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் விட்டு பல வருசங்களாகிவிட்டது. புதுமைப்பித்தன் தன்னுடைய கஸ்ரங்களைப் பகிர்ந்து கொள்ள அவருக்கு கமலா இருந்தார். பாரதிக்கு செல்லம்மா இருந்தார். அ.செ.மு வுக்கு யாருமேயில்லை.
எனக்கு அவருடைய நிலைமை புரிந்தது. அவர் உடுத்து வருவதற்கு உடைகளே இருக்கவில்லை.
ஒரு வாங்கு, சில தினப்பத்திரிகைகள், பழைய துணிகள், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமான பாத்திரங்கள் என்று இருந்த அந்தச் சிறு குடிசையின் முற்றத்தில் அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் நிகழ்வில் கலந்து கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். உடுத்துக் கொண்டு வருவதற்கு வேட்டியையும் சேர்ட்டையும் கொண்டு வருவதாக சொன்னேன். அதற்குப்பிறகே அவர் முழுதாகச் சம்மதித்தார்.

இந்த நிலைமையை நான் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரையிடம் சொன்னேன். அவர் ஏற்பாடுகளைச் செய்தார்.

அ.செ.மு கலந்து கொண்ட இறுதி இலக்கிய நிகழ்வு வெளிச்சம் முதலாவது இதழ் வெளியீடாகத்தானிருக்கும் என நினைக்கிறேன். அதற்குப்பிறகு வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

அ.செ.மு கடைசி நாட்களில் திருகோணமலையில் முதியோர் விடுதியொன்றில் இருந்தார். அங்கேயே அவர் மரணத்தையும் சந்தித்தார். அவர் இரண்டு தடவைகள் இறந்து விட்டதாக பத்திரிகைகள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டன. ஆனால் அவர்; ஒரு தடவைதான் இறந்தார்.

00

அ.செ.மு.வின் புனைபெயர்கள் - யாழ்பாடி, வள்ளிகந்தன், யாழ்தேவி, பீஷ்மன், முருகு,நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிற்புறவம், இளவேனில், புராடன், சோபனா, மேகலை, தனுசு, கத்தரிக்குறளி.

00

அ.செ.மு 1950 இல் தன்னுடைய “புகையில் தெரிந்த முகம்“ என்ற கதைநூலுக்கு எழுதிய முன்னுரையை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த நூல் 136, செட்டியார் தெரு, கொழும்பில் இயங்கிய நவலட்சுமி புத்தகசாலையினால் - நவலட்சுமி பிரசுரம் 01 என வெளியிடப்பட்டது. அப்பொழுது இதன் விலை 50 சதம் மட்டுமே.

இந்தக் கதையை நீங்கள் noolaham.net இல் படிக்கலாம்.

கதையின் கதை

சில மாசங்களின் முன் சிறுகதை ஒன்று எழுதி ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். சில தினங்களின் பின் ஒருநாள் அது திரும்பி வந்தது. திரும்பி வந்தபோது ஒரு கடிதத்தையும் அது கொண்டுவந்தது. கடிதம் பின்வருமாறு போயிற்று.

அன்ப,

உங்கள் கதையைப் பார்த்தேன். தயவுசெய்து அதனை ஒரு தொடர்கதையாகவே நீட்டி எழுத வேண்டுகிறேன். ஒரு நல்ல தொடர் கதையைப் பொறுத்த வரையில் நமது பத்திரிகைக்கு இப்பொழுது மழைக்காலம்” (அதாவது பஞ்சகாலம்).

இந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் தங்கள் தங்கள் பத்திரிகைகளைப் பற்றித்தான் முதல் கவலை. நாலைந்து இதழ்களுக்கு நல்ல சரக்காக ஏதாவது கிடைக்குமா வென்று எங்கேயும் எந்த சந்தர்ப்பத்திலும் து}ண்டில் போட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்களத முக்கிய பிரச்சினை அதுதான். இல்லாவிட்டால் ஒரு சிறு கதையை பெருங்கதையாக நீட்டும்படி கேட்க என்ன துணிச்சல்! சிறுகதை என்றால் என்ன இழுப்பு மிட்டாயா அல்ல ரப்பரா?

அந்த ஆசிரியருக்கும் எனக்கும் ஏற்கனவே அறிமுகமிருந்தபடியால் போனால் போகிறது என்று விட்டுவிட்டேன். அவர் கேட்டுக்கொண்ட படியே சிறு கதையைப் பெருங் கதையாக நீட்ட (நீட்டி முழக்க!) தொடங்கினேன்.

அந்த உருக்குப்பட்டடை வேலையின் முடிவு தான் - 50 பக்கங்கள் வரை கொண்ட இந்தச் சிறு புத்தகம்.

இனி, அது எப்படி புத்தக வடிவெடுத்தது என்பதையும் சொல்லிவிடுகிறேன். காசு கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் வாசக நேயர்களுக்கு இவைகளை யெல்லாம் தெரிந்துகொள்ள உரிமை இல்லையென்றால் வேறு யாருக்கு அது இருக்க முடியும்?

தொடர்கதை பத்திரிகையில் வெளியாகிக் கொண்டிருந்தபோது வாரம் வாரம் அதுபற்றி வரும் கடிதங்களை ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்தார். அதாவது டெலிபோன் எக்ஸ்சேஞ் நிலையத்திலுள்ள டெலிபோன் ஒப்பரேட்டர் வேலையை ஆசிரியர் வாசகர்களுக்கும் எனக்கும் மத்தியில் நின்று சில மாசங்களாகச் செய்து கொண்டிருந்தார்.

ஆசிரியர் அனுப்பிய வாசகர்களின் கடிதங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக வைத்துப் பார்த்தபோது அது ஒரு நெல்லிக்காய் மூட்டையைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் கோணிக்கொண்டு போயிற்று. ஒருவருக்கு வண்டில் சவாரி வர்ணனை பிடித்திருக்கும்@ இன்னொருவருக்கு திருவிழாபற்றிய வர்ணனைதான் பிடித்துப் போயிருக்கும். வேறொருவருக்கு கறிக்கு உப்புக் குறைவானதுபோல கதாநாயகர்களின் காதல் சம்பாஷணை போதாமலிருக்கும். மற்றொருவருக்கு கதையில் வரும் புகையிலைச் சுருட்டுப் பிடிக்கும் (அதாவது அது அவரைப் பிடித்துவிட்டது என்பது கருத்து!)

இப்படியே ரசிக மகாகோடிகளின் பல வேறுபட்ட அபிப்பிராயங்களின் நடுவே குறிப்பிடத்தக்க ஒரு கடிதம் இருந்தது. குறிப்பிடத் தக்கது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் வருஷக் கணக்காக கடிதங்கள், யாத்திரை செய்துகொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும் இந்தக்காலத்தில் கடல்கடந்திருக்கும் ஒருவர் எனது கதையைப்பற்றி அபிப்பிராயம் தெரிவித்து எழுதிய கடிதம் மட்டும் காலாகாலத்தில் NÑமமாக என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டதல்லவா, அதனால்தான்!

குறித்த கடிதம் எட்டயபுரம் பாரதி மண்டபத்திலிருந்து வந்தது. திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரின் ‘தோழமைத் தொண்ட’ரும் தற்சமயம் பாரதி மண்டபத்து நு}ல் நிலைய கண் காணிப்பாளராயிருப்பவருமான திரு.ல.நாராயணனுக்கு எனது கதை பிரமாதமாகப் பிடித்துப் போய்விட்டதாம்! என்ன ஆச்சர்யம்!

‘ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் - பிரதானமாக யாழ்ப்பாணத்து கிராம மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும்’ இந்தக் கதையை அவர் வெகு ‘அருமையாக’ ரசித்துப் படித்தாராம். தென்னிந்திய தமிழர்கள்இந்த வெளியீட்டை நிச்சயம் வரவேற்பார்கள் என்று தென்னாட்டுத் தமிழர்களின் பிரதிநிதியாகவே திரு. நாராயணன் நின்று பேசினார் - அல்ல, எழுதினார்.

சுருட்டுப் புகையின் மயக்கத்தில் கற்பனை பிறக்கும் எனக்கு பாரதி மண்டபத்தில் பிறந்த இக் கடிதத்தில் கற்பனை தோன்றுவது பெரியகாரியமா?

மகாகவி பாரதியார் நேரில் வந்து “சபாஷ் பாண்டியா! உன் புத்தகத்தை இப்படிக் கொடடா” என்று தட்டிக் கொடுத்ததுபோல எனக்கு ஒரு பிரமை மனத்தில் தட்டிற்று!

இந்தப் புத்தகத்தை என் அன்பார்ந்த வாசகர்களின் தலையில் சுமத்தவேண்டி ஏற்பட்டதற்கு இதோடு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

“உமது புத்தகங்களை அன்பளிப்பாகவே அனுப்பிச் செலவாக்கவேண்டிய நிலைவரம் உமக்கு ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். அதைப்பற்றி நீர் கொஞ்சமும் யோசிக்காமல் புத்தகத்தை வெளியிடும்” என்று தைரியம் கூறிய ஒரு நண்பர், இதை மனமுவந்து அச்சிட்டுக் கொடுத்த ‘சுதந்திரன்’ அதிபரும் அச்சுக்கூட நிர்வாகஸ்தர்களும், இதை தங்கள் பொறுப்பாகவே ஏற்று வெளியிட முன்வந்த நவலட்சுமி புத்தகசாலையார், சித்திரம் எழுதி உதவிய அன்பர் ‘கதிர்’, மகாகவி சுப்பிரமணி பாரதியார் - ஆகிய இத்தனை பேர்களும் தான் இந்தப் புத்தகம் வெளியாவதற்கு, காரணமாக - காரணஸ்தர்களாக உள்ளனர்.

பத்தகத்தைப் படித்து முடித்த வாசகர்களுக்கு, யாரையாவது பாராட்ட வேண்டுமென்று தோன்றினால் உங்கள் பாராட்டுதல்களை மேலே கூறியவர்களுக்கே செலுத்துங்கள்.

அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கிறீர்களா? சரி அதையும் சொல்லிவிடுகிறேன்.

புத்தகத்தின் அச்சு வேலை முடிவடைந்த போது பிரசுராலயத்தார்கள் அதில் ஒரு பிரதியை கொண்டுவந்து என் முன்னால் போட்டுவிட்டு “இதென்ன இப்படி மெலிந்து போயிருக்கிறதே!” என்றார்கள். அதைக் கொழுக்க வைக்க பயில்வான் லேகியம் வாங்கலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது நோயைத் தெரிவித்த அவர்களே அதற்கு மருந்தும் சொன்னார்கள். ஒரு தடைவ பேனா இன்ஜெக்ஷன் கொடுத்தால் சரியாய்ப் போய்விடும் என்றார்கள். அவர்களது யோசனைதான் இப்படி முன்னுரை என்ற பெயரில் ஐந்து பக்கங்கள் கொண்ட வெட்டிப் பேச்சாக முடிந்தது.

முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி இருக்கிறதா?

இன்னும் சொல்லப்போனால், நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசைகொள்ளப் போகிறார்கள்?

வணக்கம்

அ.செ.மு.
கொழும்பு
1-08-50


00
1998