Thursday, December 22, 2011

சு.வியைக் கண்டடைதல்




சு.வியின் வாழ்க்கை, அவருடைய தோழமை, அவருடைய கவிதைகள், அவை எழுந்த சூழல், அவற்றின் கருப்பொருள்


00

சு.வியைப் பற்றிய யாருடைய புகழ்ச்சியும் அவரை மேலுயர்த்தி விடாது. யாருடைய இகழ்ச்சியும் அவரைச் சிறுமைப்படுத்தாது.

அவர் இயற்கையின் ஓரம்சம். இயற்கையை நேசித்து, இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து, இயற்கையோடிசைந்து வாழ முற்பட்ட ஒருவர்.

ஆகவே, சுவியைப் பற்றிய எந்தப் புகழுரைகளும் அவரை விட்டுத் தனித்தே நிற்கும்.
அவரைப் பற்றிய எந்த அவதூறுகளும் அவற்றின் பொய்முகத்தைக் காட்டியே விடும்.

ஆகவே, சு.வியை அவராக விளங்க வேண்டும். அவருடைய இயல்பினூடாகவே விளங்க வேண்டும்.

அத்தகைய ஒரு விளங்குதலுக்கே இங்கே நான் முயற்சிக்கிறேன். அவரைச் சொல்லுதல் என்பதன் ஊடாக, அவனுடைய நினைவுகளை மீட்டிக் கொள்வதன் ஊடாக நாம் நம்மைப் பார்த்துக்கொள்வது.

அவரினூடாக நாம் செல்லவேண்டிய திசைகளையும் இடங்களையும் செல்ல வேண்டிய முறைகளையும் கண்டு கொள்ளலாம்.

ஆகவேதான் சு.வியைக் கண்டடைதல் என்று யோசித்தேன். அவரைக் கண்டடைதலின் மூலமாக நம்மைக் கண்டடைவது. அவரின் கண்டடைதலுக்கூடாக, நாம் கண்டடைந்தவற்றையும் கண்டடைய வேண்டியவற்றையும் பார்க்கலாம் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவது.

இந்த அடிப்படையில் இங்கே, எங்களிடையே ஊடாடிப் பொலிந்த சு.வியைப் பற்றி, அவருடைய நினைவுகளினூடாக அவரை விளங்க முற்படுகிறேன்.

00

சு.வி அன்பாளர். அன்புமயமானவர். யாழ்ப்பாணம் என்ற பாலையில், அவர் ஒரு அன்பு விருட்சம். தன்காரியச் சித்தர்களும் சுழியன்தனமும் நிறைந்த அந்தப் பாலை நிலத்திலே அவர் ஒரு அன்பு ஊற்று.

அன்பையே தன்னுடைய அடி ஆதாரத் தளமாகக் கொண்டியங்கிய ஒரு கவி.

அன்பிலே மையங்கொண்டு, அன்பையே ஆதாரமாக்கி, அன்பே தானாகி, அன்பையே பிறருக்கும் ஆக்கி, எங்கும், எப்போதும், எல்லாவற்றிலும் அன்பாகி – அன்பு மயமாகி நின்றியங்கியவர் சு.வி.

என்றபடியால், சு.வியைப் பற்றி யார் பேசினாலும் அது அவரைப்பற்றிய முழுமையைத் தந்து விடாது.

அவர் இயற்கையின் ஓரம்சம் என்றபடியால், அவரை உணர்தலே அவரைக் கண்டடைவதற்கான வழியாகும்.

அதுவே சாத்தியமானது.

சு.வியைப் பற்றிய ஒவ்வொருவடைய உணர்தல்களும் அனுபவிப்புகளும் வேறுவேறானவை.

ஆனால், அவரைப் பற்றிய எல்லோருடைய இறுதி அனுபவமும் உணர்வும் நிச்சயமாக ஒத்த ஒரு புள்ளியிற் சென்றே சேரும்.

இங்கே, இந்த அமர்விலே கூடியிருப்போரில் சு.வியை அறிந்தவர்களும் அவருடன் பழகியவர்களும் இதை நன்றாகவே உணர்வர்.

சு.வி ஒரு இனியர். அவருடன் பழகுதல் இனியது. அவருடன் பேசுதல் இனிது. அவரின் குரல் இனிது. அவருடைய பேச்சினிது. அவருடைய மொழி இனிது. அவருடைய மொழிதல் முறையும் இனிதே. அவரின் பாடல்கள் இனியன. அவரின் சிந்தனை இனியது. அவருடைய வாழ்வினிது.

ஆனால், அவர் இனிதாக வாழ்ந்ததாகச் சொல்ல முடியாது.

மிகச் சாதாரணமாக, தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காத நிலையில் தன்னுடைய இறுதிக் காலம்வரையிலும் வாழ்ந்தவர்.

அவருடைய சேகரங்கள் என்பது அன்புமட்டுந்தான். அன்பையே அவர் சேகரித்தார். அந்த அன்பின் நிமித்தமான மனிதர்களை அவர் சேகரித்தார்.

இந்த அன்பின் காரணமாக அவர் எல்லாத் தரப்பினரோடும் இணங்கி நடந்தார். அவருடைய இந்த அன்பே எல்லோரையும் அவரின் பால் இணங்க வைத்தன@ இணைய வைத்தன.

அதற்கப்பால், ஒரு சைக்கிளுடன் தன் வாழ்வை இறுதிவரை வாழ்ந்து முடித்த ஒருவர் அவர்.
சொந்த வீடின்றி, இரவல் வீட்டிலே வாழ்ந்த ஒருவர்.

சொந்தமாக இருந்த வீட்டையும் போருக்குப் பரிசளித்து விட்டுப் பெயர்ந்து, அகதியாகவும் அலைச்சலாகவும் வாழ்ந்து முடித்த ஒருவர்.

எழுதிய எழுத்துக்களை நெருப்புக்கும் நீருக்கும் பரிசளித்த ஒருவர்.

எண்பதுகளிலே அவருடைய வீட்டை இந்திய அமைதிப்படை எரித்தழித்தது.

இரண்டாயிரத்திலே அவருடைய வீட்டைச் சுனாமி தாக்கியது.

கழுத்துக்கு மேலே வெள்ளம் வந்ததால், சுவருக்கு மேலே நின்று, நீர்த்தாங்கியின் மேலே ஏறிநின்று, தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டதைத் தவிர, வேறு எதையும் அவரால் அப்போது செய்ய முடியாமல் போயிற்று.

ஆகவே, நீருக்குப் பரிசளித்தார், பின்னாளில் எழுதியதையெல்லாம்.

அவருடைய பிள்ளைகள் வளர்ந்த காலத்தில், ஆசையாய், அருமையாய், வாங்கிச் சேர்த்த கணினியைக் கூட அந்த நாட்களில் அவர் இழந்தார்.

அந்தக் கணினியை மையமாக வைத்து அவர் ஏராளம் கற்பனைகள் வரைந்திருந்தார்.

தன்னுடைய கவிதைகளைச் சேர்க்கவும் தொகுக்கவும் தன்னுடைய எண்ணங்களைப் புதிதாய்ப் பதிந்து உலகுக்குப் பரப்பவும் அவர் எண்ணியிருந்தார்.

ஆனால், அந்த எண்ணத்தை ஆழிப்பேரலை அடித்துப்போயிற்று.

என்றபோதும் அவர் கலங்கியவரல்ல. எதற்கும் சோர்ந்தவரல்ல. தன்பணியைக் கைவிட்டுப் பின்னகர்ந்தவரல்லச் சு.வி.

தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்திருந்தபோது, தன்னுடைய பிறந்த ஊரை விட்டுப் பிரிந்து, பெயர்ந்த போது, தன்னுடைய வீட்டை இழந்தபோது... தான் எழுதியும் சேகரித்தும் வைத்ததெல்லாம் எரிந்தழிந்தபோது, தன்னுடைய சூழலே சிதைந்த போது...
அந்தச் சோகங்களைத் தாங்கியவாறே எழுந்தவர் சு.வி.

துயரங்கiயும் காயங்களையும் சுமந்து மீண்டவர்கள் நாம் என்ற மாதிரிச் சு.வியும் அவற்றிலிருந்து மீண்டெழுந்தார்.

ஆனால், அவர் புலம்பவில்லை.

காலத்துயர் என்றும் காற்றுவெளிக் கிராமம் என்றும் தன்துயரை எழுதியபோதும் அவர் ஓலமிட்டதில்லை.

அவற்றிற்குள், அந்தர வாழ்வின் நிலையை, அந்தரிக்கும் கிராமங்களின் தவிப்பைப் பதிந்தாரே அன்றித் தன்னுடைய புலம்பலையோ ஓலத்தையோ அவர் பறைசாற்றவில்லை.

அந்திரிக்கும் நிலைக்கு ஆக்கப்பட்ட கொடுமையைச் சொன்னாரேயன்றி, தன்துயரைப் புலம்பியவரல்ல.

இதுதான் சு.வி யின் இயல்பு. இதுதான் சு.வியின் அடையாளம்.

வெள்ளம், புயல், வரட்சி என்று எந்த நிலைமாற்றம் வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கி, எதிர்த்துப் பூமி தன்னை நிலைப்படுத்திக் கொள்வதைப்போல, சு.வி எல்லாவற்றினுள்ளும் இருந்து மீண்டெழுவார்.

அதுவே அவருடைய தனிச்சிறப்பு.

இதற்குக் காரணம், சு.வி ஒரு போராளியாக இருந்தமையே. (ஆயுதந்தாங்கிய விடுதலை அமைப்புகளின் போராளியல்ல). அவர் ஒரு விடுதலைப்போராளி. இதயத்தில் உண்மைப்பேரொளி விளங்கிய போராளி. எல்லா மனிதரிடத்திலும் அன்பைப் பெய்து, அகத்தை ஒளியூட்டி, தன்னையும் சமூகத்தையும் அந்த அன்பொளியின்பால் ஒருங்கிணைத்து, உறுதியாக்கிப் போராட முனைந்த போராளி.

என்றபடியாற்தான் ‘விடுதலைக்கான வழிகளும் விடுதலை பயப்பனவாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

வன்னிக்கு ஒரு தடவை சு.வி வந்திருந்தார்.

அப்போது வெளியே இருந்து வன்னிக்குள் வருவோரைப் பற்றிய தகவல்களை அறிவதற்காக ஒவ்வொருவரையும் விசாரிப்பார்கள் புலிகள். எனவே, வன்னிக்கு வந்த சு.வியையும் அவர்கள் அப்படி அறிவதற்காக – அவர் யார் என்று தெரியாமலே வந்து கதைத்தார்கள்.

ஆனால், அவர் அவர்களுடன் மனந்திறந்து எல்லாவற்றையும் பேசினார். எதையும் அவர் மறைக்கவில்லை. எதற்கும் அவர் அஞ்சவும் இல்லை. தன்னுடைய மனதிலே என்ன தோன்றியதோ, அவர்களுக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று அவர் எண்ணினாரோ அதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொன்னார்.

போராடுவதற்கு பலம் வேணும். அந்தப் பலம் உறுதியாக வேணும்.

ஆரோக்கியமான ஒரு சமூகத்தினாலேயே போராட முடியும். ஆரோக்கியமாக இருந்தாலே எதிர்ப்புகளை முறியடிக்க முடியும். ஆரோக்கியமாக இருந்தாலே பின்னடைவுகளில் இருந்து மீண்டெழ முடியும்.

ஆகவே, ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது.

இந்த ஆரோக்கியம், தனியே உடல் ஆரோக்கியத்தை மட்டும் கொண்டதல்ல.

ஆதற்கும் அப்பால், இது மன ஆரோக்கியத்தை, சிந்தனை ஆரோக்கியத்தை, சமூக ஆரோக்கியத்தை எனப் பல தளங்களில் விரிவு கொண்ட ஆரோக்கியமாகும்.

தன்னுடைய நெஞ்சுக்கு நேரே விரியக்கூடிய சிந்தனையையும் மனப்பாங்கையும் செயல் வெளியையும் கொண்டிருக்கும் ஒரு சமூகமே போராட முடியும். ஆகவே, மன எல்லைகளை நாம் விரிவு படுத்த வேண்டும் என்றார்.

எல்லையற்ற விரிவைக் கொண்டிருக்கும்போதே ஒளியும் வெளியும் காற்றும் மூச்சும் இயல்பாக வரும்.

அந்த வெளியிலேயே சுதந்திரப் பறவைகள் பறக்க முடியும். அந்த வெளியிலேயே பல வர்ணப் பூக்களும் மலர முடியும் என்றார்.

அப்போது வன்னியில் பஞ்சமூம் பட்டினியும் போரின் நெருக்கடிகளும் தலைதூக்கியிருந்தன.
போர்க்கால நெருக்குவாரங்களினால் சனங்கள் பெரும் சிரமங்களைப் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் சு.வி அவதானித்திருந்தார்.

எனவே, அவர் எல்லாவற்றுக்கும் பொதுவாகத் தன்னுடைய அபிப்பிராயங்களை அப்படி வெளிப்படுத்தினார்.

அவர்கள் எல்லாவற்றையும் விளங்கட்டும். எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கட்டும் என்று அவர் விரும்பினார்.

யாருடைய முகச் சுழிப்புக்காகவும் ஆளாக வேண்டி வரும் என்று தன்னுடைய அபிப்பிராயங்களுக்குப் புதைகுழி தோண்டும் இயல்புள்ளவர் அல்ல சு.வி.

அதேவேளை தன்னுடைய அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் மற்றவர்களின் மீது அதிகாரமாக ஏற்றிவிடுபவரும் அல்ல அவர்.

ஆனால், அவருடைய மொழியும் மொழியும் முறையும் அவருடைய கருத்துகளை மற்றவர்களிடையே மெல்லப் புகுத்தி விடும்.

ஆகவே, அன்று அந்த விசாரணையும் அறிதலும் ஒரு பெரிய உரையாடலாகவே மாறியது.

அவருடன் பேச வந்தவர்கள், சு.வியின் கதையாடலைக் கேட்டதிர்ந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

அவர் சொன்னார், பண்பட்ட தேசியத்தை நாம் உருவாக்கும்போதே அந்தத் தேசியத்துக்கு மதிப்பும் பெறுமதியும் உருவாகும். ஆகவே, அதை நோக்கி நாம் சிந்திக்க வேண்டும் என்று.

பிறகு, அவரிடம் அவர்கள் விடைபெறும்பொழுது, அவருக்கு அளித்த மரியாதையைக் கவனித்தேன்.

பின்னர் அவரைத் தேடி மேற்பொறுப்பில் இருந்தவர்கள் வந்து கதைத்து விட்டுச் சென்றனர்.
இதுதான் சு.வி.

சு.வியுடனான உரையாடல்கள் முக்கியமானவை. அவர் உரையாடும் முறையும் முக்கியமானது. ஆற்றொழுக்காக அவருடைய பேச்சிருக்கும். அதற்கேற்றவாறு அவருடைய மொழியும் இருக்கும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு இடமளித்து உரையாடுவார். மற்றவர்களின் கருத்துகளை எதிர்கொள்வதிலும்கூட மிகப் பவ்வியமான முறைமையைக் கடைப்பிடிப்பார்.

இதனால், அவருக்குப் பலரும் நண்பர்களாக இருந்தனர். பல வயதினரும் நட்போடிருந்தனர்.

இந்த நினைவுகளை இன்னும் பலரும் கூர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நட்பு எல்லையற்றது. ஆழமானது. நெருக்கங்கூடியது.

சு.வியைக் கண்டாலே குழந்தைக் குதூகலம் எங்களுக்கு வந்து விடும்.

இந்த அனுபவம் இங்கே இருக்கின்ற பலருக்கிருக்கும்.

இதற்குக் காரணம், நான் முன்னரே சொன்னதைப்போல அவரின் கனிவான மொழியும் பேச்சும்.
அன்பிற் தோய்ந்த மொழி... அன்பிற்தோய்ந்த பேச்சு....

சுடுசொற்கள், கூரான சொற்களை நான் சு.வியிடம் கேட்டதுமில்லைக் கண்டதுமில்லை.

அதனால், அவருடன் கதைப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதுமிருக்கும். அந்த நினைவுகளைப் பலரும் இப்போதும் நினைவு கொள்கிறார்கள்.

சு.வியைப் பற்றிய இன்னுமொரு முக்கியமான விசயம் அவர் பாடுவது.
அவருடைய பாடல்களைக் கேட்க, அவரின் குரலைக் கேட்க....

அந்த நினைவுகள் மிகவும் அலைக்கழிக்கின்றன.

அந்தத் தனிக்குரல் இசையைப் பொழிந்து தரும். பாலைப்பொழிந்து தரும் மடியைப்போல, இசையைப் பொழிந்து தரும் அந்தக்குரல்....

நாங்கள் சந்திக்கும் நாட்களில் அவர் பாடாத நாட்களே இல்லை.

இரவில், நிலவின் பால்வண்ண ஒளியில் சு.வியின் பாட்டுக்குரல் மிதக்கும்.....

அந்தப் பரவசம் எல்லையற்ற இன்பத்தைத் தரும், மகிழ்ச்சியைத் தரும்.

அந்த நேரத்தில் அவரைப் பார்க்கும்போது என்னுடைய மனதில் பாரதியே தோன்றுவார்.

கவிதைகளைப் பாடக்கூடிய மாதிரி எல்லாக் கவிஞர்களுக்கும் வாய்ப்பதில்லை.

நானறிந்தவரையில் சு.வியைப் போல வேறு எந்தக் கவிஞரும் அத்தனை இனிமையாகப் பாடுவார்கள் என்று.

தன்னுடைய கவிதைகளை மட்டுமல்ல.

பிறருடைய கவிதைகளையும் அவர் பாடுவார். திருவாசகம், திருப்புகழ், திருவெம்பாவை, பைபிளின் சில பகுதிகள், தேவாரங்கள், பாரதி பாடல்கள்... மஹாகவியின் பாடல்கள், கவிதைகள்.... நீலாவணனின் கவிதைகள் என்று ஏராளம் பாடல்கள்...

அதிலும் சிலப்பதிகாரத்தின் சில பாடல்களையும் ஓ... வண்டிக்காரா என்ற பாடலையும் என்று அவர் பாடும்போது.... இன்னும் மேலே போய்விடுவார்.

ஒரு தடவை அவர் வன்னிக்கு வந்தபோது, இரவு எங்கள் வீட்டில் பாடினார். இரவு பத்து மணிக்கு மேலிருக்கும். இருண்ட வன்னியில் வேளையோடு அயலவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.

ஆனால், சு.வியின் பாட்டுக்குரலைக் கேட்டதுதான் தாமதம், வளவைச் சுற்றி பல முகங்கள்...

இருளைக் கிழித்துக் கொண்டு லாம்பு வெளிச்சங்கள் ஒரு வளையமாகச் சுற்றியபோதே கவனித்தோம். சு.வியின் குரல்கள் அந்த ஒளிப்புள்ளிகளை அப்படி வரவழைத்து ஒரு வடிவமாக்கியிருந்தன.

ஆதைப் பார்க்க எனக்கு உண்மையிலேயே ஒரு ஆச்சிரியமாக இருந்தது. பாடல், அவருடைய குரலின் இனிமை அப்படி ஒரு ஒளித்தொகுப்பை உருவாக்கியுள்ளதா என்று....

அன்று அவருடன் அங்கே கவிஞர் சித்தாந்தன், வளநாடன், யாத்திரீகன், முல்லைக்கோணேஸ் போன்றோர் இருந்தோம். இப்போதும் அவர்கள் இந்தச் சம்பவத்தை அடிக்கடி நினைவுகொள்வார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அயற்சனங்களும் அதைச் சொல்வார்கள்.

அதற்குப் பிறகே அவர் ஒரு கவிஞர் என்றும் அவரிடம் தாங்கள் அறிந்து கொள்வதற்குப் பல சேதிகள் உள்ளதென்றும் அவர்களுக்குத் தெரிந்தது.

முக்கியமாக அவர்களிற் சிலர் அடுத்த நாட்பகல் வந்து அவருடன் விரிவாகக் கதைத்தார்கள்.
இதுதான் சு.வி. இப்படித்தான் சு.வி.

சென்ற இடமெல்லாம் அவருடைய வேரோட்டம் இருக்கும்.

ஆனால், அவர் தன்னுடைய ஆதாயங்களைக்குறிவைத்து அந்த வேரோட்டங்களை ஓடுவதில்லை. அப்படியான நோக்கோடு அவர் நீரோட்டங்களை நாடிச் செல்பவரும் இல்லை. சென்றவரும் இல்லை.

இதனாந்தான் அவருக்கு இந்த உலகத்தின் எல்லாத் திசைகளிலும் ஏராளமான நண்பர்கள் இருந்தனர். அவரை நினைந்துருகும் நெஞ்சத்தோடு, அவர்கள் எல்லோரையும் ஆக்கிவிட்டார் சு.வி.

இதற்குக் காரணம் -

அடிப்படையில் அவர் ஒரு விடுதலை விரும்பி. சமூக விடுதலையை யாசித்த விடுதலை விரும்பி. அதனால், அவர் எல்லாவற்றுக்காகவும் தன்னை ஒப்புக் கொடுக்கச் சிந்தித்தாரே அன்றி, அவற்றிலிருந்து தனக்கானதை எடுத்துக்கொள்ளச் சிந்திக்கவில்லை.

ஆகவே அவர் விரும்பிய விடுதலைக்காக அவர் போராடினார். தன்னுடைய சாத்தியங்களுக்கமைய அவர் போராடினார்.

மு. தளையசிங்கத்துடன் இணைந்து அவர் தீவுப்பகுதியிலே சாதிக்கொடுமைக்கு எதிராகவும் சாதியின் அநீதிக்கு எதிராகவும் போராடினார். இந்தப் போராட்டம் முக்கியமானது.

அதற்காக அவர் தன்னுடலிலே வலிகளைத் தாங்கினார். இதைப்பற்றிய பதிவுகள் அவருடைய புத்தகங்களிலேயே உண்டு. திரு. கிருஷ்ணகுமார் இதை எழுதியிருக்கிறார்.

இதைத் தவிர, அவரைப்பற்றி எழுதிய பிற பதிவுகளிலும் குறிப்புகளிலும் உண்டு. ஆகவே, அவற்றைப் பற்றி நான் இங்கே மீளவும் சொல்லவில்லை.

சு.வி இன ஒடுக்கு முறையை எதிர்த்தார். இன ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட இழப்புகளையும் பாதிப்புகளையும் அந்தக் கொடுமையையும் எதிர்த்தெழுதினார்.

இதற்கு அவருடைய கவிதைகள் சாட்சி.

அகங்களும் முகங்களும் தொடக்கம், அவருடைய இறுதித்தொகுப்பாகிய உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற முழுத்தொகுப்பு வரை இதை நாம் காண முடியும். அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆகவே, அவர் இன ஒடுக்குமுறையையும் அதன்பேராலான கொடுமைகளையும் தொடர்ச்சியாகவே எதிர்த்து வந்தார்.

அவ்வாறே அவர் இன விடுதலையையும் நேசித்தார். ஆனால், அவர் ஒரு இனவெறியர் அல்ல. அதற்கும் அப்பால், அவர் பிற இனத்தவரையும் நேசித்தார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் குரல்கொடுத்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி, அவர்கள் வெளியேற்றப்பட்டமையைப் பற்றி அவர் எழுதினார்.

இந்த வகையில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்துக்கொண்டு, அதேவேளை இந்த இனமறுப்புச் செயலைக் கண்டித்து எழுதியவர்கள் சு.வியும் ஜெயபாலனும் நிலாந்தனுமே.

முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திக் கொண்டே இந்த இனமறுப்பையும் எழுதியவர்கள் இவர்கள்.
இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விசயம்.

சு.வி ஒரு தேசியவாதி. அவர் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தார். ஆனால், அந்தத் தமிழ்த்தேசியம் பண்பட்ட தேசியமாக, பரந்த தேசியமாக, விடுதலைக்கான உள்ளடக்கத்தைக் கொண்ட தேசியமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒடுங்கிய தேசியப் பார்வை ஒருபோதும் முன்னகராது என்பது அவருடைய நிலைப்பாடு.
அவ்வாறே அவர் ஒரு பண்பாட்டியலாளனும்கூட. தமிழ்ப்பண்பாட்டின் தளத்தில் நின்றே தன்னுடைய கவிதைகளைத் தான் எழுதுகிறேன். அந்தப் பண்பாட்டிலேயே தன்னுடைய கவிதைகளின் வேர் பற்றிப் படர்ந்துள்ளது என்று தன்னுடைய கவிதைகளைக் குறித்த முன்னுரைகளிலேயே அவர் இதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவர் பண்பாட்டு வெறியரோ, அல்லது தமிழ்ப் பண்பாட்டையே அதி உச்சமான பண்பாடு என்றும் பிற பண்பாடுகள் எல்லாமே அதற்குக் கீழானவை என்ற பெருமிதங்களோடும் தப்பபிப்பிராயங்களோடும் இருந்தவரல்ல.

தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளில் இருந்தும் நற்கூறுகளில் இருந்தும் தனக்கான ஊட்டங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிச் செயற்பட்டவர் சு.வி.

அத்தகைய செயற்பாட்டின் மூலம் ஒரு தொடர்ச்சியை – தமிழ்ப்பண்பாட்டின் தொடர்ச்சியை - இழையறாமற் தொடரவேண்டும் என்று பிரக்ஞை பூர்வமாகவே விரும்பிச் செயற்பட்டவர் அவர்.

இதையும் அவர் தன்னுடைய பதிவுகளில் தெளிவாக்கியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் அடிப்படையில் ஒரு ஆன்மீகவாதி. அந்த ஆன்மீகத் தளத்திலிருந்தே அவருடைய இயக்கம் நிகழ்ந்தது. இதிலிருந்தே அவருடைய எல்லாத்தளச் செயற்பாடுகளும் நிர்மாணங் கொள்கின்றன.

இதை அவருடைய கவிதைகளிலும் நாங்கள் காணமுடியும். அவருடைய வாழ்க்கையிலும் அவதானிக்க முடியும்.

அவருடைய விடுதலைப் பிரக்ஞையில், அவருடைய பண்பாட்டுணர்வில், அவருடைய இசைப் பயில்வில், அவருடைய கவிதை ஆக்கத்தில், அவருடைய நட்பார்ந்த மனித உறவுகளில் எனச் சகல இடங்களிலும் நாம் இதை உணர முடியும்.

இதை அவரே வெளிப்படுத்துகிறார்.


குறிப்பாக,

உண்டென்ற வாசலுக்கு ஒளி விளக்கே, உள்ளகத்து ஒளிர்கின்ற உயிர் விளக்கே, எங்கெங்குமியல்கின்ற பேரிருப்பே, இன்பமே தேடிடும் வாழ்விலக்கே, என்னிருப்பே, உன்னிருப்பே, இனிதிருப்பே வாழ்கவே, வாழ்கவே, வாழ்கவே!

என்று அகங்களும் முகங்களும் என்ற முதற்தொகுதிப்பில் இருந்து இறுதித் தொகுதியான உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற இறுதித்தொகுதி வரையில் இதை நாம் காணலாம்.

உன்னைச் சரணடைந்தேன் - ஓம் குருதேவா, உயிர்த்தெழுகின்ற காலத்திற்காக, என்னைத்தருவதெனினும் இசைவேன், இது உனக்காக...

இப்படி அவர் உயிர்த்தெழுகின்ற காலத்திற்காக என்ற தொகுதிக்கான சமர்ப்பணத்தில் தன்னை ஒப்புக்கொடுப்பதைப் பார்க்கலாம்.

சு.வியின் ஆன்ம உள்ளோட்டத்துக்கு வழியமைத்தவை, அவரை அதில் ஆற்றுப்படுத்தியவை - மு.தவுடனான அவருடைய உறவும் சர்வமத ஆசிரமத்துடன் அவருக்கேற்பட்ட தொடர்புகளுமே.

முதலாவது, மு.தளையசிங்கத்தின் உறவு.

தளையசிங்கத்தின் நட்பின், ஆதர்சத்தின், வழிப்படுத்தலின் விளைவாக வந்த இந்த உறவு அவரை இந்த ஆன்ம ஓட்டத்தில் மேலும் ஆழப்படுத்துகிறது.

சு.வியின் படைப்பும் நோக்கும் தளையசிங்கம் வலியுறுத்திய மெய்யுளை ஆதாரத் தளமாகக் கொண்டது. அவருடைய வாழ்க்கையையும் அதுவே மறைபொருளில் நிர்ணயித்தது.
தளையசிங்கம் கலைஞனின் தாகத்தில் வலியுறுத்தும் மையத்தை சு.வியிடம் நாம் பார்க்கலாம்.

அடுத்தது, சர்வமத ஆசிரமத்துடன் சு.வி கொண்டிருந்த உறவு. இந்த ஆசிரமத்துடன் சு.வி கொண்ட உறவு, அவருடைய வாழ்வையும் நோக்கையும் ஒழுங்கமைத்தது.

சாமி அம்மா என்று சு.வி அழைக்கும் அன்னை கமலா அவர்களும் முன்னர் அந்த ஆசிரமத்தின் குருவாக இருந்த சிறி நந்தகோபாலகிரி அவர்களும் சு.வியிடத்திலே ஆழமான ஈடுபாட்டையும் பாதிப்பையும் ஏற்படுத்தியவர்கள்.

மு. தளையசிங்கமும் அவருடைய மெய்யுளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் விட அதிக தாக்கத்தை – அதிக வழிப்படுத்தலை இந்த ஆசிரமமும் அதனுடைய மையங்களும் ஏற்படுத்தின.

என்னைப் பொறுத்தவரை சு.வி இந்த ஆசிரமத்தின் ஒரு கூறே. இந்த மையங்களின் குழந்தையே.

ஆகவே அவர் ஒரு ஆன்மீகவாதி என்றே நான் சொல்வேன். அடிப்படையில் அவர் ஆன்மீகவாதி.

அதிலிருந்தே, அவரை நாம் அடையாளம் காணமுடியும்.

அதிலிருந்தே வருடைய நிறங்களும் குணங்களும் மணங்களும் கிளம்புகின்றன.

இந்த ஆன்மீகத் தளம் என்பது, சமய சம்பிரதாயங்களுக்குள் வரையறுக்கப்பட்டதல்ல.

அல்லது, அது சமய சம்பிரதாயங்களைச் சார்ந்ததும் இல்லை.
அது அதற்கப்பால், பிரபஞ்சம் தழுவியது.

ஆகவே, பிரபஞ்சம் தழுவிய அன்பு, பிரபஞ்சம் தழுவிய மனித நேயம், பிரபஞ்சம் தழுவிய விடுதலை, பிரபஞ்சம் தழுவிய மாண்பு என்ற வகையிலேயே சு.வியின் நோக்குகளும் செயல்களும் அமைந்தன.

இந்த இடத்திலே நாங்கள் சு.வியை எப்படிக் காண்பது?

அவர் யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்பதாகவா! அல்லது தமிழ்த் தேசியவாதியாகவா? சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒருவராகவா? அல்லது அவர் ஒரு ஆன்மீக வாதி என்ற நிலையிலா? அல்லது அவர் ஒரு மனித நேயர் என்றவகையிலா? அல்லது, அவர் ஒரு பிரபஞ்சவாதியாகவா?

உண்மையில் சு.வி ஆன்மீகத்தின் வழியாகப் பிரபஞ்சப் பரப்பை தன்னுடைய அகக்கண்களால் கண்ட ஒருவரே.

எனவே சு.வியைக் காண்பது, அவரைக் கண்டடைவது என்பது, அவருடைய ஈடுபாட்டின் முதன்மைப் பொருளான ஆன்மீகத்தின் வழியாகவே அமையும்.

இதிலிருந்தே அவரையும் அவருடைய கவிதைகளையும் அந்தக் கவிதைகள் மொழியப்பட்ட முறைமையையும் அவற்றின் மொழியையும் அவை உணர்த்தும் பொருளையும் நாம் நோக்க முடியும்.

இதுவே சு.வியின் முதற்படி.

இனி நாம் இதற்கு அப்பால், அவருடைய கவிதைகளை நோக்கி, அவற்றின் தளங்களை நோக்கி, அந்தக் கவிதைகள் இயங்கும் நிலையை நோக்கிப் பயணிக்கலாம்.

சு.வி எப்போதும் சொல்வதைப்போல அவருடைய காலப்பயணத்தை நாம் இந்தத் தளத்தில் நின்று நோக்குவோம்.

தமிழ்க் கவிதைகளில் - அதாவது, சமகாலத் தமிழ்க் கவிதைச் செயற்பாட்டில் சு.வியின் இடம் என்ன? அல்லது எத்தகையது? என்று பார்த்தால் -

சு.வி நீண்ட தமிழ்க்கவிதை இலக்கியப் பாரம்பரியத்தின் புதிய வித்து என்றே தோன்றுகிறார்.

அவர் பயன்படுத்தும் மொழியும் சொற்களும் மொழிதல் முறையும் இந்தச் சாராம்சத்தையே கொண்டிருக்கின்றன.

இதை அவர் தன்னுடைய முழுத்திரட்டான உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற முழுத்திரட்டுக் கவிதை நூலிலேயே தெளிவாகச் சொல்கிறார்.

தமிழிலக்கியத்தின் வழியாக வந்த அடையாளங்களின் வழியே – அந்தத் தொடரோட்டத்தின் வழியே பாரதியைக் காணலாம். அதன் தொடர்ச்சியைத் தொடரும் ஒருவனாகத் தன்னையும் அவர் அடையாளங்காணுகிறார்.

எனது கவிதையின் இயங்குதளமும் இவ்வாறேதான, ஆதிக்குரல்களின் ஊட்டம் பெற்ற ஒன்று என அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

ஆகவே நாம் வில்வரெத்தினத்தைப் புரிந்து கொள்வதற்கு எந்தக் குழப்பங்களும் கொள்ளத் தேவையில்லை.

அவருடைய தொகுதிகளுக்கு அவர் எழுதிய தன்னுரைகளின்போதெல்லாம் தன்னையும் தன்னுடைய செல்வழியையும் தன்னுடைய நோக்கையும் தன் கவிதைகளின் தளங்களையும் அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஏறக்குறைய அவை அவருடைய ஒருவகையான வேண்டுதல் என்றே சொல்லவேணும்.

எனவே, இந்த உண்மைப் புலத்திலே நின்று கொண்டு சு.வியின் கவிதைகள் சொல்லும் பொருட்புலத்தைப் பற்றிப் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால், சு. வியைப் பற்றி, நாம் முன்னர் பார்த்த அந்த அடையாளங்களின் வழியாகவே அவருடைய கவிதைகளையும் நாங்கள் நோக்குவது தவிர்க்க முடியாது என்பதை இங்கே மீளவும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

00
சு.வியின் படைப்புகள் சில வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றன.

1. அவை ஒடுக்குமுறைகள் எதுவாக இருப்பினும் அவற்றை எதிர்ப்பன.

சாதி ஒடுக்குமுறை என்றாலென்ன? இன ஒடுக்குமுறை என்றால் என்ன, இன ஆதிக்கம் என்றால் என்ன? எதுவாக இருந்தாலும் அவற்றை எதிர்ப்பன இந்த வகைக்கவிதைகள்.

இதற்கு அகங்களும் முகங்களிலுமே வலுவான உதாரணங்கள் உண்டு.

குறிப்பாக – ‘வெறுங்காற்றில் கலந்திடுமோ’ என்ற கவிதை...

இது சாதியக் கொடுமை இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கீழ்வெண்மணியிலும் மிகக் கேவலமான முறையில் மனிதர்களைச் சிதைத்தது.

ஆகவே, தமிழ்ச் சமூகத்தின் பிணியாக இந்தக் கொடுமை நீட்சியுற்றுக்கிடக்கிறது..

இந்தக் கொடுமையில் மனித வாழ்க்கையே நசுக்கப்படுகிறது, மிகக் கேவலமாய்... என்று நொந்தும் சபித்தும் பாடும் சு.வி, நொந்த மனிதர்கள், எரியூட்டப்பட்ட தீயிலிருந்தே தங்களுடைய கோபங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அக்கினியே! இடம்மாறு
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை எளியவரிடம் வந்து குடியேறு
அவர்கள் கண்களில் ஜ்வாலி
நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி
சொற்களில் சுடு சரமாகு
செயல்களில் ஆலைக்கனல் பெருக்கு.
மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக...


ஆனால், இந்தக்குரல், பாரதியின் கோபத்தையும் அவரின் மொழியையும் மொழிதல் முறையையும் நினைவூட்டுகிறது.

இது சு.வியின் மீதான குறைபாடு என்பதல்ல.

அவரே சொல்லியிருக்கிறார் தனக்கான ஊட்டங்களை தன்னுடைய மூதாதைகளிடம் இருந்தே எடுத்திருக்கிறேன் என்று.

ஆகவே, அவர் இந்தக் கவிதைக்கான இயம்பு முறைமையை - அதற்கான மொழியை பாரதியிடம் இருந்து எடுத்தாள்கிறார்.

சு.வியின் பெரும்பாலான கவிதைகளில் பாரதியின் நேரடித்தன்மைகளை எவரும் இலகுவிற் காணமுடியும்.

பாரதியின் செல்வாக்கை மிக உச்சமாக அவருடைய கவிதை எங்கிலும் காணலாம்.

பாரதியிடமும் சு.வியைப்போல ஒரு விரிந்து பரந்த ஞான ஈடுபாட்டுத் தளத்தை நோக்கிய அவாவுதல் இருந்ததை நாம் இந்த இடத்திலே நினைத்துப் பார்க்கலாம்.

ஆனால், சு.வி பின்னர் தனக்கான ஒரு மொழிதல் முறைமையைக் கொள்கிறார்.

அதிலும் ஊடுபாவாக முன்னோரின் சுவடுகள் தெரிகின்றனவாயினும் அவை சு.வியின் விளைச்சல்களே என்று உணரக்கூடியவாறு, அவருடைய கவிதைகள் உருப்பெற்றன.

முக்கியமாக காலத்துயர், காற்றுவழிக் கிராமம், நெற்றி மண் போன்ற தொகுதிகள் முற்றிலும் சு.விக்கான தனித்த அடையாளங்களைக் கொண்ட கவிதைகளை உள்ளடக்கியவையாக உள்ளன.

பிற தொகுதிக் கவிதைகளில் இருந்து இந்தத் தொகுதிகளின் கவிதைகள் வேறுபட்டியங்குவது, இவற்றில் பொதுத் துயரங்கள், பொது நிலைகளைக் குறித்து எழுதிய கவிதைகளை விடவும் தன்னிலை அனுபவச் சாரங்களை மையப்படுத்தி எழுதிய கவிதைகள் அதிகமாக இருப்பதே.

அதிலும் காலத்துயரும் காற்றுவழிக்கிராமம் ஆகிய இரண்டு தொகுதிகளின் கவிதைகளும் மிக முக்கியமானவை.

00

பாடிப்பறை - நிகழ்ச்சியில் சு.வியைக் கண்டடைதல் - என்ற பொருளில் 20.12.2011 அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

No comments: