
காயங்கள் ஏற்படாமல் மரத்தை வீழ்த்த வேண்டுமானால், வேர்களை அகற்றுவது அல்லது வேர்களிற் பாதிப்புகளை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையைப் பெரும்பாலும் ஒடுக்குமுறையாளர்களே கையாள்கின்றனர். இதை ‘அடையாள அழிப்பு அரசியல்’ என்று நவீன சொல்லாடலிற் குறிப்பிடுகின்றனர் அரசியல் அறிஞர்கள்.
இலங்கையின் இன ஒடுக்குமுறை அரசியலில் இந்த மாதிரியாக வேர்களை அகற்றும் காரியங்கள் அல்லது வேர்களிற் பாதிப்புகளை ஏற்படுத்தும் உபாயங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள் தொடக்கம், நூலக எரிப்பு, போர், இடப்பெயர்வுகள், பிரதேசங்களிலிருந்த மக்களை அகற்றும் நடவடிக்கைகள், புதிய அடையாளங்களைப் பலவந்தமாக நிறுவுதல், தொல்லாதாரங்களைச் சிதைத்தல் அல்லது அவற்றைச் சூறையாடுதல் போன்ற செயல்கள் எல்லாமே அடையாள அழிப்பு அரசியலின் வகைப்பாடுகளே!
போர் முடிந்த பிறகும், தமிழ்ப்பகுதிகளில் புதிய அடையாள நிறுவுகைகள் நடக்கின்றன. இவை அமைதிக்கும் நம்பிக்கைக்கும் புரிந்துணர்வுக்கும் எதிரான விசயங்கள். புத்தர் சிலைகள் முளைத்தல், விகாரைகள் எழுதல், கேந்திர நிலையங்களில் படைமுகாம்களை விரிதல், போரினால் கைவிடப்பட்ட மக்களின் சொத்துகள் அதிகாரத்தரப்பின் வழியே செல்லுதல் என்று நீளும் இந்த அடையாள அழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தொன்மைச் சான்றைப் பகிரும் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதைக்குறித்து அங்கங்கே சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்த போதும் இந்தக் காவுகை நின்று விடவில்லை. தொடர்ந்தும் சாத்தியப்படும் இடங்களிலிருந்தும் சாத்தியப்படும் வழிகளினூடாகவும் தொல்பொருட்கள் - அரும்பொருட்கள் சென்றுகொண்டேயிருக்கின்றன. சமூக அடையாளம் பொறுத்து, இன அடையாளம் பொறுத்து, வரலாற்று அடையாளம் பொறுத்து இது ஒரு அபாய நிலையே. இதைக்குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் சில நடந்திருக்கின்றன. ஆனால், அதையும்விட உறங்குநிலையே இந்த விசயத்தில் அதிகமாக உண்டு என்று துக்கப்படுகிறார் ‘குணா’ என்ற குணரத்தினம். குணா, தொடர்ச்சியாகவே சமூக அடையாளங்கள் குறித்த அக்கறையோடு செயற்பட்டு வரும் ஒருவர். பன்மைத்துவக் கண்ணோட்டத்தோடு விசயங்களை அணுகும் இயல்புடைய இவர் போரினால் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்திருப்பதாகக் கூறுகிறார்.
தொல்லாதாரங்களைச் சேகரிப்பதிலும் அவற்றைப் பற்றி அறிவதிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள ‘குணா’வுடன் இந்த அடையாள அழிப்புச் செயலைப் பற்றி உரையாடியபோது....
00
தொல்பொருட்களைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர் என்ற வகையில் போரும் இடப்பெயர்வுகளும் போருக்குப் பிந்திய இப்போதைய நிலையும் எப்படியுள்ளன? இதெல்லாமே தொல்பொருட்களையும் தொல்லாதாரங்களையும் அழிக்கும் விசயங்கள்தான். அதற்குமேல் அடையாள அழிப்போடு சம்மந்தப்பட்டவையும் கூட. இதைத் திட்டமிட்டும் செய்கிறார்கள். சிலவேளை போரும் இடப்பெயர்வுகளும் நடக்கிறபோது தானாகவே – எதேச்சையாக நடப்பதுமுண்டு. ஆனால், போர் என்றால் அது அழிவு என்றே அர்த்தமாகும். உலகிலே போரினால்தான் மனிதரின் பெருமளவான ஆற்றல்களும் ஆக்கங்களும் அடையாளங்களும் அழிந்திருக்கின்றன. இயற்கை அமைப்புகளையே போர் அழித்து விடுகிறது. இந்த நிலையில் எப்படித் தொல்லெச்சங்களும் அரும்பொருட் சேகரிப்புகளும் தப்ப முடியும்? அடையாளங்கள் மிஞ்ச இயலும்? அழிந்தவை போக மிஞ்சியவையே வரலாற்றடையாளங்களாகின்றன.
நான் தொல்பொருட்களைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவன் என்ற வகையில் போர் என்னை மிகப் பாதித்திருக்கு.
நான் சேகரித்தவை, அதற்கப்பால் வரலாற்றடையாளங்களாக, சமூக அடையாளங்களாக இருந்தவை எல்லாம் நடந்த போரினால் சிதைந்துள்ளன. இந்த அடையாளச் சிதைவில் பெரும்பங்கு வகிப்பது இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து போகும்போது எதற்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. வீட்டுக்கும் பாதுகாப்பில்லை. பொருட்களுக்கும் பாதுகாப்பில்லை. வாழ்க்கைக்கும் பாதுகாப்பில்லை. உயிருக்கே பாதுகாப்பு, உத்தரவாதம் என்பதெல்லாம் இல்லை என்ற ஒரு நிலையில் வேறு எதற்குத்தான் பாதுகாப்பிருக்கும்?
இந்த நிலையில் தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தவை, சேகரிக்கப்பட்டவை, பாதுகாக்கப்பட்டவை எல்லாமே பாதுகாப்பற்ற அநாதரவான வெளியில் விடப்படுகின்றன. ஏறக்குறைய இயலாமை என்பது இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அதை அவர்களால் வெல்வது கடினம்.
ஆகவே, போரினாலும் இடப்பெயர்வினாலும் பல சமூகங்கள் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பிற்கான வலுவையும் சாத்தியங்களையும் இழக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகின்றன. ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இது நேர்ந்திருக்கிறது.
சனங்களுடைய சக்திக்கு மீறிய எல்லா நிகழ்ச்சிகளின் போதும் இவ்வாறான ஒரு துயர நிலை ஏற்படுவதுண்டு. போர் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் இரண்டும் மனிதர்களைச் செயலாற்ற முடியாத ஒரு நிலைக்குக் கொண்டு போய்த்தள்ளிவிடுகின்றன.
இப்போது போர் முடிந்த பிறகும் இந்த நிலை இன்னொரு வகையிற் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இதெல்லாம் இதைக் குறித்துச் சிந்திப்போருக்குப் பெருந் துக்கத்தைத் தரும் விசயங்கள்.
இந்த நிலைமைகளைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்?
போர் எதனால் ஏற்பட்டது? அதற்கொரு அடிப்படைக் காரணம் இருக்கும். அல்லது பல காரணங்கள் இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினையே போருக்கான பிரதான காரணமாக இருந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாறு அடையாளப்பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்டது.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான அதிகார வலுப் பற்றிய பிரச்சினைகள் இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளன. குறிப்பாக இலங்கை மீதான தென்னிந்தியப் படையெடுப்புகள் (சோழ, பாண்டியப் படையெடுப்புகள்) சிங்களவரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளன. இதன்காரணமாக சிங்களச் சமூகம் தன்னுடைய வரலாற்றைக் குறித்தும் அடையாளத்தைக் குறித்தும் அதிக உளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது@ அச்சமடைந்துள்ளது. எனவே, இதனால் அது தன்னைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் வெளிப்பாடே மகாவம்சம். அதாவது, ‘இலங்கையின் வரலாறு’ என்று உருவாக்கப்பட்டுள்ள ‘மகாவம்சம்’ என்ற வரலாற்றுப் பதிகையாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் சிங்களச் சமூக உளவியலிலும் மகாவம்சம் வகிக்கின்ற பாத்திரமே முதன்மையானது.
பிற்காலங்களில் - குறிப்பாக 1948 க்குப் பிந்திய – சுதந்திர இலங்கையில் மகாவம்வம் தமிழர்களுக்கு எதிரான ஒரு மறைமுக ஆயுதமாகத் தீவிர நிலையிற் பாவிக்கப்படுகிறது என்ற அவதானிப்புகள் உள்ளன. இதுவும் ஒரு வகையான அச்சத்தின் விளைவே. தமிழர்கள் எப்போதும் இந்திய சார்பானவர்களாக, தமிழகத்துடன் அதிகமான நெருக்கத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக சிங்களச் சமூகத்துக்கு எதிராகவே இருப்பர் என்ற ஒரு அபிப்பிராயம் சிங்களச் சமூகத்திடம் உண்டு. குறிப்பாக சிங்களச் சிந்தனையாளர்கள் இவ்வாறு உணர்கிறார்கள் என்ற அவதானிப்பும் உண்டு.
இந்த நிலையில், தமிழர்களின் வரலாற்று முதிர்ச்சியைக் குறித்து சிங்கள உளவியல் கலவரப்படுகிறது. ஆனால், இது ஒரு அவசியமற்ற நிலை. அதிகாரங்களைப் பகிர்ந்து, உரிமைகளைச் சமனிலைப்படுத்தினால் இத்தகைய அச்சத்துக்குக் காரணமே இல்லை. தவிர, இந்திய மைய அரசு ஒரு போதும் தமிழர்களுக்குச் சாதகமாக இயங்கியதில்லை. அதனுடைய வெளியுறவுக்கொள்கையைச் சரியாக விளங்கிக் கொண்டால் சிங்களத் தரப்பினர் இப்படி அனாவசியமாகக் கலவரப்படத் தேவையில்லை.
ஆகவே, அப்படிச் சிந்திப்பதற்குப் பதிலாக, ஒரு பக்கத்தில் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தப்பாடுபடுகிறது சிங்களத் தரப்பு. மறுபக்கத்தில், அது தமிழர்களின் அடையாளங்களை – வரலாற்று முதிர்ச்சியை, வரலாற்றுத் தொன்மையை அழித்துவிட அல்லது சிதைத்து விட முயற்சிக்கிறது.
போருக்கான காரணத்தில் இதுவும் ஒன்று. அதாவது, வரலாற்றைப் பற்றிய மிகு புனைவு. அல்லது அடையாள மறைப்பு. அல்லது அடையாள ஆதிக்கம். இது சிங்களத் தரப்பிடம்.
தமிழ்த்தரப்பிடம் இந்த உளவியல் வேறு விதமாக இருக்கு. இனப்பிரச்சினை என்பது தமிழர்களிடம் தொன்மையைக் குறித்த அச்சங்களையே உருவாக்கி விட்டிருக்கிறது. இனப்பிரச்சினை - இனவாதம் - அடையாள அழிப்பை ஏற்படுத்துகிறது என்ற அச்சத்தினால் அடையாள மறைப்புகள் செய்யப்படுகின்றன. தமிழர்கள் பல நிலைகளிலும் தங்களுடைய அடையாளங்களை மறைக்க முற்படுகிறார்கள். இன்னொரு விதமாக அந்த அடையாளங்களைப் பேணுவதற்காகப் போராடினாலும் வரலாற்று அடையாளங்களைக் குறித்து அவர்களிடம் அச்சமே உண்டு. தமிழர்களின் அடையாளங்களை இப்போது வெளிப்படுத்தினால், அதை சிங்களத்தரப்பு சிதைத்து விடும் அல்லது திரித்து விடும் என்ற அச்சம் பெரும்பாலான தமிழ் வரலாற்றறிஞர்களிடம் உண்டு.
தன்னையும் தனது அடையாளங்களையும் மறைக்க வேண்டிய ஒரு நிலை ஒரு மனிதனுக்கோ ஒரு சமூகத்துக்கோ ஏற்படுவதென்பது மிகக் கொடுமையான ஒன்று. இத்தகைய நிலை இனத்தின் பேரால் நடந்தாலும் தவறு. மதத்தின் பேரால், சாதியின் பேரால் என எதன்பேரால் நடந்தாலும் அது தப்பே. இங்கே ஜனநாயக அடிப்படைகள் ஒடுங்கி விடுகின்றன. சுதந்திரம் அச்சுறுத்தலாகப்படுகிறது. இது ஒரு தனிமனிதருடைய இருப்புக்கான அச்சுறுத்தல் மட்டுமன்றி, சமூக அச்சுறுத்தலாகவும் அமைகிறது. இந்த நிலை உண்மையில் உலகத்துக்துக்கான அச்சுறுத்தலாகவும் உலக ரீதியான அடையாள இழப்பாகவுமே அமைகிறது.
சர்வதேசம் என்பது பல கூறுகளைக் கொண்டது. பலவிதமான அடையாளங்களையும் பல்வகை இயல்புகளையும் தன்மைகளையும் உடையது. ஆகவே, பல்நிறக் கண்ணிகள் கோர்க்கப்பட்ட மாலையே சர்வதேசம் என்பது.
இதேவேளை, அடையாளச் சிதைப்புகள் பலவகையில் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலமாக, வரலாற்று இடங்களை விட்டுச் சனங்களை வெளியேறும் நிலையை ஏற்படுத்துவதன்மூலம், பொது அடையாளங்களை அழிப்பதன் மூலம், தொல் அடையாளங்களில் மாறுபட்ட கருத்தேற்றங்களை நிகழ்த்துவதன் வழியாக, சான்றுகளை வெளிப்படுத்த முடியாத உளநிலையை ஏற்படுத்துவதன் மூலமாக.... இப்படிப்பலவழிகளில்.
ஆகையால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் போரை நோக்கி நிலைமையைக் கொண்டு போனது.
விளைவு, பெரும் போரென்றாகியது. இந்தப் போர் வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடந்ததால் அதன் பாதிப்பு அங்கேயே அதிகமாகியது. அதேவேளை அரசும் நேரடியாக இந்தச் சிதைப்பை ஒரு வேலைத்திட்டமாக எடுத்துக் கொண்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. உதாரணமாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கந்தரோடை போன்ற தொல்லியல் மையங்கள் சிங்கள பௌத்த அடையாளங்களாக உணர்த்தப்படுவதற்கான முயற்சிகள் வலுப்பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த மையம் தமிழ்ப் பௌத்தத்தினுடையது என வரலாற்றறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். என்றபோதும் இப்போது வடக்கே வருகின்ற தென்பகுதி மக்கள் இதை அப்படிப் பார்ப்பதாகத் தெரியவில்லை. அதை விளக்கும் நிலையும் காணப்படுவதாக இல்லை. இதன்காரணமாக தமிழ்ப் பகுதிகளிற் காணப்படுகின்ற பல தொல்லியற் கூறுகளை வெளிப்படுத்தத் தமிழர்கள் தயங்குகின்றனர். அதையும் சிங்கள மயமாக்குவது அல்லது அவற்றை ஏதோ வகையிற் சிதைப்பது என்ற நிலை ஏற்படும் என்ற அச்சம் பொதுவாகவே தமிழர் மத்தியில் உருவாகியுள்ளது.
தவிர, யாழ்ப்பாண நூலக எரிப்புத் தொடக்கம் ஆலயங்களின் தேர்கள், சிற்பமுறையிலமைந்த வாகனங்கள் மற்றும் தமிழ் மக்கள் பிரத்தியேகமாகப் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் வரையில் எல்லாவற்றையும் அழிக்கும் - அழிய விடும் நிலைமைகள் உருவாகியுள்ளன. போரினால் கைவிடப்பட்ட சுவடிகள் ஏராளம். அழிந்த சுவடிகள் அதைவிட அதிகம். இதில் கிராமியக் கலைகள், சோதிடம் மற்றும் வாகடம் என்ற மருத்துவக் குறிப்புகள் எனப் பல்வகை விசயங்கள் இருந்தன.
இதைவிட சமாதான காலத்திலும் பிறகு, போருக்குப் பிந்திய இன்றைய சூழ்நிலையிலும் தொல்பொருட்களும் பழைய புழங்கு பொருட்களும் கடத்தப்படுகின்றன. மற்றது மக்களின் அறியாமைகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் ஏராளமான தொன்மைப் பொருட்கள், எங்களின் அடையாளங்களைச் சொல்லும் சான்றுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் அடையாள இழப்பு என்பது அல்லது அடையாள அழிப்பு என்பது மிகப் பலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த அபாயநிலையைக் குறித்து எந்த அளவிலான விழிப்புணர்வு தமிழ்பேசம் சமூகங்களிடம் உள்ளது? இந்த அபாய நிலையைத் தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதாக? அப்படியாயின் அது எந்த அளவில், எந்தத் தரப்புகளால் எடுக்கப்பட்டுள்ளது?
உண்மையில் இது ஒரு வெட்டகப்பட வேண்டிய – கவலைப்பட வேண்டிய விசயமே. இந்த நிலையைக் குறித்து அவ்வப்போது பேசப்படும். அரசியல்வாதிகள் கதைப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் இதைக் குறித்து எழுதியிருக்கின்றன. அங்குமிங்குமாகத் தனி நபர்கள் தங்களால் ஆன அளவுக்கு தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலர் தங்களால் முடிந்த அளவுக்குச் சேகரிப்புகளைச் செய்து வருகின்றனர். இது அடையாளச் சேகரிப்புக்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சி எனலாம்.
இதற்கப்பால் 2003 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர்களான பா.அகிலன், தா.சனாதனன் போன்றோர் தங்களின் மாணவர் திரட்சியைப் பயன்படுத்தி, இத தொடர்பாக ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டார்கள். சில பிரசுரங்கள் கூட அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. யாழ் நகர் மற்றும் கிராமப் புறங்களிற்கூட விழிப்புணர்வுப் பயணங்கள் செய்யப்பட்டன. அதையொட்டி பத்திரிகைகளிலும் எழுதப்பட்டது.
ஆனால், பிறகு முனைப்படைந்த போர் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டது.
இப்போது சமாதானச் சூழலில் தெற்கே இருந்து வருவோர் மிகக் குறைந்த நிலையில் யாழ்ப்பாண அடையாளத்தை – தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பொருட்களை எல்லாம் வாங்கிச் செல்கிறார்கள்.
முக்கியமாக, போரின் நேரடியான அழிவுகள் குறைந்திருந்த நெடுந்தீவு போன்ற பகுதிகளிலிருந்து பல கலைப் பொருட்களும் புழங்கு பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. நெடுந்தீவில் குண்டு வீச்சுகளோ ஷெல்லடிகளோ நிகழவில்லை. இதுமாதிரிப் பல தீவுகளில் தொன்மையான பொருட்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் மோப்பம் பிடித்து, அங்கே போய் மிகக் குறைந்த விலையில் அரும்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதைப் பார்க்கும்போது மிகக் கவலையாக இருக்கு.
வன்னியில் சேகரிப்புப் பொருட்கள் எதுவுமே இல்லை. அதையெல்லாம் மாத்தளன், முள்ளிவாய்க்கால், பொக்கணை, தேவிபுரம், புதுக்குடியிருப்பு போன்ற இடங்களிலிருந்து எடுத்துச் சென்று விட்டனர். இதில் படையினரும் வியாபாரிகளும் கைகோர்த்துச் செயற்பட்டிருக்கின்றனர்.
இதைத் தடுப்பதற்கு வேறு அமைப்புகள் ஏதும் முயற்சிக்கவில்லையா? குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றுத்துறை மற்றும் பொது மக்கள் அமைப்புகள்?
வரையறுக்கப்பட்ட அளவில் தங்களுடைய கவலைகளை இந்த அமைப்புகளில் இருந்தவர்கள் வெளியிட்டுள்ளனர். அதற்கப்பால் இந்த அமைப்புகள் முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் அது சட்டரீதியான ஒரு நடவடிக்கைக்கும் நீதி மன்றம் வரையான விவகாரமாகவும் அரசியல் விவகாரமாகவும் மாறியிருக்கும்.
முன்னர் சமாதானக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் குறிப்பாகக் கலை பண்பாட்டுக்கழகத்திடம் இதைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அவர்களும் ஒரு எல்லைவரையான – மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டும் சில நடவடிக்கைளை எடுத்திருந்தனர். ஆனால், இந்த நிலையைக் குறித்து வெளிச்சம் போன்ற இதழ்களில் எழுதப்பட்டது.
மற்றும்படி ஏனைய தமிழ் அரசியற் கட்சிகளிடம் இதைப் பற்றிய புரிந்துணர்வோ அக்கறையே இருப்பதாகத் தெரியவில்லை. தேசியம் பற்றிய உரையாடல்களில் அல்லது அடையாளங்களில் இந்த விசயம் முக்கியமானது. அடையாள இழப்பு என்பது தேசியத்தைப் பலவீனப்படுத்தும் அம்சங்களில் ஒன்றாகும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை இந்த அரசியல்வாதிகள்.
நீங்கள் தமிழ் மக்களின் அடையாள இழப்புக்குறித்த கவலைகளையே அதிகமாகப் பேசுகிறீர்கள். இதே காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நிலையைப் பற்றி, அவர்களுடைய அடையாள இழப்பைப் பற்றி அல்லது அவர்களின் அடையாள அழிப்பைப் பற்றி என்ன சொல்லுறீங்கள்?
அதுவும் கண்டிக்கத்தக்கதே@ அவசியமாகக் கவனிக்கத்தக்கதே. என்னுடைய அக்கறைகள் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களையும் உள்ளடக்கியதே. மலையகத்திலிருந்து வடக்கே வந்த மக்களிடம் தனியான அடையாளக் கூறுகள் நிறைய உண்டு. இதை அவர்களின் அடையாளச் செழுமை என்றே சொல்வேன். ஆகையால் அதுவும் முக்கியமானது.
எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு சமூகமும் எதன்பேராலும் தன்னுடைய அடையாளத்தை இழப்பதென்பது ஆபத்தானது. அதிலும் கட்டாய நிலையிலான அடையாள இழப்பு அல்லது அடையாள அழிப்பு அல்லது அடையாள இழப்புக்கு நிர்ப்பந்திப்பது எல்லாமே குற்றத்துக்குரிய ஒரு செயல்தான். எனவே இதை நாம் விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக இந்த அபாயத்தைத் தவிர்க்கலாம்.
ஒரு சமூகத்தின் கல்வி என்பது அது எவ்வாறு தன்னுடைய இயங்குநிலையைக் கொண்டுள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.
என்னுடைய கேள்விக்குரிய உங்களின் பதில் இன்னும் அழுத்தம் பெறவில்லை. ஆகவே அதைக் குறித்து மேலும் தெளிவுபடுத்துங்கள்?
யாழ்ப்பாணத்திலிருந்து – வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதற்கான சூழலும் இருக்கவில்லை. இது கொடுந்துயரமே. அந்த மக்களுடைய அடையாளங்களைப் பிரதிபலிக்கும் எந்தச் சின்னங்களுக்கும் பிறகு முறையான பாதுகாப்பும் இல்லாமற் போய்விட்டது. இதற்குப் பல காரணங்கள் 1990 க்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டன. 1990 இல் இருந்து தொடர்ந்த யுத்தம். 1995 இல் இடப்பெயர்வு, பிறகு அரச தரப்பின் ஆட்சி. இப்படிப் பல.
இதேவேளை வெளியேற்றப்பட்ட அந்த மக்களுடைய அடையாளப் பொருட்களை – அரும்பொருட்களை பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே. அதைப்போல அந்த மக்கள் திரும்பி வரும்போது மீண்டும் அவற்றைப் பெறக்கூடிய ஒரு நிலை இன்று இல்லாமற் போயிருப்பதையும் நாம் ஏற்கத்தான் வேணும்.
ஆகவே அது மிகப் பெரிய தவறும் இழப்புமே. அந்த மக்களுடைய கவலைகளையும் இழப்புகளையும் சேர்த்தே நான் பொதுவாகப் பேசினேன். அந்தப் பொதுச் சிந்திப்பில் அவர்களைத் தனியாக – தனித்துவமாக கருதுகிறேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர்களுடைய பொருட்களையெல்லாம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய பொருட்களை விற்பதற்குக் கடைகளே உருவாக்கப்பட்டிருந்தன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்? இது உண்மைதான். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவர்களுடைய பொருட்களுக்கும் வீடுகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் அந்தப் பகுதியில் இருந்த பாடசாலை போன்ற பொது நிலையங்களுக்கும் விடுதலைப்புலிகள் முதலில் பாதுகாப்பளித்தனர். அந்தப் பகுதியில் யாரும் நடமாடக்கூடாது. பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. சொத்துகளை அபகரிக்கக் கூடாது என்ற அறிவிப்புகள் கூட அந்த நாட்களில் பகிரங்கமாக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால், பிறகு நிலைமை மாறிவிட்டது. அந்தப் பகுதியில் புலிகளின் ஒரு முகாம்கள் வந்தன. அந்தப் பகுதியைப் பிறகு அவர்கள் ‘சவூதி’ என்ற குறியீட்டுச் சொல்லின் மூலம் அழைத்தனர். குறிப்பாக புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவு அங்கே இருந்தது.
சற்றுக் காலத்துக்குப் பின்னர், முஸ்லிம்களின் உடைகள், அவர்களுடைய புழங்கு பொருட்கள், அவர்களுடைய தளபாடங்கள், அவர்களுடைய அடையாளத்துக்குரிய சேகரங்கள் எல்லாம் மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்கின. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் முஸ்லிம்களின் பொருட்களையும் தளபாடங்களையும் விற்கும் கடைகளே இயங்கின.
பிறகு அவரவர் கிடைக்கின்ற அளவிற் சுருட்டிக் கொண்டார்கள். இது வருந்தவும் தலைகுனிவைத் தரவும் கூடிய ஒரு நிகழ்வே. எந்த அடையாள இழப்பும் கவலைக்குரியதே@ கண்டனத்துக்குரியதே.
நல்லது. இப்பொழுது இந்தமாதிரியான அபாய நிலையைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்?முதலில் அடையாளம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? அடையாள இழப்பின் ஆபத்து என்ன என்பதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
வரலாறு பற்றிய, தொன்மையின் பெறுமதியைப் பற்றிய கல்வி எங்களிடம் கிடையாது. முறையான வரலாற்றறிமுகங்கள் கற்கை முறையில் வளப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் பெரும்பாலும் சந்தையை மையப்படுத்தியிருப்பதால், அடையாள அழிப்பை மேற்கொள்ளும் அரசுகளுக்கும் அதிகாரத் தரப்பினருக்கும் அது பெரும் வாய்ப்பாகிறது. முன்னர் பயன்படுத்திய செம்மையான கைவினைப் பொருட்களின் பெறுமதி புறந்தள்ளப்படுகிறது. அந்த இடத்தில் பிளாஸ்ரிக் பொருட்களும் தகரத்தாலான அல்லது போமிகா வகையான தளபாடங்களும் வீடுகளையும் அலுவலகங்களையும் நிரப்புகின்றன.
மிகப் பெறுமதியான மரத்தளபாடங்களும் செம்பு மற்றும் பித்தளைப் பாத்திரங்களும் கோவில்களில் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த வாகனங்களும் தேர்ச்சில்லுகளும் கூறுவிலைக்கு விற்கப்படுகின்றன.
இவையெல்லாம் பிரயோசனமற்றவை. தேவையில்லாமல் இடத்தைப் பிடித்து வைத்திருப்பவை. ஏதோ கிடைக்கக்கூடிய விலைக்குக் கொடுத்தாற்போதும் என்ற உணர்வுடன் – என்ற புரிதலுடன் இவற்றையெல்லாம் பலரும் விற்கிறார்கள்.
ஆனால், இந்தப் பொருட்களின் பெறுமதியை அறிந்து வரும் கொள்வனவாளர்கள் மக்களின் அறியாமையைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆகவே, முதலில் இதைப் பற்றிய - இந்த நிலையைப் பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
ஒரு பழைய பொருளானது தனியே அது ஒரு பெறுமதியற்ற பண்டமல்ல. அது எங்களுடைய முன்னோருடைய உழைப்பு. அவர்களுடைய அறிவியல் நுட்பத்தின் பெறுபேறு. அவர்களுடைய காலகட்டத்தின் கலை வெளிப்பாடு. அவர்களுடைய ஆக்கத்திறன். அவர்களின் வாழ்க்கையோடு அந்தப் பொருள் நீக்கமற நிறைந்திருந்தது. அந்தப் பொருளை அவர்கள் தங்களின் வாழ்வில் சேகரிப்பதற்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் பல.
எனக்குத் தெரியும். எங்களின் வீட்டில் இருந்த தூங்கா மணி விளக்கை எங்கள் தாத்தா மலேசியாவில் இருந்து கொண்டு வந்த ஒருவரிடம் வாங்கினாராம். குத்து விளக்கையும் வெற்றிலைத் தாம்பாளத்தையும் பாட்டி தன்னுடைய பதின்மூன்று வயதில் - அவ பருவத்துக்கு வந்த வயதில் அவவின் தகப்பன் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வாங்கி வந்ததாகச் சொல்லுவா. இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதைகள் உண்டு. எங்களின் வீட்டில் இருந்த பெட்டகம் என்பது நான்கு தலைமுறைகளுக்கு முந்தியது.
இப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் நினைவுச் சின்னங்கள் ஏராளம் உண்டு. மரத்தாலானவை, ஓலைச் சுவடிகள், செம்பு, பித்தளை, அலுமினியம் போன்ற உலோகங்களாலானவை... என. ஏன் அழகான மண் கலசங்கள் கூட உண்டு. சாடிகள் போன்றவை.
இதையெல்லாம் ஒரே நாளில் தூக்கி வீசப்படுவதென்பது எவ்வளவு தூரம் அவற்றை நாம் பொருட்டென மதிக்காது புறக்கணிக்கப்படுவதாகிறது? உண்மையில் இது எங்களின் முன்னோரைத் தூக்கி வீசும் செயல். அவர்களை அவமதிக்கும் காரியங்கள் என்பேன்.
ஆகவே, இதைப் பற்றி நாங்கள் வெளியே சொல்ல வேணும். இளைய தலைமுறைக்குச் சொல்ல வேணும். அதேவேளை பல்கலைக்கழகம் போன்ற பலமான அமைப்புகள் இதை ஒரு வலுவான விவகாரமாக உணர்ந்து அதிகாரமுள்ள – நடவடிக்கை எடுக்க வல்ல தரப்பினரிடம் எடுத்துச் செல்வது அவசியம். அரசாங்க மட்டத்தில், பிரதேச மட்டத்திலான சட்டங்கள் இதற்காக உருவாக்கப்பட வேண்டும்.
தெற்கே தொன்மைச் சான்றுகளைப் பேணும் ஒரு மரபு வலுவாக உண்டு. தென்பகுதியில் அனுராதபரம், பொலனறுவை, சிகிரியா, கண்டி எனப் பல இடங்களிலும் உள்ளது. வரலாற்றுணர்வையும் வரலாற்றடையாளங்களையும் சிறுவயதிலேயே சிங்கள மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வழங்கி வருகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டிடங்களே வரலாற்று அடையாளங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பது கூட இதன் ஒரு பகுதியாகத்தான்.
ஆனால், தமிழர்கள் தங்களின் அடையாளங்களை மறைப்பதில் பெரும்பாலான இடங்களில் முயற்சிப்பதைப் பார்க்கலாம். முக்கியமாக தமிழ் மேட்டுக்குடியினரும் மேல் நிலையிலுள்ள மத்திய தர வர்க்கத்தினரும் தங்களின் ஆங்கில அறிவைப் புலப்படுத்துவதில் காட்டுகின்ற கரிசனைகள் அதிகம். தமிழை அந்த இடங்களில் பிரயத்தனப்பட்டு மறைக்க முயல்வர். இதேபோல இவர்களே பெரும்பாலும் மேற்கு மயப்படுதலை அல்லது இந்திய மயப்படுதலை அதிகமதிகம் ஊக்குவிப்பவர்கள்.
கலாச்சாரத்தின் மேல் மூடியாகவே இவர்கள் இருக்கிறார்கள். பிற ஆதிக்கத்தின் கதவுகளைத் திறப்பவர்கள் இவர்களே!
நீங்கள் இப்படிச் சொன்னாலும் நடைமுறையில் இது தவிர்க்க முடியாத ஒரு விசயமல்லவா? அதாவது, இன்று இலகுவாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடியதாக உள்ள பொருட்களை மக்கள் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா?
அப்படி வாங்குவதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது. ஆனால், இருககின்ற பொருட்கள் நாகரீகமற்றவை என்று கருதப்பட்டு அவற்றைத் தூக்கி எறிவதே தவறானது. மற்றது மேட்டுக்குடிகள் பெரும் செலவிலேயே பிற நாடுகளின் பொருட்களை வாங்கிஅ டுக்குகிறார்கள். அவர்கள் செய்வதைப்போலச் செய்ய முடியாத அடுத்த நிலை மக்கள் அவற்றைப் போன்ற மாதிரிகளைக் குறைந்த விலையில் வாங்குகிறார்கள். குறைந்த விலையில் கிடைப்பவை எப்படியானவையாக இருக்கும்? நிச்சயமாகத் தரங்குறைந்தவையே. அப்படித் தரங்குறைந்தவை எமது சூழலுக்கும் உடலுக்கும் ஏற்றவையாகவும் இருக்காது.
இதேவேளை இன்னொரு கேள்வி. தமிழ் அடையாளச்சிதைப்பைப் போல சிங்களத்தரப்பின் அடையாளச் சிதைப்பாக தலதா மாளிகையின் மீது நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதலைச் சொல்ல முடியுமே! இது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடென்ன?இதற்கு நான் முன்னே சொன்ன ஒரு பதிலையே சொல்ல முடியும்.
‘அதுவும் கண்டிக்கத்தக்கதே@ அவசியமாகக் கவனிக்கத்தக்கதே. எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு சமூகமும் எதன்பேராலும் தன்னுடைய அடையாளத்தை இழப்பதென்பது ஆபத்தானது. அதிலும் கட்டாய நிலையிலான அடையாள இழப்பு அல்லது அடையாள அழிப்பு அல்லது அடையாள இழப்புக்கு நிர்ப்பந்திப்பது எல்லாமே குற்றத்துக்குரிய ஒரு செயல்தான்.’
இதற்காக நானும் வருந்துகிறேன்.
அடையாளச் சிதைப்பு எத்தகைய விளைவுகளை எல்லாம் உருவாக்குகிறது?அரசியல் ரீதியாக சமூகங்களை எதிர்நிலைக்குக் கொண்டு போகிறது. உளவியல் ரீதியாகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கலாச்சார ரீதியாக வெறுமையை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியை அறுக்கிறது. வரலாற்று ரீதியாக அடையாளத்தை அளிக்கிறது. சிதைந்த நிலையை உருவாக்குகிறது. ஆகவே எல்லா நிலையிலும் பாதிப்பான அம்சங்களையே கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் நாற்சார் வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் யாழ்ப்பாணத்தின் தனித்துவமாகவும் இருந்தன. அதேவேளை ஓலை வீடுகளும் இருந்தன. ஆனால், இன்று அதெல்லாமே இல்லை என்ற நிலையில் எல்லாம் மாற்றப்பட்டு வருகிறதே!உண்மை. ஓலை வீடுகள் மாறுவதைத் தடுக்க முடியாது. அது யதார்த்தத்துக்குப் பொருத்தமானதுமல்ல. பாதுகாப்பு மற்றும் செலவு பிற வசதிகள் போன்ற காரணங்களுக்காக அவை கைவிடப்படுவது இயல்பு. ஆனால், நல்ல நிலையிலுள்ள நாற்சார் வீடுகளை – பெரும் பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அழித்துப் புதிய வீடுகளை உருவாக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியதே.
போர் முடிந்த பிறகு – தற்போது – சனங்களால் யாழ்ப்பாணத்தில் அழிக்கப்படும் பழைய வீடுகளின் கதவுகள், நிலைகள், பெட்;டகங்கள் போன்ற பொருட்கள் எல்லாம் சில்லறை விலைக்கு, பல இடங்களிலும் விற்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். மிக நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட பொருட்களையும் கதவுகளையும் இப்படித் தெருவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்களே!
உண்மையில் இது கவலையான விசயமே. தங்களுடைய அடையாளங்களைப் பொத்திப் பொத்திப் பேணிய சமூகமாக இருந்த யாழ்ப்பாணத்துச் சமூகம் இன்று அந்த அடையாளத்துக்கான அடிப்படைகளை இப்படித் தெருவுக்குக் கொண்டு வந்திருப்பது கவலைக்குரியது. அதே வேளை அவதானத்துக்குரியதும்கூட.
போரும் இடப்பெயர்வுகளும் யாழ்ப்பாணத்தவர்களைத் தெருவுக்குக்கொண்டு வந்தன. மற்றது மாறிவருகின்ற நாகரீகம். இந்த இரண்டும் சனங்களை நன்றாகவே மாற்றி விட்டன. இளைய தலைமுறையினர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு பிரதேசங்களில் வாழவேண்டியிருந்ததால், அவர்களுக்குத் தங்களுடைய வீடுகளின் அருமையைப் பற்றியும் அங்கிருந்த பொருட்களின் பெறுமானங்களைப் பற்றியும் அவற்றின் தொன்மைகளைக் குறித்தும், அரும்பொருட்களைக் குறித்தும் பெரிய அளவுக்குக் கரிசனையும் இல்லை. கவனமும் இல்லை. அவற்றை அறிவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கிருக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.
இந்த இடத்திற்தான் இதைக்குறித்த விழிப்புணர்வு அவசியம் என்கிறேன்.
கல்வியறிவுடைய ஒரு சமூகத்தில், கல்வியைப் பிரதானமாகக் கொள்ளும் ஒரு சமூகத்தில் இப்படியான ஒரு நிலையிருப்பது கொடுமையானதே.
எங்களின் வாழ்க்கை ஒரு காலத்தில் தெருவிலிருந்ததைத்போல இன்று எங்களுடைய அடையாளங்களும் தெருவிற்கு வந்துள்ளன. தெருவுக்கு வரும் இந்த மாதிரியான விசயங்கள் சிதைந்தே போகும் என்பது எலலோருக்குமே தெரிந்த உண்மை.
ஆகவே மொத்தத்தில் இவை தொடர்பாக உங்களுடைய அக்கறைகள் என்ன? திட்டங்கள் என்ன? நடவடிக்கைகள் என்ன?
முக்கியமாக இந்த அடையாள இழத்தல் மற்றும் அடையாளம் பேணுதல் என்ற விசயத்தில் சீரியஸான கருதுகோளை ஏற்படுத்த வேணும். இதைப் பரவலான அளவிற் செய்ய வேணும்.
யுனெஸ்கோ போன்ற ஐ.நா அமைப்பே இதற்காக - இந்த மாதிரி விசயங்களுக்காக இயங்கி வருகின்றன. உள்நாட்டிலும் இதற்கான அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பல நாடுகளில் இந்தமாதிரியான உள்ளுர் அமைப்புகள் உள்ளன. போருக்குப் பிந்திய சமூகங்கள் தங்களுடைய அடையாளங்களைப் பேணுவதற்காகப் பிரயத்தனங்களை எடுத்துள்ளதை நாம் அறிய முடியும்.
ஆகவே நாம் சரியான முறையில் உரிய தரப்புகளோடு தொடர்பு கொண்டு, நாமும் உரிய அமைப்புகளை உருவாக்கி இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை, பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு நாம் பின்னிற்கும் தோறும் நிலைமை பாதகமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
இதை எந்த நிலையிலும் நாம் அனுமதிக்கவே முடியாது.
வேர்களை இழப்பதற்கு எந்த மரமும் விரும்பாது. அதை அனுமதிக்கவும் முடியாது. அப்படி அனுமதித்தால் மரத்துக்கே ஆபத்து.
00